சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களுக்கு ‘தடை இல்லை’ என்ற சான்று வழங்க ஒப்புதல் கேட்டு மறைமாவட்ட ஆயர்கள் நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயத்திற்கு அனுப்புகின்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பதில்கள் அனுப்பப்படுகின்றன. மேற்கண்ட புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி நம்பிக்கை கோட்பாட்டுப் பேராய முதல்வர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அண்மைக்காலமாக ஆயர்களுக்கு அனுப்பியுள்ள சில பதில் கடிதங்களின் சுருக்கத்தைக் கீழே பார்க்கலாம்.
1) தென்
இத்தாலி நாட்டில் லோகிரி-ஜெரச்சே (Lori-Gerace) மறைமாவட்ட
ஆயருக்கு அனுப்பியுள்ள 2024, ஜூலை 5 தேதியிட்ட ‘தடை இல்லை’ கடிதம். கலாபரியாவில் உள்ள சாந்தா தொமினிக்கா தி பிளாகானிக்கா (Santa
Domenica di Placanica) என்ற
இடத்தில் கொசிமோ பிரகோமெனி (Cosimo Fragomeni) என்ற
18 வயது விவசாயி பெற்ற மலை மாதா (Modonna dello Scogolio) காட்சி
அனுபவங்கள்;
2) ஸ்பெயினில்
மெரிதா-படஜோஸ் (Merida -Badajoz) உயர்
மறைமாவட்ட ஆயருக்கு 2024, ஆகஸ்டு 22 தேதியிட்ட ‘தடை இல்லை’ கடிதம். சந்தவிலா என்ற இடத்தில் மார்சலினா பரோசொ எக்ஸ் போசித்தோ (Marcelina Baroso Exposito) மற்றும்
ஆப்ரா பிரிஜிதொ பிளான்கோ (Modonna dello Scoglio) ஆகியோர்
வியாகுல அன்னையிடம் தனித்தனியாகப் பெற்ற காட்சி அனுபவங்கள்.
3) பிரான்சின்
பூர்ஜெ (Bourges) உயர்
மறைமாவட்ட ஆயருக்கு 2024, ஆகஸ்டு 22 தேதியிட்ட
‘தடை இல்லை’ கடிதம். பெல் லெவுசின் (Pellevoisin) திருத்தலத்தில்
எஸ்தெல் பகுட்டே (Estelle Faguette) இரக்கத்தின்
அன்னையிடம் பெற்ற காட்சி அனுபவங்கள்;
4) வட
இத்தாலியின் பிரெஷா (Brescia) மறைமாவட்ட
ஆயர் பியர் அந்தோணியோ திரெமொலதா (Pierantonio Tremolada) அவர்களுக்கு
2024, ஜூலை 8 தேதியிட்ட ‘தடை இல்லை’ கடிதம். போந்த நெல்லெ தி மோந்திகியாரி (Fontanelle
di Montichiari) என்ற
இடத்தில் பியரினா ஜில்லி (Pierina Gilli) என்பவர்
இரகசிய ரோசா அன்னையிடம் (Our Lady of Mystical Rose) பெற்ற
காட்சி அனுபவங்கள் மற்றும் செய்திகள்;
5) ஆம்ஸ்டர்டாம்
நகரில் உள்ள அனைத்து நாடுகளின் அன்னையிடம் (Our Lady of all Nations) ஈடா
பியர்டெமென் (Ida Peerdeman) 1945-இல்
பெற்ற காட்சி அனுபவங்களைப் பற்றி 2024, ஜூலை 11 தேதியிட்ட அறிவிப்புக் கடிதம். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வுகள் இயல் நிலை கடந்ததல்ல (non-supernatural) என்று
1974-இல் திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கி இரகசியமாக வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இப்பொழுது இக்கடிதத்தின் வழியாகப் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது;
6) புவர்த்தோ
ரிக்கோவில் (Puerto Rico) ககுவாஸ்
(Caguas) மறைமாவட்ட
ஆயர் எசுபியோ ரமோஸ் மொராலெஸ் (Eusebio Ramos Morales) அவர்களுக்கு
எழுதியுள்ள 2024, ஆகஸ்டு 1 தேதியிட்ட கடிதம். 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எலெனிட்டா தெ ஜீசஸ் (Elenita de
Jesus) என்ற பெண் அன்னை மரியாவிடம் மிகுந்த பற்றுக் கொண்டவராகவும், மேய்ப்புப் பணியில் அக்கறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும், கார்மெல் மலையில் மரியன்னைக்கு ஒரு திருத்தலம் கட்டியதாகவும், பின்னர் ஆண்டவர் கிறிஸ்துவோடும், அன்னை மரியாவோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்வுகளில் இயல்நிலை கடந்த இயல்பு எதுவும் இல்லை (Constat de non-supernaturalitate) என்றும், இலெனிட்டா
கன்னிமரி அன்னை அல்லள் என்றும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
6. வேளாங்கண்ணி திருத்தலம்
‘இந்தியாவின் வேளாங்கண்ணியில் மரியாவின் அன்பு’ என்று தலைப்பிட்டு 2024 ஆகஸ்டு 01 தேதியிட்ட கடிதம் ஒன்றைக் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் தஞ்சை மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பியுள்ளார் (The Diocese of Thanjavur New Lette, Sep. 2024, பக். 4-5). மேற்கூறப்பட்ட
புதிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதில்கள் அனுப்பப்பட்டு வருவதுபோல், வேளாங்கண்ணியில் நடந்ததாகச் சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களுக்கு ‘தடை இல்லை’ என்ற ஒப்புதல் இக்கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது (எ.கா: catholic herald
eo./Vatican-approves-devotion-to-India’s -16th
century-vailankanni-marian-shrine). ஆனால்,
அப்படி ஓர் ஒப்புதல் கொடுப்பதற்காக இக்கடிதம் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, இத்திருத்தலத்தில் பல நூற்றாண்டுகளாகத் தூய ஆவியாரின்
செயல்பாட்டால் விளையும் பல ஆன்மிகக் கனிகளைக்
குறிப்பிட்டு, ‘அனைவரின் அன்னையாக’
இயேசு நமக்கு விட்டுச்செல்ல விரும்பிய மரியாவின் கனிவும் உடனிருப்பும் வெளிப்படுகின்றன என்றும், “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, இந்த இறைநம்பிக்கை திருத்தலத்தின் ஆன்மிக அழகை எண்ணியும், செப்டம்பர் மாத விழாக் கொண்டாட்டங்களைக் கருதியும் அனைத்துத் திருப்பயணிகளுக்கும் இறையாசிர் வழங்குவதாகவும்” இக்கடிதம்
எழுதப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில்
காணப்படும் மற்றொரு கூற்று கூர்ந்த மதியோடு ஆராய்தற்குரியது. இத்திருத்தலத்திற்குச் செல்லும் கிறித்தவ மற்றும் கிறித்தவரல்லாத பல திருப்பயணிகள் மரியாவின்
கரங்களில் இயேசுவைத் தேடி, தங்கள் வேதனையையும் நம்பிக்கையையும் அவரது அன்னையின் இதயத்திடம் ஒப்படைக்கிறார்கள் என்றும், இதைப் பல சமயங்களின் ஒத்திசைவு
அல்லது கலவை என்று கருதக்கூடாது என்றும் இக்கடித்தில் கூறப்பட்டுள்ளது (This should not be considered as a form of syncretism or mixing of
religions). ஆனால்,
பெண் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்து சமயத்தாரும், இந்து சமயத்திலிருந்து மாறிய கிறித்தவர் பலரும் மரியாவைப் பெண் தெய்வமாகப் பாவித்து வணங்கி வருவதை எளிதில் மறுக்க இயலாது (Ancy Donal Modonnaï ‘Velankanni: Where Catholic Faith Blends with
Hindu Rituals’, in The Hindu, 19 August 2022). இன்னும் குறிப்பாக,
தமிழ்நாடு மீனவர்கள் கடல் தெய்வத்தை நம்புவதாகவும், அத்தெய்வம் ‘கடல் அன்னை’ என்று அழைக்கப்படுவதாகவும், அந்தக் கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டார் என்றும் ஓர் ஆய்வில் கூறப்படுகிறது (நிவேதிதா லூயிஸ், அறியப்படாத கிறித்தவம்).
