news
ஆன்மிகம்
3 ஐடியாக்கள் (கண்டனையோ... கேட்டனையோ... – 35)

ஈஸ்டர் முடிந்த உடனேயே இதுபற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஈஸ்டருக்கு மறுநாள் திருத்தந்தை பிரான்சிஸ் இறந்துவிட, அதைத் தொடர்ந்து உருவான அசாதாரண சூழலில், இதுபோன்ற தலைப்புகள் பொருத்தமாக இருக்காது என்று நினைத்துத் தள்ளிப்போட்டேன். தற்போது ஒரு புதிய திருத்தந்தை பொறுப்பு எடுத்துள்ளார். பத்திரிகைகாரர்களும், அரசியல் தலைவர்களும், ஆர்வலர்களும் Eternal City-யிலிருந்து  விடைபெற்று, புழுதிகள் தரையிறங்கி, திரு அவை மெல்ல business as usual- நிலைக்குத் திரும்பி வந்துவிட்ட நிலையில் இப்போது பேசலாம். நான்கு பேர் கேட்க வாய்ப்புண்டு. விசயம் ஒன்றும் பெரிசில்லை. தவக்காலத்தை எப்படிச் சிறப்பாகக் கொண்டாடலாம் என்பதுபற்றிதான்.

திருவழிபாட்டு ஆண்டில் இரண்டு காலங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, திருவருகைக்காலம்; மற்றொன்று, தவக்காலம். இரண்டில் கால அளவில் சிறியது திருவருகைக்காலம். இதையும் ஓர் ஒடுக்கத்தின் காலமாகவே (time of penance) திரு அவை பரிந்துரைக்கிறது. தவக்காலத்தின் நிறைய வழிபாட்டு அடையாளங்களைத் திருவருகைக்காலத்திலும் காணலாம். ‘உன்னதங்களிலேகிடையாது. ‘அல்லேலூயாஉண்டு. பீடத்தில் மலர்கள் வைக்கப்படுவதில்லை. அருள்பணியாளர் ஊதா நிற திருவுடைகள் அணிகிறார். விதிப்படி திருவருகைக்காலமும் ஒரு தவக்காலம்தான். ஆனால், நடைமுறையில் அது அப்படி இருப்பதில்லை.

ஈஸ்டர் என்றால், அது ஒருநாள் கொண்டாட்டம். ஆனால், கிறிஸ்துமஸ்? என்று திருவருகைக்காலம் துவங்குகிறதோ அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் துவங்கிவிடுகிறது. கிறிஸ்துமஸ் நண்பர், கிறிஸ்துமஸ் போட்டிகள், கிறிஸ்துமஸ் கலை நிகழ்வுகள், கிறிஸ்துமஸ் விருந்துகள்... முக்கியமாகக் கிறிஸ்துமஸ் கேரல்ஸ். எங்கள் பங்கில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கேரல்ஸை டிசம்பர் 5-ஆம் நாள் தொடங்கினோம். சில பங்குகளில் திருவருகைக் காலம் துவங்கிய அன்றே கேரல்ஸ் ஆரம்பித்துவிடும். அப்போதுதான் எல்லா வீடுகளுக்கும் சென்று முடிக்க இயலும். ஒவ்வொரு நாளும் வண்டி கட்டிக்கொண்டு, வீடு வீடாகச் சென்றுஹேப்பி கிறிஸ்துமஸ்சொல்லி, கேரல்ஸ் பாடி, கிறிஸ்துமஸ் தாத்தாவோடு நடனமாடி, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடும் அனுதினக் கொண்டாட்ட சூழலில் எப்படி ஒடுக்க மனநிலை வரும்? அதுவும் இல்லாமல் கிறிஸ்துமஸ் ஓர் உலகப் பொருளாதார நிகழ்வு. கோவில்களில் அலங்காரம் செய்வதற்கு முன்னே கடைகளில் சீரியல்செட்டுகள் வைத்து, ஸ்டார் போட்டு விடுகிறார்கள். கடந்த வருடத்தின் மிகப்பிரமாண்டமான குடில்களும், கிறிஸ்துமஸ் மரங்களும் ஆலயங்களில் அல்ல; மால்களில்தான் போடப்பட்டன என்பதிலிருந்து இந்தக் கிறித்தவ விழாவின் வியாபாரச் சாத்தியங்களைத் தெரிந்துகொள்ளலாம். நல்ல வேளை, இன்னும் ஈஸ்டர் மீது வணிகர்கள் கண்படவில்லை!

திருவருகைக்காலம், தவக்காலம் இரண்டுமே முக்கியம் என்றாலும், ஆன்மிக ரீதியாக மக்களைப் புதுப்பிக்க, ஒருங்கிணைக்க தவக்காலமே சிறந்தது. தனிப்பட்ட முறையிலும் எனக்குத் தவக்காலமே பிடித்ததாக இருக்கிறது. இந்தக் காலத்தில் மக்கள் தங்கள் மனத்தைச் சற்றுக் கூடுதலாகத் திறந்து வைக்கிறார்கள் என நம்புகிறேன்புத்தாண்டு, பொங்கல் போன்ற கலாச்சார விழாக்கள் எல்லாம் ஒரு வழியாக முடிந்து, புழுதி அடங்கி, பொதுவான ஒரு நிதானத்தன்மை கைகூடி, மக்களின் கேட்கும் மனநிலையும் இந்தக் காலத்தில் அதிகரிக்கிறது.` தவக்கால ஞாயிறுகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மறையுரையை வழக்கத்தைவிட இரண்டு மூன்று நிமிடங்கள் கூட்டலாம். கோபப்படாமல் கேட்பார்கள். வழிபாட்டில்  பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வழக்கமாக வாரத்தில் ஒருநாள் மட்டும் (ஞாயிறு) வருபவர்கள், தவக்காலத்தில் இரண்டு நாள் (வெள்ளி) வருகிறார்கள். ஒப்புரவு அடையாளம் அதிகம் செய்யப்படுகிறது. தேர்வுகள் இருந்தாலும், பிள்ளைகள் தவக்காலத்தில் விரும்பி ஆலயத்திற்கு வருகிறார்கள். பொதுவாகத் தூங்கி வழியும் பங்குகள்கூட தவக்காலத்தில் சுறுசுறுப்பாகி, சிலுவைப்பாதை, திருப்பயணம், தியானம், பாஸ்கா நாடகம்... என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கிறது.

தவக்காலத்தின்போது நான் பங்கு அருள்பணியாளர்களைச் சந்திக்கும்போதுஇந்த வருடம் உங்கள் பங்கில் புதிதாக என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்பேன். குறிப்பாக, இளம் அருள்பணியாளர்களிடம். அவர்களின் உற்சாக ஐடியாக்களை என் பங்கில் செயல்படுத்திப் பார்க்க முடியுமா? என்று யோசிப்பேன். இதுபோன்ற உரையாடல்கள், பரிமாற்றங்கள் பங்குகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்குக் கட்டாயம் தேவை. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில், எங்கள் பங்கில் தவக்காலத்தின்போது நாங்கள் முயற்சித்து, பரீட்சித்துப் பார்த்த மூன்று புதிய முன்னெடுப்புகள் குறித்துச் சுருக்கமாக இங்கே பதிவிடுகிறேன். விரும்புகிற அருள்பணியாளர்கள் தங்கள் இடங்களில் அடுத்த வருடம் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.

