news
சிறப்புக்கட்டுரை
தீபாவளியா? தீரா வலியா?

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், கலாச்சாரமும் பண்பாடும், இந்த வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் நலிந்து கொண்டிருக்கின்றது. கரடுமுரடாக வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகில், கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் அர்த்தம் பெறுவதில்லை. கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முன்னிறுத்துகின்ற கொண்டாட்டங்கள் இன்று கடமைக்காகக் கொண்டாடப்படும் வெற்றுத் திருவிழாக்களாக மாறிவிட்டன.

இதில், தீபாவளிப் பெருவிழாவும் விதிவிலக்கல்ல. தீபாவளிப் பெருவிழா ஒரு மகிழ்ச்சியின் விழா மற்றும் அன்பின் விழா. இது பாரம்பரியமாக இந்து மதத்தைச் சார்ந்த மக்களால் கொண்டாடப்பட்டாலும், இன்று இப்பெருவிழா சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து ஒவ்வோர் இந்தியராலும் கொண்டாடப்படுகிறது. இப்பெருவிழா மக்களோடு மக்களாக எல்லாக் கலாச்சாரங்களிலும் ஊறிவிட்டது. கத்தோலிக்கத் திரு அவையும் கூட தீபாவளி என்னும் இந்த ஒளித் திருவிழாவைக் கிறித்தவத்தின் கடவுளான இயேசு கிறிஸ்துவோடு இணைத்துஇயேசு கிறிஸ்து உலகின் ஒளிஎன்னும் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது.

தீபாவளிப் பெருவிழா என்பது இராவணனை வீழ்த்தி இராமர் அயோத்திக்குத் திரும்பிய தினமாகவும், நரகாசுரனை வென்று கிருஷ்ண பெருமான் உலகிற்கு மகிழ்ச்சியைப் பரிசளித்த தினமாகவும், விக்ரமாதித்ய மன்னர் முடிசூட்டப்பட்டதன் தினமாகவும் கொண்டாடப்பட்டாலும், இப்பெருவிழாவின் முக்கிய நோக்கம், எப்போதும் நன்மையே வெல்லும் மற்றும் எப்போதும் இருளுக்கு ஒளியும்-பொய்மைக்கு மெய்மையும் அடிபணியாது என்பதாகும்.

தீபாவளிப் பெருவிழா ஒருநாள் கொண்டாட்டம் அல்ல; மாறாக, தீபாவளிப் பெருவிழா ஐந்து தினங்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் ஒரு பெருவிழா!

தன்தேரஸ்என்ற பெயரில் முதல் நாள் கொண்டாட்டம் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் முன்னிறுத்தி தொடங்குகின்றது. இந்தத் திருநாளில் ஆரோக்கியத்திற்குச் சான்றாக ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்றப்படுகின்றது. செல்வத்திற்குச் சான்றாக மக்கள் இன்றைய நாளில் அணிகலன்கள் முதலிய பொருள்களை வாங்குகிறார்கள்.

அசுரன் நரகாசுரன் அழிக்கப்பட்ட தினம் எண்ணெய் குளியலோடு தீபமேற்றி நரக சதுர்த்தசி என்னும் பெயரில் இரண்டாம் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

மூன்றாம் நாளில் முக்கியத் திருநாளான தீபாவளிப் பெருவிழா வீடுகளில் விளக்கேற்றி இனிப்புகள் பரிமாறி பட்டாசுகளோடு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணபெருமான் கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களைப் பாதுகாத்த நாள் அறுசுவை உணவோடு நான்காம் நாள் கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் என்னும் சகோதர-சகோதரிகள் மற்றும் இதர உறவுகளைச் சிறப்பிக்கும் தினமாக ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தோடு இப்பெருவிழா முடிவடைகின்றது. இந்த விஞ்ஞான உலகில் சொத்து முதல் சொந்தங்கள் வரை அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற அருமையான ஒரு திருவிழாவைச் சொத்தை விற்று, சொந்தங்களைத் தொலைத்து வெறும் வெற்றுச்சடங்காக கொண்டாடுவது நாகரிக உலகின் அநாகரிகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

மகிழ்ச்சியின் பிறப்பிடமாக இருக்கவேண்டிய தீபாவளிப் பெருவிழா, இன்று தீரா வலிகளை வருவிப்பதாக மாறிவிட்டது. ஐந்து தினங்களில் பெயர்கள்தான் மாறவில்லை. ஆனால், அதன் விழுமியங்கள் அனைத்தும் காற்றோடு போய்விட்டன. செல்வத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற முதல் நாள் கொண்டாட்டம் செல்வத்தைச் சேர்க்கின்ற பெயரில் அடமான கடன்களையும், உத்தரவாத கடன்களையும் சேர்த்து விடுகின்றது. சமவட்டித் தவணைகள் (EMI) கூட இன்று பல குடும்பங்களின் மன அழுத்த அசலாக மாறிக் கொண்டிருக்கின்றது. புதுப்பொருள்களோடு கடனும் மன அழுத்தமும் அதன் சலுகைகளாக நம்மோடு சேர்ந்துகொண்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.

நீர்நிலைகளில் குளிக்கின்ற ஆரவாரமான ஆனந்த எண்ணெய் குளியல்கள் இன்று குளியல் அறைகளோடு முடங்கிவிட்டன. இனிப்புகள் செய்வதற்கான மூலப்பொருள்களையே விளைவிக்கின்ற நம்முடைய சமூகம், இன்று இனிப்பு பலகாரங்களையே இணையதளத்தில் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பாரம்பரிய உணவுகள் இன்று பார்ப்பதற்கே அரிதாகிவிட்டன. ஆரோக்கியமாக வீட்டில் சமைக்கப்பட்டு வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகள், இன்று ஆடம்பரமான கடைகளில் ஆரோக்கியமின்றிச் சமைக்கப்பட்டு இலையின் வடிவில் இருக்கின்ற நெகிழிக்காகிதங்களில் பரிமாறப்படுவது வேதனையைத் தருகின்றது. குடும்பங்களில் உறவினர்கள் ஒன்றுகூடி உண்டு களித்து, அன்போடு பகிர்கின்ற உறவுப் பரிமாற்றம் இன்று முகநூல் இணைய குறுஞ்செய்திகளோடு முடிந்துவிடுகின்றன.

முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றைத் தொலைத்துவிட்டு நாளைய சமூகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இன்றைய தீபாவளிப் பெருவிழா அர்த்தமுள்ள ஒரு விழாவாக இருக்க வேண்டும் என்றால், அது எதற்காகக் கொண்டாடப்படுகின்றது என்பதன் அர்த்தத்தை உணர்ந்து, அதை ஓர் ஆடம்பரத் திருவிழாவாக மட்டுமின்றி, அதை ஒரு கலாச்சாரப் பண்பாட்டின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது சாலச்சிறந்தது.

அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி, மூடநம்பிக்கைகளை அழித்து, மனிதனின் வாழ்க்கைமுறையை மேம்படுத்துகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அதே அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி கலாச்சாரப் பண்பாடுகளைச் சீரழிக்கின்ற பொழுது, அதைத் தகுந்த முறையில் கையாண்டு நம்முடைய கலாச்சாரப் பண்பாடுகளை அறிவியல் வளர்ச்சியோடு மேம்படுத்தி நம்முடைய வாழ்க்கையைச் சீரமைப்பது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

எனவே, இந்தத் தீபாவளி பெருவிழா கலாச்சாரப் பண்பாடுகளைச் சிதறடித்து நம்முடைய வாழ்வில் உடல் மற்றும் உள்ளத்திற்குத் தீராவலி தருகின்ற, கடமைக்குக் கொண்டாடப்படும் விழாவாக இல்லாமல், நம்முடைய வாழ்வில் ஒளி ஏற்றுகின்ற தீப ஒளியாகிய இறைவனின் ஆசிரையும், உறவுகளின் அன்பையும் அள்ளித் தருகின்ற உன்னதத் திருவிழாவாக அமைய ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம். தீபாவளி ஒளித் திருவிழா நம்முடைய வாழ்வில் ஒளியேற்றுவதாக!

news
சிறப்புக்கட்டுரை
விசில் (வலையும் வாழ்வும் – 30)

அன்று காலை வழக்கத்திற்கு மாறாக, பேருந்தில் கூட்டம் அலைமோதியது. பேருந்து என்னும் ஒற்றையடிப்பாதை கொண்ட உருளும் உலகத்திற்குள்தான் எத்தனை முகங்கள்! மகிழ்ச்சியோடு சில முகங்கள்; மௌனத்தில் சில முகங்கள்; கடுகு பொட்டித்தெறிக்கும் எரிச்சலோடு சில முகங்கள்; சன்னலோரத்தில் காற்று வாங்கும் சில முகங்கள்; பேருந்து மேற்கம்பியைப் பிடித்தநிலையில் சில சோர்ந்த முகங்கள்; கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்கக் காத்திருக்கும் சில திருட்டு முகங்கள்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எத்தனை விதவிதமான முகங்களாக இருந்தாலும், நடத்துநர் சங்கரனின் சிரித்த முகப்பொலிவிற்கு முன்பாக அனைத்து முகங்களும் மனித முகங்களாகவே மாறிப்போயின.

இடையன்குடி யாராவது இருக்கீங்களா? இறங்குங்க...”

விசில் ஊதி பேருந்தை நிறுத்தினார் நடத்துநர் சங்கரன். சிலர் அந்த நிறுத்தத்தில் இறங்க, மேலும் சிலர் அந்த நிறுத்தத்திலிருந்து பேருந்துக்குள் ஏறிவந்தனர். மீண்டும் விசில் ஊதப்பட்டு பேருந்து நகர்ந்தது.

டிக்கெட் டிக்கெட்! யாரும் படியில நிக்காதீங்க. உள்ள வாங்க என்று கூறிக்கொண்டே நடத்துநர் சங்கரன் அந்தப் பேருந்தின் முன்பக்கமாகக் கூட்ட நெரிசலுக்குள் நகர்ந்து சென்றார்.

சங்கரனுக்கு ஒவ்வொரு நாளும் எத்தனை நகர்வுகள் - பழைய காலப் பெண்டுலக் கடிகாரம் போல இங்கும் அங்குமாக.

யோவ்! பார்த்துப் போகத் தெரியாது. பொம்பளைங்கள இடிச்சிக்கிட்டுதான் போவியோ?” கோபத்தில் கர்ச்சித்தாள் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர். அவளுடைய கண்ணாடியும் சுடிதார் காஸ்டியூமும் அவளுக்கு ஒரு படித்த வேலைக்குப் போகும் பெண்ணுக்குரிய தோற்றத்தைக் கொடுத்தன.

ஒரு நிமிடம் சங்கரன் நிலைகுலைந்து போனார். தனது இருபது ஆண்டுகால அனுபவத்தில் இப்படியோர் அவமானத்தை அவர் சந்தித்ததில்லை.

மன்னிச்சிடுமா. இந்தக் கூட்ட நெரிசலில் தெரியாமப்பட்டிருக்கும் என்று கூறியபோதும் அந்தப் பெண் விடுவதாகத் தெரியவில்லை. அவருடைய சட்டைக் காலரைப் பிடித்து அவரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுவதுபோல மூர்க்கமாகி நின்றாள். சங்கரன் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றார்.

வண்டிய போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்க. பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா?” அந்தப் பெண்ணின் சப்போர்ட்டுக்குச் சில ஆண் ஹீரோக்கள் தங்கள் குரலை உயர்த்திப் பேசினர். “அவர எங்களுக்கு நிறைய வருசமாத் தெரியும். அவர் அப்படித் தப்பா நடக்கிறவரில்லை என்று சங்கரனுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்காமலில்லை.

இந்த நிகழ்வுகளையெல்லாம் சில இளைய நெட்டிசன்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து தங்களால் முடிந்த அளவிற்குச் சமூகப்பற்றினை வெளிப்படுத்தினர்.

பேருந்து ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். சில நிமிட உச்சக்கட்டக் குழப்பத்திற்குப் பிறகு கொஞ்சம் அமைதி திரும்பியது. சில அன்றைய நாளுக்கான பேருந்து நாட்டாமைகள் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைத்தன. பாதிக்கப்பட்டதாகக் கூறிய அந்தப் பெண்ணும் அமைதியானாள். அவளுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கிப் போனாள். இதற்கிடையில் பலரும் பல நிறுத்தங்களில் இறங்கிப் போயிருந்தனர். சங்கரன் தன் முகத்தின் பொலிவை இழந்திருந்தார். ஆயினும், அவருடைய விசில் ஒலியெழுப்பாமலில்லை. பேருந்தும் திசையன்விளை நோக்கிச் சென்று சேர்வதற்குள் அவரைப்பற்றிய செய்தி இணையம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. சங்கரன் சில நொடிப்பொழுதினிலேயே சமூக விரோதியானார்.

அய்யோ! என் செயினைக் காணவில்லை என்று ஒரு பெண் கதறிக்கொண்டிருக்கும்போதே, “என் பர்சையும் காணல என்று மற்றொருவர் கூற மீண்டும் குழப்பத்தின் நெடுஞ்சாலையில் பயணித்தது அந்தப் பேருந்து. ‘யார் திருடியது?’ என்று யாருக்கும் தெரியவில்லை. ‘எப்படி நடந்தது?’ என்பதும் புரியவில்லை.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு கொடுத்தவர்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டாலும், தங்கள் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றார்கள். சங்கரனுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இந்தக் குழப்பத்திற்கெல்லாம் காரணம், “யோவ்! பார்த்துப் போகத் தெரியாது. பொம்பளைங்கள இடிச்சிக்கிட்டுதான் போவியோ?” என்று அந்தப் பெண் வேண்டுமென்றே ஏற்படுத்திய களேபரமும், அவளுடைய கூட்டாளிகளின் கைவரிசையும் என்று புரிய தொடங்கியபோது பேருந்து காலியாக இருந்தது.

