புனித வியாழன் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் உச்சக்கட்டமாக விளங்கிய இறுதி மூன்று நாள் நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வின் நினைவு. இந்நாளின் திருவழிபாடு கீழ்க்காணும் ஐந்து பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
1) பாஸ்கா (கடத்தல்) உணவின்
நினைவு
எகிப்து
நாட்டில் பார்வோனுக்கு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களான ‘அபிருக்களை’ அவ்வடிமைத்தளையிலிருந்து
மோசே மீட்டு, அடிமை விலங்கொடிப்பின் முன் சுவையாக நீசான் மாதம் 14-ஆம் நாள் இரவில் ‘அபிருக்களுடன்’ இணைந்து
கொண்டாடிய பாஸ்கா உணவின் நினைவே இந்நிகழ்வு.
கி.மு. 1330-களில் உலகெங்கும் இருந்த அரசுகளில் எல்லாம் பேரரசாக விளங்கியது எகிப்து. அந்நாட்டில் பார்வோனுக்கு அடிமைகளாக வாழ்ந்த ‘அபிருக்கள்’ என்று
அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களோ இறைவன் யாவேயின் துணை கொண்டு மோசேயின் தலைமையில் பார்வோனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பினர்.
இறுதியாக, பார்வோனின் அடிமைத் தளையிலிருந்து இஸ்ரயேல் மக்களை மோசே மீட்டெடுத்த நீசான் மாதம் 14-ஆம் நாள் இரவில் அவர்கள் தங்கள் அடிமை விலங்கொடிப்பின் முன் சுவையாகப் பாஸ்கா உணவு உண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்கள். பாஸ்கா உணவை உண்டபின் எகிப்தை விட்டுப் புறப்பட்டார்கள். தங்கள் விடுதலை வாழ்விற்கு மிகப் பெரும் தடையாகத் தங்கள் முன் நின்ற செங்கடலை மாட்சி மிகு யாவேயின் துணை கொண்டு கடந்தார்கள். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதன் அடையாளமே புனித வியாழன் அன்று நினைவு கூரப்படும் பாஸ்கா உணவுக் கொண்டாட்டம்.
2) இறுதி இரவு விருந்தின்
நினைவு
தமது
இவ்வுலக வாழ்வை முடிக்கும் தருணத்தில் இயேசு தம் அன்புச் சீடர்களுக்குக் கொடுத்த இறுதி இரவு விருந்தின் நினைவு இது.
இயேசு
தாம் இவ்வுலகில் வாழ்ந்த போது பல்வேறு விருந்து குழுமங்களில் விரும்பி கலந்துகொண்டார். பரிசேயர்கள், பணக்காரர்கள் மட்டுமின்றி ஆயக்காரர்களும் இயேசுவை விருந்துக்கு அழைத்தனர். பாவிகள், சாமானியர்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டோரும் அவ்விருந்துகளில் கலந்து கொண்டனர். இயேசுவும் பசியோடு இருந்த மக்களுக்குப் பசியாற உணவு வழங்கினார். தமது இவ்வுலக வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வரப்போவதை உணர்ந்த இயேசு ஏறக்குறைய கி.பி. 29-ஆம்
ஆண்டின் வசந்த காலத்தில் அவ்வாண்டு பாஸ்கா விழா நாளாகிய வியாழக்கிழமை அன்று மாலை பாஸ்கா உணவு உண்ண எருசலேம் மலையின் தென்பகுதியில் அமைந்த சீயோன் மலை உச்சியில் இருந்த மேலறையில் தம் சீடர்களுடன் பந்தி அமர்ந்தார். அது இயேசுவுக்கு இவ்வுலகின் இறுதி இரவு விருந்தாகவும் சீடர்களுக்கு இயேசு கொடுத்த பிரியாவிடை விருந்தாகவும் அமைந்தது.
3) நற்கருணை நிறுவப்பட்டதன்
நினைவு
இன்றுதான்
இயேசு நற்கருணையை நிறுவி, அக்கொண்டாட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் அருள்பணி வாழ்விற்கும் அச்சாரமிட்டார். எனவே, இந்நாள் அருள்பணியாளர்கள் நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி வாழ்வின் மேன்மையை உணர்ந்து இறைவனுக்கு நன்றிகூறும் பெருநாள் இது.
இந்நாளில்
இயேசு, தம்மைப் பின்தொடர்ந்த சீடர்களுக்கெல்லாம் ஒப்பற்ற ஒரு நினைவை விட்டுச் சென்றார். பாஸ்கா உணவுக்காக ஏற்பாடு செய்திருந்த அப்பத்தைத் தம் கைகளில் எடுத்துச் சீடர்களுக்குக் கொடுத்து, ‘தம் உடல்’ என்றும், திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தையும் எடுத்து, ‘தம் இரத்தம்’ என்றும் கூறினார். அதைத் தம் நினைவாகச் செய்யுமாறும் அவர்களைப் பணித்தார். எனவே இந்நாள் ‘உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன்’
(மத் 28:20) என்ற இயேசுவின் கூற்றுக்கு முழு வடிவம் கொடுக்கும் நாளாயிற்று.
4) பாதம் கழுவும் நிகழ்வின்
நினைவு
இயேசு
தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, தாமும் தம்மைப் பின்பற்றுபவர்களும் தொண்டாற்றும் பணியாளர்களாக இருப்பதிலே பெருமை கொள்ள வேண்டும் என உணர்த்திய பாதம்
கழுவும் நிகழ்வை நினைவுகூரும் பொன்னான நாள் இந்நாள்.
“தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்தவர் இயேசு”
(பிலி 2:6-8). “உங்களில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும்; உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத்
20:26-27) என்று கூறியவரும் அவரே. “நான் தொண்டு ஏற்பதற்கல்ல; தொண்டு ஆற்றுவதற்கே வந்தேன்”
(மத் 20:29) என்றும் உறுதிபடக் கூறினார். தலைவர்களாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொண்டாற்றவும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்.
5) தலைமைச் சங்க விசாரணைக்கு
உட்படுத்தியதன்
நினைவு
இயேசுவைக்
கொலை செய்ய வேண்டும் என்னும் சதித்திட்டம் தீட்டிய யூதத் தலைவர்கள் யூதாஸ் இஸ்காரியோத்துவின் துணையோடு இயேசுவைக் கெத்சமனித் தோட்டத்தில் கைது செய்து இரவு முழுவதும் அவரைத் தலைமைச்சங்க விசாரணைக்கு உட்படுத்தியதின் நினைவு இன்று.
வியாழன்
இரவைக் கெத்சமனித் தோட்டத்தில் கழிக்க வந்த இயேசுவுக்கு அவ்விரவைத் தூங்கா இரவாகவே யூதாஸ் மாற்றிவிட்டான். கோவில் பாதுகாவலர்களின் துணை கொண்டு யூதத் தலைவர்கள் இயேசுவைக் கைது செய்து, அன்னா, அவரது மருமகன் கயபா மற்றும் தலைமைச்சங்கம் என இரவு முழுவதும்
அவரை விசாரணைக் கைதியாக அலைக்கழித்தனர். நாற்பதற்கு ஒன்றுக்குக் குறையக் கசையடி கொடுத்து, அவரை நையப் புடைத்தனர். ‘எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போனாலும் நான் ஒருபோதும் உம்மை விட்டு ஓடிப்போக மாட்டேன்’
என்று வாக்குறுதி தந்த பேதுரு, இயேசுவின் கண் முன்னாலேயே ‘நான் அவரை அறியேன்’ என்று மூன்று முறை மறுதலித்தார். இவ்வாறு கசையடியாலும் கேள்விக்கணையாலும் இயேசுவைத் துளைத்தெடுத்து விசாரணை செய்ததின் நினைவு நாள் இது.
