நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலெனா அவர்கள், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம், எருசலேமில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ஓரிடத்தில் மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்ட சிலுவை எது என்பதை ஆய்வுசெய்ய, மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை எனப் புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.
அச்சிலுவையைக்
கண்டுபிடித்த இடத்தில், 335-ஆம் ஆண்டு புனித கல்லறைக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகிய நாள்களில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அர்ப்பணிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள் திருச்சிலுவையின் மகிமை விழாவெனத் திரு அவையில் கொண்டாடப்படுகிறது.
அன்பானவர்களே!
நமது பாவம் மற்றும் உலகின் தீமையைச் சிலுவை மரத்தோடு ஏற்றுக்கொண்டு, உலக மக்களை அன்பால் வெற்றிகொண்ட இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சிலுவையின் மகிமையை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவ்விழா ‘திருச்சிலுவையின் மாட்சி’,
‘திருச்சிலுவையின் வெற்றி’,
‘பெருமைமிகு திருச்சிலுவை நாள்’,
‘சிலுவை உயர்த்தப்பட்ட நாள்’ எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
நாம்
இந்த உலகில் பிறந்தபோது, நம்மை வரவேற்க நம் பெற்றோர் நம்மீது வரைந்த முதல் வரவேற்பு அடையாளம் சிலுவை. திருமுழுக்கு அருளடையாளம் வழியாக, நம்மைத் திரு அவையில் ஓர் உறுப்பினராகச் சேர்த்திடும் அடையாளம் சிலுவை. நாம் இறந்தபோது நம் கல்லறையின்மீது ஊன்றப்படும் அடையாளம் சிலுவை. இறந்த நாம் அனைவரும் மீண்டும் உயிர்ப்பெற்றெழ இறைமகன் தேர்ந்தெடுத்த அடையாளம் திருச்சிலுவை. பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றோம். சிலுவை அடையாளம் வரைந்து நாள்தோறும் நமது நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
எங்குச் சென்றாலும் சிலுவையை நாம் மறப்பதில்லை. சிலுவை என்பது நம் வாழ்வில் ஒரு தவிர்க்கமுடியாத நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது. கிறித்தவர்களின் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைந்திருந்திருப்பது திருச்சிலுவை. சிலுவையின்றிக் கிறித்தவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. திருச்சிலுவை நம்பிக்கையின் அடையாளம்; திருச்சிலுவை வாழ்வின் அடையாளம்; சிலுவை வெற்றியின் அடையாளம்; சிலுவை மீட்பின் அடையாளம்; திருச்சிலுவை அனைத்து நன்மைகளின் ஊற்று. இன்று நாம் கொண்டாடும் திருச்சிலுவையின் மாட்சி விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலில்,
திருச்சிலுவை என்பது நம் நம்பிக்கையின் அடையாளம். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வந்து, ஓர் என்ற மலையிலிருந்து செங்கடல் சாலை வழியாகப் பயணப்படும்போது மோசேவுக்கும் கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். இறைவனுக்கு எதிராகப் பேசி, பாவம் செய்த மக்களைப் பாம்புகள் கடித்தன. இச்செயல் இஸ்ரயேல் மக்கள் கடவுள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கான அடையாளமாகவும் அமைந்திருக்கின்றது. வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப் பாலைவனத்தின் வழியாகக் கடந்து சென்ற கடவுளின் மக்கள், தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் சோர்வடைந்தனர். நம்பிக்கையை இழந்த மக்கள் இறுதியில் கடவுளின் வாக்குறுதியையும் மறந்து, வளமான நாட்டை நோக்கி வழிநடத்துகின்றவர் நம் கடவுள் என்பதை நம்பும் வலிமையையும் இழக்கின்றனர்.
கடவுளை
நம்பாத மக்கள் பாம்பினால் கடிபட்டது தற்செயலான நிகழ்வு அல்ல; திருவிவிலியத்தில் தொடக்க நூலில் குறிப்பிடப்படும் முதல் பாம்பு ஆதாம்-ஏவாள் இதயத்தில் அவநம்பிக்கையை விதைத்தது. கடவுள் நல்லவரல்லர் என்றும், அவர்களின் மகிழ்ச்சி, சுதந்திரத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் கடவுள் என்றும் தீய நஞ்சைக் கக்கியது. பாலைவனத்தில் இப்பாம்பு ‘கொள்ளிவாய்ப் பாம்பாக’ தோன்றுகிறது. அதாவது, மீண்டும் மக்களின் செயலால் பாவம் திரும்புகின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பாமல், அவர்களுக்கு வாழ்வளித்த கடவுள் மேல் குற்றம் சுமத்துகின்றார்கள். குழப்பம் விளைவிக்கின்றார்கள். இதனால் தங்களது மரணத்தைச் சந்தித்து நம்பிக்கையற்றவர்களின் முடிவு இதுதான் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆக, இன்றைய வாசகத்தின் முதல் பகுதி, நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில், இறைவன் மீதும்
ஒவ்வொரு மனிதர்மீதும் ஏற்பட்ட அவநம்பிக்கையின் தருணங்களை ஆய்வு செய்துபார்க்க அழைக்கின்றது. எத்தனை முறை நம்முடைய மனச் சோர்வு, தோல்வி, விரக்திநிலை, பொறுமையற்ற தன்மை போன்றவற்றால் நமது உள்ளத்தைப் பாலைநிலமாக்கி இருக்கின்றோம்? நம் இதயங்களில் தங்கியிருக்கும் தோல்விகள் மற்றும் சோர்வுகள் இறைவனை நோக்கிப் பார்க்கும் வலிமையை இழக்கின்ற சூழல்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் நமது நம்பிக்கையின் அடையாளமாக இருப்பது சிலுவையே என்பதை உணர்கிறோம்.
இரண்டாவதாக,
திருச்சிலுவை என்பது நம் வாழ்வின் அடையாளம் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதி நமக்கு உணர்த்துகிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மோசேவிடம் திரும்பி வரும்போது, மோசே ஆண்டவரிடம் மக்களுக்காக மன்றாடுகின்றார். கடவுள் கூறியபடியே மோசே, வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கம்பத்தில் பொருத்த, அதைப் பார்த்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தனர். நச்சுப்பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற மோசேவுக்கு வழிசொல்லும் இறைவன் அப்பாம்புகளை அழிக்கவில்லை. கடவுளின் இச்செயல் மனித வாழ்வில் ஏற்படும் துன்பம், பாவம், அவநம்பிக்கை போன்றவற்றைக் கையாள வழிகாட்டுகின்றது.
கம்பத்தில்
பொருத்தப்பட்ட வெண்கலப் பாம்பை நோக்கியோர் அனைவரும் வாழ்வு பெற்றது போன்று, சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்த்து, அவர் காட்டும் வழியில் நடப்போர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். இக்கருத்தை இன்றைய நற்செய்தி முன்னுணர்த்துகிறது. “பாலை நிலத்தில் மோசேவால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல, மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்”
(யோவா 3:14-15).
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், அன்பிற்காக அனைத்தையும் துறந்து, தம்மையே தாழ்த்தி, தம் நிலையை விட்டுக் கீழிறங்கி வந்து, சிலுவைச் சாவுவரை கீழ்ப்படிபவராக இருந்த இயேசுவை, இறைவன் மேலுலகிற்கு உயர்த்தினார் எனப் பவுல் குறிப் பிடுகிறார். எனவே, நமக்காகச் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு, மரணத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பாம்பின் விசத்தன்மையை அகற்றி, சாவிலிருந்து புதிய வாழ்வுக்கு உயர்த்துகிறார். எனவே, நாம் அவரைப் பார்க்கும் போது பாவம், துன்பம் அனைத்தையும் அதன் ஆற்றலையும் அழித்துவிடுகின்றார் என்பதே இவ்விழா உணர்த்தும் உண்மை.
