news
சிறப்புக்கட்டுரை
போனில் Full Charge ஆனா, வாழ்க்கை... Low Battery...

இரவு 1.30 மணி. அறையின் விளக்கு அணைந்துவிட்டது. ஆனால், இன்னும் ஒரு வெளிச்சம் மட்டும் முகத்தில் விழுகிறது - அது மொபைல் திரையின் வெளிச்சம். கண்கள் சோர்ந்திருக்கின்றன. மனம் எதையோ சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால், விரல்கள் மட்டும் தொடர்ந்து Scroll செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு Reel; மற்றொரு Video; சில Memes; சில Status updates. அப்படியே நேரம் நகர்கிறது. ஆனால், வாழ்க்கை மட்டும் எங்கோ நின்றுபோன மாதிரி தோன்றுகிறது.

இன்று மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கிறான். ஆனால், பல நேரங்களில் இதயத்தில் வெறுமையாகிவிட்டான். மனிதன் இயந்திரங்களோடு இணைந்தான்; ஆனால், இதயங்களோடு இணைவதை இழந்துவிட்டான்.

இன்று பலரின் அலைப்பேசியில் 100% சார்ஜ் இருக்கிறது. ஆனால், மனத்தில் உற்சாகம் இல்லை; உறவுகளில் உயிர் இல்லை; செபத்தில் ஆழம் இல்லை; வாழ்க்கையில் அமைதி இல்லை.

காலையில் கண் திறந்தவுடன் முதலில் பார்க்கப்படுவது இறைவனின் முகமல்ல;… Notification Screen. ‘யாராவது message பண்ணிருக்காங்களா?’ ‘என் போஸ்டுக்கு எத்தனை லைக் வந்திருக்கு?’, ‘அவன் ஆன்லைன்ல இருக்கானா?’....  இப்படித் தொடங்கும் நாள், அதே Screen வெளிச்சத்தோடு இரவிலும் முடிகிறது. ஆனால், அந்த Screen வெளிச்சத்தால் உள்ளத்தின் இருளை அகற்ற முடியவில்லை.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு நாம் தொடர்புகளின் உச்சத்தில் இருக்கிறோம்; இருப்பினும், இதுவரை இல்லாதவாறு தனிமையின் ஆழத்திலும் வீழ்ந்திருக்கிறோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்பு மனிதர்கள் தனிமையில் இறைவனைத் தேடினார்கள். இன்று தனிமையில் போனைத் தேடுகிறார்கள். சில நிமிடங்கள் அமைதியாக உட்காருவதற்கே இந்தத் தலைமுறை பயப்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில், அமைதியில்தான் உள்ளத்தின் உண்மையான சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன.

நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேனா? என்னை யாராவது உண்மையாகப்  புரிந்துகொள்கிறார்களா? நான் சோர்ந்து போய்விட்டேனா? என் வாழ்க்கை எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறதுஇந்தக் கேள்விகளிலிருந்து தப்பிக்கத்தான் நாம் மீண்டும் போன் திரைக்குள் ஓடிவிடுகிறோம்.

அமைதியாக இருந்து நான் இறைவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள் (திபா 46:10),

இன்று பல உறவுகள் அருகில் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால், உண்மையில் மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வீட்டில் நான்கு பேர் இருந்தாலும், நான்கு பேரின் கண்களும் நான்கு போன் திரைகளில்தான் இருக்கின்றன.

சாப்பிடும்போது, பயணத்தில், தூங்குவதற்கு முன், செப நேரத்திலும் கூட இறைவனுடன் பேச நேரமில்லை; ஆனால், தெரியாத மனிதர்களின் வாழ்க்கையை Scroll செய்ய நேரம் இருக்கிறது. இந்த உலகம் நமக்கு Connection கொடுத்தது; ஆனால், அமைதியை எடுத்துக்கொண்டது.

நாம் ஆன்லைனில் எல்லாருடனும் இணைந்து இருக்கிறோம். ஆனால், நம்முடைய உள்ளத்தோடு மட்டும் தொடர்பை இழந்துவிட்டோம். சில ஸ்டேட்டஸ்களுக்குப் பின்னால் அமைதியான குரல் இருக்கிறது. சிலஐயாம் ஃபைன்-களுக்குப் பின்னால் உடைந்த இதயங்கள் இருக்கின்றன. தொலைப்பேசியில் கேலரி நிரம்பிக்கொண்டே இருக்கிறது; ஆனால், இதயம் காலியாகிக்கொண்டே இருக்கிறது.

இன்று போனில் பேட்டரி குறைந்தால் உடனே சார்ஜரைத் தேடுகிறோம். ஆனால், வாழ்க்கை சோர்ந்துபோனால், இறைவனைத் தேட மறந்துவிடுகிறோம். உண்மையில் மனிதனின் ஆன்மாவுக்கும் ஒரு சார்ஜர் தேவை. அதுதான் செபம்! அதுதான் அன்பு! அது குடும்பத்தோடு மனம் திறந்து பேசும் சில நிமிடங்கள். அது அமைதியாக இறைவனின் முன்னால் அமர்வது. ஏனெனில், Wi-Fi சிக்னல் இல்லாமல் போன் செயல்படாததுபோல, இறைவனுடன் இணைப்பு இல்லாமல் உள்ளம் அமைதியாக இருக்காது.

