இறைவேண்டல் வாழ்வு என்பது பல மலர்களால் ஆன ஒரு மாலையைப் போன்றது. அல்லது பல உணவு வகைகள் நிறைந்த விருந்தைப் போன்றது. அனைத்துக் கூறுகளும் இணைந்திருந்தால்தான் அது முழுமையடையும். சில கூறுகள் நிறைவாகவும் சில கூறுகள் குறைவாகவும் இருந்தால், இறைவேண்டல் வாழ்வு குறையானதாகவும், ஏன் சில வேளைகளில் பிழையானதாகவும் மாறிவிடலாம். எனவே, நம் வாழ்வு குறையற்றதாக, நிறைவானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.
ஒருவருடைய
இறைவேண்டல் ஆர்வத்தை, ஆழத்தை அவரது வாழ்வு மூலம் மட்டுமே நாம் அறிய முடியும். அவர் எவ்வளவு நேரம் இறைவேண்டலில் செலவழிக்கிறார் என்பதிலிருந்து அல்ல; எனவேதான், பவுலடியார் தொடக்கக்காலக் கிறித்தவர்களுக்கு இந்த எச்சரிக்கையை வழங்கினார்: “உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்”
(எபே 5:15). நம்முடைய இறைவேண்டல் வாழ்வு நிறை வாழ்வா? என்பதனைச் சில அடையாளங்களால் அறிந்துகொள்ளலாம், இறைவார்த்தை வழியாகவே:
1. இடறல்கள் இல்லா வாழ்வு:
இறைவேண்டல் வாழ்வு வாழ விரும்புகிறவர்கள், சான்றுபகர விரும்புகிறவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பு அவர்களின் வாழ்வு இடறல்கள் அற்றதாக இருக்க வேண்டும் என்பது. “கடவுள் நம்மை ஒழுக்கக் கேட்டிற்கு அல்ல; தூய வாழ்வுக்கே அழைத்தார்”
(1தெச 4:7) என்னும் வாக்கிற்கேற்ப, ஒழுக்கம் நிறைந்த, தூய வாழ்வே சான்று பகரும் வாழ்வாகும். பவுலடியாரின் இந்த அறிவுரை அதனை நினைவுபடுத்துகிறது. “தூய
ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது, ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்” (கலா
5:16).
குடி,
போதை, தொலைக்காட்சி, அலைப்பேசி என அடிமைப்படுத்தும் பழக்கங்கள் எதுவுமின்றி
வாழ்வது நல்லதொரு சான்று வாழ்வு. “நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்”
(கலா 5:13). அன்புக்கு மட்டுமே அடிமைகளாய் இருக்கலாம் என்பதே பவுல் தரும் சலுகை.
பணத்தின்
மீதும், பொருள்கள் மீதும் பற்றுகொண்ட நுகர்வு வாழ்வும் இன்று ஓர் இடறலே. எனவே, “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்” (எபி
13:5) என்னும் இறைவாக்கை மனத்தில் கொண்டு வாழ்வது அவசியம்.
2. சமூக அக்கறையுள்ள வாழ்வு:
இறைவேண்டல் வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் சமூக நல்லிணக்கம் பேணுபவர்களாக, அனைவருடனும்
நல்லுறவு கொண்டவர்களாக வாழ்தல் அவசியம். “நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்”
(மாற் 9:50) என்னும் இயேசுவின் சொற்படி வாழ அழைக்கப்படுகிறோம். பவுலடியாரும் “உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்”
(உரோ 12:18) என்று அறிவுரை கூறுகிறார்.
தன்னலமின்றி
பிறருடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு வாழ்வதே இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வு என்ற செய்தியை “அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்”
(உரோ 15:2) என்னும் இறைவாக்கில் பார்க்கிறோம். இதே செய்தியை ஒரு வேண்டுகோளாக மீண்டும் வைக்கிறார் பவுல்: “மன ஒற்றுமை கொண்டிருங்கள்.
அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்”
(2கொரி 13:11).
3. இறையச்சம் நிறைந்த வாழ்வு:
இறையச்சமே ஞானத்தின் தொடக்கம் என நாம் அறிவோம்.
இறைவனுக்கு அஞ்சி வாழ்வதே நிறைவாழ்வு. “இவ்வுலகில் நீங்கள் அந்நியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள்”
(1பேது 1:17) என்கிறார் பேதுரு. திருத்தூதர் யாக்கோபு “கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள். அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப் போகும்”
(யாக் 4:7) என்கிறார்.
4. அன்பு நிறைந்த வாழ்வு:
நிறைவாழ்வின் அடித்தளம் அன்பே. அதை அருமையாகக் கூறுகிறார் பவுலடியார்: “நம்பிக்கையின் வழியாகக் கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக”
(எபே 3:17). அந்த அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்னும் கேள்விக்குத் தன் திரு மடலில் விடை தருகிறார் யோவான்: “நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தது தான். அதைக் கடைப்பிடித்து வாழுங்கள்”(2யோவா 1:6).
5. கனி தரும் வாழ்வு:
நூறு மடங்கு பலன் தரும் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப் போல நம் வாழ்வு அமைந்தால், அதுவே சிறந்த இறைவேண்டல் வாழ்வு. “நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராய் இருப்பதே தந்தைக்கு மாட்சியளிக்கிறது” (யோவா
15:8) என்றார் ஆண்டவர் இயேசு. கடவுள் நமக்குத் தந்த பணியை நன்கு ஆற்றுவதே நம் கடமையாகட்டும். “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்” (யோவா
17:4) என்ற இயேசுவின் பணிவாழ்வு நமக்கு எடுத்துக்காட்டான வாழ்வு. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்று கூறி, தன்னையும் தன் மகனையும் அர்ப்பணித்த அன்னை மரியாவின் வாழ்வு கனி தந்த வாழ்வு. “ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்”
(திப 20: 24) என்று கூறி, அவ்வாறே வாழ்ந்த பவுலடியாரின் வாழ்வு கனி நிறைந்த வாழ்வு.
“நமது வாழ்வே நம் இறைவேண்டலாக மாறட்டும். நம் வாழ்வில் இறைவன் மாட்சி அடையட்டும்” (யோவா
15:8), ஆமென்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னைய 60 ஆண்டுகாலத் திரு அவை வரலாற்றில் மிகப் பெரும் எழுச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய ஒரு சிறப்பு நிகழ்வு உண்டு என்றால், அது 16-வது சாதாரண ஆயர் மாமன்றக் கூடுகைதான். அதன் உச்ச நிகழ்வு 2023-2024 எனும் இரு ஆண்டுகளிலும் அக்டோபர் திங்களில் கூட்டியக்கத் திரு அவை (அதாவது இணைந்து பயணிக்கும் திரு அவை) எனும் ஆய்வுப் பொருளை மையப்படுத்தி உரோமையில் நடந்தேறியது.
முன்னைய
மாமன்றக் கூடுகைகளிலிருந்து இது பல வகைகளில் வேறுபட்டிருந்தது.
