ஜெர்மனி நாட்டவரான இரண்டாம் லூட்விக் (Ludwig II 1845-1886) ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் அரசராக இருந்தார். மன்னராக முடிசூட்டப்பட்டபோது அவருக்கு வயது 18. ‘கற்பனைக் கதை மன்னன்’ (Fairy tale King) என்றழைக்கப்படும் அவரின் மற்றொரு பட்டப்பெயர் ‘மதியற்ற மன்னன் லூட்விக்’ (Mad King Ludwig). செல்வம் மிகுந்துவிட்டால் மனிதர்கள் மதியற்ற செயல்களில் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு மன்னன் இரண்டாம் லூட்விக் ஓர் எடுத்துக்காட்டு. ஜெர்மனி நாட்டில் உள்ள Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில், இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒருசில அறைகள் கட்டப்பட்டதும், 1885-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் அங்குத் தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட உணவு, ஓர் இயந்திரத்தின் வழியாக அவரது அறைக்கு அனுப்பப்பட்டது. அவர் அங்குத் தங்கியிருந்த அறைகளில் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. தன்னை மட்டுமே நாள் முழுவதும் பார்த்தவண்ணம் அவர் அந்த அரண்மனையில் வாழ்ந்தார். 70 அறைகள் கொண்ட அந்த அரண்மனையில் 30 அறைகளே கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் அவர் மர்மமான முறையிலே இறந்தார். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வினோத மனிதர் மன்னன் லூட்விக். நாம் வாழும் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைக் காணமுடிகிறது.
இன்று ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு. இன்றைய உலகில் பீடமேற்றி வணங்கப்பட்டு வரும் சுயநலம், பேராசை, பணம், செல்வம் ஆகிய நோய்களிலிருந்து நலம்பெற இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்று செல்வம். வாழ்வின் பெரும்பகுதியை இப்பொருளீட்டலுக்காகவே செலவிடுகிறோம். நாளைக்கு வாழவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். அறம், பொருள், இன்பம் என்ற வழிமுறை வகுத்து, அறவழியில்தான் பொருள் சேர்க்க வேண்டும் என்றும், அந்தப் பொருளைக்கொண்டே இன்பம் துய்க்கவேண்டும் என்றும் முறைவைத்தனர் நம் முன்னோர். நிலையில்லாச் செல்வத்தின்மீது கொள்ளும் பற்று உயிரின் உய்வுக்குத் தடையாகிறது.
அளவுக்கு அதிகமான ஆசை ஒருவரைத் தீய வழிக்கு அழைத்துச்சென்று, துன்பம் என்ற விலையைப் பெற்றுக்கொடுக்கிறது. எனவேதான் புத்தர் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்றார் போலும். ‘காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடை வழிக்கே’ என்றார் பட்டினத்தார். நாம் இறந்த பிறகு இவ்வுலகில் சேர்க்கும் செல்வங்களோ, பொருள்களோ எவையும் நம்முடன் வருவதில்லை. “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்று பாடினார் நம்மாழ்வார். பற்றுதல் அற்றுவிட்டால் வீடுபேறு கிடைக்கும் அன்றோ! இறைவன்மீது பற்றுக்கொண்டு, நம் துன்பங்களை நீக்கும் வழியறிந்து வாழவேண்டும். ஈட்டியப் பொருள்கள் நேர்மையாக வாழவும், தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகின்றவையாக இருக்கவேண்டும் எனும் அழகிய பாடங்களை ‘அறிவற்றச் செல்வன்’ உவமை வழியாக இயேசு இன்று நமக்குக் கற்றுத் தருகிறார்.
“போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” (லூக் 12:13) என்ற சொற்றொடரோடு இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. “சமயத் தலைவர்களின் தவறான வழிநடத்துதலைக் குறித்துக் கவனமாக இருங்கள்” என்று இயேசு மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் கூறிய அழகான பாடங்களுக்குச் சற்றும் செவிகொடாமல், தன்னுடைய உலகத்தில் தன்னுடைய பிரச்சினைக்குள் மூழ்கிக்கிடந்த ஒருவர், இயேசுவின் போதனையை இடைமறித்து, தன் பிரச்சினையைக் கூறுகிறார். புகழும் பொருளும் திரட்டி வந்த சமயத் தலைவர்களைப்போல தம்மையும் அந்த மனிதர் கருதியதைக் கண்டிக்கும் இயேசு, சூழ இருந்த மக்கள் அனைவருக்கும் ‘பேராசை பெரும் இழப்பு’ என்ற ஒரு மேலான உண்மையை எடுத்துரைக்கிறார். “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்; மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (12:15) எனும் பேருண்மையைத் தெளிவாக்க, செல்வன் ஒருவனது கதையை உவமையாகத் தருகிறார்.
இந்த உவமையில் இயேசு செல்வனை ‘அறிவற்றச் செல்வன்’ என வருணிக்கிறார். என்ன காரணம்? அறிவற்றச் செல்வனைப்பற்றி இயேசு அறிமுகப்படுத்தும் வரிகளில், “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது” (12:16) என்கிறார். இந்தச் செல்வந்தனின் விளைநிலம், அந்நிலத்தின் விளைபொருள்கள். அவை வழியே வந்து சேர்ந்த செல்வங்கள், இறைவன் இச்செல்வந்தனுக்கு வழங்கிய பரிசுகள் அல்லவா! இவனின் நல்ல விளைச்சலுக்கான காரணங்கள் இறைவனின் இரக்கம், பொய்க்காமல் பெய்த மழை, உழைப்பாளிகளின் வியர்வை. ஆனால், இவை எவையும் இச்செல்வனின் சிந்தையில் எழவில்லையே! அவனது உழைப்புக்கும் உயர்வுக்கும் முதற்காரணரான கடவுளைத் தன் வாழ்வில் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவன் சிந்தனையை நிறைத்ததெல்லாம் அவன் களஞ்சியங்களில் குவிக்கப்பட்டிருந்த விளைபொருள்கள் மட்டுமே. எனவேதான், இச்செல்வனின் மனத்தில் தோன்றிய முதல் எண்ணங்கள், “நான் என்ன செய்வேன்? என் விளைப்பொருள்களைச் சேர்த்துவைக்க இடமில்லையே!” (12:17).
