news
சிறப்புக்கட்டுரை
புது விடியலின் பூபாளம்: புனிதை தெரேசாவும் நற்செய்தி அறிவிப்புப் பணியும்

அனுபவமும் அனுப்புதலும்!

திருவிவிலியத்திலும் இறைவெளிப்பாட்டிலும் மீட்பின் திட்டத்தின் அச்சாணியாகவும் அடிநாதமாகவும் விளங்குவது இறை-மனித அன்பு. இவ்வன்பின் இரு பரிமாணங்கள்: அனுபவமும் அனுப்பப்படுதலும். மோசேவுக்கு யாவே இறைவன் பற்றி எரியும் முட்புதரில் வழங்கிய காட்சியில் இவ்விரு அம்சங்களும் வெள்ளிடை மலையாகக் காணப்படுகின்றன. அனைத்து நற்செய்திப் பணியாளர் வாழ்விலும் அனுபவமும் அனுப்பப்படுதலுமே இறைஞானமாக மிளிர்கின்றது.

புனித தெரேசாவின் வாழ்வில் அனுபவமும் அனுப்பப்படுதலும்

பிரான்சு நாட்டில்  லிசியு நகர் கார்மேல் மடத்தில் அடைபட்ட அனுபவ வாழ்விலிருந்து எவ்வாறு இத்தகையதொரு செயல்பாட்டு வாழ்வு தெரேசாவுக்கு மலர்ந்தது என்பது இன்றைய பின்நவீனத்துவச் சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக அமையலாம். ஆனால், ‘சிறு மலர்என்று அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசா, இயேசுவை அளவுகடந்த விதத்தில் அன்பு செய்து, உலகின் அனைத்து மக்களுக்காகவும் தன்னையே கையளித்து வாழ்ந் தார். இந்தத் தூய அன்பானது அனைவரையும் சமமாகப் பார்க்ககூடிய ஒரு பரந்த, பாகுபாடற்றப் பார்வையைக் கொடுத்தது. இயேசுவை அன்பு செய்யவும், அவரது அன்பை அகிலமெங்கும் பரப்புவதையுமே தனது கார்மேல் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார்.

வரைமுறைகளைக் கடந்த புதுப்பார்வை

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் வாழ்ந்த பூர்வீகக்குடிகளை அழித்து, அவர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் ஐரோப்பியர்கள் கைப்பற்றித் தங்கள் காலனி நாடுகளாக மாற்றினர். இத்தகைய பின்புலத்தில் தெரேசா இந்த ஏழை பூர்வீகக்குடிகளை, “கடவுளைக் கவரக்கூடிய காட்டு மலர்கள் இவர்கள்; இவர்களுடைய உள்ளங்களில்தான் கடவுள் இறங்கி வருகிறார்என நேர்மறையாகப் பார்க்கிறார். அன்றைய ஐரோப்பிய வரைமுறையைக் கடந்த புதுப் பார்வையாக அவரது அணுகுமுறை அமைகின்றது.

தெரேசா தன்னையும் ஒரு காட்டுச் சிறுமலர் என அழைத்து, ‘நானும் அந்தப் பூர்வீகக்குடிகளும் ஒன்றேஎனச் சமத்துவம் பேசுகின்றார். பிற சமய கலாச்சார மரபுகளை மதித்து உரையாடுவதே நற்செய்திப் பணி என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க புதுப்பார்வையன்றோ அவரில் வெளிப்பட்டுள்ளது!

தெரேசாவின் வாழ்வில் நற்செய்திப்பணி ஆர்வங்கள்

1. பிரான்சினியின் மனமாற்றம்

ஆன்மாக்களை இயேசுவிற்காக அறுவடை செய்யும் மீனவராக தெரேசா தன்னைக்  கருதுகின் றார். அவரது இந்த முயற்சியில்இயேசுவே வலைகளை வீசி மீன்களைப் பிடிக்கின்றார்எனக் கூறுவது, இயேசுவோடு எந்த அளவிற்கு ஒன்றித்திருக்கிறார் எனக் காட்டுகிறது. இந்த ஒன்றிப்பானது அவரது உள்ளத்தில் பிறரன்புத் தீயை மூட்டியது.

சிலுவையில் இயேசுதாகமாயிருக்கிறதுஎன்று கூறியதுஆன்மாக்களுக்காகஎன்றே பொருள்படுகிறது. எனவே, பாவத்தாலும் தீமைகளாலும் இயேசுவை விட்டு விலகியிருக்கும் அனைவரையும் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கத் துடித்தார் தெரேசா.

இத்தகைய பின்புலத்தில் பிரான்சினி என்ற குற்றவாளி ஒருவர் மரண தண்டனைத் தீர்ப்புப் பெற்றார் என்றும், பல அருள்பணியாளர்கள் முயன்றும் மனம் மாற மறுக்கிறார் என்றும் தெரேசா கேள்விப்பட்டார். பிரான்சினியின் மனமாற்றத்திற்காக இடைவிடாது உருக்கமுடனும் உரிமையுடனும் இயேசுவிடம் இறைவேண்டல் செய்தார். ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் கடைசி நிமிடத்தில் அந்தக் குற்றவாளி மனமாற்றம் பெற்றவராய் அருள்பணியாளரிடமிருந்து சிலுவையைப் பெற்று மூன்று முறை முத்தம் செய்தார்.

இந்தச் செய்தியை வாசித்தபோது  “மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7) என்ற இறைவாக்கின்மீது நம்பிக்கை கொண்டு பல ஆன்மாக்களை மீட்க வேண்டும் என்ற தாகம் பன்மடங்கு தனது உள்ளத்தில் பெருகியதாகக் கூறுகின்றார்.

