news
சிறப்புக்கட்டுரை
நேர்மையும் விசுவாசமும் நிறைந்த வாழ்க்கை

அன்பான செயின்ட் அலோசியஸ் கொன்சாகா சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் ஒளியாகவும், எளிமையின் உருவமாகவும், அன்பின் செயல்பாடாகவும் உலகிற்கு வெளிச்சமாய் நிற்கிறீர்கள். பெருமைக்கும் புகழுக்கும் ஆளாய்ப் பறக்கும் இக்காலத்தில், உங்கள் வாழ்க்கை எளிமையும், தாழ்ச்சியும் சாந்தமும் தன்னடக்கமும் நிறைந்த நற்சாட்சி ஆகும் - உங்கள் புரவலர் / பாதுகாவலர், செயின்ட் அலோசியஸ் கொன்சாகாவின் சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது.

உங்கள் எண்ணங்கள் தூய்மையால் அலங்கரிக்கப்பட்டவை, உங்கள் சொற்களும் செயல்களும் தெளிவும் உண்மையும் நிறைந்தவை. ஆழ்ந்த செபத்தில் வேரூன்றிய நீங்கள், ஒவ்வொரு முடிவிலும் இறைவனுடைய சித்தத்தைத் தேடி, ஞானத்துடன் தீர்மானிக்கிறவர்கள். உங்கள் சமூக வாழ்க்கை நம்பிக்கையும், இரக்கமும் நிறைந்த ஒரே அன்பு மொழியைப் பேசுகிறது. அதில் ஒற்றுமையும், ஆன்மிக சமநிலையும் தெளிவாகத் தெரிகிறது.

நேர்மை மற்றும் விசுவாசம் நிறைந்த உங்கள் வாழ்க்கை, தன்னலமற்ற சேவையாலும், உண்மையான அன்பாலும் சிறப்பிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சமூகப் பணிகள் போன்ற எல்லாத் துறைகளிலும் உங்கள் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு பிரகாசிக்கிறது. மனமார்ந்த தாராளம், உங்கள் இதயங்களில் பெருகி துயரமுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் துன்புறுவோருக்கு மகிழ்ச்சியையும் வழங்குகிறது.

மென்மையான சொற்களிலும், உறுதியான நம்பிக்கையிலும், நீங்கள் எப்போதும் அன்பின் நிறைவு காட்டுகிறீர்கள். துயரமடைந்தவர்களுடன் துயரமடைந்து, அமைதியான ஆற்றலுடனும், இரக்கமிக்க செபத்துடனும் அவர்களுடன் நிற்கிறீர்கள்.

செயின்ட் அலோசியஸ் கொன்சாகா சகோதரிகளே, நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவின் தூய்மையைப் பிரதிபலிக்கிறவர்கள். தாழ்ச்சியுடனும், எளிமையுடனும் அன்புடனும் வாழ்வதுதான் உண்மையான துறவு என்பதை உங்கள் சான்று வாழ்வு நினைவூட்டுகிறது. இந்த அனைத்தையும் நான் அறிந்ததும், புரிந்ததும், உணர்ந்ததும் என் அன்பு அக்காள், அருள்சகோதரி  சபைத்தலைவி  மோ. திரேசா ஞானமணி அம்மையார் - உங்கள் சபையின் நிரந்தர உறுப்பினர் - அவர் மூலமே. அக்காவிடம் நான் பார்த்த அனைத்து நற்குணங்களும், திறமைகளும் சாதனைகளும் உங்கள் அனைவரிலும் இருப்பதைப் பார்த்து உளம் மகிழ்கின்றேன், இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன்.

இயேசு கிறிஸ்துவினால், இயேசு கிறிஸ்துவுக்காகவும், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் இன்னும் பெரும் செயல்களை தூய ஆவியாரின் ஆற்றலோடும் அன்னை மரியின் பரிந்துரையுடனும் அப்பா தந்தையின் அருளோடும் நிறைவேற்றிட என் இதயங்கனிந்த வாழ்த்துகளும் செபங்களும். உங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தலைமைத்துவத்தால் எப்போதும் உந்தப்படும் நான்

தங்கை

ஆக்னெஸ் செல்வி ஹென்றி தாஸ்

CEE DEE YES PUBLIC SCHOOL CBSE

திருப்போரூர்

 

news
சிறப்புக்கட்டுரை
ஒடுக்கப்பட்டோருடன் ஓரணியாய்!

அன்பின் மகுடம், ஏழையின் துயர் துடைக்கும் சேவை ஒன்றே ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலில்தான் இறைவனின் நீதி ஒலிக்கிறதுஎன இந்தியத் திருநாட்டிலே, குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் காலங் காலமாக ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வு செழித்தோங்க தங்கள்  வாழ்வையே அர்ப்பணித்தவர்கள்தாம் எம்பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள்.’

1775-ஆம் ஆண்டு இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அவர்களால் தொடங்கப்பட்டு, தனது 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் எம் தாயாம் கொன்சாகா சபையை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசுவின் பணியைத் தங்கள் நோக்கமாகக் கொண்டு, இரண்டரை நூற்றாண்டுகளாகச் சத்தமில்லாத ஒரு சமூகப் புரட்சியை நிகழ்த்திவரும் எம் கொன்சாகா சபையின் அரும்பணிகள் வியப்புக்குரியன. சமூகத்தில் துன்புறுவோருக்கு குறிப்பாக, ஏழைகள், கைவிடப்பட்ட மகளிர் மற்றும் குழந்தையரின் மறு வாழ்வை உள்ளுயிராகக் கொண்டு கொன்சாகா பெரும் குடும்பம் இயங்கி வருகிறது.

ஒடுக்கப்பட்டவருடன் ஓரணியாய், வறியோரின் விடுதலையாய், முகமிழந்தோரின் முகவரிகளாய் கொன்சாகா சகோதரிகளாம் யாம் ஆற்றி வரும் இறைப்பணிகள் எண்ணிலடங்கா!

நற்செய்திப் பணியே கொன்சாகா சபையின் இதயத் துடிப்பு. கல்விப்பணி வழி ஏழை எளிய மக்கள் அறிவொளி பெற உழைத்தாலும், நற்செய்தி போதிக்கவில்லையெனில் கல்விப்பணியே செய்ய மாட்டோம் என உறுதிபூண்ட முன்னோரைக் கொண்ட வரலாறு எம் சபையின் வரலாறு.

சமூகத்தில் அநீதிகள் தழைத்தோங்கும் போதெல்லாம் எம் கொன்சாகா சகோதரிகளின் கரம் அநீதிக்கு எதிராய் ஓங்கி நிற்கிறது. சமூகத்தால் கைவிடப்பட்டோரைத் தாயன்புடன் அரவணைப்பதே எங்கள் சேவையின் உச்சம்.

எம் தாயாம் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டுகாலத் தியாகப் பயணம் வெறும் வரலாறல்ல; அது சமூக மாற்றத்தின் ஆவணம். சாதிப் பிரிவினையை அகற்றி, மனிதநேயத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவம் நிலைபெறவும் எம் சபை தொடர்ந்து உழைத்து வருகிறது.

அவமானமும் அடக்குமுறையும் சூழ்ந்த போதிலும், தொய்வின்றித் தாழ்த்தப்பட்ட சமூகம் துளிர்விட்டுத் தழைத்தோங்க, கொன்சாகா சகோதரிகள் செய்துவரும் மகத்துவப் பணி என்றென்றும் தொடரட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
எளியோரில் இறைவனைக் காணும் கொன்சாகா சகோதரிகள்

ஏழையரில் ஏழையர், எளியவரில் எளியவர், இழப்பவரில் இழந்தவர் இருந்திடும் அந்த இடமே இறைவா உமக்குச் சொந்த இடம்!’

என்று ஏழைகளில் இறைவனைக் கண்டு, வலுவற்றவர் வாழ்வுபெற, சமயங்களைக் கடந்து, சமூகத்தின் உயிர் வளர்க்கும் கருவியாய், 250 ஆண்டுகாலப் பயணத்தில்எளியோர்க்கு நற்செய்தியாய்விளங்கும் எம் தாயாம் கொன்சாகா சபையை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். ‘கொன்சாகா சகோதரிகள் என்றாலே ஏழைகளின்  சகோதரிகள்என்ற வழக்கு உண்டு. ஆம், சகோதரிகளின் வாழ்வு எளிமைக்கும் தன்னலமற்ற சேவைக்கும் சான்றாகத் திகழ்கிறது. ‘ஏழைகளுக்கு நற்செய்திஎன்ற சபையின் நோக்கத்தை உள்வாங்கி ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வு புத்துணர்ச்சி பெற கொன்சாகா சகோதரிகள் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியது.

ஆடம்பரமும் ஆரவாரமும் இன்றி எளிய பின்புலத்தில் யாம் செய்து வரும் பணிகள் ஏராளம். இவை அனைத்துத் தரப்பு மக்களோடும் கொன்சாகா சகோதரிகளை எளிதில் ஒன்றிணையச் செய்கின்றன. புனித பிரான்சிஸ் அசிசியாரின் சட்டம்-ஒழுங்கும், புனித அலோசியஸ் கொன்சாகாவின் ஆன்மிக வழிகாட்டுதலும் கொன்சாகா சபையின் பெரும் சொத்து!

சின்னஞ்சிறியோரில் இறைவனைக் கண்டு, விளிம்பில் விழிபிதுங்கி நின்ற மனிதர்களை அள்ளி அரவணைத்துக் கொண்டதுதான் எம் சபையின் ஊற்று.

பாமரருக்காகத் துடித்தது இதயம் எம் முன்னவரின் இதயம். எளிய வாழ்வும் கனிவான முகமும் பரிவுள்ளமும் இரக்கச் செயல்களுமே கொன்சாகா சகோதரிகளின் அடையாளம். குடும்ப உணர்வும், சகோதரப் பாசமும்  அம்மா, அக்கா, தங்கை என உடன் வாழும் சகோதரிகளை உறவு முறை சொல்லி அழைத்து அன்பு காட்டுவதே எங்களின் பெரும்பலம்.

வறியோர் வளர்ச்சி பெறவும், நலிந்தோர் நல்வாழ்வு பெறவும் உழைத்த சகோதரிகளின் தன்னலமற்ற சேவை, எம் கொன்சாகா சபையின் 250 ஆண்டு வரலாற்றை அழகுற நிறைத்திருக்கின்றது.

250 ஆண்டுகாலமாய் யாம் கடந்து வந்த பயணத்தில் கரம்பிடித்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றிப்பண் இசைக்கிறோம். தன்னலம் துறந்து, பிறர்நலம் போற்றும் எம் கொன்சாகா சகோதரிகளின் பிறரன்புப் பணி மென்மேலும் சிறக்கட்டும்! எங்கும் புதுவாழ்வு மலரட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
என் வாழ்வில் கொன்சாகா சபை

உயிர் கிடைத்தது வாழ்வதற்கு அல்ல; வாழ வைப்பதற்கே!

மனிதனானது பெறுவதற்கல்ல; பகிர்வதற்கே!

இத்தகைய அர்த்தமுள்ள பிறவியின் சின்னமாக இம்மண்ணில் மலர்ந்தவர்தான் தந்தை அன்சால்தோ. கி.பி. 1771-இல் புதுவை மண்ணில் மறைப்பணியாற்ற அடியெடுத்து வைத்த இவர்...

சமூகத்தின் சாயலில் மறைந்த துயரம் எங்கும் பார்த்தார்.

கருணையின் குரலில் இறைவனின் அழைப்பைக் கேட்டார்.

சீரான வாழ்க்கையைத் தேடிய அநேகர் நடுவே இவர்

சிதைந்த இதயங்களை இணைக்க விரைந்தார்.

சேவைதான் தியாகம், அன்புதான் வழிஎன்று

கருணையின் விதை விதைத்து, நம்பிக்கையை வளர்த்தார்.

அந்த நம்பிக்கையின் மலராக அன்று

எம் தாயாம் கொன்சாகா சபை மலர்ந்தது.

காலத்தின் சோதனைகள் எங்கள் பாதையைத் தொட்டன.

ஆனால், நம்பிக்கையின் தீ எம்முள் எரிந்தது.

விதிகளும் சோதனைகளும் வந்தபோதும் தளரவில்லை,

இறை நம்பிக்கையில் இச்சபை தழைக்கத் தவறவில்லை.

அர்ப்பணிப்பின் வழியில் நடந்த சகோதரிகள் பலர்

இருளில் ஒளி பாய்ச்சும் கருணையின் விளக்குகள் ஆயினர்.

அறிவூட்டும் கல்வி எங்கள் கரத்தின் விழிப்பு.

சமூகச் சேவையே எங்கள் சாட்சியம் என

அன்பால் உலகை மாற்றும் புனிதப் பாதையில்,

எம் கொன்சாகா அருள்சகோதரிகள் இன்று

ஒளியாய் நிற்கின்றனர். இவ்வாறு...

அறியாமையின் இருளை உடைக்கும் ஒளியாக நாங்கள் ஒவ்வொரு குழந்தையின் கனவில் நம்பிக்கையை எழுதுகிறோம்.

வலி கொண்ட உடலில் நிம்மதியை விதைக்கும் நாங்கள், கண்ணீரின் விழியில் ஆறுதலை ஊற்றுகிறோம்.

தள்ளப்படுபவரைத் தழுவி, அமைதியின் மொழி பேசுகிறோம்.

அன்பும் சமத்துவமும் எம் கொடிகளாகப் பறக்க, இறை உலகை இங்கேயே கட்டுகிறோம்.

இன்று 250 ஆண்டுகள் நிறைவு கண்ட சபை, எத்தனை இதயங்களில் நம்பிக்கையின் சுடர் ஏற்றிய சபை, அர்ப்பணமாய் பணியாற்றும் எம் சகோதரிகள், அன்பை வாழ்வாக மாற்றும் இறை முகங்கள்!

எங்கள் தந்தை மைக்கேல் அன்சால்தோ...

அவரின் இதயம் கருணையின் கடல்!

அவரின் கைகள் தியாகத்தின் துறைமுகம்!

அவரின் பார்வை எம் பாதையை ஒளிர்வித்தது. அவரின் கனவு

எம் சபையின் உயிராகியது!

இன்று அந்தத் தந்தையின் கனவு...

எம் கையில் மலர்கிறது!

அவரின் சிந்தனை எம் பணியில் வாழ்கிறது!

ஆக, இன்று உலகின் பல மூலைகளில் எங்கள் பாதம் பதிந்தது. அன்பும் சேவையும் இணைந்த புனிதப் பாட்டொன்று எழுந்தது. இங்ஙனம் நம்பிக்கை விதைக்கும் எம் ஒவ்வொரு கையிலும், அந்த தந்தையின் ஆன்மா இன்னும் வாழ்கிறது. மனிதனின் கண்ணீரைக் கருணையால் துடைத்து, மறக்கப்பட்டவர்களின் வாழ்வை நம்பிக்கையால் நனைத்து,

அன்பும் அர்ப்பணிப்பும்

சங்கமித்த தாயகம் - அதுவே

கொன்சாகா சபையின் தெய்வப் புனிதம்!

news
சிறப்புக்கட்டுரை
இறைவனின் திருக்கரத்திலிருந்து பெறப்பட்ட அட்சயப்பாத்திரம் ‘கொன்சாகா’

தமிழ் இலக்கியத்தில் ஓர் அட்சயப்பாத்திரம் உண்டு. ஐம்பெரும் காப்பியமாகிய மணிமேகலை என்னும் பௌத்தத் துறவிக்கு ஓர் அட்சயப்பாத்திரம் கிடைத்தது. அள்ளஅள்ளக் குறையாத அமுத சுரபியை அது வழங்கியது. மக்களின் வறுமையை நீக்கி வளமையைத் தந்தது. அதுபோல் சமூகத்தில் தேவை ஏற்படும்போது ஒருசிலரை, ஒருசிலவற்றை அட்சயப்பாத்திரமாக இறைவன் பயன்படுத்துகின்றார். இதற்குக் கொன்சாகா துறவறக் குழுமமே சான்று.

எரியும் திரி தன்னைக் கரைத்து ஒளியேற்றுவதுபோல

மணக்கும் மலர் தன் வாசனையைத் தருவது போல

மும்மாரி மழை மண்ணைக் குளிர்விப்பது போல

கதிர்பரப்பும் சூரியன் பூமிக்கு உயிரளிப்பது போல...

நலிந்த சமூகத்திற்காகத் தன்னைக் கரைக்க 250 ஆண்டுகளுக்கு முன்பே அட்சயப்பாத்திரமாக ஓர் அன்சால்தோவை இறைவன் அனுப்பி வைத்தார். அவரால் ஊன்றப்பட்ட விதை இன்று பல விருட்சங்களாகி, பல நூறு சகோதரிகள் என்னும் அட்சயப்பாத்திரங்களாகப் பெருகி, தம் உடல், பொருள், ஆவி வழியாகச் சமூகத்திற்கு மகிழ்வுடன் கொடுத்து வருகின்றனர் கொன்சாகா துறவியர்.

இந்தக் கொன்சாகா துறவறக் குழுமத்தின் உறுப்பினராகிய சகோ. டயானா என்னும் பெயர் கொண்ட நான் திருச்சி மறைமாவட்டத்தில் முல்லைக்கொடி என்னும் கிராமத்தில் பிறந்தவள். நற்செய்திப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி என்று பல நிலைகளில் இறையாட்சிப் பணியைச் செய்து மகிழ்ந்தேன். தற்போது முனைவர் பட்டம் பெற சபை என்னை அனுமதித்து அதனைத் தொடர எல்லா வளங்களையும் தந்து உற்சாகம் ஊட்டி வழிநடத்துகின்றது. தொடர்ந்து நானும் ஓர் அட்சயப்பாத்திரமாக, சபை வழியாகச் சமூகத்திற்கு என்னை வழங்க விரும்புகிறேன். இறைவன் தாமே என்னைத் தொடர்ந்து எடுத்துப் பயன்படுத்துவாராக!

எம் கொன்சாகா துறவியர் செய்யும் ஆன்மிகப்பணி, சமூகப்பணியைப் பட்டியலிட்டால் ஒன்றா... இரண்டாஎண்ணற்றப் பணிகளைத் தலைவன் இயேசுவின் அடிச்சுவட்டில் பின்பற்றி, தம்மையே தாரைவார்த்துச் சமூகத்தின் தேவையை நிறைவு செய்து வருகின்றனர்.

இவர்களின் தொண்டுள்ளத்தால் பிஞ்சுக் குழந்தையர் முதல் இளையோர்வரை கல்வி என்னும்  ஞானப் பாலைப் பெற்று அறிவுஜீவிகளாகி உள்ளனர். ‘எழுத்தறிவித்தவன் இறைவன்என்பதற்கேற்ப, இறைவனையே இனம்காட்டுகின்றனர். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டுஎன்று முதியோர் பராமரிப்பு, படிக்க இயலாத ஏழை உள்ளங்களுக்கு நிதியுதவி, முகவரி இழந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைப் பணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளை எடுத்துப் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றுதல் என்று பல கோணங்களில் - பல பரிமாணங்களில் அன்சால்தோ விரும்பிய அன்புப் பணியை அயராது செய்து மகிழ்கின்றனர். கொன்சாகா துறவியர் ஒவ்வொருவரும் ஓர் அட்சயப்பாத்திரமாக இருந்து தொண்டாற்றி மகிழ்கின்றனர்.

இந்த இனிய வேளையில் இன்னும் பல மைல் தூரம் சமூகத்தில் தடம் பதிக்க இறைவன் கொன்சாகா துறவறத்தைத் தம் அருளால் நிரப்புவாராக!

news
சிறப்புக்கட்டுரை
அணை கடந்த இறையருளால் நிரம்பிய புதுவை கொன்சாகா துறவறம்

இன்றைய இந்தப் புனித நாளில், புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவை நாம் ஆனந்தத்துடனும் நன்றியுடனும் கொண்டாடுகிறோம். இது வெறும் ஒரு விழா அல்ல; இது நம் சபையின் இறையருளின் சாட்சி. நம் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்களின் வரலாறு.

இந்தச் சபை எனக்கு ஒரு தாயாக இருந்தது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தி வளர்த்தது. இறைவனுக்காக அர்ப்பணிக்கச் செய்தது இந்தச் சபையே. இங்குப் பெற்ற செபவாழ்க்கை, தியானத்தின் ஒழுக்கம், பணிவான சேவை மனப்பாங்கு இவை அனைத்தும் என்னை இன்று எளிமையான அருள்சகோதரியாக உருவாக்கியுள்ளது.

என் வாழ்வின் பாதையில்கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் (லூக் 1:49) என்ற வசனத்தை நான் தினமும் அனுபவிக்கிறேன். இந்தச் சபை அளித்த ஊக்கம், அன்பு, ஒத்துழைப்பு இவையனைத்தும் என்னைச் செபம், தியானம், தவம் நிறைந்த வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்றது.

இது என் வாழ்வைப் பற்றி நான் கூறும் சாட்சிய வாழ்வு அல்ல; எம் முன்னோர், மூத்த அன்னையர் கூட இறைப்பராமரிப்பை  உணர்ந்து நன்றிநிறை நெஞ்சுடன் வாழ்ந்துள்ளனர். இஸ்ரயேல் மக்களைப் பார்வோன் மன்னனிடமிருந்து காப்பற்றியது போலவும், 40 ஆண்டுகாலம் ஒன்றுமில்லாமையில் கூட உணவும் நீரும் தந்து வழிநடத்தியது போலவும் எம் சபையை இறைக்கரம் வழிநடத்திய பாங்கையும் நன்றிநிறை உள்ளத்துடன் பகிர்ந்துள்ளனர். இப்படி இறைப்பராமரிப்பில் வளர்ந்துவரும் நான் இன்றைய நிலையில் நற்செய்திப்பணி, மருத்துவப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

மருத்துவப்பணி என்பது உடல் குணமளிப்பதற்கானதல்ல; மாறாக, அது இறைவனின் கருணையை மனிதனின் கண்ணீரில் பிரதிபலிப்பது. ஒவ்வொரு நோயாளியின் முகத்திலும் நான் கிறிஸ்துவின் முகத்தைக் காண்கிறேன். அந்தக் காயங்களின் வழியே இறைவனின் அருளின் ஒளி மின்னுகிறது. அது எனக்கு ஒரு தியானம், ஒரு நற்செய்திப் பணியாக மாறியுள்ளது.

புனித அலோசியஸ் கொன்சாகா வாழ்வு போலவேஇறைவனுக்காக உயிரை அர்ப்பணிக்கிறவன் புனிதம் அன்பில் வெளிப்படும்.’ அந்த அன்பு நம்மை ஒன்றிணைக்கட்டும், புதுப்பிக்கட்டும், செபத்தில் உறுதியாக்கட்டும்.  250 ஆண்டுகள் கடந்து வந்த எம் சபை, என் வாழ்வை மட்டுமல்ல, எண்ணற்ற ஆன்மாக்களை இறைவனின் வழியில் வழிநடத்தி வந்துள்ளதுஇந்த யூபிலி விழாவில்  நாம் கூறவேண்டியது ஒன்றே...

இறைவா, நீர் என் வழிகாட்டி!

என் கடந்தகாலம் உமது கரம்!

என் எதிர்காலம் உமது திட்டம்!

இந்தப் புனித யூபிலி ஆண்டில் எம் சபை மேலும் பல ஆன்மாக்களை இறையருளின் பாதையில் அழைக்கட்டும். இறைவன் நம் அனைவரையும் ஆசிர்வதித்து நம்பிக்கை, நன்றி, அன்பு ஆகிய மூன்றிலும் நம்மை நிலைநிறுத்தட்டும்!