news
சிறப்புக்கட்டுரை
யார் இந்தப் புனிதை? (தூய குழந்தை இயேசுவின் தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா)

1873-இல் பிறந்து, 15 வயதில் கார்மேல் துறவற சபையில் நுழைந்து, 9 ஆண்டுகள் மட்டுமே துறவியாக வாழ்ந்து, 24 வயதிலே 1897-இல் இறைவனடி சென்ற இளங்கன்னி, சிறுமலர், சின்ன ராணி! பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் பாசமழையில் நனைந்து, அன்பிலே குளித்து, இறை ஒன்றிப்பில் இணைத்துக்கொண்ட குழந்தை இயேசுவின் மற்றும் திருமுகத்தின் தெரேசா!

லூயிஸ்-செலியே இவர்களின் புதல்வியாய் உதித்து, தன் புனிதத்தின் வழியாகத் தன் பெற்றோரையே தூயவர்களாக்கிக் குடும்பத்தையே புனிதமாக்கிய  இதய ராணி! தன் மறைந்த தியான வாழ்வால் உலகிற்கே நற்செய்தி அறிவித்து மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியாகி, தன் சிறுவழி ஆன்மிகத்தால்திரு அவையின் மறை வல்லுநர்என்று திரு அவையின் இதயமாக உலகம் போற்றும் நாயகி!

இவர் ஒரு கார்மேல் துறவி. பிரான்ஸ் நாட்டிலே லிசியு நகர் கார்மேல் மடத்தில் வாழ்ந்தவர். தூய தெரேசாவின் பிறப்பின் 150-ஆம் ஆண்டு (2023), அருளாளர் பட்ட 100-ஆம் ஆண்டு (2023) மற்றும் புனிதர் பட்ட 100-ஆம் ஆண்டு (2025) என உலகம் முழுவதும் கார்மேல் துறவற சபைகள் இணைந்து அகமகிழ்ந்து கொண்டாடுகின்றன.

பிறப்பு: ஜனவரி 2, 1873

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 29, 1923

புனிதர் பட்டம்: மே 17, 1925

அகில உலகக் கார்மேல் துறவற சபைகள் கடந்த மூன்று வருடங்களாகக் கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் இதர நிகழ்வுகள் வழியாக, தூய தெரேசாவின் ஆன்மிகத்தைச் சிறப்பான விதத்தில் பறைசாற்றக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

இந்தியக் கார்மேல் குடும்பமும் நம் இந்திய நாட்டில் பல இடங்களில் கொண்டாடி மகிழ்கின்றது. வடக்கு, தெற்கு என்று இந்தியாவின் இரு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதன் சிறப்பம்சம் கார்மேலின் துறவற சபைகள் ஒன்றாக இணைந்து ஒரே குடும்பமாகக் கொண்டாடிச் சான்றுபகர்தலாகும்.

தமிழ்நாட்டிலுள்ள கார்மேல் துறவற சபைகள்

Order of Discalced Carmelites (OCD)

Discalced Carmelites Nuns (OCD)

Congregation of Teresian Carmelites (CTC)

Congregation of the Mother of Carmel (CMC)

Carmelites of Mary Immaculate (CMI)

Carmelite Sisters of St. Teresa (CSST)

Apostolic Carmel (AC)

Institute of Our Lady of Carmel, Istituto di Nostra Signora del Carmelo (INSC)

Secular Order of Discalced Carmelites (OCDS)

தமிழ்நாட்டிலும் கார்மேலின் துறவற சபைகள் அனைத்தும் ஒன்றுகூடி, இணைந்து திட்டமிட்டு இந்த நூற்றாண்டு விழாவை, தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் கொண்டாடுகிறோம். புனிதம் அனைவருக்கும் சொந்தம். அன்பு ஒன்றே வாழ்வாக வேண்டும், பணியாக வேண்டும். தூயவராகிவிடலாம்; சிறிய செயல்கள் வழியாகப் பெரிய நிலையை அடைந்து விடலாம் என்பதே சிறுமலரின் சிறுவழியின் சிறப்புச் செய்தியாகும்.

குழந்தை இயேசுவின் தூய தெரேசாவைக் கொண்டாடுவோம்! புகழ்வோம்!!

news
சிறப்புக்கட்டுரை
ஒரு100000 அப்பு... ஒரு100000 (கண்டனையோ, கேட்டனையோ! - 37)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ground-breaking encycli cal’ - ‘Laudato si’ திருமடல் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவுபெறுவதைக் கொண்டாடும் வகையில், நான் தற்போது முதன்மை ஆசிரியராகப் பணிபுரியும் ‘Radio Veritas Asia’ என்கிற ஆசியக் கத்தோலிக்க டிஜிட்டல் தளம், ஒரு மாபெரும் குறும்படப் போட்டியை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசரத்தை ஆசிய மக்கள் எல்லாரும், குறிப்பாக, ஆசிய இளைஞர்கள் உணரவேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கம்.