2. அன்பின் பணியே நற்செய்திப் பணி

சிறுமலர் தெரேசா, பவுலடியாரின் 1கொரி 12:29-31;13:1 ஆகிய இறைவார்த்தைகளின் அடிப்படையில்திரு அவையில் அன்பு செய்யும் இதயமாக இருப்பேன்எனக் கூறி, அன்பே எனது அழைத்தல் என்று குறிப்பிடுகிறார்.

ஓர் அருள்பணியாளராக, போர்வீரராக, திருத்தூதராக, மறைப்போதகராக, மறைச்சாட்சியாக, இறைவாக்கினராக... உலகம் முழுவதும் பயணம் செய்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, சிலுவையிலிருந்து வரும் மீட்பை அனைவரும் பெறுவதற்கு என்னை அர்ப்பணிக்கின்றேன்என்ற வரிகள் அவரது நற்செய்திப் பணியின் ஆர்வத்தையும் அவசரத்தன்மையையும் சுட்டிக்காட்டுகின்றன.

இயேசுவின் மீட்பின் செய்தியை ஐந்து கண்டங்களிலும் அறிவிக்க விரும்புகிறேன்எனக் கூறும் அவர், படைப்பின் தொடக்கத்திலிருந்து, உலக முடிவுவரை நான் நற்செய்திப் பணியாளராக விரும்புகிறேன்; அதற்காக என் இறுதிச் சொட்டு இரத்தம் வரை சிந்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

3. நடைமுறை வாழ்வில்

அடைபட்ட கார்மேல் வாழ்வு என்பது புனி மானது, அமைதியானது. ஆனால், அந்த அமைதியும் புனிதமும், தியாகத்திலும் தாழ்ச்சியிலும் மன்னிப்பிலும் விளைந்த கனிகள்தாம். துறவு சகோதரிகளாக இருந்தாலும், ஒரே இடத்தில் வாழ்ந்து, செயல்பட்டு, கடமைகளைச் செய்யும்போது உறவுகளில் உரசல் கள், கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் சவால்கள், ஆழ்நிலைத் தியான இறைவேண்டல் பயணத் தில் வரும் நம்பிக்கைத் தளர்வுகள், உள்மன வறட்சிகள் என்று எத்தனையோ சவால்கள் அவ்வாழ்வில் உள்ளன. இத்தகைய சவால் நிறைந்த வாழ்வைக் கார்மேல் அருள்சகோதரிகள் ஏன் வாழ்கின்றார்கள்? என்ற உலகினரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்தான் சிறுமலர் தெரேசாவின் வாழ்வு.

புன்முறுவலோடு ஒவ்வொரு துன்பத்தையும் ஏற்று, கிறிஸ்துவின் அன்புப் பணிகளுக்காக தீமைகளிலும் அறியாமையிலும் கொடிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மன மனமாற்றத்திற்காக அர்ப்பணித்து அர்த்தம் கொடுத்தார். ஒவ்வொரு சோதனையையும் சவால்களையும் புரிந்துகொள்ளாத் தன்மைகளையும் நற்செய்திப்பணிக்கான அர்ப்பணிப்பு என்ற மனநிலையோடு ஏற்றுக் கொண்டார்.

தான் நோய்வாய்ப்பட்டதை உணர்ந்து தெரேசா, ‘இந்தச் சிறுமலரின் வாழ்வு எவ்வாறு நிறைவடையும்?’ என்ற கேள்வியைக் கேட்கின்றார். ஒருவேளை இளம்வயதிலேயே இயேசுவின் பாதத்தில் உதிர்ந்து விழலாம். ‘உடல் நலத்தை இறைவன் அருளினால் தொலைதூர நாடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணித்தளங்களில் நிறுவப்பட்டுள்ள கார்மேல் மடங்களுக்குச் சென்று வாழ்வேன்என்று உறுதி கொண்டார். தொலைதூரங்களில் பணிசெய்து வாழும் நற்செய்திப் பணியாளர்களுக்காக நற்செயல்களைச் செய்து இயேசுவின் பாதத்தில் மலர்களாகக் குவித்தார்.

1யோவான் 3:18 - “நம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்என்று கூறுகின்றது. சிறுமலர் தெரேசா தன் வாழ்வை அன்பின் சக்தியாக மாற்றி, அந்த அன்பின் சக்தியால் இயேசுவோடு ஒன்றித்து, அகிலத்தையும் ஆட்கொண்டார். அன்பின் தூதுவராக எல்லைகளைத் தாண்டி வருகின்ற அவரது வாழ்வு இன்றைய உலகில்புது விடியலுக்குப் பாடப்படும் பூபாளமாகஅமைகின்றது என்பதில் சந்தேகமில்லை.

 

news
சிறப்புக்கட்டுரை
மணம் வீசும் ரோசா மலர்!

இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே..

சிறுமலர்என்று செல் லமாக அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரேசா தன்னையே இறைவனுக்கென அர்ப்பணித்து, பிரான்ஸ் நாட்டில் லிசியே கார்மேலில் மறைந்து வாழ்ந்து, இருபத்து நான்கு வயதிலேயே இறந்தபோதிலும், அவர்களின்சிறிய வழிஉலகமெங்கும் சென்றடைந்து, புனிதத்தின் நறுமணம் அநேக ஆன்மாக்களை கவர்ந்திழுக்கவே, திரு அவை அவர்களை 1925-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் நாள் புனித நிலைக்கு உயர்த்தியது. எனவே, நம் அன்புச் சகோதரி சிறுமலர் தெரேசாவின் நூற்றாண்டினை இவ்வாண்டு மிக மகிழ்ச்சியுடன் சிறப்பிக்கின்றோம்.

