ஒரு கொடிய விலங்கு முதலில் அப்பாவி ஆடுகளைக் கடிக்கும். இரத்தவெறியின் ருசி ஓட்டத்தில் படிநிலை மாறும். இறுதியில் மனிதர்களைக் கடித்துக் குதறும். பா.ச.க. எனும் கொடிய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு சட்டத் திருத்தம் எனும் ஆடு, மாடுகளைக் கடித்தது. இன்று வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு முறை) திருத்தச் சட்டம் 2026 என்ற பெயர்களில் கிறித்தவர்களைக் கடித்துக் குதறத் திட்டமிடுகிறது.
இந்தியக்
கத்தோலிக்க ஆயர் பேரவை இதை ‘ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய செயல்’ எனச் சாடுகிறது. வட மாநிலங்களில் சட்ட
விரோதக் குடியேற்றம் உள்ளது. குறிப்பாக, பா.ச.க.வின் எதிர்க்கட்சி ஆளும் மேற்குவங்கத்தில் என்றது. இசுலாமிய எதிர்வாக்கு வங்கியைப் பா.ச.க.
குறி வைத்தது. குடியுரிமையை மறுத்தது. அதைக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றது.
வக்ஃபு
சட்டம் என்பது வக்ஃபு தன்னாட்சியைப் பறித்தல், வக்ஃபு சொத்துகளை கபளீகரம் செய்தல் போன்ற நீண்டகால ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்திற்குத் திசையானது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, வெளிநாட்டு நிதிகளை வாரிக்
குவித்தாலும் காலங்காலமாகக் கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது அக்னிப் பார்வை கொண்டு இருந்தது. காலம் வரக் காத்திருந்தது.
1975-ஆம் ஆண்டு
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் வலுத்த அரசியலால் என பிரதமர் இந்திராகாந்தி
அம்மையாருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. தனக்கு இருந்த நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் தேசத்தில் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். அக்கறுப்புக் காலத்தில் தன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் எல்லா நடவடிக்கைகளையும் இந்திரா காந்தி மேற்கொண்டார். 1976-இல் தேசவிரோத சக்திகள் வெளிநாட்டிலிருந்து நிதிகளைப் பெற்று, உள்
நாட்டில் கலவரங்கள் செய்வதாகக் கூறி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். அது தனி நபர்கள், சங்கங்கள் வெளிநாட்டிலிருந்து பெறும் நிதியை ஒழுங்குபடுத்துதல், தேசிய நலனுக்கு, தேச விரோத நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு கொண்டு வருதல் எனக் கூறப்பட்டது.
1984-ஆம் ஆண்டு
அனைத்து அமைப்பு சாரா நிறுவனங்களும் உள்துறை அமைச்சகத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கறுப்புச்
சட்டத்தின் தொடக்ககாலக் கட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. கான்பூர்
உள்பட்ட எட்டு தேசியப் பல்கலைக் கழகங்கள் பெரும் சவாலைச் சந்தித்தன. அவற்றின் வெளிநாட்டு நிதி உதவிகள் தடுக்கப்பட்டன. அவர்களது உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன. இறுதியில், தேவையான கணக்குகள், ஆவணங்களைச் சமர்ப்பித்து ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகம் தன் நிலையை மீட்டெடுத்தது. இதிலும் உள்துறை அமைச்சகத்தில் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறின. நிறுவனப் பதிவு, கணக்கு வழக்குப் பார்த்தல் என்பதில் தொடங்கி, போலி நிறுவனங்கள் பதிவுவரை நடந்தது. இதில் உள்துறை
அமைச்சக அதிகாரிகள் ஆறு பேர் கைது, கோடிக்கணக்கான பணம் கைப்பற்றுதல் என சி.பி.ஐ. நடவடிக்கைகள் கசப்பான
மறுபக்கங்கள்.
1976-இல் வடிவாகி,
2010-இல் இச்சட்டம் முழு
வடிவு பெற்றது. பின் அது 2016, 2018, 2020 என பா.ச.க. அரசால் திருத்தம்
செய்யப்பட்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டு முதல் மூன்று விழுக்காடு எதிர்மறைத் தாக்குதல் உள்ளது. இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சட்டம் பல முறை மாற்றப்பட்டது.
மத வன்மம் கொண்டு, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை)
திருத்தச் சட்டம் 2026 எனப் புதிய வடிவம் தரப்பட்டது. இச்சட்டம், கிறித்தவச் சிறுபான்மை மக்களை, கிறித்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து அச்சுறுத்துகிறது.
கொடுங்கோல்
ஆட்சியின் கறுப்புச் சட்டமான இந்தச் சட்டத் திருத்த முன் வடிவு, மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களைக் குறி வைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என உறுதிபடக் கூறலாம்.
ஆர்.எஸ்.எஸ். கிறித்தவத் தேவாலயங்கள், கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது வைத்துள்ள ஆத்திரம் சட்ட முன்வடிவாக அதிரடியாக மாறியுள்ளது.
ஒன்றிய
உள்துறை அமைச்சகம் தன் மட்டற்ற அதிகார வரம்பை இச்சட்ட வடிவில் உள்ளடக்கி உள்ளது. உரிமம் பெறுதல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
புதுப்பித்தல் என அனைத்து அதிகாரங்களையும்
கேள்வி கேளா நிலையில் வைத்துள்ளது. உரிமங்களை இரத்து செய்யும் அதிகாரத்தையும் இச்சட்டத்தால் உள்துறை அமைச்சகம் பெறுகிறது. எந்நேரத்திலும், எந்தவித அறிவிப்புகளும், எந்தவிதக் காரணங்களும்
இல்லாமல் உரிமம் இரத்து செய்யப்படலாம். அவ்வாறு இரத்து செய்யப்படுகிற அல்லது ஒப்படைக்கப்பட்டுள்ள உரிமங்களைக் கொண்ட, காலாவதியான பதிவு எண்களைக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிகார அமைப்பு கையெடுக்கும். அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு எல்லாக் கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும் முடக்க வழி செய்கிறார்கள்.
மார்ச்
2025-2026 அன்று வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு
முறை) திருத்தச் சட்டம் 2026-இன் முன்வடிவு மக்களவையில் வைக்கப்படுகிறது. ஆளும் பா.ச.க.
தரப்பு, ‘இச்சட்ட முன் வடிவு அரசு சாரா நிறுவனங்களின் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மையம் செய்தல், நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், வெளிநாட்டுப் பங்களிப்புகள் மீதான மேற்பார்வைகளை அதிகரித்தல் என அரசின் பிடியை
உறுதிப்படுத்தல்’ என்று
கூறுகிறது. எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை உடனே பதிவு செய்தன. விழித்த பா.ச.க.
