நம் இதயத்தின் கடினத்தன்மையை அகற்றி, அதை அன்பினால் நிரப்பும் ஒரு வசந்த காலம் தவக்காலம். “மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள்” என்ற அழைப்பிற்கு ஏற்ப, நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகி, கடவுளை நோக்கித் திரும்புகின்ற ஒரு காலம். இது வெறுமனே சோகமான காலம் அல்ல; இது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியில் நுழைவதற்கான ஓர் அருளின் காலம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டது போல, “தவக்காலம் என்பது ஒரு தனிமையான பயணம் அல்ல; இது கடவுளோடும் பிறரோடும் நாம் மேற்கொள்ளும் ஒரு புனிதப் பயணம்.”
ஒவ்வோர்
ஆண்டும் முதல் ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள மையச்சிந்தனை ‘சோதனை.’ நம் வாழ்வில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால், அந்தச் சோதனைகளில் நாம் வீழ்ந்து போகிறோமா? அல்லது அவற்றை ஏணிகளாக மாற்றி இறைவனை நோக்கி உயர்கிறோமா? என்பதே இன்றைய நாள் நம்முன் வைக்கும் கேள்வி. ஆதாமைப்போல அலகையின் பேச்சைக் கேட்டு வீழ்ந்தவர்களாய் வாழாமல், சோதனைகளை வெற்றிகொண்ட இயேசுவிடம் கற்றுக்கொள்ளவும், மிகுதியான அருளைப் பெற்று மகிழவும் இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
சோதனை
என்பது கடவுள் நமக்கு வைக்கும் ‘தேர்வு’அல்ல; மாறாக, அது நம் சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதற்கான ஒரு களம். சோதனை என்பது விழுவதற்காக வைக்கப்பட்ட பொறி அல்ல; அது எழுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஏணி. சோதனை நம் மனக்கதவைத் தட்டுவது பாவம் அல்ல; அதற்கு நாம் இடங் கொடுத்துக் கதவைத் திறப்பதே பாவம். “சோதனை உன்னை வீழ்த்தினால் அது பாவம்; நீ சோதனையை வீழ்த்தினால்
அது பேறுபெற்ற நிலை” என்பார் புனித ஜான் மரிய வியான்னி.
சோதனை
என்பது பாவம் அல்ல; மாறாக, கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவின் ஆழத்தை அளவிடும் ஒரு கருவி (யோபு 23:10). திருவிவிலியத்தில் சோதனையை இரண்டு வேறுபட்ட பார்வைகளில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று, சோதனை கடவுளால் அனுமதிக்கப்படுவது; மற்றொன்று, அலகையால் விளைவிக்கப்படுவது. ஒருபுறம், சோதனை என்பது ஒருவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், அவரை ஆன்மிக ரீதியில் முதிர்ச்சியடையவும் செய்யும்; மறுபுறம், இது மனிதனைப் பாவத்தில் விழச் செய்யவும் கடவுளிடமிருந்து பிரிக்கவும் தூண்டும். திருவிவிலிய வரலாற்றில் சோதனைகளைச் சந்தித்தவர்கள் பலர். அவர்களில் சிலர் தோற்றனர், சிலர் வென்றனர். ஆதாம் மற்றும் ஏவாள் (தொநூ 3:6), சிம்சோன் (நீத 16:16), தாவீது அரசர் (2சாமு 11:27). இவர்கள் அனைவரும் சோதனையால் வீழ்ந்தவர்கள். யோசேப்பு (தொநூ 39:9), யோபு (யோபு 1:21), ஆபிரகாம் (தொநூ 22:12) இவர்கள் சோதனையை வென்றவர்கள்.
மனிதர்கள்
அடிப்படையில் கடவுளின் அன்பினாலும் சிந்தனையாலும் மற்றும் அவரின் சொந்தத் திட்டத்தினாலும் உருவானவர்கள். இயற்கையாக அவர்கள் நல்லவர்கள். இருப்பினும், அவர்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு, பின்னர் தங்கள் தெய்வீக நிலையை இழந்தார்கள் என்பதே படைப்பின் தொடக்கம் உணர்த்தும் பாடம்.
தொடக்க
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், படைப்பின் சிகரமான மனிதரின் தோற்றத்தையும் நம்பிக்கையின்மையால் வீழ்ந்த வீழ்ச்சியையும் பற்றிய மிக முக்கியமான சில உண்மைகளை நமக்குக் கற்பிக்கின்றன. ஆதாம் ஏன் சோதிக்கப்பட்டான்? ஏன் பாவத்தில் விழுந்தான்? அலகை நேரடியாக ஆதாமைப் பாவத்தைச் செய்யத் தூண்டவில்லை. “தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் நீங்கள் உண்ணக்கூடாது என்று கடவுள் கூறியது உண்மையா?” (தொநூ 3:1) என்ற சந்தேகத்தை முதலில் மனிதனுக்குள் விதைக்கிறது. முதல் பெற்றோரிடம், “தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது. அதைத் தொடவும் கூடாது.” (தொநூ 3:3) என்ற கடவுளின் கட்டளையை ஒரு சுமையாக உணர வைத்தது. “நீங்கள் சாகமாட்டீர்கள்... கடவுளைப் போல அறிவைப் பெறுவீர்கள்” (3:4,5) என்று
கூறி, மனிதனின் உள்ளத்தில் ‘பேராசையை’
தூண்டியது. கடவுளைப் போல மாற நினைப்பது தவறல்ல; ஆனால், கடவுளைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக மாற நினைப்பது பாவமாகிறது. முதல் பெற்றோர் கனியை உண்டவுடன், “அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன” (3:7). இது
அவர்களுக்குக் கிடைத்த ஞானம் அல்ல; மாறாக, வெட்கமும் குற்ற உணர்வும்தான். அங்கே கடவுளுடனான உறவு துண்டிக்கப்படுகிறது.
