news
சிறப்புக்கட்டுரை
திரைக்கலைஞர்களின் அரசியலும் / வருமான அமலாக்கத்துறைகளும்

ஒன்றிய அரசு புகழ்பெற்ற திரைக்கலைஞர்களைத் தன்வசம் வளைக்கக் குறுக்குவழி காண்கிறது. தன் தனி அதிகார வருமானவரி அமலாக்கத்துறை வழி அழுத்தம் கொடுத்துப் பிடிக்கிறது. தனக்கு ஏற்ற திரைக்கலைஞர்களை வளைக்கிறது; காங்கிரஸ், பா... என இருவருமே இச்சதியில் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்தான். கூட்டுப் பங்காளிகள்.

தன் வருமானவரிப் பிரச்சினைகள் தீர்ந்தபின் நடிகர் ரஜினிகாந்த்போல தப்புபவர் ஒருசிலரேதென்னிந்தியாவின் அழகு தேவதைஎன வருணிக்கப்பட்ட நடிகை சௌந்தர்யா பா... கட்சிக்காக 2004-இல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்றைய தெலுங்கானாவின் கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் பறந்தார். விபத்து ஏற்பட்டு பரிதாப மரணமடைந்தார். இதுதான் திரைத்துறையினர் மீதான ஒன்றிய அரசுகள் சுமத்தும்  கட்டாய, வலுத்த, பளுவான நெருக்கடி அரசியல்.

மலையாள திரையுலகில் பிரேம் நசீர் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 700 திரைப்படங்களில் நடித்தவர். நடிகை ஷீலாவுடன் மட்டும் கதாநாயகனாக 130 திரைப்படங்களில் நடித்தவர். பிரேம் நசீர் கின்னஸ் சாதனை புரிந்த பெருமைக்குரிய நடிகர். அவரும் அரசியலுக்கு வந்தார். ‘ஏன்?’ என அவரது மகன் ஷாநவாஸ் கௌமுதி தொலைக்காட்சிஸ்ட்ரெய்ட்லைன்என்ற நேர்காணலில் கூறுகிறார்: “என் தந்தை பிரேம் நசீருக்குக் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட அழுத்தம் தரப்பட்டது. அவர் மறுத்து தேர்தல் பிரச்சாரம் மட்டுமே செய்தார். அவருக்கு அதற்காக வருமான வரித்துறை மூலம் நெருக்கடி தரப்பட்டது.”

மலையாள மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதை நடிகர் பிரேம் நசீர் உணர்ந்திருந்தார். தன் அரசியல் வாழ்வைத் தேர்தல் பிரச்சாரத்தோடு முடித்துக்கொண்டார். கதாநாயகன் என்றால் என்றும் அவர் கதாநாயகன்தான்!

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி! இவரது பெயரைக் கூறினாலே ஆந்திராவே அதிரும். நடிகர் சீரஞ்சீவி 2008-ஆம் ஆண்டுபிரஜா ராஜ்யம்என்ற கட்சியை ஆரம்பித்தார். 2009-ஆம் ஆண்டு ஆந்திரத் தேர்தல் களத்தில் நடிகர் சிரஞ் சீவிக்குக் கூடிய கூட்டமும், அதிரடிப் பிரச்சாரமும் ஆந்திரத் தேர்தல் களமே அதிர்ந்தது. நடிகர் சிரஞ்சீவி  முடிவில் 16% வாக்குகளையும், 18 இடங்களையும் வென்றார். 2011-ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டார். இவ்வாறாக சிரஞ்சீவி, தன் அரசியல் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொண்டார். நடிகர் சிரஞ்சீவி கூறுகிறார்: “இனி என் வாழ்நாள் முழுவதும் அரசியலிலிருந்து விலகி இருப்பேன்.” நடிகர் சிரஞ்சீவியும் அரசியலுக்கு வர, விடைபெற, வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் தவிர வேறு  அழுத்தங்கள் இல்லை.

வாருங்கள், கன்னட தேசம் காண்போம்: கன்னடத்தில் கொடிக்கட்டிப் பறந்தமூத்த சகோதரர்எனப் பொருள்படும்அண்ணாவ்ருஎன மதிக்கப்பட்டவர் கன்னட சூப்பர் ஸ்டார் இராஜ்குமார். அவருக்குக் காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி கொடுத்த அழைப்பை மறுத்தார். ஆனால், அவரது மகன் சிவராஜ்குமார் 2023-இல் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். காலங்களின் அழுத்தமின்றியும், அரசியல் நடப்பதும்  சிறப்பு. அது மதவெறி அரசியலை முறியடிக்கும் துணிந்த மாநிலங்களின்  போராட்டத்தில் புதிய பக்கங்கள்.

தமிழ்நாடு அரசியலிலும் திரைத்துறையிலும் மறுக்க முடியாத உச்சங்களைத் தொட்டவர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் எனப்படும் எம்.ஜி.ஆர். அவருக்கும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நெருக்குதல்கள் தரப்பட்டன. 1971-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தனது வெளிநாட்டுத் திரைப்படப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவரது வருமானம், சொத்துகள் குறித்து வருமான வரித்துறை நேரில் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறது.

மன உளைச்சலிலிருந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்குபிரதமர் இந்திராகாந்தியைச் சந்தியுங்கள்; உங்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்என்று ஆலோசனை தரப்பட்டது. அவ்வாறே எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்தார். பிரச்சினைகள் தீர்ந்தன. 1972-ஆம் ஆண்டுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்ற புதிய கட்சி உருவானது. .தி.மு.. உருவாகப் பல காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புதைந்த வரலாறு.