புனிதம் என்பது கற்றறிந்த சான்றோர்களுக்கும் வலிமையுடையோர்க்கும் மட்டும் என்பதல்ல; தந்தை இறைவனின் இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமே உரியது என்பதை, சிறுமலர் தெரேசா நமக்குக் கற்றுத் தருகிறார்.

நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய, சாதாரணமான செயலையும் மிகுந்த அன்புடன் செய்வது புனிதத்தின் மிகச்சிறந்த பாதை (Royal Road) என்றும், இறைவனில் முழு நம்பிக்கை கொண்டு தன்னையே கையளித்து வாழ்வோர்க்கும் எளியோர்க்கும் இப்பாதை மிகச்சிறந்தது என்றும் கூறுகிறார்.

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள்என்ற இறைவார்த்தையைத் தனதாக்கிய சிறுமலரின் வாழ்வு, நாமும் சிறு குழந்தையைப் போன்று நம்மை முழுவதும் இறைவனின் கரத்தில் அளித்திட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது.

கார்மேல் கன்னியர்களாகிய எங்களின் அன்புச் சகோதரி புனித தெரேசா எங்களின் அன்றாட வாழ்வில் எங்களை ஊக்குவிப்பவராகவும் உற்சாகப்படுத்துபவராகவும் இருக்கின்றார்.

சிறுமலரின் பற்றி எரிந்த ஆன்மாக்கள்மீது கொண்ட தாகமும், மறைபரப்புப் பணியாளர்களின் மேல் அதிக அன்பு கொண்ட அவர்களின் அன்பு நிறைந்த இதயமும், எங்களின் செபங்களும், மறைந்த வாழ்வும் தியாகங்களும் திரு அவைக்கும் உலகத்திற்கும் மிக மிகப் பலன் அளிக்கக்கூடியவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அமைதியில் வாழ்கின்ற எங்களது வாழ்வின் வழியாக நாங்களும், கிறிஸ்து இயேசுவோடு இணைந்த ஒன்றிப்பில் ஏற்படும் அன்பின் மகிழ்ச்சி, மணம் வீசும் அன்பு, எமது பரிந்துரை செபங்கள் அனைத்தும்ரோசா மலர் மாரியைப் பொழிவிக்கஅழைக்கின்றது.

இந்த இனிய நூற்றாண்டு, புனித சிறுமலரின் அன்பின் செய்தியை நமக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவதாக!

புனிதம் என்பது அன்றாட வாழ்வின் சிறு செயல்களையும் இறைவன் திருமுன்னிலையில் அன்புடன் செய்திட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக! நாம் சிறுவழியைப் பிரமாணிக்கமாய் பின்பற்றி வாழ்ந்திட புனித தெரேசா நமக்காகப் பரிந்து பேசுவாராக! விண்ணிலிருந்து ரோசா மலர் மாரியைத் திரு அவை மீதும், உலகத்தின் மீதும், நம் ஒவ்வொருவர் மீதும் பொழிவாராக!!

என்றும் செபங்களுடன்

அருள்சகோதரி கரோலின்

President, St. Joseph Federation of South–East India

news
சிறப்புக்கட்டுரை
குழந்தை தெரேசாவின் குடும்பம் ஒரு குட்டித் திரு அவை

கத்தோலிக்கத் திரு அவை வரலாற்றில் முதன் முறையாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் புனிதப் பட்டம் கொடுக்கப்பட்டது என்றால், அது குழந்தை தெரேசாவின் பெற்றோர்களான லூயிஸ் மார்ட்டினுக்கும்-செலி கெரினுக்கும்தான்.

இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். நான்கு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். மற்ற ஐந்து பெண் குழந்தைகளும் துறவிகளாக வாழ்ந்தனர். ஒன்பதாவது குழந்தையாகிய குழந்தை தெரேசா உள்பட நான்கு குழந்தைகள் கார்மேல் மடத்திலும், லெயோனி, சந்திப்பு மடத்திலும் (visitation) சேர்ந்து துறவிகளாக வாழ்ந்தனர். குழந்தை தெரேசாவுக்கு 1925-இல் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு லெயோனிக்குகடவுளின் ஊழியர் (Servant of God) என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் அக்டோபர் 18-இல் திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களுடைய பெற்றோர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனித லூயிஸ் மார்ட்டின் ஒரு குருவானவராக வாழ விரும்பினார். அவருக்கு இலத்தீன் மொழி மிகவும் கடினமாக இருந்ததால், அவரால் குருவானவராக முடியவில்லை. செலி கெரினும் ஒரு கன்னியர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அவருடைய உடல்நலன் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, திருமணத்திற்குப் பிறகு தனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும், அவர்கள் அனைவரையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அப்போதே கடவுளிடம் வேண்டினார். லூயிஸ் மார்ட்டினும் செலி கெரினும் சந்தித்துத் திருமணம் செய்துகொள்கின்றனர். பத்து மாதங்களாகத் தாம்பத்திய வாழ்வு வாழாத இவர்கள், ஆன்ம குருவானவரால் அறிவுறுத்தப்பட்டு, தாம்பத்திய வாழ்வு வாழ்ந்து ஒன்பது பிள்ளைகளுக்குப் பெற்றோராகின்றனர்.

