(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
கிறிஸ்டினா: “தந்தையே, சென்றமுறை நாம் உரையாடியபோது,
புறம்நோக்கிய மனம் தன் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, சுற்றியுள்ளவற்றை
அணுகி, அதன் அடிப்படையில் தரம் பிரிப்பதன் காரணமாக ஆணவம், கன்மம், மாயை ஆகிய தீமைகள்
உருவாவதாகக் கூறினீர்கள். அது குறித்து இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூற முடியுமா?”
அருள்பணி: “சுற்றியுள்ளவற்றைத் தனக்கேற்றார்போல
மனம் தரம் பிரிப்பதை நாம் இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவதாக, வாழ்க்கை நிகழ்வுகளைத்
தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறது. இரண்டாவதாக,
சுற்றியுள்ள மனிதர்களைத் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறது.”
மார்த்தா: “வாழ்க்கை நிகழ்வுகளை மனம் தரம் பிரித்து
மதிப்பீடு செய்கிறதா? எப்படித் தந்தையே?”
அருள்பணி: “நம் வாழ்வில் நாள்தோறும் ஏராளமான
நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்விற்கு என்று தனித்தன்மையும் உண்டு,
நோக்கமும் உண்டு. இந்த நிகழ்வுகள் அனைத்தின் வழியாகவும் கடவுள் நம் வாழ்க்கைச் சக்கரத்தை
நகர்த்தி, நம்மை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனினும், நடக்கின்ற
எல்லா நிகழ்வுகளையும் நாம் சமநிலை மனநிலையோடு அணுகி வாழ்வை முழுமையாக வாழ்வதில்லை என்பது
உண்மை. நமக்குப் பிடித்த நிகழ்வுகளை ‘இன்பமானவை’ என்று
முத்திரை குத்தி, அவை நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமக்குப் பிடிக்காதவற்றை
‘துன்பமானவை’ என்று முத்திரை குத்தி அவற்றைத் தவிர்க்க
முனைகின்றோம். நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல அமைகின்ற நிகழ்வுகளை ‘நல்லவை’ என்றும், ‘உயர்ந்தவை’ என்றும்
சொல்லி, அவற்றின் மீது பற்றுக்கொள்கிறோம். நம் எதிர்பார்ப்பிற்கு மா(ற்)றாக இருக்கின்ற
நிகழ்வுகளை ‘கெட்டவை’ என்றும், ‘தாழ்ந்தவை’ என்றும் முத்திரை குத்தி, அவற்றின்மீது வெறுப்புகொள்கின்றோம்.”
அன்புச் செல்வன்: “ஆக, இன்பம்-துன்பம், பிடித்தவை-பிடிக்காதவை,
உயர்ந்தவை-தாழ்ந்தவை போன்ற பிரிவினைகள் நிகழ்வுகளைச் சார்ந்தவை அல்ல; மாறாக, மனத்தைச்
சார்ந்தவை என்று சொல்கிறீர்கள், அப்படித்தானே?”
அருள்பணி: “ஆம்! நம் மனம் இவ்வாறு பிரித்து,
ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற்றொன்றைத் தள்ளி வைக்க முயற்சி செய்வதன் காரணமாக, நம்மால்
வாழ்வை அதன் முழுமைத்தன்மையோடு வாழ முடிவதில்லை. நமக்குப் பிடித்த காரியங்கள் நடைபெறுகின்றபோது
உற்சாகமாக இருக்கும் நாம், நமக்குப் பிடிக்காத காரியங்கள் நடைபெறுகின்றபோது தோற்றுப்போனதாக
நினைத்துச் சோர்ந்துபோய் விடுகின்றோம். அதாவது, வாழ்வை அரைகுறையாக வாழ ஆரம்பிக்கின்றோம்.
வாழ்க்கை நிகழ்வுகளில் பாதியைப் பற்றிக்கொண்டு, மீதியை நிராகரிக்கும்போது, வாழ்வே அரைகுறையானதாக
மாறிவிடுகிறது. இயேசுவைப்போல ஒவ்வொரு வினாடியும் முழுமனிதர்களாக நம்மால் வாழ முடிவதில்லை.”
அன்புச் செல்வன்: “அது மட்டுமல்ல தந்தையே, நமக்குப்
பிடித்த காரியங்களை இன்னும் அதிகமாக்கிக்கொள்வதே மகிழ்ச்சி என்று எண்ணி, அவற்றின் பின்னால்
நாம் இன்னும் அதிமாக ஓட ஆரம்பிக்கின்றோம். எனினும், நாம் விரும்பித் தேடி ஓடுபவை பெரும்பாலும்
நமக்குக் கிடைப்பதில்லை என்பது உண்மை. அதேபோல நமக்குப் பிடிக்காத காரியங்களைத் தள்ளிவைத்தால்தான்
நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி, அவற்றிற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனால்,
அதில் நமக்குப் பெரும்பாலும் வெற்றி கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. எனவே, ஒட்டுமொத்த
வாழ்வே மகிழ்ச்சியற்ற ஒன்றாகத் தென்படுகிறது.”
அகஸ்டின்: “அடேங்கப்பா! மனத்தின் தரம் பிரித்தல்
ஒட்டுமொத்த வாழ்வையே எதிர்மறையாகப் பாதிக்கிறதா?நம் மனம் மனிதர்களையும் தரம் பிரிக்கிறது
என்று சொன்னீர்களே! எப்படி?”
அருள்பணி: “நமது மனம் வாழ்க்கை நிகழ்வுகளையும்
சுற்றியுள்ள மனிதர்களையும் அவர்கள் செய்யும் செயல்களையும் தனது விருப்பு, வெறுப்பு
மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையிலேயே அணுகுகின்றது. மனம் தன் விருப்பு-வெறுப்புகளுக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் மனிதர்களை ஒரு குழுவாகவும், அவ்வாறு இல்லாதவர்களை
மற்றொரு குழுவாகவும் பிரிக்கிறது. மனத்தின் தூண்டுதலாலேயே நாம் நமக்கேற்ப நடந்துகொள்பவர்களை
‘நல்லவர்கள்’ என்றும், ‘நண்பர்கள்’ என்றும் கருதுகிறோம். நமக்கேற்ப நடந்துகொள்ளாதவர்களை ‘கெட்டவர்கள்’ என்றும், ‘எதிரிகள்’ என்றும்
கருதுகிறோம். நல்லவர்கள்-கெட்டவர்கள் என்ற நம் பிரிவினை அவர்களது செயல்பாடுகளை வைத்து
வருகின்றது என்று எண்ணுகின்றோம். அது உண்மையல்ல! நம் விருப்பு-வெறுப்புகளிலிருந்து
வருகிறது. உதாரணமாக, ஒருவர் நல்ல காரியத்தைச் செய்தாலும், அது நமக்குப் பாதகமாக இருந்தால்,
அவரைக் கெட்டவர் என்று முத்திரை குத்தத் தயங்கமாட்டோம். அதேபோல, ஒருவர் எதிர்மறையான
காரியம் செய்தாலும், அதனால் நமக்கு நன்மை விளையுமானால், அவரோடு உறவை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
இவ்வாறு சக மனிதர்களை நம் மனம் தரம் பிரிப்பதன் காரணமாக, அவர்களை அவர்களது நிலையில்
வைத்து நம்மால் பார்க்க முடிவதில்லை. நம்மால் அவர்களை அன்பு செய்யவும் இயலவில்லை.”
