news
ஆன்மிகம்
தாய்மை என்பது கடவுளின் சிறப்புக் கொடை! (Motherhood is God’s special gift) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 14

பழைய ஏற்பாடு தாய்மையைக் கடவுளின் கொடையாக மட்டுமல்லாமல், அன்னையர்கள் மற்றும் அவர்களின் மகன், மகள்களின் நோக்கத்தின் சிறப்பான இணைப்பாகவும் பரிந்துரைக்கின்றது.

1. தாய்மை என்பது கடவுளின் ஒரு சிறந்த கொடையாகும். காயினைப் பெற்றெடுத்த பின் ஏவாள்ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்என்றாள் (தொநூ 4:1). இந்த வார்த்தைகளோடு தொடக்க நூலானது படைத்தவரின் நற்குணத்திலிருந்து ஊற்றெடுக்கும் அருள் மற்றும் மகிழ்ச்சியாக மனித வரலாற்றின் முதல் தாய்மையைக் காட்டுகின்றது.

2. இதைப்போலவே, ஈசாக்கின் பிறப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தொடக்க வரலாற்றிலிருந்து விவரிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின்றி இருந்த மற்றும் முதிர்ந்த வயதை எட்டியிருந்த ஆபிரகாமுக்கு வானத்து நட்சத்திரங்களைப் போன்று எண்ணற்ற வழிமரபினருக்குக் கடவுள் வாக்களிக்கின்றார் (ஒப்பிடுக. தொநூ 15:5). மனிதனுக்கான கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் இந்த வாக்குறுதியானது குடிமுதல்வரால் (Patriarch) நம்பிக்கையோடு வரவேற்கப்படுகிறது. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொநூ 15:6).

இந்த வாக்குறுதியானது ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்த வேளையில் ஆண்டவர் கூறிய பின்வரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்தப்படுகின்றது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே; எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய் (தொநூ 17:4).

இந்த வழக்கத்திற்கு மாறான மற்றும் இரகசியமான நிகழ்வுகள் மனித எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து ஓர் உயிரைப் பெற்றெடுத்த சாராவின் தாய்மையானது கடவுளுடைய இரக்கத்தின் கனியை அனைத்திற்கும் மேலாக வலியுறுத்துகின்றது: “அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர் (தொநூ 17:15-16).

தாய்மையானது கடவுளின் தீர்க்கமானதொரு கொடையாகக் காட்டப்படுகின்றது. கடவுள் நிகழ்த்தவிருக்கும் வியக்கத்தக்க மற்றும் எதிர்பாராத மாற்றத்தைக் குறிக்கும் வண்ணம் குடிமுதல்வரும் (Patriarch) அவரின் மனைவியும் புதியதொரு பெயர் கொடுக்கப்படுவார்கள்.

தாய்மையின் கொடையால் ஆண்டவர் மகிழ்கின்றார்!

3. திரு அவைத் தந்தையர்களால் திரித்துவத்தின் ஒரு முன்னடையாளமாக விளக்கப்பட்ட மூன்று அதிசய மனிதர்களின் வருகையானது மிக வெளிப்படையாக ஆபிரகாமுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் நிறைவாகவே அறிவித்தது: “பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிராம் தன் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தன் அருகில் நிற்கக் கண்டார் (தொநூ 18:1-2). ஆபிரகாம் மறுத்தார்: “நூறு வயதிலா எனக்குக் குழந்தைப் பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தைப் பெறப் போகிறாள்?” (தொநூ 17:17; உக. 18:11-13). அந்த இறைவிருந்தினர் இவ்வாறு பதிலளித்தார்: “ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்\" (தொநூ 18:14; உக. லூக்1:37).

அந்த விவரிப்பானது அதுவரை மலடியாக இருந்தவளின் திருமண உறவை வளமையாக்கிய இந்த இறைச்சந்திப்பை முன்னிலைப்படுத்துகின்றது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து எல்லா நம்பிக்கைக்கும் எதிராக ஆபிரகாம் ஒரு தந்தையாகின்றார். மேலும் அவர்நம்பிக்கையின் தந்தை; ஏனென்றால், அவரின் நம்பிக்கையிலிருந்தே தேந்தெடுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையானது தொடங்குகின்றது.

4. தாய்மையின் கொடையோடு ஆண்டவரால் மலட்டுத்தன்மையிலிருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட மற்ற பெண்களின் வரலாற்றோடு இதைத் திருவிவிலியம் தொடர்புபடுத்துகின்றது. மனிதத்தன்மையில் நம்பிக்கையின்றி இருப்போரின் இதயப்பூர்வமான செபங்களை ஏற்பதனால் அடிக்கடி ஏற்படும் வேதனை மிகுந்த சூழ்நிலைகள் கடவுளின் தலையீட்டினால் மகிழ்ச்சியின் அனுபவங்களாக மாறுகின்றன. உதாரணமாகத் தன் வழியாக யாக்கோபுக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால் இராகேல் தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தன் கணவனை நோக்கிநீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும்; இல்லையேல் செத்துப் போவேன்என்றார். யாக்கோபு அவர்மீது சினம் கொண்டு, “நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்என்றார் (தொநூ 30:1-2).

ஆனாலும், உடனடியாகத் திருவிவிலியமானது இவ்வாறு கூறுகின்றது: பின்பு கடவுள் இராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார். அவரும் (இராகேல்) கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்துகடவுள் என் இழிவைப் போக்கினார் (தொநூ 30:22-23) என்றார். யோசேப்பு என்ற இந்த மகன்தான் எகிப்திலிருந்து குடிபெயர்ந்த காலத்தில் இஸ்ரயேலுக்கு மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றுகின்றார்

மற்ற கதையாடல்களில் இருப்பதைப் போன்றே இதிலும், பெண்ணினுடைய மலட்டுத்தன்மையின் ஆரம்ப நிலையில் அவர்களின் துயரங்களை அடிக்கோடிட்டுக் காட்டி, கடவுளின் அற்புதமான தலையீட்டை முன்னிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. அதேவேளையில், இது எல்லாத் தாய்மையிலும் இருக்கின்ற உள்ளார்ந்த பெருந்தன்மையைப் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றது.

5. சாம்சனின் பிறப்புப் பற்றிய விவரிப்பிலும் இதே மாதிரியானதொரு நடைமுறையை நாம் காணலாம். ஒரு குழந்தையை ஒருபோதும் கருத்தரிக்க இயலாதிருந்த மனோவாகுவின் மனைவி  வானதூதரிடமிருந்து ஆண்டவருடைய பின்வரும் அறிவிப்பைக் கேட்கின்றாள்: “நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை; ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய் (நீதி 13:13). சிம்சோன் வழியாக ஆண்டவர் செய்ய விரும்பாததை இந்த எதிர்பாராத மற்றும் அற்புதமான கருத்தரிப்பு அறிவிக்கின்றது.

சாமுவேலின் தாயான அன்னாவின் மகப்பேற்றின் வழியாக, இறை வேண்டலின் சிறப்பான பங்கானது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றது. அன்னா மலடியாக இருப்பதால் அவமானத்தினால் துன்பப்படுகிறாள். ஆனால், இந்தத் துன்பத்தை வெற்றிகொள்வதற்கு அவளுக்கு உதவ வேண்டி தொடர்ந்து ஆண்டவரை நோக்கி வேண்டுகின்றாள். கோவிலில் ஒருநாள் அவள் பின்வரும் உறுதிமொழியை எடுக்கின்றாள்: “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன் (1சாமு 1:11).

அவளுடைய இந்தச் செபமானது கேட்கப்பட்டது: “ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ‘நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்என்று கூறி, அவள் அவனுக்குச்சாமுவேல்என்று பெயரிட்டார் (1சாமு 1:19-20). அவளுடைய வாக்குறுதியில் நிலைத்திருந்து அன்னா அவளின் மகனைப் பின்வருமாறு கூறி ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்: “இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள் (1சாமு 1:27-28). கடவுளால் அன்னாவுக்குக் கொடுக்கப்பட்டு, பின்னாளில் அன்னாவால் கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட சிறுவனான சாமுவேல், அன்னா மற்றும் கடவுளுக்கு இடையேயான உயிரோட்டமான உறவினுடைய ஒப்பந்தத்தின் சாட்சியாகின்றார்

இவ்வாறு சாமுவேலின் பிறப்பானது மகிழ்ச்சியின் அனுபவமாகவும் நன்றி கூறுவதற்கானதொரு நேரமாகவும் இருக்கின்றது. சாமுவேல் முதல் புத்தகமானது மரியாவின் புகழ்ச்சிப்பாடலை முன்பே அறிவிக்கும் அன்னாவின் புகழ்ச்சிப் பாடலாக அறியப்படும் ஒரு பாடலைக் கொண்டுள்ளது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!” (1சாமு 2:1).

