news
சிறப்புக்கட்டுரை
நாளைய இந்தியா இன்று தெருக்களில் நிற்கிறது!

மனித வாழ்க்கையில் என்றுதான் முடியும் இந்தப் போராட்டம்? அன்று விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் தொடங்கிய போராட்டம், இன்று சொந்தக் கல்விக்காகப் போராடும் அவலநிலையில் உள்ளது.

நான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன்; பெண்களுக்குப் பாதுகாப்பு தருவேன்\" என்று முழக்கமிட்டவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தவறு செய்தவனைத் தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைத்து, மூன்று வேளை உணவளித்து, பாதுகாக்கும் நிலைமை நம்மிடம்தான் உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவனோ தெருவில் இறங்கி நீதிக்காகப் போராடுகிறான். என்று மாறும் இந்த அவலநிலை?

அன்று ஆங்கிலேயரிடம் அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றோம். இன்று பெற்ற விடுதலையைக் காக்கவே போராடுகிறோம். ‘இளைஞர்களே நாட்டின் கண்கள்என்று மேடைகளிலும் வாய்மொழியிலும் மட்டும் புகழ்கிறோம். ஆனால், அவர்கள் நீதிக்காகக் குரல் கொடுத்தால், அவர்களை அந்நியர்களைப் போல நடத்துகிறோம்.

எப்படியோ பணத்தைச் சேர்த்து தன் பிள்ளையின் கல்விக்காகச் செலவு செய்யும் பெற்றோரும், பெற்றோரின் வியர்வையை உணர்ந்து தன் கனவை நோக்கி வெற்றிநடைபோடும் இளைஞரும் இந்த நாட்டில் ஏராளம். ஆனால், அவர்களை அவமதித்து ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது.

கனவுகளை விதைக்கவேண்டும் என்ற நாட்டில், கனவுகளையே கலைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இளைஞரின் வேலைவாய்ப்பை மறுப்பதும், கல்வியை வணிகமாக மாற்றுவதும், மக்களின் குரலை அடக்குவதும், சமயத்தின் பெயரில் சகோதரத்துவத்தைச் சீர்குலைப்பதும் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.

பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக நடமாட, பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஏழை மட்டும் சட்டத்தின் கடுமையை அனுபவிக்கிறான். அயல்நாடுகளுடன் வர்த்தகம் செய்வது மட்டும் வளர்ச்சி அல்ல; ஒவ்வோர் இளைஞனுக்கும் உரிமையோடு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சி. மக்கள்தொகையில் முதலிடம் பெற்றோம் என்று பெருமைப்படுவதைவிட, பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டை உருவாக்குவதுதான் பெருமை. உயிரைக் காப்பது மருத்துவம்; ஆனால், மருத்துவக் கல்வியே ஊழலின் நிழலில் சிக்கிவிட்டது.

காலத்தைக் கரைத்து படித்தும் எழுதியும் தேர்வெழுதிய மாணவர்களிடம், ‘இது செல்லாதுஎன்று கூறி எத்தனை கனவுகளை இந்த அரசு சிதைத்தது? தவறைச் சுட்டிக்காட்டினால் தண்டனை; இது நியாயமற்ற அரசியல். உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களின் உயிரைப் பறிக்கும் நிலை சனநாயகத்திற்கு அவமானம்.

இந்திய விடுதலைப் போராட்டம் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை பல வரலாற்றுப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய தமிழ்நாடு இன்று ஏன் மௌனம் காக்கிறது? வடக்கில் மாணவர்கள் கல்விக்காகப் போராட, தமிழ்நாடு பட டிக்கெட்டுக்காக மட்டுமே அலைமோதும் நிலை மாற வேண்டாமா?

ஊழலை ஒழிப்பேன்என்று கூறிவிட்டு, ஊழல் செய்தவர்களையே அமைச்சராக்கி ஆளும் அரசியல் எந்த நீதியைப் பேசுகிறது? சனநாயகம் சீர்குலையும் வேளையில் அதைக் காக்க முன்வராமல், ஏசி திரையரங்குகளில்சனநாயகன்திரைப்படத்தைப் பார்ப்பது மட்டும் போதுமா? திரைப்பட வசூலுக்காக அமைதியை ஆடையாக அணிவது சரியா?

என்றுதான் எழப்போகிறோம்? போதும்! ஆண்டதும் போதும்! மாண்டதும் போதும்! மீண்டும் ஒரு சுதந்திரப் போர் வேண்டாம். இளைஞர்களே, பார்வையாளனாக அல்ல; மாற்றத்தை உருவாக்குபவனாக எழுந்து வாருங்கள். நாடு உங்கள் குரலுக்காகக் காத்திருக்கிறது. அன்று ஜல்லிக்கட்டை மீட்ட உங்கள் குரல், இன்று கல்வியையும் நீதியையும் மீட்டெடுக்கட்டும்! எழுந்து வா... எல்லாம் மாறும்! துணிந்து வா... தடைகளும் மடைகளாக மாறும்! புதிய சமுதாயத்தின் எழுச்சி நமது கைகளில்தான்!

news
சிறப்புக்கட்டுரை
நகரமயமாக்கும் ஏ.ஐ. அறிவியல் (உலகம் உன் கையில் – 28)

உடலை வருத்துவது மனிதனா? அல்லது அறிவியலா? தொடக்ககால மனிதன் காட்டில் ஒரு புலியைக் கண்டபோது அவனுக்குள் மன அழுத்தம் (Stress) எட்டிப்பார்த்தது. ஆனால், அந்தப் புலியிடமிருந்து தப்பித்து மரத்தில் ஏறியதும் அல்லது அதை வீழ்த்தியதும் அவனது மன அழுத்தம் முடிவுக்கு வந்தது.

ஆனால் இன்று? காலையில் அலாரம் அடிப்பதில் தொடங்கி, வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்களின் அறிவிப்புகள் என அன்றைய பணி முடிந்து தூங்கச் செல்லும் வரை நம்மைத் துரத்தும்டிஜிட்டல் புலிகள்ஏராளம்!