அன்புச் செல்வன்: “அது மட்டுமல்ல தந்தையே! நம் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்ப நடந்துகொள்கின்றவர்கள் என்றுமே அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்றும் மனம் எதிர்பார்க்கிறது.
ஆனால், அது பெரும்பாலும் நடப்பதில்லை. மேலும், நமக்குப் பிடிக்காதவர்களைத் தள்ளிவைத்தால்தான்
மகிழ்ச்சி என்று நினைத்து, அவர்களைத் தள்ளிவைக்கப் போராடுகிறது. ஆனால், அதுவும் பெரும்பாலும்
நடப்பதில்லை. எனவே, ஒட்டுமொத்த வாழ்வே போராட்டமான ஒன்றாகத் தெரிகிறது.”
அருள்பணி: “சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், மனம்
உலகையே இரண்டாகப் பிரித்து, நம் வாழ்வையும் இரண்டாகப் பிரித்து விடுகிறது. நாம் அரை
குறை மகிழ்ச்சியோடு வாழ சுற்றியுள்ள சூழல்தான் காரணம் என்று நம்மில் பலர் எண்ணுகின்றோம்.
ஆனால், உண்மையான காரணம் ‘நன்மை-தீமை அறிகின்ற மரமாகிய நம் மனம்’ என்பதை நாம் உணர்வதில்லை. எனவேதான் ஞானிகள் நம் மனத்தின்
மட்டில் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். புத்தர் ‘நம் மோசமான எதிரியைவிட
மோசமானது நம் மனம்’ என்கின்றார். பாரதியார் ‘பேயாய் உழலும்
சிறுமனமே’ என்கின்றார். சித்தர்களில் ஒருவர் மனத்தை
‘அகப்பேய்’ என்று அழைத்தார்.”
கிறிஸ்டினா: “தந்தையே! இத்தகைய எதிர்மறைத்தன்மையைக்
குறைக்க வழி என்ன?”
அருள்பணி: “வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் இறைச்செயல்பாடு
இருப்பதை எண்ணி, அவற்றைச் சமநிலை மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நம்மில்
உருவாக்கிக்கொள்ள முனைவதே அந்த வழி! அத்தகைய நிலையை அடைய மனத்தை அகம்நோக்கித் திருப்பக்
கற்றுக்கொள்வது அவசியமானது. அகம் நோக்கிய மனம் மேற்கூறப்பட்ட எதிர்மறைத்தன்மைகளை வெற்றிகொள்வதோடு,
மனிதர்கள் தளர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றது. இதுபோல மனத்தை அகம் நோக்கித்
திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகளையே ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்றும், ‘பக்தி முயற்சிகள்’ என்றும்
கூறுகின்றோம்.”
மார்த்தா: “தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால்
புறம்நோக்கி இயங்குகிற மனத்தின் ஒப்பிடுதலும் தரம்பிரித்தலும் ஆணவம், வெறுப்பு, குறை
சொல்லுதல், தீர்ப்பிடுதல், தன்னிலிருந்து அந்நியப்படல் போன்ற எண்ணற்ற தீமைகளுக்குக்
காரணமாக இருக்கின்றது. மனத்தின் இத்தகைய தன்மையை நாம் ‘பிறப்புநிலை பாவம்’ என்று சொல்ல முடியுமா?”
அருள்பணி: “இன்னும் சரியாகக் கூற வேண்டுமெனில்,
புறம் நோக்கி இயங்கும் மனம் தன் விருப்பத்திற்கும் ஆசைகளுக்கும் ஏற்றார்போல எல்லாம்
நடந்துவிட்டது என்றால், மகிழ்வு தனதாகிவிடும் என்று நினைத்துச் செயல்படுகிறதல்லவா!
அதுதான் பிறப்புநிலை பாவம் என்பது. மனிதர்களின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்றார்போல
நிகழ்வுகள் எல்லா நேரமும் நிச்சயமாக நடைபெறப் போவதில்லை. அது நமக்குள் வெறுப்பையும்
சஞ்சலத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஒருவேளை அவ்வப்போது நம் எதிர்பார்ப்புகள்
பூர்த்தியானால்கூட, அவை நம்மில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைவிட, அதிகமாக ஆணவத்தை ஏற்படுத்துகின்றன
என்பதுதான் வாழ்க்கைப் பாடம். உண்மையான மகிழ்வு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
கடவுள் செயல்படுகிறார் என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கை நிகழ்வுகளை இறைத்திருவுளத்தின்
பின்னணியில் (‘இறைவன் ஏன் இத்தகைய நிகழ்வுகளை நமக்குத் தருகிறார்’ என்பதன் பின்னணியில்) ஆராய்ந்து நம் வாழ்வை ஆழப்படுத்திக்
கொள்வ தாகும். சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், பிறப்பு நிலை பாவம் என்பது வாழ்வின்
மகிழ்வை இறைவனின் விருப்பத்தில் தேடாமல், மனித விருப்பத்தில் தேடுவதாகும்; கடவுளின்
விருப்பத்திற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும் என்று எண்ணாமல், நம் விருப்பங்களுக்கு
ஏற்ப கடவுள் உட்பட எல்லாரும் செயல்படவேண்டும் என்று எண்ணுவதாகும்; தன்னிலும், தனக்குள்
இருக்கும் கடவுளிலும் மகிழ்வைத் தேடாமல், கடவுள் அல்லாதவற்றில் மகிழ்வைத் தேடுவதாகும்.” (தொடரும்)
கூட்டியக்கத் திரு அவையின் ஊற்றும் உயர் மாதிரியும் மூவொரு கடவுளே. ஏனெனில், அது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் குறிப்பிடுவதுபோல ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் ஒன்றிப்பின் ஆற்றலால் ஒன்றுகூட்டப்பெற்ற மக்கள் குலம்’ (திரு அவை 4). மானிடரைச் சந்திக்க வரும் கடவுளின் மூவொருமையின் இயக்க ஆற்றல் ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ எனும் உளப்பாங்கிற்கும் உறவு ஒன்றிப்பிற்கும் நம்மைக் கொண்டுவந்து, உலகிற்கு இறையாட்சிப் பணியாற்ற திரு அவையை இட்டுச்செல்கிறது.
