“கிறிஸ்து உயிர்த்து விட்டார்! அல்லேலூயா!” இச்செய்தியை அறிவிப்பதில் எத்துணை மகிழ்ச்சி! கிறித்தவம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையானதும் தலைசிறந்ததுமான இவ்விழா, நமது நம்பிக்கையின் ஆணிவேர், வாழ்வின் அசைக்க முடியாத அடித்தளம். இறைமகன் மனிதராகப் பிறந்து, தாழ்ச்சியின் உச்சமாகத் தம்மைத் தாமே சிலுவையில் ‘வெறுமையாக்கி’ இறந்தார். ஆனால், அந்த இறப்பு ஒரு முடிவல்ல; சாவை வென்ற வெற்றியே உயிர்ப்பு! அவரைப்போலவே நாமும் நமது பழைய பாவ இயல்புகளுக்கு இறக்கவும், அருளின் ஒளியில் புதிய மனிதர்களாக வெற்றியோடு உயிர்க்கவும் இன்று அழைக்கப்படுகின்றோம்.
உயிர்ப்பே
நற்செய்தியின் உச்சக்கட்ட உண்மை மற்றும் புதிய ஏற்பாட்டின் மையச்செய்தி. கிறிஸ்துவின்
உயிர்ப்பு இல்லாவிடில் இன்று கிறித்தவமும் இல்லை, நமது நம்பிக்கையும் இல்லை. எனவேதான்,
இது சாதாரண ஒருநாள் கொண்டாட்டமாக அன்றி, உயிர்ப்பு முதல் பெந்தகோஸ்து வரை நீளும்
50 நாள்களின் ஈடு இணையற்ற ‘நட்சத்திரக் கொண்டாட்டமாக’
(க.தி.ம. ஏடு 1169) அமைகிறது. திருத்தந்தை முதலாம் லியோ இவ்விழாவைத் திருவழிபாட்டு
ஆண்டின் ‘மிகப்பெரிய விழா’ (Festum
Festorum) என்று போற்றுகிறார்.
இந்த வெற்றியின் கொண்டாட்டம், நம் வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு மகா சக்தியாகும்.
இந்த
மாபெரும் வெற்றியின் விழாவில் பெண்களே இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை முதலில் பெற்று,
சீடர்களுக்கு அறிவிக்கும் முதற்சாட்சியராக மாறுகின்றனர். இன்றைய நற்செய்தியில் (மத்
28:1-10), பெண்கள் சிலர் இறந்த இயேசுவின் உடலில் நறுமணத் தைலம் பூசச் சென்றபோது அவர்கள்
கண்டது ‘காலியான கல்லறை.’ அழுது புலம்பச் சென்ற அவர்களுக்கு, வாழ்வின் மாபெரும் செய்தி
அங்கே பறைசாற்றப்பட்டது. “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு
உயிருடன் எழுப்பப்பட்டார்” (மாற் 16:6) என்ற வான தூதரின் அறிவிப்பு,
அவர்களின் அச்சத்தை வியப்பாக மாற்றியது. “அவர் உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப்
போய்க்கொண்டிருக்கிறார்” (மத் 28:7) என்ற அழைப்பினை ஏற்று,
உயிர்ப்பின் சாட்சிகளாக நாமும் இன்று கலிலேயாவுக்குச் செல்வோம்.
“இயேசுவின்
முப்பதாண்டு கால மறைவாழ்விற்கும், அவரது இறையாட்சிப் பணிக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது
கலிலேயா. நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுவதுபோல, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய
முதல் அரும் அடையாளமும் (2:11), அரச அலுவலரின் மகனை நலமாக்கிய இரண்டாம் அரும் அடையாளமும்
(4:54) நிகழ்ந்த இடம் இதுவே. தமது பொதுப்பணியின் களமாகத் தேர்ந்தெடுத்த இக்கலிலேயாவையே,
உயிர்ப்பிற்குப் பின்னும் நற்செய்தியை உலகெங்கும் பரவுவதற்கான மையப்புள்ளியாக இயேசு
நிலைநிறுத்துகிறார். அதனால்தான் தாம் உயிருடன் எழுப்பப்பட்ட பிறகு சீடர்களுக்கு முன்பாக
கலிலேயாவுக்குச் செல்வேன் என்பதைப் பாஸ்கா விருந்தின் போதே அவர் முன்னறிவித்தார் (மத்
26:32; மாற் 14:28).
யூதேயாவிலிருந்து
சமாரியா வழியாக இயேசு மீண்டும் கலிலேயாவில் கால்பதித்தபோது, எருசலேம் திருவிழாவில்
அவர் ஆற்றிய வல்ல செயல்களைக் கண்டிருந்த மக்கள் அவரைப் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர்
(யோவா 4:45). ‘பிற இனத்தாரின் கலிலேயா’ என்று யூதர்களால் இகழ்ந்து ஒதுக்கப்பட்ட,
விளிம்புநிலை மக்கள் வாழ்ந்த இப்பகுதியில்தான் இயேசுவின் அருள்பணி தீர், சீதோன் போன்ற
எல்லைப் பரப்புகள் வரை விரிந்தது. புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், நம்பிக்கையோடு தேடி
வந்தவர்களுக்கும் வாழ்வளிக்கும் புகலிடமாக இயேசுவின் வாழ்வில் கலிலேயா ஒரு மைய அடையாளமாகத்
திகழ்ந்தது. உயிர்த்த ஆண்டவர் மீண்டும் கலிலேயாவையே தேர்ந்தெடுத்தது, சமூக வரலாற்றில்
ஒடுக்கப்பட்ட மற்றும் தள்ளப்பட்ட மக்களைக்கொண்டே தம் மீட்புச் செயலை நிறைவேற்ற விரும்புகிறார்
என்பதையே பறைசாற்றுகிறது.
கலிலேயா
நோக்கிய பயணம் என்பது வெறும் இடமாற்றம் அல்ல; அது ஒரு மகத்தான வாழ்வியல் மாற்றம். உயிர்த்த
ஆண்டவரைச் சந்திக்க நாம் மேற்கொள்ள வேண்டிய இந்த வாழ்வியல் மாற்றத்தைப் பின்வரும் மூன்று
நிலைகளில் சிந்திக்கலாம்.
முதலில்,
கலிலேயாவுக்குச் செல்வது என்பது, வாழ்வை மீண்டும் புதிய உத்வேகத்துடன் தொடங்குவதைக்
குறிக்கிறது. சீடர்கள் ஆண்டவரை முதன் முதலில் சந்தித்து உறவைத் தொடங்கிய அதே கலிலேய
மண்ணிற்கு அவர்களை மீண்டும் அழைப்பதன் மூலம், அவர்களது தார்மிகத் தோல்விகளைத் தாண்டிய
ஒரு புதிய தொடக்கத்தை இயேசு உருவாக்குகிறார்.
இயேசுவின்
உயிர்ப்பு என்பது மாட்சிமைப்படுத்தப்பட்ட ஒரு புதிய வாழ்வு என்பதால், கலிலேயாவிற்குத்
திரும்பிய சீடர்களும் பழைய பயம் நீங்கி ‘புதிய படைப்பாக’ உருமாறி,
உலகையே மாற்றும் துணிவைப் பெறுகிறார்கள். இது பேதுருவைப்போல மனம் மாறித் தம்மிடம் வர
அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இரண்டாவது வாய்ப்பு ஆகும். இறைவன் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றார்;
நம்மை விடுதலையின் பாதையில் நடக்கச் செய்வார்; நம் தோல்விகளால் சிதைந்துபோன உள்ளங்களையும்,
புதியதொரு கலைப்படைப்பாக மாற்ற உயிர்த்த இறைவனால் முடியும் என்பதே உயிர்ப்பு நமக்குத்
தரும் முதல் மாபெரும் செய்தியாகும்.
இரண்டாவதாக,
கலிலேயாவுக்குச் செல்வது என்பது கல்லறையிலிருந்து தூரமாகச் செல்வதைக் குறிக்கிறது.
இது இயேசுவைப் பற்றிய இறந்த கால நினைவுகளில் மட்டும் மூழ்கியிருப்பதை விடுத்து, நிகழ்கால
நம்பிக்கையின் உயிரோட்டமான நினைவுகளில் வாழ விடுக்கப்படும் அழைப்பாகும். நமது கடவுள்
இறந்த காலத்திற்குச் சொந்தமானவர் அல்லர்; அவர் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார் என்ற
அனுபவத்தை உயிர்ப்பு நமக்குத் தெளிவுபடுத்துகிறது. சில நேரங்களில் ஏமாற்றம், கசப்பு
அல்லது நிச்சயமற்ற எதிர்காலம் போன்ற காரணங்களால் நமது நம்பிக்கையின் ஊற்று வற்றிப்
போகலாம்; எதையும் மாற்ற முடியாது என்ற சோகத்தில் நாம் முடங்கிவிடலாம். ஆனால், உயிர்த்த
ஆண்டவர் நம் நம்பிக்கையைச் சிறைப்பிடித்திருக்கும் அந்தப் பாரமான கல்லறைக் கற்களை அகற்றி,
எதிர்காலத்தை நோக்கி நம்மைத் துணிவுடன் முன்னேறத் தூண்டுகிறார்.
