இன்றைய வேகமான உலகில், இளையோர் பெரும் கனவுகளோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகப் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நகரங்களில் தனியாக வாழத் தொடங்குகிறார்கள். இந்த வாழ்க்கை அவர்களுக்குச் சுதந்திரத்தைத் தந்தாலும், அதனுடன் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் பெரும் பொறுப்பையும் சேர்த்தே வழங்குகிறது.
சூழலும் மனநிலையும்:
ஒரு மனிதன் வாழும் இடமானது அவனது மனநிலையை மெதுவாக வடிவமைக்கிறது. சுத்தமான சூழல் மனத்தை இலகுவாக்கும்; அதுபோன்று, அலட்சியமான சூழல் மனத்தைச் சுமையாக மாற்றும். இது உடனடியாகத் தெரியாவிட்டாலும், நாளடைவில் ஒருவரது வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும். இதற்கு ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கைச் சம்பவமே சிறந்த உதாரணம். வேலை நிமித்தமாகத் தனியாக வாழத் தொடங்கிய அவள், ஆரம்பத்தில் சமூக ஊடகங்களிலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கி இருந்தாள். ‘நேரமில்லை’
என்ற காரணத்தைக் கூறி வீட்டைச் சுத்தம் செய்வதைத் தள்ளிப்போட்டாள். விளைவாக, வீட்டில் குப்பை தேங்கியது போலவே, அவள் மனத்திலும் குழப்பங்களும் பதற்றமும் தேங்கின. ஒரு கட்டத்தில், அது மன அழுத்தமாக மாறுகிறது.
வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என நினைத்த நேரத்தில்
தனது வீட்டைக் கவனித்தாள். அவளுக்கு அப்போது ஒன்று தோன்றுகிறது, ‘இந்த
வீடு எப்படி இருக்கிறதோ, என் மனமும் அப்ப டித்தானே இருக்கிறது!’ என்று. தனது முடிவை ஒதுக்கிவைத்துவிட்டு, துடைப்பத்தை எடுத்து வீட்டில் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அது வெறும் வீடு சுத்தம் செய்வது மட்டுமல்ல; அவள் மனச் சிதைவுகளைச் சீரமைக்கும் முயற்சியாகவும் மாறியது.
இன்றைய இளையோரின்
சவால்கள்:
இன்றைய இளையோர் சுதந்திரத்தை மிகவும் விரும்புகின்றனர். இந்தச் சுதந்திரத் தேடலில், அவர்கள் பல நேரங்களில் பாதுகாப்பின்
எல்லைகளை மீறவும் முயல்கிறார்கள். ஆகையால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலுடன் சுதந்திரத்தை வழங்குவது மிக முக்கியமானது. அவர்கள் தாங்களாக முடிவுகளை எடுக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றால், அவர்களின் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு மேம்படும். மேலும், இன்றைய இளையோருக்கு வெளிப்புறச் சவால்களைவிட, உள்ளுக்குள் நடக்கும் போராட்டங்களே அதிகம். மற்றவர்களுடன் ஒப்பிடுதல், சமூக ஊடகங்களின் தாக்கம், தனிமை மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்றவை மனத்தை மெதுவாக மாசுபடுத்துகின்றன. தூய்மை என்பது தேகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்ல, அது மனத்தெளிவையும் சார்ந்தது.
மனத்தையும் இதயத்தையும்
சுத்தமாக
வைத்திருக்க சில எளிய
பழக்கங்கள்:
இடத்தைச் சுத்தப்படுத்துதல்:
உங்கள் இருப்பிடத்தைச் சுத்தமாக வைப்பது சுய ஒழுக்கத்தைக் கற்றுத்தரும்.
திரை நேரத்
தணிக்கை:
தினமும் சிறிது நேரம் சமூக ஊடகங்களிலிருந்து விலகிDigital Detox செய்யுங்கள்.
குறிப்பெடுத்தல்:
எண்ணங்களையும் அன்றாடச் சம்பவங்களையும் எழுதும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
நல்ல சூழல்:
தேவையற்ற ஒப்பீடுகளை நிறுத்திவிட்டு, நல்ல நண்பர்களையும் நேர்மறையான சிந்தனைகளையும் கொண்ட சூழலைத் தேர்வு செய்யுங்கள்.
வாழ்க்கை
கட்டுப்பாட்டில் இல்லாததுபோல் தோன்றும் கடினமான நேரங்களில், அச்சூழலிலிருந்து தப்பிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிறிய இடைவேளை எடுங்கள். சூழலைச் சுத்தம் செய்வதும், செபம் அல்லது தியானம் மூலம் மனத்தை அமைதிப்படுத்துவதும் உள்ளத்தைச் சுத்திகரிக்க உதவும். மேலும், பகுதி நேர வேலை செய்வது, புதிய விளையாட்டுகளை முயற்சிப்பது போன்ற ஆரோக்கியமான செயல்களில் ஈடுபட வேண்டும். இது முழுமையான வளர்ச்சிக்கும் நல்ல பாதையை உருவாக்கும்.
உலகத்தை
மாற்றும் சக்தி கொண்ட இளையோரின் அந்த மாற்றம், வெளியிலிருந்து அல்லாமல் உள்ளிருந்து தொடங்கவேண்டும். ஒரு சுத்தமான இடம், தெளிவான மனம் மற்றும் சமநிலையான வாழ்க்கைமுறை ஆகியவையே உண்மையான வளர்ச்சியின் அடையாளங்களாகும்.
“தூய்மையான உள்ளத்தோர்
பேறுபெற்றோர்...”
(மத்தேயு
5:8).
‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்’ (குறள்
2)
குறள் விளக்கம்:
தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் எதுவுமில்லை.