இதற்கான முன் தயாரிப்பு இரு ஆண்டுகள் நீடித்தன. அந்த முன் தயாரிப்பு முன்பு எந்த மாமன்றக் கூடுகைக்கும் இல்லாத வகையில் திரு அவையின் அடிநிலையிலிருந்தே தொடங்கப்பட்டது. அதாவது, முன்பு நடந்தேறிய பல்வேறு ஆயர் மாமன்றங்களுக்கான தயாரிப்புப் பெரிதும் ஆயர்கள், இறையியலாளர்கள், இறையியல் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஆனால், இந்த 16-ஆம் மாமன்றத்திற்கான தயாரிப்பு அவற்றினின்று வேறுபட்டு, பங்குகளில் செயல்படும் அன்பியங்கள், திருத்தூதுக் குழுமங்கள், ஏனைய குழுக்கள் என்பனவற்றில் உறுப்பினர்களாக இருந்த சாதாரண பொதுநிலையினரின் கருத்துகளைக் கேட்டறிதலில் இருந்தே தொடங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின்
தனி ஒரு சிறப்பு, அதில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் திரு அவையின் வாழ்விலும் செயல்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டும் அல்ல; மாறாக, அவர்களுள் பலர் அவற்றில் அதிகம் அல்லது அறவே பங்கேற்காது ஒதுங்கியிருந்தவர்கள், தங்கள் மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைக்காது அதுவரை மௌனம் காத்தவர்கள் அல்லது மௌனம் ஆக்கப்பட்டவர்கள். இத்தகையோரிடமும் கருத்துக் கேட்கும் முயற்சியும் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. இது முன்பு ஒருபோதும் இல்லாத நடைமுறை.
இம்முயற்சிகளின்
விளைவாக பெரும்பான்மையான பங்குத்தளங்களிலும் பல்வேறு குழுமங்களிலும் இருந்து மக்கள் தங்கள் எண்ணங்களையும் ஏமாற்றங்களையும் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் துணிந்து எடுத்துரைத்தனர். ஆயர்களும்
அருள்பணியாளர்களும் மக்கள் குரலுக்குச் செவிமடுக்கவும், அவர்களுடன் இணைந்து சிந்திக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இறுதியாக
உரோமையில் நிகழ்ந்த மாமன்றக் கூடுகைகளில் பங்கேற்றவர்களும் முன்னையக் கூடுகைகளிலிருந்து பல வகைகளில் வேறுபட்டவர்களாக
இருந்தனர். முன்னைய மாமன்றக் கூடுகைகளில் பங்கேற்றவர்கள் பல்வேறு நாட்டு ஆயர் பேரவைகளின் பதிலாள்களும், வத்திக்கான் பேராயங்களின் தலைவர்களும் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட வேறுசில ஆயர்களுமே. பங்கேற்ற சில இறையியலாளர்கள் வாக்குரிமையற்ற வெறும் அறிவுரையாளர்களாகவே அவற்றில் செயல்பட்டனர். ஆனால், இந்த 16-ஆம் ஆயர் மாமன்றக் கூடுகையில்தான் முதன்முறையாக கலந்துரையாடலில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் திருத்தந்தை நியமித்த பல அருள்பணியாளர்கள், இருபால் துறவியர்,
பொதுநிலையினர் என்போரும் சம உரிமையுடன் கலந்துகொண்டனர்.
திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட இரு மாமன்றத் துணைச் செயலர்களுள் ஒருவர் பிரான்ஸ் நாட்டினராகிய அருள்சகோதரி நத்தாலி பெக்கார் என்பவர். மேற்கூறிய புதிய நடைமுறைகள் காரணமாக 16-ஆம் ஆயர் மாமன்றக் கூடுகையை ஆயர்கள் மாமன்றம் என்பதைவிட, அனைத்துலகத் திரு அவை மாமன்றம் என்றே நாம் கருதலாம்.
இத்தகைய
புதுவகை உறுப்பினர்களும் மாமன்றக் கலந்துரையாடல்களில் பங்கேற்றதால் கூட்டியக்கத் திரு அவை பற்றிய ஆயர் மாமன்றக் கூடுகை திரு அவையின் வருங்கால வாழ்க்கை, வழிபாட்டு முறை, உறவுகள், பணிகள் என்பன பற்றிய புதிய பல பார்வைகளையும் பரிந்துரைகளையும்
முன்வைக்கும்; அவற்றால் திரு அவையின் செயல்பாடுகளிலும் அமைப்புகளிலும் அதிரடி மாற்றங்கள் முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனும் எதிர்நோக்கும் திரு அவையில் முற்போக்காளர் பலரிடம் எழுச்சி கண்டது. அதற்கு மாறாக, மரபு மிகைப்பற்றாளர் பலரிடம் அதுபற்றிய அச்சமே நிலவியது.
மாமன்ற வரலாறு
16-ஆம்
சாதாரண ஆயர் மாமன்றக் கூடுகை, 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெறும் என்றும் அதன் ஆய்வுப் பொருள் கூட்டியக்கத் திரு அவை: ஒன்றிப்புறவு, பங்கேற்பு, திருத்தூதுப் பணி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 2020-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் நாள் அறிவித்தார். 2021, செப்டம்பர் 7-ஆம் நாள் மாமன்றத்தின் மையப் பொருளை விளக்கிய தயாரிப்பு ஏடும், கலந்துரையாடலுக்கான கேள்விகளை உள்ளடக்கிய கையேடும் வெளியிடப்பட்டன. அக்டோபர் 2-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் ஆயர் மாமன்றக் கூடுகைக்கான முன்னேற்பாட்டுச் செயல்பாடுகளை முன்னறிவித்து, அப்பணிகளைத் தொடங்கியும் வைத்தார். மாமன்ற நடைமுறை மூன்று படிநிலைகளைக் கொண்டதாக அமையும் எனவும், மூன்று ஆண்டு காலம் நீளும் எனவும் அவர் அறிவித்தார். அந்த மூன்று படிநிலைகளும் பின்வருவன:
1. அக்டோபர்
2021 முதல் ஏப்ரல் 2022 வரை மறைமாவட்டங்கள் அளவிலான கலந்துரையாடல்கள்.
2. செப்டம்பர்
22 முதல் மார்ச் 23 வரை கண்டங்கள் அளவில் கருத்துச் சேகரித்தல்.
3. 2023 அக்டோபர்
4 முதல் 29 வரை மாமன்றக் கூடுகை. இந்த ஒரு மாதக் கூடுகையுடன் மாமன்றம் முடிந்துவிடும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாமன்றக் கூடுகையின் இரண்டாம் அமர்வு 24, அக்டோபரிலும் தொடரும் என 22 அக்டோபர் 16-ஆம் நாள் திருத்தந்தை அறிவித்தார்.
மேற்கூறிய
மூன்று கட்ட நடைமுறை முன்னைய மாமன்றக் கூடுகைகளிலிருந்து இந்த மாமன்றக் கூடுகை மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்பதை உணர்த்தியது.