ஒருநாள் முழுவதும் போனைச் சார்ஜ் செய்ய மறக்கமாட்டோம்; ஆனால், பல நாள்களாக நம் ஆன்மா Low Battery நிலையில் இருப்பதைக்கூட கவனிக்காமல் வாழ்கிறோம்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்களும் சில நிமிடங்கள் உங்கள் போனை ஒதுக்கிவையுங்கள். யாருக்காவது அழைத்து, ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று அன்புடன் கேளுங்கள். குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசுங்கள். சில நிமிடங்கள் அமைதியாக இறைவனுடன் செபத்தில் இணைந்திருங்கள். ஏனெனில், உலகில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது முக்கியமல்ல; உங்கள் குடும்பத்திற்கும் இறைவனுக்கும் நேரம் ஒதுக்கி இருப்பதுதான் உண்மையில் முக்கியம்.

போனில் Full Charge இருந்தாலும், அன்பில்லாத வாழ்க்கை வெறுமையானதே. இறைவன் இல்லாத இதயம் எப்போதும் Low Battery நிலையில்தான் இருக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் (வாரம் ஒரு குறள் – 05)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5)

குறள் விளக்கம்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துவோரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சிந்தனை

இருள், அநீதி, தீமை, துன்பம் எதுவும் இறைநம்பிக்கையாளர்களை நெருங்காது. ஏனென்றால், நல்வினை, தீவினை இரண்டும் அவர்களைப் பாதிக்காது. இருவினைகளையும் சமமாக எடுத்துக்கொள்ளும் உறுதியான மனநிலையை இறைவனடி பணிந்தவர்கள் பெற்றிருப்பர்.

புத்தர் மனிதர்களை மூன்று வகையினராகப் பிரித்தார். முதல் வகையினர் பாறையில் செதுக்கிய எழுத்துகளைப் போல அவர்கள் தங்கள் கோபத்தை வெகுநேரம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். இரண்டாம் வகையினர் மணலில் எழுதிய எழுத்துகளைப் போல அவர்களுக்கு விரைவில் கோபம் வரும்; சிறிது நேரத்தில் மறைந்துபோகும். மூன்றாம் வகையினர் நீரில் எழுதிய எழுத்துகளைப் போல, அவர்கள் யாருடைய பழிச்சொல்லிற்கும் வதந்திக்கும் கண்ணுறாமல் தங்கள் மனத்தையும் இதயத்தையும் எப்போதும் தூய்மையாக வைத்திருப்பவர்கள்.

புத்தர் குறிப்பிடும் மூன்றாம் வகை மனிதர்கள் எப்படித் தீமையால் பாதிக்கப்படாமல் தங்கள் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறார்களோ, அதுபோன்ற நிலையை இறைவனோடு நெருங்கிய உறவுகொண்ட உண்மையான இறையடியார் பெற்றிருப்பர். இதனைத் திருவிவிலியம்அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்என்று (நீதிமொழிகள் 16:6) குறிப்பிடுகிறது.

கடவுளைத் தனது ஆதாயத்திற்காகத் தேடுவோர் பலர். இன்ப நேரங்களைவிட துன்ப நேரங்களில் மட்டுமே நிம்மதியைத் தேடி இறைச் சமூகத்தைத் தேடுகின்றனர் பலர். ஆனால், நிறை இன்பமாகிய இறைவனின் திருவடிகளை என்றும் மறவாது தேடுவோர், இவ்வுலக இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படுவது இல்லை.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் தீவினையை முற்றிலும் போக்கிவிடும்; நல்வினைகளைப் பெருக்கும். இறையடியாருடைய அன்பும் வாய்மையும் தீவினைகளைப் போக்குவதுடன், நல்வினைகளையும் பெருக்கும். எனவேதீவினை நீங்கி நல்வினை பெருக இறையடி பணிவோம்.

 

news
சிறப்புக்கட்டுரை
போராட்டமா? விளையாட்டா? (இளமை ஒரு சவால்! – 05)

இன்றைய இளைஞரைப் பொதுவாக இரண்டு குழுக்களாகப்  பிரித்துப் பார்க்கலாம். இன்று பெரும்பாலான இளைஞர் வாழ்க்கையை வெறும் விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள்.

பெற்றோரின் செல்வம், செல்லம், போலி ஆடம்பரம் ஆகியவை இதற்குத் துணை நிற்கின்றன. ஆனால், இந்த விளையாட்டுத்தனம் பின்னால் இளைஞரின் வாழ்வைத்தான் கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. பிறந்த கையோடு செல்போன்கள், கணினி விளையாட்டுகள், பள்ளிக்குச் செல்வது, நண்பர்களோடு பொழுதுபோக்குதல் என அவர்கள் காலம் கழிகிறது.

ஒரு 17 வயது பையன்அப்பா அவனை எங்கே, என்ன படிக்க வைப்பது? என்று பலரையும் சந்தித்துக் கவலையோடு விசாரிக்கிறார். என்னிடமும் வருகிறார். நான் அந்தப் பையனோடு பேசுகிறேன்: “அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் வாங்கினாய்?”

ஆசிரியர்கள் குறைவாக மதிப்பெண் போட்டார்கள். அதனால் குறைந்துபோனது...”

எவ்வளவு தம்பி?”

1200க்கு 870”

என்ன படிக்கப் போகிறாய்?”

மருத்துவம்

மருத்துவம் படிக்க இந்த மதிப்பெண் போதுமா?”

அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார்

அப்பா பக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார். பையனுக்குத் தன்மேல் அவ்வளவு நம்பிக்கையாம்! அதில் அவருக்கு அப்படியொரு தற்பெருமை!

