தமிழகத்தின் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தன் பதிலுரையின்போது, உதிர்ந்த சில சொற்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மரிய வில்சன் பேசிய உரையின் மீதான அரசியல் தொடர்பான அல்லது தனது கட்சியின் கொள்கை தொடர்பானதாக மட்டுமிருந்தால், அதைப்பற்றி நாம் விமர்சிக்கத் தேவையில்லை. மரிய வில்சனின் மதம் சார்ந்த அடையாளமே இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவரின் பெயரிலேயே அப்பட்டமாக இவர் சார்ந்த மத அடையாளம் உள்ளது. இப்பெயரில் எவ்வித மாற்றத்தையும் இவர் வலிந்து செய்யவில்லை. தான் ஏற்றுக்கொண்ட அல்லது இவரது பெற்றோரின் நம்பிக்கையால் அளிக்கப்பெற்ற பெயரையே எவ்வித சமரசமுமின்றி வைத்துக்கொள்கிறார். இவர் ஏற்றுக்கொண்ட இவர் பெயரிலேயே, இவர் அடையாளம் வெளிப்படையாகத் துவங்குகையில், தன்னை ஒரு Born Christian (பிறப்பிலேயே கிறித்தவன்) என்று அறிவித்ததில் என்ன தவறு?
இவர்
சார்ந்த கட்சியின் தலைவர், பாரதிய சனதாவின் இராசா அறிவிக்காத வரை வெறும் விஜயாகத்தான் அறியப்பட்டார். இராசாவின் கருணையால் ஜோசப் விஜயானவர், மிக வசதியாக, அரசியல் நோக்கோடு ஜோசப்பைத் தக்க வைத்துக்கொண்டார். ஜோசப் என்ற பெயரைச் சௌகரியமாகத் தக்க வைத்துக்கொண்டு, புனித அந்தோணியாரை முழந்தாள் பணிந்து, முழம் போட்டு நடந்தபோது, கிறித்தவப் பக்திக் கூட்டம் கசிந்து போய்விட்டது. திருச்சி கிழக்கின் கிறித்தவப் பக்திக் கூட்டம் அப்படியே கரைந்து போயிற்று. தன் முழங்கால் பக்திப் பரவசம் வெறும் சடங்கு என்று, இவரின் திருச்செந்தூர் வேலேந்திய நிகழ்வும், தனி விமானத்தில் பயணித்து, சீரடி சென்று துதி செய்த நிகழ்வும், விட்டேனா பார் என்று முந்தைய வழிகாட்டி எம்.ஜி.ஆர் பாணியில் கர்நாடகாவின்
வாள் கொடுத்த சீர்மையும், இவரின் சுய உருவத்தை உலகுக்கு அறிவித்தது. ஜோசப் விஜய், சமயப் பன்மையை மதிப்பவராயினும், சமய நம்பிக்கையே இல்லாதவராயினும் ஏன் நாத்திகராக வாழ்ந்தாலும் நமக்கு ஆட்சேபனை இல்லை. வெறும் அரசியல் இலாபம் கருதி, சுய அடையாளத்தை அடகு வைக்கும் எவரையும் நாம் ஏற்கத் தயாராக இல்லை; விஜய் தேர்தல் வெற்றி கருதி சமயச் சார்பை மிக வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதில் இருந்த சமரசத்தில், ஓர் அரசியல் இருந்தது; அரசியல் நோக்கமுமிருந்தது.
ஆனால்,
மரிய வில்சன் தன்னைப் பிறப்பால் கிறித்தவன் என்று அடையாளப்படுத்திக் கொண்டதில் அரசியல் இருந்ததா? அரசியல் இலக்கு இருந்ததா? அல்லது மதவாதக் கொள்கை இருந்ததா? மரிய வில்சன் தன்னைப் பிறப்பால் கிறித்தவன் என்று அடையாளப்படுத்தியவுடன் ஏன் இவ்வளவு பெரிய கயோபரம்? ஏன் இவ்வளவு பெரிய கூச்சல்?
தமிழக
சட்டமன்றம், ஒரு கிறித்தவ மறைபரப்புக் கூடமாக மாறிவிட்டதென்றக் கூச்சல் ஒரு புறம். ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி கிறித்தவத்தை தமிழ்நாட்டில் ஆழப்படுத்தும் பெரு முயற்சியும், சதியும் நடப்பதாக ஒரு பரப்புரை.
பெரும்பான்மை
இந்து மதவாதத்தை நாளும் எதிர்த்து வரும் உண்மையான மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் பலர், தமிழக சட்டமன்றத்
தலைவர் பிரபாகர் அவர்களின் விவிலியக் கருத்துகளைத் தன் உரையில் குறிப்பிட்டு வரும் போக்கையும், மரிய வில்சனின் விவிலிய கோட்பாடுகளைத் துணிந்து உரைத்த செயலும், தமிழக அரசியலை மதவாத அரசியலுக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் என எச்சரித்து வருதலில்
இருக்கும் உண்மையைப் பரிசீலிக்காமல் புறந்தள்ளிவிட முடியாது.
இவர்கள் மதவாதிகளா?
தமிழக
அரசியல் கிறித்தவப் பிடியில் சிக்கியுள்ளது என்று இந்து முன்னணியினர் எச்சரித்து வருகின்றனர்; ஏற்கெனவே வலுவாக வளர்ந்து வரும் பெரும்பான்மை வகுப்புவாத கருத்தியலை வலுசேர்க்க (Reinforce) இப்போக்கு
உதவலாம் என்ற அச்சம் மதச்சார்பற்ற சக்திகளிடம் எழுந்துள்ளது, இந்திய அரசியல் சாசனமே மதச்சார்பற்ற (Secular) என்ற
போர்வையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட கிறித்தவ அரசியல் சாசனமே (Christian Constitution) என்ற
பரப்புரை ஆய்வறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. கிறித்தவச் சாயல் (Visibility) தமிழக
அரசின் போக்கில் அதிகம் இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் மக்கள்தொகையில் (Democraphy) பெருத்தமாற்றம்
நிகழப் போகிறது என்ற அச்சத்தையும் மதவாதிகள் பரப்பி வருகின்றனர்.
கோவை
மாவட்டத்தின் ஒரு பகுதியில் கிறித்தவச் சபை சார்ந்த குழுவினர் எழுப்பிய தேவாலயத்தை ஆட்சேபித்த இந்து மதத்தவர் சிலர், இவ்வாலயம் அனுமதியின்றி எழுப்பப்பட்டு வருவதாகவும், மதம் மாற்றும் நோக்கிலானது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கூறி வழக்குத் தொடர்ந்தபோது, தீர்ப்பளித்த நீதியரசர் ஜி. ஆர். சாமிநாதன் அவர்கள் இவ்வாலயம் எழுப்பப்பெறலுக்கு எதிராக எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு இன்றைய தமிழக அரசியல் சூழல் ஏதுவாக உள்ளது என்ற தீர்ப்பின் செய்தி என்ன?
இந்தியாவில்
வளர்ந்து, இன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வகுப்புவாத கருத்தியலை இரு வகையாகப் பிரிப்பர். ஒன்று பெரும்பான்மை வகுப்புவாதம்; மற்றொன்று சிறுபான்மை வகுப்புவாதம். வகுப்புவாதம், வகுப்புவாத அரசியல் என்பன இரண்டுமே மானுட மகத்துவத்தை அழிப்பதுதான். பெரும்பான்மை வகுப்புவாதம் எதேச்சதிகாரத் தன்மையுடையது. சிறுபான்மை வகுப்புவாதம் பெரும்பான்மையின் மீதான அச்சத்தால் பிரிவினை பேசும்; மதம், இனம், மொழி அடிப்படையிலான பெரும்பான்மைவாதம் ஒற்றுமை, ஒருமை, தேசியம் என்று உரக்கப் பேசும். இவர்கள் கையில் எடுக்கும் மதம், மதத்தின் அல்லது மதம் முன்னெடுக்கும் கடவுள் நம்பிக்கையால் அல்ல. மதம் இவர்களுக்கு அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கான கருவியே.
இந்திய
இந்துத்துவர்கள் முன்னெடுத்த இராமர் சென்ம பூமி மீட்பு என்ற போராட்டம், இராமர் மீதான பக்தியால் அல்ல; இராமர் எனும் அடையாளத்தின் மூலம் (Symbol) பெரும்பான்மை
மக்களை மத ரீதியாக வெறியூட்டி,
அணிதிரட்டி, ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளமை ஏற்கெனவே அறிந்த உண்மை. சிறுபான்மையினர், தான் மதம் சார்ந்த அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்தற்கும் மதச்
சிறுபான்மையினர் காட்டிக்கொள்தற்கும் வேறுபாடு உண்டு.