இவர்கள் அன்னை மரியாமீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படுத்தும் விதமாக அனைத்துக் குழந்தைகளையும் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில்மரியஎன்ற அன்னை மரியாவின் பெயரை அனைத்துக் குழந்தைகளின் பெயருக்கு முன்பாகச் சேர்த்துப் பெயர் வைத்தார்கள். அவ்வகையில் குழந்தை தெரேசாவின் திருமுழுக்குப் பெயர்மரிய பிரான்சிஸ் தெரஸ்என்பதாகும். கடவுளுக்குப் பணி செய்ய தங்களுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை; தங்களின் பிள்ளைகள் அனைவரும் கடவுளின் அழைப்பைப் பெறவேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார்கள். அதற்காகத் தினமும் இறைவேண்டல் செய்தார்கள். தங்களுக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும், அவனை வேதபோதக நாடுகளுக்குப் பணி செய்ய ஆண்டவர் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர்களுக்குப் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். எனினும், அவர்களின் விருப்பம் வீண் போகவில்லை. அவர்களின் கடைசிக் குழந்தை தெரஸ் வேதபோதக நாடுகளின் பாதுகாவலியாகும் பேறுபெற்றாள்!

குழந்தை தெரேசாவின் பெற்றோர்கள் துறவியாக வாழ ஆண்டவர் அழைக்காவிட்டாலும், தங்கள் குடும்பத்துக்குள்ளே ஒரு துறவற சூழலை உருவாக்கினர். துறவற சமூகங்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் தினமும் நடக்கும். சேர்ந்து இறைவேண்டல் செய்வது, சேர்ந்து உண்பது மற்றும் சேர்ந்து உறவாடுவது. இவை மூன்றும் இவர்களின் குடும்பத்தில் சிறப்பாக நடைபெற்றன.

இந்தப் புனிதத் தம்பதியர் தங்களுடைய வார்த்தைகளால் அல்ல; வாழ்வால் நல்ல தூண்டுதல் தரும் பெற்றோராகத் தங்கள் குழந்தைகளுக்கு முன் வாழ்ந்து காட்டினர். சேர்ந்து திருப்பலிக்குச் செல்வது, திவ்ய நற்கருணை உட்கொள்வது, இறைவேண்டல் செய்வது, ஞானவாசகம் வாசிப்பது, திருவிவிலியம் படிப்பது, தியானிப்பது, மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது போன்றவற்றைச் செய்து, தங்களின் குடும்பத்தை ஒரு குட்டித் திரு அவையாகவே மாற்றினர்.

மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) என்ற இறைவாக்கை தெரேசின் தந்தை புனித லூயிஸ் மார்ட்டின் வாழ்வாக்கினார். தங்களின் வருவாயில் ஒரு பகுதியை நற்செய்தி அறிவிக்கும் ஒரு துறவற சபைக்கு ஆண்டுதோறும் கொடுத்தார்கள். குடிமயக்கத்தால் சாலையோரத்தில் கிடந்த ஓர் ஏழைத் தொழிலாளியைக் கைதூக்கி எழுப்பி, அவரது குடிசையில் கொண்டுபோய் சேர்த்தார். வலிப்பு நோயினால் துன்புற்ற ஓர் ஏழைக்கு உதவி செய்ய தன் தொப்பியைக் கழற்றி பிச்சை எடுத்துக் கிடைத்த போதிய பணத்தை அந்த வலிப்பு நோய்க்காரருக்குக் கொடுத்து உதவினார்.

குழந்தைகள் பொதுவாகத் தாங்கள் கேட்பதைக் காட்டிலும், பார்ப்பதையே பின்பற்றுவர். அந்த வகையில் தங்களின் பெற்றோரிடம் கண்ட இந்த அருமையான கிறித்தவப் பண்புகளைக் குழந்தைகளும் பின்பற்றத் தொடங்கினர். பெற்றோரைப் போலவே அவர்களது குழந்தைகளும் அன்பும் ஆழ்ந்த நம்பிக்கையும், உறுதியான பக்தியும் கொண்டவர்களாய் வாழ்ந்தனர். ‘ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித் திரு அவைஎன்று கூறுவதற்குக் காரணம், திரு அவை போன்று ஒவ்வொரு குடும்பமும் ஓர் இறைச் சமூகமாக நம்பிக்கையிலும் அன்பிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதிலும் வளரவேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே. குடும்ப உறவுகளில் திரு அவையின் மதிப்பீடுகள் இடம்பெற வேண்டும்; ஒவ்வொரு குடும்பமும் இறைநம்பிக்கையை வளர்த்தெடுக்கும் இடமாக வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு, மன்னிப்பு, பரஸ்பர ஆதரவு இடம்பெற வேண்டும்; ஒருங்கிணைந்து ஒரே பாதையில் செல்லவேண்டும் என்பதே இன்றைய திரு அவையின் நோக்கமாக இருக்கிறது.

திரு அவையில் காணப்படும்நாம் கத்தோலிக்கர்கள்என்ற சேர்ந்த உணர்வு குடும்பத்தில் இருக்க வேண்டும். நற்செய்திப் பகிர்வு ஒவ்வொரு குடும்பத்திலும் இடம்பெறவேண்டும். நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றுபகரக் கூடியவர்களாகக் குடும்பத்தினர் இருக்கவேண்டும். குடும்பத்தில் இறைநம்பிக்கை, அன்பு, திரு அவையின் போதனைகள், விழுமியங்கள் வளர்த்தெடுக்கப்படுவதாலும் வாழப்படுவதாலும்குடும்பம் ஒரு குட்டித் திரு அவைஎன்று அழைக்கப்படுகின்றது. குழந்தை தெரேசாவின் குடும்பத்தில் மேலே கூறப்பட்ட அனைத்துமே காணப்பட்டன என்பதற்கு தெரேசா எழுதியஓர் ஆன்மாவின் வரலாறுசான்றாகும்.

