திருவிவிலியமும் திருமரபும் நமக்குப் பல நோன்புகளைக் கற்றுத்தருகின்றன. உண்ணா நோன்பு, புலால் நோன்பு, ஊடக நோன்பு, சொல் நோன்பு வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு நோன்பு உடலின்ப நோன்பு. என்ன வியப்பாய் இருக்கிறதா? திருவிவிலியத்தையும், திரு அவை வரலாற்றையும் நோக்கும்போது நம் வியப்பு மறைந்து, ஊக்கம் பிறக்கிறது.
திருமணத்தைக்
கடவுளே ஏற்படுத்தினார். எனவே, திருமணம் புனிதமானது. “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்” (எபி
13:4) என்கிறது திருமறை. இயேசுவும், “கணவனும் மனைவியும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்”
(மாற்கு 10:8) என்று திருமண உறவை ஏற்பிசைவு செய்தார்.
இறைமொழியின்
ஒளியில் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியும் திருமணத்தால் ஏற்படும் உடலுறவை ‘உயர்ந்தது, மேன்மையானது’ என்கிறது.
மேலும், திருமண உடலுறவு இன்பம் மற்றும் மகிழ்ச்சியின் ஊற்று என்றும், திருமண இணையர்கள் உடலிலும், உள்ளத்திலும் இன்பமும், மகிழ்ச்சியும் அனுபவிக்க வேண்டும் என்பது கடவுளின் ஏற்பாடு என்றும் சொல்கிறது (கதிம எண்: 2362).
இருப்பினும்,
சில வேளைகளில் தேவையை முன்னிட்டு மண இணையர்கள் உடலின்பத்தையும்
மறுக்கலாம், ஒத்திப்போடலாம். இதுவே உடலின்ப நோன்பு எனப்படுகிறது.
தொடக்க
காலக் கிறித்தவர்களுக்குப் பவுலடியார் கொடுத்த அறிவுரைகளுள் உடலின்ப மறுப்பு பற்றியும் பேசியுள்ளார். “மண வாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர்
மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக்கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால், உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி, பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்”
(1கொரி 7:5-6) என்பது அவரது வியப்புக்குரிய பரிந்துரை. எனவே, இறைவேண்டல் செய்வதற்காகவோ, தவத்தின் அடையாளமாகவோ அல்லது குறிப்பிட்ட தேவைக்காக மன்றாடும்போது, ஒரு தியாகமாகவோ இருவரும் மனமொத்து உடலின்ப நோன்பைக் கடைப்பிடிப்பது சிறப்பானது.
தோபித்து
நூலில் இத்தகைய ஒரு காட்சியைக் காண்கிறோம். இரகுவேலின் மகளான சாரா ஏழு முறை திருமணமாகி, முதலிரவிலேயே அசுமதேயு என்னும் அலகை மணமகனைக் கொன்றுவிடுவதால், ஏழு முறையும் கைம்பெண்ணாகி விடுகிறார். இறைவனின் திருவுளத்தால் தோபித்தின் மகனான தோபியா சாராவைத் திருமணம் செய்ய முன்வருகிறார். ஆனால், இதற்கு முன்பு நடந்தவைகளை அறிந்ததனால், மணமக்கள் இருவரும் தங்கள் முதலிரவில் இறைவேண்டல் செய்கிறார்கள்.
“எங்கள் மூதாதையரின் இறைவா போற்றி!” என்று இறைப்புகழ்ச்சியோடு தொடங்கி, “என்மீதும், இவள்மீதும் இரக்கம் காட்டும். நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்”
என்று மன்றாட்டில் முடிக்க, இருவரும் “ஆமென், ஆமென்”
(தோபி 8:4-8) என்று இறைவேண்டலை நிறைவு செய்தனர். உடலின்பத்தைத் தியாகம் செய்து, இறைவேண்டல் செய்ததனால், கடவுள் அவர்களுக்கு நிறைவான ஆசிகளை வழங்கினார்.
திருமண
வாழ்வின் சிக்கல்கள் பற்றிய உரையாடலின்போது இயேசுவின் சீடர்கள் “கணவர்-மனைவியர் உறவுநிலை இத்தகையது என்றால், திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு இயேசு, “அருள்கொடை பெற்றவரன்றி
வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவுகொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” (மத்
19:10-12) என்றார்.
உடலின்ப
மறுப்பு ஒரு திருவிவிலிய மதிப்பீடு, இறையாட்சியின் ஓர் அடையாளம். “உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள்” (மத்
22:30) என்பது இயேசுவின் கூற்று.
இத்தாலியிலுள்ள
பொம்பெயி செபமாலை அன்னை திருத்தலத்தைத் தோற்றுவித்து, பேராலயமாகக் கட்டியெழுப்பி, அதைத் திருத்தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, இறுதிவரையில் செபமாலை பக்தியைப் பரப்பியவர் பர்த்தோலோ லோங்கோ என்னும் பொதுநிலையினர். தன் இளம் வயதில் வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு, மரியன்னை பக்தியைப் பரப்பும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கைம்பெண்ணான சீமாட்டி மரியானா. இருவரையும் பற்றித் தவறான செய்திகள் பரவியபோது, திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களின் அறிவுரையின்படி 1885 -ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமண உறவில் ஈடுபடாமல், கற்பு நிலையைக் கடைப்பிடித்தனர் என்னும் வியப்பான செய்தியை அவர்களது வரலாறு பதிவு செய்துள்ளது. 1980 -ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் பர்த்தோலோ லோங்கோவை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
இறையாட்சியின்
பொருட்டு உடலின்பத்தைத் துறக்கும் துறவியர், அருள்பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அந்தப் பேற்றின் ஒரு பகுதியைத் திருமணம் செய்தவர்களும் உடலின்ப நோன்பின் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். தம் இறைவேண்டலும், அருள்வாழ்வும் வலிமை அடைய வேண்டுமென்றால் மண இணையர்கள் உடலின்ப
நோன்பையும் கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். “கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன்” (1பேது 5:2) செய்யும் எதையும் கடவுள் மகிழ்வுடன் ஏற்கிறார்.
இறைவேண்டல்
வலிமையடைய வேண்டுமென்றால் நோன்பை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது திருவிவிலியமும், திரு அவை மரபும் நமக்குக் கற்றுத் தரும் பாடம். தியாகமற்ற வேண்டல் வீரியம் குறைந்தது. எனவே, நமது இறைவேண்டலோடு அனைத்து நோன்புகளையும் இணைத்துக்கொள்வோமாக!
டிசம்பர் மாதம் என்றாலே நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். காரணம், நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு விழா. கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாட நான்கு வாரங்கள் நாம் தயாரிக்கிறோம். எதற்காக? ஆண்டவருடைய முதல் வருகையைப் பொருள் உணர்ந்து ஆடம்பரமாகக் கொண்டாடி, நாம் எல்லாரும் உண்மையாகவே விண்ணகம் நோக்கிய பயணத்தில் ஆர்வமாகப் பயணிப்பதற்காக.