பேராசை சுயநலமானது; அது தன்னை, தன் மகிழ்ச்சியை மட்டுமே முக்கியமாக நினைக்கும். பேராசை ஒருபோதும் ‘போதும்’ என்று சொல்லாது. அது இறையாட்சியின் வாயிலையே நமக்கு அடைத்துவிடும் (மாற் 10:23, 1 திமொ 6:8). “பணம் கடல்நீரைப் போன்றது. அதைப் பருகப்பருக இன்னும் கூடுதலாகத் தாகம் எடுக்கும்” என்பது ஓர் உரோமைப் பழமொழி. அறிவற்றச் செல்வன் உடலளவில் தான் பெற்ற வாழ்வும், தன்னைச் சுற்றிக் குவிந்துள்ள செல்வங்களும் நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணினான். தனக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் மகிழ்வாக இருப்பதாக நம்பினான். தான் சேமித்துவைத்த பொருள்களில் பாதுகாப்பை உணர்ந்தான்; வாழ்வில் கடவுளைப் புறக்கணித்தான். பெரும் களஞ்சியங்களில் தானியத்தைத் தனக்கென மட்டும் குவித்து வைக்காது, மக்களோடு சிறப்பாக, இல்லாதவர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு அவன் செய்யவில்லை. அவன் தனக்குள் சொல்லிக்கொண்டவை எல்லாம் “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” (12:19) என்ற மிகவும் ஆபத்தான சொற்களே. இவனுடைய எண்ணங்களும் செயல்களுமே இச்செல்வனுக்கு ‘அறிவிலியே’ என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
நாம் செல்வத்தைக் கொண்டிருப்பது பாவமல்ல; செல்வம் தன்னிலே தவறானதும் இல்லை; செல்வம் ஓர் ஆற்றல். ‘செல்வம் செல்லவேண்டும்; அவை கொடுக்கப்படவேண்டும்’. நாம் ஈட்டும் செல்வம் தேக்க நிலையில் இருந்தால், அங்கே பூச்சியும் புழுவும்தான் இருக்கும் (யாக் 5:1-5). உலகப் பொருள்களை அளவுக்கதிகமாகத் தேடுவது கவலை, அச்சம், பகைமை, சுயநலம், பேராசை, போர் போன்றவைக்கே இட்டுச்செல்லும்.
இவ்வுலகில் அனைவரும் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தும், உணவைப் பணமாக மாற்றும் பேராசையினால், உணவைப் பதுக்கும் சுயநலவெறி வளர்ந்துவிட்டதால் பசியும் பட்டினியும் இவ்வுலகில் தாண்டவமாடுகின்றன. இன்றைய அரசியல், சமூகம், கல்வி, மருத்துவம், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் நிலவும் இலஞ்சம் வேதனைக்குரியது. செல்வத்தின்மேல் பற்றுக்கொள்வது வீண். இதனையே இன்றைய முதல் வாசகத்தில் பொருள்சார்ந்த, பேராசைமிக்க உலகத்தைக் காணும் சபை உரையாளர் “வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்” (1:2) என்று கூறுகிறார்.
உலகப் பொருள்கள் நம் வாழ்வுக்கு அவசியமானவைதான்; ஆனால், அவையே நம் வாழ்வின் இறுதி இலக்கை எட்டுவதற்கான கருவிகளாக இருத்தலாகாது. மாறாக, அப்பொருள்கள் நேர்மையாக வாழவும், மிக அதிகத் தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுபவையாக இருக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் “நம் கரங்கள் கட்டியெழுப்புவதற்கும் சேவையாற்றுவதற்கும் கொடுப்பதற்குமெனப் படைக்கப்பட்டுள்ளன. இதுவே வாழ்வின் இரகசியம்” என்று குறிப்பிடுகிறார் (ஐரோப்பிய சாரணர் இயக்க இளையோர் சந்திப்பு,
03.08.2019).
எனவே, எவற்றிலிருந்து நாம் பற்றறுந்து விலகி நிற்கிறோமோ, அவற்றினால் வரும் துன்பங்களிலிருந்தும் அப்போதே விலகிவிடுகிறோம் என்பதுதான் வாழ்வின் பேருண்மை. வாழ்க்கைப் பயணத்தில் வருவது அனைத்தும் நில்லாது ஒருநாள் நீர்க் குமிழியாக மறைந்துவிடும். உலகப் பற்றுகளிலிருந்து விடுபட, இதயத்தில் இறைவனைப் பற்றி நிற்போம். நமக்கான உண்மையான செல்வக் குவியல் விண்ணகத்தில் உள்ளது!
2023, நவம்பர் 12-ஆம் நாள் உத்தரகாண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் எதிர்பாராத மண்சரிவு ஏற்பட்டதில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த சூழலில், இறுதி முயற்சியாக ‘எலி வளை தொழிலாளர்கள்’ வரவழைக்கப்பட்டு கைவேலைப் பாடாக 21 மணி நேரத்தில் 13 மீட்டர் துளையிட்டு, 17 நாள்களாக உள்ளே சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உயிரோடு மீட்டனர். அந்நேரத்தில் ஊடகங்கள் பதிவிட்ட மிக முக்கியமான செய்தி: “பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் 140 கோடி மக்களின் தொடர் இறைவேண்டலே இவர்களைக் காப்பாற்றியது” என்பதுதான்.
பொதுக்காலத்தின்
17-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவேண்டலின் வலிமையையும் வல்லமையையும் தொடர்வேண்டலின் அவசியத்தையும் சிறப்பாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
நமது
தனிப்பட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி, இறைவனோடு நாம் தொடர்புகொள்வதையே ‘செபித்தல்’
அல்லது ‘இறைவேண்டுதல்’ என்கிறோம்.
செபித்தல் என்பது இவை மட்டுமல்ல; இவற்றைத் தாண்டி எப்பொழுதெல்லாம் கடவுளின் பெயரை உச்சரிக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் கடவுளை மனதார நினைக்கின்றோமா அப்பொழுதெல்லாம் ஏதோ ஒருவகையில் நாம் இறைவனுடன் தொடர்புகொள்கிறோம். இறைவனுடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு தொடர்பும் செபமே.
இயேசு
தமது வாழ்வில் மாலையில் (மத் 14:23), இரவில் (லூக் 6:12) அல்லது விடியற்காலையில் (மாற் 1:35) எனப் பல நேரங்களை ஒதுக்கி
தந்தையோடு செபித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வல்ல செயலைச் செய்வதற்கு முன்னும் அவர் தம் தந்தையை அழைக்கத் தவறியதில்லை. பல வேளைகளில் இயேசு
செபத்தில் ஆழ்ந்திருந்ததையும், செபத்தின் மூலமாக அவரிடம் ஏற்பட்ட அற்புதமான மாற்றங்களையும் (மத் 17:1-13; மாற் 9:2-8; லூக் 9:28-36) சற்று தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த சீடர்களுள் ஒருவர் ஆவலுடன், “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக் கொடும்” என்று கேட்கிறார். சீடரின் இந்த ஆர்வமான விண்ணப்பத்திற்கு விடையாக, “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர்...” (லூக் 11:2) என்று இயேசு கூறிய பதில், காலத்தால் அழியாத ஒரு செபமாக அமைந்துள்ளது.
