அலைகளை எதிர்கொண்டு...
‘இரவு எவ்வளவுதான் நீண்டிருந்தாலும், விடிந்தே தீரும்’ என்பது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி. எவ்வளவு காலம் இது நீடிக்கும்? இதுபோன்ற ஐயம் நிறைந்த கேள்விகள் எரிமலைகள் போல என் சிந்தனையின் ஆழத்தில் குமிழியிடும். ‘அது’ விரைவில் முடிந்து விடுமா? நான் அனுபவித்த / அனுபவிக்கும் அனைத்தும் தேவைதானா? இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த சூழலை நான் ஏன் எதிர்கொள்ள வேண்டும்? ஏதாவது மாற்றுவழி உண்டா? போதும்…போதும்... யாரும் எதுவும் எனக்கு நேரடியான உடனடியான விடை தருவதில்லை. நான் முரணான உணர்வுகளால் நிறைந்திருக்கிறேன். நான் மரத்துப் போய் உணர்வின்றி இருக்கிறேன். என்னுடைய ஆழமான நம்பிக்கைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. என் விரக்தி அதிகரிக்கிறது; நான் நம்பிக்கை இழந்து போகிறேன்.
ஆனால்,
ஐயமும் கவலையும் என் சிந்தனையை அலைக்கழிக்கத் தொடங்கும்போது எனது ஆன்மா மற்றொரு பக்கத்தை ஆராயக் கேள்விகளைக் கேட்கிறது. எனது திட்டங்களினாலேயே நான் அழுத்தங்களுக்கு உட்படுகிறேனா? பத்து ஆண்டுகளை இறுதியென்று கணக்கிடுவதை நான் ஏன் விட்டுவிடக்கூடாது? சுவர்களை நோக்கி என்னைத் தள்ளிக்கொள்ள என்ன அவசரம்? தகுதியான நேரம் எது என்று யார் தீர்மானிப்பது? இந்த
நிலைக்குக் கொண்டு வரவும், இந்த நீண்ட வலிமிகுப் பயணத்தை மேற்கொள்ளவும் எது காரணம்? இந்த ஆன்ம சோதனைக் கேள்விகள் மெய்நிலைக்கு நான் வரக் காரணமாயின.
படைத்தவர்
இயற்கையைச் சில இயக்கங்கள் உள்ளேயே இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார். மனித உடல் அதற்குக் குணமாக்கல் தேவைப்படும்போது, அதனைச் செய்ய தன்னுள்ளேயே உள்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த மெய் நிலையை ஏற்கும் உலகும் ‘காலம் குணமளிக்க மிகச்சிறந்த மருந்து’ என்று கூறுகிறது.
எனது
கணிப்புகளும், எளிய வழிகளும் என்னுடைய தவறான எதிர்பார்ப்புகளால் வருகின்றன. இந்த எதிர்பார்ப்புகள் வெளியுலக நடப்புகளோடு ஒப்பிடுவதால் உருவானவை. எனது உடைந்த உயிரின் தொடுவானத்தில் தெய்வீகத் தடங்களை நான் ஏன் தேடவில்லை? எனது ஆன்மா மனத்தைக் கட்டும் எதிர்வினையுடன் எழுகிறது. உணர்வு நரம்பின் ஒவ்வொரு செல்லும் புதிதாக வளரும்போது, ஒவ்வொரு கணமும் புது காலை விடிகிறது. வளர்தலும், சீராதலும் என்னுள் ஒரு தொடர் நிகழ்ச்சி. செல்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு அன்றாடம் சத்தூட்டி, நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க உதவுகிறது; இந்த மெய்நிலைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு என்னுள் மிகப் பெரும் வலிமை தேவைப்படுகிறது.
எனது
முன்னுரையில் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியதை மேற்கோள்காட்டியிருந்தேன். அவல நிகழ்வுகள் வலிமைக்கான வளங்களாகவே இருக்கவேண்டும். எப்படிப்பட்ட அறைகூவல்களைச் சந்திக்க நேரும்போதும், நமது அனுபவங்கள் துன்பம் தரும்போதும் நம்பிக்கையை இழப்பதுதான் பேரிடர். எனவே, நான் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எனக்கு அளிக்கக் காத்திருக்கும் அனைத்தையும் மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் ஏற்கத் தேவையான வலிமையை மறுபிறப்படைந்த எனது கண்ணோட்டங்கள் கொடுக்கின்றன. துன்பத்திலிருந்து மீண்டுவராவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும். அதனை ஐயம் எனும் காற்று அணைக்க முயலும்போது, நம்பிக்கை என்ற தீயை ஆன்மாவினுள் மீண்டும் பற்றவைக்க வேண்டும்.
சில
மாதங்களுக்கு முன்னர், ஒருவர் என் உடல் நிலை குறித்து விசாரித்தார். குறிப்பாக வலது கை பற்றிக் கேட்டார்.
நான், “அதற்கு இன்னும் சிறிது
காலம் பிடிக்கும். சில ஆண்டுகள்கூட ஆகலாம்” என்று சொன்னேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது: “உங்களுக்குக் கடவுளிடம் நம்பிக்கை இல்லை; இல்லையென்றால் இதற்குள் உங்களுக்குப் புதுமையாகக் குணமாயிருக்கும்” என்றார். அவருடைய
விடை என்னுள் புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகள் பற்றிப் புரிந்துகொள்ளும் ஆசையைத் தூண்டிற்று. என்னுடைய விசுவாசம், கடவுளில் நம்பிக்கை ஆகியவற்றின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
குருத்துவத்திற்கு
என்னுடைய நீண்ட தயாரிப்பின்போது வெவ்வேறு மெய்நிலைகளை அறிய வாய்ப்பு கிடைத்தது. மக்களோடும், சூழ்நிலைகள், கள நிலவரங்கள் ஆகியவற்றோடும்
தொடர்பு கொண்டது தனிமனிதமாக என் வளர்ச்சியில் நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்திற்று. இந்த வளர்ச்சி எனது உடல், அறிவு, உணர்ச்சி, உள்ள, ஆன்மிக வாழ்வில் வளம் கூட்டியது. என்னைக் குருவாக உருவாக்கிய அந்த ஆண்டுகளில் நான் விழுமியங்கள் பலவற்றை எனதாக்கிக் கொண்டேன். இவற்றோடு விபத்தில் நான் கற்றவையும் சேர்ந்து என்னுள் வலுவான மனத்திண்மையையும், எந்தத் தடைகளையும் வெற்றிகொள்ளும் உறுதிப்பாட்டையும், எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆன்மிக நம்பிக்கைகளையும் தந்தன.