பருவநிலை ஏற்கெனவே டாஸ்மாக்கின்அன்பான வாடிக்கையாளர் பெருமக்கள்போல தடுமாறுவதைப் பார்க்கிறோம். டிசம்பரில் வெயில் கொளுத்துகிறது. பையன்கள்கிறிஸ்மஸ் தாத்தா டிரஸ் போடமாட்டேன்என்று தகராறு செய்கிறார்கள். மே மாதத்தில் வெள்ளம் வந்து, விவசாயிகளின் திட்டங்களைக் கலைத்துப் போடுகிறது. நான் முன்பு இருந்த பங்கில் ஒரு பாட்டி, “இந்த வானத்துக்குப் புத்தி கெட்டுப்போச்சு. அவ்வளவுதான் நான் சொல்வேன்என்பார். ஒரு காலத்தில் வெறும் கணிப்பாக இருந்த சூழ்நிலைப் பேராபத்துகள் இன்று ஏறக்குறைய நம் வீட்டு வாசற்படிக்கே வந்துவிட்டன.

Time is ticking! நான்கூட நினைத்திருக்கிறேன்எப்படியும் இதுபோல பெரிய விஷயங்கள் நடப்பதற்கு முன், நம் காலம் முடிந்துவிடும்என்று. அதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “We’re the first generation to feel the impact of climate change, and the last generation that can do something about it...” என்று கூறியது மிகப்பெரிய உண்மை! பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை நேரடியாக உணர்கிற முதல் தலைமுறை நாம். அதே சமயம், அது குறித்து ஏதாவது முயற்சி எடுத்து, சரிசெய்யக்கூடிய கடைசி தலைமுறையும் நாம்தான். Now or never! நாம் ஏதும் செய்யவில்லை என்றால், உலகைக் காப்பாற்ற மற்றொரு தலைமுறை இங்கே இருக்காது. ‘Point of no return’ என்று கூறுவார்கள். அதை நோக்கி உலகம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழலைக் குறித்துத் தொடர்ந்து பேசி, எழுதி, அதன் மேல் உலக மக்களின் கவனத்தைக் குவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கடைசிவரை  அவருடைய ஆட்சிக்காலத்தின் முதன்மை அக்கறைகளின் ஒன்றாகச் சுற்றுச்சூழல் இருந்தது.

2015-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘Laudato si’ ஒரு முக்கியச் சுற்றுச்சூழல் ஆவணம். இந்த அளவிற்கு உலகின்மீது தாக்கம் செலுத்திய அண்மைக்காலத் திருமடல் வேறு எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். திருமடல்கள் பொதுவாகக் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு எழுதப்படும். ஆனால், Laudato si’ பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரை நோக்கியும் உரையாடல் நிகழ்த்தியது. பூமியை ‘Our Common Home’ - அதாவது, நம் எல்லாருக்கும் ஆன பொதுவீடு என்று அழைத்து, அதன் நலத்தின்மீது அக்கறை கொண்ட எல்லாரையும் பிரான்சிஸ் வண்டியில் ஏற்றினார். ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் இம்மடலைக் குறித்து விவாதித்தார்கள். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரான்சிஸின் மடல் மேற்கோள் காட்டப்பட்டது. பிரதமர்கள், அதிபர்கள், .நா. நிறுவன அதிகாரிகள் இம்மடலின் வார்த்தைகளைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டார்கள். துயருறும் கிரகத்திற்காக எழுப்பப்பட்ட ஓர் அறத்தின் குரலாக ‘Laudato si’  ஒலித்தது.

திரு அவை வரலாற்றிலேயே ஒரு திருமடல் இயக்கமாக உருவெடுத்த அதிசயம் இம்மடலில்தான் நிகழ்ந்தது. இன்று உலகம் முழுவதும் தன்னார்வலர்களையும் செயல்பாட்டாளர்களையும் கொண்டு கிளை விரித்துள்ள Laudato si Movement பிரான்சிஸின் கனவுகளைத் திட்டங்களாகவும், சாத்தியமான செயல்பாடுகளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘Laudato si’ மடலின் பத்தாம் ஆண்டு விழா, உலகளாவியத் திரு அவையில் பல வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் அறிவுறுத்தல்படி ‘Radio Veritas Asia’ நிறுவனம் சார்பாக பல திட்டங்களை இந்த வருடம் முன்னெடுத்துள்ளோம். அதில் ஒன்று இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட குறும்படப் போட்டி!

போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தலைப்பு: ‘ஆசியக் கண்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு - நம் பொது வீடு பூமியைக் காப்பாற்ற ‘Laudato si’ கற்பிக்கும் பாடங்களை எப்படிச் செயலாக்குவது?’

யார் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்?

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சமயம், நாடு, வயது போன்ற எந்தத் தடையும் இல்லை. தனிப்பட்ட நபர்கள், அமைப்புகள் இரண்டிற்கும் அனுமதி உண்டு. மாணவர்கள், சமூகத் தொடர்பு பணிக்குழுக்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், கன்னியர் இல்லங்கள், துறவற சபைகள், பக்த அமைப்புகள், இயக்கங்கள், பயிற்சி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள்... சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஒரு காமிராவும் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கதையும் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். உங்கள் குறும்படம் ஆசியக் கண்ட சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

ஆங்கிலத்தில் அனுப்பினால் உத்தமம். பிற மொழிகளுக்கும் அனுமதி உண்டு. உரையாடல் மற்றும் விவரிப்பிற்கு, ஆங்கில subtitle-கள் கொடுக்க வேண்டும்.

நீளம்: 3 இலிருந்து 5 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். இது தீவிரமாக அமுல்படுத்தப்படும். (முழுநீள வண்ணக் காவியங்களை அனுப்ப வேண்டாம்).

ஒரு நபர், ஓர் அமைப்பு, ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

படைப்பு எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10 நவம்பர், இரவு மணி 11.59 (பிலிப்பைன்ஸ் நேரம்). இந்தியாவைவிட, பிலிப்பைன்ஸ் இரண்டரை மணி நேரம் முன்னதாகச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Google Form வழியாகப் போட்டியில் பங்கேற்பைப் பதிவு செய்யவும், படைப்புகளை அனுப்ப...... https://forms.gle/sLkjEKJjkbdwQkZK9 என்ற இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்.

போட்டி பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விதிகளைத் தெரிந்துகொள்ள https://www.rvasia.org/laudato-si-film-making-contest என்ற கொழுவியை அணுகவும்.

இதில் நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது பரிசுத் தொகையை!

முதல் பரிசு: USD 1000 அமெரிக்க டாலர்கள். (இந்திய ரூபாயில் இதன் இன்றைய மதிப்பு ரூ. 88,143/- ஏறக்குறைய ஒரு இலட்சம்). ஒரு இலட்சம் அப்பு... ஒரு இலட்சம்!

இரண்டாவது பரிசு: USD 800 அமெரிக்க டாலர்கள்.

மூன்றாவது பரிசு: USD 500 அமெரிக்க டாலர்கள்.

இது தவிர பத்து சிறப்புப் படைப்புகளுக்கு USD 100 அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பத்து ஆறுதல் பரிசுகள் (மீதம் எல்லாருக்கும் வெறும் ஆறுதல் மட்டும் தரப்படும்).

ஆசியக் கண்ட வரலாற்றிலேயே ஒரு குறும்படப் போட்டிக்கு இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று சில நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைய பேர் இப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு அவசரம் ஆசிய இளைஞர்கள் நடுவில் ஒரு பேசு பொருளாக, அக்கறையாக மாறவேண்டும் என்பதே ‘Radio Veritas Asia’நிறுவனத்தின் ஆசை.

விருப்பமும் திறமையும் உள்ளநம் வாழ்வுவாசகர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மற்றவர்களுக்கும் இது குறித்த செய்தியைப் பகிருங்கள்.

news
சிறப்புக்கட்டுரை
படைப்பைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது கடமை! (செப்டம்பர் 21 இயற்கை ஞாயிறு)

இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவன் அதனைப் பேணிப்பராமரிக்கவே மனிதர்களாகிய நம்மையும் படைத்தார். இயற்கையை நாம் செழிக்கவைத்தால், இயற்கை நம்மைச் செழிக்க வைக்கும். மாறாக, இயற்கையை நாம் அழிக்க நினைத்தால், இயற்கை நம்மை அழித்துவிடும். இவ் வையகம் அறிந்த உண்மை இது. கடவுள் படைத்த இப்பூமி அழகும் அன்பும் அருளும் நிறைந்தது. மரங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், கடல், விலங்குகள், பறவைகள் என அனைத்தும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதுமே நம் அனைவரின் கடமை.