தொழில்நுட்பத்தின் அசுர வேகத்திற்கும், மனித உடலின் இயற்கை வடிவமைப்பிற்கும் இடையே நடக்கும் இந்த ஆர்வம் மிகுந்த மோதலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தொடக்க மனிதனின்சிர்காடியன் சுழற்சி- இன்றைய .. மூளை வருத்துதல்

இயற்கையோடு இணைந்து, சூரியன் உதிக்கும்போது விழித்து, மறையும்போது உறங்கிய தொடக்க மனிதனின் வாழ்க்கை முறைதான்சிர்காடியன் சுழற்சி (Circadian Rhythm) எனப்படுகிறது. அன்று பூமியின் சுழற்சிக்கு ஏற்ப அவனது மூளை இயங்கியது. ஆனால், இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உலகை இயக்கும் வேகத்தை நம் உடலால் ஈடுகட்ட முடிவதில்லை என்று மனிதப் பரிணாம உடலியல் வல்லுநர் லாங்மேன் குறிப்பிடுகிறார். இதனை இன்றைய உலகில் .. - மூளை வருத்துதல் (Al Brain fry) என்று அறியப்படுகிறது.

நாளுக்கு நாள் மனிதனின்மீது விழும் அழுத்தமும், சுகாதார இழப்புகளும், நவீன இடர்பாடுகளும் திணிக்கப்படுகிறதா? அல்லது இன்றைய தொழில் மயம் மனித உடலியலைக் கட்டாயப்படுத்துகிறதா? என்ற நிலை உருவாகியுள்ளதை உணர்கிறோம்.

தொழில்நுட்பமும் மனித இடைவெளியும்

19-ஆம் நூற்றாண்டில், கார்ல் பென்ஜ் என்பவருக்கு உள் எரிபொறி (IC Engine)  காப்புரிமை 1879-ஆம் ஆண்டு வழங்கப்பட்டு, மோட்டார் வாகனங்கள் உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் 1908-ஆம் ஆண்டிலிருந்துதான் ஹென்றி ஃபோர்ட் பெருமளவில் மோட்டார் வாகனங்களைச் சந்தையில் இறக்கினார் என்றாலும், அப்போதிருந்த குதிரை வண்டித் தொழிலை இது பாதிப்படையச் செய்யவில்லை. இத்தொழில் சமுதாயம் தன்னை மாற்றியமைத்துக்கொள்ள குறைவான கால அவகாசம் அளித்தாலும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தது. ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் காணும் தொழில்நுட்ப மாற்றங்கள் வெகு வேகமாகப் பரவுவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, நடைமுறையிலிருக்கும்ஊபர்(uber) - வாடகைச் சேவை, சிறிய இடைவெளியில் ஏற்கெனவே இயங்கி வந்த மோட்டார் வாடகைத் தொழிலைக் கழுத்தை நெரிக்கும் போட்டிக்குத் தள்ளியதையும், இப்பிரிவினரின் தவிப்பும் நம் கண்முன்னே நடந்தது. இத்தகைய நெருக்கடிகளும் அல்லல்களும் ..-யின் வருகையினால் பல துறைகளில் வேகமாக உருவெடுப்பது, எவ்விதத்தில் மனித உடல்நலத்திற்கு ஏற்புடையதாயிருக்கும் என்ற வினாவும் எழுகிறது.

உடலியலும் தொழில்நுட்பமும்

இன்று நாம் சந்திக்கும் அழுத்தங்களுக்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும் உடல் அல்லது பாரம்பரிய இடர்பாடுகளைக் காரணமாகக் கூறமுடியாது; ஏனென்றால், தொடக்க காலத்துச் சூழலுக்கேற்ற உடலமைப்பைப் பெற்றிருக்கும் நாம், அதனை இன்றைய அதிவேக மாற்றங்களுக்குள்ளாக்குகிறோம் என்பதே உண்மை. கடந்த நூற்றாண்டில் உருவெடுத்த அதிவேகத் தொழில்நுட்ப மாற்றங்கள் முதல், இன்றைய .. வரை, மனிதர் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள தேவையான அவகாசம் அளிக்கவில்லை என்பதற்கு இன்றைய உலகளாவிய கருவுறு வீழ்ச்சி, அசாதாரண நோய்கள் என்பவை சான்றாக உள்ளது என்கிறது ஓர் ஆய்வு

போக்குவரத்து, வேலை, சமூக ஊடகம், எப்போதுமில்லாத உணர்வலைகளைத் தூண்டும் காரணிகள் என்பவைகளுக்குப் பஞ்சமில்லாத நாள்களில் இன்று நாம் வாழ்கிறோம். ஒருவேளை, இப்பூவுலகில் தேவைக்கதிகமான செல்வம், வசதிகள், உடல்நலப் பாதுகாப்பு பெற்றவர்களென்று திருப்தியடையலாம். ஆனால், தொழில்நுட்பத்தினால் அடைந்த சாதனைகள், நம் உடலின் எதிர்ப்புச் சக்தி, அறிவாற்றல், உடல்சார்ந்த மற்றும் குழந்தை பிறப்பு இயக்கங்களை மறைமுகமாகப் பாதிக்கிறதென்று மனிதப் பரிமாணம் மற்றும் உடலியல் சூழல் கழகத் தலைமை ஆய்வாளரான கோலின் ஷா கூறுகிறார்.

இன்றுள்ள அதிவேகத் தொடர்ச்சியான உடலைப் பாதிக்கும் அதிர்வுகளும் அழுத்தமும் உளைச்சலும் உடலின் முக்கியச் சுரபி மண்டலங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் பலவித நோய்களுக்கும், ஆயுள் குறைவிற்கும் காரணமாகி விடுகிறதென்றும் அறியப்படுகிறது.

தொழில்நுட்பமும் நகரவாழ்வும்

.நா. சபையின் அறிக்கையின்படி 2050-ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள்தொகையில் 70% பேர் நகரவாசிகளாயிருப்பர் என்பதாகும். இன்றளவில் நம்மில் பெரும்பாலோர் 90% பணி நேரத்தை மூடிய அலுவலக அறைகள், செயற்கை ஒளியில் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய பயணங்களும் அவ்வாறே அமையத் தொடங்கிவிட்டன; நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் மற்றும் .. கருவி கட்டமைப்புகள், குளிர்சாதன அடிப்படையில் இயங்குவதால் நம்மையும் இதில் உட்படுத்துகிறோம்; ஆயிரக்கணக்கானோரிடம் திரை-தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறோம்; நம் முன்னோர் நினைத்துப் பார்க்காத செயற்கை உணவு வகைகளை உட்கொள்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்று, குடிநீர் என்பவைகளின் தூய்மையும் கேள்விக்குறியாயிருக்க இன்று பயனிலுள்ள தொலைத்தொடர்பு, மின்னணு சாதனங்கள், மருத்துவக் கருவிகளினால், 100 ஆண்டிற்கு முன்பில்லாத மின்காந்த ரேடியோ கதிர்வீச்சினால் நம்மை அறியாமலேயே பாதிக்கப்படுகிறோம். இவ்வாறு .. வழிநடத்தும் அரசு, தனியார் மென்பொருள் சார்ந்த அலுவலகங்களில் செயற்கைச் சூழல்களைச் சந்திக்கும் நாம், இன்றும் கற்கால மனித உடலமைப்பைத்தான் பெற்றிருக்கிறோம்.