தமிழக
சட்டமன்றத் தலைவர் கிறித்தவர்; கிறித்தவ மத நம்பிக்கையில் ஊறிப்
போனவர். அவர் சார்ந்த கட்சியின் தலைவர் ஜோசப் என்ற பெயருடைய கிறித்தவராக இருக்கலாம். திரு. பிரபாகர் ஜோசப் விஜய் சார்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்பதாலேயே கிறித்தவம் தரும் கொள்கைகளைப் பேசவில்லை; ஒரு மறைசார்ந்த கொள்கையில் பிறப்பிலிருந்து வளர்க்கப்பட்ட இவர், இன்றும் அதே கொள்கைகளை உயிர்க் கொள்கைகளாகப் பேசுகிறார். இவர் ஒரு வகுப்புவாதி அல்ல; இவர் ஒரு மதவாதியும் அல்ல; தன்னைச் செதுக்கி வரும் ஓர் உயிர் மறையின் கொள்கையின் ஈர்ப்பினால் வாழ்வில் எங்கெல்லாம் பறைசாற்ற முடியுமோ அதைச் சொல்கிறார். எவ்வித உள்நோக்கும் அரசியல் இலாபமும் இல்லா நிலையில் இவர் காட்டும் தனிநபருக்கான நம்பிக்கை வெளிப்பாட்டிற்கு நோக்கம் கற்பிக்கும் சக்திகளை அடையாளம் காண்போம்.
ஏற்கெனவே
குறிப்பிட்டது போன்று, முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் சமய அடையாளத்தில் அரசியல் உண்டு: கிறித்தவ அடையாளத்திற்குத் தன் மீது திணிக்கப்பட்ட ஜோசப்பை வலுவாகத் தக்க வைத்துக்கொண்டு, எல்லோரையும் திருப்தி செய்ய ஆலயங்களை வலம் வந்து தரிசனத்தால் புரிந்துகொள்ள முடியும்.
மரிய
வில்சன் தன்னைக் கிறித்தவனாக அறிமுகப்படுத்தியதில் என்ன அரசியல் இருக்கிறது? மிகப்பெரிய அரசியல் பாரம்பரியம் இவருக்கு இல்லை; இவர் ஒரு கல்வி நிறுவன காப்பாளர்: இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பில் இவர் பங்கேற்கும், வாய்ப்பு என்பது இவர் எதிர்பாரா ஒன்று. இவர்தம் தேர்தல் பரப்புரையில் மதம் சார்ந்து இவர் பரப்புரை அமையவில்லை. மரிய வில்சன் என்ற கிறித்தவப் பெயரைத் தாங்கியதால் இவர் வெற்றி பெறவில்லை. இவரின் வெற்றி, எதிர்பாராத வெற்றியாக இருந்தாலும், இன்றைய வகுப்புவாத அரசியலில், சமயங்கடந்து மக்கள் அளித்த வெற்றி, என்பதை ஏற்றுக்கொள்வோம்.
வலுவான
அமைப்பு ரீதியான (Structured) கட்சிகளின்
எதிர்பார்ப்பையும் தாண்டி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக ஆட்சி, ஒரு புரியாத புதிராக இருக்கலாம்; இப்புதிர்களை அவிழ்த்துக் காட்ட வேண்டிய தருணத்தில், எங்கிருக்கிறோம்? ஏன் இந்த மாற்றம் என்று விடை தெரியாமல் சிக்கித் தவிக்கும் சக்திகளுக்கு விடை கூற வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.
இந்திய
அளவில் வளர்ந்துள்ள வகுப்புவாத அரசியல் வளர்ச்சியினூடே, இந்துத்துவ வகுப்புவாதிகள் நாளும் வளர்ந்து வரும் பொய்யான கருத்தியல் ரீதியான எதார்த்த நிலையில் நாம் மெய்ம்மை காண வேண்டிய நிலையிலுள்ளோம். தமிழக ஆயர் பேரவையும், தமிழக இறையியல் ஆய்வாளர்களும் இதனை நம் வாழ்வியல் பிரச்சினை என்பதாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஜோசப்
விஜய் என்ற பெயரில் உருவாகியுள்ள அரசியல் தலைமையும், மரிய வில்சன், பிரபாகர் என்ற மனிதர்களின் கிறித்தவ அடையாள உறுதிப்பாடும், இன்றைய பேசுபொருளாக மாறியுள்ளனவா என்பதுதான் இன்றைய கேள்வி. கேள்விகளைத் தாண்டி விடைகளைத் தேடிச்செல்வோம். எதிரிகள் மரிய வில்சனையும் பிரபாகரையும் மட்டும் குறி வைக்கவில்லை. தமிழகம் தாண்டி தேசிய அளவிலும் கிறித்தவத்திற்கு எதிரான பொய்யுரைகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. மரிய வில்சனும் பிரபாகரனும் மதவாத சிந்தனை உடையவர் அல்லவா! அவர்கள் எளிய நம்பிக்கையாளர். தம் நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவர்தம் உரிமை, அரசியல் சாசன உரிமை. இவ்வுரிமை மூலம், கிறித்தவத்தின் அன்பு மொழியை, கருணை மொழியை அறிவிக்கிறார். அடையாளம் எனும் அடிப்படை உரிமையைப் பதவி நோக்கில், அரசியல் நோக்கில் சமரசம் செய்து வாழ்வோர் மிகுந்துள்ள இக்காலகட்டத்தில் எளிய நம்பிக்கையாளர் நாம், நம் நற்செய்தியை அறிவிப்போர் என்பதை மறக்க வேண்டாம்.
இந்து
என்ற மத அடிப்படையிலான இராஷ்டிரம்
அமைப்பதே நோக்கம்: இராஷ்டிரம் கலாச்சாரத் தேசியத்தின் அடிப்படையில் அமையும். இத்தேசத்தின் பிரதமர், திருப்பரங்குன்றத்தில் நெடுஞ்சாண்கிடையாகத் தொழுவார். 400 ஆண்டுகால மசூதியை இடித்து, மாபெரும் கோவில் கட்டி, சமயச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அக்கோவிலின் தலைமைப் பூசாரியாகவே நின்று பிரதிஷ்டை செய்வாராம்.
இச்செயல்களில்
மதவாதம் இல்லை; மதச்சார்பின்மை கேள்விக்குறியாகவில்லை; சட்டமன்றத்தில் ஒலித்த கிறித்தவம் என்ற ஒற்றை ஒலி என்ன செய்துவிடும் என்று புலம்புவோரின் பிரிவினைப் போக்கைப் புரிந்துகொள்வோமா?
‘சனாதனம்’ என்பது சமஸ்கிருத மொழிச் சொல்லாகும். சனாதனம் என்றால் என்றும் நிலைத்திருப்பது, அழியாதது, தொடக்கமும் முடிவும் இல்லாதது, காலங்களைக் கடந்தும் நிலைத்து இருப்பது. பழமை மிகு ரிக் வேதத்திலும், பாகவத புராணம் போன்ற இந்து மதம் சார்ந்த புத்தகங்களிலும் ‘சனாதனம்’ என்ற வார்த்தை காணக்கிடைக்கிறது.
‘சனாதனம்’ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகளாலும் ஞானிகளாலும் உருபெற்றது. அது உலகின் தொடக்கம், படைப்பின் மூலம். எதுவென அறிந்துகொள்ள தத்துவங்கள் வழியும், வாய்மொழி உபதேசங்கள் வழியும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் போதித்தது. மேலும், ஒரே கடவுள், கர்ம வினை, புனர் ஜென்மம்,
தர்மம், முக்தி என்ற மதக்
கடமைகளை வலியுறுத்துகிறது.
19-ஆம்
நூற்றாண்டுகளில் சுவாமி தயானந்த சரஸ்வதி ‘ஆரிய சமாஜ்‘ என்ற இந்துமதப் புரட்சி அமைப்பை உருவாக்கினார். இந்து மதத்தில் சிலை வழிபாடு, சாதிமுறை ஒழிப்பு,
உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை வலிந்து எதிர்த்தார். ‘ஆர்ய சமாஜ்‘ என்ற அமைப்பை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பிரம்ம சமாஜ், பார்த்தன சமாஜ் போன்ற இந்துமதப் புரட்சி
அமைப்புகள் உருவாயின.
இந்துமதப்
பழமைவாதிகள் பாலகங்காதர திலகர் தலைமையில் ‘சனாதனம்’ என்பதே இந்து மதத்தின் ஆணிவேர்; சனதானம் நிலைபெற்ற தர்மம்; சனாதன விதிகளை மாற்றத் தேவையில்லை; ‘நாங்கள் சனாதனவாதிகள்’ என
அறிவித்துக் கொண்டனர்.
19-ஆம்
நூற்றாண்டில் எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் மக்கள்தொகை கணக்கெடுப்புகளில், தங்களை ‘சனாதனவாதிகள்’ என
மதரீதியில் பதிவுசெய்து கொண்டனர். ‘சனாதனம்’ என்பது பிரிந்திருந்த இந்துமதப் பிரிவுகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை, இந்துமத ஒற்றுமைச் சொல்லானது.