நாம் வாழும் பூமி நம் பொது இல்லம்என்பது திருத்தந்தை பிரான்சிஸின் அமுத வார்த்தைகள். இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புரட்சியாலும் நாம் நம் பொதுவான இல்லமான பூமியை அளவுக்கு அதிகமாக அழித்து வருகின்றோம். காடுகள் கட்டுப்பாடின்றி அழிக்கப்படுகின்றன. நதிகளும் நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. பல்லுயிரிகள் விரைவாக அழிந்து வருகின்றன. இதனால் காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், வறட்சி, வெப்பம் போன்ற பல இடர்களை நாம் இன்று சந்திக்கின்றோம்.

இயற்கையை நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் நாளைப் படைப்பின் மீதுள்ள அக்கறைக்கான செப நாளாகத் திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது. திரு அவையும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான அழைப்பை நமக்குத் தருகிறது. படைப்பைப் பாதுகாப்பது என்பது நீதியின் ஒரு பகுதியும், நம் மனிதாபிமான கடமையுமாகும். திருத்தந்தை லியோ இதற்கான திருப்பலி மன்றாட்டு, வாசகங்களை அங்கீகரித்து அண்மையில் ஆணை வழங்கியுள்ளார். எல்லா இடங்களிலும் இதைப் பயன்படுத்தத் திருவழிபாடு அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் நம்மைப் பணிக்கிறது. இது ஜூன் 8, 2025 தூய ஆவியார் பெருவிழா அன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஜூலை 9 அன்று படைப்பைப் பாதுகாத்தலுக்கான முதல் திருப்பலியைத் திருத்தந்தை லியோ உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில் நிறைவேற்றினார். அவர் தனது மறையுரையில், இயேசுவே திரு அவையின் படைப்பாளர் மற்றும் தலைவர் என்பதையும், படைப்பைப் பராமரிப்பதும் அமைதியை மேம்படுத்துவதும் ஒரு பகிரப்பட்ட பணி என்பதையும் நமக்கு நினைவூட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுச் சூழல் பற்றியக் கரிசனையும் ஆன்மிகமும் அடங்கியஇறைவா உமக்கே புகழ்(Laudato si) என்னும் திருத்தூது மடலின் பத்தாம் ஆண்டிலே படைப்பைப் பாதுகாத்தலுக்கான திருப்பலியை அங்கீகரித் திருப்பது இப்பூமியைப் பேணுகின்ற நம் பணிகளுக்குத் திரு அவை கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

இறுதியாக, படைப்புடன் இணக்கமாக வாழ்வதையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளைச் சரி செய்வதற்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நம் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் ஞாயிறன்று படைப்பைப் பாதுகாத்தல் திருப்பலியைக் (இயற்கை ஞாயிறைக்) கொண்டாட அழைப்புவிடுக்கின்றது. எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று இயற்கை ஞாயிறை நாம் சிறப்பிக்கின்றோம்.

பூமியைப் பாதிக்கும் மனிதர்களின் பேராசை, சுரண்டல், மாசுபாடு ஆகியவை களையப்பட வேண்டும். இயற்கையின் அழுகை கடவுளின் அழுகை என்பதை உணர்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க இயற்கையைப் போற்றி வணங்கி, பாதுகாத்து, பராமரித்து வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
அன்னையின் உதவி யாருக்கு?

தொங்கும் தோட்டம்

எங்கும் தோட்டம்

ஏதேன் தோட்டம்

ஏமாந்த தோட்டம்

அந்தத் தோட்டத்தின் நடுவே

அழகிய பழமரங்கள்

அந்த மரங்கள் நீரால்

வேர் வாழ்கிறது;

வேரால் மரம் வாழ்கிறது;

மரத்தால் கிளை வாழ்கிறது;

கிளையால் பூ வாழ்கிறது; பூவால் காய் வாழ்கிறது;

காயால் கனி வாழ்கிறது.

அந்தக் கனியால் வாழ்வுபோனது!

போன வாழ்வைப் பெற்று தந்தவர்தான் மரியா என்ற பெண். அவர்தான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டு இயேசுவின் தாயாக, ஏன் மனுக்குலத்தின் தாயாக, காலமெல்லாம் காத்து நிற்கும் செபமாலைத் தாயாக, செயம் தரும் தாயாக, வெற்றித் திலகமிட்டு நம்மிடம் வருவோரை வரவேற்கும் செபமாலைத் தாயாக, கருமுத்தான் நகரில் குடி கொண்டுள்ளார். கடைகோடி மக்களையும் கைவிடப்பட்டவர்களையும் கரைசேர்க்கும் தாயாக இருகரம் நீட்டி வாஞ்சையுடன் வரவேற்கும் அந்தத் தாயின் அன்பை, ஆசிரைப் பெற்றிட வாருங்கள்.

