5. மரியாவை மேன்மைப்படுத்துவதென்பது இயேசுவிடம் செல்வதாகும்
1. மீட்பின்
வரலாற்றில் கன்னி மரியாவின் ஆளுமை மற்றும் பங்களிப்பு பற்றிய கிறித்தவக் குழுமத்தினுடைய சிந்தனையானது தொடக்க காலத்திலிருந்தே எவ்வாறு உருவானது என்பதை நமது முந்தைய மரியன்னை மறைக்கல்வியில் விவரித்தோம். இக்கட்டுரையில் திரு அவையின் மரியன்னை அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.
மரியியல்
சிந்தனை மற்றும் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருக்கின்ற மரியா பக்தியினுடைய
வளர்ச்சியானது, திரு அவையினுடைய மரியியல் பார்வையை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வெளிப்படுத்துவதில் உதவியிருக்கின்றது. உண்மையில், கன்னி மரியா, கிறித்தவ விசுவாசத்திற்கான அடித்தளம் மற்றும் திரு அவை அனுபவமான (ecclesial experience) கிறிஸ்துவோடு எல்லா வகையிலும் தொடர்புடையவராக இருக்கின்றார். மேலும், அவர் கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கின்றார். ஆகவேதான், மீட்புப் பணியில் யார் அவருடைய தாய்க்கு மிகச் சிறப்பான பங்கை ஒதுக்கினாரோ, அந்த இயேசுவுக்குப் பணிந்து மரியாவைக் கிறித்தவர்கள் வணங்கினார்கள், அன்பு செய்தார்கள் மற்றும் ஆர்வத்தோடும் மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் மரியாவிடம் செபித்தார்கள்.
கிறிஸ்துவுக்கான சிறப்புமிக்க வழியாக அவரைக் கண்டு ஒப்புயர்வற்ற இணைப்பாளராகிய (Supreme Mediator) மரியாவுக்கு அவர்கள்
விசுவாசம் மற்றும் பக்தியில் அவருக்கென ஒரு முக்கியமான இடத்தை ஒதுக்கினார்கள்.
இவ்வாறாக,
திரு அவையினுடைய மரியியல் கூற்றானது கிறித்தவ மக்களுடைய அனுபவத்தில் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இது நம்பிக்கை கொண்டோர்களுடைய இதயங்களில்
அவர் இருக்கின்றார் என்பதற்குச் சான்றாகப் பல வகைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. இது
ஏதோ ஒரு மேலோட்டமான உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; மாறாக கிறிஸ்துவோடு இன்னும் அதிகமானதொரு நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதற்காக, இயல்பாகவே மரியாவை நோக்கித் திரும்புவதற்கான நேற்றைய மற்றும் இன்றைய கிறித்தவர்களைத் தூண்டுகிற, நம்பிக்கையில் வேரூன்றிய ஓர் ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்பாகும்.
2. மூன்றாம்
நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த கிறித்தவக் குழுமங்களால் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக ‘இறைவனின் தாயை’ நோக்கி எழுப்புவதற்காக எழுதப்பட்ட மிகப் பழமையான செபத்திற்குப் பிறகு, ஆண்டவரை நோக்கிய அவருடைய பரிந்துரையில் மிகவும் ஆற்றல் மிக்கவராக யாரைக் கிறித்தவர்கள் கருதினார்களோ, அவரை நோக்கியே அநேக வேண்டுதல் செபங்கள் எழுப்பப்பட்டன.
கிறித்தவ மக்கள்
மரியாவிடம்
ஆழமான
பக்தியை
வெளிப்படுத்தினார்கள்
இன்று
‘அருள் நிறைந்த மரியே’ மிகவும் பொதுவான செபமாக இருக்கிறது. இதனுடைய முதல் பகுதியானது நற்செய்தியிலிருந்து அதனுடைய வார்த்தைகளைக் கொண்டுள்ளது (ஒப்பிடுக. லூக் 1:28-42). கிறித்தவர்கள் அவர்களுடைய சிறுவயதிலிருந்தே வீட்டில் இந்தச் செபத்தைச் சொல்வதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், வாழ்க்கை முழுவதுமே பாதுகாக்கப்பட வேண்டியதோர் உன்னதமான கொடையாக அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அநேக முறை செபமாலையில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற இந்தச் செபம் அநேக நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி மறையுண்மைகளைச் செபத்தோடு தியானிப்பதற்குள் நுழைவதற்கும் மற்றும் சில வேளைகளில் இயேசுவினுடைய தாயோடு நெருங்கிய தொடர்பில் நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கும் உதவுகிறது.
இடைக்காலங்களிலிருந்தே
கிறித்தவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் அவர்களைப் பாதுகாப்பதற்கும் வழிநடத்துவதற்கும் ஆண்டவருடைய புனிதத் தாயிடம் வேண்டுகின்ற அனைத்து நம்பிக்கையாளர்களுடைய மிகப் பொதுவான செபமாகவும் ‘அருள் நிறை மரியே’ செபமானது இருந்து வந்துள்ளது (ஒப்பிடுக. மரியன்னை வழிபாடு, எண்கள். 42-55).
கிறித்தவர்களும்
மரியா மீதான அவர்களுடைய அன்பை பாடல்கள், செபங்கள் மற்றும் எளிய அல்லது சில சமயங்களில் மிகப்பெரிய அளவிலான தரமான கவிதைகளை மனுக்குலத்திற்காக சிலுவையில் அறையப்பட்டவரால் தாயாகக் கொடுக்கப்பட்டவருக்கான அன்பினால் உந்தப்பட்டு பல்வேறுபட்ட அவர்களுடைய பக்தி முயற்சிகளை அதிகரிப்பதன் வழியாக வெளிப்படுத்தினார்கள். அவற்றில் ‘Akathist Hymn’ மற்றும்
‘Salve Regina’ போன்ற
பாடல்கள் நம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கை வாழ்வை ஆழமாகப் பதிவு செய்தன.
மரியா
பக்தியினுடைய மறுவடிவமாக, மரியாவினுடைய ஆன்மிக அழகை ஒட்டுமொத்த மனுக்குலமும் பாராட்டுவதற்குத் தூண்டிய மேற்கத்திய
மற்றும் கிழக்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட விவரிக்க முடியாத வளமையான ஓவியங்கள் இருக்கின்றன. ஓவியர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் கன்னி மரியாவினுடைய பெருமையை அநேக வழிகளில் வெளிக்கொணர்வதில் நமக்கு மிகச்சிறந்த படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அவை மீட்பினுடைய பணியில் அவருடைய மேன்மையான பங்களிப்பினுடைய அர்த்தம் மற்றும் மதிப்பை மிகச் சிறப்பாக நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.
மரியாவில்,
கடவுளுடைய திட்டத்தோடு ஒத்துப் போகக்கூடிய ஒரு புதிய மனுக்குலத்தினுடைய நிறைவை கிறித்தவக் கலை வடிவமானது கண்டு கொள்கின்றது. இதன் காரணமாகவே, அது மனுக்குலம் முழுமைக்கும் ஒரு மேன்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது.
3. சிறப்பானதோர்
அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட கிறித்தவர்களால் இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ள முடியாமல் இருத்தலாகாது. உண்மையில், துறவற சபைகள் (Religious Orders and Congregations), அர்ப்பண வாழ்வை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் (Institutes or Associations of Consecrated life) மரியா
குறிப்பிடத்தக்க வகையில் வணக்கம் செய்யப்பட்டார். பெண் துறவிகளுடைய சபைகள் மட்டுமல்ல, பல துறவற சபைகள்
அவர்களுடைய சபையின் பெயரில் மரியாவினுடைய பெயரையும் இணைத்துள்ளார்கள். இருந்த போதிலும், அதனுடைய வெளி அர்த்தங்களைவிட, பல துறவற சபைகள்
மற்றும் திரு அவையினுடைய இயக்கங்கள் மரியா ஆன்மிகத்தைக் கொண்டவைகளாக இருக்கின்றன. மேலும், அவர்கள் மரியாவுடன் சிறப்பான உறவை முழுமையாக மற்றும் உண்மையாக வாழ்ந்து, அவர்களுடைய தனிவரத்தைக் கொடுப்பவராக அவரைத் தெரியும்படிச் செய்கின்றார்கள்.