1. தவக்காலக் கொடி

தமிழ்நாட்டில் வேறு எந்தப் பங்குகளிலும் தவக்காலத்தில் கொடியேற்றும் நிகழ்வு இருக்கிறதா? என்று தெரியவில்லை. எங்கள் பங்கில் உண்டு. இதை நான் சென்ற வருடமே அறிமுகப்படுத்திவிட்டேன். பெரும்பாலும் திருவிழாக்களுக்கு மட்டும் கொடியேற்றுவதைப் பார்த்திருந்த மக்களுக்கு, இந்தத் தவக்காலக் கொடியேற்றம் ஒரு புதுமை நிகழ்வு. எல்லாருக்கும் பிடித்திருந்தது. பெரும்பாலும் நேர்மறைக் கருத்துகளே வந்தன. ஊதா நிறப் பின்னணியில் மரச்சிலுவை, முள்முடி போன்ற தவக்கால அடையாளங்களும், ‘செபம்-தவம்-தானம்என்ற தவக்கால ஆதாரச் சொற்களும் கொண்டு, 10 அடிக்கு 7 அடி என்ற அளவில் ஒரு பக்கம் மட்டும் பதிப்பிடப்பட்ட கொடியைச் சாம்பல் புதன் என்று ஏற்றி, ஈஸ்டருக்கு முந்தின நாள் இறக்கினோம்.

46 நாள்கள் இந்தக் கொடி விண்ணில் பறந்தது. பங்கு உறுப்பினர்களுக்கு இது தவக்காலத்தின்மனமாற்ற அழைப்புகுறித்த ஒரு தொடர் நினைவூட்டலாகவும், ‘என்ன உங்க கோயில்ல கொடியேற்றி இருக்காங்க? திருவிழாவா?’ என்று கேட்கும் பிற மத நண்பர்களிடம், ‘இல்லை, இது தவக்காலக் கொடி; இந்தக் காலத்தில் நாங்கள் எங்கள் ஆண்டவரின் பாடுகளையும் இறப்பையும் சிறப்பாக நினைவு கூர்கிறோம்என்று நற்செய்தி சொல்ல ஒரு வாய்ப்பாகவும் இது இருந்தது.

பெரும் பொருள்செலவில் கொடிமரம் செய்து, அதை வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி, மற்ற நாள்களில் புறா எச்சங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்காமல், இதுபோன்ற வகையில் அதைப் பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம்.

2. தவக்கால மணிக்கட்டுப் பட்டை

இதைச் சென்ற வருடம் அறிமுகப்படுத்தினோம். A lenten wrist band. அமெரிக்காவில் நான் இதுபோல பார்த்திருக்கிறேன். ஊதா நிறத்தில் கயிறு அல்லது இரப்பர் வளையத்தை நாற்பது நாள்களும் மணிக்கட்டில் கட்டியிருப்பார்கள். என் பங்கில் தவக்கால மணிக்கட்டுப் பட்டையை அறிமுகப்படுத்தியபோது இளைஞர்கள், சிறுவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்தேன். பெரியவர்களும் விரும்பி அணிந்தது ஓர் இனிய ஆச்சரியம். குறிப்பாக, பெண்கள்! ஓர் ஒற்றை வளையல்போல! சிலுவை மற்றும் சில தவக்காலச் சொற்களை அதில் பொறித்தோம். S, M, L ஆகிய மூன்று அளவுகளில் செய்து வயதிற்கேற்ப விநியோகம் செய்தோம். ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் ஆர்டர் கொடுத்து, ஒன்று ரூபாய் 10 என விற்றதில் பெரிய நட்டம் இல்லை.

மணிக்கட்டுப் பட்டை பயன்பாட்டில் இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும். பள்ளிக்கூடங்கள் இதை அனுமதிக்க மறுக்கலாம். பள்ளிக்குச் செல்லுமுன் குழந்தைகள் பட்டையைக் கழற்றி வீட்டிலேயே விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்துவது நல்லது. இரண்டாவது, சாதியைக் குறிக்கும் இதுபோன்ற கயிறு கட்டுகளைப் பலர் கையிலும் காலிலும் போட்டுத் திரியும் சூழலில், ‘இதுபோன்ற ஒரு மணிக்கட்டுப் பட்டை தேவையா?’ எனச் சில அருள்பணியாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். தங்களை உயர்வாகவும், மற்றவரைத் தாழ்வாகவும் நிலைநிறுத்த முன்வைக்கப்படும் எல்லா அடையாள அரசியலும் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், தாங்கள் யார்? தங்கள் நம்பிக்கைகளும் பண்பாட்டு விழுமியங்களும் என்ன? என்பதை எந்தவித உயர்வு மனப்பான்மையின்றி, திறந்த மனத்தோடு வெளிப்படுத்தும் அடையாளங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

3. புலம்பல் நடனம்

பெரிய வெள்ளிக்கிழமை அன்று சிலுவைப் பாதையின்போது அன்னை மரியாவின் ஒப்பாரிப் பாடல் பல பங்குகளில் உணர்ச்சிப்பூர்வமாக நிகழ்த்தப்படுகிறது. சோலோ வகை! திறமையான பாடகர், இலேசான விசும்பல் கலந்து பாடும்போது, பல இடங்களில் மக்கள் கண்ணீரோடு அதில் பங்கெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் எங்கள் பங்கில் புலம்பல் பாடலுக்குப் பதிலாக, புலம்பல் நடனத்தை அறிமுகப்படுத்தினோம். இயேசுவின் உடலை அமைதி ஊர்வலமாகக் கொண்டு வந்து, மேடையில் மையமாகக் கிடத்திய பின்பு மக்கள் அனைவரும் அமர, ஆறு சிறுமிகள் கறுப்பு உடை அணிந்து, இயேசுவின் உடலைச் சுற்றி நின்று, ‘கல்வாரிக் குன்றின் மேல்என்ற நெஞ்சை உருக்கும் மலையாளப் பாடலுக்கு மிக மெல்லிய அசைவுகள் கொண்டு நடனம் ஆடினார்கள். கிராமங்களில் இறந்தவர் உடலைச் சுற்றிப் பெண்கள் மாரடித்து அழுவார்களே... ஏறக்குறைய அதன் சாயல் கொண்ட நடனம். நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் நடன அமைப்பாளர். மிகுந்த தயக்கத்துடனேயே இதை அறிமுகம் செய்தேன். கத்தியில் நடப்பது போன்ற விசயம். கொஞ்சம் பிசகினாலும் கூடஎன்னய்யா, ஆண்டவர் உடலைக் கிடத்திவிட்டு கூத்தடிக்கின்றீர்களா?” என்று மக்கள் கேட்டு விடுவார்கள். சரியாக அமைக்கப்பட்டு, மரியாதையுடன் நிகழ்த்தப்படும் புலம்பல் நடனம், பெரிய வெள்ளி வழிபாட்டின் துக்கச் சூழலில் அதன் தீவிரத்தை உயர்த்த உதவும். விரிவான ஆலோசனைக்கும், தயாரிப்புக்கும் பின்னர் அருள்பணியாளர்கள் புலம்பல் நடனத்தைத் தங்கள் பங்குகளில் முயற்சித்துப் பார்க்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
திருத்தந்தை 14-ஆம் லியோ பகிர்ந்துகொண்ட திரு அவைக்கான தொலைநோக்குப் பார்வை