இரு
நீண்ட ஆண்டுகளாக அனைத்துலகத் திரு அவையின் எல்லா இடங்களிலும் அன்பியங்கள், பங்குப் பணிக்குழுக்கள் என்பனவற்றில் தொடங்கி மறைமாவட்டம், நாடு, கண்டம் என எல்லாத் தளங்களிலும்
நிலைகளிலும் எண்ணற்ற கருத்துரைகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பங்கு மக்களின் பரிந்துரைகள் மறைமாவட்ட அளவில் பத்து பக்க ஏடுகளாகச் சுருக்கப்பட்டன; அவை நாடளவில் பத்து பக்கங்களாகவும், பின்பு கண்டங்கள் அளவில் பத்து பக்கங்களாகவும் சுருக்கப்பட்டன. அச்சுருக்கங்கள் தொகுக்கப்பட்டு 2023, அக்டோபர் 4 தொடங்கி 29 வரை உரோமையில் தொடர்ந்த மாமன்றக் கூடுகைகளில் கலந்தாய்வு செய்யப்பட்டன.
வாக்களிக்கும்
உரிமையுடன் மாமன்றக் கூடுகைகளின் முதல் அமர்வில் பங்கேற்றோர் மொத்தம் 364 பேர். அவர்களுள் இருவர் பொதுநிலையினர், 12 அருள்பணியாளர்கள், 53 பெண் துறவியர்.
மாமன்றக்
கலந்தாய்வு முடிவுகள் 42 பக்க அறிக்கையாகச் சுருக்கப்பட்டு, திருத்தந்தையிடம் தரப்பட்டு, அக்டோபர் 29-ஆம் நாள் ‘மறைத்தூதுப் பணியில் கூட்டியக்கத் திரு அவை: தொகுப்பு அறிக்கை’
(முஅ) எனும் தலைப்பில் 40 பக்கங்களைக் கொண்ட ஏடாக வெளியிடப்பட்டன.
மாமன்றத்தின்
இரண்டாம் அமர்வு அக்டோபர் 02 - 26 நாள்களில் நடைபெற்றது. அதில் 368 பேர் வாக்குரிமையுடன் கலந்துகொண்டனர். அவர்களின் கலந்துரையாடல் முடிவுகள் கூட்டியக்கத் திரு அவைக்காக ஒன்றிப்புறவு, பங்கேற்பு, மறைத்தூதுப் பணி - இறுதி ஆவணம் (இஅ) எனும் தலைப்பில் 65 பக்க ஏடாக அக்டோபர் 26-இல் திருத்தந்தை பிரான்சிசின் தொடக்கக் குறிப்புடன் வெளியிடப்பட்டது.
எண்ணற்ற
மக்களின் பொன்னான நேரம் மற்றும் பெரும் பொருள் செலவுகளை ஏற்படுத்திய மாமன்றக் கலந்துரையாடல்கள் இறுதியாக என்னதான் பெரிதாகச் சாதித்துள்ளன எனும் கேள்வி எல்லாருடைய உள்ளங்களிலும் எழுந்துள்ளது. எனவே, தொடரும் கட்டுரைகளில் நாம் மாமன்ற அறிக்கையைச் சற்று ஆழமாக ஆய்வுசெய்து, திருத்தந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தமிழ்நாடு திரு அவை உள்பட தலத் திரு அவைகள் என்னென்ன பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்? என்னென்ன மாற்றங்களையும் புதிய முயற்சிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கண்டறிய முயல்வோம். ஏனெனில், மாமன்றம் அருமையான புதிய பல பார்வைகளையும் அவற்றைச்
செயல்படுத்த ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. அப்பரிந்துரைகள் அதிகார முறையிலானவை
எனவும் அவற்றை, ‘தலத் திரு அவைகளும் திரு அவைகளின் ஒன்றியங்களும் சட்டத்திலும் இவ்வேடுகளிலும் தரப்பட்டுள்ள பாடங்களைத் தெளிதேர்வு செய்து முடிவெடுக்கும் முறைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றன’ எனவும்
மாமன்ற இறுதி அறிக்கையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இணைத்துள்ள குறிப்பில் ஆணையிட்டுள்ளார்.
(தொடரும்)
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)
மார்த்தா:
“தந்தையே, கடவுளின் அருள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அபரிமிதமாகப் பொழியப்பட்டாலும், அதைப் பெற்றுக்கொள்வது நம்மைப் பொறுத்தது என்று கூறினீர்கள். முக்கியமாக, நம் தரப்பில் இரண்டு செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலாவதாக, கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் உறவை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது குறித்து கடந்த கட்டுரையில் நாம் சிந்தித்தோம். இரண்டாவதாக, மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது என்று கூறினீர்கள். கடவுளின் அருளுக்கும் மனத்தூய்மைக்கும் என்ன தொடர்பு உண்டு என்று சொல்ல முடியுமா?”
அருள்பணி:
“இரு உதாரணங்களோடு ஆரம்பிக்கலாம். கிறிஸ்டினா, உனக்குக் கொஞ்சம் இரும்புத் துகள்கள் தேவைப்படுகின்றன; அவை மண்ணில் கலந்து கிடக்கின்றன என்பது உனக்குத் தெரியும். அப்படியானால் இரும்புத் துகள்களைப் பெற நீ என்ன செய்வாய்?”
கிறிஸ்டினா:
“ஒரு காந்தத் துண்டை எடுத்து மண்ணில் புரட்டுவேன். அது இரும்புத் துகள்களை ஈர்க்கும் தன்மை வாய்ந்தது. எனக்குத் தேவையான இரும்புத் துகள்கள் கிடைத்துவிடும்.”
அருள்பணி:
“ஒருவேளை உனக்குக் காந்தத் துண்டு கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு மரக்கட்டையையோ, அலுமினியத் துண்டையோ மண்ணில் போட்டு புரட்டினால் உனக்கு இரும்புத் துகள்கள் கிடைக்குமா?”
கிறிஸ்டினா: “எப்படிக் கிடைக்கும் தந்தையே? மரக்கட்டைக்கும் அலுமினியத் துண்டுக்கும் இரும்புத் துகள்களை ஈர்க்கும் தன்மை இல்லையே!”
அருள்பணி:
“இன்னும் ஓர் உதாரணம்; அகஸ்டின், உங்கள் வீட்டில் இருக்கின்ற தொலைக்காட்சிப் பெட்டியில் பல்வேறு அலைவரிசைகளில் நிகழ்வுகளைப் பார்க்கிறீர்கள். காரணம் என்ன?”
அகஸ்டின்:
“தொலைக்காட்சிப் பெட்டி இந்த இடத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் உள்ள பல்வேறு விதமான அலைநீளம் உள்ள மின் காந்த அலைகளை ஈர்ப்பதே காரணம் தந்தையே!”
அருள்பணி:
“இத்தகைய அலைகளை ஒரு குளிர்சாதனப் பெட்டியோ, அலமாரியோ ஈர்க்க முடியுமா?”
அகஸ்டின்:
“அதெப்படி முடியும் தந்தையே? மின் காந்த அலைகளை ஈர்க்கின்ற தன்மை தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி, அலைப்பேசி போன்றவற்றிற்கு
மட்டுமே உண்டு!”