இந்த
நம்பிக்கை. “கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் (இயேசு கிறிஸ்து) ஒருவரே”
(1திமொ 3:5-6) போன்ற திருவிவிலியப் போதனைகளுக்கு முரண்பாடாகத் தோன்றினாலும், திருப்பயணிகள் வேளாங்கண்ணி அன்னையைத் தெய்வமாகப் பாவித்து வணங்குவதும் போற்றுவதும், வேண்டுவதும் அதற்கான தங்களுக்கே உரிய சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதும் நிதர்சனமாக நடக்கிறது.
1671-ஆம் ஆண்டு
போர்த்துக்கீசிய வணிகர்களை நடுக்கடலில் வீசிய புயலிலிருந்து காப்பாற்றியதும், அதற்கு முன்னர் நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக்கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவனை நடமாட வைத்ததும் அன்னையின் கனிவு நிறைந்த ஆற்றலினால் என்பது சாட்டியுரைக்கப்படும் இந்நிகழ்வுகளின் மூலக்கதைப் புனைவுகளில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (S.R. Santos, The Shrine Basilica of Our lady of Health,
Vailankanni, Thanjavu, Don Bosco Press, 12th Revised and Enlarged Edition,
1983).
எனவே,
மரியாவின் கரங்களில் இருக்கும் இயேசுவைத் தேடித் திருப்பயணிகள் செல்கிறார்கள் என்பதும், அவர்களது தேவைகள் அனைத்தையும் தமது அன்னையின் பரிந்துரையால் இயேசு நிறைவேற்றித் தருகிறார் என்பதும், அவர்களது பக்தியை ‘பல மதங்களின் ஒருவித
ஒத்திசைவு அல்லது கலவை என்று கருதப்படக் கூடாது’ என்பதும் வலிந்து கூறப்படுவதாகவே தோன்றுகிறது.
(தொடரும்)
12 ஆண்டுகள் ஆட்சி செய்து, திரு அவையின் சிந்தனையிலும் அக்கறையிலும் உத்தரவாதமான மாற்றங்களை ஏற்படுத்திய, வரலாற்றின் முதல் இலத்தீன்-அமெரிக்கத் திருத்தந்தை பிரான்சிஸ் இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது எல்லார் மனத்திலும் இருக்கின்ற கேள்வி: ‘அடுத்த போப் யார்?’ இன்னும் சில நாள்களில் அதற்கு விடை கிடைத்துவிடும். Hopefully !
சில
‘கான்க்ளேவ்கள்’ ரொம்ப
நாள்கள் நடந்திருக்கின்றன. வரலாற்றின் மிக நீண்ட கான்க்ளேவ் 1268-ஆம் ஆண்டு நடந்தது. கால அளவு: 2 வருடம், 9 மாதங்கள். ஊர்க்காரர்கள்
கான்க்ளேவ் நடந்த மாளிகையின் கதவுகளை அடைத்து, உணவு வழங்கலைக் குறைத்து, மேல் கூரையை அங்கங்கே பிரித்துவிட்டு... இப்படிப் பல வகைகளில்
கர்தினால்களைத் துன்புறுத்திய பின்புதான் ஒரு வழியாக அவர்கள் சமரசமாகி, திருத்தந்தை பத்தாம் கிரகோரியைத் தேர்ந்தெடுத்தார்களாம்! இப்போது
அதுபோல நடக்க வாய்ப்பில்லை.
சமீபத்திய
இரண்டு கான்க்ளேவ்களும் 24 மணி நேரங்களில் முடிந்துவிட்டன. 16-ஆம் பெனடிக்டின் தேர்வுக்கு நான்கு சுற்று ஓட்டுகளும், பிரான்சிசுக்கு 5 சுற்றுகளுமே தேவைப்பட்டன. இந்தக் கான்க்ளேவில் 138 கர்தினால்கள் பங்கேற்பார்கள். அவர்களில், 110 பேர் திருத்தந்தை பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள். ஏறக்குறைய 80 %. பிரான்சிஸின்
சிந்தனையை ஒத்த ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால், எதுவும் நிச்சயம் இல்லை.
இத்தாலி
நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ‘The one who enters the conclave as a Pope leaves it as a Cardinal.’
‘நான்தான் திருத்தந்தை’ என்ற
நம்பிக்கையில் கான்க்ளேவுக்குள் நுழையும் ஒருவர் கர்தினாலாகத்தான் திரும்பி வருவார். முன்னணிப் பத்திரிகைகள் வெளியிடும் ஆருடங்கள் பல கான்க்ளேவ்களில் பொய்த்துப் போயிருக்கின்றன.
கடந்த கான்க்ளேவ் அதற்குச் சிறந்த உதாரணம். 2013-ஆம் ஆண்டு பெனடிக்டின் பதவி விலகலுக்குப் பின் நடந்த தேர்வின்போது, ஒரு பத்திரிகை கூட ‘ஹோர்கே’வின் பெயரைக் கூறவில்லை.
‘Papabile’என்ற இத்தாலியன்
வார்த்தைக்கு ‘Pope-able’அல்லது ‘Pope-worthy’ என்று
அர்த்தம். பிரான்சிசுக்கு அடுத்து திருத்தந்தையாகத் தகுதி படைத்தவர் என்று நிபுணர்களும், பத்திரிகைகளும் முன்மொழிகிற பல papabile கர்தினால்களில் ஐவரைப் பற்றிய குறிப்புகள் ‘நம்
வாழ்வு’ வாசகர்களுக்காக
இங்கே... இவர்களில் ஒருவர் அடுத்தத் திருத்தந்தை ஆக
லாம் அல்லது ‘மற்றொரு பிரான்சிஸ்’ ஆச்சர்யம்
கூட நிகழலாம்!
கர்தினால் பியத்ரோ
பரோலின்
இத்தாலி நாட்டுக்காரர்.
