எண்ம (டிஜிட்டல்) தனிநபர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் 2025-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தங்கள்
தரவுகளைக் குடிமக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் வழிவகை செய்கின்றன. அத்துடன் இணையத்தில் அவர்களின் தன்மறைப்பு நிலையைக் (பிரைவசி) காக்க வேண்டும் என்பதும் இந்த விதிமுறைகளின் நோக்கமாக உள்ளது.
தனிநபர்
தரவுகள் தொடர்பாக நிறுவனங்கள் கடுமையாகப் பின்பற்றவேண்டிய கால அட்டவணையையும் இந்த விதிமுறைகள் தெளிவாக வரையறுத்துள்ளன. இந்த விதிமுறைகள் 12 முதல் 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக நடைமுறைக்கு வரும்.
இது
தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023-ஆம் ஆண்டின்
தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளின்படி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் எதற்காகத் திரட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக விளக்கி, அதற்குச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து எளிமையான முறையில் ஒப்புதல் பெறுவதற்கான நோட்டீசைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் (ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்கள், கூகுள், விளையாட்டுச் செயலி நிறுவனங்கள் போன்றவை) வெளியிடவேண்டும்.
தனிநபர்
ஒருவரின் தரவு கசிந்தால், அது குறித்து அந்த நபருக்குத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் முறைப்படி எளிமையான மொழியில் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தரவு கசிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டியவரின் விவரங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்தத்
தரவுகளைக் கையாள்வது தொடர்பான சந்தேகங்கள் குறித்து, தனிநபர்கள் கேள்வி எழுப்புவதில் உதவ, தரவுப் பாதுகாப்பு அதிகாரி அல்லது பிரத்யேக அதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கான விவரத்தைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் தெளிவாகத் தெரியப்படுத்தவேண்டும்.
90 நாள்களில் பதில்: தங்களைப் பற்றிய தரவுகளைத் தனிநபர்கள் அணுகுதல், பிழைகளைத் திருத்துதல், புதுப்பித்தல் அல்லது அளிக்கும் உரிமை, அந்த உரிமையைத் தங்கள் சார்பாகப் பயன்படுத்த மற்றொருவரை தனிநபர்கள் நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு அதிகபட்சமாக 90 நாள்களுக்குள் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் பதிலளிக்கவேண்டும்.
தரவுப் பாதுகாப்பு
வாரியம்:
இணைய வழியில் பிரத்யேக தளம், கைப்பேசி செயலி மூலம் தங்கள் தரவுகள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் அளிக்கவும், அந்தப் புகார்கள் மீதான நடவடிக்கை இந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பின்தொடர உதவும் வகையிலும், முழுமையான எண்ம நிறுவனமாகத் தரவுப் பாதுகாப்பு வாரியம் செயல்படும். இந்தப் புகார்கள் தொடர்பான முடிவுகளுக்கு எதிராகத் தொலைத்தொடர்பு சச்சரவுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (டி.டி.எஸ்.ஏ.டி.) மேல்முறையீடு
செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த
விதிமுறைகள் மூலம், தங்கள் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை எந்த நேரத்திலும் இரத்து செய்யும் அதிகாரம் தனிநபர்களுக்குக் கிடைக்கும். விளம்பரம் அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அமைப்புகளைப் பொதுமக்கள் தவிர்க்கவும், எந்தவோர் எண்ம வழியிலும் அவர்களின் தனிநபர் தரவு, காணொளி மற்றும் குரல் பதிவை அனுமதியின்றிப் பெறுவதைத் தடுக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தரவு கசிவின் தன்மையைப் பொறுத்து அதற்குத் தரவுப் பாதுகாப்பு வாரியம் அபராதம் வசூலிக்கவும் இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
சட்ட நடவடிக்கை:
தனிநபரின் அனுமதியில்லாமல் அவரின் கைப்பேசி எண் கசிந்து தேவையற்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை எந்த நிறுவனம் கசியவிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, அது குறித்துச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விதிமுறைகள் உதவும்.
நீதிமன்ற உத்தரவுகளை
நடைமுறைப்படுத்துதல்:
ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சூழல்களில் பொதுமக்களுக்கு உள்ள உரிமையை இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன.
மூன்று ஆண்டுகள்
பயன்படுத்தாமல்
இருந்தால்:
பயநராக உள்ள தனிநபர்கள் தங்கள் கணக்கை மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அவர்களின் தனிப்பட்ட தரவை இணையவழி வர்த்தக நிறுவனங்கள், இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்கள் அளிக்கவேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஹார்ன்’ சத்தம், காலை வெப்பம், கடுத்திருக்கும் முகங்கள், கலைந்திருக்கும் முடிகள், புகை கக்கும் வாகனங்கள், புழுதி கிளப்பும் மனித பெருமூச்சுகள்.... என்று சென்னை மாநகரம் வழக்கம் போலவே விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மெட்ரோ இரயில் பணிகளினால் குறுகிய வாடிவாசலிலிருந்து வெளியேறும் கட்டுக் கடங்கா காளைகளைப்போல, சிலர் குறுகிய பயணப்பாதையில்கூட முண்டியடித்துக் கொண்டு வாகனங்களை ஓட்டிச்சென்றனர். எங்கும் பரபரப்பு என்னும் கொடிய வியாதி எல்லாரையும் தொற்றிக்கொண்டதாகவே தெரிந்தது.
இத்தகைய
கூட்ட நெரிசலில் பெண் ஒருத்தி இருசக்கர வாகனம் ஒன்றில் தன் ஆறு வயது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அப்பெண்ணின் மகள் புதிய டிரஸ் அணிந்திருந்தாள். இன்று அவளுக்குப் பிறந்த நாளாக இருக்கக்கூடும். தனது பிறந்தநாளில் தன்னோடு படிக்கும் குழந்தைகளுக்கு ‘சுவீட்ஸ்’
கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சாக்லேட் பாக்ஸ் ஒன்றைக் கையில் வைத்திருந்தாள்.
அவர்கள்
டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த ஒருவன் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை மோதித்தள்ளினான். கீழே தூக்கிவீசப்பட்ட அச்சிறுமி பலத்த காயங்களுடன் சாலையில் இரத்த விரிப்பின் மேல் நினைவற்றுக் கிடந்தாள். அவளின் கைகளிலிருந்த சாக்லேட் சாலையெங்கும் சிதறிக் கிடந்தன. இதற்கிடையில் பைக்கிலிருந்து இறங்கிய அந்த முரட்டு உருவத்திற்குச் சொந்தக்காரன் அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைத் தன் இரும்பு கையால் பலவந்தமாக இழுத்துப் பறித்தான். எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியாததால் தன் தங்கத்தாலியைப் பறிகொடுத்தாள் அந்தப் பெண்.
கீழே
விழுந்துகிடந்த அந்த ஆறு வயது சிறுமி திமிறிக்கொண்டு எழுந்து, அந்தத் திருடனின் விரலை இறுக்கமாகப் பிடித்துக் கடித்தாள். வலி தாங்காமல் அவள் தலையில் வேகமாக அடித்து அவளைத் தன் காலால் எட்டி உதைத்தான் அந்த முரடன். காலில் உதைபட்ட பந்துபோலத் தூரமாகப் போய் விழுந்தாள் அச்சிறுமி. பைக்கில் வந்த அந்த உருவம் வந்த பைக்கிலேயே தப்பித்துச்சென்றது.