சிந்தனை:
கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ‘நம்பினால் கடவுள்; நம்பாவிடில் வெறும் கல்’ என்ற வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
நாத்திகர் மற்றும் ஆத்திகர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நம்பிக்கையில் மாறுபாடுகள் அமைந்தாலும், ஒருவர் மற்றவருடன் நல்ல நட்பு பாராட்டமுடியும். ஒருவர்
ஒருவரது நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
அன்றைய
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவிடம், “நீங்கள் தீவிர கொள்கைப் பிடிப்புமிக்க ஒரு கம்யூனிசவாதி; அன்னை தெரசாவோ ஒரு தீவிர ஆன்மிகவாதி; உங்கள் இருவருக்கும் இடையே எப்படி நட்பு மலர்ந்தது?” என்று கேட்டார்கள். சிரித்துக்கொண்டே ஜோதிபாசு கூறிய பதில்: “நாங்கள் இருவருமே ஏழைகளை நேசிப்பவர்கள் என்பதனால்தான்” என்றார்.
மேலும், “எனது மார்க்சியக் கொள்கைகளைத் தடுமாற வைக்கிறார் அன்னை தெரசா! ஏனெனில், இறைவனின் நன்மைத்தனத்தின்மீது நம்பிக்கை வைக்க அவர் என்னைத் தூண்டுகிறார்” என்று
சதுர்வேதி என்பவர் ஜோதிபாசு கூறியதாக ‘ஏழைகளின் மெசியா’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
‘கடவுள் அன்பாயிருக்கிறார்’ என
அனைத்து மதங்களும் போதிக்கின்றன. அதனால் அன்பைக் கடவுள் எனலாம். எனவே, அன்பினால் உந்தப்பட்டு மனுக்குலத்திற்கு ஆற்றும் பணிகளைப் பிறரன்புச் செயல்கள் என்கிறோம். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்கிறோம். இதிலிருந்து கடவுள் என்பவர் எட்டாத தொலைவில், காணமுடியாத வகையில் இருப்பவர் அல்லர்; நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள நன்மைத்தனத்தின் வடிவமே அவர். கற்றுத் தெளிந்தோரும் பாமரரும் இந்த மறைபொருளை எளிதில் அறிந்துகொள்ள முடியும். நம்பிக்கை கண்கொண்டு மட்டுமே கடவுளை நோக்க முடியும்.
“மாவீரன் அலெக்சாண்டர் மற்றும் மாமன்னர் சார்லிமென் போன்றோர் படைபலத்தால்தான் பேரரசுகளை நிறுவினர்; ஆனால், அளவற்ற தம் அன்பால் ஆட்சிப் பீடம் அமைத்தவர் இயேசு கிறிஸ்து. அவருக்காக இரத்தம் சிந்தவும் இறப்பைத் தழுவவும் இன்றும் பல்லாயிரம் மக்கள் முன்வர உள்ளனர்” என்றார் பிரான்சின் பேரரசன் நெப்போலியன் போனபார்ட் (1769-1821).
“ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்”
என்று நீதிமொழிகள் (1:7) கூறுகிறது. இறையச்சம் தீய செயல்களைத் தவிர்த்து, நல்வாழ்வு வாழ உறுதுணையாயிருக்கும்.
உண்மையான
இறையடியார் பாவத்தில் வெகுநாள் வாழ முடியாது. தீமையைத் தொடர்ந்து செய்ய அவர் மனம் ஒப்பாது. உறுத்திக்கொண்டே இருக்கும். நன்மையே உருவான இறைவனுக்கு உகந்தது எதுவோ, அதுவே அவரில் குடிகொள்ளும். தீமைக்கு அங்கு இடமில்லை. ஒளியாம் இறைவன் அருகில் இருள் நிற்க இயலாது. இத்தகைய மனநிலையைத் தரும் இறையச்சமே ஞானத்தின் தொடக்கம். எனவே, கற்றுத் தேர்ந்த ஞானிகள் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனில் நம்பிக்கை இல்லாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.
மனிதனுக்கு
உறுதியூட்டும் இறைநம்பிக்கை நல்லது. ஆனால், ஒருவர் தனது இறைநம்பிக்கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, பிறரது நம்பிக்கையைத் தாழ்வாக நினைப்பது தவறு. நமது சிந்தனையில் கடவுளைச் சிக்கவைப்பது சாத்தியமல்ல. இறைவனைத் தேடித்தேடி அலைபவர்கள் பலர் உள்ளனர். அதில் முக்தியும் கண்டவருண்டு. ‘கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்வி எழாத மனித மனமும் உண்டோ? ‘கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்’
என்போரே பலர். நன்மை உருவாக, அன்பின் வடிவாக இறைவனைக் காண்போம்.
உண்மையில் விவரம் தெரிந்த பிள்ளைகள் எத்தனை பேர் தங்கள் பெற்றோருக்குத் தங்களைவிட அதிகம் தெரியும் என்று நினைக்கிறோம்? அவர்களுடைய அறிவையும் அனுபவத்தையும் மதிக்கிறோம்?
“அம்மா, நீ சும்மா இரும்மா.
உனக்கு ஒண்ணும் தெரியாது.”
“அப்பா, இது எனக்கு உடனே வேணும்பா. ஏம்பா இப்படிப் புரியாம பேசுறே?”
இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகளை நாம் எத்தனை முறை நம் பெற்றோர்மேல் சுமத்துகிறோம்?
எனக்குத்
தெரியும்... நான் எனக்குப் பிடித்ததைத்தான் சாப்பிடுவேன், பிடித்தபடி உடுத்துவேன், பிடித்தவர்களோடு பழகுவேன்...
ஒரே
பிள்ளை என்று செல்லமாக வளர்க்க முயலும் பெற்றோர்கள் இத்தகைய பிடிவாதப் போக்கைக் குழந்தைகளிடம் வளர்த்துவிடுகிறார்கள். அப்பா கண்டிக்க முயன்றால், அம்மா குறுக்கே வருவார். அம்மா கண்டிக்க முயன்றால், அப்பாவின் குறுக்கீடு, தாத்தா-பாட்டியின் குறுக்கீடு. இதுவா நம் இளைய தலைமுறையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துகிறது? நிச்சயம் இல்லை!