வயது 70. பிரான்சிஸின் 12 ஆண்டு கால ஆட்சி முழுவதும் அவருடைய Secretary of State - ஆகப்
பணியாற்றியவர். வத்திக்கானில் இந்தப் பதவியின் அதிகாரங்கள் விரிவானவை. திரு அவை அதிகார ஏணியில் இரண்டாவது மிகப்பெரிய பொறுப்பு இது. Second-in-command. ‘துணை
போப்’ என்றும்
கூறலாம். வத்திக்கான் நகரின் பிரதமர் இவரே. ‘Roman Curia’ எனப்படும் வத்திக்கானின் மைய நிர்வாக இயந்திரத்தை ஒருங்கிணைப்பதும், திருத்தந்தையின் ஆவணங்கள், சந்திப்புகள், செய்திக்குறிப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்துவதும் இவருடைய அலுவலகமே. உலக நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான தூதரக உறவுகளுக்கு இவரே பொறுப்பு. திருத்தந்தையின் முதன்மை ஆலோசகர்! பரோலின் அதிர்ந்து பேசாதவர். ‘டிப்ளமேட்டுக்குரிய’ விலகல்
தன்மை கொண்ட நிர்வாகி. நடுநிலைவாதியாக (centrist) கர்தினால்கள் மத்தியில் அறியப்படுபவர். உலகளாவியத் திரு அவை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். ஆயர்கள்
நியமனம் குறித்து சீனாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையில் 2018-ஆம் ஆண்டு கையொப்பமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தின் சூத்திரதாரி பரோலின்தான்!
அருள்பணியாளராகப்
பட்டம் பெற்று, மூன்று ஆண்டுகளில் Diplomatic Service-இல்
இணைந்த பரோலினுக்கு மேய்ப்புப் பணி அனுபவம் எதுவும் இல்லாதது ஒரு குறை. பல மொழிகள் பேசும்
வித்தகர். ஒரு
பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்து, அயர்லாந்து பாராளுமன்றம் சட்டம் இயற்றியபோது அதை “மானுடத்தின் தோல்வி (Defeat of humanity)”
என்று வர்ணித்தார். கடந்த 40 வருடங்களில் இத்தாலியிலிருந்து யாரும் திருத்தந்தையாகவில்லை. இந்த முறை அது மாறலாம்.
கர்தினால் லூயிஸ்
டாக்லே
பிலிப்பைன்ஸ்
நாட்டவர். வயது 67. ஏழைகள், ஓரங்களில் வாழ்வோர், அகதிகள் மீது தனிப்பட்ட கரிசனை கொண்டவர். ‘ஆசியாவின் பிரான்சிஸ்’ என்று
குறிப்பிடப்படுபவர். மணிலாவின் முன்னாள் பேராயர். பெரும்பாலும் மேய்ப்புப் பணிச் சூழலிலேயே இருந்தவரை 2019-ஆம் ஆண்டு பிரான்சிஸ் உரோமுக்குக் கொண்டு வந்து, மறைபரப்புப்
பேராயத்தின் தலைவராக நியமித்தார். இதுவே கர்தினால் டாக்லேவின் முதல் மைய நிர்வாகப் பணி. டாக்லேவுக்குக் கொஞ்சமாவது வத்திக்கான் அனுபவம் வேண்டும் என்பதற்காகவே, பிரான்சிஸ் இதைச் செய்தார் என்று கூறுவோர் உண்டு. பிலிப்பைன்சில் மக்கள் இவரை ‘chito’என்று
பாசமாக அழைக்கிறார்கள். நம் ஊரில் ‘செல்லம்’என்று கூறுவதுபோல! ஒரு பெரிய கத்தோலிக்க நாட்டின் செல்லம் இவர். கருக்கலைப்புக்கு எதிரானவர். 2013-இன் கான்க்ளேவின்போதே டாக்லே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தற்போது ஐந்து கர்தினால்கள் இருக்கிறார்கள். இதில் டாக்லேவிற்கு வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். டாக்லே தேர்ந்தெடுக்கப்பட்டால், இவர் ஆசியாவின் முதல் திருத்தந்தையாக இருப்பார்.
கர்தினால் ஃப்ரிடோலின்
பேசுங்கு
காங்கோ
நாட்டுக்காரர். வயது 65. திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிய உயர்மட்டக் கர்தினால்கள் ஆலோசகர் குழுவில் (Council of Cardinals) உறுப்பினராக
இருந்த ஒரே ஆப்பிரிக்கக் கர்தினால் இவரே. ‘கின்ஷா’ என்ற
மறைமாவட்டத்தின் பேராயராகக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் நாட்டில் கிறித்தவர்களை ஒடுக்கும் அரசின் வன்முறைச் செயல்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுப்பவர். மக்கள் பிரபலம். பிரான்சிஸ் இவரை 2019-ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தினார். திரு அவையின் படிப்பினைகளைப் பொறுத்தமட்டில் பேசுங்கு ஒரு பழமைவாதி. ஒருபாலின இணையர்களுக்கு முறைசாரா ஆசிர்வாதம் கொடுக்கலாம் என்று வத்திக்கான் அறிவுரை வழங்கியபோது, ‘Fiducia Supplicans’ -ஆவணத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா மற்றும் மட காஸ்கர் ஆயர்கள்
பேரவையைத் திரட்டி, வத்திக்கானுக்குக் கடிதம் எழுதினார். 2023-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், “ஆப்பிரிக்காவே திரு அவையின் எதிர்காலம்” என்று
கூறினார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏறக்குறைய 1500 வருடங்களுக்குப் பிறகு திருத்தந்தையாகும் முதல் ஆப்பிரிக்கராகக் கர்தினால் பேசுங்கு இருப்பார்.
கர்தினால் பீட்டர்
எர்தோ
அங்கேரி
நாட்டவர். வயது 65. அறிவாளி! திரு அவைச் சட்டத்தில் வல்லுநர். 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஏழு மொழிகள் தெரியும். கொள்கை அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிசுக்கு அப்படியே எதிர் துருவம். பிரான்சிஸ் கிழக்கு என்றால், எர்தோ மேற்கு. எல்லாக் கதவுகளையும் திறக்க ஆசைப்பட்ட பிரான்சிஸின் தாராளவாத பாப்பிறை ஆட்சிக்கு ஒரு மாற்று அரசியலைக் கொண்டுவர விரும்பும் கர்தினால்களின் தேர்வு எர்தோவாக இருக்கும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாட்டம் உள்ளவர். பல விசயங்களில் பிரான்சிசோடு
முரண்பட்டிருக்கிறார்.
உதாரணமாக, அகதிகள் வரவேற்கப்பட வேண்டும், அவர்கள் அனுசரணையோடு நடத்தப்பட வேண்டும் என்று பிரான்சிஸ் வளர்ந்த நாடுகளை வேண்டிக் கொண்டிருந்த காலத்தில், எர்தோ “வரைமுறையில்லாமல் அகதிகளை அனுமதிப்பது ஆள் கடத்தலுக்குச் சமம்” என்றார்.
‘Neo-evangelization’
என்று கூறப்படும் புதிய நற்செய்தி
அறிவிக்கும் பணியில் ஆர்வமுள்ளவர். ஒரே
பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது, விவாகரத்துப் பெற்றவர்கள் திருப்பலியில் நன்மை வாங்குவது போன்ற விசயங்களில் சம்மதம் இல்லாதவர். பிரான்சிஸின் முற்போக்குப் பாப்பிறையை விரும்பாத வலதுசாரிப் பிரிவினர் எர்தோவைப் பூரணமாக ஆதரிப்பார்கள்.