திரு
அவையின் கூட்டியக்கப் பயணம் இறையாட்சியை நோக்கியதே. அப்பணியை ஆற்ற அதற்கு இன்றியமையாதது கிறித்தவக் குழுமங்களின் புதுப்பித்தல். இறையருளின் முதன்மையை நாம் அறிந்து ஏற்றுக்கொண்டால்தான் அப்புதுப்பித்தல் நிகழ முடியும். “அருள்வாழ்வுசார் அடித்தளமின்றிக் கூட்டியக்கத்தன்மை மேலோட்டமானதாகவே இருக்கும்”
(முஅ* 2c). அந்த
அருள் அனுபவம் குழும இயக்கமாகச் செயலாக்கம் பெறும். அது மட்டுமின்றி, அக்குழும ஆளாள் உறவு அனுபவமே இறைச் சந்திப்பின் ஒரு தளமாகவும் வகையாகவும் திகழ முடியும். தூய ஆவியாரில் நிகழும் இந்த உறவாடலும் உரையாடலும் “ஆவியார் திரு அவைகளுக்குச் சொல்வதைத் தெளிந்து தேர்ந்திட உதவும் உண்மையான செவிமடுத்தலுக்கு வழிவகுக்கும்” (முஅ
2d). இவ்வாறு
இந்த உறவாடலும் உரையாடலும் மனமாற்றத்திற்கான தூண்டுதலையும் தரும். (முஅ) மாமன்ற முதல் அமர்வின் அறிக்கையையும், (இஅ) இறுதி அறிக்கையையும் குறிக்கின்றன.
திரு
அவையின் கூட்டியக்கத்தின் நோக்கம் நற்செய்திப் பணி என்பதால் கிறித்தவக் குழுமங்கள் பிற சமயத்தார், மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் பண்பாடுகள் என்பவற்றுடனும் கூட்டுத் தோழமையை ஏற்படுத்துவது அவசியம். “ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், இணைந்து பயணித்தல் என நடைபெறும் இந்தக்
கலந்துரையாடலின் தாக்கம் நற்செய்தி அறிவிப்பு, ஏழைகளுக்கான பணி, நமது பொதுவீடாகிய இந்நில உலகின் நலம் பேணுதல், இறையியல் ஆய்வு என்பவற்றின் பண்புகளாகப் பரிமளிக்கவேண்டும்” (முஅ
2e).
நம்பிக்கைக் குழுமத்தில்
புகுநிலைப்படுத்தல்
இறைவார்த்தையைக்
கேட்டல், வாழ்க்கை மாற்றம், திருவழிபாடு, கிறித்தவக் குழும வாழ்விலும் அதன் நற்செய்திப் பணியிலும் பங்கேற்பு என்பவையே நம்பிக்கைக் குழுமத்தில் புகுதலை ஓர் இணைந்த பயணம் ஆக்குகின்றது. அதன் வழியாக நம்பிக்கையாளர் உயிர்ப்பு நம்பிக்கையின் அறிமுக அனுபவத்தைப் பெறுகிறார்; மூவொரு கடவுள் மற்றும் திரு அவையின் ஒன்றிப்புறவில் இணைக்கவும்படுகிறார்.
இவ்வாறு
நம்பிக்கையாளர் குழுமத்தில் புகுவதன் வழியாக ஒவ்வொருவரும் திரு அவையில் உள்ள பல்வேறு அழைத்தல்கள், பணிகள் என்பனவற்றுடன் இணைக்கப்படுகின்றனர். அவற்றின் வழியாக அன்னையாகிய திரு அவை தம் மக்களோடு இணைந்து பயணித்து அவர்களுக்கு வாழ்க்கைப் பயணமுறையைக் கற்றுத்தருகிறது. “அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அது பதிலளிக்கிறது. ஒவ்வொருவருடைய வரலாறு, மொழி, பண்பாடு என்பவற்றின் புதுமை வழியாக அதுவும் வளமை அடைகிறது”
(முஅ 3o). இதுவே
கிறித்தவக் குழுமம் மேற்கொள்ளும் இணைந்த பயணத்தின் தொடக்கம்.
“நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்”
(1கொரி 12:13). இதனால் திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் இடையே மாண்பிலும் அவரவர் அழைத்தலுக்கேற்ப நற்செய்திப் பணியாற்றும் பொதுவான பொறுப்பிலும் உண்மையான சமத்துவம் நிலவுகிறது. இதனால் “இறைமக்கள் சமூகம் முழுவதும் நற்செய்தி அறிவிப்பின் முகவரே. நாம் எல்லாரும் மறைத்தூதுச் சீடர்கள் என்பதால், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைத்தூதுப் பணியை முன்னெடுக்க அழைக்கப்பட்டவரே” (இஅ
4). ஒவ்வொருவரும் தாம் வாழும் மற்றும் பணியாற்றும் சூழமைவில் தம் வாழ்க்கை நிலைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப மறைத்தூதுப் பணி ஆற்ற அழைக்கப்பட்டுள்ளனர். அவரவரது வாழ்க்கை நிலை, தொழில், குடிமைச் சமூக-அரசியல்-சமூக- சுற்றுச்சூழல் ஈடுபாடு என்பவற்றிற்கு ஏற்ப அவர்கள் நற்செய்திப் பணியாற்றும் முறைகள் வேறுபட்டும், தூய ஆவியாரின் துணையுடன் தேவைக்கேற்ப புதுப்புது வகைகளிலும் அவை அமையும்.
மேலும்,
திருமுழுக்குப் பெற்றவர்களிடம் தூய ஆவியிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொள்ளும் நம்பிக்கை உணர்வு உள்ளது. இது அவர்களிடம் இயல்பாகவே எழும் நற்செய்தியின் உண்மைக்கான நாட்டம். நம்பிக்கையாளர்களின் இந்த ஒத்த உணர்வைக் கூட்டியக்க நடைமுறை உறுதிப்படுத்தி வளர்த்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட கோட்பாடோ செயல்பாடோ திருத்தூதர்சார் நம்பிக்கைக்குரியது என்பதைத் தீர்மானிக்க இந்நடைமுறை ஓர் உறுதியான அளவுகோலைத் தருகிறது.