அருள்பணி: “இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத காரியங்கள் விரவிக் கிடந்தாலும், அவற்றை ஈர்ப்பதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் அவை நமதாகும் என்பதைத்தான் மேற்கண்ட இரு உதாரணங்களும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இது கடவுளின் அருளுக்கும் பொருந்தும். கடவுளின் அருள் எல்லா இடங்களிலும் விரவிக் கிடந்தாலும், அதை ஈர்க்கின்ற தன்மை தூய மனத்திற்கே உண்டு. கறைபடிந்த மனத்தால் கடவுளின் அருளை ஈர்க்க முடியாது. அருள் என்பது கடவுளிடமிருந்து வரும் தூய ஆற்றல்! தூய்மையானதைத் தூய்மையானதுதானே ஈர்க்க முடியும்!”
அன்புச் செல்வன்:
“தந்தையே, நீங்கள் இதைச் சொல்லும்போது நான் படித்த ‘ஈர்ப்பின் விதி’
(the law of attraction) என்பது
என் நினைவிற்கு வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சில அடிப்படையான விதிகளின்படி செயல்படுகிறது. இவை ‘பிரபஞ்ச ஆன்மிக விதிகள்’
(Cosmic spiritual
laws) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய விதிகளில் ஒன்று ‘ஈர்ப்பின் விதி’ என்பதாகும். நம் மனத்தில் எத்தகைய மனநிலையை ஓட விடுகின்றோமோ, அதற்கேற்ற
நிகழ்வுகளையும், மனிதர்களையும் மனம் தன்பால் ஈர்க்கிறது என்பதே ஈர்ப்பின் விதி. நம் சிந்தனை ஒரு காந்தம் மாதிரி! எதை நம் சிந்தனையில் அதிகமாக ஓட விடுகின்றோமோ, அத்தகைய
செயல்பாடுகளை அந்தச் சிந்தனை நம் வாழ்க்கைக்குள் கொண்டுவந்து விடுகின்றது. உதாரணமாக, ‘வாழ்க்கையில் நாம் யாரையும் நம்ப முடியாது’
என்று சதா சிந்தித்துக் கொண்டிருந்தோம் என்றால், நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ‘வாழ்க்கையில் ஆபத்து ஏதாவது வந்துவிடுமோ?’ என்று பயந்து பயந்து வாழ்ந்தோம் என்றால், நாம் ஆபத்துகளைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதற்கு மாறாக, ‘மனிதர்கள் நம்பத்தக்கவர்கள்’ என்று
எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருந்தோம் என்றால், நம்பிக்கைக்குப் பாத்திரமான மனிதர்களை அதிகமாக நம் வாழ்வில் சந்திப்போம். ‘என் வாழ்வில் நடப்பவை அனைத்துமே நல்லவை, நலம் பயப்பவை’ என்ற சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதியவிட்டோம் என்றால், வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் நலம் பயப்பவையாக, நமக்கு வளர்ச்சியைத் தருபவையாக இருக்கும். நேர்மறையான சிந்தனை நேரிய நிகழ்வுகளையும் நேரிய மனிதர்களையும் நம்பால் ஈர்க்கிறது. எதிர்மறையான சிந்தனை எதிர்மறையான நிகழ்வுகளையும், எதிர்மறையான மனிதர்களையும் நம்பால் ஈர்க்கிறது.”
அருள்பணி: “நீங்கள் சொல்வது உண்மைதான்! எனினும், ஈர்ப்பின் விதியை நாம் ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம். நாம் எதன்மீது ஆசைப்படுகிறோமோ அது நமக்குக் கிடைத்துவிடும் என்பதல்ல ஈர்ப்பின் விதி; மாறாக, எத்தகையவர்களாக நம்மையும், நம் மனத்தையும் வைத்துக்கொள்கிறோமோ அதற்கு ஏற்பவே நிகழ்வுகளையும் மனிதர்களையும் நம்பால் நாம் ஈர்க்கின்றோம் என்பதே ஈர்ப்பின் விதி! நீங்கள் கொடுத்த அதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு மனிதர் தன்னிலே நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவராக இருந்துகொண்டு, ‘எனக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வேண்டும்’
என்ற எண்ண ஓட்டத்தைத் தன்னில் இரவு பகலாக ஓடவிட்டார் என்றால், அவருக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று கூற முடியாது. இதற்கு மாறாக, தன்னை நம்பிக்கைக்குரியவராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அதேவேளையில் ‘நம்பிக்கைக்குரிய நண்பர்கள் எனக்கு வேண்டும்’
என்ற எண்ணத்தைத் தன்னில் ஓடவிட்டார் என்றால், அவர் நம்பிக்கைக்குரிய நண்பர்களைக் கண்டு கொள்வதற்கான வாய்ப்பு உண்டு.”
கிறிஸ்டினா:
“ஒரு மனிதரின் ஆசைகளுக்கு ஏற்ப அல்ல; மனநிலைக்கு ஏற்பவே ஈர்ப்பு விதி செயல்படுகிறது என்று சொல்கிறீர்கள்! அப்படித்தானே தந்தையே?”
அருள்பணி:
“ஆம்! இப்போது கடவுளின் அருளுக்கு வருவோம். மனத்தில் வெறுப்பையும் பழிவாங்குதலையும் ஆணவத்தையும் சுமந்து கொண்டு, ‘கடவுளின் அருள் எனக்கு வேண்டும்’
என்று ஒருவர் இரவு பகலாகச் சிந்திப்பதால் கடவுளின் அருள் அவருக்குக் கிடைத்துவிடுவதில்லை. மாறாக, கடவுளின் அருள் தன்னை வந்தடைகின்ற அளவில் தன்னில் அன்பையும் தாழ்ச்சியையும் மன்னிப்பையும் ஒருவர் உருவாக்கிக்கொண்டார் என்றால், அவர் தேடி ஓடுகின்ற கடவுளின் அருள் அவரைத் தேடி வரும்.”
மார்த்தா:
“ஓ! அதனால்தான் நாம் எல்லா வழிபாடுகளிலும் பாவமன்னிப்புச் சடங்கு என்ற ஒன்றை வைத்திருக்கிறோமா? இச்சடங்கின் உதவியோடு நம் மனத்தைத் தூய்மையாக்கும்போது, நம் மனம் கடவுளின் அருளை ஈர்க்கின்ற ஆற்றல் வாய்ந்ததாக மாறிவிடுகிறது... அப்படித்தானே?”
அருள்பணி:
“ஆம்! ஈர்ப்பின் விதியின் ஒரு பகுதியாக FABT என்பது
குறித்துச் சொல்வது வழக்கம். Feeling, Action, Belief, Thoughts என்பதன் சுருக்கமே FABT. நம்
உணர்வுகளை முதிர்ச்சியானவையாகவும், நம் செயல்பாடுகளைச் சிறந்தவையாகவும், நம் ஆழ்மன நம்பிக்கைகளை நேர்மறையானவையாகவும், நம் சிந்தனைகளை உயர்வானவையாகவும் வைத்துக் கொண்டால், கடவுளின் அருளை ஈர்க்கின்ற காந்தமாக நாம் மாறிவிடுகிறோம் என்று அர்த்தம்.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, இதற்கு உதாரணமாக அன்னை மரியாவைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். அவர் தன்னைத் தூய்மையின் உச்சத்தில் வைத்துக்கொண்டதால்தான் கடவுளின் மகனைத் தன் உதிரத்தில் ஈர்க்கின்ற அளவிற்கு உயர்ந்த நிலையில் இருந்தார்; ‘அருள் நிறைந்தவரே’ என்று
வானதூதரால் வாழ்த்தப்படும் நிலையில் அவர் இருந்தார்.”
