‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற கரகரப்பான குரலுக்குச் சொந்தக்காரர்; தன் இனிய தமிழ் மக்களை இறக்கும் வரை உயிராகவே எண்ணியவர்; தான் படைத்த ஒவ்வொரு கலைப்படைப்பையும் நேர்மையாக நேசித்தவர்; தன் படைப்புகளால் சாதிய ஆதிக்க வர்க்கத்தைத் துணிவோடு கன்னத்தில் அறைந்தவர்; மிகைப்படுத்தப்பட்ட, நம் பகத்தன்மையற்ற சினிமாக் கலைப்படைப்பை எதார்த்த கலைப்படைப்பாக மாற்றிக்காட்டிய மாபெரும் இயக்குநர்!
அதுவரை
சினிமாவில் ஒரு பகுதியாக இருந்த வெளிப்புறப் படப்பிடிப்புகளை 1977-இல், தான் முதல் முறையாக இயக்கிய ‘பதினாறு வயதினிலே’
திரைப்படத்தில்
முழுமையாக வெளிப்புறப் படப்பிடிப்பாக மாற்றிக்காட்டி சினிமா சரித்திரத்தையே புரட்டிப்போட்டவர். அதாவது, தமிழ் சினிமாவின் கேமராக்களை ஸ்டுடியோக்களின் செயற்கையான நான்கு சுவர்களுக்குள் இருந்து விடுவித்து, கிராமத்து நெல் வயல்களுக்கும், புழுதி பறக்கும் ஒற்றையடிப் பாதைகளுக்கும், தமிழ் மண்ணின் நிஜமான மனிதர்களிடமும் கொண்டு சென்ற ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது 84-வது அகவையில் (ஜூன் 10, 2026) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் இம்‘மண் வாசனை’யிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். ஒரு பெரும் சகாப்தம் நிறைவுற்றிருக்கிறது.
கிராமத்து வாழ்வியலின்
காவியங்கள்
செட்டுகளுக்குள்,
செயற்கை விளக்குகளுக்குள் முடங்கிக்கிடந்த திரையுலகிற்கு உண்மையான கிராமத்து வெயிலையும், மனிதர்களின் வேர்வையையும், வெள்ளந்தி வாழ்க்கையையும் அப்படியே திரையில் கடத்தியவர். மயில், சப்பாணி, பரட்டை என அவர் வடித்த
கதாபாத்திரங்கள் தமிழர்களின் கூட்டு மனச்சான்றில் அழியாச் சுவடுகளாகப் பதிந்தன. கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோரின் திரை வாழ்வில் இப்படம் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வணிகப் படங்களும் கிராமத்து மண்வாசனையோடு மாபெரும் வெற்றியைப் பெறமுடியும் என்ற புதிய இலக்கணத்தை அவர் தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.
காலத்தால் அழியாத
திரைக்காவியங்கள்
‘16 வயதினிலே’
படத்திற்குப் பிறகு அவர் தொட்ட உயரங்கள் அனைத்தும் இமயத்தின் சிகரங்கள். ‘கிழக்கே போகும் இரயில்’,
‘புதிய வார்ப்புகள்’, ‘மண்வாசனை’, ‘கிழக்குச்
சீமையிலே’, ‘சிகப்பு
ரோஜாக்கள்’, ‘ஒரு
கைதியின் டைரி’,
‘வேதம் புதிது’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட
பல திரைப்படங்கள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாகத் திகழ்கின்றன.
அவரது
திரைப்பயணத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த கூட்டணி தமிழ்த் திரையுலகின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இவர்களின் பாடல்கள் கிராமங்களின் ஆன்மாவாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
பின்னர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன்
இணைந்து ‘கிழக்குச் சீமையிலே’,
‘கருத்தம்மா’ போன்ற
மறக்க முடியாத இசைக் காவியங்களையும் வழங்கினார்.
புதிய ஆளுமைகளை
உருவாக்கிய பட்டறை
கோடம்பாக்கத்தில்
பாரதிராஜாவின் ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ என்பது
ஒரு புகழ்பெற்ற சினிமாப் பல்கலைக்கழகம். பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா போன்ற ஆகச்சிறந்த இயக்குநர்களையும், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, நெப்போலியன், சுகன்யா, ரஞ்சிதா போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
புதிய திறமைகளைத் தேடிக் கண்டறிந்து வளர்ப்பதில் இவர் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.
இந்தியத்
திரையுலகிற்குப் பாரதிராஜா ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2004-இல் அவருக்குப் ‘பத்மஸ்ரீ’
விருது வழங்கிச் சிறப்பித்தது. வெவ்வேறு பிரிவுகளில் 6 தேசிய விருதுகளையும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’
விருதுடன் 6 முறை மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். எனினும், தமிழ் நெஞ்சங்கள் அவருக்குச் சூட்டிய ‘இயக்குநர் இமயம்’ என்ற பட்டமே ஆகச்சிறந்த மகுடமாகும்.
கேமராவுக்குப்
பின்னால்
இருந்து
முன்னால்
வரை...
நடிகன்
ஆவதற்காகவே சென்னை வந்தவர், மாபெரும் இயக்குநரானார். ஆயினும், பின்னாளில் காலம் அவருடைய நடிப்புக் கனவையும் அவரது கடைசிக்காலத்தில் அவருக்குக் கொடுத்ததுதான் விந்தையிலும் விந்தை!
ஒரு
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் பாரதிராஜா தனது
திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆயுத எழுத்து’ படத்தில் மிரட்டலான அரசியல்வாதியாகவும், ‘பாண்டிய நாடு’,
‘குரங்கு பொம்மை’,
‘நம்ம வீட்டுப் பிள்ளை’,
‘ஈஸ்வரன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘மகாராஜா’ மற்றும்
2025-இல் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியான நடிப்பு, காலத்தால் அழியாதது.
‘முதல் மரியாதை’ தந்தவருக்கு இறுதி
மரியாதை!
இயக்குநர்
இமயத்தின் மறைவுச் செய்தி தமிழ் உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் அவரது இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்ச் சினிமா உலகிற்குப் பாரதிராஜா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திரையுலகில் ‘முதல் மரியாதை’ என்ற உன்னதக் காவியத்தைத் தந்த பெருங்கலைஞனுக்கு தமிழ்நாடு அரசு தனது ‘இறுதி மரியாதையை’
அரசு மரியாதையாகச் செலுத்தி மதிப்பளிக்கிறது.
பாரதிராஜா
என்ற மாபெரும் கலைஞனின் உடல் நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம்; ஆனால், கேமராவின் வழியே அவர் பதித்துச் சென்ற மண்வாசனையும், தமிழர்களின் வாழ்வியலும், தமிழ் சினிமாவின் வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். அவர் விட்டுச் சென்ற கலையின் சுவடுகள் காலமுள்ளவரை எதிரொலித்துக் கொண்டே இருக்கும்!