தங்கள் பணத்தை இழந்தவர்கள் காவல்துறையிடம் முறையிட்டார்கள். தன்மானத்தையும் தன்மரியாதையையும் இழந்த சங்கரன் யாரிடம் முறையிடுவார்?

ஊடகம் ஒரு சனநாயக நாட்டின் நான்காவது தூண். அரசியலை, சமூகத்தை, தொழில்நுட்பத்தை, வாழ்க்கையைக் கற்பிக்கின்ற கல்விச்சாலை. அதே ஊடகம் ஊதாரியாய்ப் போனால் அது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சமீப காலமாக ஊடகங்கள் நீதிமன்றம் செய்கின்ற விசாரணையைச் செய்யத் தொடங்கியிருப்பதை ‘ஊடக விசாரணை (Media Trail) என்கின்றனர். டி.ஆர்.பி.-க்காகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாகக் காணப்படுவதை நாம் காண்கின்றோம்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) குடிமக்களுக்குப் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பு கருத்துரிமை அல்லது பேச்சுரிமையை (Freedom to Speech) நமக்குக் கொடுத்திருந்தாலும், அது ஒரு வரையறைக்குள்ளும் வரைமுறைக்குள்ளும் செயல்படவேண்டும். இன்று பேச்சுரிமை என்ற போர்வையில் சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் ‘ஊடக விசாரணை நடத்தப்பட்டு ஒருவரின் ‘தனியுரிமைக்கான உரிமை (Right to Privacy) மறுக்கப்படுகின்றது. ‘தனியுரிமைக்கான உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் வருகிறது. உதாரணமாக, ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவது, தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது அல்லது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவது போன்ற செயல்கள் தனியுரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன.

ஊடக விசாரணை என்பது நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருக்கும் நியாயமான விசாரணை போக்கைத் திசைதிருப்புவதோடு, ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்மீது ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அந்த நபர் குற்றவாளி என்ற ஒரு கருத்தை உருவாக்குகிறது. ஒரு விசாரணையின் முடிவில் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிக்கும் வரை, ஊடகங்கள் ஒருவரைக் குற்றவாளி என்று முடிவு செய்வது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 12-யின் அடிப்படையில் ஊடக விசாரணையில் ஈடுபடும் வெகுசன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.

ஊடகங்கள் நீதியைப் பாதுகாப்பதே தவிர, நீதியை வழங்குகின்ற தளம் அல்ல; ‘எல்லாரும் ஊடகம், எல்லாரும் நேயர்கள் என்ற இக்காலச் சூழலில், ஊடகங்கள் இன்னும் அதிகமாகப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

ஊடகங்கள் விசிலாக இருக்கட்டும், விஷமாக அல்ல!

news
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: தயாராகும் தமிழ்நாடு தேர்தல் களம்

தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கிறது. 2026-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு மேடை தயாராகி விட்டது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில்  6.36 கோடி வாக்காளர்களை வசியம் செய்யும் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் வியப்பூட்டுகின்றன. மாநாடுகள், யாத்திரைகள் என வாணவேடிக்கைகள் தினமும் நடக்கின்றன.

தி.மு.. மற்றும் .தி.மு..-வின் இரு துருவ அரசியல், மாற்று அரசியல் எனப்  பரபரப்பு  கூடுகிறது. மூன்றாவது அணியானநாம் தமிழர் கட்சியும், நான்காவது அணியாகத் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்களம் காண்கிறார்கள். தமிழ்நாடு வாக்காளப் பெருங்குடிகளை வகை தொகை பிரித்து ஆய்வோம்.

தமிழ்நாடு வாக்காளர்களில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 பேர் மூன்றாம் பாலினத்தவர், 3,740 வாக்காளர்கள் வெளிநாட்டு வாக்காளர்கள், 4.78 இலட்சம் வாக்காளர்கள் மாற்றுத்திறன் படைத்தோர், 85 இலட்சம் வாக்காளர்கள் இளையோராக அடையாளம் காணப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்களையும் வேறு வகையாகப் பிரிக்கலாம். 40 இலட்சம் வாக்காளர்கள் மொழிவாரி சிறுபான்மை மக்கள். 80 இலட்சம் வாக்காளர்கள் மதவாரி சிறுபான்மை மக்கள். இவர்கள்தாம் தமிழ்நாடு தேர்தல்  களத்தில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்கள். இவர்கள் வாக்குகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், .தி.மு.எனும் அரசியல் கட்சி, பா...வோடு கூட்டணி அமைத்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரு துருவ அரசியலில் ஏற்படப் போகும் பெரிய சம்மட்டி அடி அது.

2031-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம் நிறைவேறிவிட்டது. ‘திராவிடக் கட்சிகள் இல்லா தமிழ்நாடுஎன்ற அடிப்படையில் .தி.மு..வைச் சிதைக்கப் போட்ட திட்டம் கண்கூடானது.

2024-மக்களவைத் தேர்தலில்இந்தியாகூட்டணி 221 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிடம் பெற்றது. .தி.மு.. 8,  தே.தி.மு.. 2, பா... 3 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிட வாக்கை அள்ளின. விழுக்காட்டில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘இந்தியாகூட்டணி 48% வாக்கையும், .தி.மு.. கூட்டணி 21% வாக்கையும், பா... கூட்டணி 18% வாக்கையும், நாம் தமிழர் கட்சி 8%  வாக்குகளையும் பெற்றன. கூட்டணிகளைப் பொறுத்தவரைஇந்தியாகூட்டணியினர் 2017 முதல் ஒருங்கிணைந்து வலுவாக உள்ளனர். கூடவே  தே.மு.தி.. மற்றும் பா... இராமதாஸ் அணிக்கு தி.மு.. வலைவீசுகிறது. தமிழ்நாடு முதல்வரின் 50-வது திருமண நாள் விருந்து என்று அழைத்து, இவ்விவரங்களைத் தோழமையோடு பேசி முடித்தார்கள்.

மக்களவைத் தேர்தலில் .தி.மு..-வுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.. மற்றும் எஸ்.டி.பி.. போன்ற இயக்கங்கள்நன்றி, ‘வணக்கம்எனக் கூறி வெளியேறிவிட்டன. ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குஎன்ற நடிகர் விஜய் அவர்களுக்கும், கூட்டணிக்கு ஆளில்லாத நிலையாக 2026 - தேர்தல் களம் உள்ளது.

அண்மைக் காலங்களில் சாதி வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட மண்டலவாரி மக்களின் மனநிலை பேசப்படுகிறது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், டெல்டா பகுதி, சென்னை, திருவள்ளூர் எனப் பகுதிப் பிரிப்பு உள்ளன. சாதிக்கட்சிகள், தலித் வாக்கு வங்கி எனக் குறிவைத்த வாக்குகள் தனி இரகம். அங்கும் எல்லாக் கூட்டணிகளும் முட்டி மோத வேண்டும். மக்கள் மனநிலை தேர்தலுக்கு முன், தேர்தல் காலத்தில், தேர்தலுக்குக் கடைசி வாரத்தில்... என மாறி மாறிப் பிரதிபலிப்பதாகும்.

