16-வது ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வானது கடந்த அக்டோபர் 26, 2024 அன்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி 155 பகுதிகளைக் கொண்ட இறுதி ஆவணமானது உடனடியாக வெளியிடப்பட்டது. ‘இணைந்து பயணித்தல்’ என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக, ஆயர் பேரவையின் பங்கேற்பாளர்களால் வரைவு செய்யப்பட்ட ஆவணத்திற்கு ஒப்புதல் அளித்து (திரு அவை சட்ட எண் 343), 16-வது ஆயர் பேரவையின் இறுதி ஆவணமாக (Final Document) ஏற்றுக்கொள்ள திருந்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்துள்ளார். எனவே, வழக்கமாக ஒவ்வோர் ஆயர் பேரவைக்குப்பின் வெளியிடப்படுகின்ற பேரவைக்குப் பிந்தையத் திருத்தூது அறிவுரை மடல் (Post-Synodal Apostolic Exhortation) என்று எதுவும் வெளியிடப்படாது. இந்த இறுதி ஆவணம் திரு அவையில் கூட்டொருங்கியக்க வாழ்க்கை முறையை வளர்ப்பதில் திரு அவைச் சட்டத்துடன் தொடர்புடைய பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
காலத்தின்
அடையாளங்கள் மற்றும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கோட்பாட்டு ரீதியாகப் பொதுநிலையினருக்கான பணிகள் என்பதன் முக்கியத்துவத்தை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆயர்களின் மாமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பல இறையியல் கோட்பாடுகள்
வளர்ச்சி கண்டிருக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களாகிய பொதுநிலையினர் ஒவ்வொருவரும் தாம் பெற்ற திருமுழுக்கால் எழுகின்ற பொது பணிக் குருத்துவத்திற்கான அழைப்பால் உந்தப்பட்டவர்களாய் திரு அவையில் பணியாற்ற அழைக்கப்படுகின்றார்கள். இந்த அறைகூவல் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் மிக அதிகமாகவே விரவிக் கிடக்கின்றது. இந்த இறுதி ஆவணமும், திருமுழுக்கினால் எழுகின்ற நம்பிக்கையாளர்களின் பங்கேற்பைப் பல தளங்களில் மிகச்
சிறப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு.
நிறுவப்பட்ட அல்லது
நிறுவப்படாத
பொதுநிலையினருக்கான
நிலையான
பணிகள்
மறைப்பணியை
மையப்படுத்தி இயங்கும் கூட்டொருங்கியக்கத் திரு அவை குருத்துவத் திருநிலைப்பாடு தேவைப்படாத பொது நிலையினருக்கான நிலையான பணிகளை (stable ministries) ஊக்குவிக்கின்றது. இந்தப் பொதுநிலையினருக்கான பணிகள் நிறுவப்பட்ட அல்லது நிறுவப்படாத தன்மை கொண்டதாக இருக்கலாம். வாசகர், பீடப்பணியாளர் பணிகள் (Motu Proprio Spiritus Domini) மற்றும் வேதியர்
பணிகள் (Motu Proprio Antiquum ministerium)
ஆகியவை வரையறுக்கப்பட்ட திருச்சடங்குகள் வழியாக வழங்கப்படும் நிறுவப்பட்ட, நிலையான பொது நிலையினருக்கான பணிகள் ஆகும். இந்த நிறுவப்பட்ட பணிகள் ஆயரின் ஆணையின்படி செயல்படுத்தப்படும் நிறுவப்படாத பணிகளால் முழுமை பெறுகின்றது. குறிப்பாக, அன்பியங்களை ஒருங்கிணைக்கும் பணி, குழு இறைவேண்டல்களை வழிநடத்தும் பணி, பிறரன்புச் செயல்களை ஒழுங்குபடுத்தும் பணி, ஆலோசனை வழங்கும் பணி, அடக்கச் சடங்குகளை முன்னின்று நடத்தும் பணி போன்ற உள்ளிட்ட பணிகள் இந்த நிறுவப்படாத பணிகளில் அடங்கும். இத்தகைய நிறுவப்படாத பணிகளுக்கு இறைநம்பிக்கையாளர்களின் பொதுச் சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணம், இதற்கான ஆணை பொதுவெளியில் வெளிப்படையாக வழங்கப்படுதலின் அவசியத்தையும் இந்த இறுதி ஆவணம் எடுத்தியம்புகின்றது.
நற்கருணை
வழங்குதல், அருள்பணியாளர் இல்லாதபோது ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துதல், குறிப்பிட்ட அருள்வேண்டல் குறிகளை (sacramentals) நிறைவேற்றுதல்
உள்ளிட்ட அசாதாரணப் பணிகள் (extraordinary ministries) ஊக்குவிக்கப்படுதல் வேண்டும் என்றும் இந்த இறுதி ஆவணம் எடுத்தியம்புகின்றது. எனவே, பொதுநிலையினருடைய திருமுழுக்கு அடையாளத்தையும், அது விடுக்கும் பொதுப் பணிக்குருத்துவத்துக்கான அறைகூவலையும் இந்த இறுதி ஆவணம் மிக அதிகமாகவே எண்பித்துக்காட்டுவதால், அதற்குத் தேவைப்படும் பயிற்சிகளையும் தளங்களையும் வாய்ப்புகளையும் பொதுநிலையினருக்கு உருவாக்கித் தரவேண்டியது ஒவ்வொரு தலத் திரு அவையின் தலையாயக் கடமையாகும்.
பங்கேற்பு அமைப்புகளும்
பங்களிப்பும்
மறைமாவட்ட
மன்றம் (diocesan synod - தி.அ.ச.எ. 460-466), மறைமாவட்ட
மேய்ப்புப் பணிப் பேரவை (diocesan pastoral council தி.அ.ச.எ.
511), பங்கு மேய்ப்புப்பணி பேரவை (தி.அ.ச.எ. 536), மறைமாவட்ட நிதிக்குழு (diocesan finance committee- தி.அ.ச.எ.492-494),
பங்கு நிதிக்குழு (parish finance committee- தி.அ.ச.எ.
537) ஆகிய பங்கேற்பு அமைப்புகளின் வழியாகப் பொதுநிலையினர் இணைப் பொறுப்பாளர்கள் (co-responsible) என்ற மனநிலையோடு முடிவெடுக்கும் படிநிலைகளில் (decision-making processes) பங்கேற்கப்
போதுமான வாய்ப்புகளைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதை இந்த இறுதி ஆவணம் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
திரு
அவைச் சட்டத்தில், இதுவரை கட்டாயமாக்கப்படாமல் விரும்பினால் அல்லது வேண்டுமென்றால் அமைத்துக்கொள்ளலாம் என்றிருந்த பங்கேற்பு அமைப்புகளான பங்கு மேய்ப்புப்பணி பேரவை, மறைமாவட்ட மேய்ப்புப்பணி பேரவை இனிமேல் கட்டாயமாக்கப்பட்டு, அனைத்துப் பங்குகளிலும் மற்றும் மறைமாவட்டங்களிலும் கட்டாயமாக அமைக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த இறுதி ஆவணம் அறிவுறுத்துகின்றது. அத்துடன், ஏற்கெனவே திரு அவைச் சட்டம் மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்ற பங்கேற்பு அமைப்புகளான பங்கு நிதிக்குழு மற்றும் மறைமாவட்ட நிதிக்குழு பொதுநிலையினரின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அனைத்துப் பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றது.
