ஒரு குறிப்பிட்ட சம்பவமோ அல்லது ஒரு குறிப்பிட்ட அனுபவமோ, தனிமனிதரோ என்னுடைய வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை, ‘இன்றியமையாத’ ஒன்றை ஏற்படுத்தினார்கள் என்றால், அது நான் எப்போதும் நன்றியுடன் நினைத்து, மனதார வணங்கி பலரோடும் பகிர்ந்து வாழும் மூன்று பெண்கள்தாம்.
பெற்றோர்,
பள்ளிப்பருவம் முதல் பயிற்றுவித்த ஆசிரியர்கள், உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பரிவுகாட்டிய நண்பர்கள், உறவினர் என்று பலருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
Existential
philosophy-யில் Exclamatory Awareness and Existence என்று ஓர்
அற்புதமான படிப்பினை உண்டு. ‘இந்தத் தருணத்தில் நான் இப்படி இருக்கிறேன்’ என்பதை
முழுமையான பரவசத்துடன் உணர்கின்ற உள்ளக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும், தன்னிலை உணரும் நிலையும் ஒருங்கே சேரும் அனுபவம் அது. அத்தகைய ஒரு மன எழுச்சியை நினைக்கும்
தோறும் எனக்குத் தந்து என்னை நன்றியுடன் கரம் கூப்பச் செய்கின்றவர்களே நான் விவரிக்கப்போகும் மூன்று பெண்கள்.
டீன் மகதலேன்
வில்லியபா
கும்பகோணத்தில்
கல்லூரிப் படிப்பைத் தொடங்கிருந்த நிலையில், அதை இடை முறித்து மேற்கொண்டு படிக்க 1978-இல் என் தந்தையாரும், வேரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பணி தலைவருமான மறைந்த திரு. எம்.ஏ.சாமி என்னை
பிலிப்பைன்சின் மணிலாவுக்கு அழைத்துச் சென்றார். முதலில் சேசு சபையாரின் அத்தனயே டி மணிலா பல்கலைக்கழகத்தில்
மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் வாங்க ஆயத்தமான நிலையில், எனது இந்தியப் படிப்பையும், சில பாடங்களையும் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியானது. என் தந்தையார் தனது சக மாணவராக இருந்த
டாக்டர் மகதலேனா வில்லியபாவிடம் இதுபற்றிக் கவலையுடன் பேசியபோது “என்னிடம் அழைத்து வாருங்கள், நான் டீன் ஆகப் பணியாற்றும் இராயல் போன்டிப்பிக்கல் யூனிவர்சிட்டி ஆகிய சாந்தோ தோமாஸ் பல்கலைக்கழகத்தில் மேலும் சில பாடங்களைப் படிக்கச் செய்து பட்டம் வாங்குகிறேன்” என்று
வாக்குறுதி அளித்தார் அவர்.
அங்கேயும்
அதே சிக்கல். இந்திய மாணவனை இடைநிலையில் சேர்த்து, முன்னர் படித்த படிப்பை அங்கீகரிக்க முடியாது என்று சிலர் மறுப்பு தெரிவித்தபோது, “நான் கொடுத்த வாக்கு கொடுத்ததுதான். என்னை நம்பி வந்து விட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை டீன் நான். நான் அளித்த வாக்குறுதி இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையாகும்” என்று
என்னை ஏற்று, பட்டமளித்து வாழவைத்த பெருந்தகை என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் டீன் மகதலேன் வில்லியபா. அந்த நன்றியின் வெளிப்பாடாக என் மூத்த மகளுக்கு அவர் பெயரையே வைத்திருக்கிறேன்.
திருமதி. அனுராதா
டிடிவி
தினகரன்
அது
போராட்டமான வாழ்க்கைக்குள் நான் நுழைந்திருந்த காலம். ஊடகத்துறையில் பெரிய அனுபவம் ஏதுமின்றி, முக்கிய முடிவுகளை எடுப்பதில் அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி, நான் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருந்த
நேரம். ஒரு வேலையில் உட்கார்ந்திருந்தோமா? மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கினோமா? என்று வாழ்க்கைக்குள் பழக்கப்பட்டிருந்த பின்னணியிலிருந்து, சென்னைக்குக் குடியேறி வாழத் தொடங்கியிருந்த எனக்கு ‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’
நிலை அப்போது. எந்தப் பின்னணியும் இன்றி வந்து உழைப்பாலும், தந்தையிடம் பெற்ற பயிற்சியாலும் ஊர் உலகம் தெரிந்தவனாக மாறி இருந்த எனக்கு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களும், சமூகம் செயல்படும் விதங்களும் தெரிந்திராத நேரம் அது. காரணமே இல்லாமல் நமக்கு எதிராகப் பேசியவர்களும், நம்முடைய இருப்பையும் வளர்ச்சியையும் பிடிக்காத பலரும் வாழ்க்கையில் வந்து போவார்கள்; நம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பொருள் சொல்லி நம்மைத் தூக்கி எறிவதில் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகையோர் எல்லார் வாழ்விலும் உண்டு. என் வாழ்விலும் இருந்தனர்.