வட
இந்தியாவில் மதபீடங்களும் மதவாதிகளும் தங்களை ‘சனாதனவாதிகள்’ எனப்
பெருமையாகக் கூறி, மக்களிடமும் மனுதர்மத்தை எடுத்துச் சென்றனர். ‘சனாதனம்’ என்பதை இந்து மக்களின் வாழ்க்கைநெறி எனப்
பரப்பினர். இன்று வட இந்திய அரசியலில்
சனாதனம் என்பது இந்துமதக் கோட்பாடு, வாழ்வியல் நெறி என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். இன்றுவரை தொடரும் வட இந்திய சாதிய
வன்முறைகளுக்கு அங்குள்ள மனுதர்மமே அடிப்படை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
தமிழ்நாட்டில்
நீதிக்கட்சி முதல் திராவிட இயக்கங்கள் வரை ‘சனாதனம்’ என்பது பிறப்பு அடிப்படையில், செய்கிற தொழில் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கிற ஆரிய மேலாதிக்கத்தின் அடையாளம் என்ற விழிப்புணர்வை
உருவாக்கினார். ‘சனாதனம்’ என்பது ஆரியர்களின் வாழ்வியல் கோட்பாடு என அடையாளமானது. திராவிட
இனத்தை அடிமைப்படுத்தும் அரசியல் ரீதியான மதவாதிகளின் தந்திரம் என்ற வாதங்கள் புதிய ‘சமூக நீதி’ அரசியலானது.
மனுசாஸ்திரம்
பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் எனச் சமூக அமைப்பைப் படிநிலைகளாகப் பிரிக்கிறது. குலத்தொழில்களை வலியுறுத்துகிறது. பிராமணர்களிடம், பிற பிரிவு சாதி மக்களை அடிமைகளாக வைக்கிறது.
ரிக்வேத
சுலோகங்கள் 10:90:12 இவ்விதம் கூறுகின்றன: தேவர்கள் யாகம் செய்து பலியாகிவிட்டனர். பிரம்மனின் உடலிலிருந்து மனிதர்கள் பிறக்கின்றனர். இங்குதான் வர்ணாசிரம, தர்மத்திற்கான அடிப்படை பிறக்கிறது. பிரம்மனின் படைப்பில் உயர்வு-தாழ்வு சாதிகள் உருவாகின்றன. ‘சனாதனம்’ என்பது மதம் சார்ந்த புரிதலில், முழு கோட்பாட்டு நெறிகளில் விவாதங்கள் தேவை இல்லை. ‘சனாதனம்’ என்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதே உறுதியானதாகும். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ‘சனாதன எதிர்ப்பு’
என்ற அடையாள அரசியலை தி.மு.க. பேசுகிறது.
2023, செப்டம்பர் 2 அன்று
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய விழாவில்,அன்றைய தமிழ்நாட்டுத்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை ஒழிப்போம்”
என்றார். இப்பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பானது. வட இந்திய காங்கிரஸ்
கட்சித் தலைவர்கள் “இம்முழக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்றனர். 2026, மே 12 அன்று நடந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின்
சட்டசபைப் பேச்சிலும், “மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை ஒழிப்போம்”
என்று பேசியே முடித்தார்.
இந்து
மதம் என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் என முக்கியப் பிரிவுகளைக்
கொண்டது. வேதங்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளைக்
கொண்டது. வேதங்கள் வழிபாட்டு முறையை உள்ளடக்கியதாகும்.
உபநிடதம்
என்பது குருவிடம் இரகசியமாகக் கற்றுக்கொள்ளும் தத்துவம் சார்ந்த வேதாந்தமாகும். 108 உபநிடதங்களும் ‘உனக்கு உள்ளேயே கடவுள் இருக்கிறார்; அவரை வெளியே தேடாதே’ என்றே தத்துவ
வேதாந்தம் பேசுகிறது.
ஸ்மிருதி
என்பது கடவுளால் அருளப்பட்டது, கேட்டு அறிந்தது. ஸ்மிருதி என்பது ஓர் எழுத்தும் மாற்ற முடியாதது, நிலையானது. ரிக்வேதம் ஓதும் முறையில் எழுத்துகூட மாறாதது.
யுனெஸ்கோ ரிக் வேதம் ஓதும் முறையைக் காப்பாற்றப்பட வேண்டிய பாரம்பரியமாக அறிவித்துள்ளது. ஸ்மிருதிகளே சனாதனத்தின் அடிப்படைச் சட்டங்கள். ஸ்மிருதி என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஸ்மிருதி என்பது ரிஷிகள்
சொல்ல, சீடர்கள் எழுதுவது. இந்து மதப் புரட்சியாளர் தயானந்த சரஸ்வதி, “வேதத்திற்கு முரணாக இருந்தால் ஸ்மிருதியை ஒதுக்கலாம்” என்றார்.
ரிக்
வேதம் சனாதன தர்மம் குறித்து ‘அக்னி தர்ம சுலோகம்’ வழியாக வலியுறுத்துகிறது. “நிலையான தர்மங்களை, கடமைகளை மீறக்கூடாது; தாயைத் தெய்வமாக்கு; தந்தையைத் தெய்வமாக்கு; குருவைத் தெய்வமாக்கு; விருந்தினரைத் தெய்வமாக்கு; சத்தியத்தின் பாதையில் நட; தர்மத்தின் பாதையில் நட” என்கிறது.
மகாபாரதத்தில்
ஒரு காட்சி வருகிறது. போர்க்களத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரிடம் கேட்கிறார்: “எதிரே நிற்பவர்கள் என் உறவினர்கள்; நான் எப்படிப் போர்புரிவது?”
கிருஷ்ணரின்
பதில் “மனுதர்மபடி குலதர்மம் கூறுகிறது: நீ சத்ரியன், உன்
தொழில் போர் செய்வது.”
பிராமணர்களின்
பெயரை உச்சரித்தால் நாக்கில் சூடு போடுகிறது மனுதர்மம். உயர்சாதியினர் செய்யும் தவறுகளுக்குத் தண்டனைகள் குறைவாகவும், அதே தவறுக்குப் பிற சாதியினருக்குத் தண்டனை அதிகமாகவும் மனு ‘அதர்ம நீதி’ கூறுகிறது. சட்ட உரிமைகள் இல்லாத சூத்திர மக்களை அடிமைகளாக மனுதர்மம் முன்னிறுத்துகிறது.
சனாதனம்
என்ற நெறி, தேசத்தில் முன்னேறிய ஒரு சாதியினரை முன்னிறுத்துவதாகவும்,
அவர்களின் உயர் நிலையைப் பாதுகாப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் நிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது. இதை நன்கு உணர்ந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் 1972, டிசம்பர் 25-இல் மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார்.
சனாதன
தர்மம் மனுஸ்மிருதியை உள்ளடக்கியது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எளிய மக்களுக்கான சமூக நீதிக்குப் புறம்பானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு , மனு தர்ம சனாதன விதிகளுக்கு உள்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்திற்குக் கனவு காண்கிறது.
தேசத்தின்
குடிமக்களைச் சாதிரீதியாக அடிமைப்படுத்தும் சனாதன முறைக்கு எதிர்க்குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் என்றும் சமூகநீதியைக் கண்ணின் இமையெனப் பேணுவோம்.
உரோமையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மையத் திரு அவையின் நிர்வாகம் துறவற சபைகளின் உள்கட்டமைப்புகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்து, அவர்களின் ஆன்மிகம், திருப்பணி, சமூக மற்றும் சமயப்பணி, திரு அமைப்பின் உறுப்பினர்களின் வாழ்நாள் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட அந்த அமைப்புகளுக்கு ஒரு சாதாரண அமைப்பாகவோ (association), உலகியத் துறவு அமைப்பாகவோ (institute) அல்லது துறவறச் சபையாகவோ (congregation) செயல்பட அவர்களை அங்கீகரித்தது. அதேவேளையில், திரு அவை தன்னுடைய உள்கட்டமைப்புகளையும் அதன் சட்டத் திட்டங்களையும் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி விரிவாக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்ததோடு அல்லாமல், திரு அமைப்புகளையும் இத்திருப்பணிகளில் ஈடுபட அழைத்தது.
இவ்வாறு,
பல்வேறு துறவறச் சபைகள் உருவாகி உலகம் எத்திசையிலும் சென்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில்தான், பாரிஸ் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு பிரான்சுவா பல்லு, பேரருள்திரு லாம்பெர்ட் தெ லா மோத்
மற்றும் பேரருள்திரு இஞ்ஞாசி கோத்தலாண்டி ஆகிய அருள்தந்தையர்கள் தூய ஆவியாரால் தூண்டப்பட்டு, பாரிஸ் அயல்நாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணிகள் என்ற உலகியத் துறவு அமைப்பை உருவாக்கி, ஆசிய தென்கிழக்கு நாடுகளை நோக்கி நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்ய அருள்பணியாளர்களை அனுப்பினார்கள்.
17-ஆம்
நூற்றாண்டில் இவர்கள் சீனா, ஜப்பான், மலேசியா, கம்போடியா, வியட்நாம், பர்மா, சியாம், கொரியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், தாய்வான், மொரிசியஸ், பிலிப்பைன்ஸ், பிரேசில், நியூ கலிபோர்னியா போன்ற உலகின் கடையெல்லைகளுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்தனர். இக்குருக்களை பாரிஸ் குருமடத்தில் உருவாக்கி, அவர்களை நற்செய்தி அறிவிப்பிற்காக அனுப்பினர்.