மூன்றாவதாக,
திருச்சிலுவை என்பது நன்மைகளின் ஊற்று. நம்முடைய கிறித்தவ வாழ்விற்கான எல்லா நன்மைகளையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம். திருச்சிலுவையே நமது மீட்பின் பாதை, மறுவாழ்வு மற்றும் உயிர்ப்புக்கான பாதை. சிலுவையில் தொங்கும் இயேசுவிடமிருந்து வெறுப்பை அல்ல, அன்பை, வேறுபாட்டை அல்ல, இரக்கத்தை, பகைமையை அல்ல, மன்னிப்பைக் கற்றுக்கொள்கின்றோம். அவரின் நீட்டிய கரங்கள், இறைவனின் மென்மையான அரவணைப்பை வெளிப்படுத்துகின்றன. அவ்வன்பினை நாமும் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தவே அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
நான்காவதாக,
திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பே. இதுவே கிறித்தவத்தின் வழி. இது பதவி, ஆற்றல், தகுதி போன்றவற்றினால் வருவதல்ல. தம் மக்களுக்காகத் தம் உயிரையே கொடுத்த இயேசுவின் மீட்பின் வழி. தம் உடன் சகோதர-சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படாது, தாழ்ச்சி, உலகளாவிய அன்பு கொண்ட தன்னிகரற்ற வழி. “திருச்சிலுவை ஓர் அலங்காரப் பொருள் அல்ல; இது நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளமும் அல்ல; மாறாக, இது நம் பாவங்களைத் தம்மீது சுமந்த, தம்மையே தாழ்த்திய இறைவனின் பேருண்மை”
என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மறையுரை, ஏப். 8, 2014).
சிலுவையில்
அறையப்பட்ட இயேசுவின் துளையுண்ட காயங்களிலிருந்து நாம் பிறப்பெடுத்துள்ளோம். எனவே, அன்பால் தீமையை வெல்வோம். இந்நாளில் நம்பிக்கையோடு சிலுவையை நோக்குவோம். சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்தச் சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணர்வோம். அன்பும் அமைதியும் கொண்டு, மகிழ்வான சான்று தரும் புதிய வாழ்வு வாழ்வோம். திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பு!
இயேசு தாம் உருவாக்கிய இறையாட்சிப் பணிக்காகச் சீடர்களை, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், இயேசுவின் சீடர்கள் பெரும்பாலும் தாம் சீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுள் பலரும் “இயேசு அரசராக ஆட்சி செலுத்துவார். அவ்வாட்சியில் தாமும் பங்கு பெறுவோம்” (மாற் 10:35-45; மத் 20:20-28) என்றே கருதினர். “மானிட மகன் பலவாறு துன்பப்படவும், உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும்...” (மாற் 8:31; மத் 16:21; லூக் 9:22) வேண்டும் என இயேசு கூறியபோது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். எனவேதான், இயேசு தம் சீடர்களுக்கு மட்டுமல்ல, தம்மைப் பின்பற்றிய மக்கள் கூட்டத்திற்கும் சீடத்துவ அழைப்பின் தன்மையைப் பற்றித்தெளிவாய் விளக்குகிறார்.
சீடத்துவம்
என்பது ‘ஒரு விலைமதிப்பற்ற தியாகம்’ என்பது இன்றைய வழிபாட்டின் மையப்பொருளாக அமைகிறது. இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான பண்புகளைச் சீடத்துவ வாழ்வின் இலக்கணங்களாக முன்வைக்கின்றார் இயேசு: 1) உறவுகளையும் உயிரையும் மேலாகக் கருதுபவர்கள் (லூக் 14:26); 2) தம் சிலுவையைச் சுமக்கத் தயங்குபவர்கள் (14:27); 3) தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாதவர்கள் (14:33) ஆகியோரைத் தம் சீடத்துவ வாழ்விற்குத் தகுதியற்றவர்களாக எடுத்துக்காட்டுகின்றார். இந்த மூன்று தலைப்புகளின் கீழ் நமது சிந்தனைகளைச் சற்று விரிவாக்குவோம்.
முதலாவதாக,
இயேசு தமது சீடராக இருக்க விரும்புவோர் தம் உறவுகளை இழக்கவேண்டும் (லூக் 14:26) என்கிறார். பத்துக்கட்டளைகளில் நான்காவது கட்டளை, “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட”
(விப 20:12) என்கிறது. இயேசுவின் போதனையின் மையமும் “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா
13:34) என்பதுதான். அப்படி இருக்க, உறவுகளை எப்படித் துறப்பது? இங்கே இயேசுவின் கூற்றை எப்படிப் புரிந்துகொள்வது? இயேசு தம்மிடம் வரும் சீடர் அனைவரும் தம் உறவுகளைத் துறந்துவிடவேண்டும் அல்லது வெறுத்து ஒதுக்கிவிட்டுத் தம்மைப் பின்பற்றவேண்டும் என்று கேட்கவில்லை; மாறாக, இவர்கள் அனைத்திற்கும் மேலான இடத்தைத் தமக்கும் தம் பணிக்கும் தரவேண்டும் என்றே கேட்கிறார். கிறித்தவச் சீடத்துவ வாழ்விற்குக் குடும்ப உறவுகள் தடையாக இருக்கக்கூடாது என்பதே இயேசுவின் கரிசனை (லூக் 9:59, 61; 1அர 19:20). அழைக்கும் குரல் கேட்டவுடனே பின்தொடர்வதே முழுமையான சீடத்துவம் (மத் 4:22; 9:9).
இரண்டாவதாக,
தமது சீடராக இருக்க விரும்புவோர் சிலுவையைச் சுமக்க வேண்டியிருக்கும் (லூக் 14:27) என்கிறார். அதாவது, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (லூக்
9:23) என்கிறார். மேலும், “தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர்; என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்” (மத்
10:39) என்றும் “மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை”
(மத் 8:20; லூக் 9:58) என்றும் கூறி, தம் வாழ்வைத் தொடர்ந்தவரைப் பின்பற்றிய சீடருக்குச் சிலுவைதான் சீடத்துவத்தின் அடையாளம் என உணர்த்துகிறார். எனவே, சீடர்கள்
சிலுவையைச் சுமக்க, துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். இலட்சியச் சிலுவைகளைச் சுமக்க மனமில்லாதவர்கள் துறவு வாழ்வில் தூரமிக்கவர்கள். சுமக்கத் தெரிந்தவர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள்.
மூன்றாவதாக,
இயேசு தமது சீடராக இருக்க விரும்புவோர் தங்கள் உடைமைகளை எல்லாம் இழக்க வேண்டும் (லூக் 14:33); தங்கள் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் (மாற் 10:21). இயேசுவின் சீடர் என்பவர் தன்னையே முழுவதுமாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறவர். தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கடவுளுக்குக் கொடுப்பவர். எனவே, உலகச் செல்வத்தின் மீதான பற்றை விட்டுவிட்டு, இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதுதான் சீடத்துவம்.
இத்துணை
கடினமான சீடத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுப்போர் அதன் தன்மையை நன்கு உணர்ந்திருக்கவேண்டும்; சீடராக முடிவு செய்யு முன் தீவிரமாய்ச் சிந்திக்கவேண்டும்; மேற்குறிப்பிட்ட இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் தம்மிடம் உண்டா என்று சோதிக்கவேண்டும். இவ்வுண்மையை உணர்த்தத்தான் இயேசு கோபுரம் கட்டுதல், போருக்குச் செல்லுதல் என்னும் இரண்டு சிறு உவமைகளை எடுத்துரைக்கிறார். கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர் அதனைக் கட்டி முடிக்கத் தம்மிடம் பொருள் வசதி இருக்கிறதா? என்றும், போரிடப் போகும் அரசர் தம்மை எதிர்த்து வரும் வலிமை பொருந்திய அரசரை வெல்ல தம்மிடம் படைபலம் உண்டா? என்றும் சிந்தித்துத் தெளிந்த முடிவு செய்வதுபோல், இயேசுவைப் பின்பற்ற முன்வரும் சீடரும் இத்தனை இழப்புகளைத் தாங்கி இயேசுவைப் பின்பற்ற தம்மால் முடியுமா? எனத் தீவிரமாகச் சிந்தித்து இயேசுவைப் பின்பற்ற முன்வர வேண்டும் எனச் சீடத்துவத்தின் தன்மையை அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.