தாய்லாந்து
நாட்டில் தமிழ் ஈழ அமைதிப் பேச்சு
வார்த்தையில் என்னைத் தொடர்புபடுத்தி என்னை வீழ்த்த முயன்ற சிலரை எதிர்த்து நின்று பெரும் சிக்கலிலிருந்து என்னைப் பாதுகாத்தவர் திருமதி. அனுராதா டிடிவி தினகரன். அவரோடு 13 ஆண்டுகள் ஜெயா டி.வி.யில்
பணியாற்றி, நான் பெற்ற அனுபவங்கள் மிக நேர்த்தியானவை.
நான்
திடீரென மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அதிர்ச்சியான சூழலில் மருத்துவமனைக்கு வந்து என் மனைவியிடம், “நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள்” என்று
தைரியமூட்டிய பேருள்ளம் கொண்டவர். என்னைவிட பலமடங்கு இளையவராய் இருந்தபோதும், ஒரு நல்லாசிரியராக எனக்கு இருந்த பெண்மணி அவர். கண்ணுக்குக் குலமேது? கருணைக்கு இனமேது?
அம்மா செல்வி
ஜெயலலிதா
முதன்முதலாக
1997-இல் சந்தித்தபோதிலிருந்து கடைசியாகச் சந்தித்த 2016-வரை ஒரே மாதிரியான மரியாதையையும் உபசரிப்பையும் கௌரவத்தையும் எனக்கு அளித்தவர் அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள். அவருடனான எனது அனுபவங்களை ஏராளமாகக் கூறலாம். என்னை ஏன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்? என்பதை மட்டும் இப்பொழுது கூறுகிறேன்.
2010-ஆம் ஆண்டு
ஜூன் மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல்களுக்கான அ.இ. அ.தி.மு.க.
கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள். அன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
“வாங்க... திரு. பெர்னார்ட்” என்று
வழக்கம் போல இன்முகத்துடன் என்னை அழைத்தார் அம்மா.
“உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நான் எத்தனையோ முறை முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓர் அரசியல், சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்டு எனது முயற்சி தோல்வியுறும். இன்றைக்கும்கூட நமது கட்சியின் இரண்டு வேட்பாளர்களை நான் அறிவிக்கப் போகின்றேன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் இந்த இருவரில் ஒருவரை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்திற்கு உங்களை அனுப்புவேன். நான் இதை ஏன் இப்போது உங்களிடம் சொல்கிறேன் என்றால், இது எனக்கு நானே செய்து கொடுக்கும் சத்தியப் பிரமாணம். அப்போதுதான் எந்த நிர்ப்பந்தம் வந்தாலும் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன்; மீற முடியாது என்று என்னால் சொல்ல முடியும்”
என்று மடமடவென ஆங்கிலத்தில் கூறினார்.
அதேபோல
ஆட்சிக்கு வந்த உடனேயே என்னை நாடாளுமன்றத்திற்கு அறிவித்துவிட்டு என்னை முதலமைச்சரின் அறைக்குள் அழைத்துச் சென்று, “என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றி” என்று உள்ளம் நெகிழ்ந்து கூறினார் அம்மா.
நான்
என்ன மதம், என்ன சாதி, என்ன உட்பிரிவு? என்று எந்தக் கேள்வியும் கிடைக்காது, “உனக்கு உதவ நான் நினைத்தேன், அந்தச் சிந்தனையை கடவுள் என் மனத்தில் வைத்தார், வாக்குக் கொடுத்தேன், கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றி” என்று என் வாழ்க்கையின் திசையை மாற்றியவர்கள் இவர்கள்.
இந்த
மூன்று பெண்களுக்கும் நானும் எனது குடும்பமும் தலைமுறைத் தலைமுறையாக நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
செயற்கரிய செய்வர்
பெரியர்!
காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் மனிதாபிமானமற்றப் போர் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ‘ஹமாஸ்’ அமைப்பின் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அழித்து ஒழிக்கவும், அவர்கள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டினரை மீட்டெடுக்கவும் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்ட இஸ்ரேல் அரசின் இராணுவ நடவடிக்கைகள், தற்போது காசாவில் வாழும் பாலஸ்தீனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, முழுமையாக அழித்தொழிக்கும் ‘இன அழிப்புப் போராக’ மாறியுள்ளது.
இதுவரை
60,000 பாலஸ்தீனியர்களுக்கு
மேலாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 18,000 பேர் குழந்தைகள். காசா மக்கள்தொகையில் சுமார் 10% மக்கள் ஊனமாக்கப்பட்டிருக்கின்றனர்.
இருபது இலட்சம் மக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து
விரட்டப்பட்டு சாலையோரங்களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்கள் முழுமையாகச் சிதைக்கப்பட்டு, பயிர்களே விளையாத கந்தகப் பூமியாக மாற்றப்பட்டு வருகின்றன.
யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்ற உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருள்களை எடுத்துச்செல்ல சர்வதேச நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்காத காரணத்தால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் முதியவர்களும் நோயாளிகளும் பசியாலும் பட்டினியாலும் இறந்து வருகின்றனர். சர்வதேச உதவி மையங்களில் உணவு வாங்க
வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்று கூறி இதுவரை ஆயிரம் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேல் இராணுவம்.
இஸ்ரேல்
இராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் சர்வதேச ஊடகவியலாளர்களையும் உதவி செய்வதற்காக வந்துள்ள தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்களையும்கூட இஸ்ரேல் இராணுவம் சுட்டுத்தள்ளுகிறது.
இத்தனை
அநியாய அக்கிரமங்களுக்கும் பகிரங்கமாக உதவி செய்பவர் ‘உலகச் சமாதானத்தின் காவலராக’ தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டு உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசை வாங்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த மரணக் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் பணக்கார ஐரோப்பிய வல்லரசுகள். இந்த அபஸ்வரக் கச்சேரியைக் காசு கொடுத்து அமைதியாகக் கேட்டு இரசிக்கும் இரசிகர்களாகப் பணக்கார அரபு நாடுகள் மாறிப்போனது மற்றுமொரு கொடுமை. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரத்தினை முதன்முதலில் வழங்கிய இந்தியா போன்ற நாடுகளும், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய இரஷ்யா-சீனா போன்ற நாடுகளும் இன்று அவர்களுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு, அவர்களுடைய எல்லைகளிலிருக்கும் பதற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக டிரம்ப் எனும் ‘அநியாயமான பேராசைக்காரர்’ சர்வதேச
நாடுகளின்மீது தொடுத்திருக்கும் அநியாய வரிவிதிப்புப் போர் போன்ற பிரச்சினைகளால் பாலஸ்தீனியர்களுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க முடியவில்லை.
இதுபோன்ற
தருணங்களில் நியாயம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பாதுகாப்புக் கவுன்சிலும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால் செயலிழந்து நிற்கின்றன.
பாலஸ்தீனம்
முழுவதும் மரண பயம். குடியிருப்புகளில் எல்லாம் பிணவாடை. முன்னறிவிப்பின்றிப் பறந்துவரும் ‘ட்ரோன்கள்’
வீசும் அமிலக் குண்டுகளால் அடையாளமே தெரியாமல் சிதைந்து போகும் குழந்தைகளை அடையாளம் காண அவர்களது உடல்களில் குழந்தைகளின் பெயர்களைப் பச்சை குத்தி வைக்கும் தாய்மார்கள். அடையாளம் தெரிந்து அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தங்கள் கைகளில் தங்களது பெயர்களைப் பச்சை குத்திக்கொள்ளும் இளைஞர்கள். பெண்கள் தங்கள் பெயர் பொறித்த வளையல்களை அணிந்து கொள்கின்றனர்.
மருத்துவமனைகளில்
மின்சாரம் இல்லை. மொபைல் போன்களின் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அவலம். மயக்க மருந்துகளின் தட்டுப்பாட்டால் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆண்களுக்கு இரண்டு வேலைகள்: ஒன்று, இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்குகளைச் செய்வது; இரண்டு, மற்ற நேரங்களில் உதவி மையங்களில் வழங்கப்படும் உணவுக்காகக் காத்திருப்பது. பெண்களுக்கு இரண்டு வேலைகள்: இறந்துபோன தங்கள் பிள்ளைகளை, உறவினர்களைக் கட்டிப்பிடித்து அழுவது; மற்ற நேரங்களில் உதவி விமானங்கள் வந்து கீழே வீசும் உணவுத் தானியங்களை மண்தரைகளிலிருந்து பொறுக்குவது. இவ்வளவு கொடுமைகளையும் உலகம் முழுமையும் பார்த்தும் அறிந்தும் எதுவுமே தெரியாததுபோல இருப்பதை இஸ்ரேல், சர்வதேச நாடுகள் தனக்குத் தெரிவிக்கும் ஆதரவாகப் பார்க்கின்றது.
அமெரிக்காவின்
ஆயுத உதவிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் இஸ்ரேலின் மீது பாயாத அளவுக்கு அமெரிக்கா தருகின்ற பாதுகாப்பும், ஐரோப்பிய நாடுகளின் வணிகத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இல்லாமல் இஸ்ரேல் ஒரு மணிநேரம்கூட போர்க்களத்தில் நிற்க முடியாது. தெற்கு ஆசியப் பகுதியில் செயல்படும் ஒரே சனநாயக நாடு என்ற முறையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பின்னணியில் கடைந்தெடுக்கப்பட்ட சுயநலமும், கலப்படமில்லாத வணிக ஆதாயமும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. முக்கியமாக, எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க இஸ்ரேல் என்ற ‘ரௌடி நாடு’ அவர்கள் கைவசம் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றன. நாகரிகம் மிக்க, சனநாயக உணர்வுள்ள, மனிதநேயம் மிக்க நாடுகள் என்று எப்போதும் தங்களைப்பற்றிப் பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் தங்களால் நேரில் செய்யமுடியாத அயோக்கியத்தனங்களை இஸ்ரேல் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
இத்தகைய அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கான வசதிகளையும் தொழில்நுட்பங்களையும் இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது இவர்களுக்குப் பெரும் வசதியாக உள்ளது. இதற்கான நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் இஸ்ரேலுக்குச் செய்து வருகின்றன.