ஊசியின்
காதில் நூல் கோர்க்கும் நேரத்திற்குள் எல்லாம் வேகமாக நடந்து முடிந்திருந்தது. உடைந்து போன தன் இடது காலை இழுத்துக்கொண்டே மூச்சற்றுக் கிடந்த தன் மகளின் அருகில் சென்று கதறி அழுதாள் அந்தத் தாய். தன் மகளின் பிறந்தநாளே அவளுக்கு இறப்பு நாளாகியது. தங்கத்தாலியைத் திருடிச்சென்ற அந்தத் திருடனின் சுண்டுவிரல் இறந்துபோன அச்சிறுமியின் வாயில் இருந்தது.
இவ்வளவு
நடந்தபிறகும் அந்தச் சிறுமிக்கு இருந்த தைரியம் யாருக்குமில்லை. கூடியிருந்தவர்கள் யாரும் தடுத்து நிறுத்தவில்லை; தட்டிக் கேட்கவுமில்லை. ஒருசிலர் ஓடிவந்து உதவி செய்தனர். வேறுசிலர் நடந்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் தங்கள் செல்போனில் நடப்பதைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். இதைவிடக் கொடுமை என்னவெனில் சிலர் அங்குச் சிதறிக்கிடந்த சாக்லெட்டையும் பொறுக்கிச்சென்றனர்.
டிராபிக்
சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்குக் குரங்காய் தாவியது. அங்குக் கூடியிருந்தவர்களில் பலரும் உடனடியாகக் கலைந்து சென்றனர். அவர்களில் பலரும் அந்த முரட்டுத் திருடனின் முகமூடியையே அணிந்திருந்தனர் என்று தோன்றியது.
உலகின்
போர்களாலும் தீவிரவாதத் தாக்குதல்களாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது மகளிரும், சிறுவர்-சிறுமியருமே என்கிறது ஐ.நா. சபை.
அதேபோல நாட்டின் ஊழல்வாதிகளாலும் இலஞ்சப் பெருச்சாளிகளாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இளையோரே எனலாம். சிலர் நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்கின்றனர். ஒருசிலர் ‘அது நமது வேலை அல்ல’ என்று சாகும் வரை பார்வையாளர்களாகவே இருந்துவிடுகின்றனர். தட்டிக்கேட்கின்றவர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இலஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவதோடு, அவர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.
சில
காலங்களுக்கு முன்பாக ஏழை எளியவர்கள் இதனாலேயே பேச்சற்ற சமூகமாக இருந்து வந்தனர். பெரும் ஊடகங்களின் விசுவரூப வளர்ச்சியினால் சாமானிய ஊடகங்கள் உயிரிழந்து காணப்பட்டன. பெரும் வெகுசன ஊடகங்கள் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கைகளிலேயே இருந்தன. அவர்கள் சொல்லும் கருத்துகளே பேசுபொருள் ஆயின. நாம் எதைச் சிந்திக்கவேண்டும் என்று அவர்கள் வரையறுக்கிறார்களோ, அதுவே ஊடக விவாதங்களாயின.
இன்றும்
அத்தகைய சூழல் இல்லாமல் இல்லை. ஆயினும், சமூக ஊடகங்களின் வரவிற்குப் பிறகு ஒவ்வொரு மனிதனும் ஓர் ஊடகவியலாளர் ஆனான். கண்முன் நடக்கும் அநீதிகளைப் படம் பிடித்து உலகிற்கு வெளிப்படுத்தினான்.
சமூக
ஊடகங்களில் வெளியாகும் அடித்தள மக்களின் பிரச்சினைகள், ஊழலுக்கு எதிரான, அதிகாரப்போக்கிற்கு எதிரான கருத்துருவாக்கங்கள் சமூக ஊடகங்களின் விவாதப்பொருளாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மாற்றங்களுக்கு வழிவகுத்தன. அண்மையில் நேபாளத்தில் எதிரொலித்த ‘Gen Z’ புரட்சியை எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.
நேபாளத்தில்
நிலவிய சமூகச் சீர்கேடுகளை, அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் குழந்தைகளுடைய சொகுசு வாழ்க்கைமுறையை இளையோர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர். மேலும், அதிகாரிகளின் ஊழல் போக்கை இளையோர் சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ‘டிஸ்கார்ட்’ (Discord) மற்றும் ‘பிட்சாட்’(Bitchat) போன்ற புதியவகைத்
தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர். இதனை எதிர்கொள்ள முடியாத அரசு, அந்நாட்டில் பத்திற்கு மேற்பட்ட சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கின்றது.
இச்செயல்
அந்நாட்டு இளையோரை மேலும் கோபமடையச் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்கள், வன்முறை நிகழ்வுகள், துப்பாக்கிச் சுடுதல்கள் அரங்கேறுகின்றன. இரு பதிற்கும் மேற்பட்டவர்கள் இவ்வன்முறைச் செயல்களினால் உயிரை இழந்திருக்கிறார்கள். அந்நாட்டின் பிரதமர் தன் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். சமூக ஊடகங்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டிருக்கின்றது.
இளையோர்
சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பல்வேறு சான்றுகளோடு உறுதியாகக் கூறமுடியும்.
2011-இல் எகிப்தில்
நடந்த ‘வீ ஆர் ஆல்
காலேத் செட்டு போராட்டம்’
(We Are All Khaled Said Protest), 2012-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ‘ஐ ஆம் நம்பர்
132 போராட்டம்’ (‘I am Number 132 Protest),
2014-இல் ஹாங்காங்கில் நடைப்பெற்ற ‘குடை போராட்டம்’
(The Umbrella Movement), 2013-ஆம்
ஆண்டு துருக்கியில் நடைபெற்ற ‘டு நாட் டச்
மை இண்டர்நெட் போராட்டம்’
(Do not Touch my Internet Protest), 2010-இல் அரபு நாடுகளில் பற்றியெரிந்த ‘அரபு ஸ்பிரிங் போராட்டம்’
(Arab Spring Protest), 2014-இல்
தைவானில் நடைபெற்ற ‘சூரியகாந்தி போராட்டம்’
(The Sunflower Protest), இந்தியாவில்
2017-இல் தமிழ்நாட்டில் நடந்த மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம், 2020-இல் ஹத்ராஸ் போராட்டம், டெல்லி பெண் கூட்டுப்பாலியல் சீண்டலுக்கு எதிரான போராட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
சமூக
ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல, போராட்டத்திற்கான ஆயுதம். அதனைச் சரியாகப் பயன்படுத்தும்போது அது சமூக மாற்றத்தைக் கொணர்கிறது என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் 2031-இல் பா.ச.க. ஆட்சியென ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கனவு காண்கிறது. அதற்கான சதுரங்க விளையாட்டின் ஆட்டக் காய்களை வேகமாக நகர்த்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் இலக்கை அடைய அ.தி.மு.க.வை வளைத்துவிட்டது. கரூர் துயரச் சம்பவங்களுக்குப் பின்பு த.வெ.க.வும் தானே வலையில் விழுந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலகால நஞ்சு தமிழரின் மூச்சுக்குழலை நெருக்கும் வலைப் பின்னல் வழி இறுகுகிறது.