ஏதேன் தோட்டத்தில் அறிமுகமான மரியா 1595-இல் கொங்குத் தோட்டத்தில் செபமாலை அன்னையாக வலம்வர, மதுரை மறைப் பணித்தளத்தில் பணி செய்த தெ நோபிலி அடிகளாரின் பெரும் முயற்சியால் தந்தை பல்தசார் வழியாக உருவானது என்பது வரலாறு. அன்று முதல் இன்றுவரை அன்னையின் புகழ் அகிலமெங்கும் பரவியதன் விளைவாக இன்று பசிலிக்காவாக உயர்ந்துள்ளது.

அரசியின் ஆட்சி: அன்னை மரியாவை வீரமாமுனிவர்மழையானவளாய், பேரன்பு பொருந்தியவளாய், வருத்தத்தை ஒழிக்கும் மகிழ்ச்சியானவளாய், ஞானமாகிய நிறை ஒளியானவளாய், மகிழ்ச்சி பொங்கும் தாவீது அரசரின் மாளிகையானவளாய், நீர் வற்றாத கடலானவளாய், துன்ப இருள் போக்கும் பிறை நிலவாய், செபமாலையைச் செங்கரத்தில் ஏந்தி நம் தாய், நம் அனைவரின் அரசியாய் இருந்து ஆட்சி செய்கிறார்என்கிறார்.

மரியாவின் உதவி யாருக்கு? மரியாவின் உதவி மனிதருக்குத்தானே என்று சொல்வார்கள். உண்மையில் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுளுக்குத்தான் முதலில் தேவைப்பட்டது. “விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவளத்தை நிறைவேற்றுபவரை என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் (மத் 12:50) எனும் இயேசுவின் இறைவார்த்தையை இதயத்தில் சுமந்த என்னை மரியா கடவுளுக்கே முதல் உதவி செய்தார். மேலும், விண்ணகத்திற்கும் உதவி செய்கிறார்கள். “உன் சொற்படியே எனக்கு ஆகட்டும்என்று கூறிய அந்த நிமிடம் முதல் மரியாவின் பணிவாழ்வு தொடங்கியது எனலாம். இந்த நிகழ்வின் வழியாக உலகம் மீட்படையத் தொடங்கியது. மரியாவைப்போல் இறைவிருப்பம் அறிந்து செயல்படும்போது நாமும் மீட்புப் பணியில் பங்குப் பெறுகின்றோம் என்பதை உணர்ந்திடுவோம். தந்தை, மகன், தூய ஆவியின் குடும்பத்திற்குத் துணை நின்று பொறுப்பேற்று வாழ்ந்தவர்தான் மரியா. எனவே, கடவுளுக்கு முதற்பணியாக மரியாவின் வாழ்வு அமைந்தது.

மரியாவின் பிறர்நல பணிகள்: அன்னை மரியாவின் பிறரன்புப் பணிகள் கானாவூர் திருமண நிகழ்வில் காணமுடிகிறது. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா 2:5)  என்றார்கள். நாமும் அவர் சொல்வதை எல்லாம் செய்யும்போது மரியாவின் பிள்ளைகள் ஆகிறோம், அன்னை மரியா கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும், இயேசுவின் இறப்பின்போதும் உதவிக்கரம் நீட்டுகிறார். அதனால்தான், மரியாவை நமக்குத் தாயாகத் தந்தார். இறையருளால் மகிழும் அன்பு பொருந்திய பக்தர்களை விண்ணகம் சேர்க்கக் காத்து நிற்கும் செபமாலை அன்னை அவரே. நமக்காகத் தம் மகனிடம் பரிந்து பேசி, விண்ணக வாழ்வைப் பெற்றுத் தருகின்றவராக இருக்கின்றார்.

ஆகவே, அன்னையிடம் செல்வோம்; அவர் வழி நடப்போம்; விண்ணக வாழ்வைப் பரிசாகப் பெறுவோம். மரியே வாழ்க!

news
சிறப்புக்கட்டுரை
செபமாலையின் முக்கியத்துவம்!

தூய ஆவியால் நிரப்பப்பெற்று மரியன்னையின் அனுமதி பெற்ற சாமிநாதர், அது முதல் செபமாலையின் மேன்மை பற்றி மக்கள் மனங்களில் தனது போதனையின் மூலம் ஆழமாக வலியுறுத்தி வந்தார். தினமும் செபமாலை செபித்தார். செபமாலைதான் அவரது போதனையின் முன் ஆயத்தமாகவும், முடிந்தபின் அன்னையுடன் உரையாடுவதாகவும் இருந்தது.