கர்தினால் மத்தேயோ
சூப்பி
இத்தாலி
நாட்டுக்காரர். வயது 69. உரோமில் பிறந்து வளர்ந்தவர். தற்போது பொலோனா மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸின் ‘alter-ego’என்று கூறலாம். பத்திரிகைகள் இவரை ‘Italian Bergoglio’என்றுதான் அழைக்கின்றன. முற்போக்குச் சிந்தனையாளர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சிஸின் மரபைத் தொடர்வார் என்று நம்பலாம்.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை பிரான்சிஸ், சூப்பியை உக்ரைன் நாட்டிற்கு வத்திக்கானின் அமைதியின் தூதராக அனுப்பி வைத்தார். சூப்பிக்கு
வெற்று ஆடம்பரத்தில் ஆர்வமில்லை. பல நேரங்களில், தன்
மறைமாவட்டத்தில் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார். பெட்ரோல் செலவு மிச்சம். ஆளும் நரம்பு மாதிரி, ஆரோக்கியமாக இருக்கிறார். மறைமாவட்டத்தில் யாரும் இவரை ‘ஆயர்’ என்று அழைப்பதில்லை. எல்லாருக்கும் இவர் ‘Father Matteo’தான்! ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மேல் சிறப்பு அன்பு கொண்டவர். அகதிகளுக்குப் பணி செய்வதிலும், தன்பாலின ஈர்ப்பாளர்களை வரவேற்பதிலும் இவருக்குத்
தயக்கம் இல்லை. பிரான்சிஸ் விரும்பிய ‘open church’ - எல்லாருக்குமான திரு அவைதான் இவரது கனவும்.
இந்த
ஐவருள் ஒருவர் அடுத்த திருத்தந்தை ஆகலாம். அல்லது இந்தப் பட்டியலில் இல்லாத, ஏன் எந்தப் பட்டியலிலும் இல்லாத, யாருமே நினைத்து பார்த்திராத ஒருவர்
கூட திருத்தந்தை ஆகலாம்.
வாக்குச்
சீட்டுகளில் கர்தினால்கள் யார் பெயரை எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை; கடவுள் யார் பெயரை எழுதி வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்!
யோசித்து எழுதுங்க
ஆண்டவரே!!!
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
மே மாதம் 11-ஆம் நாளை, 62-வது உலக இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு நாளாகக் கொண்டாடுகின்றோம். மார்ச் 19-ஆம் நாள் மறைந்த திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “இறையழைத்தல் என்பது கடவுள் நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடை” என்றும், “நம்மையே இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்பு” என்றும் கூறியுள்ளார். திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியின் முக்கியக் கருத்துகளைக் காண்போம்.
இளைஞர்களின் அச்சம்
எதிர்காலத்தைப்
பற்றிய அச்சம் இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, நெருக்கடியான சூழல்கள், மதிப்பீடுகளற்ற சமூகம், அநியாயமாக நடத்தப்படும் எளிய மக்கள், சுயநலச் சமூகம், நம்பிக்கையைக் கெடுக்கும் போர்கள் எல்லாம் இளைய சமூகத்தைப் பாதிக்கின்ற காரணிகள். இருப்பினும், இறைவனின் அன்புக்குரியவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும், போராட்டங்கள் இருந்தபோதிலும் இளைஞர்களுடன் கடவுள் இருக்கிறார்; அவர்களை அன்பு கூர்கிறார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.
இறையுறவில் இன்பம்
கண்ட
இளம்
புனிதர்கள்
திருநிலையினர்
இளையோருக்கு முன்மாதிரியாக அவர்களோடு தோள் கொடுத்துப் பயணிக்க முன்வர வேண்டும். இளமை என்பது வாழ்வின் இடைப்பட்ட காலம் அல்ல; மாறாக, ‘கடவுளின் இப்போது’ என்பதை இளைஞர்கள் மனத்தில் கொள்ள வேண்டும். இளம் புனிதர்களான புனித லீமாரோஸ், புனித டோமினிக் சாவியோ, புனித குழந்தை இயேசுவின் தெரசா, புனித வியாகுல அன்னையின் கபிரியேல், அருளாளர் கார்லோ அகுட்டீஸ், அருளாளர் பியர் சார்ஜ் பிரசாத் போன்ற இளைய புனிதர்கள் உயிர்த்த இறைவனோடு உள்ள உறவில் உண்மை மகிழ்ச்சியைக் காண்பதற்கு இந்த அழைத்தலே உதவியாக இருந்தது.
இறைகுரலுக்குப்
பற்றி
எரியும்
இதயம்
இயேசு
பேசும்போது எம்மாவு சீடர்களின் இதயம் பற்றி எரிந்ததைப்போல நம் இதயமும் பற்றி எரிய வேண்டும். அந்த இறைகுரல் நம்மை மீண்டும் மீண்டும் அர்ப்பண வாழ்வுக்குத் தூண்டுகிறது. அழைப்பும் எதிர்நோக்கும் மனித மகிழ்வுக்கு ஒன்றையொன்று துணைபுரிகின்றன. ஒவ்வோர் இறையழைப்பும், அது பொதுநிலையினராக இருந்தாலும், திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளராக இருந்தாலும், துறவு வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டவராக இருந்தாலும், அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. மேலும், இறையழைப்பு என்பது மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும், பொதுநன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது. ஒவ்வோர் அழைத்தலும் எதிர்நோக்கினால் தூண்டப்படுகின்றது. எதிர்நோக்கு என்பது வெறுமனே மனிதரின் நேர்மறைச் சிந்தனை மட்டுமல்ல, இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதும் கூட. நற்செய்திக்கு உண்மையாக இருப்பதன் மூலம் அழைப்பு முதிர்ச்சி பெறுகிறது.
தேர்ந்து தெளிதல்
இளைஞர்கள்
தங்கள் இறையழைத்தலை இறைவேண்டல், அமைதி மற்றும் நற்சிந்தனைகள் வழியாகத் தெளிந்து தேர்ந்து, கடவுள் தங்களை வழிநடத்துகிறார் என்பதை நம்ப வேண்டும்; இளையோர் அனைவரும் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்கிற வார்த்தையைக் கவனத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அழைத்தலைக் கண்டுபிடிப்பது என்பது தேர்ந்து தெளிதல் பயணத்தில்தான் கிடைக்கிறது. இளைஞர்களின் இறையழைத்தல் பயணங்களில் பொறுமையுடனும் ஞானத்துடனும் அவர்களை ஆதரிக்கவும், திரு அவையும் குறிப்பாக, வயது முதிர்ந்த உறுப்பினர்களும் அருள்பணியாளர்களும் முன்வர வேண்டும்.
இன்றியமையாத அமைதி
நின்று
நிதானமாக இதயத்தின் குரலுக்குச் செவிமடுத்து, ‘இறைகுரல் என்ன?’ எனக் கேட்க வேண்டும். இறைவேண்டலில் அமைதி என்பது இன்றியமையாதது. இறைகுரலுக்கு எப்படிச் செவிசாய்ப்பது? மனச்சாட்சியுடன் பதில் அளிப்பது? போன்றவை அமைதியில் அரங்கேறுகிறது. அமைதியான தியானம் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை உணர வைக்கிறது.
விளிம்பு நிலை
மக்களுக்குச்
செவிசாய்க்கும்
அழைத்தல்
வாழ்வு
என்பது ஒரு கொடை. விளிம்பு நிலை மக்கள் நடுவில் பணியாற்றவே இந்தக் கொடை. இறைகுரலுக்குச் செவிசாய்க்கிறவர்கள் காயப்பட்ட, ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட நம் சகோதர- சகோதரிகளுக்குச் செவிகளைத் திறந்து வைப்பார்கள். கிறிஸ்துவின் உடனிருப்பை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ள நாம் ஒளியையும் ஆறுதலையும் இருள்
படர்ந்த மக்களுக்கு அளிக்கிறோம்.