முன்னோர் வாழ்ந்த காடுகளுக்கு நாம் செல்ல வேண்டாம்

வேலைப்பளுவிலும், கான்கிரீட் காடுகளிலும் சிக்கித்திணறும் நமக்கு இயற்கை அன்னையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. இதற்காக நம் முன்னோர் வாழ்ந்த அடர்ந்த காடுகளுக்கு நாம் மூட்டை முடிச்சுகளோடு போக முடியாதென்றாலும், காடுகளை நம் நகரங்களுக்குள் வரவழைக்க முடியும்.

காலையில் எழுந்ததும் கரும்புகையும், வாகன இரைச்சலும்தான் நம்மை வரவேற்கின்றன. இதற்கு நடுவே, நகரங்களில் நாம் உருவாக்கும் பசுமைக் குறுங்காடுகளில் தினமும் சிறிது நேரம் இந்த மரங்களின் நிழலில் உலா வருவதால் நாம் அழுத்தத்திலிருந்து விடுதலைபெறும் வாய்ப்பினைப் பெறுகிறோம். நாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பறவைகள், அணில்கள், பூச்சிகளின் பூர்வீகச் சொத்தில் ஒரு சிறிய பகுதியை அவற்றிற்கே திரும்பக் கொடுக்கும் பெருமையும் நமக்குக் கிடைக்கும். தூய்மையான காற்று, கண்களுக்கு இதமளிக்கும் பசுமை எல்லாம் முற்றிலும் இலவசம் என்பதை நினைக்கக்கூட நேரமில்லாத நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரே வகை மரத்தை நட்டு வைப்பது காடாகாது. கலப்பு மரங்களும், பல்வேறு தாவரங்களும் இணைந்து வளரும்போதுதான் அது உண்மையான காடாகிறது என்பதை அறிவோம். இந்தக் கலப்புக் காடுகள் வெறும் நிழலை மட்டும் தருவதில்லை; இயற்கையின் சீற்றங்களைத் தாங்கும் அரணாக நிற்கின்றன. நிலத்தடி நீரைச் சீராக்கி, நச்சு கலந்த கரியமில வாயுவை உறிஞ்சிச் சேமித்து, இப்பூவுலகைக் குளிர்விக்கும் கருவியாகச் செயல்படுகின்றன.

இன்றளவில் நகரங்களில் இன்னும் எத்தனையோ வெற்றுத்திடல்களும், பயன்படுத்தப்படாத நிலப்பகுதிகளும் அனாதைகளாகக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே விட்டுவைக்காமல், குறுங்காடுகளாக மாற்றலாம்; வானம் தரும் அரிய மழைநீரை, சாக்கடை வடிகால்களுக்குள் அனுப்பி வீணாக்காமல், பழைய நீர் ஆதாரங்களை (குளங்கள், ஏரிகள்) மீட்டெடுத்துப் பாதுகாப்பதும், புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் நம் உடனடிக் கடமையாயுள்ளது.

உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ள இந்தத் தலைமுறைக்கும், வரும் சந்ததியினருக்கும் ஆற்றும் மிகப்பெரிய தொண்டு இதுவாகத்தானிருக்கும். கான்கிரீட் நகரங்களைச் சுவாசிக்கும் நகரங்களாக மாற்றுவோம்! பசுமையைக் காப்போம்!

news
சிறப்புக்கட்டுரை
எண்மத் தொழில்நுட்ப உலகில் மனித மாண்பினைப் பேணும் அச்சு ஊடகம்

எங்கும் ஓயாத இரைச்சல் மிகுந்த ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான எண்மத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) அறிவிப்புகள் நமது அலைப்பேசித் திரைகளில் மின்னுகின்றன. திடுக்கிடும் செய்திகளும், வைரல் காணொளிகளும், அவசரச் செய்தி எச்சரிக்கைகளும் சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ச்சியாகச் சுருண்டோடிக் கொண்டே இருக்கின்றன. இந்த நவீனத் தகவல் பெருவெள்ளத்தில், இளைய தலைமுறை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகமும் திசைமாறித் திகைத்து நிற்கிறது. ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்டு எங்கோ கரை ஒதுங்கி, விழிபிதுங்கி நிற்கும் சூழ்நிலைபோல இருக்கிறது.

இணையத் தொடர்பு கொண்ட(டு) ஒவ்வொருவராலும் தங்களின் கருத்துகளை அகிலமெங்கும் பரப்ப முடிகிறது. ஆனால், இத்தனை இரைச்சல்களுக்கும் மத்தியில், எது உண்மை? எது போலி? நமக்கு உண்மையை உரைப்பது யார்? என்ற அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன.

இத்தகைய சூழலில்தான், இவ்வினாக்களுக்குச் சரியான விடையளிக்க, அச்சு ஊடகவியலின் உண்மையான தன்மையும் நோக்கமும் ஒளியை நோக்கித் தன் பாதங்களை எடுத்து வைக்கிறது. இன்று, செய்தி அறைகள், நிர்ணயக் கணக்கீடுகளால் (Algorithms) இயக்கப்படும் ஒரு நிலப் பரப்புகளாக உருமாறி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) ஒருசில விநாடிகளிலேயே கட்டுரைகளைத் தருகிறது; ஈர்ப்பு மிகுந்த அதிகக் கவனம் பெரும் தலைப்புகளைச் செய்திகளை, உள்ளடக்கங்களை (Content) உருவாக்குகிறது. மேலும், எந்தவொரு மனித நிருபராலும் ஈடு கொடுக்க முடியாத அளவிற்குத் தரவுகளை ஒருங்கிணைத்துத் தொகுக்கிறது. ஆயினும்கூட, இந்தத் திறன்மிகு பகட்டான போர்வையின்கீழ், ஓர் ஆழமான நெருக்கடிநிலை மறைந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.

பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறலின் காவலன் என்றும், குடிமக்கள் சமூகத்தின்நான்காம் தூண்என்றும் அழைக்கப்படும் ஊடகம், இன்று ஓர் ஆபத்தான இருதலைக் கொள்ளி நோயில் சிக்கியுள்ளது. ஒன்று, எண்மத் தொழில்நுட்ப சந்தையின் வேகம்; மற்றொன்று, போலியான செய்திகள் மற்றும் காணொளிகளின் அதிவேகப் பரவல். எண்மத் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு அதை அதிவேகமாக வழங்குகிறது; அது பல வேளைகளில் பேரதிர்ச்சியையும் தருகிறது. எந்தத் தகவல் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், எது புதைக்கப்படவேண்டும் என்பதை நிர்ணயக் கணக்கீடுகள் தீர்மானிக்கும்போது, ஊடகத்துறை எவ்வாறு தனது மேன்மையான அழைப்பிற்கு உண்மையாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் தவிர்க்க இயலாததே. இதற்கான விடை மிகவும் எளிமையானது; எவ்விதச் சமரசத்திற்கும் இடமில்லாதது. அதாவது, மனிதநேயம், மானுட மாண்பு மற்றும் உண்மை ஆகிய மாறாத முக்கூறுகளை அது உறுதியாகப் பற்றிக்கொள்வதே அதன் முக்கியக் காரணமாகும்.

உண்மை நம்மை விடுவிக்கும்

ஊடகவியலின் உண்மையான உள்ளுணர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின், ஒரு சமூக ஊடகவியலாளரிடமிருந்தோ (Influencer) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரியிடமிருந்தோ (PRO - Spokesperson) ஓர் உண்மையான செய்தியாளரை வேறுபடுத்துவது எது? என்பதை நாம் கண்டுணர வேண்டும். ஒரு சமூக ஊடகவியலாளர் உங்களின் கவனத்தை ஈர்க்க விழைகிறார்; ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி ஒரு குறிப்பிட்ட பிம்பத்தைப் பாதுகாக்க முனைகிறார்; ஆனால், ஒரு செய்தியாளர் எவ்விதப் பூச்சும் சமரசமும் இல்லாத உண்மைத் தரவுகளை வழங்க விரும்புகிறார்.

குடிமக்கள் சுதந்திரமாகவும், தங்களைத் தாங்களே ஆளக்கூடிய தகுதியோடும் வாழ்வதற்குத் தேவையான துல்லியமான, சரியான தரவுகளை வழங்குவதே ஊடகவியலின் முதன்மைக் குறிக்கோளாகும். முகப்பு விளக்குகள் (Headlights) ஏதுமின்றி, காரிருள் சூழ்ந்த இரவில் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு மலைப்பாதையில் காரைச் செலுத்த முயல்வதைக் கற்பனை செய்து பாருங்கள்; ஊடகமும் இதழியலும் இல்லாத வாழ்க்கை அத்தகையதாகவே இருக்கும். நாம் வாழும் பகுதியின் குடிநீர் பாதுகாப்பானதா? நமது வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது? அல்லது நமது பெயரால் என்ன சட்டங்கள் இயற்றப்படுகின்றன? என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடும். ஊடகங்களே அந்த முகப்பு விளக்குகளை நமக்கு வழங்குகிறது. அது சமுதாயத்தின் இருண்ட மூலைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

உலகத்தின் கண்ணாகவும் செவியாகவும் திகழ்தல்

இந்த உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த அமைப்பு ஊடகம்தான். நிரபராதியைக் குற்றவாளியாக்கவும், குற்றவாளியைப் புனிதனாக்கவும் கூடிய வல்லமை ஊடகத்திற்கு உண்டு. ஏனெனில், மக்கள் திரளின் சிந்தனையைத் தீர்மானிக்கும் அதிகாரம் அவற்றிடமே உள்ளதுஎன்கிறார் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் (Malcolm X). ஆகவே, அதிகார வர்க்கத்தின் பக்கம் நிற்பது பத்திரிகைத் தர்மம் அல்ல; உண்மையின் பக்கம் நிற்பது மட்டுமே ஊடகத்துறையின் கடமை. உண்மை செத்துப்போனால் பத்திரிகைத் துறையும் மடிந்துவிடும்.

இதழியலின் (ஊடகவியலின்) மிக அழகிய மற்றும் துணிச்சலான தன்மைசான்று பகர்தல்(Bearing witness) என்னும் செயலாகும். ஓர் இயற்கைப்பேரிடர் தாக்கும்போதோ, போர் மூளும்போதோ அல்லது ஒரு சமூகம் பேரழிவால் நிலைகுலையும்போதோ, பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுவதே மனிதனின் இயல்பான உள்ளுணர்வாகும். ஆனால், செய்தியாளர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்பவர்கள். அவர்கள் தங்கள் பைகளைத் தயாரித்து, குறிப்பேடுகளையும் கேமராக்களையும் கையில் ஏந்தி, இடையூறுகளை நோக்கி ஓடுகிறார்கள். ஏன்? ஏனெனில், அங்கு நடப்பவற்றைத் தடம்பதிக்க அவர்கள் இல்லை என்றால், எளிய மனிதர்களின் கதைகள் வரலாற்றிலிருந்து முற்றிலும் துடைத்தழிக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

பெரும் முதலாளிகளின் வணிக மோசடிகளையோ அல்லது அரசியல் ஊழல்களையோ வெளிக்கொண்டு வருவதற்காக, தூசு படிந்த பொது ஆவணங்களை மாதக்கணக்கில் தோண்டித் துருவி, உள்விவரம் தெரிவிப்போரை நேர்காணல் செய்து, தனிப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் புலனாய்வு நிருபர்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இதைப் புகழுக்காகவோ அல்லது செல்வத்திற்காகவோ செய்வதில்லை; ஏனெனில், பெரும்பாலான செய்தியாளர்களுக்கு மிகக் சொற்பமான ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் இதைச் செய்வதற்குக் காரணம், ‘இந்தக் கதை முக்கியமானது, இதை உலகம் அறியவேண்டும்என்று அவர்களின் உள்ளத்தில் எரியும் ஒரு நெருப்புதான்.