கங்கா
மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த முறைகளை நான் பெரிதும் மதிக்கிறேன். எலும்பு நோய், நுண் அறுவை சிகிச்சைத் துறைகளில் இருந்த மருத்துவர்கள் பேரா. ராஜா சபாபதி, ஹரி வெங்கட்ரமணி. ஆர். ரவிந்திர பாரதி, பர்வீன் பரத் வாஜ், முதலானோர் பலதரப்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளித்தார்கள். கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் எப்போதும் புன்னகை செய்துகொண்டு, நோயாளிகளை உற்சாகப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய அன்பான நடத்தையும், ஊக்கமூட்டும் தன்மையும் அவர்களது நோயாளிகள் ‘முடியாது’
என்று தோன்றியவற்றைக் கூட முயற்சி செய்துபார்க்கத் தூண்டின. நோயாளிகளின் முதுகில் தட்டி அவர்கள் வருங்காலத்தில் நம்பிக்கையைக் காட்டினார்கள். அப்படிப்பட்ட மனப்போக்குகளும், செயல்களும், புதுமைகளும், அற்புதங்களும் நடக்குமாறு செய்தன.
(தொடரும்)
2. மரியா இறைவனின் கன்னித்தாய்
(Mary is the Virgin Mother of God)
நாள்: 13 செப்டம்பர்
1995
தொடக்கத்திலிருந்தே
திரு அவையானது மரியாவின் கன்னித் தாய்மையை அதாவது, அவர் தூய ஆவியாரால் கருத்தரித்ததை அங்கீகரித்து வருகின்றது.
1. ‘இறைத்திட்டத்தில் திரு அவை’ என்ற
சங்க ஏட்டில் திருச்சங்கமானது, “தலைவராகிய கிறித்துவோடும், அவருடைய தூயோர் அனைவரோடும் ஒன்றித்து, நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறித்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு, நம்பிக்கை கொண்டோர்கள் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்”
(இறைத் திட்டத்தில் திரு அவை, எண். 52) என்று கூறுகின்றது. இச்சங்க ஏடானது இந்த வார்த்தைகளை உரோமைத் திருப்பலியிலிருந்து பயன்படுத்துகின்றது. இதன் வழியாக மரியாவினுடைய இறைத்தாய்மையின் மீதான நம்பிக்கை கிறித்தவச் சிந்தனையில் முதல் நூற்றாண்டுகளிலிருந்து எவ்வாறு உள்ளது என்பதை வலியுறுத்துகிறது.
புதிதாகப்
பிறந்த திரு அவையில் மரியா ‘இயேசுவின் தாய்’ என்ற பெயரோடு நினைவுகூரப்படுகின்றார். திருத் தூதர் பணிகள் நூலில் அதன் ஆசிரியராகிய தூய லூக்காவும் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருப்பதோடு மிகவும் பொருந்தக் கூடிய பெயராகிய இந்தப் பெயரையே கொடுக்கின்றார். மாற்கு நற்செய்தியாளருடைய விவரிப்பின்படி, “இவர் மரியாவினுடைய மகன்
அல்லவா?” என நாசரேத்து ஊரார்
வியக்கின்றனர் (மாற் 6:3). மேலும், “இவருடைய தாய் மரியா அல்லவா?” (மத்13:55) என்பதுதான் மத்தேயு நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கேள்வியாக இருக்கின்றது. மரியாவின் தாய்மை திரு அவையையும் தொடர்புபடுத்துகின்றது
2. சீடர்களுடைய
பார்வையில் விண்ணேற்பிற்குப் பின் அவர்கள் கூடி வந்தபொழுது ‘இயேசுவினுடைய தாய்’ என்ற பெயர் அதனுடைய முழு அர்த்தத்தையும் பெறுகின்றது. அவர்களைப் பொறுத்தவரை மரியா ஒரு தனித்துவமான நபர். மரியா மனுக்குலத்தினுடைய மீட்பரைப் பெற்றெடுப்பதற்கெனத் தனிப்பட்டதோர் அருளைப் பெற்றிருந்தார். அவர் நெடுங்காலமாக இயேசு அருகிலேயே வாழ்ந்தார். மேலும், அன்புச் சீடருக்கும், அவர் வழியாக ஒட்டுமொத்த திரு அவைக்கும் ஒரு ‘புதிய தாய்மையை’
கொண்டு வர சிலுவையில் அறையப்பட்ட
இயேசு கிறிஸ்துவால் கல்வாரி மலையில் மரியா அழைக்கப்படுகின்றார்.
இவைகளினால்
இயேசுவை நம்புகிறவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ‘இயேசுவினுடைய தாய்’ என்பது ஒரு வணக்கத்திற்குரிய மற்றும் பெருமைக்குரிய பெயராகும். மேலும், இத்தகைய பெயர் திரு அவையினுடைய வாழ்விலும், நம்பிக்கையிலும் என்றும் நிலைத்திருக்கும். குறிப்பாக, இந்தப் பெயரின் வழியாக இயேசுவின் மனித இயல்புக்கு ஏற்ப, ஆவியில் அவரைப் பெற்றெடுத்த பெண்ணின் பங்கை ஒப்புக்கொள்ளாமல் அவருடைய தோற்றத்தைக் குறிப்பிட முடியாது என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
அவருடைய
தாய்மைப் பங்கு திரு அவையினுடைய பிறப்பையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு, இயேசுவினுடைய வாழ்வில் மரியாவினுடைய பங்கை
நினைத்துப் பார்க்கையில், நம்பிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த ஆன்மிகப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் அவருடைய உன்னதமான உடனிருப்பைக் கண்டு கொள்வர்.
3. தொடக்கத்திலிருந்தே,
திரு அவையானது மரியாவினுடைய கன்னித் தாய்மையை அங்கீகரித்தது. இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் மரியாவினுடைய கன்னித்
தாய்மையை நாம் புரிந்துகொள்ள உதவுவதால், தொடக்ககால கிறித்தவக் குழுமங்கள், மீட்பருடைய கருத்தரிப்பு மற்றும் பிறப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத சந்தர்ப்பங்களைப் பற்றிய மரியாவின் நினைவுகளைச்
சேகரித்தனர். குறிப்பாக, கிறித்து பிறப்பு அறிவிப்பு பற்றிய தொகுப்பானது உயிர்த்த கிறித்துவின் மண்ணுலக வாழ்வின் தொடக்கத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள் பற்றிய ஆழமான அறிவைப் பெறவேண்டுமென்ற சீடர்களுடைய விருப்பத்திற்குப் பதிலளிக்கின்றது. இதன் இறுதிப் பகுப்பாய்வில், தூய ஆவியாரின் செயல்பாட்டின் வழியாகக் கன்னி கருத்தரிப்பின் மறையுண்மையின் திருவெளிப்பாட்டினுடைய தோற்றத்தில் மரியா இருக்கின்றார்.