கடவுளுக்கென்று
தனி இடங்களை ஒதுக்கி, அங்கும் அவரைச் சந்திக்க பல விதி முறைகளை
வகுத்து, இறைவனை மக்களிடமிருந்து வெகுதூரத்தில் வைத்திருந்த இஸ்ரயேல் சமயத் தலைவர்களுக்கு ஒரு பேரிடியாக, இயேசு இறைவனை ‘தந்தை’ என்று மக்களிடம் அறிமுகப்படுத்துகிறார். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் (மத் 6; லூக் 11) நாம் காணும் இந்தப் புகழ்மிக்க செபம், கிறித்தவ உலகில் கத்தோலிக்கத் திரு அவையினர், ஆங்கிலிக்கன் சபையினர், லூத்தரன் சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்று பல பிரிவுகள் இருந்தாலும்,
அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான இறைவேண்டலாக இது அமைகிறது. இயேசு
கற்றுத்தந்த “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே...” (மத் 6:9) என்ற இச்செபம், ‘உலகளாவிய வேண்டுதல்’
(Universal Prayer) என்று
தயக்கமின்றிக் கூறலாம்.
இயேசு
கற்றுத்தந்த செபத்தைத் தொடர்ந்து, நாம் எவ்விதம் செபிப்பது என்பதைக் கற்றுத்தர இயேசு ‘நள்ளிரவில் நண்பர்’ என்ற ஓர் எளிய உவமையைக் கூறுகிறார். “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று...” (லூக் 11:5) என்று ஆரம்பிக்கும் இந்த உவமையில், இயேசு இறைவனிடம் வேண்டுதல் என்ற உயர்ந்த முயற்சிக்குத் தேவையான மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார். செபத்தில் 1. பிறர் தேவைக்காகச் செபிக்கவேண்டும்; 2. உண்மைநிலை இருக்க வேண்டும்; 3. நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தை எடுத்துரைக்க வேண்டும். இந்த உவமையில் வரும் கதாநாயகர் (அ) தன் பசியைத்
தீர்த்துக்கொள்வதற்கு
அல்ல; தன் நண்பரின் பசியைத் தீர்க்க அடுத்தவரை நாடிச் செல்கிறார். (ஆ) அவரிடம் மூடி
மறைக்காமல் தன் உண்மை நிலையை எடுத்துச்சொல்கிறார். (இ) நண்பர் கதவைத்
திறக்காத போதும், நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தைத் தொடர்கிறார்.
செபத்தின்
முக்கியமான இந்த மூன்று கூறுகளை இன்றைய முதல் வாசகத்தில் (தொநூ 18:20-32) ஆபிரகாமிடம் காண்கிறோம். சோதோம் கொமோரா நகரங்களில் வாழும் நீதிமான்களைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளோடு ஆபிரகாம் நடத்தும் உரையாடல் ஒரு செபமாக மாறுகிறது. செபம் என்பதே கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்தானே! ஒரு நீதிமான்கூட அநீதியாகத் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது
என்பதற்காக ஆபிரகாம் கடவுளோடு மேற்கொண்ட உரையாடலும் உரசலும் தனக்கு வேண்டியதைப் பெற அடம்பிடிக்கும் குழந்தையை நம் நினைவுக்குக் கொணர்கிறது.
நற்செய்தி
வாசகத்தின் கதாநாயகர் வேண்டிக் கொண்டது போலவே ஆபிரகாமும், (1) தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தியும், (2) கடவுளிடம் எதையும் மறைக்காமல் தன் உண்மைநிலையை எடுத்துச்சொல்லியும், (3) மனம் தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து மன்றாடியது, ‘நான், எனது, எனக்கு’ என்ற மயக்க நிலையில் மரத்துப்போன ஒரு மனசாட்சியுடனும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்குகிறது என்ற எண்ணத்திலும் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு.
இன்றைய வாசகங்கள்
நமக்கு
உணர்த்தும்
உன்னதப்
பாடங்கள்:
முதலாவதாக,
‘எனக்கு இதைத் தாரும், அதைத் தாரும்’ என்று தன்னைச் சுற்றியே செபங்களை எழுப்புவதற்குப் பதில், அடுத்தவரது தேவைகளை நம் செபங்களில் சுமந்துசெல்வது அழகானது. அடுத்தவரது தேவைகள் நம் எண்ணங்களையும் மனத்தையும் நிறைக்கும்போது, நமது தேவைகள் குறையுமன்றோ!
இரண்டாவதாக,
நமது உண்மை நிலையை உள்ளவாறு எடுத்துரைத்துச் செபிப்பது நன்மை பயக்கும். “நண்பருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை” (லூக்
11:6) என்ற வேண்டுதலை எழுப்பும் நம் உவமையின் நாயகர், நம்மிடம் உள்ள நிறை-குறைகளை ஏற்றுக்கொள்ளும் பணிவான, துணிவான மனநிலையைக் கற்றுத்தருகிறார். செபத்தில் தன் இயலாமையை எடுத்துரைக்க, உண்மையிலேயே மிகுந்த பணிவும் துணிவும் தேவை. ஆணவமும் தற்பெருமையும் சுயநலமும் நிறைந்த நமது இறைவேண்டல்களைக் கடவுள் எப்போதும் விரும்பமாட்டார்.
மூன்றாவதாக,
செபத்தில் பல தடைகளும் மறுப்பும்
தொடர்ந்தாலும், நம்பிக்கையோடு மனம் தளராமல் செபிக்கவேண்டும். ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும்’ என்பார்கள். எறும்பின் தொடர்முயற்சியே அதன் வலிமை. அதுபோலவே நமது தொடர் இறைவேண்டலே நமது செபத்தின் வலிமை. நாம் இடைவிடாமல் வேண்டுவதால், நாம் எண்ணியபடியே முற்றிலும் நிறைவேறும் என்பதல்ல; பல நேரங்களில் நாம்
கேட்பதைக் காட்டிலும் இன்னும் சிறப்பான தீர்வுகளை இறைவன் தருவார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கவேண்டும்.
ஸ்காட்லாந்தைச்
சேர்ந்த ஆஸ்வால்டு சேம்பர்ஸ் என்ற மறைப்போதகர், “நாம் செபிக்கும்போது கடவுள் மீது கண்களைப் பதித்து நாம் செபிக்க வேண்டும்; நம் கவலைகள் மீதல்ல” என்கிறார். “செபம் என்பது இறைவனின் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் அளிக்கும் அனுமதி” என்பார் புனித அர்னால்டு. “இறைவா, எங்கள் தேவை என்னவென்று உமக்கு நன்றாகத் தெரியும்; உம் விருப்பத்தை நிறைவு செய்தருளும்” என்று
வேண்டும் போது, நமது செபங்களில் நம் தேவைகளைவிட, தந்தையாம் இறைவனே முன்னிலை பெறுவார்.