உலகளாவிய
தமிழ் மக்களிடம் நீங்காத இடம்பிடித்த மாபெரும் இயக்குநர் பாரதிராஜா இன்று இல்லாமல் போனார். ஆனால்,
அவர் படைத்த அத்தனை படைப்புகளின் சாயல் இல்லாமல் தமிழ் திரைப்பட உலகம் இனி வாழ
முடியாது என்பதே எழுதப்பட்ட
உண்மை!
84 வயதினிலே
அலைகள் ஓய்ந்ததே! கடலோரக்
கவிதையே, கிழக்கே
போகும் இரயிலில் சென்று வா! நீ உருவாக்கிய வேதம்
என்றும் புதிதே!
அங்கீகாரம் பெறாத அப்பாவின் அன்பு?
தாயின்
தியாகம் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது, அங்கீகரிக்கப்படுகிறது; பிரதிபலன் கிடைத்து விடுகிறது. ஆனால், பெரும்பாலும் தந்தையின் தியாகம், தாய்க்கு நிகராய் அங்கீகரிக்கப்படுவதில்லை. உலகில்
தன் மனைவியின் வயிற்றில் கரு உதயமான நாள் முதற்கொண்டு, ஒரு தந்தை தனது மனத்தில் தனது வாரிசை சுகமாகச் சுமக்க ஆரம்பிக்கிறார்; கருவுற்ற தன் மனைவியையும் சேர்த்துச் சுமக்கிறார்.
தந்தை
தன் அன்பை, தியாகத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. தேய்ந்த செருப்பும், தைத்த உடையும், காப்புக்காய்த்த கரங்களும், குழிகளோடு காணப்படும் கன்னங்களும் அங்கீகாரம் பெறாத நம் தந்தையின் தியாகத்தின் அடையாளங்கள்.
அப்பாவின் அன்பு
ஒரு
மறைபொருள்
தன்
குடும்பத்தின் தேவைகளுக்காக அனுதினமும் தன் உடலால் காயப்பட்டு, தாயைப் போலவே தியாகம் செய்பவர். தன் குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்டங்கள், சிலுவைகள், சவால்கள், அவமானங்கள் போன்றவற்றை முன்னணியில் இருந்து சந்திக்கும் ஒப்பற்றத் தலைவனாகத் திகழ்கிறார். தாயின் தியாகத்திற்குக் குழந்தைகள் தரும் அங்கீகாரத்தையும் பாராட்டையும் சேர்த்து இரசிக்கும் பெருந்தன்மையுள்ள தியாகத் தலைவனாய் திகழ்கிறார். அங்கீகரிக்கப்படாத மறைந்த நிலையில், உண்மையான தன்னலமற்ற பிரதிபலன் எதிர்பார்க்காத தியாக அன்பை வாழ்ந்து காட்டுவதே தந்தையின் அன்பாகும்.
ஏன்
வாழ்வில் தந்தையின் அன்பு மறை பொருளாகவே அமைகிறது? அதாவது மறைந்த ஒன்றாக, மறைக்கப்பட்டப் பொருளாக உள்ளது.
அப்பாவின் அன்பு
அதிர்வுகளால்
ஆனது
தந்தையின்
அன்பு, ஆமையின் பாதுகாப்பைப் போன்றது. ஆமை முட்டைகளைக் கரைகளில் புதைத்துவிட்டுக் கடலுக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், அதன் எண்ணமெல்லாம் அந்த முட்டைகளைப் பற்றிதான் என்று இன்றைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆமைகள் தங்களது முட்டைகளுக்கு ஆபத்து வந்தவுடன், உடனே வந்து அவற்றை எதிர்கொள்கின்றன.
அப்பாவின்
ஆதரவும் அன்பும் பாதுகாப்பும் அதிர்வுகளாலும் ஆனது என்று இன்றைய உளவியல் உணர்த்துகிறது. என் அப்பாவின் அன்பை அவர் உயிருடன் இருந்தபோது உணர்ந்திட, அனுபவித்திட, வெளிப்படுத்திட என்னால் முடியவில்லை; தெரியவும் இல்லை. ஏன்,
அப்பா உயிருடன் இருந்தபோது அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்ற காரியங்களில், அவர் உடனிருந்து பயணிப்பதாக உணர்ந்தேன். அவர் இறந்தபின் எங்கும் வியாபித்து, நான் செய்திடும் செயல்களில் அன்பு அதிர்வுகளால் என்னோடு பயணிக்கும் ஓர் அருளடையாளமாகவே இருக்கிறார்.
மனமாற்றத்திற்கு
வித்திட்ட
அப்பாவின்
அன்பு
அதிர்வுகள்
தன்னைப்
பிரிந்து சென்ற ஊதாரி மகன் வரவை எதிர்பார்த்து, அன்பு அதிர்வுகளோடு காத்திருந்த தந்தையாக இயேசு இறைவனின் அதிர்வுகளாலான அன்பைக் காட்டுகிறார். தொலைவில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார் (லூக் 15:20). அவன் மனமாற்றத்திற்கு அப்பாவின் அதிர்வுகளான, அவன் வரவை எதிர்பார்க்கும் அன்பே, ஊதாரி மகனின் மனமாற்ற வாழ்விற்கு வழிவகுக்க முக்கியக் காரணமாக இருந்தது என்பது உளவியல் காட்டும் உண்மை. கடவுளை ‘அப்பா’ என்று ஆளுமை உறவு பாராட்டுவது, கிறித்தவ இறையியலின் அடிப்படையும் ஆணிவேருமாய் இருக்கிறது.
அப்பாவின்
அன்பு ஆளுமை சார்ந்தது. தந்தையின்
ஆளுமை நிச்சயமாகத் தன் குழந்தைகளைப் பாதிக்கும் என்பது ஆன்மிக - உளவியல் உண்மையாகும். “தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” (எரோ
31: 29) என்ற இறைவாக்கின்படி தந்தையர் வாழ்ந்துகாட்டிய நற்பண்புகளும் தீய பழக்கங்களும் குழந்தைகளைப் பாதிக்கும். “முக்கியமானவர்களை அப்படியே பின்பற்றுதல்” (imitating
the significant or significant others) என்ற
கொள்கையை ஆல்பர்ட் பண்டுரா என்ற உளவியலாளர் அழுத்தம் திருத்தமாக விவரிக்கிறார்.
குழந்தைகள்
தங்களது தந்தையைப் போலவே, மாதிரி ஆளுமையைப் பெற்றுவிடுகிறார்கள். தந்தையின் மறுபிம்பமாகப் பிறப்பெடுக்கிறார்கள். இவ்வுண்மையை,
“நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்” (யோவா
14: 11) என்ற இயேசுவின் வாக்கு மெய்ப்பிக்கிறது. ‘மகன் தந்தையின் பெயரைக் காப்பாற்றுகிறான்’ என்ற
பழமொழி தந்தையின் ஆளுமையைப் பெற்று அவரைப் போல் வாழ்ந்து, அவரது பெயரை நிலைநாட்டுவதையே நம் காலச்சார உண்மை சுட்டிக்காட்டுகிறது. கடவுளின் அன்பு மனுவுருவாகித் தசை வடிவில் கண் காணக்கூடிய ஆளுமைத் தெய்வமே தந்தையாகும்.