அரசு சட்டத்தை நிறைவேற்றவில்லை; திரும்பவும் பெறவில்லை. அடுத்த பரிசீலனையில் எனக் காத்திருப்புப் பட்டியலில் போட்டது. எந்த நேரமும் ஒருவேளை சிறப்பு அமர்வு வழியாகக்கூட இந்தக் கறுப்புச் சட்டம் பின்வாசல் வழியே வர வாய்ப்புகளே அதிகம்
என விவரம் அறிந்தோர் கூறுகிறார்கள். இணைய வழி கருத்துப் பகிர்வில் பலரும் ‘பிரதமரின் குடிமக்கள்
உதவி அவசர கால நிவாரண
நிதி (பி.எம்.கேர்)
இச்சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா?’ என வாதம் வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டு
முதல்வர், “இலாப நோக்கமற்ற அமைப்புகளால் வழங்கப்படும் கல்வி, மருத்துவம் மற்றும் தொண்டு சேவைகளுக்கு மாற்றாக, புதிய சேவை வழங்கும் திறன் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இல்லை” என்ற உண்மையை இவ்விவாதத்தின் ஊடே பொருத்துகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின், “இது ஒரு
கொடுங்கோல் மசோதா. அது ஒன்றிய அரசுக்கு அதன் விருப்பப்படி எந்தவொரு முறையான
சட்ட நடைமுறையும் இன்றி ஒரு தேவாலயம், பள்ளி, மருத்துவமனை போன்ற அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ. பதிவை
இரத்து செய்யவும், அதன் சொத்துகளைக் கையகப்படுத்தவும் அதிகாரம் அளிப்பதன் மூலம் தொண்டு நிறுவனங்களைச் சிதைக்க முயல்கிறது” எனத்
தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.
பா.ச.க. அரசின்
நெருக்குதல்களால் இன்றைய நிலையில் 18,000-க்கும் மேற்பட்ட தொண்டு, அமைப்பு சாரா நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை இழந்துள்ளன. அவர்களுடைய சொத்துகளை இந்தக் கறுப்புச் சட்டம் வழியே ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகக் கையில் எடுக்கும். அது கல்வி, மருத்துவச் சேவை நிறுவனமாக இருந்தால், அது பின்தங்கிய பகுதியில் இருந்தால், தன் காவி வேலையைக் காட்டும். அது நாட்டின் அடிநிலைச் சமூக அமைப்பிற்கு அச்சுறுத்தலாக முடியும்.
பா.ச.க. என்பது
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் குழந்தை. அது தன் தாயின் வழிகாட்டலுக்கும் செயல்திட்டத்திற்கும் ஆதரவாகவே செயல்படும். மதச்சார்பற்ற சக்திகளான நாம்
அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே இந்திய அரசியலின் சவால்மிகு நாளைய பக்கங்களாகும்.
ஒரே பரபரப்பான சூழல்! ஒருபுறம் தேர்வு, மறுபுறம் தேர்தல். சில நேரங்களில் வாழ்க்கை நம்மை அமைதியாக நிறுத்தி வைக்கிறது. அந்த நேரங்களில், நாமே நம்மைக் கேட்டுக்கொள்ளும் கேள்வி: “நான் எடுக்கும் முடிவுகள் சரியானவையா?”
பெரிய
முடிவுகள் மட்டுமல்ல; சிறிய தேர்வுகளும்கூட நம்மை வடிவமைக்கின்றன. ஒரு வார்த்தை பேசுவதா? மௌனமாக இருப்பதா?… ஒரு வழியைத் தேர்வு செய்வதா? திரும்பிப் போவதா? இவ்வளவு சாதாரணமாகத் தோன்றும் சிறிய முடிவுகளில்தான் நம்முடைய வாழ்க்கையின் உண்மையான வாழ்வு வடிவமைக்கப்படுகிறது.
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையும் ஓர் அழைப்பு. அதை நாம் சில நேரங்களில் ‘பணி’ என்று நினைப்போம். ஆனால், அது அதைவிட ஆழமானது.
கடவுள்
நமக்குக் கொடுத்த வாழ்க்கை, ஓர் அர்த்தமுள்ள பதிலை எதிர்பார்க்கிறது. ஒரு மாணவன் படிக்கிறான், முயற்சிக்கிறான், தவறுகளைச் சரிசெய்கிறான். அவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; அவனுக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளை நம்பிக்கையுடன் வாழ்வதற்காக. அதேபோல், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம்முடைய வாழ்க்கை அழைப்பிற்கு நாம் தரும் பதிலாக மாறுகிறது.
மனசாட்சி - அமைதியாகப்
பேசும்
குரல்
நம்முள்
ஒரு குரல் இருக்கிறது. அது சத்தமாகப் பேசாது;… ஆனால், அது உண்மையை மட்டும் பேசும். சில நேரங்களில் அது நம்மைக் கடினமான பாதைக்கு அழைக்கும். ஆனால், அந்தப் பாதைதான் நிம்மதியைத் தரும்.
திருவிவிலியம்
மெதுவாக நினைவூட்டுகிறது: “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” (1சாமுவேல்
16:7). அதனால்தான் வெளியில் நல்லதாகத் தோன்றுவது எல்லாம் சரியானதல்ல; உள்ளத்தில் அமைதியைத் தருவதுதான் உண்மையானது.
சுதந்திரம் -
ஒரு
பரிசும்,
ஒரு
பொறுப்பும்
நமக்குச்
சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எதை வேண்டுமானாலும் செய்யும் உரிமை மட்டுமல்ல; சரியானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு. சில நேரங்களில், எளிதானதைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கும். ஆனால், நல்லதைத் தேர்வு செய்வதற்குத் தைரியம் தேவை. அந்தத் தைரியம்தான் ஒரு மனிதனை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது.
சிறிய முடிவுகள்
- பெரிய
தாக்கம்
நாம்
எடுக்கும் சில முடிவுகள் சிறியதாகத் தோன்றலாம். ‘இதில் என்ன இருக்கிறது?’ என்று நாமே நினைக்கலாம். ஆனால், வாழ்க்கை அப்படியில்லை. சிறிய விதைகள்தான் பெரிய மரங்களாக வளர்கின்றன.
திருவிவிலியம்
கூறுகிறது: “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்”
(லூக்கா 16:10).
நம்முடைய
சிறிய நேர்மைகள் ஒருநாள் பெரிய நம்பிக்கையாக மாறும். நாம்
எடுக்கும் முடிவுகள், நம்மை மட்டும் பாதிக்காது. அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தொடும்.
ஒரு
குடும்பம்… அல்லது
ஒரு சமூகமும் கூட, ஒரு மனிதனின் சரியான முடிவால் வளம் பெற முடியும். அதனால்தான், நாம் எடுக்கும் ஒவ்வொரு தேர்வும் ஒரு தனிப்பட்ட செயல் மட்டுமல்ல; ஒரு சமூகப் பொறுப்பும்கூட.