இந்தியாகூட்டணி வலுவாக இருந்தாலும், தினமலரின் திண்ணைப் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  பொய்ப்பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சட்டம்-ஒழுங்கை உள்ளடக்கிய, பெண்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் கலாச்சாரம் என்பதில் உருப்பெற்றுள்ளது. அது அடையாளங் காண முடியாத மாநிலங்களைத் தாண்டிய ஒரு வேளை குறி வைத்த அரசியல் சதியாகவும் இருக்கலாம். அதற்கும் வாய்ப்புகள் அதிகம். காவல்துறைப் பணிகள் சிறப்பாக இல்லை; அது வேகாத பருப்பாக உள்ளது. தமிழ்நாடு காவல்துறை, தேர்தல் காலத்தில் கவனமாக இல்லாவிடில், பழி முழுவதும் ஆளும் அரசின் தலையில் விழும். தற்போதும் இதே நிலைதான்.

தமிழ்நாடு தேர்தல் களம் இரண்டு முக்கிய முழக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன. ஒன்று, ஆளும் தி.மு..வை வீட்டிற்கு அனுப்புவது; இரண் டாவது, யார் அடுத்த தமிழ்நாடு முதல்வர்? அந்தோ பரிதாபம்! எதிர்க்கட்சிகள் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்துப் பேசவில்லை. விலைவாசி உயர்வு, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின், நெசவாளர்களின், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து வலுத்தக் குரல் தரவில்லை. சிறு குறு தொழில்கள் இல்லாத தமிழ்நாடு எனக் கவலைப்படவில்லை.

ஆரியத்திற்கு எதிரான திராவிடம் என்ற அடிப்படை அறமின்றி, .தி.மு.. கூட்டணி உருப்பெற்றது தமிழ்நாட்டின் சாபக்கேடு. திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆரிய அரசியல் என்ற கோட்பாட்டு விதிகளுக்கு உட்பட்ட ஆட்டமாக, தமிழ்நாடு தேர்தல் களம் இருந்தால் அது நல்லது; நலம் தரக்கூடியது. அது மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை அணுகும் புதிய  பாதையாகவும் அமையும் .

தேர்தல் களத்தில் கருத்துக் கணிப்புகள் என்ற மந்திரம், வாக்காளர்களின் வெற்றி பெறும் கட்சியைத் தேடும் ஓட்டத்தில் முதன்மைப் பெறுவது. அது வானவில்லாகத் தோன்றி மறைந்தாலும், அரசியல் கட்சித் தொண்டர்களை ஓடவும் சோம்பிக் கிடக்கவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு அளவிலான முடிவுகள், ஆளும்இந்தியாகூட்டணிக்குப் பலம் சேர்ப்பதாக வெளியாகிறது,

2026 - தேர்தல் முடிவுகளில் கருத்துக் கணிப்புகளின் உண்மைத் தன்மை தெரியும். இதைவிடக் கொடுமை ஒன்று உண்டு. அது சமூக ஊடகங்கள்! ஒரு நடிகரின் வீடியோ, ஒரு நாளில் 10 கோடி பார்வைகளும், ஒரு கோடி விருப்பங்களும் பெற்றதாக அறிகிறோம். எண்ணியல், கணினித் தொழில் நுட்பங்கள்... தெரியாதோர் வேண்டுமெனில் இதை ஏற்றுக்கொள்ளலாம். விவரம் தெரிந்தோர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். ஓர் ஆண்ட்ராய்டு செல்லிடைப்பேசி இருந்தால், எதையும் செய்யலாம். அதில் பொய்யை வலியக் கூறலாம் என்பதே எதார்த்தம். தமிழ்நாடு தேர்தல் களத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தன் பணியை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம்  தேசிய, மாநிலக் கட்சிகளில் 11 கட்சிகளுக்கு தமிழ் நாட்டில் பொதுச்சின்னம் ஒதுக்குகிறது. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சியாகச் செயல்பட்டு, பொதுச்சின்னம் இல்லாத கட்சிகளின் எண்ணிக்கை 15. தமிழ்நாட்டில் பதிவு செய்து தேர்தலில் நிற்காத 22 கட்சிகளை 2025, ஆகஸ்டில் தேர்தல் ஆணையம்  அடையாளம் கண்டு, அக்கட்சிகளின் பதிவை இரத்து செய்தது.

தனிக்கட்சிகளைவிட கூட்டணிகளே வெற்றிக்கு அடிப்படைக் காரணி. 2026, சனவரி முதல் மார்ச் வரை உருவாகிற புதுப்புதுக் கூட்டணிகளால் தமிழ்நாடு  தேர்தலில் சடுகுடு  ஆட்டம் புதிய மாற்றம் பெறலாம். 15 முதல் 20 விழுக்காடு உள்ள சிறுபான்மையின மக்களின் முடிவே, தமிழ்நாடு தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்; கள எதார்த்தமும் இதுவே.

news
சிறப்புக்கட்டுரை
நம் தலைவிதி

மோடி அரசிடம் விலைபோன ஊடகங்களும், வருமானவரி ஏய்ப்பு, பங்குச்சந்தை முறைகேடுகள், அந்நியச் செலவாணி மோசடிகள் போன்ற பல விசாரணை வளையங்களுக்குள் சிக்கியிருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், பிரதமர் மோடியின் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பை இரவு-பகல் பாராமல் இருபத்து நான்கு மணிநேரமும் போற்றிப் புகழ்ந்து, வாழ்த்தி வணங்கி, பூரிப்பும் புளகாங்கிதமும் அடைந்து வருகின்றனர். பா... வின் ஒன்றிய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும், கட்சியின் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் கடைவீதிகளுக்கும், பெருமளவில் மக்கள் கூடுகின்ற வணிக மையங்களுக்கும் நேரில் சென்று வணிகர்கள் புதிய வரிவிகிதங்களுக்கு ஏற்ப பொருள்களின் விலைகளைக் குறைத்துவிட்டார்களா? என்று சரிபார்ப்பதும், பொதுமக்களிடம்விலைகள் குறைந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று நலன் விசாரிப்பது மட்டுமல்லாமல், அந்த விசாரணைகளை அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