ஏறக்குறைய
17-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியிலிருந்து 1773 வரை அவர்கள் தங்களின் மறைப்பணித்தளங்களுக்குச் செல்கின்றபோது, கப்புச்சின் சபை மற்றும் இயேசு சபையினரின் மறைப்பணித்தளமாக இருந்த இந்தப் புதுச்சேரியை ஓர் இடைநிலைத் தங்குமிடமாகவும், தங்களின் பொருள்களைச் சேகரித்துவைத்து அனுப்பும் ஒரு பொருள்பாதுகாப்புக் கிடங்கு இடமாகவும் இப்புதுச்சேரியை மையமாக அமைத்தனர்.
1773-இல் இயேசு
சபை கலைக்கப்பட்டபோது, திரு அவை இந்தக் கர்நாட்டிக் மறைப்பணித்தளத்தை பாரிஸ் அயல்நாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணிகள் என்ற உலகியத் துறவு அமைப்பிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு 1776 முதல் கர்நாட்டிக் மிஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, புதுவையை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதும் குறிப்பாக, புதுவை, தமிழ்நாட்டின் பல பகுதிகள், கர்நாடகா,
ஆந்திராவின் சில பகுதிகளில் ஏறக்குறைய 700 MEP குருக்களுக்கும்
மேலாக இம்மண்ணில் பணிபுரிந்து தங்களையே தியாகம் செய்திருக்கின்றனர்.
MEP நற்செய்தி
அறிப்பாளர்களின்
தொலைநோக்குப்
பார்வை
MEP ஒரு
துறவறச் சபை அல்ல; இது ஓர் உலகியத் துறவு அமைப்பு. எனவேதான் தங்களின் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கான செலவுகளைத் தங்களின் நாட்டிலிருந்தும், தாங்கள் பிறந்த ஊரிலிருந்தும், தங்களின் உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோரிடமிருந்தும், தங்கள் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்தும்
பொருளுதவிகளைப் பெற்றுத் திரு அவையின் உள்கட்டமைப்புகளை நம் மண்ணில் கட்டியெழுப்பியுள்ளார்கள். தங்களின் மறைப்பணித்தளத்தின் பல பகுதிகள் ஆங்கிலேயரின்
ஆட்சிக்குட்பட்டதாக இருந்தாலும், MEP பிரெஞ்சு
அருள்தந்தையர்கள் இன, மொழி பேதமின்றி, தாங்கள் பணிசெய்த இடங்களிலெல்லாம் செய்த நிதி முதலீடுகள் கணக்கிட முடியாதவை.
மறைப்பணித்தளக்
உள்கட்டமைப்பு:
சுயசார்
புடைத்தன்மை
- நிலங்கள்,
பண்ணைகள்
நற்செய்திப்
பணியாளர்கள் தாங்கள் எந்த மறைப்பணித்தளங்களுக்குச் சென்றாலும், முதலில் ஆலயம், பள்ளிகள், துறவற இல்லங்கள், ஆகியவைகளை வடிவமைத்தனர். அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் ஒவ்வொரு பங்கும் பொருளாதாரச் சுயசார்புடைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது அவர்களின் கனவு. எனவே, அந்தத் தளத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நிலம், பண்ணை போன்ற சொத்துகளை வாங்கினர். அங்குதான் அவர்கள் கோவில்களையும் பள்ளிகளையும் துறவற இல்லங்களையும் கட்டினர். இவை அனைத்தையும் தங்கள் துறவற அமைப்பின் உதவியோடும், தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டும் வாங்கினர், கட்டியெழுப்பினர்.
இன்று
நம் கண்களுக்குப் புலப்படும் வகையில் பார்க்கின்றபோது, புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம், கும்பகோணம் மறைமாவட்டம், சேலம் மறைமாவட்டம், தர்மபுரி மறைமாவட்டம், பெங்களூரு உயர்மறைமாவட்டம், மைசூர் மறைமாவட்டம், கோயம்புத்தூர் மறைமாவட்டம், வேலூர் மறைமாவட்டத்தின் சில பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானாவிலுள்ள சில மறைமாவட்டங்கள், ஊட்டி மறைமாவட்டம், விசாகப்பட்டினம் மறைமாவட்டம், வாரணாசி மறைமாவட்டம், வட கிழக்கு இந்தியாவில்
உள்ள சில மறைமாவட்டங்கள் மற்றும் இலங்கை போன்ற இடங்களில் தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து உழைத்தனர். இந்த இடங்களிலெல்லாம் அமைக்கப்பட்ட திரு அவையின் மையங்களின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு நிலம் வாங்கியுள்ளனர். கோவில்கள், சிற்றாலயங்கள், பள்ளிக்கூடங்கள் கட்டியுள்ளனர்; துறவற இல்லங்களை அமைத்துள்ளனர். இவர்கள் இவற்றையெல்லாம் வைத்து தங்களின் சபையின் வளர்ச்சிக்கு வருமானம் சேர்க்கவில்லை; மாறாக, நம் தலத் திரு அவையின் வளர்ச்சிக்காக, பொருளாதார சுயசார்புத்தன்மையை இலக்காக வைத்து, முதலீடு செய்துள்ளனர்.
பேராலயங்கள்,
திருத்தலங்கள்
- ஆலயங்கள்:
மேற்கூறிய எல்லா மறைமாவட்டங்களின் பேராலயங்கள் ஏறக்குறைய இவர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டவை. மனம் திரும்பிய மக்கள் பெரும்பாலும் ஏழைகள். எனவே, நம் மக்களால் வழங்க இயலாது என்பது எதார்த்தம். நம்முடைய மறைமாவட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், ஜென்ம ராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் மாதா திருத்தலம், அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் ஆலயங்கள், இருதய ஆண்டவர் பசிலிக்கா, கடலூர் முதுநகர், கடலூர் புதுநகர், திண்டிவனம், முகையூர், விரியூர், அணிலாடி, காரைக்கால், மையனூர் நெய்வேலி, விருதாச்சலம், செஞ்சி, இருதயம்பட்டு போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு நிகராக நம்மால் இன்று கட்டியெழுப்ப முடியுமா? என்பது மிகப்பெரிய வினா!
நிரந்தரச் சொத்துகளில்
குறிப்பிடத்தக்கவை
பெங்களூர்
புனித இராயப்பர் குருமடம்: இன்றும் இந்தக் குருமட நிலமும், தொடக்க காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் MEP அருள்தந்தையர்களால்
உருவாக்கப்பட்டு, இன்றும் நம்முடைய உயர்மறைமாவட்டத்தின் சொத்தாகவே இருக்கின்றது. இந்தப் பழைய கட்டடங்கள் இரண்டாம் உலகப் போரின்போது, காயம்பட்ட பிரித்தானிய, இந்தியப் படைவீரர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்டேட்டுகள்
(அ)
பண்ணைகள்:
ஏற்காட்டில் இருந்த மைசூர் எஸ்டேட், நம்முடைய மறைமாவட்டத்தின் பணிகளுக்காக நிதி தரும் ஊற்றாக இருந்தது. பால்மாடிஸ் எஸ்டேட், சான் ஜோஸ் எஸ்டேட் மொத்தம் ஏறக்குறைய 1500 ஏக்கர் நிலங்கள் MEP அருள்தந்தையர்களால்
விலைக்கு வாங்கப்பட்டவையே. கார்மேல் மடம், ஒஸ்பீஸ் மடம், பல இடங்களில் உள்ள
கருணை இல்லங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையோடு, எதிர்காலக்
குழந்தைகளின் பராமரிப்பிற்காக, அவர்களின் உணவிற்குத்
தேவையான நெல் பயிரிட ஏறக்குறைய 700 ஏக்கர் நிலமுடைய தஞ்சை டெல்டா பகுதியிலும் நீலவேலி எஸ்டேட்டை வாங்கினர்.
திண்டிவனம் மையம்:
‘கத்தோலிக்க மையம்’ என்று அழைக்கப்படுகின்ற அந்த இடத்தில் உயர்நிலைப்பள்ளி தற்போது மேல்நிலைப்பள்ளி, ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, வேதியர் பயிற்சிப்பள்ளி, ஒலி-ஒளி பதிவு மையம், பாடப் புத்தகங்கள், மறைக்கல்வி நூல்கள் அச்சிட ஓர் அச்சுக்கூடம், பயிற்சி நிலை ஆசிரியர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக ஒரு மாதிரிப்பள்ளி; மேலும், விவிலிய திருவழிபாட்டு, மறைக்கல்வி பயிற்சிக்கூடங்கள், அதற்குத் தேவையான நூல்கள் உருவாக்கம்... இவைகளெல்லாம் நடைபெற இந்த மையத்தை MEP தந்தையர்
உருவாக்கியுள்ளனர்.