இயேசுவின்
இறைத்தோற்றத்தைக் காட்டும் இந்த மறையுண்மையானது, அதன் முக்கியத்துவத்திற்காக முதல் கிறித்தவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ளப்பட்டது மற்றும் அவர்களின் நம்பிக்கையின் முக்கிய உறுதிமொழிகளில் சேர்க்கப்பட்டது. சட்டத்தின்படி யோசேப்பின் மகனாகிய இயேசு, உண்மையில் தூய ஆவியின் தலையீட்டால் பிறந்ததனால், தமது மனித இயல்பில் மரியாவினுடைய மகன்
மட்டுமே; ஏனென்றால், அவர் மனிதனின் பங்களிப்பு இல்லாமல் பிறந்தவர்.
இயேசு
இறைவனுடைய மகன் என்னும் தன்மையைக் கொண்டிருந்தார். இவ்வாறு மரியாவினுடைய கன்னித்தன்மை
ஒரு தனிப்பட்ட மதிப்பைப் பெறுகிறது என்பதற்கு கன்னிப் பிறப்பே அடையாளமாக இருப்பதால், இயேசுவினுடைய பிறப்பானது அவர் இறைமகன் என்ற மறையுண்மைக்கு ஒரு
புதிய வெளிச்சத்தைத் தருகின்றது.
திரு
அவைத் தந்தையர்களுடைய நம்பிக்கையினால் அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கன்னித் தன்மையை, நாம் ஒருபோதும் இயேசுவினுடைய அடையாளத்திலிருந்து பிரிக்க முடியாது. கன்னி மரியாவிடமிருந்து பிறந்ததினால் உண்மையான கடவுள் மற்றும் உண்மையான மனிதன் என்று நீசேன் நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிவிப்பதைப் போன்று மரியா மட்டுமே தாயாக இருக்கின்ற ஒரு கன்னியாகின்றார். நாசரேத்து கன்னியினுடைய தனிச்சிறப்புமிக்க இணை-உடனிருத்தலானது இந்த இரண்டு கொடைகளால் (தாய் மற்றும் கன்னி) கிறித்தவர்கள் அவருடைய தாய்மையைக் கொண்டாடி மரியாவை ‘கன்னி’ என்றழைக்க இட்டுச் செல்கின்றது.
இவ்வாறு,
மரியாவினுடைய கன்னித்தன்மையானது,
ஆண்டவரால் அழைக்கப்பட்ட அனைவராலும் வாழப்பட வேண்டிய கன்னிமை வாழ்வு என்பது கிறித்தவக் குழுமத்தில் பரவுவதற்கான தொடக்கத்தைத் தருகின்றது.
கிறிஸ்துவின்
முன்மாதிரியில் அதன் உச்சத்தை அடையும் இந்தச் சிறப்பு அழைப்பானது ஒவ்வொரு காலகட்டத்திலும் மரியாவில் உத்வேகத்தையும் மாதிரியையும் காண்கின்ற அளவிட முடியாத ஆன்மிகச் செல்வத்தைத் திரு அவைக்குத் தருகின்றது. இறைமக்கள் பக்தியின் வெளிப்பாடே ‘இறைவனின் தாய் மரியா.’
4. ‘இயேசு கன்னி
மரியாவிடமிருந்து பிறந்தார்’
என்ற நிலைப்பாடானது, ஏற்கெனவே இந்த நிகழ்வின் ஒரு வெளிப்படையான மறையுண்மையை வெளிப்படுத்துகின்றது. இயேசுவினுடைய இறை மகனுக்கான மறையுண்மையில் மட்டுமே இதை மிக முழுமையாக நாம்
காணமுடியும். மரியாவினுடைய இறைத்தாய்மையின்
மறையுண்மையானது இந்தக் கிறித்தவ நம்பிக்கைக் கோட்பாட்டிற்கு மைய வாக்கியமாக நெருக்கமான முறையில் இணைந்திருக்கின்றது. அவர் ‘உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக’ இருக்கின்ற வார்த்தை மனுவுருவானவருடைய தாய் ஆவார்.
‘இறைவனின் தாய்’ என்ற பெயரானது ஏற்கெனவே மத்தேயு நற்செய்தியில் ‘இம்மானுவேலின் தாய்’ அதாவது ‘கடவுள் நம்மோடு’
(ஒப்பிடுக. மத் 1:23) என்று அதற்கு இணையான ஒரு பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நடந்த தொடர் சிந்தனைகளுக்குப் பிறகே கொடுக்கப்பட்டது. எகிப்தில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவர்கள்தான் மரியாவை தேயோடோகோஸ் (Theotokos), அதாவது ‘இறைவனின் தாய்’ என்று அழைத்தனர்.
கிறித்தவ
மக்களின் பக்தியில் மிகவும் பரவலாக எதிரொலிக்கின்ற இந்தப் பெயரோடு மரியா அவருடைய உண்மையான தாய்மை நிலையில் பார்க்கப்படுகின்றார். அவருடைய மனித இயல்பிற்கு ஏற்றாற்போல கன்னித் தன்மையில் யாரைப் பெற்றெடுத்து தாயன்போடு வளர்த்தாரோ, அந்த இறைமகனின் தாயாக மரியா இருக்கின்றார். இவ்வாறு, மனித குலத்தின் தலைவிதியை மாற்றியமைக்க வந்த இயேசுவினுடைய மனித வளர்ச்சியில்
மரியா தமது பங்கை அளிக்கிறார்.
5. மிகவும்
குறிப்பிடத்தக்க வகையில், மரியாவுக்கான மிகப் பழமையான செபமான ‘உமது பாதுகாவலின் கீழ்’
‘Sub Tuum Praesidium’ என்ற
பாடலில் மரியா ‘Theotokos’ அதாவது ‘இறைவனின் தாய்’ என்ற பெயரினால் அழைக்கப்படுவதைக் காணலாம். இந்தப் பெயர் உண்மையிலேயே இறையியலாளர்களுடைய சிந்தனையிலிருந்து வந்த ஒன்று அல்ல; மாறாக, கிறித்தவ மக்களுடைய இறைநம்பிக்கையின் உந்துதலிலிருந்து வந்த ஒன்றாகும். இயேசுவை யாரெல்லாம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் மரியாவை ‘இறைவனின் தாய்’ என்று அழைக்கின்றனர். மேலும், வாழ்க்கையின் சோதனை நேரங்களில் அவருடைய வல்லமைமிக்க உதவியைப் பெறுவதில் நம்பிக்கை வைக்கின்றனர்.
கி.பி. 431-இல் எபேசு நகரில் நடந்த திருச்சங்கம் அதிகாரப்பூர்வமாக மரியாவுக்கு ‘இறைவனின் தாய்’ என்ற கோட்பாட்டை உண்மைக் கடவுளாகவும், உண்மை மனிதனாகவும் இருக்கின்ற ஒரே ஆளான கிறித்துவைக் குறிக்கின்ற வகையில் வரையறை செய்தது.