நம் அப்பா
ஓர்
அருளடையாளம்
•
தேய்ந்த செருப்பும், கிழிந்த உடையும், காப்புக் காய்த்த கரங்களும் குழிகள் நிறைந்த கன்னங்களோடும் என் தந்தையைக் காணும்போது, ஏழ்மை வார்த்தைப்பாடு எடுக்காத ஓர் இல்லறத் துறவி என்றே நினைப்பேன். தனக்குக் கிடைத்த சிறிது பூர்விக நிலத்தையும் எனக்காக விற்ற நம் அப்பா ஓர் அருளடையாளம்.
• அவர் உழைத்து அலுத்து வரும் நேரத்தில் கூட, அன்புக்காக ஏங்கும் குழந்தைகளிடம் நேரம் செலவழித்து, அவர்களை அரவணைத்துப் பாதுகாக்கும் போது, நம்
அப்பா ஓர் அருளடையாளம்.
• நான் தவறுசெய்து அவமானத்தில் திளைத்து, மனமாற்றத்திற்காக ஏங்கும்போது மன்னித்து ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் நம் அப்பா ஓர் அருளடையாளமாகிறார்.
• அற்ப ஆசைகளை விட்டுவிட்டு, விழுமியங்களின்படி முன்மாதிரியாய் வாழ்ந்துகாட்டிய நம் அப்பா ஓர் அருளடையாளம்.
•
வாழ்க்கையின் சூறாவளியில் சிக்கிக் குடும்பமே பாதிக்கப்பட்டு, வழியிழந்து நிற்கிறபோது, கடனை வாங்கி, தான் அவமானப்பட்டு நம்பிக்கையூட்டி, வழி நடத்தித் தியாகத் தலைவனாகும்போது நம் அப்பா ஓர் அருளடையாளம்.
• தன் குழந்தைகள் வாழ்வின் இலட்சியத்தை அடைந்திடப் போராடித் தவிக்கும்போது, தனது வேலைப் பளுவால் உடனிருக்காவிட்டாலும், தொலைவிலிருந்து அன்பின் அதிர்வுகளை அனுப்பும் நம்
அப்பா ஓர் அருளடையாளம்.
• வாழ்ந்த போதும், மரித்த பின்னும் பிள்ளைகளுக்காக இறைவனிடம் பரிந்துபேசி, இறைவரங்களைப் பெற்றுத் தரும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.
•
குழந்தைகள் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கி, செய்வது அறியாது திகைத்து நிற்கிறபோது, அவர்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்தும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.
• அனுதினமும் இறைவார்த்தையை வாசித்து, குடும்ப செபத்தைத் தலைமை ஏற்று நடத்தும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.
அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு விருந்தினராகச் சென்றபோது, அக்கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மனம் மகிழ்ந்தேன். அதேவேளையில், சாதனை படைக்கவேண்டிய போதிய ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும், அதை வேண்டுமென்றே ஒதுக்கி வாழ்க்கையை வீணாக்கும் மாணவர்களைப் பற்றிக் கூறியபோது, மனம் வருந்தியது. இதை மையப்படுத்தி எழுதிக் கொஞ்சம் மன ஆறுதல் அடைவோம் என எழுதுகிறேன்.
சிதறிக்
கிடக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது, அது முதலில் ஓர் எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கலாம். ஆனால், அவை சிதறிப் போனதற்கான காரணங்களை அறிந்துகொண்டால், அந்தச் சிதறல்கள்கூட ஒரு கற்றல் வாய்ப்பை நமக்குத் தரும்.
நமது
வாழ்க்கையும் ஒரு சிற்பத்தைப் போன்றதே. சிற்பி தனது பணியைத் தொடங்கும்போது, அவர் முன் இருக்கும் கல் வடிவமற்றது, கனமானது, சாதாரணமானது. ஆனால், பொறுமை, திறமை, தெளிவு மற்றும் கற்பனைத்திறன் கொண்டு அவர் அதைச் செதுக்கிச் செதுக்கி, இறுதியில் ஓர் அழகிய சிற்பமாக மாற்றுகிறார். அந்தச் சிற்பம் பலராலும் பாராட்டப்படுகிறது. அதன் அழகும், அது தரும் ஈர்ப்பும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், நமது வாழ்க்கையும் நமது கைகளிலேயே உருவாகிறது. சரியான திட்டமிடல், நேர்மை, ஒழுக்கம், சிந்தனைத் தெளிவு ஆகியவற்றோடு வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கை பிறருக்குப் பாராட்டத்தக்க சிற்பமாக மாறும். எப்படி ஒரு சிறந்த சிற்பம் அனைவரையும் ஈர்க்கிறதோ, அதேபோல் ஒரு சிறந்த வாழ்க்கையும் எல்லாராலும் விரும்பப்படும்.
சில
நேரங்களில், சிற்பியின் ஒரு தவறான அசைவால், கவனச் சிதறலால் சிற்பம் அது அடையவேண்டிய முழுமையை அடையாமல் கெட்டுப்போகிறது. அதைப் போலவே நாமும் சுயநல ஆசைகள், கோபம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஆகியவற்றால் தவறுகளைச் செய்கிறோம். அப்பொழுது நம் வாழ்க்கை எனும் சிற்பத்தில் சில கீறல்கள் விழுகிறது. அந்தக் கீறல்களைச் சீர்செய்வது கடினம். சில முயற்சிகளின் மூலம் சரிசெய்ய முற்படலாம்; ஆனால், பல நேரங்களில் அழிக்க
முடியாதத் தழும்பாக நிரந்தரமாகவே நிற்கும். இருப்பினும், சிதறிக்கிடக்கும் சிற்பங்களைப் போல நம் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிதறல்கள் நம்மைத் தடுக்கும் ஒன்றாக அல்ல; கற்றுத்தரும் ஒன்றாக இருக்கமுடியும். அவற்றின்மூலம் நாம் எச்சரிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்கிறோம். அதனால், சிதறல்கள் எதிர்மறை அல்ல; மாறாக, வாழ்க்கையின் பாடங்களாகவே அதை அமைத்துக்கொள்ளவேண்டும்.
சிதறிக்
கிடக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது பெரும் மனவேதனையைத் தருகிறது. ஒரு காலத்தில் அழகின் உச்சமாய் விளங்கிய ஒன்றைச் சிதைவுற்ற நிலையில் பார்க்கும்போது, உடைந்து கிடக்கும் சிதறல்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். ஆனால், அந்தச் சிதைவின் உள்பொருளை நுண்ணறிவோடு ஆராய்ந்தால், அது வெறும் அழி வல்ல; ஏதோ ஒரு நசுக்கப்பட்ட குரலின் வெளிப்பாடாகத் தோன்றும். ‘அழகு என்றும் நிலைத்திருக் காது; ஆனால், அதன் பயணம், அதன் பாடம் நிலைத்திருக்கும்’ எனக்
கூறுவதுபோல இருக்கும்.