எங்கே போகிறோம்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதே தெரியாத வாழ்க்கைப் பயணம்! இது எங்கே போய் முடியும்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆனால், எல்லா இளைஞரும் இப்படி இல்லை. சிலர் தங்கள் வருங்காலம் பற்றிச் சிந்திக்கிறார்கள்; தங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேற முயல்கிறார்கள்.

இவர்களிடம் குறிக்கோள் இருக்கிறது. ஆனால், இவர்களின் குறிக்கோள் மிகவும் குறுகியதாக அமைந்துவிடுகிறது. இன்று பல இளைஞரின் மையக் குறிக்கோள் பணம்... பணம் மட்டுமே!

எந்தத் தொழிலில், குறைந்த உழைப்பில் அதிகப் பணம் கிடைக்கிறது? இன்று யார் யார் பணத்தை அள்ளிக் குவிக்கிறார்கள்?

ஒரு காலத்தில் பொறியியல்... அப்புறம் மென்பொருள் துறை... இன்று வணிகவியல், எம்.பி.. போன்ற நிதி நிர்வாகத் துறை, என்றும் மங்காத மருத்துவப் படிப்பு (3,000 இடங்களை நோக்கி எட்டு இலட்சம் இளைஞரின் போராட்டம்!)

இவற்றில் ஏன் அதிக ஆர்வம்? தங்களுக்கு இயல்பான ஈடுபாடு இருப்பதாலா? இல்லை... அப்பா சொல்வதால்! நிறையப் பணம் வரும் என்பதால்! வெளிநாட்டிற்குப் போகலாம் என்பதால்!

அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவிஎன்கிற வகையிலான போராட்டம்! பல ஆண்டுப் போராட்டம்!

படிக்க இடம் கிடைக்காதபோது... படிப்பில் சிறப்பாக வெற்றிபெற முடியாதபோது... படித்தவுடன் வேலை கிடைக்காதபோது... வேலையில் பணம் வந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டாத போது...! மன அழுத்தம், வெறுப்பு, தடுமாற்றம், தற்கொலை முயற்சி! இன்றைய இளைஞர்கள் பலர் இத்தகைய தோல்விச் சேற்றில் தவிக்கும் அவலம் நம் கண்முன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இப்போது நாம் மையக்கேள்விக்கு வருவோம்... வாழ்க்கை என்பது போராட்டமா? விளையாட்டா? வாழ்க்கை என்பது இரண்டுமில்லை; ஆனால், இரண்டும் கலந்த ஒன்று.

வாழ்க்கை என்பது விளையாட்டுதான். ஆனால், ஓர் அர்த்தமுள்ள விளையாட்டு; குறிக்கோளை நோக்கிய விளையாட்டு. நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய விளையாட்டு.

வாழ்க்கை சவால்கள் நிறைந்ததுதான். ஆனால், மிகவும் குறுகிய பணத்தை மட்டும் மையமாகக் கொண்ட போராட்டமல்ல; மற்றவர்களோடு சேர்ந்து நாம் விளையாடும் விளையாட்டுப் போட்டி! இப்படித்தான் விளையாட வேண்டும் என்கிற நியதிகள் நிறைந்த விளையாட்டுப் போட்டி!

இங்கே வெற்றியும் தோல்வியும் அன்றாடச் சந்திப்புகள். அடுத்த வெற்றிக்கு வழி படைக்கும் சந்திப்புகள். ஆகவே, வாழ்க்கைச் சவால்களை மகிழ்ச்சியோடு சந்திப்போம், வெற்றி பெறுவோம்.

வாழ்க்கை என்பது எப்படியாவது வெற்றி பெற்றாகவேண்டிய போராட்டம் அல்ல; வெறும் பொழுதுபோக்கு விளையாட்டும் அல்ல; சரியான வழியில், விதிகளுக்கு உட்பட்டு, சக நண்பர்களோடு விளையாடும் ஒரு விளையாட்டுப் போட்டி!

தோல்விகள் வந்தாலும், விதிகளை மீறாமல் விளையாடுவோம்... வெற்றி பெறுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
செயற்கை நுண்ணறிவும் மனித மாண்பும்

 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

   வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

   வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

   நேர்உறங் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

   சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

என்ற வள்ளலாரின் வரிகளுக்கேற்ப, தான் திருப்பீடம் வகித்த நாள் முதல் வன்முறைப் போராட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பேராதிக்கம் போன்ற சூழல்களைச் சந்திக்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘மாண்புமிகு மானுடம் - செயற்கை நுண்ணறிவு காலத்தில் மனித மாண்பைப் பாதுகாத்தல்குறித்து தன்னுடைய முதல் சுற்றுமடலில் கையெழுத்திட்டுள்ளார்.

மானுட வரலாறு இன்று ஒரு புதிய திருப்பத்தில் நிற்கிறது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) நம் வாழ்வின் மொழியை, உறவுகளை, அதிகார அமைப்புகளை மிக வேகமாக மாற்றி வருகின்றன. இத்தகையதொரு சூழலில் திரு அவையின் சமூகக் கோட்பாடுகளின் (Social Doctrine) ஒளியில் நாம் வாழும் காலத்தைக் கூர்ந்து நோக்க வேண்டியது அவசியமாகிறது.