இன்று
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புப் போரின்
மூலம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றனர் என்பது குறித்து, பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. சிறப்புப்
பிரதிநிதியான பிரான்செஸ்கா ஆல்பனீஸ் அம்மையார் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். போரின் மூலமாகப் பயனடைந்த பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களின் பட்டியலையும் அதில் இணைத்திருந்தார். இந்நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பங்களையும் ஆயுதக் கண்டுபிடிப்புகளையும் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்களமாக காசாவை மாற்றியிருந்ததை விளக்கியிருந்தார்.
ஆல்பனீஸ்
பட்டியலிட்டிருந்த நிறுவனங்களில் அமேசான், மைக்ரோசாப்ட் உள்பட பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்களாகும். மற்றவை ஐரோப்பிய நிறுவனங்கள். இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆல்பனீஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர்மீது ‘யூதர்களின் விரோதி’ என்றும், ‘பயங்கரவாதத்தின் ஆதரவாளர்’
என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்மீது பல தடைகளை விதித்து,
அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடக்கி வைத்துள்ளன.
சர்வதேசச்
சட்டங்களுக்கு விரோதமாகவும், ஐ.நா. சபையின்
தீர்மானங்களுக்கு எதிராகவும் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்த இந்திய நிலைப்பாட்டில் தெளிவு இல்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இப்போதுதான் தெளிவு பிறந்துள்ளது. ஆனால், இந்தியா அரை நூற்றாண்டுக்கு முன்னரே செய்துகாட்டியது.
வாஜ்பாய்
பிரதமரானதும், அத்வானி இஸ்ரேல் சென்றார். அது முதற்கொண்டு இஸ்ரேலோடு இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் வாங்குவதும், உளவு வேலைக்கான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதும் என்று நெருக்கம் பல மடங்குகள் அதிகமாயிற்று.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பைப்போல நமது பிரதமரின் நெருங்கிய நண்பர். இதனால் கடந்த அக்டோபர் 26 அன்று ஐ.நா. பொது
அவையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தபோது, 120 நாடுகள் தீர்மானத்தினை ஆதரித்த வேளையில், இந்தியா, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்துகொண்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் நவம்பர் 21 அன்று நடந்த ‘பிரிக்ஸ்’
நாடுகள் கூட்டத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்று சீன அதிபர் முன்மொழிந்த தீர்மானத்தினை இந்தியா வழிமொழிய மறுத்துவிட்டது. ஆனால், நமது வெளியுறவுத்துறை அமைச்சர் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்குத் தனது எதிர்ப்பினை மட்டும் பதிவு செய்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக மோடி எத்தனை நாள் நடிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
போர்
நிறுத்தத்திற்கும், பிணையக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஹமாஸ் அமைப்பினர் தயார் என்று அறிவித்த பின்னரும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தயாராக இல்லை. அவரது பதவியைக் காப்பாற்றவும், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கும் இந்த யுத்தம் அவருக்கு அவசியம் தேவை. போர் நின்றுவிட்டால் உடனடியாக அங்கே தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்நாட்டில் கடுமையான மக்கள் எதிர்ப்பை மீறி அவரால் வெற்றிபெற இயலாது. அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை, யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் விசாரணை தொடரும். தண்டனை நிச்சயம் என்று சொல்கிறார்கள். எனவே, யுத்தத்தின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்த நெதன்யாகு முயற்சிக்கிறார்.
பத்து
இலட்சம் மக்கள் வாழும் காசா நகரையும், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் நாட்டின் பகுதி என்று அறிவிக்கும் தீர்மானத்தை அவரது அமைச்சரவை சில நாள்களுக்கு முன் நிறைவேற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மக்களை அங்கே குடியமர்த்தும் பணியையும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளைக் கட்டத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 60,000 இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
“பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று இரு நாடுகளே இல்லை; இனி இஸ்ரேல் மட்டும்தான்” என்று
இஸ்ரேல் நிதி அமைச்சர் கொக்கரிக்கின்றார். காசா நகரின் நகர்மன்றத் தலைவர் முஸ்தபா குவாசத், “இது பேரழிவு; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கருதி நகரை விட்டுப் பீதியுடன் ஓடுகின்றனர். தங்க இடமின்றித் தரிசு நிலங்களில் மேற்கூரைகூட இல்லாமல் தங்கியுள்ளனர். உலக நாடுகளே, இக்கொடுமையைத் தடுத்து நிறுத்துங்களேன்!” என்று கதறுகின்றார்.