இனி
திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழ்நாடு, ஊழலில்லாத தமிழ்நாடு, புதிய மாற்றம் என்ற பிரச்சாரங்கள் சங்பரிவார் அமைப்புகளால் விதைக்கப்படுகின்றன. ‘நடுநிலையாளர்கள்’ என்ற
போர்வையில் மெத்தப் படித்தவர்களும் திரைத்துறையினரும் ஊடகங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக அதையே திரும்பத் திரும்ப ஊதுகின்றனர். நடிகர் ரஜினி அன்று, அரசு இயந்திரச் செயல்பாட்டு முறைகளில் மாற்றம்வேண்டும் என்றார். பின்பு அவரே மாறிப்போனார்.
வருமான
வரிப் பிரச்சினைகளில் மாட்டிய நடிகர் விஜய் அவர்களை, வருமான வரித்துறை அதிகாரியே
காப்பாற்றிய அதிசயம் நடந்தது. திரைமறைவில் வருமான வரித்துறை அதிகாரி விஜய்யின்
அரசியல் ஆசைக்குத் தூபம் போடுகிறார். மறைமுக அரசியல் ஆலோசனைகள் வழங்குகிறார். ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் விருப்ப ஓய்வு கொடுத்த மறுநாளே த.வெ.க.வில் சேர பணிவிடுப்பு செய்யும் அதிசயம் நடந்தது. எந்த ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரியும் ஒரே நாளில் பணி விடுப்புச் செய்யப்படுவதில்லை என்பது வரலாறு.
அருண்ராஜ்
அவர்கள் த.வெ.க.
கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்குக் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி தரப்படுகிறது. அவர் அப்பொழுது அளித்த நேர்காணலில், அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து, மக்கள் பெறுகிற சலுகைகள் குறித்து எதிர்க்கருத்தை வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக, கரூர் துயரச் சம்பவங்களுக்குப் பின்னான த.வெ.க.
சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், “தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்படும் ரூபாய் 1000-த்தை விட்டுக்கொடுங்கள்” என்று
தமிழ்நாட்டு மகளிருக்கு விஜய் முன்நின்று வேண்டுகோள் வைக்கிறார்.
கொஞ்சம்
பின்னோக்கிப் போவோம். த.வெ.க.
தலைவர் நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கார்’
திரைப்படம்
2018-இல் வெளிவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ‘கோமளவல்லி’,
‘கருவிலே நான் வில்லி’ எனக் கடுமையான
தன் பழைய பகை சாடலுடன் காட்சிகள் திரையில் விரிகின்றன. நடிகர் விஜய் தானொரு ‘கார்ப்பரேட் கிரிமினல்’
என வசனம் பேசுவார். ‘சர்க்கார்’ திரைப்படத்தில்
கதாநாயகனின் வீர வசனங்களால் பொதுமக்கள் அரசின் இலவசப் பொருள்களைத் தெருவில் வீசி எரிப்பதாகக் காட்சிகள்
இருக்கும். த.வெ.க.
தலைவரின் திரைக் காட்சிக்கும், த.வெ.க.
கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அவர்கள் பேச்சிற்கும் பொருந்திப் போகிறது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து விதைப்பு அல்லவோ!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரலாற்று ரீதியாக ஜனரஞ்சக
மற்றும் பொது நீதியின் அடிப்படையில் பொறுப்பற்ற இலவசங்களை அரசுகள் வழங்குவதை விமர்சிக்கிறது. ஒன்றிய மோடி அரசு, மாநில அரசுகளின் இலவசங்கள் குறித்து அடிப்படை ஆர்.
எஸ்.எஸ். பார்வையில் அதிருப்தி அடைகிறது.
மாநில அரசுகளின் இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி அவர்களும், நிதி
அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்களும் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கிறார்கள். பீகார் தேர்தலில் மகளிர் தொழில் தொடங்க ரூபாய் 10,000 வழங்கி ஓட்டு திருடினர். இந்தத் திருட்டு
மகாராஷ்டிரா மாநிலத்திலும் அரங்கேறியது என்பதே பா.ச.க.வின் வெற்றி வரலாறு.
பா.ச.க. சார்ந்த
வழக்கறிஞர் மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் செல்கிறார். அது தி.மு.க.,
ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள், அது சார்ந்த இலவசங்கள் சார்ந்தது. உச்ச
நீதிமன்றம், அது தேர்தல் ஆணைய வரம்புக்கு உட்பட்டது என்றும், அது மக்கள் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை உரிமை என்பதால் தாம் தலையிட இயலாது என பின்வாங்கிவிட்டது. இது சுதந்திரமான
மற்றும் நியாயமான தேர்தல்களைச் சீர்குலைக்கிறதா? என்பதை
மறுபரிசீலனைக்குட்படுத்த
வேண்டும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை கூறியது.
இந்தியப்
பொருளாதாரம் அடிப்படையில் விவசாயம் மற்றும் கிராமப்புறங்கள் சார்ந்தது. விவசாயம் பருவகாலத் தொழில் என்பதால், விவசாயக்கூலிகள் பலன்பெற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் உள்ளது. இது கிராம மராமத்து வேலைகளை
அடிப்படையாகக் கொண்ட நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படுகிறது. இது இந்திய தேச மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தது.
நம்
நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில்,
ஏன் ஐரோப்பிய நாடுகளில்கூட பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறது. மக்களிடையே பணப்புழக்கம்
குறைகிறது. மக்களின் கைகளில் காசு இல்லை. அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சிட்டு, பொதுமக்களின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடும். இதற்கு
‘ஹெலிகாப்டர் மணி’ என்ற பெயர் உண்டு. ஏன், செல்வச் செழிப்பான அமெரிக்காவில், அரசு வழங்கும் உணவு அட்டை வழியாகப் பசியாறுபவர் ஆயிரமாயிரம் வறிய மக்கள்.
இந்தியாவில்
இதுபோன்ற இலவசத் திட்டங்களால் வறுமைக்கோட்டிற்கு உள்பட்டோரின் எண்ணிக்கை 27.1-லிருந்து 5.3 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. த.வெ.க.
கட்சி பா.ச.க.
குறித்தும், சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்தும் மென்மைப் போக்கும் குறியீடு அரசியலும் நடத்துகிறது.
அட்டைக்கத்தி ஆட்டம் நடத்துகிறது. ‘நாம் தமிழர் கட்சி’ போல, த.வெ.க.
கட்சியும் இலவசங்கள் குறித்து எதிர்க்கருத்து கொண்டதா? என்பதை அறிவிக்கவேண்டும். த.வெ.க.வின் செயல் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையவேண்டும். ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைத் த.வெ.க.வினர் ஏன்
வழிமொழிகிறார்கள் என்ற விளக்கம் தமிழ்நாட்டு மக்களால் கேட்கப்படுகிறது.
