news
சிறப்புக்கட்டுரை
அன்பால் அனைத்தையும் வெல்வோம்!

வாழ்வில் துன்பங்கள், சவால்கள் அனைத்தையும் இன்று நாம் கடந்துவரும் ஒரே பாதை அன்பின் பாதை என்பதே புனித தெரேசாவின் ஆன்மிக இலக்கணம்.

மனித வாழ்க்கையில் துன்பமும் சவால்களும் இரவு-பகல் போன்றவை. மொழியும்-இசையும் போன்றவை. இவை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதில்தான் அதன் சிறப்பு மிளிர்கிறது. அதுபோலத்தான் நமது வாழ்வில் வரும் துன்பமும் சவால்களும் தவிர்க்க முடியாதவை.

ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சவால்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றை நாம் எந்த மனநிலையோடு அணுகினோம், அணுகுகின்றோம், அணுகுவோம் என்பதில்தான் நமது வாழ்வு பக்குவப்படுகிறது, பண்படுகிறது. மனித வாழ்வு அன்பால் இயக்கப்படும்போது வெறுப்பும் வன்முறையும் கார்கால மேகத்தின் இடையே தோன்றி மறையும் வானவில்லைப்போல் மறைந்தொளியும் என்பதற்கு, புனித சிறுமலர் தெரேசாவின் வாழ்வு நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

புனித சிறுமலர் தெரேசா 1873-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள லிஸ்யு நகரில் செல்வ செழிப்பு மிகுந்த தம்பதியருக்கு 9 நவரத்தினங்களில் ஒன்பதாவது இரத்தினமாக மலர்ந்தாள். இப்புவியில் சிறுவயதிலேயே தனது தாயை இழந்தபொழுதிலும், தனது சகோதரிகளால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்பட்டாள். ‘எனக்கு அனைத்தும் வேண்டும்என்ற தெரேசாவின் வார்த்தை அவரது இளமைப் பருவத்திலும் தொடந்தது. அன்பே தனது அழைத்தல் எனப் புரிந்துகொண்ட நம் புனிதர், 15 வயதில் லிசியே நகரின் கார்மேல் மடத்தில் சேர்ந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்த பக்தியும் இறைநம்பிக்கையும் கார்மேல் மடத்திலும் தொடந்தது. தன்னை வெறுத்தோர், காயப்படுத்தியவர்கள்மீது வார்த்தைகளால் அவள் போர் தொடுக்கவில்லை; மாறாக, சிறு புன்னகையால் அகிம்சை போர்புரிந்து வெற்றியும் கண்டாள். பாவிகளின் மனந்திரும்புதலுக்காகவும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும் செபித்தாள்.

படிப்பறிவாள்; அவள் பட்டம் பெறவில்லை. மாறாக, தனது மௌன மொழியால் திரு அவையின் மகள் என்ற மாபெரும் பட்டத்தைப் பெற்றாள். திரு அவையின் மேல் தனக்கிருந்த பற்றால் திரு அவையின் இதயத்தில் தான் என்றும் அன்பாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று மொழிந்தவள். ‘மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறோர் ஆயுதம் இல்லைஎன்று மகாத்மா காந்தி கூறுவதைப் போலவும், ‘அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகில் மிகச்சிறந்த பலசாலி நீதான்என்று அன்னை தெரேசா கூறுவதைப் போலவும், அன்பை ஆயுதமாகக் கொண்டு துறவற வாழ்வில் ஒன்பது ஆண்டுகள் இறைப்பணியாற்றினார் தெரேசா. அந்த 9 ஆண்டுகளும் ஆண்டவருக்காகவே வாழ்ந்தார். இத்தகைய சிறப்புமிக்கப் புனிதையின் முன்மாதிரியைப் பின்பற்றும் நாம் நமது வாழ்வினை இங்குச் சற்று சிந்தித்துப் பார்த்து, அதனைச் சீர்செய்வது மிகவும் சாலச்சிறந்தது.

நாம் வாழும் இந்த உலகம் வெறுப்பு, போட்டி, பொறாமை, பகைமை, பிரிவினை போன்ற தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்ததோ, அதைவிட பன்மடங்கு மக்களின் மனமும்நாம், ‘நாங்கள்என்ற பரந்த மனநிலையில் இருந்து, ‘நான்என்ற குறுகிய வட்டத்தில் கூடாரம் அடித்துத் தங்கி விட்டது. இவ்வாறான சூழலில், அன்பு என்ற அமைதியின் மொழியைக் கொண்டு அணுகுவதே மாற்றத்திற்கான முதல்படி. அன்பு என்பது பலவீனமல்ல; அது மிகப்பெரிய வலிமை. எவ்வாறெனில் நம் புனிதை கூறுவார்: “கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே எனது நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல். அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்கு.”

இன்பத்திலும் துன்பத்திலும் வறுமையிலும் வளமையிலும் நோயிலும் சாவிலும் இருளிலும் ஒளியிலும் எந்நிலையிலும் அஞ்சாது, இயேசுவில் சரணடைந்து, குழந்தைபோல் அவரது தோளில் சாய்ந்து, குழந்தையாகவே மாறி, இறை அன்பிற்காகவே வாழ்ந்தவர் நம் புனிதை.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் 13 -ஆம் அதிகாரம் முழுவதும் அன்பின் சிறப்பு இயல்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியிருப்பது இதற்குச் சிறந்த சான்று. எல்லா மதமும் மனிதனும் அன்பு என்ற ஒற்றை வார்த்தையில்தான் முழுமை பெறுகிறது. அன்பு இன்று வந்த புதுக்கவிதை அல்ல; மாறாக, தொன்று தொட்டே காவியம் படைத்துள்ளது என்பதற்குப் பின்வரும் சான்றோர்களின் கூற்று சாட்சியம் பகர்கின்றது. வள்ளலார் தனது திருவருட்பாவில் 6-வது அத்தியாயத்தில் அன்பைக் குறித்து அழகாகப் பாடியுள்ளார்:

அன்பே சிவம் என அறிந்தார் அறிவொன்று

அன்பின்றி அமரரோடும் இராதே.