வரலாறு படைத்த
புனித
வியாழன்
இந்நாளில்தான்,
தலைமைக் குருவின் வீட்டில் வைத்து இரவோடு இரவாக இயேசுவின்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைத் தயாரிக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கைகூடி வந்தது. யூதர்களை மீட்பதற்காகவே இம்மண்ணகத்தில் பிறந்த இயேசுவின்மீது ‘மனிதக் கையால் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத கோவிலை மூன்று நாள்களில் கட்டுவேன்’
(மாற் 14:58) என்றும், ‘இறைமகன்’
(மத் 27:43) என்றும் கூறினார் என்னும் குற்றப்பழிகளைச் சுமத்தி அவரை யூதர்களுக்கு எதிராகத் திசை திருப்ப முடிந்தது. மேலும், இயேசு ‘சீசருக்கு வரி செலுத்தக்கூடாது’ (லூக் 23:2) மற்றும் ‘தாமே மெசியாவாகிய அரசன்’
(லூக் 23:2) என்றும் கூறினார் என்னும் பொய்ச்சான்றுகளைச் சுமத்தி அவரை உரோமையருக்கு எதிராகத் திசை திருப்பும் நாளாகவும் புனித வியாழன் அமைந்தது.
‘இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி... இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்’ என்று
இயேசுவைச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான் (யோவா 1:29). பாஸ்கா விழாவில் பலி கொடுக்கப்படும் செம்மறி ஆட்டுக்குட்டியைப் போன்று உலக மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரியில் சிலுவை மரணத்தை ஏற்றுப் பலியாகப் போகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது இப்புனித வியாழன். அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து, பார்வோனின் ஆதிக்க விலங்கை உடைத்தெறிந்து முரசு கொட்டி நிற்கின்றது இப்புனித வியாழன்!
காலடித்
தொட்டுத் தொண்டாற்றுவதும் பாதம் பணிந்து பணியாற்றுவதும் இயேசுவின் சீடர்களுக்கான தனித்தகுதிகள் என எக்காள முழக்கமிடுகின்றது
இப்புனித வியாழன்!
சோகப்பாடல்
இசைத்து, முகாரி இராகமீட்டிய இப்புனித வியாழனே வெகுவிரைவில் பூபாள இராகத்துடன் பிறக்கப் போகும் புதுப்பாடலுக்கான தொடக்கப் புள்ளியே!
‘இறைவேண்டல் எளிதா? கடினமானதா?’ என்ற கேள்விக்கு உங்களின் விடை என்ன?
ஒருவகையில்
பார்த்தால், அது எளிதுதான். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் இறைவேண்டல் செய்து வந்திருக்கிறோம். அந்தப் பழக்கத்தின் காரணமாக இறைவேண்டல் எளிது எனக் கூறி விடலாம்.
அதேவேளையில்
நிறைவான, முழுமையான வகையில் இறைவேண்டல் செய்வதென்றால், அதற்குப் பல ஆயத்தங்கள், விழிப்புணர்வு,
உத்திகள், மனநிலைகள், தெளிவு போன்றவை தேவை. அந்தக் கண்ணோட்டத்தில், இறைவேண்டல் என்பது கடினம் மட்டுமல்ல, ஓர் அறைகூவலும்கூட.
எனவேதான்,
கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (CCC) இறைவேண்டல்
என்பது ஒரு கொடை, அதேவேளையில் ‘ஒரு பணி’
(a gift and a task)
என்கிறது. இறையருள் இல்லாமல் யாரும் இறைவேண்டல் செய்ய இயலாது. எனவே, இறைவன் நமக்கு இலவசமாகத் தரும் அருளே இறைவேண்டல். அதேவேளையில், நாமும் இறையருளோடு ஒன்றித்து, முயற்சியெடுத்து, இறைவனோடு நமக்குள்ள உறவை ஆழப்படுத்த வேண்டும் என்கிறது (கதிம 2725). இந்தப் பின்னணியில், இறைவேண்டல் தொடர்பான தடைகள் என்னென்ன? என்று நாம் ஆய்வு செய்யும்போது, ஏராளமானவை நம் முன் தோன்றுகின்றன. அவற்றைப் பின்வரும் ஆறு தலைப்புகளில் பட்டியலிடலாம்:
1. புறச்சூழல் தொடர்பானவை: தனியாகவோ, குடும்பமாகவோ, பங்குச் சமூகமாகவோ இறைவேண்டல் செய்வதற்குப் பலவிதமான எதிர்ச் சூழல், புறத்தடைகள் இருக்கின்றன. ஒலிப்பெருக்கி, ஓசைகள், புறவிழாக்கள், போக்குவரத்து போன்ற பல தடைகளையும் கடந்தே
நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.
2. உடல் தொடர்பானவை: உடல் களைப்பு, சோர்வு, வலுவின்மை, பசி, தாகம், தூக்கம் போன்றவை நம் இறைவேண்டலுக்குத் தடையாகின்றன.
3. மனம் தொடர்பானவை: கவனச்சிதறல், செப ஆர்வமின்மை, அறியாமை, முற்சார்பு எதிர் மனநிலை, இறைவேண்டல் அனுபவமின்மை போன்றவை. இவை சிந்தனையோடு இணைந்தவை.
4. ஆன்மா தொடர்பானவை:
நம்பிக்கையின்மை, நம்பிக்கை குறைவு, பாவக் கறைபடிந்த ஆன்மா, அலகையின் சோதனை, பாவப் பழக்கங்களின் அடிமைத்தனம், இறைவனே அருளை விலக்குவது போன்றவை மிகவும் கடினமான தடைகள். பாவத்தால் ஆன்மா கறைபடிந்துவிட்டால் இறையுணர்வு, இறையார்வம் போன்றவை ஆன்மாவில் எழுவதேயில்லை. ஆன்மா பாவக்கறையால் மாசு படிந்துள்ளது என்னும் தன்னுணர்வின்மையே (lack of self-awareness)
ஒரு வியப்புக்குரிய தடைதான். சில வேளைகளில் இறைவேண்டலுக்கான ஊக்கத்தை, அருளை கடவுளே விலக்கிக்கொள்ளும் ‘ஆன்மாவின் இருண்ட இரவு’ அனுபவங்களோடு பல புனிதர்களும் போராடியிருக்கிறார்கள்
என்பது நமக்கு அச்சம் தரும் உண்மை!
5. உணர்வுகள் தொடர் பானவை:
மனச்சோர்வு, மன அழுத்தம், அச்சம்,
கவலை, துயரம், அவமானம், கோபம், ஏக்கம் போன்ற உணர்வுகளின் பாரம் போன்றவை நம்மை இறைவேண்டல் செய்ய விடாமல் வலிமையாகத் தடுக்கின்றன.
6. மனவலிமை தொடர்பானவை:
நாம் இறைவேண்டல் செய்வதற்குக் கடவுள் தந்துள்ள கொடைகளுள் ஒன்றே மனவலிமை (will power). நம் வாழ்வின்
எல்லாப் பணிகளையும் கடமைகளையும் செய்வதற்கு இந்த மனவலிமை நமக்கு உதவுகிறது. ஆனால், சில வேளைகளில் மன வலுவின்மை நம்
உடலையும் உள்ளத்தையும் பாதித்து, இறைவேண்டல் செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது.
தடைகளை உடைக்கும்
விடைகள்
இறைவேண்டலுக்கு
எதிராக எத்தனை தடைகள்
வந்தாலும், அனைத்தையும் உடைப்பதற்கான உத்திகளையும் ஆற்றலையும் கடவுளே நமக்குத் தந்திருக்கிறார்.