வாழ்க்கை
எப்போதும் நமக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. சில நேரங்களில் அவை பெரியதாக இருக்கும்; சில நேரங்களில் மிகவும் சாதாரணமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு தருணமும் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கிறது: “நீ எதைத் தேர்வு
செய்கிறாய்?”
இந்தக்
கேள்விக்கான பதில்தான் நம் வாழ்க்கையின் பாதையை உருவாக்குகிறது. சரியானதைத்
தேர்வு செய்வது எப்போதும் எளிதாக இருக்காது; ஆனால், அந்த ஒரு நேர்மையான தேர்வு, நம்முள் ஒரு நல்ல மனிதனையும், நம்மைச் சுற்றி ஒரு நல்ல உலகத்தையும் உருவாக்கும்.
நமது சமூகத்தில் சாதாரணமாகப் பேச்சு வழக்கிலும் வாழ்விலும் இருக்கும் ஒரு சொல்லாடல் ‘சாதாரணமாக’ எனலாம். நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒருமுறையாவது ‘சாதாரணமாக’ என்ற சொல்லினை நமது உரையாடல்களிலும் உறவாடல்களிலும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
‘சாதாரணம்’
என்ற சொல்லானது நமது சமூகத்திலும், நமது வாழ்விலும் இயல்பாக நடைபெறும் நிகழ்வு போன்ற அர்த்தத்தை நமக்குத் தருகிறது. ‘அசாதாரணம்’
என்பது அரிதான அல்லது வழக்கத்திற்கு மாறான நிகழ்வு என்ற அர்த்தத்தில் சமூகத்தால் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
இன்று
சாதாரணம் என்ற சொல்லின் புரிதல் ‘இயல்பாக நடப்பது’ என்ற புரிதலைக் கொண்டு இயங்கினாலும், தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 30 கொலை நிகழ்வுகள் பதிவாகின்றன, அனுதினம் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இன்னும் போதை, தீண்டாமை, ஊழல், வன்முறை, சுரண்டல், ஏமாற்று, ஆதிக்கம் போன்ற மனிதநேயமற்ற நிகழ்வுகள் கட்டுக்கடங்காது நடைபெறுகின்றன. விளம்பர அரசாட்சிகள் கண்மூடிக் கொள்கின்றன. இவற்றையெல்லாம் ‘சாதாரணம்’
என்று கடந்துபோக, நம் மனம் ஏனோ தயங்குகிறது.
நாம்
சாதாரணமாகக் காணும் இந்தச் சமூக எதார்த்தங்கள் இயல்பானவையா? அல்லது ஏற்கெனவே யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்பட்டவையா? என்ற கேள்வி எழுகிறது.
கிராமத்தில்
இதெல்லாம் சாதாரணம், நகரத்தில் இதெல்லாம் சாதாரணம், விடுதியில் இதெல்லாம் சாதாரணம், அலுவலகத்தில் இதெல்லாம் சாதாரணம், திரையில் இதெல்லாம் சாதாரணம், அரசியலில் இதெல்லாம் சாதாரணம்... என்று மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளையும் சாதாரணமாகக் கருதி, சாதாரணமாகக் கடந்துபோகப் பழகும் சமூகமாகி, நாம் இன்று வரம்புகளற்று வாழ்கிறோமோ என்று எண்ணத் தூண்டுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், மனித அறம் மழுங்கிப் போன நடைபிணங்களாக மாறிவிட்டோமோ? என்று சொல்லத் தோன்றுகிறது.
எல்லாமே
இன்று சாதாரணம்தான். சமூகத்தின் தறிகெட்ட வீச்சிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், சமூகப் பொறுப்பிலிருந்து தப்பிக்கவும் ஒரு தனிநபர் பயன்படுத்தும் பதமே ‘சாதாரணம்’
என்ற சொல்லாடல் போலத் தெரிகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சமூகத்தை உற்றுப் பார்க்கும் பொழுது சமூகம், அறநெறிகள், மனித நியமங்கள், நியதிகள், உரிமைகள் தொடங்கி விழுமியங்கள், குடும்ப உறவுகள், பழக்கவழக்கங்கள், அரசியல், சமூக அக்கறை, அதிகாரம், நம்பிக்கைகள், வாணிபம், பொது உளவியல், வாழ்க்கை குறித்த பார்வை, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் வாழ்வியல் என அனைத்தும் ஓர்
அசாதாரண விதத்தில் வேகமாகத் தீமையை விளைவிப்பதாக மாற்றமடைந்து வருவது உங்களுக்குத் தெரிகிறதா? ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பழக்கத்தில்
நிலவிய அறம் பயக்கும் சாதாரணங்கள் உருக்குலைந்து, சிதைந்து, அரிதாகிப்போனதே என்று சிந்தித்ததுண்டா? புதிதாக ஓர் அசாதாரண அறமற்ற சூழல் இன்று சாதாரணமாக மாறியிருக்கிறது. ஆனால், நாம் இதெல்லாம் சாதாரணம் என்ற ஒற்றை வார்த்தையில் உரைத்து அனைத்தையும் கடந்து செல்கிறோம்.
உதாரணமாக,
சில மாதங்களுக்கு முன், அரசியலில் வெற்றிபெற இயங்கும் நடிகனைப் பார்க்கச் சென்ற 40 பேர் - பச்சிளம் குழந்தைகள், பெண்கள் முதல் நடுத்தர வயது ஆண்கள் என அநியாயமாகக் கூட்ட
நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்பது நமது சமூகத்தால் சாதாரணம் என்ற போர்வையில் கடந்து சென்றுவிட்டதைப் பார்க்கிறோம். சில வாரங்களுக்கு முன்னர், தனியாகப் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகளை வன்முறைக் கொண்டு மிரட்டி அந்த இளம் பெண்ணை விடிய விடிய பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பெண்ணியத்தின் மாண்போடு சேர்த்து அந்த இளம்பெண்ணைத் தூக்கி வீசிச் சென்ற நிகழ்வும், காப்பீட்டுத் தொகைக்காகத் தனது தந்தையைக் கொலை செய்யும் அவலங்களும் ஒரு சாதாரண செய்தியாகக் கடந்து சென்றுவிடுவதைப் பார்க்கிறோம். அண்மையில் திருமணமான பெண் தனது காதலனோடு இணைய, தான் பெற்ற குழந்தையையே கொன்றுவிட்டதும் சாதாரணமான செய்தியாகக் கடந்து செல்லப்படுகிறது.