சிறப்பான
விதத்தில் தூய ஆவியாரினால் உதவி செய்யப்படுகின்ற மக்களுடைய வாழ்வில் மரியாவோடு இணைந்த இந்த வாழ்வானது எவ்வாறு ஒரு கிறித்தவன் அவனுடைய ஆழ்மனத்தில் மரியாவினுடைய தலையீட்டை அனுபவிக்க முடியும் என்பது போன்ற ஞான வாழ்வின் கூறுகளை உருவாக்கியிருக்கிறது.
மரியாவோடு இணைந்த
இந்த வாழ்வானது அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட கிறித்தவர்களை மட்டுமல்ல; மாறாக, எளிமையான நம்பிக்கையாளர்களையும் மற்றும் திரு அவையினுடைய வாழ்வோடு ‘தூரத்து’ தொடர்பை மட்டுமே வைத்திருக்கின்றவர்களையும் அவரோடு பிணைக்கின்றது. வருடம் முழுவதும் அநேக நம்பிக்கையாளர்களை ஈர்க்கின்ற மரியன்னை திருத்தலங்கள் ஆண்டவருடைய தாயின்மேல் கிறித்தவ மக்கள் வைத்திருக்கின்ற ஒரு பொதுவான மரியாதையின் அடையாளமாக இருக்கின்றன.
மரியன்னை
பக்தியினுடைய அரண்களாகத் திகழ்கின்ற புகழ்பெற்ற இடங்களில் சில: லூர்து நகர், பாத்திமா நகர், லொரேத்தோ, பொம்பெய், கொத லூப்பே மற்றும் செஸ்தோகோவா. மற்றவைகள் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் மட்டுமே தெரிந்தவைகளாக இருக்கின்றன. அவற்றிலெல்லாம், மரியாவிடம் தஞ்சமடைவதோடு
தொடர்புடைய நிகழ்வுகளின் நினைவானது, கடவுளுடைய அருளுக்கு நம்முடைய இதயங்களைத் திறந்து அவருடைய தாய்மைநிறை அன்பின் செய்தியை அறிவிக்கின்றது.
மரியாவினுடைய
பரிந்துரை வழியாக மனிதனை அடைகின்ற கடவுளுடைய இரக்கத்தின் ஓர் அற்புதமான சாட்சியாக இந்த மரியன்னை திருத்தலங்கள் இருக்கின்றன. உடல் சார்ந்த குணப்படுத்தும் அற்புதங்கள், ஆன்மிக மீட்பு மற்றும் மனமாற்றம் போன்றவை, ஆவியிலும் கிறிஸ்துவோடும் மரியா ஓர் உதவியாளராக மற்றும் தாயாக இருந்து அவருடைய பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார் என்பதற்கான சிறந்த அடையாளங்களாகும். மரியியல் கூறானது திரு அவையினுடைய ஒட்டுமொத்த வாழ்விலும் ஊடுருவிப் பரவியிருக்கிறது.
4. மரியன்னை
திருத்தலங்கள் நற்செய்தியை அறிவிக்கும் மையங்களாக விளங்குகின்றன. உண்மையில், திரு அவையில் இன்றும், பெந்தகோஸ்தே நாளுக்காகக் காத்திருந்த அந்தத் தொடக்கக் குழு மத்தைப்போல, மரியாவோடு இணைந்த
செபமானது அநேகக் கிறித்தவர்களை நற்செய்திப் பணிக்கும் அவர்களுடைய சகோதர- சகோதரிகளுக்கான அன்புப் பணிக்கும் தூண்டுகிறது. இங்கு அன்புப் பணி மற்றும் இரக்கத்திற்கான பணியைச் செய்வதில் மரியன்னை பக்தி ஏற்படுத்தியிருக்கின்ற மிகப் பெரிய தாக்கத்தை நான் நினைவுகூர விரும்புகிறேன். அதாவது, மரியாவினுடைய உடனிருப்பால்
தூண்டப்பட்டு, கன்னி மரியாவினுடைய தாய்மை
பாதுகாப்பின் அடையாளமாகவும் தந்தையினுடைய இரக்கத்தின் உயிரோட்டமான உருவாகவும் எளியோருக்காக
இருந்திட விரும்பி ஏழைகளுக்காக, நலிந்தோருக்காக மற்றும் நோயாளர்களுக்காகத் தங்களையே அர்ப்பணிப்பதற்கான தேவையை நம்பிக்கையாளர்கள் மிகவும் உணர்ந்திருக்கிறார்கள்.
இவை
அனைத்திலுமிருந்தும் திரு அவையினுடைய ஒட்டுமொத்த வாழ்விலும் மரியியல் கூறானது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மிகத்தெளிவாகக் காண முடியும். இறைவார்த்தையினுடைய அறிவிப்பு, திருவழிபாடு, வேறுபட்ட அன்பின் மற்றும் கலாச்சாரத்தின் தோற்றங்களும், வளமைக்கான மற்றும் புதுமைக்கான தருணங்களை மரியாவில் காண்கின்றன.
கடவுளின்
மக்கள், அவர்களுடைய மேய்ப்பர்களின் வழிநடத்துதலின் கீழ், மரியாவினுடைய முகத்தைக்
கண்டுபிடிப்பதை நோக்கிய கிறித்தவ நம்பிக்கையைத் தூண்டுகின்ற தூய ஆவியானவருடைய செயலை இந்த நிகழ்வில் உணர்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மரியன்னை திருத்தலங்களில் அற்புதங்களைச் செய்கிறவர் தூய ஆவியானவர்தான். அவர்தான் மரியா பற்றிய அறிவிலும், மரியாவுக்கான அன்பிலும் ஊக்கமூட்டி, வரலாற்றில் கடவுளுடைய அடையாளங்களை எவ்வாறு அறியலாம் மற்றும் புதிய மானுடத்தினுடைய வடிவமைப்பாளராக ஒவ்வோர் ஆண் மற்றும் பெண்ணை ஆக்குகின்ற அறிவை எவ்வாறு பெறலாம் என்பதைப் புகழ்ச்சிப் பாடல் பாடிய கன்னியிடமிருந்து (Virgin of the Magnificat) கற்றுக்கொள்வதற்கு
நம்பிக்கையாளர்களை அழைத்துச் செல்கிறார்.
மூலம்:
Pope John Paul II, To Honour Mary is to go to Jesus, in
L’Osservatore Romano, Weekly Edition in English, 22 November 1995, p.11.
இறைவேண்டல் பற்றிய நமது பார்வையை விரிவுபடுத்த அழைப்பு விடுக்கிறது திருவிவிலியம். நமது மரபார்ந்த பார்வையையும் கடந்து, நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் இறைவேண்டல் ஊடுருவ வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இறையியல் பாடம். அந்த வகையில் நாம் செய்கிற பணியை நன்றாக, நேர்மையாக, நேர்த்தியாகச் செய்து முடிக்கும்போது, அதுவே ஒரு சிறந்த இறைவேண்டல் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
“என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோவா 4:34) என்று சொல்லித் தம் சீடரை வியக்க வைத்தார் இயேசு. அது மட்டுமல்ல, தமது பணி வாழ்வின் இறுதியில், “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்” (யோவா 17:4) என்று சொன்னதன் வழியாகக் கடவுள் தந்த வேலையை நன்கு செய்து முடிக்கும்போது நாம் கடவுளை மாட்சிப்படுத்துகிறோம் என்னும் வியப்பான இறையியல் செய்தியையும் நமக்குத் தந்துள்ளார்.
நாம் செய்யும் வேலைகள், பணிகள் கடவுள் தந்தவை என்பது நல்ல பார்வை அல்லவா! பணி பற்றிய இயேசுவின் இந்தப் பார்வையை உள்வாங்கியவர் பவுலடியார். எனவேதான், “ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்” (திப 20:24) என்று பெருமிதத்துடன் கூறினார். இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்ட வேலைகள் மட்டுமல்ல, யார் என்ன வேலை செய்தாலும், அந்த வேலையை நன்கு ஆற்றும்போது, அவர்கள் கடவுளைப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பது நம் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும். உரோமை அரசில் பணியாற்றிய அதிகாரிகளைப் பற்றி எழுதும் பவுல், “அவர்கள் தங்கள் பணியை ஆற்றும்போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்” (உரோ 13:6) என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.