இருப்பினும்,
சிதைவடைந்த சிற்பங்கள்கூட ஒரு புதுக் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுத் தருகின்றன. ஆதலால், சிதறிக் கிடக்கும் சிற்பங்கள் எதிர்மறையின் அடையாளமல்ல; அவை வாழ்வின் பயணத்தில் தவறுகளும் காயங்களும் கற்றல்களும் ஒன்றிணைந்து, நம்மை முழுமைப்படுத்தும் ஓர் உவமை.
வாழ்க்கை
என்பதே ஒரு சிற்பம். செதுக்கும் கைகள் நம்மிடமே உள்ளன. வாழ்க்கை எனும் சிற்பம் முழுமை காண்பதும், சிதறுண்டு கிடப்பதும் முழுக்க முழுக்க நம் எண்ணங்களின் அடிப்படையில்தான். ஆராய்ச்சிகளும் நூல்களும் அறிவின் வெளிப்பாடாக அமைகின்றன. அப்படியானால் ஆன்மாவின் வெளிப்பாடு? கலைகள்தான் ஆன்மாவின் வெளிப்பாடு. ஏனென்றால், கலைகள் எப்போதும் மனித உணர்வுகளை நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்தும் ஒரு செயல். தன் ஆழ்மனத்தில் அடங்கிக்கிடக்கும் மனக்குமுறல்களை மனிதர்களிடம் காட்டினால் வம்பு வந்துவிடும். ஆதலால், அதன் ஆற்றாமையைப் போக்க வடிகாலாகப் பயன்படுவது கலைதான். அப்படிப்பட்ட கலையின் வடிவமான சிற்பங்களை மனிதர்கள் அவர்களின் புதையல்களாகக் கருதி வருகின்றனர்.
அரசு
மாறும்போது அல்லது வேறு ஒரு கருத்தாக்கம் கொண்ட கூட்டம் வரும்போது அவர்கள் முதலில் அடித்து நொறுக்குவது இந்தக் கலை வடிவத்தைத்தான். இதுதான் பலநூறு வருடங்களாக அவரவர் கருத்தாக்கத்தை மற்றொரு தலைமுறைக்குக் கடத்தும் ஆற்றல் கொண்டது. இது எதிரிகள் கண்ணை உறுத்தும்; ஆதலால் அவர்கள் பதம் பார்ப்பது கலைச் செல்வத்தைத்தான். ஏனென்றால், கலை என்பது நமது எண்ணங்களின் வெளிப்பாடு.
கலைவடிவம்
கொண்ட சிற்பம் உடையும்போது எப்படி நமக்கு மனத்துயர் வருகிறதோ, அதுபோல நம் வாழ்க்கை எனும் சிற்பத்தைப் பிறர் உடைப்பது ஒருபுறம் இருக்கட்டும்; நாமே உடைப்பது எப்படி நியாயமாகும்? எது எப்படியாயினும், நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றுதான். வாழ்க்கை மிகப் பெரியது; ஒரு தவறு அல்லது ஒரு தடங்கலால் அது முடிவதில்லை. ஒரு கைதேர்ந்த சிற்பி தனது தவறான அசைவிற்காக அவரது கலைப்பணியைக் கைவிடமாட்டார். மாறாக, அவர் அதைப் பொலிவூட்டி, திருத்தி இன்னும் சிறப்பாக்கப் பாடுபடுவார். அதுபோல நாமும் நமது வாழ்க்கையில் பெரிய கனவு, பெரிய நோக்கம் வைத்திருக்கவேண்டும். அந்தப் பார்வையோடு நாம் தற்காலிகச் சிக்கல்களைச் சின்னாபின்னமாக்கி மேன்மையை அடைய முடியும்.
அண்மையில்
மனித வாழ்நிலை குறித்த ஓர் ஆய்வைப் படித்தபோது, மனது சற்று வலித்தது. தற்போதைய சூழலில் பலர் தங்களது வாழ்க்கையை வாழாமலே வாழ்ந்து செல்கின்றனர் என்பதுதான். அவரவர் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. மதிப்புமிகு நமது வாழ்க்கையைப் பெரிய பெரிய கனவுகள் கொண்டு செதுக்கிக்கொள்வதன் மூலம், வாழ்க்கையெனும் சிற்பத்தை நிலைநிறுத்தலாம். கருணை மிகுந்த பார்வையுடனும், தெளிவான கனவுடனும் செதுக்கப்பட்ட வாழ்க்கை நமக்கு மட்டும் அல்ல; நம்மைக் காணும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாக மாறும்.
கலையாற்றல்
உள்ளத்தை ஈர்க்கும், கண்ணைக் கவரும். கலைகளின் எண்ணிக்கை 64 என மணிமேகலை கூறுகிறது.
மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. அந்த அழகுக் கலைகள் ஐந்து வகைப்படும் என்கிறார் மயிலை வேங்கடசாமி. அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக் கலை. இதில் சிற்பக் கலைக்கு அதிமுக்கியம் உண்டு; அதுதான் நம் அனைத்து உணர்வுகளையும் எளிதில் புரியவைக்கும். உலகிலேயே புத்தருக்குத்தான் அதிகமான சிற்பங்கள் உள்ளன. அப்படிப்பட்ட அந்தப் புத்த சிலைகள் சில வரலாற்றுப் புனைவுகளாலும் அரசு மாற்றங்களாலும் சிதைக்கப்பட்டன.
சிற்பங்களில்
மனித உணர்வுகளின் பன்முகத்தன்மை வெளிப்படுகிறது. காஜூராஹோவில் காணப்படும் தேவதையின் மெல்லிய புன்னகை, காளியின் கொடிய சாயல், புத்தரின் தியான முக அமைதி... இவை அனைத்தும் சமயச் சின்னங்கள் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் உணர்வுகள் கல்லில் பதியப்பட்ட வடிவங்களே. மனித உணர்வுகள் கண்களுக்குத் தெரியாதவையாய் இருந்தாலும், கலை வழி தொட்டு உணரக்கூடிய வகையில் இருக்கின்றன என்பதற்கு எத்தனையோ சாட்சிகள் உள்ளன.
மனித
உணர்வுகளைத் தொடர்புபடுத்திய சிற்பங்கள் தனிமனிதனுக்கும், உலகளாவிய உணர்வுகளுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கிறது. அவை நமது உள்ளுணர்வுகளை உரசி, எண்ணங்களை அலசி நம்மைப் புடமிடுகிறது.