தமிழ்நாட்டில் புதிய அரசியல் தலைவராக உருவாகியுள்ள நடிகர் விஜய் அவர்களின் வருமான வரி வரலாற்றையும் புரட்டிப்பார்ப்போம். 2015-ஆம் ஆண்டு முதலே நடிகர் விஜய் அவர்களுக்கு வருமான வரித்துறையின் அழுத்தங்கள் ஆரம்பமாகி விட்டன. தமிழ்நாடு அரசியலில் நடிகர் ரஜனிகாந்திற்கு  மாற்றாக நடிகர் விஜய் அவர்களை ஆர்.எஸ். எஸ். அன்றே குறிவைத்துவிட்டது. மெல்லக் கொடுத்த அழுத்தங்கள் 2020-இல் உச்சம் பெற்றது. நெய்வேலியில்மாஸ்டர்திரைப்படப்  படப்பிடிப்பு நடந்தது. விஜய் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த வருமான வரித்துறையினர்விசாரணைக்கு வரவேண்டும்என விஜய் அவர்களைக் கட்டாயப்படுத்தி, படப்பிடிப்பை இடைநிறுத்தம் செய்தனர். வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்கள். பனையூர் பங்களாவில் அவரது குடும்பத்தாரின் சொத்துகள், உள்நாடு-வெளிநாடு என வகைப்படுத்தப்பட்ட விவரங்களைக் காட்டி கேள்விகள் அடுக்கினர். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் விசாரணை வளையத்துக்குள் உட்படுத்தப்பட்டார். 24 மணி நேரத்திற்குக்  கிடுக்குப் பிடி விசாரணை நீண்டது.

நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை விசாரணையை நடத்தியவர் வருமான வரித்துறை ஆணையர் அருண்ராஜ். இவர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. முன்பு அவர்தான் நடிகர் விஜய் அவர்களுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்குகிறார் எனக் கிசு கிசுக்கப்பட்டது. அவர் தனது வருமான வரித்துறைப் பதவியை விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு நடிகர் விஜய்யின் கட்சியில் சேர்கிறார். உடன் அவர் .வெ..வில் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளராக நியமனம் பெறுகிறார். பின்னாள்களில் நடிகர் விஜய் அவர்களின்  வருமான வரிக்கணக்குகளில் எந்தத் தவறுகளும் நடக்கவில்லை எனப் புனிதம் பெறுகிறார்.

இதனிடையே புதிய கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய் அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தில், புதிய கட்சி அங்கீகாரம் பெற புஸ்ஸி ஆனந்துடன் உடன் சென்றவர் பிரகாஷ் எம். சுவாமி. இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக வெளிச்சம் பெற்றவர். அவருக்கும், நடிகர் விஜய் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தாலும் நடிகர் விஜய் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லாமல் உடனே கட்சி அங்கீகாரம் கிடைக்கிறது. நடிகர்களின் அரசியலில் திரைமறைவு ஆர்.எஸ்.எஸ். நோக்கங்களை நிறைவேற்ற வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும்  பா...வால் முடுக்கி விடப்படுகின்றன.

ஒரு குடியாட்சியில் எந்தத் தொழில் செய்வோரும், எந்தப் பணியாற்றுவோரும், தன் பங்களிப்பைத் தரலாம். அவர்கள் தேர்தல் களம் காண்பது நாட்டு மக்கள் நலனுக்கா? அல்லது தங்கள் வருமான வரி, அமலாக்கத்துறை  பிரச்சினை தீரவா? என்ற சுயநல அரசியலை அடையாளம் காண்பதே நம் சனநாயகக் கடமை என்போம். மதவாத ஒன்றிய அரசின் முகங்களை, முகமூடிகளை முறியடிப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
எதிர்நோக்கின் திருப்பயணத்தில் வரலாறு படைக்கும் மகளிர்! (செப்டம்பர் 8, 2025, பெண் குழந்தைகள் விழா)

எதிர்நோக்கின் திருப்பயணிகளாகத் திரு அவைச் சமூகம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த யூபிலி ஆண்டில், திருப்பயணிகளுள் ஓர் அங்கமாகத் திகழும் பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு வழிகாட்டி, அவர்களை ஒளியின் பாதையில் பயணிக்க வைக்க இந்த ஆண்டு பெண் குழந்தைகள் தின விழாவை நாம் பொருளுள்ள வகையில் கொண்டாடவிருக்கிறோம்.

பெண் குழந்தைகளை உடல், உள்ளம், உணர்வு ஆகிய ஒருங்கிணைந்த வளர்ச்சியுள்ளவர்களாக, நம்பிக்கையுள்ளவர்களாக, பொறுப்புணர்ச்சியுள்ளவர்களாக, பாதுகாக்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இயல்பாகவே பல்வேறு ஆற்றலும் வலிமையும் உள்ள உறுதியும் அமையப்பெற்ற பெண் குழந்தைகள் பல்வேறு காரணங்களினால் கண்டுகொள்ளப்படாத நிலை பரவலாகி வருகிறது.

குழந்தைகளின் பொருள் சார்ந்த தேவைகளுக்காகவும் கல்வி வாய்ப்புகளுக்காகவும் இன்றைய பெற்றோர்கள் பொருளாதார ரீதியான தேடலில் தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. பெற்றோர்களின் உடனிருப்பு, உணர்வுரீதியான அவர்களது தேவைகளைக் கண்டுகொள்ள நேரமின்மை குடும்பங்களில் காணப்படுகிறது.

திருவிவிலியக் காலம் தொட்டு இன்றளவும் பெண்கள் சாதனைகள் பல படைப்பதற்குப் பல தடைகளைத் தாண்டிவர வேண்டியிருந்தது. இக்காலப் பெண் குழந்தைகளும் சரித்திரம் படைப்பதற்குப் பல தடைகளும் இடையூறுகளும் இருந்தபோதிலும், அவர்களுக்கு வாய்ப்புகளும் வளங்களும் கொட்டிக்கிடக்கின்றன. இவர்கள் தங்களுக்குள் புதைந்துகிடக்கும் ஆற்றல்களை, திறன்களை வெளிக்கொணர, தங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள, திருப்பயணிகளாகிய நாம் எத்தகைய செயல்பாடுகளைச் செய்யவிருக்கிறோம்?

அதிகாரப் பகிர்வு, முடிவெடுக்கும் திறன், கல்வி, பாதுகாப்பு, சமூகப் பார்வை, சமூக அக்கறை, உளவியல் சார்ந்த அவர்களுடைய தேவைகள் ஆகியவற்றில் அவர்கள் குறைவுபடாமல் வாழ்வதற்கு எனப் பல தளங்களில் பெண் குழந்தைகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. இந்த உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உழைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளோர் அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும்.