அரபு
நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் வெறும் கண்டனங்களோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக மௌனம் காக்கிறார்கள். டிரம்ப் உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காகக் காத்திருக்கின்றார். நெதன்யாகு, ‘அப்பரிசு பெற தகுதியான ஒரே நபர் டிரம்ப் மட்டும்தான்’ என
வழிமொழிகிறார். டிரம்புக்கு நோபல் பரிசினை வழங்காவிடில் நோபல் பரிசு தலைமைச் செயலகத்தை டிரம்பும், நெதன்யாகுவும் சேர்ந்து குண்டுகள் போட்டு அழித்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.
‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்!’ என்று அடிக்கடி சொல்கிறார்களே... அந்தத் தர்மம் எப்போது வெல்லும்? பாலஸ்தீனக் குழந்தைகளின் மரண ஓலம் எப்போது நிற்கும்?
இந்தியாவில் ‘ஆசிரியர் தினம்’ செப்டம்பர் 5-ஆம் நாள் டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் குறிக்கிறது. அவர் புகழ்மிகு அறிஞர். பாரத இரத்னா விருதாளர். முனைவர், பேராசிரியர். சுதந்திரத் திருநாட்டில் முதல் துணைக் குடியரசுத் தலைவர். தமிழ்நாட்டின் இரண்டாம் குடியரசுத் தலைவர். தத்துவமேதை, சிறந்த கல்வியாளர்.
1888-ஆம் ஆண்டு
செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள்
பிறந்தார். இராதாகிருஷ்ணனின் நண்பர்களும், பல மாணவர்களும் அவரது
பிறந்த நாளைக் கொண்டாட விரும்புவதாக அவரை அணுகியபோது, “எனது பிறந்த நாளைத் தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்”
என்றார்.
1967-ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவையும் ஞானத்தையும் பரப்புவதற்காக ஆசிரியர் தொழிலைத் தேர்வு செய்கின்றனர். படித்த மக்கள் தொகை உள்ள நாடுதான் பெரும் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியாக வெற்றிபெற சரியான வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையும் வேண்டும். பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடும்ப மக்களாக, குடும்பங்களாக அவர்களை வடிவமைக்கிறார் ஆசிரியர்.
இந்த
நாள் தரமான கல்வியைப் பெறுவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்நாள் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமானது. ஏனெனில், இந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் மாணவர்கள் மற்றும் புகழ்மிக்க அமைப்புகளால் கௌரவிக்கப்படுகின்றார்கள். ஆசிரியச் சான்றோரைப் பெருமைப்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்
தினம் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இடையிலான தூய்மையான பிணைப்பைக் கொண்டாடும் அற்புதமான நாள். ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை ஏற்பாடு செய்து, இந்தச் சிறப்பு நாளை மறக்க முடியாததாக மாற்றுகின்றார்கள். எவ்வளவு பாராட்ட, வாழ்த்த, போற்ற முடியுமோ அத்தனையும் செய்து பெருமைப்படுத்துகின்றார்கள்.
ஒன்றிய
அளவில் உள்ள கல்விப் பட்டியலை மாநில அரசுக்கு மாற்றி, அந்தந்த மாநில அரசுகளே செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். தமிழ்நாடு, கேரளம் போன்ற தென் மாநிலங்கள் கல்வியில் நாட்டில் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வியில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகப் பணி வாய்ப்பிலும் சரி, எல்லாத் துறைகளிலும் உள்ளது. இதற்கு மூலகாரணம் ஆசிரியர்களே. மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல்
கலாம் தன்னை எவ்வாறு ஆசிரியச் சான்றோர் உருவாக்கினார்கள் என்பதைப் புத்தக வடிவில் வெளியிட்டு ஆசிரியச் சான்றோர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
நமது
நாட்டில் உயர் பதவிகளில் இருந்த பலரும் ஆசிரியர்களே! பல்துறை சேர்ந்த பரந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்குபவர்களும் ஆசிரியர்களே!
இந்நாளை
நாம் கொண்டாடும்போது ஆசிரியர்கள் தன்னலமற்ற சேவையை நினைத்து அவர்களைப் பெருமைப்படுத்தத் தவறக்கூடாது. ஆசிரியர்கள் தாங்கள் செய்யும் பணியைப் போற்றி அவர்கள் தங்கள் பணியை மேலும் சிறப்பாக ஆற்றிட அவர்களை வாழ்த்துவோம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டக்குழுவில் ‘ஆசிய ஜோதி’ ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய நாட்டின் மாபெரும் மனிதராக வாழ்ந்தவர். பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என்று கூறினார். ஆகவே, சிறுபான்மையினர் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் உறுதி செய்தார்.