மூன்றாவதாக,
கலிலேயாவுக்குச் செல்வது என்பது விளிம்புநிலை மக்களை நோக்கிப் பயணிப்பதாகும். எருசலேம்
என்பது அதிகாரம், செல்வாக்கு மற்றும் சடங்குகளின் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், கலிலேயாவோ
உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட யூதர்களால் ஒதுக்கப்பட்ட எளிய மக்கள் வாழ்ந்த பகுதி.
இயேசு அங்கேதான் இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். உயிர்த்த பின்னும் மீண்டும் அங்கேயே
செல்கிறார். இதன் மூலம், சமூகத்தின் விளிம்பில் வாழும் சிறியோர் மற்றும் எளியோரின்
முகங்களில் உயிர்த்த ஆண்டவரைக் கண்டுகொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது தினசரி
வாழ்வில், வன்முறையாலும் உணவுப் பாதுகாப்பின்மையாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும்
துயருறும் மக்களைத் தேடிச்செல்வதே உண்மையான உயிர்ப்பு அனுபவம். புலம்பெயர்ந்தோர் மற்றும்
பொருளாதார நெருக்கடிகளால் நலிந்திருப்போர்மீது உயிர்த்த இயேசுவின் ஒளி பிரதிபலிக்கவும்,
ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களோடு இணைந்து தீர்வுகாணவும் நாம்
முன்வர வேண்டும்.
நிறைவாக,
இறைமகனின் உயிர்ப்பு நமக்கு வழங்கியுள்ள விலைமதிப்பற்ற வாழ்வைச் சிறப்பிக்கும் இவ்வேளையில்,
நம் மீதான கடவுளின் முடிவற்ற அன்பை நன்றியுடன் நினைவுகூர்வோம். இந்த அன்பு எல்லாப்
பலவீனங்களையும், மரணத்தின் பிடியையும் வெல்லக்கூடிய வல்லமை கொண்டது. இருப்பினும், கடவுள்
தந்த இந்த உன்னத வாழ்வு இன்று எத்துணை இகழ்ச்சியாகவும் அவமதிப்பாகவும் நடத்தப்படுகிறது
என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்குப் பழகிவிட்ட
நாம், பலவற்றைத் தூக்கியெறிகிறோம். துன்பமும் கொடுமையும் சூழ்ந்த இவ்வுலகில், சிறு
சிறு கற்களாக இருக்கும் நாம் அனைவருமே மதிப்புப் பெற்றவர்கள். யாரையும் தூக்கியெறிய
இயலாது. பிறப்பையே காண முடியாத நிலையில் கருவிலேயே அழிக்கப்படும் குழந்தையர், பசியால்
மடியும் வறியோர், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாகும் ஏழையர் என வாழ்வின்
மாண்பு சிதைக்கப்படுவது உயிர்ப்பின் செய்திக்கு எதிரானது. குறிப்பாக, மனிதரை வெறும்
வியாபாரப் பொருள்களாக நடத்தும் நவீன அடிமைத்தனமும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
குற்றங்களும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.
எனவே,
இத்தகைய அநீதிகளையும் மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்தவும், ஒவ்வொரு மனித உயிரையும்
புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கவும் நாம் எடுக்கும் துணிச்சலான முயற்சிகளே, உயிர்த்த
ஆண்டவருக்கு நாம் அளிக்கும் உண்மையான சாட்சியமாகும். வெறும் சடங்குகளோடு நின்றுவிடாமல்,
வாருங்கள், புதிய நம்பிக்கையுடன் நாம் கலிலேயாவுக்குச் செல்வோம்!
அனைவருக்கும் இனிய உயிர்ப்புப்
பெருவிழா வாழ்த்துகள்!
இன்று நாம் புனித வாரத்தின் நுழைவுவாயிலில் நிற்கிறோம். ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடி, மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான வாரத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கின்றோம். இவ்வாரம் முழுவதும் நமது ஆண்டவரின் இலட்சியப் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பைக் கொண்டாட அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கின்றது.
எருசலேம்
நகருக்குள் வெற்றியோடு நுழைந்த இயேசுவை, ‘ஓசன்னா’ பாடி, ஒலிவக் கிளைகளை அசைத்து வரவேற்ற அதே மக்கள், சில நாள்களிலேயே “அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்திய முரண்பாடான நிகழ்வை இன்றைய வழிபாடு நம் கண்முன் நிறுத்துகிறது. மனித உள்ளங்களின் நிலையற்ற தன்மையையும், இறைவனின் மாறாத அன்பையும் இந்த நாள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த வாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. வாருங்கள்,
கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு!
ஆண்டின்
52 வாரங்களில், இந்த ஒரு வாரத்தை மட்டும் ஏன் ‘புனித வாரம்’ என்று அழைக்கிறோம்? இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இறுதி நாள்கள் இவை என்பதாலும், மானிட மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள் அரங்கேறிய காலம் என்பதாலும் இதனைப் புனித வாரம் என்கிறோம். ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அந்த இறுதி நாள்களில் ‘புனிதம்’ என்று சொல்லிக்கொள்ள எதுவுமே வெளியில் தெரியவில்லை, மாறாக மனித பலவீனங்களும், துரோகங்களுமே மலிந்து கிடந்தன.
உடன்
இருந்த நண்பனே முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான். உயிருக்கு உயிரான சீடனோ “அவரைத் தெரியாது”
என மறுதலித்தான். ஆபத்து வந்தபோது ஏனைய நண்பர்கள் சிதறி ஓடி ஒளிந்தனர். மனசாட்சிகள் விலைபேசப்பட்டு, பொய் சாட்சிகள் புனையப்பட்டன. “இவரிடம் எக்குற்றமும் காணவில்லை”
என்று தெரிந்தும், அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மாசற்ற இளைஞனுக்கு மரணத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, சித்திரவதை செய்து, ஒரு கந்தல் துணி போலச் சிலுவையில் தொங்கவிட்டனர். இவற்றில் புனிதம் எங்கே இருக்கிறது?
துரோகமும்
அநீதியும் வன்முறையும் நிறைந்த ஒரு வாரத்தை ‘புனிதம்’ என்று அழைப்பது முரண்பாடாகத் தோன்றலாம். உண்மையில், புனிதம் என்ற சொல்லுக்கு இயேசு இங்கே ஒரு புதிய இலக்கணத்தை எழுதுகிறார். கடவுள் என்ற மறையுண்மைக்கு மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் என்பவர் எட்டாத உயரத்தில் அரியணையில் அமர்ந்திருப்பவர் அல்லர், அவர் அன்புக்காகத் துன்பப்படக் கூடியவர். அதுவும் எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு கொடுமையான சிலுவையாயினும், மானிடர் மீதான பேரன்பினால் அதனை மனமுவந்து ஏற்பவரே உண்மையான கடவுள் என்பதைச் சிலுவைச் சாவின் வழியாக எண்பித்தவர். துரோகங்களுக்கு நடுவிலும் மாறாத அன்பைக் காட்டியதால்தான் இது புனித வாரம். அதிகாரத்தின் அநீதிக்கு முன்னால் மண்டியிடாமல், மன்னிப்பை ஆயுதமாக்கியதால்தான் இது புனித வாரம்.
இன்றைய
நற்செய்தி வாசகம் இயேசுவின் இலட்சிய மரணத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. அனைத்துத் தியாகச் செயல்களுக்கும் அடிப்படை ஊற்றாக இருப்பது உண்மையான அன்பு மட்டுமே. அந்தத் தூய அன்பிலிருந்து தான் தியாகம் பிறக்கிறது. அந்தத் தியாகத்தின் உச்சக் கட்டத்தில்தான் ஓர் இலட்சிய மரணம் அரங்கேறுகிறது. இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது, எவ்விதத் தூண்டுதலுமின்றி மக்கள் தாங்களாகவே திரண்டு வந்து அவரை வரவேற்றனர். அன்று எருசலேமில் உருவான அந்தத் தன்னிச்சையான மக்கள் கூட்டம், யூத மதத் தலைவர்களுக்கும் உரோமை அரசுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இயேசு
தனது பணிவாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்தே, மதத் தலைவர்களின் அதிகாரப் போக்கிற்குச் சவால் விடுத்து வந்தார். அதன் சிகரமாகவே எருசலேம் நகரில் அவருக்குக் கிடைத்த இந்த மாபெரும் வரவேற்பு அமைந்தது. இதனைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் கோட்டையாக விளங்கிய எருசலேம் கோவிலுக்குள் நுழைந்த இயேசு, அங்கிருந்த அவலங்களைச் சாட்டையடி கொடுத்துச் சுத்தப்படுத்தினார். இவ்வாறு, அந்த முதல் குருத்தோலை ஞாயிறு, நிலவி வந்த அதிகார அமைப்புகளைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி நாளாக மாறியது.