நம்
கடவுள் வாக்கு மாறாதவர். இன்று மனிதர்கள் தாங்கள் கொடுத்த வாக்கை மீறலாம் அல்லது ஒருவர் மற்றவரை ஏமாற்றலாம். ஆனால், கடவுள் ஒருபோதும் எவரையும் ஏமாற்றக்கூடியவர் அல்லர். இஸ்ரயேல் மக்களைத் தனிப்பட்ட அன்பினால் தேர்ந்தெடுத்த ஆண்டவர், அவர்கள் பாவம் செய்த போதும் அவர்களைத் திருத்துவதற்காகவே கண்டித்தார். ‘எல்லாம் முடிந்துபோய் விட்டது; இனிமேல் வாழ்வு இல்லை’ என்று நினைத்தபொழுது இறைவாக்கினர்கள் வழியாக நம்பிக்கையின் செய்தியை ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்தார். “இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாருக்கும், யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” (எரே
33:14) என்கிறார். நமக்கும் ஆண்டவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்.
பல
வேளைகளில் நாம் மனமுடைந்து போயிருக்கலாம். ‘ஆண்டவர் மறந்துவிட்டாரோ’ என்று
நினைத்திருக்கலாம். ஆண்டவர் நம்மை மறப்பாரோ? ஒருபோதும் நம்மை அவர் மறக்கமாட்டார். “அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்” (எரே
33:15) என்கிறார் ஆண்டவர்.
நமக்கு
நிகழும் அநீதியைக் குறித்து அல்லது நேர்மை இல்லாத செயல்களைக் குறித்து நாம் கவலை கொள்ளலாம். ஆண்டவர் மெசியாவைப் பிறக்க வைக்கிறார். தாவீதிலிருந்து ஒளிர்கின்ற தளிர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதாம். அவரே நீதியை நிலைநாட்டுவார். ‘ஆண்டவர் என்னைக் கைவிடமாட்டார்; என் ஆண்டவர் நல்லவர்; என் ஆண்டவர் வல்லவர். அவரையே நம்பி இருப்பேன். தம்முடைய வாக்குறுதிகளை எனக்கு நிறைவேற்றுவார். நீதி பெருகச் செய்வார். நேர்மையை நிலைநாட்டுவார். பாதுகாப்புடன் நான் இருப்பேன்’
என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலம் நம்மை அழைக்கின்றது.
திருவருகைக்
காலத்தின் முதல் வாரத்தில் நமக்குக் கொடுக்கப்படுகின்ற செய்தி: “திகிலா? அச்சமா? உடல்நலனைக் குறித்த கவலையா? குழந்தைகளைக் குறித்த வேதனையா? ஆண்டவரைப் பற்றிக்கொண்டிரு! இதோ நாள்கள் வருகின்றன. நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்” என்று
சொல்கிறார் ஆண்டவர்.
இரண்டாவது
செய்தி, முதல் மூன்று வாரங்கள், அதாவது ஏறக்குறைய 16-ஆம் நாள் வரைக்கும் வல்லமையோடு வரப்போகும் ஆண்டவரின் இரண்டாம் வருகை குறித்து ஆவலோடு எதிர் கொள்ள எப்பொழுதும் தயாராய் இருக்க வேண்டும் என்பதாகும். இறுதித்தீர்ப்பு, உலக முடிவு, ஆண்டவரின் இரண்டாம் வருகை குறித்து நிச்சயமாகப் பலருக்கும் அச்சம் உருவாகலாம். ஏனென்றால், மானிட மகனின் வருகையின் போது, “கடலில் கொந்தளிப்பு ஏற்படும்; மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்; வான்வெளிக்கோள்கள் அதிரும்; இயற்கையில் சீற்றங்கள் ஏற்படும்”
என்றெல்லாம் நற்செய்தியாளர் லூக்கா சொல்கிறார் (லூக் 21:25,26).
ஆனால்,
கடவுளைப் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு
அவர் சொல்லும் செய்தி, “நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” (லூக்
21:28) என்பதே. கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் நல்லதை மட்டுமே செய்வார். எனவே, அன்றாடக் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். இவர்களே ஆண்டவர் வரும் வேளையில் தலைநிமிர்ந்து நிற்பவர். அவர்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடங்களைச் செய்த குழந்தைகள் ஆசிரியர்களைக் கண்டு அச்சப்படாமல் இருப்பதுபோல, குடும்பங்களில் அன்பைப் பேணுதல், பிள்ளைகளை நன்றாக வளர்த்தல், முதியோரைப் பராமரித்தல் போன்ற அன்றாடக் கடமைகளைச் செய்யும்போது இறுதி நாளைக் குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.
எனவே,
“உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என
எச்சரிக்கும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்”
(லூக் 21:34-35) என்கிறார்.
இன்று
அலைப்பேசியின் பயன்பாட்டால் அருகில் இருப்பவர்களோடு உரையாட மறந்துவிடுகிறோம். இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையால் அமைதியை இழந்துவிடுகிறோம். தேவைகளைப் பெருக்கிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
இன்று
மூன்று செயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க ஆண்டவர் அழைப்பு விடுக்கிறார்:
1. குடிவெறி,
2. களியாட்டம், 3. உலகைப் பற்றிய கவலை. இதற்கு மாற்றாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று செயல்கள்: 1. விழித்திரு, 2. செபித்திரு, 3, ஆண்டவருக்காய் ஆவலுடன் காத்திரு என்பதாகும். அதாவது நம் குழந்தைகளைக் குறித்தும், வாழும் வாழ்க்கை முறையைக் குறித்தும் எப்பொழுதும் விழிப்பாய் இருக்க வேண்டும். இயேசு தம் வாழ்நாளில் செபத்திற்கு நேரத்தை ஒதுக்கியதுபோல, நாமும் செபத்திற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். செபமின்றி வெற்றி இல்லை!
“இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் குற்றமின்றி தூய்மையாக இருக்கவேண்டும். கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும்”
(1தெச 3:12; 4:1). தூய்மையான உள்ளத்தோடு அவருக்காகக் காத்திருக்க வேண்டும். எனவே, கடவுள் நம்மேல் அன்பாய் இருப்பது போல, நாமும் ஒருவர் மற்றவர்மேல் அன்பாய் இருப்போம். நம்மைச் சந்திக்க வரும் ஆண்டவரை அவருக்குகந்த வாழ்க்கையோடு, அன்பு நிறைந்த செயல்களோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடு அவரைச் சந்திக்க விழிப்புடன் காத்திருப்போம்.
“எனக்குச் சாப்பாடு வேண்டாம்” எனச் சொல்லி விட்டுப் படுத்திருக்கிறார் அந்தக் காவல்துறை அதிகாரி. அவரது மனைவி வந்து அருகில் அமர்ந்துகொண்டு, “ஏனுங்க சாப்பாடு வேண்டாம்?” எனக் கேட்கிறார்.
“எனக்குப் பசியில்ல”
என்கிறார் அதிகாரி.
“என்ன நடந்தது? சொல்லுங்க?”
“நம்ம வீட்டுக்குப் பக்கத்துல அவ்வளவு இடம் சும்மாதானே கெடக்குது? அந்த ஆள் அதை நமக்கு வித்தான்னா, இந்த வீட்டை இன்னும் கொஞ்சம் எக்ஸ்டென்ட் பண்ணி பெருசாக்கலாம். ஒரு ஸ்விம்மிங் பூல் கட்டலாம்னு நெனச்சேன்.”
“சரி. அந்த ஆள் கிட்ட பேசினீங்களா?”
“பேசினேன். விலை எவ்வளவு சொன்னாலும் நான் வாங்கிக்குறேன். ஒயிட்ல வேணும்னாலும் தர்றேன், பிளாக்ல வேணும்னாலும் தர்றேன்னெல்லாம் சொல்லிப் பார்த்தேன்.”
“என்ன சொன்னான் அந்த ஆளு?”