அன்புடையார் எல்லாம் உளரென்பர்

இதுவும் இல்லாரே அல்லாதார் என்பதோர் அறம்

பாடலின் பொருள் அன்பே சிவம் என உணர்ந்தவர்களை உண்மையான அறிவாளிகள், அன்பில்லாதவர்கள் தேவர்கள் கூட இருந்தாலும் இறைவன் அருளைப் பெற முடியாது. இன்னும் சிறப்பாகக் கூற வேண்டுமெனில், நமது தமிழ் மூதாட்டி அவ்வை தனது குரல் வெண்பாவில்

அன்பிற்கினியவொரு இல்லையாம் உயிர்நிலைக்கும் துன்பிற்குத் தானேழும் அணி

பாடலின் பொருள்: அன்பைப் போல இனிமையானது ஒன்றும் இல்லை. அது துன்பங்களைத் தானாகவே பரிகரிக்கக்கூடிய மருந்தாகும். ஆம், இங்கு நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் தலைப்பு இக்குறட்பாவோடு முற்றிலும் பொருந்துகிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைஎன்ற உலக வழக்குச் சாத்தியமாக வேண்டுமெனில், அங்கு அன்பே அடித்தளமாக இருக்க வேண்டும். உயிரோட்டமான வாழ்விற்கு உறவுகள் பலப்பட வேண்டும். உறவுகள் உயிரோட்டம் பெற உள்ளொன்று, புறமொன்று பேசித் திரியாமல், பார்க்காத ஒன்றைப் பார்த்தேன் எனக் கூறி பிறரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதும், கேட்காத ஒன்றைக் கேட்டேன் என அடுத்தவரைப் பற்றி அநியாயமாக அறிவிப்பதும்இப்படியும் இருக்கலாம்எனப் பொய்யான ஊகத்துக்கு உறுதுணை புரிவதைக் களைந்து, திறந்த, பக்குவப்பட்ட மனத்தோடு எல்லாரிடமும் அன்பாக, எளிமையாக, பகிர்வு என்ற பண்போடு காயப்படுத்தாத வார்த்தைகளைப் பேசி, ஆணவம் இல்லா அன்பைக் காட்டி வாழ முற்பட வேண்டும்.

எனது இனம், மதம், சாதி என்ற பெயரால் சமூகத்தைச் சீர்குலைக்கும் அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் குழிதோண்டிப் புதைக்க முன்வருவோம். அமைதியில், ஒற்றுமையில், தோழமையில் கூடி வாழ அன்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுப்போம். அகிலத்தை அன்பால் வயப்படுத்துவோம்.

news
சிறப்புக்கட்டுரை
பற்றற்ற வாழ்வும் தூய குழந்தை தெரேசாவும்

அழகிய சிட்டுக்குருவி ஒன்று பறக்க இயலாமல் தாவித்தாவி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட சிறுவன் ஒருவன் அதனைப் பிடித்து வளர்க்கலாம் என நினைத்து வீட்டிற்கு எடுத்துவந்தான். தன் அன்னையிடம் கொடுத்தான். அன்னையானவள் குருவி ஏன் பறக்க இயலவில்லை என்று சிறகின் தூவல்களைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு நீளமான நெகிழி (Plastic) நூல் சிக்கி இருந்தது. அதனை மெதுவாக எடுத்துவிட, கண்ணிமைக்கும் நேரத்தில் குருவி சிட்டாய்ப் பறந்து சென்றது.

அன்னை தன் மகனிடம்பார்த்தாயா? நாம் ஒரு சிறிய தீச்செயலில் ஈடுபட்டாலும் நம் வாழ்வு குறிக்கோளினை அடைந்துவிட இயலாது. அதனால் பெருந்துன்பங்கள் அடைந்து வேதனைப்பட நேரிடும்என்றுரைத்தாள்.

ஆம், நம் வாழ்வில் குறிக்கோளினை அடைந்திட வேண்டுமெனில் நமது விருப்பங்கள், நாட்டங்கள், விருப்பு-வெறுப்புகள், செல்வம், புகழ், பதவி, அந்தஸ்து இவை அனைத்தும் நிலையானவை அல்ல என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். “அனைத்தையும் நான் குப்பை எனக் கருதுகின்றேன்என்று தூய பவுல் தனது திருமுகத்தில் குறிப்பிடுகின்றார். வெறுமையிலிருந்து படைக்கப்பட்டான் மனிதன். திரும்பவும் வெறுமையை நோக்கிதான் பயணம் செய்கின்றான். இதனிடையே தன் வாழ்வில்என் வீடு, என் உறவு, என் நாடு, என் மொழி, என் உலகம்என்று நம் மனத்தினுள் பெரிய பெரிய கோட்டைகளைக் கட்டி விடுகிறோம். இவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால், ஒருசிலர் இவ்வுலக நாட்டங்களிலிருந்து தங்களையே விடுவித்துக் கொண்டு இறைவனுக்காக, இறைமக்களுக்காகத் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு தனியாகவோ, குழுமமாகவோ வாழ்ந்து மகிழ்கின்றனர்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

எனும் திருக்குறளைத் திருவள்ளுவர் ஏழு பதங்களில் இரண்டடிகளில் பற்றற்ற வாழ்வினைப் பற்றித் தெளிவாக எடுத்தியம்புகின்றார். எல்லாம் வல்ல இறைவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவன்தான் துறவு வாழ்வை மேற்கொள்பவன் என்று விளக்குகிறார்.