உறுதிபூசுதல்
எனும் அருளடையாளத்தின் வழியாகப் பெந்தக்கோஸ்தின் அருள் திரு அவையில் நிலைத்திருக்கிறது. நம்பிக்கையாளர்களை அது ஆவியாருடைய கொடைகளால் வளப்படுத்துகிறது. நற்செய்திப் பணியாற்றுவதற்கான தங்கள் தனி அழைத்தலை வளர்த்தெடுக்க அது ஒவ்வொருவரையும் அழைக்கவும் ஆற்றல்படுத்தவும் செய்கிறது.
நற்கருணைக்
கொண்டாட்டம், அதிலும் சிறப்பாக ஞாயிறு திருப்பலி நம்பிக்கை வாழ்விற்கு அடிப்படையானது. “ஆண்டவரது உடலையும் உதிரத்தையும் உட்கொள்வதன் வழியாகப் பிறரோடும் அவரோடும் அவர் நம்மை ஓருடலாக உருவாக்குகிறார்” (முஅ
3e). இது
நம்மை இணைந்து பயணிக்க அழைக்கிறது.
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. தெளிதேர்வு
செய்து இறைவனின் குரலை இனம்காண்பதற்கான அளவுகோல்கள் இறையியல் கண்ணோக்கில் தெளிவாகவும் ஆழமாகவும் வரையறுக்கப்பட வேண்டும். குறிப்பாக, திருவிவிலியம், திரு அவை மரபு மற்றும் ஆசிரியம் என்பனவற்றுடன் காலத்தின் அறிகுறிகளையும் முன்வைத்துக் கடவுளின் திருவுளத்தைக் கண்டறியும் முறை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
2. நம்பிக்கை
அனுபவத்தில் பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி எனும் இரு பரிமாணங்களையும் நலமாக இணைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் இறையியல் சிந்தனைகளுடன் கலை மற்றும் சமூக அறிவியல்களின் பங்களிப்புகளையும் எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என்பதுவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
3. பல்வேறு
அருள்பணிகளிலும் சிறப்பாக, திருமணம், பல்வேறு தொழில்கள் மற்றும் சமூகத் துறைகள் என்பவற்றிலும் கிறித்தவ மனநிலையுடன் ஈடுபடுவதற்கான உருவாக்கமாகக் கிறித்தவப் புகுநிலைப் பயிற்சியை அமைப்பது பற்றிய ஆய்வுகள் தொடரப்படவேண்டும்.
4. கிறித்தவப்
புகுநிலைப்படுத்தல் பற்றி இன்னும் அதிகமான ஒன்றிணைந்த பார்வை உருவாக்கப்பட்டு, அது திரு அவையின் கூட்டியக்கத் தன்மையைப் புரிந்து வாழ்ந்திட எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றி ஆழமாகச் சிந்திப்பது அவசியம் (முஅ 3g).
5. எல்லா
நம்பிக்கையாளர்களிடமும்
குழுமத்தைக் கட்டியெழுப்பவும் உலகில் நற்செய்திப் பணியாற்றவும், நம்பிக்கைக்குச் சாட்சியம் பகர்வதற்குமான அழைத்தலை எழுச்சியுறச் செய்யும் வகையில் உறுதிபூசுதலுக்கான தயாரிப்பை மேம்படுத்தும் முறைகள் கண்டறியப்படவேண்டும்.
6. நற்கருணை
திரு அவையின் கூட்டியக்கத்திற்கு ஊற்றாகி உருக்கொடுப்பது. இதனால் இயேசுவுடனான ஆளாள் உறவையும் நம்பிக்கையாளர்களுக்கு இடையிலான குழும உறவையும் வளர்த்தெடுக்க உதவும் முறையில் அதைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
7. மேலும்,
பரவலாக எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைக்கேற்பத் திருவழிபாட்டு மொழி அனைத்து மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் அந்தந்தப் பண்பாடுகளில் உருவெடுப்பதாகவும் இருக்கவேண்டும். இப்பணியில் அதிகப் பொறுப்பு ஆயர் பேரவைகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் (முஅ 3l).
8. வேறு
எந்தப் பயிற்சி முறையையும்விட அதன் (திருவழிபாட்டின்) எழிலும் எளிமையுமே நம்மை முதன்மையாக உருவாக்கவேண்டும்
(முஅ
3k). * முன்னமர்வு
(மு.அ.)
“இறைவன் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது ‘ஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்” (தொநூ 1:3-4). பேரொளியாம் கடவுள் படைத்த ஒளி அனைத்தையும் தெளிவுபடுத்துகின்றது; உண்மை நிலைகளை உணர்த்துகின்றது; அனைத்தையும் நலமெனக் கண்ட இறைவனின் பார்வை நமதாகும்பொழுது, நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்கின் திருப்பயணம் அருள்வாழ்வின் திருப்பயணமாகிறது.
பேரொளியான
இறைவனின் திருமகன் மனுவுருவானதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் தனது நற்செய்தியில் இதை உறுதிப்படுத்துகின்றார்: “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது; ஆனால், உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை” (யோவா
1:9-10).
இறைத்தந்தையோடு
ஒன்றாய் இணைந்திருக்கும் இயேசு, பேரொளியாய் உலகில் நம்மோடு இருக்கின்றார். இந்தப் பேருண்மையை இயேசு நிக்கதேமுடன் உரையாடும்போது உறுதிப்படுத்துகின்றார்: “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்” (யோவான்
3:21).
கடவுளை
‘சிக்’கெனப்
பற்றிகொண்டு அவரைச் சார்ந்து வாழ இறைவார்த்தையே நமக்கு ஒளியூட்டும், வழிகாட்டும், உள்ளிருந்து மெய்ஞானம் புகட்டும், உடனிருந்து செயலாற்றும். திபா 119:105 இதனை உறுதிப்படுத்துகின்றது:
“என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!”
நாம்
உலகின் ஒளியாகச் சுடர்விட வேண்டும் என்றால் உண்மையைச் சார்ந்தவர்களாய் இயேசுவின் குரலைக் கேட்டு, அவர் விருப்பப்படி நன்மைசெய்து
வாழவேண்டும். அப்பொழுது உலகில் ஒளியாகச் சுடர் விடமுடியும். இதனால் இயேசுவை அறியாதவர்களை அவரிடம் ஈர்க்கும் மீட்பின் கருவிகளாக, சீடர்களாக நாம் செயல்பட முடியும்.