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் மே மாதம் 9-ஆம் தேதியன்று கர்தினால்களுடன் நிறைவேற்றிய முதல் திருப்பலியின் மறையுரையிலும், 10-ஆம் தேதியன்று கர்தினால்களுடன் பகிந்துகொண்ட தன் முதல் வணக்கவுரையிலும் பகிர்ந்துகொண்ட முக்கியச் சிந்தனைகள் இதோ:

தன் முதல்ஊருக்கும் உலகுக்கும் (Urbi et orbi) என்ற ஆசியுரையைத் தயார் செய்ய நம் புதிய திருத்தந்தைக்கு அதிக நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தன்னைத் தேர்ந்தெடுத்தக் கர்தினால்களுடன் அவர் பகிர்ந்த முதல் மறையுரையிலும் வணக்கவுரையிலும் இன்றைய உலகில் கத்தோலிக்கத் திரு அவையின் பங்கு மற்றும் பணி என்ன? என்பதையும், தான் திருத்தந்தையாகப் பணிபுரியப் போகும் ஆண்டுகளில் தன் பணியின் தொலைநோக்குப் பார்வை என்ன? என்பதையும் மிகக் கவனத்துடன் வரையறுத்திருப்பதற்குப் பின்வரும் அவரின் வார்த்தைகளே சான்றாகும்.  

கர்தினால்களுடன் பகிர்ந்த முதல் மறையுரையிலிருந்து (மே 9, 2025)

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் அரும்பெரும் செயல் பல புரிந்துள்ளார்என்ற இன்றைய திருப்பாடல் வரிகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஆண்டவர் அரும்பெரும் செயல் பல புரிந்துள்ளார். என் சகோதர கர்தினால்களே, திருவிருந்து கொண்டாட்டத்திற்காக இன்று நாம் கூடியுள்ள இவ்வேளையில், ஆண்டவர் உங்களுக்குச் செய்துள்ள அரும்பெரும் செயல்களைப் பேதுருவின் பணி வழியாக அவர் நம் அனைவர் மீதும் இடைவிடாமல் பொழிந்து வரும் ஆசிர்வாதங்களை அடையாளம் கண்டுகொள்ள உங்களை அழைக்கிறேன்

திருத்தந்தை என்னும் சிலுவையைச் சுமக்கவும், பேதுருவின் அப்பணியினால் ஆசிர்வதிக்கப்படவும் நீங்கள் என்னை அழைத்திருக்கிறீர்கள். திரு அவையாகவும், இயேசுவின் தோழமைக் குழுமமாகவும், நற்செய்தியைப் பறைசாற்றும் நம்பிக்கையாளர்களாகவும் நம் கத்தோலிக்கப் பயணத்தைத் தொடரும் இவ்வேளையில், நீங்கள் ஒவ்வொருவரும் என் உடன் நடப்பீர்கள் எனவும், உங்கள் ஒவ்வொருவர் மீதும் நான் நம்பிக்கை வைத்துச் செயல்படலாம் எனவும் நான் அறிவேன்.

ஒரு சிறப்பான விதத்தில், உங்களது தேர்ந்தெடுப்பின் மூலம் திருத்தூதர்களின் தலைவராம் பேதுருவின் பணியை நான் தொடர கடவுள் என்னை அழைத்திருக்கிறார். மேலும், கிறித்தவ நம்பிக்கை எனும் விலைமதிப்பற்ற கொடையைக் கடவுள் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அக்கடவுளின் உதவியால் நான் அக்கொடையைக் கிறிஸ்துவின் மறையுடலாம் திரு அவை முழுவதற்கும் வழங்கும் உண்மையுள்ள பணியாளன் ஆவேனாக. கடவுளின் இத்திட்டத்தால் கத்தோலிக்கத் திரு அவை மலைமேல் இருக்கும் நகர் போலவும், வரலாற்றுத் தண்ணீரில் நீந்திச் செல்லும் மீட்பின் படகாகவும், இவ்வுலகின் இருள் சூழ்ந்த இரவுகளை ஒளிர்விக்கும் சுடராகவும் இருக்கும்படி விரும்புகிறார். திரு அவைக்கான கடவுளின் இத்திட்டம் நிறைவேறுவது திரு அவையின் உயரிய நிர்வாகக் கட்டமைப்புகளாலோ, உன்னதமிக்க கட்டடங்களாலோ நிறைவேறுவது அதிக சாத்தியமில்லை; மாறாக, திரு அவைக்கான கடவுளின் இத்திட்டம் நிறைவேறுவது திரு அவை அங்கத்தினரது புனிதமிக்க வாழ்வால் மட்டுமே.

மத்தேயு 16:13-15-இல் நாம் காண்பதுபோல் இன்றும் பல்வேறு சூழல்களில் இயேசு கிறிஸ்து ஒரு மனிதராக மட்டுமே பலரால் காணப்படுகிறார். சில நேரங்களில் கிறித்தவர்கள்கூட இயேசுவை ஒரு சிறந்த தலைவராகவும், புதுமைகள் செய்யும் ஓர் உயர்ந்த மனிதராகவும் மட்டுமே காண்கின்றனர். இவர்களது வாழ்வில் கிறித்தவ நம்பிக்கை ஒரு பயன்பாடுள்ள ஓர் ஆன்மிகமாக மட்டுமே திகழ்கிறது. இத்தகைய உலகுதான் திரு அவைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் பலமுறை கூறியதுபோல், இத்தகைய உலகில்தான் கிறிஸ்துவின்மீது நமக்குள்ள மகிழ்ச்சியான நம்பிக்கைக்குச் சான்றுபகர அழைக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வது, முதன்முதலாக ஆண்டவர்மீது நாம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவில், நம் அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஏற்றுக்கொள்ளும் தொடர் மனமாற்றம் இவற்றில் வெளிப்பட வேண்டும். உரோமை ஆயராகவும் பேதுருவின் பதிலாளியாகவும் என் பணியைத் தொடங்கும் எனக்கே இவ்வார்த்தைகளை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிறகுதான் திரு அவையாக நாம் நம் ஆண்டவர் மீதுள்ள நமது குழும நம்பிக்கையை அனுபவித்து, அனைவருக்கும் நற்செய்தியைப் பறைசாற்ற இயலும்.”

news
ஆன்மிகம்
தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுத் தலைவர் மேதகு ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ் அவர்களின் சுற்றறிக்கை! (‘எல்லாருக்கும் மறைக்கல்வி’)

உயிர்த்த நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் அன்பிற்கினியவர்களே!