சிறுபான்மையினர்,
கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகப் பல ஆண்டு காலம்
இருந்தார்கள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகப் பல இடங்களில் பாதிக்கப்பட்டு
வருகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியான குரல் வலுத்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டம் 25-வது பிரிவு சிறுபான்மையினருக்கு மனச்சுதந்திரம், மதச்சுதந்திரம் அளிக்கிறது. இந்தியக் குடிமகன் விரும்பும் சமயத்தைத் தழுவ, வழிபட மற்றும் அச்சமயத்தைப் பரப்ப உரிமை அளிக்கிறது. ஆனால், இன்றைய நிகழ்வுகள் உரிமையை முற்றிலுமாகப் பறிப்பதாக உள்ளன.
பெரும்பான்மையான
இந்து நண்பர்கள் இந்துத்துவக் கொள்கையை ஏற்பதில்லை. இந்துகள் என்ற பெயரில் சிறு குழுவினர் அல்லது இந்து சிறுபான்மையினர் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள், குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
அண்மையில்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மனத்தை உருக்கும் நிகழ்வை அனைவரும் கண்டனம் செய்கின்றனர். ‘சிஸ்டர்ஸ் ஆப் இமாக்குலேட் கன்ஸபசன்’
சகோதரிகள் வந்தனா பிரான்சிஸ், பிரீத்தி மேரி மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர். இரயில்வே நிலையத்தில் மூன்று ஏழைப் பெண்களை ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தார்கள். அங்கு சுக்மன் மண்டாவி என்பவர் மூன்று பெண்களை அழைத்து வரும்போது பார்த்த சங்கீகள் பஜ்ரங்கால் தொண்டர்கள், முக்தி வாகினி பெண்களையும் அழைத்து வந்து பிரச்சினையை உருவாக்கினார்கள். இரயில்வே போலிஸ் ஸ்டேஷனில் மூன்று பெண்களை விற்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்தார்கள். அவர்களை மதமாற்றம் செய்யப் போகிறார்கள் என்று பொய்யான FIR பதிவுச் செய்து
சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள். அருள்சகோதரிகள், பெண்கள் அவர்களின் பெற்றோர் சொன்ன உண்மைகளைப் பதிவு செய்யவில்லை. பெற்றோர்கள் கூறுவது அவர்கள் ஏற்கனவே கிறித்தவர்களாக இருக்கிறார்கள். தங்கள் சம்மதத்துடன் பெண்களை வேலை செய்வதற்காக அழைத்து செல்கிறார்கள். ஏழைகள் எங்களுக்கு இது பெரிய சேவையாகும் என்று சொன்னதைக்கூட பதிவு செய்யவில்லை. அருள்சகோதரர்களைச் சிறையில் தள்ளினார்கள். சத்தீஸ்கர் முதலமைச்சர் தண்டனையை நியாயப்படுத்தினார். பா.ச.க
தலைவர்கள் வழக்குத் தொடர்ந்தபோதும் இந்தியா எங்கும் போராட்டம் வலுத்து அருள்சகோதரிகள் கடையில் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்துத்துவ
கொள்கையை இந்து சிறுபான்மையினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் முகமான பா.ச.க
தூக்கிப்பிடிக்கிறது.
பரிவாரங்கள் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்களைத் தாக்குகின்றனர் 1992 பாபர் மசூதி இடிப்பு 2002 குஜராத் இஸ்லாமியருக்கு எதிரான கலவரம் மற்றும் படுகொலைகள் 2008, காந்தமால் ஒரிசா மாநிலத்தில் கிறித்தவர் படுகொலையைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் மட்டும் 824 கிறித்தவர் தாக்கப்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. கிறித்தவச் சமூகம் மக்கள்நல பணிகளை ஆற்ற அயல்நாட்டு உதவி பெறும் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு, சிறுபான்மையினருக்கு எதிரான குரல் வன்முறை சம்பவங்களில் முடிகிறது.
சிறுபான்மையினர்
உரிமைகள் பறிக்கப்படுகிறபோதும் பாதிக்கப்படுகிறபோதும் பொது சமூகம் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இடதுசாரிக் கட்சிகள் உரிமைகளைப் பாதுகாக்கக் களத்தில் போராடுகின்றனர். கிறித்தவச் சமூகம் முழுவதும் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு நீதியை நிலைநாட்டுவது அடிப்படைக்
கடமையாகும்.
நம் நாடு சுதந்திரம் அடைந்து, அன்றைய மற்றும் இன்றைய ஆட்சியாளர்களின் முன்னோக்கிய அறிவியல், தொழில்நுட்பச் சிந்தனைகள், பொருளாதார வளர்ச்சிக்கான சீரிய முயற்சிகள், அவர்களின் அளப்பரிய பங்களிப்பு ஆகியவற்றால் இன்று இந்தியா, உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனியையும் ஜப்பானையும் கடந்து, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம்.