அருள்பணி:
“அருமையாகக் கூறினீர்கள். அன்னை மரியா பற்றித் திரு அவை நான்கு இறை நம்பிக்கை கோட்பாடுகளைத் தருகிறது: அ) மரியா இறைவனின்
தாய், ஆ) மரியா பாவமின்றி
உருவானார் (Immaculate Conception of Mary), இ) மரியாவின்
கன்னிமை (The Virginity of Mary), ஈ)
மரியாவின் விண்ணேற்பு. இவை அனைத்துமே மரியாவின் தூய்மையோடு தொடர்புடையவை என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.”
(தொடரும்)
பாவத்தின் மீதான
வெற்றி
ஒரு
பெண்
வழியாக
வருகிறது
(தொநூ
3:15) (Victory over sin comes through a woman)
மீட்புப்
பணியில் கிறிஸ்துவோடு ஒத்துழைப்பதன் வழியாகச் சாத்தானை வெற்றிக்கொள்வதில் கன்னி மரியா சிறப்பானதொரு பங்களிப்பைத் தருகின்றார்.
1. “எவ்வாறு உலகிலே
கிறிஸ்துவின் வருகை படிப்படியாகத் தயார் செய்யப்பட்டு வந்தது என்னும் மீட்பு வரலாற்றைப் பழைய ஏற்பாட்டு நூல்கள் விவரிக்கின்றன. தொன்மை வாய்ந்த இந்நூல்கள் திரு அவையில் வாசிக்கப்பெற்று, பிற்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் ஒளியில் உணரப்பெறும்போது மீட்பரின் தாயான ஒரு பெண்ணின் உருவகத்தைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 55). இந்த அறிக்கைகளோடு இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மரியா பற்றிய கருத்துருவமானது மீட்பு வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே படிப்படியாக எவ்வாறு வளர்ந்து வந்தது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் மரியா பல இடங்களில் மறைமுகமாக
ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.
ஆனாலும், அவை திரு அவையில் வாசிக்கப்படுகின்ற பொழுதும், புதிய ஏற்பாட்டின் ஒளியில் விளக்கப்படுகின்ற பொழுதும் அந்தப் பழைய ஏற்பாட்டுக் குறிப்புகள் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. மரியாவின்
திருவயிற்றிலிருந்து இந்த உலகிற்கு வரவிருந்த கிறிஸ்து பற்றிய பழைய ஏற்பாட்டு வெளிப்பாட்டிற்கு, இந்தத் திருவிவிலிய ஏடுகளை எழுதுவதற்கு மனிதர்களைத் தூண்டியதன் வழியாகத் தூய ஆவியார் தயார் செய்தார்.
2. மீட்பரின்
தாயை முன்னறிவித்த திருவிவிலிய ஏடுகளிடையே, திருச்சங்கமானது ஆதாம்-ஏவாளின் பாவத்திற்குப் பிறகு அவரின் மீட்புத்திட்டத்தைக் கடவுள் வெளிப்படுத்திய திருவிவிலியப் பகுதிகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. தீய சக்தியின் மொத்த உருவமான அந்தப் பாம்பிடம் கடவுள் இவ்வாறு கூறுகின்றார்: “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்” (தொநூ
3:15). 16-வது நூற்றாண்டிலிருந்து திரு அவையின் பாரம்பரியத்தால் தொடக்க நற்செய்தி (Protogospel) என்று
அழைக்கப்பட்ட இந்த அறிக்கைகள் மனுக்குலத்தின் தொடக்கத்திலிருந்தே பாவத்திலிருந்து அதனை மீட்பதற்கான கடவுளின் விருப்பத்தை நாம் அறிந்துகொள்வதற்கு உதவுகின்றன. திருவிவிலிய ஆசிரியர்களின் சித்தரிப்புகளின்படி, பாவத்திற்கான கடவுளின் முதல் எதிர்வினை உண்மையில் பாவிகளைத் தண்டிப்பதிலில்லாமல், மீட்பிற்கான நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவதிலும், அவரை ஏளனம் செய்தவர்களையும் நோக்கி அவரின் தாராள குணத்தைக் காட்டியதன் வழியாக, மீட்புப் பணியில் அவர்களைத் துடிப்புடன் ஈடுபடச் செய்வதிலும் இருந்தது.
முதல்
மனிதனாகிய ஆதாமுக்கு முன்பே பாம்பின் ஆசைக்கு (சபலத்திற்கு) இணங்கிய பெண்ணின் தனித்தன்மை வாய்ந்த அந்தத் தலைவிதியைத் தொடக்க நற்செய்தியின் வார்த்தைகள் வெளிப்படுத்தினாலும், அதன் பிறகு இறைத்திட்டத்தின் விளைவினால் பெண்ணானவள் கடவுளின் முதல் நண்பராகின்றாள். மனிதனைப் பாவத்தை நோக்கி மயக்கிச் சிக்க வைத்ததில் பாம்பின் முதல் துணையாளியாக இருந்தவள் ஏவாள்தான். இந்தச் சூழ்நிலையை அப்படியே தலைகீழாக மாற்றி, பாம்பின் பகையாளியாக அந்தப் பெண்ணை மாற்றுவேன் என்று கடவுள் அறிவிக்கின்றார்.
3. எபிரேய
மூலத்தின்படி, தொடக்க நூலின் பாம்பிற்கு எதிரான செயலை நேரடியாகப் பெண்ணிற்குக் குறித்துகாட்டாமல், திருவிவிலிய ஆய்வாளர்கள் மரியாவின் மகனுக்குத்தான் குறித்துக் காட்டுகின்றார்கள். இருப்பினும், சோதிப்பவர்க்கு எதிரான அந்தப் போராட்டத்தில் அந்தப் பெண் ஆற்றப்போகின்ற பங்களிப்பிற்கு அந்தக் குறிப்பானது முக்கியத்துவம் கொடுக்கின்றது. உண்மையில் அந்தப் பாம்பைத் தோற்கடிக்கக் கூடியவராக அவரின் மகன்தான் இருப்பார்.
யார்
இந்தப் பெண்? இந்தப் பெண்ணின் பெயர் எந்த இடத்திலும் திருவிவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஏவாளின் பாவத்திற்குப் பரிகாரமாகக் கடவுளால் விரும்பப்பட்ட புதியதொரு பெண்ணைப் பற்றியதொரு பார்வையை நமக்குத் தருகிறது. உண்மையில், பெண்ணின் மதிப்பு மற்றும் பங்கை மீட்டு சாத்தான் மீதான கடவுளின் வெற்றியில் அவளின் தாய்மைப் பணியைச் செய்வதன் வழியாக நிலையற்ற மனுக்குலத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான பங்களிப்பைத் தருவதற்கு அப்பெண்ணானவள் அழைக்கப்படுகின்றார்.