மரியா என்ற ஒப்பற்ற ஒரு பெண் உருவாகக் காரணமாயிருந்த அவரது பெற்றோர் அன்னா- சுவக்கீன்போல சிறுவயது முதலே பெண் குழந்தைகளைச் சமூகப் பார்வையோடு கடவுளின் பராமரிப்பில் ஒப்படைத்து வளர்க்க வேண்டிய முன்மதி ஒவ்வொரு பெற்றோருக்கும் வேண்டும். நமது மேய்ப்பர் இயேசு, வழிதவறிய ஆட்டினைத் தேடிப் பரிவு காட்டியதுபோல, எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நாம் ஒவ்வொருவரும் பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற ஒரு தூண்டுகோலாய் இருப்போம்; ஒன்றிணைந்து செயல்படுவோம். யூபிலி ஆண்டிற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் குழந்தைகள் நலன் விரும்பிச் செயல்படுவோம். 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற வாக்கியம் அன்னை மரியாவுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொருத்தமாக உள்ளது. “குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான். “ஓடி விளையாடு பாப்பா என்றார் மகாகவி பாரதியார். அன்று பெண் குழந்தைகள் தட்டாங்கல், பல்லாங்குழி, கும்மியடித்தல், ஊஞ்சல் ஆடுதல், கோலாட்டம், சுழற்சிக்காய் விளையாட்டு, கில்லி, நொண்டி, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி உடலையும் மனத்தையும் வளர்த்தார்கள். இன்று அலைப்பேசி விளையாட்டில் பெண் குழந்தைகள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர். குழந்தை மைதானத்தில் விளையாடினால் அதன் சட்டை மண்ணாகும், குழந்தை அலைப்பேசி விளையாடினால் குழந்தையே மண்ணாகும் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும். உடல் ஆரோக்கியத்திற்குரிய விளையாட்டுகளை அவர்கள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத திரு அவையை நாம் உருவாக்கி, அவர்கள் இறைநம்பிக்கையிலும் ஞானத்திலும் உலக அறிவிலும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் திரு அவைக்கும் உண்டு.

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ள ‘POCSO’ சட்டம் சற்று ஆறுதலாக இருந்தாலும், இன்றும் பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வு போன்ற சமூகக்கேடுகள் தொடர் நிகழ்வாக  அமைந்து, பெற்றோர்களுக்குப் பெண் குழந்தைகளை வளர்ப்பது ஒரு சவாலான காரியமாக, பெற்றோர்களும் பரிதவிக்கக்கூடிய காலச் சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

பெண் குழந்தைகள் தேவதைகளாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

அன்பும் பரிவும் நிறைந்த இவர்கள், குடும்பத்தில் பாசத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

அறிவிலும் திறமையிலும் ஆற்றல் படைத்தவர்களாக கல்வி, கலை, விளையாட்டு, அறிவியல், மருத்துவம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் கால்பதித்துச் சாதனையும் சரித்திரமும் படைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கத்தோலிக்கத் திரு அவை இறைமக்கள், திருப்பணியாளர்கள், துறவறத்தார், கிறித்தவ நம்பிக்கையாளர்கள் உலகத்திலும் இந்தியாவிலும், ஏன் தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர பல்வேறு முன்னெடுப்புகளைத் திரு அவை செய்து வருகிறது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை உள்ளம் சார்ந்த மனநிலையை மாற்றம் காணச்செய்து துணிவோடும் துடிப்போடும் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறது.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கி நம் குழுந்தைகள் நலன் காப்போம். எதிர்கால இந்தியத் தூண்களை நேசித்து சரித்திரம் படைக்கச் சான்றாக இருப்போம். 

கடவுள் தம்மையே ஒரு நகலெடுத்து

மண்ணில் தவழவிட்டார்

கள்ளமில்லாத இந்த மழலையின் வடிவில்!’

பெண் குழந்தையைப் பேணுவோம்; பாதுகாப்போம்; எதிர்நோக்கின் திருப்பயணத்தில் சரித்திரம் படைக்கும் திருமகளாக மகிழ்வோடு வாழ வழிகாட்டுவோம்.

அருள்சகோதரி லூர்து பெர்நதெத் SAT, மாநிலச் செயலர், தமிழ்நாடு ஆயர் பேரவை பெண்கள் பணிக்குழு

மேதகு ஆயர் T. சகாயராஜ், தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை  பெண்கள் பணிக்குழு

news
சிறப்புக்கட்டுரை
விண்வெளி (உலகம் உன் கையில் – 9)

விண்ணைக் குறித்த சிந்தனையும் ஆர்வமும் பழங்காலம் முதல் மனிதனோடு சேர்ந்து பயணித்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளாக விண்ணின் இரகசியங்களைத் தொழில்நுட்பத் துணையோடு அறியும் எண்ணமும் இவைகளோடு சேர்ந்துகொண்டது.

மனிதன் விண்ணில் ஆராய்ச்சிக்கோள் நிலையங்கள் அமைத்து, பூமியைச் சுற்றிவரச் செய்யலாம். நிலவில் கால் பதிக்கலாம். செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளிக் கலங்களை அனுப்பலாம். ஆனால், ஏன் இன்றுவரை நாம் விண்ணை நோக்கும் பார்வையாளர்களாகவே இருக்கிறோம்? என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இவையெல்லாம் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தன் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்கென்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. இன்றளவில், இவ்வுலகில் வாழும் எந்த உயிரினமும் விண்ணைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் விண் விரிந்துகொண்டேயிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

சுத்தம் சோறு போடும்என்பது பழமொழி. நம்மைச் சுத்தமாக, பின்னர் வீட்டைச் சுற்றி, நாட்டைச் சுற்றி, கடலையும் சேர்த்து உலகளவில் தூய்மைக்கு முதலிடம் கொடுப்பதைக் காண்கிறோம். பூமியின் மூன்றில் ஒரு பங்கு நீரினால் சூழப்பட்டுள்ளது. கடல்களைத் தூய்மையாக வைப்பதில் பல முயற்சிகளும் ஆய்வுகளும் மேற்கொண்டாலும், இன்றுவரை உலகளவில் கடல்கள் மறைமுகமாகக் கழிவுகளுக்கு உறைவிடமாக இருப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை. எப்போது விண்வெளி ஆராய்ச்சி ஆரம்பமானதோ அன்றிலிருந்து தூய்மைக்கு உறைவிடமாக இருந்த பூமியின் சுற்றுப்பகுதி ஒவ்வோர் ஆண்டும் ஏதோ காரணத்திற்காக ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களால் நிரப்பப்பட்டு வருவதைக் கூர்ந்து நோக்குவதையன்றி வேறு வழியில்லாமல் இருக்கிறோம்.