1. உடல்
ஈடுபாடு: தலை வணங்குதல், கைத் தட்டுதல், பாடல் பாடுதல், குரலை உயர்த்துதல், கண்களை மூடுதல், முழங்கால்படியிடுதல் போன்றவற்றின் வழியாக உடல் தொடர்பான தடைகளை உடைத்து, முழு உள்ளத்தோடு இறைவேண்டல் செய்யலாம்.
2. மனத்தை
ஒருங்கிணைத்தல்: பராக்குகளைத் தவிர்த்தல், கவனச்சிதறலை அகற்றி, கவனத்தை இறைவேண்டலில் திருப்புதல், சொற்களையும் சிந்தனையையும் இணைத்தல் போன்றவற்றின் வழியாக மனத்தையும் உடலையும் இறைவேண்டலில் ஒருங்கிணைக்கலாம்.
3. உணர்வுகளோடு
மன்றாடுதல்: மனத்தால் (மூளை) மட்டும் இறைவேண்டல் செய்யாமல், உணர்வுகளோடும் (இதயம்) இணைந்து இறைவேண்டல் செய்வதே நிறைவான இறைவேண்டல். சில வேளைகளில் கண்ணீர் சிந்தி பாடுவதும் மன்றாடுவதும் இறைவேண்டலை உயர் தளத்துக்கு இட்டுச்செல்கின்றன.
4. உணர்வுகளை
இறைவனிடம் ஒப்படைத்தல்: அச்சம், கவலை, கோபம், துயரம், அவமானம், ஏக்கம் போன்ற எதிர்மறைப் பேருணர்வுகளால் பாதிக்கப்படும்பொழுது நம்மால் இறைவேண்டல் செய்ய இயலாது. ஆனால், அந்த உணர்வுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை இறைவனிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்யும் முறையைத் திருப்பாடல்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
5. உடலால்
மனத்தை ஊக்குவித்தல்: மனத்தால் உடலை ஊக்குவித்தல். உடல் களைப்பாக இருக்கும்பொழுது மனமும், மனம் சோர்வுற்றிருக்கும்போது உடலும் ஒன்று மற்றொன்றை ஊக்குவிக்கும் கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
6. மன
வலிமையைப் பயன்படுத்துதல்: உடல், மனம், ஆன்மா, உணர்வுகள் ஆகியன வலிமை குறைவாக இருந்தாலும்கூட, இறைவேண்டல் செய்ய விரும்புதல் (will to pray) என்னும் ஊக்கமும்
மனவலிமையும் இறைவேண்டலை இறைவனுக்கு உகந்ததாக மாற்றுகின்றன.
7. படைப்பாற்றல்:
இறைவன் தந்த படைப்பாற்றல் இறைவேண்டலை மேம்படுத்துகிறது.
8. இறைப்புகழ்ச்சி:
இது இறைவேண்டலுக்கு இனிமையும் எளிமையும் சேர்க்கின்றது.
9. பரிந்துரை:
பிறரது பரிந்துரை மன்றாட்டு நமக்கு இறைவேண்டலால் ஊக்கம் தருகிறது.
10. பாவ மன்னிப்புக்
கோரல்: இது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, இறைவேண்டலில் ஆர்வத்தைத் தருகிறது.
11. ஒப்புரவு: இந்த
அருளடையாளம் இறைவேண்டலுக்கான மிகச்சிறந்த ஊக்க மருந்து.
12. தூய ஆவியாரின்
துணை இறைவேண்டலால் சிக்கல்களின்போதெல்லாம் தூய ஆவியார் நமக்குத் துணை நிற்கிறார்.
13. அன்னை மரியாவின்
பரிந்துரை நமக்கு இறைவேண்டல் ஆர்வம் தருகிறது.
14. சொந்தச் சொற்களில்
இறைவேண்டல் ஒரு மிகச் சிறந்த உத்தி.
15. தியாகத்தோடு இறைவேண்டல்.
எப்போதெல்லாம் நோன்பிருந்து, விழித்திருந்து, தியாகத்தோடு மன்றாடுகிறோமோ, அப்போது இறைவேண்டல் எளிதாகவும், வலிமையானதாகவும் மாறுகிறது.
எனவே,
இறைவேண்டலின் அனைத்துத் தடைகளையும் உடைக்க இறைவன் தந்துள்ள படைக்கலன்களைப் பயன்படுத்துவோமாக!
‘கூட்டியக்கத் திரு அவை’ என்பதை மாமன்றத்தின் மையப்பொருளாக வைத்தது, திரு அவை பற்றிய புரிதலில் திருத்தந்தை பிரான்சிஸ் நிகழ்த்திய ஒரு மாபெரும் புரட்சியே. இதன் வித்துகள் திரு அவை பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏட்டிலேயே காணக்கிடக்கின்றன. இதை மாமன்ற அறிக்கை நினைவூட்டுகிறது: “உண்மையில், இணைந்து பயணித்தல் என்பது திரு அவை ஒரு மறை பொருள், இறைமக்கள் சமூகம் எனும் பொதுச்சங்கப் படிப்பினையை நடைமுறைப்படுத்துவதே” (மாமன்ற முதல் அமர்வு அறிக்கையின் முன்னுரை). அதாவது, திரு அவை என்பது திருத்தந்தையையும் ஆயர்களையும் அருள்பணியாளர்களையும் முதன்மைப்படுத்திய ஒரு தெய்வீக நிறுவனம் எனும் மரபுப் புரிதலைக் கைவிட்டு, அது இறைமக்கள் சமூகம்; திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அதில் சமமான மாண்பும் இறையாட்சிப் பணிப்பொறுப்பும் உடையவர்கள்; திருநிலையினர் அதில் உயர் நிலையினர் அல்லர்; உதவி நிலையினரே எனும் புதிய புரிதலைச் சங்கம் முன்வைத்திருந்தது.
இதன்
விளைவாக பங்குப் பேரவை, நிதிக்குழு, மறைமாவட்ட அருள்பணிப் பேரவை என்பன ஏற்படுத்தப்பட்டு, பொதுநிலையினரும் திரு அவையின் அருள்பணிப் பொறுப்புகளிலும் நிர்வாகத்திலும் ஓரளவு பங்கேற்க வாய்ப்புகள் உருவாயின. இருப்பினும், பல மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் இவ்வமைப்புகள்
இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ஏற்படுத்தப்பட்ட பல இடங்களிலும் அவை
பெயரளவில்தான் பங்கேற்பு அமைப்புகளாகச் செயல்படுகின்றன. ஏனெனில், திருநிலையினரின் அதிகார ஆதிக்கமே அவற்றில் பெரிதும் நிலவுகிறது. குறிப்பாக, முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. இதனால் பொதுநிலையினரும் சமமான மாண்பும் பொறுப்பும் கொண்டவர்கள் எனும் பொதுச்சங்கப் படிப்பினைப் பெரிதும் ஏட்டளவில்தான் இருக்கின்றது. இதனால்தான் ஒன்றிப்பு, பங்கேற்பு, திருத்தூதுப் பணி என்பனவற்றை இன்றியமையாத இயல்புப் பண்புகளாகக் கொண்ட கூட்டியக்கத் திரு அவையை மாமன்றத்தின் மைய ஆய்வுப் பொருளாகத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.