திரு
அவை மரியாவின் தாய்மையில்
கொண்டிருக்கின்ற நம்பிக்கையைத் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே ‘இயேசுவின் தாய்’,
‘கன்னித் தாய்’ மற்றும் ‘இறைவனின் தாய்’ என்ற இந்த மூன்று பெயர்களில் விவரிக்கின்றது. அதாவது, மரியாவினுடைய தாய்மையானது மனுவுருவாதல் என்ற மறையுண்மையோடு மிக நெருங்கிய விதத்தில் இணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. இவை கிறிஸ்துவினுடைய அடையாளத்தை வரையறுக்க உதவக்கூடிய மற்றும் மக்களுடைய பக்தியோடு இணைக்கப்பட்ட கொள்கையினுடைய உறுதிப்பாடுகள் ஆகும்.
மூலம்:
Pope John Paul II, Mary is the Virgin Mother of God, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 20 September 1995, p. 7.
ஊடக நோன்பு வேண்டல்
காலத்தின் அறிகுறிகளை உய்த்துணர்ந்து, அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள அழைப்பு விடுத்தது ‘இன்றைய உலகில் திரு அவை’ என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டு. அதற்கேற்ப நமது வாழ்விலும், இறைவேண்டலிலும் தேவையான மாற்றங்களைச் செய்வது நம் கடமையாகும்.
நமது
இறைவேண்டல் வாழ்வில் உண்ணா நோன்பு, புலால் நோன்பு இரண்டையும் நூற்றாண்டுகளாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், நாம் வாழும் இந்நாள்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு நோன்புதான் ஊடக நோன்பு (Media Fast).
தொலைக்காட்சி,
அலைப்பேசி, சமூக ஊடகங்கள் அனைத்திலும் எத்தனையோ நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. நமது திரு அவையின் நற்செய்திப் பணியே ‘மாதா தொலைக்காட்சி’ மற்றும்
சமூக ஊடகங்கள் வழியாக வெற்றிகரமாக நடைபெறுவது நாம் அறிந்ததே. இருப்பினும், அவற்றின் தீமைகளும் பெரியதே.
இன்று
தொலைக்காட்சி, அலைப்பேசி, இணையதளம், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்குப் பலரும், குறிப்பாக இளையோர் அடிமையாகி, ‘இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது’ என்ற
நிலைக்கு வந்துவிட்டனர். அந்நிலையிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. மேலும், இவை அறநெறிக்கும், ஒழுக்கத்திற்கும் மாறான செய்திகளையும், காணொளிகளையும், திரைப்படங்களையும் கொண்டுவந்து நமது மனத்தையும், மனச்சான்றையும் மாசுபடுத்துகின்றன. தவறுகளை நியாயப்படுத்துகின்றன. ‘எல்லாரும் செய்கிறார்கள், நான் செய்தால் என்ன?’ என்னும் மனநிலை வளர்கிறது. வாழ்வியல் சிக்கல்கள் பல நேர்கின்றன. குடும்ப
உறவுகள் சிதைகின்றன. அனைத்திற்கும் மேலாக, தனியாகவும், குடும்பமாகவும் இறைவேண்டல் செய்வதற்கு ஊடகங்களே பெரும் தடையாக இருக்கின்றன. எனவே, நாம் ஊடக விழிப்புணர்வு கொண்டு கவனமாக இருக்க வேண்டும் என்பதனை ஊடகங்களே நமக்குச் சொல்லித் தருகின்றன. தலை சிறந்த ஊடகமாகிய திருவிவிலியம் இவை பற்றியெல்லாம் நம்மை எப்போதோ எச்சரித்துவிட்டது. மானிட மகன் வரும் நாள் பற்றி கூறிய இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காத வாறும் எச்சரிக்கையாய் இருங்கள்”
(லூக்கா 21:34) என்று மொழிந்தார். இன்றைய ஊடகங்களைப் பயன்படுத்துகின்றவர்களுடைய உள்ளங்கள் மந்தம் அடைகின்றன என்னும் மாபெரும் ஆன்மிக-உளவியல் உண்மையை ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
எனவே,
இன்றைய நாள்களில் நமக்குத் தேவையான ஒரு நோன்பு ஊடக நோன்பு. “அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்” (1தெச
5:21-22) என்று அறிவுறுத்துகிறது இறைமொழி. எனவே, சமூக ஊடகங்களை நாம் பயன்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்து, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நல்லதைப் பற்றிக்கொண்டு, தீமையை விலக்க ஊடக நோன்பைக் கடைப்பிடிப்போம்.
வெள்ளிதோறும்
ஊடக மறுப்பு. இயேசுவின் இறப்பைக் குறிக்கும் வெள்ளிக் கிழமைகளில் நாம் ஏதேனும் ஒறுத்தல் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி. எனவே, வெள்ளிதோறும் உண்ணா நோன்பு, புலால் நோன்பு இவற்றுடன் ஊடக நோன்பையும் கடைப் பிடிக்கலாம். தொலைக்காட்சிப் பெட்டியை அன்றைய நாள் முழுவதும் மூடிவிடலாம். திறன் பேசியைப் பணி தொடர்பாக (Ousibess calls) மட்டுமே
பயன்படுத்தி, சமூக அழைப்புகளைத் (Social calls) தவிர்க்கலாம்.
தகவல் தொடர்புக்காக அன்றி விளையாடுவதற்கோ, காணொளிக் காட்சிகளைப் பார்ப்பதற்கோ, சமூகத் தளங்களின் வழி நச்சுக்கருத்துகளைப் பரப்புவதற்கோ அலைப்பேசியைப் பயன்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறே,
வெள்ளிதோறும் இணையதளம் பயன்படுத்தாமை, தகவல் தொடர்புக்கு மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவது, ஆபாசத் தளங்களை அறவே தவிர்ப்பது போன்றவற்றின் வழியாக இணையதள நோன்பையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். “இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன்” (திபா
101:3) என்று சூளுரைத்த இறையடியார்போல, நாமும் இழிவான நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, அலைப்பேசி, இணையதளம் வழியாகக் கண்ணுறாமல் நம்மைக் காத்துக்கொள்வோமாக!