நிறைவாக,
ஒவ்வோர் ஆண்டும் நம் ஆண்டவராகிய இயேசுவின் தாத்தா-பாட்டியும், அன்னை மரியாவின் தாயும்-தந்தையுமான புனிதர்கள் சுவக்கீன்-அன்னாவின் நினைவு நாளை ஒட்டி வருகின்ற சூலை மாதத்தின் நான்காம் ஞாயிறை ‘உலக தாத்தா-பாட்டிகள்’
தினமாகக் கொண்டாடுகிறோம். அதன்படி “நம்பிக்கை தளராதோர் நற்பேறுபெற்றோர்” (சீரா
14:2) என்ற மையப்பொருளில் சிறப்பிக்கும் இந்நாளில், நம் குடும்பங்களில் வாழும் தாத்தா-பாட்டிகளையும் முதியோர்களையும் நினைவுகூர்ந்து இறைவனிடம் வேண்டுவோம். நம் குடும்பங்களின் வேர்களை மறவாதிருப்போம். “நம் குடும்ப வாழ்வில் இறைநம்பிக்கையை அறிவிப்பதில் முக்கியப் பங்காற்றும் தாத்தா-பாட்டிகளை”
(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டா பதிவு, 26.07.2019) குழந்தை மனநிலையுடன் ஏற்றுக்கொள்வோம். குழந்தை மனத்தை ஏற்றுக்கொண்டால் நம் செபம் எளிதாகுமன்றோ!
‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபத்தில் நாம் கேட்கும் அனைத்தும், நமக்கு இறைமகன் வழியாக உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான், இயேசு உறுதிப்படக் கூறுகிறார்: “கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள், திறக்கப்படும்!”
நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதலிடம் பிடிப்பது உணவே. உணவின் அடிப்படைத் தேவையை நன்கு உணர்ந்ததாலே நம் முன்னோர்கள் தாம் உண்பதோடு மட்டுமல்லாமல், உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை எளியவர்களுக்கும், வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ‘முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்சம் மலர்போல’ (குறள் 90), முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரித்தனர். வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி, விருந்துண்டு செல்வதற்காகவே வீட்டிற்கு முன்பு திண்ணை அமைத்து வீட்டைக் கட்டினர். வேலை செய்து சேமித்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களுக்குச் செலவிட்டனர். தற்போது வீடுகளில் திண்ணையும் இல்லை; அறிமுகமில்லாதவர்களை வீட்டிற்குள் அழைப்பதுமில்லை. நம் பண்பாடுகளினுள் பல மறக்கப்பட்டு வருகின்றன. விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறிவருவது, உண்மையிலேயே நம் தலைமுறை சந்தித்துவரும் பெரும் இழப்புதான்.
ஆண்டின்
பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். உறவுகளை வளர்க்க மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியக் கொடைகளில் ஒன்றுதான் விருந்தோம்பல். இன்றைய வாசகங்கள் விருந்தோம்பலால் வரும் வியத்தகு கொடைகளைப்பற்றிய சிந்தனைகளை நமக்கு வழங்குகின்றன.
நாம்
உண்கின்ற உணவைப் பசியோடு வருகின்றவர்களுக்குக் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்கே உரிய ஒன்று. பசி எப்போதும் அவமானத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது திருமூலரின் திருமந்திர வரி. உணவில்லையென்றால் உடலும் உடலில் ஒட்டியிருக்கும் உயிரும் அழிந்துவிடும். அனைத்துச் சமயங்களும் பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கின்றன. ‘விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு’ என்கிறது இசுலாமிய மறை. மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் வீடும் அளிப்பதுதான் உயர்ந்த அறம். ‘அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்’
(142:9-11) என்கிறது நற்றிணை. சங்க கால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் திரிந்து நோக்காது, அவர்களை எதிர்கொண்டு வரவேற்று உணவளித்தமையைக் கற்புடைமைக்குப் பொருத்திக்காட்டியுள்ளனர் நம் முன்னோர்கள். ‘விருந்தினர் போற்றுதும்’ என்பது
நம் தமிழ் மரபு. இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை உற்றுநோக்கும்போது, நிறைந்த
மனத்துடன் நாம் ஒருவருக்குச் செய்யும் விருந்தோம்பல் இறைவனின் வியத்தகு அருளை நாம் பெற்றுக்கொள்ள வழிசெய்கிறது.
இன்றைய
முதல் வாசகத்தில், முன்பின் அறிமுகமில்லாத மூன்று மனிதர்கள் தன் அருகில் நிற்கக் கண்ட ஆபிரகாம் அவர்களுக்கு விருந்து படைக்க முன்வருகிறார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்துவிடும் விருந்தினருக்குத் தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டிற்கு அனுப்பி அல்லது வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழ இரசமோ, காப்பியோ
வாங்கி வந்து கொடுக்கும் ஓர் எளிய குடும்பத்தில் நடக்கும் காட்சியைப்போல இங்கே ஒரு காட்சி நம் கண்முன் விரிகிறது. வானவர் என்று தெரியாமலேயே அவர்களை அழைத்து விருந்து படைத்த ஆபிரகாமின் செயலை வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:
‘செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து
வானத் தவர்க்கு’
(குறள் 86)
நாள்
முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்துவரும் விருந்தினரையும் எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்பது வள்ளுவர் கூறிய அழகான கருத்து.
ஆபிரகாமின்
விருந்தோம்பலைப் பற்றி விவரிக்கும்போது மூன்று மரக்கால் நல்ல மாவு, நல்ல இளங்கன்று, வெண்ணெய், பால் என மேன்மையானதையும் சிறந்ததையும் அவர்
தெரிவுசெய்து விருந்து படைப்பது, நிறைவையும் அவரது நல்ல பண்புகளையும் காட்டுகிறது. எனவே, ஆபிரகாம் தங்களுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்னும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். ஆபிரகாமைப் போலவே, இன்றைய நற்செய்தியில் மார்த்தாவும் மரியாவும் இயேசுவுக்கு கொடுக்கின்ற விருந்தோம்பலின் விளைவாக, சிறப்பான நன்மைகளையும் பாராட்டுகளையும் பெறுகின்றனர்.
யூதப்
பாரம்பரியத்தில் வீட்டுக்கு வரும் போதகருக்கு விருந்து படைப்பதுதான் தலையாயக் கடமை. இதை நன்கு உணர்ந்ததால்தான் மார்த்தா உணவு தயாரிப்பதில் பரபரப்பாக இருந்தார். தன் சகோதரி தனக்கு உதவி செய்யாமல், இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தது குறித்து அவரிடம் புகார் கூறியபோது இயேசு மார்த்தாவிடம், “நீ பலவற்றைப் பற்றிக்
கவலைப்பட்டுக் கலங்குகிறாய்; ஆனால், மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” (லூக்
10:42) என்று கூறுகிறார்.