அன்னாவின் இடைவிடாத செபத்தினால் கடவுள் அவளுக்குக் கொடுத்த அந்தத் தாய்மை என்னும் அருளானது அவளைத் தாராளக் குணத்தினால் நிரப்பப்பட்ட ஒரு புதிய பெண்ணாக மாற்றியது. சாமுவேலின் அருள்பொழிவானது, கடவுளுடைய இரக்கத்தின் கனியை அவளின் குழந்தையில் கண்டுகொண்டு, அவரின் கொடைக்குப் பதிலாக அவள் இதுநாள் வரை எந்தக் குழந்தைக்காக ஏங்கினாளோ அந்தக் குழந்தையையே அவருக்காக ஒப்படைக்கின்ற ஒரு தாயினுடைய நன்றியின் பதிலாக இருக்கின்றது.

கடவுள் மனித வரலாற்றின் முக்கியமான தருணங்களில் தலையிடுகின்றார்

6. நாம் இப்பொழுது நினைவுகூர்ந்த இந்த அற்புதமான தாய்மை பற்றிய நிகழ்வுகளில், மகன்களுடைய பணியில் அவர்களின் அன்னையர்களுக்கும் முக்கியமானதொரு பங்கைத் திருவிவிலியம் கொடுப்பதை நாம் எளிதாகக் கண்டுகொள்ளலாம். சாமுவேலின் நிகழ்வில், அவரைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான முடிவெடுப்பதில் அவள் தீர்க்கமானதொரு பங்கைப் பெற்றிருக்கிறாள். இதற்கு இணையான தீர்க்கமானதொரு பங்கானது யாக்கோபுக்காகச் சந்ததிகளைப் பெற்றுக்கொடுத்த மற்றொரு தாயாகிய இரெபேக்காவினால் ஆற்றப்படுகின்றது (தொநூ 27). திருவிவிலியத்தில் விவரிக்கப்பட்ட இந்த அன்னையர்களின்  தலையீடானது, கடவுளின் உயரியத் திட்டத்திற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருவியின் அடையாளமாக இருப்பதாகவும் விளக்கப்படலாம். அந்தக் கடவுள்தான் தந்தையின் ஆசிரையும், பரம்பரைச் சொத்தையும் பெற்று, அதன் காரணத்தினாலேயே அவருடைய மக்களின் ஆயர் மற்றும் தலைவராகஇளைய மகனாகிய யாக்கோபுவைத் தேர்ந்தெடுக்கின்றார். அவர்தான் சுதந்திரமான மற்றும் விவேகமான முடிவுகளால் ஒவ்வொருவருடைய வாழ்வின் இலக்கையும் தீர்மானிக்கின்றார் மற்றும் வழிநடத்துகின்றார் (சாஞா 10:10-12).

தாய்மை தொடர்பான திருவிவிலியச் செய்தியானது முக்கியமான மற்றும் எல்லாக் காலத்திற்குமானதொரு பார்வையை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக, மலட்டுப் பெண் சம்பந்தமான விசயம், பெண்ணுடனான கடவுளின் தனிப்பட்ட உடன்படிக்கை, தாய் மற்றும் மகனின் முன்பே வகுத்தமைக்கப்பட்ட முடிவில் இருக்கும் சிறப்புப் பிணைப்பு போன்றவைகளில் வெளிப்படும் தாராள மனப்பான்மையின் அம்சங்களை இது வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

அதேநேரத்தில், மக்களுடைய வரலாற்றின் முக்கியமான தருணங்களில் கடவுளின் தலையீடானது  சில மலட்டுப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்கின்றது மற்றும் காலம் நிறைவுற்றபோது அவருடைய மகனின் மனுவுருவாதலுக்காக ஒரு கன்னியையும் வளமைமிக்கவளாகச் செய்கின்ற கடவுளின் தலையீட்டில் நம்பிக்கை வைப்பதற்கு நம்மைத்  தயாரிக்கின்றது.

மூலம்: John Paul II, Motherhood is God’s special gift, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 13 March 1996, p. 11.

news
ஆன்மிகம்
அழகைப் பற்றிக் கற்பிப்பது எதிர்நோக்கையே கற்பிப்பதாகும்! எதிர்நோக்கும் கலைஞர்களும் கலாச்சார உலகும்! (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை – 9)

ஓவியக் கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் கலாச்சார உலகில் பணிபுரிவோருக்கான யூபிலி உரோமை நகரில் 2025, பிப்ரவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் வழி திருத்தந்தை பிரான்சிஸ் புரிதலை, உறவை, மன்னிப்பை, ஒற்றுமையை விதைக்கும் உரையாடல், யாரையும் விலக்காமல் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றைப் பறைசாற்றும் உன்னதக் கருவிகளாகப் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் செயல்பட வேண்டும் என்ற கருத்தை அவர்களுக்கு நினைவூட்டினார்.

அழகையும் படைப்பாற்றலையும் கொண்டாடுவது சீரிய சிந்தனையைக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் மத்தியில் விதைப்பதற்கும் அவர்களது கலைத்திறமையால் மனுக்குல ஒற்றுமையை உலகிற்குத் தெளிவாகக் காட்டவும், நீதி நிறைச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் வழிகோலும்.

தமிழ்க் கலை உலகில், தமிழ்க் கத்தோலிக்கத் திரு அவையில் இன்று பணிபுரியும் கவிஞர்கள், இலக்கியப் புலமைமிக்கோர், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், சிற்பங்கள் மற்றும் சுரூபங்கள் செய்வோர், பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் இக்காலத் தமிழ் நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், குறும்பட மற்றும் திரைப்படக் கலைஞர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் மற்றும் தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் அறநெறி, கத்தோலிக்கத் திரு அவையின் நற்செய்தி வாழ்வுநெறி இவற்றைத் தங்களின் பல்வேறு தனித்திறமைகள் மூலம் வெளிப்படுத்தும் யாவரும் இக்கொண்டாட்டத்தில் நினைவுகூரப்பட்டனர்.  “கலைஞர்களும் கவிஞர்களும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுமான நீங்கள், இவ்வுலகில் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் யார் என எடுத்தியம்பும் இயேசுவின் புரட்சிகரமான இறைக் கண்ணோட்டத்தை உலகிற்குப் பறைசாற்றும் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அழகை உருவாக்கி உலகிற்கு அளிப்பது மட்டும் உங்கள் பணி என்று இருந்துவிடாதீர்கள். உலகின் பல்வேறு மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பனவற்றின் வரலாற்று மடிப்புகளில் புதைந்திருக்கும் புதைக்கப்பட்டிருக்கும் உண்மையை, நன்மையை, அழகை வெளிப்படுத்துவதும்கூட மனித குலத்திற்கான உங்கள் சேவை என்பதை உணர்ந்திடுங்கள்.

மனித இனம் நேரிய பாதையிலிருந்து தடம் புரண்டுவிடாமல், எதிர்நோக்கு நிறைந்த பார்வையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவுவது பல்வேறு கலைஞர்களின் கடமையாகும். அதே சமயத்தில் எதிர்நோக்கு எளிதானதோ, மேலோட்டமானதோ, வெறும் கருத்தியல் கொள்கையோ அல்ல என்பதையும் உங்கள் கலைகளில் வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உண்மையான எதிர்நோக்கு மனித வாழ்வின் பல்வேறு நாடகங்களுக்குள்ளேயே பின்னிப் பிணைந்திருக்கிறது என்று அறிந்திடுங்கள்என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “எதிர்நோக்கு என்பது வெறும் புகலிடமன்று; அது பற்றியெரிந்து பட்டொளி வீசும் இறைவார்த்தையை ஒத்த நெருப்புப் போன்றதாகும்என்கிறார்.

எனவேதான் நம்மைவிட மேம்பட்ட அழகு, நமக்குச் சவாலான நம் வலிகள், நம்மை அழைக்கும் உண்மை இவற்றைத் தன்னகத்தே கொண்ட உண்மை கலை எதுவாயினும், அது புறக்கண்களுக்குப் புலப்படாத கடவுளுடன் நாம் ஓர் அக உறவை நாம் உணரும்படி செய்துவிடுகிறது.

