news
சிறப்புக்கட்டுரை
ஒளி கொடுக்குமா? குழி பறிக்குமா?

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் எனும் சிறிய கிராமத்தை அடுத்த கடற்கரைப் பகுதியில் ஒன்றிய அரசு இரண்டு அணுமின் நிலையங்கள் அமைத்து, மின்சாரம் தயாரித்து வருகின்றது என்பதை நாமெல்லாம் அறிவோம். அணுமின் திட்டங்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு அப்போதே பல்வேறு தரப்பினரும் தீவிரமான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது கூடுதலாக நான்கு அணுமின் நிலையங்கள் எழுப்பப்பட்டு அவை நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், 1000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள முதல் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி நம்மைக் கலங்கடிக்கின்றது. இப்படி அணுமின் திட்டங்களால் அவ்வப்போது எழும் விபத்துகளும், அதனால் உருவாகும் ஆபத்துகளும் எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்க, அணுமின் திட்டங்கள் பயனளிக்கக்கூடியவையா? பாதுகாப்பானவையா? திட்டத்தால் நன்மைகள் விளையுமா? அல்லது தீமைகள்தான் மிஞ்சுமா? என்பதையெல்லாம் அறிவியல் கண்கொண்டு ஆராய்வோம்.

அணுமின்சாரம் தயாரிப்பது எப்படி?

அணுமின் நிலையங்களால் ஆபத்தா? ஆபத்தில்லையா? என ஆராயும்முன், அணுமின்சக்தி எப்படி உருவாக்கப்படுகிறது? என்பது குறித்து சிறிது தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அணுவில் உள்ள உள்கருவில் நியூட்ரான் மோதினால், அணுக்கருவினுள் அது பல நியூட்ரான்களாகப் பிறப்பெடுக்கும். இவ்வாறு உண்டான நியூட்ரான்கள் அணுக்கருவில் உள்ள நியூக்ளியஸில் மோதி தொடர் செயல்பாட்டை உருவாக்குகிறது. இத்தொடர் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்சக்தி உருவாக்கப்படுகிறது. கட்டுப்படுத்தவில்லையென்றால் அதன் விளைவுதான் அணுகுண்டாகும்.

அணுக்கரு பிளவுபட்டு நியூட்ரான் உண்டாகும்போது அது பெருமளவு சக்தியாக வெளியேறுகிறது. இச்சக்தி வெப்ப சக்தியாக வெளியேறுகிறது. இவ்வெப்பத்தை வெப்பாற்றியாகச் செயல்படும் தண்ணீர் கிரகித்து நீராவியாக மாறுகிறது. நீராவி சக்தி, சக்கரங்களின் ஜெனரேட்டர் துணை கொண்டு மின்சக்தியாக மாறுகிறது.

பல்வேறு வழிகளில் ஆபத்து

அணுமின் நிலையத்தில் பல காரணங்களினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, விபத்துகள் ஏற்படாதவாறு நூற்றுக்கு நூறு பாதுகாப்பான முறையில் அணு உலைகளை உருவாக்குவது இயலாத காரியம் என்று சொல்லப்படுகின்றது. நீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் கோளாறு ஏற்பட்டு பேராபத்துகள் நடக்க வாய்ப்புண்டு. ஆலையில் வெடிப்புகள் ஏற்படவும் செய்யலாம். இயக்கும் ஆள்களின் கவனக்குறைவாலும் ஆபத்து ஏற்பட வழியுண்டு. வால்வுகள் சரியாகப் பொருத்தப்படவில்லை என்றாலும் ஆபத்துகள் ஏற்படலாம். தேவையான சக்திபெற, விளைவுத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும்போது வெப்பம் அதிகரித்து வெடிக்கவும் செய்யலாம்.

பாதுகாப்பில்லாத கழிவுச் சேமிப்பு

அணுமின் உலைகள் பாதுகாப்பாக இருந்தாலும் கூட அணுமின் நிலையங்களிலிருந்து உண்டாகும் கழிவுப் பொருள்களை ஆபத்தில்லாத முறையில் அகற்றுவதற்கான அறிவியல் இதுவரையில் உலகில் இல்லை. பொதுவாக, அவற்றை ஈயத்தாலான பெரிய டிரம்களில் அடைத்துக் கடலில் போடுவார்கள் அல்லது பூமிக்கடியில் புதைத்து விடுகிறார்கள் அல்லது சிமெண்ட் தொட்டிகளில் மூடி பூமியில் புதைக்கின்றனர். கழிவுப்பொருளில் உள்ள கதிரியக்கம் 20,000 ஆண்டுகளுக்கு மேல் செயலாற்றல் உள்ளது என்று சொல்லப்படுகின்றது. எனவே, கழிவுப் பொருள்களை எதில் அடைத்து கடல், பூமி இவைகளுக்குள்ளே போட்டாலும், எதற்குள் அடைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றின் ஆயுளைவிட கதிர் இயக்கங்களின் ஆயுள் கூடுதலாகும். பெரும் பணச்செலவில் உருவாக்கப்படும் அணுமின் நிலையங்களிலிருந்து வெறும் 30 ஆண்டுகளுக்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கின்றது. அதற்குப் பின் அதன் கழிவுகளைப் பாதுகாக்க எவ்வளவு காலம் செலவிடவேண்டியுள்ளது?

மனித நலனுக்கு எதிரி

ஆலைகளில் விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்படுமானால் பெருமளவு மரணம் ஏற்படுவதோடு, நுரையீரல் புற்றுநோயும், மரபியல் நோய்களும் உண்டாகும். கருவில் உள்ள சிசுக்களையும் விட்டு வைக்காது இக்கதிர்கள். இக்கதிர்வீச்சு ஏற்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாதபடி நிலங்களின் தன்மை மாறி, மயான பூமியாகிவிடும். அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் 30 கிலோமீட்டர் தூரத்திற்குக் குடியிருப்புகள் இருக்க, வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் கதிரியக்க அயோடின் கலந்துவிட்ட புல்வெளிகளில் மேய்ந்த பசுக்களின் பாலைப் பருகியதால் 20,000 குழந்தைகள் மிகையான கதிர் வீச்சினால் தாக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் கொட்டப்படும் அணுமின் நிலையங்களின் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

அதிகபட்ச செலவு

2007-ஆம் ஆண்டிற்கு முந்தைய கணக்கீட்டின்படி ஒரு யூனிட் மின்சாரத்தை நீரிலிருந்து உற்பத்தி செய்ய ஆகும் செலவு 15 பைசா என்றால், அதே அளவு மின்சாரத்தை நிலக்கரியால் உற்பத்தி செய்ய 35 பைசா ஆகிறதாம். ஆனால், அதே ஒரு யூனிட் மின்சாரத்தை அணுவில் இருந்து உண்டாக்க ஆகும் செலவு 1 ரூபாய் 12 காசுகள். அதுவும் கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்கப்பட்ட 2007-ஆம் ஆண்டில் 3 ரூபாய் 8 காசுகள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்திருக்குமல்லவா! அப்போதே பிரான்ஸ் நாடு அணுமின் நிலையங்களினால் 4,480 கோடி கடன்பட்டிருந்ததாகத் தெரிய வந்தது. மற்றவற்றைவிட அதிகபட்ச செலவாகும் அணுமின்சக்தியை உருவாக்க உலக நாடுகள் ஏன் மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும்? ஒருவேளை அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் புளூட்டோனியத்தை அதன் கழிவுகளிலிருந்து பெற முடியும் என்பதால்தானோ என்ற சந்தேகம் வருகிறது.

கூடங்குளத்தில் விபத்து நேர்ந்தால்...