இவ்வாறு
இயேசு கூறுவதன் வழியாக மார்த்தாவின் பணிவிடையை அவர் சிறுமைப்படுத்தி விட்டார் என்று எண்ணவேண்டாம். ‘என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டார்’, ‘உமக்குக்
கவலை இல்லையா?’ என்ற முறைப்பாட்டில் எழுந்த சிறு கோபத்தை இயேசு மாற்ற விரும்புகிறார். தமக்குப் பணிசெய்வதாக நினைத்து, அந்தப் பணிகளாலேயே மார்த்தா திசைதிருப்பப்பட்டதை இயேசு கண்டிக்கிறார். அவரது திசை இயேசுவாக இருந்திருக்கவேண்டும் என்று மார்த்தாவுக்கு உணர்த்துகிறார். முதலில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியது, இயேசுவின் திருவார்த்தைக்கு என மார்த்தாவுக்குப் புரியவைக்கின்றார்.
இருவருமே
இயேசுவின்மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். விருந்தாளியாக வந்த இயேசு வழங்கும் நற்செய்திக்குச் செவிமடுப்பதே சிறந்த விருந்தோம்பல். அதுவே சீடத்துவம் என்பதை மரியா புரிந்துகொண்டார். வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பதும், சிறந்த விருந்து கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடு என்பதை மார்த்தா புரிந்துகொண்டார். வீட்டிற்கு வந்த இயேசுவை முதலில் வரவேற்றவர் மார்த்தாதான் (10:38). எனவே, மார்த்தா மற்றும் மரியா ஆகிய இருவரின் செயல்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல; மாறாக, ஒன்றுடன் ஒன்று இணைந்து, நிறைவு செய்யக்கூடியவையாக உள்ளன. இயேசுவின் அருகில் அமர்ந்து அவர் குரலுக்குச் செவிமடுத்தல், விருந்தோம்பல் பணிகளில் ஈடுபடுதல் என்ற இரு நற்பண்புகளையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். இந்த இருவகை ஆன்மிகமும் இணைந்த வாழ்வுதான் சிறந்த செப வாழ்வு. சிறந்த செபம் என்பது தன் தேவைகளை முன்னிலைப்படுத்தாது, செபத்தில் தன்னையே இழந்துவிடுவதுதான்! அந்த வகையில் இரு பெண்களுமே தங்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாது இயேசுவுக்கு முதலிடம் கொடுத்தனர்.
ஆகவே,
நமது அன்றாட வாழ்வில் இறைவனுக்கும் அயலாருக்கும் விருந்தோம்பல்மிக்க கிறித்தவர்களாக வாழ்ந்து, நிறைந்த பயனையும் மகிழ்வையும் பெறுவோம். “நம்மைத் தேடி வந்து நம் கதவுகளைத் தட்டும் ஏழைகளும், தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறும் வகையில் நம் விருந்தோம்பல் பண்பு இருக்க வேண்டும்”
எனும் நம் திருத்தந்தை பிரான்சிசின் கூற்று நம் பாடமாகட்டும் (மூவேளைச் செப உரை, 22.7.2019).
நாம்
உடன்பிறந்த உணர்வோடு அன்னியரையும் வரவேற்று விருந்து படைக்கும்போது அவர்கள் மத்தியில் வானதூதர்களும் இருக்கலாம். வானதூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பையும் பெறலாம் (எபி 13:2). எனவே, விருந்துகளைவிட விருந்தினர்கள் முக்கியத்துவம் பெறும்போது ‘விருந்தோம்பல்’ என்ற
வார்த்தை இன்னும் பொருளுள்ளதாக மாறும்.
விருந்து
என்பது வெறும் உணவு மட்டுமல்ல, ஒவ்வொரு விருந்துக்கும் பின்புலத்தில் பாசம், பந்தம், பண்பாடு, உறவு, நட்பு என்று எத்தனையோ அம்சங்களை நாம் கொண்டாடுகின்றோம். உணவு வெறும் பொருள் அல்ல; அது அக்கறை. அது உயிர் வளர்க்கும் சக்தி. பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய மகிழ்ச்சி. எனவே, அக்கறையற்ற மனநிலையோடு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ஒன்றும் செய்ய இயலாது என்ற மனநிலையோடு கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது.
இன்றைய
உலகில் அடுத்தவரை, இறைச்சாயலாகக் கருதாவிட்டாலும், மனிதராகவாகிலும் வரவேற்க வேண்டும். “இறைவனின் சாயலே விருந்தினர்” (Athiti devo bhava).
கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பிறரன்பைக் குறித்த உண்மைகளை மனித சமுதாயத்தின்மீது ஆழமாகப் பதித்துவரும் ஓர் அற்புதமான உவமை ‘நல்ல சமாரியர்’ உவமை. இவ்வுவமைக் கிறித்தவம் என்ற வட்டத்தையும் தாண்டி, ஏனைய சமயத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறான இன்று உலகப் புகழ்பெற்ற ‘நல்ல சமாரியர்’ உவமை வழியாக இயேசு நம் உள்ளங்களில் பதிய வைக்கும் சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
“நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” (லூக் 10:25) என்ற திருச்சட்ட அறிஞரின் கேள்வியோடு இன்றைய நற்செய்திப் பகுதி துவங்குகிறது. இவரின் கேள்வி ஓர் அறிவுத்தேடலால் எழுந்த கேள்வி அல்ல; மாறாக, பதிலைத் தெரிந்து வைத்துக்கொண்டு ‘இயேசுவுக்குத் தெரியுமா?’ எனச் சோதிக்கும் நோக்குடன் கேட்கப்பட்ட கேள்வி. திருச்சட்ட அறிஞரின் எண்ண ஓட்டங்களை ஆய்ந்தறிந்த இயேசு, “திருச்சட்ட நூலில் நீர் என்ன வாசிக்கிறீர்?” (10:26) என்ற மறு கேள்வியை முன்வைக்கிறார். எவ்விதத் தயக்கமும் இன்றித் திருச்சட்ட அறிஞர், மனித வாழ்வின் ஆணிவேராக அமையும் இறையன்பு, பிறரன்பு ஆகிய இருபெரும் கட்டளைகளை இணைச்சட்டம் (6:5) மற்றும் லேவியர் நூல் (19:18) என்ற இருவேறு இடங்களிலிருந்து எடுத்து ஒரே மூச்சில் இணைத்துக் கூறுகிறார். இயேசுவோ அறிஞரிடம், “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும், அப்பொழுது வாழ்வீர்”
(10:28) என்றதும், திருச்சட்ட
அறிஞர் தன்னை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” (10:29) என்று இயேசுவிடம் கேட்கிறார். திருச்சட்டங்களை எல்லாம் அறிந்த அவருக்கு அடுத்திருப்பவர் யார் என்பது தெரியாமலா இருக்கும்?