வறுமையோடு போராடும் விளிம்புநிலைச் சமூகத்தைப் பற்றியோ அல்லது தவறான தண்டனையை எதிர்த்துப் போராடும் ஒரு தனிநபரைப் பற்றியோ ஒரு செய்தியாளர் எழுதும்போது, அவர் ஒரு புனிதமான செயலைச் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் மனித வாழ்க்கையின் மாண்பை மீட்டெடுக்கிறார். எளியவர்களை அதிகார வர்க்கத்தினர் தங்களுக்குச் சாதகமாக நசுக்கிவிடாமல் இருப்பதை அவர் உறுதி செய்கிறார்.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
துள்ளும் மனமே அள்ளும்! (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 8)

நமது அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக இதயத்தைச் சொல்கிறோம். மனிதனின் இதயம் உணர்வுகளின் இல்லமாகவும், மனம் எண்ணங்களின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு பணிகளைச் செய்தாலும், ஒன்றோடொன்று பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்துள்ளன.

மகிழ்ச்சியில் துள்ளும்போது, ‘என் இதயம் அகமகிழ்கிறதுஎன்று நாம் சொல்வதன் பொருள் என்ன? உணர்வின் உடனடித் தொடர்பாக நாம் சொல்வது இதயத்தைத்தான். மகிழ்ச்சி, நம்பிக்கை, அல்லது அன்பு காரணமாக இதயம் துள்ளும்போதும், பயம் மற்றும் பதற்றம் காரணமாக இதயம் படபடக்கும்போதும், அதன் பின்னால் ஓர் எண்ணம் இருப்பது உறுதி.

நாம் அனுபவிக்கும் ஒவ்வோர் உணர்விற்கும் அடிப்படையாக இருப்பது நமது சிந்தனை, பார்வை மற்றும் நம்பிக்கைகளே. இதை ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், எண்ணங்கள் பின்னால் இருந்து இயக்கும் ஆற்றலாக இருப்பதை நாம் அறியலாம். எண்ணங்களுக்கு நமது உணர்வுகளை வடிவமைக்கும் அற்புதமான ஆற்றல் உள்ளது. ஒரு நல்ல எண்ணம் இதயத்தை மகிழ்ச்சியாலும் துணிச்சலாலும் நிரப்பும். ஓர் எதிர்மறை எண்ணம் கவலையையும் துயரத்தையும் உருவாக்கும்.

இந்தக் கண்ணுக்குப் புலப்படாத தொடர்பே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் உருவாக்கும். ஒவ்வோர் உறவையும் அடைய விரும்பும். ஒவ்வொரு கனவையும் பாதிக்கும். இதில் நாம் கவனம் வைக்கும்போது, எண்ணம் நல்வழிப்பட்டு, மனம் நம் வயப்பட்டு துள்ளும் மனநிலைக்கு மாறுகிறோம். ‘இதயத்தையும் மனத்தையும் தொடர்புபடுத்தி எழுதுவதன் நோக்கம் என்ன?’ எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம். மனமும் (Mind) இதய மும் (Heart) ஒன்றல்ல; ஆனால், அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதயம் என்பது உடலின் ஓர் உறுப்பு. அதன் பணி உடல் முழுவதும் குருதியைப் பாய்ச்சுவது. மனம் என்பது உடல் உறுப்பு அல்ல; அது சிந்தனை, நினைவு, கற்பனை, உணர்வுகள், முடிவெடுத்தல் போன்ற மனச்செயல்பாடுகளைக் குறிக்கும். இவை மூளையின் செயல்பாடுகளுடன் தொடர்பு உடையவை.

இதயம் என்பது அன்பு, கருணை, பாசம், உணர்வு போன்றவற்றின் இருப்பிடத்தின் உவமையாகக் கூறப்படுகிறது. மனம் என்பது எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், குழப்பங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. மனம் என்பது எண்ணங்களை உருவாக்கும் கருவி.

இதயம் என்பது அன்பு அல்லது ஆன்ம அனுபவத்தின் மையம் என்று விளக்கப்படுகிறது. இரண்டும் வேறுபட்டவை என்றாலும், ஒன்றையொன்று ஆழமாகப் பாதிக்கின்றன. அதனால் இவை இரண்டும் மனித அனுபவத்தில் பிரிக்க முடியாத இரு முக்கியப் பரிமாணங்கள். எளிமையாகக் கூறினால், மனம் = எண்ணங்களின் உலகம். இதயம் = உணர்வுகளின் உலகம்.

நமது எண்ணங்கள் ஓர் உயர்ந்த நோக்கமும், மிகுந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கும்போது, நமது இதயம் உற்சாகம் பெறுகிறது. அது நம்மைத் தன்னம்பிக்கையுடனும் கருணையுடனும் செயல்படத் தூண்டுகிறது. பிறரை ஈர்க்கும் இதயம் என்பது பிரச்சினைகளே இல்லாத இதயம் அல்ல; மாறாக, சவால்கள் இருந்தாலும், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் இதயமே உண்மையில் ஈர்க்கும் இதயம். அத்தகைய இதயம் அவசர உணர்ச்சிகளால் அல்ல; ஆழ்ந்த சிந்தனையால் வழிநடத்தப்படுகிறது. அது குறைகளைச் சொல்வதைவிட, நன்றியுணர்வைத் தேர்ந்தெடுக்கிறது; பயத்தை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கிறது. வெறுப்பைவிட அன்பையும் கருணையையும் தேர்ந்தெடுக்கிறது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் முதலில் எண்ணங்களாகவே தோன்றி, பின்னர் செயல்களாக வெளிப்படுகின்றன.

சிறந்த தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் ஒரு பொதுவான பண்பு உள்ளது. அவர்கள் முதலில் வலிமையான எண்ணங்களை வளர்த்தனர். அந்த எண்ணங்களை வளர்த்தெடுக்கச் சிறந்த பழக்கங்களை உருவாக்கினர். மற்றவர்களுக்கு முடியாததாகத் தோன்றிய எண்ணங்களே அவர்களின் இதயத்தைத் துள்ளச் செய்தன. நம்பும் மனமும், கற்பனைத் திறனும், விடாமுயற்சியும் அந்த எண்ணங்களை உண்மைக்கு அருகில் கொண்டு சென்று அவர்களது வாழ்வை மாற்றின.

