news
ஆன்மிகம்
மரியா பற்றிய திரு அவையின் படிப்பினை வளமையானது மற்றும் நேர்மறையானது! (Council\'s teaching on Mary is rich and positive) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 09

1. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான திரு அவை நிகழ்வாக இருந்த 1962, அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் திருத்தந்தை 23-வது யோவானால் தொடங்கப்பட்டு, 1965-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாள் திருத்தந்தை 6-வது பவுலால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில், திரு அவையின் தாயான மரியாவிற்குக் கொடுக்கப்பட்ட சிறப்பானதோர் இடம் பற்றி இங்கு உங்களோடு சிந்திக்க விரும்புகின்றேன்.

உண்மையிலேயே ஒரு மாபெரும் மரியாவின் தனித்துவமானது (Marian tone) அதன் அறிவிப்பிலிருந்து இந்தத் திருச்சங்கத்தினால் குறிக்கப்பட்டது. கிறித்தவ மதம் சார்ந்த   திருச்சங்கங்களைக் கொண்டாடுவது (Celebrandi Concilii Oecumenici) பற்றிய திருத்தந்தையின் கடிதத்தில், 23-வது யோவான் அவர்கள்அருளின் தாயும், திருச்சங்கத்தின் வானுலகப் பாதுகாவலியுமாகியமரியாவின் சக்தி வாய்ந்த மன்றாட்டின் துணையை ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தார் (11 ஏப்ரல் 1961, AAS 53 [1961] 242).

திரு அவை பற்றிய சங்க ஏட்டில் மரியா பற்றிய படிப்பினை இடம்பெறல்

அடுத்தப்படியாக, 1962-இல் மரியாவின் சுத்திகரிப்புத் திருநாளன்று, திருத்தந்தை 23-ஆம் யோவான் அவர்கள் அக்டோபர் 11-ஆம் தேதியை, அதாவது குறிப்பாக அதே நாளில் மரியாவைTheontkos (இறைவனின் தாய்) என்று அழைத்த அந்த மிகப்பெரிய எபேசு திருச்சங்கத்தின் நினைவாக இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று விவரித்து, அந்த நாளைச் சங்கத்தின் தொடக்க நாளாகக் குறித்தார் (Motu proprio Concilium, AAS 54 [1962] 76-68). அதன் பிறகு, அவரின் திருச்சங்கத் தொடக்க உரையில் திருத்தந்தை அவர்கள்கிறித்தவர்களின் மற்றும் ஆயர்களின் துணையாகியமரியாவின் தாய்மை உதவியை வேண்டி திருச்சங்கச் செயல்பாடுகளின் வெற்றிமிகு பலனுக்காகத் திருச்சங்கத்தையே அவரிடம் ஒப்படைத்தார் (AAS 54 [1962] 795).

திருச்சங்கத் தந்தையர்களும், சங்க நிகழ்வுகளின் தொடக்கத்தில் உலகிற்கான அவர்களுடைய செய்தியில், “திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான நாங்கள், இயேசுவின் தாயாகிய மரியாவோடு  செபத்தில் ஒன்றாக இணைந்து, ஒரே திருத்தூது அமைப்பை உருவாக்குகின்றோம் (Acta Synodalia I, I, 254) என்று கூறினர். இவ்வாறு மரியாவோடு உள்ள உறவில் ஒன்றித்து, தூய ஆவியாரின் வருகைக்காகக் காத்திருந்த தொடக்கக் காலத் திரு அவையோடு தங்களையே இணைத்து அவர்களின் சிந்தனைகளை மரியாவை நோக்கி வெளிப்படையாகவே திருப்பினர் (ஒப்பிடுக. திப 1:14).

2. திருச்சங்கத்தின் இரண்டாவது அமர்வில், திரு அவை பற்றிய சங்க ஏட்டிற்குள் கன்னி மரியா பற்றியும் பேசப்பட வேண்டும் என்ற கருத்து முன் மொழியப்பட்டது. இந்த முயற்சியானது இறையியல் ஆணையத்தால் (Theological Commission) வெளிப்படையாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், பல மாறுபட்ட கருத்துகளைத் தூண்டியது.

திரு அவையில் இயேசுவின் தாயினுடைய மிகச் சிறப்பான பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்தப் பரிந்துரையானது போதுமானதாக இல்லை என்று கருதிய சிலர், மரியாவின் மாண்பையும் மேன்மையையும் தனித்துவமிக்க புனிதத்தையும் மற்றும்  அவருடைய மகனால் கொண்டு வரப்பட்ட மீட்பில் அவரின் சிறப்பான பங்களிப்பையும் ஒரு தனிப்பட்ட சங்க ஏட்டால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற நிலைப்பாடு எடுத்தனர். இன்னும் அதிகமாக, ஒருவகையில் திரு அவையை விட உயர்ந்தவராக மரியாவைக் கருதுவதற்கு, மரியா பற்றிய போதனையைத் திரு அவை பற்றிய போதனையோடு வைப்பது என்ற முடிவானது மரியாவின் சிறப்பைப் போதுமான அளவு மையப்படுத்தாது மற்றும் திரு அவையின் மற்ற உறுப்பினர்களின் அளவுக்கு அவரின் பங்கையும் குறைக்கும் என்று பயந்தனர் (Acta Synodalia II. III, 338-342). 

எவ்வாறாயினும், மரியா மற்றும் திரு அவை பற்றிய கொள்கை வரைவை ஒரே ஏட்டில் வைப்பதற்கான இறையியல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஆதரவாக மற்றவர்கள் பேசினர். அவர்களைப் பொருத்தவரை, இறைமக்களின் அடையாளம் மற்றும் பணியை மறு கண்டுபிடிப்பு செய்வதற்கான நோக்கத்தில் இந்த உண்மைகள் திருச்சங்கத்தில் வேறுபடுத்தப்பட முடியாது. அதற்கு மாறாக, அவரின் கன்னித்தன்மை மற்றும் தாய்மையில் திரு அவையின் வகை மற்றும் முன்மாதிரியாக (type and exemplar) இருக்கின்றவரோடு அதன் நெருங்கிய தொடர்பைக் காட்ட வேண்டும். உண்மையில், திரு அவை குழுமத்தின் மாண்புமிக்க உறுப்பினர் என்ற வகையில், கன்னி மரியா திரு அவையின் கோட்பாட்டில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றார். இன்னும் அதிகமாக, மரியாவுக்கும் திரு அவைக்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்துவதனால்மறுமலர்ச்சிக் கிறித்தவர்கள் (Christians of the Reformation) திருச்சங்கத்தால் கொடுக்கப்பட்ட மரியியல் போதனையை மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும் (Acta Synodalia, II, III, 343-345).

திருச்சங்கத் தந்தையர்கள், மரியா மீதான அதே அன்பினால் உந்தப்பட்டு, வேறுபட்ட கோட்பாட்டு நிலைப்பாடு பற்றிய அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதில், அவருடைய ஆளுமையின் வேறுபட்ட அம்சங்களை ஆதரிப்பதற்கு இவ்வாறு எண்ணினர். சிலர் கிறிஸ்துவோடு கூடிய அவரின் உறவை முதன்மைப்படுத்தி மரியாவைப் பற்றிச் சிந்தித்தார்கள். மற்றவர்கள் அவரைத் திரு அவையின் ஓர் உறுப்பினராகவே கருதினார்கள்.

3. கடுமையான கோட்பாட்டு விவாதத்திற்குப் பிறகு இறைவனின் தாயின் மேன்மையையும், திரு அவையின் வரலாற்றில் அவரின் குறிப்பிடத்தக்க உடனிருப்பையும் கருத்திற்கொண்டு, திரு அவை பற்றிய திருச்சங்கத்தின் ஏட்டில் மரியா பற்றிய போதனை இடம்பெறச் செய்யலாமெனத் தீர்மானிக்கப்பட்டது (Acta Sinodalia, II, III, 627).