இறைவேண்டல்
வாழ்வுக்கும், ஊடக நோன்புக்கும் நேர்மறையான தொடர்பு உள்ளது. ஊடக மறுப்பைக் கடைப்பிடித்து, ஊடக நோன்பு பெருகப் பெருக, இறைவேண்டல் ஆர்வம் கூடுவதை உணரலாம். இறைவேண்டலுக்கான நேரம் அதிகரிக்கும். நம் மனத்திலும், ஆன்மாவிலும் ஊடகத்தின் தாக்கம் குறைவதால், நம் இறைவேண்டலின் தரமும் அதிகரிக்கும். ஊடகப் பயன்பாடு குறையக் குறைய உறவுகள் மேம்படுவதால், நம் வாழ்வும் வளம்பெறும்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக. அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்”
(உரோ 12:2) என்னும் இறைமொழியை இதயத்தில் ஏற்று, இன்றைய காலத்திற்குத் தேவையான தொலைக்காட்சி நோன்பு, அலைப்பேசி நோன்பு, இணையதள நோன்பு என்னும் முப்பெரும் ஊடக நோன்புகளைக் கடைப்பிடித்து, நம் அருள்வாழ்வையும், ஆளுமையையும் மேம்படுத்திக்கொள்வதே விழிப்படைந்தோருக்கான வெற்றியின் செயல்.
இன்றைய உலகில் ‘போதும்’ என்ற நிறைவு காண, எல்லையே இல்லாத ஒரு நிலைதான் மிகவும் அச்சத்தை விளைவிக்கும் காரணியாக உள்ளது. ‘இன்னும் வேண்டும்’ என்கிற வெறி நம்மை வருத்தத்தின் விளிம்புக்கு நகர்த்திச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒன்றே ‘போதும்’ என்ற நிறைவு. செல்வம், கௌரவம், வலிமை மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும். நவீன முதலாளித்துவம் இருவகையான சார்பு நிலைகளை உடையது. ஒன்று, செல்வத்தை உண்டாக்குவது. மற்றொன்று, பொறாமையை உண்டாக்குவது. பெரும்பாலும் இரண்டும் இணைந்தே பயணிக்கின்றன” என்கிறார் ‘பணம் சார் உளவியல்’ நூலின் ஆசிரியர் மார்க்கன் ஹெளஸ்ஸேல்.
‘போதும்’ என்கிற மனமின்மையும், ‘இன்னும் கொஞ்சம்’ என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எங்கும் நம்மிடம் உள்ளதையும், நமக்குத் தேவையானதையும் பணயம் வைத்து, நம்மிடம் இல்லாததையும், நமக்குத் தேவையற்றதையும் சேர்க்கப் பாடுபடுகிறோம் என்பதே எதார்த்தம். இதில் ஏற்படும் நிறைவின்மை இறுதியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் விளைவிக்கின்றன. ‘போதும்’ என்ற நிறைவு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது, மகிழ்ச்சியற்றது. நிறைவு நோக்கி புறந்தேடும் எதுவும் நிலைக்கப் போவதுமில்லை; நிரந்தர நிம்மதியைத் தரப் போவதுமில்லை.
முதலாளித்துவச்
சிறையில்
நாம்:
நம்மிடம் ‘போதும்’ என்கிற நிறைவின்மையால், வெளிப்புறச் செயல்களில் காட்டும் ஆர்வமும் குறிப்பாக பணம், பதவி, அங்கீகாரம் என்பதான அணுகுமுறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இரண்டு நிலைகளில் இதனைப் பட்டியலிடலாம்: 1. மட்டுமீறிய எதிர்பார்ப்புகள், 2. எதிலும் சாதனை அணுகுமுறை.
உண்மையான
மகிழ்ச்சி என்பது எதிர்பார்ப்புகளை இழத்தலிலே ஏற்றம் பெறுகிறது. நவீன முதலாளித்துவச் சிறையில் நாம் சிக்குண்டுள்ளோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது? நிச்சயம் நமது எண்ணங்களும், செயல்களுமே அதற்குச் சான்று! 2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்குமான கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்புக்காகத் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில் குறிப்பாக, குருக்களைப் பாதித்துள்ள பல்வேறு நோய்களைப் பட்டியலிட்டார். அவற்றைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதே போதுமானது. சின்னச்
சின்னக் காரியங்களில் நிறைவின்மை. பெரிது நோக்கி நகர்த்தும் எதுவும் மட்டுமீறிய எதிர்பார்ப்புகளின் விளைவே! பதவி, செல்வம், புகழ் மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும் என்பது நியதி. நமது நிர்வாகப் பொறுப்புகளில் நாம் செயல்படும் முறைகளும், நமது எண்ணங்களும் எதனை மையம்கொண்டு செயல்படுகின்றன?
•
‘நானே எல்லாம்’ என்கிற ஆணவ நோய் உள்ளதா? • தரப்படும் பணிகளில்
மற்றவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவது கடினமாக உள்ளதா? • தன்னைப் பற்றியே
பெருமையாகப் பேசிக்கொள்ளும் தற்பெருமை மனநிலை உள்ளதா?
• மற்றவர்களைக் குறித்துப் புறணி பேசும் மற்றும் புறங்கூறும் பழக்கம் இயல்பாக உள்ளதா? • தலைமைப் பொறுப்பில்
இருப்பவர்களை எதற்கும் துதி பாடும் போக்கு உள்ளதா? • எதையும் கண்டுகொள்ளாமல்
அலட்சியம் செய்யும் மனப்பாங்கு உள்ளதா? • பொருள் குவிக்கும் பேராசை உள்ளதா? எதார்த்த உதாரணங்களோடு சற்று சிந்திப்போம்.
களைகட்டும் மரணக்
கலாச்சாரம்:
முந்தைய நபரைவிட கூடுதலாக, மாறுபட்டுச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் நல்லதாயின் வரவேற்கத்தக்கதே. அதைவிடுத்து, முந்தையவரைவிட நற்பெயர் வாங்க வேண்டும்; எப்படியாவது முன்னவர் நற்பெயருக்கு மறைமுகமாகக் களங்கம் வருவிக்க வேண்டும்; அதனால், தனக்குப் புகழ் சேர வேண்டும் என்கிற எத்தனிப்பில் ஒருவர் செயல்பட ஆரம்பித்தால், அது தவறான அணுகுமுறையே. இத்தகு மனநிலைகளால் வெறுப்பும், புரிதலின்மையும், கசப்புணர்வுகளுமே கூடுகட்டிக்கொள்ளும்.
குறிப்பாக,
சாதனை நோக்கிச் செயல்படும் அருள்பணியாளர்களால் மக்களின் மனநிலைகளிலும் அருள் வாழ்வு என்பதனை இரண்டாம் பட்சமாக்கிய மனநிலை உருவாகி உள்ளது. இது எவ்வளவு அபாயகரமானது! மக்களின் உரையாடல்களைக் கவனியுங்கள். ‘இவரைவிட முந்தையவர் நன்றாகச் செய்தார்’,
‘அவரது காலத்தில் எத்தனை பணிகள் நடந்தன’,
‘எவ்வளவு சொத்துகள் வாங்கினார், கட்டடங்கள் கட்டினார்; ஆனால், இவர் வெறும் பூசை வைக்கத்தான் இலாயக்கு, வேற எதையும் கண்டுக்கிடுறதில்ல...’ இறைமக்கள் பங்குப் பணியாளரைப் பார்க்கும் பார்வை இங்ஙனம் மாறியிருக்கின்றன.