எனவே, மறைந்திருக்கும் பிரமாண்டத்தைக் கண்டுபிடித்து, வெளிக்கொணர்ந்து அதை நம் புறக்கண்களும் அகக்கண்களும் காணும்படிச் செய்வதே கலைஞர்களின் பணியாகும். கலை உலகில் பணிபுரிவோர் உலகின் பிரமாண்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றுள் எவையெல்லாம் பயமூட்டி நம்மை மயக்கும் பிரமாண்டங்கள் எனவும், எவையெல்லாம் மனிதத்தை மலரத்தூண்டும் பிரமாண்டங்கள் எனவும் நமக்குக் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர். கலையுலகிலுள்ள பிரமாண்டங்களில் எவையெல்லாம்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போன்றவைஎனவும், எவையெல்லாம்ஆற்றங்கரையில் நடப்பட்டு மிகுந்த கனிதரும் பழமரங்கள் போன்றவை (திபா 1:3-4) எனவும் நாம் அடையாளம் கண்டுகொள்ளக் கலைத்துறையினர் நமக்கு உதவ வேண்டும்.”

உலகின் பிளவுகளுக்கு மருந்திட்டு ஆற்றும் ஏழைகள், துயருறுவோர், காயமடைந்தோர், சிறையிலிருப்போர், துன்புறுத்தப்படுவோர் மற்றும் அகதிகளின் குரலுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருக்கும் உங்களை, உலகின் மனிதகுலத்தின் அழகைப் பாதுகாக்கும் காவலர்கள் இந்தக் கலைஞர்கள்என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “நாம் வாழும் இவ்வுலகில் புதுப்புது தடுப்புச்சுவர்கள் கட்டப்படுகின்றன; மொழி, கலாச்சார, ஆன்மிக, இன வேறுபாடுகள் ஒன்றையொன்று மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களாகக் கருதப்படாமல் பிளவுகளை உருவாக்கும் காரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கலையுலகின் அங்கத்தினர்கள் மனித மனங்களுக்கு ஒளியூட்டி இதமளிக்குமாறு இவ்வேறுபாடுகளுக்கிடையே பாலங்களைக் கட்ட வேண்டும்; இவ்வேறுபாடுகள் ஒன்றையொன்று சந்திக்கவும், உரையாடவும் கலைகள்வழி சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்என்றார்.

மேலும், “கலை ஒரு பகட்டோ அல்லது ஆடம்பரத்தின் வெளிப்பாடோ அல்ல; மாறாக, அது ஓர் ஆன்மிகத் தேவை. கலை நம் அன்றாட வாழ்வின் சூழலிலிருந்து நம்மைப் பிரித்துக் கனவு உலகிற்கு எடுத்துச்செல்வதல்ல; மாறாக, நம் அன்றாட வாழ்வின் சூழலை நாம் இன்னும் அதிக ஆர்வத்தோடு ஏற்று, அதிலுள்ள குறைகளைக் களைய நம்மைத் தூண்டுவது; நம்மை அழைப்பது. அழகைப் பற்றிக் கற்பிப்பது, எதிர்நோக்கையே கற்பிப்பதாகும். எதிர்நோக்கு என்பது ஒருபோதும் நம் வாழ்க்கையின் நாடகங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல; மாறாக, அது நம் அன்றாடப் போராட்டங்கள், வாழ்க்கைத் துன்பங்கள் மற்றும் இக்காலகட்டத்தின் சவால்கள் இவற்றினூடே பின்னிப் பிணைந்திருப்பதுஆகவே, இறைவாக்கினர்களான, திடம் நிறைந்த அறிவாளிகளான, கலாச்சாரத்தைப் படைப்பவர்களான கலைஞர்கள் இவ்வுலகத்திற்குத் தேவை.

புதிய உலகின் தூதர்களாகக் கலைகள் அமைய வேண்டும். தேடலையும், கேள்விகளையும், துணிந்து செயல்படுவதையும் கலைஞர்கள் ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. கலை ஒருபோதும் எளிதல்ல; கலை ஓய்வற்ற ஓர் அமைதியைத் தருகிறது. எதிர்நோக்கு ஒரு மாயையல்ல; அழகு ஒரு கற்பனை வாதமல்ல. கலைத்திறமை ஒருவகை இறையழைத்தல். அவ்வழைத்தலுக்குத் தாராளமாக, அன்புடன், முழுமூச்சுடன் நாமனைவரும் செவிமடுக்க வேண்டும்.

திருத்தந்தையின் இக்கருத்துகளைக் கீழ்க்காணும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்.

கலைத்துறையும் முக்கியமானதென உணர்ந்து, நம் குடும்பங்களிலும் பங்குத் தளங்களிலும் கலைத்துறையில் சாதிக்க விரும்பும் சிறுவர்- சிறுமியர், இளையோர்-இளம்பெண்களை உற்சாகப்படுத்துவோம்.

கிறித்தவப் பள்ளிகளில், பங்குகளில் மனித மாண்பை, ஒற்றுமையைப் படம் பிடித்துக்காட்டும் ஓவியம், நாடகம், நடனம், பாடல், கவிதை, கட்டுரை, சொற்பொழிவு மற்றும் பல கலைகள் வாயிலாக இளம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.

தமிழ் இலக்கியங்களில் புதைந்திருக்கும் மனித மாண்பை வெளிக்கொணர பல்வேறு வகையான போட்டிகளை நடத்துவோம்.

கலைத்துறையினரது படைப்புகளை அவர்களது அனுமதியோடு பயன்படுத்தி, அப்பயன்பாட்டுக்கு ஏற்ற தொகையைப் படைப்பாளிகளுக்குச் சென்றடையச் செய்வோம்.

திரு அவையில் பயன்படுத்தப்படும் பாடல்களில் இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர்களைப் பாடல் புத்தகங்களிலும், தட்டச்சு செய்த தாள்களிலும் குறிப்பிட்டு அவர்களது படைப்பாற்றலை அங்கீகரிப்போம்.

news
ஆன்மிகம்
புனிதரில் ஏற்பட்ட ஆழமும் தெளிவும் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை- 3)

மாமன்றக் கலந்துரையாடல் அனுபவத்தின் காரணமாக முதலில் திரு அவையின் கூட்டொருங்கியக்கத் தன்மை பற்றிய புரிதலில் ஆழமும் தெளிவும் பிறந்துள்ளன. இதை மாமன்ற அறிக்கை பின்வருமாறு எடுத்துரைக்கிறது: “அதைச் செய்து பார்த்ததால் அதனை நாங்கள் முன்பைவிட நன்குப் புரிந்துகொள்கிறோம்; அதன் பயனையும் நாங்கள் அறிய வந்துள்ளோம் (முஅ - முன்னுரை). இந்த நடைமுறையின் ஒரு விளைவு திரு அவையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கும் அனைத்து அமைப்புகளிலும் ஆட்சிப் பொறுப்புகளில் இருப்போர் அல்லது பதவிகள் வகிப்போர் தாங்களே முடிவெடுத்து, அம்முடிவுகளை ஏனையோர்மீது திணிக்கும் இன்றையப் பரவலான நடைமுறை கைவிடப்பட வேண்டும் என்பது.

நீதிமுறைக்கு ஏற்ப வாழும் எந்தச் சமூகத்திலும் இருப்பது போலவே திரு அவையிலும் அதிகாரம் செயல்படுத்தப்பட வேண்டும். அதாவது, தன்னிச்சையாக அது தனது விருப்பத்தை (பிறர்மீது) திணித்தல் கூடாது (இஅ 91). மாறாக, “கூட்டொருங்கியக்கத் திரு அவையை வளர்த்தெடுப்பதற்கான வழி, முடிவெடுக்கும் முறைகளில் இயன்ற அளவு  இறைமக்கள் அனைவரின் பங்கேற்பையும் அதிகமாக ஊக்குவிப்பதே (இஅ 87).  அதாவது, அனைவரும் சமப்பொறுப்பும் உரிமையும் உடைய சகோதரர்கள் எனும் புரிதலின் அடிப்படையில் எல்லாருடைய கருத்துகளும் கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டு, திறந்த உள்ளத்துடன் கலந்தாய்வு செய்யப்பட்டு, அனைவரும் விட்டுக்கொடுத்து, எல்லாரும் மகிழ்ச்சி அடையும் வகையில் இணைந்து முடிவெடுக்கும் முறை வழக்கத்திற்கு வரவேண்டும். இவ்வாறு, முடிவெடுக்க முடியாத சிக்கல்களைப் பற்றி அனைவரும் இன்னும் அதிகமாகவும் அமைதியாகவும் சிந்தித்து, ஒத்தக் கருத்து உருவாகும் நிலை வரும் வகையில் பின்வரும் அமர்வுகளுக்கு அவற்றைத் தள்ளிவைக்கலாம்.