இறையாட்சிப்
பணியை வல்லமையுடன் ஆற்றி மறைச்சாட்சிகளான புனித அருளானந்தர், புனித தேவசகாயம், மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலரான புனித சவேரியார் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணங்களாக, வழிகாட்டிகளாக, உலகின் ஒளியாகத் திகழ்கின்றனர். இந்த மறைப்பணி தொடர்ந்து இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். இறையன்பு பிறரன்பாக வெளிப்பட்டு இயேசுவின்பால் ஈர்க்கப்பட்ட ஒரு நிகழ்வைச் சாட்சியப்படுத்த விரும்புகின்றேன்.
பத்து
ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் தன் மகளுடன் எங்கள் துறவற இல்லத்திற்கு உதவி கேட்டு வந்தார். தாய்க்குச் சமையல் வேலை கொடுத்து, மகளைப் படிக்கவைத்தோம். திறமையும் ஆர்வமும் கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்பில் சிறந்த வெற்றி பெற்றாள் அப்பெண். உடனே நல்ல வேலையும் கிடைத்தது. தங்கள் வாழ்வின் முன்னேற்றம் இயேசுவால்தான் என்பதை ஆழமாக நம்பி, அவருடைய பிள்ளையாக வேண்டும் என்ற ஆவலுடன் இருவரும் தாங்களாகவே முன்வந்து திருமுழுக்குப் பெற்றனர். இது அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்திய ஒரு நன்றி காணிக்கை. தன்னை வளர்த்தெடுத்து உயர்ந்திடச் செய்த அருள்சகோதரிகளுக்கும் நன்றி கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பேரொளியின்
ஒளியாகச் சுடர்விடும் அனைவரும் இயேசுவின் வார்த்தையின்படி இறைத்தந்தையை மாட்சிப்படுத்த முடியும். “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத்
5:16) என்ற இயேசுவின் வார்த்தை நம் வாழ்வாகட்டும். இது கத்தோலிக்கத் திரு அவையின் உறுப்பினர் ஒவ்வொருவரின் கடமையும்கூட.
திருமுழுக்கில்
பெற்றோரிடமும் ஞானப் பெற்றோரிடமும் ஒளி ஒப்படைக்கப்பட்டு அவர்களது கடமை உணர்த்தப்படுகிறது. “பெற்றோர்களே, ஞானத் தாய்-தந்தையரே! உங்கள் குழந்தையின் உள்ளத்தில் அணையாது காக்கும் பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் இக்குழந்தைகள் ஒளி பெற்று, ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. நம்பிக்கையில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது அனைவரோடும் வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதி பெறுவார்களாக” என்று
அருள்பணியாளர் கடமையையும் பொறுப்பையும் உறுதிப்படுத்துகின்றார். இந்தத் திருமுழுக்கு வழிபாடு நாம் பேரொளியின் ஒளியாகவே என்றும் வாழவேண்டிய நம் கடமையை உணர்த்துகின்றது. எனவே, வாழ்வைப் பற்றிய வார்த்தையை வழங்க ஒளியில் வாழ்வோம். உலகின் ஒளியாவோம்.
நமது இறைவேண்டல் வாழ்வில் தவறாது இடம்பெற வேண்டியவை திருப்பாடல்கள். திருப்பாடல்களைப் பயன்படுத்தாத கிறித்தவ இறைவேண்டல் முழுமையற்றது என்று துணிவுடன் கூறலாம். காரணம், அந்த அளவுக்குக் கிறித்தவ வழிபாட்டிலும் இறைவேண்டலிலும் திருப்பாடல்கள் முதன்மை பெற்றுள்ளன.
திருப்பாடல்களின்
சிறப்புகளைப் பட்டியலிட்டால் நாம் நிச்சயம் வியப்பில் ஆழ்ந்துவிடுவோம். ‘திருவிவிலியத்தின் மன்றாட்டு நூல்’ என அழைக்கப்படுவது அதன்
முதல் சிறப்பு. காரணம், திருவிவிலியத்திலுள்ள 73 நூல்களிலும் முற்றும் முழுவதுமான ஓர் இறைவேண்டல் நூல் அதுவே. மார்ட்டின் லூதர் திருப்பாடல்கள் நூலை ‘பழைய ஏற்பாட்டின் சுருக்கம்’
என அழைத்தார். அந்த அளவுக்குப் பழைய ஏற்பாட்டின் முதன்மைக் கருத்துகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த நூல். குறிப்பாக, படைப்பு (தொடக்கநூல்), மீட்பு (விடுதலைப் பயணம்), பாலைநிலப் பயணம் (எண்ணிக்கை), இறைவாக்கினர்களின் முதன்மைக் கருத்துகள் மற்றும் அறிவுரைகள் அனைத்துமே திருப்பாடல்கள் நூலில் காணக்கிடைக்கின்றன. இதன் காரணமாகவே பழைய ஏற்பாட்டின் பிரதியாக இருக்கிறது திருப்பாடல்கள் நூல்.
எனவேதான்,
புதிய ஏற்பாடு நூல் தனியாக அச்சிடப்படும்போது, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரே பழைய ஏற்பாட்டு நூலாகத் திருப்பாடல்கள் நூல் அமைந்துள்ளது.
இரு
சமயத்தவர் பயன்படுத்தும் பொது மன்றாட்டு நூல் என்னும் சிறப்பு, திருப்பாடல்கள் நூலன்றி வேறெதற்கும் கிடையாது. யூதர்கள், கிறித்தவர்கள் என்னும் இரு சமயத்தவரும் இன்றும் தங்கள் வழிபாட்டில் இந்நூலைப் பயன்படுத்துவது ஒரு வியப்பான உண்மை.
கிறித்தவரின்
வழிபாட்டிலும் திருப்பாடல்கள் நூல் தனித்துவம் பெறுகிறது. ஆண்டின் அனைத்து நாள்களிலும் தவறாது இடம்பெறும் ஒரே திருவிவிலிய நூல் இதுதானே! முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரைப் பாடல் என்ற தலைப்பில் தவறாமல் ஒரு திருப்பாடல் பயன்படுத்தப்படுகிறதே!
ஒன்றைக்
கவனித்திருக்கிறீர்களா?
திருவிவிலியத்தின் இந்த ஒரு நூலை வாசிக்கும்போது மட்டும் நாம் ‘இது ஆண்டவரின் அருள்வாக்கு’ என்று
கூறுவதில்லை. ஆண்டவரின் அருள்வாக்கிற்குத் திருப்பாடல் நமது ‘பதிலுரை’ என்பதுதான் காரணம். திருப்பாடல்களை வாசித்து முடித்ததும் ‘ஆமென்’ என்று கூறுவது அல்லது ‘தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சி உண்டாவதாக’
என்னும் திருத்துவப் புகழைச் சொல்வதே திரு அவையின் மரபு.