விண்வெளி மண்டலங்கள்

நாம் வாழும் பூமியைச் சுற்றி ஐந்து மண்டலங்கள் இயற்கையின் அரண்களாக உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ளது. இந்த மண்டலங்கள் சூரியக் கதிர்களிலிருந்து நாம் வாழும் பூமியைப் பாதுகாப்பாக வைக்க உதவுகின்றன.

விண்மீன்கள்

நிலவில்லாத இருண்ட இரவில் வானத்தை நோக்கினால் பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் சில கூட்டமாகக் காணப்படுவதைப் பார்க்கலாம். திரட்சியும் (mass), வாயுவும் கொண்ட விண் பொருள் (celestial object) இயல்பாக ஒளிரும் தன்மை கொண்டிருந்தால் அது விண்மீன் எனப்படும். விண்ணிலிருக்கும் பல கோடி விண்மீன்களில், மிகவும் சிறிய விழுக்காடே நம் கண்களுக்குத் தெரிகின்றன. இந்த விண்மீன் ஒளி பூமியை வந்தடைய பல நூறு ஆண்டுகள் கூட ஆகலாம்.

விண்மீனிடமிருந்து ஒளி வெளிப்பட்ட பிறகு ஏதோ காரணத்தால் வெடித்துவிட்டால், அது இல்லாமல் போகும். எனவே, நாம் பார்க்கும் அனைத்து விண்மீன்களும் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே. ஒருவேளை இல்லாத விண்மீனின் ஒளியைக்கூட இப்போது நாம் பார்த்து இரசிப்பவர்களாய் கூட இருக்கலாம். சூரியனும் ஒரு விண்மீன்தான்; இது ஏனைய விண்மீன்களைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு பூமிக்கு அருகிலிருக்கிறது. விண்மீன்கள் வாயுக்களான எரியும் பந்து போன்றவை. விண்மீன்களின் ஒளி அதன் திரட்சியைப் பொறுத்திருக்கும்.

விண்மீன் கூட்டங்கள் (Constellations)

விண்மீன்களின் தோற்றம் என்பது அவற்றை நாம் பூமியிலிருந்து பார்க்கும் இடம், நேரம், வருடம் என்ற கால அளவைப் பொறுத்தது. வானில் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் கற்பனையின் உருவங்களே. 1919-ஆம் ஆண்டு அகில உலக விண் வெளிக்கழகம் (International Austronomical union) 88 விண்மீன் கூட்டங்களை அடையாளப்படுத்தி, அவைகளுக்குப் பெயரும் அறியப்பட்டது. நம் அன்றாட வாழ்க்கையில் அறிமுகமானஇராசிகள்என்றழைக்கப்படும் 12 விண்மீன் கூட்டங்களும் இதில் அடங்கும்.

வால் நட்சத்திரங்கள்

வானில் தோன்றும் சில விண்மீன்களைவால்நட்சத்திரம்என்று அழைப்பதுண்டு. இதன் வால் பகுதி வாயுவிலானது. அதன் பாதையில் பயணிக்கும் போது ஓர் இடைவெளிக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில நூறு, பலநூறு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கொருமுறை என்று பூமிக்கருகில் வருவது இயற்கை. இவ்வாறு 1986-ஆம் ஆண்டுஹேலி (Halleys) என்ற வால்நட்சத்திரம் பூமிக்கருகில் வந்தபோது நாம் பார்க்க முடிந்தது. இந்த வால்நட்சத்திரம் இதோடு 70-80 ஆண்டுகளுக்குப்பின் 2061-இல் பூமிக்கருகில் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, ஆதி மனிதன் வாழ்ந்த கற்காலத்திற்கு முன்  தோன்றிய வால்நட்சத்திரம் 2020-ஆம் ஆண்டு பூமிக்கருகில் வந்ததென்று வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். C/2022 E3 ZTF என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்தப் பச்சை நிற வால்நட்சத்திரத்தின் அடுத்தச் சுற்று 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு என்று கணிக்கப்படுகிறது.

சிறுகோள்களும் எரிகற்களும் (Astroids and meteoroides)

சிறுகோள்கள் என்பவை கிரகங்களின் வரிசையில் சேர்ந்தவை அல்ல; வால்நட்சத்திர வகையுமல்ல; சூரிய மண்டலத்தின் உள்சுற்றில் வலம் வரும் ஒருவகையான கனிமப் பாறையும் பனிக்கட்டியுமான சூழலற்ற, ஒழுங்கற்ற உருவம். செவ்வாய்-யூபித்தர் (Mars-Jupiter) கிரகங்களுக்கிடையில் இவை அதிகளவில் வலம் வருகின்றன. இச்சிறு கோள்கள் தங்கள் சுற்று வளையத்தில் உடைச்சல்களாக உருவாகி, பாதை தவறி ஏதோ காரணத்தால் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் வாய்ப்பு ஏற்படும்.