மேலும்,
ஏழை மாணவர்களின் உணவுத் தேவைக்காகப் பெரிய விளைநிலங்களையும வாங்கி உள்ளனர். இந்த விளைநிலங்களில் ஒன்றில்தான் தற்போது நம்முடைய புனித அன்னாள் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் மறைமாவட்டம்தான் இந்த மையத்தின் கட்டடங்கள், நிலம் ஆகியவற்றை தமிழ்நாடு ஆயர் பேரவையின் விவிலிய, திருவழிபாடு, மறைக்கல்வி மையமாகச் செயல்பட வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிட வேண்டியது.
பங்கு அளவில்:
நம் மறைமாவட்டத்தில் 107 பங்குகளிலும், ஏன் தற்போது மறைத்தூதுப் பணித்தளங்களாக அறிவிக்கப்பட்டு, பல துறவறச் சபைகளுக்கு
ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நற்செய்தி அறிவிப்பு மையங்கள் உள்பட எல்லா இடங்களிலும் அவர்கள் எதிர்காலத்தில் அந்த மையத்திற்குச் சுய சார்புத்தன்மை இருக்கவேண்டும்; அதற்கு வேளாண்மை மூலம் வருமானத்தை ஈட்டலாம் என்ற தொலைநோக்குப் பார்வையோடும் சிந்தனையோடும் செயல்பட்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் சமய மற்றும் சமூகப் பற்றை நாம் வியக்காமல் இருக்க முடியாது.
நன்கொடைகள், தானங்கள்:
நம்முடைய மறைமாவட்டத்திலும், அவர்கள் பணிபுரிந்த பல மறைமாவட்டங்களிலும் சில செல்வந்தர்கள்
தங்களுக்கு வாரிசுகள் இல்லாதபோது (அ) அந்தக் கோவிலின்
பாதுகாவலர்மீது அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த அளவிட முடியாத பற்றினால், நம்பிக்கை உணர்வோடு தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைத் தானமாகக் கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு, 1933-இல் திரு. ஆரோக்கிய ஞான முதலியார் எழுதி வைத்த சாசனத்தில் ஜென்ம இராக்கினி அன்னைக்கும், வில்லியனூர் புனித லூர்து மாதாவுக்கும் எழுதி வைத்த வெள்ளி, வைர, தங்க நகைகள் மற்றும் நிலங்கள்... இவை எதையும் தங்களின் துறவு அமைப்புச் சொத்தாக மாற்றிக்கொள்ளவில்லை. நம்முடைய தலத் திரு அவைக்காகவே கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதுவே MEP-யின் தனிச்சிறப்பு.
18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் குறிப்பாக, பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு, பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (MEP) குருக்கள் ஆற்றிய இலக்கிய மற்றும் மொழியியல் பணிகள் தமிழ்மொழியின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன. சமயப் பணிகளுக்காகத் தமிழைத் தழுவவேண்டிய கட்டாயத்தில் இருந்த இவர்கள், அச்சு ஊடகம் வழியாகத் தமிழ் உரைநடைக்கும், அகராதித் துறைக்கும் புதிய பரிமாணத்தை அளித்தனர்.
1. அகராதியியல்
MEP மறைப்பணியாளர்களின் மிக நீடித்த மற்றும் முக்கியமான பங்களிப்பு அகராதித் துறையாகும். அருள்பணி. லூயி சவினியன் துப்புயி (Louis Savinien Dupuis) மற்றும்
அருள்பணி. லூயி-மரி மூசே (Louis-Marie Mousset) இருவரும் இணைந்து 1846-இல் ‘இலத்தீன்-பிரெஞ்சு-தமிழ் அகராதி’ (Dictionarium Latino-Gallico-Tamulicum) என்ற
மும்மொழி அகராதியை வெளியிட்டனர்.
தொடர்ந்து
1855-1862 காலகட்டத்தில்,
இரண்டு தொகுதிகளாக வெளிவந்த ‘தமிழ்-பிரெஞ்சு அகராதி’ (Dictionnaire Tamoul-Francais) தமிழ் மொழியியல்
வரலாற்றில் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். இதில் இலக்கியத்தமிழ் (செந்தமிழ்) மற்றும் பேச்சுத் தமிழ் (கொடுந்தமிழ்) ஆகிய இரண்டையும் இணைத்து வழங்கினர். இது பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் லெக்சிகன்’
உருவாக முதன்மை ஆதாரமாக அமைந்தது.
அருள்பணி.
ஜான்-பாப்டிஸ்ட் லாப் (Jean-Baptiste Lap) ‘பிரெஞ்சு-தமிழ் அகராதி’ மற்றும் ‘தமிழ்-பிரெஞ்சு சிற்றகராதி’(1886) ஆகியவற்றை
அச்சிட்டு வெளியிட்டார். பேராயர் சார்போனோ (Msgr. Etienne Louis Char
-bonnaux) 1200 பக்கங்களைக்
கொண்ட ‘இலத்தீன்-கன்னடம்’ அகராதியைத் தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கினார்.
மொழிபெயர்ப்புகள்
தமிழ்
இலக்கியங்களை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்துவதிலும், மேலைநாட்டு மெய்யியல் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதிலும் இவர்கள் பாலம்போலச் செயல்பட்டனர். அருள்பணி துபுவா இந்திய நீதிநெறிக் கதைகளான ‘பஞ்ச தந்திரக் கதைகளை’ பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து, 1826-இல் பாரிசில் வெளியிட்டார். மேலும், வீரமாமுனிவரின் நகைச்சுவைப் படைப்பான பரமார்த்த குரு கதைகளை முதன் முதலில் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து ஐரோப்பிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அருள்பணி. லூயி சவினியன் துப்புயி வீரமாமுனிவர் இயற்றிய கடினமான ‘தேம்பாவணி’
காப்பியத்தைப்
பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டார்.
சமய இலக்கியம்
மற்றும்
மறைக்கல்வி
நூல்கள்
சமயப்
போதனைகளுக்காக இவர்கள் எளிய உரைநடையில் பல நூல்களை உருவாக்கினர்.
மறைக்கல்வி நூல்களான துப்புயி அடிகளார் இயற்றிய ‘சின்னக் குறிப்பிடம்’ என்ற
அடிப்படை மறைக்கல்வி நூல் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. பேராயர் சார்போனோ அவர்கள் பல்வேறு மெய்யியல் உரையாடல்கள் மற்றும் மறைக்கல்வி கையேடுகளைத் தமிழில் அச்சிட்டார்.
அருள்பணி.
ஜான்-பாப்டிஸ்ட் லாப் கத்தோலிக்கக் கோட்பாடுகளை விளக்கும் ஏழு தொகுதிகளைக் கொண்ட விரிவான படைப்பை எளிய தமிழ் உரைநடையில் வழங்கினார். மேலும், 1893-இல் ‘A Choice of 93 Tamil Songs’ என்ற பெயரில் 93 தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இசைப்பாடல்களின் தொகுப்பை வெளியிட்டு, கத்தோலிக்க வழிபாட்டில் உள்ள இசை வடிவங்களை
இணைத்தார். பாண்டிச்சேரி
மிஷன் அச்சகம் வழியாகத் திருவிவிலியப் பகுதிகள், செபநூல்கள் மற்றும் திருமுழுக்கு, நற்கருணை தொடர்பான பல அறநெறி நூல்கள்
அச்சிடப்பட்டுப் பரப்பப்பட்டன.
ஆய்வுப்பணிகள்
இந்தியச்
சமூகம் மற்றும் சமயத் தத்துவங்கள் குறித்து இவர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டனர். அருள்பணி துபுவாவின் ‘இந்துகளின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்’ என்ற
நூல் 19-ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய சமூக வாழ்க்கை குறித்த முதன்மையான ஆய்வு ஆவணமாக இன்றும் கருதப்படுகிறது.
பேராயர்
லாவேனான் அவர்கள் 1885-இல் வெளியிட்ட ‘Du Brahmanisme Et de Ses Rapports Avec Le Judaisme Et Le
Christianisme’ (பிராமணியமும்
யூதமும் கிறித்தவமும்) என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட ஒப்பாய்வு நூல் பிரெஞ்சு அகாதெமியின் ‘Prix Bordin’ விருதைப்
பெற்றது. இது இந்தியச் சமயச் சிந்தனைகளை மேலை உலகுக்கு விளக்கிய முன்னோடி முயற்சியாகும்.
இவர்கள்
தமிழ் இலக்கண அமைப்பை மேலை நாட்டு மொழிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, பல பிரெஞ்சு - தமிழ்
இலக்கண நூல்களையும் வெளியிட்டனர்.
இதழ்கள் மற்றும்
பத்திரிகைகள்
கத்தோலிக்கக்
கோட்பாடுகளைப் பரப்பவும், மற்ற சபையினரின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும் இவர்கள் இதழியல் துறையில் கால் பதித்தனர்.