திரு
அவையின் மன்றாட்டு நூலான ‘திருப்புகழ் மாலையில்’
தவறாது இடம்பெற்றுள்ளன திருப்பாடல்கள். காலை, நண்பகல், பிற்பகல், மாலை, இரவு என்னும் ஐவேளையும் திரு அவை திருப்பாடல்களைப் பயன்படுத்தி இறைவனை வழிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
தொடக்கத்
திரு அவையின் காலத்திலேயே திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. கொலோசியருக்கு எழுதிய திருமடலில் “திருப்பாடல்களையும், புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்” (3:16) என்று
புனித பவுலடியார் அறிவுரை கூறுகிறார். அவரே எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் “உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் இடம்பெறட்டும்; உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள்” (5:19) என்கிறார்.
இயல்பாக
ஒருவருக்கொருவர் உரையாடும் போதுகூட திருப்பாடல்களைப் பயன்படுத்தச் சொல்வது நம் கவனத்தை ஈர்க்கிறது. “உங்களுள்
யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்” (யாக்
5:13) என்கிறார் திருத்தூதர் யாக்கோபு. இக்குறிப்புகள் தொடக்கத் திரு அவை திருப்பாடல்களைத் தன் வழிபாட்டிலும் வாழ்விலும் பயன்படுத்தியது என்பதன் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
ஏன்,
இயேசுவே தமது வாழ்வில் திருப்பாடல்களை நன்கு அறிந்திருந்தார், அவற்றை இறைவேண்டலுக்கும் அறிவுரைகளுக்கும் மறைவிவாதங்களுக்கும் பயன்படுத்தினார் என்பது இன்னும் கூடுதலான மதிப்பைத் திருப்பாடல்களுக்கு வழங்குகின்றது.
எல்லா
யூதக் குழந்தைகளைப்போல இயேசுவும் தமது சிறு வயதில் திருப்பாடல் 113-118 என்னும் ஆறு திருப்பாடல்களையும் மனப்பாடமாக அறிந்திருந்தார் என்று கொள்ளலாம். அது மட்டுமல்ல, தொழுகைக்கூடங்களுக்குச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்த இயேசு, அங்கே பிற யூதர்களோடு இணைந்து திருப்பாடல்களை மன்றாடினார் என்றும் புரிந்துகொள்ளலாம்.
சிலுவையில்
இறக்கும் முன்னர் அவர் கூறிய “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத் 27:46) என்னும் வார்த்தைகள் திருப்பாடல் (22:1) வரிகள்தானே! பரிசேயர்களுடன் திருப்பாடல் 110 மேற்கோள்காட்டி, மெசியா (தாம்) தாவீதின் மகன் மட்டுமல்ல, தாவீதுக்கும் தலைவர் (மத் 22: 41-46) என எண்பித்து, அவர்களின்
வாயை அடைத்த நிகழ்வும் இயேசு திருப்பாடல்களை நன்கு அறிந்திருந்தார் என உறுதிப்படுத்துகிறது. எனவேதான், புனித
அகுஸ்தினார் இயேசுவை ‘திருப்பாடல்களின் இனிமைமிகு பாடகர்’ என்றார். அனைத்திற்கும் மேலாக, மானிட உணர்வுகளான மகிழ்ச்சி, துயரம், கவலை, அச்சம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, அவமானம் போன்ற அனைத்து உணர்வுகளையும் இறைவேண்டலாக வெளிப்படுத்தும் வாய்க்கால்களாக அமைந்துள்ளன திருப்பாடல்கள்.
இத்தனை
சிறப்புகள் நிறைந்த திருப்பாடல்களை நாம் நமது தனிவேண்டலிலும் குடும்ப வேண்டலிலும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சில பரிந்துரைகள்:
• திருப்பாடல் 23, 34, 91,
103, 121, 150 போன்றவற்றில்
ஒன்றிரண்டை மனப்பாடம் செய்து, நாள்தோறும் மன்றாடலாம்.
• குடும்ப, குழும இறைவேண்டல்களில் திருப்பாடல்களை இரு குழுக்களாகப் பிரித்து மன்றாடலாம்.
• இசையமைக்கப்பட்டுள்ள திருப்பாடல்களைப் பாடுவது சிறப்பானது.
• பயணம், தேர்வு, விழாக்கள், துயர, மகிழ்வின் வேளைகள் போன்ற நேரங்களில் சூழல், தேவைக்கேற்றவாறு திருப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து மன்றாடலாம்.
நமது
தனி, குடும்ப இறைவேண்டல்களில் திருப்பாடல்களையும் இணைத்து நமது இறைவேண்டலுக்கு மெருகேற்றுவோம்.
அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நமது திருத்தந்தை 14-ஆம் லியோ, தனது பணியில் தன் முன்னோடிகளின் வார்த்தைகளை அவ்வப்போது மேற்கோள்காட்டி, இறைப்பணியில் திரு அவை பயணித்த பாதையைப் பக்குவப்படுத்தும் பணியாளராய் தோற்றமளிக்கிறார்.
• கடந்த மே 13 அன்று உரோமில் உள்ள புனித அகுஸ்தினார் சபையின் தலைமையகத்தில் உரையாற்றிய அவர் ‘கடவுளில் ஓர் இதயமும் ஒரே உள்ளமும்’
என்ற புனித அகுஸ்தினார் சபையின் ஆன்மிகத் தத்துவக் கருத்தை வெளிப்படுத்தினார்.
• மே 15 அன்று கிறித்தவப் பள்ளிகளின் சகோதரர்களைச் சந்தித்த திருத்தந்தை கல்வி கற்பித்தலின் வாயிலாக நற்செய்தி அறிவித்தல், நற்செய்தி அறிவித்தலின் வாயிலாகக் கல்வி கற்பித்தல் அவசியம் என்றும், புனித ஜொவான்னி பத்திஸ்தா தெலசாலைப்போலக் கற்றலில் புதிய வழிகளைக் கண்டறியவேண்டும் என்றுரைத்தார்.
• திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் அவர்கள் கத்தோலிக்கப் பள்ளி நிறுவனங்களுக்கான விதிகளை அங்கீகரித்த திரு அவை பிரகடனத்தின் மூன்றாம் நூற்றாண்டு (ஜனவரி 26, 1725) மற்றும் திருத்தந்தை 12 -ஆம் பயஸ், புனித ஜான் தெ பாப்டிஸ் தெலசால்
அவர்களை அனைத்துக் கல்வியாளர்களின் பாதுகாவலராக நியமித்த 75-வது ஆண்டு (மே 15, 1950) ஆகியவற்றை முன்னிட்டு கத்தோலிக்கப் பள்ளி நிறுவனங்களைச் சந்தித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
• மே 18 அன்று தன் திருத்தந்தை திருநிலைப்பாட்டு நிகழ்வில், திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் சென்று செபித்தது, திரு அவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் பேதுரு, அவரது மறைச்சாட்சியான வாழ்வு போன்றவற்றோடு நெருங்கிய தொடர்பைப் புதிய திருத்தந்தை அவர்கள் ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது.
• தனது முதல் மறையுரையில் புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளான “ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகவே படைத்தீர்! எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறுதல் அடையும் வரை ஓய்வெடுக்காது” என்றுரைத்தார்.
• மே 19 அன்று கிறித்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையிலான சிறப்பு உறவு பற்றி உரையாற்றிய திருத்தந்தை ‘உலகளாவிய உடன் பிறந்த உணர்வு என்ற சிறப்பம்சங்களின் உரிமையாளர்கள்’ என்று
திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் மற்றும் தனது மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரைக் குறிப்பிட்டார்.
இவ்வாறு
தான், திருத்தந்தையாகப் பதவியேற்றது முதல் தன் முன்னோடிகளின் வழிநடக்கும் நம் திருந்தந்தை 14 -ஆம் லியோ அவர்கள் கடந்த மே 21, புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விதைப்பவர் உவமை குறித்த கருத்துகளைத் திருப்பயணிகளுக்குத் தனது முதல் மறைக்கல்வி உரையின்போது எடுத்துரைத்தார்.
யூபிலி
ஆண்டு 2025-ஐ முன்னிட்டு மறைந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ‘இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு’ என்ற
தலைப்பில் தொடங்கப்பட்ட தொடர் மறைக்கல்வியை ஏறக்குறைய 14 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார் திருத்தந்தை 14 -ஆம் லியோ.
ஒரு
விதை எவ்வாறு வளர்ந்து, மரமாக விருட்சம் பெறுகிறதோ அதேபோல தன் முன்னோடிகளின் வார்த்தைகளை வாழ்வாக்கும் திருத்தந்தை, எதிர்காலத் திரு அவையே இறைவார்த்தையில் வித்திடும் வகையில் மத்தேயு 13:1-9-யில் வரும் விதைப்பவர் உவமையை மையமாகக் கொண்டு மறையுரையாற்றினார்.
இதில்
விதைப்பவர் உவமையின் வழியாக இயேசுவின் தொடர்புகொள்ளும் முறையை நாம் அடையாளம் காண முடிகின்றது. இக்காலத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு இவ்வுவமையானது நமக்கு அதிகம் கற்பிக்கின்றது என்றார். உண்மையில் நற்செய்தியில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் நம் வாழ்க்கை என்னும் நிலத்தில் வீசப்படும் விதை போன்றதாகும். உவமையில் குறிப்பிடப்படும் மண் என்பது நம் இதயம். இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திரு அவை என எல்லா இடங்களிலும்
கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது. வாழ்வின் ஒவ்வோர் எதார்த்தத்தையும் வாழத்தூண்டுகிறது.
இயேசுவின்
வார்த்தை பொதுவாக எல்லாருக்குமானது. ஆனால், அவ்வார்த்தைகள் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு வகையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ‘வீணாக’ விதையை வீசும் விதைப்பவரின் செயலானது கடவுள் நம்மேல் அன்பை வீசும் செயலுக்கான ஓர் உருவகமாகும். இயேசுவே வார்த்தையாகவும் விதையாகவும் இருக்கின்றார். நம் வாழ்க்கையை மாற்றுவதற்காக இறக்கவும் தயாராக இருக்கிறார் என்றார்.
இன்றைய
வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையில் கடவுளின் வார்த்தை நம்மை வந்தடைகிறது எனச் சிந்திப்போம். நாம் ஒரு வளமான மண் அல்ல என்பதை உணர்ந்தோமானால், நாம் சோர்வடையாமல், நம்மை ஒரு சிறந்த நிலமாக மாற்றுவதற்கு முயற்சிப்போம்.
வார்த்தையின்
விதை
இன்றும்
நம்மில் பல கத்தோலிக்கக் கிறித்தவக்
குடும்பங்களில் கடவுளின் வார்த்தையை மதிக்கவும் வணங்கவும் தங்கள் இல்லங்களில் திருவிவிலியத்தை வைத்திருப்பது மதிக்கத்தக்க செயலாகும். அதேவேளையில், அவர்களுக்கு இறைவார்த்தையைப் படித்துத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சிந்தையிலும் சொற்களிலும் செயல்களிலும் பயன்படுத்த வேண்டும்.
கடவுளின்
வார்த்தை மிகவும் வலிமை வாய்ந்தது; ஆனால், அதேவேளையில் அதைப்பெற்று நடைமுறைப்படுத்தும்படி நம்மைக் கெஞ்சும் அளவுக்கு மிகவும் பணிவானது.
யூபிலி
2025-ஆம் ஆண்டில் மையமான ‘இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு’ என்னும்
வார்த்தை முழக்கம் கொண்டு, இறைவனால் நம்மில் விதைக்கப்பட்ட வார்த்தை என்னும் விதையை நமதாக்குவோம், வாழ்வாக்குவோம்.
இறைவேண்டலே கிறித்தவ வாழ்வின் அடித்தளம். அதுவே நம் அருள்வாழ்வின் சுவாசம் என்றும் கூறலாம். ‘இறைவேண்டல் செய்யாத ஒருவர் கிறித்தவர் அல்லர்’ என்று நாம் துணிந்து கூறலாம். அறிவியல் வளர வளர ஆன்மிகத்தையும், அருள்வாழ்வின் தளங்களையும்கூட அறிவியல் பார்வையில் அணுகும் மரபு தொடங்கியது. அறிவியலும் இறை நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதே தொடக்கம் முதல் திரு அவையின் பார்வையாக இருந்து வந்துள்ளது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பவுல் 1998-இல் எழுதிய ‘நம்பிக்கையும் பகுத்தறிவும்’ (Fides et Ratio) என்னும் சுற்றுமடலில் “நம்பிக்கையும் அறிவியல் சிந்தனையும் உண்மையை அணுகும் மானிட முயற்சியின் இரு சிறகுகள்” என்றார்.