த.வெ.க. என்பது
தமிழ்நாட்டுச் சிறுபான்மையினரின்
வாக்குகளைப் பெற ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற
குற்றச்சாட்டு உண்டு. த.வெ.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளான பொருளாளர், இணைப் பொதுச்செயலாளர், தேர்தல் மேலாண்மைச் செயலாளர் என அனைவரின் மீதும்
ஆர்.எஸ்.எஸ். காவிச்சாயம் பூசப்படுகிறது. த.வெ.க.
தன்னை ஒரு திராவிடக்
கட்சி என்றும், ‘எல்லாருக்கும் எல்லாமுமான சமூகநீதி’
என்பதாகத் தன்னைக்
காட்டியது. ஆனால்,
செயல்பாட்டு ரீதியில் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டங்களை ஆதரிப்பது, த.வெ.க.
மீதான ஆர்.எஸ்.எஸ். சார்பு ஐயப்பாட்டை உறுதி செய்வதாகும்.
தமிழ்நாட்டு
வாக்கு அரசியல் என்பது எளியோருக்கான, சிறுபான்மை மக்களுக்கான, சமூக நீதிக்கான அரசியலாகும். சமூகநீதியைப் புறந்தள்ளுபவர்களை தமிழ்நாட்டு மக்களும்
புறந்தள்ளுவர். இந்த நியதி பா.ச.க.வுக்கு மட்டுமல்ல, த.வெ.க. வுக்கும்
பொருந்தும்.
சனநாயகச் சரிவுப் பணியில் ‘அடையாள அரசியலின் பங்கு என்ன?’ என்பது பற்றிய ஆய்வுகள் நிறையவே வந்துள்ளன; வருகின்றன. அடையாள அரசியலின் உள்ளார்ந்த சனநாயகமற்ற போக்கு, இந்துத்துவர்களின் அரசியல் நடவடிக்கையில் பெரும் இடத்தையும், இவ்வரசியல் சிதைக்கும் சனநாயகப் பண்புகளையும் இந்துத்துவ வகுப்புவாத அரசியலை உற்றுநோக்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவில்
மத ரீதியான வகுப்புவாத அரசியல் என்பது மதத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. மதம் எனும் அடையாளம் மட்டுமே வகுப்புவாத ரீதியில் மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக உள்ளது. மதம் தொடர்பான அனைத்து அடையாளங்களும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு, கேட்போர் காதுகளில் வேத மந்திரமாக உருவேற்றப்படுகிறது. அடையாள அரசியலின் உருவாக்கத்தில் அடையாளங்கள் (Symbols) வகிக்கும்
பங்கை ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இந்துத்துவர்கள்
இவ்வடையாள வழி தம் கருத்தியலை மக்கள் மனத்தில் உருவேற்ற மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளமையும், அவர்கள் கண்ட வெற்றியும் மிகப்பெரிது. இராமன் என்றும், அயோத்தி என்றும், இராம சென்ம பூமி என்றும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கச் செய்ததை நாம் அறிவோம். இராமன் எனும் நாமம் வெறும் உச்சரிக்கப்பெறும் நாமமாக மட்டுமல்லாமல், இராமனைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியலுக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இராமன் எனும் ஒரு பெயரைச் சுற்றி ஐந்து ஆண்டுகளாக நம் வீடுகளில் தினமும் உலாவந்த இராமாயணம் வெறும் திரைக்காட்சியல்ல; அது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட ஓர் அரசியல் பிம்பம்.
‘இராமாயணம்’
எனும் திரைத்தொகுப்பு மக்கள் மனத்தில் உருவேற்றப்பட்ட பின்பு இராமனுக்கான ஆலயம் உறுதியாயிற்று; திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பாபர் எனும் தீயபிம்பம் அளிக்கப்பட்டமை மக்களிடம் எந்தவிதக் கசப்புணர்வையும் உருவாக்கவில்லை; இனியும் உருவாக்காது.
குடிமக்களும்
அடையாளங்களும்
குடிகள்
உரிமை மறுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, உரிமை மானுடருக்கான இயல்பான கவசம் என்ற அடிப்படை அறிவே இல்லாதவர்கள். ஆனால், இக்குடிகள்தான் நாம் அனைவரும் உரிமை பெற்ற குடிமக்களாக உருமாற போராடி வெற்றி பெறத் துணை நின்றவர்கள். முடியாட்சியைத் தகர்த்து, குடியாட்சி எனும் சனநாயக ஆட்சிக்கு வித்திட்டவர்கள். உலகில் தோன்றிய அரசியல் வரலாற்றில் சனநாயக அல்லது குடிமக்களின் ஆட்சியே உயர்வானது என்று கருத இதுவே காரணமாகிறது.
குடிமக்களும்
அடையாளமும்
குடிமகன்
அல்லது குடிமகள் என்ற ஒற்றைச் சொல் மிக ஆழமான விழுமியத்தை உள்ளடக்கியது. குடிமக்கள் சனநாயக அரசின் சமத்துவ உரிமை பெற்றவர்கள். சமத்துவமே இவர்தம் பொது அடையாளம். இந்தியா விடுதலை பெற்று சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டு, சனநாயகக் குடியரசைக் காக்கும் வகையில், இந்திய தேசியத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டம் ‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்ற முதன்மை வாசகத்தோடு தொடங்குவதன் செம்மையை நாம் கவனிக்கத் தயங்குதல் கூடாது. ‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’
- ‘நாம்’ என்ற
சொல் உள்ளடங்கிய ஒன்று (inclusive). ‘குடிமக்கள்’ எனும்
பன்மைச் சொல்லும் உள்ளடங்கியதே. இந்தியக் குடிமக்களாகிய நாம் இந்நாட்டைச் சனநாயக சமன்மையுடைய, சமயச்சார்பற்ற இறையாண்மையோடு கூடிய குடியரசாக அறிவிக்கிறோம் (Republic). இந்தியக்
குடிகள் ‘குடிமக்கள்’ எனும்
கவசம் தரித்து ஒன்றுபட்டவர்களாய், ஒருமனப்பட்டவர்களாய் பேதமின்றி அறிவித்த உரிமைப் பெட்டகமே அரசமைப்பு உரிமைச் சட்டம்.
குடிமக்கள்
சனநாயக அரசில் சமமானவர்கள். சமத்துவமானவர்கள். சனநாயக அரசு அளிக்கும் அரசியல் சனநாயகத்தைக் காக்கும் வகையில் ‘ஒரு நபர் ஒரு வாக்கு’ என்ற உத்தரவாதமும் குடிமக்களுக்கான பெருமையே. இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வி என்னவெனில், பன்மைச் சமூகம் ஒன்றில் வாழ்கின்ற குடிமக்கள், குடிமக்கள் என்ற கவசம் பெறுதலால் அவர்களுக்கென ஏற்கெனவே இருந்த அடையாளங்களை இழந்துவிடுவரா? குடிமக்கள் என்ற நாமத்தைப் பெறுகின்றபோதே அவர்கள் ஏற்கெனவே ஏற்றிருந்த அடையாளத்தை இழந்துவிடுவரா? இக்கேள்விகள் இன்றைய இந்துத்துவ மதவாத அரசியல் போக்கில் இந்தியக் குடிமக்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்.