கூட்டியக்க முறை
தொடர
வேண்டும்
இணைந்து
பயணிக்கும் கூட்டியக்கத் திரு அவையை மையப்பொருளாகக் கொண்ட மாமன்றச் செயல்பாடுகள் வெறும் கலந்தாய்வாக மட்டும் முடிந்துவிடக்கூடாது எனும் நோக்கு தொடக்கத்திலேயே திருத்தந்தைக்கு இருந்தது. அதனால்தான் ஆய்வு முடிவுகளைவிட ஆய்வு முறைக்கே முதன்மை தரவேண்டும் எனப் பலமுறை அவர் வலியுறுத்தியுள்ளார். அதாவது, அடிநிலைக் குழுக்களிலிருந்து தொடங்கிய மாமன்றத்திற்கான கலந்துரையாடலே இணைந்த பயணத்தின் அல்லது கூட்டியக்கத்தின் அனுபவமாக அமைய வேண்டும் என்பதும், அந்த அனுபவம் திரு அவையின் எல்லா நிலைகள், அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளிலும் கூட்டியக்கத்தன்மையை வளர்த்தெடுக்கத் தொடர்ந்து வழி வகுக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருந்தது. இதனால்தான், “16-வது சாதாரண ஆயர் மாமன்றக் கூடுகையின் முடிவு, திரு அவையின் கூட்டியக்கப் பயணத்தின் முடிவாக இருந்துவிடக் கூடாது” என்கிறார் (இஅ - இணைப்புக் குறிப்பு).
மக்கள் திரு
அவை
மலர்கின்றது
அடிமட்டக்
குழுக்களில் நடைபெற்ற மாமன்றத்திற்கான கலந்துரையாடல்களில் ஆயர்களும் அருள்பணியாளர்களும் பங்கேற்று, பொதுநிலையினருடனும் இருபால் துறவியருடனும் சமமானவர்களாகவும் சகோதரக் கிறித்தவர்களாகவும் ஒன்றுகூடி வந்தது மகிழத்தக்கது. நற்செய்திப் பணியைத் திறம்பட ஆற்றுவதில் திரு அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள், வளர்ச்சி வாய்ப்புகள், முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் என்பன பற்றிய தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதும், ஒருவர் மற்றவருடைய கருத்துகளைக் கேட்டு மதித்து, கலந்துரையாடல் மேற்கொண்டதும் பாராட்டத்தக்கது.
மாமன்றக்
கூட்டியக்கப் பயணத்தின் உச்சம்தான் வத்திக்கானில் நடைபெற்ற மாமன்றக் கூடுகைகள். கர்தினால்களும் ஆயர்களும் அருள்பணியாளர்களும் இருபால் துறவியரும் பொதுநிலையினரும் கலந்து, எட்டெட்டு பேராக வட்ட மேசைகளைச் சுற்றிச் சமமானவர்களாக அமர்ந்து, ஒவ்வொருவரும் கூறுவதை
மற்றவர்கள் கேட்டு, பல்வேறு செயல்பாடுகள் பற்றி ஒத்த கருத்தை உருவாக்கிக்கொண்டனர். உடன்பாடு எட்ட முடியாத சில பரிந்துரைகள் பற்றி ஆழமான திருவிவிலிய மற்றும் இறையியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தொடர்ந்து கலந்துரையாடி, ஒத்த புரிதலை ஏற்படுத்தி முடிவுகள் எடுக்கலாம் என அவை அடுத்த
அமர்வுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறு “பல்வேறு சூழமைகள் மற்றும் பண்பாடுகளில் வாழும் ஒவ்வொரு குலம், மொழி, மக்கள், நாடு என்பனவற்றிலிருந்து ஒன்றுகூடி வந்திருந்த எங்களுக்கு மாமன்ற நடைமுறை கடவுளின் மக்களாக இருப்பதன் ஆன்மிக அருள்சுவையைத் தந்தது”
(இஅ 17) என அவர்களே கூறியுள்ளனர்.
செவிமடுத்தல்,
இணைந்து
பயணித்தலின்
முன்நிபந்தனை
மாமன்றக்
கூடுகையிலும் மற்றும் தலத் திரு அவைகளிலும் நிகழ்ந்த கலந்துரையாடல்களில் (முஅ) மாமன்ற முதல் அமர்வின் அறிக்கையையும், (இஅ) இறுதி அறிக்கையையும் குறிக்கின்றன.
பங்கெடுத்தோரும்,
அவர்களுள் சிறப்பாகத் திரு அவையிலும் சமூகத்திலும் ஒதுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டோரும் திரு அவைத் தளத்தில் தாங்கள் பேச அழைக்கப்பெற்றது பற்றியும் தங்கள் குரல் திரு அவையில் கேட்கப்பட்டது பற்றியும் மிகவும் வியப்பு அடைந்தனர் (இஅ 50). இவ்வனுபவம் யாவருக்கும் அவரது மாண்பு ஏற்று உறுதிப்படுத்தப்படுவதாக அமைகிறது; பிறருடன் உறவாட உதவும் ஆற்றல்மிகு கருவியும் ஆகிறது.
மேலும்,
தங்களது குரலைக் கேட்கவும் தங்களுடன் இணைந்து பயணிக்கவும் கோரிய பலரைத் திரு அவை தனது கூட்டியக்கப் பயணத்தில் சந்தித்தது. அவர்களுள் முதன்மையானோர் இளைஞர்கள்; அவர்களுக்கு முன்னுரிமை தருவதன் அவசியத்தை மாமன்றக் கலந்துரையாடல்களில் உணர்ந்து, உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அருள்பணியாளர்கள் அல்லது தலைமைப் பொறுப்புகளில் இருப்போரது பாலியல், அருள்வாழ்வுசார், பொருளாதார, நிறுவன, அதிகார, மனச்சான்றுசார் ஆதிக்கம் அல்லது சீண்டல்களுக்கு ஆளானோரின் குரலுக்கும் தனிக் கவனத்துடனும் மென்மையான உணர்வுடனும் செவிமடுக்க வேண்டும் எனும் தெளிவும் பிறந்தது. ஏனெனில், “உண்மையான செவிமடுத்தலே நலம்பெறுதல், மனத்துயர், நீதி, ஒப்புரவு என்பவற்றிற்கான பாதையின் ஓர் அடிப்படைக் கூறு”
( முஅ 16க ).
தங்களது
திருமண நிலை, பாலியல்பு என்பவை காரணமாக, திரு அவையில் பல வகைகளில் ஒதுக்கப்பட்டதாகவோ
அல்லது காயப்படுத்தப்பட்டதாகவோ உணர்ந்தாலும், திரு அவை தங்களது வீடாக இருக்கவேண்டும் என விரும்புவோர் பலர்.
தீர்ப்பிடப்படும் அச்சமின்றி, தாங்கள் மதிக்கவும் தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என விரும்புவோரும் உள்ளனர்.
அத்தகையோர் மீதான ஆழமான அன்பும் பரிவும் இரக்கமும் மாமன்றத்தில் உணரப்பட்டன. ஏனெனில், “செவிமடுத்தல் கடவுளது திருவுளத்தைத் தேடிப் பயணிப்பதன் முன்நிபந்தனை”( முஅ
16h ).
(தொடரும்)
இதயத்தை ஈரமாக்கவும் இறைவனோடு ஒப்புரவாகவும் மனமாற்றம் பெறவும் தகுந்த காலம் இதுவே! ‘ஒப்புரவு’ என்ற சொல் உலக நடை, உலக ஒழுக்கம், சமம், வேற்றுமை, வேளாண்மை என்ற பல பொருள்களைக் கூறும். ஒப்புரவறிதல் என்பது உலக நடைமுறையினை அறிந்து செயல்படுவதைக் குறிக்கும். அச்சொல்லைச் சில ஆண்டுகளுக்கு முன் நம்மவர் ‘பாவசங்கீர்த்தனம்’ என்று கூறினர். ‘பாவம்’ என்பது தீமையிலும் தீயக்குற்றம். அது பாவம், பாபம், பாவனை, பிறப்பு என நான்குவகைப் பொருள்களில் விரிவாக்கம் பெறும். இந்த நான்குமே அக்கிரமம் முதலான பல பொருள்களில் வரும். ‘சங்கீர்த்தனம்’ என்பது புகழ்ந்து பாடுகை, சொல்லுகை, பாவ அறிக்கை என்ற அருஞ்சொற்களைத் தரும். ‘அருள்’ என்பதற்குக் கணக்கில் எண்ணிலாப் பொருள்கள் உள்ளன. குணமளிக்கும் (ஒப்புரவு) அருளடையாளம் என்பது, இறைமகன் இயேசு தம் திருத்தூதர்களுக்கு வழங்கியது. “அவர் அவர்கள் மேல் ஊதி, ‘தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்; எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார் (யோவா 20:22-23). ‘மனந்திரும்புதல்’ என்ற சொல்லின் பொருளும் அதுவே.