ஆண்டுதோறும்
பாஸ்கா விழாவைக் கொண்டாட இயேசு எருசலேம் வந்திருந்தாலும், இதுவே தனது இறுதிப் பயணம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால்தான், எருசலேம் நோக்கிய அந்தப் பயணத்தின்போது, தனது பாடுகள் மற்றும் இறப்பைப் பற்றி மூன்று முறை முன்னறிவிக்கிறார் (மாற் 8:31; 9:31;
10:33-34). தான் காட்டிக்கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்படப்போவதை அறிந்திருந்தும், அவர் தனது இலட்சியத்திலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை. இயேசுவின் நோக்கத்தை ஓரளவேனும் உணர்ந்திருந்த மக்களும், இறைவாக்கினர் செக்கரியாவின் வாக்குப்படி, “தாழ்ச்சியுடன் கழுதையின் மேலேறி”
(9:9) வரும் மெசியாவை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, ஒரு மாபெரும் இயக்கமாக இயேசுவோடு இணைந்து எருசலேம் நோக்கி ஆர்ப்பரிப்போடு பயணித்தனர்.
எருசலேம்
என்பது உண்மையில் ஒரு முரண்பாடுகளின் நகரம். இயேசுவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைபொருளின் நிகழ்வுகளோடு இந்நகரம் பிணைக்கப்பட்டிருப்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது. இது கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் புனித பூமியாக இருந்தாலும், விவிலிய வரலாற்றில் இது பல முரண்பாடுகளைத் தன்னகத்தே
கொண்டுள்ளது. இது “ஆண்டவரின் நகர்”
(எசா 60:14) என்று புகழப்பட்டாலும், ‘இறைவாக்கினரைக் கொல்லும் நகராக’
(மத் 23:37) மாறியது. இது உண்மையின் நகராக (எசா 1:21; 26, சக் 8:3) இருந்தாலும், மக்களை அடிமைப்படுத்திய நகராகவும் (எரே 5:1-5; மீக் 3:10) இருந்தது. இது மகிழ்ச்சியின் நகர் (திபா 48:2) என்று போற்றப்பட்டாலும், வேதனையின் நகரமாகவும் (புல 2:15) காட்சியளித்தது. சாலமோன் மன்னர் கட்டிய அந்தப் பிரம்மாண்டமான கோவில், இறைவனின் பிரசன்னத்தையும், மன்னிப்பையும், இரக்கத்தையும் பறைசாற்றும் இடமாக விளங்கியது. அது ஒரு பலியின் இடமாகத் தொடங்கி, பிற்காலத்தில் மக்களைச் சுரண்டும் இடமாக மாறியதுதான் வரலாற்றுச் சோகம்.
இன்றைய
வழிபாட்டில் சில கேள்வியை நம் இதயங்களில் ஏந்துவோம்: “துன்பங்களைத் தாங்கும் இயேசுவுக்கு முன்னால் நான் யாராக இருக்க விரும்புகிறேன்?” புனித வாரத்தின் இந்தத் தொடக்கத்தில், நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்கப் போகிறோமா அல்லது பங்கேற்பாளர்களாக மாறப்போகிறோமா? நற்செய்தி காட்டும் மாந்தர்களில் நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம்.
இன்றைய
எருசலேம் பவனி பல கேள்விகளால் நிறைந்துள்ளது.
இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊர் சீமோனைப்போல, பிறரின் துன்பங்களில் தோள் கொடுக்கிறோமா? சிலுவையடியில் நின்ற அன்னை மரியாவைப்போல, இக்கட்டான சூழலிலும் உறுதியான நம்பிக்கையோடு நிற்கிறோமா? அடக்கத்திற்கு உதவிய யோசேப்பைப் போல, மறைமுகமாக நற்செயல்கள் செய்கிறோமா? அல்லது... சுயநலத்திற்காக அன்பைக் காட்டிக் கொடுக்கும் யூதாஸாகவா? பொறுப்பிலிருந்து கை கழுவும் பிலாத்துவாகவா?
அதிகார போதையில் மற்றவரைக் கண்டனம் செய்யும் மதத் தலைவர்களாகவா? இவ்வாரம் முழுவதும் இக்கேள்விகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.
கல்வாரிப்
பயணத்தில் இயேசு நமக்குக் கற்பிக்கும் முக்கிய வாழ்வியல் பாடங்கள் இவை: முதலில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தப்படுத்தியதும், அதிகார வர்க்கத்தை எதிர்த்ததும் நமக்கொரு பாடமாகும். இன்று நாம் வாழும் சமூகத்தில் அநீதியான அதிகார அமைப்புகளுக்குப் பணிந்து போகாமல், உண்மையை உரக்கச் சொல்லவேண்டும். அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல, அது அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கான ஒரு கருவி என்பதை இயேசு தன் சிலுவைச் சாவின் மூலம் நிரூபித்தார்.
இரண்டாவதாக,
இயேசுவின் இறுதி நாள்கள் துரோகங்களால் சூழப்பட்டிருந்த வேளையிலும் அவர் காட்டிய பதில் “மன்னிப்பு”.
“தாம் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்”
என்ற அந்தச் சொல், பழிவாங்கும் உணர்வைத் தகர்த்தெறிகிறது. நம் வாழ்வில் நம்மை வீழ்த்த நினைப்பவர்களையும், காட்டிக்கொடுத்தவர்களையும் மன்னிப்பதன் மூலமே நாம் “புனிதத்தை”
எட்ட முடியும்.
மூன்றாவதாக,
இன்றைய போட்டி நிறைந்த உலகில், தாழ்ச்சியே உண்மையான வலிமை என்பதைக் கல்வாரி மலை நமக்குக் கற்றுத்தருகிறது. குதிரையில் ஏறி வரும் போர் வீரனாக அல்லாமல், கழுதையின் மேல் ஏறி வரும் அமைதித் தூதுவராக எருசலேமுக்குள் நுழையும் இயேசு ஆரவாரங்களுக்கு மத்தியில் அகந்தை இல்லாமல் செல்வது எப்படி என்பதை காட்டுகிறார். துன்பம் என்பது ஒருபோதும் வீணாவதில்லை; அது அன்போடு ஏற்றுக்கொள்ளப்படும்போது.
வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் பலமுறை நலிந்து போகிறோம். வறுமையால் வாடும்போதும், தீராத நோயால் உடல் நலியும்போதும், உற்றார் உறவினரின் சொல்லம்புகளால் மனம் நலியும்போதும், ‘எப்படியாவது வாழ்ந்துவிட மாட்டோமா?’ என்ற ஏக்கம் நமக்குள் எழுகிறது. கவலைகள் என்னும் சுமையால் அழுத்தி வைக்கப்பட்ட நம் இதயம், ஒரு கல்லறையைப் போலக் கனக்கிறது. ‘இனி யாரால் என்னை மீட்டெடுக்க முடியும்? எல்லாம் முடிந்துவிட்டதே...’ என்று நாம் முடங்கிக் கிடக்கும் அந்த இருண்ட வேளையில், இன்றைய இறைவார்த்தை நம்மை நோக்கிப் பாயும் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது.
அன்று
பெத்தானியாவின் ஒரு மூலையில், இலாசரின் மரணத்தால் அந்த வீடே நலிந்து போயிருந்தது. மார்த்தாவும் மரியாவும் சிந்திய கண்ணீர், இன்று நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் வடியும் கண்ணீரின் சாட்சியாக இருக்கிறது. ஆனால், அன்று மரணத்தின் வாசலில் நின்று கொண்டு, “இலாசரே, வெளியே வா!” என்ற ஒற்றை ‘நல்வாக்கால்’ இறந்த
உடலை உயிர்ப்பித்த இயேசு, இன்றும் நம் வாழ்வின் இக்கட்டான சூழல்களில் அதே வல்லமையோடு நம்மை அழைக்கிறார்.
இன்று
நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு ஒரு மாபெரும் உண்மையைப் பறைசாற்றுகின்றன: ‘மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக, கல்லறைக்கும் அப்பால் ஒரு புதுவாழ்வு - ஒரு நிறைவாழ்வு நமக்காகக் காத்திருக்கிறது’ என்பதை
இன்றைய வாசகங்கள் நமக்கு ஆழமாக நினைவுபடுத்துகின்றன.
பாபிலோனிய
அடிமைத்தனத்தின் இரும்புப் பிடியில் சிக்கி, ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, இறைவன் மீண்டும் வாழ்வை வழங்குவார் என்ற பெரிய நம்பிக்கையை இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகக் காண்கிறோம். எங்குப் பார்த்தாலும் உலர்ந்த எலும்புகள் சிதறிக்கிடந்த அந்தப் பள்ளத்தாக்கில், இறைவனின் ஆவி வீசியபோது, அவை தசையும் தோலும் பெற்று, உயிருள்ள ஒரு பெரும் இராணுவப் படையாய் எழுந்து நின்ற அதிசயக் காட்சியை எசேக்கியேல் 37-ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் காண்கிறோம்.
இஸ்ரயேல்
மக்கள் யாவே இறைவனால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களாக இருந்தபோதிலும், இறைவன் அவர்கள்மீது கொண்ட அளவற்ற அன்பினால் அவர்களைத் தம் சொந்த மக்களாக வரித்துக்கொண்டார் (இச 7:6-8). “ஒரு தாய் தன் கருவிலுள்ள பிள்ளையை மறந்தாலும், நான் உன்னை மறக்கமாட்டேன்” (எசா
49:15) என்று உருகிய இறைவன், அவர்களின் இன்ப-துன்பங்களில் பங்கெடுத்தார். பாலைவனப் பயணத்தில் உணவாகவும், தாகம் தணிக்கும் நீராகவும், தளர்ந்த வேளையில் துணிவூட் டும் தோழனாகவும் உடனிருந்தார்.