பற்றற்ற வாழ்வு அமைதியையும் மகிழ்ச்சியையும் நிறைவான ஆன்மிக வாழ்வினையும் வழங்குகின்றது. நேர்மறையான செயல்பாட்டிற்கும் ஆரோக்கியமான சமநிலைக்கும் வித்திடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்தான் புனித குழந்தை தெரஸ். சிறுவயதிலேயே இறைவனை அன்பு செய்ய வேண்டும், அவரோடு வாழ வேண்டும் என்ற ஆழமான உணர்வினால் உந்தப்பட்டவளாய், தந்தை, சகோதரிகள் இவர்களை விட்டுப் பிரிந்து தனது பதினைந்தாவது அகவையில் கார்மேல் துறவு வாழ்வு வாழ நாட்டம் கொண்டாள்.

அன்பு ஒன்றுதான் நம்மைக் கடவுளுக்கு உகந்தவர்களாக்குகிறது; அன்பின் பொருட்டு என் வீட்டு உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்தும் அந்தத் தியாகத்தை நான் ஒரு பொருட்டாய் எண்ணவில்லைஎன்று தனது பற்றற்ற வாழ்வின் தன்மையை உணர்த்துகிறாள்.

இவ்வுலகில் எவ்வகை ஆறுதலையும் இழந்தவளாய் வாழ்வதே எனக்குப் பேரின்பம்என்று தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகின்றாள். பற்றுகளகற்றி இறைப்பற்றில் வாழும்போது மனிதன் புனிதனாகிறான். துன்பங்கள் அனைத்தையும் இறைவன் தரும் வரமாகக் கண்டாள். தனக்கு வந்திருந்த எலும்புருக்கி நோயினைக்கூட தன்மீது கடவுள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாக நினைத்தாள்.

இறைவனின் அரசில் நாம் பங்குபெறும்போது நம் வாழ்வின் குறிக்கோள் நிறைவடைகிறது. இறைவன் கரங்களில் தவழும் பந்து என்றே தன்னை நினைத்துக்கொண்டு இறைத்திட்டம் தன்னில் நிறைவேறட்டும் என்று வாழ்ந்து வந்தவள் தான்சின்ன ராணிஎன்றழைக்கப்படும் தூய குழந்தை தெரேசா!

தெரேசா இறைவனை முழுமையான அன்பினால் பற்றிக்கொண்டாள். இவ்வுலகம் நிலையானது அல்ல; மற்றொரு வாழ்வு உண்டு என்று எதிர்நோக்கிய தூய குழந்தை தெரேசா, ஒவ்வொரு நொடியையும் விண்ணக வாழ்வினை எதிர்நோக்கியே தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள். தனது பற்றுக்கோடு தன் தலைவன் இயேசுதாம் என முழுமையாகக் கண்டுணர்ந்தாள். இவ்வுலகப் பற்றுகளிலிருந்து நாமும் விடுபட்டு நம்பிக்கை, எதிர்நோக்கு, விசுவாசம் எனும் பண்புகளைப் பற்றிக்கொண்டு நம் வாழ்வு புனிதமடைய நடைபோடுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
உரிமையுடன் உறவாடலே உண்மையான இறைவேண்டல்

உண்மையான இறைவேண்டல் என்பது மனதார இறைவனை நம்பி, அவர்மீது முழுமையான பக்தி கொண்டு, அவரின் வழிகாட்டுதலின்படி நடப்பதாகும். இது வெறும் வார்த்தைகளால் இறைவனை வேண்டுவது மட்டுமல்ல, நம் செயல்களிலும் எண்ணங்களிலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும்.

இறைவனோடு உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துத் தளங்களும் இறைவேண்டலில் இணையும்போதுதான் அது முழுமையானதாக மாறுகிறது. உடலாலும் உள்ளத்தாலும் இறைவனோடு உறவாட வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்கிற நாம், ஆன்மாவிலும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்பதையும் உள்வாங்கி அதைச் செயல்படுத்தவேண்டும்.

ஆன்மா என்றால் என்ன? என்னும் கேள்விக்கு நம் கத்தோலிக்கத் திரு அவை விடை தருகிறது...

உடலையும் ஆன்மாவையும் ஒருங்கே கொண்டவரே மனிதர்கள். அவர்களுக்குள் பருப்பொருள் சார்பற்ற, அழிவுறா ஓர் ஆன்மா இருக்கிறது என்கிறது வத்திக்கான் திரு அவையின் இன்றைய உலகில் திருச்சபை (எண் 14). எப்போதெல்லாம் நமக்குள் இறைவன் பற்றிய தேடல் ஆழப்படுகிறதோ, அப்போதெல்லாம் நம் ஆன்மாவின் சலனத்தை நாம் உணரலாம். எப்போதெல்லாம் ஆண்டவரின் சந்நிதியில் இனம் புரியாத அமைதியும் மகிழ்வும் நம்மை ஆட்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் நம் ஆன்மாவைத் தொடுவதை நாம் அனுபவிக்கலாம். “என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது (84:2) என்னும் திருப்பாடல் வரிகள் நமது  இறைவேண்டலில் நம் உடல், மனம்ஆன்மா இவை மூன்றுமே இணைய வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

இறைவேண்டலின்போது நம் ஆன்மா அகமகிழும் என்பதை  “நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்  (திபா 71:23) என்னும் வரிகள் பறைசாற்றுகின்றன. மகிழ்ச்சியின்போது மட்டுமல்ல, துயர வேளைகளிலும் நம் உள்ளத்தோடு நம் ஆன்மாவும் இறைவனை நோக்கி உயர வேண்டும். எனவே தான், “இஸ்ரயேலின் கடவுளே, கடும் துயரில் உழலும் ஆன்மாவும் கலக்கமுறும் உள்ளமும் உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றன (பாரூ 3:1) என்கிறார் இறையடியார் பாரூக்கு.