1,110 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டால் என்ன நிகழும் என்பது குறித்து இங்கிலாந்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் கூடங்குளத்தில் விபத்து நேர்ந்தால் என்ன ஆகும் என்று ஆராய்ந்தால், விபத்திற்குப் பிறகு ஆலையிலிருந்து 115 கி.மீ. தொலைவிற்குட்பட்ட நாகர்கோவில், பணகுடி, நாங்குநேரி, திருச்செந்தூர், சாயர்புரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் முதலிய ஊர்கள் பெரிய அளவிலும், 140 கி.மீ. தொலைவிற்கு உட்பட்ட சாயல்குடி, ஒத்தக்காடு, சாத்தூர், வாசுதேவநல்லூர் முதலிய ஊர்கள் ஓரளவிற்கும் கதிர்வீச்சால் பாதிக்கப்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சையளிக்க 250 கோடி ரூபாய், வீட்டு வசதிகள் போன்ற புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு 250 கோடி ரூபாய், விவசாயத் தொழில் நஷ்ட ஈட்டுக்கு 500 கோடி ரூபாய், மற்ற தொழில்களுக்கு நஷ்ட ஈடாக 300 கோடி ரூபாய், புதிய மின் நிலையத்தைக் கட்டி மின்சார வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தர 1500 கோடி ரூபாய்... ஆக மொத்தம் குறைந்தபட்சம் 4000 கோடி ரூபாய் வீண்செலவாகும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் கூறியது. இப்போது கணக்குப் பார்த்தால் இந்த வீண்செலவுகள் பல பத்தாயிரம் கோடிகளைத் தாண்டும் என்றும் அஞ்சப்படுகிறது.

முன்னெச்சரிக்கையே பாதுகாப்பு

இரஷ்யாவின் செர்னோபில் விபத்து, அமெரிக்காவின் திரிமைல் ஐலேண்ட் விபத்து ஆகியவை உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்ட ஆலை விபத்துகளாகும். அணுமின் நிலையங்களால் வரும் ஆபத்தை உணர்ந்தே 1974-ஆம் ஆண்டிற்குப் பின்னால் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான 140 அனுமதிகள் உலகில் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. ‘இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த அணுமின் திட்டம் வழியாக மின்சாரம் தயாரிக்க வேண்டுமா?’ என்ற எண்ணம் மக்கள் மனத்தில் எழுவது நியாயமானதே. ஓர் ஆணுக்கு சம்சாரம் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல மனிதகுலத்திற்கு மின்சாரம் முக்கியம்தான். பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியின் அளவைப் பெருக்கிக் காட்டவேண்டிய அவசியம் அரசிற்கு இருக்கின்றது. அதேசமயம், மக்கள் மனத்தில் எழுந்துள்ள பயத்தைப் போக்கவேண்டிய கடமையும் இருக்கிறது.

மின்சாரம் அதிக அளவில் தேவைப்படும் இக்காலச் சூழ்நிலையில், அணுமின் திட்டங்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்ப அனுபவங்களை மனத்தில் வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட அரசு முன் வந்தால், கூடங்குளம் திட்டத்தை ஏற்கலாம். எந்தத் தீமையும் ஏற்படாத வகையில் திட்டத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாது போனால், அரசு பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

அணுமின்சாரத் தயாரிப்பை விட்டுவிட்டு காற்றாலை மின்சாரம், கடல்நீர் மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் போன்ற மரபுசாரா மின் உற்பத்தியைத் திட்டமிடுவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மனிதகுலத்திற்கு மின்சாரம் முக்கியம்தான்; ஆனால், அந்த மின்சாரம்ஷாக்அடித்துவிடக் கூடாதல்லவா!

news
சிறப்புக்கட்டுரை
இளையோரின் குரலைப் பலத்தால் அமைதிப்படுத்த முடியாது!

டெல்லியில் மாணவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்: இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்!

புது டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலை இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கம் (ICPA) வன்மையாகக் கண்டிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் தங்களது சனநாயக உரிமையைப் பயன்படுத்திய இளம் குடிமக்களுக்கு எதிராக, அளவுக்கு அதிகமான தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதுடன், சனநாயகம், நீதி மற்றும் மனித கண்ணியத்தை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளது.

மாணவர்கள் குற்றவாளிகள் அல்லர்; அவர்கள் தங்களது அரசமைப்பு உரிமைகளைப் பயன்படுத்தும் நாட்டின் குடிமக்கள். தங்களது கல்வி, வாழ்க்கைப்பாதை மற்றும் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கும் விவகாரங்களில் அதிகார அமைப்பைக் கேள்வி கேட்கவும், பொறுப்பேற்பை வலியுறுத்தவும், குரல் எழுப்பவும் அவர்களுக்கு முழு உரிமை உண்டு. இவ்வேளையில், நியாயமான கவலைகளுக்கு வன்முறை மற்றும் அச்சுறுத்தலின் மூலம் பதிலளிக்கும் எந்தவொரு சனநாயக அரசும், தனது இளம் குடிமக்களை மதிப்பதாக உரிமை கோர முடியாது.

லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டுகள், வீரியமிக்க நீர்ச்சீரமைப்பிகள் (வாட்டர் கேனான்) மூலம் பெண்கள் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உடலளவிலான சித்திரவதைகள் குறித்த செய்திகளால் ICPA ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. காவல்துறையினர் பயன்படுத்திய வசைச்சொற்கள் மற்றும் அவை நாகரிகத்திற்கு ஒவ்வாத கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டுகளாலும் நாங்கள் பெரிதும் கவலையடைகிறோம். இத்தகைய நடத்தைகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மேலும், இவற்றை அலட்சியப்படுத்தவோ அல்லது இயல்பான நிகழ்வாகக் கருதவோ கூடாது. காவல்துறை என்பது குடிமக்களைப் பாதுகாப்பதற்கே அன்றி, அவர்களைத் தாக்குவதற்கு அல்ல; காவல்துறையின் சீருடை என்பது கொடூரத்தனத்தை அரங்கேற்றுவதற்கான உரிமம் அன்று.

தங்களது நியாயமான கவலைகளை எழுப்புவதற்காக அமைதியான முறையில் ஒன்றுகூடிய மாணவர்களுடன் ICPA உறுதியோடு கரம் கோர்க்கிறது. அவர்களின் குரல்கள் மரியாதையுடனும் தீவிரத்தன்மையுடனும் கேட்கப்பட வேண்டுமே தவிர, வன்முறையான வழியில் தாக்குதல்களால் நசுக்கப்படக்கூடாது. போட்டித்தேர்வுகளின் நம்பகத்தன்மை, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள், கல்வி அமைப்பிற்குள் இருக்க வேண்டிய பொறுப்புடைமை மற்றும் இந்திய இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளுக்கு வெளிப்படைத்தன்மையான பதில்களும், நம்பகமான நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.

தங்களது எதிர்காலத்திற்கு ஆயத்தமாக வேண்டிய மாணவர்கள், நீதியையும் பொறுப்புடைமையையும் வலியுறுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இளைஞர்கள் அமைப்புகளின் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, அதற்கான பொறுப்பு கேள்விகளைக் கேட்பவர்களிடம் இல்லை; மாறாக, திருப்திகரமான பதில்களை வழங்கத் தவறியவர்களிடமே உள்ளது.

மாணவர்களின் அமைதியான போராட்டத்தைப் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகச் சித்தரிக்கும் எந்தவொரு முயற்சியையும் ICPA தீர்க்கமாக நிராகரிக்கிறது. மாற்றுக்கருத்துத் தெரிவிப்பது குற்றமல்ல; போராட்டம் என்பது தேசத்துரோகமல்ல; கேள்விகளைக் கேட்பது கிளர்ச்சிச் செயலல்ல; ஒரு நலமான சனநாயகம், தன் இளம் குடிமக்களின் கேள்விகள் உணர்ச்சிமிகுந்ததாக இருக்கும்போது கூட அவற்றிற்குச் செவிசாய்க்கும் துணிவைக் கொண்டிருக்கவேண்டும்.