ஆனால்,
மக்கள் இறைவனோடு செய்த உடன்படிக்கையை மறந்து வழிவிலகியபோதும், அவர்களை வழிநடத்திய தலைவர்கள் சுயநலத்தால் மக்களைக் கைவிட்டபோதும் (எசே 34:2), இறைவன் அவர்களைக் கைவிடவில்லை. “நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்”
(34:11) என்று வாக்குறுதி அளித்தார். சிதறிப் போனவர்களை ஒன்றிணைத்து, வலுவற்றவர்களைத் தோள்மீது சுமந்து, நலிந்தவர்களைத் தம் நல்வாக்கால் திடப்படுத்தும் நல்லாயனாக அவர் உருவெடுத்தார்.
அடிமைத்தனத்தால்
நம்பிக்கையிழந்து, ‘உலர்ந்த எலும்புகளைப் போல’ வாழ்ந்த மக்களுக்குள், இறைவன் மீண்டும் தம் உயிர் மூச்சைப் புகுத்துகிறார்
(37:5). “என்
மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்”
(37:12) என்று இறைவன் அன்று கொடுத்த வாக்குறுதி, இன்றும் நலிந்து கிடக்கும் ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் உரியது. இறைவன் இஸ்ரயேல் மக்களின் ஆயராக இருந்து, தளர்ந்த வேளையில் அவர்களைத் தேடிச்சென்று திடப்படுத்தியதுபோல, இன்றும் நம்மைத் தேடி வருகிறார்.
இன்றைய
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, இலாசரை உயிர்ப்பித்து, நலிந்தோர் வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தருவதைக் காண்கிறோம். கானாவூர் திருமண வீட்டில் (யோவா 2) தொடங்கிய இயேசுவின் அரும்பெரும் அடையாளங்கள், இலாசரின் கல்லறையில் நிறைவு பெறுகின்றன. இந்த வல்ல செயல் நிகழ்வதற்கு முன்னால், இயேசு எருசலேமில் பல சவால்களைச் சந்தித்தார்.
பார்வையற்றவருக்குப் பார்வை அளித்ததால் யூதத் தலைவர்கள் அவர்மீது கொலைவெறி கொண்டனர். அவரை ‘பித்துப்பிடித்தவன்’ என்றும்,
‘பேய் பிடித்தவன்’ என்றும்
பழித்தனர். கற்களை வீசித் தாக்க முயன்றனர் (யோவா 10:30,31).
இந்த
வன்முறைச் சூழலில் இருந்து விடுபட்டு, இயேசு தமது சீடர்களுடன் யோர்தான் நதிக்கு அப்பால் சென்றார். அங்கே, தாம் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் தங்கியிருந்தபோது (10:40), தந்தையின் அரவணைப்பைத் தேடினார். ஒருவேளை அந்தப் போராட்டமான நேரத்தில், தமக்கு ஆறுதல் தரும் உறவுகளை அவர் நினைத்திருக்கக்கூடும். நாமும் பலவேளைகளில் தாங்க முடியா வேதனைகளை அனுபவிக்கும்போது நம்மைத் தாங்கிப்பிடிக்க உறவுகளைத் தேடுவது எதார்த்தம்தானே! அப்போதுதான் அவருக்கு ‘பெத்தானியா’ நினைவுக்கு
வருகிறது. பெத்தானியா என்றால் ‘துயரத்தின் இல்லம்’ என்று பொருள். இயேசு எப்போதெல்லாம் எருசலேமில் வெறுப்பைச் சந்தித்தாரோ, அப்போதெல்லாம் அவர் ஆறுதல் தேடிச் சென்ற இடம் இலாசர், மார்த்தா, மரியாவின் இல்லம்.
‘இலாசர்’ என்ற பெயருக்கு ‘கடவுள் உதவினார்’
என்று பொருள். அந்தப் பெயருக்கேற்ப, அவரது மரணத்தில் கடவுளின் வல்லமை வெளிப்பட்டது. நோயுற்றிருந்த இலாசருக்காக அவரது சகோதரிகள் இயேசுவுக்கு அனுப்பிய செய்தி மிகச் சுருக்கமானது: “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” (11:3). இச்செய்தியில்
ஒரு பெரிய பட்டியல் இல்லை. ஆனால், “உம் நண்பன்” என்ற உறவின் ஆழம் மட்டுமே இருக்கிறது. கானாவூரில் அன்னை மரியா “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” (2:3) என்று
கூறியது போன்ற ஆழமான, சுருக்கமான வேண்டுதல் இது. நம் தேவைகளை ஆண்டவரிடம் அப்படியே சமர்ப்பிப்பதே உன்னத செபம்.
இயேசு
பெத்தானியாவுக்கு வந்தபோது, இலாசரை அடக்கம் செய்து நான்கு நாள் ஆகியிருந்தது (11:17). யூத நம்பிக்கையின்படி, மூன்று நாள்கள்வரை ஆன்மா உடலோடு தங்கியிருக்கும். ஆனால், நான்கு நாள் ஆகிவிட்டால் உடல் அழுகத் தொடங்கிவிடும், ஆன்மா நிரந்தரமாகப் பிரிந்து விடும் என யூதர்கள் நம்பினர்.
ஏற்கெனவே இயேசு இரண்டு பேரை உயிர்ப்பித்த நிகழ்வுகள் உடனடியாக நிகழ்ந்தன (மத் 9:25; லூக் 14-15). ஆனால், இங்கு நான்கு நாள் ஆனதால் மீண்டும் ஒரு வல்ல செயல் நிகழும் எனச் சுற்றி நின்றவர்கள் நம்பியிருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழ்நிலையில் இயேசு பெத்தானியாவுக்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்ட மார்த்தா விரைந்து சென்று, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்”
(11:21) என்று தன் இதயத்தில் பூட்டி வைத்திருந்த ஆதங்கத்தைக் கொட்டுகிறார். தாங்க முடியா வேதனைகள் நம்மைச் சூழ்ந்து நெருக்கும்போது, ஆண்டவரிடம்தானே முறையிட முடியும்! மார்த்தாவின் செயல் இயேசுவின்மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது.
நிறைவாக,
இந்த நாள் நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கள்: முதலாவதாக, இயேசு காற்றையும் கடலையும் அடக்கிய வல்லமை கொண்டவர் என்றாலும், இலாசரின் கல்லறைக் கல்லைத் தானாகவே நகரச் செய்திருக்க முடியும். இருப்பினும், அவர் “கல்லை அகற்றி விடுங்கள்”
(11:39) என்று கட்டளையிட்டது, இறைவன் தம் வல்ல செயல்களில் எப்போதும் மனித ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார் என்பதையே காட்டுகிறது. அதேபோல், உயிர் பெற்ற இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்க்க முடியாது என்பதால், நம்மிடையே நடைப் பிணங்களாக வாழ்வோரின் கட்டுகளை அவிழ்த்து அவர்களைப் புதுவாழ்விற்கு விடுவிக்க இறைவன் நமக்கே கட்டளையிடுகிறார்.
இரண்டாவதாக,
இலாசர் இறந்து நான்கு நாளாகிவிட்டதால் “நாற்றம் அடிக்குமே”
(11:39) என்று மார்த்தா தயங்கியது, அழுகிப்போன இறந்த காலத்திலேயே தேங்கி நிற்கும் மனித மனத்தின் போராட்டத்தைக் காட்டுகிறது. ஆனால், இயேசு அந்தத் தடுமாற்றத்தை நீக்கி, முடங்கிக் கிடக்கும் இறந்த காலத்தை மூடியிருக்கும் கல்லை அகற்றி விட்டு, நம்பிக்கையோடு நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அடியெடுத்து வைக்க மார்த்தாவையும் நம்மையும் அழைக்கிறார்.
இறுதியாக,
அழுகிய உடலுக்குப் புத்துயிர் ஊட்டும் இறைவல்லமையால் “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக்
1:37) என்பதை இயேசு மெய்ப்பிக்கிறார். வல்ல செயல் நிகழும் முன்பே அவர் தந்தைக்கு நன்றி கூறியது (யோவா 11:41), நாம் வேண்டுவது கிடைத்துவிட்டது என்ற ஆழமான நம்பிக்கையோடு இறைவனை அணுகவேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்றுத் தருகிறார்.
அன்பானவர்களே!
சாவை வென்று மறுவாழ்வு பெறத் தேவையான தூய ஆவிக்குரிய இயல்புகளை வேண்டி, நலிந்தோரை நல்வாக்கால் திடப்படுத்தும் இறைவனின் துணையோடு சவால்களை எதிர்கொள்ள இந்நாளில் உருக்கமாக மன்றாடுவோம்.
இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான ‘மகிழும் ஞாயிறு’ (Laetare Sunday)-ஐக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கி நாம் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில், மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியைத் தூண்டும் ஒரு மைல்கல்லாக இந்நாள் அமைகிறது. “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” (1சாமு 16:7) என்ற உண்மையைச் சிந்திக்கும் வேளையில், வெளிக்கண்களால் காண்பதைக் காட்டிலும், இறைவனின் ஒளியால் அகக்கண்களைத் திறப்பதே உண்மையான மகிழ்ச்சி என்பதை இன்று உணர்கிறோம்.
இறைவனின்
பார்வையை நாம் பெறவேண்டுமெனில், முதலில் நாம் உலகப் பார்வையைத் துறந்து இறைப்பார்வையை ஏந்தவேண்டும். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராக தாவீது தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வை விவரிக்கிறது. ஈசாயின் மூத்த மகன்கள் அவர்களின் தோற்றத்தாலும் உயரத்தாலும் சாமுவேல் இறைவாக்கினரைக் கவர்கிறார்கள். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே... மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை” (1சாமு
16:7) என்று கூறி அவர்களை நிராகரிக்கிறார். மனிதர் கண்களைப் பார்க்கின்றனர்; கடவுள் இதயத்தைப் பார்க்கின்றார். ஈசாயின் ஏழு புதல்வர்களையும் நிராகரித்த கடவுள், இறுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைய மகன் தாவீதைத் தேர்ந்தெடுக்கிறார்.
சிறுவனாக
இருந்த தாவீதிடம் அப்போது ஒரு படைத்தலைவருக்கோ அல்லது ஆட்சியாளருக்கோ உரிய மதிநுட்பமோ, மனத்துணிவோ அல்லது உலகளாவிய தகுதிகளோ இருந்திருக்கவில்லை. ஆடு மேய்க்கும் ஒரு சாதாரண சிறுவனாகவே அவர் பார்க்கப்பட்டார். ஆனால், உலகம் யாரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ, யாரை ஒதுக்கி வைத்ததோ, அவர்களையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் பணிக்கென அனுப்புகிறார். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலும் நாம் காண்கிறோம். பிறவியிலேயே பார்வையற்ற ஒரு மனிதர், சமூகத்தால் ‘பாவி’ என்று முத்திரை குத்தப்பட்டவர்; சமூகத்தில் மிகக் கடினமான துன்பங்களுக்கு ஆளானவர்; ஆலயத்தில் நுழையத் தடை செய்யப்பட்டவர்; இரந்துண்ணும் ஓர் எளியவர். அன்று அங்கிருந்த சீடர்களும் பரிசேயர்களும் அவரை ஒரு சுமையாகவோ அல்லது பாவத்தின் அடையாளமாகவோதான் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவரை ஒதுக்கித் தள்ளாமல், கடவுளின் செயல் அவர் வழியாக வெளிப்படும் பொருட்டு அவரைத் தேர்ந்தெடுத்தார்.
தாவீதுக்கு
அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர் எப்படி ஒரு புதிய ஆற்றலைப் பெற்றாரோ, அதேபோல இயேசு அந்தப் பார்வையற்றவரின் கண்களில் உமிழ்நீர் தடவி, “சிலோவாம் குளத்திற்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்று பணித்தபோது, ஒரு புதிய படைப்பு அங்கே நிகழ்ந்தது.
பிறவியிலேயே
பார்வையற்றவர் பார்வை பெறும் நிகழ்வில் இயேசு செய்கின்ற அடையாள முறைகள் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. இயேசு உமிழ்தல், சேற்றைப் பூசுதல், கழுவுதல் போன்ற செயல்களால் நோயாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறார். ஏன் இவ்வளவு அடையாளங்கள்? இந்த அடையாள முறைகள் நோயாளிகளின் நம்பிக்கையைத் தூண்டி, அதை வலுப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இதனைத் திக்கிப் பேசுபவர் நலம்பெற்ற நிகழ்விலும் (மாற் 7:33-35), பெத்சாயிதாவில் பார்வையற்ற ஒருவர் பார்வை பெற்ற நிகழ்விலும் (மாற் 8:23-25) காணலாம். உமிழ்தல், சேறு பூசுதல், கைகளை வைத்தல், வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பெருமூச்சு விடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் ஒருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஊடகங்களாகச் செயல்பட்டன.
யோவான்
குறிப்பிடுகின்ற சிலோவாம் குளம் ஆழமான இறையியல் சிந்தனையை நமக்குள் விதைக்கின்றது. சிலோவாம் குளம் என்பது எருசலேம் நகரின் தெற்கு எல்லையில் அமைந்திருந்த ஒரு முக்கியமான நீர்நிலையாகும். விவிலியப் பேராசிரியர் கு. எரோணிமுசு விளக்கப்படி, இக்குளத்திலிருந்துதான் கூடாரத் திருவிழாவின் தண்ணீர்ச் சடங்குகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, எருசலேம் நகருக்கு வெளியே இருந்த கெதிரோன் பள்ளத்தாக்கில் ‘கிகோன்’ ஊற்றிலிருந்து மக்கள் தண்ணீர் கொண்டுவந்தனர். ஆனால், போர்க்காலங்களில், நகர் முற்றுகையிடப்பட்டிருக்கும்
நேரங்களில் இவ்வூற்றுக்கு மக்களால் செல்ல முடியாததால் அரசர் எசேக்கியா (கி.மு. 716-687), சென்னாக்கிரீபு
(704-681) என்னும் அசீரியப் பேரரசர் நகரை முற்றுகையிடுவார் எனத் தெரிந்ததும், 1749 அடி நீளமுள்ள கடினமான பாறையைக் குடைந்து ஒரு சுரங்கப் பாதை வழியாக நகருக்குள் இருந்த இந்தக் குளத்திற்குக் கொண்டு வந்தார். இவ்வாறு இக்குளத்திற்கு வரும் நீர் ‘கிகோன்’ ஊற்றிலிருந்து தாரையாக ‘அனுப்பப்பட்டதால்’, ‘அனுப்பப்பட்டது’ என்னும்
பொருளில் இதற்கு ‘சிலோவாம்’
என்று பெயரிடப்பட்டது. யோவான் இயேசுவைக் குறிக்கும் வகையில் அதனைச் சற்று மாற்றி ‘அனுப்பப்பட்டவர்’ என்று
பொருள் கொடுக்கிறார். இதன் மூலம் அந்தப் பார்வையற்றவர் வாழ்வு தரும் நீராகிய இயேசுவிடம் சென்று நலம் பெறுகிறார்.
குளத்தில்
போய்க் கண்களைக் கழுவியதால் பார்வை பெற்றவர், அந்த நல்ல செய்தியை உலகிற்குப் பறைசாற்ற அனுப்பப்படுகிறார். யூதர்களும் பரிசேயர்களும் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.
தன்னை நலப்படுத்தியவர் யார் என்றுகூட பார்வை பெற்றவர் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால், நலம் தந்தவர் ஒரு சாதாரண ஆளாக மட்டும் இருக்க முடியாது என்பதை உணர்கிறார். தான் சந்திக்கப் போகின்ற பிரச்சினையைக்கூட உணராமல், பார்வை பெற்றவர், தனக்குப் பார்வை அளித்த அந்த ஆள் “ஓர் இறைவாக்கினர்” (9:17) என்று
நற்செய்தி அறிவிக்கிறார். எந்த அச்சுறுத்தலுக்கும் அவர் அசையவில்லை. “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட முயல்கின்றனர் (9:34,35). இந்நிகழ்வு இயேசுவையும் யூதர்கள் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்ததை நமக்கு நினைவூட்டுகின்றது.
பார்வையற்றவர்
நலமடைந்த நிகழ்வில், அவர் ‘திரும்பி வருதல்’
(9:7) என்பது நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய ஒரு முக்கியமான தருணமாகும். இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவிய அந்த மனிதர், பார்வை பெற்றவுடன் உடனடியாகத் திரும்பி வருகிறார். பிறவியிலேயே பார்வையற்ற அவர், அதுவரை எந்த ஒரு மனிதரையும், ஏன் தனக்கு நலம் அளித்த இயேசுவைக் கூட கண்டதில்லை. இருப்பினும், இயேசுவின் தொடுதலால் புதிய ஆற்றல் பெற்ற அவர், அவரை ‘ஓர் இறைவாக்கினர்’ (9:17) என்று
துணிவோடு அறிவிக்கிறார்.
தனக்கு
வாழ்வளித்தவருக்கு நன்றி சொல்லவும், அந்தப் புனிதமான பாதங்களைக் கண்டு பணியவும் அவருடைய விழிகளும் கால்களும் விரைந்தன. தான் சந்திக்கப்போகும் சமூகப் பிரச்சினைகளையோ, அதிகாரிகளின் எதிர்ப்பையோ பற்றி அவர் கவலைப்படவில்லை; மாறாக, தான் பெற்ற மாபெரும் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும், தன்னைப்போல இருளில் இருப்பவர்களை ஒளியின் ஊற்றாகிய இயேசுவிடம் அழைத்துச் செல்லவும் அவர் துடித்தார். இவ்வாறு, பார்வை பெற்ற அந்த எளிய மனிதர், வெறும் நலம் பெற்றவராக மட்டும் நின்றுவிடாமல், கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்த நற்செய்தியாளராக உருமாறித் திரும்பி வருகிறார். ஆனால், பார்வை இருந்தும் பரிசேயர்கள் தங்கள் அகப்பார்வையை இழந்து, கண்ணிருந்தும் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர்.