உண்மையான இறைவேண்டுதலின் அம்சங்கள்

இறைநம்பிக்கை: கடவுள் இருக்கிறார், அவர் வல்லமை மிக்கவர், அவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும்.

 பக்தி: இறைவனை நேசிப்பதும், அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய கட்டளைகளை மதிப்பதும் பக்தி.

வேண்டுதல்: இறைவனிடம் மனம் திறந்து பேசுவது, நம் குறைகளைச் சொல்வது, அவருடைய ஆசிர்வாதத்தை வேண்டுவது.

நன்றி செலுத்துதல்: இறைவன் நமக்கு அளித்த அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துவது. கடவுள் வழிநடத்தல், இறைவனால் போதிக்கப்பட்ட வழியில் நடப்பது, அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவது.

உண்மையான இறைவேண்டுதலின் பயன்கள்

மனஅமைதி, துன்பங்களிலிருந்து விடுதலை, சந்தோஷம், சரியான வழிகாட்டுதல். உண்மையான இறைவேண்டுதல் என்பது ஒரு பயணம். அது வாழ்நாள் முழுவதும் இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தில் நாம் சோதனைகளையும் துயர்களையும் சந்திக்க நேரிடலாம்; ஆனால், இறைவனை நம்பி அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.

குழந்தை தெரேசாவும் இறையனுபவமும்

குழந்தைகளைப்போல தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் எளிய ஆன்மிகத்தை உருவாக்கினார் குழந்தை தெரசா. அவரது சிறு வழி என்னும் ஆன்மிகம் அசாதாரணமான சிறப்பான செயல்களைச் செய்வதில் அல்ல; ஆனால், வாழ்க்கையில் உள்ள சாதாரண எளிய செயல்களை நன்றாகவும் சிறப்பாகவும் பேரன்புடனும் செய்வதாகும். அவர் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.

அவர் நம்பியது, படிப்பித்தது எல்லாமே கடவுளின் அருள்தான் என்பதாகும். உண்மையான அன்போடும் ஆவலோடும் கவனித்தால், கடவுளின் திருமுகத்தையும் அவரது உடனிருப்பையும் எல்லா மனிதரிலும், நமது வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அனுபவிக்க முடியும் என்கிறார் புனித குழந்தை தெரேசா. இவரது ஆன்மிகம் எளிமையானதுசிறியது, மிகவும் ஆழமானதுமனித நேயம் உடையது.

அன்பான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆழமாக இறைவேண்டல் செய்யக்கூடிய நல்ல மக்களாக எங்களை மாற்றுவீராக! இறைவேண்டல் செய்யும்பொழுது உமது பிள்ளைகளுக்குரிய பண்புகளோடு செய்ய அருளையும் ஆற்றலையும் தாரும்.

news
சிறப்புக்கட்டுரை
அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்

அன்பு என்பது

ஆன்மாவின் மணியோசை!

அதை இசைத்தால் எழுவது அன்பின் வெளிப்பாடு!’

அன்பே எனது அழைப்புஎன்று உணர்ந்தவளாய், தனது 15-வது வயதில் இறைவனின் கரம் பற்றிப்பிடிக்கத் தன்னையே தியாகமாக்கியவள் சிறுமலர் குழந்தை தெரேசா என்ற சின்ன ராணி!

கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே என் நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல், அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்குஎன்று பார்போற்றும் குழந்தை தெரேசாவின்அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்எங்ஙனம் அமைந்திருக்கின்றன என்பது பற்றிய ஒரு பார்வை...

குழந்தை தெரேசா தன்னுடைய ஆன்மிக வழியைஅன்பின் வழிஎன்று தனது நூல்களில் சித்தரிக்கின்றார். தனது அழைத்தலின் திறவுகோலே அன்புதான். திரு அவை இதய அன்பினால் பற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த அன்புத் தீ அணைந்து விடக்கூடாது; அதற்காக நான் செபிக்க வேண்டுமென்று நற்கருணை முன் முழந்தாளிடவும் அவள் தயங்கவில்லை. அன்பின் வெளிப்பாடாகவே தன் செயல்கள் ஒவ்வொன்றையும் குழந்தை தெரேசா பார்த்தாள். அன்பு என்ற உணர்வு அனைத்து அழைத்தல்களையும் தாங்கி நிற்கின்றது. தெரேசா அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித அன்பு குறைவுள்ளது, முடிவுடையது, நிரந்தரமற்றது; ஆனால், நம் கடவுள் நம்மிடம் காட்டுகின்ற அன்பானது முடிவில்லாததாகும்; இதனை ஆழம் பார்க்கவோ, எல்லை காணவோ, அளந்து பார்க்கவோ நம்மால் இயலாதுஎன்கிறார்.

குழந்தை தெரேசாவின் மனம் மாசற்ற, கள்ளங்கபடமின்றி அனைவரிடமும் வேற்றுமை பாராட்டாமல் அனைவரையும் அன்பு செய்யும் இதயமாக அமைந்திருந்தது. தன் அன்னை தனது சிறுவயதிலேயே விண்ணகம் நோக்கிச் சென்றபோது தன் அன்னையிடம் காட்டிய அன்பை இயேசுவின் தாய் அன்னை மரியாவிடம் வெளிப்படுத்தினாள். அனுதினமும் மாதாவின் சுரூபத்தின் முன் தன் தோட்டத்து மலர்களால் அலங்கரித்தாள். தனது மூத்த சகோதரி பவுலினைத் தனது அன்னையாக இருக்க வேண்டும் எனக் கேட்டு, சிறு சிறு செயல்களால் அவர்களை மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டினாள்.