உப்பாக, புளிக்காரமாக
வாழ
அழைப்பு
பொதுநிலையினர்
உலகின் உப்பாக, புளிக்காரமாகத் தங்கள் அர்ப்பண வாழ்வை அழைப்பு வழியாக ஆழப்படுத்த வேண்டும். அருள்பணியாளர்கள், இறையழைத்தல் இயக்குநர்கள், ஆன்மிக இயக்குநர்கள் இளைஞர்களுடன் இணைந்து பயணித்து எதிர்நோக்கு, பொறுமை, நம்பிக்கையைக் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இறைவனின் உடனிருப்பைத் தங்களின் வழிகாட்டுதலால் காட்ட வேண்டும். அழைத்தலுக்கான அவசரத்தை அனைத்து வகைகளிலும் உணர வேண்டும்.
‘ஆம்’ என்பதே
இறையழைத்தலின்
பதில்
இறைவன்
மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எதிர்நோக்குக்கும் ‘ஆம்’ என்று திறம்படச் சொல்லக் கூடிய அருள்பணியாளர்கள், துறவியர், மறைபரப்புப் பணியாளர்கள், தம்பதியர் திரு அவைக்குத் தேவைப்படுகிறார்கள். இதயத்தில் சேமித்து வைக்கும் புதையல் அல்ல இந்த அழைத்தல்; மாறாக, சமூகத்தில் இது வளர்ந்து வலிமையாகி நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கை வளர்ப்பதாகும். இறைகுரலுக்குப் பதிலளிப்பது என்பது சகோதர-சகோதரிகளின் இறைவேண்டலிலும் ஆதரவிலும் அடங்கி இருக்கிறது.
தளராத நமது
இறைவேண்டல்
அழைத்தலை
அதிகரிப்பது உயிரோட்டமான பலன் தரும் திரு அவையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுவது ஒன்றே மகிழ்வின் அடிப்படை. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, எதிர்நோக்கின் சாட்சிகளாக
இருக்க, திரு அவையில் புதிய இறையழைத்தல்களுக்காக அறுவடையின் ஆண்டவரைத் தளராது நாம் மன்றாடுவோம். நற்செய்தியின் வழியில் தொடர்ந்து எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிப்போம்.
திருத்தந்தையின் அடக்கத்திற்குப் பின் திரு அவையின் பேதுரு தலைமைப் பீடம் வெற்றிடமாகக் கருதப்படும். புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படும்வரை உள்ள காலம் ‘வெற்றிடக் காலம்’ (Sede Vacante) என்று அழைக்கப்படும் (திச 335). இக்காலத்தில் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. உதாரணமாக, உலகில் உள்ள மறைமாவட்டங்களில் ஆயர்களை நியமனம் செய்ய முடியாது. வத்திக்கான் செயலகங்கள் பணிபுரிந்தாலும், திருத்தந்தையின் ஒப்புதலுக்காக, கையெழுத்துக்காக வத்திக்கான் செயலகங்கள் காத்துக்கிடக்கும்.
திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையினை இலத்தீன் மொழியில் ‘கான்கிளேவ்’ (Conclave) என்று அழைப்பர்.
‘இன்ம் இப்ஹஸ்ங்’
என்ற இலத்தீன் சொற்களிலிருந்து பிறந்த இச்சொல் ‘சாவியுடன்’
என்ற பொருளை உள்ளடக்கியது. திரு அவையை வழிநடத்தவிருக்கும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டுரிமை உடைய கர்தினால்கள் அனைவரும் வத்திக்கானின் ஓர் அறையில் ஒன்றுகூடி இத்தேர்தலை நடத்துவர். திருத்தந்தை தூய ஆறாம் பவுல், 1970-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆணையில் கான்கிளேவில் கலந்துகொள்ளும் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 120 ஆகவும், இவர்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற வரைமுறையை நிர்ணயித்தார். பூட்டிய அறைக்குள் இத்தேர்தல் நடைபெறுவதால் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவைக்கு ‘cum clave’அதாவது ‘conclave’ என்ற
பெயர் வந்தது.
விதிமுறைகள்:
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொதுவான செய்திகள் பின்வரும் திரு அவைச் சட்டங்களில் (திச 333-335; 349-359) காணப்படுகின்றன. இத்திரு அவைச் சட்டங்களைத் தாண்டி, திருத்தந்தை தேர்வு விதிமுறைகள் தனியான சட்டமாக வகுக்கப்பட்டுள்ளன. 1996-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் இயற்றியுள்ள ‘அகில உலக மந்தையின் ஆயர்’
(Universi Dominici Gregis) என்ற
விதித்தொகுப்புகளே திரு அவையின் வெற்றிடத்தையும் திருத்தந்தையின் தேர்வையும் வழிநடத்துகின்றன. இவற்றின்படி புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரை திரு அவையின் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்பவர் ‘கார்டினல் கார்மெலெங்கோ’ என்ற
பொறுப்பில் உள்ள கர்தினால் ஆவர். அவர்தான் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பவர். தற்போதைய கர்தினால் கார்மெலெங்கோவாக (Cardinal Carmerlengo) உள்ளவர்
மேதகு கர்தினால் கெவின் ஃபெரல். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் 80 வயது பூர்த்தியாகக் கூடாது.
திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும்
கர்தினால்கள்
அவை:
மே 7 புதன் அன்று மாலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தில், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழி வருபவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை ஆரம்பிக்கவிருக்கின்றது. இது திரு அவையில் இடம்பெறவிருக்கும் 76-வது கான்கிளேவ் அவையாகும். கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 133 கர்தினால்களும் மே 7, புதன் காலை 7 மணிக்கு வத்திக்கான் ‘Santa Martha’ இல்லத்திற்குச் சென்று கான்கிளேவ் முடியும் வரையில் அங்கேயே தங்கியிருப்பார்கள். புதன் காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் அனைத்துக் கர்தினால்களும் இணைந்து கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே தலைமையில் கான்கிளேவ்
அவைக்காகச் செபிக்கும் ‘pro eligendo Romano Pontifice’என்ற
திருப்பலியை நிகழ்த்துவார்கள். பின்னர் அன்று மாலை 4.15 மணிக்கு இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 133 கர்தினால்களும் Santa Martha இல்லத்திலிருந்து Pauline சிற்றாலயத்திற்குச்
செல்வர். அங்கு அவர்கள் தியானம் மற்றும் செபத்தில் ஈடுபட்ட பின்னர் Pauline சிற்றாலயத்திலிருந்து
Regia அறை
வழியாகப் புனிதர்கள் பிரார்த்தனையைப் பாடியபடியே செல்லும் கர்தினால்கள், சிஸ்டைன் சிற்றாலயம் அடைந்தவுடன் Veni Creator என்ற
தூய ஆவியாரிடம் வேண்டுதல் செய்யும் பாடலைப் பாடுவர். பின்னர் அவரவர் இருக்கையில் அமர்வர். அவர்களின் இருக்கைகள் ஒவ்வொருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஆண்டின்படி குறிக்கப்பட்டிருக்கும். சிஸ்டைன் சிற்றாலயத்தின் நடுவில் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் திருவிவிலியத்தின்மீது கைவைத்து 133 கர்தினால்களும் ஒவ்வொருவராக வந்து உறுதிமொழி எடுப்பர்.