அப்படி ஏறக்குறைய 10 கி.மீ. குறுக்களவு கொண்ட பெரிய கோள் ஒன்று (cretaceous- Palaeocene extinction) 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்ததால் முக்கால் (3/4) பகுதி உயிர்வாழ் இனங்கள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 2024, ஆகஸ்டு 7-ஆம் தேதி 10 மீட்டர் விட்டமுள்ள இவ்வகை சிறுகோள் பூமிக்கருகில் வந்ததைநாசாநிறுவனம் கண்டறிந்தது. இதற்கு ‘2024 PT5என்று பெயரிட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கான இவ்வகை சிறுகோள்கள் வந்து செல்வது வாடிக்கை. பல மனிதப் பார்வைக்கு அகப்படுவதில்லை. இப்போது வந்திருக்கும் ‘2024 PT5திரும்ப 2055-இல் பூமிக்கருகில் வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

செயற்கைக் கோள்களினால் பூமிக்கு ஏதாவது ஆபத்து விளையுமா? என்ற நோக்கில் இவைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்வது தேவை என்று கூறப்படுகிறது. மேகமூட்டமில்லாத திறந்த வானில் இரவு நேரங்களில் பார்க்கும்போது ஓர் ஒளிக்கீற்று போன்று திடீரென்று தோன்றி மறைவதைப் பார்க்கலாம். வானில் பல சிதறுண்ட கற்கள் வழி தவறி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் வேகத்தில் உரசி எரிவதால் அந்த ஒளி காணப்படுகிறது. இதுஎரிநட்சத்திரம்அல்லதுமீடியார்(Meteoroide) என்றழைக்கப்படுகிறது. இக்கற்கள் வளிமண்டலத்தைக் கடந்து பூமியில் விழும்போதுமீடியோரைட்எனப்படுகிறது. எரிக்கற்கள் என்பவை பாறையிலான கனிம கற்கள், சிறு கோள்களைவிட சிறிதானவை, சூரியனைச் சுற்றி வருபவை.

நாம் வாழும் பூமி சூரிய மண்டலத்திலிருந்தாலும், பிற கிரகங்களுடனும் விண்மீன்களுடன் பயணிப்பதுடன் எண்ணிலடங்காத சிறு கோள்கள் என்று வானலோக அனைத்துப் பொருள்களுடனும் சேர்ந்து சுற்றி வருகிறது.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
காரணம்... அவனும் மனிதன்!

பாய் அந்த டீ கடையை மிக சுத்தமாக வைத்திருப்பார். பெரும்பாலான பெரியவர்கள் காலை நடைப்பயணம் முடித்து அவர் டீ கடைக்கு வந்து பெஞ்சில் அமர்ந்து நாளிதழ் படித்து, அதிலுள்ள செய்திகளைச்  சக நண்பர்களோடு பேசிச் சிரித்து மகிழ்ந்து, அதன்பின்தான் வீட்டிற்கே போவார்கள்.    

அனைவருக்கும் அவர் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். காசு கொடுத்தாலும், ‘நாளைக்குத் தருகிறேன்என்று வாய்தா வாங்கினாலும் பொறுத்துக்கொள்வார். காலை சுமார் 9 மணிக்கே கடையைச் சாத்தி வீட்டிற்குச் சென்று விடுவார்.

ஒருமுறை பக்கத்து ஊரைச் சேர்ந்த முனுசாமி அவரது கடைக்கு வந்து டீ குடிக்க ஆரம்பித்தார். பாயின் அணுகுமுறை, பழகும்விதம் அனைத்தும் முனுசாமிக்கு மிகவும் பிடித்திருந்தது. பேச்சுவாக்கில்  முனுசாமி ஒரு வங்கி .டி.எம்.-இல் இரவுக் காவலராகப் புணிபுரிவதாகவும், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதாகவும், மனைவி சுகவீனமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

தினமும் வர ஆரம்பித்த முனுசாமி பாய்க்கு நெருங்கிய நண்பராகி, கடையில் அவரால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். பாயும் அவரிடம் பணம் ஏதும் வாங்காமல் காலைச் சிற்றுண்டியும்  டீயும் கொடுத்து வந்தார். இப்படியே ஒரு மாதம் கடந்தது.

திடீரென்று முனுசாமி கடைக்கு வருவது நின்று போனது. பாய்க்கு முனுசாமி பற்றிய எந்தவிதச் செய்தியும் தெரியவில்லை. வருகின்ற வாடிக்கையாளர்களிடமும் கேட்டுப் பார்த்தார். ஆனால், அவர்களுக்கும் முனுசாமி பற்றித் தெரியவில்லை. அதுவே அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது.

ஒருநாள் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்க பக்கத்து ஊருக்குச் சென்றார். அப்போதுதான் முனுசாமி அந்த ஊர் என்பதும், ‘முருகன் கோவில் பக்கத்தில்தான் என் வீடு இருக்கிறதுஎன்று முனுசாமி கூறியதும் நினைவிற்கு வந்தது. அந்த நேரத்தில் வந்த தபால்காரரிடம் முனுசாமி பற்றிக் கேட்டபோது அவர் கூறியது பாய்க்கு மிகுந்த வேதனை அளித்தது.

முனுசாமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரவு காவல் வேலைக்கு வங்கி .டி.எம்.முக்குச் சென்ற போது  நடுராத்திரியில் வந்த கொள்ளையர்கள் அவரை அடித்துப் போட்டுப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும், அதன் பிறகு அதிகாலை .டி.எம்.க்கு வந்தவர்கள் வங்கிக்கும் போலீசுக்கும் செய்தி சொன்னதும், பிறகு ஆம்புலன்ஸ் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனதும் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார்.

உடனே தபால்காரர் மூலம் முனுசாமியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல்  கூறிகையிலிருந்த பணத்தையும் கொடுத்து மிகுந்த வேதனையோடு திரும்பினார்.

முனுசாமி பழகிய நாள்களை நினைத்துசே என்ன வாழ்க்கை இது? நேற்றிருந்தவர் இன்று இல்லையே!’ வேதனைப்பட்டார். அதோடு கூட தான் கிறித்தவப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டதால்சொத்து எதுவுமின்றி, விரட்டி அடிக்கப்பட்டதையும், முனுசாமி தன்னிடம் சொல்லி ஆறுதல் தேடிக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்த நாள் பாயின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் கடையை நடத்தாத பாய், மதியம் 3 மணிவரை கடையைத் திறந்து வைத்திருந்தார். வழக்கம்போல 9 மணிவரை காலை சிற்றுண்டி, டீ, காபி போடுவதைத் தொடர்ந்த பின்னர் மதியம் சூடான பிரியாணி சமைத்து விற்க ஆரம்பித்தார். அவரது இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வியப்பாய் இருந்தது. அதோடுகூட முனுசாமி இப்போதெல்லாம் வருவதில்லை என்பதும்  வாடிக்கையாளர்களுக்குத் தெரியவந்தது.