திருமுழுக்குப்
பெற்ற பின்பு, நாம் செய்த பாவத் தீமைகளுக்கு மன்னிப்பு அருளப்படுகிறது. மனித மனம் தன் துன்ப துயர், வருத்தம், கலக்கம், இடர்கள் யாவற்றையும் களைந்திட, தக்காரிடம் கூறி ஆற்றுப்படுத்திக்கொள்வதும் இயல்பு. ‘ஆற்றுதல்’
என்பது அலந்தவருக்கு உதவுதல் (கலித்தொகை); ‘துன்பம்’ கலக்கமுற்றவருக்கு உதவுதல் ஆகும். அதுபோல, இறைவனிடம் நம் துயர் (பாவம்) களைந்திட மனந்திரும்பி வரும் மனிதர் மனம் மாறுதல் பெறுகிறார். இறைவனுக்குப் பதிலாளியாக அருள்பணியாளர் இருந்து ஆற்றுப்படுத்துகிறார். பாவத்தின் கனாகனம் கருதி பாவப்பரிகாரம் (தண்டனை), பாவ அறிக்கை இடுபவருக்குக் கட்டளையிடுகிறார். அத்தகுதியை அருள்பணியாளர்களுக்கே திரு அவை வழங்கியுள்ளது. பாவியின் மனம் (உள்ளம்) வெளுத்து தூய்மையாகி விடுகிறது. அருள் வாழ்வைப் பெற்று இறைவனோடு ஒப்புரவாகி விடுகிறார்; திரு அவையோடு ஒப்புரவாகி விடுகிறார்; மன அமைதி, நிம்மதி,
ஞான அருள்வாழ்வில் ஆறுதல் அடைகின்றார். இதனால் ஏற்படும் ஞான பலன் தண்டனையிலிருந்து விடுதலையும் வேதனையுறும் மக்களுக்கு மன்னிப்புப் பெறவும் உதவுகிறது. பாவ மன்னிப்புப் பெற சஞ்சலம், ஐயம், சலனம் மூன்றையும் வெறுத்து, பொய்க்கூறல், புறங்கூறல், முகஸ்துதி, தற்புகழ்ச்சி ஆகிய தீயன நீக்கி வாழ்தல் வேண்டும். அவ்வாறே, ‘ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சமில்லை; அவனின்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
இந்தத்
தவக்காலத்தில் நாம் செய்யும் செபம், தானம், நோன்பு, பக்தி முயற்சிகள் நம் இறுதி நாளில் விண்ணுலக வாழ்விற்குச் செல்ல நமக்கு உதவும் கடவுச்சீட்டு. பயனின்றி இருப்பதன் மூலமாகவும், வீணடிக்கும் நேரங்களின் மூலமாகவும், வெட்டியாய், சோம்பேறியாய் சும்மா இருப்பதன் மூலமாகவும், பாவங்கள் முளைவிட்டுத் துளிர்க்கின்றன என்பதைச் சிந்திப்போம். மேலும், திரு அவை ஒழுங்குமுறை இரண்டில் ‘தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க’
வலியுறுத்துகிறது.
சேசுநாதர் சதகம்:
ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் பற்றி, ‘சேசுநாதர் சதகம்’ என்ற நூலில் சுட்டிக்காட்டுவதைப் படித்து உய்த்துணர்வோமா? தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகில் உள்ள வில்வராயன் பட்டியில் 1848, சித்திரை மாதம் 27-ஆம் நாள் வியாழன் அன்று பிறந்தவர் வித்துவான் ந. சவரிமுத்து என்பவர்.
இராயநல்லூரில் வாழ்ந்தவரும் அன்னாரின் நண்பருமான இறைநேசச் செல்வர், சத்தியநாத தென்கொண்டாரின் வேண்டுகோளுக்கு இணங்க, மணலூர் ஜெயங்கொண்ட மாதா பெயரில் அவர் பதிகம் பாடினார். இந்த ஓலைச்சுவடி நூலை 8.12.1977-இல் தஞ்சை புலவர் தாமஸ் நூலாக்கி தஞ்சை ஒளி நிலையம் மூலம் வெளியிட்டுள்ளார். கோவையில் பணி செய்த அருள்பணி. சி.சா. மரிய
ஆரோக்கியநாதர் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்.
இந்த
நூல் திருத்தந்தையின் புகழ், திரு அவையின் பெருமை, ஆயர்கள், குருக்கள் பெருமை, திரு அவை ஒழுங்குமுறை (6), பத்து கட்டளைகள் பற்றி 14 சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல்கள் நூறும் (சதகம் = நூறு, தசாங்கம்
= பத்து) பாடி எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலின் இறுதி வரி ‘சேசுநாதக் கடவுளே’ என்று முடிகிறது.
யூதேயா
நாட்டை மனத்தில் வைத்து, தமிழ் நாட்டை வருணிப்பது படிக்கச் சுவையூட்டுகிறது. நன்று எது? தீது எது? மனித நீதிகள், இளைஞர்கள், முதியோர், குடும்ப உறவுகள், சுற்றம், மனைவியர், பரத்தையர் நாடும் குடும்பத் தலைவர் எனப் பல பாடல்களில் உவமைகள்
வழியாக எடுத்துக்கூறி அறிவுறுத்திக் கூறுவது சிறப்பும் இன்பமும் பயப்பதாகும். மனித அறம், சமூக அறம், குடும்ப அறம், பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் போன்ற அரிய கருத்துகளை எடுத்துக் கூறும் பாங்கு படித்து இன்புற வேண்டியது. ‘மனம் வெளுக்க வழி இல்லையே?’ என அங்கலாய்க்கும் பாரதியின்
கருத்துக்கு இப்பாடல் தரும் பதில். இந்நூலின் 98-வது பாடல் தரும் கருத்துகள், படித்துச் சுவைக்க வேண்டிய தகுந்த காலம் இதுவே.
“சேற்று நீர் தேத்திடும் கொட்டையாலே
மண்டி தெளிந்த
நன்னீராகும்.
செய்ய மாத்திரையொடு மருந்துக ளூடம்பினோய்
சேரினும் சொஸ்தமாகும்;
கோத்திடும் அழுக்காடை யுவர் மண்ணினால்
சலவை கொள்ள வால் வெள்ளையாகும்;
குவலயத்தில் பசும்பொன் னுலை யிடுவதால்
கொண்ட மாசற்று மின்னும்;
ஊற்றதிக மான கிணறோடு, குளமும்
தூய்மையுறும் நீரிறைத்து விடலால்,
உற்றது சொல்லினா லிற்றது பொருந்துமென
நூல்கோ ருரைக்கு மொழிப் போல,
சீர்த்த
பாவ சங்கீர்த்தனம் புரியலாகும் என
தேவனே!