இதன்
வாயிலாக, நிதி விசயங்களில் பங்கு மற்றும் மறைமாவட்ட அளவில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் வெகுவாக வளரும் என்பதையும், அத்துடன், நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் இந்தப் பங்கேற்பு அமைப்புகளின் சரியான நடைமுறை வரையறைகள் தடை செய்யும் என்பதையும் இந்த இறுதி ஆவணம் எடுத்துக்கூறுகின்றது.
இதை
உறுதி செய்யும் வகையில் மறைமாவட்டத் தனிச்சட்டங்கள் (diocesan particular laws) தேவையான
வரையறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும் என்றும் குறித்துக் காட்டுகின்றது இந்த இறுதி ஆவணம்.
(தொடரும்)
எந்த ஒரு பயணத்தையும் தொடங்குவதற்கு முன்பாகவும் அதனை அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பதையும், அது நிறைவுற்றதும் அன்னை மரியாவுக்கு நன்றி கூறுவதையும் வழக்கமாகக் கொண்டவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இந்த ஆண்டு நாம் கொண்டாடும் ‘நம்பிக்கையின் யூபிலி-2025’ -ஆம் ஆண்டிற்கான ஆணை மடல் ஒன்றை ‘SPES NON CONFUNDIT- எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’ (உரோ 5:5) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாளன்று வெளியிட்டார். திரு அவையின் நம்பிக்கையாளர்களாகிய நாம் அனைவரும் இவ்வாண்டை நம்பிக்கை ஆண்டாகவும், அதனை ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ எனும் கருப்பொருளில் சிந்தித்துப் பயணிக்கவும் அவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 25 முத்தான வழிகாட்டுதல்களைக் கொண்ட தனது ஆணை மடலில் 24-வது கருத்தாக இடம்பெற்றிருப்பது ‘எதிர்நோக்கின் திருப்பயணி அன்னை மரியா’ என்பதாகும்.
எதிர்நோக்கின் உச்ச சாட்சியாய்
அன்னை மரியா
திரு
அவையில் ஏறக்குறைய 1600-க்கும் மேற்பட்ட பெயர்களில் அன்னை மரியாவை அழைப்பதும், விழா
கொண்டாடுவதும் மற்றும் ஆலயங்கள் கட்டி அவர் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் வாழ்வதும்
கத்தோலிக்கத் திரு அவையில் நடைமுறையில் உள்ளது. ஏன்? கி.பி. 431-இல் எபேசு நகரப் பொது
அவையில் ‘அன்னை மரியா கடவுளின் தாய்’ என்று உறுதி செய்யப்பட்டு மறைக்கோட்பாடாக அறிவிக்கப்பட்டது.
‘மரியா இறைவனின் தாய்’ என்பது நம்பிக்கை கோட்பாடு மட்டுமல்ல,
அதேவேளையில் என்றென்றும் ‘மனிதரில் கடவுள், கடவுளில் மனிதர்’ என்பதன் நம்பிக்கையின் கோட்பாடாகவும் இருக்கிறது என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ். எதிர்நோக்கு என்பது இறையியல் நல்லொழுக்கம், நற்செயல்களில்
தன்னைத் தாரைவார்ப்பது, கண்களால் காண முடியாத ஒன்றைக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
வாழ்வதாகும்.
கடவுளின் விருப்பத்தை
ஏற்று செயல்பட்டவர் அன்னை மரியா (லூக் 1:26-38)
கபிரியேல்
வானதூதரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை;
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறி, இறைவனின்
மீட்புத் திட்டத்திற்குத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்தார்; கீழ்ப்படிந்து நடந்தார்.
உடலால் கருத்தரிக்கும் முன்பே உள்ளத்தால் கருத்தரித்தார்; மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக்
காரணமாக இருந்தார், இணை மீட்பரானார்.
தேவையில் இருப்பவருக்கு
உதவும் நல்லுள்ளம் கொண்டவர் அன்னை மரியா (லூக் 1:39-45)
உதவி
என்பது பிறர் தேவையை உள்ளுணர்ந்து, தன்னலமின்றி விரைந்து சென்று உதவுவதாகும். உள்ளுணர்தல்
என்பது பிறர் சொல்லித் தெரிந்துகொள்வதல்ல; கேளாமலேயே உணர்ந்துகொள்வது. விரைந்து செல்லுதல் என்பது உதவி தேவைப்படும் அந்த
நொடியிலேயே விரைந்து சென்று உதவுதலாகும். வயதான நிலையில் எலிசபெத்து கருவுற்றிருக்கிறார்
என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் 130 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு, மூன்று மாதங்கள்
தங்கி உதவுகிறார். “பணிவிடை பெற அன்று, பணிவுடை புரியவே வந்தேன்” (மாற் 10:45) எனும் தனது மகனின் வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர்
அன்னை மரியா.
இறைவார்த்தையைக் கேட்டு
அதன்படி வாழ்ந்தவர் அன்னை மரியா (மத் 12:46-50)
சிமியோன்
இறைவாக்கினரின் (லூக் 2:34-35) வார்த்தைகளைக் கேட்டபோதும், ஏரோதின் வார்த்தைகளைக் கேட்டபோதும்
(மத் 2:14-15) உள்ளத்தில் வருத்தங்களையும் கவலைகளையும் எதிர்கொண்டபொழுதிலும், கடவுளுடைய
அருளால், ஆறுதலால், அவரது இரக்கத்தால், கனிவால் அனைத்தையும் தாங்கினார். எனவேதான் சிலுவையடியில்
அன்னை மரியா தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடங்கள் கொஞ்சமோ! சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால்
தாங்குமோ! அப்படி இருந்தும் அன்னை அமைதி காத்தார். எதிர்நோக்கின் திருப்பயணிகள் துன்பத்தைத்
தாங்கிக்கொள்வர். அன்பு செய்வர். அன்னை மரியா அனைத்தையும் தாங்கினார். கடவுளையே சுமக்கின்ற
பேற்றினைப் பெற்றார்.
புது வாழ்வின் எதிர்நோக்கு
அன்னை மரியா
கானாவூர்
திருமண விழா அன்னை மரியாவின் சமூக அக்கறை மற்றும் ஈடுபாட்டுக்கான ஒரு சிறந்த உதாரணம்.