காவல்துறையின் வன்முறை மற்றும் போராட் டத்தின்போது சட்ட அமலாக்கப் பணியாளர்களின் நடத்தை குறித்து தனித்த, நடுநிலையான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்தப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். கொடூரமான தாக்குதல், வசைபாடுதல் அல்லது தவறான நடத்தைக்குக் காரணமான நபர்களை அவர்களது பதவி, சமூக நிலையைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் கீழ் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

அரசிற்கும் உரிய அதிகார அமைப்புகளுக்கும் ICPA பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

மாணவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அதன் முடிவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

சட்ட விரோதமான, கொடூரமான தாக்குதலுக்கு அரசும் அதன் அதிகார அமைப்புகளும் பொறுப்பேற்கவேண்டும்.

தாக்குதலுக்கு அல்லது தவறான நடத்தைகளுக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அரசமைப்பு உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டும்.

அடக்குமுறைக்குப் பதிலாக, வெளிப்படையான உரையாடலின் மூலம் மாணவர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறுகள் உறுதி செய்யப்படும் இடங்களில் பொறுப்பேற்பை உறுதி செய்யவேண்டும்.

சனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக எந்தவொரு மாணவரும் பழிவாங்கல், அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் மாணவர்களும் குடிமக்களும் நடத்தப்படும் விதம் குறித்துச் செய்தி சேகரிப்பதில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் விழிப்புடனும் அச்சமின்றியும் செயல்படவேண்டும் என்று ICPA கேட்டுக்கொள்கிறது. சனநாயகச் சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது பத்திரிகைகள் அமைதியான பார்வையாளராக மாறக்கூடாது. உண்மையைப் பதிவு செய்வதும், குரலற்றவர்களின் குரலாகச் செயல்படுவதும், அமைப்புகளைப் பொறுப்பேற்கச் செய்வதும் இதழியல் துறையின் கடமையாகும்.

ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும் மீற முடியாதது என்று இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கம் நம்புகிறது. இந்திய இளைஞர்கள் பயம், அச்சுறுத்தல் மற்றும் வன்முறையற்ற நீதி, வெளிப்படைத்தன்மை, தகுதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட ஓர் எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள்.

மேலும், நீதியைக் கோரும் ஒரு மாணவனின் கோரிக்கைக்குக் காவல்துறையின் லத்தி பதிலாக இருக்க முடியாது. மாறுபட்ட கருத்துக்கான பதில் கொடூரமாக இருக்க முடியாது. இந்தியாவின் இளைஞர்களின் குரலைப் பலத்தால் அமைதிப்படுத்த முடியாது.

அதிகார அமைப்புகள் உடனடியாக மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் குறைகளை நல்லெண்ணத்துடன் தீர்த்து வைக்கவும், சனநாயக அமைப்புகளின்மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ICPA வலியுறுத்துகிறது.

இந்தியாவின் இளைஞர்கள் பிரச்சினை அல்ல; அவர்களின் குரல்களை அலட்சியப்படுத்துவதுதான் பிரச்சினை!


news
சிறப்புக்கட்டுரை
கிறித்தவம் சொல்ல மறந்த சேவை!

இந்தியக் கிறித்தவம் இன்றைய மதவாத அரசியலரால் பல்முனைத் தாக்குதலுக்கு ஆட்பட்டு வருதல் உண்மை. கிறித்தவத்தைப் பல்வேறு காரணங்களைக் காண்பித்துச் சிதைக்கும் சக்திகளும் கூட இந்நாட்டில் கிறித்தவம் முன்னெடுத்த கல்விப் பணியை மனமுவந்து பாராட்டுதலைப் பார்க்க முடியும்.

கிறித்தவத்தின் மீது வன்மம் கொண்ட மதவாதிகள் பலர் கல்வி பெறுவதற்கான வாயிலைத் திறந்தது கிறித்தவமே. இவர்களுக்குக் கற்கவும் பேசவும் சொல்லித் தந்தது கிறித்தவம் உருவாக்கிய கல்விச் சூழமைவுதான் என்பதே வரலாறு கூறும் உண்மை.

கிறித்தவ மிஷனரிகள் நவீன இந்தியாவின் குடிமக்களைக் கல்வி மூலம் செதுக்கி முனைந்தப் பணி அற்புதமானது. இவர்களின் இப்பணியுள்ளும் மதமாற்றம் எனும் கறை உண்டெனினும், கல்வி மற்றும் மருத்துவத்தில் இவர்கள் ஆற்றி வரும் பணி உன்னதமானது.”

- இந்தியாவில் மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்த நியோகி கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி இது.

மதமாற்றத் தடைச்சட்டத்தை ஆதரித்த இக்குழு, கிறித்தவத்தின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை வியந்து பாராட்டத் தயங்கவில்லை. 1971-ஆம் ஆண்டு இந்திய அரசின் கல்விச் செயலராக இருந்த திரு. பட்நாயக் அவர்கள் இந்தியக் கிறித்தவம் கட்டியெழுப்பியுள்ள கல்வித்தளத்தின் விரிவு இந்தியப் புவித்தளத்தில் இயங்கும் பல மாநில அளவைக் காட்டிலும் பெரிது என்பார்.

இந்தியாவில் கிறித்தவம் நிறுவிய கல்விப் பணியின் பெருமையைப் பட்டியலிடுவது நம் நோக்கமல்ல. ஆனால், கல்வி எனும் பேராயுதம் மூலம் இந்தியச் சமூகத்துள் இடையீடு (Intervene) செய்த திரு அவையின் பெருமையைப் பாடுதலில் தவறில்லை. தேசிய சனநாயக முன்னணியின் ஆட்சியின்போது, அன்றைய துணைப் பிரதமராய்ப் பதவி வகுத்தஇரதயாத்திரை புகழ்எல்.கே. அத்வானி அவர்கள் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, “இப்பயணத்தின் முக்கிய நோக்கம் கராச்சியில் தான் படித்த புனித பாட்ரிக் பள்ளியைக் காண்பதேஎன்றார்.

பாட்ரிக் பள்ளி இன்றும் கராச்சியின் சிறப்புமிகு பள்ளி. திராவிட நாட்டின் கல்விச் சிறப்பைத் தொகுத்தோர், கிறித்தவக் கல்வி மூலம் திராவிடத்தைச் செழிக்க செய்த பெருமையைப் பேசுவர்.

கிறித்தவத்தின் கல்விப் பணியை வியந்து பேசியோர் பல பேருண்டு; அதில் உண்மையும் உண்டு. இப்புகழ் மயக்கத்தில் எத்துணை காலம் வாழப்போகிறோம்? திரு அவையின் கல்விப் பணியின் நோக்கம் நிறைவுறும் நோக்கில் நம் கல்விப் பணியின் வடிவமும் உள்ளடக்கமும் அமைந்துள்ளனவா? நாம் நம்மையே தட்டிப் பார்த்துச் சிந்திக்க வேண்டிய காலம் வந்தாகிவிட்டது.

கிறித்தவக் கல்விமுறை அதன் புற அமைப்பில் சந்திக்கும் பிரச்சினைகள் பல இருக்கலாம். இருக்கவே செய்யும். கிறித்தவத்தின் கல்விப் பணி அடிப்படையில் ஒரு மறைபரப்புப் பணி என்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம்? மறைபரப்புப் பணியென்பது, நம் மறைபற்றிய போதனையை முன்னெடுப்பதல்ல; மறைபரப்புப் பணி என்பது நம் மறை சார்ந்த கருத்துகளை மட்டும் கற்பிப்பதும் அல்ல; நாம் வாழும் சனநாயகத்தை மதித்து, சனநாயக விழுமியங்களையும், சமயச் சார்பற்ற போக்கில் எச்சமயத்தையும் ஒதுக்கிட முனையும் போக்கையும் தவிர்த்தலும் என்பதே ஆகும்.

கார்ப்பரேட் உலகில், எல்லாமே கார்ப்பரேட் மயமான உலகில், கார்ப்பரேட் போக்கைத் தூக்கி எறியும் வல்லமையைத் தரவல்ல நிறுவனங்களை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்?