இதனைத் திருவிவிலியம் காட்டும் இருவேறு காட்சிப் பிம்பங்களை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருத்தந்தை லியோ. முதலாவது, மனிதனின் பேராசையினாலும், எல்லாரையும் தன் வசப்படுத்தும் ஆதிக்க மனப்பான்மையினாலும் கட்டப்பட்டு, இறுதியில் மனிதநேயமற்ற சிதைவில் முடிந்தபாபேல் கோபுரம் (தொநூ 11:1-9). இரண்டாவது, நெகேமியாவின் வழிகாட்டுதலில் சிதைந்து கிடந்த எருசலேமின் மதில்களை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டுப் பொறுப்போடு செங்கல் செங்கலாகக் கட்டியெழுப்பிய எருசலேம் மதில்கள் (நெகே 2:6).

இன்று நம் முன்னே இருக்கும் கேள்வி இதுதான்: நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நாம் எதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? பாபேல் கோபுரத்தையா? அல்லது எருசலேமின் மதில்களையா?

மனிதன் தன் உண்மையான அடையாளம் சிதைக்கப்படும்போதுதான் அவன் தன கண்களை உயர்த்திப் பார்க்கிறான். காரணம், மனித வடிவெடுத்த இறைவார்த்தையின் மறைபொருளில் மட்டுமே மனித தத்துவத்தின் பேராழம் உண்மையாகவே புலப்படுகிறது என்பதைக் கலக்கத்துடன் பதிவு செய்கின்றார் திருத்தந்தை.

1. தொழில்நுட்ப ஆதிக்கமும்அளவீட்டுஆபத்தும் (The Technocratic Paradigm)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்தொழில்நுட்ப ஆதிக்கக் கோட்பாடு (Technocratic Paradigm) இன்று உலகமயமாக்கப்பட்ட சூழலில் பேராற்றலோடு பரவி வருகிறது என்று கூறியதையும் இங்கு முன்வைக்கின்றார். இந்தச் சிந்தனை முறை எல்லாவற்றையும்செயல்திறன், கட்டுப்பாடு, இலாபம்ஆகிய மூன்று குறுகிய கணக்குகளுக்குள் மட்டுமே அடக்கிவிடுகிறது.

தொழில்நுட்பம் என்பது வெறும் காகிதக் கத்தி அல்ல; அது நடுநிலையான ஒரு கருவியும் அல்ல; எப்போது தொழில்நுட்பம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இறுதி அளவுகோலாக மாறுகிறதோ, அப்போது எது முக்கியம்? எது தேவையற்ற குப்பை? என்று அதுவே சட்டம் போடுகிறது.

இத்தகைய சூழலில், இறைவனின் படைப்புகள் அனைத்தும் வெறும் சுரண்டலுக்கான பொருள்களாகவும், மேன்மையான மனிதர்கள் இந்த மாபெரும் இயந்திர அமைப்பின் வெறும் பற்சக்கரங்களாகவும் (Cogs in a system) சுருக்கப்படும் பேராபத்து நேரிடுகிறது.

2. அறிவியலின் வளர்ச்சியும் ஆன்மிக விவேகமும்

செயற்கை நுண்ணறிவு, அறிவாற்றல் அறிவியல் (Cognitive Science), ‘நானோதொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) போன்ற கண்டுபிடிப்புகள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைக் காப்பதற்கும் பெரிதும் உதவக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதிகாரமும் ஆற்றலும் பெருகுவது மட்டுமே எல்லாவற்றையும் சிறப்பாக்கிவிடாது.

உரோமானோ குவார்டினி (Romano Guardini) கூறியதுபோல, “நவீன மனிதன் தனக்குக் கிடைக்கும் பேராற்றலை நல்வழியில் கையாள்வதற்கான தார்மீகப் பயிற்சியைப் பெறவில்லை.”

ஏற்கெனவே திருத்தந்தை புனித ஆறாம் பவுல் எச்சரித்ததுபோல விண்வெளிச் சாதனைகளும் வியத்தகு பொருளாதார வளர்ச்சியும், உண்மையான தார்மீக மற்றும் சமூக முன்னேற்றத்தோடு (Moral and Social Progress) இணைந்து செல்லாவிடில், அவை இறுதியில் மனிதனுக்கே எதிராகத் திரும்பும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக அறநெறி வளரவில்லை என்றால், மனிதனிடம் பொருள்கள் மட்டுமே பெருகும். ஆனால், மனிதத்தன்மை பெருகாது (Having more without being more). மனிதர்கள் அவர்கள் செய்யும் வேலைகளையும், கொடுக்கும் பலன்களையும் (Outcomes) வைத்து மட்டுமே மதிப்பிடப்படும் அவலம் நேரிடும்.

3. டிஜிட்டல் உலக அதிகாரக் குவிப்பு

இன்றைய டிஜிட்டல் சூழலில் மற்றொரு முக்கிய ஆபத்தும் நிலவுகிறது. இணையதளங்கள், தரவுகள் (Data) மற்றும் கணினி ஆற்றல் (Computing Power) ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடம் இல்லை; மாறாக, அது ஒருசில உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் (Tech Giants) கைகளில் முடங்கிக்கிடக்கிறது.

யார் பேசவேண்டும்? எது உலகிற்குத் தெரிய வேண்டும்? யார் சமூகத்தில் பங்கேற்கவேண்டும்? என்பதையெல்லாம் இந்தச் சில ஆற்றல்களே தீர்மானிக்கின்றன. இந்த அதிகாரக் குவிப்பு பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாதவாறு மிகவும் மறைமுகமாக (Opaque) இயங்குகிறது. இது சமுதாயத்தில் புதிய அடிமைத்தனங்களையும் புறக்கணிப்புகளையும் ஏமாற்று வேலைகளையும் பெரும் சமத்துவமின்மையையும் உருவாக்குகிறது.