முதலீடுகளை
ஈட்டும் தொழில் அதிபர்களாக இறைப்பணியாளர்களைப் பாவிக்கும் போக்கை இறைமக்களிடம் விதைத்துவிட்ட பழிபாவம் நம்மையே சாரும். இன்றைய முதலாளித்துவச் சித்தாந்தங்களில் நம்முடைய வாழ்வும் பணியும் சிறைபட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன நிதர்சனம் தேவை?
நோய்களுக்கான
மருந்தென்ன?
கால ஓட்டத்தில் நம்மிடம் கறையாய்ப் படிந்துள்ள மரணக் கலாச்சாரங்களை வென்றெடுக்க திருத்தந்தை காட்டும் ஒரே வழி அன்பு! எதையும் கடமைக்காக, கட்டாயத்தினால், சட்டத்தினால், சடங்கிற்காக, சாதனைக்காகச் செய்யாமல், அன்பால் செயல்படுவதே ஏற்றம் தரும். அன்பைச் சுவைத்தவரால்தான் அன்பைப் பகிர முடியும். திரு அவையின் ஒழுக்கவியலின் மையமும் அதுவே.
புனித
தாமஸ் அக்குவினாஸ் போதித்ததுபோல, பண்புகள் ((Virtues) மற்றும்
அதிலிருந்து தொடங்கும் செயல்களிலும் ஒழுக்கவியல் வெளிப்படுகிறது என்றாலும், எல்லாவற்றையும் விட கணக்கில் கொள்ளக்கூடியது “அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது” (கலா
5:6). “ஒருவரின்
அயலாரை நோக்கிய அன்புச் செயல்களே ஆவியின் உள்ளார்ந்த அருளின் நிறைவான, வெளிப்படையான வெளிப்பாடுகள் ஆகும்”
(நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்:37) என்கிறார் திருத்தந்தை. அன்பும் நம்பிக்கையும் பிரிக்க முடியாதவை. நம்புகிறவன் அதனை அன்பில் வெளிப்படுத்த வேண்டும்.
‘இறைநம்பிக்கை
ஒளி’
(LF) சுற்றுமடல்,
அதிகாரம் 4- இல் திருத்தந்தை, “மனித உறவுகளின் வளத்தை உயர்த்தக்கூடியதாகவும், அதன் நீடித்திருக்கும் சக்தியையும், நம்பத்தக்கதாக நிலைப்பாட்டையும் நமது ஒட்டுமொத்த வாழ்வையும் வளமூட்டி மேம்படுத்தக்கூடியதாகவும் இறைநம்பிக்கை ஒளி உள்ளது”
(எண்: 51) என்கிறார். இறைப்பணியாற்ற தங்களை அர்ப்பணித்துள்ள ஒவ்வொருவரும் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
நமது
நம்பிக்கை என்பது மனித உறவுகளின் அடிநாதங்களையும், அதன் இறுதி எல்லையான இறைவனையும் இறுகப் பற்றிக் கொண்டு, மனித குலத்தின் பொதுநலனுக்குத் தன்னை அர்ப்பணிக்க உதவ வேண்டும். இதன் நோக்கம் மறுவுலக வாழ்வு மட்டுமல்ல; மாறாக, இன்றைய மனிதச் சமுதாயத்தைக் கட்டி எழுப்பி, எல்லாரும் ஒன்றாக இறையரசின் நிறைவினை நோக்கி நம்பிக்கையில் நடை பயிலச் செய்வதாகும்.
இறுதியாக,
நம்மிடம் இருக்கும் பகையுணர்வுகளை, வெறுப்புணர்வுகளைக் களைவதற்கு என்ன வழி? நட்பு பாராட்டுவதே! மணத்துறவின் முக்கியம் மற்றும் நட்புப் பாராட்டுதலைப் பற்றி கம்பானியா அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களிடம் திருத்தந்தை உரையாற்றியபோது (26, ஜூலை 2014) “அருள்பணியாளர்கள் மன வருத்தங்களைச் சுமந்து பகைமையில்
உழல்பவர்களாக இருக்கக்கூடாது. மன்னிப்பதில் முன்னோடிகளாக இருக்க வேண்டும்”
என்று வலியுறுத்தினார். ஆகவே, நாமும் அன்பின் சாட்சிகளாய் அவனியில் வலம் வருவோமா!
கிறிஸ்து எனும் அருளடையாளம்
(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
மார்த்தா:
“பாதர், கடவுளின் அருளைப் பெறுவதற்கு அருளடையாளங்கள் தேவை என்று சொன்னீர்கள். அது குறித்து மேலும் சில கருத்துகளைச் சொல்லுங்களேன்.”
அருள்பணி:
“தத்துவார்ந்த ரீதியில் பார்க்கும்போது, திருவருள்சாதனங்கள் ‘குறியீடு’
(sign) என்கின்ற
வகையைச் சார்ந்தவை. ஒன்றைச் சுட்டிக்காட்ட மற்றொன்றைப் பயன்படுத்துவதே ‘குறியீடு’
என்பது! உதாரணமாக, ஒரு சாலையில் ‘மதுரை’ என்று எழுதப்பட்ட பலகை இருந்தது என்றால், அது மதுரையைச் சுட்டிக்காட்டும் குறியீடு ஆகும். அதாவது, பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்கக்கூடிய மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதே குறியீடு என்பது. குறியீடோடு தொடர்புடைய மற்றொரு வார்த்தை ‘அடையாளம்’
(symbol) என்பது!
அடையாளம் என்பது குறியீட்டையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலானது. இரண்டு வகைகளில் அது மேலானது. முதலாவதாக, அடையாளம் என்பது பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்க இயலாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. இரண்டாவதாக, அடையாளம் மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், சுட்டிக்காட்டப்படும் பொருளின் தன்மையை ஓரளவுக்குத் தன்னிலே தாங்கியிருப்பதாகும்.”
கிறிஸ்டினா:
“தந்தையே! நீங்கள் சொல்வது புரிந்தது மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. ஓர் உதாரணம் தாருங்களேன்!”
மார்த்தா:
“நான் சொல்கிறேன் பாதர்! ரோஜா அன்பிற்கான சிறந்த அடையாளம். முதலாவதாக, ரோஜா பார்க்கப்படக்கூடியது. அது சுட்டிக்காட்டும் அன்போ பார்க்கப்பட முடியாதது. இரண்டாவதாக, அன்பின் மென்மைத்தன்மையை ரோஜா மலர் தன்னிலே தாங்கியிருக்கிறது. எனவேதான் அது அன்பிற்கான சிறந்த அடையாளமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கின்றேன்.”