ஒருநாள் அவர் பாரீஸ் பட்டணத்தில் உள்ள மாதாவின் பேராலயத்தில் போதிக்க வேண்டியிருந்தது. அன்று நற்செய்தியாளரான புனித யோவானின் திருநாள். சாமிநாதர் அவ்வாலயத்தில் பெரிய பீடத்தின் பின்னால் உள்ள சிற்றாலயத்தில் உருக்கமுடன் செபமாலை செபித்து ஆயத்தம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது அன்னை அவருக்குத் தோன்றி, “மகனே சாமிநாதா! நீ சொல்ல நினைத்திருக்கும் செய்தி நல்லதுதான். ஆயினும், அதைவிட சிறந்த செய்தி ஒன்றை உனக்கு நான் தருகிறேன்என்றார். அப்போது அன்னை கொண்டு வந்திருந்த புத்தகத்தை, சாமிநாதர் கரத்தில் வழங்கினார். சாமிநாதர் அதைக் கவனமுடன் வாசித்தார்; பின் அதைத் தியானித்தார்; அன்னைக்கு நன்றி கூறினார். ஆலயத்தில் வேத சரித்திர வல்லுநர்களும், மேல்நிலைச் சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். சாமிநாதர் பிரசங்க மேடையில் ஏறி, “யோவான் விண்ணக அரசியான மரியன்னையின் காப்பாளராக இருக்கும் தகுதி பெற்றார்என்று மட்டுமே கூறினார். மேலும்,  “ஞானமும் அறிவும் மிகுந்த அறிவுரைகளை நான் இப்போது போதிக்க வரவில்லை. தூய ஆவியின் சக்தி கொண்டு அவரது எளிமையில் பேசப்போகிறேன்என்று கூறினார்.

உயர்குல மக்களே, அறிவில் சிறந்தவர்களே, அறிவுமிக்க சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு நீங்கள் பழக்கப்பட்டு இருக்கிறீர்கள். மனித அறிவின்படி மொழிகளில் பேசி வந்த நான், இன்று அப்படிப் பேச விரும்பவில்லை. மாறாக, கடவுளின் தூய ஆவியையும், அவரது பெருமைகளையும் எளிமையான முறையில் பேசவே விரும்புகிறேன்என்று கூறினார். சாமிநாதர் சம்மனசு கூறிய மங்கள வார்த்தை செபத்தை உதாரணங்களுடன் அன்றாட வாழ்வில் காணப்படும் நிகழ்வுகளைக் கொண்டு விளக்கினார்.

பாவிகளையும் மூடநம்பிக்கை கொண்டோரையும் மனம் திருப்பவும், பாவத்தை அழிக்கவும் ஏதுவாக செபமாலையின் மேன்மையை எடுத்துச் சொல்- இப்படி அன்னையும் நமது இறைவனும் சாமிநாதருக்குப் பலமுறை தோன்றிக் கூறியதாக முத் ஆலன் குறிப்பிடுகின்றார்.

சாமிநாதர் தேவ அன்னையின் காட்சியைப் பெற்ற பின் இயேசுவும் அவருக்குக் காட்சியளித்தார். அப்போது இயேசு, சாமிநாதரிடம், “சாமிநாதா, நீ மனிதரின் புகழ்ச்சியைத் தேடாமலும், உன் பலத்தில் செருக்குறாமலும், ஆன்மாக்களின் மீட்புக்காக மிகுந்த தாழ்ச்சியுடன் உழைப்பது குறித்து நான் மகிழ்கிறேன். ஆனால், பல குருக்கள் மனிதர்களின் கனமான பாவங்களை எடுத்து உடனேயே இடித்துப் பேசுகின்றனர். கசப்பு மருந்தை நோயாளிக்குக் கொடுக்கும் முன், அவனுக்கு அதனை ஏற்றுக் கொள்வதற்குரிய மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. குறிப்பாக, செபமாலை செபத்தின்மீது மக்களுக்கு விருப்பத்தைக் குருக்கள் ஏற்படுத்த முயல வேண்டும். செபமாலை செபிக்கத் தொடங்கி, தொடர்ந்து செபித்து வருவார்களானால், இரக்கமுள்ள இறைவனாகிய நான் அவர்கள் கேட்கும் வரத்தை மறுக்க மாட்டேன். ஆகவே, நீ செபமாலையின் மேன்மையை எடுத்துரைக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்என்று கூறினார்.