எனவே,
இன்று திரு அவையின் வழிபாடுகள், இறைவேண்டல்கள், திருத்தலங்களில் நடைபெறும் அற்புதச் செயல்கள், தனி வெளிப்பாடுகள் போன்ற அனைத்தையும் நம் திரு அவை அறிவியல் கண்ணோட்டத்தோடே அணுகுகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். அந்த வகையில் இறைவேண்டலையும் உளவியல் பார்வையில் ஆய்வு செய்து, அதன் முடிவுகளைப் பலரும் நமக்குத் தந்துள்ளனர்.
“சமய நம்பிக்கை மனிதரை மயக்கும் ஒரு போதை”
(The opium of the people) என்றார்
காரல் மார்க்ஸ். இவ்வுலக வாழ்வின் பல்வேறு துயரங்களில் மனிதருக்கு ஆறுதல் தரும் ஊற்றாகச் சமயங்களும், வழிபாடுகளும் இருக்கின்றன என்னும் வகையில் அவரது கூற்று ஒரு வகையில் சரியானதே. மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகளில் சமய நம்பிக்கை உள்ளவர்களும், இறைவேண்டலில் ஈடுபடுபவர்களும், சமய நம்பிக்கை, இறைவேண்டல் இல்லாதவர்களைவிட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று உலக மகிழ்ச்சியின் அறிக்கை (World Happiness Report- 2012) சான்று பகர்ந்துள்ளது.
இறைவேண்டல்
பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் இறைவேண்டல் செய்வோர் பலவித உடல்-மனம் சார்ந்த நன்மைகளைப் பெறுவதாகப் பட்டியலிடுகின்றன. மன அழுத்தம் குறைதல்,
மன ஆறுதல் அதிகரித்தல், தனிமை உணர்வு குறைதல், உறவுகள் மேம்படுதல், பரிவு மேம்படுதல், சிக்கல் தீர்க்கும் திறன் வளர்தல் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்று நம்மை வியக்க வைக்கின்றன. நம்முடைய முந்தைய தலைமுறையினர் அதிகக் கல்வியறிவின்றி வாழ்ந்தாலும், அவர்களின் வாழ்வில் மேற்கண்ட ஆசிகள் நிரம்பியிருந்தது அவர்களின் இறைநம்பிக்கை மற்றும் இறைவேண்டலினால்தான் என்று நாம் நம்பலாம்.
இன்று
பெரிதும் முன்வைக்கப்படும் நேர்மறை உளவியல் (positive Psycology)
மனமகிழ்ச்சியின் காரணிகளுள் ஒன்றாக நன்றியுணர்வைச் சுட்டுகிறது. இறைவேண்டலில் இறைப்புகழ்ச்சியும் நன்றியும் எப்போதும் சிறப்பிடம் வகித்திருக்கின்றன. நவீன உளவியலின் பிதாமகன்களுள் ஒருவரான கார்ல் யூங், “ஒப்புரவு அருள்சாதனத்தில் பாவங்களை அறிக்கையிடுவதால் குற்றவுணர்வு அகன்று, மன அமைதி கிடைக்கிறது.
எனவே, உளவியலையும் சமயத்தையும் இணைக்கும் புள்ளி பாவ அறிக்கை” என்று எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் நமது தனி வேண்டல், குழும வேண்டல், குடும்ப வேண்டல்களில் மன்னிப்பையும் இணைத்துக்கொள்வது சிறப்பானது என்பதை உணர்கிறோம்.
புற்றுநோயாளர்களிடம்
நடத்தப்பட்ட ஆய்வில் இறைவேண்டல் செய்யப்பட்ட நோயாளர்கள் அதிக ஆறுதலும் அமைதியும் பெற்றனர் என்பது எண்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்போர் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் இறைவேண்டல் செய்யுமாறு பெரும்பாலான மருத்துவர்கள் ஊக்குவிக்கின்றனர்.
தியானம்,
மூச்சுப்பயிற்சி, யோகா போலவே இறைவேண்டலும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது; கோபத்தைத் தணிக்கிறது. எதிர்மறை உணர்வுகளைத் திறம்படக் கையாள உதவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இறைவேண்டல் அனைத்து உறவுகளையும் குறிப்பாக, திருமண உறவை மேம்படுத்துகிறது என்பது எண்பிக்கப்பட்டுள்ளது. குடி நோய், போதை அடிமைத்தனம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கும் இறைவேண்டல் உதவுகிறது. இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’
(Alcoholics Anonymous) அமைப்பு
இறைநம்பிக்கை, இறைவேண்டலின் அடிப்படையில் கடந்த 95 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
நமது
மூளை எவ்வாறு இறைவேண்டல் மற்றும் இறையியல் அனுபவங்களுக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதை இன்றைய நரம்பியல் ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. ஆன்ட்ரு நியூபெர்க் என்னும் நரம்பியல் வல்லுநர் நமது மூளைக்கும் இறையியலுக்கும் தொடர்பு உள்ளதாக எண்பித்துள்ளார். அதன் விளைவாக ‘நரம்பிறையியல்’ (neurology
or spiritual neuroscience) என்னும் புதிய சொல்லாடல் மற்றும் ஆய்வுத்தளமே உருவாக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மருந்து, மாத்திரைகள் ஏற்படுத்தும் நல்வினையை இறைவேண்டலும் உண்டாக்கும் என்பது எண்பிக்கப்பட்டுள்ளது.
‘அறிவியல்,
மருத்துவம் மற்றும் உளவியல் பரிசோதனைகள் மனிதர்களின் நோயைக் குணப்படுத்தி, நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன’ (கதிம
2292) என்பதே கத்தோலிக்கத் திரு அவையின் பார்வையாக, போதனையாக உள்ளது.
இறைவேண்டலும்
அத்தகைய நலப்படுத்தும் பணியைச் செய்யும்போது, தனி வேண்டல் மற்றும் குழும வேண்டல்களை ஊக்குவிப்பது நம் கடமையாக மாறுகிறது.
இறைவேண்டல்
செய்வோர் பாமரர், பத்தாம் பசலிகள் என்னும் பார்வை மாறி, அவர்கள் அறிவியல் ஆய்வுகளோடு ஒன்றுபடுகிறார்கள் என்னும் புதிய பார்வையை இன்றைய உளவியல், அறிவியல் ஆய்வுகள் நமக்குத் தந்திருக்கின்றன.
எனவே,
புது உற்சாகத்தோடு தனி வேண்டல், குழும வேண்டல், குடும்ப இறைவேண்டல்களை ஊக்குவிப்போமாக.