அருள்பணி:
“மிகவும் சரி! காண இயலாத கடவுளையும், அவரது பிரசன்னத்தையும், பண்புநலன்களையும் சுட்டிக்காட்டி, அவற்றில் மனிதர்கள் பங்கெடுப்பதற்கான மிகச்சிறந்த அடையாளங்களாக இருப்பவையே அருளடையாளங்கள். ‘கண்களால் காண முடியாத இறைவனுக்குக் காணக்கூடிய ஓர் அடையாளமாக விளங்குவதே அருளடையாளம்’ என்கிறார்
புனித பெர்னார்டு. காணக்கூடிய பொருள்கள் வழியாகக் காண இயலாத அம்சங்களை வெளிப்படுத்துவதே திருவருள்சாதனச் செயல்பாட்டின் அடிப்படைத் தன்மை. எல்லாத் திருவருள்சாதனங்களுமே கடவுளைச் சுட்டிக்காட்டுபவையாக இருப்பதோடு, கடவுளின் தன்மையைத் தங்களிலே பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, அப்பமும் இரசமும் பார்க்கக்கூடியவை. இந்த அப்பமும் இரசமும் காண இயலாத இறைவனின் பிரசன்னத்தைத் தாங்கக்கூடியவையாக மாறுவது திருவருள்சாதனச் செயல்பாட்டாலேயே! திரு அவை வரலாற்றை உற்றுநோக்கும்போது, ஒரு சாதாரண அழிந்துபோகக்கூடிய பருப்பொருள், அழியாத ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும் என்ற செய்தியை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் புனித அகுஸ்தினார். புனித அகுஸ்தினாரின் கருத்துபடி, இவ்வுலகின் புனிதத்தின் அடையாளமாகத் திருவருள் சாதனம் இருக்கிறது.”
அகஸ்டின்:
“பாதர்! ஏழு அருளடையாளங்களும் எவ்வாறு கடவுளின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன எனச் சொல்லுங்களேன்...”
அருள்பணி:
“அதற்கு முன்பாக ஒரு கருத்தைப் பற்றி நாம் பேசவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்த அளவில், திருவருள்சாதனங்கள் அனைத்தும் இறைமகன் கிறிஸ்துவிலிருந்தும், அவரது வாழ்விலிருந்தும்தான் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்துவின் வாழ்வே ஒரு திருவருள்சாதன வாழ்வுதானே! அதாவது, கிறிஸ்து காண இயலாத இறைவனை வெளிப்படுத்துகின்ற அருளின் கருவியாக விளங்கினார். எனவேதான் இறையியலில் கிறிஸ்து, ‘அடிப்படைத் திருவருள்சாதனம்’ (basic
sacrament) என்று அழைக்கப்படுகின்றார்.”
அன்புசெல்வன்:
“பாதர், நீங்கள் இதைச் சொல்லும்போது ‘என்னைக்
காண்கிறவன் தந்தையையே காண்கின்றான்’ (யோவா
14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. இயேசுவின் வாழ்வே ஓர் அடிப்படைத் திருவருள்சாதனமாக (basic sacrament) இருந்தது
என்பதை இவ்வார்த்தைகள் எடுத்துரைக்கின்றன என்று நினைக்கின்றேன்.”
அருள்பணி:
“மிகச் சரியாகச் சொன்னீர்கள். மேலும், இவ்வார்த்தைகள் அவர் ஒரு தனித்துவமிக்க, வேறு எதற்கும் இணையாக முடியாத திருவருள்சாதனமாக விளங்குகின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் வீட்டில் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு (Catechism of the Catholic Church) உள்ளதா?”
அன்புசெல்வன்:
“இருக்கிறது தந்தையே! உங்களுக்கு முன்பாக இருந்த அருள்தந்தை ஒரு முறை மறையுரையில் அது குறித்துப் பேசியபோது, அதை வாங்கி அவ்வப்போது
வாசித்து வருகிறேன். திரு அவையின் மறைப்போதனைகளைத் தெளிவாகவும் ஆழமாகவும் நான் புரிந்துகொள்ள அது எனக்கு உதவுகிறது.”
அருள்பணி:
“மிகவும் நல்லது. கிறிஸ்டினா, அப்புத்தகத்தைத் திறந்து, எண் 1151-ஐ வாசிக்க முடியுமா?”
கிறிஸ்டினா:
“இறையரசின் மறைபொருளை விளக்குவதற்காக இயேசு தமது போதனைகளில் அடிக்கடி படைப்புப் பொருள்களை அடையாளமாகப் பயன்படுத்துகின்றார். அவர் தமது குணமளிப்புச் செயல்பாடுகளிலும், போதனைகளிலும் சில பொருள் சார்ந்த குறியீடுகளையும், அடையாளச் செயல்பாடுகளையும் பயன்படுத்துகிறார்; பழைய உடன்படிக்கைக்கு, முக்கியமாக விடுதலைப் பயண நிகழ்விற்கும், பாஸ்குவிழா நிகழ்விற்கும் புதிய அர்த்தத்தை வழங்குகின்றார். இதற்கான காரணம் இச்செயல்பாடுகள் அனைத்திற்கும் பின்னே உள்ள குறியீடாக அவரே விளங்குவதுதான்.”
அருள்பணி:
“உனக்கு இதிலிருந்து என்ன புரிகிறது கிறிஸ்டினா?”
மார்த்தா:
“பாதர், அது எனக்கே புரியவில்லை. அவளுக்கு எங்கே புரியப்போகிறது?”
அருள்பணி:
“அதன் பொருள் இதுதான்: ‘இயேசு தமது புதுமைகளிலும், போதனைகளிலும் காணக்கூடிய பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் வழியாகக் காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டினார். இதற்கான காரணம், அவரது வாழ்வே காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டும் காணக்கூடிய அடையாளமாக இருந்ததே! வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நாம் கொண்டாடும் அருளடையாள நிகழ்வுகளுக்கான ஆழமான அர்த்தத்தையும், அளப்பரிய ஆற்றலையும் தருவது கிறிஸ்துவின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்புமேயன்றி வேறெதுவும் இல்லை.”
அகஸ்டின்:
“தந்தையே! இப்பொழுது எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. கடவுளைச் சுட்டிக்காட்டும் மாபெரும் அடையாளமாக விளங்குபவர் கிறிஸ்து. அவரது மீட்புச்செயலை உலகமனைத்தும் எடுத்துச் செல்வதற்கான கருவிகளாக ஏற்படுத்தப்பட்டவையே திருவருள்சாதனங்கள்.”
அருள்பணி:
“ஆம்! திருவருள்சாதன நிகழ்வுகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புப் பணியானது உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைவதற்கான வாய்ப்பை, திரு அவை இறைவனின் துணையோடு மேற்கொள்கிறது. இவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நற்செயல் இன்றும் தொடர்ந்து ஆற்றப்படுகிறது.”