ஒருமுறை அன்னை சாமிநாதரிடம், “என் அன்பு மகனே, உன் போதனைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று ஆதங்கப்படாதே. நீ மழை பெய்யாத நிலத்தில் விவசாயம் செய்ய முயல்கிறாய். எல்லாம் வல்ல இறைவன் இப்பூமியைப் புதுப்பிக்க திட்டமிட்டபோது முதலில் மோட்சத்திலிருந்து மழையை அனுப்பினார். வானதூதரின் மங்கள வார்த்தைதான் அந்த மழை. அதைக்கொண்டே இறைவன் உலகைப் புதுப்பித்தார். ஆகவே, நீ போதிக்கும்போது, மக்கள் செபமாலை செபம் செபிக்கும்படி தூண்டு. அப்படி நீ செய்தால், உன் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிகப்பலனைப் பெற்றுத் தரும்என்று கூறினார்.

அன்னையின் வேண்டுகோளை ஏற்று, உடனே அவர் அதனைச் செயலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மேற்கண்ட நிகழ்வுகள்செபமாலை புதுமைகள்என்ற இத்தாலிய நூலில் காணப்படுகின்றன. புனித சாமிநாதரின் வழிகாட்டுதலின்படி குருக்கள் செபமாலையின் மேன்மையை எடுத்துரைத்து வந்த காலகட்டத்தில், இறைமக்களின் உள்ளங்களில் பக்தியும் ஆன்மிக எழுச்சியும் செழித்து வளர்ந்தது. இதைக் கைவிட ஆரம்பித்த பின்னர்தான், பாவம் உலகைச் சூழ்ந்து நின்று நெருக்கியது.

 

news
சிறப்புக்கட்டுரை
கல்லறை மனிதர்கள்! (வலையும் வாழ்வும் – 28)

அந்தத் தனியார் கல்லறைத் தோட்டத்தில் செங்கல் சூளையில் புதிதாக அறுத்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களைப்போல வரிசையாகக் காணப்பட்டன கல்லறைகள். புதிதாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஒன்றில் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தது தந்தையை இழந்திருந்த அந்தக் குடும்பம்.

அடைமழைக்கிடையில் கேட்கும் பள்ளிவாசல் சத்தம்போல அந்த ஒப்பாரி அழுகைக்கு மத்தியில் எங்கிருந்தோ வந்த சிரிப்புச் சத்தம் அந்தக் குடும்பத்தினரை ஆத்திரமடையச் செய்தது. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அதன் சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ‘எங்கிருந்து சிரிப்புச் சத்தம் வருகிறது?’ என்று கூர்ந்து கவனிக்கும்போது, அங்குக் கல்லறைத் தோட்டத்தின் மூலையில் சில குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

யார் இவர்கள்? இங்கு இவர்களுக்கு என்ன வேலை? ‘அங்க என்ன பண்ணுறீங்க? ஏன் இவ்வளவு சத்தம்? இரண்டு பேரும் இங்க வாங்கஎன்ற தன் தாயின் குரல் கேட்டு இரண்டு குழந்தைகளும் தாயிடம் ஓடிவந்தன.

அந்தக் கல்லறைத் தோட்டத்தில் குடும்பம் ஒன்று கல்லறைப் பராமரிப்புப் பணிகளுக்காகப் பல ஆண்டுகளாக அங்கேயே தங்கவைக்கப்பட்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது, அந்நியர்கள் உள்ளே வராமல் பார்ப்பது போன்ற பணிகளைச் செய்து வந்தனர்.

அங்கு வாழ்ந்து வந்த ரவி மற்றும் கலா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் ரூபா, இளையவன் ரூபன். அங்கு ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு அடக்கங்கள் நடக்கின்றன. அழுகைகளும் கண்ணீரும் அங்கு அன்றாடக்காட்சிகள். யாருடைய துயரமும் இந்தக் குடும்பத்தை எப்போதும் துக்கப்படுத்தியதே இல்லை. யாருடைய கண்ணீரும் இவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. அங்கு யாருக்கும் இறப்பு பற்றிய அச்சம் இல்லை. இரவு நேரத்தில் ஆவி குறித்த பயமும் இல்லை.

இப்படியே நாள்கள் பல ஓடின. ஒன்றுமே விளையாத அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வாழ்க்கையை விளைவித்துக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

ஐயோ! யாராவது வாங்களேன்...’ ரவி மற்றும் கலாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கல்லறைக் காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே வந்து பார்த்தனர். இளைய மகன் ரூபன் இறந்துகிடந்தான். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. ‘சாயங்காலம் ஐந்து மணிவரை எம் புள்ள நல்லாதான் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டிருந்திச்சு. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான்என்று ரவி விவரம் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, ‘என் பிள்ள எனக்கு வேணும்என்று சொல்லி, தலையிலும் நெஞ்சிலும் பலமுறை கைகளால் அடித்துக்கொண்டு தரையில் விழுந்தாள் கலா.