சரியான மற்றும் முறையான எண்ணங்களால் ஊக்கமடைந்த இதயம், ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல; எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றும் ஆற்றல் கொண்டது. அதேநேரத்தில், எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை இதயத்தைச் சின்னாபின்னமாக்கிச் சிறையடைத்துவிடும். சந்தேகம், கோபம், பொறாமை மற்றும் பயம் போன்ற எண்ணங்கள் மகிழ்ச்சியை மறைத்து, வாய்ப்புகளைக் காணவிடாமல் தடுக்கின்றன. அதனால்தான் நல்ல சிந்தனையை வளர்ப்பது மிகவும் அவசியம்.

பிறரை ஈர்க்கும் மனமும் இதயமும் என்பது உயர்ந்த நோக்கமுள்ள எண்ணங்களால் நிரம்பிய மனத்தின் வெளிப்பாடுதான். நமது எண்ணங்கள் (மனம்) விதைகள், நமது இதயம் வளமான மண்; நமது செயல்கள் உலகம் காணும் கனிகள். நேர்மறை, துணிச்சல் மற்றும் கருணை நிறைந்த எண்ணங்களை வளர்த்தால், நமது மனமும் இதயமும் நம்மை மட்டுமல்ல; நம்மைச் சந்திக்கும் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும் ஆற்றலாக மாற்றித் துள்ளும் மனநிலையைத் தரும்.

நிறைவாகக் கூறவேண்டுமென்றால், மனம் எண்ணுகிறது; இதயம் உணர்கிறது. எண்ணுவதும் உணர்வதும் உருப்பெறும்போது எண்ணற்ற ஏற்றங்களை நாம் கண்டு துள்ளும் மனநிலையில் இருப்போம். துள்ளும் மனமே அனைத்துத் தோல்விகளையும் கொல்லும், வெற்றிகளை வெல்லும்.

ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் உருவமே; அவனுடைய குணநலன் என்பது அவன் சிந்தித்த அனைத்து எண்ணங்களின் மொத்தத் தொகுப்பாகும்என்கிறார் ஜேம்ஸ் ஆலன். தொடர்ந்து பயணிப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
காற்றின் ஈரம் காணவில்லை!

இயற்கை, தன்னைத் தானே தகவமைக்கும் வல்லமை கொண்டது. மரம், செடி, கொடிகள் இயற்கையின் இறைப்படைப்பின் ஆச்சரியங்கள். உதாரணமாக, நாவல் மரங்களின் வேர்கள் பூமியின் வறட்சியை உள்ளுணரும். தண்ணீர் பஞ்சத்தின் அறிகுறிகளை அடையாளம் காணும். ‘தன் மரம் அழியும்; தன் வம்சங்கள் தொடராதுஎன நாவல் மரம் அறியும். அதுபோன்ற ஆண்டுகளில், வறட்சிக்கு முன் இயற்கையில் இலை, கிளை வளர்ச்சி நிறுத்தப்பட்டு, நாவல் பழங்களை விதைக்காக அதிக அளவில்  உற்பத்தி செய்யும். பழங்கள் கொத்து கொத்தாய் அளவுக்கு அதிகமாகக்  காய்க்கும்.

2026-ஆம் ஆண்டில் நாவல் பழங்கள் தெருக்களில் குவியல் குவியலாக விற்பனைக்கு வந்தன. நாமும் நடைப்பயிற்சியின்போது கவனித்தோம். பருவம் தவறியும் நாவல் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கின்றன; யாரும் கவனியாத ஒன்றையும் கவனித்தோம். பாதாம் மர சிவப்புக் கொட்டைகளும் அதிக அளவில் தரையில் கொட்டிக் கிடக்கின்றன. நதிகள் கூட ஆயிரம் ஆண்டுகளில் தங்கள் ஓட்டப் பாதையைப் புதிதாக மாற்றும் எனும் அறிவியல் அதிசயம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகும்.

திருவிவிலியத்தின் தொடக்க நூல் 41:6-7 வறட்சியின் அடையாளத்தை, ஒரு கனவு வழி இவ்வாறாக முன்னிறுத்துகிறது. “கீழைக்காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின; அந்தப் பதரான கதிர்கள் ஏழும், செழுமையான முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டது.”

ஆம், வறட்சியும் செழுமையும் இயற்கையின் இரு பக்கங்கள். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்பது காவிரிப் படுகை சார்ந்த நெல் விவசாயமாகும். இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி நதிநீர் பாசனப் பகுதிகளாகும். தமிழர்கள் உலகிற்கே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும் எனக் கற்பித்தார்கள். தெற்காசிய நாடுகளை விவசாயமயமாக்கியதில் தமிழரின் பங்கு வரலாற்றுச் சிறப்பானதாகும்.

காவிரி நீரை நம்பிய டெல்டா பகுதி விவசாயம் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு நெல் விளைச்சல் உற்பத்தியை உள்ளடக்கிய ஒன்றாகும். டெல்டா  நெல் விவசாயம் குறுவை, சம்பா, தாளடி என்ற முப்போக விவசாயமாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 105 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை, நடைபெறும் முதல் போக விவசாயம்குறுவைவிவசாயமாகும். குறுவை நெல் விவசாயம் செய்யவேண்டுமெனில், மேட்டூர் அணைக் கட்டிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும். 2026 ஜூன் 11-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் 120 அடி கொள்ளளவில் 80 அடி அளவே நீர் இருந்தது. மழைப் பொழிவும் சரியாக இல்லாத நிலை உள்ளது. பாசனம் தவிர பல கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் அணை நீர் மிகத் தேவையான ஒன்றாகும். இன்று ஜூலை 25 அன்று 75 அடியாக உள்ளது. மேட்டூர் அணை கர்நாடகாவில் திறந்துவிடும் நீரின் அளவைப் பொறுத்தே  நிறையும். மழைப்பொழிவு இருந்து, அதிக நீரும் இருந்தால் மேட்டூர் அணைக்கு கர்நாடகா அரசு நீர் திறந்துவிடும். இல்லையெனில்எங்களிடமே குடிநீருக்குத்தான் தண்ணீர் உள்ளதுஎனக் கூறி மறுத்துவிடும்.