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழையமாட்டீர்கள்; குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன் (மத் 18:3-4) என்ற இறைவார்த்தை குழந்தை தெரேசாவின் வாழ்விற்கு விதை போன்று அமைந்தது. தனது வாழ்வில் அன்பின் வெளிப்பாடாகக் குடும்ப வாழ்விலும் தன் தந்தையோடும் உறவுகளோடும் சகோதரிகளிடமும் குழந்தை உள்ளம் கொண்டு நடைபயின்றாள். அத னையே தான் வாழ்ந்த கார்மேல் துறவற குழுமத்திலும் கடைப்பிடித்தாள்.

தன்னோடு வாழ்ந்த துறவற சகோதரிகளை மகிழ்விக்க கவிதைகள் பல எழுதினாள். சிறு சிறு துணுக்குகளையும் நகைச்சுவைகளையும் கூறி அனைவரையும் மகிழ்வித்தாள். முதிர்வயதுடைய துறவிகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களை மகிழ்வித்தாள். அனைத்தையும் அன்பர் இயேசுவிடம் தான் செய்கின்ற புண்ணிய மலர்களுக்கேற்ப ஆன்மாக்களைத் தரவேண்டும் என்று விண்ணப்பித்தாள்.

ஒருமுறை நாளிதழில் வந்த குற்றவாளி பிரான்சீன் என்ற மனிதன் மனம் மாறுவதற்காகத் தியாகத்துடன் செப மலர்களை அர்ப்பணித்தாள். அது மட்டுமில்லாமல், கடவுளிடம் அவன் மனம் மாறியதற்குரிய அடையாளம் தரவேண்டுமென்று மன்றாடினாள். பிரான்சீன் தனது தண்டனையைப் பெறும் முன், தன் பாவத்திற்கு ஒப்புரவு பெற்று குருவானவர் கரங்களிலிருந்த சிலுவையை முத்தம் செய்தான் என்ற செய்தி கேட்டு குழந்தை தெரேசா ஆனந்தமடைந்து, இயேசுவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நன்றி கூறினாள். இது இயேசுவின்மீதும் பிறர்மீதும் அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

புனிதர்கள் தங்கள் வாழ்வில் கடவுள்மீது அன்பு செலுத்துவதைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கருதினர். அந்த அன்பானது, இருளில் மிளிர்கின்ற ஒளி இருளை அகற்றி, தன் கதிர்களால் பிறர் கண்கள் காண வழிவகுப்பதுபோல, கடவுள் மீது வைத்துள்ள அன்பு பிறர்வாழ்விலும் செயல்பட வைத்தது. ‘ஆண்டவர் இயேசுவின் அன்பு என்னை உந்திக் கொண்டேயிருக்கிறதுஎன்று அடிக்கடி தன் இதயத்தில் கூறிக்கொள்வாள். துறவு நாள்களில் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது பிற சகோதரிகள் துணி சுத்தம் செய்யும் தண்ணீர் தன் முகத்தில் படுகின்றபோதும் மனங்குமுறாமல் அவர்களுக்கு உதவி செய்து அனைவரின் அன்பையும் பெற்றாள்.

நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் அலைமோதும்என்பதற்கேற்ப குழந்தை தெரேசா எப்போதும் தன்னைக் குறை கூறிக்கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரியைக் கண்டபோதெல்லாம் மனதினுள் ஒருவித பயஉணர்வு தோன்றுவதை இயேசுவிடம் கூறி, ‘அன்பிற்குப் பதில் அன்பேஎன்ற நுணுக்கமான கருத்தை அந்தச் சகோதரியிடம் தனது அன்புச் செயல் வழியாக எண்பித்து, அவர்களது அன்பையும் பெற்றாள். இயேசுவிடம் கொண்டிருந்த ஆழமான பக்தி, நோயாளிகளிடத்தில் அவர் காட்டிய பரிவு, கருணை போன்ற நற்பண்புகளில் சிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்தாள்.

அன்பு என்பது ஓர் அற்புதமான உணர்வு. இது ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளச் செய்கிறது. குழந்தை தெரேசா கடவுள்மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும், ஏழை எளியவர், நோயாளிகள், பாவிகள்மீது அன்பும் கருணையும் காட்டினார். அவரது வாழ்வில் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்தார். 9 ஆண்டுகள் துறவு வாழ்வு வாழ்ந்தார். மொத்தம் 24 ஆண்டுகள் உலகத்தில் வாழ்ந்தார். இன்று உலகம் போற்றும் புனிதையாக, மறைவல்லுநராக, மறைபோதக நாடுகளின் பாதுகாவலியாக விளங்குகின்றாள். அவரது அன்பின் செயல்பாடுகள்சிறு வழி என் இயேசுவின் அன்பின் வழிஎன்ற நோக்கில் விண்ணிலிருந்து மலர்களாகிய வரங்களை நம்மில் பொழிந்துகொண்டிருக்கிறாள்.

நம் அன்றாட வாழ்விலும் பிறரிடம் அன்போடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் உதவி செய்வதிலும் பிறர் துன்பங்களில் பங்கேற்பதிலும், பிறரைப் பாராட்டி மகிழ்வித்து இறைச் செயல்களைப் பிறருக்குச் செய்து, அன்பின் வழியில் வாழ்ந்திட நடைபோடுவோம்.

 

news
சிறப்புக்கட்டுரை
இன்றைய நுகர்வு உலகில் தெரேசாவின் எளிமை!