மறைக்கல்விப் பணிகளால் இறைமக்களின் நம்பிக்கை வாழ்வை ஒளிரச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

இயேசு ஒரு மாபெரும் மறைக்கல்வியாளர். அவரது வாழ்வும் பணிகளும் போதனைகளும் வல்ல செயல்களும் அவர் ஏற்ற பாடுகளும், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அனைத்துமே மறைக்கல்வியின் பரிணாமங்கள். இயேசுவின் ஏக்கமும் நோக்கமும் வானகத் தந்தையின் எல்லையில்லா அன்பை இந்த மானிடம் உள்ளுணர வேண்டும் என்பதே. அந்த உயர்ந்த சிந்தனையை அவர் பல விதங்களில் பறைசாற்றினார். அதற்காக அவர் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தாம் சென்ற இடங்களையும், சந்தித்த மக்களையும் மறைக்கல்விக் களமாக்கினார்.

இயேசு, தாம் அறிமுகப்படுத்திய இறையாட்சியை இம்மண்ணில் மலரச்செய்ய மறைக்கல்வியை ஒரு கருவியாக்கினார். அவரது மறைக்கல்வியில் உவமைகள், உருவகங்கள், நாட்டு நடப்புகள், கேள்வி-பதில்கள், உரையாடல்கள், அறிவுறுத்தல்கள், பாராட்டுகள், எச்சரிக்கைகள் என எல்லாம் நிறைந்திருந்தன. தாம் எடுத்துச் சொல்ல விரும்பிய எல்லாவற்றையும் மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும், எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் கையாண்டார்.

இயேசுவைப் பின்தொடர்ந்து பல மறைப்பணியாளர்கள் மறையை அறிவிக்கும் நோக்கில் தம் நாடு, வீடு, வசதி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் துறந்து நம் நாட்டிற்கு வந்து, தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அர்ப்பணத்தோடு உழைத்த வரலாற்றை நாமறிவோம். அவர்கள் மறைப்பணி ஆற்றும் நோக்கில் பல பங்குத்தளங்களை உருவாக்கினர். பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினர். துறவு மடங்களை ஏற்படுத்தினர். குருமடங்களைத் தொடங்கினர். பற்பல தொண்டு நிறுவனங்களை நிறுவினர். எல்லாவற்றின் ஊடாகவும் நம்பிக்கை வளர் கல்வியான மறைக்கல்வியை வழங்கி கிறிஸ்துவின் மனநிலையில் மாணவச் செல்வங்களை உருவாக்கினர்.

மறைக்கல்வி என்பது ஒவ்வொரு மனிதனையும் இறை இயேசுவின் மனநிலையில் உருவாக்கி, இறைநம்பிக்கையில் முதிர்ச்சியடையச் செய்து, நற்செய்தி மதிப்பீடுகள் காட்டும் வாழ்க்கை முறையில் செயல்படப் பயிற்றுவிக்கும் கல்வி. மறைக்கல்விதான் திரு அவைக்குள் பல்லாயிரக்கணக்கான புனிதர்களையும் மறைச்சாட்சியர்களையும் இலக்குத் தெளிவோடு இறையாட்சிப் பாதையில் பயணிக்கவும் பணியாற்றவும் உருவாக்கத்தைக் கொடுத்துள்ளது. மறைக்கல்விதான் இந்தியாவில் சிறப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரமாயிரம் அருள்பணியாளர்களையும் துறவியரையும் அர்ப்பணமிக்கப் பொதுநிலையினரையும் உருவாக்கி அவர்களை உலகின் உப்பாக, ஒளியாக, புளிக்காரமாக ஆன்மிகப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பொறுப்போடும் பொறுமையோடும் செய்திடத் தூண்டியுள்ளது.

தமிழ்நாடு மறைக்கல்வியின் தந்தை என வருணிக்கப்படும் பாரிஸ் மறைபோதக அருள்தந்தை தாமஸ் கவான் டஃபி (1888-1942) மறைக்கல்வியின் முக்கியத்துவத்தைதிருமுழுக்குப் பெற்று மறைப்பணி ஆற்றத் தேர்ந்துகொள்ளப்பட்ட நம் பணிகளில் மறைக்கல்வியே மத்தி; பிற பணிகளெல்லாம் அதைச் சுத்திஎன்று பாமரத் தமிழில் பாங்காய் பகர்ந்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகள், அவற்றை வழிநடத்த பங்கு அருள்பணியாளர்கள் ஒருபுறம்; மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என்று பத்தாயிரத்திற்கும் மேலான பள்ளிக்கூடங்கள் - அவற்றை மேலாண்மை செய்யவும் நிர்வகிக்கவும் ஆயிரக்கணக்கான தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், துறவியர், பொதுநிலையினர் என மறுபுறம்இச்சூழலில் நம் பங்குகளிலும் பள்ளிகளிலும் மறைக்கல்விக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

இந்தியத் திரு அவை தன்னகம் கொண்டுள்ள 136 மறைமாவட்டங்களுக்கும் மறைக்கல்விப் பணிக்கு முன்னோடியாகத் திகழ்வது எதுவெனில் 18 மறைமாவட்டங்களைக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு திரு அவைதான் என்ற பெருமை நமக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் கத்தோலிக்கப் பங்குகளில் இன்னும் ஞாயிறு மறைக்கல்வி நடத்தப்படாத பங்குகள் பல நூறு உள்ளன என்பது அதிர்ச்சி தரும் தகவல். அருள்பணியாளர்கள், துறவியர் நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்களில் மறைக்கல்வி, நன்னெறி வகுப்புகள் நடத்தப்படாதது மிகவும் வேதனை தரும் செய்தி. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மறைக்கல்வி வழங்காமலிருப்பது இறையாட்சி மதிப்பீடுகளுக்கும் கத்தோலிக்கத் திரு அவைக்கும் அதன் போதனைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் நாம் திரு அவைக்கு அளித்த வாக்குறுதிகளுக்கும் முற்றிலும் முரணான செயலாகத் தோன்றவில்லையா? மறைக்கல்வி இன்றி நாளைய நலமான திரு அவையைக் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. ஏனெனில், மறைக்கல்விதான் திரு அவையின் உயிர்மூச்சு.