சத்திய நாதன்,
சிந்தையிலு கந்தநிதி யந்தனை மகிழ்ந்து உதவ
சேசுநாதக் கடவுளே!” (சேசுநாதர்
சதகம் 98)
அதாவது,
“கலங்கிய மண்டித் தண்ணீரை (காழ்) தேற்றாங்கொட்டை விதை கொண்டு மண்குடத்தில் உரசினால் அது நல்ல நீராகும்... உண்மை சொல்லினேன் உற்றது உலகோர்க்கு உவமை, உரைமொழி
வாயிலாக; ஆகவே, நீங்கள் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து இறையருள் பெற்று வளர சத்தியநாதனைச் சிந்தையில் இருத்தி மகிழ்ந்திடுக சேசுநாதர் கடவுளே” என்று கூறுகிறார்.
ஒப்புரவு
அருளடையாளம் மன்னிப்பு வழங்கவே உள்ளது. இவ்வருளடையாளத்தை வழங்கும்போது, பாவத்திற்குப் பரிகாரம் வழங்க முடியவில்லையே என்று நினைத்தாலும், மனம் வருந்தும் ஒரு பாவியை மேலும் மேலும் வருத்தாமல் இருக்குமாறு அருள்பணியாளர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொள்கிறார்.
“ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும்போது திறந்த மனத்தோடும், திறந்த இதயத்தோடும் இறை மன்னிப்பை வழங்குவதில் ஒருபோதும் சோர்வடையாத கருவிகளாகவும், மனம் வருந்தும் பாவியின் துன்பங்களைப் புரிந்து
கொள்பவராகவும் அருள்பணியாளர் இருப்பதை நான் காண விரும்புகிறேன்” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
மக்களிடம்
தவறான புரிதல் மிக உண்டு. மனம் வருந்தும் பாவி, வருந்தி குருவிடம் கூறித் தண்டனை பெற்றுவிடின் அத்துடன் முடிவுற்றது என நினைக்கின்றனர். மீண்டும் அதே
பாவத்தைச் செய்து, மீண்டும் கூறி வருவதும் மன்னிப்புப் பெறுவதும் தொடர் செயலாகிறது. அதனால்தான் குடும்ப உறவு, இல்லறச் சிக்கல்கள், தவறான பாலியல்கள், பிரிவினைகள் மிக எழுகின்றன. இதுபற்றிப் பொதுநிலையினருக்குச் சரியான புரிதல்கள் விளக்கப்பட வேண்டிய காலமும் இதுவே.
தொடர்ந்து
பாவம் செய்திடின் முதல் சாவு உடல் அழிவு; இரண்டாம் சாவு ஆன்மா அழிவு! “உம்
உடல் கடவுளின் ஆலயம்”
(1கொரி 6:19).
எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் யூபிலி 2025 -ஆம் ஆண்டில் பயணிக்கும் நம் ஒவ்வொருவருடைய வாழ்வும் மாற்றம்பெற, கடவுள் நல்கும் கருணையின் காலம் இந்தத் தவக்காலம். ஆகவேதான், நமது வாழ்வு எதிர்நோக்குடன்கூடிய ஒரு பயணம் என்பதையும், அதன் இலக்கு கடவுள் விரும்பும் நமது வாழ்வு மாற்றத்தில் உள்ளடங்கியுள்ளது என்பதையும் நம் திருத்தந்தை இந்த ஆண்டுக்கான தன் தவக்காலச் செய்தியில் குறிப்பிடுகிறார்.
யூபிலியின்
தொடக்கமே மனமாற்றத்திற்கான பாவப்பரிகாரச் செயலுடன்தான் நிகழ்ந்தது என்ற திருவிவிலிய வரலாற்றை நாம் மறந்துவிட இயலாது. யூபிலியின் தொடக்கம் மட்டுமல்ல, யூபிலியின் இலக்கும் வாழ்வு மாற்றத்திற்கான பயணமே! எதிர்நோக்கின் திருப்பயணத்தை மேற்கொள்ளும் நாம் உண்மையான, நிலையான, நிறைவான வாயிலான கிறிஸ்து வழியாக இந்தத் தவக்காலத்தில் நுழைந்து, உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற நம் திருப்பயணம் தவக்காலப் பயணமாய் தொடரட்டும் எனவும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
உயிர்ப்பை நோக்கிய
எதிர்நோக்கின்
பயணம்
தவக்காலம்
கிறிஸ்துவின் உயிர்ப்பினைக் கொண்டாட அழைப்பு விடுக்கும் காலம். கிறிஸ்துவின் பாடுகள், மரணம்... இதையும் கடந்து அவரது உயிர்ப்பே அவரது நிறைவாழ்வுப் பயணத்தின் வெற்றி என்பதை உறுதியாய் நம்பும் நம்பிக்கையாளர்கள் நாம். ஆகவே, நம் எதிர்நோக்கின் திருப்பயணத்திற்கான இலக்காக, கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதில் பங்கு பெறுவதையுமே நம் கண்முன் கொண்டு பயணிக்கிறோம். “ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்... சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. “சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” (1கொரி 15:53-56) எனும் புனித பவுலின் ஆர்ப்பரிப்பும் அழைப்பும் உயிர்ப்பு என்பது உண்மையான வெற்றி என்பதையும், நமது நம்பிக்கை வாழ்வின் இலக்கும் எதிர்நோக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வெற்றியில் பங்கு பெறுவதிலேயே நிறைவுபெறும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
முடங்கிப் போகாமல்,
ஒதுங்கி
நிற்காமல்
பயணித்தல்
கிறித்தவ
வாழ்வு எனும் திருப்பயணத்தில் பல்வேறு தடைகள், தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. ஆனால், அவை அனைத்தும் முன் மாதிரிகையாக நம் ஆண்டவர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள வேண்டும். பணம், பொருள், செல்வம், களிப்பு, ஆதாயம், ஆணவம், அடக்குமுறை எனும் எதிர்மறைச் சக்திகளால் நாம் நம் பயணத்தை நிறுத்திக் கொள்ளக்கூடாது. எதிர்சக்திகளின் வலிமையால், ஆதிக்கத்தால் அழுத்தப்படும்போது முடங்கிப்போய்விடக்கூடாது. நமது பயணத்தை இன்னமும் மனவுறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் நற்செய்தி விழுமிய வேட்கையுடனும் தொடர வேண்டும். எனவே, நம் கிறித்தவ வாழ்வு என்பது, கிறிஸ்துவின் இறையாட்சிப் பயணத்தில், நாம் செய்யும் தொடர்பயணம் என்பதை நாம் மறந்துவிட கூடாது.
பிறர்
நலன் தேடி, பிறரின் விடுதலையை முன்னிறுத்தி ஏழை, எளிய, பாமர மக்களின் பாகுபாடற்ற சமூக விடுதலைக்காய் இயேசு போராடியபோது, அதில் எழுந்த எதிர்ப்புகள், தடைகள் அனைத்தையும் நம்பிக்கையை ஒருபோதும் இழக்காமல் அவர் பயணித்து நமக்கு நிறைவாழ்வைத் தம் உணர்வின் மூலம் பெற்றுத்தந்த அதே பயணத்திற்கு நமக்கு அழைப்பு விடுக்கும் பயணமே உயிர்ப்பினை நோக்கிய நம் தவக்காலத் திருப்பயணம்.