இன்றைய
நமது தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாகக் கடந்து செல்லப்படும், ஊடக வெளிச்சம் பற்றிக்கொண்ட நிகழ்வுகள் இந்த அளவுக்கு மனிதத்தன்மையற்றதாக இருக்கிறது எனில், ஊடக வெளிச்சம் எட்டாத, பொதுப்புத்திக்குத் தெரியாத, வெளியில் சொல்ல முடியாத எத்தனை எத்தனை ஈனச் செயல்பாடுகள் நமது சமூகத்தில் சாதாரணமாக நடந்துகொண்டே இருக்கின்றன என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பார்த்தால், நமது தமிழ்ச் சமூகத்தின் அசாதாரண நிலை நமக்குப் புரியும். எப்ஸ்டீனும் நாமும் சமகாலத்தவர்தானே? இன்று வளரும் தலைமுறையினர், இத்தகைய நிகழ்வுகளைக் குறித்து எப்படி இயங்குகிறார்கள் என்பதும் இத்தகைய நிகழ்வுகளைச் சாதாரண செய்தி என்ற அடிப்படையில்தான் புரிந்துகொள்கிறார்கள் என்றும் நமக்குத் தெரியும்.
‘எது சாதாரணம்?’ என்று நமது மனத்தில் ஒரு நாளும் கேள்வி எழுவதில்லை. ஏனெனில், சமூகத்தில் நடப்பது அனைத்தும் சாதாரணமே என்ற மன நிலை சமூகத்தின்
பொதுப்புத்தியில் பல்வேறு வடிவங்களிலும் அடையாளங்களிலும் உளவியல் வருணனைகள் கொண்டும் உருவாக்கப்படுகிறது என்று காண்கிறோம்.
பிரபல
சினிமாவிலும் இன்றைய கதாநாயகன்கள் கடத்தல்காரனாகவும் கொலைகாரனாகவும் அநீதி இழைப்பவனாகவும் சமூகப் பொறுப்பு இல்லாத சுயநலவாதியாகவும் தொடர்ந்து சித்தரிக்கப்படுவதும், இளம் பருவத்தில் வன்முறைகளை மனத்தில் பதிக்கும் வகையிலும், இரக்கமற்ற முறையில் கொன்று வெற்றியடையும் விதத்திலும் அலைப் பேசியை நிறைக்கும் இணைய விளையாட்டுகளும், சமூகத்தில் அனுதினம் சாதாரணம் என்ற போர்வையில் நாம் கடந்து செல்லும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து காட்டும் சமிக்ஞை என்ன?
“உண்மையல்ல என்று நமக்குத் தெரிந்த கருத்துகளையும்கூட நம்பும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு. பின்னர், நாம் தவறு என்று இறுதியாக நிரூபிக்கப்படும்போது, நாம்தான் சரி என்று காட்டுவதற்காக உண்மைகளைத் துணிச்சலுடன் திரித்துக்கூறும் இயல்பும் நமக்கு இருக்கிறது” என்ற
ஜார்ஜ் ஆர்வெல்லின் கூற்று இன்றைய,
அநீதியைச் சாதாரணமாக்கும் சமூகக் கட்டமைப்பு குறித்த நமது நிலைப்பாடுகளில் உண்மையாவதைக் காண்கிறோம்.
புதுமைகள் படைத்து, சமுதாயத்தை மாற்றியமைத்து, உலகில் பல துறைகளின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும் தொழில்நுட்பமாக ஏ.ஐ. இன்று விளங்குகிறது.
ஒரு
தொழில்நுட்பத்தை நன்மை அல்லது தீமையென்றில்லாமல், அதனை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம், கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே கணிக்கிறோம். ஆனால், இன்று வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்கள், ஆதிக்க ஆட்சி முறை தலைதூக்க ஏற்ற சூழலை உருவாக்குகின்றனவா? என்ற ஐயம் எழச்செய்கிறது.
கட்டுப்பாடு
மற்றும் சமநிலையைக் (checks and balances) கொண்டு இயங்குவதாகவே மக்களாட்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே இவற்றை மெல்ல வலுவிழக்கச் செய்கிறார்கள் என்பதே கடந்த 20 ஆண்டுகால அனுபவமாக உள்ளது. மிகச் சக்தி வாய்ந்த சில நாடுகள், உலக அரசியல் அரங்கில் நேரத்திற்கேற்ப அணி மாறுவது இதற்குச் சான்றாகவும் பார்க்கப்படுகிறது. இரட்டை வேடம் என்பது மனித உரிமைத் தத்துவத்திற்கு முரணானது என்றாலும், இன்று பெரும்பாலும் சக்தி வாய்ந்தவை என்று கூறிக்கொள்ளும் நாடுகள், இவ்வேடத்தைத் தவிர்க்க இயலாமல் உள்ளன. இந்நிலையில் ஏ.ஐ. ஓர்
இயந்திரமாக மனிதனைப் போன்று செயலாற்றலில் வளர்வதும், இதன் வேகமும் திசையும் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை ஒருநாள் அசைத்துவிடுமோ என்ற ஐயம் எழுகிறது.
இன்று
அதிகார வர்க்கத்தினர் அறிவாற்றல் மிக்கோரைக் (target intellectuals) குறிவைப்பதும், சாதகமானோரைப் பொறுப்பில் அமர்த்துவதும், ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அறிவுசார் திறன்படைத்த வகுப்பினரை ஒதுக்குவதும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். இந்நிலையில் ஓரிட அதிகாரக் குவிப்பு-சர்வாதிகாரம்; மற்றொன்று, நிர்வகிக்க இயலாத அதிகாரப் பகிர்வு என்பவை ஆட்சியாளர்களின் கையில் ஏ.ஐ. உகந்த
கைப்பாவையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மனித உரிமைப்
போராளிகளின்
ஏ.ஐ.
அண்மைக்காலமாக
மக்களாட்சித் தத்துவம் வளர்ச்சியடையாமல் தளர்ந்துவிட்டதென்பதை இன்றைய தொழிற்சங்கங்களின் வலுவிழந்த நிலையிலிருந்தே தெரிந்துகொள்கிறோம். ஆனால், இவ்வாறான குறைந்து வரும் மக்கள் பங்கேற்பிற்குத் தொழில் வளரவில்லையென்று கூற முடியாது; ஏனென்றால், பெரும் பலம் வாய்ந்த சுயநலவாதிகள் மற்றும் நிறுவனர்கள் தொழில்நுட்ப எழுச்சியின் காப்பாளர்களாக உள்ள நிலையில் சமத்துவம், மக்களாட்சித் தத்துவம் மேலோங்க முடியவில்லை என்ற பார்வையும் உள்ளது.