முந்தைய காங்கிரஸ் அரசு, கடுமையான வரிகளை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தி கசக்கிப் பிழிந்தது போலவும், மோடி எனும் அவதார புருஷர் ஆபத்பாந்தவனாக வந்து மக்களின் வரிச் சுமையைக் குறைத்ததுபோலவும் இவர்கள் போடுகின்ற திருட்டு நாடகத்தைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக்கொண்டு, தலையில் அடித்து, தனிமையில் இப்படியும் ஒரு மோசடி அரசு நடக்கிறதே என்று பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். ‘உலகப் புகழ்பெற்றநமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகப் பொருளாதார வரலாற்றில் இப்படியொரு வரிக்குறைப்பு நடந்ததே இல்லை என்றும், மோடியைத் தவிர வேறு யாராலும் இதனைச் சாதித்திருக்க முடியாது என்றும் பீற்றிக்கொள்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு பச்சிளம் குழந்தைகளின் உணவான பால் பவுடருக்கும், ஏழை மக்களின் உணவான அரிசி மற்றும் ரொட்டிக்கும், உயிர் காக்கும் மருந்துகளுக்கும், சவப்பெட்டிக்கும்கூட வரிவிதித்தபோது, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் ஊடகங்களும் கண்டனங்களைத் தெரிவித்த வேளையில், அந்த வரிவிதிப்புகளுக்கும் மோடி அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், அது அனைத்தும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவு என்றும் வாய்கூசாமல் கூறியவர்தான் இந்த அம்மையார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புக்கு மோடி மட்டுமே காரணம் என்று எப்படி இவர்களால் வெட்கமின்றிப் பேசமுடிகிறது? ‘தன்னெஞ்சறிவது பொய்யற்கஎன்று இவர்களை நினைத்துதான் அன்றே வள்ளுவர் கூறிவிட்டுப் போனார்!

நல்ல, எளிமையான வரிவிதிப்பு (Good & simple tax) என்ற அடிப்படையில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜி.எஸ்.டி. வரியை இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டது. “என் உயிர் இருக்கும்வரை இந்த வரியை நடைமுறைப்படுத்த உடன்படமாட்டேன்என்று வீரவசனம் பேசியவர்தான் அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மோடி. அவர் மட்டுமல்ல, அன்றைக்குப் பா... ஆண்ட அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் ஜி.எஸ்.டி. வரியைக் கடுமையாக எதிர்த்தனர். மாநிலங்களின் ஒத்தக் கருத்தினையும் ஒத்திசைவையும் உருவாக்க முடியாத காரணத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், அது வடிவமைத்திருந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

கூறியதை மாற்றிக் கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ள நமதுஇரட்டை நாக்குபிரதமர், பிரதமரானவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஜி.எஸ்.டி. வரியை 2017-இல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தினார். இரண்டு அடுக்கு வரியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரியை, அநியாயமாக நான்கு அடுக்குகளாக மாற்றி 5,12,18,28 சதவிகிதம் எனப் பொருள்கள் மற்றும் சேவைகள்மீது  வரிவிதித்தார். எதிர்க்கட்சிகளும் தொழில் நிறுவனங்களும் வியாபாரச் சங்கங்களும் பொதுமக்களும், ‘இந்த அநியாய வரிவிதிப்பை மாற்றி அமைக்கவேண்டும்என்று கோரிக்கை வைத்தபோது, பிரதமர் மோடி அதைக் காது கொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

இந்த வரிவிதிப்பில் இருக்கிற பல முரண்பாடுகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் பெரு வணிகர்கள் நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து எடுத்துரைத்தபோது, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். கோவை மாநகரில், அம்மாநகரத்தின் பெருமைக்குரிய ஒரு மூத்த வணிகர் உணவு விடுதிகளில் ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் வெவ்வேறு விதமான வரிகளை விதிப்பதால் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக் கூறியபோது தன்னை அவர் அவமானப்படுத்திவிட்டார் என்று நிதி அமைச்சர் கொக்கரித்ததை எப்படி மறக்கமுடியும்? சம்பந்தப்பட்ட வணிகரின் நிறுவனத்தின்மீது ஒன்றிய நிதி அமைச்சகமே கடுங்கோபத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்ட அந்த வணிகர், நமது  நிதி அமைச்சரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதைக்கூட நேரடியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய வக்கிரப் புத்தியை நாம் பார்க்கவில்லையா?

ஒரு பட்டதாரி இளைஞர்  நிர்மலா சீதாராமனின் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், “சிங்கப்பூரைப் போல நம் நாட்டிலும் இரண்டே அடுக்குகளில் வரி விதித்தால் என்ன?” என்று கேட்டபோது, நமது நிதி அமைச்சர் அந்த இளைஞரைப் பார்த்து, “இந்தக் கேள்வியை நீ சிங்கப்பூரில் கேட்க முடியுமா? அப்படிக் கேட்டிருந்தால் ஜெயிலுக்குத்தான் போகவேண்டும். இங்கே அதிகமான சனநாயகம் இருப்பதால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்என்று எள்ளி நகையாடியதை எப்படி மறக்கமுடியும்?

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பை அறிவித்துவிட்டு  நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், “இது ஒரு புதிய தொடக்கம். இந்த வரிக்குறைப்பினால் ரூ. 2,50,000 கோடிகளை  மக்கள் சேமிக்க முடியும்என்று தெரிவித்தார். மோடி கூறுவதை ஒரு விவாதத்திற்காக ஒத்துக்கொண்டால்கூட, இந்தப் பணத்தையெல்லாம் கடந்த எட்டாண்டுகளாக இந்த மக்களிடமிருந்து பறித்து, மோடி யாரிடம் கொடுத்தார் என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவேண்டும் அல்லவா? இந்த வழிப்பறிக் கொள்ளையைத்தான்  இராகுல் காந்தி, ‘கப்பார்சிங் டாக்ஸ்என்று வர்ணித்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி அரசு இந்த அநியாய வரிவிதிப்பின் மூலம் அள்ளிக் குவித்த பணம் 55 இலட்சம் கோடி. இதனால் பல சிறு வியாபாரிகளும், சிறு-குறு-நடுத்தரத் தொழில் முனைவோரும் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் முடங்கிவிட்டனர். பல்லாயிரக்கணக்கான சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். நடுத்தர வர்க்கம் தனது சேமிப்புகளை இழந்தது. வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் பல மடங்கு அதிகரித்ததற்கும், மீட்கப்படாத நகைகள் பெருமளவில் ஏலம் விடப்பட்டதற்கும், பல விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்கள் தவணை தவறிய கடன்களுக்கு மாறி தற்போது வாராக் கடன்களாக நிற்பதற்கும் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து அவர் விதித்த அநியாய ஜி.எஸ்.டி. வரியும்தான் காரணம்.

அடித்தட்டு மக்களிடமும் நடுத்தட்டு மக்களிடமும் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால், மக்களது வாங்கும் திறன் குறைந்துபோனது. மக்களின் நுகர்தல் குறைந்துபோனதால் உற்பத்தி குறைந்து போனது. நமது பிரதமரின்உயிர்த்தோழர்டிரம்பின் கைங்கரியத்தால் ஏற்றுமதி தொழிலும் சிதைந்து போனது.