இவ்வாறு, அனைவருடனும் கலந்துரையாடுவது பொறுப்புள்ள அதிகாரிகள் முடிவு எடுப்பதும் ஒன்றுக்கு ஒன்று போட்டியானவையோ முரணானவையோ அல்ல; மாறாக, இறைத் திருவுளத்தை அறிந்து செயல்படுத்தத் திரு அவை இணைந்து செல்ல வேண்டும். இத்தகைய கூட்டொருங்கியக்க நடைமுறை வழியில் திரு அவையில் முடிவுகள் எடுப்பதால் ஆயர்கள், அவர்களது குழு, திருத்தந்தை என்போரின் அதிகாரம் மறுக்கப்படுவது இல்லை; மாறாக, ஒன்றிப்பையும் முறையான பன்மையையும் காக்க அது உதவ வேண்டும். “கலந்துரையாடல் முறையில் கண்டுணர்ந்த திசையைக் கண்டுகொள்ளாது, அதை விட்டுவிடல் ஆகாது. மாறாக, பங்கேற்பு அமைப்புகளில் நிகழும் கலந்துரையாடல் வழியில் எட்டப்படும் முடிவுகளுக்கு இது சிறப்பாகப் பொருந்தும் (இஅ 92).

மேற்கூறியத் தெளிவை மாமன்ற அறிக்கை பின்வருமாறு எடுத்துரைக்கிறது: “கூட்டொருங்கியக்கத்தன்மை என்பது கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்து, இறையாட்சியை இலக்காகக் கொண்டு, கிறித்தவர்கள் மனித குலம் முழுவதோடும் பயணிப்பது ஆகும். அதன் நோக்கம் நற்செய்திப் பணியே. அதை நடைமுறைப்படுத்த அவசியமானவை திரு அவை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றுகூடி வருவதும், ஒருவர் ஒருவருக்குக் காதுகொடுத்துக் கேட்டு உரையாடல் நடத்துவதும் தெளிந்து தேர்வதாகும் ...” (முஅ 1h). இத்தகையகூட்டொருங்கியக்கமே திரு அவையின் வருங்காலத்தை அடையாளப்படுத்துகிறது (முஅ 1i).

அருள்வாழ்வும் இறைவாக்குத்தன்மையும்

இந்தக் கூட்டொருங்கியக்கத்திற்கு அருள்வாழ்வுப் பரிமாணமும் உண்டு. எவ்வாறெனில், “கூட்டொருங்கியக்க அருள்வாழ்வு தூய ஆவியாரின் செயல்பாட்டிலிருந்து ஊற்றெடுக்கிறது. இறைவார்த்தையைக் கேட்டல், ஆழ்ந்த அருள்சிந்தனை செய்தல், அமைதி, மனமாற்றம் என்பவற்றை அது கோருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் மாமன்ற இரண்டாம் அமர்வின் தொடக்கவுரையில் கூறியதுபோல, ‘நமது முதல் கடமை தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுப்பது; ஏனெனில், அவர் ஒவ்வொருவர் மற்றும் எல்லாவற்றின் வழியாகவும் பேசுகிறார்.’ மேலும், தன்னொறுத்தல், மனத்தாழ்மை, பொறுமை, மன்னிக்கவும் - மன்னிப்புப் பெறுவதற்குமான மனநிலை என்பனவையும் கூட்டொருங்கியக்க அருள்வாழ்வுக்கு அவசியம். அது ஆண்டவரது பணிக்காகத் தூய ஆவியார் பகிர்ந்தளித்துள்ள பல்வேறு கொடைகளையும் பணிகளையும் நன்றியுணர்வுடனும் மனத் தாழ்மையுடனும் வரவேற்கிறது (1கொரி 12:4-5). பேராசை, பொறாமை, அடக்கியாளும்- கட்டுப்படுத்தும் விருப்பம் என்பவற்றை விலக்கி, அது தம்மை வெறுமையாக்கி அடிமையின் தன்மை ஏற்ற இயேசுவின் அதே உளப்பாங்கை வளர்த்துக்கொண்டு அவ்வாறு செயல்படுகிறது (பிலி 2:7)” (இஅ 43).

தமது பாலஸ்தீனப் பணிப் பாதைகளில் தம்மைச் சந்திக்க வந்தவர்களுக்குச் செவிமடுத்தவராகவே இயேசுவை நற்செய்தி நூல்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆணோ-பெண்ணோ, யூதரோ-பிற இனத்தாரோ, திருச்சட்ட அறிஞரோ- வரிதண்டுவோரோ, நீதியாளரோ-பாவியோ... எவராயினும் அவருக்காக நின்று, அவர் கூறுவதைக் கேட்டு, அவருடன் பேசாமல் இயேசு யாரையும் அனுப்பவில்லை (இஅ 51); மாறாக, அவர்தாம் சந்தித்தவர்களின் தேவைகளுக்கும் நம்பிக்கைக்கும் செவிமடுத்து, தம் சொற்களாலும் செயல்களாலும் பதிலிறுப்பதன் வழியாக நலமளிக்கும் உறவுப் பாதையைத் திறந்து, அவர்களுடைய வாழ்வை அவர் புதுப்பித்தார் (இஅ 51). தம்மைப் போலவே தம் சீடர்களும் அனைவருக்கும் செவிமடுக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அவரைப்போல செவிமடுப்பது என்பது தன்மையப் போக்கிலிருந்து விடுபட்டு, அடுத்தரை வரவேற்கும் நற்பண்பு. அது இயேசுவின் தன்வெறுமையாக்கலில் (பிலிப் 2:6-7) பங்கேற்பது. “அது ஒவ்வொருவரையும் தன்னுடைய வரம்புகளையும், தனது பார்வையின் ஒரு சார்புத் தன்மையையும் கண்டுணரச் செய்யும் ஒரு கடினமான தவமுயற்சி ஆகும். இதனால் திரு அவையின் எல்லைகளுக்கு அப்பால் இருப்போரிடம் கடவுளின் ஆவியாரின் குரலைக் கேட்டு மாற்றம், மனமாற்றம் எனும் பயணத்தைத் தொடங்குவதற்கான வாயில் திறக்கப்படுகிறது (முஅ 16c).

மேலும், தனது கூட்டொருங்கியக்க முறை வழியாக இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை அது ஆக்கப்பூர்வமான முறையில் சந்திக்கத் திரு அவை அதற்குச் சிறந்த மாதிரி காட்ட முடியும். ஏனெனில், ஏற்றத்தாழ்வுகள் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றன; மரபு முறையிலான மக்களாட்சி முறைமீது மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதேச்சதிகார, சர்வாதிகாரப் போக்கும், வலுவற்ற மக்கள் மற்றும் இயற்கை மீதான அக்கறையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பும் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் உரையாடலுக்கு மாற்றாக வன்முறைவழி தீர்வுகளைத் தேடும் சோதனையும் ஏற்படுகிறது. இப்பின்னணியில் திரு அவையின் கூட்டொருங்கியக்க முறை இன்று இறைவாக்குக் குரலாக ஒலிக்க உதவுகிறது (இஅ 47).

செயல்படுத்த சில பரிந்துரைகள்

1. மக்கள் பங்கேற்பை இன்னும் விரிவாக்கவும், அதற்கு எழுந்துள்ள தடைகளையும் எதிர்ப்புகளையும் தவிர்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் (முஅ 1 m,n).

2. தலைமுறைகளுக்கு இடையிலும் கூட்டொருங்கியக்கப் பண்பாடு பரவலாக்கப்பட வேண்டும். அதன் விளைவாக, இளைஞர் தங்கள் குடும்பத்தினர், சம வயதினர், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களுடனும் சுதந்திரமாகப் பேசிட இணையதளம் உள்பட, பல்வேறு தளங்களும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் (முஅ 1h).

3. கூட்டொருங்கியக்கத்தன்மை பற்றிய சொல்லாட்சிகள், புரிதல்கள், நடைமுறைகள் என்பன இன்னும் அதிகம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் (முஅ 1p).