“விக்க முடியாதுன்னுட்டான். அவங்க அப்பா ஆசையா வாங்கிப் போட்டதாம். யாருக்கும் வித்துடாதேன்னு சொல்வாராம். அவங்க அப்பா பேருல வீடு கட்டப் போறானாம். பணத்துக்காகக் காத்திருக்கானாம். கிடைச்சதும் வீடு கட்டுற வேலையை ஆரம்பிச்சுடுவானாம்.”
“அந்த ஏமாற்றத்துலயும், கோபத்துலயும் வந்து படுத்துக்கிட்டு ‘எனக்குச் சாப்பாடு வேண்டாம், எனக்குப் பசி இல்லை’ன்னு கதை விடுறீங்க. நீங்க யாருன்றது உங்களுக்கு நினைவிருக்கா? எவ்வளவு பெரிய காவல்துறை அதிகாரி. நீங்க நினைச்சா அந்த ஆளை என்ன வேணும்னாலும் செய்யலாம். ஏதாவது பொய்க் கேசைப் போட்டு ஆள உள்ள தள்ளுங்க.
பொய்க் கேசு போடுறதுக்குப் போலீஸ்காரங்களுக்குச் சொல்லியா தரனும்? உள்ளே தள்ளக் கூட வேணாம்; உள்ள தள்ளிடுவேன்னு பயமுறுத்துங்க. தானா வழிக்கு வந்துருவான்” என்கிறார்
மனைவி.
காவல்துறை
அதிகாரி மனைவியை வெறித்துப் பார்க்கிறார். என்ன சொல்வதென்று புரியவில்லை. ‘நேர்மையான, நல்ல அதிகாரி என்று பெயரெடுத்திருக்கிறேன். மனைவி சொல்வது போல செய்யலாமா?’ என்றெல்லாம் யோசித்துக் குழம்புகிறார்.
அவருக்கு
யார் வழிகாட்ட முடியும்? இந்த வேளையில் அவருக்குத் தேவைப்படும் ஞானத்தை அவர் எங்கிருந்து பெற முடியும்?
அந்தப்
பெண் கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்த பெண் அல்ல; தனது சூழலை உற்றுப்பார்த்து, பல ஆண்களோடு ஒப்பிட்டு,
மிக நல்லவர் என்று உணர்ந்தே காதலித்தவர். காதலித்தவரைக் கரம் பற்றி, வாழும் காலமெல்லாம் அவரோடு வாழவேண்டும் என்று உறுதிபூண்ட இப்பெண், தன் குடும்பமே அதற்குத் தடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
என்ன
சொல்லி அவரது குடும்பம் அவரின் திருமணத்தைத் தடுக்கப் பார்த்தது?
‘அவரது இனம் வேறு, நமது இனம் வேறு.’
இனம்
வேறாக இருந்தால் என்ன? குணத்தை அல்லவா பார்க்க வேண்டும்? அவரின் மனத்தை அல்லவா ஆய்வு செய்ய வேண்டும்? வேற்று இனத்தவர் நல்லவராக இருக்க இயலாதா? தன்னைப் புரிந்துகொள்ளாத, தன் விருப்பத்தை மதிக்காத, தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் உரிமை தனக்குண்டு என்பதை ஏற்காத தன் குடும்பத்தை உதறி ஒதுக்கிவிட்டு, தான் தேர்ந்துகொண்ட ஆணையே துணிவோடு மணந்துகொள்கிறார் அந்தப் பெண்.
அவர்களின்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும், மன நிறைவும் மிகுந்ததாக
அமைகிறது. கணவனின் தாய் தன் சொந்த மகளைப் போலவே அவரை நடத்துகிறார். தன் தாய்கூட தன்னை இத்தனை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொண்டதில்லை என்று அவளுக்குத் தோன்றியது. மாமனார் இறந்து இத்தனை ஆண்டுகள் துணையில்லாத் தனிமையில், தன் அன்பு மாமியார் வாழ்வது இவள் மனத்தை உறுத்தியது.
திருமணம்
முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பிள்ளை இல்லையே என்ற மனக்குறை தவிர, எதிர் மறையாய் எதுவும் இல்லை. திடீரென்று இடி விழுந்தது போன்று அந்தச் செய்தி வந்தது. ஒரு சாலை விபத்தில் அவளது கணவன் இறந்து விட்டான். அந்தப் பெரும் துயரினின்று மீள அவளுக்குப் பேருதவியாக இருந்தது மாமியாரின் அன்பு.
மகன்
இறந்ததால் மருமகளின் வாழ்வு இருண்டு போகத் தேவையில்லை. அவளுக்கு வயதிருக்கிறது. அழகிருக்கிறது. நடந்ததை மறந்து மற்றொரு திருமணம் செய்துகொண்டு அவள் மகிழ்ச்சியோடு வாழ முடியும். அத்திருமணத்தில் அவளுக்குப் பிள்ளைகள் பிறக்கலாம். தாயும், பிள்ளைகளுமாய் அவள் வாழ்வு தொடரலாம் என்பதை உணர்ந்ததும் மருமகளைத் தன் சொந்த ஊருக்குத் திரும்பச் சொன்னார் மாமியார். அவளது சொந்தங்கள் அவளை ஏற்றுக்கொண்டு அவளது மறுமணத்திற்கான முயற்சிகளைச் செய்யலாம் என்று அவர் நினைத்தார். பல்லாண்டுகளுக்கு முன் தன் கணவரை இழந்துவிட்ட தன் மாமியார் இப்போது தன் மகனையும் இழந்து தனி மரமாய் ஆகிவிட்டதை உணர்ந்த மருமகளின் மனத்தில் குழப்பம். மாமியாரைத் தன்னந்தனியாய் விட்டுவிட்டு புது வாழ்வு தேடிப் போகலாமா? தன்மீது இத்தனை அன்பு காட்டிய மாமியாரை இந்நிலையில் விட்டுவிட்டுப் போவது சரிதானா? அவள் குழம்பினாள்.
அவளுக்கு
யார் வழிகாட்ட முடியும்? இந்த வேளையில் அவளுக்குத் தேவைப்படும் ஞானத்தை அவள் எங்கிருந்து பெற முடியும்?
உங்கள்
நண்பர் ஒரு முக்கியமான காரியத்திற்காக மனமுருகி இறைவனை வேண்டுகிறார். அவர் கேட்டதைக் கடவுள் தர வேண்டும் என்று
விரும்புகிறார். என்ன செய்தால் அவரின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, கடவுள் அவர் கேட்டதைக் கண்டிப்பாகத் தருவார் என்று யோசிக்கிறார்.
“இதை மட்டும் செஞ்சு கொடுங்கய்யா. பத்து பவுன்ல உங்களுக்கு மோதிரம் போடுறேன். எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த வேலையை நீங்க செஞ்சு கொடுத்த இரண்டாவது நாளில், நான் உங்க கைவிரல்ல மோதிரத்தை மாட்டுறேன்” என்று
சொன்னதும், அந்த அரசியல்வாதி உடனே அவர் கேட்டதைச் செய்ததும் நினைவுக்கு வருகிறது.
அதே
உத்தியைக் கடவுளிடமும் பயன்படுத்தினால் என்ன என்று உங்கள் நண்பருக்குத் தோன்றுகிறது. அதே வேளையில், “இவர்கள் மனிதர்கள். நான் வேண்டுவது கடவுளிடம். கடவுளுக்கு நாம் என்ன பெரிதாய்ச் செய்துவிட முடியும்?” என்று குழம்புகிறார்.