செல்வந்தன் ஒருவன் ஒற்றைக் காலில் நின்று தவம் கிடந்தான். கடவுள் தோன்றி தங்கம் தரவேண்டும் என்பதே அவனது கோரிக்கை. ஏழைகளுக்கு உடனடியாக வரும் கடவுள், அவனுக்குத் தாமதமாகவே வந்திறங்கினார். கடவுள் தமது செங்கோலால் ஒவ்வொரு சிறிய பொருளையும் தொட்டார். தங்கமாக மாறியது. அவனது உள்ளத்தில் பெரிய மகிழ்ச்சி. கடவுளும் தொட்டுக்கொண்டே இருந்தார். பேரானந்தத்தில் திளைத்தான். கடவுள் தம் செயலை நிறுத்தவில்லை. ஆனால், அவனுள் வருத்தம், சோகம், சோர்வு. கடவுளிடம் சற்றுச் சத்தமாகவே கூறினான்: “கடவுளே! அந்தச் செங்கோலை மட்டும் தந்துவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன்என்று.…

மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள்! ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்! ஒவ்வொரு நொடியும் அவனது ஆசைகள் மாறுகின்றன. மாறிக்கொண்டே இருக்கின்றன. ‘மனம் ஒரு குரங்குஎன்பதுபோல மாறுகின்றான். தற்கால உலகினில் அவனது ஆசைகள் முரண்பட்டு முட்டிக்கொள்கின்றன. தான் ஆசித்தது கிடைத்துவிட்டது என்றாலும், அவன் ஆசித்தது கரங்களில் கிடைத்தது. அடுத்த கணமே பழையதாய் மாறியதை நினைத்து தன்னிடமே கோபம் கொள்கின்றான். இவ்வாறாக, தாங்கள் பார்ப்பது, கேட்பது, தொடுவது, நுகர்வது, சிந்திப்பது என அனைத்தையும் அபகரித்துக்கொள்வதில் உள்ள வேகம் கூடிக்கொண்டே செல்கிறது.

மனிதச் சிந்தனைகளின் அளவுக்குமேல் வியாபார உலகமும் தனது உற்பத்தித் தந்திரங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. சந்தைக் கலாச்சாரத்தில் உடனுக்குடன் கலந்து குவிந்துவிடுகின்றன. மானுடருக்குத் தேவையானது என்பதல்ல; மாறாக, சந்தையில் இருப்பது இவரிடத்திலும் வேண்டும் என்ற மனநிலையில் சந்தைக் கலாச்சாரம் மானுடர்களை விழுங்கி பல ஆண்டுகளாகி விட்டன.

கடவுள் அழகிய உலகினைப் படைத்திருக்கிறார். அனைவருக்குமான வாழ்வை உருவாக்கியிருக்கின்றார். இது ஓர் அழகான வட்டம். ஒருவர் சுவாசிக்கும் காற்று எங்கும் வியாபித்திருக்கிறது. ஒருவர் குடிக்கும் தண்ணீர் எங்கும் நிறைந்திருக்கிறது.

ஒருவர் வாழும் பூமி எங்கும் தாங்கிக்கொள்கிறது. சந்தையில் தருவது எனக்கு மட்டுமே! கடவுள் தருவது எல்லாருக்குமே! சந்தை என்னை விற்கிறது! கடவுளின் இயற்கை என்னை வாழ்விக்கிறது! நான் பருகும் தண்ணீரைச் சந்தை எனது வீட்டினுள் தருகிறது. கடவுள் நான் செல்லும் இடமெல்லாம் தண்ணீர் தருகிறார். சந்தை எனது உழைப்பினை உறிஞ்சிக்கொள்கிறது. கடவுள் எனது உழைப்பிற்குப் பலன் தருகிறார். எனக்கு மட்டுமல்ல, வாழும் ஜீவராசிகள் அனைத்திற்கும் தருகிறார்.

ஆம், நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஓர் எளிய வாழ்வினை வாழ்ந்தவராகத் திகழ்கிறார்... இன்று நாம் கொண்டாடும்எழிலரசி, ‘சின்ன ராணிஎன்று பாசமாக அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசம்மாள். சத்தம் மிகுந்த இவ்வுலகில் சலனமில்லாமல் வாழ்ந்தவர், செபித்தவர், சிந்தித்தவர். உலகெங்கும் அன்பின் நற்செய்தியாய் இன்றளவும் செயலாற்றுகிறார். சூரியனின் வெளிச்சம் பூமியைச் சூழ்வதுபோல், அவரது ஆன்மாக்களின் மீட்புக்கான செபம் இன்றும் நம் உலகைச் சூழ்ந்திருக்கிறது.

குழந்தை தெரேசம்மாள் சந்தைக்குச் சென்றவரல்லர்; வாங்கியவரும் அல்லர்; விற்றவரும் அல்லர்; சந்தைக் கலாச்சாரம் என்பது ஒரு துளியும் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர். அணிகலன்கள் இல்லை, ஆபரணங்கள் இல்லை, முகப்பூச்சுகள் இல்லை, வாசனைத் திரவியங்கள் எதுவுமில்லை. ஆனால், அழகோ அழகு! கொள்ளை அழகு! மல்லிகையும் தோற்கும் அளவுக்கு அழகு! இறையன்பினால் சுடர் வீசுகிறார்! ஆனால், நம்மைச் சூழ்ச்சியால் தந்திரமாய்ப் பிரித்தது சந்தைக் கலாச்சாரம் தானே! இந்தக் கலாச்சாரம் கண்களுக்குப் பளபளவென, கமகமவென, மினுமினுவென, சுடச்சுடவென, வெதுவெதுவென நிற்கும்போது அவனே எனக்குத் தோழன் என்று சொல்லும்போது, ‘நானே தோழன் வேடத்தில் வந்த எமன்என்று சிரிக்கின்றானே சந்தை! என்னவென்று சொல்வது?