‘இத்தேர்தலில் எந்தப் பொதுநிலை அதிகாரிகளின் தலையீடுக்கும் ஆதரவு கொடுக்க மாட்டேன்; இத்தேர்தல் குறித்த ‘Universi Dominici Gregis’ என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பின்படி குறிப்பாக, இரகசியம் காப்பாற்றப்பட வேண்டிய விதி முறைகளின்படி நடந்துகொள்வேன்; யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் அகில உலகத் திரு அவையின் மேய்ப்பராகப் பணியைத் தொடர்வார்; அவர் திருப்பீடத்தின் ஆன்மிக மற்றும் உலகியல் சார்ந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி ஊக்கத்தோடு பாதுகாப்பார்’ என்று
133 கர்தினால்களும் உறுதிமொழி எடுப்பார்கள். இந்த உறுதிமொழியைக் காப்பாற்றாதவர்கள் திரு அவையை விட்டு விலக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பு
நடக்கும்
முறை:
கான்கிளேவ் அவையில் கர்தினால்கள் செபம் சொல்லி சிறிது நேரம் அமைதி காப்பர். அதன் பின்னர் கான்கிளேவ் அவையின் மூத்த கர்தினால் ‘வாக்கெடுப்பைத் தொடங்கலாமா?’ எனக் கேட்பார். அனைவரும் ‘சரி’ என்று கூறியதும், முதல் வாக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு
கர்தினால்களிடமும் இரண்டு அல்லது மூன்று வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். செவ்வக வடிவிலான இந்தச் சீட்டின் மேலே ‘Eligo Summum Pontificem’ அதாவது ‘திருத்தந்தையாக நான் தேர்ந்தெடுப்பவர்’ என
இலத்தீனில் எழுதப்பட்டிருக்கும். அதன் கீழே ஒரு கோடு இருக்கும். அதில் பெயரை எழுதி, வாக்குத்தாளை இரண்டாக மடித்து, அங்குள்ள திருப்பலிப் பீடத்தின்மீது வாக்குகளைச் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் மூன்று கிண்ணங்களில், முதல் பெரிய கிண்ணத்தில் ஒவ்வொருவராக வந்து போடுவர். இரண்டாவது கிண்ணம், உடல் நலமின்றி யாரும் வெளியே இருந்தால் அவர்களிடம் சென்று வாங்கி வரும் வாக்குகளைப் போடுவதற்குரியது. மூன்றாவது கிண்ணம், வாக்குகளைச் சரிபார்த்துப் போடுவதற்குரியது.
வாக்குச்சீட்டு
எண்ணும்
முறை:
வாக்குகள் அனைத்தும் ஊசியின் மூலம் ஒரு நூலில் கோர்த்து ஒரு முடிச்சுப் போட்டு அவை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். வாக்குகளைச் சரிபார்த்து எண்ணுவதற்கு அங்குள்ள கர்தினால்களே ஒவ்வொரு முறையும் சீட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், மூன்றில் இரண்டு பகுதி வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்கைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வரைமுறையானது 1179-ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டரால் கொண்டு வரப்பட்டது.
இத்தேர்தலில்
மூன்றில் இரண்டு பகுதி வாக்குகள் முழு எண்மத்தைப் பெறாதபோது, அவற்றோடு ஒரு வாக்கு அதிகமாகப் பெற வேண்டும் என்ற வரைமுறையை 1996-ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘Universi Dominici Gregis’என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பில் வெளியிட்டுள்ளார். அதன்படி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் கர்தினால்கள் 133 பேரில் இரண்டு பங்கு (45+45+1=91) 91 வாக்குகள் தற்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்குத்
தேவை.
வெண்புகை வெளியிடுவது:
திருத்தந்தையின் தேர்தல் நிலவரம் குறித்துப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்குச் சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் புகைபோக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால்
கறுப்புப் புகையும், தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால்
வெண்புகையும் வெளியே வரும். வெண்புகை வெளியே வரும்போது வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். வெண்புகை வெளியே வருவது ஏறக்குறைய 45 நிமிடங்கள் நீடிக்கும். இந்தப் புகை வெளிவருவதற்கு வாக்குச்சீட்டுகளுடன் வேதியப் பொருள்களும் சேர்த்து எரிக்கப்படும். வெண்புகையை வெளியிடும் வழக்கம் 1903-ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தலானது
தினமும் காலையில் இரண்டு முறை, மாலையில் இரண்டு முறை என முதல் மூன்று
நாள்களுக்கு நடைபெறும். அதுவரை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில்,
செபம் மற்றும் தியானத்திற்கென ஒருநாள் விடப்படும். பின்னர் அடுத்த நாள் வாக்கெடுப்புத் தொடங்கும். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை தினமும் பகல் 12 மணியளவிலும், மாலை 7 மணியளவிலும் புகை வெளியிடப்படும்.
திருத்தந்தையைத்
தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தல் அரசியல் தேர்தல் போன்றதன்று; தூய ஆவியின் அருளையும் ஆற்றலையும் நிறைவாகப் பெற்று, அந்த ஆவியின் துணையுடன் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்கள் ஒவ்வொருவரும் செயல்பட அவர்களுக்காகச் செபிப்போம். இத்தேர்தலுக்காக உலகெங்கும் தொடர் செபங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், நாமும் நமது செபங்களை ஏறெடுப்போம்.
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்:
“தந்தையே! இதுவரை அருளடையாளங்கள் குறித்த பொதுவான சிந்தனைகளை உளவியல் ஆன்மிகப் பின்னணியில் விளக்கினீர்கள். இனி நீங்கள் ஒவ்வோர் அருளடையாளமாக எடுத்துத் தனித்தனியாக விளக்கினீர்கள் என்றால், அவற்றை இன்னும் அர்த்தமுள்ள வகையில் அணுக முடியும் என்று எண்ணுகின்றேன்.”
அருள்பணி:
“முதலாவதாக, நாம் திருமுழுக்குக் குறித்துச் சிந்திக்கலாம். ‘பாவத்தின் கழுவாய்’,
‘புதுப் பிறப்பின் தொடக்கம்’,
‘கிறித்தவ வாழ்வின் நுழைவாயில்’, ‘ஆதிப்பெற்றோரின்
பாவத்தைப் போக்கும் அருளடையாளம்’ என்றெல்லாம்
அழைக்கப்படுகிறது திருமுழுக்கு. கடந்த கட்டுரையில் நாம் பார்த்ததுபோல, திரு அவையின் தொடக்கம் முதலே கொண்டாடப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற அருளடையாளம் திருமுழுக்கு!”
மார்த்தா:
“ஆனால், பெரும்பாலான கிறித்தவர்களைப் பொறுத்தமட்டில் திருமுழுக்கு என்பது பெயர் வைக்கின்ற ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது தந்தையே! அதன் வழியாகப் பொழியப்படும் அருள்வரங்கள் அற்புதமானவை என்பது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பதுபோல தெரியவில்லையே!”