இதன் காரணமாகவே, “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்” (கொலோ 3:23-24) என்று அறிவுறுத்தினார்.
எனவே, நல்ல மனத்தோடு, நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்னும் போதனையைத் திருவிவிலியத்தின் பல இடங்களில் காண்கிறோம். “மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக்கொள்பவர்களாயிராமல், கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றி, கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்” (எபே 6:6-7) என்பது எபேசியர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை.
“மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல், ஆண்டவருக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள்” (கொலோ 3:22) என்பது அடிமைகளுக்கு வழங்கப்பட்ட போதனை.
வேலையின்போது நேர மேலாண்மை பற்றிக் கூட திருவிவிலியத்தில் வாசித்து வியக்கிறோம். “குறித்த காலத்திற்கு முன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள். அவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார்” (சீஞா 51:30) என்னும் சீராக்கின் ஞானநூலின் அறிவுரை நம் அனைவருக்கும் பொருந்தும்.
வேலையும், இறைவேண்டலும் இணைந்தே செல்கின்றன என்பதே நம் திரு அவையின் மரபாக இருந்து வருகிறது. கிறித்தவ வாழ்வின் முன்னோடியான புனித பெனடிக்ட், ‘மன்றாடு, உழை’ என்பதையே துறவிகளின் இலக்காக முன்வைத்தார். ஆறாம் நூற்றாண்டிலிருந்து பெனடிக்டைன் துறவியர் எட்டு மணி நேரம் இறைவேண்டல், எட்டு மணி நேரம் வேலை என்பதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தப் பார்வையையே கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியும் முன்வைக்கிறது. கடவுளின் கொடைகளைப் பயன்படுத்துவதால், உழைப்பு மீட்பின் வழியாகவும் இருக்கிறது. மானிட வேலையின் இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இயேசுவின் பாடுகளில் நாம் பங்கேற்று அவரது மீட்புப் பணியில் ஒன்றிக்கிறோம் (கதிம 2427) எனச் சொல்லி மனிதரின் வேலையை அருள் வாழ்வுத் தளத்திற்கு உயர்த்துகிறது.
‘கடவுளின் பணி’ (Opus Dei) என்னும் பொது நிலையினருக்கான இயக்கத்தைத் தோற்றுவித்த புனித ஜோஸ் மரிய எஸ்க்ரிவா அதன் உறுப்பினர்களுக்குத் தந்த அறிவுரை: “உங்களது அன்றாட வேலைகளோடு விண்ணக நோக்கத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்பதுதான். எந்த வேலையைச் செய்தாலும், உள்ளார்ந்த அன்புடன் செய்யும்போது, அது புனிதமாகிறது என்பதே புனித குழந்தை தெரேசாவின் பார்வையாக அமைந்திருந்தது.
நாம் செய்கிற அனைத்து வேலைகளையும் ஆண்டவருக்காக, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் செய்யும்போது, நமது வேலையே இறைவேண்டலாக மாறுகிறது. “ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும்” (சீஞா 35:16) என்னும் இறைமொழிக்கேற்ப, நமது பணிகளை இறைத் திருவுளத்திற்கு ஏற்றவாறு ஆற்றுவோம். அப்போது நமது பணிகளே நம் இறைவேண்டலாக மாறும்!
அருங்குறிகளும், புதுமையான நிகழ்ச்சிகளும் என்னைச் சுற்றிலும் நடந்துகொண்டே இருக்கின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கையில் உறுதிப்பாட்டோடு நிற்கும்போது நான் பல புதுமைகளை, அருங்குறிகளைச் சந்திக்க முடிந்தது. நான் உயிரோடு இன்னும் இருப்பதே இதற்குச் சான்று. மேலும், எனது வலது தோள், முழங்கை, முன்னங்கை, விரல்கள் ஆகியவற்றை இட வலமாகச் சுற்ற முடிந்ததும் தொடர்ந்து புதிப்பித்தல் உடலில் தானாக நடப்பதற்கு அத்தாட்சிகள்.
இடக்கையைப்
போலவே வலக்கையும் செயல்பட முடியும்போதுதான் நான் முழுமையடைவதாக உணர்வேனோ? நான் அப்படி நினைக்கவில்லை. புத்துயிர்
பெற்ற கைக்குச் சில குறைபாடுகள் இருக்கும். ஆனால், இந்தக் குறைபாடுகள் என் திறன்களைக் குறைப்பதில்லை. எழுதுதல், கணிப்பொறியைப் பயன்படுத்துதல், கருவிகளைக் கையாளுதல், கூடைப்பந்து விளையாடுதல், நீந்துதல், காரோட்டுதல் ஆகியவற்றிற்கு நான் இடது கையையே பயன்படுத்துகிறேன். அதுவே போதுமானதாக இருக்கிறது.
என்மேல்
இரக்கமுள்ளவர்கள் ஒருவேளை எனது முகக்குறிகளைக் கண்டு எனக்காக வருந்தலாம். நான் என் வலக்கையையும் இடக்கையைப் போலவே பயன்படுத்தினால்தான் நான் முழுமைபெற்றிருப்பதாக அவர்கள் நினைக்கலாம்.
எப்படியிருப்பினும்
உண்மையான அருங்குறி ‘ஆம்’ என்று சொல்லி, மெய் நிலையை அதன் அத்தனை உள்பொருள்களுடனும் ஏற்றுக் கொள்ளும் துணிவும் வலிமையும் நான் கொண்டிருப்பதுதான் என்று நம்புகிறேன். உடைந்து போன ‘தான்’ என்ற என்னை ஒன்றுசேர்க்கும் திறன் அது என ஆன்மாவுக்குள் ஏற்படும்
முரண்படும் மெய்நிலைகளை அறிவதன் மூலம் அனைத்துத் திறன்களையும் திரட்டும் ஆற்றலும், உலகப் பார்வைகளை ஒதுக்கித்தள்ளும், ஆன்மாவுக்கு ஊறுவிளைவிக்கும் கூறுகளை இல்லாமல் செய்து, வாழ்வுக் கொள்கைகளையும், ஆழமான நம்பிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்றவும், தேவையான உள் ஆற்றல் பெற்றிருப்பதும், என் வாழ்க்கைப் பயணத்தின் தொடுவானத்தில் காணப்படும் தெய்வீகத் தடங்களில் கண்பதிக்கும் திறனும் என் வாழ்க்கையில் நடந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள்.
என்
வாழ்க்கைக்குள் வந்தவர்கள் என்னைச் சுற்றி நடப்பனவற்றை எப்படிப் பாராட்டுவது என்று எனக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறார்கள். என்னுடைய கையில் முன்னேற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்பதை நான் அறிகிறேன். என்றாலும் எந்த வழியிலும் நான் நசுக்கப்பட அனுமதிப்பதில்லை. இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். வாழ்நாள் முழுவதும் கூட ஆகலாம். எனினும், ‘இரவு எவ்வளவுதான் நீண்டதாக இருந்தாலும், விடிந்தே தீரும்’ என்று எனக்குத் தெரியும்.
முடிவுரை
இந்தப்
பக்கங்களைப் புரட்டியபோது உங்களுக்கு, உங்கள் அனுபவங்களும் நினைவுக்கு வந்திருக்கும். அவற்றில் சில உங்களுள் ஓர் உயிர் நரம்பினை மீட்டியிருக்கும். அது உலகத்தையே வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் தூண்டியிருக்கும். இறையருளால் உருவாக்கப்படும் அந்த நிகழ்வுகள், அனுபவங்கள், மனத்தில் அடைபட்டுக்கிடக்கும் அந்தக் கணங்கள் உங்களுக்கும் எனக்கும் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தந்திருக்கும். மேலும், அவை நமக்காக வாழ்க்கை தரவிருக்கும் அனைத்தையும் விரும்பி ஏற்கும் ஆன்மிக ஆற்றலால் நம்மை நிரப்பும். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து புனித பவுலோடு சேர்ந்து, “நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக” என்று
உறுதி கொள்வோம்.