இன்றைய
சூழலில் இயேசுவின் சீடராக வாழ்தல் என்பது மிகவும் கடினமானதே. இன்று இயேசுவின் சீடராக வாழ்வதைவிட நம்பிக்கையாளராக, இயேசுவை மனத்தளவில் நம்புவோராக வாழ்வது மிக எளிது. இயேசுவை நம்பி வாழ்வதை ஒரு சமய வாழ்வு வடிவில் புரிந்துகொண்டதால் சமயச் சடங்குகள், வழிபாடுகள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கடைப்பிடித்தால் போதும் என நினைக்கின்றோம். இதுவல்ல சீடத்துவம்.
ஓர் அடிமையான ஒனேசிமுவைத் தன்னுடைய இதயத்துக்கு நெருக்கமான சகோதரராக ஏற்றுக்கொண்ட பவுல் (பில 12), சீடத்துவ வாழ்வுக்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. மன்னிப்பதும் தீமை செய்தோரை அன்புடன் ஏற்பதுமே சீடத்துவம் என்பதைப் பவுல் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நமக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைய
முதல் வாசகமும் கடவுள் அருளிய ஞானத்தாலும், அவர் அனுப்பிய தூய ஆவியாலும் கடவுளின் திட்டத்தை அறிவதும், அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதுமே நிலையான சீடத்துவம் என்கிறது. இறையாட்சிக்கான பயணத்தில் பயனற்ற (சாஞா 9:14), ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிற, கவலை தோய்ந்த மனத்திற்குச் சுமையாய் அமைகிற (9:15) சாதி, இனம், பணம், பதவி, அதிகாரம், அகங்காரம், புகழ், மமதை, வீண் பெருமை ஆகிய சாத்தானுக்கே உரிய சிறுமைகளைச் சுமந்தலையாமல், கடவுள் அருளும் தூய ஆவி என்னும் ஞானத்தால் (9:17) கடவுளின் திட்டங்களை அறிந்து, அவற்றிற்கேற்ப வாழ்வதே (9:18) நிலையான சீடத்துவம்.
நிறைவாக,
இயேசு காட்டிய, அவர் வாழ்ந்த சீடத்துவம் என்பது ஏழையரின் உள்ளத்தோராய் முழுமையாய் பகிர்தலும், இரக்கமுடையோராய் வாழ்தலும், எல்லாச் சூழலிலும் அன்புநெறியில் செயல்படுதலும், பகைவரை மன்னித்து அவர்களுக்காக வேண்டுவதும் ஆகும். மேலும், உண்மைக்காகவும் நீதிக்காகவும் எல்லாச் சூழல்களிலும் குரல் எழுப்பிப் போராடுவதும் உண்மையை நிலைநாட்டுவதும் கனிவு, பரிவு, பொறுமை, நன்னயம், நம்பிக்கை ஆகிய அறநெறிப் பண்புகளை வாழ்வாக்குவதும் இயேசுவின் சீடரின் இன்றியமையாத செயல்பாடுகளாகும்.
நாம்
கிறித்தவச் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதைவிட கிறிஸ்துவின் சீடராக, அவர் காட்டிய நெறியில் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மக்களைக் கிறித்தவர்களாக மாற்றவேண்டும் என்பதல்ல நம் பணி; மாறாக, இயேசுவின் பாதையில் சீடராகப் பயணிக்க உதவுவதும் அவரது போதனையை வாழ்வாக்க வழிகாட்டுவதுமே நமது கடமை.
இறுதியாக,
ஓர் எண்ணம்... இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் குருக்கள், துறவறத்தாருக்கு மட்டும் என்று நாம் எண்ணிவிட முடியாது. இயேசு கலிலேயாவில் பணிகளை முடித்தபின், எருசலேம் நோக்கிய தமது பயணத்தில் (லூக் 9:51) அவரது வல்ல செயல்களைக் கண்டு தம்மைப் பின்தொடர்ந்த ‘பெருந்திரளான மக்களை’
(14:25) நோக்கிச் சீடத்துவத்தின் தன்மையை விவரித்துக் கூறுகிறார். எனவே, அவரோடு செல்லவும் அவரின் இறையாட்சியைக் கட்டி எழுப்பவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.
எனவே,
‘என் சீடராய் இரு’
(14:26,27,33) எனும் குரல் கேட்கும் ஒவ்வொருவரும் துணிவோடும் தெளிவோடும் பணிவோடும் அவரைப் பின்தொடர முற்படவேண்டும். இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்வது என்பது சவால் நிறைந்ததே. இருப்பினும், திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல, “இயேசுவோடு பின்செல்லுதலே நம் மகிழ்வு”
(மறையுரை, மார்ச் 6, 2014), தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்களால் சீடத்துவம் தரும் மகிழ்வை நிறைவாகப் பெற இயலுமோ? சீடத்துவம் ஒரு விலைமதிப்பற்ற தியாகம்!
ஆகஸ்டு மாதம் 4-ஆம் நாள் புனித ஜான் மரிய வியான்னியின் விழாவினைக் கொண்டாடினோம். இவர் காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் எழுதவில்லை. புனிதர்களான அகுஸ்தினார், அக்குவினாஸ் போன்று இவர் ஒரு மறைவல்லுநரும் அல்லர். பெரிய துறவற சபைகளை இவர் ஏற்படுத்தவில்லை; பல நாடுகளுக்கு மறைப்பணியாற்றவும் சென்றதில்லை. இவர் திருமறைக்காக இரத்தம் சிந்தவில்லை. இருப்பினும், அகில உலகின் அனைத்து அருள்பணியாளர்களின் பாதுகாவலராக இவரையே திரு அவை அழைக்கிறது. காரணம், இவர் கிறிஸ்துவின் பணிவையும் தாழ்ச்சியையும் அப்படியே அணிந்துகொண்டார். இயேசுவும் திருமுழுக்கு யோவானும் சுட்டிக்காட்டிய தாழ்ச்சி எனும் பாதையைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டார். தான் மற்றவர்களால் ‘கழுதை’ என அழைக்கப்பட்டாலும், ‘இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!’ என்பதில் பணிந்து நடந்தார். “மேன்மையடையத் தாழ்மையே வழி” (நீமொ 18:12) என்பதில் உறுதியாக இருந்தார்.
தாழ்ச்சியுடையவர்
எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார். ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். தாழ்ச்சி என்பது தாழ்வுமனப்பான்மை அல்ல; தாழ்ச்சி என்பது உண்மைநிலை; உயர்வுநிலை. “தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்” (நீமொ
22:4). தாழ்ச்சியும் பணிவும் உடையவராக வாழ்தல் பொதுவாக எல்லாருக்கும் நல்லதாகும். அவர்களுள் சிறப்பாக, செல்வருக்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்றுரைக்கின்றார் திருவள்ளுவர்.
‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே
செல்வம் தகைத்து’
(குறள் 125)
பொதுக்காலத்தின்
22-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். எந்நிலையிலும் நாம் பணிவோடும் தாழ்ச்சியோடும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைய
நற்செய்தி இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப்பற்றியும், அவ்விருந்திலே அவர் கற்றுத்தந்த பாடங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பரிசேயர் வீட்டில் ஓய்வு நாளில் நடந்த ஒரு விருந்தில் இயேசு பங்கெடுக்கிறார். பல கண்கள் அவரையே
கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.
இது இயேசுவின்மீது கொண்ட உயர்ந்த மனநிலையில் அல்ல; அவர்மீது குற்றம் சுமத்தும் நோக்கில் ‘அவரைக்
கூர்ந்து கவனித்தனர்’ (லூக்
14:1). பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும், தம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும் தம் மனத்தில் தோன்றிய உண்மைகளை இயேசு பாடங்களாகப் புகட்டுகிறார்.