நாம் செல்லும் திசை எது?

நம் கல்வி நிறுவனங்களுக்கு வலுவான வரலாறு உண்டு. இந்தியா போன்ற வர்க்கப் பிளவுகளுடன் வர்ணபேதத்தையும் தாங்கி நிற்கும் சமூகத்தில் சமத்துவம் வேண்டி நிறுவப்படும் நிறுவனங்கள் எளிதல்ல; மிகப்பெரிய எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுதான் அவை வெற்றிபெற முடியும்.

பொதுவாக, ஒரு நாட்டில் செயல்படுத்தப்படும் கல்வி பற்றி ஆய்வு செய்கையில், கீழ்க்காணும் சில வினாக்களைத் தொகுத்து, அவ்வினாக்களுக்கான பதில் நாம் ஏற்றுக்கொண்ட விழுமியங்களுக்கு அல்லது  நோக்கங்களுக்கு உகந்ததா? இல்லையா? என்பதை அறிய முடியும். நாம் அறிமுகம் செய்துள்ள கல்வி யாரால்? யாருக்கு? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை ஆத்மார்த்தமாக எழுப்பி விடைகாண முயலவேண்டும்.

நம் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குறிப்பாக, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் எப்போதாவது மேலே கண்டவாறு சில வினாக்களை எழுப்பி சுய ஆய்வு மேற்கொண்டுள்ளனரா?

மறைமாவட்ட அளவிற்குப் பள்ளிகளை நடத்துகிறோம். மறைமாவட்டங்களில் கல்விக்கெனத் தனி பணிக்குழுக்கள் உள்ளன. துறவியர் சபை எண்ணிக்கையில் பெருவாரியான கல்வி நிறுவனங்களைக் கையில் வைத்துள்ளனர். மழலையர் பள்ளியிலிருந்து பொறியியல் கல்வி வரை தம் பரப்பை விரிவுபடுத்தியுள்ளனர். போட்டி என்பது வாழ்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடாகிவிட்ட நிலையில், நிறுவப்படும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும், அவைகளின் பரப்பும் பெருத்துவிட்டது. பெருத்துவிட்ட வணிகச் சமூகத்தில், தெரிவு என்பது தேர்வு செய்வோரின் வசதிக்கேற்ப என்பது போல், இன்றுவசதிக்கேற்றபள்ளிகள் உருவாகியுள்ளதால், வசதியற்றவர் பற்றி எவருமே கவலைப்படவில்லை.

கல்வி, மானுடத்தின் மாண்பு சேர்க்கும் அற்புதமான ஒரு கருவி என்ற நிலை மாறி, பிழைப்பிற்கான கருவியாக மாறிய நிலையில், இக்கல்வி தரும் சுவையைப் பருகவிருக்கும் மனிதன் என்னவாக மாறுவான்? திரு அவை நடத்தும் கல்விச் சேவைகள் மானுட மாண்பைக் காக்கும் கேடயமாக மாற்றப்படுகையில், இக்கல்விச் சேவையைக் கையில் வைத்திருப்போர் நம்பத்தகுந்தோராவர்; இல்லாதோர் போட்டியை நியாயப்படுத்தும் வணிகராவர்.

மீண்டும் கேள்விகளுக்கு...?

இந்தியச் சமூகத்தில் கல்வி என்பது எப்போதுமே எல்லாருக்குமானதாக இருந்ததே இல்லை. சாதியப் படிநிலையில் உச்சத்தில் இருந்தோர் கற்கவும் கற்பிக்கவும் உரிமை பெற்றிருந்தனர். இப்படிப்பட்ட படிநிலை அமைப்பின் இரண்டு அல்லது மூன்றாம் தரத்தினர் கற்க மட்டுமே உரிமை பெற்றிருந்தனர். நான்காம் வகையினருக்கும், அவரைத் தாண்டிய ஐந்தாம் நிலையினருக்கும் கற்கவே உரிமை இல்லையென்பதால், கற்பித்தல் என்ற கேள்வியே இங்கு எழவில்லை. எனவே, கல்வி யாருக்குக் கொடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு விடை கிடைத்த நிலையில், ‘எதற்கு?’ என்ற கேள்வி எழும் வர்ணபேதத்தைத் தர்மமாகப் பேணிய இச்சமூக அமைப்பில் எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் கல்வியின் உள்ளடக்கம் பேணப்பட்டது.

ஆனால், சமூக மாற்றம் என்பதோ, மானுட மாண்பைப் பேணுதல் என்பதோ இக்கல்வி முறையின் உள்ளுறையாக இல்லை. கற்பிக்கும் ஆசிரியர், கற்கும் மாணவர் யார்? எவர்? என்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அமைப்பில் கல்வியின் நோக்கம் பற்றிய விவாதத்திற்கு இடமில்லை.

இந்தியச் சமூகத்தின் எழுதப்பெறாத மனுச்சட்டத்தை நிலைநிறுத்தவே இந்தியக் கல்வி முறை, அவர்களின் குருகுலமுறையாக நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குருகுல முறை நடைமுறையில் இல்லாமை கண்டு கவலையுற்றாராம்.

காலனி ஆட்சிக் காலத்தில் அறிமுகமான மெக்காலே கல்வியும், அவர்களோடு இந்திய மண்ணில் மாற்றம் வேண்டி நுழைந்த மறைப்பணியாளரின் கல்விப் பணியும் கல்வி உலகில் சிறு அசைவை ஏற்படுத்தியது.

விடுதலை பெற்ற இந்தியா ஏற்றுக்கொண்ட சனநாயகம், சனநாயகம் காக்க உருவான அரசமைப்புச் சட்டங்கள் என்பனவெல்லாம் சமூக நீதியைப் பேசியமையாலும் இறுகிய சமூக அமைப்பில் சிறிய அசைவுகள், சில அதிர்வுகளை உருவாக்கியது. காலங்காலமாக இறுகப் பிடித்து வந்த சாதியக் கட்டுமானம் முழுமையாகத் தகர்க்கப்படவில்லையாயினும், சமூக நீதியின் வரவினால் கல்விக்கூடங்கள் எல்லாருக்குமானதாக மாறியது. ‘எல்லாரும் உள்ளே வந்தார்கள்என்று முழுமையாகச் சொல்லமுடியாது; எனினும், இடஒதுக்கீடு என்னும் சமூக நீதி ஓர் உரிமையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதுவரை அடைத்திருந்த வாயில்கள் திறக்கப்பட்டன.

நாம் என்ன செய்தோம்?

எல்லாருக்கும் சமமாகக் கல்விக்கூட வாயில்களைத் திறந்த நாம், அரசமைப்பின் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டே அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களை நடத்திய நாம், அரசின் தனியார்மயக் கொள்கையைக் கேள்விக்குட்படுத்தாமல், ஒரே வளாகத்தில் ஒரு பக்கம், அரசு உதவி பெறும் பள்ளி அல்லது கல்லூரி; மறுபக்கம் உதவி பெறாத பள்ளிகள் (Matriculation, CBSE) என ஏற்படுத்தினோம். அதாவது, ஒரே வளாகத்திற்குள் பல்வணிக அரங்குகள்! இம்மாதிரிகளைப் பல்வேறு அரங்குகளை அறிமுகப்படுத்துவதில், அரசுக்கு ஓர் அரசியல் இருக்கலாம். கல்வி மூலம் மறைப்பணி ஆற்றுவோருக்கு என்ன அரசியல் இருக்கமுடியும்? இது இன்றைய கிறித்தவக் கல்விப் பணியின் வடிவம்.

கல்வி நிறுவனங்கள் காலந்தோறும் எழும் சூழல்களுக்கு ஏற்ப மானுட வளர்ச்சியை மையப்படுத்தித் தம்மைத் தகவமைத்துக் கொள்ளல் இனியேனும் அவசியம். சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பயன்படுத்தும் நம் நிறுவனங்கள் இன்றைய போட்டி உலகில், போட்டியை நியாயப் படுத்தும் வகையில் அமைதல் சரியல்ல.