திரு அவை பற்றியக் கோட்பாட்டு ஏட்டில் சேர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரியா பற்றிய புதிய உருவரைத் திட்டமானது (schema), உண்மையான கோட்பாட்டு வளர்ச்சியைக் காட்டுகின்றது. மரியாவின் நம்பிக்கை பற்றிய முக்கியத்துவம் இடம்பெற்றதும் திருவிவிலியத்தை ஆதாரமாகக் கொண்டதொரு மரியா கோட்பாட்டை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட அக்கறையும் குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. மேலும், கடவுளின் தாய்க்கான கிறித்தவர்களின் பக்தி மற்றும் மதிப்பை வளப்படுத்துவதற்கான கூறுகளாகவும்  பயன்படுகின்றன.

காலம் செல்லச் செல்ல சில சங்கத் தந்தையர்களால் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட குறைப்பு வாதமானது (Reductionism) அபாயம் இல்லாத ஒன்றாக நிரூபிக்கப்பட்டது. மரியாவின் பணியும் சிறப்புகளும் மிகப்பெரிய அளவில் மறுபடியும் உறுதி செய்யப்பட்டன. மீட்பின் இறைத்திட்டத்தில் அவரின் ஒத்துழைப்பானது தெளிவாகத் தெரியும்படியாகச் செய்யப்பட்டது; கிறிஸ்துவின் தனிப்பட்ட பங்கோடு இந்த ஒத்துழைப்பானது பொருந்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

முதன்முறையாக, திருச்சங்க ஆசிரியமானது (conciliar Magisterium) திரு அவைக்குக் கிறிஸ்துவின் மீட்புப் பணியில் மற்றும் திரு அவையின் வாழ்வில் மரியாவினுடைய  பங்கின் கோட்பாட்டு நிலைப்பாட்டை உருவாக்கியது. இவ்வாறு, பிந்தையக் கோட்பாட்டு வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததை நிரூபிக்கக்கூடியதாக இருந்த திருச்சங்கத் தந்தையர்களின் இந்தத் தேர்வை நாம் உண்மையிலேயே நல்லதொரு முடிவாக இருந்திருக்கிறதென்று கருத வேண்டும்.

4. திருச்சங்க அமர்வின்பொழுது, மீட்புப் பணியில் மரியாவின் பங்கு பற்றிய மரியியல் கோட்பாட்டை மற்றக் கூறுகளோடு மேலும் வளப்படுத்துவதற்கு அநேகத் தந்தையர்கள் விரும்பினார்கள். இரண்டாம் வத்திக்கான் சங்க மரியியல் விவாதம் இடம்பெற்ற அந்தக் குறிப்பிட்ட சூழல் வலிமையான மற்றும் பரந்துபட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டாலும், அந்த விருப்பங்களை அனுமதிக்கவில்லை. ஆனால், சங்கத்தின் ஒட்டுமொத்த மரியா பற்றிய விவாதமானது, உயிரோட்டமான மற்றும் சமநிலை கொண்டதாக இருந்தது. மேலும், தலைப்புகள் முழுமையாக வரையறுக்கப்படாமல் இருந்தாலும், ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறையும் குறிப்பிடத்தக்கதொரு கவனத்தைப் பெற்றது

சமநிலை கொண்டதொரு மரியியல் கோட்பாட்டு  சித்தரிப்பு

இவ்வாறு, மரியாநடுநிலையாளர்என்ற பட்டத்தைப் (the title of Mediatrix) பொறுத்தவரை சில தந்தையர்களின் தயக்கம் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதிலிருந்தோ மற்றும் மற்றொரு கருத்து கூற்றில், அருளின் வரிசையில் அவருடைய தாய்மைக்கான வானதூதரின் செய்திக்கான அவருடைய ஒப்புதலிலிருந்தோ  தடுக்கவில்லை (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திருச்சபை, எண்.62). மேலும், திருச்சங்கமானது ஆன்மாக்களுக்கான உயர்நிலை வாழ்வை மீட்டுக்கொடுக்கும் பணியில்முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த முறையில்  மரியாவின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது (ibid., v©. 61). இறுதியாக, திருச்சங்கமானதுதிரு அவையின் தாய்என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்தாலும்கூட, ‘இன்றைய உலகில் திரு அவைஎன்ற ஏடானது மிகவும் அன்புக்குரிய தாய் என்ற வகையில் திரு அவையின் மரியாவுக்கான வணக்கத்தைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

திரு அவை பற்றிய சங்க ஏட்டின்  (Lumen Gentium/ இறைத்திட்டத்தில் திருச்சபை) 8-வது இயலில் உள்ள முழு விளக்கமும் மிகவும் வளமையான மற்றும் நேர்மறையான அடிப்படைக் கோட்பாட்டின் விளக்கத்தைத் தடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது திரு அவையானது அதன் தாய் மற்றும் முன்மாதிரியாக மரியாவை அங்கீகரிக்கும் நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடாகும்.

மேலும், திருச்சங்கத் தந்தையர்களின் விவாதத்தின்பொழுது அவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டாலும், அவை நம்பிக்கைக்கு உரியவைகளாக மாறின. ஏனெனில், இணக்கமான உறவின் அடிப்படையில், திருச்சங்கத் தந்தையர்கள் கிறித்தவ மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் இன்னும் முழுமையாக்கியுள்ளனர். மேலும், கிறித்தவ மக்களின் நம்பிக்கை மற்றும் பக்திக்கு இறை அன்னையின் அற்புதமான அடையாளத்தையும், மீட்புப் பணியில் அவரது தனித்துவம் மிக்க பங்கையும் விளக்கும் வகையில் இன்னும் முழுமையான மற்றும் சமநிலையான விளக்கத்தை அளித்துள்ளனர்.

மூலம்: Pope John Paul II, Council\\\'s teaching on Mary is rich and positive, in kL\\\'Osservatore Romano , Weekly Edition in English, 20/27 December 1995, p.13.

news
ஆன்மிகம்
கடவுளுக்கு மிக அருகில்! (கண்டனையோ, கேட்டனையோ! – 27)

எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற விருதுவாக்கோடு  ஜூபிலி ஆண்டு-2025 பல இடங்களில் கோலாகலமாகவும், சில இடங்களில் கோலாகலகமாகவும்துவங்கியுள்ளது. ‘Synod on Synodalityஆர்ப்பாட்டங்கள் மெல்ல ஓய்ந்து இப்போது ஜூபிலி!

திரு அவையில் நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கு ஏதாவது  தலைப்பு தேவை. அடுத்த ஒரு வருடத்திற்குஎதிர்நோக்கு, ‘திருப்பயணம், ‘பயணிகள், ‘இலக்குபோன்ற வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். காது வலிக்கும். ஆனால், அசரக்கூடாது. ஒவ்வொரு முறையும் அவற்றைக் கேட்கும்போதும் முதன்முறை கேட்பது போலவே உங்கள் முகத்தை வைத்துக்கொள்ளும்படி மிகத் தாழ்மையுடன் உத்தரவிடுகிறேன்.

நாம் எல்லாரும் ஆதாரமாகப் பயணிகள். பிலிப்பியர் திருமுகத்தில் புனித பவுலடியார் கூறுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் (பிலிப்பியர் 3:13). எது? எந்த இலக்கு? என்ன அந்தப் பரிசு?

அண்மையில் என் பங்கில் யாழினி என்ற இரண்டாவது படிக்கும் சிறுமி, நான் வைத்த பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் boycott செய்தாள். “ஏன் போட்டிக்கு வரவில்லை?” என்று கேட்டேன். அவள்ஆமாம், எப்பப் பார்த்தாலும் ஒரு சோப்பு டப்பாவையும், டபாரா தட்டையும் பரிசா தர்றீங்க. இதுக்கு நாங்க கஷ்டப்பட்டு சாக்குக்குள்ள கால விட்டுக்கிட்டு ஓடணும். போங்க ஃபாதர்... நான் வரலைஎன்று பதில் கூறிவிட்டாள். அந்தச் சோப்பு டப்பாவிற்குக் காசு சேர்க்க நான் படும் பாடு அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைஅடுத்த முறையிலிருந்து பெண் போட்டியாளர்களுக்குப் பவுடர், லிப்ஸ் டிக், Fair & Lovely போன்ற பயனுள்ள பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.  