இளைஞர்களாகிய
நாம் வளரவேண்டும். நிச்சயம் நம் சொந்தக் காலில் நிற்கப் பழகவேண்டும். ஆனால், இது படிப்படியாக நிகழவேண்டும். இந்த வளர்ச்சியில் மூன்று படிநிலைகள்: 1. நாம் பிறக்கும் போது முற்றிலுமாக நம் தாயையும் பெற்றோரையும் சார்ந்திருக்கிறோம். 2. அடுத்த கல்விப் பருவத்தில் நாம் படிப்படியாக நம் சொந்தக் காலில் பெற்றோர், ஆசிரியர், சக நண்பர்களின் துணையோடு
வளரப் பழகுகிறோம். 3. உயிரினங்களிலேயே நமக்குத்தான் மிக நீண்ட 20, 25 ஆண்டுப் பயிற்சிக்காலம் கிடைத்திருக்கிறது. இந்தக் காலம் முழுவதும் நாம் பெற்றோரையும் ஆசிரியரையும்தான் நம்பி இருக்கிறோம். பெற்றோரின் உழைப்பும் அன்பும் அரவணைப்பும்தான் நம் தேவைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் நிறைவு செய்கிறது.
நம்
உணவு, உறைவிடம், வாழ்க்கை, வசதிகளைத் தேடித் தருவது மட்டுமல்ல; நமது உடல் நலம், நல்ல பழக்கங்கள், நல்ல ஒழுக்கம், நல்ல கல்வி ஆகியவற்றைத் தேடித்தருவதும் அவர்களுடைய கடமையாகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பல கடுமையான தியாகங்களைச்
செய்கிறார்கள். நாம் ஒரு வேலைக்குப் போய்ச் சொந்தமாகச் சம்பாதித்து நம் சொந்தக் காலில் நிற்கும்வரை அவர்கள்தான் நம்மை வளர்க்கிறார்கள்.
நாமே
நம் காலில் நின்று, நம் பெற்றோரையும் நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும்போதுதான் நாம் முழுச்சுதந்திரத்தைப் பெறுகிறோம். நாம் முழுமையாக வளர்க்கப்படும் முதல் பருவத்தில் சிக்கல் எதுவுமில்லை. நம்முடைய தேவைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு பெற்றோர் நிறைவேற்றி வைத்து விடுகிறார்கள்.
நாம்
நாமாகச் சிந்தித்துச் செயல்படப் பழகும்போதுதான் நம் மனப்போராட்டம் தொடங்குகிறது. பதின்பருவங்களில் ஏற்படும் உடல்நிலை மாற்றங்களும் நமக்குள்ளே ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படத் தொடங்குகிறோம். சுயசிந்தனை, நிதானம், சக நண்பர்களையும் மதித்துச்
செயல்படும் பக்குவம் போன்ற வாழ்க்கைப் பண்புகள் உருவாகத் தேவையான அனுபவங்கள் பதின்மப் பருவத்தைத் தாண்டிய பிறகுதான் வந்து சேர்கிறது.
இந்த
மனப்பக்குவம் வந்து சேரும்வரை நாம் பெற்றோரையும் ஆசிரியரையும் மற்ற வழிகாட்டிகளையும் மதித்து, அவர்கள் காட்டும் வழித்தடங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயல்பட நாம் பழகிக் கொள்ளவேண்டும். இப்படிப் பழகிக்கொள்கிற பிள்ளைகள்தாம் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இப்படிப் பயிற்றுவிக்கிற பெற்றோர்தாம் தங்கள் முதுமைப் பருவத்தை நிம்மதியாகக் கழிக்கிறார்கள்.
வளர்க்கப்படும்
பருவத்திலிருந்து, சொந்தக் காலூன்றி வளரும் பருவத்தை நோக்கி நகர்கின்ற பயணம் நீண்டது. இருபது ஆண்டுகள் வரை நீண்டு நிற்பது சலனங்களும் சவால்களும் நிறைந்தது. நன்றாக வளர்ந்து நிற்கும்வரை, நாம் வளர்க்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து பயணிப்போம். வெற்றி நிச்சயம்!
‘என் பெற்றோருக்கு
என்மேல்
அக்கறை
உண்டு!
அவர்களால்தான்
நான்
பக்குவமாக
வளர்க்கப்படுகிறேன்.
என்
சொந்தக்
காலில்
நிற்கும்
முழுத்திறமையும்
வரும்வரை
நான்
அவர்களுக்குப்
பணிந்திருப்பேன்.’
‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று’
என்ற
சான்றோரின் கூற்றிற்கிணங்க எம் சபை நிறுவுநர் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவை 1973-ஆம் ஆண்டிலிருந்து நான் பார்ப்பதற்கும், அவர் சொல் கேட்பதற்கும், அவருடன் இரண்டு ஆண்டுகள் வாழ்வதற்கும் கிடைத்த வாய்ப்பை இறைவன் எனக்களித்த பெரும்பேறு என்றே கூறுவேன்.
அன்னையைப்
பார்த்தால் அவர்களின் கண்களில் கருணை, சொல்லில் இனிமை, செயலில் நன்மை, வாழ்வில் எல்லாம் இறைச்செயல் மிளிர்ந்ததைப் பார்க்க முடிந்தது. அன்னை
அவர்கள் ஆதரவற்ற அனைவரையும் (முதியோர், விதவைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், கைவிடப்பட்ட குழந்தைகள்) அன்புடன் அரவணைத்ததைப் பார்த்தேன். பாசத்தோடு பராமரித்ததைக் கண்டேன். அவர்கள்
அனைவரிலும் இறைவனைப் பார்த்ததை உணர்ந்தேன். இத்தகைய
அன்னையின் வாழ்வில் என் உள்ளத்தை உரசியது அன்னையின் ஏழ்மை!
“நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்; அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்”
(2கொரி 8:9). இறைவன் நாம் வளமாக மகிழ்வாக வாழும் பொருட்டு அவர் ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாக இறந்தார். அதுபோன்று இயேசுவின் அடியாராகிய நம் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவும் செல்வச்செழிப்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் ஆரம்பித்த இயேசுவின் திரு இருதய சபையின் இலக்கு மக்களுக்காக, அவர்களின் நல்வாழ்விற்காகத் தன்னை ஏழ்மையாக்கிக்கொண்டார்.