குழந்தை தெரேசா கடைசிக் குழந்தை என்பதனாலேசின்ன ராணிஎன்று அவரது தந்தை அன்பொழுக அழைத்தார். அனைவருமே இவர்மீது பாசமழை பொழிந்தார்கள். குழந்தைக்குரிய தன்னன்பு, பிடிவாதம் போன்ற குறும்புத்தனங்கள் இருந்தாலும், தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தைத் தன் சிறுவயதிலிருந்தே தெரேசா வளர்த்துக்கொண்டார்.

குடும்பத்தில்தான் மானுட ஆன்மா, வாழ்வின் பொருள் பற்றிய பார்வை எல்லாம் முளைத்தெழுகிறதுஎன்று திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கூறுகிறார். பெற்றோர் வாழ்வின் உரிமையாளர்கள் இல்லையென்றாலும், அவர்கள் மூலம்தான் இறைநம்பிக்கை, எதற்காக வாழவேண்டும் என்ற வாழ்வின் பொருள் போன்றவை பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்குப் பரவுகிறது மற்றும் தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் பகிரப்படுகிறதுதெரேசாவின் பெற்றோர் இதற்கு ஒரு சான்று என்று கூறினால் அது மிகையாகாது.

தெரேசாவின் பெற்றோர் ஒருபோதும் குழந்தைகளைச் செபிக்கச் சொல்லிவிட்டு வேறு வேலை செய்ததில்லை. தெரேசாவே தன் சுயசரிதையில் இதைப் பதிவு செய்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளோடு சேர்ந்து செபிப்பது குழந்தைகள் அருள்வாழ்வில் வளர மிகவும் தேவை என்பதை இச்செயல் உணர்த்துகிறது. தன்னுடைய நான்காவது வயதிலேயே தெரேசா தன் தாயை இழந்தாலும், தன் அப்பாவின் அன்புள்ளத்தில் அன்னைக்குரிய அன்பை அனுபவித்தார். தன் அக்காமார்கள் அனைவரும் தன்னலம் கருதாத அன்பும், தாய்க்குரிய கனிவும் தன்மீது காட்டி வந்தார்கள் என்பதையும் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தெரேசாவின் பெற்றோர் ஆழமான இறைநம்பிக்கையிலும் நற்கருணை சந்திப்பிலும் இறைவேண்டலிலும், இறைவனை நோக்கிய பயணத்தில் இணைந்து செயல்படுவதிலும் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து வாழவைத்ததால் அவர்களின் குடும்பம் ஒரு குட்டித் திரு அவையாக, நம் அனைவரின் குடும்பத்திற்கும் வழிகாட்டியாக அன்றும் இன்றும் என்றும் திகழ்கிறது.

news
சிறப்புக்கட்டுரை
நவீன உலகின் மிகப்பெரிய புனிதை!

புனித குழந்தை இயேசுவின் தெரேசா நூற்றாண்டு விழா வாழ்த்துகள்!

புனித குழந்தை தெரேசாவைப் புனிதராக 1925-ஆம் ஆண்டு உயர்த்திய திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், அவருடைய மறைபரப்புப் பணி ஆர்வத்தைக் குறிப்பிட்டு, அவருடைய செபம், தியாகம், துன்பம் மற்றும் வேதனை முழுவதையும் மறைபரப்பு நாடுகளுக்காக அர்ப்பணித்தார். ஆகவேதான் மறைபரப்பு நாடுகளுடைய பாதுகாவலியாக இருக்கின்றார் என்றார். புனித குழந்தை இயேசுவின் தெரேசா மறைவல்லுநர் மற்றும் மறைபரப்பு நாடுகளின் பாது காவலியாகத் திரு அவையை இன்று அலங்கரிக்கின்றார்.

சிறு வழி ஆன்மிகத்தின் வழியாக இறைமக்களின் உள்ளங்களை ஆட்கொண்டிருக்கிறார். ஆன்மாக்களை மீட்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் மறைபரப்பை ஆற்ற வேண்டும் என்கிற பேராவல் கொண்டிருந்தார். அவர் லிசியே நகர் கார்மேல் மடத்து நான்கு சுவர்களுக்குள் மறைந்து வாழ்ந்திருந்தாலும், அவரது உள்ளமானது மறைபரப்பு நாடுகளின் மறைப்பணி யாளர்களுடைய பணி வாழ்வுக்காகச் செபிப்பதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது.

ஆண்டவர் இயேசுநான் தாகமாய் இருக்கிறேன்என்று கூறினார். அந்தத் தாகம் தண்ணீருக்கான தாகம் அல்ல; மாறாக, ஆன்மாக்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்கான தாகம் என்று உணர்ந்து செபித்தார்.

புனித குழந்தை இயேசுவின் தெரேசாவை நவீன உலகின் மிகப்பெரிய புனிதை என்றார் திருத்தந்தை 12-ஆம் பயஸ். அவர் குழந்தை தெரேசாவைப் பற்றிக் கூறும்போது, “கடல் கடந்து சென்று ஆண்டவர் இயேசுவை அவர் போதிக்கவில்லை; மாறாக, அவருடைய மறைபரப்பு ஆர்வத்தால், இறையன்பு தீயால் பற்றியெரிந்து தன்னையே முழுவதுமாக ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக ஒப்புக்கொடுத்தாள்என்கின்றார். புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் அவரைத் திரு அவையின் மறைவல்லுநராக அறிவித்தபோது, புனித குழந்தை இயேசுவின் தெரேசா அகில உலகிற்கும் புனிதத்தைப் போதிக்கின்ற பேராசிரியர் என்றார். அவள் திரு அவையின் மறைபொருளைத் திரு அவையினுடைய ஒற்றுமையையும்  உள்ளுறைதலையும் சிறப்பாக வாழ்ந்தார். அதேபோல மறைபரப்பு நாடுகளில் வாழ்கின்ற மறைபரப்புக் குருக்களுக்குச் சகோதரியாகவும், அவர்களுடைய பணிகளில் தனது செபத்தின் வழியாகத் தனது தியாகத்தின் வழியாகக் காத்தாள் என்றார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித குழந்தை இயேசுவின் தெரேசாவைப் பற்றிக் கூறு கின்றபோது திரு அவையின் மறைபோதகப் பணி என்பது நம்முடைய திட்டங்களாலும் நம்முடைய நிறுவனங்களாலும் அல்ல; மாறாக, நம்முடைய இதயங்கள் இறையன்பால் பற்றியெரிய வேண்டும். அதேபோல் நம்முடைய இதயங்கள் நற்செய்தியின் விழுமியங்களால் பற்றியெரிய வேண்டும் என்று புனித குழந்தை இயேசுவின் தெரேசா நமக்குப் பயிற்றுவிக்கின்றார் என்றார்.