உங்கள்
நண்பருக்கு யார் வழிகாட்ட முடியும்? இந்த வேளையில் அவருக்குத் தேவைப்படும் ஞானத்தை அவர் எங்கிருந்து பெற முடியும்?
மனைவியின்
பேச்சைக் கேட்கலாமா? கூடாதா? என்று குழம்பும் காவல்துறை அதிகாரியும் சரி; இந்த வயதில் - இந்த நிலையில் மாமியாரைத் தனியே விட்டுவிட்டுச் சொந்தங்களைத் தேடிப் போய்விடலாமா? கூடாதா? என்று குழம்பும் மருமகளும் சரி; கடவுளுக்கு ஏதாவது செய்வதாக, ஏதாவது தருவதாக வாக்களிக்கலாமா? கூடாதா? என்று குழம்பும் உங்கள் நண்பரும் சரி, இவர்கள் எங்கும் போக வேண்டியது இல்லை.
இத்தகைய
தருணங்களில் அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஞானியைத் தேடி அவர்கள் அலைய வேண்டியதில்லை. அவர்களுக்குத் தேவைப்படும் ஞானம் நம் வீட்டில் இருக்கிற, நம் மேஜையில் இருக்கிற திருவிவிலியத்தில் இருக்கிறது.
நாம்
செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் புகட்டும் ஞானம் திருவிவிலியத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து, நம்பி அதைக் கவனமாகப் படிக்க வேண்டியதுதான்.
திருவிவிலியத்தில்
எப்பகுதியைக் கவனமாகப் படித்து, யோசித்து இருந்தால் காவல்துறை அதிகாரியின் குழப்பம் தீர்ந்திருக்கும்? அந்த வேளையில் அவருக்குத் தேவைப்பட்ட ஞானம் திருவிவிலியத்தில் எங்கு இருக்கிறது? 1அரசர்கள் 29-இல் நாம் காணும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் மனைவியும், காவல்துறை அதிகாரியின் மனைவியைப் போன்றவர்தான். ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்ற எந்த அக்கிரமத்தையும் செய்யத் தயங்காதவர். அவர் பெயர் ஈசபேல். ஆங்கிலத்தில் ஜெசபெல்.
நாபோத்து
எனும் சாதாரண குடிமகனின் திராட்சைத் தோட்டம் ஆகாபின் அரண்மனைக்கு அருகில் உள்ளது. அந்தத் தோட்டத்தைத் தனக்கு விற்று விடுமாறு நாபோத்துவிடம் கேட்கிறான் ஆகாப். கேட்டது அரசனே என்றாலும், ‘இந்தத் திராட்சைத் தோட்டம் என் மூதாதையரின் உரிமைச் சொத்து’ எனச் சொல்லி நாபோத்து மறுத்துவிட, ‘உணவு வேண்டாம்’
எனச் சொல்லி படுத்திருக்கிறான் அரசன். அவனது மனைவி ஈசபேல் நடந்ததை எல்லாம் கேட்டுவிட்டு, “எழுந்து உணவருந்தி மகிழ்ந்திருங்கள். அந்தத் திராட்சைத் தோட்டத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்று
சொல்கிறாள்.
நகரில்
செல்வாக்கு மிக்க மனிதர்களுக்கு அரசனின் முத்திரையோடு கடிதம் எழுதி நாபோத்துவின்மீது பொய்ப் பழி சுமத்தி, கல்லால் எறிந்து அவனைக் கொல்லச் சொல்கிறாள். தோட்டத்தின் உரிமையாளன் இறந்து விட்டதால் அது அரசன் ஆகாபுக்குச் சொந்தமாகி விடுகிறது. மனைவியின் தீய அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்த அரசன் ஆகாபிற்கும், அவனை அப்படி வழி நடத்திய ஈசபேலுக்கும் என்ன நிகழ்கிறது என்பதைப் படித்திருந்தால் காவல்துறை அதிகாரி சுதாரித்துக் கொண்டு மனைவியின் பேச்சைக் கேட்க உறுதியாய் மறுத்திருப்பார்.
மாமியாரைத்
தனியே விட்டுவிட்டுப் போவதா? வேண்டாமா? என்று குழம்பித் தவித்த மருமகள் எதைப் படித்திருந்தால் குழப்பம் நீங்கி, தான் செய்ய வேண்டியதை உணர்ந்திருப்பாள்? அவளுக்கு அவ்வேளையில் தேவைப்பட்ட ஞானம் திருவிவிலியத்தின் ரூத்து நூலில் உள்ளது.
தன்னைப்
பற்றிக் கவலைப்படாமல் அவளது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சொந்தங்களைத் தேடிப் போகச் சொல்லும் மாமியார் நகோமியிடம் கணவனை இழந்த மருமகள் ரூத்து என்ன சொல்கிறார்? “உம்மோடு வராமல், உம்மைப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன். சாவிலும் உம்மை விட்டு நான் பிரியேன்”
என்கிறார் (ரூத்து 1:6-17).
ரூத்து
எனும் அந்த மருமகளுக்குக் கிடைத்த ஆசிகளையும், புதிய வாழ்வையும் கவனமாகப் படித்தால் இந்த மருமகளுக்கு என்ன செய்வது என்று புரிந்துவிடும்.
கடவுளுக்கு
ஏதாவது தருவதாக உறுதி அளிப்பது சரியா? தவறா? என்று குழம்பும் உங்கள் நண்பருக்குத் தேவையான ஞானம் திருவிவிலியத்தில் எங்கிருக்கிறது? நீதித் தலைவர்கள் 11-இல் இருக்கிறது.
இஸ்ரயேலுக்குத்
தலைமை தாங்கி அம்மோனியருக்கு எதிராக அவர்களை வழிநடத்தும் இப்தா (ஆங்கிலத்தில் ஜெப்தா) கடவுளிடம் என்ன வாக்களிக்கிறான்? ‘போரில் வெற்றி கிடைத்தால் தன் வீட்டில் இருந்து முதலில் யார் வருகிறார்களோ, அவரை எரித்துப் பலியிடுவேன்’ என்று
கடவுளிடம் வாக்களிக்கிறான். போரில் பெரும் வெற்றி கிடைக்கிறது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய தனது தந்தை இப்தாவைப் பாராட்ட அவரது ஒரே மகள் ஆடிப் பாடிக் கொண்டு வருகிறாள். ஏற்கெனவே கடவுளுக்கு வாக்குக் கொடுத்து விட்டதால் தன் ஒரே மகளை எரித்துப் பலியிடும் அவலத்திற்கு இப்தா ஆளாகிறான்.
அதற்குக்
காரணம் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் கேட்க மறந்த கேள்விகளை உங்கள் நண்பர் கேட்க வேண்டும். மனிதர்களைப் போல செயல்படுபவரா கடவுள்? ‘நான் உனக்கு இதைச் செய்ய வேண்டுமானால், நீ எனக்கு இதைத்
தர வேண்டும்’
என்று மூன்றாம்தர அரசியல்வாதிகளைப் போல பேரம் பேசுபவரா கடவுள்? அன்பே உருவான இறைத்தந்தை, தாம் படைத்த மனிதர்களைப் பலி கேட்பாரா? தமக்காகத் தம் பெயரால் மனிதர்கள் கொல்லப்பட வேண்டும் என்று இறைத்தந்தை விரும்புவாரா?