சில
நாடுகளில் சர்வாதிகார ஆட்சி சட்ட ஒழுங்கின்படி இல்லாமல், வைத்ததுதான் சட்டம் என்ற முறையிலிருப்பதையும் பார்க்கிறோம். இந்நிலையில் மனித உரிமைகளைக் காக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லும் போராளிகள், அதிகாரத்தின் முன் பலவீனர்களாக நிதி,
கருவி, பயிற்சி என்பவற்றில் குறைந்தவர்களாகவே இருந்தனர் என்பதுதான் கடந்தகால வரலாறு. இவ்வகுப்பினரை ஏ.ஐ. கொள்கை
உருவாக்கத்தில் இணைப்பதனால் ஏ.ஐ. அமைப்புகள்
வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, மனித உரிமை என்பவைகளின் பாதுகாவலராக அமைவார்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.
சர்வாதிகாரிகளின்
ஏ.ஐ.
ஏ.ஐ. தொழில்நுட்பத் துணையோடு
கண்காணித்தல், குறிவைத்துத் தாக்குதல், அடக்குமுறை என்பவை, வலிமையான சர்வாதிகார ஆட்சிமுறையாளர்களின் கை மேலோங்கியிருப்பதை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. வரம்பில்லாக் கண்காணிப்புகள்,
முகஜாடை அறிதல், முன்கணிப்பு காவல்முறை (predictive policing), ஆன்லைன் தொல்லைகள், தேர்தல் குளறுபடிகள் என்பனவற்றில் ஏ.ஐ. ஒரு
சக்திவாய்ந்த கருவியாகச் சில அமைப்புகளிடம் சிக்கியிருக்கிறது.
சில
நாடுகளில் எண்ணற்ற ஏ.ஐ. முகஜாடைக்
கருவிகள் பல இடங்களில் பொருத்தப்பட்டு,
பொதுமக்கள் அனைவரும் எந்நேரமும் கண்காணிப்பு வளையத்தில், தங்கள் சுதந்திரத்தை இழக்கும் நிலையை உணர்கின்றனர். பல நாடுகளுக்கு இத்தொழில்நுட்ப
ஏற்றுமதியின் வேகம் மற்றும் வளர்ச்சி, எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது என்பதாகவும் பார்க்கப்படுகிறது.
இயந்திரக்
கண்கள்-கண்காணிப்பின் மூலம் நன்மைகளிருந்தாலும், இத்தொழில்நுட்பத்தை ஒருவரின் சாதகத்திற்கேற்ப பணிப்பது நீதிக்குப் புறம்பானதாகவும், மனித உரிமை மீறலாகவும், சில நேரங்களில் ஏ.ஜ.யினால்
தொடுக்கப்படும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம்.
உலகில்
சர்வாதிகார வர்க்கத்தினர் தங்கள் ஆட்சியைத் தக்கவைக்கவும், அடக்குமுறைகளுக்குப் பயன்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு
மனித உரிமைப் போராளிகள் இளைத்தவர்களாகவே உள்ளனரென்பதே இன்றைய நிலையாகவும் உள்ளது.
ஏ.ஐ.-யின்
எதிர்காலக்
கட்டமைப்பு
அண்மையில்
‘ஓபன் ஏ.ஐ.’ நிறுவன
உலகத் தலைமை அதிகாரி கிரீஸ் லெஹேன் என்பவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யின்
எதிர்காலம் என்பது மக்களாட்சி ஏ.ஐ.-க்கும்,
சர்வாதிகார ஏ.ஐ.-க்குமான
போட்டியில் இருக்கும்; அதாவது, எத்தனை நாடுகள் இத்தொழில்நுட்பத்தால் ஆளுமை செய்யப்படுகின்றன? தனிமனித ஆட்சியா? அல்லது அரசு ஆட்சியா? என்பதைப் பொருத்து அமையுமென்கிறார்.
இன்று
இத்தொழில்நுட்பத்தில்
முதன்மை வகிக்கும், ஆனால் ஆட்சி முறையில் மாறுபட்டு விளங்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா இடையேயான போட்டியே இதனைத் தீர்மானிக்கும் என்கிறது ஒரு பார்வை.
மக்களாட்சி
ஏ.ஐ. அமைப்பு வெளிப்படைத்
தன்மை, சட்டம்-ஒழுங்குமுறை. தனிமனிதத் திறனை வெளிப்படுத்துதல் என்பவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் நிலையில் ‘சர்வாதிகார ஏ.ஐ. உருவாக்கம்’ என்பது
இயல்பாக, மத்திய ஆட்சி மையம் மற்றும் அதிகாரக்குவியல் என்றே கருதப்படுகிறது.
காலை நேரம். சோகம் கலந்த அழகுடன் காட்சியளிக்கிறது கடல். அங்கு அலைகள் வந்து போகும் இடத்தில் கவிதா நிற்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. ஒரு கையில் சிறிய குழந்தைப் பொம்மையை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள். மறு கை அவளது வயிற்றின்மீது பயத்துடன் பதிந்திருக்கிறது. பல முறை கரு கலைந்த வலியின் காரணமாக, இந்த முறை அவள் நம்பிக்கையைக்கூட முழுதாக நம்பப் பயப்படுகிறாள்.
அவள்
பார்வை வறண்டு, அசுத்தமாகக் காணப்படும் கடலின்மீது நிலைத்திருக்கிறது. அந்தக் கடலின் மலட்டுத்தன்மை, தன் உடலின் நிலையை நினைவுபடுத்துவதுபோல ஓர் அச்சம் அவளுக்குள் படர்கிறது.
‘இந்தக் கடல் போல என் கர்ப்பமும் விசமாகி விடுமோ?’ என்ற பயம் அவள் முகத்தில் தெரிகிறது.
‘அவ வயிறு ஒழுகுற
பானை, எதையும் வச்சுக்காது’, ‘இந்தப்
பிஞ்சையாவது கொல்லாமப் பாத்துக்கோ’ என்ற
ஊராரின் குரல்கள் அவள் காதில் ஒலிக்கின்றன.
‘உங்க வேலைய நீங்க ஒழுங்கா பாருங்க; யாரு வீட்டுல எப்ப சாவு விழாதானே பார்த்துட்டு இருக்குது சனியங்க’ என்று கோபத்தில் கொப்பளித்தாள் கவிதா.
நடுக்கடல்,
நண்பகல். சூரியன் சுட்டெரிக்க, தன் பழைய மரப்படகில் கண்ணன் தனிமையில் போராடுகிறான். இது வெறும் மீன்பிடி அல்ல; தன் மனைவி மற்றும் பிறக்காத குழந்தைக்கான ஒரு போராட்டம். அவன் தன் முழு பலத்தையும் திரட்டி வலையை இழுக்கிறான். நம்பிக்கையுடன் மேலே வரும் வலையில் பளபளக்கும் மீன்களுக்குப் பதிலாக, அருவருப்பான குப்பைகள் நிறைந்திருக்கின்றன. செத்த ஜெல்லி மீன்கள் போன்ற பிளாஸ்டிக் பைகள், உடைந்த செருப்பு, நாற்றமெடுக்கும் கழிவுகள் மற்றும் சில நோய்வாய்ப்பட்ட புண்களுடன் துடிக்கும் மீன்கள்.