எதிர்நோக்கின்
திருப்பயணம்
ஒரு
சமூகப்
பயணம்
உயிர்ப்பு
எனும் வெற்றியை நோக்கி, நிறைவை நோக்கிப் பயணித்த இயேசு, இறையாட்சியில் பலரை இணைத்துக்கொண்டு பயணித்தார். இயேசுவின் இறையாட்சிப் பயணம் ஒரு சமூகப் பயணம். தனித்து விடப்பட்ட சூழ்நிலையிலும், தடுமாற்றங்கள் தடங்கல்களாக, தடைக்கற்களாக மாறிய நேரங்களிலும் உடனே தம் தந்தையைத் தேடி ஓடிய இயேசு, அதன் தொடர்ச்சியாக மக்களோடு, அதிலும் குறிப்பாக ஏழைகளோடு, எளியவர்களோடு, இல்லாதவர்களோடு, இழந்தவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டார். அவரின் சீடர்கள், திருத்தூதர்கள், நலம் விரும்பிகள் எனப் பலரோடு இணைந்தே இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் கலிலேயா தொடங்கி நிறைவுவரை காணப்பட்டது. அதே மனநிலையும் இணைப்பும் ஒற்றுமையும் உறவும் தம் சீடர் எல்லாரிடமும் காணப்பட வேண்டும் என்பதை இயேசு அழுத்தமாக எடுத்துக் கூறினார்: “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” (யோவா 17:21-23) எனும் இயேசுவின் இறைவேண்டலில், சீடர்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற தம் ஆவலை, ஆழமான எதிர்பார்ப்பை, அறிவுறுத்தலை இயேசு வெளிப்படுத்துகிறார்.
இயேசுவின்
பயணமும் பணியும் தெளிவான இலக்குடன் இலட்சிய உறுதியுடன் செய்யப்பட்டது. ஆதிக்க மனநிலையை, அதிகாரப் போக்கை, அடக்குமுறையான ஆணவத்தை விடுத்து தம் சீடர்களும் உருவாகவும், சமூகத்தில் பணியாற்றவும் இயேசு விரும்பினார். இணைந்து
பயணித்தலில், சீடர்கள் மத்தியில், இயேசு மிகப்பெரும் தடையாகப் பார்த்தது, ‘தங்களுள் பெரியவர் யார்?’ (மாற் 9:34) என்ற ஆதிக்கமும் ஆணவமும் கொண்ட மன நிலையே! எனவேதான்
இயேசு அவர்களிடம் “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிடமும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (மாற் 9:35) என்று அறிவுரை நல்கினார். இன்றைய திரு அவைக்கும் மிகக் குறிப்பாக அனைத்துப் பணியாளர்களுக்கும் இது பொருந்தும். ஆகவே, பதவி மோகம், ஆதிக்க மனநிலை, ‘நான் பெரியவன்’
என்ற அகந்தை, பிறரை அடக்கி ஆளும் உலகப் போக்குகளை விடுத்தால்தான் திரு அவை இன்று இணைந்து பயணிக்க இயலும்.
மேலும்,
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்” (மாற்
10: 43-44) என்று தம்மையே பணியாளராக முன்னிலைப்படுத்தி, சீடர்களை உருவாக்கியது இன்றைய திரு அவையின் இணைந்த பயணத்திற்கு, ஒன்றிப்பின் பயணத்திற்கு, உறவின் பயணத்திற்கு மிகவும் அவசியம்.
எதிர்நோக்குடன்
பயணித்தல்,
வாழ்வு
மாற்றத்தை
நோக்கியது
யூபிலி
2025-இன் மையப்பொருளாக நம் திருத்தந்தை முன்மொழிந்துள்ள அறைகூவலில் “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது”
(உரோ 5:5) என்ற புனித பவுலின் வார்த்தைகளை நம் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் முன்மொழிந்துள்ளார். இந்த எதிர்நோக்கு கிறிஸ்துவின் நற்செய்திப் பணியிலும், மானிட விடுதலைப் பணியிலும், சமத்துவச் சமூகம் படைக்கும் பணியிலும் இயேசு தம் இலட்சியமாகக் கொண்டிருந்த எதிர்நோக்கு.
எத்தனை
இழப்புகள் ஏற்பட்டாலும், எதிர்நோக்கு எனும் இலட்சியப் பார்வையை இயேசு ஒருபோதும் இழக்கவில்லை. தன்னல மறுப்பு, பிறர்நலம் பேணல், பணியாளர் வாழ்வு முறை, தியாகம் நிறைந்த அன்புப்பணி இவற்றினை இலட்சிய மதிப்பீடுகளாகக் கொண்டு இயேசு தம் இறையாட்சிப் பணியில் எதிர்நோக்குடன் பயணித்தார். இன்றைய திரு அவையின் எதிர்நோக்குத் திருப்பயணத்திற்கும் இதுவே முதன்மையும் முக்கியமானதாகவும் மாறவேண்டும்.
ஆகவே,
பிறரின் நலன் தேடிப் பயணிப்பதும், இணைந்து உறவுடன் பயணிப்பதும், இயேசுவின் இலட்சியத்தை நமதாக்கிப் பயணிப்பதும் உயிர்ப்பின் சாட்சிகளாக நம்மை மாற்றும்.
“இந்த நூற்றாண்டின் பாவம், பாவ உணர்வை இழப்பதுதான்” என்று இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களைத் தொடர்ந்து திருத்தந்தை 12 - ஆம் பத்திநாதர் கூறினார். திருத்தந்தையர்களான புனித இரண்டாம் ஜான் பால், 16-ஆம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் அனைவரும் இதை மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
2014 - ஆம் ஆண்டின்
தொடக்கத்தில், தனது காலை தியானங்களின்போது திருத்தந்தை 12-ஆம் பத்திநாதரின் பிரபலமான சொற்றொடரைக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ், “பாவ உணர்வை இழப்பது தற்போதைய நாகரிகத்தின் தீமை என்றும், கிறித்தவ இறைநம்பிக்கையை வலுவிழக்கச்
செய்யும் ஒரு தீமை” என்றும் கூறினார். எனவே, சமீபத்திய காலகட்டங்களில் ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்ற
ஒரு கலாச்சாரம் ஒருவரின் செயல்களுக்கான பொறுப்பு குறித்த குற்ற உணர்வு இல்லாததன் மறுக்க முடியாத வெளிப்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இவை அனைத்தும் மதச்சார்பின்மை மற்றும் சார்பியல்வாதத்தில் (Relativism) உருவான
பின்நவீனத்துவத்தின்
(Post-Modernism) எதிர்மறை
விளைவு.
கடவுள் இல்லாத
மனிதநேயம்
‘Etsi Deus non daretur’ (கடவுள் இல்லை என்பது போல) என்பது சமகாலச் சமூகத்தை நகர்த்தும் முக்கியக் கொள்கையாகத் தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் மற்றும் பல்வேறு
வழிகளில் இது திரு அவையால் கண்டிக்கப்பட்டுள்ளது. ‘மதச்சார்பின்மை’ என்பது
கடவுள் இல்லாத மனிதநேயத்தை ஆதரிக்கும் கருத்துகள் மற்றும் நடத்தைகளின் இயக்கமாகும். இது செயல் மற்றும் உற்பத்தி வழிபாட்டை (cult of action and production) மட்டுமே மையமாகக்
கொண்டது. மேலும், ‘ஒருவரின் ஆன்மாவை இழக்கும்’
அபாயத்தைப் புறக்கணித்து, நுகர்வோர் மற்றும் இன்பத்தின் போதையூட்டும் உற்சாகத்தில் சிக்கிக் கொள்கிறது. இந்த மதச்சார்பின்மை பாவ உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் இருக்க முடியாது. பாவம் மற்றும் அதன் விளைவுகளைப் பெரிதுபடுத்தாமல் நுகர்வுக் கலாச்சாரத்தையும், இலாப நோக்கையும், நெறியற்ற இன்பத்திற்கான தேடல்களையும் நியாயப்படுத்தி மனிதர்களை மனம்போன போக்கில் வாழ வழிவகை செய்யும். தவறான வழியில் மனிதன் கடவுள் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையில் வாழலாம். ஆனால், இந்த உலகம் அவனுக்கு எதிராகத் திரும்புவதன் மூலம் முடிவடையும் என்ற கசப்பான உண்மையை அடிக்கோடிட வேண்டும்.