தூய பவலடியார் குறிப்பிடும் பரிசு என்ன? “கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்என்று பிலிப்பியர் 3:14 கூறுகிறது. அதை நிலை வாழ்வு, இளைப்பாறுதல், பேரின்பம், நிறைவு, துன்பங்களற்ற நிலை, விண்ணகம் என்று பல வகைகளில் அர்த்தம் செய்துகொள்ளலாம். இந்த அர்த்தங்கள் எல்லாவற்றையும் தன்னுள் மடித்து வைத்துள்ள ஓர் அழகிய விவிலியப் படிமம் - புதிய எருசலேம் நகர்! விண்ணகத்திற்கு மற்றொரு பெயர் அது. திருவிவிலியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள், இந்த வார்த்தை ஆங்காங்கே தலைகாட்டுவதைக் கவனித்திருக்கலாம். இது ஒரு மிக முக்கிய இறையியல் சொல்லாடல். ரியல் எஸ்டேட்காரர்கள் கொடுக்கும் விளம்பரங்களில், ‘சென்னைக்கு மிக அருகில்என்ற வாக்கியம் கட்டாயம் இருக்கும். புதிய எருசலேம் - கடவுளுக்கு மிக அருகில் உள்ள நகர்!

இறைவாக்கினர் எசாயா நூலில் புதிய எருசலேம் நகர் படிமம்இஸ்ரயேல் மக்களின் மறுசீரமைப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது வரவிருக்கின்ற எதிர்கால ஆசிர்! “இதோ! புதிய விண்ணுலகையும், புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன் (எசாயா 65:18-18) போன்ற வரிகள் ஓர் அலைபாயும் மக்கள் இனத்திற்கு எவ்வளவு நம்பிக்கை தந்திருக்கும் என்று யூகிக்கலாம்அழுகையில்லாத கடவுளால் மிக அந்தரங்கமாகப் பராமரிக்கப்படுகிற ஒரு வாழ்வை எசாயா அவர்கள் முன்வரைந்து காட்டுகிறார். “நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள் (எசா 66:12).

எசேக்கியேல் நூலில், “புதிய எருசலேம் நகர்படிமம் கடவுளுடைய நிரந்தர உடனிருப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஆண்டவரின் மாட்சிமை கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலுள் நுழைந்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.” உண்மையில் எசேக்கியேல் நூலில் இந்தப் புதிய நகரின் பெயரே, ‘ஆண்டவர் இங்கு இருக்கிறார்என்பதுதான் (எசே 48:35). 

எசாயா மற்றும் எசேக்கியேலிடமிருந்து இப்படிமத்தைக் கடன் வாங்கும் திருவெளிப்பாடு ஆசிரியர், அதை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார்.   பழைய ஏற்பாட்டு நூல்களில்புதிய எருசலேம் நகர்வரலாற்றில் வரவிருக்கிற ஒரு வளமான காலத்தைக் குறித்தது. திருவெளிப்பாடு நூலில் அது வரலாறு கடந்த நிலையான பேரின்பத்தைக் குறிக்கும் படிமம். திருவெளிப்பாடு  21 மற்றும் 22-ஆம் பிரிவுகளில் முழுவீச்சில் பயன்படுத்தப்படும்புதிய எருசலேம் நகர்படிமத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள், இந்த நகரின் சிறப்புகள் என, பத்து பண்புகளை அடையாளம் காட்டுகிறார்கள்அவை இவை...

தலைநகரம்: புதிய படைப்பின் தலைநகராகஎருசலேம் நகர்செயல்படும். “பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும், புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்என்று திவெ 21:1-2 கூறுகிறது. சென்னை, இலண்டன், பாரிஸ் போன்ற உலகின் விருப்ப நகரங்கள் தங்கள் தலைமை அந்தஸ்தை இழக்கும். உலகம்  முழுவதும்ஒரே நாடு, ஒரே தலைநகர்என்ற நிலை ஏற்படும். ‘ஒரே தேர்தல்மட்டும் இருக்காது.         

பொதுத்தன்மை: புதிய எருசலேம் நகரில் எல்லா வகை மக்களும் இருப்பார்கள். மொழி, இன, சமயப் பேதங்கள் இருக்காது. குறிப்பாகஆண்ட சாதியினர்இருக்க மாட்டார்கள். “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து...” (லூக் 13: 29); “மக்கள் வந்து திருநகரில் குடியமர்வார்கள்கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள் (திவெ 21:3). திருத்தந்தை பிரான்சிஸ் திரும்பத் திரும்பக் கூறுவது போல, அங்கேஎல்லாருக்கும், எல்லாருக்கும், எல்லாருக்கும்...’  இடம் இருக்கும்.

புன்னகை நிலம்: திருநகரில் யாரும் அழமாட்டார்கள். கண்ணீர் இருக்காதுஏனென்றால், கடவுள்தாமேகண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார் (திவெ 2:14). சாவு இருக்காது; துயரம் இருக்காது; வலி இருக்காது; ‘ஆதித்யாசானல் போல மக்கள் 24 மணி நேரமும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்று கூறலாம். ஆனால், அதில் ஒரு பிரச்சினை... நேரமும் இருக்காது.

புனித பூமி: திருநகர் ஒரு பாவம் இல்லாத நிலம். ‘பேக்கேஜ் டூர்ஆள்கள் விளம்பரம் செய்வது போல, அப்போது எருசலேம் நகர் உண்மையிலே ஒரு புனித பூமியாக இருக்கும். “தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் அதில் நுழையாது. அதுபோல் அருவருப்பானதைச் செய்வோரும் பொய்யரும் அதில் நுழைய மாட்டார்கள் (திவெ 21:27).

அழகொளி: பெண்கள் மிக அழகாகத் தெரிவது அவர்களின் திருமண நாளில்தான். புதிய எருசலேம் நகர்  “மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகள்என்று திவெ 21:2 சொல்கிறதுநகரின் அழகுக்கு ஆசிரியர் உத்தரவாதம் தருகிறார். புதிய படைப்பில் நிலா, கதிரவன் போன்றவை இருக்காது; கடவுளின் மாட்சியே நகரின் ஒளியாக இருக்கும் (திவெ 21:23). விலையுயர்ந்த படிகக்கல் போன்று நகரின் ஒளிபளிங்கெனத் துலங்கியதாம் (திவெ 21:11). மின்வெட்டு இருக்காது. ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் வாங்க வேண்டாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை EB பில்-ஐப் பார்த்து மயக்கம் போடும் என் போன்ற ஏழைப் பங்குப் பணியாளர்களுக்கு நிம்மதி தரும் செய்தி இதுவிலையில்லா, நிரந்தர, அழகிய ஒளி!

கோபுரங்கள்: நகரைச் சுற்றி 12 கோபுர வாயில்கள் இருக்கும். புதிய எருசலேம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட நகர். ஒரு பக்கத்திற்கு மூன்று வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகை முத்தால் ஆனது (திவெ 21:21). “இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன (திவெ 21:12). அவற்றின் வழியாக மக்கள்tollகட்டாமல் நுழைவார்கள்.

மாநகரக் காவல்:வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள்என்று திவெ 21:12 கூறுகிறது. திருநகரில் வாழ்வோர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. காவலர்கள் இருப்பதால் ஏதும் ஆபத்து வெளியிலிருந்து வரும் என்று அர்த்தம் இல்லை. மக்களின் பாதுகாப்பு உணர்வை அதிகப்படுத்துவதற்காகவே இந்த ஏற்பாடு. திருநகரில் வாழ்பவர்கள் உண்மையிலேயேஉன்னதரின் நிழலில் தங்கியிருப்பவர்ஆவர் (திபா 91:1).