அன்னை மரியாவின் எதிர்நோக்கு சமூக ஈடுபாட்டை இந்த உலகிற்கு உரக்கச் சொல்கிறது. திருமண
நிகழ்வில் திராட்சை இரசம் நிரப்பப்பட்ட ஆறு கற்சாடிகள் என்பது குறையுள்ள எண். அவற்றில்
விளிம்புவரை நிரப்பப்பட்ட நீர் இரசமாய் மாறியது நிறைவின் வெளிப்பாடு. குறையுள்ளதை நிறைவாக்கியவர்
அன்னை மரியா. இயேசுவின் மாட்சி வெளிப்படக் காரணமாக இருந்தவரும் அவரே. வாழ்க்கையில்
பல்வேறு தருணங்களில் திராட்சை இரசம் தீர்ந்து வாடும் நமக்காகப் பரிந்து பேச அவர் நம்மோடு
இருக்கிறார். மனித மாண்பிழந்து, அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கும் மக்களின் சார்பாக,
குரல் இழந்தவர்களின் குரலாக வாழ நம்மை அழைக்கிறார். பிளவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும்
களைந்து, வாழ்வில் ‘திராட்சை இரசம்’ இன்றி இருப்போருக்காகக் குரல் கொடுக்க
நம்மை அழைக்கிறார். சமூகத்தில் பாதுகாப்பற்ற பெண்கள், சிறார்கள், பாலினப் புதுமையினர்,
புலம்பெயர்ந்தோர், கையறு நிலையிலுள்ளோர் யாவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட நம்மை அழைக்கிறார்.
சமூக
அரசியல், தீய சக்திகளோடு போராட திறனின்றித் தவிக்கும் ஏழை எளியவர்கள், போதை பொருள்களுக்கும்
சமூக ஊடகங்களுக்கும் அடிமையானவர்கள் - இவர்களுக்கெல்லாம் உற்ற துணையாய் தானிருப்பதாக
மெக்சிகோ நாடு குவாதலூப்பே நகர் காட்சியில் கடவுளின் தாயாக “உன் தாய் நான் அருகில்
இல்லையா?” (Nican Mopohua, No.119) எனத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
நம்பிக்கையோடு
திருப்பயணத்தில் தளர்வுறாது எதிர்நோக்கிச் செல்வோம். நம் வாழ்வில் தடைகள் இருக்கலாம்;
பக்குவமாய்த் தாண்டிச் செல்வோம். பயம் இருக்கலாம்; பதற்றப்படாமல் முன்னோக்கிப் பயணிப்போம்.
நம் தாய் நம்மோடு இருக்கிறார். திருத்தந்தை குறிப்பிடுவதுபோல, நம் இதயங்களிலும் இல்லங்களிலும்
‘உள்ளே வாருங்கள் அன்னையே’ என்று அவரை வாயார அழைப்போம். நாளை என்பது
நலமாய் விடியும். நம்பிக்கைதானே வாழ்க்கை! நம்பிக்கையோடு பயணிப்போம்.
2013-ஆம் ஆண்டு திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதிலிருந்து திரு அவையைக் கூட்டியக்கத் திரு அவையாக இயங்கச் செய்ய திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் சிறப்பிடம் பெறுவது பெண்களுக்கான தலைமைத்துவமும் பாலின சமத்துவமும் என்றால் அது மிகையாகாது.
2024-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 27-ஆம் நாள் நிறைவுபெற்ற 16-வது அகில உலக ஆயர் மாமன்றத்தின் நிறைவில், ஆயர் மாமன்ற உயர்மட்டக் குழுவை (General Secretariat of the synod)
திருத்தந்தை அறிவித்தபோது,
ஆயர் அல்லாத இரண்டு நபர்களைத் (பெண்களை) திருத்தந்தை அறிவித்தார். மொத்தம் 17 நபர்கள் கொண்ட இந்த அமைப்பில் 15 ஆயர்களுடன்
ஆயர் அல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் பெண்கள் என்ற தனிச்சிறப்பில், ஒருவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மரியா லியா ஜெர்லினோ பொதுநிலைப் பெண்மணியாவார். மற்றொருவர் ஆளுநரின் மறைப்பரப்பு அருள்சகோதரிகள் அவையைச் சார்ந்த முன்னாள் தலைமை அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா ஆவார். திருத்தந்தையின்
சமத்துவப் பார்வைக்கும், கூட்டியக்கத் திரு அவையின் பாலினச் சமத்துவத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதுவரை
திரு அவையின் தலைமைத்துவ வரலாற்றில், பணிநிலை பங்களிப்பு சமத்துவத் திரு அவைக்கான முன் முயற்சியில் இச்செயல்பாடு மிகவும் போற்றுதற்குரிய செயல்பாடாக அமைந்திருந்தது.
இந்தச்
சூழலில்தான் 2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டாக மலர்ந்திருக்கும் வேளையில் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா அவர்களை சனவரி 6-ஆம் தேதி திருக்காட்சிப் பெருவிழா அன்று துறவியர் மற்றும் அர்ப் பணிக்கப்பட்டோரின் பேராயத்துக்கான தலைவராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். திரு அவையின் வரலாற்றில் 2025 ஆண்டு காலப் பயணத்தில் கூட்டியக்கத் திரு அவையைச் செயல்பாட்டு நிலைக்குக் கொணரும் நம் திருத்தந்தையின் செயல்திட்டங்களில் இது ஒரு புரட்சி என்றே கருதப்படுகிறது. இதுவரை கர்தினால்களும் பேராயர்களும் ஆயர்களும் மட்டுமே வத்திக்கான் திருப்பீடப் பேராயங்களுக்குத் (Vatican Dicastries) தலைவர்களாக
நியமிக்கப்பட்டிருந்த
நிலையில், இப்போது ஒரு பெண்ணை, ஓர் அருள்சகோதரியைத் துறவியர் பேராயத்துக்கான தலைமைப் பொறுப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் நியமனம் செய்திருப்பது, இந்த யூபிலி ஆண்டில் அவர் காட்டும் சமத்துவப் பார்வை, பெண்ணிய மாண்பு போற்றப்பட முன்வைக்கும் வழி காட்டுதல் எனப் பெருமையோடு குறிப்பிட வேண்டும். 2023-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பேராயத்தின் செயலராக அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா அவர்கள் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு
அவைச் சட்டத்தின் வழி காட்டுதல்படி திருப்பீடப் பேராயங்களுக்கான தலைமைப் பொறுப்பில் ஆயர் நிலையில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிலையை மதிக்கும் வண்ணம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சலேசியத் துறவியான கர்தினால் ஏஞ்சல் பெர்னாண்டஸ் அந்திரே அவர்களை, துறவியர் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோரின் திருப்பீடப் பேராயத்துக்கு இணைத்தலைவராக (pro-perfect) சனவரி
6-ஆம் தேதி அறிவித்துள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்சகோதரி தலைவராகவும் (Prefect), கர்தினால்
அவர்கள் இணைத்தலைவராகவும் (pro-perfect) திரு அவையில்
திருப்பீடப் பேராயங்களில் இதுவரை நிகழ்ந்திராத ஒன்று. இதை விளம்பரத்திற்காகவோ, சுயமதிப்புக்காகவோ, வெற்றுப் புரட்சிக்காகவோ செய்யாமல் திரு அவையின் வடிவத்திலும் இயல்பிலும் பணியிலும் பங்கேற்பிலும்
புதுப்பித்தலையும் சமத்துவத்தையும் கொண்டு வரும் நம் திருத்தந்தையின் சீரிய முயற்சியின் வழிகாட்டுதலின் எதார்த்தமே!