பந்தயத்தில்
ஓடுவது என்றால் என்ன? பந்தயத்திலோ, மாரத்தானிலோ ஓடுவதற்கு முன்கூட்டிய திட்டமிடல் வேண்டும். ஓடும்போது இடர்ப்பாடுகள் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி மனத்தை ஆயத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிகொள்ள ஓட்டக்காரருக்குத் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வேண்டும். மேலும் அதேசமயம் வெளியிலிருந்து வருகிற வெறுப்புணர்வுகளையும், மனத்தளர்ச்சி ஏற்படுத்தும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஓடுகின்றவர் தான் கண்ணால் காணமுடியாத ஆன்ம சக்தியாகிய கடவுள், அவருக்கு அவர் முயற்சிகளில் துணை நிற்பார் என்ற உறுதியான நம்பிக்கையும் வேண்டும். அதோடு கூட பாப் காஃப் சொல்வது போல, “உறுதியற்றதை அணைத்துக் கொள். நம்முடைய வாழ்க்கையின் மிக அழகான இயல்களின் சிலவற்றிற்குத் தலைப்புகள் பின்னரே தரப்படும்.”
இவ்வாறு
ஓட்டக்காரர் அறிவு, உடல் ஆகியவற்றின் கூட்டுச் சக்தியால் ஆர்வத்தோடு தொடு கோட்டை நோக்கி ஓடுவார். நமது வாழ்க்கைச் சூழல்களிலும் இந்த மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது உறுதியாக, நல்ல பயனை விளைவிக்கும்.
மனித
இனம் தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய உலகில், உடனடியான வெகுமதிக்காகவும், விளைவுக்காகவும் ஏங்கும் உலகில், வெற்றிக்காகப் பொறுமை இழந்து நிற்கும் உலகில், என் வாழ்க்கையின் தொடுவானத்தில் தெய்வீகக் குறுக்கீடுகளின் வழியாகச் சமனமடைந்து, கடவுளின் நேரம் விடிவதற்காக நான் காத்திருக்கப் பழகிவிட்டேன். அவருடைய அந்த நேரத்தில் எல்லாமே அழகாக இருக்கும்.
“பாதை அழகாக இருந்தால்
அது எங்கே இட்டுச் செல்கிறது என்று கேட்காதே. ஆனால், இலக்குகள் அழகாக இருந்தால், பாதையைப் பற்றிக் கவலைப் படாதே; நடந்து கொண்டே இரு” என்று சொல்வார்கள். இறுதி முடிவு சிறப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த இலக்கிற் காக நான் பொறுமையோடு தாங்கிக் கொள்வேன். ஏனென்றால், விபத்துகளின் வழியாகக் கூட அருங்குறிகளை நிகழ்த்துகின்ற இறைவனில் நான் நம்பிக்கை கொள்கிறேன்.
நம்பிக்கையோடு
தடங்களில் நடை போடுதல்,
மாதங்களாய்
ஆண்டுகளாய்
பரந்த
தொடுவானத்தில் தெய்வீகத் தடங்களில் நடத்தல், அடி எடுத்து வைத்தல்!
ஆம்!
அடி எடுத்து வைப்பது,
அந்தப்
பயணம் கண்ணீர்ப் பயணம்!
ஏனென்றால்,
பத்தாம் ஆண்டில்
அடி
எடுத்து வைக்கிறேன்.
இன்னும்
எத்தனை மாதங்கள் ஆண்டுகள்
கடக்க
வேண்டும் என்று அறியேன்
ஆனால்,
ஒன்று உறுதி;
நான்
எப்போதும் ஆசிருடன் இருப்பேன்.
ஏனென்றால்,
படைத்தவர் என் உடைந்த எலும்புகளை ஒன்றுசேர்த்து
அடியெடுத்து
வைப்பதைத் தொடரத்
தம்
தெய்வீக அருளை உறுதி செய்திருக்கிறார்.
ஆம்,
தடங்களில் அடி எடுத்து வைக்கக் கடினமாக இருக்காது. ஏனென்றால், ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் புதிய நம்பிக்கை பிறக்கிறது.
உறுதி!
அனைத்து இடரையும் மன உறுதியோடு தாங்கி,
வாழ்க்கையின் பாதையில் மைல்கள் பல நடப்பேன். தடைக்கல்
கண்டு அஞ்சமாட்டேன். ஏனென்றால், படைத்தவர் உறுதியாகத் திறப்பார்.
பாரீர்,
எல்லாச் சுமையும் பரிசாய் இலகுவாகும்
அவர்
துயர் துடைக்கும் கைப்பற்றி நான் மகிழ்ச்சியாய் நடப்பேன்.
முயற்சியைத்
தொடர்வதன்றி எனக்கு வேறென்ன வேண்டும்? ஏனென்றால், அவர் அருள் எனக்கு நங்கூரமாய் இருக்கும்!
2024-ஆம் ஆண்டு புனித சவேரியாரின் உடல் விசுவாசிகளின் பார்வைக்கு நவம்பர் 21 முதல் கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 472 ஆண்டுகள் ஆகியும் அழியாத உடல், இந்தியத் திரு அவையை அழியாத, ஆழமான, அர்ப்பணமுள்ள விசுவாசத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அழியாத உடல் பேசும் தெய்வீகத் தியாகத்தை அறிந்து, உணர்ந்து, வணங்கி விசுவாசத்தில் வேரூன்றுவோம். இப்புனிதரைப் போல இறை-மனிதத் தோழமை உறவு, பங்களிப்பு, நற்செய்திப் பணியிலும் வளர்ந்திடுவோம்!
அழியாத ஆன்மாவும்
அழியாத
உடலும்: உடல்
அழிவது இயற்கை; ஆன்மா அழியாதது என்பது நம்பிக்கை. ஒரு
சிலர் தாங்கள் செய்த தியாகச் சேவையால் அழியாத உடலைப் பெற்று திரு அவையின் நம்பிக்கைக்குச் சாட்சியாகின்றனர். 472 வருடங்கள் கடந்தும் உடல் அழியா வரம் பெற்ற புனிதர் தூய சவேரியார். நம் தாய்த் திருநாடு இவரின் தியாகச் சேவையையும், அழியாத உடலையும் பெற்றிடக் கொடுத்து வைத்திருக்கிறது. இந்த அழியா உடலுக்கு அப்பால், அவர் செய்த தியாகங்கள் நமது உடலையும் உதிரத்தையும் உலுக்கிப் போடுகிறது.
துறவு வாழ்வில்
தியாகம்:
ஸ்பெயின் நாட்டில் நவாரே
என்ற ஊரில் 1506, ஏப்ரல் 7-ஆம் தேதி அரண்மனையில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், 1534-ஆம் ஆண்டு இயேசு சபையைத் தொடங்குவதில் புனித இஞ்ஞாசியாரோடு சேர்ந்து முக்கியப் பங்கு வகித்தவர். புனித இஞ்ஞாசியாரிடமிருந்து நேரடியாகப் பெற்ற ஆன்மிகப் பயிற்சிகள் வழியாகத் தான் பெற்ற தெய்வீகத் தியாகமே இவரது அழியாத உடலின் அடித்தளமானது. இயேசு சபையில் சேர்ந்து முற்றிலும் ஏழ்மையில் இயேசுவைப் பின்பற்றுகிறார். இவரிடம் இருந்த சொத்தே பாடுபட்ட சுரூபம், குருக்களின் கட்டளைச் செபம், மாற்று உடை, குறிப்பேடு மட்டுமே.
கீழ்ப்படிதலைப்
பொருத்தமட்டில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், புனித இஞ்ஞாசியாருக்கு இவர் எழுதிக் கொடுத்தது யாதெனில், “உலகின் எந்தப் பகுதியில் நான் இருந்தாலும், என் தலைவர் இஞ்ஞாசியாருக்கு எல்லாவற்றிலும் நான் கீழ்ப்படிவேன் என்றும், அத்தோடு இன்னும் இரண்டு வார்த்தைப்பாடுகளின்படி தவறாமல் நடப்பேன்”
என்பதுமாகும்.