புனித குழந்தை இயேசுவின் தெரேசாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. குழந்தை உள்ளம்:குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுஎன்பது முதுமொழி. வாழ்வில் வளர்ந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் குழந்தை உள்ளத்தை இழக்காமல் இருக்கின்றவனே சிறந்த மனிதன் என்பது சீனப் பழமொழி. குழந்தை உள்ளத்தைக் கொண்டு அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன்மீது கொண்டிருந்தவள் புனித குழந்தை இயேசுவின் தெரேசா.

2. சிறுவழி ஆன்மிகம்: புனித குழந்தை இயேசுவின் தெரேசா சிறுவழி ஆன்மிகம் வழியாக இறையன்பைத் தியாகத்தில் வாழ்ந்துகாட்டுவது, சிறு சிறு செயல்பாடுகளில் இறையன்பை வெளிப்படுத்துவது, துன்பத்தின் மத்தியிலும் இறைவன்மீது நிறைவான நம்பிக்கை கொண்டிருப்பது, செபவாழ்வைக் கைவிடாமல் இருப்பது மற்றும் பிறரைக் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது சிறுவழி ஆன்மிகமாகும்.

3. மறைப்பணியார்வம்: புனித குழந்தை இயேசுவின் தெரேசாவின் மறைப்பணியார்வம் நற்செய்திப் பணியாற்றும் குருக்களுக்காகச் செபிப்பது, நற்செய்தி அறிவிப்புப் பணியில் பேரார்வம் காட்டுவது, நாம் பெற்றுக்கொண்ட ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் அறிவிக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தார்.

4. புனித வாழ்வு: புனித குழந்தை இயேசுவின் தெரேசாவின் குடும்பம் தந்தை புனித லூயிஸ் மார்ட்டின், தாய் புனித செலிக்கெரின் இருவரும் இறையன்பால், நம்பிக்கையால், செபவாழ்வால், இறைதிருவுளத்தை நிறைவேற்றியவர்கள். ஆகவே, புனித வாழ்வுக்கு இந்தப் புனிதர்கள் முன்மாதிரியாக இருக்கின்றார்கள். இறைவார்த்தையைத் தியானித்து வாழ்வாக்குவதற்குச் சான்றுபகர்கின்றார்கள். புனித குழந்தை இயேசுவின் தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகின்ற நாம், இக்குடும்பத்தின் முன்மாதிரிகையை நம் குடும்ப வாழ்வில் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். விண்ணகத்திலிருந்து ரோஜா மலர்களை அருள்மாரியாக புனித குழந்தை இயேசுவின் தெரேசா நம்மீது பொழிவாராக! நாம் அவரது சிறுவழி ஆன்மிகம்வழி தொடர உறுதி ஏற்போம்.

புனிதராக வாழ வயது வரம்பில்லை! நிறைவான வாழ்வுக்குச் சிறுவயதும் தடையில்லை! இறைவார்த்தை வழிநின்று வாழ்ந்தால் போதும், நீங்களும் நல்ல மனிதராகலாம்! பார் போற்றும் புனிதராகலாம்! புனித குழந்தை இயேசுவின் தெரேசா நூற்றாண்டு விழா நல்வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
யார் இந்தப் புனிதை? (தூய குழந்தை இயேசுவின் தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா)

1873-இல் பிறந்து, 15 வயதில் கார்மேல் துறவற சபையில் நுழைந்து, 9 ஆண்டுகள் மட்டுமே துறவியாக வாழ்ந்து, 24 வயதிலே 1897-இல் இறைவனடி சென்ற இளங்கன்னி, சிறுமலர், சின்ன ராணி! பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் பாசமழையில் நனைந்து, அன்பிலே குளித்து, இறை ஒன்றிப்பில் இணைத்துக்கொண்ட குழந்தை இயேசுவின் மற்றும் திருமுகத்தின் தெரேசா!

லூயிஸ்-செலியே இவர்களின் புதல்வியாய் உதித்து, தன் புனிதத்தின் வழியாகத் தன் பெற்றோரையே தூயவர்களாக்கிக் குடும்பத்தையே புனிதமாக்கிய  இதய ராணி! தன் மறைந்த தியான வாழ்வால் உலகிற்கே நற்செய்தி அறிவித்து மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியாகி, தன் சிறுவழி ஆன்மிகத்தால்திரு அவையின் மறை வல்லுநர்என்று திரு அவையின் இதயமாக உலகம் போற்றும் நாயகி!