ஒரு சூரியன், ஒரு நிலா, கோடி விண்மீன் வெளிச்சமும் அழகும் குறைவுபடுகிறதா? இல்லையே! ஆம், அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம்தானே நம் பூமி! அது கடவுளிடமிருந்து தோன்றியது அல்லவா! அதேபோன்று, தனது அழைத்தலின் திறவுகோல் அன்பு என்பதை உணர்ந்து, அன்பே என் அழைப்பு, கிறிஸ்துவே என் அன்பு, அவரே எனது இறைவாழ்வு என்று புனித குழந்தை தெரசம்மாள், அன்பை ஆடையாக அணிந்து இறையன்பினால் உந்தப்பட்டு, எளிமையின் அரசியாய், ‘கீழே கிடக்கும் ஒரு குண்டூசியை எடுப்பதன் மூலம் ஓர் ஆன்மாவை மீட்க முடியும்என்று கூறி எளிய வாழ்வு வாழ்ந்தது ஆச்சரியம் அல்லவா! அவளின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழும் நாமும், எளிமையான உள்ளம் கொண்டவர்களாய், சின்னஞ் சிறியவற்றையும் பேரன்போடு செய்வோம். இறையன்பினால் ஈர்க்கப்பட்டு, நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் அன்னையவளின் வழி தொடர்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
புது விடியலின் பூபாளம்: புனிதை தெரேசாவும் நற்செய்தி அறிவிப்புப் பணியும்

அனுபவமும் அனுப்புதலும்!

திருவிவிலியத்திலும் இறைவெளிப்பாட்டிலும் மீட்பின் திட்டத்தின் அச்சாணியாகவும் அடிநாதமாகவும் விளங்குவது இறை-மனித அன்பு. இவ்வன்பின் இரு பரிமாணங்கள்: அனுபவமும் அனுப்பப்படுதலும். மோசேவுக்கு யாவே இறைவன் பற்றி எரியும் முட்புதரில் வழங்கிய காட்சியில் இவ்விரு அம்சங்களும் வெள்ளிடை மலையாகக் காணப்படுகின்றன. அனைத்து நற்செய்திப் பணியாளர் வாழ்விலும் அனுபவமும் அனுப்பப்படுதலுமே இறைஞானமாக மிளிர்கின்றது.

புனித தெரேசாவின் வாழ்வில் அனுபவமும் அனுப்பப்படுதலும்

பிரான்சு நாட்டில்  லிசியு நகர் கார்மேல் மடத்தில் அடைபட்ட அனுபவ வாழ்விலிருந்து எவ்வாறு இத்தகையதொரு செயல்பாட்டு வாழ்வு தெரேசாவுக்கு மலர்ந்தது என்பது இன்றைய பின்நவீனத்துவச் சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக அமையலாம். ஆனால், ‘சிறு மலர்என்று அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசா, இயேசுவை அளவுகடந்த விதத்தில் அன்பு செய்து, உலகின் அனைத்து மக்களுக்காகவும் தன்னையே கையளித்து வாழ்ந் தார். இந்தத் தூய அன்பானது அனைவரையும் சமமாகப் பார்க்ககூடிய ஒரு பரந்த, பாகுபாடற்றப் பார்வையைக் கொடுத்தது. இயேசுவை அன்பு செய்யவும், அவரது அன்பை அகிலமெங்கும் பரப்புவதையுமே தனது கார்மேல் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார்.

வரைமுறைகளைக் கடந்த புதுப்பார்வை

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் வாழ்ந்த பூர்வீகக்குடிகளை அழித்து, அவர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் ஐரோப்பியர்கள் கைப்பற்றித் தங்கள் காலனி நாடுகளாக மாற்றினர். இத்தகைய பின்புலத்தில் தெரேசா இந்த ஏழை பூர்வீகக்குடிகளை, “கடவுளைக் கவரக்கூடிய காட்டு மலர்கள் இவர்கள்; இவர்களுடைய உள்ளங்களில்தான் கடவுள் இறங்கி வருகிறார்என நேர்மறையாகப் பார்க்கிறார். அன்றைய ஐரோப்பிய வரைமுறையைக் கடந்த புதுப் பார்வையாக அவரது அணுகுமுறை அமைகின்றது.

தெரேசா தன்னையும் ஒரு காட்டுச் சிறுமலர் என அழைத்து, ‘நானும் அந்தப் பூர்வீகக்குடிகளும் ஒன்றேஎனச் சமத்துவம் பேசுகின்றார். பிற சமய கலாச்சார மரபுகளை மதித்து உரையாடுவதே நற்செய்திப் பணி என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க புதுப்பார்வையன்றோ அவரில் வெளிப்பட்டுள்ளது!

தெரேசாவின் வாழ்வில் நற்செய்திப்பணி ஆர்வங்கள்

1. பிரான்சினியின் மனமாற்றம்

ஆன்மாக்களை இயேசுவிற்காக அறுவடை செய்யும் மீனவராக தெரேசா தன்னைக்  கருதுகின் றார். அவரது இந்த முயற்சியில்இயேசுவே வலைகளை வீசி மீன்களைப் பிடிக்கின்றார்எனக் கூறுவது, இயேசுவோடு எந்த அளவிற்கு ஒன்றித்திருக்கிறார் எனக் காட்டுகிறது. இந்த ஒன்றிப்பானது அவரது உள்ளத்தில் பிறரன்புத் தீயை மூட்டியது.

சிலுவையில் இயேசுதாகமாயிருக்கிறதுஎன்று கூறியதுஆன்மாக்களுக்காகஎன்றே பொருள்படுகிறது. எனவே, பாவத்தாலும் தீமைகளாலும் இயேசுவை விட்டு விலகியிருக்கும் அனைவரையும் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கத் துடித்தார் தெரேசா.