கற்பு வார்த்தைப்பாட்டைப் பொறுத்தமட்டில் புனித இஞ்ஞாசியார் இட்டக் கட்டளைக்கு முழுமையாக எந்நேரத்திலும், எச்சூழ்நிலையிலும் தயாராக இருந்ததே துறவு வாழ்வில் தியாகத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
தோழமையில் தியாகம்: புனித இஞ்ஞாசியாருக்குக் கிடைத்த முதல் தோழமை புனித பீட்டர் பேபரும், புனித சவேரியாரும். புனித இஞ்ஞாசியார், புனித பீட்டர் பேபரிடம் மரியாதை வைத்திருந்தார் என்றால், புனித பிரான்சிஸ் சவேரியாரிடம் பாசமும், அதிக அன்பும் கொண்டிருந்தார். தன்னைவிட 15 வயதிற்குக் குறைவாக இருந்தாலும், சக தோழமையின் ஆழம்,
அகலம் அதிகமாகவே இருந்தது. புனித இஞ்ஞாசியார் இவரைத் தனது செயலராகவும், உற்ற நண்பராகவும் வைத்திருந்தார். 1530 முதல் 1535 வரை இவர்களிடமிருந்த ஆழமான தோழமை தனக்குப் பின் சரியான தலைவராகக்கூட இவரை நினைத்திருக்கலாம். புனித சவேரியாரைப் பற்றி பல இடங்களில் இஞ்ஞாசியார்
புகழ்ந்து பேசியிருக்கிறார்.
புனித
சவேரியாருக்கு மட்டும் இஞ்ஞாசியார் எழுதிய கடிதங்களில் ‘இயேசு சபைத் தலைவர்’ என்று குறிப்பிடாமல், ‘இனிகோ’ என்று செல்லமாக, பாசமாக, தனது கையொப்பத்தை வைத்து எழுதுகிறார். 1540-ஆம் ஆண்டு புனித இஞ்ஞாசியார்
இந்தியாவுக்குச் சவேரியாரை அனுப்பிட அழைப்பு விடுத்தவுடன், ‘உடனே தயார்’ என்று சொல்லிப் புறப்படுகிறார் சவேரியார். இங்கு புனித இஞ்ஞாசியார் தனது இதயத்தைக் கிழித்தது போன்ற உணர்வு இருந்ததாகச் சொல்கிறார். தன் தோழர் புனித இஞ்ஞாசியாருக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு என்று வந்தாரோ, அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு. அதன்பின் இருவரும் இறுதிவரை சந்திக்கவே இல்லை. இதயங்கள் உடைய உதயமானதுதான் இந்தியத் திரு அவை.
பணிவாழ்வில் தியாகம்:
உரோமையில் 1537, ஜூன் 24 -ஆம் தேதி அன்று வெனிஸ் மறைமாவட்ட ஆயரால் புனித இஞ்ஞாசியாருடன் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் புனித சவேரியார். 1534, ஆகஸ்டு மாதம் முதல் இவர் செய்த பணி நோயாளிகளின் படுக்கைகளை ஒழுங்குபடுத்தி, அவர்களைக் குளிப்பாட்டி உணவூட்டி விடுவது, சிறுநீர் மற்றும் மலச்சட்டிகளைத் துப்புரவு செய்வது, தரையைப் பெருக்கி சுத்தம் செய்வது, ஆதரவற்று இறந்தவர்களுக்குக் கல்லறை தோண்டி, அவர்களை அடக்கம் செய்வது, இரவில் நோயாளிகளுக்குப் பக்கத்தில் கண்விழித்து உதவுவது போன்றவை. கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இப்பணிகளைச் செய்யும் அளவிற்கு மிகுந்த தாழ்ச்சியையும், தியாகத்தையும் பெற்றிருந்தார்.
மறைபரப்புப்
பணிக்காக கோவா
வந்தடைந்த நம் புனிதர் கால்நடையாகவே தன் பணியைச் செய்கிறார். அவர் நடந்தது மட்டும் இலட்சக்கணக்கான மைல் தூரம். திருமுழுக்குக் கொடுத்துக் கொடுத்து கைகள் வலிப்பதாகக் கடிதம் எழுதுகிறார். திருத்தந்தையின் தூதராக வந்தவர் இங்கே மிக ஏழ்மையில் பணிசெய்துள்ளார். அதற்குச் சாட்சியாக மணப்பாடு குகைக்கோவிலில் உருவாகும் நன்னீர் ஊற்று இன்றும் சான்று பகர்கிறது.
ஜப்பானிலிருந்து
சவேரியார் எழுதிய கடிதம் ஒன்றில் “என் தந்தைக்குப் பெரும் நன்றியுணர்வோடு மண்டியிட்டு எழுதுகிறேன். கடவுளின் சித்தத்தை அறியவும், துணிவோடு அதைச் செயல்படுத்தவும் செபிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். நீவிர் வாழ்க! - வெகு தொலைதூர நாடு கடந்து வாழும் தங்களின் மிகச்சிறிய மகன்” என்று குறிப்பிடுகிறார். இறுதியாக, சீனாவில் பணியாற்ற விரும்பி சாங்சோங் தீவில் இருந்தபோது உடல் நலக்குறைவால் 1552, டிசம்பர் 3-ஆம் தேதி இறைப்பதம் அடைந்தார். 46 வயதில் இறைபதம் அடைந்து அழியா உடல் பெற்ற இவர் புனித இஞ்ஞாசியாருக்கு மிஞ்சிய சீடனாகிறார்.
4. மரியாவினுடைய பங்களிப்பைப் புரிந்து கொள்வதில் திரு அவை வளர்ந்துள்ளது
1. இதற்கு
முந்தைய நமது மறைபோதனையில் ‘மரியா இறைவனின் தாய்’ என்ற மறைக்கோட்பாடு எவ்வாறு அதனுடைய முதல் வடிவமான ‘இயேசுவின் தாய்’ என்பதிலிருந்து, மனுக்குல மீட்பில் அவருடைய தாய்மைப் பங்களிப்பை உறுதிப்படுத்தி ‘கிறிஸ்துவின் தாய்’ என்பதை விளக்கும் வண்ணம் மிகவும் தெளிவான மற்றும் முழுமையான வடிவமாக மாறியது என்பதைப் பற்றி பார்த்தோம்.
மரியியல்
கோட்பாட்டின் மற்றக் கூறுகளை விளக்கவும், மரியாவைப் பற்றிய வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளினுடைய வெளிப்படையானதொரு வரையறையை அடைவதற்கும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.
மீட்பின் வரலாற்றில் மரியாவின் பங்களிப்புப்
பற்றிய ஆழமான கண்டுபிடிப்பு இந்த நம்பிக்கைப் பயணத்தினுடைய குறிப்பிடத்தக்க உதாரணங்களாக, எனக்கு முந்தைய திருத்தந்தையர்களான இறை ஊழியர் ஒன்பதாம் பத்திநாதர் அவர்களால் கி.பி. 1854-இல்
அறிவிக்கப்பட்ட ‘மரியாவின் அமலோற்பவம்’ மற்றும்
பன்னிரண்டாம் பத்திநாதர் அவர்களால் யூபிலி ஆண்டான கி.பி. 1950-இல்
அறிவிக்கப்பட்ட ‘மரியாவின் விண்ணேற்பு’ பற்றிய
கோட்பாடுகள் இருக்கின்றன.
மரியியலானது
இறையியல் தேடலின் குறிப்பிடத்தக்கதொரு களமாக இருக்கின்றது. கிறித்தவ மக்களின் மரியாவுக்கான அன்பு இதில் உணரப்படுகின்றது. மேலும், கன்னி மரியாவின் மறையுண்மைகள் பற்றிய குறிப்பிடத்தக்க பண்புக் கூறுகள் இறையியலாளர்கள் மற்றும் ஆயர்களுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் இருக்கின்றது.