இயேசு
தமது பணிவாழ்வு முழுவதும் எந்தவோர் இடத்திலும் ஆணவத்துடனோ, இறுமாப்புடனோ நடந்துகொள்ளவில்லை. மேலும், தாம் இறைத்தந்தையின் ஒரே மகன், மீட்பர், போதகர், எல்லாம் வல்லவர், அருளடையாளங்களை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்த இடத்திலும் முதன்மையான இருக்கையைத் தேடவில்லை. மாறாக, சிலுவை மட்டும் தம்மைத் தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). தாழ்ச்சி மட்டுமே நிலையான மகிழ்ச்சியைத் தரும். எல்லா நற்பண்புகளின் தாய் தாழ்ச்சியே. ஆகவேதான், இன்றைய நற்செய்தியில் பொதுவிருந்தில் முதன்மையான இடத்தைத் தேடிச்சென்ற விருந்தாளிகளுக்குப் பணிவோடு நடந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றார் இயேசு.
சமுதாயக்
குழுமங்களில் நாமாக முதன்மையான இடத்தைத் தேடி அமரக்கூடாது என்பது படிப்பினை. எந்த ஒரு செயல்பாட்டிலும், பிறரை முன்னிறுத்திச் செய்வது நல்லது. தங்களைத் தாங்களே உயர்வாக நினைப்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தாழ்ச்சியான நிலையைத் தழுவுபவர்கள் உயர்வைக் கண்டடைவார்கள் என்பதும் உறுதி. பணிவு பாடத்தைக் கற்றுத்தரும் இயேசு, பணிவு பாடங்களுக்குச் சிகரமாகத் தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்ற புகழ்பெற்ற அறிவுரையை வழங்குகிறார் (லூக் 14:11).
இன்றைய
முதல் வாசகமும் தாழ்ச்சியோடு நடந்துகொள்பவர்கள் பெறுகின்ற மூன்று நற் பயன்களை அடையாளப்படுத்துகின்றது. முதலாவது, செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தாழ்ச்சியோடும் பணிவோடும் நடந்துகொள்பவர்களை இந்த உலகம் நேசிக்கும் (சீஞா 3:17). இரண்டாவது, தாழ்ச்சியோடு நடந்துகொள்பவர்களுக்கே ஆண்டவர் முன்னிலையில் பரிவு கிடைக்கும் (3:18). மூன்றாவது, தாழ்ச்சி உள்ளவர்களுக்கே தமது மறைபொருளை வெளிப்படுத்தும் கடவுள் (3:19) தாழ்ந்தோராலே அவர் மாட்சி பெறுகிறார் (3:20). எனவே, தலையாயப் பாவம் ஆணவம் என்றால், தலையாயப் புண்ணியம் தாழ்ச்சி. இறுமாப்பு அழிவுக்கு அடித்தளம். அகம்பாவம் பெரும்பாவம். அதுவே அருளின் வாய்க்காலுக்குத் தடை. இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்தே இல்லை (3:28). இறுமாப்பு தீமைகளின் வேர். இறுமாப்பே பலரையும் நெறிபிறழச் செய்திருக்கிறது (3:24). “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்” (நீமொ
29:23), “இறுமாப்பு வானதூதர்களைச் சாத்தான்களாகவும், தாழ்ச்சியானது மனிதர்களை வானதூதர்களாகவும் மாற்றுகிறது” என்கிறார்
புனித அகுஸ்தின்.
இயேசுவின்
தாழ்மைக்கும் பணிவுக்கும் அவரே ஒப்பற்ற முன்மாதிரி. “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” (பிலி
2:5) என்கிறார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான்! தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அழியாத அடையாளம். “ஒருவர்
மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” (1பேது
5:5). “ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார்” (4:10) என்கிறார்
யாக்கோபு. “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழுங்கள்”
(எபே 4: 2-3) என்கிறார் பவுல்.
தாழ்ச்சி
என்பது செயல்பாடாக மாறும்போது, ஒருவர் ஏழைகளில் ஒருவராக மாறமுடியும்; அவர்களுக்காகக் கைம்மாறு எதிர்பாராமல் பணி செய்ய முடியும். “தாழ்ச்சி என்பது பிறருக்கான சேவையைக் குறிக்கிறது” எனும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று எண்ணிப்பார்க்கத்தக்கதே (மார்ச் 30, 2015, குருத்து ஞாயிறு மறையுரை). கிறித்தவர்களுக்கான உண்மையான வாழ்வுப்பாதை தாழ்ச்சியே. கடவுள் தம் மக்களுடன் இணைந்து நடக்க அவர் தேர்ந்துகொண்ட பாதையும் தாழ்ச்சியே (பிலி 2:7). இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையைப் பின்பற்றுவதன் வழியே அவருடைய விண்ணக விருந்திலே நாம் பங்குபெற முடியும். ஆகவேதான் இயேசு நற்செய்தியின் இறுதிப்பகுதியில் ஒரு புரட்சிகரச் சிந்தனையைத் தருகிறார்.
விருந்துக்கு
அழைப்பது என்பதும், அழைக்கப்படுவது என்பதும் ஒருவரின் சமூக நிலையின் அங்கீகாரம். சமூகத்தின் சமநிலையில் இருப்போர் தங்களுக்கு நிகரான ஒருவரை விருந்துக்கு அழைத்துக்கொள்வர். செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் செல்வந்தர்களின் எண்ணிக்கையே நிரம்பி வழியும். இவர்களின் விருந்திலே அன்பைவிட ஆடம்பரமும், பாசத்தைவிட பாசாங்குமே நிழலாடும். விருந்து நேரங்களில் அவரவர் தங்கள் பெருமைகளைப் பறைசாற்றவேண்டும் என்றே விரும்புவர். இச்சூழலில் எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கைம்மாறு செய்ய இயலாத ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் விருந்துக்கு அழையுங்கள் என்கிறார் இயேசு. கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு விருந்தளிப்பது மற்றவர்கள் பார்வையில் தாழ்வானதாகத் தெரியலாம். ஆனால், இவர்களோடு தன்னை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒருவர் தம்மையே தாழ்த்திக்கொண்டால் கடவுள் முன்னிலையில் அவர் உயர்த்தப்பெறுவார்.
இயேசுவின்
புரட்சிக்கரப் போதனை இன்று நம்முன் வைக்கும் சவால்கள் என்னென்ன? நமக்கான முதல் சவால், எல்லாரும் சமூகப் படிநிலையில் உயர்நிலையில் இருப்பவர்களைத் தேடும்போது, சமூக ஏணியில் கடைசிப்படியில் இருப்பவர்களை, முற்றிலும் வலுக்குறைந்தவர்களை நம் விருந்தினர்களாகத் தேடப் பணிக்கிறார் இயேசு. இரண்டாவதாக, கடவுள் அனைவரையும் சமமாகவே படைத்தார். தம் உருவிலே படைத்தார். யாரையும் யாருக்கும் கீழானவர்களாகப் படைக்கவில்லை. எனவே, இல்லாதவர்களோடும் இயலாதவர்களோடும் வேற்றுமை பாராட்டாத அன்புக் கட்டளையை நாம் ஏற்கப் பணிக்கிறார். மூன்றாவதாக, இயேசுவைப் பொறுத்தமட்டில் தாழ்ச்சியைத் தேடுவதே உயர்வின் இலக்கணம். இயேசுவின் இவ்விலக்கணத்தை ஏற்பது கடினம் எனினும், தாழ்ச்சியில் உயர்வு தேடும் மனம் கொண்டு வாழ இன்று அவர் நம்மை அழைக்கிறார்.
ஆகவே,
இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையைப் பின்பற்றி இயேசுவுக்கு நம் இதயத்திலே இடமளிக்க முயல்வோம். தாழ்ச்சியின் மகிமையை உணர்ந்து பிறருக்கான சேவையில் ஈடுபாடு கொள்வோம். எளிய வழியே புனிதத்துக்கான பாதை. தாழ்ச்சியே இறைவனின் பாதை!
இன்று நாம் பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கியக் கூறு, ‘அவர் எவரையும் புறக்கணியாது, அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்துகொடுத்து மகிழ்பவர்’ எனப் புரிந்துகொள்ளலாம். மனிதர் மட்டுமல்லர், இந்த உலகம் முழுவதும் மீட்புப் பெறுவதையே கடவுள் விரும்புகிறார். ‘மீட்புப் பெறுவது’ என்பது இறைவன் தரும் கொடை. இந்தக் கொடை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மீட்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற வினாவுக்கு விடை தருகின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய
முதல் வாசகம் எசாயா நூலின் இறுதிப் பகுதியாகும். அழிந்துபோன தங்கள் எருசலேம் நகரையும்,
பறிக்கப்பட்ட தங்கள் அதிகாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப முனைகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.
தங்கள் சமூகமே தனித்தன்மை வாய்ந்த சமூகம்; தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் எனக் கருதினர்.
தங்களுடைய தனித்தன்மையைத் தக்க வைக்கவும், தாங்கள் மட்டுமே கடவுளுக்குரியவர்கள் என்பதை
நிலைநிறுத்தவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு
உட்படுத்துகிறார் எசாயா.
கடவுள்
இஸ்ரயேலுக்கு மட்டும் உரியவரல்லர்; பிற இனத்தாருக்கும் அவர் கடவுள். பிற இனத்தாரையும்
தம்முடைய ஆலயத்திற்கு அவர் கூட்டி வருவார்; எல்லாப் பக்கங்களிலிருந்தும் கடவுள் அவருக்கென
மக்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற கருத்தை இப்பகுதியில் பதிய வைக்கிறார் எசாயா. “பிற இனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க
வருவேன்; அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள்” (எசா 66:18) என்கிறார் ஆண்டவர். மேலும், கடவுள் எல்லா
மக்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவார் என்ற செய்தி, “அவர்களை நான் என் திருமலைக்கு
அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்...
என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைவேண்டலின் வீடு’ என அழைக்கப்படும்”
(56:7) எனும் கடவுளின் வார்த்தையில் விரிவடைகிறது. எனவே, ஆண்டவருடைய மீட்பு ஒரு குறிப்பிட்ட
இனத்தாருக்கோ, நாட்டினருக்கோ மட்டுமல்ல; மாறாக, எல்லா மக்களுக்கும் உரியது. எல்லா மக்களும்,
எந்த நிலையில் உள்ளவர்களும் ஆண்டவரின் உடன்படிக்கையை மதித்து, உடன்படிக்கை விதிகளைப்
பின்பற்றி, ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால், மீட்புக்கு உரியவர்கள் என்பதை எசாயா தெளிவாக
எடுத்துரைக்கிறார்.
“எருசலேமிலுள்ள
தம் திருமலைக்கு அனைவரையும் இறைவன் அழைத்துவருவார்”
(66:20) என்று எசாயா கூறும் ஒன்றிப்பையும் தாண்டி, இயேசு இன்றைய நற்செய்தியில் “இறையாட்சியின்போது
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்” (லூக் 13:30) என்கிறார். அதாவது, எல்லா நாடுகளிலிருந்தும்
மக்கள் மனம் மாறி இயேசு காட்டிய நெறியில் வாழ்வர் என்பதாகும். ஒருவர் கூட மீதம் இல்லாமல்
அனைவரும் வாழ்வு பெறவேண்டும், மீட்புப் பெற வேண்டும் என்பது மட்டுமே இறைவனின் விருப்பம்,
இயேசுவின் விருப்பம். ஆயினும், யூதர் பலர் இயேசு காட்டிய நெறியை ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசுவின் சமத்துவ விருப்பத்தை ஏற்றுக்கொள்வதில் யூதத் தலைவர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும்
எத்துணை தயக்கம்!
இறைவனைத்
தங்கள் தனியுடைமையாக்கி, மீட்பையும் தங்கள் தனிப்பட்ட சொத்து என்று உரிமை கொண்டாட மதத்தலைவர்கள்
நினைத்தனர். அவ்வாறே போதித்தும் வந்தனர். தாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட குலம்,
பிற இனத்தவரிடையே இருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு மீட்கப்பட்ட குலம். அப்படியிருக்க,
சமாரியர், வரி தண்டுவோர், பிற இனத்தார், பாவிகள் என்று பிறரோடு ஒரே மலையில் அமர்ந்து,
சமபந்தியில் விருந்து உண்பதா? என்ற கேள்வி யூத மதத் தலைவர்களிடத்தில் எழாமல் இல்லை.
மக்கள் எல்லாரும் மீட்கப்படுவாரா? அல்லது
‘எஞ்சியோர்’ (எசா 11:11-16; 60:1-22) எனப்படும்
கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டும்தானா? எனும் கேள்வி இயேசுவின் காலத்தில்
மக்களிடையே வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஒருவர் இயேசுவிடம், “ஆண்டவரே,
மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” (லூக் 13:23) எனும் வினாவை எழுப்புகிறார். இயேசுவுக்கு
இது ஒரு பயனற்ற கேள்வியாக இருந்தாலும், ‘ஒருவர் மீட்படைய என்ன செய்யவேண்டும்?’ என்ற
முக்கியமான கேள்விக்கு இயேசு பதிலளிக்கிறார்.
மீட்புப்
பெறுகிறவர் யார்? இனமோ, பிறப்போ, மொழியோ, மதமோ, நாடோ மீட்பைத் தீர்மானிக்க முடியாது.
மீட்பு என்பது முற்றிலும் கடவுளின் ஒரு கொடை. அவர் எல்லாருக்கும் பொதுவான தந்தை. அவர்
தரும் மீட்பு அனைவருக்கும் கொடுக்கப்படும் பரிசு. இந்தப் பரிசை ஏற்பதும் மறுப்பதும்
அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால்,
அது குறுகலான, இடுக்கமான வாயில். வருந்திதான் உள்ளே நுழையமுடியும். ஆகவேதான், “இடுக்கமான
வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்; ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்” (13:24) என்ற பாடத்தைச் சவாலாக நம்முன் வைக்கிறார் இயேசு.
வாழ்க்கை
ஒரு பயணம். இந்தப் பயணத்தைத் தொடர ஏராளமான வழிகள் நம் முன்னே உள்ளன. உலகம் ஒளியும்-இருளும்,
உண்மையும்-பொய்யும், நன்மையும்-தீமையும், வாழ்வும்-சாவும் சூழ்ந்தது. இவற்றுள் எதை,
எப்படித் தேர்ந்து வழிநடப்பது என்பதே எல்லாருக்குமான ஒரு தேடல். எந்த வழியைத் தேர்கிறோம்?
என்பதிலேதான் அடங்கியுள்ளது நம் வெற்றி-தோல்வி. இங்கே இடுக்கமான வாயில் என இயேசுவால்
மொழியப்படுவது வெறுமனே நுழைவு வாயில் அன்று; மாறாக, அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை,
சமத்துவம், சகோதரத்துவம், பொதுநலம், தியாகம், தன்னலம் துறப்பு, பொறுமை, பொறுப்பு, மன்னிப்பு,
ஒன்றிப்பு, சகிப்புத்தன்மை எனும் மதிப்பீடுகளின் ஊடாகப் பயணிப்பதே. எங்கே ஒருவர் தன்னை
வருத்திப் பொதுநலப் பணியில் இணைகின்றாரோ, அவர் வாழ்வின் பாதையில் பயணிக்கின்றார் என்பதே
இயேசுவின் புரிதல். நம்மை ஒடுக்குவதால் பிறர் பெறும் வாழ்வே நம் நிலைவாழ்வின் தொடக்கம்;
அதுவே, மீட்பின் பாதை.