எல்லைகளில் பதற்றம், அண்டை நாடுகளில் பெரிய அளவில் போராட்டங்களாக வெடித்துள்ள உள்நாட்டுக் குழப்பங்கள், வேகமாகக் குறைந்து வரும் தனியார் முதலீடுகள், பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்திக் குறைவு, விலைவாசி ஏற்றம்... போன்ற பன்முனைத் தோல்விகளால் நிலைகுலைந்து போயிருக்கிற மோடி அரசு, இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உயிர் பிழைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இந்த வரிக்குறைப்பு. ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லைஎன்ற வறட்டு ஜம்பம்தான் இந்தப் பாராட்டுகளும் வெற்று விளம்பரங்களும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் பல முரண்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். பல சில்லறைக் கடைகளில் எந்த விலைக்குறைப்பும் தரப்படவில்லை என்கிறார்கள். வியாபாரிகள் தங்களிடம் பழைய ஸ்டாக் இருப்பதாகவும், அந்தப் பொருள்களுக்கு இந்த வரிக்குறைப்பு கிடையாது என்று கைவிரிக்கிறார்கள். அவர்களதுஸ்டாக்எப்போது தீரும் என்பதற்கு எந்தத் தெளிவான பதிலும் யாரிடமும் இல்லை. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் தங்களது உற்பத்தியில் சில பகுதிகளை வெளியேஜாப் ஒர்க்காககொடுத்து வாங்குவார்கள். 5% ஆக இருந்த அந்த வரிகள் அனைத்தையும் தற்போது 18%  ஆக உயர்த்திவிட்டார்களாம். ஆதலால் அத்தகைய தொழில்களுக்குப் பெரும் நெருக்கடி என்று தெரிகிறது.

கொள்ளு என்றால்  வாயை அகலத் திறப்பதும், சேணம் என்றால் வாயை இறுக மூடிக்கொள்வதும்நமது பிரதமரின் இயல்பான குணம். வரிக்குறைப்புக்கான பெருமை முழுவதும் தனக்கே என்று ஆர்ப்பரிக்கும் பிரதமர், வரிக்குறைப்பினால் ஏற்படும் மொத்தச் சுமையினையும் மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளார். இந்தக் கூடுதல் நிதிச் சுமையினால் பல மாநிலங்கள் அன்றாட நடைமுறைச் செலவுக்குக்கூட ஒன்றிய அரசிடம் பிச்சைக் கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்படும். இதற்கான இழப்பீடு பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதிக்கவேண்டும் என்ற தமிழ்நாடு, கேரளா போன்ற மாநில அரசுகளின் கோரிக்கைகளைக் காதில் வாங்கக்கூட நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை.

வரி விழுக்காட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னால், அந்த உத்தேச மாற்றங்களைப் பற்றி விவாதித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்குப் பரிந்துரை செய்ய சில மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு உள்ளது (GST rate rationalisation committee). வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் முதலில் இக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுடன்தான் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனால், இம்முறை அந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படாமல் பிரதமர் மோடி, துர்கா பூஜை விழாகாலத்தில் ஜி.எஸ்.டி. வரிகளைப் பெருமளவில் குறைத்து மக்களுக்குதிருவிழா பரிசுவழங்கப் போவதாகச் சுதந்திரதின உரையில் அறிவித்தார். ஒன்றிய அரசின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாக வைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த வரிக் குறைப்பினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் கருத்துகளைக் கேட்கவேண்டும் என்ற அடிப்படையான நடைமுறையினைக்கூட  மோடி அரசு பின்பற்றத் தயாராக இல்லை.

தற்போதைய ஏற்பாட்டின்படி மாநில அரசுகளின் மொத்த வருவாயில் ஜி.எஸ்.டி. வரியின்மூலம் கிடைக்கும் வருவாய் 41%. ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் கோடி அளவில் இந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளதென்றால், அந்த வரி இழப்பினால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்புகளை மாநில அரசுகள் சமாளிக்கக்கூடிய ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்குச் செய்து தரவேண்டும் அல்லவா! ஏனெனில், மாநில அரசுகளுக்குச் சுயமாக வரிவிதிக்கும் அதிகாரம் தற்போது இல்லை.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்திற்குக் குறைந்தபட்சம் ரூபாய் 20,000 கோடி இழப்பு ஏற்படும் என்று அறிவித்துள்ளார். கேரள நிதி அமைச்சர் அவரது மாநிலத்திற்கு ரூபாய் 50,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் இதனைப் போன்ற வரியிழப்புகள் தங்களுக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். சமூக நலன் மற்றும் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்காகப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திவரும் இந்த மாநில அரசுகள், அந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் பெரும் சிரமங்களைச் சந்திக்கும். இதில் மிகவும் முக்கியமான கோணம் என்னவென்றால், இந்த மாநிலங்கள்தாம் தேசிய வரி வருவாய்க்குப் பெரும் பங்கினைத் தருகின்றன. உத்தரப்பிரதேசமோ, பீகாரோ, ஒடிசாவோ அல்லது பா... ஆளும் மாநிலங்கள் குஜராத் உள்பட ஜி.எஸ்.டி. வசூலில் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. ஆதலால் அவர்களுக்குப் பாதிப்புகள் மிகவும் குறைவு. அப்படியே குறைந்தாலும் ஒன்றிய அரசின் கருணையும் கரிசனமும் அவர்களுக்கு அதிகமாகவே உண்டு.

கடந்த வாரம் ஒன்றிய அரசின் தலைமைக் கணக்காய்வாளர் தெரிவித்துள்ள புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. உபரி வருவாய் (revenue surplus) உள்ள மாநிலங்களாக  16 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், உபரி வருவாயில் முதன்மையாக இருப்பது உத்தரப்பிரதேசம். ஆண்டொன்றுக்கு ரூபாய் 37,000 கோடி உபரி வருமானம் வைத்துள்ளது. உபரியாக வருவாய் பெற்றுள்ள 16 மாநிலங்களில், 10 மாநிலங்கள் பா... ஆளும் மாநிலங்கள் ஒடிசா உள்படதேசத்தின் ஒட்டுமொத்த வருவாய்த் தொகுப்பிற்குத் தங்களது மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரிகள் மூலம் மிகவும் குறைவான பங்களிப்பைத் தரும் உத்தரப் பிரதேசமும் ஒடிசாவும், வரிகளே வசூலிக்காத வட கிழக்கு மாநிலங்களும் உபரி வருவாய் மாநிலங்களாம்! ஆனால், தேசத்தின் வருவாய்த் தொகுப்பிற்கு  (ஏற்றுமதி வரி, கலால் மற்றும் கஸ்டம்ஸ் வரி, வருமான வரி, ஜி.எஸ்.டி.) அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பங்களிக்கும் தென்மாநிலங்கள்வருவாய் பற்றாக்குறை (revenue deficits) மாநிலங்களாக இருப்பது நம் தலைவிதி என்பதைத் தவிர, வேறென்ன கூற முடியும்?

நம் அடிமடியில் கைவைத்துத் தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு ஓரவஞ்சகமாக ஒன்றிய அரசு அள்ளிக் கொடுக்கும் இந்தப் பாரபட்சமான நடவடிக்கை, நாளை நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டுவைக்கும் என்பதைப் பிரதமர் மோடி உணரவேண்டும்!

news
சிறப்புக்கட்டுரை
விண்வெளி (Atmosphere) - விண்வெளி ஆய்வின் எதிர்காலம் எப்படியிருக்கும்? (உலகம் உன் கையில் – 11)

ரோபோக்களின் ஆதிக்கம்

ரோபோ விஞ்ஞானம் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில் மனிதருக்குப் பதிலாக ரோபோக்கள் பயன்படுத்தலாம்.