சிற்பங்கள்
சிறியவையாகவும் சிதறியவையாகவும் இருக்கலாம்; ஆனால், என்றும் அழியாதவையாகவே நிற்கின்றன. என்ன தடைகள் வந்தாலும், ‘இன்றைய நாளை நான் நன்றாகக் கடத்துவேன்; இதுவே என் கவனம். என் மனத்தின் அமைதிக்கு முதல் மருந்து நானேதான்; நான் மட்டும்தான்; நான் எனது வாழ்க்கையை முழுமையாக விரும்புகிறேன்; என் வாழ்வு மதிப்புமிக்கது; எனக்கு எதிராக யார் வந்தாலும், என்னை நானே திடப்படுத்திக்கொள்வேன்’ எனும்
உறுதியான எண்ண அலைகளோடு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோம். மௌனமாக நிற்கும் சிலைகள், நம்மை அதிகம் பேசவைக்கின்றன. மௌனம் கலைத்துச் செயலில் இறங்குபவன் அழியாக் கலையாய் போற்றப்படுகிறான். கலைகள் பல கண்டு, நிலைகள்
பல அடைவோம்!
ஓர் அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டும்? ஒரு நல்ல அரசியல் தலைவரின் அடையாளம் என்ன?
அவர்
தமிழ்நாடு அறிந்த மூத்த அரசியல் தலைவர். அவர் தன் தொகுதிக்குள் செல்லும்போது, கார் கண்ணாடிகளை இறக்கிவிடுவார்; தெருவில் செல்வோர் அனைவருக்கும் பாகுபாடின்றி முகம் பார்த்து ‘வணக்கம்’ வைப்பார். வயது மூப்பு காரணமாகச் சில வேளைகளில் ஆள் இல்லாத இடங்களில்கூட கும்பிடுவார். அவரது ஓட்டுநர் கூறுவார்: “தலைவரே, ஆள் இல்லாத இடங்களில் கூட வணக்கம் வைக்கிறீர்கள்” எனக்
கூறிப் புன்னகை செய்வார். “60 வருடமாகப்
பழகிப்போச்சு தம்பி” எனக் கூறி தன் இடி சிரிப்பால் நழுவுவார்.
அரசியல்
தலைவரின் உறவினர் ஒரு நேர்காணலில் சொல்கிறார்: “ஐயா, எப்பொழுதும் தமது தொகுதி மக்களின் நேரடித் தொடர்பில் இருக்கவேண்டும்” என
எங்களுக்கு அறிவுறுத்துவார். அவரும் நடந்த சட்டமன்றத் தேர்தல் மாய அலையில் மூழ்கிப்போனார்; தோல்வி அடைந்தார்.
இதற்கு
எதிர்மறையாக, புதிய முதல்வர் 30 மாவட்ட மக்களைச் சந்திக்கவில்லை. 200 தொகுதிகளின் காற்றை அவர் சுவாசிக்கவில்லை. ஆயினும், மக்கள் வாக்கு அளித்தார்கள், முதல்வரானார். மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்பதே அறிவுடை
மையாகும்.
புதிய
முதல்வர் உடல்மொழி, பேச்சுகள், வார்த்தை உச்சரிப்பு என ஒவ்வோர் அசைவும்
எட்டுக் கோடி தமிழ் மக்களின் வாழ்வாகும்.
சட்டமன்றத்தில்
எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் தயாரிக்கப்பட்ட பதில் வருத்தமானதே. திருச்சி கிழக்கு
வாக்காளர் நன்றி அறிவிப்பு உள்ளரங்கக்
கூட்டத்திலும் இது தொடர்கிறது.
பதவிப்
பிரமாணமேற்ற மேடையில் ‘கஜானா காலி’ என்ற தப்பித்தலை முன்வைக்கிறார். தான் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், அடுத்த நிமிடமே மகளிருக்கு
மாதம் 2,500; தமிழ் நாடு முழுவதும் மகளிருக்கு இலவசப் பேருந்து; திருமணத்திற்குத் தங்கம், பட்டுச்சேலை, பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம், மாணவர்களுக்கான உயர்கல்வி
கடன் எதையும் தற்போது செய்ய இயலாது என்கிறார். புதிதாகக் கூட்டணி சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சண்முகம் அவர்களும், “தி.மு.க.
தன் தேர்தல் வாக்குறுதிகளை ஐந்தாவது ஆண்டில்தானே செய்தது” என ஆளுங்கட்சிக்கு ஆதரவு
நிலைப்பாடு எடுக்கிறார்.
முன்பு
வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத்தை த.வெ.க.
அரசு 200 யூனிட்டாக
உயர்த்தியது. அது விளக்கங்கள், கண்டனங்கள் என ஒரு வார
காலம் பேசுபொருளானது. த.வெ.க.வின் விவசாயக் கடன் இரத்து என்ற அறிவிப்பும் விமர்சனங்களைப் பெற்றது.
28.11.2025 அன்று ரிசர்வ் வங்கி விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியது. அதைக் கருத்தில் கொள்ளாமல் 16.4.2026-இல் த.வெ.க.
வழங்கிய தேர்தல் வாக்குறுதியில், அனைத்து வகை விவசாயக் கடன்களும் தள்ளுபடி என வாக்குறுதி வழங்கிவிட்டது.
த.வெ.க. அரசின்
அறிவிப்பால் பயிர்க்கடன் பெற்ற 10% விவசாயிகள் பயன்
பெறுவார்கள் என்பதே உண்மையாகும். டெல்டா மாவட்டங்களில் ஆளும் அரசை எதிர்த்த போராட்டங்கள் தொடர் கதையாகிறது.
தமிழ்நாடு
அரசிற்கு டாஸ்மாக், பத்திரப் பதிவு, வாகன வரி, கேளிக்கை வரி, கனிமங்கள், சுரங்கங்கள் வகை என மாநில அரசின்
தனி வருவாய் மிகக் குறைவாகும். ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு புதிய முறையால் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ஒன்றிய அரசிடம் நிதி கேட்க தமிழ்நாடு முதல்வர் தனது பரிவாரங்களுடன் டெல்லி பறக்கிறார். அவருடன் நிதி அமைச்சரோ, நிதித்துறை செயலாளரோ எவரும் செல்லவில்லை.
பிரதமர்
மோடியை தமிழ்நாடு முதல்வர் சந்திக்கிறார். நான்கு நிமிடச் சந்திப்பில் மாலை, மரியாதை, சால்வை, பரஸ்பர நலம் விசாரிப்புகள், மனு அளித்தல் என மரபுகள் பேணப்படுகின்றன.
தமிழ் நாடு முதல்வர் மாநில கீதம், மேகதாது, தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை, மாநில நிதி ஒதுக்கீடு என நான்கு கோரிக்கைகளைப்
பிரதமரிடம் வைக்கிறார். பிரதமர் “நீங்கள் இது குறித்து நிதி அமைச்சரைச் சந்திக்கும்போது பேசுங்கள்”
என்கிறார்.
ஒன்றிய
நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டு இரயில்வே திட்ட நிதி ஒதுக்கீடுகள், மாநில அரசிற்கான நிதிப் பகிர்வுகள் எனக் கோரிக்கை வைத்தார். ஒன்றிய நிதி அமைச்சர், “உங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம்; நீங்கள் அதைச் சரியாகச் செலவு செய்யவில்லை; இனிமேலாவது நேர்மையாகச் செலவு செய்யுங்கள்” எனக்
கூறுகிறார்.