சட்டங்களை
உற்பத்தி செய்து அவற்றைக் கடைப்பிடிக்கக் கற்பித்தால் போதும்; மறைநூலைப் புள்ளி மாறாமல்
விளக்கிப் போதித்தால் போதும்... விண்ணுலகம் சேர்ந்துவிடலாம் என்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தனர்
யூத சமயத் தலைவர்கள். இறையாட்சி என்பது போதிப்பதிலும் புனைதலிலும் சட்டமியற்றுதலிலும்
கண்காணிப்பதிலும் இல்லை அல்லது இயேசுவோடு உண்பதிலும் குடிப்பதிலும் இல்லை (லூக்
13:26). அது தியாகமிக்க, நேயம் நிறைந்த, இழக்கின்ற, வெறுமைப்படுத்துகின்ற வாழ்வில்
புலர்வது. அது எவருக்கும் தீங்கு இழைக்காமல், அறிநெறி வாழ்வு வாழ்வது. அது அலங்கார
ஆடம்பரங்களைக் கடந்த அர்த்தமுள்ள வாழ்வு. அதுவே இடுக்கமான வாயில். எனவே, மனமாற்றம்,
அறநெறி வாழ்வு எனும் இடுக்கமான வாயில் வழியாக நுழைவது நம் கையில்தான் உள்ளது.
இறையாட்சியின்
வழி அவ்வளவு எளிதான தன்று. இறையாட்சிக்குள் நுழைய வேண்டுமென்றால், இயேசுவின் கோதுமைமணி
உவமையை (யோவா 12:24-25) மனம் சுமந்து அதனைப்
போல் தங்களை இழக்கத் துணியவேண்டும். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல,
கிறித்தவர்கள் துன்பத்தைத் தொல்லையாகக் கருதக்கூடாது. ஆண்டவருடைய கண்டிப்பை வேண்டாம்
என்று தள்ளிவிடக்கூடாது (12:5). சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையே இடுக்கமான வாயில்
(மத் 16:24). நம் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “கடவுளுக்கும் மக்களுக்கும்
பணி செய்வதே இடுக்கமான வாயில்!” (மூவேளைச் செபவுரை, 21-08-2022).
எனவே,
விண்ணக விருந்தில் பங்குகொள்ள நாம் வாழ்வில் திரட்டி வைத்திருக்கும் சில பெருமைகளைக்
களையவேண்டும். பணம், பதவி, புகழ், செல் வாக்கு, அதிகாரம், ஆணவம், இறுமாப்பு, சுயநலம்,
பிரித்தாளும் சக்தி ஆகிய அனைத்தும் அழிவுக்குச் செல்லும் அகன்ற வழிகள். அன்பு, அமைதி,
நீதி, நேர்மை, உண்மை ஆகியவை இடுக்கண் வழிகள். பாலைவனச் சோதனையில் அலகை காட்டிய அகன்ற வழிப்பாதையை (பதவி, அதிகாரம், புகழ், வீண்பெருமை,
செருக்கு) இயேசு தேர்வு செய்யவில்லை. அதற்கு நேரெதிரான இடுக்கமான வழியைத் (தாழ்ச்சி,
ஏழ்மை, நிந்தை அவமானம், உண்மை, சமத்துவம்) தெரிந்துகொண்டார்.
இன்றைய
நம் சமுதாயத்தில் அகன்ற பாதையில் பயணிக்க பலர் உள்ளனர். ஆனால், இடுக்கண் வழியைப் பெரும்பாலானோர்
தேர்வு செய்வதில்லை. இடுக்கமான வாயில் வழியாகப் பயணிப்பதே மகிழ்வு, மீட்பு, நிறைவாழ்வு.
“இருட்டில் மட்டுமே நட்சத்திரங்களைப் பார்க்கமுடியும்”.
இடுக்கண் வழியே இறையாட்சிக்கான வழி!
“நான் உண்மையானவனாய் வாழ்வதற்காக இந்த உலகம் எனக்கு அபராதம் போடுகிறது. பரவாயில்லை, பொய்மையின் தோள்களில் பயணிப்பதைவிட, உண்மையின் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதுகூட சிறந்ததுதான்.” சிந்திக்கத் தூண்டும் கவிஞர் மு. மேத்தாவின் கவிதை வரிகள் இவை. உண்மைகளை உணர்ந்து, உண்மைகளைப் பகரும் மனிதர்கள் சராசரி மனிதர்கள் அல்லர்; அவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து முழக்கமிடுபவர்களும் அல்லர்; மாறாக, தனித்து நின்று, இறையாட்சியின் உண்மைகளை அச்சமின்றி முழங்குபவர்கள்.
இறைவாக்கினர்களின்
மேலான பணி என்பது பொய்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உண்மையை எடுத்துரைப்பதாகும். தீமையைச் சுட்டிக்காட்டுவதும், தீமையிலிருந்து விலகியிருக்க வழிகாட்டுவதும், கடவுளின் வழியைக் காண்பிப்பதும் இறைவாக்கினர்களின் சவால் நிறைந்த பணி. உண்மையை உரக்க உரைப்பதன் நிமித்தம் இவர்கள் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரின் பகைக்கு ஆளாவார்கள்; கலகக்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்; சிறைவாழ்வுக்குத் தள்ளப்படுவார்கள்; எண்ணிலடங்காத் துன்ப துயரங்களை அனுபவிப்பதுடன், கொடூரச் சாவினையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
மத்திய
அமெரிக்காவின் ஒரு சிறு நாடு எல் சால்வதோர். இதன் தலைநகரமான சான் சால்வதோர் நகரின் பேராயராக இருந்தவர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள். 1970-களில் அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன் எல் சால்வதோர் அரசு ஏழைகளைத் துன்புறுத்தியது. அந்நாட்டு அரசின் ‘கொலைப் படை’யால் (Death squad)
பலர் கொல்லப்பட்டனர். கருணை ஏதுமின்றி வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு அமெரிக்க அரசு அளித்து வந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என சான் சால்வதோர்
பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப்பின், 1980, மார்ச் 24-ஆம் தேதி திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில், இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று
நாம் பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அநீதிக்கு எதிராக நீதித்தீயைப் பற்றவைக்க வேண்டுமென நம்மை வலியுறுத்துகின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில் எடுத்துக்காட்டப்படும் இறைவாக்கினர் எரேமியா உண்மையைப் பேசியதால் உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். பாபிலோனிய அரசன் நெபுகத்நேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். எனவே, பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு யூதாவின் அரசன் செதேக்கியாவை அரச அலுவலர்கள் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், அவர்களிடம் சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் கூறுகிறார் எரேமியா (38:18). ஆனால், ஆட்சியாளர்கள், தலைவர்கள் எரேமியாமீது இரண்டு வகையான குற்றங்களை முன்வைக்கின்றனர். அவை: அ) எரேமியா எஞ்சியுள்ள
போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச் செய்து வருகிறான்; ஆ) இவன் மக்களின்
அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை (38:4). எனவே, அவர்கள் எரேமியாவைப் பாழுங் கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர்.
இறைவாக்கினர்
எரேமியா யூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக (22:1-9), அரசனுக்கு எதிராக (23:24-30), எருசலேம் மக்களுக்கு எதிராக (23:20-23), குருக்களுக்கு எதிராக (20:1-6), போலி இறைவாக்கினர்களுக்கு எதிராகப் பேசியதால் (23:9-15) பிரச்சினைகளுக்கு ஆளானார். உண்மையை உரைத்ததாலேயே அத்தனை இன்னல்களையும் அனுபவித்தார். ஒரு குறிக்கோளுக்காக வாழ்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும், அவர்கள் சுடச்சுட ஒளிர்விடும் பொன்னைப்போல் புகழ் பெற்றே உயர்வார்கள் எனும் வள்ளுவரின் வாக்கு எரேமியாவின் வாழ்வில் பொருத்தமாக அமைகிறது.
‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட
நோற்கிற் பவர்க்கு’
(குறள் 267).
தன்னைச்
சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், “உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.
அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது”
(எரே 20:9) என்றும் சூளுரைத்தார் எரேமியா.
இன்றைய
நற்செய்தியில் “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்” (லூக்
12:49) எனக் கூறுகின்ற இயேசு, “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவை உண்டாக்க வந்தேன்” என்று முழங்குகிறார் (12:51). அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி என்ற உன்னதமான கொடைகளின் ஊற்று இயேசு. ஆனால், “தீ மூட்ட வந்தேன்;
அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்” எனும் இயேசுவின் வெப்பமான வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது?
முதலில்,
“மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்.
அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்”
(12:49) என்கிறார் இயேசு. பொதுவாக, திருவிவிலியத்தில் தீ என்பது அன்பை,
நீதியை, நற்செய்தியை, தூய ஆவியாரின் கொடைகளைச் சுட்டும் வார்த்தைகள். முதல் ஏற்பாடு தீயைக் கடவுளின் நீதியின் அடையாளமாகக் காட்டுகிறது (தொநூ 19:24). நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை வெளிக்காட்டியது (தொநூ 15:17). முதன் முதலில் கடவுள் தம்முடைய இருப்பைத் தீச்சூளையிலே மோசேவுக்குக் காட்டினார் (விப 3:2). திருத்தந்தை பிரான்சிஸ், “இயேசு தாலாட்டுப் பாடலை அல்ல; மாறாக, நற்செய்தி எனும் தீயை மூட்டவே இம்மண்ணுலகிற்கு வந்தார்” என்கிறார் (மூவேளைச் செபவுரை, 14.8.2022).
இயேசு
மூட்ட விரும்பும் ‘நற்செய்தி’
எனும் தீ பழமையை எரித்துவிடும்;
தீமையை அழித்துவிடும்; தூய்மை தரும்; ஆற்றல் தரும்; மனமாற்றத்தின் பாதையில் நாம் முன்னோக்கிச் செல்ல நம்மைத் தூண்டும் என்ற பொருளில் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் உள்ளத்தில் பற்றியெரிந்த தீ என்பது அநீதிக்கு
எதிரான நீதி என்னும் தீ. இந்தத் தீயை மற்றவர் உள்ளத்திலும் மூட்டவே, ‘மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்’ என்று
கூறுவதாகப் புரிந்துகொள்ளலாம். இயேசு தமது உள்ளத்தில் பற்றியெரிந்த அநீதிக்கு எதிரான நீதி எனும் தீயை மூட்டத் தம்மையே பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது (லூக் 12:50).
இரண்டாவதாக,
“மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்”
(12:51) என்கிறார் இயேசு. தமது பிறப்பிலே அமைதியைக் கொண்டுவந்தவர் அவர் (2:13-14). தாம் உயிர்த்து விண்ணுக்குச் செல்லும்முன் அதே அமைதியையே அளித்தார் (24:36). இப்போது ‘பிளவை உண்டாக்க வந்தேன்’ என்று கூறுவதும் அவர் தரவிருக்கும் அமைதிதான். ஆனால், அந்த அமைதி உலக அரசுகள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் பெரும்பாலும் குறிப்பிடும் போரும் வன்முறைகளும் இல்லாத ஓர் அமைதி அல்ல; அந்த அமைதி பல அப்பாவி மக்களின்
மரணத்தால் விளைந்த அமைதி. அது ‘கல்லறை அமைதி.’ இயேசு தம் பிரியாவிடை உரையில், “நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல”
(யோவா 14:27) என்று தெளிவாகக் கூறினார்.
இயேசு
வழங்கும் அமைதி என்பது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய மாண்பை, நீதியின் அடிப்படையில் வழங்குவதால் உருவாகும் அமைதியாகும். இயேசு விரும்புவது மனித மாண்பை அடித்தளமாகக் கொண்ட உண்மையான அமைதி. இந்த அமைதி எப்போது ஒருவருக்கு மறுக்கப்படுகிறதோ, அங்கே வேறுபாடுகளும் பிளவுகளும் எழுகின்றன. இயேசு ஏற்படுத்தும் பிளவு என்பது நாம் நீதியான, உண்மையான நிலைப்பாடுகள் எடுக்கும்போது ஏற்படும் பிளவுகள் ஆகும். குடும்பங்களில் நம் மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளாகும். சாட்சிய வாழ்வுக்காய் குடும்பங்களில் ஏற்படும் பிளவு ஆகும். இயேசு கூறும் இத்தகைய பிளவுகள் தேவையான ஒன்றே. அவை நன்மை செய்யக்கூடியது; நீதிக்கான அமைதியை ஏற்படுத்தக்கூடியது.
நிறைவாக,
அநீதிக்கு எதிராக நீதித்தீயைப் பற்றவைக்க விரும்பும் அனைவரும் நெருக்கடிகள், மன உளைச்சல்கள், ஏளனப்
பேச்சுகள், துன்புறுத்தல்கள், கொடிய சாவுகள் ஆகிய அனைத்தையும் சந்திக்கவேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. எனினும், இயேசுவின்மீது நம் கண்களைப் பதியவைத்து (எபி 12:2), மனித மாண்பைச் சிதைத்தழிக்கும் அநீதிகளுக்கு எதிராக (12:4) நீதித் தீயைப் பற்றி எரியச்செய்வோம். இவ்வுலகில் இறைவாக்கினர் எரேமியா, இறைமகன் இயேசு, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோர் மூட்டிய அநீதிக்கு எதிரான நீதியின் தீ நம் உள்ளங்களிலும்
பற்றியெரியட்டும்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் தாய் ரோஸ் கென்னடி. கத்தோலிக்கரான இவர் ஆழமான இறைநம்பிக்கையோடு வாழ்ந்தவர். இவரது மகன் ஜான் கென்னடி அமெரிக்க அதிபராகி, சமத்துவத்திற்காக உழைத்ததற்காகக் கொல்லப்பட்டார். அவருக்குப்பின் அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் போட்டியிட்ட அவரது தம்பி இராபர்ட் கென்னடியும் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது ஒரே மகளும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். இத்தகைய வேதனையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ரோஸ் கென்னடி ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிக்குச் செல்வதை ஒருபோதும் விட்டுவிடவில்லை. இது குறித்துக் கேட்டபோது அவர் கூறிய பதில்: “பல்வேறு துயரமான நிகழ்வுகளுக்குப் பின்னும் நான் நம்பிக்கையோடு இருப்பதற்கான காரணம், நான் நாள்தோறும் வேண்டும் ‘ஆண்டவரே, உம்மில் நான் கொண்டுள்ள நம்பிக்கையைத் தவிர அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்’ என்ற இறைவேண்டல்தான்.”
நம்பிக்கை
என்பது மனிதருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் வரம். கிறித்தவ வாழ்வு தொடக்கம் முதல் இறுதிவரை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது நம்பிக்கையினாலேயே கட்டி எழுப்பப்படுகிறது. கிறிஸ்துவே நமது தலைவர். நம் வாழ்வில் “நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துவரும் அதை நிறைவு செய்பவரும்...” (எபி 12:2) அவரே. அவர்மீதே நம் கண்களைப் பதிய வைக்க அழைக்கப்படுகிறோம். பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் நம்பிக்கையைப் பற்றிச் சிந்திக்க அழைக்கின்றன.
சாலமோனின்
ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பயண நிகழ்வில் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த இரவை நினைத்துப் பார்க்கிறார் (18:6). அந்த இரவு இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் இரவாக அமைந்திருந்தது. எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய அவர்கள் நலமான வாழ்விற்கு எத்தனையோ போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டியிருந்தது. பசி, தாகம், பாலைவன வாழ்வு இப்படிப் பல துன்பங்களை அவர்கள்
சந்தித்தாலும், தங்கள் விடுதலைப் போராட்டத்திலும் பாலைநில வாழ்விலும் கடவுளைக் கண்டுகொண்டனர். கடவுளின்
வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டனர். தங்கள்
வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும், கடவுள் தங்களுக்காகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற இறைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டனர்.