பார்வை
பெற்ற மனிதர் ஒளியை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கிய அதே வேளையில், புனித பவுல் எபேசியருக்கு எழுதிய இரண்டாம் வாசகம் (எபே 5:8-14) வழியாக, “ஆண்டவரோடு இணைந்து ஒளியின் மக்களாக நடங்கள்” என்று நம்மை அழைக்கிறார். ‘ஒளியின் மக்கள்’ என்போர் இருளின் செயல்களுக்கு இடம்கொடாமல், நீதி, உண்மை இவற்றில் நிலைத்து வாழ்பவர்கள்.
இன்று
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: முதலில், இருளைக் களைந்து ஒளியைத் தழுவவேண்டும். பரிசேயர்களைப்போலச் சட்டங்கள் எனும் இருளில் சிக்கி, தங்களுக்கு முன் நின்ற மெய்யான ஒளியைக் (இயேசுவைக்) காண மறுத்தது போல, நம் அகக்கண்களை மறைத்துக்கொள்ளாமல் நம் இதயத்தில் இறைவனின் ஒளி சுடர்விட நம்மை அனுமதிப்போம். இரண்டாவது, இதயத்தால் பார்க்கும் பண்பை வளர்த்துக்கொள்வதன் வழியாக, குடும்பங்களில் நோயுற்றோரையும் முதியோரையும் ‘பயனற்றவர்கள்’ என்று
ஒதுக்கும் ‘குற்ற உணர்வில்லாக் கலாச்சாரத்தை’ ஒழித்து,
அவர்களை அன்பால் தாங்கும் இதயத்தைப் பெறுவோம்.
மூன்றாவதாக,
பார்வை பெற்ற மனிதன் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் இயேசுவை அறிவித்ததுபோல, நாமும் உள்ளொளி பெற்றவர்களாக நம் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் அன்பிற்குச் சாட்சிகளாக மாறுவோம். வாருங்கள், நம் இதயங்களை ஆண்டவரிடம் ஒப்படைப்போம். அவர் நம் இருளை அகற்றி, நம்மைத் தகுதியுள்ளவர்களாக மாற்றி, ஒளியின் மக்களாக உலகிற்கு அனுப்பி வைப்பார். இறைவனின் ஒளி நம் இதயங்களில் என்றென்றும் சுடர்விடட்டும்.
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பாலைவனப் பயணம். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஏதோ ஒரு தாகத்தோடுதான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உடல் சார்ந்த தாகத்தை ஒரு குவளைத் தண்ணீர் தீர்த்துவிடும். ஆனால், அன்பு, அமைதி, ஆற்றல் மற்றும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி அலையும் நம் உள்ளத்தின் தாகத்தை இந்த உலகப் பொருள்கள் எவற்றாலும் தீர்க்க முடியாது. நமது ஆன்மா உண்மையான அமைதிக்காகத் தாகம் கொள்கிறது.
தவக்காலத்தின்
மூன்றாம் ஞாயிறான இன்றைய இறைவார்த்தைகள், நம் வாழ்வின் வறண்ட நிலங்களில் ‘வாழ்வு தரும் தண்ணீரை’ தேடி அலையும் மனிதருக்கும், அந்தத் தண்ணீரை அள்ளித் தரும் இறைவனுக்கும் இடையிலான உறவை அழகுறக் காட்டுகின்றன. முணுமுணுப்பில் தொடங்கி, நம்பிக்கையில் முதிர்ச்சியடைந்து, இறுதியில் உண்மையான வழிபாட்டில் நிலைபெறுவதே இன்றைய வழிபாட்டின் மையச் செய்தி.
இன்றைய
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் தாகத்தால் தவிக்கிறார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்த கடவுளின் வல்லமையை அவர்கள் மறக்கிறார்கள். நன்றி மறந்து கடவுளைச் சோதிக்கும் விதமாக மோசேயைக் கடிந்துகொள்கின்றனர். தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லையே என்று முணுமுணுக்கின்றனர். சிலவேளைகளில் தங்கள் வெறுப்புணர்ச்சியைக் காட்டவும் முணுமுணுத்தனர். “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து அழைத்து வந்தாய்?” (விப 17:3) என்று அவர்கள் மோசேயிடம் சண்டையிடுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், தன்மீது இந்த மக்கள் கல்லெறிவார்களோ (17:4) என்று மோசேயே பயம்கொள்ளும் அளவிற்கு அவர்களின் நன்றி மறந்த நடவடிக்கைகள் இருந்தன என்பதைப் பார்க்கின்றோம்.
பழைய
ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் சமூகத்தில் ‘கல்லால் எறிந்து கொல்லுதல்’
என்பது மிகக் கடுமையான மற்றும் பொதுவான தண்டனையாகக் கருதப்பட்டது. இது வெறும் தண்டனை மட்டுமல்ல; தீயவர்களை அழிப்பதன் மூலம் பாவத்தைத் தங்கள் சமூகத்திலிருந்து விரட்டும் ஒரு புனிதச் செயலாகவே மக்களால் பார்க்கப்பட்டது. விபச்சாரம், தெய்வ நிந்தனை மற்றும் ஓய்வுநாளை மீறுதல் போன்ற பெரும் குற்றங்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது. திருவிவிலிய வரலாற்றில் இயேசுவின் காலத்திலும் (யோவா 8:7), திருத்தூதர் பணிகள் காலத்தில் ஸ்தேவான் போன்ற தொடக்க காலப் புனிதர்களிடமும் (திப 7:58) இத்தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம்.
இன்றைய
முதல் வாசகத்தில், மோசே, மக்கள் தன்னை நோக்கி கற்களை வீசப்போகிறார்கள் எனும் அச்சம் மரணத்தைப் பற்றியது மட்டுமல்ல; தான் கடவுளால் கைவிடப்பட்ட ஒரு ‘பாவி’ என்று மக்கள் முத்திரைக் குத்திவிடுவார்களோ என்ற தவிப்பைப் பற்றியது. இந்த இக்கட்டான நிலையில் மோசே ஆண்டவரை நோக்கிக் கதறுகிறார் (17:4). ஆண்டவர் உடனடியாகச் செயலில் இறங்குகிறார். இது மக்களின் முணுமுணுப்பிற்காக அல்ல; மாறாக, “நான் உன்னோடு இருப்பேன்”
(விப 3:12) என்று தாம் மோசேக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக! எகிப்தில் நைல் நதியை அடித்து வியத்தகு செயல்களைச் செய்த அதே தடியைக் கொண்டு செல்லுமாறு ஆண்டவர் பணிக்கிறார். அந்தத் தடி, மோசே தனிமையில் இல்லை என்பதையும், கடவுளின் வல்லமை அவரோடு இருக்கிறது என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் அடையாளமாக அமைந்தது. இறுதியில், பாறை பிளந்து தண்ணீர் புறப்படுகிறது.
பிற்காலத்தில்
புனித பவுல் இந்த நிகழ்வை மிக அழகாக விளக்குகிறார். அன்று பாலைவனத்தில் மக்களின் தாகத்தைத் தணிக்கப் பிளக்கப்பட்ட அந்தப் பாறை கிறிஸ்துவையே குறிக்கிறது (1கொரி 10:4). அவரே நம் ஆன்ம தாகத்தைத் தீர்க்கும் உண்மையான பாறை; அவரே நமக்கு வாழ்வளிக்கும் வற்றாத ஊற்று.
இஸ்ரயேல்
மக்கள் பாறையிலிருந்து தண்ணீர் பெற்ற நிகழ்விற்கும், இன்றைய நற்செய்தியில் சமாரியப் பெண் வாழ்வு தரும் தண்ணீரைப் பெறுவதற்கும் இடையேயான ஓர் ஆழமான இறையியல் தொடர்பு, பழைய ஏற்பாட்டில் மோசே பாறையை அடித்தபோது தண்ணீர் புறப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசு தம் அன்பால் அந்தப் பெண்ணின் இதயத்தைத் தொட்டபோது, அங்கே ‘நம்பிக்கை’
என்னும் ஆன்மிக ஊற்று புறப்படுகிறது.