இந்தப்
புதிய நியமனங்கள் போன்று திரு அவை அனைத்து மட்டங்களிலும் நிகழ வேண்டும் என்பதே அவர் விருப்பம். துறவியர் பேராயத்துக்கான உதவிச் செயலர்களாக நியமனம் பெற்றிருப்பவர்களில் ஒருவர் கிளரீசியச் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் அயிட்டோர் ஜிமெனெஸ் ஒச்சாவே அவர்களோடு மற்றொரு அருள்சகோதரி கார்மென் ரோஸ் நோர்த்தெஸ் அவர்களும் இடம்பெற்றிருப்பது பாலினச் சமத்துவத்தையும், திரு அவையின் இணைந்த பங்களிப்பையும் அனைத்து நிலையினரின் பங்கேற்பையும் எடுத்துக் காட்டுகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் திரு அவையில் பெண்களுக்கான சமத்துவத்தையும், அவர்களின் தலைமைத்துவப் பங்கேற்பையும் ஈடுபடுத்த வத்திக்கானின் உயர்மட்டப் பொறுப்புகளில் பல்வேறு அருள்சகோதரிகளையும், பொதுநிலை சகோதரிகளையும் ஏற்கெனவே நியமித்திருப்பதையும் இங்கே பெருமையோடு நாம் நினைவுகூர வேண்டும். வத்திக்கான் அரசுப் பணியில் (Government of the Vatican city state) இரண்டாவது உயர் தலைமைப் பொறுப்பில் பிரான்சிஸ்கன் அருள்சகோதரி இரபேலா பெத்ரினி அவர்கள் ஏற்கெனவே பணியாற்றுவது இங்கே நோக்கத்தக்கது. இந்தப் பொறுப்பில் முதல் பெண்ணாக இவர்தான் நம் திருத்தந்தையால் நியமனம் செய்யப்பட்டவர். அது போலவே, ஒருங்கிணைந்த மானிட மாண்பு மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் ஆலயங்களில் உயர் பொறுப்பில் அருள்சகோதரி அலெக்சாந்தரா ஸ்மெரில்லி அவர்களும், அகில உலக ஆயர் மாமன்றத்தின் துணைச் செயலராக அருள்சகோதரி நற்காலி பெக்குவார்ட் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அருள்சகோதரிகள் மட்டுமல்லாது பொதுநிலைச் சகோதரிகள் (laywomen) கபிரியோ கம்பினோ, லிண்டா கிசோனி இருவரும் பொது நிலையினர், குடும்பம் மற்றும் மானிட வாழ்வுப் பேராயத்துக்கான துணைச் செயலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
உடனடியாகத்
திரு அவையின் திரு நிலைகளில் பெண்களை ஈடுபடுத்தி பணிகளில் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற அழைப்புக்கு, திருத்தந்தையின் முன்முயற்சியாகவும், அவரின் நேரியச் செயல்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தச் சமத்துவமும் பங்களிப்பும் பங்கேற்பும் தலத் திரு அவைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது அவா!
இறைவேண்டல் என்றால் சொற்களால் ஆனது என்னும் பார்வையை விரிவுபடுத்தி, மனநிலை, செயல்கள், வாழ்வு எனப் பல தளங்களும் இணைந்ததே முழுமையான இறைவேண்டல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, இறைவேண்டலின் தொடக்கமே நம் மனநிலைதான் (Attitude) என்பதையும் நாம் மனத்தில் பதிக்க வேண்டும். எனவேதான், “நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்” (லூக் 8:18) என்றார் இயேசு.
நல்ல
மனநிலையோடு ஏறெடுக்கப்படாத இறைவேண்டல் இறைவனால் புறக்கணிக்கப்படும் என்பதைப் பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையில் (லூக் 18:9-14) இயேசு எடுத்துக் கூறினார். “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது” (மத்
15:8) என்ற எசாயாவின் மேற்கோள் வழியாக நல்ல மனநிலையில்லாத புகழ்ச்சியின் பயனற்றத் தன்மையை எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கின்றார்.
அதுபோல,
உறவின் மனநிலை இல்லாத பலியோ, காணிக்கையோ இறைவனுக்கு ஏற்புடையது அல்ல (மத் 5:23-24) என்பதையும் வலியுறுத்திக் கூறினார் இயேசு. மனிதரைத் தீட்டுப்படுத்துவது உணவல்ல; மாறாக, “தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” (மத்
15:20) என்றும் தெளிவுபடுத்தினார். இவையெல்லாம் ஒருவரின் மனநிலை அவரது சொற்களைவிட, செயல்களைவிட அதிக வலிமையானது என்பதையும், நல்ல மனநிலையில்லாமல் செய்யும் வேண்டல்கள், செயல்கள் பயன்தரா என்பதையும் எடுத்துரைக்கின்றன. நேர்மறை மனநிலை, எதிர்மறை மனநிலை என்று உளவியலாளர் கூறுவதுபோல, ஊனியல் மனநிலை, ஆவிக்குரிய மனநிலை என்று பகுத்துக் கூறுகிறார் புனித பவுல். “ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்”
(உரோ 8:6). எனவே, நாம் ஆவிக்குரிய மனநிலை கொள்ள அழைப்பு விடுக்கிறார். மேலும், “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” (பிலி
2:5) என்றும் அறிவுறுத்துகிறார். இயேசுவிடம் இருந்த மனநிலை வேறு ஒன்றுமில்லை, சாவு மட்டும் தந்தைக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதே இயேசுவின் மனநிலை (பிலி2:6-11). நம் வாழ்வில் பலவிதமான மனநிலைகள் இருக்கின்றன. திருவிவிலியம் காட்டும் சில நேர்மறை மனநிலைகளைப் பார்ப்போம்.
1. இறைவனைப் பற்றிய மனநிலை:
இறைவனே நம் வாழ்வின் முதல்வர் மற்றும் அனைத்தும் என்பதை ஏற்று, அவரையே முதன்மையாகவும் முழுதாகவும் அன்பு செய்ய வேண்டும். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக” (மாற்
12:30). “மனிதருக்குக்
கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” (திப 5:29)
2. இறைவேண்டல் பற்றிய மனநிலை:
“நீங்கள் செபம் செய்யும்போது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்” (மத்
6:8).
3. உலகம் பற்றிய மனநிலை:
‘கடவுள் உலகை நல்லதென்று கண்டார்’
(தொநூ 1:31). ‘தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்கு உலகை அன்பு செய்தார்’
(யோவா 3:16). நாமும் அவ்வாறே உலகத்தைப் பார்ப்போம்.
4. மனிதர்கள் பற்றிய மனநிலை:
“ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்” (எபே
4:32). “மனத்தாழ்மையோடு
மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்” (பிலி
2:3).
5. நம்மைப் பற்றிய மனநிலை:
இறைவன் நமது தந்தை. எனவே, நாம் பேறுபெற்றவர்கள். கடவுளின் உள்ளங்கைகளில் நாம் பொறிக்கப்பட்டுள்ளோம் (எசா 49:16). “ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்”
(எசா 49:5). “இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்” (1கொரி
15:10).