சார்பியல்வாதம்
மற்றும்
தார்மீக
மதிப்புகளின்
வீழ்ச்சி
சார்பியல்வாதங்களிலிருந்து
(Relati vism) பெறப்பட்ட
நெறிமுறை அமைப்பின் விளைவாகவும் பாவ உணர்வு எளிதில் குறைகிறது. இது தார்மீக நெறி முறையை (Absolute Ethics/Truth) சார்பியல்
வாதமாக்கும் ஒரு நெறிமுறை அமைப்பின் வடிவத்தை எடுக்கலாம். அதன் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மதிப்பை மறுக்கிறது. இதன் விளைவாக எந்தச் செயல்கள் நடந்தாலும், அவை நிகழும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல், தானாகவே தவறாகிவிடாது என்று அது வாதிடுகிறது. இங்கே தார்மீக விழுமியங்களின் உண்மையான திருப்பமும் வீழ்ச்சியும் உள்ளது. சூழல் மற்றும் காரணிகள் மட்டுமே ஒரு செயல் நல்லதா அல்லது கெட்டதா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாகத் தவறாகச் சித்தரித்துக் காட்டப்படும். எனவே, பிரச்சினை கிறித்தவ நெறிமுறைகளைப் பற்றிய அறியாமையில் மட்டும் இல்லை; மாறாக, தார்மீக அணுகுமுறையின் அர்த்தம், அடித்தளங்கள் மற்றும் அளவுகோல்களைப் பற்றிய அறியாமையில் உள்ளது. திரு அவையின் புறநிலை உண்மைக் கோட்பாடுகள் (Objective and Doctrinal Truth) சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய போக்கு பாவம் பற்றிய கருத்தைப் பலவீனப்படுத்துகிறது.
மனச்சாட்சியின்
‘மரணம்’
மனச்சாட்சி
இல்லாதவனுக்கு குற்ற உணர்வும் இல்லை, கற்றலும் இல்லை. பலரின்
தார்மீக மனச்சாட்சி மிகவும் மேகமூட்டமாகிவிட்டது. மனச்சாட்சி பற்றிய சரியான புரிதல் இல்லை. நவீன மனிதன் மனச்சாட்சியின் கிரகணத்தால் அச்சுறுத்தப்படுகிறான். மனச்சாட்சி பலவீனமடையும்போது, கடவுளின் உணர்வும் மறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, பாவத்தின் உணர்வும் இழக்கப்படுகிறது. திருத்தந்தை 12 - ஆம் பத்திநாதர், இந்த நூற்றாண்டின் பாவம், பாவ உணர்வை இழப்பது என்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. மனச்சாட்சியை இருட்டடிப்பு செய்தல் அல்லது பலவீனப்படுத்துதல் பல பின்வரும் ஆதாரங்களிலிருந்தும்
வருகிறது: i) தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் மகிமைப்படுத்துதலுக்கான (personal independence
and glorification) சுய
விருப்பத்தின் பெயரில் மனிதனைக் கடந்த இறைசக்தி என்ற ஒன்றின் இருப்பை நிராகரிப்பதிலிருந்து; ii) தனிப்பட்ட மனச்சாட்சியால் கண்டிக்கப்பட்டாலும் அல்லது உறுத்தப்பட்டாலும் கூட, பொதுவான மற்றும் வழக்கமான ஒருமித்தக் கருத்து (General and Conventional Consensus) மற்றும் நடத்தையால்
விதிக்கப்பட்ட நெறிமுறை மாதிரிகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து;
iii) மனிதகுலத்தின் பெரும்பகுதியை ஒடுக்கும் துயரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளிலிருந்து, சமூகத்தின் சூழலில் மட்டுமே பிழைகள் மற்றும் தவறுகளைக் காணும் போக்கிலிருந்து; iv) இறுதியாக, கடவுளின்
தந்தைமை (God’s Father hood) என்ற
கருத்தை இருட்டடிப்பு செய்ததிலிருந்து.
‘தீவிரத்திலிருந்து தீவிரம்’ அணுகுமுறை
சிலர்
கடந்தகாலத் திரு அவையின் மனப்பான்மைகளை எதிர்மறையான மிகைப்படுத்துதல்களுடன் மாற்ற முனைகிறார்கள்: i) எல்லாவற்றையும் பாவமாகப் பார்ப்பதிலிருந்து எதையுமே பாவமாகக் காணாத ஒரு போக்கு; ii) பாவத்திற்கான தண்டனையின் பயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கிலிருந்து, பாவத்திற்குத் தண்டனையே இல்லை அல்லது தண்டனை வழங்காத கடவுளின் அன்பு என்பதைத் தவறாக அறிவிக்கும் போக்கு; iii) தவறான நம்பிக்கைகளைச் சரிசெய்ய முயற்சிப்பதில் சிலர் தனிப்பட்ட மனச்சாட்சிக்கு அதிக மரியாதை காட்டி, உண்மையைச் சொல்லும் பொறுப்பைப் புறக்கணிக்கும் போக்கு. திருத்த வேண்டிய கடமையில் இருப்பவர்கள் அல்லது இது தவறு என்று திரு அவையின் போதனைகளின் அடிப்படையில் அறிவிக்க வேண்டியவர்கள் அதைச் செய்யாமல், எத்தகைய வார்த்தைகள் பிறருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அதை மட்டும் கூறி நற்பெயர் எடுக்க விழையும் ஆழமற்ற அல்லது வலிமையற்ற மனநிலையிலிருந்து மாற்றம் பெற வேண்டும்.
இறுதியாக...
இன்று
மனிதனைத் தாக்கும் கடுமையான ஆன்மிக நெருக்கடியை எதிர்கொள்வதற்கான முதல் வழி, பாவத்தின் சரியான உணர்வை மீட்டெடுப்பதுதான். திரு அவையின் தார்மீக மற்றும் இறையியல் போதனைகளை எப்போதும் நிலைநிறுத்தி, அதற்கு முரணான கருத்துகளை மற்றும் கொள்கைகளைப் பரப்பும் தவறான வாதங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் மூலம் மட்டுமே பாவ உணர்வை மீட்டெடுக்க முடியும். பாவம் உண்மையானது. நம் சகாக்கள் மற்றும் நம்மோடு இருப்பவர் கள் அனைவரும் ஒன்றைச் செய்கின்றார்கள் என்பதால் அது சரியாகிவிடாது. இத்தகைய எண்ணங்கள் நம் குற்ற உணர்ச்சிகளைக் குறைக்கலாம்; ஆனால், நாம் செய்த தேர்வுகளுக்கான நமது தார்மீகப் பொறுப்பை அவை பறிக்காது. நமது தார்மீக முடிவுகளுக்குப் பொறுப்பேற்று, கடவுளின் கருணையைத் தேட நமது மனச்சாட்சி ‘பாவ உணர்வை’ மீட்டெடுக்க வேண்டும். ‘பாவ உணர்வு’ என்பது ஒருவரின் வாழ்க்கையில் பாவத்தைப் பற்றிய துல்லியமான கருத்தாக்கத்தையும் பாவத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இந்த உணர்வு மனிதனின் தார்மீக மனச்சாட்சியில் வேரூன்றியுள்ளது, மேலும், அது அதன் வெப்பமானியாக உள்ளது. இந்தத் தவக்காலம் பாவ உணர்வை இழக்கும் பாவத்தை எதிர்த்துப் போராடவும், கடவுளிடம் திரும்புவதற்காக நம் மனச்சாட்சியைச் சுய பரிசோதனை செய்யவும் நமக்கு உதவட்டும்.
“பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால், நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக, நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுளும் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில், அவர் நம்பிக்கைக்குரியவர்” (1யோவான்
1:8-9).