திரு அவை தன் மனித சக்தியைக் கல்வி நிறுவனங்களுக்காக அர்ப்பணித்துள்ளது. நாம் நம்மவரை ஆண் மற்றும் பெண்களைத் துறவு ஏற்க வைத்து இத்துறைக்கு அர்ப்பணித்துள்ளோம்.

நமது கல்விப்பணி பற்றிய விமர்சனங்களை ஏற்று, மறு விசாரணை செய்ய வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
கருவறை அதிசயம்: கருத்தரிப்பில் உயிரைக் காக்கும் வழிமுறைகள்!

மனித வாழ்வின் தோற்றம் என்பது இயற்கையின் ஆகச்சிறந்த அற்புதங்களில் ஒன்றாகும். ஒரு விந்தணுவும் கருமுட்டையும் இணைந்து சுமார் 40 வாரங்களில் ஒரு முழுமையான குழந்தையாக உருவெடுக்கும் இந்த உயிரியல் பயணம் வியக்கத்தக்கத் துல்லியத்தன்மை கொண்டது.

கருவறையில் வளரும் ஓர் உயிரைப் பாதுகாப்பாகப் பேணிக்காப்பது என்பது, கருத்தரிப்பதற்கு மிக நீண்ட நாள்களுக்கு முன்பே தொடங்கி, மகப்பேறு வரையிலான தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் குடும்பப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அர்ப்பணிப்புமிக்க பயணமாகும்.

வருங்காலக் குழந்தையைப் பாதுகாப்பதற்கான மிக உன்னதமான தருணம் என்பது, கருத்தரிப்பு நிகழ்வதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. தாயின் உடலை ஓர் ஆரோக்கியமான கர்ப்ப காலத்திற்குத் தயார்படுத்துவதே கருத்தரிப்பிற்கு முந்தைய பராமரிப்பின் முதன்மை நோக்கமாகும்.

குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் கடுமையான பிறவிக் குறைபாடுகளைத் (Spinal and brain defects) தடுப்பதற்கு நாளொன்றுக்குக் குறைந்தது 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் அடங்கிய வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும் என்று மகப்பேறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீரிழிவு நோய் (Diabetes), உயர் இரத்த அழுத்தம் (High blood pressure), தைராய்டு கோளாறுகள் (Thyroid disorders) போன்ற நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் தாய்க்கு இருப்பின், கருவுறுவதற்கு முன்பே தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிக முக்கியமாகும்.

மது அருந்துதல், புகையிலைப் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதேவேளையில், தகுந்த உடல் எடையைப் பேணுவதும், தேவையான நோய் எதிர்ப்புத் தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக்கொள்வதும் தாய்க்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் அரணாக விளங்கும்.

கருத்தரித்தல் எனும் உயிரியல் அற்புதம்

ஒரு விந்தணுவானது பெண்ணின் கருமுட்டையைத் துளைத்து அதனுடன் இணையும் போது கருத்தரித்தல் நிகழ்கிறது. ஒரு வழக்கமான மகப்பேறுகாலம் என்பது சுமார் 40 வாரங்கள் நீடிக்கும். இதனை மூன்று முப்பருவங்களாகப் (Trimesters) பிரித்து மருத்துவ உலகம் ஆராய்கிறது. இந்த ஒட்டுமொத்த வளர்ச்சியானது மூன்று முக்கிய உயிரியல் மைல்கற்களைக் கடந்துசெல்கிறது.

கருக்கால நிலை (Germinal Stage - வாரங்கள் 1 முதல் 4 வரை)

இப்பயணம் கருத்தரித்தலில் தொடங்கி, சைகோட் (Zygote) எனப்படும் ஒற்றைச் செல்லாக உருவெடுத்து, மிக விரைவாகப் பல செல் பிரிதலுக்கு உள்ளாகி பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) ஆக மாறுகிறது. முதல் வாரத்தின் இறுதியில் இந்தப் பிளாஸ்டோசிஸ்ட் தாயின் கருப்பைச் சுவரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது (Implantation). இதுவே கர்ப்பத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்கமாகும்.

தொடர்ந்து 2 முதல் 4 வாரங்களில், இந்தப் பிளாஸ்டோசிஸ்ட் புற அடுக்கு (Ectoderm), நடு அடுக்கு (Mesoderm) மற்றும் அக அடுக்கு (Endoderm) ஆகிய மூன்று முதன்மை அடுக்குகளாகப் பிரிகிறது. இவையே பிற்காலத்தில் குழந்தையின் அனைத்து உறுப்புகளாகவும் திசுக்களாகவும் பரிணமிக்கின்றன.

இதே காலகட்டத்தில், குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் பனிக்குடப் பை (Amniotic sac) மற்றும் தொப்புள் கொடி (Umbilical cord) ஆகியவையும் உருவாகத் தொடங்குகின்றன.

முளைய நிலை (Embryonic Stage - வாரங்கள் 4 முதல் 10 வரை)

இக்காலகட்டத்தில்தான் குழந்தையின் இதயம், மூளை, தண்டுவடம் மற்றும் முக்கிய உடலமைப்புகள் யாவும் வடிவமைக்கப்படுகின்றன. இக்கால கட்டத்தில்தான் வெளிப்புறக் காரணிகளால் குழந்தைக்கு அதிகப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், தாயானவர் இரசாயனங்கள், கதிர்வீச்சுகள் மற்றும் நச்சுப் பொருள்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

சிசு நிலை (Fetal Stage - 11 வாரம் முதல் பிறப்பு வரை)

11 முதல் 40 வாரங்கள் வரையிலான இக்காலகட்டத்தில், குழந்தையின் உறுப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைவதுடன், அவற்றின் புலன்களும் செயல்படத் தொடங்குகின்றன. தாயின் உடலானது இந்த அதிவேக வளர்ச்சிக்குத் தேவையான இரத்த ஓட்டத்தையும் ஊட்டச்சத்துகளையும் ஒரு நுட்பமான கட்டமைப்பு மூலம் தடையின்றி வழங்குகிறது.

குடும்பப் பராமரிப்பும், மருத்துவக் கண்காணிப்பும்

ஆரோக்கியமான மகப்பேறு என்பது கர்ப்பிணிப் பெண்ணின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; அது கணவர், குடும்பத்தினர் மற்றும் மருத்துவக் குழுவினரின் கூட்டு முயற்சியாகும்

மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளிலான பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ளவேண்டும். இவை குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், ஏதேனும் அசாதாரணமான ஆபத்துகள் இருப்பின் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்யவும் உதவுகின்றன.

பாதுகாப்பான அல்ட்ரா சவுண்ட் (Ultra sound) இமேஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தையின் நலம் மற்றும் அசைவுகள் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இரத்தப் பரிசோதனைகள் மூலம் மரபணு ரீதியான (Genetic) அல்லது வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் முன்கூட்டியே கண்டறியப்படுகின்றன.

இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவைத் தாய் உட்கொள்வது குழந்தையின் திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. அதேபோல, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, குழந்தையைப் பாதுகாப்பாகச் சூழ்ந்திருக்கும் பனிக்குட நீரின் (Amniotic fluid) அளவைச் சரியான விகிதத்தில் பராமரிக்க உதவும்.

இறுதியாக, கருவறையில் உருவாகும் ஒரு புதிய உயிர் என்பது இப்பூமியின் எதிர்காலமாகும். அந்த எதிர்காலத்தை ஆரோக்கியமாகவும், அறிவுத்திறன் மிக்கதாகவும் மாற்றுவது நாம் அவர்களுக்கு வழங்கும் முதற்கட்டப் பாதுகாப்பில்தான் அடங்கியுள்ளது.