இவர் ஒரு கார்மேல் துறவி. பிரான்ஸ் நாட்டிலே லிசியு நகர் கார்மேல் மடத்தில் வாழ்ந்தவர். தூய தெரேசாவின் பிறப்பின் 150-ஆம் ஆண்டு (2023), அருளாளர் பட்ட 100-ஆம் ஆண்டு (2023) மற்றும் புனிதர் பட்ட 100-ஆம் ஆண்டு (2025) என உலகம் முழுவதும் கார்மேல் துறவற சபைகள் இணைந்து அகமகிழ்ந்து கொண்டாடுகின்றன.

பிறப்பு: ஜனவரி 2, 1873

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 29, 1923

புனிதர் பட்டம்: மே 17, 1925

அகில உலகக் கார்மேல் துறவற சபைகள் கடந்த மூன்று வருடங்களாகக் கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் இதர நிகழ்வுகள் வழியாக, தூய தெரேசாவின் ஆன்மிகத்தைச் சிறப்பான விதத்தில் பறைசாற்றக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

இந்தியக் கார்மேல் குடும்பமும் நம் இந்திய நாட்டில் பல இடங்களில் கொண்டாடி மகிழ்கின்றது. வடக்கு, தெற்கு என்று இந்தியாவின் இரு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதன் சிறப்பம்சம் கார்மேலின் துறவற சபைகள் ஒன்றாக இணைந்து ஒரே குடும்பமாகக் கொண்டாடிச் சான்றுபகர்தலாகும்.

தமிழ்நாட்டிலுள்ள கார்மேல் துறவற சபைகள்

Order of Discalced Carmelites (OCD)

Discalced Carmelites Nuns (OCD)

Congregation of Teresian Carmelites (CTC)

Congregation of the Mother of Carmel (CMC)

Carmelites of Mary Immaculate (CMI)

Carmelite Sisters of St. Teresa (CSST)

Apostolic Carmel (AC)

Institute of Our Lady of Carmel, Istituto di Nostra Signora del Carmelo (INSC)

Secular Order of Discalced Carmelites (OCDS)

தமிழ்நாட்டிலும் கார்மேலின் துறவற சபைகள் அனைத்தும் ஒன்றுகூடி, இணைந்து திட்டமிட்டு இந்த நூற்றாண்டு விழாவை, தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் கொண்டாடுகிறோம். புனிதம் அனைவருக்கும் சொந்தம். அன்பு ஒன்றே வாழ்வாக வேண்டும், பணியாக வேண்டும். தூயவராகிவிடலாம்; சிறிய செயல்கள் வழியாகப் பெரிய நிலையை அடைந்து விடலாம் என்பதே சிறுமலரின் சிறுவழியின் சிறப்புச் செய்தியாகும்.

குழந்தை இயேசுவின் தூய தெரேசாவைக் கொண்டாடுவோம்! புகழ்வோம்!!

news
சிறப்புக்கட்டுரை
ஒரு100000 அப்பு... ஒரு100000 (கண்டனையோ, கேட்டனையோ! - 37)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ground-breaking encycli cal’ - ‘Laudato si’ திருமடல் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவுபெறுவதைக் கொண்டாடும் வகையில், நான் தற்போது முதன்மை ஆசிரியராகப் பணிபுரியும் ‘Radio Veritas Asia’ என்கிற ஆசியக் கத்தோலிக்க டிஜிட்டல் தளம், ஒரு மாபெரும் குறும்படப் போட்டியை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசரத்தை ஆசிய மக்கள் எல்லாரும், குறிப்பாக, ஆசிய இளைஞர்கள் உணரவேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கம்.

பருவநிலை ஏற்கெனவே டாஸ்மாக்கின்அன்பான வாடிக்கையாளர் பெருமக்கள்போல தடுமாறுவதைப் பார்க்கிறோம். டிசம்பரில் வெயில் கொளுத்துகிறது. பையன்கள்கிறிஸ்மஸ் தாத்தா டிரஸ் போடமாட்டேன்என்று தகராறு செய்கிறார்கள். மே மாதத்தில் வெள்ளம் வந்து, விவசாயிகளின் திட்டங்களைக் கலைத்துப் போடுகிறது. நான் முன்பு இருந்த பங்கில் ஒரு பாட்டி, “இந்த வானத்துக்குப் புத்தி கெட்டுப்போச்சு. அவ்வளவுதான் நான் சொல்வேன்என்பார். ஒரு காலத்தில் வெறும் கணிப்பாக இருந்த சூழ்நிலைப் பேராபத்துகள் இன்று ஏறக்குறைய நம் வீட்டு வாசற்படிக்கே வந்துவிட்டன.

Time is ticking! நான்கூட நினைத்திருக்கிறேன்எப்படியும் இதுபோல பெரிய விஷயங்கள் நடப்பதற்கு முன், நம் காலம் முடிந்துவிடும்என்று. அதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “We’re the first generation to feel the impact of climate change, and the last generation that can do something about it...” என்று கூறியது மிகப்பெரிய உண்மை! பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை நேரடியாக உணர்கிற முதல் தலைமுறை நாம். அதே சமயம், அது குறித்து ஏதாவது முயற்சி எடுத்து, சரிசெய்யக்கூடிய கடைசி தலைமுறையும் நாம்தான். Now or never! நாம் ஏதும் செய்யவில்லை என்றால், உலகைக் காப்பாற்ற மற்றொரு தலைமுறை இங்கே இருக்காது. ‘Point of no return’ என்று கூறுவார்கள். அதை நோக்கி உலகம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழலைக் குறித்துத் தொடர்ந்து பேசி, எழுதி, அதன் மேல் உலக மக்களின் கவனத்தைக் குவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கடைசிவரை  அவருடைய ஆட்சிக்காலத்தின் முதன்மை அக்கறைகளின் ஒன்றாகச் சுற்றுச்சூழல் இருந்தது.