6. துன்பம் பற்றிய மனநிலை:
துன்பத்தின் வழியாகவே நன்மையும் வெற்றியும் பிறக்கும் என்பதே இயேசுவின் சிலுவைச் சாவு நமக்குக் கற்றுத்தரும் பாடம். எனவே, துன்பத்தை நேர்மறையாகப் பார்க்க அழைக்கிறது இறைமொழி. “கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டுவிடுகின்றனர்” (1பேது
4:1)
7. செல்வம் பற்றிய மனநிலை:
“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது”
(மத் 6:24). “பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்” (எபி
13: 5).
8. பணி பற்றிய மனநிலை:
“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே
செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச்
செய்யுங்கள்” (கொலோ
3:23).
9. நம்பிக்கை மனநிலை:
“நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை” (2கொரி
4:8). “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண் டுள்ளார்”
(1பேது 5:7).
10. வாழ்வு பற்றிய மனநிலை:
“அனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன” (2கொரி
4:15). எனவே, “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள்” (1தெச
5:16-18).
மேற்காணும்
நேர்மறை மனநிலைகளோடு இறைவேண்டல் செய்தால்தான் நமது இறைவேண்டல் இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். இல்லாவிடில், நம் இறைவேண்டல் பயனற்றதாகிவிடும். உண்மையில் நல்ல மனநிலையே ஓர் இறைவேண்டல்தான் என்பதை உணர்வோம். “தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்”
(1திமொ 1:5) என்னும் இறைமொழியின்படி வாழ்வோம்.
1. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான திரு அவை நிகழ்வாக இருந்த 1962, அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் திருத்தந்தை 23-வது யோவானால் தொடங்கப்பட்டு, 1965-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாள் திருத்தந்தை 6-வது பவுலால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில், திரு அவையின் தாயான மரியாவிற்குக் கொடுக்கப்பட்ட சிறப்பானதோர் இடம் பற்றி இங்கு உங்களோடு சிந்திக்க விரும்புகின்றேன்.
உண்மையிலேயே
ஒரு மாபெரும் மரியாவின் தனித்துவமானது (Marian tone)
அதன் அறிவிப்பிலிருந்து இந்தத் திருச்சங்கத்தினால் குறிக்கப்பட்டது. கிறித்தவ மதம் சார்ந்த திருச்சங்கங்களைக்
கொண்டாடுவது (Celebrandi Concilii Oecumenici) பற்றிய திருத்தந்தையின்
கடிதத்தில், 23-வது யோவான் அவர்கள் ‘அருளின் தாயும், திருச்சங்கத்தின் வானுலகப் பாதுகாவலியுமாகிய’ மரியாவின்
சக்தி வாய்ந்த மன்றாட்டின் துணையை ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தார் (11 ஏப்ரல் 1961, AAS 53 [1961] 242).
திரு அவை
பற்றிய
சங்க
ஏட்டில்
மரியா
பற்றிய
படிப்பினை
இடம்பெறல்
அடுத்தப்படியாக,
1962-இல் மரியாவின் சுத்திகரிப்புத் திருநாளன்று, திருத்தந்தை 23-ஆம் யோவான் அவர்கள் அக்டோபர் 11-ஆம் தேதியை, அதாவது குறிப்பாக அதே நாளில் மரியாவை ‘Theontkos’ (இறைவனின் தாய்)
என்று அழைத்த அந்த மிகப்பெரிய எபேசு திருச்சங்கத்தின் நினைவாக இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று விவரித்து, அந்த நாளைச் சங்கத்தின் தொடக்க நாளாகக் குறித்தார் (Motu proprio
Concilium, AAS 54 [1962] 76-68). அதன் பிறகு, அவரின் திருச்சங்கத் தொடக்க உரையில் திருத்தந்தை அவர்கள் ‘கிறித்தவர்களின் மற்றும் ஆயர்களின் துணையாகிய’
மரியாவின் தாய்மை உதவியை வேண்டி திருச்சங்கச் செயல்பாடுகளின் வெற்றிமிகு பலனுக்காகத் திருச்சங்கத்தையே அவரிடம் ஒப்படைத்தார் (AAS 54 [1962] 795).
திருச்சங்கத்
தந்தையர்களும், சங்க நிகழ்வுகளின் தொடக்கத்தில் உலகிற்கான அவர்களுடைய செய்தியில், “திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான நாங்கள், இயேசுவின் தாயாகிய மரியாவோடு செபத்தில்
ஒன்றாக இணைந்து, ஒரே திருத்தூது அமைப்பை உருவாக்குகின்றோம்” (Acta Synodalia I, I, 254) என்று கூறினர். இவ்வாறு மரியாவோடு உள்ள உறவில் ஒன்றித்து, தூய ஆவியாரின் வருகைக்காகக் காத்திருந்த தொடக்கக் காலத் திரு அவையோடு தங்களையே இணைத்து அவர்களின் சிந்தனைகளை மரியாவை நோக்கி வெளிப்படையாகவே திருப்பினர் (ஒப்பிடுக. திப 1:14).
2. திருச்சங்கத்தின்
இரண்டாவது அமர்வில், திரு அவை பற்றிய சங்க ஏட்டிற்குள் கன்னி மரியா பற்றியும் பேசப்பட வேண்டும் என்ற கருத்து முன் மொழியப்பட்டது. இந்த முயற்சியானது இறையியல் ஆணையத்தால் (Theological Commission) வெளிப்படையாகப்
பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்,
பல மாறுபட்ட கருத்துகளைத் தூண்டியது.
திரு
அவையில் இயேசுவின் தாயினுடைய மிகச் சிறப்பான பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்தப் பரிந்துரையானது போதுமானதாக இல்லை என்று கருதிய சிலர், மரியாவின் மாண்பையும் மேன்மையையும் தனித்துவமிக்க புனிதத்தையும் மற்றும் அவருடைய
மகனால் கொண்டு வரப்பட்ட மீட்பில் அவரின் சிறப்பான பங்களிப்பையும் ஒரு தனிப்பட்ட சங்க ஏட்டால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற நிலைப்பாடு எடுத்தனர். இன்னும் அதிகமாக, ஒருவகையில் திரு அவையை விட உயர்ந்தவராக மரியாவைக் கருதுவதற்கு, மரியா பற்றிய போதனையைத் திரு அவை பற்றிய போதனையோடு வைப்பது என்ற முடிவானது மரியாவின் சிறப்பைப் போதுமான அளவு மையப்படுத்தாது மற்றும் திரு அவையின் மற்ற உறுப்பினர்களின் அளவுக்கு அவரின் பங்கையும் குறைக்கும் என்று பயந்தனர் (Acta Synodalia II. III, 338-342).