நற்கருணை கிறித்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக (திவ, எண் 10) இருப்பதுபோல, இறைவார்த்தை, இறைநம்பிக்கை வாழ்வின் உயிர்நாடியாக (இவெ, எண் 24) இருப்பதுபோல, மறைக்கல்வி இறைநம்பிக்கைப் பயணத்தின் உயிர்மூச்சு (கிக, எண் 4) என்பதை உளமார உணர்ந்து களமிறங்கிச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. மறைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத பங்குகளும் பள்ளிகளும் அல்லது அவற்றை நிர்வகிப்போரும் மறைமுகமாகத் திரு அவையையும், அதன் தலைவராகிய கிறிஸ்துவையும் கண்டுகொள்ளாத அபாயகரமான செயலை மேற்கொள்கின்றனரோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

திருத்தூதர் பவுல், “தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?” (உரோ 10:14-15) என எழுப்பும் பல கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் மொழி என்ன? மழலைப்பருவத்திலும் பதின் பருவத்திலும் வழங்காத மறைக்கல்வியையும் நன்னெறியையும் நம் பிள்ளைகளுக்கு எந்தப் பருவத்தில் வழங்கப் போகின்றோம்? ஏனெனில், மறைக்கல்வி, நன்னெறி ஏனைய பாடங்களைப் போன்றவையன்று; மாறாக, நம்பிக்கையையும் நல்வாழ்வையும் அனுபவமாக்கும் வாழ்வியல் கலைகள். விரும்பினால் நடத்துவதற்கும், விரும்பாவிட்டால் கண்டுகொள்ளாமலிருப்பதற்குமான விருப்பப்பாடங்கள் அல்ல; இப்பணிப் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொருவர்மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை. இதில் யாருக்கும் விதிவிலக்கு இருக்கத் தேவையில்லை.

மறைக்கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்தே இரண்டாம் வத்திக்கான் சங்கம்திரு அவை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் மறைக்கல்வியைத் தளரா ஊக்கத்துடன் வழங்க வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் (கிறித்தவக் கல்வி, எண். 7) என அறிவுறுத்துகின்றது. அத்தோடு கத்தோலிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்உலகியல் அறிவு, மறை அறிவு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, திருத்தூது உணர்விலும் ஊறித் திளைத்து, தங்கள் வாழ்வாலும் படிப்பினையாலும் ஒரே ஆசிரியரான கிறிஸ்துவுக்குச் சான்றுபகர வேண்டும் (கிறிஸ்தவக் கல்வி, எண். 8) என எதிர்பார்க்கின்றது.

எனவே, இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டின் எல்லாப் பங்குத்தளங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் அவற்றின் பொறுப்பிலிருப்போர் ஞாயிறு மற்றும் பள்ளி மறைக்கல்வியையும் நம் பள்ளிகளில் பயிலும் பிற சபைகள், சமயங்கள், சார்ந்த மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வியையும் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆயர் பேரவை சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

மறைக்கல்விக்கான பாடநூல்களைத் திண்டிவனம் முப்பணி மையமும், நன்னெறிக் கல்விக்கான நூல்களைத் திண்டுக்கல் வைகறைப் பதிப்பகமும் வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தேவையான பாடநூல்களை உங்கள் மறைமாவட்ட மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர், மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர், பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். மேற்காணும் பொறுப்பிலுள்ள அருள்பணியாளர்கள் தங்கள் பங்குகள், பள்ளிகளைச் சந்தித்துக் கலந்துரையாட வருகையில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்நாடு திரு அவையானது 2011-2012-ஆம் ஆண்டுதனைமறைக்கல்வி ஆண்டாகஅறிவித்து, ‘எல்லாருக்கும் மறைக்கல்விஎனும் மையச் சிந்தனையோடு கொண்டாடியதை இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். மறைக்கல்வி தொடர்பான நம் திட்டங்களும் பணிகளும் அந்த ஆண்டோடு முற்றுப்பெற்றுவிடவில்லை. அதன் ஒளியில் நாம் இன்னும் ஆழமாகத் திட்டமிட்டுப் பணிகளைத் தொடரக் கடமைகொண்டுள்ளோம்.

இத்தருணத்தில், ஒவ்வொரு மறைமாவட்டத்திலுமுள்ள பங்குகளில் நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி, பள்ளி மறைக்கல்வி பற்றிய தகவல்களைச் சேகரித்து தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு அனுப்ப மறைமாவட்ட மறைக்கல்வி பணிக்குழுச் செயலர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று நிலவும் இந்தியச் சூழலில் மறைக்கல்வி, நன்னெறி தவிர்க்க இயலாத வாழ்வியல் பாடங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு மாணவச் செல்வங்களை உருவாக்கிட உங்கள் எல்லாரையும் மிக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

 

news
ஆன்மிகம்
மும்மலங்கள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 15)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

கிறிஸ்டினா: தந்தையே, அறிவைக் கொடுத்தும் நம் கண்களைத் திறந்தும் நம் வாழ்வைச் செழிக்கச் செய்யும்நன்மை-தீமை அறியும் மரமாகியநம் மனம் பல்வேறுபட்ட சிக்கல்களையும் நம் வாழ்விற்குள் கொண்டு வருகிறது என்று கூறினீர்கள். முக்கியமாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை அது உருவாக்குவதாகச் கூறினீர்கள்இது குறித்துக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?”

அருள்பணி:ஆணவம் என்பதுநான் பெரியவன்என்கின்ற மனநிலையோடு நடந்து கொள்வது. பிறரோடு நம்மை ஒப்பிட்டு, ஏதோ ஒரு வகையில் நாம் மற்றவர்களைவிட உயர்வாக இருப்பதாகத் தெரியவந்தால், நம்மில் அழையா விருந்தாளியாக ஆணவம் குடியேறி விடுகிறது. ‘எனக்கு எல்லாம் தெரியும்என்றும், ‘பிறருக்கு ஒன்றும் தெரியாதுஎன்றும் தீர்ப்பிட ஆரம்பிக்கின்றோம். வாழ்வில் பிறரைவிட நாம் உயர்வாக இருப்பதாக எண்ணி ஆணவம் கொள்ளும் நாம், அதோடு திருப்தியடைந்து விடுவதில்லை; எல்லா நேரமும் மற்றவர்களைவிட உயர்வாக இருக்க வேண்டும் என்ற வேட்கையோடும் செயல்பட ஆரம்பிக்கின்றோம். மற்றவர்களைக் கீழே தள்ளி, நம்மை மேலே நிலைநிறுத்திக்கொள்ள முனைகின்றோம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மற்றவர்களைவிட நாம் ஒரு படி மேலே என்று நிரூபிக்க முயல்கின்றோம். குடும்பங்களிலும் சமூகங்களிலும் நடக்கும் பல்வேறு சண்டைகளுக்கான காரணம் ஆணவமும் அகந்தையுமே என்பதை மறந்துவிடக் கூடாது.”