நான்
1973-ஆம் ஆண்டு எம் துறவற சபையில் நுழைந்தேன். முதல் இரண்டு வருடங்கள் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவோடு அழகப்பபுரம் இல்லத்தில் வாழும் பேறுகிடைத்தது. அந்நாள்களில்
அதிகாலை 5 மணி திருப்பலிக்கு 4.30 மணிக்குப் புறப்பட்டு அன்னை அவர்களோடு சேர்ந்து போவோம். ஒருநாள்
திருப்பலி முடிந்து வரும்போது அன்னையின் கால்களில் வெவ்வேறான காலணிகளைப் போட்டிருந்ததைப் பார்த்து என் மனம் வெகுவாகப் பாதித்தது. ஒருவேளை அதிகாலையில் புறப்பட்டதால் தெரியாமல் போட்டு வந்தார்களோ? என நினைத்தேன்.
இல்லத்திற்குள்
வந்ததும் அன்னையிடம் கேட்டேன்: “ஏன் அம்மா, இப்படி இரண்டு கால்களிலும் வேறு வேறு செருப்பு போட்டிருக்கிறீர்கள்?” என்று. அதற்கு அவர்கள் கூறிய பதில்: “தாயி, ஒரு செருப்பு தேய்ந்து அறுந்துவிட்டது; ஒன்று நன்றாக இருக்கிறது. வேறொரு சோடியில் அடுத்த காலுக்குரிய செருப்பு நன்றாக இருந்தது; எனவே, அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.” அவர்களது பதிலும் செயலும் என் உள்ளத்தை உரசியது. அந்தக் காலணிகளைப் போட்டுக்கொண்டுதான் பள்ளிக்கூடம் செல்வார்கள். பங்கு
ஆலயத்திற்குத் திருப்பலிக்கும் செல்வார்கள். அன்னையின் இத்தகைய ஏழ்மையை, பற்றற்ற தன்மையைப் பார்த்து வியந்தேன்.
இன்னும்
அன்னை அவர்கள் நான்கு அல்லது ஐந்து ஆடைகள்தான் வைத்திருப்பார்கள். அவர்கள்
தன் ஆடைகளை மிகச் சுத்தமாக உடுத்துவார்கள். ஆனால், அவர்கள் உடுத்தும் ஆடையில் வேறு துணிகளைக் கொண்ட ஒட்டுகளையும், கிழிந்த இடத்தை நூலால் தைத்திருக்கும் தையல்களையும் பார்த்து மனம் நெகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் உடுத்தும் ஆடை முழுமையாகக் கிழிந்துவிட்டால் அதைத் துவலையாகவோ, தலையணை உறையாகவோ அல்லது கைக்குட்டையாகவோ பயன்படுத்துவதைப் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். துறவறப் பயிற்சி பெறும் எங்களைப் பார்த்து அன்னை அவர்கள், “தாயி, தேவைக்கு மிஞ்சிய எந்தப் பொருளும் கன்னியாஸ்திரிகளிடம் இருக்கக்கூடாது; எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாது; வீணாகப் போகிறதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே பாவம்” என்று அடிக்கடிக் கூறுவார்கள்
அன்னை
சொல்வதைப் போன்று அவர்கள் தன் வாழ்வில், தனக்கென்று எந்தப் பொருளையும் வைத்திருந்தவர் அல்லர்; தான் உடுத்தும் ஆடையும், கால்களுக்கு அணியும் செருப்பும், வெயில்-மழைக்குப் பயன்படுத்தும் ஒரு குடை யும், பயணத்திற்குப் பயன்படுத்தும் ஒரு சிறு பையும், ஒரு சிறு பெட்டி (சூட்கேஸ்) மட்டுமே அவரது உடைமையாக வைத்திருந்தார்கள். ஒருநாள் பயணம் சென்றால் தன்னிடம் உள்ள சிறு பையை எடுத்துச்செல்வார்கள். வேறு இல்லங்களுக்குச் சில நாள்கள் தங்குவதற்காகச் சென்றால், தனக்குரிய ஆடை, மற்றப் பொருள்களை அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துச்செல்வார்கள். சபையின் முக்கியமான பத்திரங்கள், ஆயர் மற்றும் குருக்களின் கடிதங்கள் மட்டும் சிறிய கைப்பெட்டியில் வைத்திருப்பார்கள்.
அதுபோன்றுதான்
உணவிலும் அப்படி ஓர் ஏழ்மையைப் பார்க்க முடிந்தது. அந்த நாள்களிலே காலை
உணவு மரவள்ளிக்கிழங்கு அல்லது கோதுமை, சோளம் போன்ற உணவுதான். அன்னையும்
அதே உணவைத்தான் சாப்பிடுவார். அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆஸ்துமா நோயால் அதிகம் துன்பப்படுவார். அதனால் அவருக்குச் சில நாள்களில் முட்டை அல்லது பால் கொடுத்தால் அதைப் பலவீனமாக இருக்கும் சிறு குழந்தைகளுக்குக் கொண்டு போய் கொடுப்பார்கள். சகோதரிகள், “ஏன் அம்மா இப்படிச் செய்கிறீர்கள்?” என்று
கேட்டால், “இப்போது என்னைவிட அதிகம் தேவை இந்தப் பிள்ளைகளுக்குத்தான் தாயி! நாம் பத்து பேர் சோறாகச் சாப்பிடுவதை இருபது பேருக்குக் கஞ்சியாகக் கொடுத்து நாம் சாப்பிடுவது சிறந்தது”
என்பார்கள். ஏழைகளின் நிறைவில், மகிழ்வில் இறைவனைக் கண்டவர் நம் அன்னை அவர்கள்.