எவ்வாறாயினும்,
மரியா மற்றும் திரு அவை பற்றிய கொள்கை வரைவை ஒரே ஏட்டில் வைப்பதற்கான இறையியல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஆதரவாக மற்றவர்கள் பேசினர். அவர்களைப் பொருத்தவரை, இறைமக்களின் அடையாளம் மற்றும் பணியை மறு கண்டுபிடிப்பு செய்வதற்கான நோக்கத்தில் இந்த உண்மைகள் திருச்சங்கத்தில் வேறுபடுத்தப்பட முடியாது. அதற்கு மாறாக, அவரின் கன்னித்தன்மை மற்றும் தாய்மையில் திரு அவையின் வகை மற்றும் முன்மாதிரியாக (type and exemplar) இருக்கின்றவரோடு அதன் நெருங்கிய தொடர்பைக் காட்ட வேண்டும். உண்மையில், திரு அவை குழுமத்தின் மாண்புமிக்க உறுப்பினர் என்ற வகையில், கன்னி மரியா திரு அவையின் கோட்பாட்டில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றார். இன்னும் அதிகமாக, மரியாவுக்கும் திரு அவைக்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்துவதனால், மறுமலர்ச்சிக்
கிறித்தவர்கள் (Christians of the Reformation) திருச்சங்கத்தால் கொடுக்கப்பட்ட மரியியல்
போதனையை மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும் (Acta Synodalia, II, III, 343-345).
திருச்சங்கத்
தந்தையர்கள், மரியா மீதான அதே அன்பினால் உந்தப்பட்டு, வேறுபட்ட கோட்பாட்டு நிலைப்பாடு பற்றிய அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதில், அவருடைய ஆளுமையின் வேறுபட்ட அம்சங்களை ஆதரிப்பதற்கு இவ்வாறு எண்ணினர். சிலர் கிறிஸ்துவோடு கூடிய அவரின் உறவை முதன்மைப்படுத்தி மரியாவைப் பற்றிச் சிந்தித்தார்கள். மற்றவர்கள் அவரைத் திரு அவையின் ஓர் உறுப்பினராகவே கருதினார்கள்.
3. கடுமையான
கோட்பாட்டு விவாதத்திற்குப் பிறகு இறைவனின் தாயின் மேன்மையையும், திரு அவையின் வரலாற்றில் அவரின் குறிப்பிடத்தக்க உடனிருப்பையும் கருத்திற்கொண்டு, திரு அவை பற்றிய திருச்சங்கத்தின் ஏட்டில் மரியா பற்றிய போதனை இடம்பெறச் செய்யலாமெனத் தீர்மானிக்கப்பட்டது (Acta Sinodalia, II, III, 627).
திரு
அவை பற்றியக் கோட்பாட்டு ஏட்டில் சேர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரியா பற்றிய புதிய உருவரைத் திட்டமானது (schema), உண்மையான கோட்பாட்டு வளர்ச்சியைக் காட்டுகின்றது. மரியாவின் நம்பிக்கை பற்றிய முக்கியத்துவம் இடம்பெற்றதும் திருவிவிலியத்தை ஆதாரமாகக் கொண்டதொரு மரியா கோட்பாட்டை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட அக்கறையும் குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. மேலும், கடவுளின் தாய்க்கான கிறித்தவர்களின் பக்தி மற்றும் மதிப்பை வளப்படுத்துவதற்கான கூறுகளாகவும் பயன்படுகின்றன.
காலம்
செல்லச் செல்ல சில சங்கத் தந்தையர்களால் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட குறைப்பு வாதமானது (Reductionism) அபாயம்
இல்லாத ஒன்றாக நிரூபிக்கப்பட்டது. மரியாவின் பணியும் சிறப்புகளும் மிகப்பெரிய அளவில் மறுபடியும் உறுதி செய்யப்பட்டன. மீட்பின் இறைத்திட்டத்தில் அவரின் ஒத்துழைப்பானது தெளிவாகத் தெரியும்படியாகச் செய்யப்பட்டது; கிறிஸ்துவின் தனிப்பட்ட பங்கோடு இந்த ஒத்துழைப்பானது பொருந்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
முதன்முறையாக,
திருச்சங்க ஆசிரியமானது (conciliar Magisterium)
திரு அவைக்குக் கிறிஸ்துவின் மீட்புப் பணியில் மற்றும் திரு அவையின் வாழ்வில் மரியாவினுடைய பங்கின்
கோட்பாட்டு நிலைப்பாட்டை உருவாக்கியது. இவ்வாறு, பிந்தையக் கோட்பாட்டு வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததை நிரூபிக்கக்கூடியதாக இருந்த திருச்சங்கத் தந்தையர்களின் இந்தத் தேர்வை நாம் உண்மையிலேயே நல்லதொரு முடிவாக இருந்திருக்கிறதென்று கருத வேண்டும்.
4. திருச்சங்க
அமர்வின்பொழுது, மீட்புப் பணியில் மரியாவின் பங்கு பற்றிய மரியியல் கோட்பாட்டை மற்றக் கூறுகளோடு மேலும் வளப்படுத்துவதற்கு அநேகத் தந்தையர்கள் விரும்பினார்கள். இரண்டாம் வத்திக்கான் சங்க மரியியல் விவாதம் இடம்பெற்ற அந்தக் குறிப்பிட்ட சூழல் வலிமையான மற்றும் பரந்துபட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டாலும், அந்த விருப்பங்களை அனுமதிக்கவில்லை. ஆனால், சங்கத்தின் ஒட்டுமொத்த மரியா பற்றிய விவாதமானது, உயிரோட்டமான மற்றும் சமநிலை கொண்டதாக இருந்தது. மேலும், தலைப்புகள் முழுமையாக வரையறுக்கப்படாமல் இருந்தாலும், ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறையும் குறிப்பிடத்தக்கதொரு கவனத்தைப் பெற்றது.
சமநிலை கொண்டதொரு
மரியியல்
கோட்பாட்டு சித்தரிப்பு
இவ்வாறு,
மரியா ‘நடுநிலையாளர்’ என்ற
பட்டத்தைப் (the title of Mediatrix) பொறுத்தவரை சில தந்தையர்களின் தயக்கம் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதிலிருந்தோ மற்றும் மற்றொரு கருத்து கூற்றில், அருளின் வரிசையில் அவருடைய தாய்மைக்கான வானதூதரின் செய்திக்கான அவருடைய ஒப்புதலிலிருந்தோ தடுக்கவில்லை
(ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திருச்சபை, எண்.62). மேலும், திருச்சங்கமானது ஆன்மாக்களுக்கான உயர்நிலை வாழ்வை மீட்டுக்கொடுக்கும் பணியில் ‘முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த முறையில்’ மரியாவின்
ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது (ibid., v©. 61). இறுதியாக,
திருச்சங்கமானது ‘திரு அவையின் தாய்’ என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்தாலும்கூட, ‘இன்றைய உலகில் திரு அவை’ என்ற ஏடானது மிகவும் அன்புக்குரிய தாய் என்ற வகையில் திரு அவையின் மரியாவுக்கான வணக்கத்தைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
திரு
அவை பற்றிய சங்க ஏட்டின் (Lumen Gentium/ இறைத்திட்டத்தில் திருச்சபை) 8-வது இயலில் உள்ள முழு விளக்கமும் மிகவும் வளமையான மற்றும் நேர்மறையான அடிப்படைக் கோட்பாட்டின் விளக்கத்தைத் தடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது திரு அவையானது அதன் தாய் மற்றும் முன்மாதிரியாக மரியாவை அங்கீகரிக்கும் நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடாகும்.