இதனை எதிர்கொள்ள, சமூகக் கோட்பாட்டின் உன்னதக் கொள்கைகளாவன...

மனித நபரின் பிரிக்க முடியாத மாண்பு (Inalienable Dignity).

பொதுநலம் (Common Good).

வளங்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற கோட்பாடு (Universal Destination of Goods).

துணைமைத் தத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் (Subsidiarity & Solidarity).

மேற்கண்ட விழுமியங்களைக் கொண்டு நாம் இந்த டிஜிட்டல் கட்டமைப்புகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

4. செயற்கை நுண்ணறிவும் மானுடத்தின் உன்னதமும்

செயற்கை நுண்ணறிவு என்பது மனித அறிவுக்கு இணையானது என்ற தவறான புரிதலை நாம் முதலில் கைவிடவேண்டும். இந்த அமைப்புகள் மனித புத்திசாலித்தனத்தின் சில செயல்பாடுகளை மட்டுமே நகலெடுக்கின்றன (Imitate). கணக்கீட்டு வேகத்திலும், தரவுகளைக் கையாள்வதிலும் அவை மனிதனை மிஞ்சிய நன்மைகளைத் தரலாம். ஆனால், அவற்றின் ஆற்றல் வெறும்தரவு செயலாக்கத்தோடு (Data Processing) முடிந்துவிடுகிறது.

இயந்திரங்களால் மொழியையோ, ஏன் அனுதாபத்தையோ கூடப் போலியாகச் செய்து காட்ட முடியும். ஆனால், மனிதர்கள் வளரும் ஆன்மிக, உணர்வுப்பூர்வ மற்றும் உறவுச்சார்பு ஞானத்தின் (Wisdom) ஆழத்தை அவற்றால் ஒருபோதும் எட்ட முடியாது.

நம் தலைமுறையின் பொறுப்பு

நற்செய்தியின் (Gospel) ஒளியில் சமூக உறவுகளைக் கட்டியெழுப்புவது என்பது ஒரே நாளில் முடிந்துபோகும் காரியம் அல்ல; அது தலைமுறை தலைமுறையாகக் கிறித்தவச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு புனிதமான பணி. தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் திரு அவையானது காலத்தின் அறிகுறிகளை அறிந்து (Signs of the times), மனித உறவுகள் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப அமைய புதிய வழிகளைத் தேட வேண்டும்.

எனவே, இன்றைய தொழில்நுட்பச் சவால்களைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, மனித நேயமிக்க, சகோதரத்துவம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நம் கைகளில் கறைபடியுமென்று அஞ்சாமல், காலத்தின் கட்டுமான களத்தில் இறங்கி உழைக்க முன்வருவோம். அதுவே நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாண்புமிகு மானுடத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி.

news
சிறப்புக்கட்டுரை
சுற்றுச்சூழல் ஆன்மிகம் (ஜூன் 5 உலக சுற்றுப்புறச் சூழல் தினம்)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்புகழ் அனைத்தும் உமதே (Laudati si) என்ற சுற்றுமடலானது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதில் மிக முக்கியமான குறிக்கோளாகச் சுற்றுச் சூழல் ஆன்மிகத்தை அவரது சுற்றுமடல் 6-வது தலைப்பில் வலியுறுத்துகிறார் (பு. எண் 216). இதைப்பற்றி விழிப்புணர்வும் சிந்தனையும் நாம் பெறுவது இன்றைய காலத்தின் அறைகூவலும் அறநெறிக் கட்டாயமும் ஆகும்.

ஆன்மிகம் என்பது குறிப்பிட்ட காரியத்திற்காக நாம் அமைத்திடும் இலக்கும், அந்த இலக்கை அடைந்திட நாம் அமைக்கும் வாழ்க்கைமுறைகளும் ஆகும். சுற்றுச்சூழல் ஆன்மிகத்தின் இலக்கு காயமடைந்த இயற்கையைக் குணப்படுத்தி, நமது பொது இல்லமான பூமித்தாயைப் பேணிக்காப்பதன் மூலமாக, இறையாட்சியைப் படைப்பதாகும்.

இந்த இலக்கை அடைந்திட நாம் அமைக்கும் இறையியல் சிந்தனைகளும், அதன் அடிப்படையில் உருவாக்கும் செயல்திட்டங்களும் சேர்ந்து சுற்றுச்சூழல் ஆன்மிகம் எனலாம். இக்கருத்தை அவரது சுற்றுமடல் அழகாக எடுத்துரைக்கிறது: “நமது நம்பிக்கையிலும் நற்செய்தி மதிப்பீடுகளிலும் வேரூன்றிய சுற்றுச்சூழல் ஆன்மிகத்தை நான் பரிந்துரைக்கிறேன். இந்த ஆன்மிகம் நமது அன்றாட கிறித்தவ வாழ்வின் சிந்தனை, உணர்வு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொணர்வதாக அமையவேண்டும் (பு. எண் :216) என்கிறார்.