அம்மாவின்
வாழ்வில் எங்கும் ஏழ்மை, எதிலும் ஏழ்மையைப் பார்க்க முடிந்தது. நான்
அம்மாவோடு வாழ்ந்தபோது அம்மாவும், சகோ. மார்கிரெட், சகோ. ஆக்னஸ் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். அதன் அளவு ஒரு வகுப்பறையை இரண்டாகப் பிரித்து, பாதியில் செபிப்பதற்கான ஆலயம். மறுபாதியை இரண்டு அறைகளாகப் பிரித்து ஓர் அறையில் அம்மாவும், மற்ற இரண்டு சகோதரிகளும்; மறு அறையில் நாங்கள் 12 பேர் பெட்டி, படுக்கை மட்டும் வைப்பதற்கான அறையாய் இருந்தது. இரவு நாங்கள் தூங்குவது பள்ளிக்கூட வகுப்பறையில். அம்மா, சகோ. மார்கிரெட் தூங்குவது சிறு பிள்ளைகள் தூங்கும் இடத்தில். அங்கு
இரவு பிள்ளைகளின் அழுகைச்சத்தம், சிறு பிள்ளைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றின் மத்தியில்தான் அம்மா ஆஸ்துமா நோயின் வேதனையிலும் பிள்ளைகளோடு தூங்குவார்கள். தாயில்லாத பிள்ளைகளுக்கு ஏழ்மையான சூழலிலும் தாயாக உடனிருந்து, கண்விழித்துக் காத்துப் பராமரித்து வந்தார்கள். அன்னையின் ஏழ்மையான இத்தகைய வாழ்வு என்னை மட்டுமல்ல, அவர்களோடு வாழ்ந்த அனைவரையும் தொட்டது.
நாசரேத்தூர்
இயேசுவின் ஏழ்மையைப் பின்பற்றி வாழ வந்திருக்கும் நாம், நம் அர்ப்பண வாழ்வில் ஏழ்மையை எப்படி மதிக்கிறோம்? கடைப்பிடிக்கிறோம்? எனச் சுய ஆய்வு செய்வோம். துறவு வாழ்வின் உரைகல் எனப் போற்றப்படுவது, வலியை ஏற்கும் ஏழ்மையாகும். நம் வாழ்வில் ஏழ்மையை விரும்பி ஏற்று வாழ்ந்தோம் என்றால், அர்ப்பண வாழ்வில் கற்பையும் கீழ்ப்படிதலையும் சிறப்பாக வாழமுடியும். எனவே, நாசரேத்தூர் இயேசுவை முழுக்க முழுக்கப் பின்பற்றி வாழ்ந்த நம் அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் ஏழ்மை வாழ்வைப் பின்பற்றி வாழ்வோம், இறைவனில் மகிழ்வோம்.
(குறிப்பு:
இக்கட்டுரை விளம்பரப் பகுதியின் கீழ் இடம்பெற்றுள்ளது)
நட்ட நடுராத்திரி. ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் உச்சக் குரலில் கூரையைப் பிய்க்கும் அளவில் ‘கீங்....கீங்...கீங்...’ என்று அலறும் பச்சிளம் குழந்தை. உறக்கத்தின் உச்சத்திலிருந்த அந்தத் தாய் முதல் சத்தத்திலேயே விழித்து, ஏதோ அப்போதுதான் முதல் முறையாக குழந்தை அழுவதைக் கேட்பதுபோல பரபரப்போடு எழுந்து, குழந்தையை ஆரத்தழுவி, ‘கண்ணே மணியே’ என்று முத்தமிட்டு, குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் தாய் ஒருபுறம்.
இதே
நிகழ்ச்சி மற்றொரு வீட்டிலும் அரங்கேறியது ‘கீங்....கீங்...கீங்...’ என்று அலறல். கேட்டும் கேட்காததுபோல ‘தூங்கு, தூங்கு’ என்ற கோபக்குரலில் தட்ட, இன்னும் ‘கீங்...கீங்..கீங்...’ என்று குழந்தை உரக்கக் கத்த, எரிச்சலோடும் வெறுப்போடும் கோபக்கணைகளோடும், ‘சனியன் தூங்க விடாது; ஏன்தான் இப்படி இரவில் கத்துதோ? எனக்குன்னு வந்து வாய்ச்சது’
என்று வேண்டா வெறுப்போடு குழந்தையைத் தூங்க வைத்த அந்தத் தாயின் கைகளில் இருக்கும் வேகம், தூக்குவதில் இருக்கும் சலிப்பு, அரவணைப்பில் இருக்கும் அவசரம். இந்த அனுபவம் தொடரும்போது...?
இந்த
இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக வளரும் என எண்ணுகிறீர்கள்? முதல் குழந்தைதான்
எனச் சொல்வீர்கள். அது சரியே. அந்த முதல் குழந்தை வளர வளர அந்தத் தாயின்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறது. ‘என் தேவைகளைச் சந்திக்க ஒருவர் உண்டு; அவர் என் தாய்; அவரே என் தாய்; நான் அழைத்தவுடன் அவள் ஓடி வருவாள்; எனக்காக எதையும் செய்வாள்; நான் பயப்படும்போது எனக்குத் துணையாவாள்; அவளின் மடிதான் உலகம்; அவளின் அரவணைப்பே சுகம்; அவளின் குரல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்.’
இந்த
உணர்வுகளோடு வளரும் குழந்தைக்குப் பாதுகாப்பான, சுதந்திரமான குடும்பச் சூழலை அமைத்துத் தருகிறது. இது மன வளர்ச்சிக்கும் உடல்
வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தப் பாதுகாப்பான சூழலே தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் சுய மதிப்பையும் வளர்க்கின்றது.
இந்தக்
குழந்தை தாய் அருகில் இருந்தாலும், தொலைவில் சென்றாலும், வெளியே போனாலும், உள்ளும் புறமும் நம்பிக்கையையும் பக்குவத்தையும் பெற்ற குழந்தையாய் வளரும். தேவையின்றி அழவோ, அடம்பிடிக்கவோ செய்யாமல் தன்னுடைய விளையாட்டைத் தொடரும். தன் தாயிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட குழந்தை, இப்போது தன் உறவு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறது. தந்தை, உடன் பிறப்புகள், உடனிருக்கும் மற்றவர்கள் இவ்வாறு எல்லாரிடமும் தன் நம்பிக்கை வளையத்தை விரிவுபடுத்தியும் உறுதிப்படுத்தியும் கொள்கிறது. குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவுகளோடும், புதிய மனிதர்களோடும் தன்னுடைய வட்டத்தை இன்னும் விரிவாக்கிக் கொண்டே போகின்றது. இவை அனைத்தும் பிறந்த முதல் மூன்று வயதிற்குள் நடந்து முடியும்.