சனநாயகம்
உத்தரவாதப்படுத்திய குடிமக்களுக்கான குடியுரிமை, குடிமக்களின் தெரிவு செய்யும் உரிமையை (Power of Choice) உத்தரவாதப்படுத்துகிறது. குடிமக்கள் சமமானவர்கள் என்றாலும், அவர்கள் ஒற்றைப் பண்புடையர் அல்லர். ஒரே அடையாளத்தைக் கொண்டவரும் அல்லர். குடிமக்கள் இனம், மொழி, மதம் எனும் அடையாளங்களால் வேறுபட்டவர்கள். வேறுபட்ட அடையாளத்தைக் கொண்ட இக்குடிமக்கள் ஒற்றைக் குணமுடையவர் அல்லர். சனநாயகம் தந்த குடியுரிமை குடிமக்களின் தனித்த அல்லது வேறுபட்ட பண்புகள். இதை மறுக்க முடியாது.
இந்தியக்
குடிமக்கள் ஒரு தமிழராக, கிறித்தவராக அல்லது ஏதோ ஒரு மதம் அல்லது மொழி அல்லது இனம் சார்ந்தவராக இருக்க உரிமையுண்டு. குடியுரிமை குடிமக்களின் பண்பாட்டுரிமையை மறுக்கக்கூடாது. குடிமக்கள் சமமானவர்கள். ஆனால், வேறுபட்டவர்கள். வேறுபடுதல் அடிப்படை மனித உரிமை (Right to be different). இனம்,
மொழி, மத அடிப்படையிலான அடையாளங்களைத்
தக்கவைத்தல், தனித்த அடையாளங்களைப் பேணுதற்கான போராட்டம் என்பது பிரிவினைக்கான போராட்டமல்ல; தனித்தன்மையைக் காப்பதற்கான போராட்டமே.
இந்தியக்
குடிமகனாக ஒருவர் தன்னை ஏற்றுக்கொள்வதால், குடிமகன் சார்ந்த அடையாளத்தைக் காவுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாட்டின் குடிமகனின் தனித்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றபோது, அந்நாட்டைத் தன் அடையாளமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
என்னுடைய
மொழி அல்லது இனம் அல்லது மதம் சார்ந்த அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படுமானால்
அல்லது மறுக்கப்பட்டு ஒற்றை அடையாளத்துள் முடக்கப்படும் சூழல் உருவாக்கப்படுமானால் ‘நான் இந்தியன்’
எனும் அடையாளத்தையும் மறுக்கத் தயங்கமாட்டேன். இது சனநாயகம் வழங்கிய குடியுரிமைக்கான இலக்கணம்.
இந்தியர்கள்
இந்தியராக வாழ வேண்டுமெனில், இந்துகளாகவே இருக்கவேண்டும் என்ற இந்துத்துவர்களின் கொள்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்ற மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு மேற்கண்ட தெளிவு வேண்டும்.
இந்தியரை
இந்துகளாக மட்டும் சுருக்கி, இந்தியாவை அல்லது இந்துவை விமர்சிப்பதைத் தேசத்துரோகமாகக் கட்டமைக்கும் கருத்தியலின் அடையாள அரசியலுக்குள் மறைந்திருக்கும் உரிமை மீறலைக் கண்டுகொள்ள
வேண்டுவது நம் கடமையாகும்.
மத
அடையாளத்தால் வேறுபட்டவர்கள், ‘இந்தியர்’
என்ற அடையாளத்துள் அடங்கார் என்ற இந்துத்துவ முன்னோடிகளான கோல்வால்க்கரும் சவார்க்கரும் கூறிவந்தமையை அறிவோம். இந்திய நாட்டின் துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி அவர்கள் கிறித்தவர், இசுலாமியர் என்ற அடையாளங்களை மறுத்து, இந்தியாவில் வாழும் இசுலாமியர் ‘இந்து இசுலாமியர்’ (Hindu Muslims), கிறித்தவர் ‘இந்து கிறித்தவர்’ (Hindu Christian) என்பவராகத்தான் இருக்கமுடியும் என்ற புதிய அடையாளத்தை வழங்கத் தொடங்கினார். இது தனித்த அடையாள மறுப்பு. வெறும் அடையாள மறுப்பு மட்டுமல்ல, குடிமக்களின் அடிப்படை அடையாள மறுப்பும் ஆகும். இந்து என்ற அடைமொழியோடுதான் இந்திய சனநாயகம் வகுத்த குடிமக்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்பது கேவலமான ஒரு நடவடிக்கை அல்லாமல் வேறு என்ன?
1948-இல் ஐக்கிய
நாட்டவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு உருவான அகில உலக மனித உரிமைப் பிரகடனம் குடிமக்களின் அடிப்படை அடையாளம் பற்றிப் பேசியது. இப்பிரகடனம் குடிமக்களின் இயல்பான அடையாளங்களை அங்கீகரித்த நிலையில் இனம், மொழி, தேசிய இனம், மதம் எனும் அடையாள அடிப்படையில் குடிமக்கள் எவரையும் பாகுபடுத்துவதை மனித உரிமை மீறலாகப் பிரகடனப்படுத்தியது; ஐ.நா. அவையின்
உறுப்பு நாடுகள் இதை ஒருமனத்தாக ஏற்றுக்கொண்டன; அதில் இந்தியாவும் ஒன்று.
இங்கு என்ன
நடக்கிறது?
மதச்சார்பற்ற
இந்திய சனநாயக குடியரசு மத அடிப்படையில் மக்களை
அணிதிரட்டுகிறது. ஒன்றிய அரசின் அன்றாட நிகழ்வுகள், பரப்புரைகள் அனைத்தும் ஏதோ ஓர் அடையாளத்தை முன்வைத்தே நடத்தப்பெறுகின்றன. அண்மையில் ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக முன்னெடுக்கப்பெறும் சிறப்புத் தேர்தல் திட்டம் மூலம் ஒதுக்கப்பெறும் குடிமக்கள் எப்பகுதியினர்?
ஆந்திர
மாநிலத்தைச் சார்ந்த பிரபாகர் பரகலா அவர்களின் இச்சிறப்புத் திருத்தம் பற்றிய விமர்சனம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்: “ஒன்றிய அரசின் இத்திட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாது, இத்திட்டம் குடிமக்கள் மீது நடத்தப்படும் இரத்தம் சிந்தா இனப்படுகொலை” (Blood loss Political Genocide) என்கிறார்.
ஹிட்லரின்
பாசிசம் யூதர் என்ற அடையாளத்தை முன்வைத்து நடத்தப்பட்ட படுகொலை! அது வெளிப்படையான ஒன்று. ஆனால், இங்கு நடப்பது என்ன? ஊடுருவலாளரைத் தடுக்கவே இந்நடவடிக்கை என்கிறார் உள்துறை அமைச்சர். ஒன்றிய அரசு பேசும் ஊடுருவலாளர் யார் என்பதை நாடறியும். வங்கதேசத்து இசுலாமியரைத்தான் இவர்கள் ‘ஊடுருவலாளர்’ என
அடையாளப்படுத்திக் குறிவைக்கின்றனர்.