கண்ணனின்
முகம் கோபத்திலும் கையறு நிலையிலும் விகாரமாகிறது. அந்த நோய்வாய்ப்பட்ட அல்லது செத்த மீன்களைப் பார்க்கையில் அவன் துடிதுடித்துப்போகிறான். இன்றைக்கும் வெறுங் கையராய் வீடு திரும்புவதை நினைத்து புலம்புகிறான். விரக்தியில் அந்தக் குப்பைகளை மீண்டும் கடலிலேயே உதறிவிடுகிறான். கரைக்கு வரும் போது வழியிலே கிடந்த காலி பிளாஸ்டிக் பாட்டிலை விரக்தியில் தன் காலால் எட்டி உதைக்கிறான். எங்கோ தூரத்தில் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த கருப்பன் அந்தப் பிளாஸ்டிக் பாட்டிலையும் சேகரித்துக்கொண்டு கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இரவு
அவர்களின் சிறிய குடிசை. ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து, இருட்டும் நிழலும் நிறைந்த ஓர் இறுக்கமான சூழலை உருவாக்குகிறது. தரையில் அமர்ந்திருக்கும் கவிதாவுக்கும் கண்ணனுக்கும் இடையில் ஒரு தட்டில் பழங்கஞ்சி மற்றும் சுட்ட சிறிய மீன்கள் இருக்கின்றன. கண்ணன் அதை கவிதாவிடம் நகர்த்தி, ‘குழந்தைக்காகவாவது சாப்பிடு’
என்கிறான். சோகத்திலும் சோர்விலும் உடல்நலக்குறைப்பாட்டிலும் இருந்த கவிதா இருமிக்கொண்டே தட்டிலிருந்த சாதத்தை எடுத்து அவனுக்குப் பரிமாறி தானும் சாப்பிடுகிறாள். இருவரும் கஞ்சியைக் குடிக்கும்போது இடையிடையே அங்கிருந்த மீன்களையும் கடித்துக்கொள்கிறார்கள். அன்றைக்கு நடந்த கதைகளைப் பேசுகின்றார்கள். அவர்களிடையே அந்நியோன்யமும் அன்பும் உடல்நலக்குறைவிலும் வெளிப்படுகிறது.
இரவு
நேரம். அவர்கள் தூங்கியிருந்த வேளையில் ஒரு மூர்க்கமான புயல் கிராமத்தைத் தாக்குகிறது. காற்று ஊளையிட, பேய்த்தனமான மழை பெய்கிறது. குடிசைக்குள் கவிதா பாயில் துடிக்கிறாள். அவள் பயந்து கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. ஒரு கூர்மையான, கொடுமையான வலி அவள் வயிற்றைத் தாக்க, அவள் உடல் நெளிகிறது. ஒரு மின்னல் வெட்டு அவளது பயம் நிறைந்த முகத்தை ஒளிரச் செய்கிறது. அதேநேரத்தில், கடற்கரையில் இராட்சத அலைகள் கரையை மோதுகின்றன. அவை நுரையை அல்ல, செத்த மீன்களையும், கரிய எண்ணெய் போன்ற கசடுகளையும் கக்குகின்றன.
குடிசைக்குள்
கவிதாவின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. காதைப் பிளக்கும் இடிச் சத்தத்துடன் எல்லாம் முடிந்து போகிறது. கடல் தன் கழிவுகளை இரத்தமாகச் சிந்த, கவிதா தன் உயிரை இரத்தமாகச் சிந்துகிறாள். கடலின் கரு கலைவதும், ஒரு பெண்ணின் கரு கலைவதும் ஒரே கணத்தில் நிகழ்கின்றன.
புயல்
ஓய்ந்த காலை. வானம் உணர்ச்சியற்ற சாம்பல் நிறத்தில் இருக்கிறது. கடற்கரை முழுவதும் குப்பைக் குவியல்கள் காட்சியளிக்கின்றன. பிளாஸ்டிக் வலைகள், தொழிற்சாலைக் கழிவுகள் என எங்குப் பார்த்தாலும்
அசுத்தம்.
தட்டியெழுப்பும்
அம்மாவின் கைபோலச் சூரிய ஒளி கவிதாவை எழுப்ப, அவள் தன் படுக்கையிலிருந்து எழுகிறாள். கடற்கரை நோக்கி நடந்த கவிதா, அந்தக் குப்பைகளுக்கு நடுவே வந்து நிற்கிறாள்.
அப்போது
அவள் கண்கள் எதையோ காண்கின்றன. குப்பைகளுக்குள் புதைந்திருந்த தன் குழந்தைப் பொம்மையை வெளியே எடுக்கிறாள். அது கறை படிந்து, ஒரு கை கிழிக்கப்பட்டுச் சிதைந்து கிடக்கிறது.
அது அவள் இழந்த குழந்தையின் சின்னமாகத் தோன்ற, அவள் உடைந்து போகிறாள். அவளது அழுகை, சத்தமற்ற, ஆழமான ஓலமாக அந்தக் கடற்கரையில் காற்றோடு காற்றாய் கரைகிறது.
டிஜிட்டல்
உலகம் மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும், அது அந்த வளர்ச்சிக்காகக் கொடுக்கக்கூடிய விலையென்பது மிகவே அதிகம். 2025-ஆம் ஆண்டில் இந்தியா 2.2 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மின்னணுக் கழிவு உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.
சாதாரணமான
கழிவுகளையே அப்புறப்படுத்துவதற்கும், அதனை மறுசுழற்சி செய்வதற்கும் நாம் திணறிக்கொண்டிருக்கும்போது,
இந்த மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
இந்தியாவின்
ஒட்டுமொத்த மின்னணுக் கழிவுகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வெறும் 65 நகரங்களில் இருந்து மட்டுமே உருவாகின்றன. 2017-18-ஆம் ஆண்டில் 0.71 மில்லியன் டன்னாக இருந்த இந்தக் கழிவுகள், தற்போது 150 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன என்று ‘தி இந்து’ பத்திரிகைச் செய்தி வெளியிட்டிருக்கிறது.
மின்னணுப்
பொருள்களின் பயன்பாடு இனி வரும் காலத்தில் இன்னும் அதிகமாகும் என்கின்ற நிலை வரும்போது, அதிகரிக்க இருக்கும் மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்ய சரியான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். இந்தியாவில் 322 பதிவு செய்யப்பட்ட முறையான மறுசுழற்சி மையங்கள் இருந்தபோதிலும், அவற்றால் மட்டும் பெருகிவரும் இந்தக் கழிவுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, முறையான மறுசுழற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அதில் பணிசெய்கின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும்.