திருச்சட்ட
அறிஞர் மேற்கோள்காட்டிய ‘அடுத்திருப்பவர்’ (லேவி
19:18) என்ற சொல் தன் சொந்த இஸ்ரயேல் இனத்தவரைக் குறிக்கும் சொல். ஒவ்வோர் இஸ்ரயேலரும் சக இஸ்ரயேலரைச் சகோதரராகப்
பார்க்க வேண்டும் என்ற சட்டமிருந்தது. இதனை அதிகமான வேளைகளில் இஸ்ரயேலர் கடைப்பிடித்தனர். மோசே கூறிய அதே அதிகாரத்தின் 34-ஆம் சொற்றொடரில் கூறப்பட் டுள்ள ‘அடுத்திருப்பவர்’ என்ற
சொல் அந்நியரைக் குறிக்கும். திருச்சட்ட அறிஞர் மோசே கட்டளைகளின் முதல் பகுதியை மட்டும் மேற்கோளாக இயேசுவிடம் கூறிவிட்டு, அந்நியரைப்பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் பகுதியைப்பற்றிக் குறிப்பிடவில்லை. தன் வசதிக்காக அவர் அதை மறைத்துவிட்டார் போலும்! நிலைவாழ்வைப் பெறுவதற்கு நான் அன்பு செலுத்தவேண்டிய ‘அடுத்திருப்பவர்’ இஸ்ரயேல்
இனத்தவரா? அல்லது அந்நியரா? என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்று இயேசுவிடம் கேட்பது போன்று அமைகிறது திருச்சட்ட அறிஞரின் கேள்வி.
‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’ அடுத்திருப்பவர் என் உறவினரா? என் இனத்தைச் சார்ந்தவரா? அல்லது எல்லாருமா? யாருக்கெல்லாம் உங்கள் உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் அனைவரும் ‘அடுத்திருப்பவர்’ என்று
இயேசு பதில் கூறுகிறார். அதாவது, நான் யாருக்கெல்லாம் அன்பு செய்யக் கடமைப்பட்டுள்ளேனோ அவர்கள் அனைவரும் அடுத்திருப்பவர்கள் அல்லது அயலார்கள் (லூக் 10:27). நம்மைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் வசிப்போர், அனாதை இல்லங்கள், குழந்தைக் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், தொழுநோயாளர் அகங்கள், மாற்றுத்திறனாளிகளின் உறைவிடங்கள், திருநர்களின் வாழ்விடங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள் போன்ற இடங்களிலெல்லாம் வாழ்வோர் அனைவரும் நம் அடுத்திருப்பவர்களே. இவர்கள் யாவரும் நம் சொந்தங்களே. இத்தகையோருக்குச் செய்யும் உதவி அவர்களின் தேவையில் மலர்வதாகும். ‘உதவி என்பது தேவையில் மலர்வதே அன்றி, காரணத்தால் வருவது அல்ல’ என்கிறது ஜெர்மன் பழமொழி. இயேசு கூறிய இவ்வுவமையில், குற்றுயிராய் அடிபட்டுக் கிடப்பவர் யார்? ஏன்? எவ்வாறு? யாரால் அடிபட்டார்? என்று கண்டுபிடிப்பதில் அவ்வழியே வந்த சமாரியர் தன் சக்தியையும் நேரத்தையும் வீணாக்காமல், அடிபட்டுக் கிடப்பவரை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதில் கவனத்தைத் திருப்பினார் என்பது இவ்விடம் எண்ணிப் பார்க்கத்தக்கதே.
எருசலேமிலிருந்து
எரிகோவுக்குச் செல்லும் வழியில் ஆடைகள் களையப்பட்டு, அடிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை ஒரு குரு, ஒரு லேவியர், ஒரு சமாரியர் ஆகிய மூவருமே பார்க்கின்றனர். குரு போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரோ அவ்விடத்துக்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார். ஆனால், அடுத்து வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார். இம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம்! இதயத்தில் உருவான பரிவு சமாரியரைச் செயலில் ஈடுபட வைத்தது.
“பரிவு என்பது சமயம் சார்ந்தது என்பதற்கு முன்னதாக அது, மனிதகுலத்திற்கான ஒன்று. நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுவதற்கு முன்பாக மனிதர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்” என்ற
திருத்தந்தை லியோ அவர்களின் கூற்றும் (மே 28, 2025, புதன் மறைக்கல்வி உரை), “தேவையிலிருப்போருக்குப் பரிவு காட்டுவதே அன்பின் உண்மை முகம்” என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றும் சாலச் சிறந்ததே! (ஜூலை 24, 2019, மூவேளைச் செப உரை).
இந்த
மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் இளையவர் இவ்வாறு தன் உரையில் குறிப்பிடும்போது, அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனத்தில் எழுந்த கேள்வி: “இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?” இந்தக் கேள்வியே அவர்களை அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. இதற்கு நேர்மாறாக, அங்கு வந்த சமாரியரின் மனத்தில் எழுந்த கேள்வி: ‘இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?’ பரிவும் இரக்கமும் அன்பும் நிறைந்த உன்னத உணர்வே சமாரியரைச் செயலுக்கும் இட்டுச்சென்றன.
இன்றைய
உவமையில் சமாரியர் செய்த செயல் நமக்கு விடுக்கப்படும் ஒரு சவால். சமாரியர் ஆற்றியுள்ள செயலை இயேசு பட்டியலிடும்போது, சமாரியர் அடிபட்டவரைக் காண்கிறார், பரிவு கொள்கிறார், அணுகி வருகிறார், காயங்களைக் கட்டுகிறார், சுமந்து செல்கிறார் (விலங்கின்மீது), அவரோடு தங்குகிறார், பொறுப்பாளரிடம் ஒப்படைக்கிறார், செலவுகளை ஏற்கிறார் (10:33-35).
அருகில்
வருவதும், பரிவு கொள்வதும், காயங் களைஆற்றுவதும் தங்குவதும் சுமத்தலும் கொடுத்தலும் இயேசுவின் பரிவுமிக்க செயல்பாடுகள். சமாரியரின் அத்தனை செயல்களும் இயேசுவின் முழு இரக்கக்குணத்தையும் வெளிக்காட்டக்
கூடியவையாக இருந்தன. தன்னலத்தோடு மற்றவரைப் புறக்கணிக்கும் நடத்தையிலிருந்து விடுபட்டு, நம் பாதையில் சந்திப்பவர்கள் மீது, குறிப்பாக, துன்புறுவோர் மற்றும் தேவையில் இருப்போர் மீது பரிவு காட்டும்போதும், அவர்கள் அருகில் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றும்போதும் நாம் இயேசுவின் ‘வழியோரச் சீடர்களாக’
மாறுகின்றோம்.