ஒருநாள் முனுசாமி பற்றி அவரிடமே கேட்டனர். அப்போது பாய் முனுசாமி பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரிவித்தார். டீ வியாபார வசூலைத் தான் வைத்துக்கொள்வதாகவும், பிரியாணி மூலம் வரும் வருமானத்தை முனுசாமியின் மனைவியின் உடல்நலத்திற்காகவும், அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவிற்காகக் கொடுக்கப்போவதாகவும் கூறினார்.

முனுசாமி பற்றிய சேதி கேட்டு அனைவரும் வருத்தப்பட்டனர். அவரவர் தங்களாலான பண உதவி செய்தனர்சமூக நலத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற சகாயம், அரசாங்க மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுக்க முன்வந்தார். அதற்காகும் முன்பணம் மற்றும் அரசு மானியம் பெற வழிவகைகளைச் செய்வதாகவும், அதனால் முனுசாமியின் குடும்பத்தினருக்கு அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு வழிவகுப்பதாகவும் கூறினார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அனைவரும் சேர்ந்து குடும்பத்தினருடன் முனுசாமி வீட்டிற்குச் சென்றனர். குடும்பத் தலைவிகள் முனுசாமியின் பிள்ளைகளைக் குளிப்பாட்டி, தாங்கள் எடுத்து வந்திருந்த புத்தாடைகளை அணிவித்து அழகு பார்த்து பிள்ளைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர்.

இதையெல்லாம் பார்த்த முனுசாமியின் மனைவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சாதி, மதம் மாறித் திருமணம் செய்ததால் எங்களைச் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்து தான் நோய்வாய்ப்பட்டதாகவும், நான் வணங்கும் கடவுள் என்னைக் கைவிடாமல் இன்று இத்தனை சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கின்றார் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் முன் மண்டியிட்டு தன் நன்றியினைத் தெரிவித்தாள்.

மும்மதத்தினரும் இணைந்ததால் அப்போது பக்கத்திலிருந்த தேவாலயத்திலிருந்து ஒலித்த  ‘ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்; ஒவ்வொரு மனிதனும் சகோதரன்என்ற பாடல் மிகவும் பொருளுள்ளதாக இருந்தது.

news
சிறப்புக்கட்டுரை
கறுப்பு தினம் - தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் சேர்க்கக் கோரி ‘கறுப்பு நாள்’உரிமைப் போராட்டப் பேரணி

ஆகஸ்டு 10-ஆம் தேதி இந்தியக் கிறித்தவர்கள் குறிப்பாக, தலித் கிறித்தவர்கள் 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களின் உத்தரவால் (1950, பத்தி 3), பாராளுமன்றத்தில் முறையான விவாதத்துக்கு உட்படாமலே கையெழுத்தானது. ‘இந்துகள் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படமாட்டார்கள் என எழுதப்பட்டிருந்தது. 1950-ஆம் ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் நாள் இச்சட்டத்தைத்  தனி அதிகாரத்தின் கீழ் கையெழுத்திட்டார் குடியரத் தலைவர். இந்த வரலாற்று அநீதிக்கு எதிராக ‘கறுப்பு நாள் என்ற பெயரில் நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டன.

தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவரை மீண்டும் பட்டியல் இனப் பிரிவிற்கு இணைத்தது. இதற்குப் பிறகு 1993-இல் பௌத்த மதத்தைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் பட்டியலினப் பிரிவில் இணைக்கப்பட்டனர். ஆனால், இன்றுவரை கிறித்தவ மற்றும் இசுலாமியப் பட்டியல் இனத்தவரைத் தங்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறுவதற்கு இந்த மதங்களைக் காரணம் காட்டிக் கடந்த 75 ஆண்டு காலமாக கிறித்தவப் பட்டியலினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.

மேலும், 2005, இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமையாலும், உச்ச நீதிமன்றத்தில் 2004 முதல் நடைபெறும் SC அந்தஸ்தைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமலும் தமிழ்நாடு அரசின் தனித்தீர் மானத்தைத் தாமதித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் போக்குக் கண்டிக்கத்தக்கது. இதனால் தலித் கிறித்தவர்கள் தலைமுறைதோறும் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சாரம், சட்டப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த அந்த நாள் தலித் கிறித்தவர்களின் வாழ்நாளிலே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத கறுப்பு நாள் எனக் கருத வேண்டியுள்ளது.

எனவே, ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, 1950 பத்தி 3-ஐ இரத்து செய்து தலித் கிறித்தவர், தலித் இசுலாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக ஆகஸ்டு 10 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு நாள் அனுசரிக்கப்பட்டு, பேரணிகளும் அறவழிப் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

தலித் கிறித்தவர்களுக்குச் சம உரிமை வேண்டும், ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதம் என்பது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை அங்கீகரிக்க இடையூறாக இருக்கக் கூடாது என்றும், சமத்துவத்திற்காக மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தலித் சமூகங்களும் ஒன்றுபடுவது அவசியம் என்றும் வலியுறுத்திய பேரணியில் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வலியுறுத்துவது குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள், தென்னிந்தியத் திரு அவை பேராயர்கள், தமிழ்நாடு லூத்தரன் திரு அவை ஆயர்கள், பிற மதத் தலைவர்கள் (இந்து, முஸ்லிம், பௌத்த, சீக்கிய), அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சமூக  இயக்கங்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள், இளையோர், மறைமாவட்ட  SC\\ST பணிக்குழுவின் செயலர் தந்தையர்கள், தலித் கிறித்தவ மக்கள், பொதுக்குழு, கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிர்வுகள் கூட்டமைப்பு, தோழமை அமைப்புகள்,  இயக்கங்கள்,  மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுக்கூட்டங்களைக் காவல்துறையினரின் ஒப்புதலோடு நடத்தி, அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களை வழங்கினார்கள்.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில், இயக்குநர் அருள்தந்தை மரிய ஜான்போஸ்கோ (SC\\ST பணியகம்) அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் SC நிலைப்பாட்டைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமல் இருப்பதோடு, தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தையும், கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரை உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் தலைமையேற்க, அருள்தந்தை ஹென்றி ஜெரோம் அவர்கள் வரவேற்புரை வழங்க, பணிக் குழுச் செயலர் அருள்தந்தை சந்தியாகப்பன் அவர்கள் தொடக்க உரையாற்றிய கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ‘எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இறுதியில், ஒன்றிய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எழுப்பப்பட்டன.