4. “அருள்பணிசார் அதிகாரம் உடையோர் கலந்துரையாடலில் பங்கேற்போருக்குச் செவிமடுக்க வேண்டும்; ஒத்தக் கருத்தை உருவாக்கிய கலந்துரையாடல்களின் முடிவுகளிலிருந்து தவிர்க்க இயலாத காரணம் இன்றி, அவர்கள் தடம் மாறக் கூடாது (இஅ 91).

5. முடிவெடுத்தல் தொடர்புடைய அனைவருடனும் கலந்துரையாடியே அருள்பணிசார் பொறுப்புள்ளவர்கள் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். இதனால், திரு அவைச் சட்டத்தில் இடம்பெறும்ஆலோசனைத்தன்மை மட்டுமே உடைய வாக்குஎனும் பதத்தில் தெளிவின்மை விளக்கப்பட்டுமட்டுமேஎனும் சொல்லை நீக்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும் (இஅ 92).

news
ஆன்மிகம்
கிறிஸ்துவின் உயிர்ப்பே நம் எதிர்நோக்கின் அடித்தளம்!

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே நம் கிறித்தவ வாழ்வின் அடிப்படையான நம்பிக்கையாக நம் அனைத்துப் பணிகளுக்கும் கிறித்தவ வாழ்விற்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றது. கிறிஸ்துவின் உயிர்ப்பின் மேல்தான் திரு அவையும், கிறித்தவ நம்பிக்கையாளர்களின் சான்று வாழ்வும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து அனைத்துத் தீமைகளின் மீதும் வெற்றி கொண்டு எழுந்தது, அவருக்கு மட்டும் வெற்றியைத் தருவதாக அமைந்து விடாமல், அவர் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வெற்றி உண்டு எனும் உயர்ந்த வாக்குறுதியைத் திண்ணமாய் வழங்குவதை உறுதியாய் நம்புவது கிறித்தவ எதிர்நோக்கு.

கிறித்தவர் என்றாலே கிறிஸ்து அடைந்த வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் என்றுதான் பொருள். திரு அவை என்றாலே கிறிஸ்துவின் வெற்றியை வாழ்வாக்கும் இயக்கம் என்றுதான் பொருள். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்... கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றது (1கொரி 15:14-17) என்ற பவுலின் வார்த்தைகள் கிறிஸ்துவின் உயிர்ப்புக்கும், நம்பிக்கையாளர்களாகிய நம் வாழ்வுக்கும் பணிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

புனித பவுல் தன் பணி வாழ்விற்கும் நற்செய்திக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் வெற்றியே அடித்தளம் என்று அறைகூவல் விடுப்பதோடு, கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்கள் அனைவரின் நம்பிக்கை வாழ்வுக்கும் சான்றுகூறும் பணிகளுக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பே அடிப்படை என்ற உண்மையை உரக்கக் கூறுகிறார். இந்த அழைப்பின் அறிவிப்பில் நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே கிறித்தவ எதிர்நோக்கு என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் புனித பவுல் தன் நற்செய்தி அறிவிப்பாக மட்டுமல்ல, கிறித்தவ நம்பிக்கையாளர்களின் சான்று வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் மிக உறுதியாக எடுத்துக் கூறுகிறார். “கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால், எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியோராய் நாம் இருப்போம் (1கொரி 15:19) என்று கூறுவது, எதிர்நோக்கு என்பது நம் நம்பிக்கை, வாழ்வு, பணி, சான்றுபகர்தல் அனைத்தோடும் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்துகிறது. எதிர்நோக்கு என்பது இவ்வுலக வாழ்வைச் சார்ந்திருப்பது அல்ல என்று பவுல் கூறுவதன் பொருளை இன்று கிறித்தவ நம்பிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உலகு சார்ந்த மூடநம்பிக்கைகள் எதிர்நோக்குக்கு எதிரானவை

அழிந்து போகும் ஆதாயங்களை முன்னிறுத்தி வாழ்வது கிறித்தவ எதிர்நோக்கு அல்ல; கிறித்தவ வாழ்வுக்கும் மானிட மாண்புக்கும் எதிரான மூடநம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வதும் செயல்படுவதும் கிறித்தவ எதிர்நோக்கு அல்ல; கடவுளின் வார்த்தைகளை வாழ்வு தரும் வார்த்தைகள் என்று உறுதியாய் நாம் நம்பும் சூழலில், நம்மையும் நம் சமூகத்தையும் ஏமாற்றுகிற, நம்மில் ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்துகின்ற சாத்திரங்களையும் ஏமாற்றுத் தர்மங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் குருட்டுச் சிந்தனைகளையும் நம்பி வாழ்வதும், அதையே பிறருக்குப் போதிப்பதும் மூடநம்பிக்கைகள் என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் கிறித்தவ எதிர்நோக்கு நிறைந்த வாழ்வுக்கு முற்றிலும் முரணானவை. “போலி மெய்யியலாலும், வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல; மனித மரபுகளையும் உலகின் பஞ்ச பூதங்களையும் சார்ந்தவை; அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள் (கொலோ 2:8) என்று புனித பவுல் விடுக்கும் அழைப்பு, கொலோசையத் திரு அவைக்கு மட்டுமல்ல, இன்று மூடநம்பிக்கையில் தடுமாறும் யாவருக்கும் பொருந்தும்.

தீமையின்மீது வெற்றி கொண்ட கிறிஸ்துவின் உயிர்ப்பு தரும் நம்பிக்கையின் மீதும், அவரின் ஆற்றலின் மீதும் உறுதிகொள்வதைவிட, இந்த உலகம் காட்டும் தவறான பாதைகளில் நடப்பதும், பிறரை நடக்கவைப்பதும் மூடநம்பிக்கையே

உயிர்த்த கிறிஸ்து தம் சீடர்களைச் சந்தித்தபோதெல்லாம்உங்களுக்கு அமைதி உரித்தாகுக (யோவா 20:19-26) என்று வாழ்த்தினார். இந்த அமைதி செபம் திருவிவிலியச் சொல், அன்புடன் கூடிய இணக்கத்தையும், ஒற்றுமையுடன் கூடிய உறவையும் எடுத்துக்கூறும் வாழ்த்தாக அமைகிறது. ஆனால், இன்று சாதிய அடிப்படையிலும், கட்சி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் நம்மைப் பிரித்து ஏற்றத்தாழ்வுகளை வளர்ப்பதும், நாம் பிளவுபட்டு நிற்பதும், மூடநம்பிக்கையால்தான்.

ஞாயிறு திருப்பலி இறைவார்த்தை அருளடையாளங்கள், சான்று பகரும் அன்பிய வாழ்வு, இவற்றுக்கு முரணாக கிறித்தவ நம்பிக்கையாளர்கள் நாள், நேரம், காலம், இடம், சகுனம், ஜோசியம், சாதியம், மந்திரம், தாயத்து என அழிந்து போகும் அடையாளங்களைத் தேடுவதும் மூடநம்பிக்கையே. இப்படிப்பட்ட மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்ற கிறிஸ்துவின் வார்த்தைகளிலும் வாழ்விலும் கொள்ளும் நம்பிக்கையே எதிர்நோக்கு நிறைந்த வாழ்வு.

செயலற்ற நம்பிக்கை வாழ்வு செத்ததே

சான்று பகரும் நம்பிக்கை வாழ்வே உண்மையான கிறித்தவ எதிர்நோக்குஉயிர்த்த கிறிஸ்துவும் இதையே தம் கட்டளையாகவும் விட்டுச் சென்றார் (மாற் 16:15-18; மத் 28:20).

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் (மத் 28:20) என்ற உயிர்த்த கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதே எதிர்நோக்கு கொண்டுள்ள திரு அவையின் செயல்பாடாக, நம்பிக்கையாளர்களின் செயல்பாடாக அமைய வேண்டும். மாற்கு நற்செய்தியில், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்...  நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அருளடையாளங்களைச் செய்வர்...” (மாற் 16:15-17) என்ற உயிர்த்த இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வாழ்வு என்பது சான்று பகரும் செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே, நம்பிக்கைக்கும் எதிர்நோக்குக்கும் இயேசுவின் போதனைகளில் மிகுந்த தொடர்பு உள்ளதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

எத்தனை தடைகள் வந்தாலும்நெருக்கடிகள் வந்தாலும், அச்சுறுத்தல்கள், அபாயங்கள் நம்மை நெருக்கினாலும் பெற்ற நம்பிக்கையை வாழ்வாக மாற்ற நாம் கொள்ள வேண்டிய உறுதிப்பாடே எதிர்நோக்கு!

நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன் (யாக் 2:18) என்று சாட்சிய வாழ்வைப் பற்றி எடுத்துக் கூறும் யாக்கோபு, தன் கூற்றுக்கு ஆதாரமாக ஆபிரகாமின் அசைக்க முடியாத, ஆழமான, அர்த்தம் நிறைந்த நம்பிக்கை வாழ்வைச் சாட்சியம் பகரும் எதிர்நோக்கு நிறைந்த வாழ்வோடு தொடர்புபடுத்துகிறார் (யாக் 2:21-23).

அனைத்திற்கும் நிறைவாக, “உயிர் இல்லாத உடல்போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே (யாக் 2:26) என்று திருத்தூதர் யாக்கோபு குறிப்பிடுவதில் உயிர் உள்ள உடல் வாழ்வதே எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது. கிறித்தவ வாழ்வில் எதிர்நோக்கு எனும் செயல்பாடும் சாட்சியமும் நிறைந்த உறுதிப்பாட்டைக் குறிக்கும் செயலாக விளங்கப்படுகிறது.

கிறிஸ்துவில் நம்பிக்கை என்பது, வெற்று வார்த்தைகளில் அல்ல; உயிர்ப்பிலும் உயிர்த்த கிறிஸ்துவிலும் நாம் கொண்டுள்ள வாழ்வுக்குச் சான்று பகரும் செயல்களாக வெளிப்பட வேண்டும். எனவேகிறிஸ்து உயிர்த்தார்என்று அறிக்கையிடுவதோடு தீமையிலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் சாதியப் பிரிவினையிலிருந்தும், மானிட வாழ்வுக்கு எதிரான செயல்களிலிருந்தும் நாம் விடுதலை பெற்று எழுவதே எதிர்நோக்குடன் கூடிய வாழ்வாகும்.

news
ஆன்மிகம்
புறம் நோக்கிய மனம் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 14)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்:தந்தையே, நன்மை-தீமை அறிகின்ற மரமாகிய மனம் ஒரு பக்கம் நம் வாழ்விற்கு நல்லதைச் செய்தாலும், மற்றொரு பக்கம் சில பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதைக் கூறினீர்கள். அதற்கு விளக்கம் அளிக்க முடியுமா?”

அருள்பணி:மனம் எவ்வாறு நம் வாழ்விற்குள் பிரச்சினையைக் கொண்டு வருகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நம் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். மனித மனம் இரண்டு திசைகளில் இயங்குகின்றது. ஒன்று, புறம் நோக்கி இயங்குகின்றது; மற்றொன்று, அகம் நோக்கி இயங்குகின்றது. வழக்கமாக விழித்திருக்கும் நிலையில் மனம் புறம் நோக்கி இயங்குகின்றது. மனம் புறம் நோக்கி இயங்குவது நாம் உயிர் வாழ்வதற்கும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கின்றது. அறிவைச் சேகரித்தல், உழைத்தல், புதியனவற்றை உருவாக்குதல், வாழ்வில் முன்னேறுதல் ஆகியன மனம் புறம் நோக்கி இயங்குவதாலேயே நடைபெறுகிறது.”

அன்புச் செல்வன்: இவையெல்லாம் வாழ்விற்கு அவசியமானவைதானே?”

அருள்பணி: நிச்சயமாக! எனினும், புறம் நோக்கிய மனம் சில நன்மைகளை விளைவித்தாலும், சில தகாத விளைவுகளுக்கான காரணமாகவும் ஆகிவிடுகிறது. இந்தத் தகாத விளைவுகளுக்கான முக்கியமான காரணம், மனம் தனது மகிழ்ச்சியைப் புறம் நோக்கிய இயக்கத்தில் கண்டுகொள்ள முனைவதே! அதாவது, வாழ்வாதாரத்திற்காகவும், உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதற்காகவும் புறம் நோக்கி இயங்க ஆரம்பிக்கும் மனம், காலப்போக்கில் தனது மகிழ்ச்சியையும் புறத்தே தேட ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய தேடலின் காரணமாகவே பல்வேறு விதமான தீமைகள் மனித வாழ்விற்குள் குடியேற ஆரம்பிக்கின்றன. முக்கியமாக, மூன்று காரியங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை ) தன்னிலிருந்தே அந்நியப்படல், ) இருமைத்தன்மை, ) ஒப்பீடும் அதோடு இணைந்த மதிப்பீடும்!”

கிறிஸ்டினா:ஒவ்வொன்றாக விளக்குங்கள் தந்தையே!”

அருள்பணி:முதலாவதாக, புறம் நோக்கிய மனம் எப்பொழுதுமே புற உலகிலே சஞ்சரிப்பதன் காரணமாக, நம்மிலிருந்தும் நமக்குள் இருக்கும் கடவுளிடமிருந்து நாம் அந்நியப்படக் காரணமாக இருக்கின்றது (self-alienation). கடவுள் நம்முடன் இருந்தாலும், நாம் அவரை உணர முடியாததற்கான காரணம், நம் மனம் நம்மில் இல்லாமல் இருப்பதே! அது எங்கெங்கோ இருந்து, எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றது. நமக்குள்ளே கடவுள் இருந்தாலும், இந்த மனமோ வீடு தங்காமல் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. மனத்தின் இத்தகைய அவலநிலையை நம்மில் பலர் அறியாமல், நம் வாழ்வின் பிரச்சினைக்கான வேர் எங்கோ இருக்கின்றது என்று எண்ணி விழிப்புணர்வற்ற நிலையில் நம் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.”

அகஸ்டின்:இருமைத்தன்மை என்றால் என்ன தந்தையே?”

அருள்பணி: இருமைத்தன்மை (duality) என்பது உலகின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று! இந்த உலகத்தின் ஓட்டம்இருமைஎன்பதன் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இரவு-பகல், வெம்மை-குளிர், மேலே-கீழே, இருள்-ஒளி, பொருண்மை-வெறுமை (matter-vacuum), அகம்-புறம், உள்ளே-வெளியே போன்ற இருமையே உலகின் அடிப்படைத்தன்மை. மேற்கூறப்பட்டவை வெளிப்படையாகப் பார்க்கப்படும்போது ஒன்றுக்கொன்று எதிரானவை போன்று தோன்றினாலும், அவற்றின் கலப்பில்தான் இந்தப் பூமியின் ஓட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இத்தகைய இருமையை உணருகின்ற சக்தி மனித மனத்திற்கு உண்டு.”

அன்புச் செல்வன்: தந்தையே, எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. இளைஞன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த பெரியவர்தம்பி, எத்தனை ஆடுகள் மேய்க்கின்றாய்?’ என்று கேட்க, இளைஞன், ‘பெரியவரே! என்னிடம் கறுப்பு ஆடுகளும் இருக்கின்றன, வெள்ளை ஆடுகளும் இருக்கின்றன. நீங்கள் எந்த ஆட்டின் எண்ணிக்கையை கேட்கிறீர்கள்?’ என்று பதில் கேள்விக் கேட்டான். பெரியவர்கறுப்பு ஆடுகளின் எண்ணிக்கை என்ன?’ என்று கேட்டார். ‘25’ என்று பதில் வந்தது. ‘வெள்ளை ஆடுகளின் எண்ணிக்கை?’ என்ற அவரது கேள்விக்கும் ‘25’ என்ற பதிலே வந்தது. இருவருக்குமிடையேயான உரையாடல் தொடர்ந்தது. ‘உன்னிடம் உள்ள ஆடுகளுக்கு உணவாக என்ன கொடுக்கிறாய்?’ என்று கேட்ட பெரியவரிடம், இளைஞன், ‘எந்த ஆட்டைக் குறித்துக் கேட்கிறீர்கள்? கறுப்பு ஆட்டையா? அல்லது வெள்ளை ஆட்டையா?’ என்று கேட்டான். பெரியவர், ‘கறுப்பு ஆடுகளுக்கு என்ன தருகிறாய்?’ என்று கேட்க, இளைஞன், ‘கருவேலமரக் காய்கள்என்றான். பெரியவர், ‘வெள்ளை ஆடுகளுக்கு?’ என்று கேட்க, அதற்கும்கருவேலமரக் காய்கள்என்று பதில் தந்தான். பெரியவர் இலேசாக எரிச்சல் அடைந்தார். எனினும் எரிச்சலை அடக்கிக்கொண்டுஉன்னிடம் உள்ள ஆடுகள் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் தருகின்றன?’ என்று கேட்டார். ‘எந்த ஆட்டைக் கேட்கிறீர்கள்? கறுப்பு ஆட்டையா? அல்லது வெள்ளை ஆட்டையா?’ என்று கேட்க, பெரியவரும்கறுப்பு ஆடுகள் எவ்வளவு பால் தருகின்றன?’ என்று கேட்க, ‘அரைப்படி பால்என்று பதில் வந்தது. ‘அப்படியானால் வெள்ளையாடுகள்?’ என்ற கேள்விக்குஅதுவும் அரைப்படி பால்தான்என்றான் இளைஞன்.