வாழ்வின்
பல்வேறு கட்டங்களில் நமக்குத் தேவைப்படும் ஞானம் திருவிவிலியம் முழுவதிலும் மறைந்திருக்கிறது - நிலத்திற்கு அடியில் உள்ள தங்கம் போல! எந்தப் பாதையில் பயணிப்பது என்று குழம்பித் தவிக்கும் நமக்கு, திருவிவிலியம் முழுவதும் வழிகாட்டிப் பலகைகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பார்த்து, படித்து, பயணிக்க வேண்டியதுதான்.
(உங்கள்
கருத்துகளை +91
9445006852 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச் செல்வன்:
“தந்தையே, 2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்த இயேசு, தமது மீட்புச் செயலை இன்றும் அருளடையாளங்கள் வழியாகச் செய்து கொண்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னது, இந்த வாரத் திருப்பலியில் நான் ஆர்வத்தோடும் கவனத்தோடும் பங்கெடுக்கத் தூண்டுகோலாக இருந்தது.”
அருள்பணி:
“எட்வர்டு ஸ்கிலபெக்ஸ் (Edward Schillibeeckx) என்பவர்
ஒரு புகழ்பெற்ற இறையியலாளர். அவரது புத்தகங்கள் இரண்டின் தலைப்புகள் இதோ: அ) ‘அருளடையாளங்களில் கிறிஸ்துவைச் சந்தித்தல்’ (The Sacraments as an Encounter with
Christ). ஆ) ‘கிறிஸ்து: கடவுளைச் சந்திப்பதற்கான அருளடையாளம்’ (Christ, the Sacrament of the Encounter
with God). இந்த
இரு தலைப்புகளையும் கூர்ந்துநோக்கினால் ஓர் உண்மை புலப்படும். அருளடையாளங்களை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும்போது நாம் கிறிஸ்துவைச் சந்திக்கிறோம். கிறிஸ்துவைச் சந்திப்பது என்பது கடவுளைச் சந்திப்பதாகும்.”
அகஸ்டின்:
“தந்தையே, நீங்கள் சொன்ன இந்தக் கருத்தைப் பற்றி என் நண்பர்களோடு நான் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதாவது நம் எல்லா வழிபாடுகளின் மையம் அங்குக் குடியிருக்கின்ற கிறிஸ்துவின் பிரசன்னம் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பன் ஒருவன், ‘அகஸ்டின், இதை நீ நம்புகிறாயா? 2000 ஆண்டுகளுக்கு முன்பு
இயேசு கிறிஸ்து இருந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இப்பொழுது ஆலயத்தில் இருக்கிறார் என்று சொல்வதை உன் அறிவு ஏற்றுக் கொள்கிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டான். அவனுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.”
கிறிஸ்டினா:
“என் தோழிகளுக்கும் எனக்கும் இதே சந்தேகம் இருக்கிறது தந்தையே! ஆலயத்திலும், அருளடையாளக் கொண்டாட்டங்களிலும் கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார் என்று சொல்வது எங்கள் அறிவுக்குப் புறம்பானதாகத் தெரிகிறது.”
மார்த்தா: “இப்படித்தான் பாதர்! இவங்க இரண்டு பேரும் சேரக்கூடாத சேர்க்கைகளோடு சேர்ந்து, கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டு, செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கிறாங்க. ‘கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?’, ‘கிறிஸ்து நற்கருணையில் இருக்கிறாரா?’ போன்ற குதர்க்கமான கேள்விகளை, யாரோ நாத்திகத்தனமாகக் கேட்கிறதை இவர்களும் நம்பி, அதே கேள்விகளைக் கேட்டு கோவிலுக்கு வருவதற்குத் தயங்குறாங்க. மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஏன் பாதர் அறிவை நுழைக்கிறாங்க? சொல்லிக் கொடுப்பனவற்றை அப்படியே நம்பிவிட்டுப் போவதுதானே!”
அருள்பணி:
“அகஸ்டின், கிறிஸ்டினா... நீங்க இரண்டு பேரும் இங்கு நாம் விவாதிக்கும் கருத்துகளை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு, அது குறித்த கேள்விகளை எழுப்புவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உங்களிடம் இருக்கின்ற தேடலையும், திறந்த மன நிலையையும், ஆர்வத்தையும்
சுட்டிக் காண்பிக்கிறது. இத்தகைய தேடலும் திறந்த மனமும், ஆர்வமும் இறைவனை உணர்வதற்கான அடிப்படைக் காரணிகள்!”
மார்த்தா:
“என்ன பாதர் சொல்றீங்க! மதம் குறித்த நம்பிக்கைகளை இவர்கள் கேள்விக்குட்படுத்துவதைச் சரி என்று சொல்கிறீர்களா?”
அருள்பணி:
“மார்த்தா, ஆன்மிகத்தைப் பொறுத்த அளவில், நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டவற்றை அப்படியே கண்மூடித்தனமாக நம்புவதை நாம் ‘சரி’ என்று சொல்லிவிட முடியாது. அது ஒருவிதமான மூடநம்பிக்கைக்கு (fideism) இட்டுச் சென்றுவிடும். அறிவிற்கு இடம் கொடுக்காத நம்பிக்கை விரைவில் மூடநம்பிக்கையாக மாறிவிடும். எனவே, ஒருசில கேள்விகளை எழுப்புவது நல்லது. அது நம் வழிபாட்டு நிகழ்வுகளைக் குறித்த தெளிவுகளை நாம் பெற உதவும்.”
அன்புச் செல்வன்:
“ஒரு கிரேக்கக் கதை என் ஞாபகத்திற்கு வருகிறது தந்தையே! ஹோமர் என்ற உலகப் புகழ்பெற்ற கிரேக்க எழுத்தாளர் தனது ‘ஒடிசி’
(Odyssey) என்ற
புத்தகத்தில் இக்கதையை எழுதுகிறார். கிரேக்கர்கள் ட்ராய் (Troy) என்கின்ற
நகரை வெற்றிகொள்வதற்காக அதை முற்றுகையிட்டனர். ஆனால், ட்ராய் நகரைச் சுற்றி இருந்த கோட்டை மிகவும் வலுவானதாக இருந்ததன் காரணமாக, கிரேக்கர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக இந்த முற்றுகை தொடர்ந்தது. இச்சூழ்நிலையில், கிரேக்கப் படை ஒரு சூழ்ச்சி செய்தது. ட்ராய் நகரத்தவரின் கடவுள் நம்பிக்கையைத் தங்களது சார்பாகப் பயன்படுத்த முடிவெடுத்தது. ஒரு பெரிய மரக்குதிரையைச் செய்து, அதற்குள் கிரேக்கப் படைவீரர்கள் ஒரு சிலரை வைத்து மூடினர். அக்குதிரையின்மீது ‘கடவுளின் கொடை’ என்கின்ற வார்த்தைகளை எழுதி, ட்ராய் நகர வாயிலின் அருகில் ஓரிரவு வைத்து விட்டு, கிரேக்கப் படையினர் பின்வாங்கிவிட்டனர். மறுநாள் காலை ட்ராய் நகர காவல்வீரர்கள் எதிரிகளின் படை பின்வாங்கியிருப்பதையும், கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகே பெரிய மரக்குதிரை இருப்பதையும் பார்த்தனர். தங்களது தெய்வம்தான் எதிரிகளைப் பின்வாங்கச் செய்ததோடு, மரக்குதிரையைக் கொடையாக வானிலிருந்து அனுப்பியிருக்கிறது என்று நம்பினர். எனவே, மேளதாளத்துடனும், ஆரவாரத்துடனும் அக்குதிரையைத் தங்களது நகருக்குள் எடுத்துச் சென்றனர். இரவில் ட்ராய் நகர மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், மரக்குதிரைக்குள் இருந்த கிரேக்கப் படைவீரர்கள் வெளியே வந்து கோட்டையின் கதவுகளைத் திறக்க, கிரேக்கப் படை ட்ராய் நகரத்துக்குள் புகுந்தது. அந்நகர் தீக்கிரையாக்கப்பட்டது.”