இயேசுவின் தாய்
மீட்பின்
வரலாற்றில்
பங்காற்றினார்
2. முதலில்,
நற்செய்தி நூல்கள் மரியாவின் வாழ்வு மற்றும் ஆளுமையைப் பற்றிப் போதுமான அளவு ஆதாரங்களைத் தரவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கடவுளின் தாயைப் பற்றி மிக நன்றாக அறிந்துகொள்ள உதவக்கூடிய முழு ஆதாரங்களையும் பெற உறுதியாக நாம் ஆசைப்படுவோம்.
இந்த
எதிர்பார்ப்பானது நிறைவேற்றப்படாத ஒன்றாகவே உள்ளது. மேலும், மரியாவைப் பற்றிய வெளிப்படையான கோட்பாட்டு வளர்ச்சியைத் தருகின்ற மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களில்கூட இது நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. கிறிஸ்து மற்றும் அவருடைய பணி பற்றிய ஒரு சிறந்த சிந்தனையைத் தருகின்ற புனித பவுல் அடியாருடைய கடிதங்கள்கூட
மிகவும் குறிப்பிடத்தக்க பகுதியான, “கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்” (கலா
4:4) என்று கூறிச் சுருக்கிக் கொள்கின்றன.
மரியாவின் குடும்பத்தைப்
பற்றி மிகச் சுருக்கமாகவே கூறப்பட்டிருக்கின்றது. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றிய விவரிப்பை (Infancy narratives) நீக்கினால்,
மரியாவைப் பற்றிய
இரண்டே வாக்கியங்களைத்தான் நாம் ஒத்தமைவு நற்செய்திகளில் காண்கின்றோம்:
ஒன்று,
இயேசுவை நாசரேத்துக்குத் திரும்பவும் கூட்டிச் செல்ல அவருடைய ‘சகோதரர்கள்’ மற்றும்
உறவினர்களுடைய முயற்சி பற்றியது (மாற் 3:21, மத் 12:48); மற்றது இயேசுவின் தாயினுடைய திருவருள்பேறு பற்றிய ஒரு பெண்ணினுடைய புகழுரைக்கான பதில் பற்றியது (லூக் 11:27).
எனினும்,
லூக்கா தனது குழந்தைப் பருவ நற்செய்தியில் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு, எலிசபெத்தைச் சந்தித்தல், கிறிஸ்துவினுடைய பிறப்பு, கோவிலில் குழந்தை இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் மற்றும் பன்னிரண்டு வயதில் காணாமல் போன இயேசுவைக் கோவிலில் மறை வல்லுநர்களிடையே கண்டுபிடித்தது போன்ற பகுதிகள் சில முக்கியமான உண்மைகளை நமக்குத் தருவதோடு, ஒருவகையான அடிப்படை ஆர்வத்துக்கான ‘மரியியல்-மூலத்தை’
(proto-mariology) தருகின்றது.
யோசேப்புக்கான
அறிவிப்பின் விவரிப்பில் (மத் 1:18-25) கன்னிமை குன்றாமல் இயேசு கருத்தரிக்கப்படுதலோடு தொடர்புடைய விவரங்களைத் தருவதில் மட்டும் நற்செய்தியாளர் லூக்காவின் தகவல்கள் நற்செய்தியாளர் மத்தேயுவால் மறைமுகமாக
நிறைவு செய்யப்படுகின்றன.
மேலும்,
இயேசுவின் பொதுவாழ்வின் தொடக்கம் மற்றும் இறுதியில் மரியாவின் உடனிருப்பைப் பதிவு செய்ததன் வழியாக, யோவான் நற்செய்தியானது மீட்பின் வரலாற்றில் இயேசுவின் தாயினுடைய பங்களிப்பின் அவசியம் பற்றிய நம்முடைய அறிவை ஆழப்படுத்துகின்றது. குறிப்பாக,
இறக்கும் தருவாயில் இருந்த இயேசுவிடமிருந்து, தாம் அன்பு செய்த சீடருடைய மற்றும் அவர் வழியாக அனைத்துக் கிறித்தவர்களுக்கும் தாயாக இருப்பதற்கான பொறுப்பைப் பெற்ற மரியாவின் கல்வாரி உடனிருப்பானது (ஒப்பிடுக. யோவா 2:1-12; யோவா 19:25-27) குறிப்பிடத்தக்கது.
இறுதியாக,
திருத்தூதர் பணிகள் நூலானது தூய ஆவியாரை எதிர்பார்த்திருந்த அந்த முதல் குழுமத்தின் பெண்களிடையே, இயேசுவின் தாயையும் தெளிவாகக் காட்டுகின்றது (ஒப்பிடுக. திப 1:14).
இருப்பினும்,
இதர புதிய ஏற்பாட்டுச் சான்று மற்றும் நம்பகமான வரலாற்றுச் சான்றுகளும் இல்லாமல் போனதால், பெந்தகோஸ்து நிகழ்வுக்குப் பிந்தைய மரியாவின் வாழ்வு பற்றியும், அவருடைய இறப்புக்கான தேதி மற்றும் சூழல்கள் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. மரியா
திருத்தூதர் யோவானோடு தொடர்ந்து வாழ்ந்தார் எனவும், முதல் கிறித்தவக் குழுமத்தினுடைய வளர்ச்சியில் மிகவும் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார் எனவும் நம்மால் யூகிக்க முடியும்.
3. மரியாவின்
மண்ணக வாழ்வு பற்றிய செய்தியானது
இன்றைய திருவிவிலிய விளக்கவுரையாளர்களில் கவனத்தோடு வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு அதனுடைய இறையியல்
வளமையினால் மெருகூட்டப்பட்டிருக்கின்றது.
மேலும்,
நற்செய்தியாளர்களுடைய
பார்வையானது முற்றிலும் கிறித்தியல் சார்ந்ததாக இருப்பதோடு மகனைப் பற்றிய மகிழ்ச்சியான அறிவிப்பில் மட்டுமே தாயோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றது.
புனித அம்புரோஸ் கூறுகின்றவாறு, “நற்செய்தியாளர், கிறிஸ்து பிறப்பினுடைய மறைபொருளை வெளிப்படுத்துகையில், மறைபொருளினுடைய போதனையாளர் என்பதைவிட, கன்னி மரியாவினுடைய பாதுகாவலராகத் தோன்றி விடக் கூடாது என்பதற்காக மரியாவைப் பற்றிய
பிற சாட்சிகளைத் தேடாமல் இருப்பது நல்லதென நம்பினார்”
(Exp. in Lucam, 2, 6: PL 15, 1555).
மேலே
கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், திரு அவையில் கிறிஸ்துவின் மறைபொருளினுடைய முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆய்வினுடைய ஒரு முயற்சியை ஊக்கப்படுத்த விரும்பி, மரியாவினுடைய வாழ்வு
பற்றிய விளக்கங்களில் மூழ்க விரும்பாமல், மீட்புப் பணியில் அவருடைய பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட புனிதத்துவம் மற்றும் கிறித்தவ வாழ்வில் அவருடைய தாய்மைப் பணியைக் கண்டுபிடிக்க முயல்வதை நாம் அறிய முடியும்.
மரியாவின் புனிதத்துவத்தைப்
பொதுமக்களின்
நம்பிக்கையானது
அங்கீகரித்தது
4. மரியாவின்
மனநிலையை எடுத்துக் கொண்டு தன்னையே அர்ப்பணிப்பதில் திரு அவையினுடைய முயற்சியைத் தூய ஆவியானவர் வழிநடத்துகிறார். இயேசுவின் பிறப்பு பற்றிய பதிவில், அவருடைய தாய் எவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் ‘தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்’ (லூக்
2:19); அதாவது, அவரே சிறந்ததொரு
சாட்சியாக இருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் ஓர் ஆழமான பார்வையோடு ‘ஒன்றிணைப்பதற்கு’ (symballousa)
முயற்சிக்கிறார் என்று குறிப்பிட்டி ருக்கிறார்.
அதேபோல,
கிறிஸ்துவின் மறையுண்மையோடு நெருங்கிய தொடர்புடைய அவருடைய பணி பற்றிய அறிவைப் பெறுவதற்காக மரியாவைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்ற அனைத்தையும் பற்றிய ஆழமானதொரு புரிதலுக்காக அதே தூய ஆவியாரால் இறைமக்களும் தூண்டப்பட்டிருக்கின்றனர்.