அருள்பணி:
“உண்மைதான்! நம் மக்கள் அருளடையாளங்களைச் சடங்காச்சாரமாக அணுகப் பழகிவிட்டார்களேயொழிய, அவற்றின் ஆழத்தில் நிகழ்கின்ற அருள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலான கிறித்தவர்களின் வாழ்வு குறுகிய வட்டத்தில் முடங்கிப்போனதாக இருக்கிறது.”
கிறிஸ்டினா:
“தந்தையே, திருமுழுக்கு நம் பிறப்புநிலைப் பாவத்தைக் (சென்மப் பாவத்தை) கழுவுகிறது என்று சொல்லப்படுகிறதே! இதைப் பற்றிய உங்களது பார்வை என்ன?”
அருள்பணி:
“முதலில் பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன? என்பதை உளவியல்-ஆன்மிகப் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சி எடுப்போம்.”
மார்த்தா:
“ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதுதானே பிறப்பு
நிலைப் பாவம் என்பது!”
அருள்பணி: “ஆம்! எனினும், இதை நாம் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். என்றோ வாழ்ந்த ஆதாமும்-ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்டதாகவும், அதனுடைய பாதிப்பு நம்மைத் தாக்குவதாகவும் புரிந்துகொள்வது முழுமையான புரிதலாக இருக்க முடியாது.”
கிறிஸ்டினா: “அப்படியானால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட நிகழ்வைச் சரியாகப் புரிந்துகொள்வது எப்படித் தந்தையே?”
அருள்பணி:
“ஆதாம் என்றால் ‘மனிதன்’ என்று பொருள்; ஏவாள் என்றால் ‘பெண்’ என்று பொருள். எனவே, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணும் நிகழ்வு ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நிகழ்கிறது.”
அகஸ்டின்:
“ஆச்சரியமாக இருக்கிறது! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் தந்தையே!”
அருள்பணி:
“விலக்கப்பட்ட மரம் என்பது ‘நன்மை-தீமை அறிகின்ற மரம்’
(The tree of the knowledge of Good and Evil) என்று திருவிவிலியத்தில் (தொநூ 2:16,17) குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ‘நன்மை-தீமை அறிகின்ற மரம்’ என்பது ஒரு குறியீடு (Symbol). அது
நம் மனத்தைச் சுட்டிக்காட்டும் குறியீடு. அதாவது, நம் வாழ்வில் நன்மை என்றும், தீமை என்றும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் பகுத்துப் பார்ப்பதற்கான காரணம் நம் மனமே! எனவேதான் இது ‘பகுத்தறிவு’ (பகுத்து
அறிவது) என்று அழைக்கப்படுகிறது. அதேபோல நாம் உலகை ‘அறிந்து’ கொள்வதற்கான காரணமாக இருப்பதும் நம் மனமே. நாம் உலகை அறிய முற்படுவதால் நமக்குக் கிடைப்பதே அறிவு (Knowledge) என்பது!”
அன்புச்செல்வன்:
“தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ‘நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனி’ என்று திருவிவிலியம் கூறுவது ‘மனத்தின் கனி’ என்று அர்த்தம் தருகிறது. அப்படியானால் நம் மனம் மனித வாழ்விற்குச் சாபத்தைக் கொண்டு வருகிறதா?”
அருள்பணி:
“மனம் முழுக்க முழுக்கக் கெட்டது அல்ல; அதனால் பல நன்மைகள் விளைகின்றன.
முதலாவதாக, ஏதேன் தோட்ட நிகழ்வை நாம் முழுக்க முழுக்க எதிர்மறையாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அதில் சில நேர்மறைத்தன்மைகள் இருப்பதை நாம் மறந்துவிடுகின்றோம். ஆதாமும், ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்ட பின்பு அவர்களது கண்கள் திறக்கப்பட்டதாகவும் (தொநூ 3:7), அவர்கள் கடவுளைப் போல ஆனதாகவும் (தொநூ 3:22) திருவிவிலியம் கூறுகின்றது. ‘கண்கள் திறக்கப்படுவது’ என்பது
சுய அறிவு உள்ளவர்களாகவும், தமக்கெனச் சிந்திக்கும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘கடவுளைப்போல ஆவது’ என்பது படைப்புத் திறன் உள்ளவர்களாக இருப்பது. கடவுளது முதல் வேலையே படைப்பதுதானே! எனவே, படைப்புத் திறன், சிந்தனை, அறிவு முதலியவை மனத்திலிருந்து உருவாகும் சில நன்மைகள்.”
கிறிஸ்டினா:
“தந்தையே, இக்கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா?”
அருள்பணி:
“ஒவ்வொரு மனிதருமே தம் குழந்தைப் பருவத்தில் கண்கள் மூடிய நிலையில்தான் இருக்கின்றனர். அதாவது, தமக்கெனச் சுய சிந்தனைகள் இல்லாதவர்களாகப் பெற்றோரும் மற்றோரும் கூறுவதை உள்வாங்கி, அதற்கேற்ப நடந்துகொள்கின்றனர். பதின் பருவத்தில் ‘நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை’ உண்ண ஆரம்பிக்கின்ற பொழுது, அதாவது ஒரு மனிதர் தன் மனத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றபோது, தனக்கெனச் சுயசிந்தனைகளை வளர்த்துக்கொள்கின்றார். இதுவே கண்கள் திறக்கப்படும் நிலை என்பது! எனவே, நன்மை, தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்பதும், கண்கள் திறக்கப்படுவதும் ஒவ்வொரு மனிதரது வாழ்விலும் நடந்தேறுகிறது. அதேபோல, அறிவானது நம்மைப் படைப்புத்திறன் வாய்ந்தவர்களாக மாற்றுகிறது. மனிதர்களுக்கென்று கடவுள் கொடுத்துள்ள ஒரு மாபெரும் கொடை படைப்புத் திறன்! மனிதர்கள் தங்களது படைப்புத் திறனால் பூமியைத் தொடர்ந்து அழகாக்கிக் கொண்டு இருக்கின்றனர். கடவுள் காட்டைப் படைத்தார் என்றால், மனிதர்கள் தோட்டத்தைப் படைக்கின்றனர். கடவுள் நிழலைப் படைத்தார் என்றால், மனிதர்கள் குளிர்சாதனப் பெட்டியைப் படைக்கின்றனர். கடவுள் பறவைகளைப் படைக்கிறார் என்றால், மனிதர்கள் விமானத்தைப் படைக்கின்றனர். கடவுள் மின்னலைப் படைக்கிறார் என்றால், மனிதர்கள் மின்சாரத்தைப் படைக்கின்றனர். கடவுள் மனிதர்களைப் படைக்கின்றார் என்றால், மனிதர்கள் இயந்திர மனிதர்களைப் படைக்கின்றனர். மனிதர்களது தொடர் படைப்பால் இந்தப் பூமி அழகும் பொலிவும் பெறுகின்றது.”
அன்புச்செல்வன்:
“தந்தையே, கடவுள் ஆறு நாள்கள் உலகத்தையும், அதன் உச்சமாக மனிதர்களையும் படைத்துவிட்டு, ஏழாவது நாள் ஓய்வு எடுத்தார் என்று திருவிவிலியம் கூறுகின்றது. தமது படைக்கின்ற வேலையை மனிதர்களிடம் கொடுத்துவிட்டதால், கடவுள் ஓய்வு எடுத்தார் என்று பொருள் கொள்ளலாமா?”