பிற கிரகங்கள்

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பது, பிற கிரகங்களான வியாழன், சனியின் நிலவுகள், பிற விண்வெளி சஞ்சாரிகளுடன் தொடர்பு (celestial object) பயணம் மேற்கொள்ள சாத்தியப்படலாம்.

தனியார் துறை

இதுவரை அரசுகளே விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்துச் சென்ற நிலைமாறி, தனியாரின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, Space, blue origin, virgin galactic என்பவைகள்.

விண்வெளிப் பயணச் செலவு

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக விண்கலங்கள் தயாரிப்பு, இராக்கெட், கருவிகள் குறைந்த விலையில் கிடைப்பது விண்வெளிப் பயணத்தை எளிதாக்குவது மட்டுமன்றி, ஏற்றத் திட்டங்களைத் தீட்ட உதாரணமாக, விண்வெளி சுற்றுலா போன்று உதவிடும் என்று கருதப்படுகிறது.

உலகளாவியக் கூட்டுமுயற்சி

இப்போது பல நாடுகள் தங்கள் விண்வெளிக் கலங்களுக்குப் பிற நாடுகளின் தளங்களைப் பயன்படுத்துகின்றன. அதேபோன்று விண்ணில் தளங்களும் கூட்டாக அமைத்துப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

ஏஐ-யின் தொழில்நுட்பம்

விண்வெளி ஆராய்ச்சியில் ஏஐ- யின் பங்களிப்பு பல துறைகளிலிருக்கும் என்பதில் ஐயமில்லை.

விண்வெளி யாருக்குச் சொந்தம்?

விண்வெளிஎன்பதற்கு அதிகாரப்பூர்வமான எந்த வரையறையும் இல்லை. ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபை ஆலோசிக்கும் பூமிக்கு மேலே 100 கி.மீ. அப்பால் கரமான் கோடு என்கிற எல்லையிலிருந்து விண்வெளி என்று அடையாளப்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. இன்று பூமியிலிருக்கும் நமக்கு ஒவ்வொரு நொடியும் விண்வெளியைச் சார்ந்தேயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருடன் தொலைத்தொடர்பு, பணப்பரிமாற்றம் அல்லது கூகுள் தேடுதல் என்பனவெல்லாம் செயற்கைக் கோள்களை நம்பியே உள்ளன. நாடுகளுக்கிடையே ஏற்படும் போரின்போது செயற்கைக்கோள்கள் இரையாகலாம்.

ஒருவேளை போரின் முக்கியமான இடம் விண்வெளியாகக்கூட மாறலாம். ஏனென்றால், சில நாடுகள் இராணுவச் செயற்கைக்கோள்களை இரகசியமாக விண்வெளியில் அமர்த்தியுள்ளன. உலக வரலாற்றில் முதல்முறையாக மனிதன் விண்வெளிக்குச் சென்று அங்கு நிலவில் கால்பதித்த பெருமை நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்கரைச் சாரும் என்பதும், அவர் அமெரிக்க நாட்டின் கொடியை 1969-ஆம் ஆண்டு நிறுத்தினார் என்பதும் வரலாறு.

1967-ஆம் ஆண்டின் ஐக்கிய நாட்டின் விண்வெளி ஒப்பந்தத்தின்படி இது உரிமையை அல்ல, அடையாளமாகவே கருதப்படுகிறது. உலக ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்வெளி ஒப்பந்தம் நடைமுறையில உள்ளது. அதன்படி அனைத்து உலக நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சி செய்யலாம். அது அமைதிக்கென்று இருக்கவேண்டும். விண்வெளியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. விண்வெளி வீரர்கள், பூமியின் தூதர்கள், விண்வெளியில் அணு மற்றும் எந்த ஆயுதங்களையும் வைக்க அனுமதி இல்லை. விண் பொருள்களை அமைதிக்காகப் பயன்படுத்த வேண்டும். விண்வெளியில் ஏற்படும் சேதங்களுக்கு அந்த நாடே பொறுப்பேற்க வேண்டும். எந்த ஓர் ஆய்வும்  அனைத்து நாடுகளுக்கும் பயனளிப்பதாய் இருக்க வேண்டும். விண்பகுதி மனித இனத்திற்குச் சொந்தமானது.

50 ஆண்டுகளுக்குப்பின் சந்திரன் மீது திடீர் மோகம் ஏன்?

1957-ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கி 1969-ஆம் ஆண்டு நிலவில் மனிதன் கால்பதித்து 50 ஆண்டுகளாகின்றன. அப்பொல்லோ 17, 1972 விண்வெளிப் பயணத்திற்குப் பின், கடந்த பல ஆண்டுகளாக விண்வெளிப் பயணங்கள் தொடரவில்லை.

இந்த இடைவெளி, நிதி மற்றும் அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால், விஞ்ஞான, தொழில்நுட்பப் பின்னணி இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் சந்திரனில் இறங்கிச் சாதனை செய்தன. இதனிடையே இரஷ்யாவின் லூனா 25, இஸ்ரயேலின் பெரஷீட், ஜப்பானின் விண் ஊர்திகள் சந்திரனில் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக சந்திரனில் ஏற்ற வாயுமண்டலம் இல்லையென்றும், பூமியை ஒப்பிடும்போது 1/6 அளவு புவிஈர்ப்பு உள்ளதாகவும் மற்றும் சந்திரனில் +121, -133 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருப்பதாகவும் அறியப்படுகிறது. செவ்வாய்கிரகத்தில் விண் ஊர்தி இலக்குகளுக்குப் பறந்து சென்று, பாராசூட் மூலம் நிற்கமுடியும். ஆனால், சந்திரனில் தரை இறங்குவது இயந்திரத்தின் துணையுடன்தான் முடிகிறது.

இச்சூழலில் மீண்டும் செவ்வாய் கிரகத்தில் மனிதனை இறக்க இது ஒரு பயிற்சித்தளமாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது. சந்திர - விண்வெளி ஆராய்ச்சியின் பயனாகப் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்பை உண்டு பண்ணும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, குறிப்பாக ரோபோ, தானியங்கி போன்ற பிரிவுகளில் உந்துசக்தியாயிருக்குமென்றும் கருதப்படுகிறது.    

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
‘சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்...’ - (பேராளுமைகள் பேசும் பகுதி - 02)

ஒரு நபர்!

எல்லா மனிதர்களும் யாராவது ஒருவரால் செதுக்கப்பட்ட உயிருள்ள சிற்பங்களே.”

தாய்-தந்தையரின் பாரம்பரியக் குணங்கள் இயற்கையிலேயே நம்மிடம் அமைந்திருப்பவை. ஆனால், பல பண்புகள், நம் ஆளுமையைத் தீர்மானிக்கும் குணங்கள் மற்றவர்கள் நம்மீது ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம்.