திட்டமிட்ட கர்ப்பம், முறையான மருத்துவக் கலந்தாய்வு, சத்தான உணவுமுறை, குடும்பத்தினரின் கனிவான அரவணைப்பு ஆகிய அனைத்தும் இணையும் போது, கருவறைப் பயணம் இனிமையாகவும், பிறக்கும் குழந்தை நோய்நொடிகள் இன்றியும் வளமுடன் திகழும் என்பதில் ஐயமில்லை.

news
சிறப்புக்கட்டுரை
கருவிலுள்ள குழந்தைகளின் வாழ்வுரிமை

தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், மனித வாழ்வின் மாண்பும், கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமையும் உலகளவில் தீவிரமான சட்ட மற்றும் அறநெறி விவாதங்களுக்கு உட்பட்டுள்ளன. திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது முதல் திருமடலான Magnifica Humanitas’ (மகத்தான மானுடம்) மூலம், செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனித மாண்பும் உயிரின் புனிதத்துவமும் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்படக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.

மனிதன் இறைவனின் சாயலிலும் உருவத்திலும் (Imago Dei) படைக்கப்பட்டவர் என்பதால், மனித வாழ்வின் மதிப்பு, அதன் வளர்ச்சி நிலை, திறன் அல்லது சமூகப் பயன்பாட்டைப் பொறுத்தது அல்ல; மாறாக, அது மனிதராக இருப்பதிலேயே அடங்கியுள்ளது. எனவே, கருவில் உள்ள குழந்தையும் இறைவனின் உருவில் படைக்கப்பட்ட மனித உயிராக இருப்பதால், அதன் மாண்பும் வாழ்வும் பாதுகாக்கப்படவேண்டியது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும். இந்தப் பின்னணியில், கருவில் உள்ள குழந்தையின் சட்டநிலையையும் அதற்கான பாதுகாப்புகளையும் அறிந்துகொண்டால்அவர்களது வாழும் உரிமையைப் பாதுகாக்க நமக்கு உறுதுணையாயிருக்கும்.

நாசிட்டூரஸ் கோட்பாடு (Doctrine of Nasciturus)

கருவில் உள்ள குழந்தையின் சட்டப் பாதுகாப்பிற்கான அடிப்படைக் கோட்பாடாக  ‘நாசிட்டூரஸ் கோட்பாடு(Doctrine of Nasciturus) விளங்குகிறது. ‘Nasciturus pro iam nato habetur, quotiens de commodis eius agitur’ என்ற இலத்தீன் சட்டப் பொன்மொழி, ‘கருவில் உள்ள குழந்தையின் நலன் தொடர்பான விவகாரங்களில், அது ஏற்கெனவே பிறந்த குழந்தையாகக் கருதப்படும்என்று பொருள்படும். இந்தக் கோட்பாடு பண்டைய உரோமன் சட்டத்தில் தோன்றி, பின்னர் ஆங்கிலப் பொதுச்சட்டத்தின் வழியாக இந்தியச் சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டப் புனைவு (Legal Fiction) என்ற அடிப்படையில், குழந்தையின் நலனுக்காக அது பிறந்ததாகக் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற சட்ட அறிஞர் சால்மண்ட் (Salmond on Jurisprudence) தனது நூலில், கருவில் உள்ள குழந்தை பல்வேறு சட்ட நோக்கங்களுக்காக ஏற்கெனவே பிறந்த நபராகக் கருதப்படுவதாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, சொத்துரிமை பெறுதல் மற்றும்  நிரந்தரக் கட்டுப்பாட்டுக்கு எதிரான விதி (Rule Against Perpetuities) தொடர்பான சட்டக் கேள்விகளில், கருவில் உள்ள குழந்தை உயிருடன் இருக்கும் நபராகவே சட்டம் கருதுகிறது. இதன் மூலம், பிறக்காத குழந்தையின் நலனைப் பாதுகாக்கும் சட்ட நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.

உலகளாவிய சட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பு

உலகளாவிய அளவிலும் கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பு மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா 1992-ஆம் ஆண்டு அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தத்தின் (UNCRC) முன்னுரையில், “குழந்தை தனது உடல் மற்றும் மன முதிர்ச்சியின்மையால், பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உரிய சட்டப் பாதுகாப்பும், சிறப்பான பராமரிப்பும் பெறவேண்டியது அவசியம்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கருவில் உள்ள குழந்தையை வெளிப்படையாக வரையறுக்கவில்லை என்றாலும், அதன் நலனைப் பாதுகாக்கும் சட்ட அணுகுமுறைக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

இந்திய அரசமைப்பின் 21-ஆம் கட்டுரையின் கீழ் கருவில் உள்ள குழந்தை தனித்த அரசமைப்புச் சட்ட நபராக அங்கீகரிக்கப்படவில்லை; இருப்பினும், உயிரின் மதிப்பு, மனித மாண்பு மற்றும் சமூக நீதி போன்ற அரசமைப்புச் சட்டக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சட்டங்களில் கருவில் உள்ள குழந்தைக்குக் குறிப்பிடத்தக்கப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சொத்துரிமை மற்றும் பரம்பரை உரிமை தொடர்பாக இந்தியச் சட்டம் மிகவும் முன்னேறிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. Indian Succession Act, 1925-இன் பிரிவு 114 மற்றும் Hindu Succession Act, 1956-இன் பிரிவு 20 ஆகியவை கருவில் இருக்கும் குழந்தை பின்னர் உயிருடன் பிறந்தால், வாரிசுரிமை தொடங்கிய நேரத்திலேயே உயிருடன் இருந்ததாகக் கருதி அதன் சொத்துரிமையைப் பாதுகாக்கின்றன.

அதேபோன்று, பாரதிய நாகரிக் சுரக்ஷh சன்ஹிதா (BNSS)-வின் கீழ், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால், அவரது தண்டனையை ஒத்திவைக்கவோ அல்லது ஆயுள் தண்டனையாக மாற்றவோ உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், தாயின் குற்றத்திற்காக எந்தத் தவறும் செய்யாத கருவில் உள்ள குழந்தை தண்டிக்கப்படக்கூடாது என்பதாகும்.

பெண் கருக்கலைப்பு மற்றும் PCPNDT சட்டம்

இந்தியாவில் ஆண் குழந்தைக்கு அளிக்கப்படும் சமூக முன்னுரிமை காரணமாக, பெண் கருக்கலைப்பு (Female Feticide) என்ற கொடூரமான நடைமுறை பரவலாகக் காணப்பட்டது. இதன் விளைவாக நாட்டின் பாலின விகிதம் (Sex Ratio) கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சமூகப் பிரச்சினையைத் தடுக்கும் நோக்கில், கருவுறுதலுக்கு முன் மற்றும் கர்ப்பகால நோயறிதல் நுட்பங்கள் சட்டம், 1994 (பாலினத் தேர்வுத் தடை) (PCPNDT Act) இயற்றப்பட்டது.

 இச்சட்டம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதையும், பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதையும் தடை செய்கிறது. சட்டத்தை மீறும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. மேலும், ஸ்கேன் மையங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாலின வேறுபாடின்றி கருவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் வாழ்வுரிமை, சமத்துவம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாக்கும் முக்கியமான சட்டமாகும்.