பூமித்தாயின் அழுகுரல்        

இயற்கைச் சீற்றங்களால் இன்றைய பூமித்தாய் கதறி அழுகிறாள் (பு. எண் : 49). நமது சுயநலத்திற்காகக் காடுகளை அழித்தல், நகரமயமாக்குதல், மட்காத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல், நீர், மின்சாரம் போன்றவைகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துதல், இயற்கை வளங்களை அழித்தல் போன்றவைகளால் பூமித்தாய் காயமடைந்து கதறி அழுகிறாள்.

இயற்கையை அழிப்பது என்பது நம்மையே அழிவிற்கு உட்படுத்திக்கொள்வதாகும். இதன் விளைவாக நிலநடுக்கம், சுனாமி, வெப்பமயமாதல், எரிமலை வெடிப்பு, புயல், கொரோனா போன்ற இயற்கைப் பேரழிவால் பூமித்தாய் காயமடைந்து கதறி அழுகிறாள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும்போது மக்கள் எழுப்பும் ஓலக்குரல் பூமித் தாயின் அழுகுரலாய் ஒலிக்கிறது. மக்கள் பெருந் திரளாய் மடியும்போது, நமது இதயம் கனமாகிக் கண்ணீரை வரவழைக்கிறது. இயற்கையைக் காயப்படுத்துவதன் மூலமாக நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் என்ற நிலையே நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இதற்குப் பதில்மொழியின் முக்கிய அம்சமே சுற்றுச்சூழல் ஆன்மிகம் (பு. எண் : 49).

நமது தேவைகளுக்கும் வாழ்க்கைக்கும் பூமித் தாய் தரும் கொடைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை; ஆனால், நமது சுயநலத்தாலும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், அறியாமையாலும் இயற்கையைக் காயப்படுத்துவது மிகக் கொடுமையானது, அநீதியானது, பாவமானது.

இறையியல் பார்வையில்...

இறைவன் இவ்வுலகில் அனைத்தையும் படைத்தபின் தமது சாயலிலும் உருவிலும் மனிதனைப் படைத்தார். ‘அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்என்று மனிதனிடம் பொறுப்பைத் தருகிறார் (தொநூ 1:26,28). ஆக, இறைவன் படைத்த படைப்பைப் பொறுப்புடன் பேணிப் பாதுகாப்பது என்பது இறைவன் நமக்குத் தந்த கடமையாகும். “ஓய்வு நாளில் உன் மாட்டிற்கும் கழுதைக்கும் ஓய்வு தரவேண்டும் (விப 23:12) என்றும், “உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை; ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள் (திபா 50: 9-12) என்றும், “அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக!” (திபா 150:6) போன்ற இறை வார்த்தைகள், இறைவன் இயற்கையோடு ஐக்கியமாகி இருப்பதை உணர்த்துகின்றன.

இயற்கை இறைவன் வாழும் ஆலயமாக உள்ளது. இயற்கை பாதிக்கப்படும்போது அங்கு இறைமை சிதைவடைகிறது. இயற்கை என்பது இறைமையின் நீட்சியாக உள்ளது (EXTENSION OF DIVINITY). ஆகையால் இயற்கை அழிக்கப்படும் போது இறை-மனித உறவு பாதிக்கப்படுகிறது. எனவே, இயற்கையை அழிப்பது என்பது அத்துடன் இறைமையைச் சிதைப்பது. ‘நம்மை நாமே அழித்துக் கொள்வதுஎன்ற இறையியல் உண்மையே, சுற்றுச் சூழல் ஆன்மிகத்தின் அடிப்படையும் ஆணிவேரும்  ஆகும்.

சமுதாயப் பார்வையில்...

இயற்கையைச் சேதப்படுத்தும்போது அதைச் சார்ந்து வாழும் ஏழை எளிய பூர்வக்குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது (பு. எண்:49). அவர்கள் சப்தம் இன்றி மடிகின்றனர். எனவே, இது சமூக நீதிக்கு எதிரான பாவமாகும். ‘உலகம் நமது பொதுவீடு; அதைப் பாதுகாப்பது நமது கடமை (பு. . எண் : 1).  எனவே, நமது சுதந்திரத்தைச் சமுதாயப் பொறுப்புடன் பயன்படுத்தவேண்டும். Nature is not only the  extension of divinity and but also humanity. மானிடத்தின் நீட்சியாகவும் இயற்கை அமைகிறது.

உளவியல் சிந்தனையில்...

இயற்கை என்பது மனிதனின் வாழ்வாதாரம். மனிதனோடு நெருங்கிய உறவையும் சார்புத் தன்மையையும் கொண்டது. மனிதன் இன்றி இயற்கை வாழலாம்; ஆனால், இயற்கையின்றி மனிதன் வாழ இயலாது என்பதை அறிந்து, நமது பொது வீடாகிய இப்பூமியைப் (பு. எண் : 1) பொறுப்புடன் பேணிக்காக்கவேண்டும். இயற்கை மனிதனின் வாழ்வைக் காக்கும் தாயாகவும், பாடங்களைப் போதிக்கும் நல்லாசானாகவும் விளங்குகிறது. இயற்கையை இரசித்து மகிழ்வது இறுக்கத்தைப் போக்கும் அருமருந்தாகவும் அமைகிறது.

ஆன்மிகப் பார்வையில்...