மார்த்தா:தந்தையே, எனக்கு நகைச்சுவை ஒன்று நினைவிற்கு வருகிறது. பொங்கல் திருவிழாவின்போது ஒரு குடும்பத்தில் கணவனும்-மனைவியும் ஆர்வத்தோடு தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கணவன் அதில் காண்பித்த ஆர்வத்தைக் கண்ட மனைவி கிண்டலோடுஜல்லிக்கட்டை இவ்வளவு ஆர்வமாக டி.வி.யில பார்க்கிறீங்களே! நேரா போய் மாட்டை அடக்க வேண்டியதுதானே!’ என்று கூற, கணவன் கொஞ்சமும் சளைக்காமல், ‘நீ வேற! கட்டுன மாட்டையே அடக்க முடியல! இதுல போய் கட்டாத மாட்ட எப்படி அடக்குவது?’ என்று பதில் தந்தாராம். பல குடும்பங்களில்கட்டியநபர்களை அடக்க முயற்சிப்பதிலே பலரது வாழ்வின் நேரமும் ஆற்றலும் வீணாகிவிடுகிறது.”

அன்புச் செல்வன்: தந்தையே, கவிஞர் கண்ணதாசன் ஒருமுறைசிலருக்கு இந்த உலக உருண்டை அவர்களது தலையைவிடச் சிறியதாகத் தெரிகிறதுஎன்று கூறினார். மேலும், தமிழ் இலக்கியத்தில்புல்லறிவுஎன்ற ஒன்று உண்டு. அதாவது, கொஞ்சம் தெரிந்து கொண்டு, எல்லாம் தெரிந்ததுபோல பேசுவதே புல்லறிவு என்பது. இவை அனைத்தும் மனித மனத்தில் தோன்றும் ஆணவத்தையும் அகந்தையையும் சுட்டிக்காட்டுகின்றன.”

கிறிஸ்டினா:அடுத்து மனத்திலிருந்து கன்மம் என்ற கனி எவ்வாறு விளைகிறது என்பதைக் கூறுங்கள், தந்தையே!”

அருள்பணி:கன்மம் என்றால்வெறுப்புஎன்று பொருள். நம் மனம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை ஒப்பிட்டு, தரம் பிரித்து, மதிப்பீடு செய்வதாக நாம் பார்த்தோம். எதன் அடிப்படையில் நம் மனம் அனைத்தையும் தரம் பிரிக்கிறது என்றால், நம் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையில்தான்! நம் மனம் ஒவ்வொரு வினாடியும் ஏராளமான விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. நம் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றாற்போல் நடப்பவர்களைநல்லவர்கள்என்று முத்திரை குத்தி அவர்களை ஏற்றுக்கொள்கின்றது; அவ்வாறு நடக்காதவர்களைகெட்டவர்கள்என்று முத்திரை குத்தி வெறுக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நம் ஆசைகளின்படியும் விருப்பங்களின்படியும் நிகழ்வுகள் நடைபெறாதபோது, மனித மனத்தில் ஏராளமான வெறுப்பும் கோபமும் குடியேற ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக மனிதர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் போவதோடு, சரியான உறவுகளையும் முன்னெடுக்க முடியாமல் போய் விடுகிறது.”

அகஸ்டின்:ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள் என் நினைவிற்கு வருகின்றன: ‘நீ என்னை அன்பு செய்தாலும் சரி, வெறுத்தாலும் சரி, இரண்டுமே எனக்குச் சாதகமானவைதான். நீ என்னை அன்பு செய்தால் நான் உன் இதயத்தில் இருப்பேன்; நீ என்னை வெறுத்தால் நான் உன் மனத்தில் இருப்பேன் (Love me or hate me, both are in my favour. If you love me, I will be in your heart. If you hate me, I will be in your mind) என்று அவர் கூறுகின்றார். நாம் வெறுப்பவர்களையும் நம்மை வெறுப்பவர்களையும் நாம் எவ்வாறு நம் தலையில் தூக்கி வைத்து கோபத்தாலும் வெறுப்பாலும் பழிவாங்கும் உணர்வாலும் நம்மை நிரப்பிக் கொள்கின்றோம் என்பதை ஷேக்ஸ்பியர் கவிதை நயத்தோடு எடுத்துரைக்கிறார்.”

அன்புச் செல்வன்:வள்ளுவர்கூட வெறுப்பும் சினமும் எவ்வாறு நம்மையே அழிக்கவல்லது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்:   

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும் (குறள் 306)

இதன் பொருள்கோபமாகிய கொடிய நெருப்பு அதைக் கொண்டவரை அழிப்பதோடு, அவர் வீடு பேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்துவிடும்என்பதாகும்.”

அகஸ்டின்: மாயை என்றால்?”

அருள்பணி: இல்லாததை இருப்பதாகப் பார்ப்பதே மாயை என்பது. கானல் நீர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பாலைவனத்தில் ஓர் இடத்தில் தண்ணீர் இல்லை என்றாலும், அங்குத் தண்ணீர் இருப்பது போன்று தெரியும். மற்றோர் உதாரணம்: ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் நேராக உள்ள ஒரு குச்சியைப் போட்டோம் என்றால், தண்ணீர்க்குள் இருக்கும் குச்சியின் பகுதி வளைந்து இருப்பது போன்று தெரியும். இவை மாயைக்கான ஒருசில உதாரணங்கள்! இத்தகைய மாயையானது மனிதப் பார்வையில் உள்ள கோளாறைச் சுட்டிக்காட்டுகின்றது. ஏறத்தாழ இதையொத்தக் காரியத்தை மனமும் செய்கிறது. பணம், பொருள், வசதி ஆகியவை மனிதர்களுக்கு உண்மையான மகிழ்வைக் கொடுக்க இயலாது. எனினும், இவற்றில் மகிழ்வு இருக்கிறது என்று மனிதர்களை நம்ப வைத்து, அவர்களை இரவு-பகலாக ஓடவைப்பது மனம்தான். பொருளாதாரம், புகழ், மனித அங்கீகாரம் போன்றவை நிலையற்றவை. அவற்றால் நிலையான மகிழ்ச்சியைத் தர இயலாது. எனினும், பல மனிதர்கள் இரவு-பகலாக இவற்றையே தேடி ஓடுகின்றனர். காரணம் இவற்றில்தான் மகிழ்வு உண்டு என்று மனம் இவர்களை நினைக்க வைக்கிறது. மனம் உண்டாக்கும் மாயையின் பின்னால் மனிதர்கள் போவதன் காரணமாக உண்மையான மகிழ்வின் ஊற்றாகிய உறவை உதாசீனப்படுத்திவிடுகின்றனர். உறவைக் கட்டி எழுப்புவதற்கான நேரத்தையும் வாய்ப்புகளையும் இவர்கள் உருவாக்குவதில்லை.”