இந்திய மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (MTP Act), 1971

 இன்றைய சூழலில், கருக்கலைப்பு தொடர்பான வழக்குகளில், கர்ப்பிணிப் பெண்ணின் அரசமைப்புச் சட்ட உரிமைகள், மனித மாண்பு, உடல்நலம், தனியுரிமை மற்றும் சுயாட்சி ஆகியவற்றிற்கும், கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுரிமைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது நீதிமன்றங்களின் முக்கியப் பொறுப்பாக உள்ளது. இந்திய மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (MTP Act) குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கருக்கலைப்பை அனுமதித்தாலும், அது கருவில் வளரும் உயிரின் மதிப்பை முற்றிலும் புறக்கணிப்பதில்லை; மாறாக, தாயின் உரிமைகளையும் கருவின் நலனையும் சமமாகக் கருத்தில் கொள்கிறது

கருவில் உள்ள குழந்தையின் உரிமைகள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள்

நீதிமன்றங்களும் கருவில் உள்ள குழந்தையின் உரிமைகளைப் பல்வேறு சூழ்நிலைகளில் அங்கீகரித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் Watt v. Rama (1972) வழக்கில், கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட காயங்களுக்குப் பின்னர் உயிருடன் பிறந்த குழந்தை இழப்பீடு கோரலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அமெரிக்காவின் Amadio v. Levin (1985) வழக்கில், குழந்தை உயிருடன் பிறந்ததா? அல்லது கருவிலேயே உயிரிழந்ததா? என்பது தவறான மரண வழக்குகளில் இழப்பீட்டு உரிமையை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், Hemraj v. Ramdhan வழக்கில் இராஜஸ்தான் உயர் நீதிமன்றமும், Shri Sukhnandan v. Union of India (2026) வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றமும், கரு என்பது பெண்ணின் உடலில் வளரும் மற்றோர் உயிர் என்றும், கருவை இழப்பது பிறக்கவிருந்த குழந்தையை இழப்பதற்குச் சமமானதாகும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

Suchita Srivastava v. Chandigarh Administration (2009) வழக்கில், கருவில் வளரும் உயிரைப் பாதுகாப்பதில் அரசுக்குச் சட்டப்பூர்வமான அக்கறை இருப்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், அந்த அக்கறை கர்ப்பிணிப் பெண்ணின் தனிநபர் சுதந்திரம், உடல், சுயாட்சி மற்றும் இனப்பெருக்க உரிமைகளுடன் சமநிலைப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அண்மைகாலத் தீர்ப்புரைகளில் இந்திய அரசமைப்பின் 21-வது பிரிவு, இனப்பெருக்கச் சுயாட்சி, உடல் ஒருமைப்பாடு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றிற்கான உரிமையைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்குகிறது என்று இந்திய உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. மருத்துவக் கருக்கலைப்பு (MTP) சட்டம் பெண்கள் 24 வாரங்கள் வரை தங்களின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்கிறது. மேலும், பெண்ணின் உடல் மற்றும் மனநலனைப் பாதுகாப்பதற்காக அந்தக் காலக் கெடுவைத் தாண்டியும் கருக்கலைப்பு செய்ய நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன.

கத்தோலிக்கச் சமூகப் போதனையும் இந்தியச் சட்டமும்: ஓர் ஒருங்கிணைந்த பார்வை

கத்தோலிக்கச் சமூகப் போதனை மனித வாழ்வின் புனிதத்துவத்தை மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்ணின் மாண்பு, உடல்நலம் மற்றும் சமூக நலனையும் சமமாக வலியுறுத்துகிறது. திரு அவை தாயையும் குழந்தையையும் ஒருவருக்கொருவர் எதிரானவர்களாகக் காணவில்லை; மாறாக, இருவரும் சமமான மனித மாண்பைக் கொண்டவர்கள் என்றும், இருவரையும் பாதுகாக்கும் சமூக, மருத்துவ மற்றும் சட்ட அமைப்புகளை உருவாக்குவது அரசின் கடமை என்றும் போதிக்கிறது. ஏழைகள், பலவீனர்கள், குரலற்றவர்களை முன்னுரிமையுடன் பாதுகாக்கவேண்டும் என்ற Preferential Option for the Vulnerable என்ற கத்தோலிக்கச் சமூகப் போதனையின் அடிப்படையில், கருவிலுள்ள குழந்தையும் சிறப்பான பாதுகாப்பிற்குரியவராகக் கருதப்படுகிறார்.

இன்றைய சூழலில், மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, மரபணு பரிசோதனைகள் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான புதிய சவால்கள் சட்டத்திற்கும் அறநெறிக்கும் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. இந்நிலையில், மனிதனை ஒரு பயன்பாட்டுப் பொருளாக அல்ல; இயல்பிலேயே மாண்புடைய நபராகக் காணும் கத்தோலிக்கச் சமூகப் போதனையும், கருவில் உள்ள குழந்தையின் நலனைப் பாதுகாக்கும் இந்தியச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று துணையாக அமைகின்றன.

எனவே, இந்தியச் சட்டத்தின் தற்போதைய அணுகுமுறை, கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமையையும், கர்ப்பிணிப் பெண்ணின் அரசமைப்புச் சட்ட உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாகும். அதேநேரத்தில், கத்தோலிக்கச் சமூகப் போதனை ஒவ்வொரு மனித உயிரும் கருவுறும் தருணத்திலிருந்தே இயல்பான மாண்பும் மதிப்பும் கொண்டது என்பதை நினைவூட்டுகிறது. மனித உரிமைகள் குறித்த எந்தவொரு சட்ட அமைப்பும், மிகப் பலவீனமான மனித உயிரைப் பாதுகாக்கும் அளவில்தான் அதன் உண்மையான மனிதநேயத்தை வெளிப்படுத்தும். கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, ஒரு சட்டக் கடமையாக மட்டுமல்ல; மனித மாண்பையும், சமூக நீதியையும், பொதுநலனையும் நிலைநாட்டும் உயர்ந்த அறப்பொறுப்பாகும்.

news
சிறப்புக்கட்டுரை
உயிர் பாதுகாப்பு: இன்றைய தலைமுறையும் திரு அவை போதனையும் (Gen Z and Prolife teachings of the Church)

கத்தோலிக்கத் திரு அவையின் உயிர் பாதுகாப்பு  நிலைப்பாடு, அறிவியல் மற்றும் இயற்கை விதிகளில் வேரூன்றியுள்ளது. இது பகுத்தறிவின் அடிப்படையிலும் புரிந்துகொள்ளக் கூடியதாகும். நலிவடைந்த நபர்களுக்காகத் திரு அவை துணை நிற்பதைப் போலவே, அனைத்து மனிதரின் உயிரின் மாண்புக்காகவும், புனிதத்திற்காகவும் திரு அவை தொடர்ந்து வாதிடுகிறது.

உலகெங்கிலும் உள்ள  உயிர் பாதுகாப்பு   இயக்கங்கள், மனித வாழ்வின் புனிதத்தன்மையைக் குறித்த தெளிவை ஏற்படுத்த வெவ்வேறு தலைமுறையினர்மீது கவனம் செலுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நாம் இன்றைய ‘ஜென் Z\\\' (Gen Z) தலைமுறையினருக்கு உயிர் பாதுகாப்பு (Pro life) தொடர்பான சவால்கள் குறித்தும், திரு அவையின் போதனைகள் குறித்தும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இன்றைய சூழலில், ‘ஜென் Z தலைமுறையினரின் உண்மைக்கான தேடல், ஒரு சிலரைக் கத்தோலிக்கத் திரு அவைக்கு மீண்டும் வந்துசேர உதவியுள்ளது. அவ்வாறு வந்தவர்கள் வாழ்வின் புனிதத்தை உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்கும் கருவுற்றது முதல் இயற்கையான மரணம் வரை உள்ளார்ந்த கண்ணியம் உண்டு என்ற திரு அவையின் பார்வையுடன் துணை நிற்கிறார்கள். மேலும், Youth United for  Christ (YU4C), Jesus Youth, Youth Commission போன்ற அமைப்புகள் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி விழுமியங்களில் உறுதியாக வேரூன்றி நிற்கிறார்கள். எனவே, ‘ஜென் Z’ தலைமுறையினருக்கு ஆன்மிகப் போதனைகள் மூலம் தொடர்ந்து வழிகாட்டுவதும், பிரச்சாரங்களில் பங்கேற்கச் செய்து, சமூகத் திட்டங்களில் ஈடுபடுத்துவதும் திரு அவையின் பங்காகும்.