டிஜிட்டல்
மயமாகும் இன்றைய உலகில் நாம் பெறும் வசதிகளுக்குப் பின்னால், ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பேரழிவு மறைந்திருக்கிறது. மின்னணுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாவிட்டால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய நகர்ப்புற நெருக்கடியாக மாறக்கூடும். அது மட்டுமல்லாமல், இக்கழிவுகளைச் சேகரிக்கும் சாமானிய மனிதர்கள், அவற்றைப் பிரித்தெடுக்கும் இரும்புப் பட்டறைத் தொழிலாளர்கள் போன்றோர் மிகவும் மோசமான உடல்நலக்கேட்டிற்குத் தள்ளப்படுகின்றனர்.
நிலையான
நீடித்த வளர்ச்சி (Sustainable Growth) என்பது,
வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல; அது சுற்றுச்சூழல் மற்றும் விளிம்பு நிலை மக்களின் சுகாதார வாழ்வைப் பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும்.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, எதிரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில், தில்லி நாடாளுமன்ற அமர்வு கண்முன்னே காட்சி தருகின்றது.
நாம்
வாழும் காலத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கம் பற்றிய விவாதம் (Debute) நடந்த போதும்,
அரசமைப்புச் சட்ட வரைவு நீண்ட பெரிய விவாதங்களுக்குப் பின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட போதும், வானொலி மூலம் கேட்டுப் பரவசம் கொண்டோர் பகிர்ந்ததைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு.
இன்று
உலக நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் வீட்டின் அறைகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அரசமைப்புச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது மகிழ்வுள்ளதாகக் கூறியவர்கள் இன்று இல்லை; ஆனால், எந்த அரசமைப்புச் சட்டம் உலகின் சனநாயக நாடுகள் தோற்றுவித்த அரசமைப்புச் சட்டங்களுள் மேன்மைமிக்கது என்று பெருமைப்பட்டுக் கொண்டோமோ, அந்த அரசமைப்புச் சட்டம் நம் கண்முன்னே பெரும்பான்மைவாத அரசு ஒன்றினால் சிதைக்கப்படுவதைக் கண்முன்னே காணும் கெடுவாய்ப்பு நமக்குக் கிட்டியுள்ளது.
ஏனிந்த அவசரம்?
தமிழ்நாடு,
வங்காளத்தில் வேகமெடுத்துள்ள தேர்தல் களேபரங்களூடே, இவ்வளவு வேகமாகத் தொகுதி வரையறை மசோதா அறிமுகப்படுத்த வேண்டுவதன் அவசியம் என்ன?
ஆர்.எஸ்.எஸ். எனும் மூல அமைப்பு முன்னெடுத்த கொள்கைகள், சித்தாந்தங்கள்
பல இந்தியத் தேசியத் தலைவர்களின் சித்தாந்தத் திற்கு எதிரானவை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலக்கொள்கைகளை இந்திய தேசிய தலைவர்கள் சாத்தியமற்றவை என்று மட்டுமில்லாமல், அரசியல் அறத்திற்கும், மாந்தர்தம் சமாதான வாழ்விற்கும் எதிரானதென்றே கருதினர். மக்களை மதவாத ரீதியில் பிரித்து, மத அடிப்படைவாத அரசொன்றினை
நிறுவும் முயற்சி சனநாயக, சமயச் சார்பற்ற அரசின் கொள்கைகளால் சிதைந்துபோகும் என்று நம்பினர். நம்பிக்கையில் தவறில்லை; ஆனால், நம்பிக்கையில் நடைமுறை சாத்தியம் இல்லையே!
இன்று,
ஒரு மதவாதக் கட்சி தானே என்று ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டு வருகின்றது. இப்பிரிவினை அமைப்புப் பேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்துமே சாத்தியமற்றவை என்று உறுதியாக நம்பிவந்த நிலையில், பாரதிய சனதா கட்சிக்கும், அதன் பொறுப்பிலிருக்கும் அரசிற்கும் எல்லாம் சாத்தியமே. எல்லாமே சாத்தியமாயிற்று. இன்றுவரை இவர்களால் சாத்தியமாகாதது எதுவுமில்லை.
இந்து தேசமும்
சாத்தியமே!
இன்றைய
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் (16.01.2026) ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த இந்து மதக்குரு திரேந்திர கிருட்டிண சாஸ்திரி. இவர் நடத்தும் அமைப்பின் பெயர் ‘பகேஷ்வர் டாம்’
(Bageshwar Dham). இந்த மதரீதியான அமைப்பிற்கு இந்திய உள்துறை அமைப்பு வெளிநாட்டு நிதி உதவியைப் (FCRA) பெறுவதற்கான பதிவை
(registration) வழங்கியுள்ளதாம்!
இந்த
மதக்குருவின் முக்கியக் கொள்கை என்ன தெரியுமா? இவர் இந்து இராஷ்டிராவை நிர்ணயிப்பதில் உறுதியாக உள்ளாராம்! இந்தியாவில் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, மக்களுக்காகச் செயல்படும் நியாயமான அமைப்புகளின் உரிமங்கள் பறிக்கப்பட்ட நிலையில், இந்து இராஷ்டிரத்தைக் கட்டமைக்கவிருக்கும் ஒரு மதத் தீவிரவாத அமைப்பிற்கு இந்திய அரசு அந்நிய நிதிபெற அனுமதிக்கிறது. இது என்ன வேடிக்கை! இவ்வளவு அப்பட்டமாகத் தன் உள்ளடக்கத்தை வெளிக்காட்டி வரும் இந்துத்துவர்களின் இறுதி இலக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது.
கொள்கைத் தெளிவு
எப்போது?
ஒன்றிய
பா.ச.க. அரசின்
மாநிலச் சுயாட்சி பற்றிய நடைமுறைகளை, கூட்டாட்சியை மதிக்காமையை, நிதிப் பங்கீட்டில் காட்டப்பெறும் பாகுபாட்டை... இன்னும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு
அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதையும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஒன்றிய அரசிற்கு எதிரான பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் பாக்கிறோம். தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இந்த எதிர்ப்பை நாம் மதிக்கிறோம்.