உறவு மற்றும்
உலக
அனுபவம்
இப்படித்
தன்னைச் சுற்றியுள்ள உலகம் நம்பிக்கை தருவதாகவும் அன்புள்ளதாகவும் அரவணைப்பதாகவும் ஆதரிப்பதாகவும் தட்டிக் கொடுப்பதாகவும், அந்தக் குழந்தை உணர்கிறது. அதுவே அந்தக் குழந்தையின் நம்பிக்கையாக மாறுகிறது. அந்தக் குழந்தை பார்க்கின்ற மனிதர்கள், சமூகம், சுற்றம், உலகம், சிந்தனை, செயல், எண்ணம் எல்லாம் நேர்மறையாகவே அமையும்.
மாவிதையை
விதைத்தால் மாமரம்தான் வளரும். ‘தாயைப்போலப் பிள்ளை’ என்பார்கள். இந்தக் குழந்தை எப்படித் தாயைப் போல மாறுகிறது? நேர்மறை உணர்வுகளோடு வாழும் ஒரு தாய், அதே உணர்வுகளை அந்தக் குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தையும் நேர்மறை உணர்வுகளை உள்வாங்கி நிறைவோடும் ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும் வளரும். தாயிடம் கொண்ட நம்பிக்கை தனிமனித நம்பிக்கையாக உருவாகி, குடும்ப நம்பிக்கையாக மாறி, சமூக நம்பிக்கையாக வளர்ந்து, உலக நம்பிக்கையாகப் பரிணமிக்கும். இதுவே இறைநம்பிக்கைக்கு முதல் படியாக விளங்கும்.
இறைநம்பிக்கை
என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. திடீரென்று முளைத்துக் கிளம்புவது அல்ல; அது விதைக்கப்படுகின்றது, வளர்க்கப்படுகின்றது, உருவாக்கப்படுகின்றது, நெறிப்படுத்தப்படுகின்றது. தாயிடமிருந்து கிடைக்கும் முதல் நம்பிக்கை அனுபவமே இறைநம்பிக்கைக்கு வித்தாக அமைகின்றது. எனவே, மனித வாழ்வில் நமக்குக் கிடைக்கும் அந்த முதல் நேர்மறை அனுபவமே நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கு அடித்தளமாக அமைகின்றது. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், இந்த மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்ற
ஆழமான வளர்ச்சி உளவியல் தத்துவத்தை அன்றே பாடிவிட்டார் ஒரு கவிஞர்.
இரண்டாம்
நிகழ்வில் வந்த குழந்தையின் நிலை என்னவென்று பார்ப்போம். அந்தத் தாயின் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளான அந்தக் குழந்தை எதிர்மறை உணர்வுகளைத் தாயிடமிருந்து உள்வாங்கிக்கொள்கிறது. அதே உணர்வுகளோடு வளர்ந்து தன்னுடைய தந்தை, உடன்பிறப்புகள், சுற்றம், சமூகம், உலகம், இறைவன் என்று எல்லாரும் கெட்டவர்களாக, தனக்குத் தீங்கு விளைவிப்பவர்களாக அந்தக் குழந்தையின் கண்களுக்குத் தென்படும். இந்தக் குழந்தை அவநம்பிக்கை என்ற அனுபவத்தை முதன்முதலில் அந்தத் தாயிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதே அவநம்பிக்கை அனுபவத்தை உலகமும் இறைவனும் தருவதாக உணர்கின்றது.
ஒரு
மனித வளர்ச்சிக்கு இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன. ஒன்று, ‘இயற்கை’;
மற்றொன்று, ‘வாழும் சூழல்.’ இவை இரண்டும் நம்பிக்கை வாழ்விற்கு இன்றியமையாதவை. இயற்கை என்று கூறுகின்றபோது பெற்றோர்களின் அன்புறவினால் வெளிப்படும் உயிர் அணுக்கள் குழந்தையின் உருவாக்கத்திற்கு மூலதனமாக மாறுகின்றது. எனவேதான் பெற்றோரின் சாயல், நிறம், உருவம், உடலமைப்பு, குணாதிசயங்கள் இவற்றை உள்ளடக்கி குழந்தை உருவாகின்றது. ‘அவள் மூக்கும் முழியும் அப்படியே அவள் அப்பனை உரித்து வைத்திருக்கிறாள்’ என்ற
கூற்று உறுதியாகின்றது. அதுபோல நீரிழிவு நோய், இதய நோய்கள், மன நோய்கள், நரம்பு
சம்பந்தமான நோய்கள் எனப் பலவும் மரபணுக்களின் தாக்கமே. இதைப் பெற்றோர் தங்களின் எதிர்கால வாரிசுகளுக்கு வாரி வழங்கும் வாரிசுச் சொத்தாக மாறுகின்றது. இது இயற்கையின் நியதியாக விளங்குகின்றது.
வாழும்
சூழல் மனிதனால் ஏற்படுத்தப்படுகின்றது. எனவே, மனிதன் அதை மாற்றியமைக்க முடியும். பெற்றோர், நண்பர், வீடு, சுற்றம் என நம்மைப் புடைசூழ
இருப்பவர்கள் முறைப்படுத்தும் காரணிகளாக அமைந்துவிடுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆலயத்தின் பக்கத்திலே வாழும் ஒருவர் அல்லது நம்பிக்கை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்த ஒருவர் அல்லது மரணப் படுக்கையிலிருந்து மீண்டு புத்துணர்வோடு ஆன்மிக ஆழத்திற்குச் சென்ற ஒருவர் அல்லது சிக்கலும் சவாலும் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலில் இறைவனை அடைக்கலமாகக் கொண்டு, தான் வேண்டியதைப் பெற்றுக் கொண்ட ஒருவர் எனப் பல்வேறு சமூக, குடும்பச் சூழல்களில் ஒருவரின் நம்பிக்கை உறுதி செய்யப்படுகின்றது.