வாக்குத்
திருட்டை அம்பலப்படுத்தி வரும் இராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ‘ஊடுருவலாளர்களின்’ ஆதரவைப்
பெறவே இப்பொய்யான பரப்புரையை நடத்துவதாக ஒன்றிய அரசின் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். புல்வாமா, பெகல்காம் மற்றும் அண்மையில் இந்தியத் தலைநகரில் நடந்த குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பெறும் தீவிரவாதிகள் யார்?
புது
தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட உமர் காலித், ஐந்து வருடங்களாகச் சிறைவாசத்திலிருந்து, பிணை வழங்கப் பெறாமல், இறுதியில் சிறையில் மடிந்த ஸ்டான் சாமியின் அடையாளம் எது?
இந்திய
சனநாயகம் வழங்கிய குடியுரிமையை வெறும் அடையாளத்துள் சுருக்கி, ஒதுக்கும் (Exclude) பகை
அரசியல் வழி ஒடுக்கும் இந்திய மதவாத அரசியலைப் புரிந்துகொள்வது இன்றைய தேவை. குடிமக்களின் பன்முக அடையாளங்களைச் சிதைத்து, ஒற்றைமத அடையாளத்துள் குடிமக்களைச் சிறை வைப்பதன் அரசியலைப் புரிந்துகொள்வோம்.
“நான் இந்து மதத்தைச் சார்ந்தவன்; உங்களைப் போலவே நான் பின்பற்றும் மதத்தின்மீது கொண்ட நம்பிக்கையால் ஊக்கம் பெற்றுள்ளேன். பகவத் கீதையைக் கையில் ஏந்தி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யவேண்டும் என்பதே நமக்குக் கற்றுத்தரும் பாடம்”-
ரிஷி சுனக், மேனாள் பிரிட்டிஷ் பிரதமர், ‘தினமணி’,
1.7.2024.
மதச்சார்பற்ற
நாடென்று அறிவிக்காமல், மதச்சார்பின்மையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்ற ரிஷி சுனக், தன் அடையாளத்தை அந்நாட்டில் சமரசம் செய்யவில்லை. இவர்தம் அடையாளத்தை அங்கீகரித்த இங்கிலாந்து நாடு, ‘மதச்சார்பற்ற’ நம்
இந்தியக் குடியரசுக்குத் தரும் பாடம் என்ன?
யார் நல்ல மாணவர்?
நண்பன்
ஒருவனிடமிருந்து அலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அவனின் குரலில் சோர்வு தென்பட்டது. ‘என்ன?’ எனக் கேட்டேன். எனது அந்த
வார்த்தைக்காகக் காத்திருந்ததுபோல், ‘மிகவும் குழப்பமாக இருக்கு; நான் உணவு உண்ணும் நேரத்தைத் தவிர, வேறு எந்த நேரத்தையும் வீணாக்குவதில்லை; முழுமையாகக் கல்விக்கு மட்டுமே செலவழிக்கிறேன்; இருந்தாலும், நினைத்த மதிப்பெண் கிடைப்பதில்லை; இந்தக் கணிதப் பாடம் எனக்குக் குதிரைக் கொம்பாகவே இருக்கு’ என அங்கலாய்த்துக்கொண்டான். அந்த நண்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். சற்றுச் சிந்தித்த நான் அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்: “அதிக மதிப்பெண் வாங்க விரும்புவதன் நோக்கம் என்ன?”
அவன்
கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களிலெல்லாம் 80% மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
சற்று அமைதியாய்ச் சிந்தித்த நண்பன், “ஒரு
மாணவனாய் நான் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லவா!” என்றான்.
“நீ கூறுவது சரிதான்.
ஒருவேளை நீ குறைந்த மதிப்பெண்
எடுத்தால் என்னவாகும்?” என்றேன்.
யோசித்துப்
பதில் சொன்னான், “நான் ஒரு நல்ல மாணவன் அல்லன்” என்று. நான் இந்த ஒற்றை வாக்கியத்திற்காகவே காத்திருந்தேன். எங்கள் உரையாடல் இன்னும் தொடர்ந்தது...
“நீ நல்ல மாணவன்
என்பதைத் தீர்மானிப்பது உன் மதிப்பெண் மட்டுமா?” என்றேன்.
“இல்லை” எனத் திடமாகக் கூறினான்.
“பின்னர் எது நீ ஒரு நல்ல
மாணவன் என்பதைத் தீர்மானிக்கின்றது?” எனக் கேட்டேன்.
எங்கள்
உரையாடல் தொடர்ந்தது. இறுதியாக நாங்கள் பேசி முடிக்கும்போது, அவன் தன்னுள் இந்தக் கேள்விகளோடு விடைபெற்றான்: “எனது தனி மனித அடையாளம் (identity)
எது? என் அடையாளத்தைத் தீர்மானிப்பது எது?”
80 சதவிகிதத்திற்கும்
அதிகமான மதிப்பெண்களை அவன் எடுத்திருந்தாலும், இன்னும் அதிக மதிப்பெண் பெறுவதே அவனது நோக்கமாக இருந்தது. உயர்ந்த மதிப்பெண் பெறும்போதுதான் தான் நல்ல மாணவன் எனக் கருதினான். அவனது புரிதலில், உயர்ந்த மதிப்பெண் பெறுவது மட்டுமே ஒரு நல்ல மாணவனுக்கான அடையாளம், அது கிடைக்காதபோது அவனது அடையாளம் சிதைக்கப்படுகிறது. தன் அடையாளத்தை மீண்டும் பெற ஓய்வில்லாமல் உழைக்கத் தொடங்குகின்றான். அவன் உணவிற்கான நேரத்தைக் கூட வீணடிக்கும் நேரமாகவே பார்த்தான்.
ஒருவேளை,
அவன் இழந்த மதிப்பெண்களை மீண்டும் பெற்றால், ‘நான் நல்ல மாணவன்’ என்ற அடையாளத்தை மீண்டும் பெறுகின்றான். அவ்வாறு அந்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், அந்த மதிப்பெண்ணைப் பெறும் நோக்கோடு ஓடிக்கொண்டே இருப்பான்.
என்
நண்பனது தன் அடையாளத்தை நோக்கிய பயணத்தை நமது பயணத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பலர், ‘வாழ்க்கை முழுசும் ஓடிகிட்டே இருக்கிற மாதிரியே இருக்கு!’ எனச் சலித்துக்கொள்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அங்கலாய்த்துக் கொண்டிருப்போர் பெரும்பாலும் என் நண்பனைப் போலக் குறிப்பிட்ட ஒன்றைத் தங்கள் அடையாளமாக எண்ணி, அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஓட்டம் எதை நோக்கியது? அவர்களுக்கும் இதற்கான பதில் பல நேரங்களில் தெரிவதில்லை.
பின் ஒரு மனிதனின் அடையாளம் எது? அதை எவ்வாறு கண்டு கொள்வது?
எது அடையாளமல்ல?