4. புதிய
ஏற்பாடு மற்றும் திரு அவையின் பாரம்பரியத்தின் ஒளியில், அந்தத் தொடக்க நற்செய்தியால் அறிவிக்கப்பட்ட அந்தப் பெண்ணானவள் மரியாதான் என்று நாம் அறிவோம். மேலும், அவருடைய ‘வித்தில்தான்’ பாஸ்கா
மறைபொருளில் சாத்தானுடைய சக்தியின் மேல் வெற்றிகொண்ட அவரின் மகனான இயேசுவை நாம் கண்டுகொள்கின்றோம்.
அந்தப்
பாம்பிற்கும் பெண்ணிற்குமிடையே கடவுள் வைத்த அந்தப் பகைமையானது இரண்டு வழிகளில் மரியாவில் நிறைவேறுவதையும்
நாம் காணலாம். கடவுளின் நிறைவான கூட்டாளியாகவும், சாத்தானின் எதிரியாகவும் இருப்பதற்காகப் பாவத்தின் எல்லாக் கறைகளிலுமிருந்து பாதுகாக்கப்பட்டு தூய ஆவியாரின் அருளில் உருவாக்கப்பட்ட அமல உற்பவத்தின் வழியாக மரியா சாத்தானின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார். அதோடு, தீய சக்திக்கெதிரான போரில் மரியா முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து, அவருடைய மகனின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இவ்வாறு, அவரின் ஆன்மிக அழகையும், அதிசயிக்கத்தக்க பணியில் அவரின் நெருங்கிய பங்களிப்பையும் எடுத்துக்கூற திரு அவையின் நம்பிக்கை வழியாக மரியாவுக்கு வழங்கப்பட்ட ‘அமல
உற்பவி’ (Immaculate Conception) மற்றும் ‘மீட்பரின் உடன் உழைப்பாளர்’ (Co-operator of the Redeemer) போன்ற சிறப்புப் பெயர்கள் அந்தப் பாம்பிற்கும் புதிய ஏவாளுக்கும் இடையேயுள்ள என்றென்றைக்குமான பகைமையைக் காண்பிக்கின்றன.
5. திருவிவிலிய
விளக்கவுரையாளர்களும்
இறையியலாளர்களும் மரியா, புதிய ஏவாள் என்கின்ற சிந்தனையானது மீட்புத் திட்டத்தின் மீதான தொடக்க நூல் பக்கங்களிலிருந்து மிளிர்கின்ற ஒன்றாகும் என்று கருதுகின்றனர். அந்த ஏட்டில் அவர்கள் ஏற்கெனவே மரியாவுக்கும் திரு அவைக்குமிடையேயான தொடர்பைக் காண்கின்றனர். இங்குத் தொடக்க நூலில் பொதுவானதொரு சொல்லாடலாகப் பயன்படுத்தப்பட்ட ‘பெண்’ என்ற சொல்லானது சிறப்பாக தீயசக்திக்கு எதிரான போரில் பங்குகொள்ள அழைக்கப்பட்டவர்கள் என்கின்ற விதத்தில், நாசரேத்தூர் மரியாவோடு அவரின்
மீட்புத் திட்டச் செயலில் இணைந்து செயல்பட பெண்களைத் தூண்டுகிறது.
ஏவாளைப்
போன்று பெண்களும் சாத்தானின் ஏமாற்றுதலுக்குப் பலியாகலாம். ஆனாலும், அவர்களும் மீட்பிற்கான வழியில் கடவுளின் முதல் நண்பர்களாகி மரியாவோடு இணைவதன் வழியாக எதிரியோடு போரிடுவதற்கானதொரு சிறப்பான வலிமையைப் பெற முடியும். பெண்ணுடனான
கடவுளின் இந்தப் புரிந்துகொள்ள முடியாத உறவைப் பல்வேறு வழிகளால் இன்றும் நம்மால் காண முடியும். பெண்களின் இடைவிடா தனிச்செபம், திரு வழிபாட்டுப் பக்திமுயற்சி, மறைப்பணி, அன்பிற்கான சாட்சியம், குடும்பத்தில் மறைக்கல்வி, அர்ப்பணிப்பு வாழ்விற்கான இறையழைத்தல் மற்றும் பல.
இவை
அனைத்துமே முதல் நற்செய்தியின் மிகவும் உறுதியான நிறைவேற்றத்திற்கான அடையாளங்களாகும். உண்மையில், திரு அவையின் எல்லைகளையும் தாண்டி உலகம் அனைத்திற்கும் ‘பெண்’ என்ற இந்தச் சொல்லை விரிவுபடுத்தப் பரிந்துரைக்கலாம். இவ்வாறு குறிப்பாக, சாத்தானுக்கும் தீமைக்கும் எதிராகக் கடவுளின் முதல் துணையாளராக அறிவிக்கப்பட்ட மரியாவின் பணியில் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்ற அவரின் (மரியாவின்) தனித்துவமிக்க அழைத்தலானது, மனுக்குலத்தின் மற்றும் ஒவ்வொரு பெண்ணின் அழைத்தலிலிருந்தும் பிரிக்கமுடியாததாக
இருப்பதைத் தொடக்க நற்செய்தியானது காட்டுகின்றது.
மூலம்: Pope John Paul II, Victory
over sin comes through a woman, in «L’Osservatore Romano», Weekly Edition in
English, 31 January 1996, p. 11.
ஒருவர் எவ்வளவுதான் இறைவேண்டல் செய்தாலும் வழிபாடுகளில் பங்கேற்றாலும், அவரிடம் சாதி உணர்வு இருந்தால், அவரது ஆன்மிகம் போலியானதே. இன்னும் சொல்லப்போனால், அவர் கிறித்தவரே அல்லர். காரணம், சாதி மறுப்பே கிறித்தவத்தின் நிபந்தனை. ஆம், ஒருவர் தனது சாதியை மறுக்காதவரையில் அவர் முழுமையான கிறித்தவராக இருக்க முடியாது.
சாதி
உணர்வு பல தீமைகளைக் கொண்டிருக்கிறது.
‘சாதிப் பிளவுகள் மனித மாண்பின் மறுப்பு’
‘சாதி மானுட ஒற்றுமைக்குப் பகை’
‘கிறித்தவர்களிடையே சாதி உணர்வு கிறித்தவ உறவின் பிறழ்வு’
‘சாதி ஆன்மிகத்தின் பிழை’
‘சாதிய உணர்வு நற்செய்தி அறிவிப்புக்குத் தடை’
மேற்காணும்
திடுக்கிடும் கருத்துகளையெல்லாம் கூறியவர் யார் தெரியுமா? திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். ஆம்,
17.11.2003 அன்று தமிழ்நாடு ஆயர்கள் உரோமையில் திருத்தந்தையைச் சந்தித்தபோதுதான் அவர் இந்தக் கருத்துகளின் மூலம் தமது மனக்குமுறலை வெளியிட்டார்.
தமிழ்நாடுத்
திரு அவை - விவிலியப் பணிகள், திருவழிபாட்டுப் பணிகள், கல்வி-சமூகப் பணிகளின் வழியாக மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக எண்ணிக்கொள்கிறது. ஆனால், உண்மையில் இங்குச் சாதியம் புரையோடிப் போயிருக்கிறது. திரு அவை மேலாண்மையின் மேல்மட்டத்திலிருந்து அடிவரையில் சாதியம் வேரூன்றியிருக்கிறது என்பது நம்மீது வைக்கப்படும் மறுக்க இயலாத குற்றச்சாட்டு. சாதியம் ஒரு சாபக்கேடு, ஓர் இடறல், ஓர் ஆன்மிகப் பிழை என்பதை நாம் உணரவில்லை. எனவேதான், திருத்தந்தை நம் கண்களைத் திறக்க வேண்டியதிருந்தது.