அருள்பணி:
“மனித உறவாக இருந்தாலும் சரி, கடவுள் உறவாக இருந்தாலும் சரி, அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பாராமல் அப்படியே நம்புவது சரியானதாக இருக்க முடியாது.”
கிறிஸ்டினா:
“தந்தையே, நீங்கள் எங்கள் பக்கம்!”
அருள்பணி:
“அதேநேரத்தில், எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, அதற்கு அறிவுப்பூர்வமான, தீர்க்கமான பதில்கள் கிடைத்தால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்கின்ற அணுகுமுறையும் சரியானதாக இருக்க முடியாது.”
அகஸ்டின்:
“அதில் உள்ள பிரச்சினை என்ன தந்தையே?”
அருள்பணி:
“இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் நாம் நம் அறிவின் உதவியோடுதான் புரிந்துகொள்கிறோம். பிரச்சினை என்னவென்றால் நம் அறிவுக்கு எல்லைகளும் வரையறைகளும் உண்டு. வாழ்க்கை என்பது அறிவை விட மேலானது. வாழ்க்கை என்கின்ற மிகப்பெரிய கட்டடத்தில், அறிவு என்பது ஓர் அறை மட்டுமே! எனவே, நம் மனத்தால் எல்லாவற்றையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மிகமும் சரி, உறவுகளும் சரி, நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றை அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்கின்ற அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
(தொடரும்)
நமது இறைவேண்டல் வலிமை பெற வேண்டுமென்றால், நாம் நோன்பிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உண்ணா நோன்பு, புலால் நோன்பு, ஊடக நோன்பு இவற்றோடு நாம் இணைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு நோன்பு ‘சொல் நோன்பு’. நமது பேச்சில் நாம் கையாளும் தன் கட்டுப்பாடு, விழிப்புணர்வு, தியாகத்தையே ‘சொல் நோன்பு’ என அழைக்கிறோம்.
திருவிவிலியம்
சொற்களின் வலிமையைப் பற்றி நிறையச் சொல்கின்றது. குறிப்பாக, பழைய ஏற்பாட்டில் சீராக்கின் ஞானநூல் பேச்சின் ஆற்றலை எடுத்துரைக்கிறது. “சொல் மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்”
(சீஞா 27:7) என்பது அருமையான செய்தி.
“குறைவாகப் பேசுபவரே ஞானிகள்” என்னும் பார்வையை இந்நூலின் பல இடங்களில் பார்க்கிறோம்.
“மக்கள் தலைவர் தம் பேச்சைக் கொண்டே ஞானியாய் மதிக்கப்படுகிறார். வாயாடியைக் கண்டு அவர்களின் நகரத்தார் அஞ்சுவர். உளறு வாயரை ஊரார் வெறுப்பர்”
(சீஞா 9:17-18); “அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர். வாயாடிகள் வெறுப்புக்கு ஆளாகின்றனர்” (சீஞா
20:5); “அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர். நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர்”
(சீஞா 21:25); “அறிவிலார் சிந்திக்கும் முன் பேசுவர். அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்” (சீஞா
21:26); “எதைப் பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருப்போரும் உண்டு. எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய் அமைதி காப்போரும் உண்டு”
(சீஞா 20:6) ஆகிய இறைமொழிகள் குறைவாகப் பேச வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.
நமது
பேச்சில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்?
“திறந்த உள்ளத்துடன் எல்லாரிடமும் பேசாதே”
(சீஞா 8:19); “மற்றவருக்குச் செவிசாய்க்குமுன்பே, மறுமொழி சொல்லாதே. அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே”
(சீஞா 11:8); “உனக்குத் தெரிந்தால் மறுமொழி கூறு. இல்லையேல், வாயை மூடிக்கொள்” (சீஞா
5:12); “உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே. சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்து விடாது”
(சீஞா 19:7); “விரைந்து செவிசாய், பொறுத்திருந்து விடை கூறு”
(சீஞா 4:23) என்று அறிவுறுத்துகிறது சீராக்கின் ஞானநூல்.
ஞானம்
நிறைந்த இறைமகன் இயேசு, சொற்களின் வலிமையை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, சொற்களைப் பற்றி அவர் தெளிவாகப் போதித்தார். “மரத்தை அதன் கனியால் அறியலாம். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்”
(மத் 12:34); “மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்”
(மத் 12:36); “உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்;… குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்” (மத்
12:37). எனவே, “நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகிறது”
(மத் 5:37).
இயேசுவின்
அடிச்சுவட்டில் நடந்த பவுலடியாரும் சொற்களில் கவனம் கொள்ளுமாறு தொடக்கத் திரு அவையினருக்கு அறிவுரை பகர்ந்தார். “மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை”
(எபே 5:4) என்றார். “கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி தேவைக்கேற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்”
(எபே 4:29) என்று பணித்தார். “யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலம் தரும் வார்த்தைகளைப் பேசு”
(தீத் 2:8) என்றார்.
சொற்களின்
வலிமையைப் பற்றி ஆழமாகப் பேசிய மற்றொரு புதிய ஏற்பாட்டு எழுத்தாளர் திருத்தூதர் யாக்கோபு. “நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது. சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே. கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. போற்றலும், தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது” (யாக்
3:8-10) என்றார் யாக்கோபு.
புனித
வாழ்வுக்குப் பேச்சைக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்த எல்லாப் புனிதர்களும், துறவியரும் பேச்சைக் குறைத்து, உழைப்பில் ஈடுபட்டனர்.
உளவியல்
பார்வையிலும் அதிகமாகப் பேசுவது ஆணவம், தன்னை முன்னிலைப்படுத்துதல், உயர்வு மனநிலை ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. குறைவாகப்
பேசுவது எளிமை, பணிவு, தன் ஆய்வு, தன்னறிவு போன்றவற்றின் வெளிப்பாடாகிறது.
வாழ்வியல்
பார்வையிலும் இன்று நாம் ஒலி மாசு (noise pollution) பற்றிய விழிப்புணர்வு பெற்றுள்ளோம். வாகனங்களின் இரைச்சல், விழாக்கள், வழிபாடுகளின்போது ஏற்படும் பேரொலி போன்றவை நமது உடலுக்கும், மனத்துக்கும் தீங்கு விளைவிக்கின்றன. ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு ஒலி அளவைக் குறைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
எனவே,
வெள்ளிக்கிழமை தோறும் உண்ணா நோன்பு, புலால் நோன்பு, ஊடக நோன்பு இவற்றுடன் சொல் நோன்பையும் கடைப்பிடிப்போமாக. பேச்சைக் குறைத்து, அமைதி காப்போம். பண்பற்ற, தேவையற்ற, காயப்படுத்துகின்ற சொற்களை அறவே தவிர்ப்போம். இனிய, பயனுள்ள, ஊக்குவிக்கும் சொற்களை அன்று முழுவதும் பயன்படுத்துவோம்.