முடிவிலி: புதிய எருசலேம் நகரில் வாழ்பவர்களுக்கு ஆப்பிள் பயன்படும். கடித்துத்  தின்னலாம். ஆனால், ‘ஆப்பிள் வாட்ச்பயன்படாது. ஏனென்றால், அங்கு நேரம் இருக்காது. இரவு இருக்காது. பகல் இருக்காது. போரடிக்காது. காலம் முன்னுக்கும் செல்லாமல், பின்னுக்கும் செல்லாமல், ஆணியடித்த மாதிரி ஒரே இடத்தில் நிற்கும், நிரந்தர ஒற்றைக் கணத்தில் வாழும் முடிவிலி வாழ்க்கை அது. எனவேதான்திருநகரின் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது  என்று திவெ 21:25 கூறுகிறது.

சதுர நகரம்:செம்மையாக ஒருங்கிணைத்துக் கட்டப்பட்ட நகர்என்று திபா 122:3 பழைய எருசலேம் குறித்துச் சொல்லும் வார்த்தைகள் புதிய எருசலேமுக்கும் பொருந்தும். “அந்நகரம் சதுரமாய் இருந்தது; அவர் அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்என்று திவெ 21:16 கூறுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 52 வழியாகப் பயணம் செய்தால், டெல்லிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தூரம் 2,700 கிலோ மீட்டர்கள். ஆக, புதிய எருசலேம் நகரின் ஒரு பக்கம் ஏறக்குறைய இந்தியாவின் வடக்கு-தெற்கு எல்லைகளுக்கு இடையே உள்ள தூரத்தின் அளவை ஒத்தது. திருநகரின் உயரம் இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. Mind-boggling proportions for a city! இது போதாதென்று நகரின் தெருதெள்ளத் தெளிவான கண்ணாடி போன்ற பசும்பொன்னால்செய்யப்பட்டிருக்குமாம்! (திவெ 21: 21). நம் ஆள்கள் வெட்டி வியாபாரம் பண்ணாமல் இருந்தால் சரி!

அரியணை:  புதிய எருசலேம் நகரில் கோவில் இருக்காது. கடவுளும் ஆட்டுக்குட்டியுமே நகரின் கோவிலாக இருப்பார்கள் (திவெ 21:22). நகரின் மையத் தெருவில் கடவுளின் அரியணை வீற்றிருக்கும். கடவுளின் பணியாளர்கள் ஆட்டுக்குட்டியை வழிபடுவார்கள். அவர் முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் (திவெ 22:4). அதுதான் அவர்களுடைய ஒரே அடையாள அட்டை. ஆதார் கார்டு தேவையில்லை.

புதிய எருசலேம் நகர் குறித்து வாசிக்க வாசிக்க, அதைப் பற்றிக் கூடுதலாக யோசிக்க யோசிக்க எனக்குத் தோன்றும் சிந்தனையெல்லாம்என்று நுழைவேன் இந்த அழகு நகருக்குள்?!’ என்பதுதான்.

உங்களுக்கு?             

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்).

news
ஆன்மிகம்
எதிர்நோக்கின் திருப்பயணம்! முதல் திருப்பயணி திருத்தந்தை பிரான்சிஸ் (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை – 02)

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது (உரோமையர் 5:5) என்று உரோமை மக்களுக்குப் புனித பவுல் எடுத்துரைத்த நம்பிக்கையான இறைவார்த்தை 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலி ஆண்டின் மையக்கருப்பொருளாக அமைந்துள்ளது. ‘எதிர்நோக்கின் பயணிகள்என்ற மையச்சிந்தனையோடு, வாழ்வைக் கொண்டாட இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் இந்த யூபிலி ஆண்டு.

யூபிலி ஆண்டு என்பது மக்கள் தங்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், தங்களின் பாவங்களுக்காக வருந்தவும் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கவும் திருப்பயணம் மேற்கொள்ளவும் பிறரன்புப் பணிகளைச் செய்யவும் முழுமையான இன்பத்தோடு வாழ்வதுதான் என்பதை லேவியர் 25:8-13 இறைவார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த இறைவார்த்தைதான் யூபிலி ஆண்டிற்கான அடித்தளம்.

எபிரேய வார்த்தையான  ‘யோபெல் (yobel) அடிமைகளின் விடுதலை ஆண்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு 50-வது வருடமும் விடுதலையின் ஆண்டாகக் கொண்டாடப்பட குறிக்கும் வார்த்தை. iobeleus என்ற இலத்தீன் வார்த்தை yobel என்ற எபிரேய வார்த்தையிலிருந்து வந்தது. இலத்தீன் வார்த்தை iubilare என்பதற்குமகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிப்பதுஎன்பது பொருள். ‘ஜூபிலிஎன்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் வார்த்தையான iobelens என்பதிலிருந்து வந்தது. பெரும்பாலும் மன்னர்களின் ஆட்சியுடன் தொடர் புடைய கொண்டாட்டங்களைக் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்றில் யூபிலி ஆண்டு எப்பொழுது தொடங்கப்பட்டது? கி.பி. 1300-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி திருத்தந்தை எட்டாவது போனிஃபாஸ் முதல் யூபிலி ஆண்டைக் கொண்டாடினார். ஒவ்வொரு 100 வருடத்திற்கு ஒருமுறை எனக் கொண்டாடப்பட்ட யூபிலியை, 1343 -ஆம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட் 50 வருடங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைத்தார். 1389-ஆம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் அர்பன் கிறிஸ்துவின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றம் கொண்டு வந்தார். பின்னர் 1470-ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் பவுல் 25 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடலாம் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். இந்த முறையைத்தான் இன்றும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

வரலாற்றில் இரண்டு வகையான யூபிலி ஆண்டைக் கொண்டாடி வருகின்றோம். ஒன்று, வழக்கமான யூபிலி; மற்றொன்று, சிறப்பான தருணங்களில் கொண்டாடப்படும் யூபிலி.

சிறப்புத் தருணங்களில் கொண்டாடப்பட்ட யூபிலிகள்

1933-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் 1900-ஆம் ஆண்டை இயேசுவின் மரணத்தைக் குறிக்கும் வகையில் சிறப்பு யூபிலியை முதன்முறையாகக் கொண்டாடினார்.

1983-ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதலின் 1950-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டு, சிறப்பு செய்யப்பட்டது

2016 -ஆம் ஆண்டு மக்கள், இறைவனின் இரக்கத்தை முழுமையாக அனுபவிக்க இரக்கத்தின் மாபெரும் யூபிலி ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.

வருகின்ற 2033-ஆம் ஆண்டை, இயேசுவின் 2000-ஆம் ஆண்டு இறப்பு, உயிர்ப்பைக் கொண்டாடும் வகையில் சிறப்பான யூபிலியாகக் கொண்டாடலாம் என்ற திட்டமும் உள்ளது.

இவ்வருட யூபிலி ஆண்டின் முக்கியத்துவம் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளிவந்த 60-வது வருடத்தை நினைவுகூருதல்; மேலும், இயேசு பிறந்து 2025 வருடத்தின் நிறைவை நினைவுகூர்ந்து கொண்டாடுவது இந்த யூபிலி 2025-இன் நோக்கம். இந்த யூபிலி ஆண்டைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வத்திக்கானில் தொடங்கினார். 2026 -ஆம் ஆண்டு ஜனவரி 06 -ஆம் தேதியுடன் யூபிலி நிறைவுபெறுகின்றது.

யூபிலி ஆண்டின் தொடக்க நிகழ்வு டிசம்பர் 24 -ஆம் தேதி வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் திருத்தந்தை திறந்துவைத்து ஆரம்பித்தார்.

புனிதக் கதவு என்பது வெளிப்புற அடையாளத்தைவிட ஆன்மிக அடையாளம் என்பது முக்கியம். ஆயன் தன் மந்தைகளைத் தன் கொட்டிலுக்குள் வருவதை உறுதி செய்வதுதான் இந்தப் புனிதக் கதவின் நோக்கம். புனிதக் கதவுக்குள் மக்கள் நுழைவது என்பது தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்கத் திரு அவை கிறிஸ்துவின் ஒவ்வொரு செயலிலும் பெருமை கொள்கிறது. இருப்பினும், அவளுடைய உயர்ந்த மகிமை சிலுவையாகும்என நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த எருசலேமின் புனித சிரில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட புனித சிலுவை, யூபிலி ஆண்டின் புனிதக் கதவு வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இச்சிலுவை இத்தாலிய கைவினைக் கலைஞர் ரிக் கார்டோ இஸி என்பவரால் உருவாக்கப்பட்டது. சிலுவையின் மறுபுறம் 2025 யூபிலின் அதிகாரப்பூர்வ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது, இது உலகம் முழுவதிலுமிருந்து வரும் நம்பிக்கையாளர்களின் சின்னமாகும்.