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் வழிகாட்டுதலில், முதன்மைக்குரு பேரருள்தந்தை குழந்தைசாமி தலைமை தாங்க, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.செ. சிந்தனைச் செல்வன் எழுச்சியுரை வழங்கினார்.              

கோயம்புத்தூர் மறைமாவட்டம்

அருள்பணி. டெல்லிஸ் ரோச் ஒரு நுண்ணறிவு மிக்க உரையை நிகழ்த்தினார். சம உரிமைகளைக் கோருவதில் தொடர்ந்து வாதிடுதல் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை அவர் விரிவாகக் கூறினார். எதிர்ப்பின் அடையாளமாக அருள்பணி. ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் ஒரு கறுப்புக் கொடியை ஏற்றினார்.   விழிப்புணர்வை ஏற்படுத்த தலித் கிறித்தவர்களின் போராட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் துண்டுப் பிரசுரங்களும் பரப்பப்பட்டன.

மேலும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் SC/ST பணிக்குழுத் தலைவர் ஆயர் ஜீவானந்தம் மற்றும் செயலாளர் அருள்தந்தை நித்யா OFM. Cap அவர்களால், அனைத்து மறைமாவட்ட ஆயர்களின் தலைமையில் SC/ST ஆணையச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்களின் வலையமைப்பின் மூலம் ஏனைய மறைமாவட்டங்களிலும்  தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டப் பேரணியானது ஒருங்கிணைக்கப்பட்டது.  ‘தலித் கிறித்தவர்களுக்குச் சம உரிமை வேண்டும், ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி போன்ற முழக்கங்களுடன் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

news
சிறப்புக்கட்டுரை
வழியோர உணவு!

ஒருநாள் மாலை நானும் என் நண்பர்களும் மகாபலிபுரம் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். பல்லவர்கள் கட்டிய கற்கோவில் மற்றும் கடற்கரையில் மகிழ்ச்சியாக எங்கள் நேரத்தைச் செலவழித்துவிட்டு மீண்டும் எங்கள் இல்லம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். உணவு நேரமானதால், ஓர் ஓரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு அணுகுச்சாலையில் (Service Road) அமர்ந்து நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவை எங்களுக்கே உரித்தான நகைப்பு நையாண்டிகளோடு உண்டு முடித்தோம். மீதமிருந்த உணவை அருகில் வழியோரத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்த மக்களிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம்.  நாங்கள் அங்கு வாகனத்தை நிறுத்திய உடனேயே உரிமையோடு மீதமிருக்கும் உணவை அவர்களுக்குத்தான் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அந்த நாள் பயணம் மகிழ்வாகவும் நிறைவாகவும் அமைந்தது. அது ஒரு நல்ல அனுபவம் என்றே எண்ணினேன். ஆனால்...!

அனுபவம் எழுப்பிய அதிர்வுகள்

மறுநாள் முழுவதும் ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் என் மனத்தில் வந்துகொண்டே இருந்தது. ஆம், நாங்கள் வழியோரத்தில் உணவுண்டு முடிக்கும்போது, மழை தூறத் தொடங்கியது. நாங்கள் முன்பே உறுதியளித்ததுபோல, உணவைப் பெற்றுக்கொள்ள சாலையோரம் வசிக்கும் அந்த மக்களை அழைத்தோம். அவர்கள் அங்கு வந்த பொழுது மழையும் அதிகமானது. மீதமிருந்த உணவைக் காலி செய்துவிட்டு வாகனத்தில் ஏறி, மழையிலிருந்து தப்பிப்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது. உணவைப் பெற என்முன் நின்ற அந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கு அதிக உணவு கிடைத்துவிடாதா? என்ற ஆவலில்எனக்குக் கொடுங்கள், எனக்குக் கொடுங்கள்எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் மழையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தோடு உணவை அவர்களது பாத்திரங்களில் கொட்டிவிட்டுப் பேருந்தில் ஏறினேன். இந்த நிகழ்வு என்னில் மீண்டும் மீண்டும் நினைவாடிக்கொண்டே இருந்தது.

இடைவெளியைக் களைவது எப்படி?

வழியோரம் விழிவைத்துக் காத்திருந்து, எங்களிடம் மீந்த உணவைப் பெற்றவர்களின் அவலத்தையும், என் மனத்தில் எழுந்த வலியையும் பின்வரும் கவிதை வரிகளில் இவ்வாறு எழுத முயற்சித்தேன்:

இடைவெளி!

மீந்ததை அவள் தட்டில் கொட்டும்

என் கண்களில் ஓர் அவசரம்.

அதுதான் அன்றைய விருந்தென வாங்கும்

அவள் கண்களில் ஓர் ஏக்கம்.

என்று தீரும் இந்த இடைவெளி?’

எழுதிய கவிதையைப் புலனப் பதிவாகவும், சமூகவலைதளப் பதிவாகவும் வெளியிட்டேன். பார்த்த பலர் வாழ்த்தினார்கள். சிலர்இது எங்கு நடந்தது?’ எனக் கேள்வி எழுப்பினர். ஆனாலும், என் மனம் அமைதியடையவில்லை. என் கவிதையில் எழுப்பிய கேள்வி என் உள்ளத்திலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

உறுதியாக என்னால் உலகெங்கும் இருக்கும் இடைவெளியைச் சரிசெய்ய இயலாது. ஏன் உணவை என்னிடமிருத்து பெற்ற அந்தக் குழந்தைகளை மீண்டும் சந்திப்பதுகூட அவ்வளவு சாத்தியம் இல்லை. ‘பின்பு வேறு வழியே இல்லையா! இந்த இடைவெளியைக் களையஎன என்னுள் இருந்த கேள்வி இன்னும் ஆழப்பட்டது. தொடர்ந்து சிந்திக்கத் தொடங்கினேன், சற்றுத் தெளிவு கிடைத்தது. ஒரு மாற்றுவழி எனக்குத் தென்பட்டது. அந்த வழி எல்லாச் சூழலிலும் எல்லாருக்கும் சாத்தியம் என்றே தோன்றியது.