தினமும்
27 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு, மாதத்திற்கு இரண்டு புதிய விமான நிலையங்கள் திறக்கப்படுகின்றன. பணப் பரிவர்த்தனைகளில் 46% பங்கு வங்கிக்குச்
செல்லாமல், மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது. 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். 3 இலட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய
சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், வங்கிக் கணக்குகள்... இவை அனைத்தும் மகிழ்ச்சி தரும் சாதனைகள்! பல குடும்பங்கள் அரசு
உதவிகளை நேரடியாகப் பெற்றுள்ளன. கிராமங்களில் மின்சாரம், குடிநீர், வீடுகள் போன்ற வசதிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், ‘இந்த வளர்ச்சி எல்லாருக்கும் சமமாகச் சென்றடைகின்றனவா?’ என்பதே நமது கேள்வி.
பல
கிராமங்களில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், சில இடங்களில் மருத்துவர் இல்லாமை, மருந்து பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் நீங்கவில்லை. நோயுற்றவர் தொலைதூரம் நகரம் செல்ல வேண்டிய நிலையும் தொடர்கிறது.
அரசுப்பள்ளிகளில்
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பெண்களின் கல்வி முன்னேற்றமும் உற்சாகமளிக்கிறது. ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் சிறந்த கற்றல் சூழல், திறமையான ஆசிரியர்கள் இருக்கின்றார்களா?
பல
கிராமங்களில் குடிநீர், சாலைகள், போக்குவரத்து வசதிகள் உருவாகி வருகின்றன. அதேநேரத்தில், சில இடங்களில் இவை இன்னும் குறைவாகவே உள்ளன. வேலைவாய்ப்புத் தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன. கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் பலர், மிகக் குறைவான வசதிகள் உள்ள வீடுகளில்தான் இன்றும் வசிக்கின்றனர்.
கிறித்தவச்
சமூகம் உள்பட பல மதத்தினரும், தன்னார்வ
அமைப்புகளும், பள்ளிகளும், மருத்துவமனைகளும் பல ஆண்டுகளாக ஏழை
மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இவற்றில் கிறித்தவச் சமூகம் சிறந்த பங்களிப்புச் செய்து வந்துள்ளது. தற்போது சில அரசின் புதிய சட்டங்கள் இப்பணிகளைத் தடுக்கும் வகையிலும் இடையூறுகள் விளைவிக்கும் சூழலையும் உருவாக்குகின்றன.
இன்று
நமக்குத் தேவையானது புள்ளிவிவர வளர்ச்சி மட்டுமல்ல; மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம். நமது விழாக்களில் செலவுகளைக் குறைத்து, ஏழைக் குடும்பங்களுக்குக் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் முதலீடு செய்ய நாம் சிந்திக்க வேண்டும்.
சுதந்திர
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்றால், நகரத்தில் உள்ள ஒரு மாணவனுக்கும், கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் மகனுக்கும் ஒரேமாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதுதான்; ஒரே மாதிரியான கனவுகள் வளர்வதுதான்; மருத்துவச் சேவைகள் நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் சமமாகக் கிடைப்பதுதான்.
நம்மால்
முடிந்த அளவில் கருணையுடனும் நீதியுடனும் அன்புடனும் செயல்பட்டால், புள்ளிவிவரங்களுக்கும் அப்பால் உண்மையான முன்னேற்றத்தை நாம் காணமுடியும்.
அப்போதுதான்
உண்மையான சுதந்திரத்தை யாவரும் கொண்டிருக்க முடியும்.
இரவு பத்து மணி. திருச்சி நெடுஞ்சாலை. கார் பயணக் களைப்பு. டிரைவரிடம் ‘டீ குடிச்சிக்கிட்டு போகலாம், கொஞ்சம் ரோட்டோரத்தில் நிறுத்து’ என்றேன். அவனும் நிறுத்தினான்.
தனித்து
விடப்பட்டக் கடை என்றாலும்கூட எல்.இ.டி. பல்புகளால்
அலங்கரிக்கப்பட்டுப் புதுப் பெண்கோலம் பூண்டிருந்தது. அந்த நெடுஞ்சாலையோரம் மீடியம் சுகர் போட்ட அந்தத் தேனீர் கப்பை கையிலே ஏந்தி நின்றிருந்த என் கண்களுக்குச் சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் உருவம் வாகன வெளிச்சத்தில் மின்னி மறைந்தது.
கையில்
ஒரு குட்டைக் குடை. தோளில் தொங்க விடப்பட்ட பை. இளமஞ்சள் நிற சாரி. ‘யாராக இருக்கும் இந்த நேரத்தில்?’
பக்கத்தில்
யாருமே இல்லை. அப்பெண் யாரையோ தேடுவதுபோல் இருந்தது. சாலையில் கடந்துபோகும் இருசக்கர வாகனங்கள் சில அப்பெண்ணின் அருகே வந்து நோட்டம் விட்டுச் சென்றன.