பிரதமரின்
சந்திப்புக் குறித்த வழக்கமான தமிழ் நாட்டு முதல்வர்களின் செய்தியாளர் சந்திப்பும் தற்போது நடைபெறவில்லை. பிரதமர்
மோடியைப் போலவே தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும் செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்ற விமர்சனம் எழுகிறது. தமிழ்நாடு அரசு நாளது தேதிவரை, தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம் குறித்த செய்திக்குறிப்பைக் கூட வெளியிடவில்லை.
வாகன
எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக எரி, உருளை விலை உயர்வு என்பது குறித்து தமிழ்நாடு அரசு மௌனம் சாதிக்கிறது. ஒரு மாதத்தில் மாநில அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்த அரசின் அடிப்படைச் செயல்பாடுகள் தொடங்கப்படவில்லை. மானியக் கோரிக்கைள், அது குறித்து அமைச்சர்களின் பதில்கள், அவர்களின் அறிவார்ந்த செயல்பாடுகள் யாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில்
பற்றி எரியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, குதிரைபேர அரசியல், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் குறித்த த.வெ.க.
அரசின் செயல்பாடுகள் பொதுமக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு
அரசின் காவல்துறை
உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் காவிமயமாகிவிட்டது என்ற விமர்சனமும் எழுகிறது.
ஆகவே,
முதல்வர் அவர்களே, மனந்திறந்து பேசுங்கள். சட்டப்பூர்வ உத்தரவுகளைத் தாமதிக்காமல் இடுங்கள். நீங்களே எட்டுக் கோடி தமிழ் மக்களின் நல்வாழ்வு.
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை (சென்ற இதழ் தொடர்ச்சி)
விவிலிய கால இளையோர்
செயலற்ற பார்வையாளர்கள் அல்லர்
இளையோரைப்
பொழுதுபோக்குகளைச் செயலற்று நுகரும் நுகர்வோராக திருவிவிலியம் காட்டவில்லை; மாறாக,
மனிதகுலத்திற்கான இறைவனின் திட்டத்தில் துணிச்சலோடு பங்கேற்பாளர்களாகவே முன்வைக்கிறது.
அனுபவம் வாய்ந்த போர்வீரர்களே நடுங்கி நின்றபோதும், தாவீது எதார்த்தத்தை விட்டு ஓடிவிடவில்லை;
அவர் கோலியாத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டார்: “இந்தப் பெலிஸ்தியன் பொருட்டு யாருடைய
இதயமும் கலங்க வேண்டியதில்லை” (1சாமு 17:32). சமூகத்தை அச்சுறுத்தும்
அரக்கர்களான அநீதி, போதை, ஊழல், பயம் மற்றும் ஒழுக்கக் குழப்பம் ஆகியவற்றை இளையோர்
துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதை தாவீது நமக்குக் கற்பிக்கிறார். யோசேப்பு சோதனைகளை
எதிர்த்து நின்றார்; துரோகத்தையும் சிறைவாசத்தையும் சகித்துக்கொண்டார்; இறுதியாக, தன்
ஞானத்தாலும் நேர்மையாலும் நாடுகளைக் காப்பாற்றினார்: “நீங்கள் எனக்குத் தீமை செய்ய
நினைத்தீர்கள்; ஆனால், கடவுள் அதை நன்மையாக முடித்தார்”
(தொநூ 50:20). பகுத்தறிவு, உணர்ச்சி முதிர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாக
யோசேப்பு விளங்குகிறார். தலைவர்கள் நம்பிக்கையிழந்தபோது,
யூதித் துணிச்சலான நம்பிக்கையோடு எழுந்து நின்றார்: “ஆண்டவர் ஒரு பெண்ணின் கையின் மூலமாய்
அவனை வீழ்த்துவார்” (யூதித் 8:33). அவர் ஒழுக்கநெறித்
தெளிவு, ஆன்மிகத் துணிவு மற்றும் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத்
திகழ்கிறார்.
அனைத்திற்கும்
மேலாக, இயேசு கிறிஸ்து தாமே சமூக உணர்வுள்ள ஓர் இளைஞருக்குரிய மிகச்சிறந்த முன்மாதிரியாக
நம் முன்னே நிற்கிறார். அவர் இளம் வயதிலேயே போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் பேசுவதைக்
கேட்டும், அவர்களிடம் வினவியும், ஞானத்தைத் தேடுபவராயும் காணப்பட்டார் (லூக்
2:46). அவர் வளர வளர ஏழைகள், துன்புறுவோர், ஒதுக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர்மீது
மிகுந்த அக்கறை கொண்டவராக மாறினார். அவருடைய இளமைப் பருவம் சுயநலத்தால் வடிவமைக்கப்படவில்லை;
மாறாக, இரக்கம், இறைவேண்டல், பொறுப்புணர்வு மற்றும் இறையாட்சியின் மீதான அர்ப்பணிப்பு
ஆகியவற்றாலேயே வடிவமைக்கப்பட்டது. திருவிவிலிய கால இளையோர் ஒருபோதும் பொழுதுபோக்குக்
கலாச்சாரத்தால் உருவாக்கப்படவில்லை; அவர்கள் நம்பிக்கை, ஒழுக்கம், துணிவு மற்றும் மனிதகுலத்திற்கான
சேவை ஆகியவற்றாலேயே உருவாக்கப்பட்டார்கள்.
நமது கல்வி நிறுவனங்கள்
தோல்வியடைந்து விட்டனவா?
இந்த
நெருக்கடி, வேதனையானது என்றாலும் அவசியமான சில கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறது. நம்
இளைஞர்களுக்கு நாம் எத்தகைய கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்? நமது பள்ளிகளும் கல்லூரிகளும்
நற்பண்பு, சமூக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தார்மீகத் துணிவு ஆகியவற்றை
முற்றிலும் புறக்கணித்துவிட்டு, வெறும் தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்பிற்கும் மட்டுமே
அவர்களைத் தயார்படுத்தி இருக்கின்றனவா? நாம் அவர்களுக்குப் போட்டியிடக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே
தவிர, பிறர்மீது அக்கறை கொள்ளக் கற்றுக் கொடுக்கவில்லை. நுகரக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே
தவிர, பங்களிப்புச் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. சாதிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே
தவிர, சேவை செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. நவீனக் கல்வியானது பெரும்பாலும் தொழில்நுட்பத்
திறன் கொண்ட நபர்களை உருவாக்குகிறது. ஆனால், சமூகத்தோடு தொடர்பில்லாத மனிதர்களையே அது
உருவாக்குகிறது. அது இரக்கமில்லாத நிபுணர்களையும், ஒழுக்கநெறி சார்ந்த அடித்தளம் இல்லாத
சாதனையாளர்களையும், கலாச்சார வேர்களற்ற நுகர்வோரையும் மட்டுமே உருவாக்குகிறது.
உண்மையான
கல்வி என்பது வெறும் தகவல்களைக் கடத்துவது மட்டுமே அல்ல; அது மனச்சான்றை உருவாக்குவதாகும்.