2026 ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதங்களுக்கான தமிழ்நாட்டுப் பங்கீட்டு நீரை கர்நாடக அரசு திறந்துவிடவேண்டும் என வலியுறுத்தினர். வழக்கம்போல் கர்நாடக அரசுஎங்களுக்கே வறட்சிஎனக்கூறி மறுத்துவிட்டது. 2026, ஜூலை 28-ஆம் தேதி அடுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் என அறிவித்து விட்டார்கள்.

காவிரி நீர் குறித்துப் பேசவேண்டிய அரசியல் நிறைய உள்ளது; ஆனால், பேச வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் குறுவைப் பாசனம் இல்லை என்றாகிவிட்டது. நிலத்தடி நீரும் 300 அடிக்குக் கீழ் சென்று உப்பு நீராகிவிட்டது. ஆடி மாதங்களில் கரைபுரண்டு ஓடும் காவிரி நதி இல்லை. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிட்டன. கால்நடைகளுக்குக் குடிக்க நீர் தேடும் அவலம் விவசாயிகளின் பெரும் சோகமாகும். வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடித்து, வறட்சியின் தீவிரம் பேசுகிறது. அரிசி விலை ஜூலை 25 அன்றைய நிலவரப்படி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 15 உயர்ந்துள்ளது. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தும், டெல்டாவின் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் (சிப்ப அளவிலானது) அரவைக்குச் செல்லாமல் பல இடங்களில் திறந்தவெளியில் பாதுகாக்கப்படுகின்றன.

உலகளாவியஉணவுப் பஞ்சம்என்ற வல்லுநர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மாற்றாகபூச்சி உணவுகள்என்ற கருத்து உருவாக்கம் உலக அளவில் பேசப்படுகிறது. இது குறித்த கட்டுரைகளும் கருத்தரங்குகளும் உலகின் பெரும் கவனம் பெற்றுள்ளது. தேசங்களின் விவசாயமும், மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. உலகளாவிய பருவநிலை மாற்றம் என்றஎல் நினோஎன்பதே இதன் முக்கியக் காரணியாகும். இது ஐந்து ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் பருவநிலையைப் பாதிப்படையச் செய்வதாகும். புவி வெப்பமயமாதலின் பிரதிபலிப்பேஎல் நினோஎன்பதாகும்.

இயற்கையாகவே கடல், வளி மண்டலச் சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல், உலகின் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்காகவும், மறு பகுதியில் வறட்சியாகவும் மாறும். கடல் மட்டமும், பூமியின் வெப்பமும் உயரும். வெப்பமயமாதலால் மனிதர்களுக்கு வித்தியாசமான நோய்களும் புதிதாக ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு பூமி அமைப்புகளும் தட்ப வெப்ப நிலைகளும் காணப்படுகின்றன. வறட்சியும் வெள்ளப்பெருக்கும் ஒரே நாளில் இந்தியத் தேசத்தின் தலைப்புச் செய்திகளாக உள்ளன. பாரதி காலம் முதல்கங்கையையும் காவிரியையும் இணைப்போம்என்ற வெற்று முழக்கங்கள் அரசியலில் காணப்படுகிறது. விவசாயத்தின் அடிப்படையே நீர் என்ற உண்மையும் அரசுகளால் மறுக்கப்படுகிறது.

நம் தேசம்எல் நினோவால் பாதிக்கப்படும் ஐந்தாண்டு அபாயம் உள்ளதால், அரசுகள் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உணவுப் பதுக்கலையும், கள்ளச்  சந்தையையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். அரசு உணவுப்பொருள் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, தானிய சேமிப்பில் உறுதித்தன்மை கொண்டிருக்கவேண்டும். அதற்கேற்ப, தன் ஏற்றுமதி, இறக்குமதியில் தேவையான கணக்கீடுகளில், புள்ளி விவரங்களில் தெளிவுவேண்டும். அடிப்படை நேர்மைவேண்டும். தேசத்தில் கையறு நிலையில் உள்ள மக்கள் என்ன செய்ய முடியும்? வாருங்கள், அனைவரும் ஒருங்கிணைந்து, நல்ல பருவங்களுக்காக, நல்ல காலநிலைகளுக்காக, நல்ல பருவமழைக்காக இறைவேண்டல் செய்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
ஆகஸ்டு 10 கறுப்பு நாள்

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையில்  ஆகஸ்டு 10 அன்று தலித் கிறித்தவர்களின் நீண்டகால உரிமை கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கறுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஒருநாள் அடையாள நிகழ்வாக மட்டும் முடிவடைந்துவிடக் கூடாது. இந்திய அரசமைப்பு உறுதி செய்துள்ள சமத்துவம், சமூகநீதி, மனித மாண்பு மற்றும் சமமான வாய்ப்புக்கான உரிமையை நடைமுறைப்படுத்தும் நீண்டகால மக்கள் இயக்கமாக இது வளரவேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாகத் தலித் கிறித்தவர்கள் எதிர்கொள்ளும் இடஒதுக்கீட்டு மறுப்பு, கல்வி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வு, வேலை வாய்ப்புப் பின்தங்கல் மற்றும் சமூக அநீதிகள் குறித்து எண்ணற்ற கருத்தரங்குகள், தீர்மானங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவை பெரும்பாலும் ஒருநாள் நிகழ்வுகளாகவே முடிந்துவிட்டன. இனி அந்த அணுகுமுறை மாறவேண்டும். இந்தப் போராட்டம்ஒருநாள் கண்டனம்என்பதிலிருந்துதொடர்ச்சியான கொள்கை மாற்ற இயக்கம்என்ற புதிய கட்டத்திற்கு நகரவேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மாநிலத்தில் மொத்த MBBS இடங்கள் சுமார் 5,850 மட்டுமே இருந்த நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் மூலம் இன்று சுமார் 14,000 MBBS இடங்கள் உள்ளன. ஒரே கட்டமாக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் காரணமாக மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக ஆதிதிராவிடர் (SC/SCA) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே ஆண்டுதோறும் 850-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் SC/SCA மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. இதனுடன், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய 7.5% உள் ஒதுக்கீடு கல்வி வரலாற்றில் மிக முக்கியமான சமூகநீதித் திட்டமாக மாறியுள்ளது. 2025-26 கல்வியாண்டில் இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 650 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகவும், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த வளர்ச்சியின் முழுப் பலனும் மதம் மாறிய தலித் கிறித்தவர்களுக்குக் கிடைப்பதில்லை. சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக ஆதிதிராவிட இந்து மாணவர்களுக்கு ஒப்பான நிலையிலேயே வாழ்ந்தாலும், கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித் சமூகத்தினர் தற்போதைய 1950 குடியரசுத்தலைவர் ஆணையின் காரணமாக ஆதி திராவிடர் (SC)   இடஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை தொடர்கிறது. இதன் விளைவாக அவர்கள் மத்திய அரசின் SC இடஒதுக்கீடு, பல்வேறு கல்விச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்து விலக்கப்படுகின்றனர். இதுவே சமூகநீதிக்கான மிகப்பெரிய முரண்பாடாகும்.

அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெரும்பாலான தலித் கிறித்தவ மாணவர்கள் அரசு உதவி பெறும் கிறித்தவப் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். ஆனால், தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 7.5% உள் ஒதுக்கீட்டின் பயன், அதே பொருளாதார மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்ட அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, ஒரே கிராமத்தில் வாழும், ஒரே குடும்ப வருமானம் கொண்ட, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் அரசுப் பள்ளியில் படித்ததால் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பெறுகிறார்; மற்றொருவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் அந்த வாய்ப்பை இழக்கிறார். இந்த வேறுபாடு சமூக நீதியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் அல்லது அரசு அதிகாரி உருவாகும்போது, அந்த மாற்றம் அந்த ஒரே நபரிடம் முடிவதில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை, அடுத்த தலைமுறையின் கல்வி, பெண்களின் முன்னேற்றம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சமூக மரியாதை ஆகிய அனைத்திலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. எனவே, தலித் கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை என்பது வேலை வாய்ப்பிற்கான கோரிக்கை மட்டுமல்ல; அது பல தலைமுறைகளை முன்னேற்றும் சமூக முதலீடு.

இந்திய அரசமைப்பின் 14-வது பிரிவு, சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது. 15-வது பிரிவு, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. 16-வது பிரிவு, அரசு வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்பை உறுதி செய்கிறது. பிரிவு 21A, கல்வி உரிமையை வலியுறுத்துகிறது. பிரிவு 46, வழிகாட்டும் கொள்கை சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பது அரசின் கடமை என்று தெளிவாகக் கூறுகிறது. எனவே, தலித் கிறித்தவர்களின் உரிமை கோரிக்கை அரசமைப்பின் அடிப்படை நோக்கங்களோடு ஒத்துப்போகும் ஒரு சமூகநீதி கோரிக்கையாகும்.

இன்றைய காலகட்டத்தில் எந்த உரிமைப் போராட்டமும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் வெற்றிபெற முடியாது. மக்கள்தொகை, கல்வி நிலை, பள்ளி இடைநிற்றல், உயர்கல்வி சேர்க்கை, மருத்துவக் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, வறுமை, நிலமின்மை மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறும் நிலை போன்ற அனைத்துத் தரவுகளையும் அறிவியல் முறையில் சேகரித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இத்தகைய தரவுகள் நீதிமன்றங்களிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளிலும் வலுவான ஆதாரங்களாக அமையும்.

எனவே, ஆகஸ்ட் 10 கறுப்பு நாள் வெறும் கறுப்பு ஆடை அணியும் நிகழ்வாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டின் 39 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களைச் சந்தித்து, மதம் மாறிய தலித் கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5ரூ உள் ஒதுக்கீட்டை அதே சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் கல்வி பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக விசாரணைக்கு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும். நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்திற்குத் தலித் கிறித்தவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை வெளிப்படுத்தும் ஆதாரப்பூர்வமான தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனுடன், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தலித் கிறித்தவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறும் நிலை குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும். சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் இணைந்த நிரந்தர செயற்குழுவை உருவாக்கி, மாநில மற்றும் தேசிய அரசுகளிடம் தொடர்ச்சியான கொள்கைப் பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும்.

இந்தப் போராட்டம் தலித் கிறித்தவர்களின் போராட்டமாக மட்டும் இருக்கக்கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தி மனித சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பை வலியுறுத்துகிறது. “நீங்கள் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலா 3:28) என்ற இறைவார்த்தை, இந்தப் போராட்டத்தின் ஆன்மிக அடித்தளமாக இருக்கவேண்டும். எனவே, கத்தோலிக்கத் திரு அவையின் அனைத்துப் பணிக்குழுக்கள், மறைமாவட்டங்கள், பங்குகள், துறவற சபைகள், கல்வி நிறுவனங்கள், இளைஞர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பொதுநிலையினர் இந்த இயக்கத்தில் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைப் போராட்டமாக அல்லாமல், சமூகநீதிக்காகக் கிறித்தவச் சமூகம் ஒன்றிணையும் இயக்கமாக மாற வேண்டும்.

இன்று நாம் கேட்பது சலுகை அல்ல; சமூக நீதியின் அடிப்படையில் கிடைக்கவேண்டிய சமமான வாய்ப்பையே. கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி. அந்தக் கல்விக்கான கதவு, ஒரே சமூகப் பின்னணியைக் கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு, அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக வெவ்வேறு விதமாகத் திறக்கப்படக்கூடாது.

ஆகஸ்ட் 10 கறுப்பு நாள் என்பது வெறும் கறுப்பு ஆடை அணியும் நாளாகவோ, கண்டன முழக்கங்கள் எழுப்பும் நாளாகவோ இருக்கக்கூடாது. அது தலித் கிறித்தவர்களின் உரிமைக் குரலை இந்திய நாடாளுமன்றத்திற்கும், தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கும், நீதித்துறைக்கும், நாட்டின் மனசாட்சிக்கும் கொண்டு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றி ஒருநாள் நிகழ்வில் இல்லை; ஒரு தலைமுறையின் கல்வி வாய்ப்பை மாற்றும் சட்ட மற்றும் கொள்கை மாற்றங்களை உருவாக்குவதில்தான் உள்ளது. சமூகநீதி என்பது ஒரு கோஷமல்ல; அது ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான எதிர்காலத்தை உறுதி செய்யும் அரசமைப்பின் வாக்குறுதியாகும். ஆகஸ்டு 10 கறுப்பு நாள், அந்த வாக்குறுதியை நனவாக்கும் புதிய வரலாற்றின் தொடக்கமாக அமையட்டும்.