கலப்புத்
திருமணத்தில் வேறு சமயத்தைச் சார்ந்த தந்தை, தாய்க்குப் பிறக்கும் குழந்தை, புத்தி தெரிந்த பிறகு ஒருவித குழப்பச் சூழலுக்கு விடப்படலாம். எந்தச் சமயத்தைப் பின்பற்றுவது அல்லது பெற்றோர் குழந்தையை எந்தச் சமய முறையில் வளர்ப்பது என்ற முடிவை எடுக்காமலேயே வளரும். அந்தக் குழந்தை குழப்பச் சூழலில் வளரும். இந்த வாழும் சூழல் ஒருவித சமயச் சலிப்பை உண்டாக்கலாம்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’
என்ற முதுமொழியைக் கேட்டிருப்போம். பல்வேறு குடும்பச் சூழல்களால் ஒரு குக்கிராமத்திற்குக் குடிபோகும் ஒரு பக்தியுள்ள குடும்பம், வழிபாட்டிற்கு அல்லது ஆலயத்திற்கோ செல்ல இயலாத ஒரு சூழலில், நாள்பட நாள்பட அவர்களிடம் நம்பிக்கையில் தொய்வு காணப்படலாம். காலப்போக்கில் அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைக்குப் பக்தியும் நம்பிக்கையும் இயல்பாக வருவதில்லை. மேலும், மறையறிவு, சமய நெறிமுறைகள், வேத நூல், சமயக் கோட்பாடுகள் இவற்றில் உள்ள ஈடுபாடும் பங்கேற்பும் மிகக் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.
போர்வீரராகவோ,
விமானப் பணியாளராகவோ, ஆழ்கடலில் மீன் பிடிப்பவராகவோ, வெளிநாட்டில் உழைப்பவராகவோ, சுரங்கத் தொழிலாளியாகவோ, கப்பல் பணியாளராகவோ, தீயணைப்பு வீரராகவோ மற்றும் பல்வேறு அபாயகரமான பணிகளில் ஈடுபடும் ஒருவர், பணி முடித்து வீடு திரும்பும் வரை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வீட்டைக் கடந்து, கரையைக் கடந்து, உறவுகளைக் கடந்துச் செல்லும்போது அவர் எண்ணத்தில் மேலோங்கி இருப்பதெல்லாம், மீண்டும் கரை சேரும் வரை தன் உறவுகளை இறைவன் காத்திடவேண்டும் என்ற எதார்த்தமான, ஆழமான இறைநம்பிக்கையோடு பயணத்தைத் தொடங்குகிறார்.
இவ்வாறு
நாம் வாழும் மற்றும் வளரும் பல்வேறு சமய, சமூகச் சூழல்கள் நம்மை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்தி நம்முடைய நம்பிக்கை வாழ்வையும், கடவுள்மீது உள்ள இறைநம்பிக்கையையும் உறுதிப்படுத்துகின்றது. ஆக, மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளான இயற்கையும் வாழும் சூழலும் நம்முடைய நம்பிக்கை வாழ்வுக்கும் வடிவம் தருகின்றது.
“என்னங்க! ரெடியாயிட்டீங்களா? காப்பித் தண்ணி வேணும்னா போட்டுத்தரவா?”
தன்
மகளோடு படுத்திருந்த வசந்தி தூக்கக் கலக்கத்தோடு பால்வெட்டுத் தொழிலுக்குச் செல்ல தயாராகிக்
கொண்டிருந்த பாலனிடம் சோம்பல் முறித்துக்கொண்டே கேட்டாள்.
பதிலேதும்
சொல்லாமல் தலையில் கட்டிப் பயன்படுத்தும் பேட்டரி லைட்டையும் இரப்பர் மர வெட்டுக்கத்தியையும்
எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான் ரவிபாலன்.
ஊரில்
எல்லாரும் அவனை ‘பாலன்’ என்றே கூப்பிடுவர். இரப்பர் மரத்திலிருந்து
பாலெடுக்கச் சூரியன் உதிக்கும் முன்பே செல்லவேண்டும். அப்படி அதிகாலையிலேயே சென்றால்தான்
வெட்டுவதற்குப் பதமாகவும், மரத்தில் அதிக பாலும் இருக்கும். பாலனுக்குச் சொந்த இரப்பர்
மரங்கள் கிடையாது. செல்லத்துரையின் பொட்டல்விளையில்தான் அவனுக்கு வேலை. ஓர் இரப்பர்
மரத்தைக் கீறவும், பால் சேகரிக்கவும் சேர்த்து ஐந்து ரூபாய் கிடைக்கும். ஒருநாளில்
குறிப்பாக, காலையில் மட்டும் முந்நூறு மரங்களைக் கீறி இரப்பர் பால் சேகரிப்பான். சேகரித்துப்
பதப்படுத்திய இரப்பர் சீட்டை இயந்திரத்தில் அடித்தெடுத்துக் கொடுக்க ஒரு சீட்டுக்கு
மூன்று ரூபாய் என்று பாலனுக்குக் கொஞ்சம் வருமானம் வரும். ஆனாலும், காலைப் பனியில்
கண்ணாடி விரியன் பாம்புகளுக்கிடையில் வேலை பார்ப்பது அவனுக்கு முதலில் கொஞ்சம் திகிலாகத்தான்
இருந்தது. பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது.
ரவிபாலன்
இரப்பர் மரத்தின் பட்டையைக் கீறிப் பாலெடுக்கும் அந்த இலாவகமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
வேறு எங்கும் மரத்தில் காயம் ஏற்படாதவாறும், அதற்கு வலி தெரியாமலிருப்பதற்கும் இரப்பர்
மரங்களோடு பேசிக்கொண்டே தோலுரிப்பான். அதைப் பார்ப்பதற்கு ஒரு தாய் குழந்தைகளோடு கொஞ்சி
மகிழ்வது போலிருக்கும்.