இயற்கையின் அழகை இரசித்து, அதில் இறைப் பிரசன்னத்தைக் கண்டு அதைத் தியானிப்பது ஒரு செபமாகும், ஆன்மிக அனுபவமாகும். இறுக்கம் நிறைந்த இவ்வுலகில், இயற்கையோடு அன்புறவு கொண்டு, அதை நேசித்து, இயற்கை போதிக்கும் மதிப்பீடுகளின்படி வாழ்வது உண்மையான இறுக்கமற்ற இறையாட்சி வாழ்வாகும். இக்கருத்தின் அடிப்படையில்தான் புனித பிரான்சிஸ் அசிசியார் கழுதையைசகோதரன்என்றும், குருவியைசகோதரிஎன்றும் மதித்து உறவாடினார். அதுவே நமது சுற்றுச்சூழல் ஆன்மிகத்தின் இலக்காகும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (பு. எண் : 49). இக்கருத்தையே புனித இஞ்ஞாசியார் தனது ஆன்மிகப் பயிற்சிகளில் இறையன்பை அடைந்திட காட்சித் தியானங்களாகத் தருகிறார்  (ஆன்மிகப் பயிற்சி, எண் 231-237). கடவுளை அனைத்திலும் அனைவரிலும் காணும் ஆன்மிக அனுபூதி நிலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்

திருத்தந்தை காட்டிய வழியில்...

திருத்தந்தை பிரான்சிஸ் நாம் செய்யவேண்டிய சிறிய செயல்திட்டங்களையே பரிந்துரைக்கிறார் (பு. எண் : 211). எடுத்துக்காட்டாக, நெகிழிப் பொருள்களைக் குறைத்துக்கொள்வது, தண்ணீர் சிக்கனம் காண்பது, மின்விளக்குகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, பொது வாகனங்களைப் பயன்படுத்துவது பேன்றவை மிகச் சிறப்பான பலன் அளிக்கும் (பு. எண் : 211).

சிந்தனை அளவில் மாற்றம் மலர்ந்திடவேண்டும். எனவே, சிறு வயது முதல்  சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும், சுற்றுச்சூழல் கல்வியும் மிக மிக அவசியம். அறிவியல்பூர்வமான அணுகுமுறையில் நமது செயல்திட்டங்கள் அமைந்திட வேண்டும் (பு. எண் : 210).

நமது மனமாற்றத்திற்கு உதவியாக நம் ஆன்மிக வழிபாட்டு முறைகள் சுற்றுச்சூழல் பார்வையில் நடத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, விழிப்புணர்வுப் பாடல்கள், திருப்பலிக் கொண்டாட்டங்கள், நவநாள்கள், ஆன்ம ஆய்வுகள், தியானங்கள், பல்சமய வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் (பு. எண் : 210, 220).

இளம் உள்ளங்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் கல்வியையும் வளர்த்திடுவோம். இயற்கையைக் காக்கும் அன்றாட சிறு சிறு செயல்களைச் செய்திடுவோம். இறுக்கமற்ற இறையாட்சி வாழ்வினை மலரச் செய்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
அனுதாபத் தூண்டில் (வலையும் வாழ்வும் – 50)

அலுவலகத்தில் மற்ற ஊழியர்கள் அனைவரும் ஒரு புதிய ஃப்ராஜெக்ட்டுக்காகவோ அல்லது அலுவலக விழாக்களுக்காகவோ தேனீக்களைப் போல இரவும் பகலும் சுறுசுறுப்பாக உழைப்பார்கள். ஆனால், ராகவன் மட்டும் எப்போதும் சோர்வாகக் கண்கள் சொருகி, ஏதோ பெரிய நோயாளி போலத் தன்னைத் திரையிட்டுக் கொள்வான்.

சார், அவனுக்குக் கொஞ்சம் உடம்பு முடியல போல... பாவம், அந்த வேலையை நானே பார்த்துக்கிறேன் என்று சக ஊழியர்கள் தாயுள்ளத்தோடு அவனுக்காகப் பரிந்து பேசுவார்கள்.

ராகவன் பயங்கரமான புத்திசாலி. ஒரு ‘கோடிங் சிக்கலை மற்றவர்கள் நாள் முழுக்க மண்டையை உடைத்துக் கொண்டு தேடினால், இவன் கூரிய கத்திபோலச் சில நிமிடங்களில் சிக்கலைத் தீர்த்து விடுவான். ஆனால், அவனிடம் ஒரு விசித்திரமான தந்திரம் இருந்தது. வேலை என்று வந்துவிட்டால், தன் உடம்பை வெயிலில் வதங்கிய கத்தரிக்காய் போல மாற்றிக்கொள்வான்.

என்ன ராகவன், இன்னைக்கும் தலைவலியா?\" என்று டீம் லீடர் கேட்கும்போதே, “ஆமா சார், சைனஸ் பிராப்ளம். நேத்து நைட்டெல்லாம் தூக்கமே இல்லை...” என்பான் சோகமான குரலில்.

உடனே மேனேஜருக்கும், சக ஊழியர்களுக்கும் அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வந்துவிடும்.

சரி சரி, நீங்க இன்னைக்குச் சீக்கிரம் கிளம்புங்க. அந்த டாஸ்க்கை சுனில் பார்த்துப்பான் என்று அவனுக்கு எப்பொழுதும் ஒரு சொகுசான இடத்தைக் கொடுத்து விடுவார்கள்.

ஒருநாள் அந்த நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில் ஒரு பெரிய ஃப்ராஜெக்ட்டை வழி நடத்த, திறமையான ஒரு மேலாளர் தேவைப்பட்டார். அது வெறும் பதவி உயர்வு மட்டுமல்ல; ராகவனின் வாழ்க்கையையே வாணவேடிக்கையாக மாற்றக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு.