“அமைதியின் கனியே இறைவேண்டல்” என்றார்
அன்னை தெரேசா. சொல் நோன்பு நம் இறைவேண்டலை மட்டுமல்ல; நம் உறவுகளையும், வாழ்வையுமே மேம்படுத்தும் என்பது அனுபவம் கற்றுத் தரும் பாடம்.
3. சிலுவையின் அடியில்
இயேசுவோடு ஒன்றித்திருந்த மரியா
(Mary
was united to Jesus on the Cross)
பல நூற்றாண்டுகளாகவே திரு அவையினுடைய பாரம்பரியமானது, ‘மரியா அவருடைய மகனின் மீட்புப் பணியை மிகவும் நெருக்கமான வகையில் பகிர்ந்து கொண்டார்’ என்ற கருத்தைப் பெரிதும் பாராட்டியது.
1. “கன்னி மரியா… உண்மையில்
கடவுளுடைய மற்றும் மீட்பருடைய தாயாகக் கௌரவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார்” (இறைத்திட்டத்தில்
திருச்சபை எண். 53) என்று சொல்லி இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மரியாவினுடைய தாய்மைக்கும் மீட்பிற்கும் இடையேயுள்ள தொடர்பை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கின்றது.
திரு
அவையினுடைய போதனையிலும், வழிபாட்டிலும் முதல் நூற்றாண்டிலிருந்தே இயேசு கிறிஸ்துவினுடைய தாயாக மற்றும் அதன் காரணமாக இறைவனின் தாயாகவும் வணங்கப்பட்ட மரியாவினுடைய தாய்மைப் பங்கு பற்றிய தெளிவிற்குப் பிறகு, இடைக்காலங்களில் திரு அவையினுடைய பக்தி மற்றும் இறையியல் சிந்தனையானது மீட்பருடைய பணியில் அவருடைய ஒத்துழைப்பை வெளிச்சமிட்டுக் காட்டியது.
இந்தக்
காலதாமதம் ஏற்பட மிக முக்கியக் காரணம் - உண்மையில் திரு அவைத் தந்தையர்களுடைய மற்றும் தொடக்க கால திருச்சங்கங்களுடைய முயற்சியானது, ‘கிறிஸ்து
யார்?’ என்பது பற்றிய விவாதத்தின் மேல் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. இதனால் மரியியல் கோட்பாடுகளினுடைய மற்றப் பண்புக்கூறுகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. திரு அவையின் தொடக்க காலத்திலிருந்தே மரியியலானது கிறித்தியத்திலிருந்தே அது பயணிக்க வேண்டிய திசையைத் தேர்ந்தெடுத்தது. இயேசு கிறிஸ்துதான் கடவுள் என்ற உண்மையை உறுதி செய்வதற்காகவே ‘மரியா இறைவனின் தாய்’ என்ற கோட்பாடானது எபேசு திருச்சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதேபோல, மீட்பின் வரலாற்றில் மரியாவினுடைய பங்கு பற்றிய அழுத்தமானதொரு புரிதலும் அன்றே இருந்தது.
2. ஏற்கெனவே,
இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, போலி கார்ப்புவினுடைய சீடராகிய புனித எரோணிமுஸ் மீட்புப் பணியில் மரியாவின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். கன்னி மரியாவினுடைய கீழ்ப்படிதலில்
புனித எரோணிமுஸ், கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்களிப்பிற்கான
அவரின் சம்மதத்தைப் புரிந்துகொண்டார். அதாவது, மனுக்குலத்தினுடைய சாபத்தின் மீதான நன்மை பயக்கக்கூடிய தாக்கத்தோடு, நாசரேத்தூர் கன்னியின் கீழ்ப்படிதலானது, ஏவாளின் கீழ்ப்படியாமை மற்றும் நம்பிக்கையின்மைக்கு முற்றிலும் எதிராக, வானதூதருடைய செய்தியில் அவர் வைத்த நம்பிக்கையில் கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்களிப்பிற்கான அவருடைய ஒப்புதலைப் புனித எரோணிமுஸ் புரிந்துகொண்டார். உண்மையில்,
ஏவாள் வழியாக இவ்வுலகில் சாவு வந்ததைப் போலவே, மரியா தன்னுடைய ‘ஆம்’ என்ற ஒப்புதலின் வழியாக அவருடைய மற்றும் மனுக்குலம் அனைத்தினுடைய ‘மீட்பின் காரணியானார்’ (ஒப்பிடுக. Adv.Haer., III, 22,4; SC 211). ஆனால், அவருக்குப்
பிறகு இந்த நிலைப்பாடானது உறுதியான மற்றும் முறையான வகையில் திரு அவையினுடைய தந்தையர்களால் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
மரியா மனுக்குலம்
அனைத்திற்குமான
ஆன்மிகத்
தாய்
இதற்கு
மாறாக, இந்தக் கோட்பாடானது ஜான் ஜெயோமீட்டர் என்ற பைசாண்டைன் திரு அவையினுடைய துறவியால் 10-வது நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘மரியாவின் வாழ்வு’ என்ற நூலில்
முதன்முறையாக முறைப்படி விளக்கப்பட்டது. இந்நூலில்
கடவுளுடைய திட்டத்திற்கிணங்க மீட்புப் பணியினுடைய அனைத்து நிலைகளிலும் நம்முடைய மீட்பிற்காக, சிலுவைச்சாவு மற்றும் இயேசுவின் துன்பங்களில் பங்கெடுத்து மரியாவும் அவரோடு இணைந்திருந்தார் என்று அவர் விவரிக்கிறார். மரியா தன்னுடைய ‘ஒவ்வொரு செயல், உளப்பாங்கு மற்றும் விருப்பத்தில்’ அவருடைய
மகனோடு இணைந்திருந்தார் (ஒப்பிடுக. Life of Mary, Bol. 196, f. 122 v). இயேசுவின் மீட்புச்
செயலோடு மரியாவுக்குள்ள தொடர்பானது அவருடைய தாய்மைநிறை அன்பினால் வந்ததாகும். அதாவது, கடவுளுடைய அருளினால் தூண்டப்பட்ட அந்த அன்பானது அவ்வருளின்மீது ஒருவகையான உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. உணர்ச்சியிலிருந்து விடுபட்ட அன்பு மிகவும் இரக்கமானது என்பதை நிரூபிக்கிறது (ஒப்பிடுக. (Life of Mary., Bol. 196, f. 123v).
3. மேற்கத்தியத்
திரு அவையில் கி.பி. 1153- இல்
இறந்த புனித பெர்னார்து என்பவர் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்விற்கு மரியியல் பார்வையில் பின்வருமானதொரு விளக்கத்தைக் கொடுக்கிறார்: “புனிதத்திற்கெல்லாம் புனிதமான கன்னியே, உம்முடைய மகனை அர்ப்பணி; உம்முடைய கனியை ஆண்டவருக்குக் கொடு; எல்லோருடனுமான எங்களுடைய அமைதிக்காகக் கடவுளுக்கு உகந்த வானகப் பலியைக் கொடு”
(Serm. 3 in Purif., 2: PL 183, 370).