எபிரேயர்
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் ஆபிரகாமின் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. நம்பிக்கை என்பதற்கான அற்புதமான வரையறையை எபிரேயத் திருமுக ஆசிரியர் தருகிறார்: அ) நம்பிக்கை என்பது
நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; ஆ) கண்ணுக்குப் புலப்படாதவை
பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). இவ்வரையறையை ஆழமாகச் சிந்திக்கும்போது, ‘எதிர் நோக்கி இருப்பது’
என்பது, நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணுவது அல்ல; மாறாக, திருத்தூதர் பவுல் குறிப்பிடுவதுபோல, “கடவுளின் மாட்சியில் பங்குபெறுவதே” (உரோ
5:2) நம் ஒரே எதிர்நோக்கு. இந்த எதிர்நோக்கே பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவது என்பது கண்ணுக்குப் புலப்படக்கூடிய பணம், வீடு, பொருள் சார்ந்தவற்றில் நம்பிக்கை கொள்ளாமல், கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை கொள்வதாகும்.
திருவிவிலியத்தில்
‘இறைநம்பிக்கையின் தந்தையாக’
(உரோ 4) நம் கண்முன் வருபவர் ஆபிரகாம். இவர் தான் காணாதவற்றையும் நம்பி ஏற்றார். ஆபிரகாம் கடவுளைச் ‘சிக்’கெனப் பற்றிக்கொண்டார். வாக்களிக்கப்பட்ட
நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது (எபி 11:8), அவர் குடியேறிய நாட்டில் ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது (11:9), மிக வயதான காலத்திலும் கடவுள் ஒரு மகனைக் கொடுப்பார் என்ற அவரின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டது (11:10), சோதிக்கப்பட்டபோது தன் ஒரே மகனையே பலியிடத் துணிந்தது... (11:17) என எல்லாவற்றிலும் ஆபிரகாம்
கடவுளின் வாக்குறுதியின்மேல் நம்பிக்கைகொண்டார். ஆபிரகாம் நம்பிக்கையினால் மட்டுமே கடவுளுக்கு ஏற்புடையவரானார் (தொநூ 26:5). சில வேளைகளில் கடவுள்மீது நம்பிக்கை கொள்வதற்கு அவரது உள்ளம் போராடிய சூழலிலும் (தொநூ 15:8; 16:2; 20:1-2), கடவுள் மீதான தன் நம்பிக்கையை அவர் புதுப்பித்துக்கொண்டார்.
இன்றைய
நற்செய்தி வாசகம் நம்பிக்கையின் பொருளை இன்னும் ஆழமாக விவரிக்கிறது. தொடக்க வரிகளான, “உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை, பூச்சியும் அரிப்பது இல்லை”
(லூக் 12:33) என்று செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளை இயேசு நம் அனைவருக்கும் தருகிறார்.
பணத்திற்கு
ஏறத்தாழ ஒரு தெய்வீக நிலையை அளித்து வருகிறோம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை செல்வத்தைச் சேர்ப்பது. நன்மையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை செல்வத்தைப் பகிர்வது. பணமும் செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல; அவற்றைத் திரட்டுவதிலும் குவித்து வைப்பதிலும் நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே செல்வத்தைத் தீயதாக்கி விடுகிறது. பணமே ஒரு மனிதரின் சமூகச் செல்வாக்கையும் வாழ்வுநிலையையும் நிர்ணயிக்கக்கூடிய கருவியாக மாறிவிட்டது. பணத்தின்மீதான பற்று பணத்தை முழு மூச்சோடு ஒரு மனிதரைத் தேடவைக்கிறது. மனிதரும் கடவுளை விடுத்து, பணத்திற்கும் செல்வத்திற்கும் அடிமையாகும்போது அவர்களின் முழுக்கவனமும் எப்போதும் செல்வத்தின்மீதுதான் இருக்கும். அதனால்தான் இயேசு “உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்”
(12:34) என்று எச்சரிக்கிறார். இறைநம்பிக்கையை வாழ்வாக்க இயேசு முன்வைக்கும் சில படிப்பினைகள்:
முதலில்,
பணத்தின்மீதான பற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி எப்போதும் விழிப்பாய் இருப்பதுதான். விழிப்பாக இருக்கும் பணியாளர்தான் தன் தலைவனிடத்தில் நற்பெயர் பெறுவார் என்பதை இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம் உள்ளத்திலும் அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணர முடியாமல் இருப்பதே விழிப்பற்ற மனநிலை. அதாவது,
இவ்வுலக மாயையும், செல்வத்தின்மீதான பேராசையுமே கடவுளைக் காணும் நம் அகக்கண்களை மறைக்கின்றன. பற்று உண்மையைப் பார்க்கவிடாமல் நம் கண்களை மறைத்துவிடுகின்றது. “கடவுளைக் கண்டடைவதற்கு, ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள்” என்று
எழுதுகிறார் ‘ஆன்மிகவியலின் இளவரசர்’ என அழைக்கப்படும் புனித
சிலுவை யோவான். எனவே, உண்மையான நம்பிக்கை என்பது, கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதாகும். கடவுளிடம் முழுமையாகச் சரணடைதல்தான் நம்பிக்கை வாழ்வின் உச்சநிலை (12:22-28).
இரண்டாவது,
நாம் சேர்த்து வைத்தவை செல்லரித்துப் போகலாம் அல்லது திருடப்படலாம் என்று எச்சரிக்கும் இயேசு, அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். பணம் அல்லது செல்வம் மரணத்திற்குப் பின் ஒருவருக்கு முற்றிலும் பயனற்றுப் போகின்றன. எனவே, அவை பயன்தரும் காலம் வரையில் அதாவது, இவ்வுலகில் செல்வத்தைத் தகுந்த வகையில் பயன்படுத்த வேண்டும். பணம் என்பது உரம் போன்றது. அது நிலங்களில் பரப்பப்படும்போதுதான் வளம் தரும், உயிராக மாறும். பணம் பதுக்கப்படவேண்டியது அல்ல; அது பகிரப்படவேண்டியது. அவற்றை முக்கியமாக ஏழை மக்களுக்காகப் பயன்படுத்தவேண்டும். அவ்விதம் செய்தால், அவர்கள் மறுவுலகில் நம்மை வரவேற்கத் தயாராக இருப்பார்கள்.
நோபல்
பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருள்களைப் பிறருக்குப் பரிசாகக் கொடுப்பாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது, “இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றிற்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றிற்கு நான் அடிமை” என்று அவர் பதில் கூறினாராம்.
மூன்றாவது,
உண்மையான நம்பிக்கை என்பது பணிபுரிவதில் அடங்கியிருக்கிறது எனப் போதிக்கிறார் இயேசு. அதாவது, பணிபுரிதல் என்பது தலைவரின் மன விருப்பத்திற்கேற்பச் செயலாற்றி அவரது
பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவதாகும். நன்மதிப்பைப் பெறுவதே ஒரு பணியாளரின் தலையாயக் கடமை. அதுவே, அவர் சேர்க்கும் நிலையான செல்வம். திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள நற்செயல்களை ஆற்றிய முறைகள், வாழ்வின் இறுதி நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்கிறார்
(மூவேளைச் செபவுரை, 07.08.2022).
புனித
யாக்கோபுவின் கூற்றுப்படி, நம்பிக்கை என்பது நற்செயல்களில் மட்டுமே காணக்கூடிய ஒன்று என்பது தெளிவு (2:17,18). கிறித்தவர்களாகிய நாம் அடிப்படையில் நம்பிக்கையின் மக்கள்; நற்செயல்கள் வழியே உலகில் நம்பிக்கையை வளர்ப்பதே நமது அழைத்தல்! ஆகவே, இன்றைய திருப்பாடல் கூறுவதுபோல “நாம் ஆண்டவரையே நம்பியிருப்போம்” (34:20). எச்சூழலிலும்
இறைவன்மீதுள்ள நம்பிக்கையை இழக்காதிருப்போம்!