யூபிலி ஆண்டின் இலச்சினையில் நான்கு உருவங்கள் உள்ளன. அவை நான்கு வெவ்வேறு நிறங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இது உலகின் நான்கு திசைகளிலிருந்து வரும் மக்களைக் குறித்துக்காட்டுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் பிணைப்போடு, இணைந்து வருகின்றார்கள். இது அவர்கள்திருப்பயணிகள்என்பதையும், அனைவரும் தனித்தனியாக இல்லாமல், இணைந்து, ஒற்றுமையுடன் வருவதைக் குறித்துக் காட்டுகின்றது. அவர்கள் அனைவரும் சிலுவையை நோக்கி வருகின்றார்கள். சிலுவை என்பது நம்பிக்கையின் சின்னம். அமைதியற்ற நீர் குறியீடு என்பது வாழ்க்கையில் நாம் அமைதியற்ற நிலையில் இருக்கின்றோம்; நாம் அமைதியோடு வாழ நங்கூரமாக இருக்கும் சிலுவையைப் பற்றிக்கொண்டு வாழ்வதைக் குறித்துக்காட்டுகின்றது.

news
ஆன்மிகம்
இறைவேண்டலின் பரிமாணங்கள் – 34

நம்பிக்கையே இறைவேண்டல்

இறைவேண்டலின் அடித்தளமே நம்பிக்கைதான். இறைநம்பிக்கை இருப்பதால்தானே நாம் இறைவேண்டல் செய்கிறோம்? நம்பிக்கையின்றி நாம் எப்படி இறைவேண்டல் செய்ய இயலும்?

பல கிறித்தவர்களின் வாழ்வில் தனி வேண்டலோ, குடும்ப வேண்டலோ இல்லாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்களது நம்பிக்கையின்மை அல்லது நம்பிக்கைக் குறைவே. “அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்?” (உரோ 10:14) என்னும் இறைமொழி நம்பிக்கைக்கும் இறைவேண்டலுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்கிறது.

நம்பிக்கை என்றால் என்ன?’ என்பதை எபிரேயர் திருமடல் இவ்வாறு வரையறுக்கிறது: “நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). இந்த நம்பிக்கையே இறைவனோடு உள்ள தொடர்பின் தொடக்கம், இறைவேண்டலின் அடிப்படை.

இறைநம்பிக்கை என்றதும் நம்பிக்கையின் தந்தையான ஆபிரகாமின் நினைவுதானே நம் உள்ளத்தில் எழுகிறது. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொநூ 15:6) என்பதுதான் ஆபிரகாமின் நம்பிக்கை பற்றிய முதல் திருவிவிலியச் செய்தி. அவரது நம்பிக்கையைப் புதிய ஏற்பாட்டின் உரோமையர் திருமடல் (4:3, 4:19-20), கலாத்தியர் திருமடல் (3:6), யாக்கோபின் திருமடல் (2:23) ஆகியன பாராட்டுகின்றன.

குறிப்பாக, “தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை. கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை. நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார் (உரோ 4:19-20) என்னும் இறை மொழி, முகாமையான ஒரு செய்தியைச் சொல்கிறது. ஆபிரகாம் தன் நம்பிக்கையால் கடவுளைப் பெருமைப்படுத்தினார் என்பதே அது. ஆம், நிறைவான நம்பிக்கையே மிகச் சிறந்த இறைப்புகழ்ச்சிதான்.

யாக்கோபு தான் இறக்கும்முன் யோசேப்பின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கியதும், தன் ஊன்றுகோலின்மேல் சாய்ந்து கடவுளைத் தொழுததும் நம்பிக்கையினால்தான் (எபி 11:21) என்கிறது எபிரேயர் திருமடல். நம்பிக்கை இருந்தால்தான் நாம் இறைவனைத் தொழமுடியும்.

இயேசுவின் கீழ்ப்படிதலைப் புகழ்ந்து பாடும் கிறிஸ்தியல் பாடலில், “இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காகஇயேசு கிறிஸ்து ஆண்டவர்என எல்லா நாவுமே அறிக்கையிடும் (பிலி 2:10-11) என்று எழுதுகிறார் பவுலடியார். எப்போதெல்லாம்இயேசுவே ஆண்டவர்என்று நமது நம்பிக்கையை அறிக்கையிடுகிறோமோ, அப்போதெல்லாம் தந்தையாம் கடவுள் மாட்சியடைகிறார் என்பதே அதன் பொருள். ஆம், நம்பிக்கையே மிகச்சிறந்த இறைமாட்சி. நம்பிக்கை அறிக்கையே ஓர் இறைப்புகழ்ச்சிதான் என்பதற்கு இன்னொரு சான்றாகஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்என்று சொன்னேன் (திபா 31:14:) என்று திருப்பாடல்கள் நூலில் வாசிக்கிறோம்.

நாம் இறைவேண்டல் செய்யும்பொழுது நம்பிக்கையுடன் கேட்க வேண்டும் என்பது இயேசுவின் போதனை. “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் (மத் 21:22) என்று கற்பித்தார் இயேசு.

தமது சீடர்கள் இறைநம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பது இயேசுவின் கரிசனைகளில் ஒன்றாக இருந்தது. எனவேதான், “நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து (லூக் 22:32) என்று பேதுருவிடம் கூறினார் இயேசு. நம் அனைவரின் நம்பிக்கையும் தளராதபடி நமக்காக இயேசுவே பரிந்து மன்றாடுகிறார் என்பது எத்துணை ஆறுதலான செய்தி!

தூய ஆவியாரின் துணையின்றி நாம் இறைவேண்டல் செய்ய இயலாது என்பதை இறைவார்த்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதுபோலவே, நம்பிக்கையின்றி தூய ஆவியாரின் கொடைகளைப் பெற இயலாது என்பதையும் திருவிவிலியம் நமக்குச் சொல்லித் தருகிறது. “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்என்று இயேசு உரத்தக் குரலில் அறிவித்ததைப் பதிவு செய்யும் யோவான், “தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு கூறினார் (யோவா 7:37-39) என்று விளக்கம் தருகிறார்

அதுபோலவே, எபேசு நகரில் பவுல் சில கிறித்தவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம்நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?\" (திப 19:2) என்று கேட்டார். தூய ஆவியாரைப் பெறுவதற்கான அடிப்படை நமது நம்பிக்கையே. தூய ஆவியாரின் துணையால்தான் நாம் இறைவேண்டல் செய்ய இயலும். எனவே, இறைவேண்டலுக்கு நம்பிக்கை அவசியம் தேவைப்படுகிறது.

நம்பிக்கையே இறைவேண்டலின் அடித்தளம் என்பதைநம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும், அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும் (எபி 11:6) என்னும் இறைமொழி எடுத்துச்சொல்கிறது.

நமது இறைவேண்டலின் தரம் அதிகரிக்க வேண்டுமென்றால், நமது நம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும். இயேசுவின் சீடர்களைப்போல நாமும்எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்\" (லூக் 17:5) என்று மன்றாடுவோமாக!

news
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 08

பெண்களின் பங்களிப்பை வெளிச்சமிட்டுக் காட்டும் அன்னை மரியா (Mary sheds light on role of women)

1. மீட்பின் இறைத்திட்டத்தில் மரியாவுக்கு வழங்கப்பட்ட பங்கானது சமூக மற்றும் திரு அவையின் வாழ்வில் பெண்களுடைய அழைத்தலை, ஆணுடனான வேறுபாட்டை வரையறுப்பதன் வழியாக வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது என்று ஏற்கெனவே இதற்கு முந்தைய மறைக்கல்வியில் நான் விளக்கியிருந்தேன். மரியாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்த முன்மாதிரியானது (model) பெண்ணிய ஆளுமைக்கான குறிப்பிடத்தக்கதொரு தன்மையைக் காட்டுகின்றது.

பெண் விடுதலையின் முன்னேற்றத்திற்கான பெண்கள் இயக்கத்தின் சில போக்குகள் (trends) கடந்த சில ஆண்டுகளில் மரியாவை எல்லா வகையிலும் ஓர் ஆணாகவே சித்தரிப்பதற்குத் தேடின. இருப்பினும், படைப்பில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் எண்ணமானது, மாண்பிலும் தகுதியிலும் ஆணுக்கு இணையாக இருப்பதற்கு பெண் விரும்பும் அதே நேரத்தில், மரியாவின்  வேற்றுமைகள் மற்றும் சிறப்பு இயல்புகளைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. மரியா என்றும் பேணிக்காக்கப்பட வேண்டிய மற்றும் ஊக்கமூட்டப்பட வேண்டிய ஒரு தனிச்சிறப்பைக் கொடுக்கின்ற, அவருக்கே உரிய குணங்களோடும் சிறப்பு அம்சங்களோடும் நிரப்பப்பட்டிருப்பதால், பெண்ணின் அடையாளமானது ஆணின் ஒரு பிரதியாக (copy of man) இருப்பதில் அடங்கியிருக்கவில்லை. இந்தச் சிறப்புரிமைகள் மற்றும் பெண் ஆளுமையின் குறிப்பிட்ட அம்சங்கள் மரியாவில் அவற்றின் முழு வளர்ச்சியை அடைந்தன. தெய்வீக அருளின் முழுமை உண்மையில் பெண்ணின் அனைத்து இயல்பான திறன்களையும் அவளில் வளர்த்தது.

உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்!

மீட்புப் பணியில் மரியாவின் பங்கானது முழுமையாகக் கிறிஸ்துவையே சார்ந்திருந்தது. இது கிறிஸ்து பிறப்பின் மறை பொருளை நிறைவேற்றுவதற்காகத் தேவைப்பட்ட ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும். மரியாவின்  தாய்மையானது உலகிற்கு உண்மையிலேயே இறைமகனாகிய, ஆனால் முழு மனிதராகிய மீட்பரைத் தருவதற்குத் தேவையானதொன்றாக இருந்தது.

கிறிஸ்துவின் வருகையில் பெண்ணின் ஒத்துழைப்பின் முக்கியத்துவமானது, முழு அறிவோடும் சுதந்திரத்தோடும் அவருடைய தாராள விருப்பத்தைத் தருவதனால், வானதூதர் வழியாக நாசரேத்தூர் கன்னிக்கு மீட்பின் திட்டத்தைத் தெரிவித்த கடவுளின் முயற்சியில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

இங்கு மனிதனின், அதாவது, ஒவ்வொரு மனிதனின் மீட்பிலும் பெண்ணின் ஒத்துழைப்பின் உயர்ந்த மாதிரியானது நிறைவு பெறுகின்றது. இந்த மாதிரியானது வரலாற்றில் பெண்ணின் பங்கு மற்றும் செயல்பாட்டின் ஒவ்வோர் உறுதிப்பாட்டிற்கும் அற்புதமானதொரு குறிப்பை உணர்த்துகின்றது.

2. இந்த உன்னதமான ஒத்துழைப்பை நிறைவேற்றுவதில் பெண்ணானவள் அவளுடைய பணியை எந்தவகையில் தீர்க்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை மரியா பெண்களுக்குக் காண்பிக்கின்றார்.

வானதூதருக்கான செய்தியைப் பொறுத்தவரை, மரியா அவருக்கென்று எந்தவொரு பெரிய கோரிக்கையையும் வைக்கவில்லை. மேலும், அவர் தனது சொந்த இலட்சியத்தைத் திருப்திப்படுத்தவும் வழி தேடவில்லை. இறைவனின் மீட்பின் திட்டத்தை முழுமையாக மற்றும் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வதில், அவருடைய தாழ்ச்சிமிக்க பணியைச் செய்வதற்குத் அவர் தயாராக இருந்ததாகவே லூக்கா நற்செய்தியாளர் நமக்குச் சித்தரிக்கின்றார்: “இதோ ஆண்டவருடைய அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் (லூக் 1:38). இதுவே மரியாவின்  பதிலின் அர்த்தமாக இருக்கின்றது.

மரியாவின்  பதிலானது ஒரு கன்னியாக நிலைத்திருப்பதற்கான அவருடைய எண்ணத்திலிருந்து எழுவதாலும், தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே கொடுக்கப்பட்டதாலும், ‘இது ஏதோ ஒரு முழுமையான ஈடுபாடு இல்லாத ஓர் ஏற்றுக்கொள்ளுதலினுடைய பதிலோ?’ என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. ஏனென்றால், இது இறைவனையே முழுமையாகச் சார்ந்திருப்பதற்கான அவருடைய எண்ணத்திலிருந்து தூண்டப்பட்டதொன்றாகும்.

வானதூதரின் பதிலைப் பெற்றபின் தாழ்ச்சிமிக்கதொரு பணியைச் செய்வதற்கான மனநிலையில், மரியா தனது தற்கையளிப்பை உறுதியோடு உடனே வெளிப்படுத்துகின்றார்.

இதைத்தான் மரியாவின்  எடுத்துக்காட்டைப் பின்பற்றி, தாழ்ச்சிமிக்க மற்றும் மதிப்புமிக்க பணியைச் செய்கின்ற அநேக பெண்கள் கிறிஸ்துவின் அரசு வளர்ச்சியடையத் தங்களையே திரு அவைக்கு அளித்தார்கள் மற்றும் அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

3. மரியாவின் உருவமானது இன்றைய பெண்களுக்குத் தாய்மையின் மதிப்பை நினைவுறுத்துகின்றது. நாம் வாழ்கின்ற இன்றைய உலகில் சரியான மற்றும் நிறைவான முக்கியத்துவமானது இந்த மதிப்பீட்டிற்கு எப்பொழுதும் கொடுக்கப்படுவதில்லைசில நிகழ்வுகளில், பெண்கள் அவர்களின் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை மற்றும் சுதந்திரம் பற்றிய தவறான எண்ணம், அதாவது, குழந்தை பராமரிப்பைப் பெண்ணின் சுய உரிமைக்கான மற்றும் சந்தர்ப்பங்களுக்கான தடையாகப் பார்ப்பது, இவை பெண்மையின் ஆளுமையின் வளர்ச்சிக்கான தாய்மையின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கின்றது. மாறாக, மற்ற நிகழ்வுகளில், உடலியல் சம்பந்தமான குழந்தை பிறப்பின் அம்சமானது, தாயாக இருப்பதற்கான அவளின் இயல்பிலேயே கொடுக்கப்பட்ட அழைத்தலை வெளிப்படுத்தக்கூடிய மற்ற குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களை மங்கச் செய்கின்ற அளவுக்கு மிக முக்கியமானதொன்றாக ஆகிவிடுகின்றன.

மரியாவில்  நாம், மீட்பிற்கான இறைத்திட்டத்தில் அதனுடைய உயர்ந்த பரிமாணத்தை அடைகின்ற தாய்மையினுடைய உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். தாயாக இருப்பதென்பது மரியாவுக்கு  அதனுடைய முழு வளர்ச்சியோடு வாழ்வெனும் கொடையை நோக்கி இட்டுச்செல்கின்ற பெண்மையினுடைய ஆளுமைக்கான கொடையைக் கொடுக்கின்றது. மேலும், கடவுளின் உடன்படிக்கையின் ஒளியில் மட்டுமே அதனுடைய உண்மையான மதிப்பை ஏற்கக்கூடிய பெண்ணின் சொந்த அழைத்தலுக்கு நம்பிக்கையின் ஒரு பதிலாகவும் இருக்கின்றது  (ஒப்பிடுக. பெண்ணின் மாண்பு, எண். 19).

4. கவனமாக மரியாவை உற்றுநோக்குவதனால், இறையரசுக்காக வாழ்ந்த அவரில், கன்னித்தன்மைக்கான மாதிரியை நாம் கண்டுபிடிக்கின்றோம்.

இந்தச் சிறப்புமிக்க கன்னி (the Virgin par excellence), அவருடைய உள்ளத்தளவில் கடவுளோடு மிக ஆழமான மற்றும் நெருங்கிய உறவை அடைவதற்கென்று கன்னி நிலையிலேயே வாழ்வதற்கான அவருடைய விருப்பத்தில் வளர்ந்தார்.

மரியா கன்னியாக கற்பு நிலையில் வாழ அழைக்கப்பட்ட பெண்களுக்கு, உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதோர் உன்னதமான அழைத்தலை வெளிப்படுத்துகின்றார்.

இவ்வாறு இறைவனின் திட்டத்தில் அது விளைவிக்கக்கூடிய ஆன்மிகப் பலனைக் கவனத்தில் கொள்கிறார். அதாவது, கன்னி வாழ்வு என்பது தாய்மையின் ஓர் உயர்ந்த நிலை, ஆவிக்கு ஏற்ற ஒரு தாய்மை நிலை (ஒப்பிடுக. பெண்ணின் மாண்பு, எண். 21).

அன்பு என்கிற நாகரிகத்தின் விதைகளைப் பெண்கள் விதைக்கிறார்கள்

மரியாவின் தாய்மை இதயம், எல்லா மனித இழிவுகளுக்கும் திறந்தே உள்ளது. மேலும், பெண்ணின் ஆளுமை வளர்ச்சியானது பெண்களைக் கருணைக்கான அர்ப்பணிப்பிற்கு அழைத்துச் செல்கின்றது என்பதையும் நினைவுபடுத்துகின்றது. இவ்வாறு இதயத்தின் மதிப்பீட்டினால் மிகவும் தூண்டப்பட்டு, பெண்ணானவள் தன்னையே கொடுப்பதற்கான ஓர் உயர்ந்த பண்பைக் காட்டுகின்றாள்.

பெண்மையின் ஆளுமையை உறுதிப்படுத்தும் சுயநல முன்மாதிரிகளை வழங்கும் நம் காலகட்டத்தில் வாழ்கின்ற அனைவருக்கும், ஒளியூட்டக்கூடிய மற்றும் புனிதம் மிக்க ஆண்டவருடைய தாயினுடைய உருவமானது, மற்றவர்களுக்காகத் தன்னையே கொடுப்பதனால் மற்றும் தன்னையே மறப்பதனால் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கைக்கான இறைத்திட்டத்தின் உறுதியான முழுமையை அடைவது சாத்தியமாகும் என்பதைக் காட்டுகின்றது.

ஆகவே, மனிதத் துன்பத்தின் சூழ்நிலைகளுக்கு ஆறுதலையும் இரக்கத்திற்கான உணர்வுகளையும் மரியாவின்  உடனிருப்பானது தூண்டுகின்றது. மேலும், ஏழைகள், நோயாளிகள் மற்றும் தேவையில் இருக்கின்ற துன்பப்படும் அனைவருடைய வலியையும் போக்குவதற்கான ஆர்வத்தையும் பெண்களில் அது எழுப்புகின்றது.

மரியாவுடனான தனது சிறப்பு உறவின் காரணமாக, பெண் வரலாற்றின் போக்கில், வன்முறைக்குப் பதிலளிக்கக்கூடிய ஒரு நாகரிகத்தின் விதைகளை உலகில் விதைப்பதன் மூலம், வெறுப்பு மற்றும் பாவத்தால் காயமடைந்த மனிதகுலத்தின் நன்மை மற்றும் மென்மையின் எதிர்பார்ப்புகளுக்கு கடவுளின் நெருக்கத்தை அடிக்கடி பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

மூலம்: Pope John Paul II, Mary sheds light on role of women, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 13 December 1995, p.11.

news
ஆன்மிகம்
திருவிவிலிய தானியங்கள் (கண்டனையோ, கேட்டனையோ! – 26)

பொங்கல் திருவிழா! எனக்கு மிகவும் பிடித்த சமூகத் திருநாள் இது. பள்ளிக் காலத்தில் நடிகைகள் படம் போட்ட வாழ்த்து அட்டைகளைப் பகிர்ந்து கொள்வோம். அந்தப் பழக்கம் இப்போது வழக்கொழிந்து விட்டது. விளையாட்டுப் போட்டிகள் முன்பை விட உற்சாகமாகவும் விரிவாகவும் நடத்தப்படுகின்றன. எல்லா ஊர்களிலும் ஆண்கள் பானை உடைக்கிறார்கள். பெண்கள் கோலம் போடுகிறார்கள்.  போலிஸ் பாதுகாப்போடு, இளைஞர்கள் காளைகளை அடக்குகிறார்கள். ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு அரிசி, கரும்பு, சேலை, வேட்டி போன்ற பண்டங்கள் உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பு கொடுக்கின்றது. இந்த வருடம் 1000 ரூபாய் ரொக்கம் கிடையாதாமே? டிவியில் இப்போதுதான் சொன்னார்கள். அதைக் கேட்டதிலிருந்து என் வீட்டில் சமைக்கின்ற அம்மா பயங்கரஅப்செட்என்பதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

பொங்கலுக்குப் பல்வேறு நோக்கங்கள் கற்பிக்கப்பட்டாலும், ஆதாரமாக அது ஓர் அறுவடைத் திருவிழா. உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் அறுவடையைக் கொண்டாடும் மரபு இருக்கிறது, திருவிவிலியக் கலாச்சாரம் உள்பட. இயேசு பொங்கல் கொண்டாடினார். வருடத்திற்கு ஒரு முறை அல்ல; மூன்று முறை! இயேசுவும் சமகால யூதர்களும் கொண்டாடிய மூன்று முக்கியச் சமயத் திருவிழாக்கள் அடிப்படையில் மூன்று தானியங்களின் அறுவடையை ஒட்டி அமைந்தவைவிரிவாகப் பார்க்கலாம்.

பாஸ்காத் திருவிழா!

இதுதான் வருடத்தின் முதல் திருவிழா. வரலாற்று ரீதியாக இவ்விழா இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடியது. இது வாற்கோதுமை (barley) அறுவடையின் முடிவில் நடைபெற்றதுஇஸ்ரயேல் நாட்டில் வருடத்தின் தொடக்கத்தில் மகசூலான தானியம் வாற்கோதுமை. வசந்தகாலத்தில் அறுவடை செய்யப்பட்டது. பாஸ்கா திருவிழாவைக் கொண்டாட எருசலேமுக்கு வந்த  மக்கள் எல்லாரும் தங்களோடு ஒரு கைப்பிடி அளவு வாற்கோதுமையைக் கொண்டு கடவுளுக்குப் படைத்தார்கள்பாஸ்காவிற்கு அடுத்த நாள் குரு, வாற்கோதுமை அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டை எடுத்து ஆண்டவருக்கு முன் ஆரத்திப் பலியாகச் செலுத்தினார்.  ‘இவர் வழியாகசமயத்தில் நம் பிள்ளைகள் தூப, தீப ஆரத்தி காட்டுவது போல.

வாற்கோதுமை மிக விரைவில் விளையும் ஒரு தானியம். 6 முதல் 8 வாரங்கள் போதும் என்கிறார்கள். மிக வலிமையான தானியமும் கூட. சீக்கிரம் கெட்டுப் போகாது. வெப்பம், குளிர் போன்ற கால நிலைகளைத் தாங்கிப்பிடித்து நீண்ட காலம் இருக்கும். இறைவாக்கினர் எலிசா காலத்தில் மூன்று ஆண்டுகள் இஸ்ரயேல் நாட்டில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் உணவுக்கு வழியில்லாமல் தவித்தனர். அப்போது பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புதுத்தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தன் கோணிப்பை நிறைய முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்து எலிசாவிடம் கொடுத்தார் (2அர 4:42) என்று சொல்லப்பட்டுள்ளது. அவரிடம் உணவுப் பொருள் இருந்தது ஓர் இனிய ஆச்சர்யம்! பல நாள்களுக்கு முன் விளைந்து அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் அவை. இன்னும் கெட்டுப் போகாமல் இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பங்கள் செய்ய முடிந்தது. வாற்கோதுமையின்நிலைத்திருக்கும்பண்பு இங்கே குறிப்பிடத்தக்கது.

யோவான் 6-ஆம் பிரிவில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் புதுமையில், அவருடைய மூலதனமாக இருந்தது என்ன? ஒரு சிறுவன் கொடுத்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் (யோவான் 6:9).  எல்லாரும் வயிறார உண்டபின்ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்என்று இயேசு சொல்கிறார். அவை அடுத்த சில வேளைகளுக்கும் பயன்படும். கெட்டுப் போகா. நீதித்தலைவர்கள் கிதியோனும் அவருடைய படைவீரர்களும் ஒருவாற்கோதுமை அப்பம்என்று குறிப்பிடுகிறார்கள். மிதியானியருக்கு எதிரான போரின்போது, போர்க்களத்தில் ஒருவன் தன் தோழனிடம் தான் கண்ட கனவு பற்றிச் சொல்கிறான்: “நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது (நீதித் தலைவர்கள் 7:13). கிதியோனின் வலிமைமிகு வாள்தான் அந்த வாற்கோதுமை அப்பம்.

வாற்கோதுமை தானியத்தின் வலிமையும், விரைவில் விளையும் தன்மையும், நிலைத்திருக்கும் பண்பும், நம்பிக்கையளர்களின் ஆன்மிக முதிர்ச்சிக்கும், எந்தச் சூழ்நிலையிலும் தளராமல் இருந்து சான்று பகர்தலுக்கும் ஓர் உருவகமாக உள்ளது.

பெந்தகோஸ்து திருவிழா!

இது இரண்டாவது முக்கிய யூதத் திருப்பயணத் திருவிழா. பாஸ்கா விழா முடிந்து ஏழு வாரங்கள் கழித்து,  50-ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இது ஒரு கோடை விழா. வரலாற்று ரீதியாக இந்நாள் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய் மலையில் கடவுள் மோசே வழியாகப் பத்து கட்டளைகள் தந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. இது கோதுமை அறுவடையின் முடிவில் நடைபெற்றது. விழா நாளில் தலைமைக் குரு செலுத்த வேண்டிய முக்கியக் காணிக்கை இரண்டு கோதுமை அப்பங்கள். “ஏழாவது ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில், ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபதுபடி அளவுள்ள மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி, இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற் பலனின் ஆரத்திப்பலியாகக் கொண்டு வாருங்கள் (லேவியர் 23:16-17).

நல்ல கோதுமை விளைச்சலைக் கொடுத்த கடவுளுக்கு பெந்தகோஸ்து நாளில் நன்றி செலுத்தப்படுகிறது. கோதுமை மத்திய தரைக்கடல் நாடுகளின் மிக முக்கிய உணவுப் பயிர். 10,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. நிலம் தானாகக் கோதுமையைக் கொடுக்காதுமனிதர் தங்கள் உழைப்பினாலும் கோதுமையை விளைவித்துவிட முடியாது. கடவுளின் ஆதரவு கோதுமை விளைச்சலுக்குத் தேவை என்று  மக்கள் நம்பினார்கள். திருப்பாடல் ஆசிரியர், “வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே (திபா 128:2) என்றும், அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார் (திபா 147:14) என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும். ‘கொழுப்பானகோதுமை ஆண்டவருடைய சிறப்பு அருளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. “பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் ஆகியவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச்சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார் (இணைச் சட்டம் 32:14).

திருவிலியத்தில் கோதுமை மடிதலுக்கும், மறு உயிர்ப்புக்கும் உருவகமாகச் செயல்படுகிறது. “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (யோவான் 12:24) என்று இயேசு சொல்கிறார்.

கூடாரத் திருவிழா!

இது இலையுதிர் காலத்தில் கொண்டாடப்பட்ட மூன்றாவது திருப்பயணத் திருவிழா. வரலாற்று ரீதியாக இந்நாள் இஸ்ரயேல் மக்களின் 40 ஆண்டு கால பாலைவனப் பயணத்தில், அவர்கள் கூடாரங்களில் தங்கியிருந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. விவசாயப் பின்புலத்தில் இது திராட்சைப் பழங்களின் அறுவடைக்கு நன்றி செலுத்தும் விழா. வருடத்தின் ஏழாம் மாதத்தின் 15-ஆம் நாள் ஆரம்பித்து, தொடர்ந்து ஏழு நாள்களுக்குக் கொண்டாடப்பட்டது. எல்லா யூத ஆண்களும் இதில் பங்கெடுக்க எருசலேமுக்கு வரவேண்டும். எருசலேமைச் சுற்றி உள்ள பகுதிகளில், தற்காலிகமாகக் கூடாரங்கள் அமைத்து, அதில் தங்கி மக்கள் இவ்விழாவில் பங்கெடுத்தார்கள். ஏழு நாள்களும் ஆண்டவருக்குப் பலி செலுத்தப்பட்டது. அதில் முக்கியமானதுஒவ்வொரு நாளும் திரு உறைவிடத்தில் திராட்சை மதுபானத்தை ஊற்றிச் செய்யும் நீர்மப்படையல் (எண்ணிக்கை 28:7), எட்டாம் நாளில் நடைபெறும் ஒரு சிறப்புக் கூட்டத்தோடு (எண்ணிக்கை 29:35) விழா நிறைவுக்கு வந்தது. தலைமைக்குரு சிலோவாம் குளத்திலிருந்து ஒரு பொற்குடத்தில் தண்ணீர் மொண்டு வந்து, ஆடம்பரமாகப் பீடத்தின் மீது ஊற்றும் வழிபாடு இவ்விழாவின் மற்றொரு சிறப்பு அம்சம்.

திராட்சை இரசம், தண்ணீர் என்றுநீர்மைகூடாரத் திருவிழாவில் ஆதிக்கம் செலுத்துகிறது. மழைக்காலத்துக்குச் சற்றுமுன் கொண்டாடப்பட்ட இத்திருவிழாவில், நல்ல மழையைக் கடவுள் தர வேண்டும்; அடுத்த வருடமும் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று மக்கள் வேண்டினார்கள்.

புதிய ஏற்பாட்டில் தண்ணீர் ஒரு மிக முக்கிய இறையியல் சொல்லாடல். யோவான் நற்செய்தியில் மட்டும்தண்ணீர்என்ற சொல் 22 முறை வருகிறது. சமாரியப் பெண்ணுடனான நீண்ட உரையாடலில் இயேசு தம்மைவாழ்வு தரும் தண்ணீர்என்று நிலைநாட்டுகிறார் (யோவான் 4:10). யோவான் நற்செய்தி 7-ஆம் பிரிவில், இரகசியமாகக் கூடாரத் திருவிழாவில் பங்கேற்கும் இயேசு, விழாவின் இறுதியான பெருநாளில் எழுந்து நின்று உரத்தக் குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; மறைநூல் கூறுவது போல், அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வுதரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் (யோவான் 7:37-38) என்று கூறுகிறார். இயற்கை நீராதாரங்களைக் கொண்டாடிய ஒரு விழாவில், இயேசு வாழ்வு தரும் தண்ணீரை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் பொங்கல் திருநாளின்போது அரிசியோடும் கரும்போடும், மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று திருவிவிலியத் தானியங்களையும் நினைவுகூர்வோம்.

வாற்கோதுமை போல நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், கோதுமை மணி போல மடிந்து உயிர்த்தெழவும், திராட்சைப் பழம் சுட்டிக்காட்டும் வாழ்வின் ஊற்றில் மூழ்கி எழவும் பொங்கல் திருநாள் நமக்குக் கற்றுத் தரட்டும்.

பொங்கலோ பொங்கல்! இயேசுப் பொங்கல்!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)