அக்காலச்
சூழலில் நிலவிய யூத-சமாரியப் பகைமை மற்றும் பாலினத் தடைகளைத் தகர்த்து, இயேசு அந்தப் பெண்ணிடம் உரையாடத் தொடங்குகிறார். சமாரியப் பெண்ணிற்கும் இயேசுவிற்கும் இடையிலான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல், வெறும் ஒரு கிணற்றடிச் சந்திப்பு மட்டுமல்ல; அது சமூக மற்றும் ஆன்மிகச் சுவர்களைத் தகர்த்த ஒரு பெரும் புரட்சியாகும். திருவிவிலியப் பின்னணியில் இதைக் கூர்ந்து நோக்கும்போது, பல ஆழமான ‘உடைத்தல்கள்’ அங்கே
நிகழ்கின்றன. ஒரு யூத ஆடவர் பெண்ணோடு பொதுவிடத்தில் பேசுவதும், தீட்டானவர்களாகக் கருதப்பட்ட சமாரியர்களிடம் தண்ணீர் கேட்பதும் அக்காலச் சூழலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சமாரியப் பகுதிகளைப் புறக்கணித்துச் செல்லும் யூதப் பழக்கத்தையும், சமாரியர்கள் வழிபாடு குறித்துக் கொண்டிருந்த தவறான (ஐந்து கணவர்கள் - ஐந்து கடவுள்கள்) கருத்துகளையும் இயேசு தம் உரையாடலால் சுக்கு நூறாக உடைத்து, ‘ஒரே கடவுள்’ என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்குகிறார். வழிபாடு என்பது இடத்தைச் சார்ந்தது அல்ல; மாறாக, இறைத் தந்தையின் உண்மை இயல்புக்கு ஏற்ப அவரை “ஆவியோடும் உண்மையோடும்” (யோவா
4:24) வழிபடுவதே என்ற புதிய ஆன்மிகப் புரிதலை அவர் நிலைநாட்டுகிறார். இதன் மூலம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரிவினைச் சுவர்களையும், தவறான வழிபாட்டு முறைகளையும் அகற்றி, இறையாட்சியின் சமத்துவப் பாதையை அவர் திறந்து காட்டுகிறார்.
இயேசு
அச்சமாரியப் பெண்ணிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்”
(யோவா 4:8) என்று கேட்ட வேண்டுகோள், அப்பெண்ணின் இதயக் கதவைத் திறக்கும் திறவுகோலாக மாறியது. முதலில் வெறும் தாகமுள்ள சாதாரண யூதராகத் தெரிந்த இயேசு (4:9), உரையாடல் வளர வளர அவருக்கு ஒரு ‘வள்ளலாகவும்’ (4:14), பின்னர் அவரது வாழ்வின் கசப்பான உண்மைகளைச் சுட்டிக்காட்டிய போது ஓர் ‘இறைவாக்கினராகவும்’ (4:19) வெளிப்படுகிறார்.
இறுதியில், அவரே எதிர்பார்த்திருந்த ‘மெசியா’
(4:25) என்பதை அந்தப் பெண் கண்டடையும்போது, அவரது நம்பிக்கை அதன் முழுமையை எட்டுகிறது. இந்த மாற்றத்தின் உச்சக்கட்ட அடையாளமாக அவர் தன் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறார். சமூகம் தன்னை ஏளனம் செய்யும் என்று அஞ்சி, தனிமையில் தண்ணீர் எடுக்க வந்த அந்தப் பெண் (4:6), இப்போது அதே சமூகத்திடம் நற்செய்தியை அறிவிக்கும் துணிச்சல் மிக்கவராக மாறுகிறார். அப்பெண் விட்டுச் சென்ற குடம், அவரது பழைய பாவ வாழ்வு, கடந்த காலப் பயம் மற்றும் உலகப் பற்று ஆகியவற்றின் அடையாளம்.
புனித
பவுல் கூறுவதுபோல, இந்த மெய்யான நம்பிக்கையே அப்பெண்ணை ஒருபோதும் ஏமாற்றாத மீட்பிற்கு அழைத்துச் சென்றது. கிறிஸ்துவின் அன்பைப் பற்றிக்கொண்ட அந்தப் பெண்ணிற்கு, உலகத் தண்ணீர் தேவையில்லாமல் போனதுபோல, உண்மையான நம்பிக்கைப் பாதையில் நடப்பவர்களுக்கு இவ்வுலகின் தற்காலிக இன்பங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. சமாரியப் பெண் கிணற்றடியில் கண்டடைந்த அந்த ஆன்மிக முதிர்ச்சியை, பவுல் ஓர் இறையியல் சட்டகமாக விவரிக்கிறார். “நாம் நம்பிக்கையினால் கடவுளுக்கு உகந்தவர்களாகியுள்ளோம்” (உரோ
5:1). இது வெறும் சடங்கு சார்ந்த நம்பிக்கை அல்ல; இந்த நம்பிக்கை நம்முடைய தகுதியின் மேல் உருவானதும் அல்ல; நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார் (5:8). அந்தப் பெண் ஐந்து கணவர்களோடு வாழ்ந்து, பாவச் சூழலில் இருந்தபோதே இயேசு அவரைத் தேடி வந்து வாழ்வளித்தார்.
நிறைவாக,
சமாரியப் பெண்ணின் மாற்றமும், பாலைவனத்தில் பாறை பிளக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய அன்றாட வாழ்விற்குத் தேவையான சில முக்கியமான உண்மைகளைக் கற்றுத் தருகின்றன.
முதலில்
வரும்போது இஸ்ரயேல் மக்களைப் போலக் குறைகளை மட்டும் பார்க்காமல், கடந்த காலத்தில் கடவுள் செய்த நன்மைகளை நினைவு கூர்வது நம் நம்பிக்கையை வளர்க்கும். இரண்டாவதாக, சமாரியப் பெண் தன் வாழ்வின் கசப்பான உண்மைகளை இயேசுவிடம் மறைக்காமல் அறிக்கையிட்டதுபோல, நாம் நம் பலவீனங்களை ஒப்புக்கொள்ளும்போதுதான் கடவுளின் அருள் நம்முள் செயல்படும். மூன்றாவதாக, வழிபாடு என்பது சடங்கு அல்ல; அது நம் இதயத்தின் துடிப்பு. நம் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து, ஒரே இறைவனை மெய்யான நம்பிக்கையோடு வழிபடுவதே உண்மையான வழிபாடு. அந்த மெய்யான நம்பிக்கை நம் தாகத்தைத் தீர்க்கட்டும்; நம் வாழ்வைப் புதுப்பிக்கட்டும்.
தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும் மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் ஆகிய உயரிய சிந்தனைகளை அசைபோட இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடந்த ஞாயிறன்று பாலைநிலத்தில் சோதனைகளைச் சந்தித்து, உருக்குலைந்த நிலையில் நின்ற இயேசுவைச் சந்தித்த நாம், இன்று தாபோர் மலையில் மாட்சிமையுடன் உருமாறி நிற்கும் இயேசுவைச் சந்திக்கிறோம்.
பாலைநிலத்தில்
நாற்பது நாள்கள் நோன்பிருந்த இயேசுவிடம், ‘அதிகாரம் மற்றும் செல்வாக்கு’ போன்ற
குறுக்கு வழிகள் மூலம் தம்மை எளிதாக உருமாற்றிக்கொள்ள முடியும் என ஆசை காட்டிய
அலகையின் மாய வழிகளை மறுத்த இயேசு, பாடுகள் மற்றும் மரணம் என்ற இடர்ப்பாடுகள் நிறைந்த பாதையின் வழியாகவே உண்மையான மாட்சி பிறக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார் (மத் 16:25). இயேசுவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, மனந்தளர்ந்து போயிருந்த சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும், ‘சிலுவைப்பாதையே சீடத்துவத்தின் வழி’ என்பதை உறுதிப்படுத்தவும் நிகழும் மாபெரும் அடையாளமே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் இயேசுவின் தோற்ற மாற்றம்.
மாற்றம்
என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல, அது இறைவனின் விருப்பமும்கூட. மாற்றம் எப்போதும் ஒரு வலியோடுதான் தொடங்குகிறது. நமக்குப் பழகிப்போன வசதியான வாழ்வை விட்டு வெளியேறுவது கடினம் என்பதால், நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் தயங்குகிறோம். மாற்றம் என்பது தேக்கநிலையை உடைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு பயணம். இது வெறும் வெளிப்புற அலங்காரம் அல்ல; அது உட்புற உருமாற்றம். இன்றைய வாசகங்கள் நமக்கு ஒரு ‘மலைப்பயணத்தை’ முன்
வைக்கின்றன. மலை என்பது இறைவன் வாழும் இடம்; மலையுச்சி என்பது இறைவனைச் சந்திக்கும் இடம். அங்கே பழைய இயல்புகள் களைந்து, புதிய மனிதராக நாம் உருமாற அழைக்கப்படுகிறோம்.
இன்றைய
நற்செய்தியில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கொண்டாடும் நாம், முதல் வாசகத்தில் ஆபிரகாமின் வாழ்விலும் ஒரு பெரும் மாற்றத்தைக் காண்கிறோம். பொதுவாக, இளம்வயதில் மாற்றங்களைச் சந்திப்பது எளிது. ஆனால், வேரூன்றிப் போன முதுமையில் மாற்றங்களை ஏற்பது என்பது பெரும் மனப் போராட்டம். ஆபிரகாம் தன் ஊரைவிட்டுப் புறப்பட ஆண்டவர் அழைத்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. வாழ்க்கையின் அந்திமத்தில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில், பழகிய இடங்களை விட்டுவிட்டு முன்பின் தெரியாத நாட்டிற்குப் போகச் சொல்வது ஒரு மனிதருக்கு எத்தகைய தயக்கத்தை உருவாக்கியிருக்கும்? இன்றைய உலகிலும், முதிர்ந்த வயதில் புதிய சூழல்களுக்குத் தள்ளப்படும் முதியவர்களின் மனவலியை ஆபிரகாமின் இந்தத் தொடக்ககாலப் போராட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.