‘சர்வ வியாபி’ (Sarva Vyabi) 1907-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட வார இதழ். இந்த இதழ் மிகவும் புகழ்பெற்றது. பேராயர் காந்தி மற்றும் மறைப்பணி அச்சக மேலாளர் திசாந்தியே அடிகளார் ஆகியோரின் முயற்சியால் இது உருவானது. இதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருள்பணி. பால் வோ (Paul
Veaux) தனது கட்டுரைகளில் திருக்குறள், நாலடியார் போன்ற தமிழ் இலக்கியங்களை மேற்கோள்காட்டிப் புகழ் பெற்றார்.
மேலும்,
MEP சபையினர்
1885 முதல் தங்களது மறைப்பணி அனுபவங்கள் மற்றும் கடிதங்களை ஆவணப்படுத்தும் பல்வேறு இதழ்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.
அச்சகம்
பாண்டிச்சேரியில்
இயேசு சபையினர் ஓர் அச்சகத்தை நடத்திவந்தனர். ஆனால், ஆங்கிலேயர் 1761-இல் புதுச்சேரியை பிரான்ஸ் அரசிடமிருந்து கைப்பற்றினர். அப்போது அவர்கள் பயன்படுத்திய அச்சு
இயந்திரத்தையும், அதனை இயக்கி வந்தவரையும் சென்னைக்குக் கொண்டு சென்றனர். இதனால் கிறித்தவர்களுக்கென்று தனி அச்சுக்கூடமில்லை. அதனால் பாண்டிச்சேரி மறைப்பணித் தளத்திற்கென்று ஓர் அச்சகம் தொடங்க மேதகு பொனான் ஆண்டகை 1840-இல் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசிடம் அனுமதி பெற்றார். பிரெஞ்சு அரசு ஒரு பழைய அச்சு இயந்திரத்தையும், அச்சு மையையும் கொடுத்து உதவியது. எனவே, 1841-இல் சட்டப்பூர்வமான அனுமதியை உரோமையிலிருந்து பெற்றபின் ‘பாண்டிச்சேரி சென்ம இராக்கினி மாதா அச்சகம்’ என்ற பெயரில் அச்சகத்தை அருள்பணி. துப்புயி தொடங்கினார். இது பிற்காலத்தில் ‘மிஷன் அச்சகம்’(Mission Press) என்று
பெயர் பெற்றது.
மறைவிளக்க
நூல்கள், செப நூல்கள், திருவழிபாட்டுப் பாடல்கள், நூல்கள், பக்திப் படங்கள் என்று இங்கு அருள்பணி. துப்புயி தனது காலத்தில் பதிப்பித்த நூல்கள் 125 என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சமயச் சார்பு நூல்கள், அறநெறி நூல்கள், பாடநூல்கள், தமிழ்மொழி நூல்கள், பிறமொழி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என்று அவர் பதிப்பித்த நூல்களை வகைப்படுத்தலாம்.
1. சமயச்சார்புடைய
நூல்கள் - 38
2. அறநெறி
நூல்கள் - 10
3. வரலாற்று
நூல்கள் - 18
4. செபப்
புத்தகங்கள் - 05
5. பாட
நூல்கள் - 12
6. செய்யுள்
- 13
7. உரைநடை
நூல்கள் - 03
8. அகராதி
- 05
9. இலக்கணம்
- 06
10. உரைகள்
- 01
11. பஞ்சாங்கம் - 02
12. பிறமொழி நூல்கள்
- 07
13. மொழிபெயர்ப்பு நூல்கள்
- 05
பாரிஸ்
அயலக மறைபரப்புச் சபை (MEP) குருக்களின்
பணி வெறும் நற்செய்தி அறிவிப்போடு நின்றுவிடாமல், ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழைக் காகித அச்சிற்கு மாற்றி, அகராதிகள் மற்றும் உரைநடைகள் மூலம் தமிழை ஒரு நவீனச் செம்மொழியாக உலக அரங்கில் நிலைநிறுத்த உதவியது.
பாரிஸ் மறைபோதகக் குருக்கள் அன்றைய சமூகத் தில் புரையோடிக் கிடந்த பல சமூகச் சீர்கேடுகளை, சமூகப் பிரச்சினைகளைக் களைந்து, இயேசுவைப் போலவே அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், நல்வாழ்வு ஆகிய உயரிய விழுமியங்களின் அடித்தளத்தில், ஒரு புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப அரும்பாடுபட்டனர். அதற்குச் சான்றாக பல வரலாற்று நிகழ்வுகளை நாம் மேற்கோள்காட்டலாம்.
வறுமை, பஞ்சத்தில்
உயிர்
காத்த
உத்தமர்கள்
1876-இல் ஒரு
கொடிய பஞ்சம் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை வாட்டி எடுத்தது. மக்கள் உணவின்றி, உயிரிழந்து கொண்டிருந்த காலகட்டம் அது. மீண்டும் 1898 மற்றும் 1899 ஆண்டுகளிலும் மக்கள் கொடிய பஞ்சத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தக் காலகட்டங்களில், பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றிய பாரிஸ் அயல் நாட்டு மறைப்போதகக் குருக்கள், மக்களுக்கு கோதுமை, மாவு, எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி உயிரைக் காத்தனர். குறிப் பாக, அணிலாடி பங்கிலும், அதைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களிலும் அருள்தந்தை கோதெக், திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அருள்தந்தை கோம்ப், மேல்-சித்தாமூர் பகுதிகளில் அருள்தந்தை ஷாவனோல் ஆகியோர் தங்கள் உடைமைகளை விற்றும், பிரான்ஸ் நாட்டில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றும் மக்களின் உயிரைக் காத்தனர். மதங்களைக் கடந்த அவர்களின் மனித நேயச் செயல்கள் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டன. அதில் பலர் கிறித்தவ மதத்தைத் தழுவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமன்றி, ஏறக்குறைய பஞ்சம் தலைவிரித்தாடிய அனைத்துக் கிராமங்களிலும் பணியாற்றிய MEP அருள்பணியாளர்கள்
இத்தகைய உதவிகளைச் செய்து மக்களைக் காத்தனர் (History of Pondicherry
Mission an outline, p.215).
அனாதை இல்லங்கள்,
மருத்துவ
மையங்கள்
பஞ்சத்தில்
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் மீது கனிவு கொண்ட பாரிஸ் மறைப்போதகக் குருக்கள், பல இடங்களில் அனாதை
இல்லங்களை உருவாக்கி, இந்தக் குழந்தைகளின் உணவு, இருப்பிடம், கல்வி, தொழிற்கல்வி போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு தந்தனர். குறிப்பாக, அருள்தந்தை கோம்ப் முதன்முதலாக திண்டிவனத்தில் 1896-லிருந்து 1898 ஆகிய காலகட்டங்களில் மாணவருக்கான ஓர் அனாதை இல்லத்தை உருவாக்கினார். அந்த மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்க, தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார்.
MEP மறைப்பணிகளின் தலைவராக (Vicar of Pondicherry Mission) இருந்த ஆயர்
பொனான், 1850-லிருந்து 1856-வரை உள்ள காலகட்டத்தில், குளூனி மற்றும் கொன்சாகா சபை அருள்சகோதரிகளின் உதவியோடு பெண் குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களைப் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கினார். பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை ஒளிரச்செய்தார். Holy Childhood அமைப்பின்
மூலம் பெறப்பட்ட உதவிகள் இந்த அனாதை இல்லங்கள் தொடர்ந்து நடைபெற உதவின. அனாதை இல்லங்களோடு மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ முதலுதவி மையங்களும் இந்த அருள்சகோதரிகளைக் கொண்டு தொடங்கப்பட்டன (HPM, p.162)
காலரா
போன்ற கொள்ளை நோய்கள் மக்களைத் தாக்கியபோதும், பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் மக்கள் தவித்தபோதும் MEP மறைப்பணியாளர்களின்
மதத்தைக் கடந்த மனிதநேய உதவிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, 1854-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மற்றும் அத்திப்பாக்கம் பகுதிகளில் பரவிய காலரா நோயினால் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயர் பொனான் அனைத்து மறைப்பணி யாளர்களின் உதவியோடு மக்களின் உயிர்காக்க பல மருத்துவ உதவிகளைச்
செய்ய அறிவுறுத்தினார் (HPM,158).
முகவரி இல்லாத
மக்களின்
முகவரியாக
MEP
சமுதாயத்தில்
உரிய அடையாளம் இல்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு மதத்தின்வழி மனித மாண்பினை மீட்டெடுப்பதன் மூலமாகப் புதிய அடையாளத்தை வழங்கியவர்கள் MEP மறைப்பணியாளர்கள்.
அன்றைய ‘சனாதன’ சமூகத்தினரால் சாதிய அமைப்பில் சேர்க்கப்படவே தகுதியற்றவர்களாக வாழ்ந்தவர்கள்தான் ‘தலித்துகள்’ அல்லது
‘ஹரிஜன்கள்’.