புனித
பெர்னார்தினுடைய நண்பரும் சீடருமான ஜார்த்ரெஸ் நகரத்து அர்னால்டு (Arnold of Chartres) என்பவர் கல்வாரிப் பலியில் மரியாவினுடைய காணிக்கை
பற்றிய சிறப்பானதொரு விளக்கத்தைத் தருகின்றார். இவர் சிலுவையில் இருந்த ‘இரண்டு பலிபீடங்களை அதாவது மரியாவினுடைய இதயம்
ஒரு பலிபீடம்; மற்றொன்று இயேசுவினுடைய உடல். இயேசு தம்முடைய சதையைப் பலியாக்கினார்; மரியா அவருடைய ஆன்மாவைப் பலியாக்கினார்’ என்று
வேறுபடுத்திக் காட்டுகிறார். கிறிஸ்துவோடுள்ள ஆழமானதோர் உறவில் ஆன்மிக வழியில் மரியா தன்னையே கையளித்தார் மற்றும் உலக மீட்பிற்காக வேண்டினார்: “தாய் எதைக் கேட்கிறாரோ, அதை மகனும் உறுதிசெய்கிறார் மற்றும் அதையே தந்தையும் தருகிறார்” (De septem verbis Domini
in cruce, 3: PL 189, 1694).
இந்தக்
காலகட்டத்தில் மற்ற ஆசிரியர்களும் மீட்புப் பலியில் மரியாவினுடைய சிறப்பான
ஒத்துழைப்பு பற்றிய கோட்பாட்டை விவரிக்கின்றனர்.
4. அதேநேரத்தில்,
கிறித்தவ பக்தி முயற்சி மற்றும் வழிபாட்டில் மரியாவினுடைய ‘கருணை’ பற்றிய தியானச் சிந்தனையும் வியாகுல அன்னையினுடைய உருவமைப்பில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்வாரி நிகழ்விலும் மரியாவினுடைய பங்கானது
மிகவும் மனிதாபிமானமிக்கதொன்றாகச் செய்கிறது மற்றும் நம்பிக்கையாளர்களை அந்த மறைபொருளுக்குள் நுழைவதற்கு உதவுகின்றது. தாயினுடைய இரக்கம் மிகத் தெளிவாக அவருடைய மகனுடைய விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது.
கிறிஸ்துவினுடைய
மீட்புப் பணியைப் பகிர்வதன் வழியாக, மரியாவினுடைய ஆன்மிகமும்
தாய்மையும் அங்கீகரிக்கப்படுகின்றது. கிழக்கத்திய திரு அவையில் மரியா பற்றி ஜான் ஜெயோமீட்டர், ‘நீர் எங்கள் தாய்’ என்று கூறுகின்றார். ‘நமக்காக அவர் தாங்கிய துன்ப துயரங்களுக்காக’ மரியாவுக்கு
நன்றி தெரிவித்து, மீட்பைப் பெற்றுக்கொண்ட அனைவர் சார்பாகவும் மரியாவினுடைய தாய்மைநிறை
பாசத்தையும் மரியாதையையும் அவர் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார் (ஒப்பிடுக. Farewell Discourse on the Dormition of Our Most Glorious Lady,
Mother of God, in A. Wenger, L’Assomption de la Très Sainte Vierge dans la
tradition byzantine, p. 407).
மேற்கத்தியத்
திரு அவையிலும் மரியாவினுடைய ஆன்மிகத் தாய்மை பற்றிய கோட்பாடானது வளர்ச்சிபெற்று புனித அன்செல்மோவால் இவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது: “நீ ஒப்புரவு மற்றும்
ஒப்புரவாக்கப்பட்டவர்களுடைய
மீட்பின் மற்றும் மீட்கப்பட்டவர்களுடைய… தாயாக
இருக்கின்றாய்” (ஒப்பிடுக. Oratio 52, 8: PL 158, 957 A).
மரியா
இறைவனுடைய தாயாக வணக்கம் செலுத்தப்படுவது நிற்கப்போவதில்லை. மாறாக, அவர் நம்முடைய தாய் என்ற உண்மையானது அவருடனான நெருங்கியதோர் உறவிற்கான வழியை நமக்குள் ஏற்படுத்தி, அவருடைய இறைத்தாய்மைக்கான புதியதொரு பார்வையையும் மரியன்னை வணக்கமானது நமக்குத் தருகிறது.
5. நம்மைப்
பொருத்தவரை, மரியாவினுடைய தாய்மையானது பாசப்பிணைப்பை மட்டும் கொண்டதல்ல: ஏனெனில், அவருடைய நற்செயல்கள் மற்றும் பரிந்துரையின் காரணமாக மரியா சிறப்பான வகையில் நம்முடைய ஆன்மிகப் பிறப்பிற்கும், நம்மில் அருள் வாழ்வினுடைய வளர்ச்சிக்கும் உதவுகின்றார். இதன் காரணமாகவே, மரியா ‘அருளின் தாய்’ மற்றும் ‘வாழ்வின் தாய்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
வாழ்வின் தாயிடமிருந்து
நாம்
அனைவரும்
வாழ்வைப்
பெறுகிறோம்!
‘வாழ்வின் தாய்’ என்ற பெயரானது ஏற்கெனவே நீசா நகரத்துப் புனித கிரகோரி அவர்களால் அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், இது குறித்து கி.பி. 1157-இல்
இறந்த அருளாளர் இக்னி நகரத்து குவேரிக் என்பவரால் பின்வருமாறு விளக்கப்பட்டது: “மனிதர் அனைவரும் வாழ்வைப் பெறும் வாழ்வின் தாய் அவரே; இந்த வாழ்விற்கு அவரே வாழ்வு
கொடுத்து, அந்த வாழ்வை வாழ்ந்த அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் அவர் மறுபிறப்பைக் கொடுக்கின்றார். ஒரே ஒரு நபருடைய பிறப்பில், நாம் அனைவருமே மறுபடியும் பிறந்தோம்”
(In Assumpt. I, 2: PL 185,188).
13-வது
நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘மரியாளே’
(The Mariale) என்ற
ஏடானது கல்வாரியினுடைய ‘வேதனையின் வலி’ பற்றியதோர் உயிரோட்டமான படத்தைப் பயன்படுத்தி இந்த மறுபிறப்புப் பற்றிய பண்பை விவரித்தது. உண்மையில், “அவருடைய புனிதத் திருவயிற்றில், அவர் திரு
அவையின் பிள்ளைகளை இரக்கத்தினால் கருத்தரித்தார்” (Q. 29, par. 3) என்கின்றது அந்நூல்.
6. இரண்டாம்
வத்திக்கான் சங்கமானது, “மரியா முற்றிலும் தனிப்பட்ட வகையில் மீட்பருடைய பணியில் ஒத்துழைத்தார்” என்ற
முடிவுக்கு வருகிறது. “இதன் காரணமாகவே அருளின் அடிப்படையில் அவர் நமக்கொரு தாய்”
(இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 61) என்று கூறி, மனுக்குலம் அனைத்திற்குமானதோர் ஆன்மிகத் தாயாக அவருடைய மகனுக்கு அருகில் மரியா இருக்கின்றார் என்பதைத் திரு அவையானது உறுதிசெய்கின்றது.
‘மரியா நம்
தாய்’: திரு
அவையினுடைய அன்பு மற்றும் நம்பிக்கையினால் இன்னும் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்ட ஆறுதல் தரும் இந்த உண்மை, நம் அனைவருடைய ஆன்மிக வாழ்வையும் தாங்கிப்பிடித்தது. மேலும், அது இன்னும் நம் வாழ்வைத் தாங்கிப்பிடிப்பதோடு, நம்முடைய துன்ப நேரத்திலும் நாம் இறைவனில் விசுவாசமும் நம்பிக்கையும் வைக்க நம்மைத் தூண்டுகின்றது.
மூலம்:
John Paul II, Mary was united to Jesus on the Cross, in
«L’Osservatore Romano», Weekly Edition in English,
1 November 1995, p. 11.