மனித மாண்பின் மதிப்பை உணர்தல்

அங்கு நான் கொடுக்கும் இடத்தில் இருந்தேன்; அவர்கள் பெறும் இடத்தில் இருந்தார்கள். அங்கு என் எண்ணமெல்லாம், அவர்கள் பாத்திரத்தில் உணவைக் கொட்டிவிட்டு என்னை மழையிலிருந்து தற்காத்துக்கொள்வதன் மீது மட்டுமே இருந்தது. ஆனால், என்முன் நின்ற மனிதர்களும் மாண்பிற்குரியவர்கள்; நான் எத்தகைய மரியாதைக்குரியவனோ அதே அளவுக்கு அவர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை நான் உணரவில்லை. ஆம், அந்தச் சிறு மழைச்சாரல் நிச்சயம் என்னைப் பெரிதாய்ப் பாதித்திருக்காது. அதேநேரத்தில் நான் அந்தக் குழந்தைகளை உரிய மரியாதையுடன் நடத்தியிருந்தால், அது அவர்களின் உள்ளத்தில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும்.

மனிதர் என்ற ஓர் அடையாளம் போதும், ஒரு மனிதரை மனிதராக மதிப்பதற்கு. வேறு எந்த அடையாளமும் தேவையில்லையே! இந்தப் புரிதல் நிச்சயம் அந்த இடைவெளியைக் களையும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அது எனக்கு மன அமைதியையும் தெளிவையும் தந்தது.

ஞானிகள் தரும் உள்ளொளிகள்

இன்னும் சற்று ஆழமாய்ச் சிந்திக்கும்போது, இது நான் ஒன்றும் புதிதாய் அறிந்துகொண்ட ஞானமல்ல; சமூகத்தின் வெவ்வேறு நிலையில் உள்ளவர்கள் இதை ஏற்கெனவே கூறியுள்ளார்கள் என்ற தெளிவு கிடைத்தது. அவற்றுள் சிலவற்றை இங்குப் பகிர விரும்புகின்றேன்:

மனித வாழ்வின் மதிப்பு, சாதனை அல்லது செல்வத்தில் இல்லை; அது உயிர் என்றதிலேயே உள்ளது.” - மகாத்மா காந்தி

ஒருவரின் மதிப்பு, அவர் பிறந்த சமூகத்தில் அல்ல; அவர் ஒரு மனிதராக இருக்கின்றதில்தான்.” - பாபாசாஹேப் அம்பேத்கர்

அனைத்து மனிதர்களும் மனிதராகப் பிறந்த காரணத்தினாலே, ஒரே மரியாதைக்குரியவர்களாக இருக்கின்றனர்.” - நெல்சன் மண்டேலா

மனிதர்களுக்கு மரியாதை என்பது அவர்கள் பலன் தருகிறார்களா இல்லையா என்பதால் அல்ல; அவர்கள் மனிதராக இருப்பதாலே வழங்கப்பட வேண்டியது.” - மார்த்தா நஸ்பாம் (Philosopher)

மனிதனின் பண்பும் மரியாதையும் அவர் கடவுளின் உருவிலும் ஒப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளதில்தான் அடங்கியுள்ளது.” - கத்தோலிக்கத் திரு அவைப் போதனைகள் (Catechism of the Catholic Church), பிரிவு 1700

இடைவெளி தகர்ப்பிற்கான மாற்று வழிகள்

என்முன் நின்றவர்களை, என்னைப் போன்ற சக மனிதனாகப் பார்த்தால் எப்படி அங்கிருக்கும் இடைவெளி குறையலாம்? என நம்முள் ஒரு கேள்வி எழலாம். இதுபோன்ற சூழல்களில் இடைவெளியை ஏற்படுத்துவது பொருளாதாரப் பாகுபாடு மட்டுமன்று, சக மனிதரும் மாண்புடையவரே என்பதை உணர மறுப்பதே! என்முன் நின்ற குழந்தைகளை மாண்பு நிறைந்த சக மனிதர்களாகப் பார்த்திருந்தேன் என்றால், அங்கு அந்த இடைவெளியே இருந்திருக்காது. அவர்களைப் பாதிக்காத அந்த மழை என்னையும் பாதித்திருக்காது. மாறாக, அவர்களின் வாழ்க்கை நிலை என்னை வெகுவாகப் பாதித்திருக்கும்.

மழையைத் தவிர்த்துப் பேருந்தில் ஏறுவதைவிட, என்முன் நிற்கும் மனிதத்தின் பசி, அவர்களின் கண்களில் இருந்த உணவிற்கான ஏக்கம், இன்னும் கொஞ்சம் அதிகமாக எனக்குக் கிடைத்துவிடாதா? என அவர்களின் உள்ளத்தில் இருந்த ஆவல், பின்னர் அங்கிருந்த வெற்றுப் பாத்திரத்தில் ஏதேனும் இருந்துவிடாதா! எனப் பார்த்த அவர்களின் ஏக்கம் என அவர்களின் வாழ்க்கை நிதர்சனம் என் உள்ளத்தில் ஆழமாய் உறைந்திருக்கும். இவை யாவற்றிற்கும் நான் பதில்தர முடியாமல் போயிருந்தாலும், எனது அணுகுமுறையால் அவர்கள் என்னைப் போன்ற மனிதர்கள்தான், அவர்கள் மாண்பிற்குரியவர்கள் என அவர்கள் தெளியும்படி அவர்களின் உள்ளத்தில் உணர்த்தியிருப்பேன். நானும் இந்தச் சிந்தனையில் ஆழப்பட்டிருப்பேன். அவ்வாறு நடந்திருந்தால் அங்கு உணவு கொடுக்கப்பட்டிருக்காது; மாறாக, பகிரப்பட்டிருக்கும்.

மனிதத்தை மதிப்போம்

கொடுப்பது ஒருவரை உயர்த்தி, மற்றவரைத் தாழ்த்துகிறது. இங்கு ஒருவர் மட்டுமே பெறுகிறார். பகிர்வது, இருவரையும் சமமாக வைக்கிறது. இங்கு இருவருமே பெறுகின்றனர். ஆம், தவறிவிட்டேன்; ஆனால், அதே இடத்தில் நிற்க விரும்பவில்லை. இனி நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலும், மனிதத்தைக் காணத் தீர்மானித்திருக்கிறேன். நீங்கள்?