‘இந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் தேவை தானா? இந்த இரவு நேரம் இப்படி விபச்சாரத் தொழில் செய்துதான் பிழைக்கவேண்டுமா?’
கேள்விகள்
பல என் மனத்தின் ஆழத்தில் கொக்கிப்போட்டு அமர்ந்துகொண்டன. கையிலிருந்த தேநீர் கொஞ்சம் மீதமிருக்கையில் ஒரு பைக் அப்பெண்ணின் அருகில் வந்து நின்றது. மழை வந்தால் பூக்கும் அல்லி மலரைப்போல பைக்கில் வந்த அந்த மனிதரைப் பார்த்தவுடன் அப்பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி! பொய் கோபத்தில் தான் வைத்திருந்தக் குட்டை குடையால் பைக்கில் வந்திருந்த அந்த நபரின் முதுகில் அடிப்பதுபோல பாசாங்கு செய்தாள்.
இரண்டு
வயது குழந்தை ஒன்று அந்தப் பைக்கின் முன்பக்கத்திலிருந்து எழுந்து தாவிக் குதித்து அவள் கைக்குள் அடங்கியது. வாரி அணைத்துக்கொண்டு அக்குழந்தையின் நெற்றி முகர்ந்து முத்தமிட்டாள். பேருந்து ஒன்று அந்த இடத்தில் நின்று சென்றபோதுதான் அது பேருந்து நிறுத்தம் என்பது புரிந்தது.
என்
கையிலிருந்த தேநீர் தீர்ந்திருந்த நிலையில் என் கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்திருந்தன. அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு அந்தப் பைக் கிளம்பும்போது வெளிப்பட்ட கரும்புகை கொஞ்சம் என் முகத்தில் படாமல் இல்லை.
இந்தியா
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளான பிறகும்
பெண்கள்மீது நாம் கொண்டிருக்கும் பார்வை மட்டும் இன்னும் மாறாமலேயே இருக்கிறது. உடலில் நகை அணிந்துகொண்டு இன்று பெண் ஒருவர் சாலையில் நடந்துசெல்ல முடிவதாக இருக்கலாம்; ஆனால், சமூக வலைத் தளங்களில் தன் உண்மைப் பெயரைக் கொண்டு, தான் சொல்ல விரும்புகின்ற கருத்தைப் பயமில்லாமல் சொல்ல முடிவதில்லை. ஒரு பெண் கருத்து ஒன்றைச் சொல்கிறாள் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு பெண் சமூக ஊடகங்களில் இருக்கின்றாள் என்பதற்காகவே அவள் பலரால் பல்வேறு சீண்டல்களுக்கு (Online Harresments) உள்ளாக்கப்படுகிறாள்.
இன்று
பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்புக்காக, கல்விக்காக, பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக, தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கிற்காக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ‘சாத்வா கன்சல்டிங்’ (Sattva Consulting) என்ற நிறுவனம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 23 மில்லியன் பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது இணையம் பயன்படுத்தும் இந்திய ஆண்களைவிட 34% குறைவு ஆகும்.
அண்மையில்
‘#me
too’ என்ற
இணையவழி இயக்கம் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல்களை இணையத்தில் அரங்கேற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பெரும்புள்ளிகள் இணையத்தில் குரலெழுப்பிய பெண்களின் குரல்வளையை நெரிக்க பாலியல் மற்றும் தரக்குறைவான கருத்துகளைச் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டனர். இதேபோன்று கருத்து மோதல்களாலும் தொடர் சீண்டல்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண் ‘இன்புளுவன்சர்கள்’ தற்கொலை
செய்துகொள்கின்றனர். இதனால் இணையத்தைப் பயன்படுத்தும் பெண்கள் அத் தளத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்கின்ற சூழல் உருவாகி பெருமளவில் டிஜிட்டல் மற்றும் பாலினப் பிளவு (digital
and gender divide) உருவாகின்றது. இது
இணையத்தில் பெண்களுக்கான வாய்ப்பைப் பறிப்பதோடு, அவர்களுக்கானப் பாலினச் சமத்துவத்தைக் (gender
equality) கேள்விக்குள்ளாக்குகிறது.
எனவே,
இணையத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க இணையப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இணையப் பகுப்பாய்வு மற்றும் இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு எல்லா நிலையினருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இணையத்தில் பெண்ணியப் பார்வையும் பெண்ணைப் போற்றும் கருத்துருவாக்கமும் அதிகரிக்கப்பட வேண்டும். இணையக் குற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.
பெண்
உடல் சார்ந்த அரசியல், பெண் உடல் சாந்த விளம்பர உத்தி, பெண் உடல் சார்ந்த ஆன்மிகம், பெண் உடல் சார்ந்த வியாபாரம், பெண் உடல் சார்ந்த ஒழுக்கநெறிகள், பெண் உடல் சார்ந்த ஆபாசம் போன்ற பெண்களுக்கு எதிரான வன்மங்கள் இணையத்தின் பிரதான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளே.