2014-ஆம் ஆண்டு டிசம்பர். விடுமுறைக் காலமாதலால் திருப்பயணிகள் கூட்டத்தால் வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு வளாகம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 2005-ஆம் ஆண்டு மரித்து, இறைவனில் இணைந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் கல்லறையில் மக்கள் வண்ண வண்ண மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்துகையில், திடீரென்று அங்கே ஒரு பரபரப்பான சூழல் தென்பட்டது.
இத்தாலி
நாட்டின் பாதுகாப்புப் படையினரும், வத்திக்கானின் பாதுகாப்புப் படையினரும் மிகவும் எச்சரிக்கையான நிலையில் நிற்க, அங்கு வந்து நின்ற வாகனத்திலிருந்து அரசுக் காவலர்கள் தொடர வெளிப்பட்ட 56 வயது மதிக்கத்தக்க மனிதனைக் கண்டதும் கூட்டம் இன்னும் பரபரப்படைந்தது. வந்தவன் கைகளில் வெள்ளை ரோசாக்களாலான பெரிய மலர்க்கொத்து ஒன்று இருந்தது. இதற்குமுன் இதே புனித பேதுரு வளாகத்துக்கு அவன் வந்திருக்கிறான், இப்படி எல்லாருடைய கவனத்தையும் ஈர்ப்பது போலல்ல. அவன் அன்று அங்கே வந்ததற்கும், இன்றைய வருகைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்புதான் இந்த நிகழ்வின் பின்னணியாகவும் அமைந்துள்ளது.
1981-ஆம் ஆண்டின்
மே மாதத்தின் 13-ஆம் நாள். அமைதியான ஒரு புதன்கிழமை. வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை ஐந்து மணிக்குத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் மக்களைச் சந்தித்து ஆசிர் வழங்கும் நாள். தனித்தனியாகவோ, குடும்பம் குடும்பமாகவோ நண்பகலுக்கு முன்பிருந்தே மக்கள் அவரைத் தரிசிக்க அங்கே குழுமிக் கொண்டிருந்தாலும், மாலை மணி எப்போது ஐந்து ஆகும் என மக்கள் வெகு
ஆவலோடு காத்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆங்காங்கே மக்கள் ஒருவர் மற்றவரிடம் நலம் விசாரித்துக்கொண்டும், கலகலப்பாக உரையாடிக் கொண்டும், கையில் கொண்டு வந்திருந்த உணவு வகைகளைச் சிறிது சிறிதாக உட்கொண்டவர்களாய்ப் பசி தீர்த்துக் கொண்டும் இருந்தனர்.
பல்வேறு
நாடுகளிலிருந்து வத்திக்கான் நகரைத் தரிசிக்க வரும் திருப்பயணிகள் பலர் தங்களுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்புப் பற்றியும், தங்கள் இனிய அனுபவங்கள் பற்றியும் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி தத்தம் உறவினர்களுக்கு அனுப்புவது வழக்கம். இதற்காக அஞ்சலகம் தேடிப் போய் கடிதம் வாங்கி எழுதி அனுப்புவது சிரமமானது. அந்த அஞ்சல் அட்டைகளை எழுதிக் கொடுத்துக் கட்டணம் பெற்றுக்கொள்ளும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஓர் ஓரமான இடத்தில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் இந்தப் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஒருவன் வில்பேரி என்னும் போலிப் பெயர் கொண்ட ஆக்கா; மற்றொருவன் பெயர் ஒரல்செலிக். இருவரும் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், செவிகள் மட்டும் கூட்டத்தினரின் ஆரவாரச் சத்தத்தைக் குறிவைத்திருந்தன.
இவ்விருவரில்
துருக்கி நாட்டுக் குடிமகனான மகமத் அலி ஆக்கா 1970-ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த வங்கிக்கொள்ளையை நிகழ்த்தியவன். மேலும், 1979-இல் இடதுசாரிப் பத்திரிகையாளர் அப்டி பெக்கியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிக் காவல்துறையால் தேடப்பட்டு வந்தவன். அவன் தன் உண்மைப் பெயரை முழுக்க மறைத்துவிட்டு வில்பேரி என்ற பெயரில் அந்தப் பெயருக்குரியவனுடைய அங்க அடையாளங்களைத் திருத்தி, போலி பாஸ்போர்ட்டோடு 1980-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இத்தாலிக்குள் நுழைந்து யாருமே தன்மேல் ஐயம் கொள்ளாதபடி நடமாடிக் கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக ‘ஒரல் செலிக்’ என்ற கூட்டாளி நண்பன் வேறு. இருவருக்கும் இப்போதுதான் தாங்கள் நிறைவேற்ற வேண்டிய செயலுக்கான சரியான நேரம் வாய்த்துள்ளது என்று தகுந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்தனர். திடீரென்று மகிழ்ச்சி ஆரவாரக் கூச்சல் அந்த வளாகத்திலிருந்து கிளம்பிற்று. அக்சாவும் செலிக்கும் எச்சரிக்கையாகி தங்கள் இடத்தைவிட்டு எழுந்தனர். மக்கள் கூட்டத்திற்கிடையில் அமைக்கப்பட்ட சிறப்புப் பாதையில் ஊர்ந்து வந்து கொண்டிருந்த முட்டை வடிவத்தில் அமைந்திருந்த ஜீப்பில் நின்றிருந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன் இரு கரங்களையும் விரித்துப் புன்னகைத்தபடி மக்களுக்கு நேரடித் தரிசனம் அளிக்கப் புறப்பட்டு விட் டார். மாலை சரியாக 5 மணி 19 நிமிடங்களில் வாகனம் பேராலயத்தின் தென்மேற்குப் பகுதியில் நிறுத்தப்பட, திருத்தந்தையுடன் கரம் குலுக்க மக்களின் கரங்களும், புகைப்படம் எடுக்க காமிராக்களும், அவரை வாழ்த்த சிலுவைகளும் நீண்டன. இந்தக் கூட்டத்தில்தான் ஆக்காவின் கரமும் திடீரென கைத்துப்பாக்கியோடு நீண்டது. அடுத்த வினாடி இரண்டு குண்டுகள் திருத்தந்தையின் அடிவயிற்றிலும், இடது கையில் ஒரு குண்டும், வலது தோள்பட்டையில் ஒரு குண்டும் என மொத்தம் நான்கு
குண்டுகள் சரமாரியாகப் பாய, திருத்தந்தை தான் நின்ற இடத்திலிருந்து சரிந்தார்.
அவன்
அடுத்துச் சுடும்முன் வத்திக்கானின் பாதுகாவலர் கேமிலோசிபின் அவன் கரங்களை எட்டிப்பிடித்தார். அவன் மீண்டும் சுட்டுவிடக் கூடாது எனவும், அவன் தப்பிவிடக்கூடாது எனவும் பாதுகாவலர் அருகில் நின்றிருந்த அருள்சகோதரி ஒருவரும் மற்றும் பலரும் அவனைத் தப்பவிடாமல் பிடித்தனர். ஆனால், இந்தக் களேபரத்தில் உடன் வந்திருந்த செலிக் அங்கிருந்து நழுவித் தப்பி விட்டான்.
தன்
உடலில் மூன்று பங்கு இரத்தம் வெளியேறிவிட்ட நிலையில் திருத்தந்தையின் உயிருக்கு 48 மணி நேரம் கெடு வைக்கப்பட்டது. உலகத் தலைவர்களின் கண்டனமும் அனுதாபமும் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் எழுந்தன. ஒரு வாரத்திற்குப் பின்னர்தான் திருத்தந்தை ஆபத்து நீங்கியவரானார். மருத்துவமனைப் படுக்கையிலிருந்த திருத்தந்தை “அன்புமிக்க சகோதர சகோதரிகளே! எனக்கேற்பட்ட இக்கட்டு வேளையில் நீங்கள் என்னை மறக்காது என்னோடு இணைந்திருந்ததற்காகவும், உங்கள் அனைவருடைய ஆழ்ந்த அனுதாபத்திற்காகவும், உருக்கமான செபங்களுக்காகவும் மனப்பூர்வமாக நன்றி செலுத்துகிறேன். குண்டு பாய்ந்து என்னோடு காயம்பட்ட இருவரையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்” என்று
நன்றிகூறிய வேளையில் மற்றொரு செய்தியையும் மறவாமல் அறிவித்தார். “என்னைச் சுட்ட அந்த என் சகோதரனுக்காகச் செபிக்கிறேன். நான் அவனை என் முழு மனத்தோடு மன்னித்துவிட்டேன். இறைவனும் குருவுமான இயேசுவோடு இணைந்து என் வேதனைகளைத் திரு அவைக்காகவும், உலக மக்களுக்காகவும் ஒப்புக்கொடுக்கிறேன்” என்ற
அவர்தம் அறிவிப்பால் அவரின் மன்னிக்கும் மனத்தின் மாண்பைக் கண்டு உலகமே நெகிழ்ந்தது.
கைது
செய்யப்பட்ட ஆக்காவுக்கு இத்தாலிய நீதிமன்றம் அவ்வாண்டு ஜூலை மாதத்தில் ஆயுள் தண்டனை வழங்கிற்று. திருத்தந்தை தான் சொற்களால் வெளிப்படுத்திய தன் மன்னிப்பை 1983-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தாலிய சிறைச்சாலையில் ஆக்காவைத் தனிமையில் சந்தித்து முழுமனத்தோடு அவனுக்கு வழங்கினார். இறுதியில் அவனை ஆசிர்வதித்த திருத்தந்தையின் கரத்தில் அணிந்திருந்த மோதிரத்தை முத்தமிட்டபோது அவன் மனம் இளகியிருந்தான். 2000-ஆம் ஆண்டு திருத்தந்தையின் வேண்டுகோள்படி அவன் சொந்த நாடான துருக்கியின் வசம் ஒப்படைக்கப்பட்டான்.
தன்னைச்
சுட்டுக் கொல்லத் துணிந்த ஆக்காவின் குடும்பத்தின்மீது அளவற்ற பாசம் வைத்திருந்த திருத்தந்தை 1987-ஆம் ஆண்டில் ஆக்காவின் தாயாரையும், 1991-இல் அவனுடைய சகோதரரையும் சந்தித்துப் பேசினார். 2005-ஆம் ஆண்டில் திருத்தந்தை நோயுற்றிருக்கையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்திச் செய்தி அனுப்பினான் ஆக்கா. மன்னிப்பின் சிகரமாகவும், மனிதநேயத்தின் மகுடமாகவும் விளங்கிய திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் உடலில் பற்பல போராட்டங்களுக்குப் பின்னர் 2005, ஏப்ரல் மாதம் தன் இன்னுயிரை நீத்தார். உலகம் ஒரு மாமனிதரை இழந்தது, திரு அவை ஒரு மாபெரும் வழிகாட்டியை இழந்தது.
29 ஆண்டுகள்
சிறைவாசம் அனுபவித்து 2010-ஆம் ஆண்டில் விடுதலையானான் ஆக்கா. நான்கு ஆண்டுகள் கழித்து 2014-ஆம் ஆண்டில் திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்த ஆசைப்பட்ட அவன் இப்போது சட்ட விரோதமாக இத்தாலி நாட்டுக்குள் நுழைகையில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டான். பலத்த சோதனைகளுக்குப் பிறகே அவன் வந்த நோக்கத்துக்குக் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அதன் பொருட்டே இப்போது கையில் வெள்ளைநிற ரோஜாக்கள் அடங்கிய மலர்க்கொத்தோடு திருத்தந்தையின் கல்லறையில் அனுமதிக்கப்பட்டான். மலர்க்கொத்தினைத் திருத்தந்தையின் கல்லறைமீது வைத்து அஞ்சலி செலுத்திய அவன் முகம் அமைதியை வெளிப்படுத்தியது. திருத்தந்தையின் ஆன்ம சாந்திக்காக மௌனம் காத்தவன் அங்கிருந்து புறப்பட்டான்.
‘ஆக்கா உண்மையிலேயே மனம் திருந்தி விட்டானா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் சார்பாக வத்திக்கானின் செய்தித்தொடர்பாளர் இப்படித்தான் கூறினார்: “திருத்தந்தை புனித ஜான்பாலின் கல்லறையில் அவன் மலர்களை வைத்துச்சென்றதே போதுமானது.”
பல தேசங்கள், பல நாடுகள், பல ஊர்கள் நடந்த அந்தக் கால்களைக் காண ஆசை!
சின்னஞ்சிறு
குழந்தையைக் கூட அன்பொழுகக் கட்டித்தழுவும் அந்தத் தோள்களைக் காண ஆசை!
யாரும்
நேரில் பார்க்கவே அச்சப்படும் அந்த வித்தியாசமான நபரைக் கட்டி அணைத்து முத்தமிட்ட அந்த முகத்தைக் காண ஆசை!
பன்னிரண்டு
சீடர்களாகப் பெரு வியாதிக்காரர்களின் கால்களைக் கழுவிய அந்தக் கைகளைக் காண ஆசை!
காண்பவர்
எல்லாம் மயங்கும் அந்த இனிய முகத்தைக் காண ஆசை!
என்றும்
எளிமை; என்றும் பகட்டை விரும்பாத தாழ்மை கொண்ட அந்த உள்ளத்தைக் காண ஆசை!
இறையொன்றிப்பில்
வாழவும் பயணிக்கவும் வலியுறுத்திய அந்த மாண்பைக் காண ஆசை!
வகைவகையாய்த்
திருமடல் அனுப்பித் திரு அவையைப் புதுப்பிக்கும் அந்த விரல்களைக் காண ஆசை!
எதையும்
தாங்கும், யாவரையும் ஈர்க்கும் அந்தப் புன்சிரிப்பை நேரில் காண ஆசை!
தொற்றுத்
தொடராதிருக்க நற்கருணையுடனே நடந்த உறுதியைக் காண ஆசை!
உலகப்
போர் மேகங்களை நற்சொல்லால் நிறுத்த முயற்சித்தத் திருவாயைக் காண ஆசை!
கத்தோலிக்கத்
திரு அவையை அர்த்தத்துடன் வழிநடத்தும் ஞானக் கண்களைக் காண ஆசை....
இப்படி
எண்ணற்ற ஆசைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்திக்க மிகவே ஆவலாக இருந்த கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களில் அடியேனும் ஒருவன். இனி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நான் என்று காண்பேன்?
எனது
இளம்வயதில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் சென்னைக்கு வந்திருக்கும் பொழுது அந்தக் கூட்டத்திற்கு உதவி செய்த தன்னார்வப் பணியாளர்களில் நானும் ஒருவன். எங்கள் வீட்டிலேயே அதற்காக மறைமாவட்டத்தால் தந்த ஒரு படம் சாட்சியாக உள்ளது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஒரு தாக்கம் எங்களுக்குள்ளே என்றும் இருந்தது. எங்களின் நீண்ட நாள் கல்லூரி நண்பர் திரு. ஆரோன் இன்பராஜ் சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர் பல வருடங்களாக
என்னையும், என் மனைவியையும் அழைத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அதை ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன். 2024, செப்டம்பர் 7-ஆம் தேதி திருத்தந்தை
பங்கேற்கும் திருப்பலியைக் காண அயல்நாட்டுக்காரர்கள் என்ற தொகுப்பில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், 45 ஆயிரம் பேர் பார்க்கும் அந்த ஸ்டேடியத்தில் அயல்நாட்டுக்காரர்களுக்கான பிரிவில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
பிறகு
இரண்டு மூன்று தந்தையர்கள் மூலமாகச் சிங்கப்பூரில் இருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த தந்தையர்களை நான் தொடர்பு கொண்டேன். ஆனாலும் முடியவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் எங்கள் முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. எப்படியாவது நாம் திருத்தந்தையைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால், குறிக்கப்பட்ட தேதியில் நாங்கள் சிங்கப்பூருக்குப் பயணம் ஆனோம்.
பயணமாகும்
அந்த நாளும் வந்தது. அந்த ஸ்டேடியத்தின் மையவாசலுக்குச் சென்றுவிட்டோம்.
அங்கே போனபிறகுதான் தெரிந்தது, அங்குள்ள பாதுகாப்பும், அங்கு அவர்களின் நடவடிக்கைகளும்! ஓர் ஈ, காக்கை கூட
அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மிக மிகப் பாதுகாப்பான ஒரு சூழல் காணப்பட்டது. அந்த ஸ்டேடியத்தைச் சுற்றிலும் எப்படியாவது பார்க்க முடியாதா? என்று பல கோணங்களில் முயற்சித்தோம்.
ஆனால் ஏமாற்றமே!
சிங்கப்பூரில்
எங்களை அழைத்து இருந்த நண்பர் ஒரு சி.எஸ்.ஐ.
சபையைச் சார்ந்தவர். அவர் எங்களின் ஏமாற்றத்தைப் புரிந்து ஆறுதலளித்தார். அன்று இரவு எங்கள் கையைப் பிடித்துக்கொண்டு நண்பர் குடும்பத்தினர் செபித்தனர். நண்பர் எப்படியாவது திருத்தந்தையைப் பார்த்துவிட வேண்டும் என்று செபித்தது
எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. நமக்காக அவர் செபித்தது மிக மிக நம்பிக்கை தந்தது.
அடுத்த
நாள் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் அவர் பல்சமய உரையாடலுக்கு வருவதாக எங்களுக்குத் தெரிய வந்தது. அது அவருடைய இல்லத்திலிருந்து மிக அருகில் உள்ள ஒரு கல்லூரி. அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். நண்பரின் மகன் ஆசேர் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கல்லூரி வாசலில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கூடிக்கொண்டே வந்தது. எங்களுக்கு ஒரு பேரானந்தம்! ஒரு பரவசம் எனக்குள்ளே! ஏனென்றால், நாம் கனவில் கண்டு மகிழ்ந்த, படங்களில் பார்த்து மகிழ்ந்த, குறும்படங்களில் இலயித்த அதே திருத்தந்தையை நேரில் பார்க்கப்போகிறோமே என்று!
அங்கே
சிங்கப்பூர் வாசிகள்தான் 90% நின்று கொண்டிருந்தார்கள். மிக மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் அயல்நாட்டினர் இருந்தார்கள்.
அவர்களில்
ஒருவராக நாங்கள் இணைந்து விட்டோம். தலைவர்கள் வருகிறார்கள் என்றால், இங்கு இருக்கக்கூடிய கெடுபிடிகள்
அங்கு இல்லை. அந்த வாசலில் மட்டும் இரண்டு மூன்று அதிகாரிகள் இருந்தார்கள். கொஞ்சம் தள்ளிச் சில காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக கூட்டம்
கூடிக்கொண்டே வந்தது. இங்கேயும் ‘நாம் பார்க்க முடியாதோ?’ என்ற அவநம்பிக்கை; ஆனால், ‘பார்ப்பேன்’ என்ற
ஒரு நம்பிக்கை மட்டும் மேலோங்கிக் கொண்டே இருந்தது. சுமார் அரைமணி நேரம் சென்றது. வாழ்க்கையிலே
மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று கூறினால், அந்த ஒரு மணி நேரத்தைக் கூறலாம். வந்துவிடுவார் என்று அனைவரும் வலது
பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தோம்.
சிறிது
நேரத்தில் நான்கு கார்கள் முன்னால் இரண்டு போலீஸ் பைலட்டுகள் வந்தார்கள். காவலர்கள் உள்ளே செல்லச் செல்ல அதோ அந்தக் கார் வந்தது. வத்திக்கான் கொடியும், சிங்கப்பூர் கொடியும் இருபுறமும் பறக்க, முன்வரிசையில் நம் திருத்தந்தை! எனக்கும் திருத்தந்தைக்கும் இடைவெளி சுமார் 15 அடி மட்டுமே. கார் கடந்த நேரம் 15 நொடிகள் மட்டுமே. அனைவரிடமும் மகிழ்ச்சிக் குரல்கள் ‘யீயயீய.. யீயயீய....’ என்று.
எனக்கு
ஆனந்தத்தில் தொண்டை அடைத்தது. சற்று என்னை மறந்து சத்தமாக ‘பாத்தாச்சு... பாத்தாச்சு...’ என்று மட்டுமே கூவினேன். பதினைந்து நொடிகள்! அத்தனை அருகில்! அந்த ஸ்டேடியத்தில் இத்தனை அருகில் கண்டிப்பாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அப்பப்பா....
போதும் அந்த நினைவுகள்!
அப்பப்பா....
போதும் அந்தப் பொழுதுகள்!
இறைவனுக்கு
இன்றும் என்றும் நன்றி கூறுவோம்! திருத்தந்தையின் படிப்பினைகளை நினைவுகளில்
அரங்கேற்றி நனவில் நிறைவேற்றுவோம்.
இந்த மன்றாட்டைக் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தாத நாளே இல்லை என்னும் சிறப்புக்குரிய மன்றாட்டு எது? ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே...’ என்று தொடங்கும் வேண்டல்தான். இந்த மன்றாட்டின் சிறப்புகளைப் பட்டியலிட்டால், நமது வியப்புக்கு அளவிராது. இயேசுவே கற்றுத்தந்தது என்பதுதான் முதல் சிறப்பு. இது ஒரு திருவழிபாட்டு மன்றாட்டு, மரபு மன்றாட்டு, திருவிவிலிய மன்றாட்டு என்பது கூடுதல் சிறப்பு. நாம் சொந்தமாக இறைவேண்டல் செய்வதற்கான அளவீடு, மாதிரி என்பது மற்றொன்று. உலகெங்கும் உள்ள அனைத்துக் கிறித்தவர்களையும் இணைக்கும் மன்றாட்டு இது. ‘எங்கள் தந்தையே’ என்று கடவுளை அழைப்பதன் வழியாக மாந்தர் அனைவரையுமே கடவுளின் பிள்ளைகளாக்கும் வேண்டல் இது. இறைவேண்டல்கள் அனைத்துக்கும் இலக்கணமாகத் திகழ்கிறது என்பது இதன் தனித்துவச் சிறப்பு.
மத்தேயு
நற்செய்தியில் (மத் 6:9-13) மக்கள் அனைவருக்கும் கற்பித்ததாகவும், லூக்கா நற்செய்தியில் (11:2-4) சீடர்களுக்குக் கற்றுத்தந்ததாகவும் அமைந்துள்ள இந்த மன்றாட்டில், திருவழிபாட்டு மரபின்படி மத்தேயு நற்செய்தியின் வடிவத்தையே வழிபாட்டில் நாம் பயன்படுத்துகிறோம்.
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வி இந்த மன்றாட்டை ‘முழு நற்செய்தி நூலின் சுருக்கம்’
(‘The Summary of the Whole gospel’ (2761) என்று
கூறுகிறது. தொடக்கத் திரு அவையினர் ஒருநாளின் மூன்று வேளைகளில் இயேசு கற்பித்த மன்றாட்டை இறைவேண்டல் செய்தனர். எனவே, இது ‘திரு அவையின் மன்றாட்டு’
(கதிம 2770) எனப்படுகிறது. இறையாட்சியின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதால் ‘நிறைவுக்கால மன்றாட்டு’
(Eschatological prayer
- கதிம
2771) என்றும்
அழைக்கப்படுகிறது. தூய ஆவியாரின் தூண்டுதலால், இயேசு வழியாகத் தந்தையை நோக்கி எழுப்பப்படுவதால் இது ஒரு ‘திருத்துவ மன்றாட்டு’
என்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (கதிம
2766).
திருப்பாடல்கள்
பற்றி விரிவாக எழுதியுள்ள புனித அகுஸ்தினார், திருப்பாடல்களின் உணர்வுகள் இயேசு கற்பித்த இறைவேண்டல் முழுவதும் ஊடுருவியுள்ளன என்றும், திருவிவிலியத்தில்
உள்ள மதிப்பீடுகள் அனைத்தும் இந்த மன்றாட்டில் அடங்கியுள்ளன என்றும் எழுதியுள்ளார்.
யூபிலி
2025 தொடர்பாக
11.02.2022 அன்று எழுதிய மடலில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு கற்பித்த ‘விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே’ என்னும் மன்றாட்டை நமது வாழ்வியல் திட்டமாக (Life programme)
மாற்ற வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த
இறைவேண்டலில் ஏழு பகுதிகள் இருக்கின்றன. முதல் மூன்றும் (‘உமது’ மன்றாட்டுகள்) இறைத்தந்தையின் மாட்சி தொடர்பானதாகவும், இறுதி நான்கும் (‘எமது’ மன்றாட்டுகள்) நமது தேவைகள் தொடர்பானதாகவும் அமைந்துள்ளன. ‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே’ எனும் நிறைவுப் புகழ் திருப்பலியில் மட்டும் மன்றாடப்படுகிறது. இந்த ஏழு பகுதிகளுமே திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, கிறித்தவர்களின் வாழ்வியல் பாடமாக அமைகின்றன.
1. தந்தை இறைவனுக்கு இறைப்புகழ்ச்சி:
‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.’ ஓர் இறைவேண்டலின் தொடக்கமே இறைப்புகழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும். நம் வேண்டலிலும் வாழ்விலும் கடவுள் நம் தந்தையாக இருக்கிறார் என்பதை இந்த முதல் பகுதி கூறுகிறது. “நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள்தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார். அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது” (கலா
4:6) என்னும் இறைமொழியை மெய்ப்படுத்துகிறது இம்மன்றாட்டு. இதனால் இதன் திருத்துவத்தன்மை வெளிப்படுகிறது. ‘என் தந்தையே’ என்று அழைக்காமல், ‘எங்கள் தந்தையே’ என்று அழைப்பதால், இது ஒரு சமூக இறைவேண்டலாகிறது. நம்மிடம் சகோதரத்துவம், சமத்துவம் மலர கோரிக்கை விடுக்கிறது இம்மன்றாட்டு.
இறைவனின்
திருப்பெயர் தன்னிலே தூயதாகத்தான் இருக்கிறது. இருப்பினும், “நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்” (எசே
36:23) என்னும் இறைவாக்கிற்கேற்ப, கடவுளின் வல்ல செயல்களால் அவரது பெயர் போற்றப்படட்டும் என்று நாம் மன்றாடுகிறோம்.
2. இறையாட்சிக்கு வரவேற்பு:
‘உமது ஆட்சி வருக.’ இதில் இரு வேண்டுகோள்கள் அடங்கியுள்ளன. நமது வாழ்வில் இறையாட்சி மலர வேண்டும் என்றும், அதேவேளையில் நிறைவு காலத்தில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் ஆட்சிக்காகவும் மன்றாடுகிறோம்.
3. இறைத்திருவுளம் மண்ணில் நிறைவேற
வேண்டல்:
‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல, மண்ணுலகிலும் நிறைவேறுக.’ கெத்சமனித் தோட்டத்தில் இயேசு வேண்டியதைப் போலவே, நாமும் இறைத்தந்தையின் திருவுளத்திற்கு நம்மைக் கையளித்து வாழ அழைக்கிறது இந்தப் பகுதி.
4. அன்றாட உணவுக்காக மன்றாட்டு:
‘இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.’ இப்பகுதியில் “என் கடவுள் கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்”
(பிலி 4:19) என்னும் நமது நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். மேலும், நமது உடல் வலிமைக்கான உணவுக்காக மட்டுமல்லாமல், இறைவார்த்தை, நற்கருணை என்னும் உணவுகளுக்காகவும் மன்றாட இப்பகுதி நம்மை அழைக்கிறது.
5. மன்னிப்பு வழங்கி, மன்னிப்புக்
கோரல்:
‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்.’ இங்கே கடவுளின் இரக்கத்திற்காக நாம் கெஞ்சி மன்றாடுகிறோம். அத்துடன், பிறரை மன்னிக்கும்போதுதான் கடவுளின் மன்னிப்பை நாமும் பெற முடியும் என்பதையும் இவ்வேண்டல் நமக்கு அறிவுறுத்துகிறது.
6. சோதனையிலிருந்து பாதுகாப்பு வேண்டல்:
‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.’ சிலருக்கு இம்மன்றாட்டு வியப்பாக இருக்கலாம். “கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்” (யாக்
1:13-14) என்று இறைமொழி தெளிவாகப் போதிக்கிறது. எனவே, சோதனையின் பாதையில் நாம் நடக்காதபடியும், பாவத்தின் தூண்டுதல்களில் நாம் வீழ்ந்துவிடாதபடியும் நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் மன்றாடுகிறோம்.
7. தீமையிலிருந்து விடுவிப்புக்
கோருதல்:
‘தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.’ தீயோனாகிய அலகையிடமிருந்து நம்மைப் பாதுகாக்க மன்றாடுகிறோம். தீயோன் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால், அலகையை வென்று, நம்மை விடுவிக்கும் ஆற்றல் கொண்ட ஆண்டவரிடம் நம்மை ஒப்படைக்கிறோம். இந்த ஏழு மன்றாட்டுகளும் நம் வாழ்வில் நிறைவேறட்டும், ‘அப்படியே ஆகட்டும்’
என்பதற்காக, ‘ஆமென்’ என்று நிறைவு செய்கிறோம்.
எதிர்நோக்கு யாரைப் பற்றியது? எதைப் பற்றியது? எதிர்நோக்கு விசித்திரமானதா? எதிர்நோக்கு வீரியமானதா? எதிர்நோக்கு விந்தையானதா? என அடுக்கடுக்கான தொடர் தேடல்களில் மலர்ந்த பதிவுகள் என் வாழ்வைப் புரட்டிப்போட்டன.
‘தோற்றுவிடுவோம்’ என்ற
உணர்வோடு யாரும் போராட போர்க்களத்திற்குச் செல்வதில்லை;
வெற்றியை எதிர்நோக்கியே களம் இறங்குகின்றனர்.
தொழில்
நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் ‘இழந்துவிடுவோம்’ என்ற
நம்பிக்கையில் பணத்தை முதலீடு செய்வதில்லை; இலாபம் ஈட்டுவோம் என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத் தொடர்கின்றனர்.
முப்போக
விளைச்சலில் விருட்சங்களைக் காண முடியும் என்ற எதிர்நோக்கில்தான் இறுகிப்போன மண்ணை இலகுவாக்கி விதையைத் தூவுகிறான் விவசாயி.
‘கடவுளின் ஆசிரை இழந்த மனிதனை, ஏன் படைக்க வேண்டும்?’ என்று கடவுள் நினைப்பதில்லை. தமது சாயலாகப் படைக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் பூமியை அழகாக்குவான் என்ற எதிர்நோக்கோடுதான் கடவுள் மனிதனைப் படைக்கின்றார். ஆம், எதிர்நோக்கு வித்தியாசமானதுதான்; வீரியமானதுதான்; விவரமானதுதான்; விந்தையானதுதான்.
எதிர்நோக்கு
ஒரு நற்செய்தி. மண்ணின் எதிர்நோக்கு விண்ணைச் சார்ந்தது. விதையின் எதிர்நோக்கு துளிரைச் சார்ந்தது. இசையின் எதிர்நோக்குப் புல்லாங்குழலின் துளையைச் சார்ந்தது. தேனீக்களின்
எதிர்நோக்குப் பூக்களைச் சார்ந்தது. பறவையின்
உணவுக்கான எதிர்நோக்குப் பயணத்தைச் சார்ந்தது. இரவின் எதிர்நோக்கு விடியலைச் சார்ந்தது. கடல் பயணத்தின் எதிர்நோக்குக் கலங்கரை விளக்கைச் சார்ந்தது. முத்துக்குளிப்போரின் எதிர்நோக்குக் கடலின் ஆழத்தைச் சார்ந்தது. தேடலின் எதிர்நோக்கு மன உறுதியைச் சார்ந்தது.
முயற்சியின் எதிர்நோக்கு வெற்றியைச்
சார்ந்தது.
ஒன்று
மற்றொன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அங்கு நன்மைத்தன்மை உதயமாகிறது. எதிர்நோக்கு நற்செய்தியைக் கொடுக்கவே உருவெடுக்கிறது. எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் மீட்பின் நற்செய்தியைச் சுவைத்தார்கள். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய் சென்று இறையரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் (லூக் 8:1). நற்செய்தி நேர்மறைச்சிந்தனையை, நம்பிக்கையின் ஆழத்தை, வாழ்வின் இலக்குத் தெளிவுகளை, மகிழ்ச்சியான அனுபவத்தை, முன்னேற்றத்தின் படிநிலையை, விடுதலைத் தாகத்தை வடிவமைக்கிறது.
பழைய
ஏற்பாட்டில் சேமின் வழிமரபினராகிய தெராகுவின் மகன் ஆபிரகாம் தன் மனைவி சாரா மலடியாய் இருப்பதைக் கண்டு தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று எதிர்நோக்கிக் காத்திருந்தார். சாராவிடம் அந்த எதிர்நோக்குத் தடைபட்டிருந்தது. இறைதூதர்கள் வழியாக இறையாசிர் வெளிப்படும்போது “நானோ மலடி! எனக்குப் பிள்ளைப்பேறா?” எனச் சிரிக்கிறாள் (தொநூ 18:13). ஆபிரகாம் தனது ஈர்ப்புசக்தியால் இறைநற்செய்தியைப் பெற்றுக் கொள்கிறார். “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்கள் இனங்கள் அனைத்தும் ஆசிர் பெறும்”
(தொநூ 12:3) என்ற நற்செய்தி ஆபிரகாமின் மனநிலையில் வெளிப்படுகிறது. நல்ல மனநிலை நம்மை நன்மைக்கு இட்டுச் செல்கின்றது. நன்மைத்தனம் செயலுக்கு இட்டுச் செல்கின்றது. செயல் வெற்றிக்கு இட்டுச் செல்கின்றது. கடவுள் மனிதனைப் படைத்த நோக்கமே நற்செய்தியைப் பிறருக்கு விதைத்திடவே. வளர்ந்து வருகின்ற நாகரிகமும் அறிவியல் மாற்றங்களும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு நற்செய்தியைக் கொடுப்பதைவிட முரண்பாடான வாழ்க்கை முறைகளை, இயற்கையை அழிக்கும் செயற்கைத்தனத்தை, எதிர்மறை உணர்வுகளைக் கையாளும் சின்னத்திரை நாடகங்களை, வியாபார நோக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் புதுப்புது விளம்பர யுக்திகளை, திரைக்குள் வந்து மறைந்து கோடிகளைச் சம்பாதித்துச் செல்லும் நடிகர் - நடிகைகளின் வாழ்க்கைப் பின்பற்றல்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனால் நற்செய்தியை வென்றெடுப்பது என்பது எட்டாக்கனியாகவே அமைந்துவிடுகிறது. நல்ல செய்திகள் வாழ்வை அழகுபடுத்தும் என்ற உண்மை சுடும் காலம் எப்போது வருமோ?
எதிர்நோக்கு
ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். ஆர்ப்பரிக்கும் அலைகளில் அலைக்கழிக்கப்பட்ட மனங்களுக்கு ‘கரையைச் சேர்ந்துவிடமாட்டோமா?’ என்ற எதிர்நோக்கு அவர்களின் கண்களில் தெரியும். முரண்பட்ட வாழ்க்கையில் முடமாகிப் போனவர்களுக்கு, எழுந்து ஒளிவீச வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்கள் நெஞ்சுறுதியில் தெரியும். வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் உயிர் மூச்சைத் தொலைத்தவர்களுக்கு வாழ்ந்துவிட வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்களின் நம்பிக்கையில் தெரியும். அடிமைத்தனத்திற்குச் சாவு மணி அடித்துச் சமாதியில் புதைக்க வேண்டும் என்ற எதிர்நோக்கு விடுதலைக் குரல் முழங்கும் போராளியின் போர்க்குரலில் தெரியும். இருட்டறைக்குள் வாழ்வைத் தொலைத்து வாடும்
மனங்களுக்கு வெளிச்சத்தைக் காண வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்களின் நம்பிக்கையில்
தெரியும்.
எதிர்நோக்கு
புதிய வாழ்வின் தொடக்கம். புதிய வாழ்வு நம்மைப் புதுமைக்கு இட்டுச் செல்கின்றது. பழையன கழியும்போது இனிமை பிறக்கிறது. கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் மறைந்து எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது. இயல்புகளையும் திரிபுகளையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பைத் தருகிறது. சவால்களை எதிர்கொள்ள சக்தி தருகிறது. தொலைநோக்குக் கனவுகளுக்குப் பாதை அமைக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வைத் தருகிறது.
வெற்றிக்காக
எதிர்நோக்கிக் காத்திருத்தல் என்பது ஓர் இனிய கலை. கலைஞன் கவிதையை உருவாக்க வார்த்தைகளால் சொல் தொடுத்து, வாக்கியங்களைக் கோர்வையாக்கி, எதுகை மோனையுடன் அறப்பா தொடுத்துப் பாக்களால் பண்ணிசைத்துக் காத்திருக்கின்றான். அவனின் காத்திருத்தலில் கவிதை துள்ளிவரும் அருவியாக வாசிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. எதிர்நோக்கு என்பது காத்திருப்பது. என்ன வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம்; எனது இலக்கு வெற்றியே! எனவே, எதற்கும் தயார் என்ற மனநிலையில் வாழ்வது.
இஸ்ரயேல்
மக்களின் மீட்புக்கு மெசியா வருவார் எனப் பல பெண்கள் காத்திருந்தனர்.
ஆனால், அந்த மீட்புத்திட்டம் அன்னை மரியாவில் வெளிப்படுகின்றது. காத்திருக்கும்போது துணிவு பிறக்கின்றது தோல்விக்கான பாடங்களைக் கற்றுக்கொண்டு வெற்றிக்கான பாதைகளை வகுத்துக் கொடுக்கின்றது. “வெற்றி என்பது ஒரு தோல்வி அல்ல; மற்றொரு தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் நகரும் திறன்” என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். நாலு வயதுவரை பேச முடியவில்லை. இவனால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று பள்ளியை விட்டு அனுப்பப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறந்த இயற்பியலாளராக நோபல் பரிசு பெறுகிறார்.
தேர்ந்தெடுக்கும்
இலக்கின்மீது ஆர்வமும் ஆளுமையைப் பிரதிபலிக்கும் எண்ணமும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நல்ல எண்ணங்களும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக அமைகின்றன. “எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது ஒன்றை மட்டும் மறக்காதீர்கள்! எதிர்காலம் என்ற ஒன்று உண்டு” என்கிறார் கிளப்டை. தாமஸ் ஆல்வா எடிசன் பலமுறை தோல்வி அடைந்துவிட்ட பின்புதான் மின்சாரத்தைக் கண்டுபிடிக்கின்றார். கடந்த காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தை எதிர்நோக்குவதைவிட நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி இலக்குகளை அடையப் பாடுபடும்பொழுது வெற்றி நிச்சயம் உண்டு.
எதிர்நோக்கு
என்னும் நெருப்பை நாம் தொடர்ந்து பற்றி எரியச் செய்ய வேண்டும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்றாட வாழ்வில் முரண்பட்ட வாழ்க்கையில் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நமக்கு நமது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்நோக்குப் பல இருக்கும். ‘கனவு
காணுங்கள்’ என்ற
அப்துல்கலாம் வார்த்தைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் ஏராளமாக இருக்கும். “உங்கள் நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே
உயிரற்றதாய் இருக்கும்”
(யாக் 2:17) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம் எதிர்நோக்குச் செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும். ‘செயல்களில்லா விசுவாசம் செத்த விசுவாசம்’
என்பதற்கேற்ப தொலைநோக்குப் பார்வையில் எதிர்நோக்கு ஒளிர வேண்டும்.
உலக
அதிசயங்களை வியந்து வியந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் அறிவியல் அறிஞர்கள் தம் புதுமைகளை, கண்டுபிடிப்புகளை ஒருபோதும் நிறுத்துவதே இல்லை; ‘புது உலகு படைப்போம்’
என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத் தொடர்கின்றனர். நாமும் புனிதப் பயணங்களை நம் வாழ்வில் தொடர்வோம்.
நீதி அப்பொழுதே கிடைத்தால் மட்டுமே அது நீதி; அந்த நீதி சில நிமிடங்களைக் கடந்தால், அது அநீதியின் குரலாக மாறிவிடுகிறது.
காலமும்
சூழலும், இயற்கையும் இயலும், உண்மையும் பொய்யும், தேடலும் தேவனும், அறிவியலும் அரசியலும் மாறிவருகின்ற இன்றைய காலச்சூழலில் நீதி, நேர்மை, உண்மை, இரக்கம், அரவணைப்பு என்பதனைத் தேடுவது மனித வாழ்க்கையில் காண இயலாத பொக்கிஷமாக மாறிக்கொண்டிருக்கிறது.
அநீதிக்காகக்
குரல் கொடுத்த நீதிமான்கள் ஏராளம் ஏராளம்! உண்மைக்காகப் போராடிய புண்ணியவான்கள் ஏராளம் ஏராளம்!
யார்
யார் கண்டுகொள்ள முடியும்? அடைக்கப்பட்ட மனிதனின் கண்ணீரையையும் கவலையையும். சிறைக்குச் செல்பவர்கள் எல்லாம் உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்தவர்களும் அல்ல; நேர்மைக்காக வந்தவர்களும் அல்ல; பல பேர் தவறுக்குத்
தண்டனையாக வந்தவர்கள், சில பேர் பிறரைக் காக்கத் தானாக வந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு; வந்த கதை கேட்டால் பலருக்குக் கண்ணீரும், சொந்தக் கதை கேட்டால் சிலருக்குக் கொடுமையும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அழுகுரல்... அழுகுரல்... சிறையில் அடைக்கப்பட்ட பலரின் அழுகுரல்!
குடும்பத்திற்காக,
உறவுகளுக்காக, நண்பனுக்காக, அரசியலுக்காக, அமைதிக்காக, மற்றவருக்காக, தனக்காக என்று பல்வேறு சூழ்நிலையில் அடைக்கப்பட்ட மனிதர்களின் அழுகுரல் யார் காதுகளுக்கும் கேட்காது. அடைக்கப்பட்டவரின் அழுகுரலுக்குச் செவிகொடுப்பவர்கள் சிலர். அதிலும் பல அழுகுரலுக்கு அமைதி
அளித்தவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை அவர்கள் நற்செய்தியின் விழுமியங்களான “நான் சிறையில் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்தீர்கள்” என்பதனைத்
தன் வாழ்வாக வாழ்ந்தவர். சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பது, அவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுவது, அவர்களின் காலடிகளைக் கழுவுவது போன்ற பல்வேறு செயல்களை அவர்களுக்காகச் செய்து அழுகையை அரவணைப்பில் மாற்றிக் கொண்டிருந்தவர்.
‘மக்கள் குரல்’ என்ற இதழுக்குக் கொடுத்த ஒரு பேட்டியிலே திருத்தந்தை இவ்வாறு கூறுகிறார். “நான் சிறைகளுக்குச் செல்கின்ற வேளையில் என் உள்ளம் உருகும். எனது மூன்று பெரிய வியாழன் கொண்டாட்டங்களில் இரண்டினைச் சிறைகளிலே காலடிகளைக் கழுவும் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இத்தாலியிலே ஒரு சிறைக்குச் சென்று சிறைக்கைதிகளோடு உணவருந்தி உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஓர் எண்ணம் எனது தலையில் உதித்தது. இங்கே நான் ஒரு கைதியாக இருந்தால்”
என்ற நினைப்பு. யாரும் குற்றம் செய்ய மாட்டோம், சிறையிலே அடைக்கப்பட மாட்டோம் என்ற நிச்சயம் இல்லை. நான் இங்கு வராமல் கடவுள் எப்படிக் காப்பாற்றினார்? என்று கடவுளிடம் கேட்பேன். அவர்களுக்காக நான் வருத்தமுறுகிறேன். நான் சிறையில் இல்லை என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். பெரும் குற்றங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியதுபோல அவர்கள் காப்பாற்றப்படவில்லை. அந்த நினைப்பு என்னை உள்ளத்தில் அழவைக்கிறது. அந்த உணர்வு அழுத்தமாகவே உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.
நீதியரசர்களின்
நீதி சாட்சிகளையும், ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால், அடைக்கப்பட்ட மனிதனின் அழுகுரல் எதையும் ஈடு செய்ய முடியாது. வார்த்தைகளும் வசனங்களும் மாறி மாறி பேசினாலும், நீதியும் நேர்மையும் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டாலும், அன்பும் அமைதியும் உறவுகளில் திளைத்தாலும் காரணமும் சூழ்நிலையும், தன்னிடம் உள்ள தவறான குணத்தால் அடைக்கப்பட்டு
மனிதனின் அழுகுரலின் வேதனை; பார்ப்பவருக்கு அல்ல, அதை உணர்ந்தவர்களுக்கு...!
1. பழைய ஏற்பாடு இஸ்ரயேலின் போராட்டத்திலும் வெற்றியிலும் மற்றும் அதன் மீட்பிலும் கடவுளின் ஆவியாரால் தூண்டப்பட்டுச் செயலாற்றிய சில பெண்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. மக்களுடைய வரலாற்றில் அவர்களின் உடனிருப்பானது விளிம்புநிலையிலோ அல்லது செயலற்றதொன்றாகவோ இல்லை; மாறாக, மீட்பு வரலாற்றின் உண்மையான கதாநாயகிகளாகவே தோன்றுகின்றார்கள். இதோ சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்:
செங்கடலைக்
கடந்த பிறகு அந்த இறுதி நிகழ்வானது ஒரு விழாக் கொண்டாட்டமாக மாறுவதற்கான முயற்சியை ஒரு பெண்தான் முன்னெடுத்தாள் என்பதைப் புனித நூலானது சுட்டிக்காட்டுகின்றது: “இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம், கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள் பின் சென்றனர். அப்போது மிரியாம், ‘ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்’ என்று
பல்லவியாகப் பாடினாள்”
(விப 15:20-21). ஒரு விழாக் கொண்டாட்ட சூழலில் பெண்ணை முன்னிருத்திக் கூறுவதென்பது பெண்ணினுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை மட்டும் சுட்டிக்காட்டாமல், கடவுளைப் புகழ்வதிலும் அவருக்கு நன்றி செலுத்துவதிலும் அவளுக்கிருந்த அவளின் தனித்திறமையையும் சுட்டிக்காட்டுகின்றது.
பெண்களின் நேர்மறையான
பங்களிப்பு
2. நீதித்தலைவர்களின்
புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இறைவாக்கினரான தெபோராவின் செயலானது இன்னும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது. படைத் தளபதியிடமும், அவரின் வீரர்களிடமும் சென்று அவர்களை ஒன்றிணைப்பதற்கான உத்தரவைத் தந்த பிறகு அவர்களுடனேயே இருந்து யாவேல் என்றழைக்கப்படும் மற்றொரு பெண்ணானவள் அவர்களின் எதிரிகளை வீழ்த்துவாள் என்று முன்னறிவித்து இஸ்ரயேலர்களுடைய படையின் வெற்றியை உறுதி செய்கின்றாள்.
மிகப்பெரும்
அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தெபோராவும் யாவேலினுடைய செயலைப் புகழ்ந்து, மிக நீளமானதொரு பாடலைப் பாடுகின்றாள்: “கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறுபெற்றவள்!
கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறுபெற்றவள்!” (நீதி 5:24). புதிய
ஏற்பாட்டில் இந்தப் புகழ்ச்சியானது மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபொழுது எலிசபெத் மரியாவை வாழ்த்திக்கூறும் அந்தப் பாடலில் எதிரொலிக்கிறது: “பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்...” (லூக் 1:42).
தெபோரா
மற்றும் யாவேல் போன்ற பெண்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் வழியாக மக்களின் மீட்பில் பெண்களுடைய குறிப்பிடத்தக்க பங்கானது யோசியா அரசரின் காலத்தில் வாழ்ந்த குல்தா என்ற மற்றோர் இறைவாக்கினரின் வரலாற்றிலும் எடுத்துக்காட்டப்படுகின்றது. இல்க்கியா
என்ற குருவினால் கேள்வி கேட்கப்பட்டு, கடவுளுடைய தண்டனைக்குப் பயந்து அரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்து அவள் இறைவாக்குரைத்தாள். இவ்வாறு குல்தா இரக்கம் மற்றும் அமைதியின் தூதுவராக மாறுகின்றார் (2அர 22:14-20).
3. தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களின் வரலாற்றிற்கான நேர்மறையான பங்களிப்பை உயர்த்திப் பேசுகின்ற யூதித்து மற்றும் எஸ்தர் புத்தகமானது மிகக் கொடூரமானதொரு கலாச்சாரப் பின்னணியில் இஸ்ரயேல் மக்களின் வெற்றி மற்றும் மீட்பைப் பெற்றுத்தந்த இரண்டு பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.
குறிப்பாக,
யூதித்து புத்தகமானது இஸ்ரயேலை வெல்வதற்காக நெபுகத்னேசரால் அனுப்பப்பட்ட மிகப் பயங்கரமானதொரு படையைப் பற்றிப் பேசுகின்றது. பெத்தூலியா நகரைக் கைப்பற்றுவதற்காக எதிரிகள் தயாராக இருந்த நிலையில், எந்தவோர் எதிர்ப்பும் பயனளிக்காது என்றறிந்து, ஒலோபெரினால் வழிநடத்தப்பட்ட அதனுடைய மக்கள் விரக்தியில் அவர்களின் அரசரைச் சரணடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக யாருடைய உதவியும் இல்லாத நிலையில், அந்த நகரத்துப் பெரியவர்கள் நகரத்தை எதிரிகளிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்த நிலையில், ஆண்டவரிடமிருந்து வரவிருக்கின்ற மீட்பிற்கான அவளின்
முழுமையான நம்பிக்கையை அறிவித்து அவர்களின் நம்பிக்கையின்மைக்காக யூதித்தால் அவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள்.
அவளின்
தாழ்ச்சி மிகுந்த செபம் மற்றும் என்றும் கற்புடன் நிலைத்திருப்பதற்கான அவளுடைய எண்ணத்தினால் ஆண்டவரை நோக்கி எழுப்பப்பட்ட மிக நீண்டதொரு விண்ணப்பத் திற்குப் பிறகு ஆண்டவர் மீதான நம்பிக்கையின் அடையாளமாக இருந்த அவள் அகங்காரம், விக்கிரக வணக்கம் மற்றும் ஒழுக்கமற்ற எதிரித்தலைவனாகிய ஒலோபெரினிடம் தனித்துவிடப்பட்ட நிலையில் அவனைத் தாக்குவதற்குமுன் யூதித்து, யாவே கடவுளை நோக்கி இவ்வாறு கூறி செபிக்கின்றாள்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்” (யூதி
13:7). பிறகு ஒலோபெரினின் வாளை எடுத்து அவனின் தலையைத் துண்டிக்கின்றாள்.
தாவீது
மற்றும் கோலியாத்திற்கிடையேயான நிகழ்வில் நடந்ததைப் போன்றே இங்கும் ஆண்டவர் பலவீனமான ஒருவர் பலமிக்கவரை வெற்றிகொள்ளச் செய்கின்றார். எவ்வாறாயினும் இந்த நிகழ்விலும் வெற்றியைப் பெற்றுத்தந்தவள் ஒரு பெண்தான். மக்களை ஆள்பவர்களின் கோழைத் தனம் மற்றும் நம்பிக்கையின்மையினால் ஆட்கொள்ளப்படாமல் யூதித்து ஒலோபெரினிடம் சென்று அவனைக் கொன்று தலைமைக் குரு மற்றும் எருசலேம் பெரியவர்களின் நன்றி மற்றும் பாராட்டைப் பெறுகின்றாள்.
எதிரிகளைக்
கொன்ற யூதித்தை நோக்கி இந்த நகரத்துப் பெரியவர்கள் இவ்வாறு புகழ்ந்தார்கள்: “நீரே எருசலேமின் மேன்மை; நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி; நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே! இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்; இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவை குறித்து கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக!” (யூதி 15:9-10).
4. எஸ்தர்
புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்வுகள் யூதர்களுக்கு மற்றொரு மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நிகழ்ந்தவைகளாகும். பாரசீக அரசில் ஆமான் அரசனின் மேற்பார்வையாளர் யூதர்களை அழித்தொழிக்க ஆணையிடுகின்றான். இந்த ஆபத்தைத் தவிர்க்க சூசான் நகரத்துக் கோட்டையில் வாழ்ந்த மொர்தக்காய் என்பவர், அரசி என்கின்ற பட்டத்தைப் பெற்று அரசருடைய அரண்மனையில் வாழ்ந்து வந்த அவரின் மருமகளான எஸ்தரிடம் செல்கின்றார். நடைமுறையில் இருந்த சட்டத்திற்கு எதிராக மரண தண்டனைக்கான ஆபத்து இருந்தபொழுதும் அழைப்பாணையின்றி அரசனிடம் சென்று அழித்தொழிக்கும் ஆணையை இரத்துச் செய்வதற்கான உத்தரவைப் பெறுகின்றாள். ஆமான் தூக்கிலிடப்பட்டு மொர்தக்காய் ஆட்சிக்கு வந்தபின் யூதர்கள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் தங்கள் எதிரிகளை விடவும் மேன்மையானதொரு நிலையை அடைகின்றார்கள்.
யூதித்தும்
எஸ்தரும் தங்களுடைய மக்களின் மீட்பிற்கான வெற்றியைப் பெறுவதற்காக அவர்களின் வாழ்வை இழக்கவும் துணிகின்றார்கள். இருப்பினும், இந்த இரண்டு தலையீடுகளும்
ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவைகள்; எஸ்தர் தங்களின் எதிரியைக் கொல்லாமலே ‘இடையீட்டாளர்’ என்கின்ற
பங்கைச் செய்து அழிவு பற்றிய பயம் காட்டி அச்சுறுத்தப்பட்ட அந்த மக்களுக்காகப் பரிந்துபேசுகின்றாள்.
மனித மீட்பில்
மரியாவின்
பங்கைத்
தூய
ஆவியார்
வடிவமைக்கின்றார்
5. இத்தகைய
பரிந்துபேசுகின்ற பங்கானது பின்னாளில் முதல் சாமுவேல் புத்தகத்தில் வரும் மற்றொரு பெண்ணான நாபாலின் மனைவி அபிகாயிலுக்கும் கூறப்படுகின்றது. இங்கும் முன்பு போன்று அவளுடைய பரிந்துரை வழியாகவே மீட்பானது அவர்களுக்குக் கிடைத்தது.
நாபாலின்
குடும்பத்தை அழிக்க முடிவெடுத்திருந்த தாவீதை அவள் சந்திக்கச் சென்று, அவளுடைய கணவரின் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கின்றாள். இவ்வாறு அவளின் குடும்பத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கின்றாள் (1சாமு 25).
இந்நிகழ்வுகளிலிருந்து
பழைய ஏற்பாட்டு மரபும் குறிப்பாக, கிறிஸ்துவின் வருகையையொட்டிய பழைய ஏற்பாட்டுப் பகுதிகளும் இஸ்ரயேலினுடைய மீட்பில் பெண்களின் தீர்க்கமான செயலை வலியுறுத்துகின்றன.
இவ்வாறு
பழைய ஏற்பாட்டுப் பெண்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் வழியாகத் தூய ஆவியானவர் மனுக்குலம் அனைத்திற்குமான மீட்புப் பணியில் மரியாவின் பணியை என்றுமில்லாத மிகத் துல்லியமான பண்புகளோடு வடிவமைக்கின்றார்.
மூலம்:
John Paul II,
Woman’s indispensable role in salvation history, in ‘L’Osservatore Romano’,
Weekly Edition in English, 3 April 1996, p. 3.