2015-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘Laudato si’ ஒரு முக்கியச் சுற்றுச்சூழல் ஆவணம். இந்த அளவிற்கு உலகின்மீது தாக்கம் செலுத்திய அண்மைக்காலத் திருமடல் வேறு எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். திருமடல்கள் பொதுவாகக் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு எழுதப்படும். ஆனால், Laudato si’ பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரை நோக்கியும் உரையாடல் நிகழ்த்தியது. பூமியை ‘Our Common Home’ - அதாவது, நம் எல்லாருக்கும் ஆன பொதுவீடு என்று அழைத்து, அதன் நலத்தின்மீது அக்கறை கொண்ட எல்லாரையும் பிரான்சிஸ் வண்டியில் ஏற்றினார். ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் இம்மடலைக் குறித்து விவாதித்தார்கள். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரான்சிஸின் மடல் மேற்கோள் காட்டப்பட்டது. பிரதமர்கள், அதிபர்கள், .நா. நிறுவன அதிகாரிகள் இம்மடலின் வார்த்தைகளைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டார்கள். துயருறும் கிரகத்திற்காக எழுப்பப்பட்ட ஓர் அறத்தின் குரலாக ‘Laudato si’  ஒலித்தது.

திரு அவை வரலாற்றிலேயே ஒரு திருமடல் இயக்கமாக உருவெடுத்த அதிசயம் இம்மடலில்தான் நிகழ்ந்தது. இன்று உலகம் முழுவதும் தன்னார்வலர்களையும் செயல்பாட்டாளர்களையும் கொண்டு கிளை விரித்துள்ள Laudato si Movement பிரான்சிஸின் கனவுகளைத் திட்டங்களாகவும், சாத்தியமான செயல்பாடுகளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘Laudato si’ மடலின் பத்தாம் ஆண்டு விழா, உலகளாவியத் திரு அவையில் பல வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் அறிவுறுத்தல்படி ‘Radio Veritas Asia’ நிறுவனம் சார்பாக பல திட்டங்களை இந்த வருடம் முன்னெடுத்துள்ளோம். அதில் ஒன்று இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட குறும்படப் போட்டி!

போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தலைப்பு: ‘ஆசியக் கண்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு - நம் பொது வீடு பூமியைக் காப்பாற்ற ‘Laudato si’ கற்பிக்கும் பாடங்களை எப்படிச் செயலாக்குவது?’

யார் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்?

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சமயம், நாடு, வயது போன்ற எந்தத் தடையும் இல்லை. தனிப்பட்ட நபர்கள், அமைப்புகள் இரண்டிற்கும் அனுமதி உண்டு. மாணவர்கள், சமூகத் தொடர்பு பணிக்குழுக்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், கன்னியர் இல்லங்கள், துறவற சபைகள், பக்த அமைப்புகள், இயக்கங்கள், பயிற்சி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள்... சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஒரு காமிராவும் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கதையும் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். உங்கள் குறும்படம் ஆசியக் கண்ட சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

ஆங்கிலத்தில் அனுப்பினால் உத்தமம். பிற மொழிகளுக்கும் அனுமதி உண்டு. உரையாடல் மற்றும் விவரிப்பிற்கு, ஆங்கில subtitle-கள் கொடுக்க வேண்டும்.

நீளம்: 3 இலிருந்து 5 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். இது தீவிரமாக அமுல்படுத்தப்படும். (முழுநீள வண்ணக் காவியங்களை அனுப்ப வேண்டாம்).

ஒரு நபர், ஓர் அமைப்பு, ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

படைப்பு எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10 நவம்பர், இரவு மணி 11.59 (பிலிப்பைன்ஸ் நேரம்). இந்தியாவைவிட, பிலிப்பைன்ஸ் இரண்டரை மணி நேரம் முன்னதாகச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Google Form வழியாகப் போட்டியில் பங்கேற்பைப் பதிவு செய்யவும், படைப்புகளை அனுப்ப...... https://forms.gle/sLkjEKJjkbdwQkZK9 என்ற இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்.

போட்டி பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விதிகளைத் தெரிந்துகொள்ள https://www.rvasia.org/laudato-si-film-making-contest என்ற கொழுவியை அணுகவும்.

இதில் நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது பரிசுத் தொகையை!

முதல் பரிசு: USD 1000 அமெரிக்க டாலர்கள். (இந்திய ரூபாயில் இதன் இன்றைய மதிப்பு ரூ. 88,143/- ஏறக்குறைய ஒரு இலட்சம்). ஒரு இலட்சம் அப்பு... ஒரு இலட்சம்!

இரண்டாவது பரிசு: USD 800 அமெரிக்க டாலர்கள்.

மூன்றாவது பரிசு: USD 500 அமெரிக்க டாலர்கள்.

இது தவிர பத்து சிறப்புப் படைப்புகளுக்கு USD 100 அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பத்து ஆறுதல் பரிசுகள் (மீதம் எல்லாருக்கும் வெறும் ஆறுதல் மட்டும் தரப்படும்).

ஆசியக் கண்ட வரலாற்றிலேயே ஒரு குறும்படப் போட்டிக்கு இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று சில நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைய பேர் இப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு அவசரம் ஆசிய இளைஞர்கள் நடுவில் ஒரு பேசு பொருளாக, அக்கறையாக மாறவேண்டும் என்பதே ‘Radio Veritas Asia’நிறுவனத்தின் ஆசை.

விருப்பமும் திறமையும் உள்ளநம் வாழ்வுவாசகர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மற்றவர்களுக்கும் இது குறித்த செய்தியைப் பகிருங்கள்.