இறப்புக்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. சிலர்ஆவி ஏதாவது அடிச்சிருக்கும்என்றார்கள். வேறுசிலர்அந்தக் குடும்பத்துல ஒரு சாவு விழாதானு இருந்தேன்; இப்போதாவது அந்தக் குடும்பத்திற்குச் சாவின் வலி புரியட்டும்என்றார் ஒருவர்.

இத்தனை ஆண்டுகள் அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்திருந்தாலும் ரூபனின் உடலை அந்தக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய அந்தஉறவுமுறையார்கல்லறைத் தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

ரூபனின் மறைவிற்குப் பிறகும் வேறு வழியில்லாமல் ரவி-கலா குடும்பம் அந்தக் கல்லறைத் தோட்டத்தில்தான் வசித்து வந்தது. இப்போதெல்லாம் அங்கு யார் இறந்து கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டாலும், அவர்களின் கண்களில் ஒரு சிறு துளி கண்ணீரேனும் வராமல் இருந்த தில்லை. அந்தக் கண்ணீருக்கான காரணம் கடைசிவரை யாருக்கும் புரியவேயில்லை.

புரியாத புதிர்கள் இணைய உலகில் பல உள்ளன. ‘இணைய உலகின் அரசன்என்று அழைக்கக் கூடியகூகுள்தேடுபொறியை (Google Search Engine) ஓர் ஆண்டில் மட்டும் ஐந்து டிரில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையே கூகுள் தேடுபொறியின் மதிப்பைக் கூட்டுவதோடு, இணைய உலகின் ஆட்சிப்பீடத்தில் தொடர்ந்து நீடிக்கச்செய்கிறது. கூகுள் தேடுபொறியின் முதல் பக்கத்தில் எந்தெந்த இணையதளங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றனவோ அந்தந்த இணையதளங்கள் பிரபலமடைகின்றன. இதனால் கூகுளின் தயவிற்காய் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போடுவதோடு நில்லாமல், முதல் பக்க வரிசையில் தங்களின் இணையதளங்களைக் கொண்டு வருவதற்குடிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) நிறுவனங்களுக்குப் பணத்தை வாரி வழங்குகின்றன. ஆனால், இத்தகைய அணுகு முறைகளுக்கெல்லாம் கூகுள் அண்மையில் அறிமுகம் செய்தசெயற்கை நுண்ணறிவு முறை (AI Mode) உலை வைத்துவிட்டது என்றே கூறவேண்டும். ‘Pew Research Centerஎன்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தேடும் முறை 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு வரை இணையதளப் பயனர்களை இழந்திருக்கின்றன என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொருவரும் கல்விக்காக, மருத்துவத்திற்காக, தரவுகளுக்காக, பொழுதுபோக்கிற்காக, இன்னும் பல்வேறு தேவைகளுக்காக இணைய தளங்களின் உரலியை அதாவது இணையதள முகவரியைச் (URL – Unique Resource Locatorசொடுக்கி (click) பயன்படுத்துகின்றனர். ஆனால், இப்போதெல்லாம் பலரும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களையே தேடுதலுக்குப் பயன்படுத்துவதால் சொடுக்கிப் பயன்படுத்தும் முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்றே சொல்லலாம்.

செயற்கை நுண்ணறிவுதேடல் பொறிஇணையத்திலிருக்கின்ற பலருடைய பல்வேறுபட்ட தரவுகளைத் தேடி தன் பாணியில் தருகிறது. ஆனால், எந்த இணையப் பக்கங்களிலிருந்து அல்லது யாருடைய கருத்தை நமக்குத் தருகிறது என்பதை அது பல நேரங்களில் குறிப்பிடுவதில்லை. இதனால், கருத்துருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்களும், அந்தக் கருத்தைப் பதிவு செய்த இணையதளப் பக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்ற சூழல் உருவாகுகின்றது. இத்தகைய நிலை இணைய உலகில் பெரும் விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

கூகுள் நிறுவனம் இந்த ஆய்வின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்திருக்கிறது. உண்மை எதுவாக இருந்தாலும், தற்போதைய இணையச் சூழலைக் கூர்ந்துநோக்கும்போது பெரும்பாலான இணையதளங்கள் இருளுக்குத் தள்ளப்படுவது உறுதி. இணையதளங்களின் அழிவிற்குக் காரணம், நாம் தவறான லிங்கைக் கிளிக் செய்து விட்டோம் என்பதால் அல்ல; மாறாக, .. யின் வளர்ச்சியினால் கிளிக் செய்வதையே நிறுத்தி விட்டோம் என்பதாலேயே!