என்
நண்பனின் எடுத்துக்காட்டிலிருந்து, தனது உயர்ந்த மதிப்பெண் அவனுக்கு அடையாளமாக இருந்தது. உண்மையில் மதிப்பெண் என்பது, ஒருவருடைய கல்வித்திறனை அளவிடும் அளவுதான் அல்லவா! பின்னர், ஓர் அளவீட்டை அடையாளமாகக் கொண்டால், அதன் அளவு மாறும்போது, என் அடையாளமும் நிலையாய் இருக்க வாய்ப்பு குறைவுதான். என் நண்பன் கல்வியின் அளவை அடையாளமாகக் கொண்டிருந்ததுபோல், நம்மில் பலரும் நிலையற்றவற்றை அடையாளமாகக் கொண்டிருக்கின்றோம். சிலருக்கு அது அவர் வகிக்கும் பதவியாக இருக்கலாம்; தனது கல்வித் தகுதியாக இருக்கலாம்; ஒருவருடைய பொருளாதார நிலையாக இருக்கலாம்; சமூக அங்கீகாரம், செய்யும் தொழில் மற்றும் பலவாக இருக்கலாம். நிச்சயம் இவையும் அடையாளங்கள்தாம். ஆனால், மாறக்கூடியவை.
மேற்கூறிய
அடையாளங்கள் யாவும் மாறக்கூடியவை. சில காலங்கள் மட்டுமே நமக்கான அடையாளங்கள். இவை மாறக்கூடிய ஒன்று. நமது நிலையான அடையாளமாகத் திகழும்போது, நாமும் நம் வாழ்நாள் எல்லாம் அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நம் வாழ்வில் நிச்சயம் ஏதேனும் ஒரு சூழலிலாவது, யாரேனும் ஒருவரைப் பார்த்து வியந்திருப்போம்: ‘எப்படி இவர்களால் மட்டும் இவ்வாறு எல்லாச் சூழலிலும் அமைதியாக இருக்க முடிகிறது? இவர்களின் வாழ்வில் எல்லாமே நேர்மறையாக நடக்கின்றனவா? அல்லது இவர்களின் வாழ்வில் நடப்பதைக் குறித்து இவர்கள் எந்தக் கவலையுமே கொள்வதில்லையா?’ இப்படிச் சிலர் இருப்பதற்கு மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது, அவர்களின் அடையாளமாக அவர்கள் கருதுபவை.
எது நிலையான
அடையாளம்?
உளவியல்
ரீதியாக, தனிமனித அடையாளத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, வெவ்வேறு உளவியலாளர்கள், வெவ்வேறு சூழலுக்கேற்ப பல்வேறு புரிதல்களை முன்வைக்கிறார்கள். அவற்றிலிருந்து இரண்டு நமது சிந்தனைக்கு உதவும் என எண்ணுகின்றேன். ஆன்ரி
டஃச்ஃபெல் எனும் உளவியலாளர், “மனிதனுடைய அடையாளம் பல நேரங்களில் ஒருவர்
சார்ந்திருக்கும் சமூகத்தைச் சார்ந்தது”
என்கிறார். சமூகம் என்பதை இனக்குழு, நாடு, மதம், பாலினம் எனப் பரந்த பார்வையோடு அவர் எடுத்துக்கொள்கிறார். ஒருவர் இதுபோன்ற எத்தகைய சமூகக் குழுவைச் சார்ந்திருக்கின்றாரோ, அந்தக் குழுவின் தத்துவயியலை (Philosophy) அல்லது
புரிதலை உள்வாங்கி தன்னுடைய சுய அடையாளத்தைத் தீர்மானிக்கின்றார்.
உளவியலாளர்
கார்ல் ரோசர், மனிதத்தன்மையின் (Self) இரு
வேறு கூறுகளைப் பற்றிப் பேசுகிறார். இலட்சியத்தன்மை (Ideal Self) மற்றும்
உண்மைத்தன்மை (Real Self). இலட்சியத்தன்மை
என்பது, ஒருவன் எவ்வாறு வாழ விரும்புகிறான் என்பதையும், உண்மைத்தன்மை என்பது, ஒருவன் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் குறிக்கும். இந்த இரு தன்மைகளும் ஒன்றித்துப் போகும்போது, ஒரு மனிதன் புத்தன்போல் அமைதியாகிறான். இரு தன்மைகளுக்கும் இடையே இடைவெளி ஏற்படும்போது சலனமடைகிறான்.
ஆன்ரி
டஃச்ஃபெலின் புரிதலின்படி இந்தச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட, ‘அதிக மதிப்பெண் எடுப்பவர்தான் நல்ல மாணவன்’(I’m good, when
I score high) எனும்
புரிதலை உள்வாங்கிய என் நண்பன், அச்சமூகத்தின் புரிதலைத் தனது அடையாளமாக மாற்றிக்கொள்கிறான். கார்ல் ரோசரின் புரிதலின்படி, ‘உயரிய மதிப்பெண் எடுத்தால் நான் நல்ல மாணவன்’ என்பது அவனது இலட்சியத்தன்மை; ஆனால், உண்மை வாழ்வில் அது சாத்தியப்படவில்லை. இங்கு இலட்சியத்தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் இடைவெளி ஏற்படுகின்றது. இந்த இடைவெளி அவனுள் ஒரு மோசமான சலனத்தை ஏற்படுத்துகின்றது.
என்
நண்பனின் வாழ்வை இந்த இரு உளவியல் புரிதலோடு பார்க்கும்போது, அவனுக்குள் ஏற்பட்ட உள்ளச் சலனத்தின் காரணம் நமக்குப் புரியும் என நம்புகின்றேன். நாம்
எப்படி? நம்முள்ளும் இது போன்ற உள்ளச் சலனங்கள் எழத்தானே செய்கின்றன! பல நேரங்களில் இந்தச்
சலனங்கள் உறவுச் சிக்கல்களுக்கும் மனக்குழப்பங்களுக்கும் நிம்மதியற்ற சூழலுக்கும் நம்மை இட்டுச் செல்லத்தான் செய்கின்றன. இந்தச் சிரமமான சூழலுக்குத் தீர்வு என்ன?
மெய்யியலாளர்
சாக்ரடீசு மனிதனின் கோபத்தைப் பற்றிப் பேசும்போது கூறுவார், ‘எது உண் மையோ அதைக் குறித்துக் கோபம் கொள்ளமாட்டோம்!’ ஒருவர் நம்மைப் பார்த்து, ‘நீ ஓர் ஆரஞ்சு
பழம்’ எனக்
கூறும்போது, நமக்குக் கோபம் வருவதில்லை. காரணம், நான் ஒரு பழம் இல்லை, மனிதன் என நமது அடையாளத்தில்
நமக்கு இங்குத் தெளிவிருக்கிறது. அதேநேரத்தில் ஒருவர் நம்மிடம், ‘நீ ஒரு முட்டாள்’ எனக்
கூறினால், அடுத்த வினாடியே கூறியவரின் மூக்கு காயமுற்றாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், ‘முட்டாள்’
என்பது நம் அடையாளம் இல்லை என்பதில் நமக்குத் தெளிவில்லை.
ஒரு
மனிதனின் அடையாளம், மனித வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகள் எப்படி இருக்கலாம், எவையெல்லாம் நிரந்தரமான அடையாளமாக இருக்க முடியாது, உளவியலாளர்களின் புரிதலின் அடிப்படையில் தனிமனித அடையாளத்தை எப்படிப் பார்க்கலாம்... என விவரித்த நான்,
இறுதிவரை எது சரியான அடையாளம் எனக் கூறவே இல்லை. ‘இதுதான் சரியான அடையாளம்’
என்று எந்த ஒன்றையும் கை காட்டிவிட முடியாது.