(தொடரும்)
உண்ணாநோன்பு வேண்டல்
இறைவேண்டலோடு உண்ணாநோன்பும் இணைய வேண்டும் என்பது திருவிவிலியம் காட்டும் பாடம். இறைவேண்டல் வலிமைபெற வேண்டுமென்றால், நோன்பிருக்க வேண்டும் என்னும் பாடத்தை இயேசுவே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
‘எங்களால் ஏன் ஒரு பேயை ஓட்ட முடியவில்லை?’ என்று சீடர்கள் இயேசுவிடம் வினவியபோது, “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும்,
நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” (மத்
17:21) என்று பதிலளித்தார் இயேசு. இதன் வழியாகச் சில வேளைகளில் நோன்பின்றி இறைவேண்டல் வலிமை பெறாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
திருவிவிலியம்
முழுவதும் நோன்பின் காட்சிகள் பலவற்றைக் காண்கிறோம். நோன்பிருக்க வேண்டும் என்பது கடவுளே தந்த கட்டளை என்பதை லேவியர் நூல் நமக்கு எடுத்துரைக்கிறது. “ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும், உங்களோடு வாழும் அந்நியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள நியமம் ஆகும்”
(லேவி 16:29,31) என்கிறது லேவியர் நூல்.
பழைய
ஏற்பாட்டில் பல காரணங்களுக்காக நோன்பு
கடைப்பிடிக்கப்பட்டது.
பாவ மன்னிப்புக்காக (1சாமு 7:6, யோனா 3:5) மக்கள் நோன்பிருந்தனர். துயரத்தின் காரணமாக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. சவுல் இறந்தபோது மக்கள் நோன்பிருந்தனர் (2சாமு 1:12). இருப்பினும், இறைவேண்டல் செய்யும்போது, அதனை வலிமைப்படுத்த நோன்பிருந்து மன்றாட வேண்டும் என்பதே பழைய ஏற்பாட்டின் முதன்மை வலியுறுத்தல்.
தனது
குழந்தை சாகக்கிடந்தபோது தாவீது உண்ணாநோன்பிருந்து மன்றாடினார் (2சாமு 12:16). இஸ்ரயேல் மக்களின் பாதுகாப்புக்காக மன்றாட எஸ்ரா உண்ணாநோன்பு ஒன்றை அறிவித்தார். “நாங்கள் நோன்பிருந்து இதற்காக எங்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்” (எஸ்
8:23) என்று சான்றுபகர்கிறார் எஸ்ரா.
இஸ்ரயேலரின்
மற்றொரு தலைவரான நெகேமியாவும் இறைவேண்டலோடு நோன்பையும் இணைத்துக்கொள்ள மக்களை ஊக்குவித்தார். அவரே நோன்பிருந்து விண்ணகக் கடவுளின் முன்பு மன்றாடினார் (நெகே 1:4). எஸ்தர் (4:3,16), யூதித்து (8:6), தானியேல் (9:3) போன்ற இறையடியார்கள் நோன்பிருந்து மன்றாடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இறைவாக்கினர்களான
எசாயா (58:6), எரேமியா (14:12), யோவேல் (2:12) ஆகியோரும் நோன்பின் அவசியத்தைப் பற்றிப் போதித்தனர். ஆனால், உண்மையான நோன்பு வெளிவேடமற்றதாகவும், அன்பு, அறம், பகிர்வு, நீதி, உண்மையான மனமாற்றம் ஆகிய மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
புதிய
ஏற்பாடும் நோன்பின் அவசியத்தை வலியுறுத்திப் பேசுகிறது. ஆண்டவர் இயேசுவே தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் “நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார்” (மத்
4:2) என்பது கிறிஸ்தவர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் எடுத்துக்காட்டு. இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி தொடக்க காலக் கிறிஸ்தவர் நோன்பிருந்து இறைவேண்டல் செய்தனர் என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்துள்ளது.
பர்னபாவும்,
சவுலும் நற்செய்திப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நோன்பு இறைவேண்டலால்தான் (திப 13:2). அவர்கள் திருப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டபோது இதர கிறிஸ்தவர்கள் அவர்களுக்காக “நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்” (திப
13:3). மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, திருப்பணிக்காக ஆண்டவரிடம் ஒப்படைக்கும்போது நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள் (திப 14:23).
இந்த
மரபைப் பின்பற்றி திரு அவையின் வரலாறு முழுவதும் புனிதர்களும், இறையடியார்களும், இறைமக்களும் நோன்பிருந்தனர். புனித பெனடிக்ட், கத்தரீன், சார்லஸ் பொரோமியோ, வின்சென்ட் தே பவுல், பவுஸ்தினா
போன்ற எண்ணற்றப் புனிதர்கள் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
திருமுழுக்குப்
பெற்ற கத்தோலிக்கர்கள் தவக் காலத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் ஒறுத்தல்களைக் கடைப்பிடிக்க அழைக்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண்: 1438). சாம்பல் புதன், பெரிய வெள்ளி ஆகிய இரு நாள்களில் கண்டிப்பாகவும், முடிந்தால் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது திரு அவைச் சட்டம் (எண்கள்: 1250-53).
எனவே,
நம் இறைவேண்டல் வாழ்வில் உண்ணாநோன்பைத் தவறாது இணைத்துக் கொள்வோமாக. உணவில் நாம் செய்யும் தியாகமே உண்ணாநோன்பு. எனவே, ஒருமுறை மட்டுமே உணவு உண்பது அல்லது உணவின் அளவைக் குறைத்துக்கொள்வது, அல்லது பிடித்த உணவுகளைத் தவிர்ப்பது அல்லது பிடிக்காத உணவையும் தியாகத்தோடு உட்கொள்வது என ஏதாவது ஒரு
வடிவத்தில் குழந்தைகள் உள்பட அனைவரும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பது சிறந்தது.
உண்ணாநோன்பிருக்கும்போது
வெளிவேடம் தவிர்த்து, மறைவாயிருக்கும் தந்தைக்கு மட்டும் தெரியுமாறு நோன்பிருக்கக் கூறினார் இயேசு (மத் 6: 16-18). வாரத்தில் இருமுறை நோன்பிருந்தாலும், இறுமாப்பு, தற்பெருமை போன்றவை அதன் பலன்களை நீக்கிவிடும் என்று ‘பரிசேயரும், வரி தண்டுபவரும்’ (லூக்
18:9-14) உவமையின் வழியாகக் கற்பித்தார். “தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று மீண்டும் அதே பாவங்களைச் செய்தால் யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பார்? அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?” (சீஞா 34:26) என்று எச்சரிக்கிறது இறைவார்த்தை. எனவே, விழிப்புணர்வோடு நோன்பிருப்போம். இறைவேண்டல் வாழ்வை வளப்படுத்துவோம்.
(தொடரும்)