அன்புச் செல்வன்:தந்தையே, மனம் என்னும்நன்மை-தீமை அறிகின்ற மரம்ஆணவம், வெறுப்பு, மாயை என்ற தீமைகளை உருவாக்கி, எவ்வாறு உறவு வாழ்விற்கு உலை வைக்கிறது என்பதை அற்புதமாக விளக்கினீர்கள். இதைத் திருவிவிலியத்திலும் என்னால் பார்க்க முடிகிறது. நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்பதற்கு முன்னால் ஆதாமும், ஏவாளும் கடவுளோடு நல்ல உறவு கொண்டிருந்தனர். தங்களுக்கு இடையேயும் ஆழமான உறவு கொண்டிருந்தனர். எனவேதான் ஆதாம் ஏவாளைக் குறித்துஇதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் (தொநூ 2: 23) என்று கூறினார். ஆனால், இதே ஆதாம் நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்ட பின்பு ஏவாளைக் குறித்துஎன்னுடன் இருக்கும்படி நீர் கொடுத்த அந்தப் பெண் (தொநூ 3:12) என்று அந்நியப்படுத்திப் பேசினார். மேலும், இருவரும் கடவுளுடைய உறவில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயினர், கடவுளைக் கண்டு ஓடி ஒளிந்தனர்.”

news
ஆன்மிகம்
மரியா காட்சி அனுபவங்கள்: திரு அவையின் புதிய விதிமுறைகள் - 5 (புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்)

7. ‘ஆன்மிகக் கொடைகள்குறித்து எழும் சில கேள்விகள்

மரியா காட்சி அனுபவங்களிலிருந்து வெளிப்படும் நேர்மறை வரன்முறைகளில் முக்கியமானதாகஆன்மிகக் கொடைகள்மேற்கண்ட புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன. அதாவது, செப ஆர்வம், மனமாற்றம், இறையழைத்தல், பிறரன்புப் பணிகள், பக்தி போன்றவை ஆன்மிகக் கொடைகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொதுவாகத் தனிப்பட்ட ஒரு பக்தி முறையை வெளிப்படுத்துகிறதே அன்றி, இன்றைய பிரச்சினைகளைத் தொட்டு, சமூக அக்கறையும் ஈடுபாடும் கொண்ட நம்பிக்கை வாழ்க்கை முறையைக் கட்டியமைப்பதாகத் தெரியவில்லை. இந்நிலைக்கு மூன்று எடுத்துக்காட்டுகளை இங்குக் குறிப்பிடலாம்:

1) இந்தியா உள்பட சமயப் பக்தியிலும் பற்றிலும் சிறந்து விளங்குவதாகக் கருதப்படும் பல நாடுகள் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களைப் பிடித்துள்ளன. அதேவேளையில், சமயப் பற்றும் பக்தியும் குறைந்த, மறைந்த நாடுகளாகக் கருதப்படுபவை ஊழல் குறைந்த நாடுகளாக அறியப்படுகின்றன. இப்பின்புலத்தில் சமூகச் சீர்கேடுகளைத் தொட்டுக் களையாதபொதுமக்கள் பக்தியை (popular devotion) எப்படிப் புரிந்துகொள்வது?

2) ‘பொது வீடுஎன்றழைக்கப்படும் நமது பூமிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இன்று உருவெடுத்திருப்பது சூழல் மாசு. லீட்ஸ் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில், உலகளவில் நெகிழிக்கழிவின் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது இந்தியா என்றும், இங்கு ஆண்டுக்குப் பத்து மில்லியன் டன் நெகிழிக் கழிவைக் கொட்டிச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘பக்தகோடிகள்என்றழைக்கப்படும் திருப்பயணிகள் கூடும் திருத்தலங்கள், அவற்றைச் சுற்றியுள்ள வளாகங்கள், கடற்கரைகள், ஆறுகள், குளங்கள் போன்றவை நச்சுக்கழிவுகளால் நாசமாக்கப்படுவதை அறியாதவர் இல்லை. இதேபோல் சமய விழாக்களிலும், திருத்தலங்களிலும் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், விண்ணைப் பிளக்கும் வெடிகள் போன்றவற்றால் ஏற்படும் ஒலி மாசுகள் மனிதர்களையும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாக்கும் கொலையாளிகளாக உருவெடுத்துள்ளன. அதனால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் ஆன்மிகக் கனிகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டுமல்லவா!

3) தனிப்பட்ட பக்திமுறை வாழ்வை எடுத்துக் கொண்டாலும், மரியா காட்சி கொடுத்த பல திருத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் உண்மையான மனமாற்றம் பெறுகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனது பணித்தள அனுபவத்திலிருந்து நான் பார்த்தது சிந்தனைக்கு உரியது. ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் வேளாங்கண்ணிக்குத் திருப்பயணம் செல்லும் பக்தர்கள் உண்டு. ஆனால், இந்தத் திருப்பயணம் இவர்களின் குடும்ப / குழும வாழ்வில் ஆண்டுக்கணக்காகக் குமைந்து கொண்டிருக்கும் பிளவுகள், பிணக்குகள், வன்மங்கள், குரோதங்கள், பகைமைகள் போன்ற எதையும் தொட்டு மாற்றம் ஏற்படுத்தியதாக நான் பார்த்ததில்லை. இதேபோல், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருப்பயணத்திற்குப் பின்னர் மீண்டெழுந்ததாகவும் கூறுவதற்கில்லை.

மேலும் சொல்வதென்றால், காட்சி அனுபவங்களின் திருத்தலங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கக் கிறித்தவர்களில் பலர் தங்களது பங்குகளில் நடைபெறும் ஞாயிறு திருப்பலிகள், திருவிவிலிய மதிப்பீடுகளை உள்ளடக்கிய சமூக ஈடுபாடு மற்றும் பிறரன்புப் பணிச் செயல்பாடுகளில் பங்கேற்பதும் இல்லை. இவ்வாறு கிறித்தவ வாழ்வின் புதுப்பித்தலிலும், திரு அவையின் அருள்பணியிலும் ஈடுபாடில்லாதபொதுமக்கள் பக்தியைஎப்படிப் புரிந்துகொள்வது

(தொடரும்)

news
ஆன்மிகம்
படைப்பாற்றலோடு இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 45)

இறைவேண்டல் இறைவனின் அருள்! அதேவேளையில் மனித முயற்சியும்கூடஎன்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (கதிம 2725). எனவே, நமது இறைவேண்டல் நிறைவானதாக, பொருளுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும்; நமது படைப்பாற்றலையும் பயன்படுத்த வேண்டும்.

இறையாட்சி பற்றிய உவமைகளின் நிறைவில்விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர் (மத் 13:52) என்றார் இயேசு. இவ்வாக்கியத்தைப் பல விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் இந்தப் போதனை கிறித்தவ இறைவேண்டலுக்கும் பொருந்தும். இறைவேண்டல் பற்றிக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கிறித்தவரும் திரு அவைக் கருவூலத்திலிருந்து பழையவற்றையும், அதாவது இருபத்தொரு நூற்றாண்டு கால மரபுகளையும் பின்பற்ற வேண்டும். அதேவேளையில் படைப்பாற்றலோடு புதியவற்றையும் இணைத்துக்கொள்ள வேண்டும். எனவே, நமது தனி வேண்டல், குடும்ப வேண்டல், திரு அவைச் சமூக வேண்டல் என்னும் அனைத்துத் தளங்களிலும் படைப்பாற்றலோடு நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

இறைவேண்டலின் பரிமாண வளர்ச்சியை உற்றுநோக்கும்போது, அதில் இறைவனின் அருளோடு, இறையடியார்களின் படைப்பாற்றலும் இணைந்திருப்பதை நாம் காணலாம். இயேசுவே இறைவேண்டலைப் படைப்பாற்றலோடு அணுகியவர்தாமே!