வாழ்க்கை
என்பது ஒரு வசதியான இடத்தில் தங்குவதல்ல; மாறாக, இறைவனுக்காகத் தொடர்ந்து நகர்வது. ஆண்டவர் ஆபிரகாமிடம் மூன்று கடினமான தியாகங்களைக் கேட்கிறார்: அ) தன் நாடு,
ஆ) தன் இனம், இ) தன் தந்தை
வீடு. நாடு ஒருவரின் பாதுகாப்பையும் பற்றையும், இனம் ஒருவரின் சுற்றத்தாரையும் உறவையும், தந்தை வீடு ஒருவரின் அடையாளத்தையும் உரிமையையும் குறிக்கின்றது. ஆபிரகாமின் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் இந்த மூன்றும்தான் ஒரு மனிதரின் முகவரி. ஒருவரின் உரிமைகளும் உறவுகளும் இதைக்கொண்டே அளவிடப்படுகின்றன. ஆபிரகாமுக்குக் கடவுள் வழங்கிய கட்டளைகள் கடினமாக இருந்தபோதிலும், அவரது ஆழமான கடவுள் அனுபவம், தெரியாத பாதையிலும் அவரைத் துணிவுடன் நடக்க வைத்தது.
ஆபிரகாம்
தனது அடையாளங்களை, முகவரியை இழந்தார்; இறைவனின் அடையாளமாக, முகவரியாக மாறினார். ஆபிரகாம் எதை இழந்தாரோ, அதைவிடப் பன்மடங்கு மேலானவற்றை ஆண்டவர் அவருக்கு வாக்களிக்கிறார். ஆபிரகாமின் கீழ்ப்படிதலால் அவர் நான்கு ஆசிகளைப் பெறுகின்றார். அவை: அ) பெரிய இனம்,
ஆ) ஆசி, இ) சிறப்புற்ற பெயர்,
ஈ) நீயே ஆசி. நாம் இறைவனுக்காக நம்மையே இழக்க முன்வரும்போது நாம் கேட்காமலேயே பன்மடங்கு பேறுபலன்களைப் பெறமுடியும் என்பதை ஆபிரகாம் நமக்கு நினைவூட்டுகின்றார். “நீயே ஆசியாக விளங்குவாய்” (தொநூ
12:2) என்பது திருவிவிலியத்திலேயே மிகவும் தனித்துவமான ஓர் அழைப்பு. ஆபிரகாம் ஆசியைப் பெறுபவர் மட்டுமல்லர், அவர் ஆசியாகவே மாறுகிறார்.
ஆபிரகாமின்
‘புறப்பாடும்’ இன்றைய
நற்செய்தியில் இயேசுவின் ‘தோற்ற மாற்றமும்’
வெவ்வேறு காலங்களில் நடந்தாலும், இவை இரண்டும் ‘இழத்தல் மற்றும் பெறுதல்’ என்ற ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. ஆபிரகாம் தன் வசதிகளைத் துறந்து, ஒரு தெரியாத நிலத்தை நோக்கிப் பயணிக்கத் துணிந்தபோதுதான் ஒரு பெரிய இனத்தின் தந்தையாக உருமாறினார். அதுபோலவே, இயேசுவும் பாடுகள் மற்றும் சிலுவை மரணம் என்ற வேதனை நிறைந்த பாதையை ஏற்கத் துணிந்தபோதுதான், தாபோர் மலையில் ஒளிமயமாக உருமாறினார். ஆபிரகாம் தன் ‘அடையாளங்களை’ இழந்தார்.
இயேசு தம் ‘உயிரையே’ இழந்தார். தன்னிலை மாறத் துணியாத எவரும், தெய்வீக ஒளியைப் பிரதிபலிக்க முடியாது. ஆபிரகாம் ஆசியாக மாறியது போல, நாமும் சிலுவையைச் சுமக்கத் துணிந்தால் மட்டுமே, மாட்சிமையின் ஒளியாக உருமாற முடியும் என்பதே இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் ஒருவரிச் செய்தி.
இன்று
ஆசி மற்றும் பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரணான உறவே கிறித்தவ வாழ்வின் மிகப்பெரிய சவால். நாம் ஆசியை விரும்புகிறோம்; ஆனால், அதை நோக்கிய கடினமான பயணத்தைத் (சிலுவையை) தவிர்க்க நினைக்கிறோம். இந்த மனப்போராட்டத்தைச் சீடர்களின் வாழ்விலும் வார்த்தையிலும் தெளிவாக அவதானிக்க முடிகிறது. இயேசு தம் சாவைப் பற்றி முதன்முறை முன்னறிவித்தபோது (மத் 16:21) சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, பேதுரு “ஆண்டவரே, இது வேண்டாம்; இப்படி உமக்கு நடக்கவே கூடாது”
(16:22) என்றார். பேதுரு இன்பமான, பாதுகாப்பான சூழலிலேயே தங்கிவிட விரும்பினார் (17:4). கீழே காத்திருக்கும் சிலுவை, பாடுகள் மற்றும் மரணத்தைச் சந்திக்க அவர் அஞ்சினார். அவர்களுக்கு மெசியா என்பவர் ‘வெற்றி வீரராக’ மட்டுமே தெரிந்தார்; ‘துன்புறும் ஊழியனாக’ தெரியவில்லை. அவர்கள் ‘மாட்சிமை’
இயேசுவை விரும்பினார்கள்; ‘உருகுலைந்த’ இயேசுவை
அல்ல.
நம்முடைய
இயல்பும் சீடர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதை உணரலாம். ஆசிகள் கிடைக்கும்போது அவ்விடத்திலேயே தங்கிவிடத் துடிக்கும் நாம், அந்த ஆசியைப் பெறுவதற்காகக் கடக்க வேண்டிய போராட்டங்களைக் கண்டு பின்வாங்குகிறோம். இழப்பு இல்லாமல் ஆசி இல்லை. ஆபிரகாம் ஆசியாக மாறியது, அவர் தன் நாடு, இனம், தந்தை வீடு என்ற தன் முழு முகவரியையும் இழந்ததினால் கிடைத்த பேறு! கைகள் காலியாக இருந்தால்தானே புதிய பரிசைப் பெறமுடியும்!
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் முன்வைக்கும் அழைப்பும் “நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்”
(திமொ 1:8) என்பதே. துன்பத்தை ஒரு சுமையாகப் பார்க்காமல், ‘கடவுளின் வல்லமை’ வெளிப்படும் களமாகப் பார்க்க நம்மை அழைக்கிறார். பவுல் குறிப்பிடுவது போல, கிறிஸ்து சாவு என்ற அதிகாரத்தை அழித்துவிட்டு, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிர்வித்தார். அந்த ஒளியைப் பிரதிபலிக்க வேண்டுமென்றால், நாம் கிறிஸ்துவின் துன்பத்திலும் பங்குகொள்ளவேண்டும். துன்பத்தில் பங்கெடுப்பது என்பது முடங்கிப்போவதல்ல; மாறாக, ஆபிரகாமைப் போலப் புறப்படுவதும், சீடர்களைப் போலப் பாதுகாப்பான கூடாரங்களை விட்டு வெளியேறுவதும், பவுலைப் போல நற்செய்திக்காகத் தியாகங்களைச் செய்வதும் ஆகும்.
இன்றைய
இந்த மலைப்பயணம் நமது வாழ்விற்கான மூன்று மாபெரும் உண்மைகளை உணர்த்துகின்றன: ஒன்று, துணிந்து புறப்படுவோம். ‘வயதாகிவிட்டது, சூழல் சரியில்லை’
என்ற சாக்குகளைத் தவிர்த்து, இறைவனின் அழைப்பு வரும்போது மாற்றத்தை நோக்கி முதலடியை எடுத்து வைப்போம். நமது இதமான சூழலை (comfort zone) விட்டு வெளியேறும்
அந்தப் புள்ளியில்தான் இறைவனின் ஆசி தொடங்குகிறது.
இரண்டாவது,
கூடாரம் அமைக்காதிருப்போம். வாழ்வின் தற்காலிக வெற்றிகளிலோ, வசதிகளிலோ திருப்தி அடைந்து அங்கேயே தங்கிவிடாமல், ஆன்மிக வாழ்வு என்பது ஓர் இடைவிடாத பயணம் என்பதை உணர்வோம். மலையுச்சியில் பெற்ற ஒளியை மக்களிடம் கொண்டு செல்ல, மீண்டும் சமவெளிக்கு இறங்கி வந்து பணியாற்றுவதே உண்மையான சீடத்துவம்.
மூன்றாவது,
துன்பத்தை ஒளியாக்குவோம். துன்பத்தைக் கண்டு அஞ்சாமல், நற்செய்திக்காக நாம் ஏற்கும் அவமானங்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்போம். சிலுவையின் நிழலில் உறுதியாக நின்றால் மட்டுமே மாட்சியின் ஒளியைக் காண முடியும். ஆபிரகாமின் மாற்றமும், இயேசுவின் மாட்சியும், பவுலின் மன உறுதியும் நம்மை
வழிநடத்தட்டும்.