திறமையின் அடிப்படையில் பார்த்தால், அந்தப் பதவிக்கு ராகவன்தான் தகுதியானவனாக இருந்தான். மேலதிகாரிகளின் கூட்டத்தில் அவனது பெயர் பரிசீலனைக்கு வந்தது.

ராகவன் ரொம்ப டேலண்டான பையன். அமெரிக்கா ஃப்ராஜெக்டுக்கு அவன்தான் கரெக்ட்!” என்றார் ஓர் அதிகாரி.  ஆனால், அங்கிருந்த முதன்மை அதிகாரி, “நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, அவனால அங்க இருக்குற குளிரையும், கடுமையான வேலைப் பளுவையும் தாங்க முடியுமா? அவன் எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு நோயாளியைப் போலவே இருக்கானே! அங்கே போய் அவனுக்கு ஏதாச்சும் உடம்பு முடியாம போனா ஃப்ராஜெக்ட்டே வீணாகிடும் என்று மறுத்துவிட்டார்.

இறுதியில், ராகவனைவிடக் குறைந்த திறமையுடைய, ஆனால் இரும்புத் தூணைப் போலச் சுறுசுறுப்பாக இருந்த மற்றோர் ஊழியருக்கு அந்த அமெரிக்க வாய்ப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட்டன. செய்தி அறிந்த ராகவன் அதிர்ந்து போனான். இத்தனை காலம், தான் சுகமாக இருக்க நினைத்து ஏந்திய ‘அனுதாபம் என்ற ஆயுதம், இன்று தன் எதிர்காலத்தையே பதம் பார்த்துவிட்டதை அவன் உணர்ந்தான்.

அலுவலகத்தில் எப்போதும் போல அவனுக்குத் தேநீர் கொண்டு வரும் ஊழியர் வழக்கம்போல அதே அனுதாபத்தோடு, “தம்பி, முகம் ரொம்ப வாடிப் போயிருக்கு. உடம்பு சரி இல்லையா? நீங்க பேசாம இன்னைக்கும் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமே என்றார்.  ஆனால், இன்று அந்த வார்த்தைகள் ராகவனின் காதில் ஈட்டி போலப் பாய்ந்தன. போலி நிழலில் ஒதுங்க நினைத்தவன், இன்று உண்மையான சூரிய அஸ்தமனத்தை இழந்து பரிதாபமாக அமர்ந்திருந்தான்.

சாட்பிஃசிங் (Sadfishing) என்பது சமூக ஊடகங்களில் மற்றவர்களின் அனுதாபம், கவனம் அல்லது ஆதரவைப் பெறுவதற்காக ஒருவர் தனது மனக்கவலை அல்லது தனிப்பட்ட துயரங்களை மிகைப்படுத்திப் பதிவிடும் செயலாகும். இந்தச் சொல் 2019-ஆம் ஆண்டில் ரெபேக்கா ரீட் (Rebecca Reid) என்பவரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட பிரச்சினைகளை மிகைப்படுத்தியோ அல்லது பொய்யாக உருவாக்கியோ மற்றவர்களின் பரிதாபத்தையும் லைக்குகளையும் கவனத்தையும் ஈர்க்கும் செயலை அனுதாபத் தூண்டில் அல்லது சாட்பிஃசிங் என்கின்றனர்.

சாட்பிஃசிங் செய்பவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மருத்துவ ரீதியான மனச்சோர்வு அல்லது பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. குடும்பம் அல்லது நண்பர்களிடம் நேரடி ஆதரவு கிடைக்காத இளைஞர்கள் (சுமார் 60%) சமூக ஊடகங்களை ஒரு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர்.

ஆண்களைவிட பெண்கள் தங்கள் உணர்ச்சிகரமான போராட்டங்களைச் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிர்ந்துகொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சாட்பிஃசிங் என்பது ஒரு கவனத்தை ஈர்க்கும் செயல் மட்டுமல்ல; அது தீர்க்கப்படாத மன உளைச்சலின் ஓர் அறிகுறியுமாகும்.

பல நேரங்களில் மக்கள் உண்மையான மன உளைச்சலில் இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் அது வெறும் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் செய்யப்படலாம். ஒரு பதிவு உண்மையான உதவியை நாடுகிறதா? அல்லது வெறும் அனுதாபத்தைத் தேடுகிறதா? என்பதை நிதானமாகத் தீர்மானிக்கவேண்டும்.

இணையத்திற்கு வெளியே உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மனக்குறைகளைப் பகிர்ந்துகொள்வதே சிறந்தது (Offline support). சமூக ஊடகங்களில் கிடைக்கும் தற்காலிக ஆதரவு நீண்டகால மனநலத்திற்குப் பயன் தராது என்பதை உணரவேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கையின் மிக நெருக்கமான துயரங்களைப் பொதுவெளியில் பகிரும்போது ஏற்படும் ஆபத்துகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். மன அழுத்தம் அல்லது தனிமை அதிகமாக இருந்தால், சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்குப் பதிலாக முறையான ஆலோசகர்கள் (Counselors) அல்லது மருத்துவர்களிடம் உதவி பெறுவதே சரியான தீர்வாகும். உண்மையான அங்கீகாரம் என்பது சும்மா எல்லாரும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதில் இல்லை; யாரும் பார்க்காதபோது நாம் காட்டும் உழைப்பிற்கும், நம்முடைய தகுதிக்கும் மற்றவர்கள் தரும் மரியாதையில்தான் இருக்கிறது.