சவால்கள்: இன்றைய மதச்சார்பற்ற உலகம், ‘தனிநபர் தேர்வு உரிமை (pro-choice) சார்ந்த முன்னெடுப்புகளை ‘ஜென் Z தலைமுறையினரிடையே பரவலாக ஊக்குவிக்கிறது. கருக்கலைப்பு, கருத்தடை, செயற்கை கருத்தரிப்பு (IVF), கருத்தரித்தலை ஒரு வணிகப் பொருளாக மாற்றுதல், பாலியல் மற்றும் பாலின அடையாளங்கள் சார்ந்த கோட்பாடுகள் போன்றவற்றிற்கான ஆதரவையும் நிதி உதவியையும் இவர்கள் மூலம் முன்னெடுக்கின்றனர்.

வாழ்க்கை ஒருமுறைதான் (YOLO) என்ற கோட்பாட்டால் ஈர்க்கப்பட்ட இன்றைய ‘Gen Zதலைமுறையினர் சமூக, கலாச்சார, பாரம்பரிய அல்லது மதரீதியான நெறிமுறைகளுக்குள் கட்டுப்படாமல் ‘தேர்வுரிமை (Pro-choice) அடிப்படையில் வாழ்வதை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள். கல்வி, தொழில், வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துணை  தேர்வு, பாலினம் மற்றும் பாலியல் அடையாளம் போன்றவைகளில் தங்கள் விருப்பப்படியே முடிவெடுத்து வாழ வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

தேர்வுரிமை என்பது தனிநபர்களுக்கான ஒரு சுதந்திரமான தேர்வு அல்ல; மாறாக, நவீன சிந்தனை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தைக் கொண்டு நிதி ஆதாயத்திற்காக ஒரு வணிகப் பொருளாக விற்கப்படும் கருத்தாக்கமேயாகும். ‘FOMO(விட்டுவிடப்படுவோமோ என்ற அச்சம்) எனும் கருத்தாக்கத்தை ஏற்கெனவே ‘Gen Z தலைமுறையினருக்கு விதைத்திருப்பதால், அவர்களுக்கு அங்கீகாரம் தேவை என்பதை உணர்ந்து வணிக உலகம் இவற்றைச் செயல்படுத்துகிறது. இந்தக் கூற்றுகளின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள நம் திரு அவை நமக்குத் தெளிவான விளக்கங்களைத் திருவிவிலிய மற்றும் மறைக்கல்விப் போதனைகள் வாயிலாக வழங்குகிறது

கருக்கலைப்பு: ‘தேர்வுரிமை பாலியல் சுகாதார உரிமை மற்றும் பராமரிப்பின் கீழ் ‘மருத்துவ ரீதியான கருக்கலைப்பை (MTP) குறிப்பிடுகிறது. திரு அவை கருத்தரித்த கணம் முதலே மனித உயிர் முழுமையாக மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் எல்லா உரிமைகளைக் கொண்ட நபராக அங்கீகரிக்கிறது (CCC 2270.  CCC 2271).  கருக்கலைப்பை விரும்பிச் செய்தால் அது மனித உயிருக்கு எதிரானது (காண்க: நியமன விதி 1398). மனித உயிர் எவ்வாறு கருத்தரிக்கப்பட்டிருந்தாலும் (பாலியல் வல்லுறவு, வன்கொடுமை, முறையற்ற உறவு) அது விலைமதிப்பற்றது என்று திரு அவை தெளிவாகக் கூறுகிறது.  கருக்கலைப்பு பாலியல் வன்புணர்வின் வலியை, தாக்கத்தை நீக்குவதில்லை, அது மேலும் ஒரு நபர் பாதிப்புக்குள்ளாவதற்கு வழிவகுக்கிறது. உண்மையான மருத்துவ அவசரநிலைகளில் (எ.கா. கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல், புற்றுநோய் சிகிச்சை), திட்டமிடப்படாத சிசுவின் மரணம் போன்ற சூழல்களை நேரடிக் கருக்கலைப்பிலிருந்து திரு அவை தார்மீக ரீதியாக விலக்கு அளிக்கின்றது (இரட்டை விளைவுக் கோட்பாடு - CCC 2263).

Gen Z தலைமுறையினருக்குத் திரு அவையின் போதனை ஆண்-பெண் என்னும் பாலின அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும். பாலியல்பு, உடல் ஒழுக்கம் (chastity), திருமணத்தின் நன்மைகளையும் குடும்ப வாழ்வின் செழிப்பை மையப்படுத்தியதாக உள்ளன என்பதை வலியுறுத்துகிறது (CCC 2333).  மேலும், பாலின அடையாள முரண்பாடுகளை (gender dysphoria) எதிர்கொள்ளும் நபர்களுக்கு கருணைமிக்க ஆலோசகர்கள் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகளின் ஆதரவைப் பெற்றுத் தரவேண்டும் என்று அங்கீகரிக்கிறது. ஒரே பாலின ஈர்ப்பு கொண்ட நபர்களை மரியாதை, கருணை மற்றும் உணர்வுப்பூர்வமான புரிதலுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திரு அவை போதிக்கிறது. அவர்கள் கிறித்தவர்களாக இருப்பின், தங்கள் நிலையால் ஏற்படும் சிரமங்களை ஆண்டவரின் சிலுவை தியாகத்தோடு இணைக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறது  (CCC 2358 – 2359).

திருமணத்திற்கு முன் அல்லது  திருமணப் பந்தத்திற்கு வெளியே பாலுறவு கொள்வதைத் திரு அவை மனித உடலின் மாண்பைக் குறைக்கும் செயலாகக் கற்பிக்கிறது.  தூய ஆவியின் ஆலயமான நம் உடலைக் களங்கப்படுத்தும்  செயலாகக் கருதுகிறது; ‘Gen Z தலைமுறையினருக்குத் தம் உடலைக்  காத்துக்கொள்ளப் போதிக்கிறது.

திரு அவை IVF-ஐ எதிர்க்கிறது.  IVF-இல்  பல கருக்களை உருவாக்கி, பின்னர் உருவான உயிர்கள் உறைய வைக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. கருக்கள் ஒவ்வொன்றும் கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு மனித உயிர். அதன் மாண்பைக் காக்கவே இந்த நிலைப்பாடு.

திரு அவையும், உயிர் பாதுகாப்பு இயக்கங்களும் அருளடையாளங்கள் வழியாகக் கிறிஸ்து இயேசுவின் மறையுடலில் அனைவரையும் மீண்டும் இணைப்பதை ஊக்குவிக்கிறது. இறைவனால்,  திரு அவையால் மன்னிக்க முடியாத குற்றம் எதுவும் இல்லை என்பதை ‘Gen Zதலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அவ்வாறு பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இணைந்த ‘Gen Z-தலைமுறையினர் உள்பட பலர் உயிர் பாதுகாப்புக்கான மிகச்சிறந்த குரல்களாகத் திகழ்கின்றனர்.

Gen Zதலைமுறையினரின் YOLO மற்றும் FOMO கோட்பாடுகளைத் திரு அவை தன் வழியில் இன்னும் மெருகேற்றி, நாம் ஒருமுறை மட்டுமே இவ்வுலகில் வாழ்கிறோம் (YOLO), அதையும் நாம் இறைவனுக்காக வாழ்வோம் எனும் கருத்தை அறிவுறுத்துகிறது. ‘Gen Zதலைமுறையினருக்கு ear Of Missing Out (FOMO) இந்த உலக வாழ்வில் விடுபட்டு விடுவோமோ என்ற பயத்தைப் போக்கி, திரு அவையின் ஒப்புரவு அருளடையாளத்தின் வாயிலாக இறையாட்சியில் இடம்பெற புது வாழ்வு  அளிக்கிறது. 

Youth United for Christ (YU4C), Jesus Youth, Youth Commission போன்ற அமைப்புகள் ‘Gen Z தலைமுறையினருக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. நாமும் அவர்களோடு இணைவோம், நம்பிக்கை வாழ்வு வாழ்வோம். இறைமகன் இயேசுவின் வார்த்தையின்படி நம் நம்பிக்கையின்படியே நம் வாழ்வு மூவோர் இறைவனின் மாட்சிக்காக அமையட்டும்.