இத்தகைய பின்புலத்தில் பிரான்சினி என்ற குற்றவாளி ஒருவர் மரண தண்டனைத் தீர்ப்புப் பெற்றார் என்றும், பல அருள்பணியாளர்கள் முயன்றும் மனம் மாற மறுக்கிறார் என்றும் தெரேசா கேள்விப்பட்டார். பிரான்சினியின் மனமாற்றத்திற்காக இடைவிடாது உருக்கமுடனும் உரிமையுடனும் இயேசுவிடம் இறைவேண்டல் செய்தார். ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் கடைசி நிமிடத்தில் அந்தக் குற்றவாளி மனமாற்றம் பெற்றவராய் அருள்பணியாளரிடமிருந்து சிலுவையைப் பெற்று மூன்று முறை முத்தம் செய்தார்.

இந்தச் செய்தியை வாசித்தபோது  “மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7) என்ற இறைவாக்கின்மீது நம்பிக்கை கொண்டு பல ஆன்மாக்களை மீட்க வேண்டும் என்ற தாகம் பன்மடங்கு தனது உள்ளத்தில் பெருகியதாகக் கூறுகின்றார்.

2. அன்பின் பணியே நற்செய்திப் பணி

சிறுமலர் தெரேசா, பவுலடியாரின் 1கொரி 12:29-31;13:1 ஆகிய இறைவார்த்தைகளின் அடிப்படையில்திரு அவையில் அன்பு செய்யும் இதயமாக இருப்பேன்எனக் கூறி, அன்பே எனது அழைத்தல் என்று குறிப்பிடுகிறார்.

ஓர் அருள்பணியாளராக, போர்வீரராக, திருத்தூதராக, மறைப்போதகராக, மறைச்சாட்சியாக, இறைவாக்கினராக... உலகம் முழுவதும் பயணம் செய்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, சிலுவையிலிருந்து வரும் மீட்பை அனைவரும் பெறுவதற்கு என்னை அர்ப்பணிக்கின்றேன்என்ற வரிகள் அவரது நற்செய்திப் பணியின் ஆர்வத்தையும் அவசரத்தன்மையையும் சுட்டிக்காட்டுகின்றன.

இயேசுவின் மீட்பின் செய்தியை ஐந்து கண்டங்களிலும் அறிவிக்க விரும்புகிறேன்எனக் கூறும் அவர், படைப்பின் தொடக்கத்திலிருந்து, உலக முடிவுவரை நான் நற்செய்திப் பணியாளராக விரும்புகிறேன்; அதற்காக என் இறுதிச் சொட்டு இரத்தம் வரை சிந்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

3. நடைமுறை வாழ்வில்

அடைபட்ட கார்மேல் வாழ்வு என்பது புனி மானது, அமைதியானது. ஆனால், அந்த அமைதியும் புனிதமும், தியாகத்திலும் தாழ்ச்சியிலும் மன்னிப்பிலும் விளைந்த கனிகள்தாம். துறவு சகோதரிகளாக இருந்தாலும், ஒரே இடத்தில் வாழ்ந்து, செயல்பட்டு, கடமைகளைச் செய்யும்போது உறவுகளில் உரசல் கள், கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் சவால்கள், ஆழ்நிலைத் தியான இறைவேண்டல் பயணத் தில் வரும் நம்பிக்கைத் தளர்வுகள், உள்மன வறட்சிகள் என்று எத்தனையோ சவால்கள் அவ்வாழ்வில் உள்ளன. இத்தகைய சவால் நிறைந்த வாழ்வைக் கார்மேல் அருள்சகோதரிகள் ஏன் வாழ்கின்றார்கள்? என்ற உலகினரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்தான் சிறுமலர் தெரேசாவின் வாழ்வு.

புன்முறுவலோடு ஒவ்வொரு துன்பத்தையும் ஏற்று, கிறிஸ்துவின் அன்புப் பணிகளுக்காக தீமைகளிலும் அறியாமையிலும் கொடிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மன மனமாற்றத்திற்காக அர்ப்பணித்து அர்த்தம் கொடுத்தார். ஒவ்வொரு சோதனையையும் சவால்களையும் புரிந்துகொள்ளாத் தன்மைகளையும் நற்செய்திப்பணிக்கான அர்ப்பணிப்பு என்ற மனநிலையோடு ஏற்றுக் கொண்டார்.

தான் நோய்வாய்ப்பட்டதை உணர்ந்து தெரேசா, ‘இந்தச் சிறுமலரின் வாழ்வு எவ்வாறு நிறைவடையும்?’ என்ற கேள்வியைக் கேட்கின்றார். ஒருவேளை இளம்வயதிலேயே இயேசுவின் பாதத்தில் உதிர்ந்து விழலாம். ‘உடல் நலத்தை இறைவன் அருளினால் தொலைதூர நாடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணித்தளங்களில் நிறுவப்பட்டுள்ள கார்மேல் மடங்களுக்குச் சென்று வாழ்வேன்என்று உறுதி கொண்டார். தொலைதூரங்களில் பணிசெய்து வாழும் நற்செய்திப் பணியாளர்களுக்காக நற்செயல்களைச் செய்து இயேசுவின் பாதத்தில் மலர்களாகக் குவித்தார்.

1யோவான் 3:18 - “நம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்என்று கூறுகின்றது. சிறுமலர் தெரேசா தன் வாழ்வை அன்பின் சக்தியாக மாற்றி, அந்த அன்பின் சக்தியால் இயேசுவோடு ஒன்றித்து, அகிலத்தையும் ஆட்கொண்டார். அன்பின் தூதுவராக எல்லைகளைத் தாண்டி வருகின்ற அவரது வாழ்வு இன்றைய உலகில்புது விடியலுக்குப் பாடப்படும் பூபாளமாகஅமைகின்றது என்பதில் சந்தேகமில்லை.