கடவுளின்
கட்டளை நமக்குப் புரியாததும் இல்லை, அது தொலைவிலும் இல்லை. அதைத் தேடி வானத்திற்கும் செல்லவேண்டாம், கடல்களைக் கடக்கவும் வேண்டாம். கடவுளுடைய கட்டளை ‘உனக்கு மிக அருகில்’,
‘உன் வாயில்’,
‘உன் இதயத்தில்’
இருக்கிறது என்கிறது இன்றைய முதல் வாசகம். கைக்கெட்டும் தூரத்தில் அடிபட்டுக் கிடக்கும் பெயரில்லா மனிதர்களைக் கைதூக்கி விடுவதில் கடவுளின் கட்டளை அடங்கியிருக்கிறது; ‘அடுத்தவர்மீது அக்கறையின்மை’ என்ற
நோயை நலமாக்குவதில் அடங்கியுள்ளது. பார்க்கும் தூரத்தில் குற்றுயிராய்க் கிடந்த பெயரில்லா நபரைச் சமாரியர் கைநீட்டித் தழுவிக்கொண்டதில் திருச்சட்டம் நிறைவுகண்டது. “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு”
(உரோ 13:10).
“நீரும் போய் அப்படியே செய்யும்”
என்ற இயேசுவின் வரிகள் மற்றவர்களைக் கவனிக்காமல் எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திக்கும் நமக்கான வரிகள். சமாரியர் செய்ததுபோல் அன்பு செய்ய வேண்டும். அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு செயல். நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், அவர்களின் தேவைகள் நிறைவேறும்வரை மீண்டும் மீண்டும் உதவிகள் செய்யவேண்டும். திருத்தந்தை லியோ குறிப்பிட்டுள்ளதுபோல, “ஒருவருக்கு நாம் உதவ வேண்டும் என்று எண்ணினால், அவர்கள் அருகில் நெருங்கிச் சென்று உதவ வேண்டும். அவர்களுக்கு உதவுவதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். நமது கரங்கள் அழுக்காகிட அனுமதிக்க வேண்டும்”
(மே 28, 2025).
எனவே,
இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுவதன் வழியாக நாம் ‘கிறிஸ்துவின் பயணிகளாக’
மாறுவோம். நமது பயணத்தை நிறுத்தி மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்டுவோம். சாலையில் காயமடைந்து கிடந்த அந்த மனிதர் நம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்துகின்றார் என்பதை மறவோம். நாமும் போய் அப்படியே செய்வோம்.
புனித இஞ்ஞாசியார் தனது நண்பர் புனித சவேரியாரை இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்கு அனுப்பியபோது அவர் கூறிய வார்த்தைகள்: “சவேரியாரே செல்லுங்கள், உலகம் முழுவதையும் இறைவன்பால் பற்றியெரியச் செய்யுங்கள்.” புனித சவேரியாரின் நற்செய்தி அறிவிப்புப்பணி எவ்வளவு பெரிய மாற்றத்தை உலகமெங்கிலும் கொணர்ந்தது என்பதையும், அவரது நற்செய்தி அறிவிப்பே ஆயிரக்கணக்கான மறைப்பணியாளர்களைப் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் மறுக்க இயலுமோ? இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்ட பேரார்வத்தால் வெறும் பத்து ஆண்டுகளில் தனது நற்செய்தி அறிவிப்புப்பணியால் இந்த உலகையே புரட்டிப்போட்டவர் புனித சவேரியார்.
உலகெங்கும்
சென்று நற்செய்தியை அறிவிப்பது நம் கடமை. திருத்தந்தை பிரான்சிஸ், ‘நற்செய்தி அறிவிப்பு என்பது திரு அவையின் அடிப்படை அழைப்பு’ என்றும், ‘திரு அவையின் தனி அடையாளம்’
என்றும், ‘திரு அவையின் அனைத்துப் பணிகளுக்கும் முன்னோடி’
என்றும் கூறுகிறார். மேலும் அவர், “நற்செய்தி அறிவிப்புப்பணியே நம் திரு அவையின் இதயமாக இயங்குகிறது” என்கிறார்.
நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது நாம் இயேசுவுடன் கொண்டிருக்கும் உறவிலே மலரக்கூடியது. ஆகவே, இயேசுவோடு உறவில் வாழும் நாம் அனைவருமே நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
ஆண்டின்
பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறை இன்று தொடங்குகின்றோம். இயேசு தரும் அழைப்பை ஏற்று, மேற்கொள்ள வேண்டிய நற்செய்தி அறிவிப்புப் பணியைப் பற்றி இன்று சிந்திப்போம்.
நற்செய்தி
அறிவிப்பு என்பது வற்றாத உயிருள்ள ஒரு நீரூற்றாக நம் உள்ளத்தில் பாய்ந்தோடவேண்டும். அது நம் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்யவேண்டும் (காண். எரே 20:9). இப்பணி கிணற்று நீராய்த் தேங்கிப்போய்விடாமல் ஆற்றுநீராய்ப் பெருக்கெடுத்துப் பாய்ந்தோட வேண்டும்; அதன் பயன் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இயேசுவின் முழுவிருப்பம். எனவேதான், எல்லா ஊர்களுக்கும் குறிப்பாக, பிற இனத்து மக்களுக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்பதற்காக 72 பேரை நியமிக்கிறார் (லூக் 10:1). 72 சீடர்களை
நற்செய்தி அறிவிக்க அனுப்புவதற்குமுன் மூன்று மிக முக்கிய அறிவுரைகளை நிபந்தனைகளாக இயேசு வழங்குகிறார்.
முதல்
நிபந்தனையாக, ‘ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் தம் சீடர்களை அனுப்புகிறார் இயேசு’
(10:3). இயேசுவின் இவ்வாக்கு, நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஏற்படும் இடரையும் எதிர்ப்பையும் முன்காட்டுகிறது. இயேசுவின் சீடத்துவம் சவால் நிறைந்தது என்பது இங்குத் தெளிவுபடுத்தப்படுகிறது. வலிகளுக்கு மத்தியிலும் நற்செய்தி அறிவிப்புப்பணி என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.