பெரியவர் எரிச்சலின் உச்சத்திற்குச் சென்றார். ‘உனக்குப் புத்தி பேதலித்து விட்டதா? ஏன் கறுப்பு ஆடுகள், வெள்ளை ஆடுகள் என ஒவ்வொரு முறையும் பிரித்துப் பிரித்துப் பேசுகிறாய்?’ என்று கோபத்துடன் கேட்டார். இளைஞன் கொஞ்சமும் பதற்றப்படாமல்தயவுசெய்து கோபப்படாதீர்கள். நான் அவ்வாறு கூறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதோ இந்தக் கறுப்பு ஆடுகளெல்லாம் இருக்கின்றன அல்லவா? இவையனைத்தும் எனக்குச் சொந்தமானவைஎன்று சொல்ல, பெரியவர் ஆர்வமுடன் அப்படியா! அப்படியென்றால் வெள்ளை ஆடுகள் யாருக்குச் சொந்தம்?’ என்று கேட்க, இளைஞனோ கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல்அவையும் எனக்குத்தான் சொந்தம்என்றானாம். இதுதான் மனித சிந்தனை!

நீங்கள் கூறுவதுபோல எதையும் பிரித்துப் பிரித்துப் பார்ப்பது. நான்-நீ, என்னுடையது-உன்னுடையது, படித்தவன்-படிக்காதவன், கறுப்பர்-வெள்ளையர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையுடையது மனம்!”

அருள்பணி:இவ்வாறு இருமையாக இருப்பனவற்றை மனித மனம் ஒப்பிட்டு பிடித்தது-பிடிக்காதது, நல்லது-கெட்டது, உயர்ந்தது-தாழ்ந்தது, இன்பமானது-துன்பமானது, அழகானது-அசிங்கமானது, தேவையானது-தேவையற்றது, கடினமானது-எளிதானது என்று தரம் பிரித்து முத்திரை குத்துகிறது. இத்தகைய தரம் பிரித்தல் மனித மனம் செய்கின்ற வேலை! உலகத்தில் நல்லது என்றோ கெட்டது என்றோ, உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ, இன்பமானது என்றோ துன்பமானது என்றோ, அழகானது என்றோ அசிங்கமானது என்றோ, எந்தப் பிரிவினைகளும் கிடையாது. கடவுள் ஆறு நாள்களாக உலகைப் படைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டும் திருவிவிலியத்தின் முதல் பிரிவில், ‘கடவுள் அது நல்லது என்று கண்டார்என்ற வார்த்தைகள் ஆறு முறை வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடவுள் படைக்கப்பட்ட படைப்பில் தாழ்ந்தது, துன்பமானது, கடினமானது, கெட்டது, தேவையற்றது, அசிங்கமானது என்று ஏதுமில்லை. எனினும், மனித மனம் தனது இருமைத்தன்மையின் காரணமாகப் படைப்பையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் இவ்வாறு தரம் பிரிக்கிறது.”

அன்புச் செல்வன்: அதாவது, உலகத்தில் இயல்பாக இருக்கும் இருமையை மனித மனம் தரம் பிரித்து, அதை உயர்ந்தது-தாழ்ந்தது, இன்பம்-துன்பம் என்ற ரீதியில் மதிப்பீடு செய்கிறது. எதன் அடிப்படையில் நம் மனம் இத்தகைய மதிப்பீட்டைச் செய்கிறது தந்தையே!”

அருள்பணி:நம்மை மையமாக வைத்துதான்! அதாவது, மனிதர்களாகிய நமது நலத்தையும் சுகத்தையும் மையமாக வைத்துதான் நம் மனம் எல்லாவற்றையும் பிரிக்கிறது. மனம் இவ்வாறு செயல்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இவ்வாறு தரம் பிரித்தால்தான், நாம் நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நம்மை வளர்த்துக்கொள்ள முடியும், நம் வாழ்வை உயர்த்திக் கொள்ள முடியும். எனவே, இத்தகைய பாகுபாடும் தரம் பிரித்தலும் நம் வாழ்வாதாரத்திற்கு மிகவும் அவசியமானவையாக இருக்கின்றன. எனினும், மனித மனம் இவ்வாறு சுற்றியுள்ளவற்றைத் தரம் பிரிக்கும்போது, ஒருசில பிரச்சினைகள் உருவாகின்றன. தமிழ் ஆன்மிக மரபாகிய சைவ சித்தாந்தத்தின்படி ஒரு மனிதரின் வாழ்வு மகிழ்ச்சியற்றதாவும் நிறைவற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் ஆணவம், கன்மம் (வெறுப்பு), மாயை என்ற மூன்று காரணிகளே! இவைமும்மலங்கள்என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்றுமே நம் மனம் சுற்றியுள்ளவற்றை இரண்டாகப் பிரித்துத் தரம் பிரிப்பதன் காரணமாக நம்மில் நிகழ்பவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றைக் குறித்து அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கலாம்.” 

(தொடரும்)

news
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 14

13. வார்த்தை மனுவுருவான மறையுண்மையில் நிறைவேறும் எசாயாவின் இறைவாக்கு (எசா 7:14). (Isaiah’s prophecy fulfilled in incarnation)

1. பழைய ஏற்பாட்டில் மரியாவைப் பற்றிச் சிந்திக்கையில், இரண்டாம் வத்திக்கான் சங்கமானது (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55) மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் தொடக்கக் காலக் கிறித்தவர்களின் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்த இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டைச் சுட்டிக்காட்டுகிறது: “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள்இம்மானுவேல்என்று பெயரிடுவார் (எசா 7:14).

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது, “அவர் கருத்தரித்திருப்பது தூய ஆவியாரின் வல்லமையால்தான்என்று கூறி மரியாவை அவரின் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு யோசேப்புவை அழைத்த வானதூதரின் வார்த்தைகளில் அந்த இறைவாக்குக்கு நற்செய்தியாளர் மத்தேயு கிறித்தியல் மற்றும் மரியியல் அர்த்தத்தைக் கொடுக்கின்றார். உண்மையில், “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள் (மத் 1: 22-23) என்பதையும் அவர் சேர்த்துக் கூறுகின்றார்.

2. எபிரேய திருவிவிலிய மூலத்தில் இந்த இறைவாக்கானது இம்மானுவேலின் கன்னியிடமிருந்தான பிறப்புப் பற்றித் தெளிவாக முன்னறிவிக்கவில்லை. உண்மையில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றalmahஎன்ற எபிரேயச் சொல்லானதுஒரு கன்னி (virgin) என்ற பொருளில் இல்லாமல், வெறுமனே ஓர் இளம் பெண்ணைத்தான் குறிக்கின்றது. மேலும், யூத மரபானதுஎன்றென்றைக்கும் கன்னிஎன்ற கருத்தை (idea of perpetual virginity) ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் கன்னித்தாய்மை (idea of virginal motherhood) என்ற கருத்தையும் அந்தக் கலாச்சாரம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை.

ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தைத் தருவார்

எவ்வாறாயினும் கிரேக்க மரபில்almahஎன்ற இந்த எபிரேயச் சொல்லானதுparthenosஅதாவது  ‘virgin’  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பு பண்புக் கூறாகவே எண்ணத் தோன்றுகின்ற இந்நிகழ்வில், மெசியாவின் வியக்கத்தக்க பிறப்பைப் புரிந்துகொள்வதற்கு நம்மைத் தயாரிப்பதற்காக எசாயாவின் வார்த்தைகளுக்குத் தூய ஆவியாரினால் வழங்கப்பட்டதொரு வியக்கத்தக்க  விளக்கமளிக்கின்ற நிகழ்வாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உண்மையில், ‘கன்னிஎன்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பானது, வழக்கத்துக்கு மாறானதொரு கருத்தரித்தலின் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதன் வழியாக, எசாயாவின் நூலானது கன்னி கருத்தரித்தலின் அறிவிப்பிற்குத் தயாரிக்கின்றது; அதனை ஒரு தெய்வீக அடையாளமாகக் காட்டுகின்றது. இக்காலத்தில் ஓர் இளம்பெண் தன் கணவனுடன் இணைந்த பிறகு ஒரு மகனைக் கருத்தரிப்பது என்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல; இருப்பினும், எசாயாவின் இறைவாக்கானது கணவனைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லைஅப்படியானால், இவ்வகையான முன்வரைவானது பின்னர் கிரேக்க மூலத்தில் கொடுக்கப்பட்ட பொருள் விளக்கத்தைப் (interpretation) பரிந்துரைத்தது.

3. எசாயாவின் இறைவாக்கானது (எசா 7:14); அதன் உண்மையான சூழலில் அண்டை நாட்டு மன்னர்களின் படையெடுப்பினால் அச்சுறுத்தப்பட்டு, அசீரியாவிடமிருந்து தனது மற்றும் தனது நாட்டின் பாதுகாப்பைத் தேடிய ஆகாசு மன்னனின் நம்பிக்கை குறைவிற்கானதோர் இறைப்பதிலாக இருந்தது. அவனது நம்பிக்கையைக் கடவுளில் மட்டுமே வைக்கவும், அசீரியர்களின் அபாயகரமான  தலையீட்டை மறுக்கவும் அவனை அறிவுறுத்தி, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைப்பதற்கு  கடவுள் சார்பாக எசாயா இறைவாக்கினர் அவனைப் பின்வரும் வார்த்தைகளால் அழைக்கிறார்: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்.” மனிதனின் உதவியில் அவனது விடுதலையைத் தேடுவதற்கு விரும்பி அந்த அரசர்  கடவுளிடம் ஓர் அடையாளத்தைக் கேட்க மறுக்கின்றபொழுது, இறைவாக்கினர் நன்கு அறியப்பட்ட இந்த முன்னறிவிப்பைச் செய்கிறார்: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? ஏன் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள்இம்மானுவேல்என்று பெயரிடுவார் (எசா 7:14).

இம்மானுவேலின் அடையாளமானகடவுள் நம்மோடுஎன்ற அறிவிப்பு, வரலாற்றில் கடவுளின் உடனிருத்தலின் வாக்குறுதியைக் குறிக்கிறது. இது வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளிற்கு முழு அர்த்தம் பெறவிருக்கின்ற நிகழ்வு வழியாக அதன் முழு அர்த்தத்தைக் காணும்.

4. இம்மானுவேலின் அற்புதமான பிறப்பின் அறிவிப்பில், கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் அறிகுறியானது, அவளது மகனில் நடந்தே தீர வேண்டியதோடு, தாயையும் தொடர்புபடுத்தும் நோக்கத்தைக் காட்டுகிறதுஒரு மாதிரி அரசைக் கட்டியெழுப்புவதற்காக, அதாவது மெசியாவின் அரசை (messianic kingdom) ஓர் அரசர் குறித்து வைக்கப்படுகிறார். மேலும், பெண்ணின் பங்கை எடுத்துக்காட்டும் சிறப்புமிக்க இறைத் திட்டத்திற்கானதொரு பார்வையையும் இது வழங்குகிறது.

உண்மையில் அந்த அடையாளமானது குழந்தையை மட்டுமல்ல; மாறாக, பின்னாளில் அந்தப் பிறப்பில் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கை நிறைந்த நிகழ்வாகிய வியக்கத்தக்க அந்தக் கருத்தரிப்பானது, தாயின் மிக முக்கியமானதொரு பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

இம்மானுவேல் பற்றிய முன்னறிப்பானது, சாமுவேல் இரண்டாவது புத்தகத்தில் நாம் வாசிக்கின்றவாறு, தாவீது அரசருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் பின்புலத்திலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இங்கு அரசரிடம்  அவரின் சந்ததிகளுக்கான கடவுளின் இரக்கத்தை  இறைவாக்கினர் நாத்தான் பின்வரும் வார்த்தைகளில் உறுதியளிக்கிறார்: “எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான் (2சாமு 7:13-14).

தாவீது குடும்பத்திலிருந்து கடவுளின் மகனைப் பிறக்கச் செய்ததன் வழியாக, அதன் முழுமையான மற்றும் உண்மையான அர்த்தத்தைத் தர புதிய ஏற்பாட்டில் கடவுள் தாவீதின் வழிமரபிடம்  ஒரு தந்தைக்குரிய பங்கை ஆற்றுவதற்கு விரும்புகிறார் (ஒப்பிடுக. உரோ 1:3).

5. இதே எசாயா இறைவாக்கினர் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றுமோர் ஏட்டில், வழக்கத்திற்கு மாறான இம்மானுவேலினுடைய பிறப்பின் இயல்பை உறுதி செய்கின்றார். இதோ அவரின் வார்த்தைகள்: “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் (எசா 9:6). இவ்வாறாக, இறைவாக்கினர் இந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டிருந்த வெவ்வேறு பெயர்களில், அந்தக் குழந்தையின் அரசருக்குரிய பணிகளைப் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார்: ஞானம், வலிமை, தந்தைக்குரிய அன்பு மற்றும் சமாதானம் செய்தல். இங்குத் தாயானவள் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மெசியாவின் அரசில் மக்கள் நம்பக்கூடிய அனைத்தையும் கொண்டுவரக்கூடிய மகனை உயர்த்தியிருப்பதென்பது அவரைக் கருத்தரித்துப் பெற்றெடுத்த பெண்ணிலும் பிரதிபலிக்கப்படுகின்றது.

6. இறைவாக்கினர் மீக்காவின் நன்கு அறியப்பட்டதோர் இறைவாக்கும் இம்மானுவேலின் பிறப்பை மறைமுகமாகக் குறிப்பிடுகின்றது. இறைவாக்கினர் மீக்கா இவ்வாறு கூறுகிறார்: “நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக்காலமாய் உள்ளதாகும் (மீக் 5:2-3). இந்த வார்த்தைகள் மகிழ்ச்சி மற்றும் மீட்பைக் கொண்டு வருகின்ற வியக்கத்தக்க நிகழ்வு வழியாக நினைவுகூரப்படுகின்ற மற்றும் பெருமைப்படுத்தப்படுகின்ற அந்தத் தாயில், மரியாவின் பங்கை மறுபடியும் கோடிட்டுக் காட்டிமெசியா பற்றிய நம்பிக்கை நிறைந்ததொரு பிறப்பின் எதிர்பார்ப்பை மீண்டும் எதிரொலிக்கின்றன.

முன்னறிவிப்பானது கன்னித்தாய்மையின் வெளிப்பாட்டிற்குத் தயாரிக்கின்றது

7. மரியாவின் கன்னித்தாய்மையானது  பொதுவாக ஏழை எளியவர்களுக்கான கடவுளின் தயவினால் ஏற்படுத்தப்பட்டது (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55).

அவர்களின் முழு நம்பிக்கையையும் ஆண்டவரிடத்தில் வைக்கக்கூடிய அவர்களது மனநிலையினால், அவர்கள் மரியாவின்  கன்னிமையின் ஆழமான அர்த்தத்தை முன்கூட்டியே அறிந்திருந்தனர். மனிதத் தாய்மையின் மகத்துவத்தை நிராகரித்து, அவர் அவரின் சொந்த வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளத்தையும்  கடவுளிடமிருந்து எதிர்நோக்கியிருந்தார்.

ஆகையால், பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட கன்னித் தாய்மையின் முறையானதோர் அறிவிப்பைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பு (எசா 7:14) இந்த  மறையுண்மைக்கான வெளிப்பாட்டிற்குத் தயாரிக்கின்றது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழியாக்கத்திலும் இவ்வாறே கட்டமைக்கப்படுகின்றது. இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட முன்னறிவிப்பை மேற்கோள்காட்டி, மரியாவின் கன்னிக் கருவறையில் (in Mary’s virginal womb) இயேசுவின் கரு உருவானதன் வழியாக அதன் முழுமையான நிறைவேற்றத்தை மத்தேயு நற்செய்தியானது எடுத்துரைக்கின்றது.

மூலம்: John Paul II, Isaiah’s prophecy fulfilled in incarnation, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 7 February 1996, p. 11.