மேலும்,
திருச்சங்கத் தந்தையர்களின் விவாதத்தின்பொழுது அவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டாலும், அவை நம்பிக்கைக்கு உரியவைகளாக மாறின. ஏனெனில், இணக்கமான உறவின் அடிப்படையில், திருச்சங்கத் தந்தையர்கள் கிறித்தவ மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் இன்னும் முழுமையாக்கியுள்ளனர். மேலும், கிறித்தவ மக்களின் நம்பிக்கை மற்றும் பக்திக்கு இறை அன்னையின் அற்புதமான அடையாளத்தையும், மீட்புப் பணியில் அவரது தனித்துவம் மிக்க பங்கையும் விளக்கும் வகையில் இன்னும் முழுமையான மற்றும் சமநிலையான விளக்கத்தை அளித்துள்ளனர்.
மூலம்:
Pope John Paul II, Council\\\'s teaching on Mary is rich and
positive, in kL\\\'Osservatore Romano , Weekly Edition in English, 20/27
December 1995, p.13.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற விருதுவாக்கோடு ஜூபிலி ஆண்டு-2025 பல இடங்களில் கோலாகலமாகவும், சில இடங்களில் கோலா’ கலகமாகவும்’ துவங்கியுள்ளது. ‘Synod on Synodality’ ஆர்ப்பாட்டங்கள் மெல்ல ஓய்ந்து இப்போது ஜூபிலி!
திரு
அவையில் நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கு ஏதாவது தலைப்பு
தேவை. அடுத்த ஒரு வருடத்திற்கு ‘எதிர்நோக்கு’, ‘திருப்பயணம்’, ‘பயணிகள்’, ‘இலக்கு’ போன்ற
வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். காது வலிக்கும். ஆனால், அசரக்கூடாது. ஒவ்வொரு முறையும் அவற்றைக் கேட்கும்போதும் முதன்முறை கேட்பது போலவே உங்கள் முகத்தை வைத்துக்கொள்ளும்படி மிகத் தாழ்மையுடன் உத்தரவிடுகிறேன்.
நாம்
எல்லாரும் ஆதாரமாகப் பயணிகள். பிலிப்பியர் திருமுகத்தில் புனித பவுலடியார் கூறுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்”
(பிலிப்பியர் 3:13). எது? எந்த இலக்கு? என்ன அந்தப் பரிசு?
அண்மையில்
என் பங்கில் யாழினி என்ற இரண்டாவது படிக்கும் சிறுமி, நான் வைத்த பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் boycott செய்தாள். “ஏன் போட்டிக்கு வரவில்லை?” என்று கேட்டேன். அவள் “ஆமாம், எப்பப் பார்த்தாலும் ஒரு சோப்பு டப்பாவையும், டபாரா தட்டையும் பரிசா தர்றீங்க. இதுக்கு நாங்க கஷ்டப்பட்டு சாக்குக்குள்ள கால விட்டுக்கிட்டு ஓடணும். போங்க ஃபாதர்... நான் வரலை” என்று பதில் கூறிவிட்டாள். அந்தச் சோப்பு டப்பாவிற்குக் காசு சேர்க்க நான் படும் பாடு அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அடுத்த
முறையிலிருந்து பெண் போட்டியாளர்களுக்குப் பவுடர், லிப்ஸ் டிக், Fair & Lovely போன்ற
பயனுள்ள பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
தூய
பவலடியார் குறிப்பிடும் பரிசு என்ன? “கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என்று
பிலிப்பியர் 3:14 கூறுகிறது. அதை நிலை வாழ்வு, இளைப்பாறுதல், பேரின்பம், நிறைவு, துன்பங்களற்ற நிலை, விண்ணகம் என்று பல வகைகளில் அர்த்தம்
செய்துகொள்ளலாம். இந்த அர்த்தங்கள் எல்லாவற்றையும் தன்னுள் மடித்து வைத்துள்ள ஓர் அழகிய விவிலியப் படிமம் - புதிய எருசலேம் நகர்! விண்ணகத்திற்கு மற்றொரு பெயர் அது. திருவிவிலியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள், இந்த வார்த்தை ஆங்காங்கே தலைகாட்டுவதைக் கவனித்திருக்கலாம். இது ஒரு மிக முக்கிய இறையியல் சொல்லாடல். ரியல் எஸ்டேட்காரர்கள் கொடுக்கும் விளம்பரங்களில், ‘சென்னைக்கு மிக அருகில்’ என்ற வாக்கியம் கட்டாயம் இருக்கும். புதிய எருசலேம் - கடவுளுக்கு மிக அருகில் உள்ள நகர்!
இறைவாக்கினர்
எசாயா நூலில் புதிய எருசலேம் நகர் படிமம், இஸ்ரயேல்
மக்களின் மறுசீரமைப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது வரவிருக்கின்ற எதிர்கால ஆசிர்! “இதோ! புதிய விண்ணுலகையும், புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்” (எசாயா
65:18-18) போன்ற வரிகள் ஓர் அலைபாயும் மக்கள் இனத்திற்கு எவ்வளவு நம்பிக்கை தந்திருக்கும் என்று யூகிக்கலாம். அழுகையில்லாத
கடவுளால் மிக அந்தரங்கமாகப் பராமரிக்கப்படுகிற ஒரு வாழ்வை எசாயா அவர்கள் முன்வரைந்து காட்டுகிறார். “நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்” (எசா
66:12).
எசேக்கியேல்
நூலில், “புதிய எருசலேம் நகர்” படிமம் கடவுளுடைய நிரந்தர உடனிருப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஆண்டவரின் மாட்சிமை கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலுள் நுழைந்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.” உண்மையில் எசேக்கியேல் நூலில் இந்தப் புதிய நகரின் பெயரே, ‘ஆண்டவர் இங்கு இருக்கிறார்’ என்பதுதான்
(எசே 48:35).
எசாயா
மற்றும் எசேக்கியேலிடமிருந்து இப்படிமத்தைக் கடன் வாங்கும் திருவெளிப்பாடு ஆசிரியர், அதை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார். பழைய
ஏற்பாட்டு நூல்களில் ‘புதிய எருசலேம் நகர்’ வரலாற்றில் வரவிருக்கிற ஒரு வளமான காலத்தைக் குறித்தது. திருவெளிப்பாடு நூலில் அது வரலாறு கடந்த நிலையான பேரின்பத்தைக் குறிக்கும் படிமம். திருவெளிப்பாடு 21 மற்றும்
22-ஆம் பிரிவுகளில் முழுவீச்சில் பயன்படுத்தப்படும் ‘புதிய எருசலேம் நகர்’ படிமத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள், இந்த நகரின் சிறப்புகள் என, பத்து பண்புகளை அடையாளம் காட்டுகிறார்கள். அவை
இவை...
• தலைநகரம்: புதிய படைப்பின் தலைநகராக ‘எருசலேம் நகர்’ செயல்படும். “பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும், புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்” என்று திவெ 21:1-2 கூறுகிறது. சென்னை, இலண்டன், பாரிஸ் போன்ற உலகின் விருப்ப நகரங்கள் தங்கள் தலைமை அந்தஸ்தை இழக்கும். உலகம் முழுவதும்
‘ஒரே நாடு, ஒரே தலைநகர்’ என்ற நிலை ஏற்படும். ‘ஒரே தேர்தல்’ மட்டும் இருக்காது.