சாதியம்
கிறித்தவத்தோடு ஒன்றி வாழ முடியாது. காரணம், சாதியம் அடிப்படையிலேயே மனிதர்களைப் படிநிலையாகப் பிரிக்கிறது. கிறித்தவமோ ஒரே தந்தையின் பிள்ளைகளாக இணைக்கிறது. “நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்” (உரோ
12:5) என்கிறார் பவுலடியார்.
பவுலைப்
பொறுத்தவரையில் சாதியம் என்பது ஒரு பாவம். கிறித்தவர்களைப் பிரிக்கின்ற எதுவுமே பாவம்தானே! அவர் தருகின்ற பாவங்களின் பட்டியலைப் பாருங்கள். “ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை” (கலா
5:19-21). எனவே, சாதிய உணர்வு கொள்வோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடையப்போவதில்லை என அவருடன் சேர்ந்து
நாமும் கூறலாம்.
கொரிந்து
நகரக் கிறித்தவரிடையே பிளவுகள் இருப்பதை அறிந்து வருந்தினார் பவுல். “நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடிவந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல”
(1கொரி 11:18, 20) என்றார் அவர். இத்தகைய தெளிவு நமக்கும் தேவை. சாதிய உணர்வோடு நற்கருணை அருந்துவது தவறு. கோவிலிலேயே சாதிய வழியில் மக்கள் பிரிக்கப்பட்டிருந்தால், அது எவ்வளவு பெரிய கேடு!
எப்போது
நாம் திருமுழுக்குப் பெற்றோமோ, அப்போதே புதுப்படைப்பாக மாறிவிட்டோம். அப்போதே நமது பிளவுகள் நீங்கி, நம்மில் ஒன்றிப்பு நிகழ்ந்துவிட்டது. “நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே. தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே, ஆண்டவர் ஒருவரே. நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே. திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே”
(எபே 4:4-6) என்று விளக்குகிறார் பவுல். “இனிமேல் நாங்கள் யாரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை. ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” (2கொரி
16-17) என்னும் இறைமொழிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
சாதிய
முறையின் மிக மோசமான நீட்சி தீண்டாமை, சிலரை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று
ஒதுக்கிவைப்பது. அவர்களுடன் உண்டாலோ, உறவாடினாலோ அது நம்மைத் தீட்டுப்படுத்துகிறது என்னும் எண்ணம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், இறைவார்த்தை தீண்டாமையை எதிர்க்கிறது. “தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல என ஆண்டவர் இயேசுவுடன்
இணைந்து வாழும் எனக்குத் தெரியும். இது என் உறுதியான நம்பிக்கை”
(உரோ 14:14) எனத் துணிந்து அறிவிக்கிறார் பவுல். “கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்” (உரோ
15:7) என்பது அவரது அறிவுரை.
தொடக்கக்
காலத் திரு அவையினர் தங்களுக்குள் எந்தப் பிளவுகளும் இன்றி ஒன்றி வாழ்ந்தனர் என்னும் செய்தி நமக்கு ஆறுதலும் ஊக்கமும் தருகின்றது. “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்”
(திப 4:32) என்று வாசிக்கிறோம். அவர்களைப் போலவே ஏன் நாமும் வாழக்கூடாது? “நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்” (1கொரி
12:27) என்னும் பவுலடியாரின் வாக்கை நினைவில் கொள்வோம்.
‘சாதிவெறிதான் தவறு, சாதிய உணர்வு தவறல்ல’ என எண்ணிக்கொள்வோர் நம்மிடம் உண்டு.
வெளிப்படுத்தப்படாத சாதி வெறிதான் சாதி உணர்வு என்பதை அவர்கள் உணர்வதில்லை. என்றாவது ஒருநாள் அந்த உணர்வு வெறியாக வெளிப்படலாம். கிறித்தவரிடம் இருக்க வேண்டியது ‘நாம் எல்லாரும் ஒன்று’ என்னும் உணர்வுதான்.
சாதிய
உணர்வோடு நாம் நல்ல கிறித்தவராக வாழமுடியாது. விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாட இயலாது. எனவே, நம் மனத்திலும் வாழ்விலும் சாதியை மறுப்போம்.
சாதிய
எண்ணங்களை அகற்றி, ‘பிற சாதி’ என அழைக்கப்படுவோருடன் நட்புறவு கொண்டாடி
நாம் கிறித்தவர் என அறிக்கையிடுவோம். சாதி மறுப்பு
சமத்துவ வாழ்வே கிறித்தவ இறைவேண்டலின் நிறைவு என்பதை உணர்வோம்.
“தந்தையே, எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா
17:21) என்னும் இயேசுவின் ஏக்கத்தை நிறைவேற்றுவோம்.
5. இளையோரைக் காக்க அழைப்பு
இளையோரின்
கனவுகளும் விருப்பங்களும் பொய்த்துப் போகாதபடி, அவர்கள் ஏமாறாத வண்ணம் அவர்களைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை. ஏனெனில், எதிர்காலம் அவர்களின் உற்சாகத்தைப் பொறுத்தே அமைகின்றது. பேரழிவுகள் ஏற்படும்பொழுதும், மக்கள் தேவையில் உள்ளபோதும், யாரையாவது அவசரத்தில் தூக்கிவிட வேண்டும் என்று எண்ணும்போதும் ஓடோடி வந்து நமக்கு உதவுகிறவர்கள் இளைஞர்கள். எனவே, அவர்களுடைய ஆற்றலை எப்பொழுதும் நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வாழ்வில் அவர்கள் உயரும்பொழுது வேலைவாய்ப்பை வழங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ‘கனவுகள் நனவாகாது’
என்கிற சூழ்நிலை வரும்பொழுது, இயல்பாகவே அவர்கள் தளர்ச்சி அடைவார்கள். எனவே, அவர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தார்மீகப் பொறுப்பு.
குறிப்பாக,
போதைப்பழக்கங்களில் மூழ்கி, ஆபத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இளைஞர்கள், தற்காலிக இன்பத்தைத் தேடக்கூடிய இளைஞர்கள் இருளிலிருந்து மீட்கப்பட வேண்டும். அழுகையிலிருந்து அழகிய
வாழ்வை நோக்கி நகர வேண்டும். அதற்காக ஒவ்வொரு செயலிலும் நம்முடைய அக்கறையையும், கரிசனையையும் காட்டுவதற்கு முன்வர வேண்டும்.
இளையோருடன்
நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய நம்பிக்கையே இளைஞர்கள்தாம். எனவே, மிகப் பெரிய இடைவெளியைப் பெரியவர்களும் இளைஞர்களோடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாறாக, நமது அருகாமைதான் அவர்களுடைய மகிழ்ச்சி நிறைந்த வாழ்வின் அடையாளம் என்பதை நம் உடனிருப்பு வழியாக நாம் வெளிப்படுத்த முன் வருவோம். அன்பியங்களில் உள்ள இளைஞர்களை ஒன்று கூட்டி அன்பிய நிர்வாகிகள் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனையும் ஆற்றுப்படுத்துதலும் உற்சாகமும் வழங்கலாம்.
6. புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க அழைப்பு
தங்கள்
குடும்பங்களுக்கு நலமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்னும் சிந்தனையோடு தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறுகின்ற புலம்பெயர்ந்தவர்கள் நம்மிடம் புகலிடம் தேடி வரும்பொழுது நாமும் அவர்களுக்கு நமது பொறுப்புணர்வுடன் கூடிய மாண்புடன் வாழ்வதற்கான உரிமையைக் கொடுப்பதற்கான மனநிலைகளோடு அவர்களை வரவேற்க வேண்டும்.
போர்களாலும்
வன்முறைகளாலும் இடம்பெயர்கிற மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து வழிநடத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பையும் வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும். உறைவிடத்தை அமைப்பதற்கான வழிமுறைகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நம் சமூகம் தயாராக இருக்க வேண்டும். அவர்களை வரவேற்க நமது இதயக் கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்க வேண்டும். நம்முடைய இடத்தைத் தேடி வருகிறவர்கள் ஒருபோதும் எதிர்மறைச் சிந்தனையோடு வாழாமல், நமது நேர்மறை அணுகுமுறையினால் அவர்களுக்கு
அடைக்கலமாக இருப்போம்.
இயேசு
கூறியதுபோல “அந்நியனாக இருந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டீர்கள்” (மத்
25:35,40) என்கிற அந்த வார்த்தைக்குச் செயல் வடிவம் கொடுத்து, எப்பொழுதும் புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடமாக இருக்க இந்த யூபிலி ஆண்டில் நாம் துணை நிற்போம். நமது பக்கத்து வீடுகளில் வந்து குடியேறி இருக்கிற மக்களுக்கு ‘வந்தேறி’ என்று பெயரை வைத்து, அவர்களைத் தரக்குறைவாக நினைக்காமல் நாம் அனைவருமே பயணிகள்தான்; அதிலும் குறிப்பாக, நாம் ஒவ்வொருவரும் திருப்பயணிகள் என்பதை மனத்தில் நிறுத்துவோம். எனவே, ஒருவரையொருவர் சொந்தம் கொண்டாட அழைக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிற அற்புதமான ஆண்டு யூபிலி ஆண்டு என்பதையும் மனத்தில் கொண்டு, நம்மைத் தேடி வந்திருக்கக்கூடிய மக்களை மதிப்பதற்குக் கற்றுக்கொள்ள நாம் முடிவெடுப்போம்.
7. முதியோரைப் பேண அழைப்பு
தனிமையிலும்,
கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கின்ற முதியவர்களுக்கு எதிர்நோக்கின் அறிகுறிகள் தேவைப்படுகின்றன. அவர்களின் இருப்பு, வாழ்க்கை அனுபவங்கள், ஞானம், அவர்களின் பங்களிப்புகள் இவற்றையெல்லாம் போற்றுவது நம் அன்பியச் சமூகத்தின் கடமையாகும்.
ஞானத்தை,
நல்ல ஆலோசனைகளை மூத்த தலைமுறையினர் நமக்குத் தரும்பொழுது, அதை மகிழ்வாக ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும். நன்றி உணர்வோடு குறிப்பாக, தங்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகளின் அன்பில் ஆதரவைக் காணும்பொழுது அவர்கள் இன்னும் மகிழ்கிறார்கள். எனவே, பேரக்குழந்தைகளும் தங்களின் வேர்களை அடையாளம் கண்டு கொண்டு, முதியோர்களுடைய துன்ப துயரங்களில் தூணாக, துணையாக இருக்க அவர்களும் பழகிக்கொள்ள வேண்டும். பெற்றோரும் பெரியவர்களை மதிப்பதற்கான வழிமுறைகளைப் பேரக்குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க முன் வர வேண்டும். போட்டி
போட்டுக்கொண்டு அவர்களைப் பராமரிப்பது என்பது யூபிலி ஆண்டின் மிக முக்கியமான ஒரு செயல்பாடு என்பதையும் அன்பியக் குடும்பங்களில் உணர வேண்டும், உணர்த்த வேண்டும்.
8. வறியவர்களைச் சொந்தம் கொண்டாட
அழைப்பு
நம்
வாழ்வில் அன்றாடம் வறியவர்களைச் சந்திக்கின்றோம். அவர்களிடமிருந்து நம்முடைய கண்களைத் திருப்பிக்கொள்ள வேண்டாம். உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இருக்கின்ற மனிதர்களை நாம் கண்டுகொண்டு அவர்களுடைய தேவைகளைச் சந்திக்க வேண்டும். புறக்கணிப்பது என்பது நமது கிறித்தவச் சமூகத்தின் பார்வைக்கு முரணான தாகும். வறியவர்களைப் பற்றிப் பேசப்படுகிற ஆவணங்கள் எல்லாம் ஆவணங்களின் அடியிலேயே இருந்து விடுகின்றன என்பதுதான் இன்றைய அரசியல் சூழலாக இருக்கிறது. ஏழைகள் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள். ஆனால், அவர்களும் எளிய மனிதர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. மில்லியன் கணக்கிலே பசியால் வாடுகிற மக்கள் வாழ்கிற இந்த உலகத்தில்தான், மில்லியன் கிலோ கணக்கில் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன என்பது வருத்தத்திற்குரிய அன்றாட அனுபவமாக இருக்கிறது. எனவே, நமது அன்பியத்தில் வறுமையின் காரணமாகக் கல்வி கற்க முடியாமல் அல்லது அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் இருக்கக்கூடிய சகோதரர்களுக்கு நம்மாலான உதவிகளை இணைந்து நாம் செய்யும் பொழுது, நிச்சயமாக வறியோர் பணியில் நாமும் வளமையைக் கொண்டுவரக்கூடிய பங்காளிகளாக மாறுகிறோம் என்பதை இந்த யூபிலி ஆண்டில் உணர்ந்து கொள்வோம்.
நிறைவாக,
தண்ணீரும் உணவும் இல்லாமல் இருப்பவர்களை நினைவுகூர்வோம். பசி என்பது ஓர் இடறல், மானுட உடலில் காணப்படும் ஆறாத புண். நம் மனச்சாட்சியை நுணுக்கமாக ஆய்ந்து பார்க்க வேண்டும். ஆயுதங்களுக்கும் இராணுவச் செலவுகளுக்கும் செலவிடும் பணத்தைக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் உலகத் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என்று ஒரு பக்கம் இருந்தாலும், நாமும் மாண்புக்குரிய வாழ்வைத் தேடுகிற மக்களுக்கு உற்ற துணையாய், பக்கபலமாய் இருந்தால், நிச்சயமாக இந்த யூபிலி ஆண்டு பொருளுள்ள ஆண்டாக அமையும் என்பதை அன்பியங்களில் உணர்ந்து நம்பிக்கையோடு இந்த யூபிலி ஆண்டைச் சிறப்பிக்க முன்வருவோம்.