மறவ
நாட்டு மண்ணில் நற்செய்தி அறிவித்து உயிர்த்தியாகம் செய்த புனித அருளானந்தர், நாஞ்சில் மண்ணில் உயிர்த் தியாகம் செய்த புனித தேவசகாயம் போன்றோரின் தியாகமிக்க வாழ்வு நற்செய்தியை எம்முறையில் அறிவிப்பது? அதனை எவ்வழியில் வாழ்ந்து காட்டுவது? எப்படி அதற்குச் சான்று பகர்வது? என்பதற்கு வழிகாட்டி நிற்கிறது. இவர்களின் புனிதமிக்க வாழ்வு ஆயிரக்கணக்கான இறையழைத்தல்களைத் திரு அவைக்குக் கொணர்ந்தது. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது சவாலானது, வலிகள் நிறைந்தது, வாழ்வைத் துறக்கத் தயார் நிலையில் இருப்பது என்ற மூன்று முக்கியக் கூறுகளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். நற்செய்தி அறிவிப்போரின் துணிவும் வீரமும் தியாக வாழ்வும் கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் விளைகிறது. எனவேதான் இயேசு இரண்டாவது நிபந்தனையாக, “பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டாம்”
(10:4) என அறிவுரை வழங்குகின்றார்.
‘எதுவுமே எடுத்துச்செல்ல வேண்டாம்’
என இயேசு கூறும் கட்டளை நமது நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாக இருக்கலாம். இன்றைய நம் காலச்சூழலில் நற்செய்தி அறிவிப்பு என்பதே ஓர் எதிர்பார்ப்புடன்தான் செய்யப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு பயன்கருதாப் பணி என்பதைவிட, பயன்கருதும் ஒரு பணியாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இன்று பணத்தை மையமாகக் கொண்டுதான் நற்செய்திப்பணி ஆற்றப்படுகின்றது. நற்செய்தி அறிவிப்புப்பணிகளில் இயேசுவே மையம் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கும்போதுதான் நாம் நற்செய்தி அறிவிப்புப்பணியின் மேன்மையை உணர முடியும். நம்முடைய நற்செய்தி அறிவிப்புப்பணியில் பொருளாசை மையம்கொள்ளும்போது விளைவது பொறாமையும் போட்டிகளும் பிளவுகளும் பிணக்குகளும்தான். “உலக இன்பங்களும், பொருளாதாரச் செழிப்பும் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது. செல்வம் ஏமாற்றத்தினை அளிக்கிறது. வறுமையின் துயரமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் இல்லாமல் வாழ முயற்சிக்கும்போது வறுமையே பிறக்கின்றது” என்கிறார்
திருத்தந்தை 14-ஆம் லியோ (9-வது உலக வறியோர் நாள், 14.06.2025).
நற்செய்தி
அறிவிப்பில் ‘வெறுங்கையோடு செல்லுங்கள்’ எனக்
கூறும் இயேசு, அமைதியைக் கொடுக்கச் சொல்கிறார். “நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள்” (10:5) என்கிறார்.
ஒரு குடும்பத்தைச் சந்தித்து அவர்களோடு உறவாடும்போது முதன்முதலில், தாம் இறைவனுடைய பணியாள் என்ற முறையில் அவர்களுக்கு இறை அமைதியை அளிக்கவேண்டும். பின் அவர்களுடைய நிலைமையையும் தேவைகளையும் அறிந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் தம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு, இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, ஒற்றுமை முதலியவற்றை அவர்கள் வாழ்ந்துகாட்ட அவர்களைத் தூண்ட வேண்டும். அவர்கள் தூய ஆவியாரின் வழிகாட்டுதலுடன் தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்ள உதவிடவேண்டும்.
இயேசு
கூறுகின்ற இந்த மூன்று நிபந்தனைகளையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பது மிகவும் சிரமமே. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்க முடியாமல், நமக்குள் சிறைப்படுத்தப்படுகின்றன. எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, கோபமும் வெறுப்பும் கசப்புணர்வுமே மேலோங்கி நிற்கின்றன. இந்தச் சூழலில் நமது நற்செய்தி அறிவிப்புப்பணி எப்படி அமையலாம்?
முதலில்,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கலாத்தியத் திரு அவைக்குக் குறிப்பிடுவதுபோல பணம், பதவி, பகட்டு, வீண்பெருமை போன்ற உலக ஆடம்பர வலையில் நாம் சிக்கிக்கொள்ளாமல், ‘சிலுவையே எனது வாழ்வின் ஆதாரம்’,
‘சிலுவையே எனது பெருமை’ என்ற மனநிலையில் வாழவேண்டும். நற்செய்தி அறிவிப்போர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்ட வேண்டும் (1கொரி 1:31). புனித பவுல் குறிப்பிடுவதுபோல, நற்செய்தி அறிவிப்போர் தன்னைப்பற்றி எடுத்துரைக்காமல் கிறிஸ்து இயேசுவைப் பற்றி எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் (2கொரி 4:5). நமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிலுவையில் அறையுண்ட இயேசுவையே நமது பணியின் இலக்காகவும், பாதையின் விளக்காகவும் கொண்டு பயணிக்க வேண்டும் (கலா 6:14).
இரண்டாவதாக,
நற்செய்தி அறிவிப்பின் மையமாக இருப்பவர்கள் ஏழைகள். அவர்களே நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாகவும் இருக்கின்றார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
என்னும் திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளதுபோல, ஏழைகளுக்குக் கடவுளுடனான நட்புறவு, ஆசி, இறைவார்த்தை, வழிபாட்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றை வழங்க நாம் தவறக் கூடாது. அவர்களிடமிருந்து நமது பார்வையை ஒருபோதும் விலக்கிவிடக்கூடாது. திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்துவதுபோல, “ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும்; மேய்ப்புப் பணியானது எப்பொழுதும் நம்மில் எளியவர்கள், சிறியவர்கள் மற்றும் ஏழைகளுக்கான அக்கறையில் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்”
(16.06.2025).
நிறைவாக,
நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் பின்பற்றி நடப்பது. எருசலேம் நகரில் புறக்கணிப்பு, துன்பம் மற்றும் மரணத்தை தாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இயேசு அறிந்தபோதிலும் அந்நகர் நோக்கித் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நன்மை செய்தார். நற்செய்திக்காகத் தம் இன்னுயிரைக் கையளிப்பதுதான் நற்செய்தி அறிவிப்பின் இறுதிநிலை என்பதை வாழ்ந்து காட்டினார். எனவே, நற்செய்தி அறிவிப்பில் துணிச்சலும் உயிர்த்தியாகமும் அவசியம் தேவை என்பதைப் புரிந்துகொள்ளும் நாம், வெள்ளமெனச் செல்லும் உலகப் போக்கின்படி பயணிக்காமல், கடவுளை அறிந்து, அன்புசெய்து, அவரை இந்த உலகில் அறிவிப்போம்.
நற்செய்தி
அறிவிப்புப் பணி திருமுழுக்குப் பெற்ற நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள கடமை என்பதை உணர்வோம். இவ்வுலகில் பணியாற்றப் போதிய வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம். தூய பிரான்சிஸ் அசிசி குறிப்பிடுவதுபோல “நற்செய்தியை அறிவிப்போம், நற்செய்தியாவோம்.”