யூதர்களின் மரபிலே அதுவரையில் இல்லாத ஓர் அணுகுமுறையில் கடவுளைஎங்கள் தந்தையேஎன்று முதன்முதலாக அழைத்தவர் இயேசுதாம். அவரது படைப்பாற்றலே தொடக்கத் திரு அவைக்கு ஊக்க மருந்தாக அமைந்து, திரு அவையின் இறைவேண்டல் பயணம் பரிமளிக்க உதவியது.

தொடக்கத் திரு அவை இப்போது நாம் கொண்டாடும் திருப்பலியைஅப்பம் பிடுதல்என்று படைப்பாற்றலோடு அழைத்தது. தொடக்கத் திரு அவையினர்திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் (திப 2:42). உண்மையில் திருத்தூதர் கற்பித்த நம்பிக்கை அறிக்கையே கி.பி. 325-ஆம் ஆண்டுநீசேநம்பிக்கை அறிக்கையாக வளர்ச்சி அடைந்தது. கிறித்தவ நட்புறவு ஒற்றுமையிலும் பொதுவுடமைப் பகிர்விலும் மலர்ந்தது. அவ்வாறே, இறைவேண்டலும் படைப்பாற்றலோடு புதிய வடிவங்களை எடுத்தது.

இறைவேண்டலின் பல்வேறு வடிவங்களைத் தூய ஆவியாரின் துணையோடு உருவாக்கினார்கள் இறையடியார்கள். திருப்பாடல்களைத் திருப்புகழ் மாலையாக இறைவேண்டல் செய்தனர் துறவியர். புனித தோமினிக் பெற்ற வெளிப்பாடே செபமாலையாக மலர்ந்தது. எத்தனையோ புனிதர்களும் திருத்தந்தையர்களும் புதிய புதிய இறைவேண்டல் முறைகளை, மன்றாட்டுகளை உருவாக்கினார்கள். எனவேதான், இன்றைய திரு அவையின் பொதுவழிபாட்டிலும் தனி இறைவேண்டல்களிலும் எத்தனையோ வடிவங்களில் இறைவேண்டல் ஏறெடுக்கப்படுகின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாட்ஸ் ஆப் (Whats app) இறைவேண்டல் குழுக்கள் இயங்குகின்றன. வீடியோ அழைப்பு வழியே குடும்பச் செபமாலை அன்றாடம் நடைபெறுகிறது. திருத்தலங்களிலும் வழிபாட்டுத் தளங்களிலும் நடைபெறும் வழிபாடுகளும் இறைவேண்டல்களும் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இவையெல்லாம் இறைவனின் கொடையாகவும் மனித முயற்சிகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன.

நமது தனிவேண்டலில் நம் வாழ்வு அனுபவங்களை இணைத்துப் புதிய முறைகளில், புதிய வழிகளில் நாம் இறைவேண்டல் செய்யலாம். இங்கே எனது அனுபவத்திலிருந்து மூன்று பரிந்துரைகளைப் பகிர விரும்புகிறேன். எனது பார்வையில் ஆராதனை, இறைப்புகழ்ச்சி-நன்றி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் என்னும் இறைவேண்டலின் ஐந்து கூறுகளில் தனி வேண்டலில் அதிக அழுத்தமும் நேரமும் பெறவேண்டியது இறைப்புகழ்ச்சி-நன்றியே. இறைப்புகழ்ச்சியில் நாம் பல புதிய முறைகளை உருவாக்கலாம்:

1. ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ஆசிகளை இறைவன் அவர்கள்மீது பொழிந்துள்ளார் என்று ஒவ்வொருவரும் நம்பலாம். எனவே, நமது வயதுக்கேற்ப அத்தனை ஆசிகளைப் பட்டியலிட்டு நாள்தோறும் மூவோர் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

2. இயேசுவின் 48 பெயர்களைச் சொல்லிஉமக்குப் புகழ் இயேசுஎன்னும் பதில்மொழியை இணைத்து நாள்தோறும் பாடலாகவோ, வேண்டலாகவேஇயேசுவுக்குப் புகழ்மாலைசூட்டுகிறேன்; Anbudan Arulventhan என்னும் யூடியூப் தளத்தில் இந்தப் பாடலின் காணொளியைக் காணலாம்.

3. செபமாலையைப் பயன்படுத்தி ஐந்து பத்து மணிகளிலும்இயேசுவே உமக்குப் புகழ், இயேசுவே உமக்கு நன்றி  எனக் கூறி, பெரிய மணியில்மரியே வாழ்க, அருள் நிறைந்த அன்னையே வாழ்கஎன்றும், பின்னர்தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சிஎன்னும் திருத்துவப் புகழைக் கூறலாம். ஐந்து பத்து மணிகளின் தொடக்கத்தில் ஒவ்வொரு நன்றிக் கருத்தையும் இணைத்து இந்தஇறைப்புகழ்ச்சி செபமாலையைமன்றாடலாம். பல ஆண்டுகளாக இம்மூன்றையும் நான் என் தனி வேண்டலில் இணைத்துக்கொள்வதோடு, நான் நடத்தும் தியானம், பாசறைகளில் பிறருக்கும் இவற்றைக் கற்பித்துள்ளேன்.

இந்திய மரபையும் பண்பாட்டையும் நம் இறைவேண்டலில் இணைத்துக்கொள்வதும் ஒரு படைப்பாற்றலே. இயேசு சபைத்துறவி அருள்தந்தை அந்தோணி டிமெல்லோ உருவாக்கியசாதனாதியானம் துறவியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நடந்துகொண்டே இறையோடு ஒன்றிக்கும்இறைவேண்டல் உலா (Prayer Walk), ஐந்து விரல்களையும் கொண்டு வேண்டும்ஐவிரல் மன்றாட்டு (Five Finger Prayer), உடலசைவோடு பாடிப் போற்றுதல் (Action Song Prayer), குடும்பத்தினர், நண்பர்களின் பெயர்களைக் கூறி மன்றாடுதல், சமைக்கும்போதும் இறைப்புகழ்ச்சி... என எத்தனையோ விதவிதமான வகைகளில் வேண்டலாம்.

மனம் இருந்தால், வழி உண்டுதானே! தேவையானது ஒன்றே; இறைவேண்டல் ஆர்வம் இருந்தால் போதும். நாமே நம் இறைவேண்டலைச் செதுக்கிக்கொள்ளலாம்.