அருள்பணி:
“நல்ல சிந்தனை! தனக்குப் பிறந்த மகன், தன் குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்ட பின்பு, தந்தை ஓய்வு பெறுவதுபோல, தம் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர், படைப்புத் தொழிலைத் தொடரும் பொருட்டுக் கடவுள் ஓய்வெடுத்தார் என்று பொருள் கொள்வது சரியானதே! மனம் இத்தகைய நற்செயல்பாடுகளைச் செய்தாலும், அது நம் வாழ்விற்குள் பல பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது
என்ற உண்மையை நம்மில் பலர் புரிந்துகொள்வது இல்லை.”
(தொடரும்)
இறைவேண்டல் என்பது ஓர் அருள்வாழ்வுப் போராட்டம் என்னும் செய்தியைத் திரு அவைத் தந்தையர்கள், புனிதர்களின் வாழ்விலிருந்து அறியவருகிறோம். எல்லாப் புனிதர்களும் இறைவனோடு ஒன்றிப்பதற்காகப் பல தடைகளைக் கடந்தனர். உடல், உலகம், அலகை என்னும் முப்பெரும் பகைவர்களோடு போராடியே இறையனுபவத்தைப் பெற்றனர். புனித தோமா அக்குவினாவிலிருந்து, திரிதெந்தின் திருச்சங்கம்வரை இம்மூன்று ஆற்றல்களோடு நாம் போராட வேண்டும் என்னும் செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
எபேசியருக்கு
எழுதப்பட்ட திருமடலில், “அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்”
(எபே 2:2-3) என்னும் வரிகளில் இம்மூன்று பகைவர்கள் பற்றி வாசிக்கிறோம்.
யூபிலி
2025-க்கு ஆயத்தமாக 2021-ஆம் ஆண்டு முழுவதும் புதன்கிழமை மறைக்கல்வியில் இறைவேண்டல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 12.05.2021 அன்று அவர் ஆற்றிய உரையின் தலைப்பு ‘போராட்டமும் இறைவேண்டலே’ என்பதுதான்.
கிறித்தவ இறைவேண்டல் என்பது எளிதானதன்று; மாறாக, அது ஓர் அகப்போராட்டம் என்கிறார் திருத்தந்தை.
இறைவேண்டல்
செய்ய நினைக்கும்போதுதான் நாம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய சிந்தனை நமக்கு வருகிறது என்று நாம் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் இறைவேண்டல் போராட்டம் பற்றிப் பகிர்கிறார் திருத்தந்தை. திரு அவை வரலாற்றின் எல்லா மாமனிதர்களும் இறைவேண்டலின் மகிழ்ச்சி பற்றி மட்டுமல்ல, இறைவேண்டலின் போராட்டம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துள்ளனர். குறித்த நேரத்தில் இறைவேண்டல் செய்வது, குறிப்பிட்ட முறையில் இறைவேண்டல், சில நேரங்களில் மனநிறைவற்ற இறைவேண்டல் போன்றவை எல்லாருக்கும் பொதுவான சிக்கல்கள் என்கிறார் திருத்தந்தை.
பல
புனிதர்கள் ‘இருண்ட இரவு’ என்னும் அனுபவத்தைப் பெற்றிருந்தனர். வாரக்கணக்கில், சில வேளைகளில் மாதக்கணக்கில் இறைவேண்டலில் இறையனுபவம் இன்றியே அவர்கள் இருந்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருபோதும் இறைவேண்டலை அவர்கள் கைவிட்டதில்லை.
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வி இறைவேண்டல் தடைகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இறைவேண்டல் என்னும் போராட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமென்றால், இறைவேண்டல் பற்றிய தவறான சிந்தனைகளை அகற்ற வேண்டும் (கதிம 2726). சிலர் இறைவேண்டலைத் ‘தலைவலி மாத்திரை’
போலக் கருதுகின்றனர். தலைவலி வரும்பொழுது மாத்திரையைப் பயன்படுத்துகிறோம்; தலைவலி போனவுடன் மாத்திரையைப் பயன்படுத்துவதில்லை. இறைவேண்டல் அப்படியல்ல; அது நம் அருள்வாழ்வின் உயிர்மூச்சு. எனவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். இறைவேண்டலை உளவியல் நிறைவுதரும் உத்தியாகவோ, மனத்தை ஒருங்கிணைக்கும் தியானமாக மட்டுமோ நாம் சுருக்கிவிடக்கூடாது என்று கற்பிக்கிறது நமது திரு அவை.
சில
வேளைகளில் இறைவேண்டல் தொடர்பான சலிப்போ அல்லது சோர்வோ நமக்கு நேரிடலாம். அவ்வேளைகளில் நாம் மனம் சோர்ந்துவிடக்கூடாது. இப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மறைக்கல்வி தரும் மருந்துகள் என்ன தெரியுமா? தாழ்ச்சி, நம்பிக்கை, தொடர் முயற்சி ஆகியவையே (கதிம 2728). திரு அவையின் புனிதர்கள் நமக்கு முன்னால் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
இறைவேண்டலில்
மறையனுபவம் பெற்ற புனித அவிலா தெரசாவின் துறவு நாள்களின் தொடக்கத்தில் பராக்குகள், ஆர்வமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். அவரது நாற்பதாவது வயதில் அருள்வாழ்வின் இரண்டாம் மனமாற்றம் நிகழ்ந்தது. அவரது இறைவேண்டல் செழுமை பெற்றதோடு, அவரது துறவற அவையின் அனைத்துச் சகோதரிகளையும் இறைவேண்டலில் ஊக்குவிக்கும் அருளையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னரும் இறைவேண்டலில் தடைகள் வராமலில்லை. ஆனால், அவற்றை உடைத்தெறியும் ஆற்றலும் மனந்தளராமையும் அவரிடம் வந்துவிட்டன. எனவே, மாபெரும் புனிதையாக வாழ்ந்தார்.
புனித
அவிலா தெரசாவைத் தன் ஆன்மிக அன்னையாகக் கருதிய புனித சிலுவை யோவான்தான் ‘ஆன்மாவின் இருண்ட இரவு’ என்னும் சொல்லாடலை அறிமுகப்படுத்தியவர். சில வேளைகளில் நமது இறைவேண்டல் நேரங்கள் வறண்டதாகவோ, இறைப்பிரசன்னம் இல்லாததாகவோ இருக்கின்றன. இறைவன் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்னும் மயக்க நிலை நேரலாம். ஆனாலும், அத்தகைய வேளைகளிலும் இறைவன் நம்மோடுதான் இருக்கிறார். இத்தகைய அனுபவங்களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம். இந்தப் போராட்டங்களே நம்மைத் தூய்மைப்படுத்தி, இறைவனிடம் நாம் நெருங்க உதவுகின்றன என்கிறார் புனித சிலுவை யோவான்.
“விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்” (1திமொ
6:12) என்று திமொத்தேயுவை ஊக்குவித்தார் பவுலடியார். நம் இறைவேண்டல் வாழ்வுக்கும் அது பொருந்தும். நம் வாழ்வே ஒரு போராட்டம்தான். அதைக் கண்டு சோர்ந்துவிடாமல், தொடர்ந்து போராடுவதே வெற்றி. இறைவேண்டலும் அப்படித்தான். இறைவனோடு ஒன்றிக்க நாம் போராட வேண்டும். அந்தப் போராட்டமே ஓர் இறைவேண்டல்தான்; அந்தப் போராட்டமே ஒரு வெற்றிதான்.