ஆழமாகச் சிந்திக்கவும், தாராளமாக அன்பு செய்யவும், துணிவோடு செயல்படவும், சமூகத்தில்
பொறுப்புணர்வுடன் நிமிர்ந்து நிற்கவும் கூடிய இளம் ஆண்களையும் பெண்களையும் கல்வி உருவாக்க
வேண்டும். உண்மையான மனித உறவுகளைப் பலவீனப்படுத்தும் ‘தூக்கியெறியும் கலாச்சாரம்’ (throwaway
culture) மற்றும் ’எண்மத் தொழில்நுட்பத் தனிமை’ (digital
isolation) ஆகியவற்றிற்கு எதிராக, திருத்தந்தை
பிரான்சிஸ் தொடர்ந்து எச்சரித்து வந்தார். அவர் தனது ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus Vivit) என்ற திருத்தூது அறிவுரை மடலில்,
“நுகர்வோர் சமூகத்தின் கவர்ச்சியான மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சலுகைகளுக்கு
எதிராக, இளையோர் தங்களின் விமர்சனப்பூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்” (Christus Vivit, 105) எனக் குறிப்பிடுகிறார். மேலும்,
“எண்மத் தொழில்நுட்ப உலகம் உங்களைச் சுயநலம், தனிமை மற்றும் வெற்று இன்பங்களுக்குள்
மூழ்கடிக்கும் அபாயத்திற்கு உள்ளாக்கக்கூடும்” என்றும்
அவர் கூறுகிறார். இந்த வார்த்தைகள் இன்றைய நமது சூழலுக்கு மிகவும் பொருத்தமானவையாகும்.
திரு அவையின் ஞானம்
தீய
செல்வாக்குகளின் மூலம் மனம் சீரழிவதைக் குறித்துத் திரு அவைத் தந்தையர் நமக்கு எச்சரித்துள்ளனர்.
“மனம் உடலுக்குக் கட்டளையிடும் போது, உடல் உடனடியாக அதற்குக் கீழ்ப்படிகிறது. ஆனால்,
மனம் தனக்குத்தானே கட்டளையிடும் போது, அது எதிர்ப்பைச் சந்திக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் ஹிப்போ நகரின் புனித அகுஸ்தினார்.
இந்த உள்மன எதிர்ப்பை ஒழுக்கத்தின் மூலமும், இறையருளின் மூலமுமே வெல்ல வேண்டும். இளையோரை
உருவாக்குவதே சமூகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது என்று எச்சரித்த புனித ஜான்
கிறிசோஸ்தம், “பிள்ளைகளைப் புறக்கணிப்பது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்” என்று கூறியுள்ளார். எனவே, இளம் மனங்கள் எண்மத் தொழில்நுட்ப
சக்திகளாலும், வணிக நலன்களாலும், கொள்கை ரீதியான முரண்களாலும் முற்றிலும் வடிவமைக்கப்படும்போது,
திரு அவையினால் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்க முடியாது.
திரு அவை செய்ய வேண்டியது
என்ன?
நமது
மறைமாவட்டங்கள், பங்குகள், இளைஞர் இயக்கங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை
முழுமையான மனித உருவாக்கத்திற்கான மையங்களாக மாறவேண்டும். திரு அவையின் பணி என்பது
வெறும் அருளடையாளங்களை வழங்குவது மட்டுமல்ல; மாறாக, நம்பிக்கை, கலாச்சாரம், மொழி மற்றும்
ஒழுக்க விழுமியங்களில் வேரூன்றிய, சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதுமாகும்.
எனவே, தற்காலப் போக்குகளைவிட உண்மைக்கும், சுயவிளம்பரத்தை விடச் சேவைக்கும், புகழைவிட
ஞானத்திற்கும், வசதி வாய்ப்புகளை விடத் தியாகத்திற்கும் மதிப்பளிக்கும் இளம் மனங்களை
நாம் வடிவமைக்கவேண்டும். நம் இளைய தலைமுறையினர் சமூகத்தோடு பொறுப்புணர்வுடன் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ள அவர்களைத் தயார்படுத்தும் அதேவேளையில், அவர்கள் தங்களது நம்பிக்கை,
தமிழ்ப் பண்பாடு, மொழி மற்றும் நமது நாகரிகத்தின் ஆன்மிகச் செழுமை ஆகியவற்றில் ஆழமாக
வேரூன்றி நிலைத்திருக்க நாம் அவர்களுக்கு உதவவேண்டும்.
பங்கு
இளையோர் குழுக்கள் வெறும் கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்புகளாக
மட்டுமே சுருங்கிவிடக் கூடாது; அவை தலைமைத்துவம், இறைவேண்டல், சமூக விழிப்புணர்வு மற்றும்
அறிவுசார் உருவாக்கத்திற்கான மையங்களாக மாற வேண்டும். அதேபோல, நமது கத்தோலிக்கக் கல்வி
நிறுவனங்கள் விமர்சனப் பார்வைகொண்ட சிந்தனை, தார்மீகப் பொறுப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு,
உரையாடல், சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் பொது நலன் மீதான அக்கறை ஆகியவற்றை வளர்க்க
வேண்டும். அனைத்திற்கும் மேலாக, இளையோர் ஏழைகளையும் துன்புறுவோரையும், விளிம்புநிலை
மனிதர்களையும் களத்தில் சந்திக்கவேண்டும். ஏனெனில், மனிதகுலத்தின் காயங்களைத் தொட்டுணராத
வரை, நம்பிக்கை என்பது ஆழமற்றதாகிவிடும், கல்வி தனது ஆன்மாவை இழந்துவிடும்.
ஆகவே,
நமது இளைஞர்கள் எண்மத் தொழில்நுட்ப ஏமாற்று வேலைகளுக்குப் பலியாகாமல், உண்மையின் சாட்சிகளாக
மாறட்டும். அவர்கள் கலாச்சாரத்தைச் செயலற்று நுகரும் நுகர்வோராக இல்லாமல், நீதியும்
இரக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தைப் படைப்பவர்களாக மாறட்டும். அவர்கள் தற்காலப் போக்குகளைப்
பின்பற்றுபவர்களாக இல்லாமல், கிறிஸ்துவின் சீடர்களாக விளங்கட்டும். நமது குடும்பங்கள்,
பள்ளிகள், பங்குகள், இளையோர் பணிக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து,
நமது இளைஞர்களின் தார்மீக மற்றும் அறிவுசார் அடித்தளங்களை மறு சீரமைக்கும் இந்தப் புனிதமான
பணியில் கைகோர்த்துச் செயல்படட்டும்.
நமது
இளையோர் அனைவரும் இவ்வுலகிற்கு ஒளியாகவும், உண்மை, நீதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை
ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு புதிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் மாறுவதற்கு,
ஆண்டவர் தாமே அவர்களை வழிநடத்தி வலிமைப்படுத்துவாராக.
உங்கள்
அனைவருக்கும் என் செபமும் ஆசிரும்!
எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இருவரின் வாழ்வில் நடந்த, அவர்கள் நேரில் சந்தித்த நிகழ்வுகள் இன்றைய இளையோரின் சவால்கள் பற்றி மிகுந்த கவலையோடு என்னைச் சிந்திக்கத் தூண்டின.
பல
ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து நடந்த கொடுமைகள்:
ஒருவர்
நடுநிலைப்பள்ளி ஆசிரியர். மாணவ- மாணவிகள் ஒன்றாகப் பயிலும் பள்ளி. ஒருநாள் அந்தப் பள்ளியின்
பெண்கள் கழிப்பறையில் சிதைந்த கருவைப் பார்த்து ஆசிரியர்கள் பதறிப் போனார்கள். நடுநிலைப்பள்ளியில்
மாணவ-மாணவி காதல் இந்தக் கொடுமையில் முடிந்து போனது.
மற்றொருவர்
ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருந்த மாணவி. அவர் வகுப்பில் மருத்துவப்
பெற்றோரின் ஒரே மகனும் சேர்ந்திருந்தான். ஒரே மாதம்தான் பையன் புதிய பெரிய பைக் கேட்டிருக்கிறான்.
பெற்றோர் தயங்கித் தடுத்திருக்கிறார்கள். தாத்தாவின்
செல்லப்பிள்ளை, அவர் வாங்கிக் கொடுத்துச் சில
நாள்கள்தான். நெரிசல் நிறைந்த கடைத்தெருவில் விபத்து. பையன் சிதைந்து போனான். மாணவ-
மாணவிகளிடம் நல்ல பெயர். அவர்களால் பல வாரங்கள் அந்த நினைவுகளை விட்டு விடுபடவே முடியாமல்
தவித்துப்போனார்கள்.
இதுபோன்ற
செய்திகள் அன்றாடம் ஊடகங்களில் வருகின்றன. ஒருசில நிகழ்வுகள் நம்மைச் சுற்றியும் அன்றாடம்
நடக்கின்றன. நம்மையும் உலுக்கிப்போட்டுவிடுகின்றன. ஆனாலும், இவையெல்லாம் நம் போன்ற பல இளைஞரைச் சிந்திக்கத்
தூண்டுகின்றனவா? நல்வழிப்படுத்துகின்றதா? நாம் இந்த எச்சரிக்கைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறோமா?
விழித்துக்கொள்கிறோமா? இல்லை என்றால் ஏன் நம் இளம்பயிர்கள் வளரும்முன் கருகிப் போகின்றன?
விளைந்து கனியும் முன் வெம்பிப்பழுக்கின்றன?
இன்று
பருவப் பயணத்தில் ஆணும்-பெண்ணும் ஒன்றாகப் பழகும் சூழல்கள் ஏராளம். ஒன்றாகப் படிக்கிறோம்,
ஒன்றாகப் பயணிக்கிறோம், ஒரே அலுவலகத்தில் வேலை.
பருவப்
பயணத்தில் இளையோருக்கு ஒருவகைப் பாலினக் கவர்ச்சி ஏற்படுவதும் இயற்கைதான். அதை ஒருவகைக்
கட்டுக்குள் வைத்துக்கொண்டு, நம் வாழ்க்கைக் குறிக்கோளை நோக்கிப் படிப்படியாக மேலேறியாகவேண்டும்.
இங்கே
நாம் சறுக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஊடகங்கள் இன்று நம்மை எக்கச்சக்கமாகத்
திசைதிருப்புகின்றன. ஆபாசப் படங்கள், பாடல்கள், காட்சிகள்.. தொல்லைப் பேசியாக மாறியிருக்கும்
கைப் பேசி. அதில் பரவிவரும் உரையாடல்கள், காட்சிகள். கிட்டத்தட்ட இலவசமாகப் பேசிக்கொள்ளும்
வாய்ப்புகள். மிக எளிதாகக் கிடைக்கும் மது, புகை. போதையை அனுபவிப்பதாக நினைத்து அலைமோதும்
காட்சிகள். இவற்றால் நாம் கல்வியைக் கோட்டை விடுகிறோம்; நல்ல வேலைவாய்ப்புகளைக் கோட்டை
விடுகிறோம்.
அவசரக்
காதல், அவசரக் குழந்தை, இளமையில் தற்கொலை, திருமணம் நடந்தவுடன் விவாகரத்து. பல்வேறு
வகையான வன்முறைகள், பகைமை.
எல்லாமே
மிக மிகச் சிறிய சலனங்களில் இருந்துதான் தொடங்குகின்றன. ஒரே ஒரு சிகரெட், ஒரே ஒரு பெக்,
ஒரே ஒரு புன்னகை, ஒரே ஒரு சந்திப்பு.
சரிவுப்
படிகள் இறங்குவது சுலபம்; ஆனால், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிவிட்டால் அவ்வளவுதான்.
நல்லவனா? வல்லவனா?
என்னைப்
பொறுத்தவரை முதலில் நாம் நல்லவர்களாக வாழப் பழகவேண்டும். நல்லவர்கள் நட்பையே தேடவேண்டும்.
நல்ல பழக்கங்களையே வளர்த்துக்கொள்ளவேண்டும்.
முதலில்,
ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் வந்துவிட்டால் அமைதியும் தன்னம்பிக்கையும் நம்மைத் தேடிவரும்.
நம் முயற்சிகள் தெளிவாகவும் திருத்தமாகவும் அமையும்.
வாழ்க்கை
என்பது சிலநொடிச் சலனங்களில் முடிந்து போவதல்ல. அறுபது, எழுபது, எண்பது ஆண்டுகளைத்
தாண்டியும் மகிழ்ச்சியாக நகரக் கூடியது. ஒவ்வொரு பருவத்திலும் ஒரு மகிழ்ச்சியிருக்கிறது.
கற்பது
ஒரு மகிழ்ச்சி. நல்ல பணியைத் தேடிக்கொண்டு சொந்தக்காலில் நிற்பது ஒரு மகிழ்ச்சி. அதற்குப்
பிறகுதான் காதல், திருமணம், குழந்தைகள் என்று அடுத்தடுத்த மகிழ்ச்சி.
இளமையிலேயே
சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது ஒரு மிகப்பெரிய சவால். நல்ல நட்பு, நல்ல உறவு,
தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, விழிப்புணர்வு...! இந்த வகைக் கவசங்களைத் தாங்கி இந்தச்
சவாலைச் சந்திப்போம். அடுத்தச் சவால்களைச் சாதிக்க முற்படுவோம்.
வாழ்க்கை
என்பது அறுபது எழுபது ஆண்டுகளையும் தாண்டி இனிமையாக நகரவேண்டிய நெடிய பயணம். பதின்
பருவத்தில் அவசரப்பட்டுப் பிஞ்சில் பழுத்து வெம்பிப் போகமாட்டேன்; கல்வி, தொழில், சேமிப்பு,
காதல், குடும்பம் என்று ஒவ்வொரு பருவத்தின் மகிழ்ச்சிக்காகவும் கட்டுப்பாட்டுடன் காத்திருப்பேன்.