மரியியல்
வளர்வதால், கிறித்தவ மக்களுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பும் வெளிப்படுகின்றது. நம்பிக்கை
என்னும் கொடையையும் கிறித்தவ அனுபவத்தையும் தெளிவாக
விளக்குவதிலும், ஆழப்படுத்துவதிலும் இறையியலாளர்களுடைய பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும்கூட, மரியியல் கோட்பாட்டினுடைய வளர்ச்சியில் இயல்பாக இறையியலாளர்களுடைய பங்களிப்பு மட்டுமல்லாமல், இறைமக்களும் தங்களுடைய நம்பிக்கை சாட்சியத்தாலும், உறுதிப்பாட்டினாலும் ஒத்துழைக்கிறார்கள்.
சாதாரண
மக்களுடைய நம்பிக்கையானது தந்தையினுடைய நன்மைத்தனத்தின் வியக்கத்தக்க வெளிப்பாட்டை அதில் கண்டுகொண்ட (ஒப்பிடுக. மத் 11:25; லூக் 10:21) கிறிஸ்துவால் வியந்து புகழப்படுகின்றது.
ஞானிகளிடமிருந்து
மறைக்கப்பட்ட மேன்மையான மீட்பின் வரலாற்றைத் திரு அவையானது தொடர்ந்து அறிவிக்கின்றது. மரியாவினுடைய எளிமையோடு இணைந்த இந்த நம்பிக்கை அவருடைய தாய்மையினுடைய மதிப்பின் சிறப்பையும், அவருடைய தனிப்பட்ட புனிதத்துவத்தையும் உறுதிப்படுத்துவதில் முன்னோக்கி இட்டுச் சென்றிருக்கின்றது.
மரியாவின் மறைபொருள்
ஒவ்வொரு கிறித்தவனையும் கிறிஸ்துவினுடைய தாய் பற்றி நற்செய்தி வெளிப்பாடு என்ன உறுதிப்படுத்துகின்றதோ அதை திரு அவையோடு இணைந்து ‘அவருடைய உள்ளத்தில் இருத்திச் சிந்திப்பதற்கு’ பணிக்கிறது.
மரியாவின் புகழ்
பாடலின் (Magnificat)) அடிப்படையில்,
மரியாவின் முன்னுதாரணத்திற்குப்பின் ‘அருளால்
நிறைந்த’ அவர்
வழியாக மூவொரு இறைவனால் செய்யப்பட்ட வியக்கத்தக்க செயல்களில் மனிதனுக்கான கடவுளுடைய அன்பை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பர் மற்றும் கடவுளுடைய கருணையின் ஓர் அடையாளத்தைக் கண்டுகொள்வர்.
மூலம்:
Pope John Paul II,
Church grew in understanding of
Mary’s role, in L’Osservatore Romano, Weekly Edition in English,
15 November 1995, p.11.
நவம்பர் மாதம் இறந்தவர்களைப் பற்றி மட்டும் அல்ல; நம் இறப்பைப் பற்றிச் சிந்திக்கவும் உகந்த மாதம்.
பெரிய
விருந்துகளுக்காகக் கூடியிருக்கும்போது, நான் உடன் இருப்பவர்களிடம், “வாங்க, சாப்பிட்டுச் சாவோம்” என்று சொல்வதுண்டு. இந்தச் சாதாரண ஜோக்கிற்கு அருள்பணியாளர் நண்பர்கள் மட்டும் சிரிப்பார்கள். மற்றவர்கள் குறுகுறுவெனப் பார்ப்பார்கள்... ‘என்ன பேச்சு இது?!’ என்பது மாதிரி.
சாவு
பற்றி நாம் பொதுவாக அதிகம் பேசுவதில்லை. நம் குடும்பங்களில் பெரியவர்கள் யாராவது, ‘அடுத்த ஆண்டு நான் இருக்கின்றேனோ? இல்லையோ?’ என்று ஆரம்பித்தால், உடனே
மற்றவர்கள், ‘சும்மா இருங்கள். இது மாதிரி எல்லாம் பேசாதீர்கள்’ என்று
செல்லமாகக் கண்டிப்பதைக் கேட்டிருப்போம் (அதற்கு அர்த்தம் ‘வெறுமனே சொல்லாதீங்க, செய்து காட்டுங்கள்’ என்பது).
ஆங்கிலத்தில் ‘taboo topics’ என்று சொல்வார்கள். இறப்பு ஒரு தடை செய்யப்பட்ட தலைப்பு. அது தொடர்புடைய பேச்சுகள் ஒரு ‘தீக்குறி’
(அபசகுனம்) என்று பார்க்கப்படுகிறது.
இறப்பு
என்ற சொல்கூட நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்ல ‘காலமானார்’,
‘இயற்கை எய்தினார்’,
‘அமரரானார்’, ‘இறைவனடி
சேர்ந்தார்’ என்று
தமிழில் எத்தனை மறைமுகச் சொல்லாடல்கள்! ஆங்கிலத்திலும் இதுபோல நிறைய உள்ளன. இறப்பைப் பற்றிப் பேசாமலும், சிந்திக்காமலும், அந்தச் சொல்லை உதிர்க்காமலும் இருப்பதாலேயே, இறப்பு நமக்கு நேராமல் செய்து விடலாம் என்று மனிதன் ஆசைப்படுகிறான். இதையெல்லாம் சட்டை செய்யாமல், இறப்பு
தன் பாட்டிற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறது.
இறப்பைப்
பற்றி எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமான மன நிலை அல்ல;
அதுபோல, இறப்பை ஒரேயடியாக மறுதலித்து, அது இல்லவே இல்லை என்பதுபோல நடந்துகொள்வதும் சரியல்ல.
எல்லா
விசயங்களிலும் இயேசுதாம் நமக்கு முன்மாதிரி. இறப்பு விசயத்தில் கூட! இயேசு
தமது இறப்பைப் பற்றிச் சிந்தித்தாரா? ஆம், சிந்தித்தார். மூன்று
முறை அவர் தம் இறப்பை முன்னறிவித்தார் என்று நற்செய்திகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பு செசாரியா பகுதியில், முதல் முறையாக இயேசு தமது சாவு குறித்துச் சொன்னபோது, பேதுரு நம் வீட்டு ஆள்கள் போல, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது”
(மத் 16:22) என்று கடிந்துகொள்கிறார். ‘இது என்ன தீக்குறி பேச்சு? ஒரு தலைவர் இப்படிப் பேசலாமா?’ இயேசுவின் சாவு குறித்த உரையாடல்கள் திருத்தூதர்களை அந்தரங்கமாகப் பதற்றத்திற்கு உள்ளாக்கின. அதை அவர்கள் இரசிக்கவில்லை. ஆனால், இயேசுவின் சொல்லிலும் செயலிலும் அவரின் இறப்பு குறித்த ஒரு நிதான விழிப்புணர்வும், தயார் நிலையும் இருந்ததை நம்மால் காண முடிகிறது. “இக்கோவிலை இடித்துவிடுங்கள்; நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்று
யோவான் 2:19-இல் அவர் சொல்கிறார். மரியா, இலாமிச்சை என்னும் நறுமணத்தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதைக் கூந்தலால் துடைத்த அன்புச் செயலை, தம் இறப்புக்கான தயாரிப்பு என விளக்கினார். “மரியாவைத்
தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்” (யோவா
12:7). விரைவில் வரவிருக்கின்ற இறப்பு குறித்த விழிப்புணர்வே அவரைத் தீயாகச் செயல்பட வைத்தது. எந்த ஓர் இடத்திலும் அவர் நிலைகொள்ளவில்லை. தேவையற்ற மனமகிழ் நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. “இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!” (லூக் 13:33) என்றார்.
திருப்பாடலாசிரியர்
இறப்பு குறித்துத் தயக்கமில்லாமல் பேசுகிறார். வாழ்வின் நிலையற்ற தன்மை குறித்த ஒரு தெளிவான எண்ணம் அவரிடம் இருந்தது. “ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன்.