அதிகாலையில்
மூன்றரை மணிக்கு இரப்பர் பாலெடுக்கப் போனவன், வழக்கம்போல காலையில் ஒன்பதரைக்குதான்
வந்தான்.
‘இன்னைக்கு
அமுதாவுக்குப் பிறந்தநாள். ஸ்கூலுக்குப் போகும்போது உங்கள கேட்டா. ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்ப
மிட்டாய் கூட வாங்கிக் கொடுக்கல’ என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே பழங்கஞ்சியையும்,
கொஞ்சம் தோலுரித்த சிறு வெங்காயத்தையும் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள் வசந்தி. பாலன்
ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பழங்கஞ்சியைச் சோறோடு அள்ளிக் குடித்தான்.
வசந்தி
வீட்டுமுற்றத்தைப் பெருக்கிக்கொண்டே ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், பாலன் அவற்றையெல்லாம்
காதில் போட்டுக்கொள்ளவில்லை. வீட்டுத்திண்ணையில் வைக்கப்பட்டிருந்த பாய் ஒன்றை எடுத்துப்
போட்டுக்கொண்டு விட்டத்தைப் பார்த்துப் படுத்துக்கொண்டான்.
ரவிபாலன்
தன் மனைவியிடம் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவன் என்று இரப்பர் மரங்களோடு பேசத்தொடங்கினானோ
அன்றிலிருந்து தன் மனைவியிடமோ அல்லது யாரிடமோ பேசியதில்லை. சிலர் அவனுக்கு மனப்பிராந்தி
என்றனர். வேறுசிலர் அவனுக்குப் பொட்டல்விளையில் தற்கொலை செய்துகொண்ட அந்த ஊமைப்பெண்
பிடித்திருக்கிறாள் என்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் பல மருத்துவர்களிடம் ரவிபாலனைக்
கூட்டிக்கொண்டு காட்டிவிட்டாள் வசந்தி. ஆனால், எந்தப் பயனும் இல்லை. யாரெல்லாமோ ஏதேதோ
கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். ஆனால், உண்மையில் ரவி பாலனுக்கு என்னதான் ஆனது என்பது
யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
அடுத்த
நாள் காலை மூன்றரை மணிக்கெல்லாம் வழக்கம்போல ரவிபாலன் கண்விழித்து இரப்பர் மரங்களோடு
பேசத் தயாரானான்.
தொழில்நுட்பத்தின்
வளர்ச்சியால் நாடி பிடித்து உடல்நலக் குறிப்புகளைச் சொல்லிவந்த காலம் மாறி ஸ்டெதஸ்கோப்
வந்ததுபோல, இன்று டிஜிட்டல் மயமாகியிருக்கிறது மருத்துவத்துறை. உலகம் எவ்வளவுதான் ஏ.ஐ.
உலகத்தில் வளர்ந்திருந்தாலும், நோய்களும் நோயாளர்களும் குறைந்தபாடில்லை.
உலகம்
முழுவதும் இன்று சுமார் 43 இலட்சம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப்
பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மருத்துவர்களுக்கான
மற்றும் மருந்திற்கான தேவை 2030-இல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு ஒன்று
குறிப்பிடுகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை ஒருபுறமிருக்க, உலகின்
பல்வேறு இடங்களில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. எனவே,
இந்த இடைவெளியைத் தவிர்க்க பலரும் செயற்கை நுண்ணறிவை மருத்துவத்துறைக்குப் பரிந்துரைக்கின்றனர்.
மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத வகையில் செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
பெருமளவிலான
மருத்துவத்தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்யும்போது, அது நோய் மற்றும் நோயாளர்கள்
பற்றிய துல்லியமான தரவுகளை முன்கூட்டியே வழங்குகிறது. இதனால் நோய் தொடக்கநிலையிலேயே
கண்டறியப்படுவதால் நோய்க்கான மருத்துவச்செலவு மிகவும் குறைகிறது.
செயற்கை
நுண்ணறிவு என்பது வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம். ஆராய்ச்சிகளும் பலதரப்பட்ட ஆய்வுகளும்
தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே, முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை மருத்துவர்
ஒருவருக்கு இணையாகப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு சில
நேரங்களில் எவ்வித ஆதாரமும் இல்லாத தவறான தகவல்களை உண்மையானவை போல உருவாக்கலாம் அல்லது
அது நாடு, இனம், நோய், பொருளாதாரம் தொடர்பான சார்புநிலை அடிப்படையில் (க்ஷயைள) பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.
எனவே, முழுமையாக ஏ.ஐ. தருகின்ற தரவுகளின் அடிப்படையில் மருத்துவம் பார்ப்பது என்பது
ஆபத்தை விளைவிக்கலாம்.
மருத்துவத்
தகவல்கள் தொடர்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏ.ஐ. பாட்களைப் பயன்படுத்தும் சூழல்
ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துவோர் (Social Media Influencers)
மருத்துவக் குறிப்புகளையும், உடல்நலப் பிரச்சினைகளையும் எடைக்குறைப்புப் பற்றியும்
பேசிவருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள
மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இணையதளத்தில் பார்த்த உடல் எடையைக்
குறைக்கும் முறையைப் பின்பற்றி, பல மாதங்களாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வந்ததால்
உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு
மருத்துவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரின் (Certified Nutritionist)
வழிகாட்டுதல் இல்லாமல் தீவிரமான உணவு முறைகளைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தானது என்பதை
நாம் உணரவேண்டும்.
மருத்துவம்
பற்றிய அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு இணையம் அல்லது செயற்கை நுண்ணறிவைப்
பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரிடம் நேரடியாக உரையாடுவதும் ஆலோசனை கேட்பதுமே நலமான
வாழ்வுக்கு வழி வகுக்கும்.