ஒன்றிய
அரசு திட்டமிட்ட வலுவான கொள்கையுடையது. அவ்வரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்கெனவே வகுக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியலின் சாயல் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசின் மாநில அரசுகள்மீது காட்டப்பெறும் பாகுபாட்டரசியலின் முழுமையான அரசியலை நாம் புரிந்துகொள்ள முனையவேண்டும். இன்றைய ஒன்றிய அரசின் அடிப்படையே சனநாயக மறுப்பு என்பதுதான்! சனநாயகம் குடிமக்களின் மாண்பை மதிப்பது, அதிகாரக் குவியலை மறுப்பது, அதிகாரப் பரவலை ஊக்குவிப்பது. இந்துத்துவம் ‘ஒற்றை’யை நம்புவது, ஓர்மை
மூலம் ஒருமைப்பாட்டைத் திணித்து ஒற்றுமையை உருவாக்க நினைப்பது. இந்துத்துவத்தின் ஒற்றை அரசியலில் மொழிவாரி மாநிலங்கள் என்பதோ, மொழிவழி மாநிலங்கள் (State) உருவானது என்பதோ
இவர்களின் கொள்கைத் திட்டத்தில் இல்லை.
பாரதிய
சனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி, ‘இந்த நாட்டின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் தலைமையில் அமையவேண்டும்; அமெரிக்க ஐக்கிய நாட்டினைப் போல் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்று
ஓயாமல் பரப்புரை செய்து வந்தார். ஒரு தலைவரை, குடியரசுத் தலைவரை முன்மொழிதலின் அரசியல் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சமயம்’ என்ற முழக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவர் யாரால், எந்தக் கூட்டத்தால் தெரிவு செய்யப்பட்டவராக இருப்பார்?
ஏற்கெனவே
கூறியது போன்று இந்துத்துவம் இந்தியாவைப் பல மாநிலங்களாகப் பிரித்தமையையும்,
அதுவும் மாநிலங்கள் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டமையையும் ஒற்றை இந்தியக் கொள்கைக்கு எதிரானது என்றும், இந்திய ஒருமைக்கு எதிரான நடவடிக்கை என்றும், இப்பிரிவுதான் இந்தியாவின் பல பகுதிகளில் பிரிவினை
முழக்கத்திற்கு வழிவகுத்தது எனவும் பேசி வந்தனர் என்பதை இவர்களின் கொள்கை ஏடுகள் மூலம் அறியமுடியும்.
“இந்தியக் கூட்டாட்சி
முறையை
மாற்றி
ஒற்றை
மய
அரசை
(Unitary type of govt) உருவாக்கத் துணிச்சலோடு
முடிவெடுக்க
வேண்டும்.
இந்த
நாடு
ஒன்று;
இந்நாட்டின்
மக்கள்
ஒன்று!
எனவே,
நமக்கு
வேண்டுவது
ஒரே
வகையான
அரசாங்கமே.
நிர்வாக
வசதிக்காக
இந்நாட்டினைப்
பல்வேறு
மண்டலங்களாகத்
(Zone) தேவையாயின் பிரித்துக்கொள்ளலாம்.
இம்மண்டலங்கள்
குறைந்த
அளவுகளில்
அல்லது
எண்ணிக்கையிலும்
அமையலாம்.
இதற்கேற்ப
அரசமைப்பில்
மாற்றம்
கொண்டு
வரலாம்.”
“மாநில அளவிலான
நிர்வாக
முறைகள்
அல்லது
பகிர்வுகள்
சனநாயக
நடைமுறைக்கு
உகந்தது
என்று
சிலர்
வாதிடுவது
எனக்குப்
புரியவில்லை.
சனநாயகத்திற்கும்,
பல்வேறு
சட்டமன்றங்களுக்கும்
என்ன
தொடர்பு
இருக்கிறது
என்று
எனக்குப்
புரியவில்லை.
மத்தியில்
அமையும்
ஒரே
அதிகார
மையம்
(Legislature) மட்டுமே போதும்.
பல
மொழிகளைக்
கொண்ட
ஒரு
மாநிலம்,
ஒரே
மொழியைக்
கொண்ட
பல
மாநிலங்கள்
அமைவதில்
தவறில்லை”.
எஸ். கோல்வாக்கர்,
‘Punch of thought’ பக்.
250, 251.
இன்று
இந்திய அரசு முன்னெடுக்கும் தொகுதி வரையறையை மாநிலச் சுயாட்சி என்ற அடிப்படையிலும், தென்னகம் - வட இந்தியா என்ற
அடிப்படையிலும் பார்க்கின்ற பார்வையில் உண்மை இருக்கலாம். ஆனால், இன்றைய ஒன்றிய அரசினை வழிநடத்தும் ‘ஒற்றை’ எனும் சனநாயக அவமதிப்புக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவின்
பெருவாரி மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இன்றைய ஆளும் அரசு, வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெரும்பான்மை (Majority) அல்ல; கருத்தியல் ரீதியாகவும் ஒருவகையால்
மழுங்கடிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் இக்கட்சியைச் சார்ந்த தீவிர உறுப்பினர்கள் மட்டுமல்லர்; அதிகாரப் பசியில் தம்மை இழந்தோரும் உள்ளனர்.
தமிழ்நாடு,
தமிழர் மாண்பு, கூட்டாட்சி மறுப்பு என்ற பெயரில் தொகுதி வரையறைக்கு எதிராகப் பெரிய போராட்டம் ஒன்றினை தமிழ்நாடு முன்னெடுத்து வருகையில், இதனை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கும் முயற்சியில் மேனாள் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய உள்துறை அமைச்சரிடம் பேசியதாகவும், தமிழ்நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லையெனவும் கூறியதாகப் பேசி நிறைவு கொள்ளும் மனிதர்களை என்னவென்பது?
சரியான தருணம்
கண்ணில்
தெரியும் இந்து தேசம் எப்படியிருக்கும்? என்பதற்கான அடையாளம் இன்றைய ஒன்றிய அரசின் துரித நடவடிக்கை.
தமிழ்நாடு
காட்டும் எதிர்ப்பு, பாராட்டப் பெறவேண்டிய ஒன்று. குடிமக்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய ஒன்று. இப்பிரச்சினையை ஒரு தேர்தல்காலப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், இந்துத்துவர்கள் முன்னெடுக்கும் இந்து தேசக் கட்டமைப்புக்கான தொடக்கப்பணி என்பதை நினைவில் கொள்வோம்.
இந்துத்துவர்களும்,
இந்துத்துவக் கருத்தியலாளரும் தேவைக்கேற்ப பயப்படுவதுபோலக் காட்டிக்கொள்வர் அல்லது தற்காலிகமாகப் பின்வாங்குவர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவுநர் டாக்டர் ஹெட்கேவரும், தொடர்ந்து வந்த குருஜி கோல்வாக்கரும் சிந்தையில் மொழிந்த எதனையும் இவர்தம் கொள்கையைக் காக்க உருவான இந்திய ஒன்றிய அரசும், அதன் ஏவல் நிறுவனங்களும் வழுவாமல் காத்து நிற்கும் என்பதே உண்மை.