தலித்துகளுக்குள்
தலித்துகளாக(Dalit among the Dalits), தொட்டால்
மட்டுமல்ல ‘பார்த்தாலே தீட்டு’ என்று ஒதுக்கப்பட்டு, மக்களோடு மக்களாக வாழத் தகுதியற்றவர்களாக, ஊருக்கு வெளியே ஓரங் கட்டப்பட்டு வாழ்பவர்கள்தான் ‘சலவைத் தொழிலாளர்கள்’ (புதிரை
வண்ணார்கள்). இத்தகைய மனிதர்களை முதன்முதலில் தேடிச்சென்றவர்கள் MEP மறைப்பணியாளர்கள்.
குறிப்பாக, இன்றைய விழுப்புரம், திண்டிவனம், விருத்தாச்சலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாழ்ந்த மக்களைத் தேடிச்சென்று, அவர்களுக்குப் பொருளாதார உதவிகள், மருத்துவ உதவிகள், கல்வி உதவிகளைச் செய்துவந்தனர். எந்தக் கோவிலுக்குள்ளும் நுழையவோ, சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளவோ முடியாமல் இருந்த இவர்களுக்கு, கிறிஸ்துவை அறிமுகம் செய்து வைத்து, புதியதொரு சமய வழியைக் காட்டிவர்கள் MEP குருக்கள்.
‘ஊருக்கு ஒரு குடி’ என்று வாழ்ந்து வந்த சலவைத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒரே இடத்தில் குடியமர்த்தப் பெரும் முயற்சிகளைச் செய்து, அதில் வெற்றி கண்டவர் அருள்தந்தை ரெனே ஷொவே அவர்கள். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிதறிக் கிடந்த சலவைத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, அரசின் உதவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நைனார்பாளையம் என்ற ஊரின் எல்லையில் ஏறக்குறைய 300 ஏக்கர் நிலத்தை வாங்கி, தற்போதைய பாத்திமா பாளையம் என்ற கிராமத்தை 1957-ஆம் ஆண்டில் உருவாக்கினார். அவர்களின் குலத் தொழிலை மாற்றி, விவசாயத்திற்கு அறிமுகப்படுத்தி வாழ்வாதாரத்தை உறுதிசெய்தார்(Parish Record,
Fathima palayam).
1936 முதல் 1946-ஆம்
ஆண்டுவரை அருள்தந்தை டெல்ப்ரெய் கள்ளக்குறிச்சி பங்கின் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார். அங்கு இருந்த கிறித்தவர்கள் பெரும்பாலும் சலவைத் தொழிலாளர்களும், ஆதிதிராவிட மக்களுமே ஆவர். குறிப்பாக, ‘திருடர்கள்’ என்று
வகைப்படுத்தப்பட்டு, எப்பொழுதும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மக்களின் முகவரியை மாற்றி, அவர்களை ஒழுக்கமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்களாக அடையாளப்படுத்திய பெருமை அருள்தந்தை டெல்ப்ரெய் அவர்களையே சாரும் (Parish Record,
Chinna salem).
பெரும்
பணக்காரர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கி மீள முடியாமல், பெரும் இன்னலுக்கு உள்ளான மக்களை மீட்டெடுத்துப் புதுவாழ்வு தந்தவர் அருள்தந்தை டெல்ப்ரெய். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அகரகோட்டாலம், அக்கராப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் கடன் சுமையைக் குறைக்க, குறைந்த வட்டிக் கடன் கொடுக்கக் கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தினார். பல கிராமங்கள் இந்தத்
திட்டத்தை ஏற்றுக் கொண்டன. இதன் மூலமாக மக்கள் பெரும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைந்தனர். தாங்களாகவே விவசாயம் செய்து, வாழ்வில் முன்னேற்றம் காணும் அளவுக்கு அவர்களை உருவாக்கினார் (Parish Record, Chinna salem)
சாதியத்தை எதிர்த்த
சமத்துவவாதிகள்!
MEP மறைப்பணியாளர்களின் பணிக்காலத்தில் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினர். கிறித்தவர்களுக்குள்ளும் சாதியப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்தன. கிறித்தவத்தில் ஊடுருவிய தீண்டாமைச் செயல்களை MEP மறைப்பணியாளர்கள் வன்மையாக எதிர்த்தனர்; அதனைக் களையவும் அரும்பாடுபட்டனர் என்பதற்கு ஒருசில முக்கிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம்.
i) பாண்டிச்சேரியில்
மிக முக்கிய ஆலயமாக உள்ள நெல்லித்தோப்பு ஆலயத்தின் குறுக்கேயும், கல்லறையிலும் தலித் மக்களை மற்ற உயர்சாதி மக்களிடமிருந்து பிரிக்கவேண்டும் என்பதற்காக ‘தீண்டாமைச் சுவர்’ எழுப்பப்பட்டது. இந்தத் தீண்டாமைச் சுவர் பல ஆண்டுகள் ஆலயத்தில்
இருந்தது. இதனால் பல குழப்பங்களும் பிரச்சினைகளும்
எழுந்தா லும், இந்தச் சுவர் அகற்றப்படவில்லை. இதனை எதிர்த்த மறைப்பணியாளர்கள் பலர் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இறுதியில் ‘சமதர்ம
உள்ளம் கொண்டவர்’
என்று புகழப்படும் அருள்தந்தை ஷொவே அவர்களின் பணிக்காலத்தில் (1936-1946)
அவருடைய விடாப் பிடியான கடின முயற்சியால் ஆலயத்தில் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்டது. ஆனால், கல்லறையில் உள்ள சுவரை அகற்ற இயலவில்லை.
ii) பாண்டிச்சேரி மறைமாவட்டத்தின்
முதன்மை ஆலயமான புனித ஜென்மராக்கினி பேராலயத்திலும் (Cathedral) தலித் கிறித்தவர்கள் மற்ற சாதி கிறித்தவ மக்களோடு சமமாக அமர்ந்து வழிபாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தீண்டாமைச் செயலைக் களைய பேராயர் லவேனான் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, ஆலயத்தின் இருக்கைகளில் அமர்வதற்கும், இறப்பின்போது ஆலய மணி ஒலிப்பதற்கும் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். இதனால் தலித் மக்களும் கட்டணம் செலுத்தி இருக்கைகளை முன் பதிவு செய்தனர். இதனைச் சகித்துக்கொள்ள இயலாத பிற சாதி கிறித்தவர்கள் ஆயருக்கு எதிராகப் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ஆண்கள் ஆலயத்திற்கு வருவதையே தவிர்த்தனர். ஆனாலும், ஆயர் தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. ஆலயத்தில் அனைவரும் சமமாக அமரும் நிலை வந்தது. இந்த நிகழ்வு தீண்டாமையை ஒழிக்க ஆயர் எடுத்த பெரும் முயற்சியின் வெற்றியாகவே கருதப்பட்டது (HPM, p.188).
iii) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
உள்ள மிக முக்கிய ஊரான எறையூர் பங்கில் தலித் கிறித்தவர்கள் கோவிலில் மற்ற மக்களோடு ஒன்றாக அமர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ள இயலாத நிலை இருந்தது. தலித் மக்கள் தனியாக ஒருபக்கம் அமரவேண்டும். இந்தத் தீண்டாமைப் பாகுபாட்டைக் களைய பெரும் முயற்சி எடுத்தவர் அருள்தந்தை நோயல். 1935-முதல் 1955-வரை 16 ஆண்டுகள் எறையூர் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவர் இவர். ‘அனைத்து மக்களும் ஆலயத்தில் சமமாக அமர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ளவேண்டும்’ என்ற
பேராயர் கோலாஸ் அவர்களின் ஆணையை நடைமுறைப்படுத்துவதில் உறுதியோடு இவர் இருந்தார். அது மட்டுமல்லாமல், தலித் மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் சென்று அவர்களின் இல்லங்களைச் சந்தித்த முதல் குரு இவரே. மேலும், தலித் மாணவர்கள் கல்விகற்று வாழ்வில் முன்னேற வழிவகைகளைச் செய்தார்.
அருள்தந்தை
நோயல் அவர்களின் இத்தகைய சமத்துவ சமதர்மச் செயல்களைச் சகித்துக்கொள்ள இயலாத பிற சாதிக் கிறித்தவர்கள் இவரைக் கடுமையாக எதிர்த்தனர். எனவே, இவருக்குச் சாவு மணியடித்துப் பங்கை விட்டு வெளியேற்றினர். இதன் காரணமாக 1955-ஆம் ஆண்டு எறையூர் ஆலயம் சில காலம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
MEP மறைப்பணியாளர்கள் தங்களின் பணிவாழ்வில் மதத்தை மட்டுமே பரப்பவேண்டும் என்ற அடிப்படைவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை. ‘இறையரசு’ என்ற புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பத் தளராமல் உழைத்தனர். மதத்தையும் சமூகத்தையும் பணிவாழ்வின் இரு கண்களாகப் பார்த்தனர் என்றும், மக்களின் ஆன்மாவைக் காப்பதில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் துன்பங்களைக் களைவதிலும், சமரசம் இல்லாமல் உழைத்துப் பல சாதனைகளைச் செய்தனர்
என்றும், சமத்துவச் சமூகமே இவர்களின் கனவு என்றும் வரலாறு இவர்களைப் பதிவு செய்திருக்கிறது.
தென்னிந்தியத் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் பங்கு அளப்பரியது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையிலும் MEP அருள்பணியாளர்களின் அரிய முயற்சியால், தியாகத்தினால் உருவானதுதான் இம்மறைப்பணித்தளம். ஊடகங்களின் தாக்கம் பெரிதளவு இல்லாத சூழலிலும் அவற்றின் வழியாக ஒரு பெரும் தாக்கத்தை இம்மண்ணில் உருவாக்கியவர்கள் இவர்கள். காட்சி ஊடகத்தின் வழி நற்செய்தியைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற பெருமை இவர்களையே சாரும்.
1951-ஆம் ஆண்டு
திண்டிவனம் நடுநிலையத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றார் அருள்திரு. பெக்கர். இவரின் ஆர்வத்தைக் கண்ட அன்றைய பேராயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 1957-இல் மறைக்கல்வியில் சிறப்புப் பயிற்சி பெற்றுவர பெல்ஜியத்திற்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து வந்த அருள்திரு. பெக்கர், பேராயரிடம் ஏழு முன் மொழிவுகளைச் சமர்ப்பித்தார். அவற்றில் ஒன்றுதான் பொதுமக்கள் தொடர்புக்கான நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி நற்செய்திக் கல்விப்பணி நிலையம் ஒன்றை நிறுவுதல். அவ்வாறு 1960-இல் திண்டிவனத்தில் உருவானதுதான் தமிழ்நாடு
ஒலி-ஒளி கல்வி நிலையம். இதன் வழியாக மறைப்பணி, உலகியல் கல்வி, தொழில்வளம், சமுதாய நலம், உழவு, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் திரைப்படங்கள், ஒளிப்பட வில்லைகள் (Flim Slides), ஒலிப்பதிவு
நாடாக்கள் ஆகியவற்றைத் தயாரித்து, அதன் வழியாக மக்களின் அறியாமையை நீக்க முனைந்தனர்.
அருள்திரு. எட்மெண்ட்
பெக்கர்
MEP
இருபதாம்
நூற்றாண்டின் நற்செய்தி அறிவிப்புப் பணியில், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மிக ஆழமாக உணர்ந்த ஓர் இறைவாக்கினர் அருள்திரு. எட்மண்ட் பெக்கர் ஆவார். பிரான்ஸ் நாட்டின் மெட்ஸ் (Metz) நகரில்
1921-ஆம் ஆண்டு பிறந்து, 1947-இல் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர், பாரிஸ் மறைபரப்புச் சபையின் (Missions Etrangeres de
Paris) வழியாக
இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். 1948 முதல்
1968 வரை புதுச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தில் இவர் ஆற்றிய பணிகள் இந்தியத் திரு அவையின் தகவல் தொடர்பு வரலாற்றில் ஒரு பொற்காலமாகும்.
நற்செய்தி அறிவிப்பும்,
ஊடகப்
புரட்சியும்
(Mobile
Mission)
அருள்திரு.
பெக்கர் புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டத்திற்கு வந்த காலகட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு நற்செய்தியையும் கல்வியையும் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. திண்டிவனத்தில் புகழ்பெற்ற மறைக்கல்விப் பள்ளியை (Catechist School), அருள்திரு
ஆன்ரூ காரோஃப் (Fr. Andru Carof) அவர்களுடன்
இணைந்து வழிநடத்திய இவர், திண்டிவனத்தை மையமாகக் கொண்டு புதிய ஊடகப் புரட்சியைத் தொடங்கினார். அதுதான் நடமாடும் மறைபரப்புப்பணி.
அருள்திரு.
தாமஸ் காவன் டஃபி அவர்களால் தொடங்கப்பட்ட இப்பள்ளியை, பெக்கர் ஒரு நவீன ஊடகப் பயிற்சி மையமாக மாற்றினார். தந்தை பெக்கரின் பணியின் மற்றோர் அம்சம் என்னவென்றால், இவரும், இவரது குழுவும் மறைக்கல்வி முறைகளைக் காட்சி - கேள்வி ஊடகங்களுக்கு ஏற்பப் புதுப்பித்தனர். அதற்குத் தேவையான புத்தகங்களைத் தயாரித்து திருவிவிலிய மற்றும் வழிபாட்டுப் போதனைகளை ஊக்குவிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். மறைக்கல்வி, திருவிவிலியம் மற்றும் வழிபாடு ஆகிய மூன்றும் இவரது சிந்தனையில் ஒன்றாகவே இருந்தன.
நடமாடும் சினிமா
(Mobile
Cinema)
அருள்திரு.
பெக்கர் ஒரு தனிப்பட்ட வாகனத்தை வடிவமைத்து, அதில் படம் ஒளிபரப்பும் கருவிகள் (Projector) மற்றும்
ஒலிபெருக்கிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் தோறும் சென்றார். இரவில் திறந்த வெளிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தமிழ் மொழியில் ஆன்மிக மற்றும் சமூக விழிப்புணர்வுப் படங்களைத் திரையிட்டார். மேலும், திண்டிவனத்தில் புத்தகங்கள், சிறப்பு இதழ்கள், குரல் பதிவு விளக்கங்களுடன் கூடிய ஸ்லைடுகள் மற்றும் பல்வேறு திரைப்படங்களை உள்ளடக்கிய மறைக்கல்வி வள மையத்தை அமைப்பதில்
தந்தை பெக்கர் வெற்றி பெற்றார். இந்தப் பொருள்கள் அனைத்தையும் தென்னிந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் உள்ள ‘நடமாடும் மறைப்பணி’
குழுக்கள் கடனாகப் பெற்றுப் பயன்படுத்த முடிந்தது.
இந்திய இறையியலாளர்களின்
வழிகாட்டி
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய இந்தியத் திரு அவையின் மிக முக்கியமான இறை யியலாளரான அருள்திரு. D.S. அமலோற்பவதாஸ் அவர்களுக்கு
அருள்திரு. பெக்கர் ஆரம்ப காலத்தில் சிறந்த வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார். அருள்திரு. பெக்கரின் ஊடகப் பணிகளால் ஈர்க்கப்பட்டே அருள்திரு. அமலோற்பவதாஸ் பிற்காலத்தில் பெங்களூரில் புகழ்பெற்ற NOCLC மையத்தை
நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்சி ஊடகப்
பணியின்
முன்னோடி
சாதாரண
மக்களுக்கு எழுத்துகளைவிட, காட்சிகளும் ஒலிகளும் மிக வேகமாகச் சென்றடையும் என்பதை அருள்திரு. பெக்கர் உறுதியாக நம்பினார். வெறும் திரைப்படங்களைக் காண்பிப்பதோடு நின்றுவிடாமல், அவரே சொந்தமாகத் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். திண்டிவனத்தில் ஒரு சிறிய திரைப்படக் குழுவை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் புகைப்படக் காட்சி, ஒலியமைப்பு போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினார்.
தன்
வாழ்நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களை அருள் திரு. பெக்கர் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிவிலியக் கதைகளை மையமாகக் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இவரது ஊடகப்
பணியின் வெற்றியைப் பார்த்த உலகத் திரு அவை,1968-ஆம் ஆண்டு இவரை மீண்டும் ஐரோப்பாவிற்கு அழைத் தது. அங்கு சர்வதேச கத்தோலிக்கத் திரைப்பட அமைப்பில் (OCIC - International Catholic Office for Cinema) இணைந்து, உலகளாவிய கத்தோலிக்க ஊடகப் பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.
பாரிஸ் IRFA ஆவணக்காப்பகமும், பெக்கரின்
வரலாற்றுச்
சுவடுகளும்
அருள்திரு.
பெக்கர் 1981-இல் மறைந்தபோதிலும், அவர் விட்டுச் சென்ற ஊடகச் சொத்துகள் இன்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள பிரான்ஸ் - ஆசியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRFA - Institute de Recherche France-Asia) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருள்திரு.
பெக்கர் பயன்படுத்திய அரிய 16 சுருள்படங்கள், தமிழ்நாட்டுக் கிராமங்களில் அவர் பதிவு செய்த மக்கள் மற்றும் மண் சார்ந்த வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் 1950-களின் தமிழ்நாட்டு வாழ்வியலை விவரிக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் இந்த ஆவணக்காப்பகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருள்திரு.
எட்மண்ட் பெக்கர் வெறும் ஒரு மறைபரப்பாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு சிறந்த கலைஞர், தொலைநோக்குச் சிந்தனையாளர் மற்றும் புதுவை - கடலூர் உயர் மறைமாவட்டத்தின் நவீன ஊடகத் தந்தை. இன்று நாம் திரு அவையில் பயன்படுத்தும் நவீன சமூகத் தொடர்பு சாதனங்கள் அனைத்திற்கும், 70 ஆண்டுகளுக்கு முன்பே திண்டிவனம் மண்ணில் விதையிட்டவர் இந்த உன்னத இறைப்பணியாளர்.