என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுள்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை” என்று
திருப்பாடல் 39:4-5 சொல்கிறது. மற்றோர் இடத்தில்,
அவர் மனிதரின் வாழ்வை வயல்வெளி மலர்களுக்கு ஒப்பிடுகிறார். “மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது”
(திபா 103:15-16).
மனிதரின்
ஆயுள் குறித்து ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பாடல் ஆசிரியர் சொன்னது, இந்த நவீன மருத்துவ யுகத்திற்கும் பொருந்துவது ஓர் இனிக்காத ஆச்சரியம். “எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது”
(திபா 90:10). யாரும்
சாவைத் தவிர்க்க முடியாது என்பது திருப்பாடல்களில் அடிக்கடி வலியுறுத்தப்படும் ஓர் உண்மை. “என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக்கொள்பவர் எவர்?” (திபா 89:48). இந்த விரற்கடை அளவு வாழ்வு குறித்த தரிசனம்தான் திருப்பாடல் ஆசிரியரைக் கடவுளுக்குரிய செயல்களில் தீவிரமாகச் செயல்படத் தூண்டியது. இரவில் கூட அவருக்கு ஆண்டவர் குறித்த சிந்தனைதான். “நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்” (திபா
63:6).
திரு
அவையின் புனிதர்கள் எல்லாருமே இறப்பு குறித்து ஆழமாகச் சிந்தித்துள்ளார்கள். இறப்பின் நிச்சயத்தன்மை அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியிருக்கிறது.
கிறித்தவக்
கலைபடைப்புகளில் மண்டை ஓடு இறப்பின் நினைவூட்டலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலத்தீனில்
‘memento mori’ என்று சொல்வார்கள் - அதன் அர்த்தம், ‘Remember that you must die.’ குறைந்தது
ஏழு புனிதர்களின் ஓவியங்களிலாவது நாம் ஒரு மனித மண்டை ஓட்டைக் காணலாம். திருவிவிலியத்தை
இலத்தீனுக்கு மொழிபெயர்த்த புனித ஜெரோம், தனது எழுது மேசையில் ஒரு மண்டை ஓட்டை வைத்திருந்தாராம். அது அவருடைய எல்லாப் படங்களிலும் விழித்துக்கொண்டு ‘ஜம்’மென்று உட்கார்ந்துள்ளது. சில ஓவியங்களில் மகதல மரியா ஒரு மண்டை ஓட்டை மடியில் வைத்திருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார். புனித பிரான்சிஸ் அசிசியார் ஆங்கிலத்தின் ‘T’ என்கிற
எழுத்து வடிவத்தில் இருக்கும் ‘Tau’ சிலுவையைத்தான்
கையெழுத்து போல பயன்படுத்தினார். ஒருமுறை சகோதரர் லியோவுக்கு பிரான்சிஸ் எழுதிய வாழ்த்து மடலில் ‘தாவ்’ சிலுவையோடு, ஒரு மண்டை ஓட்டையும் வரைந்து கொடுத்தாராம்.
திருத்தந்தை
ஏழாம் அலெக்சாண்டர், கி.பி.1655-1667 காலகட்டத்தில்
ஆட்சி செய்தவர். உரோமையில் பேதுரு
பசிலிக்காவின் முன் உள்ள பிரமாண்டமான கல்தூண் வரிசையை (colonnade) அமைத்தவர் இவரே. அறிவாளி. எழுத்தாளர். கவிஞர். இவர் பிரபலச் சிற்பி பெர்னினியிடம் (Bernini) சொல்லி,
ஒரு சவப்பெட்டியையும், பளிங்கால் ஆன ஒரு மண்டை
ஓட்டையும் செய்து வாங்கிக்கொண்டாராம். சவப்பெட்டி அவர் படுக்கையறையில் இருந்தது. பளிங்கு மண்டை ஓடு எழுது மேசையில் உட்கார்ந்திருந்தது. அவர் திருத்தந்தையாக இருந்த காலத்தில் ஒரு வருடம் ஆண்டு தியானம் வழங்க வந்த அருள்பாணியாளர் ஏழாம் அலெக்சாண்டரிடம், “திருத்தந்தை அவர்களே, இந்தத் தியானத்தில் நான் எது குறித்துப் பேச வேண்டும்?” என்று கேட்டார். அலெக்சாண்டர்
அவரிடம், “The last four things” என்று கூறினாராம். நான்கு கடைசி விசயங்கள் என்றால் என்ன? இறப்பு, தீர்ப்பு, நரகம், விண்ணகம்!
மண்டை
ஓட்டின்மீது காதல் கொண்டிருந்த நவீன காலத் திரு அவை ஆளுமைகளில் முக்கியமானவர் முத்திப்பேறுபெற்ற ஜேம்ஸ் அல்பெரியோனே. இத்தாலி நாட்டு அருள்பணியாளர். 20-ஆம் நூற்றாண்டுக்காரர். தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் நற்செய்தி அறிவித்தலைச் சிறப்பு அழைத்தலாகக் கொண்டு செயல்படும் ஏழு பெரிய தனித்தனிச் சபைகள் கொண்ட ‘Pauline Family’ - பவுலைன் குடும்பத்தைத் தோற்றுவித்தவர். அல்பெரியோனேவின் எழுது மேசையில் எப்போதும் ஒரு மண்டை ஓடு இருந்ததாம். அல்பெரியோனே தோற்றுவித்த நிறுவனங்களில் ஒன்று, பவுலின் புதல்வியர் சபை. அண்மையில் இந்தச் சபையின் ஓர் அமெரிக்க உறுப்பினர் அருள்சகோதரி தெரசா நோபல் அலத்தெயா என்பவர் பற்றி இணையத்தில் வாசித்தேன்.
நோபல்
பதின்ம வயதில் கடவுளை நம்பாதவராக வாழ்ந்தவர். ஒரு பெரும் மனமாற்ற நிகழ்வுக்குப் பின்பு, பவுலின் புதல்வியர் சபையில் சேர்ந்து அருள்சகோதரி ஆனார். ‘Memento mori’ - சிந்தனை
அவரைக் கவர்ந்தது. தன்
நிறுவுநரின் முன்மாதிரியால் தூண்டப்பட்டு, இவரும் ஒரு பீங்கான் மண்டை ஓட்டை வாங்கி தன் மேசையில் வைத்து, இறப்பு குறித்து சிந்திக்கத் துவங்கினார். பின்னர் தன் எண்ணங்களை விளையாட்டு போல Twitter-இல் (தற்போது
X) பதிவிட,
நிறையப் பேர் பின்தொடர ஆரம்பித்தார்கள். விரைவிலேயே சிஸ்டர் நோபலின் சிந்தனைத் துண்டுகள் ஆயிரக்கணக்கான பேரால் பகிரப்பட்டு ‘வைரல்’ ஆயின. இந்த ஆர்வம் சிஸ்டர் நோபலே எதிர்பாராதது. சபையின் இதர சகோதரிகள் ஆதரவோடு நோபல் இதில் தீவிரமாக ஈடுபட்டு, ‘Memento Mori: A Lenten Devotional’, ‘Memento Mori: Prayers on the
Last Things’, ‘Memento Mori Journal’ போன்ற ஆன்மிக மற்றும் இறைவேண்டல் ஏடுகளைக் கொண்டு வந்தார். அதோடு அவர் அறிமுகப்படுத்திய மண்டை ஓடு படமும், திருவிவிலிய வார்த்தைகளும் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட், ஸ்டிக்கர்,
காஃபி குவளைகள், மோதிரங்கள் போன்றவை இளம் கிறித்தவர்கள் நடுவில் பிரபலமாகின. இன்று Memento Mori என்பது
ஒரு குறிப்பிடத்தகுந்த ஆன்மிக இயக்கமாக அங்கு வளர்ந்துள்ளது.
உண்மையான
நம்பிக்கையாளர்கள், இறப்பைக் குறித்துச் சிந்திக்க அச்சப்படத் தேவையில்லை என்று சொல்லும் அருள்சகோதரி நோபல், தனக்குப் பிடித்த திருவிவிலிய வார்த்தையாக சீராக்கின் ஞானம் 7:36-ஐ குறிப்பிடுகிறார்.
“எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்; அவ்வாறெனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்.”
மிகவும்
உண்மை!
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)