என் வாழ்வில் நான் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு யார் காரணம்? ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லை வைத்து 12 Tense (காலங்களையும்) தினமும் படிக்க வைத்து ஒப்பிக்க வைத்தவர்; காலை 5 மணிக்கு எழுந்து பூசைக்கு நடந்தே அழைத்துச் சென்றவர்; பெரியவர்கள் யாரைப் பார்த்தாலும் முழங்காலிட்டு சிலுவை வாங்க வைத்துப் பணிவைக் கற்றுத் தந்தவரான என் தந்தையைச் சொல்லவா?

நான் ஈனக்குரலில் பாடியதையும் நடித்ததையும் பேசியதையும் கைதட்டி இரசித்த என் முதல் இரசிகை என் தாயைச் சொல்லவா?

சங்கீத வாசனையே இல்லாத குடும்பத்தில் அருள்தந்தை ஆரோக்கியம் அவர்களின் கர்நாடகச் சங்கீதக் கிறித்தவப் பாடல்களைத் தன் ஆர்மோனியத்தால் வாசித்து, இசைஞானம் ஊட்டிய என் தாய் மாமா அமரர் பேராசிரியர் S.F.N. அவர்களைச் சொல்லவா?

யாரைச் சொல்வது?

எனக்கு அடிப்படையில் இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் என் தந்தை அமரர் Y. இன்னாசி ஆசிரியர். இவர்தான் என் வாழ்வில் புதுப்பாதைக் காண அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

ஒரு நிகழ்வு

1963-ஆம் ஆண்டு திண்டுக்கலில் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இரவுண்ட் ரோடு மைதானத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருந்தலைவர் காமராசர் பங்கேற்ற விழா நடந்தது. அதற்கு ஐந்து வயது நிரம்பிய என்னைத் தோளில் தூக்கி வைத்து மேடையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் விளக்கிக் கூறியவர் என் தந்தை.

அப்போது நேரு அவர்கள் ஒரு வாகனத்திலிருந்து தனக்குக் கொண்டு வந்த மாலைகளை இருப்பவர்களின்மீது வீசி, கூட்டத்தில் அவரின் மகிழ்வை வெளிப்படுத்தினார். அதில் ஒரு மாலையை என் கழுத்தில் விழவைப்பதற்காக என் தந்தை எடுத்த முயற்சியும், அது கிடைத்தவுடன் அடைந்த மகிழ்ச்சியும் என் கண்களில் இன்னும் நிழலாடுகிறது.

நான் திண்டுக்கல் G.T.N. கலைக் கல்லூரியில் B.Sc., இயற்பியல் பட்டம் பெற்றபின் தேர்வு முடிவுகள் தாமதமாக வந்தன. என் தந்தை என்னைப் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்வியியல் கல்லூரியில் B.Ed., சேர்க்க ஆசைப்பட்டார். அப்போது ஜூன் மாதம் - கல்லூரியில் சேர்க்கை அனைத்தும் முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டனர்.

அப்போது திண்டுக்கல் இயேசு சபை மதுரை மறைமாநிலத் தலைவரைப் பார்க்க புனித சவேரியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருள்தந்தை ஜோசப் சீனிவாசன் வந்திருந்தார். என் தந்தையும் நானும் எனக்கு இடம் கேட்பதற்காக அவரைச் சந்திக்க சென்றோம். ஆனால், அவர் சேர்க்கை மே மாதமே முடிந்துவிட்டது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

என் தந்தை ஓய்வுபெறும் வருடம் அது, ஆகையால் அடுத்து குடும்பத்தைக் கவனிக்க ஒருவரின் வருமானம் தேவை. எனவே, இந்த ஆண்டு B.Ed-இல்  எனக்கு இடம் வேண்டும் என்று மீண்டும் கேட்டார். அவரோஎன்னை மன்னித்து விடுங்கள்; இடமில்லை. இருந்தாலும் வாங்க, பார்ப்போம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

என் தந்தை வீட்டுக்கு வந்தவுடன் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் கடைக்குச் சென்று வாங்கி வந்துவிட்டார். ‘ஃபாதர் சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது, வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டாரே? இவர் இப்படிச் செய்கிறாரே...?’ என்று என் தந்தையிடம் கேட்டேன். ‘நம்பிக்கையுடன் புறப்படு என்று பேருந்தில் இரவோடு இரவாகப் பயணம் செய்து பாளையங்கோட்டைக் கல்லூரியைச் சென்றடைந்தோம். ஏற்கெனவே இடம் உறுதியானவர்களுக்கு விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பெற்றோரிடம் பிரியாவிடைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நானும் என் தந்தையும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். என் தந்தையின் நம்பிக்கையைக் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.

இறுதியாக, ஃபாதர் வந்து எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்கெனவே இடம் உறுதியானவர்களுக்கு எப்படி இடம் கொடுத்தாரோ அப்படியே விடுதி அறையை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

கல்லூரிக் கட்டணம் இப்போது கட்ட வேண்டாம்; உங்களால் முடியும்போது வந்து செலுத்துங்கள் என்று கூறிவிட்டு, ஜெர்மன் நாட்டு Scholarship படிவத்தைக் கொடுத்துப் பூர்த்தி செய்து தரச்சொன்னார். குறைந்த கட்டணத்தில் எனக்கு இடம் கிடைத்தது. 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்து இன்று அரசியலில் தி.மு..வில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் மற்றும் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க வைத்தது என் தந்தையின் ஆழமான நம்பிக்கை.

ஒரு வார்த்தை

படித்துக் கொண்டிருந்தபோது கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சனவரி மாதம் கல்லூரிக்குச் சென்றோம். விடுதியில் இடமில்லை என்று ஃபாதர் அனுப்பிவிட்டார். என்ன காரணம்? என்று தெரியவில்லை. எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம்; மறுத்து விட்டார். என் நண்பர் ஜோசப் சேவியரின் அறையில் தங்கிப் படித்தேன். அப்போது என் தந்தை ஆறுதல் கடிதம் எழுதினார். அதில் நற்செய்தியில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம்: “கட்டுவோர் விலக்கிய கல்லே இறுதியில் மூலைக்கல்லாக அமைந்தது.”

இந்த வாசகம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து, எனக்கு மேலும் நம்பிக்கையூட்டியது. வேலை கிடைத்து என் குடும்பத்தைக் கவனித்து, என் திறமைகளை வளர்த்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராக, பாடநூல் கழகத்தின் தலைவராக உருவாகக் காரணமாக அமைந்த நபர் என் தந்தை Y. இன்னாசி ஆசிரியர் அவர்கள்.

அவர் கடிதத்தில் எழுதிய நற்செய்தி வாசகம், எனக்கு இடம் கிடைக்க நடந்த என் தந்தையின் இறைநம்பிக்கையுடன் கூடிய அந்த நிகழ்வு... இவைகளால்தான் நான் சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்.