• பொதுத்தன்மை: புதிய எருசலேம் நகரில் எல்லா வகை மக்களும் இருப்பார்கள். மொழி, இன, சமயப் பேதங்கள் இருக்காது. குறிப்பாக ‘ஆண்ட சாதியினர்’
இருக்க மாட்டார்கள். “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து...” (லூக் 13: 29); “மக்கள் வந்து திருநகரில் குடியமர்வார்கள். கடவுள்
அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள்” (திவெ
21:3). திருத்தந்தை பிரான்சிஸ் திரும்பத் திரும்பக் கூறுவது போல, அங்கே ‘எல்லாருக்கும், எல்லாருக்கும், எல்லாருக்கும்...’ இடம்
இருக்கும்.
• புன்னகை நிலம்:
திருநகரில் யாரும் அழமாட்டார்கள். கண்ணீர் இருக்காது. ஏனென்றால்,
கடவுள்தாமே “கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார்”
(திவெ 2:14). சாவு இருக்காது; துயரம் இருக்காது; வலி இருக்காது; ‘ஆதித்யா’ சானல் போல மக்கள் 24 மணி நேரமும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்று கூறலாம். ஆனால், அதில் ஒரு பிரச்சினை... நேரமும் இருக்காது.
• புனித பூமி:
திருநகர் ஒரு பாவம் இல்லாத நிலம். ‘பேக்கேஜ் டூர்’ ஆள்கள் விளம்பரம் செய்வது போல, அப்போது எருசலேம் நகர் உண்மையிலே ஒரு புனித பூமியாக இருக்கும். “தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் அதில் நுழையாது. அதுபோல் அருவருப்பானதைச் செய்வோரும் பொய்யரும் அதில் நுழைய மாட்டார்கள்” (திவெ
21:27).
• அழகொளி: பெண்கள் மிக அழகாகத் தெரிவது அவர்களின் திருமண நாளில்தான். புதிய எருசலேம் நகர் “மணமகனுக்காகத்
தன்னையே அணி செய்து கொண்ட மணமகள்” என்று திவெ 21:2 சொல்கிறது. நகரின்
அழகுக்கு ஆசிரியர் உத்தரவாதம் தருகிறார். புதிய படைப்பில் நிலா, கதிரவன் போன்றவை இருக்காது; கடவுளின் மாட்சியே நகரின் ஒளியாக இருக்கும் (திவெ 21:23). விலையுயர்ந்த படிகக்கல் போன்று நகரின் ஒளி ‘பளிங்’கெனத் துலங்கியதாம் (திவெ 21:11). மின்வெட்டு இருக்காது. ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் வாங்க வேண்டாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை EB பில்-ஐப் பார்த்து மயக்கம் போடும் என் போன்ற ஏழைப் பங்குப் பணியாளர்களுக்கு நிம்மதி தரும் செய்தி இது. விலையில்லா,
நிரந்தர, அழகிய ஒளி!
• கோபுரங்கள்: நகரைச் சுற்றி 12 கோபுர வாயில்கள் இருக்கும். புதிய எருசலேம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட நகர். ஒரு பக்கத்திற்கு மூன்று வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகை முத்தால் ஆனது (திவெ 21:21). “இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன” (திவெ
21:12). அவற்றின் வழியாக மக்கள் ‘toll’ கட்டாமல்
நுழைவார்கள்.
• மாநகரக் காவல்:
“வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள்” என்று
திவெ 21:12 கூறுகிறது. திருநகரில் வாழ்வோர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. காவலர்கள் இருப்பதால் ஏதும் ஆபத்து வெளியிலிருந்து வரும் என்று அர்த்தம் இல்லை. மக்களின் பாதுகாப்பு உணர்வை அதிகப்படுத்துவதற்காகவே இந்த ஏற்பாடு. திருநகரில் வாழ்பவர்கள் உண்மையிலேயே “உன்னதரின் நிழலில் தங்கியிருப்பவர்” ஆவர்
(திபா 91:1).
• முடிவிலி: புதிய எருசலேம் நகரில் வாழ்பவர்களுக்கு ஆப்பிள் பயன்படும். கடித்துத் தின்னலாம்.
ஆனால், ‘ஆப்பிள் வாட்ச்’ பயன்படாது. ஏனென்றால், அங்கு நேரம் இருக்காது. இரவு இருக்காது. பகல் இருக்காது. போரடிக்காது. காலம் முன்னுக்கும் செல்லாமல், பின்னுக்கும் செல்லாமல், ஆணியடித்த மாதிரி ஒரே இடத்தில் நிற்கும், நிரந்தர ஒற்றைக் கணத்தில் வாழும் முடிவிலி வாழ்க்கை அது. எனவேதான் “திருநகரின் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது” என்று
திவெ 21:25 கூறுகிறது.
• சதுர நகரம்:
“செம்மையாக ஒருங்கிணைத்துக் கட்டப்பட்ட நகர்” என்று திபா 122:3 பழைய எருசலேம் குறித்துச் சொல்லும் வார்த்தைகள் புதிய எருசலேமுக்கும் பொருந்தும். “அந்நகரம் சதுரமாய் இருந்தது; அவர் அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்”
என்று திவெ 21:16 கூறுகிறது.
தேசிய
நெடுஞ்சாலை 52 வழியாகப் பயணம் செய்தால், டெல்லிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தூரம் 2,700 கிலோ மீட்டர்கள். ஆக, புதிய எருசலேம் நகரின் ஒரு பக்கம் ஏறக்குறைய இந்தியாவின் வடக்கு-தெற்கு எல்லைகளுக்கு இடையே உள்ள தூரத்தின் அளவை ஒத்தது. திருநகரின் உயரம் இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. Mind-boggling proportions for a city! இது போதாதென்று நகரின் தெரு “தெள்ளத் தெளிவான கண்ணாடி போன்ற பசும்பொன்னால்” செய்யப்பட்டிருக்குமாம்!
(திவெ 21: 21). நம் ஆள்கள் வெட்டி வியாபாரம் பண்ணாமல் இருந்தால் சரி!
• அரியணை: புதிய
எருசலேம் நகரில் கோவில் இருக்காது. கடவுளும் ஆட்டுக்குட்டியுமே நகரின் கோவிலாக இருப்பார்கள் (திவெ 21:22). நகரின் மையத் தெருவில் கடவுளின் அரியணை வீற்றிருக்கும். கடவுளின் பணியாளர்கள் ஆட்டுக்குட்டியை வழிபடுவார்கள். அவர் முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் (திவெ 22:4). அதுதான் அவர்களுடைய ஒரே அடையாள அட்டை. ஆதார் கார்டு தேவையில்லை.
புதிய
எருசலேம் நகர் குறித்து வாசிக்க வாசிக்க, அதைப் பற்றிக் கூடுதலாக யோசிக்க யோசிக்க எனக்குத் தோன்றும் சிந்தனையெல்லாம் ‘என்று நுழைவேன் இந்த அழகு நகருக்குள்?!’ என்பதுதான்.
உங்களுக்கு?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்).