ஒவ்வொருவரின் வாழ்வியலைப் பொறுத்து அவரின் அடையாளம் மாற்றம் பெறும். எந்த ஓர் அடையாளம் ஒருவரைச் சலனமின்றி வைக்கின்றதோ, அதுவே அவரது நிலையான அடையாளம் என நம்பலாம்.
கிறித்தவப் பத்திரிகையாளர்கள் மற்ற செய்தியாளர்களின் பங்களிப்பைவிட ஒருபடி மேலே பொறுப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையின் அறிவிப்பாளர்கள்; நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்கள்; ‘பூமியின் உப்பு’ என்று அழைக்கப்படுகிறவர்கள் (மத் 5:13). பத்திரிகை அவர்களுக்கு வெறும் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான பணி. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மறக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிவு செய்யும் ஒரு தெய்வீக அழைப்பு. அவர்களின் பணி மனித கண்ணியத்தையும் மதச்சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது; கடவுளின் எல்லையற்ற அன்பைப் பிரதிபலிக்கிறது.
ஆயினும்,
இந்த அழைப்பில் சோதனைகள் இல்லாமல் இல்லை. கிறித்தவ ஊடகங்கள் கிறித்தவர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றன என்ற குறுகிய எண்ணங்களைப் போக்குவதும்
ஒரு பெரும் சவாலாகும். திரு அவையின் செய்திகளுக்கு அப்பால் நகர்ந்து, சமூகத்தின் பரந்த சிந்தனையுடன் ஈடுபட நமது பார்வையை விரிவுபடுத்தவேண்டும். தவறான தகவல்களும், சேர்ப்பு நிலைப்பாடு கொண்ட செய்திகளும் பெருகிவரும் இவ்வுலகில், துணிவுடன் உண்மையையும் நேர்மையையும் நிலை நிறுத்தவும், தீய எண்ணங்களுக்கு அடிபணியாமல் அநீதியை எதிர்கொள்ளவும் கிறித்தவ ஊடகவியலாளர்கள் பணிக்கப்படுகிறார்கள். இயேசு செய்தது போல, இவர்கள் உண்மையை அறிவிக்கிறார்கள்; “உண்மை அவர்களை விடுதலையாக்கும்” (யோவா
8:32). “நன்மை செய்வதில் மனம் தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்ககாலத்தில் அறுவடை செய்வோம்”
(கலா 6:9) எனும் புனித பவுலின் அறிவுரையிலிருந்து நாம் உத்வேகம் பெறுவோம்.
இதயத்துடன் தொடர்பு
கொள்ள
ஓர்
அழைப்பு
மே
12, 2025 அன்று நமது புதிய திருத்தந்தை லியோ அவர்கள், கத்தோலிக்க ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது, இரக்கத்துடனும்
நம்பகத்தன்மையுடனும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள அவர்களை வலியுறுத்தினார். அமைதியை வளர்க்கும் மற்றும் குரலற்றவர்களுக்குத் துணையாக இருக்கும் உரையாடலுக்கு எதிராகப் பிளவுபடுத்தும் தகவல்தொடர்புகளை நிராகரிக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
‘நாம் சத்தமாகவும் வலுவாகவும் தொடர்புகொள்ளத் தேவையில்லை; மாறாக, குரலற்றவர்கள், பலவீனமானவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களிடம் தகவல் சேகரிக்கவும் நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டும்’
என்று கேட்டுக்கொண்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுடன் திரு அவையின் உடனிருப்பைத் திருத்தந்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். உண்மை மற்றும் சனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்தார்; மேலும், கட்டுப்பாடு மற்றும் இலாப நோக்கத்தில் இயக்கப்படும் உலக மனநிலைக்கு எதிராக நாம் நிற்க வேண்டுமென எச்சரித்தார்.
இன்றைய காலத்தில் மக்கள் கடவுளுக்காக ஏங்குகிறார்கள் என்றும், அவர்கள் ஊடகவியலாளர்கள் மூலமாகவும் அவரைத் தேடுகிறார்கள் என்றும் அவர் நினைவூட்டினார்.
கிறித்தவப் பத்திரிகைகளைக்
கொண்டாடுதல்
இன்று,
ஆங்கிலம் அல்லது எந்த அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழியிலும் சிறந்து விளங்குவது கிறித்தவப்
பத்திரிகைகள்தாம். கிறித்தவத் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களால் இந்தியில் முன்மாதிரியான பத்திரிகைகள் வெளிவருகின்றன. எழுச்சி தரும் மதச்சார்பற்ற புத்தகங்களின் ஆசிரியர்கள் கிறித்தவர்களே. கிறித்தவ, சமூக மற்றும் மனித மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது You Tube வீடியோக்களின்
எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்களில் முன்னிற்பவர்கள் கிறித்தவர்களே! இத்தகைய அசாதாரண பங்களிப்புகளை எண்ணிப்பார்க்கும்போது நாம் பெருமைப்படவேண்டும்; நமது பத்திரிகைகளை, ஊடகங்களை, எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும்.
இந்த
யூபிலி ஆண்டு நம்மை ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்று
அழைக்கிறது. கிறித்தவப் பத்திரிகையாளர்கள் நம்பிக்கையின் விதைகளை விதைக்கவும், தவறான செய்திகளை எதிர்த்துப் போராடவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் ‘உலகின் ஒளி’
(மத் 5:14); மறைக்க முடியாத ஒரு மலையின் மீதுள்ள நகரமாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். “ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவா
1:5) என்று இறைவாக்கு நமக்கு உறுதியளிக்கிறது போல, அவர்கள் உண்மை
மற்றும் துணிவின் ஒளியாக ஒளிவீசவேண்டும்;
இருள் அவர்கள்மீது வெற்றிகொள்ளாது.
சவால்களைத் தாண்டி
எழுச்சி
கொள்வோம்!
எண்ணிமத்
தொழில்நுட்பத்தின் அழுத்தங்களால் நாம் திகைக்காமல், அச்சமின்றி எழுச்சி கொள்வோம். கத்தோலிக்க எழுத்தாளர்களின் படைப்பு வெறும் காகிதத்தில் உள்ள மை அல்ல; மாறாக,
அது நீதி, அமைதி மற்றும் உண்மைக்கான நற்செய்தியை முன்னறிவிக்கும் கருவி. ஆகவே, கிறித்தவ எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், நிருபர்கள் யாவரும் திரு அவைக்கும் நாட்டிற்கும் செய்யும் மேலான பணிகளுக்காக நாம் நன்றியைத் தெரிவிக்கவேண்டும்.
எண்ணற்ற
சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் அழைப்புக்கு உண்மையாக இருக்கிறார்கள். இறைவன் நிறைவாக அவர்களை ஆசிர்வதித்து, அவர்களின் எதிர்கால முயற்சிகளை வழிநடத்துவாராக!
மொழியாக்கம்:
அருள்முனைவர்
செ.
இராஜசேகரன்