இறைவார்த்தையின்
மீது சந்தேகம் கொள்வதே பாவத்தின் தொடக்கமாகிறது. கடவுள் நமக்குச் சுதந்திரத்தைத் தந்துள்ளார். ஆனால், அந்தச் சுதந்திரத்தைக் கடவுளின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தும்போது நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். பாவம் செய்த பிறகு ஆதாமை நோக்கிக் கடவுள், “எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கும் போது, ஆதாம் தன் தவற்றை ஏற்காமல், ஏவாள் மீது பழி போட்ட அந்த ‘பொறுப்புத் துறப்பு’ இன்றுவரை மனிதகுலத்தைவிட்டு நீங்கவில்லை. புனித அகுஸ்தினார் இவ்வாறு குறிப்பிடுவார்: “தவறு செய்வது மனித இயல்பு; ஆனால், செய்த தவறிலேயே நிலைத்திருப்பது அலகையின் இயல்பு.”
ஆதாம்
எனும் ‘ஒரு மனிதனின்’
கீழ்ப்படியாமையால்
பாவம் உலகிற்குள் நுழைந்தது. பாவத்தின் விளைவாகச் சாவு வந்தது (உரோ 5:12). ஆதாம், ஏதேன் தோட்டத்தில் சோதிக்கப்பட்டுத் தோற்றுப் போனான். ஆனால், ஆதாம் தோற்ற இடத்தில் அதாவது, ‘ஒரு மனிதனின்’
கீழ்ப்படிதலால்
அருள் உலகிற்குள் பெருகியது. அருளின் விளைவாக வாழ்வு வந்தது. பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம், நாமும் சோதனைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவர் நமக்குத் தந்துள்ளார்.
இயேசு
எவ்வாறு அலகையை வென்றார்? அவர் அலகை எதிர்கொண்டது, உடல் உறுதியினால் அல்ல; மாறாக, இறைவார்த்தையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையினால். முதல் சோதனையில் தமது பசியைப் போக்க இறைமகன் என்ற தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு புதுமை செய்ய இயேசு இசையவில்லை. தாம் யூத மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெறுமனே ஒரு புதுமை செய்யும் மெசியா அல்லர் என்றும், மக்கள் வாழ்விற்கு மிகவும் தேவையான இறைவார்த்தையை அளிக்க வந்தவர் என்றும் இயேசு உறுதியுடன் கூறி முதல் சோதனையை வெல்கிறார்.
தாம்
கடவுள் மகன் என்பதை இயேசு ஒரு வீரதீரச் செயலின் மூலம் காட்டவேண்டும் என்பது இரண்டாவது சோதனை. அதாவது, இயேசு மக்கள் சார்ந்த கடினமான மீட்புப் பணியை ஒதுக்கிவிட்டு, ஒரு குறுக்குப் பாதை வழியாகத் தமது பணியை முடித்துக் கொள்ளவேண்டுமாம்! இறைவார்த்தையின் வழி இச்சோதனையையும் இயேசு வெல்கிறார்.
மூன்றாவது
சோதனையில், இயேசு தமது இறையாட்சிப் பணிக்குரிய அன்பு, நீதி, சமத்துவம், இரக்கம் போன்ற மதிப்பீடுகளை விட்டுவிட்டு, உலக ஆட்சிக்குரிய பகட்டும் பொருளும் பதவியும் நாட வேண்டும் என்று சாத்தான் முயற்சி செய்கிறது. இச்சோதனைக்கு உட்படுதல் என்பது கடவுளுக்கு ஊழியம் செய்யாமல் உலக சக்திகளுக்கு ஊழியம் செய்வதாகும் என்ற இறைவார்த்தையை மேற்கோள்காட்டிச் சாத்தானை விரட்டுகிறார் இயேசு. உலக மாயைகளுக்கு அடிபணியும் சோதனைகளை வென்ற இயேசுவுக்கு வானதூதர்களே பணிவிடை புரியும் உயர்நிலை ஏற்படுகிறது (மத் 4:11). சோதனைகளை வென்ற இயேசு உறுதியான உள்ளத்துடன் தமது பணி வாழ்வைத் தொடங்குகிறார்.
இயேசு
எதிர்கொண்ட மூன்று சோதனைகளும் சாமானிய மனிதரின் வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் சோதனைகளே. ஆனால், அவற்றை எப்படி முறியடிப்பது என்பதற்கான “வெற்றிப் பாதையை” இயேசு நமக்குத் தம் பாலைநிலப் பயணத்தின் வழியாகக் காட்டியுள்ளார். முதலில், இறைவார்த்தையை நம் வாழ்வின் ஆயுதமாக்கவேண்டும் (எபி 4:12). இரண்டாவது, நாம் அலகையின் அடிமைகள் அல்ல; மாறாக, கடவுளின் பிள்ளைகள் எனும் அடையாளத்தில் உறுதியாக நிற்கவேண்டும் (கலா 4:7). மூன்றாவது, “சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டும்”
(மத் 26:41).
எனவே,
நம் வாழ்வின் பாலைநிலங்களில் சோதனைகள் வரும்போது, நாம் தனிமையில் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். ஆதாமைப் போலத் தோற்றுப்போக நாம் அழைக்கப்படவில்லை. மாறாக, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் வழியாக வெற்றியைச் சுவைக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, இந்தத் தவக்காலத்தில் இறைவார்த்தை என்ற வாளை ஏந்துவோம்; செபம் என்ற கேடயத்தைப் பிடிப்போம்; அருள்வாழ்வு என்ற பாதையில் உறுதியுடன் நடப்போம். ஆதாமோடு வீழ்ந்தது போதும், ஆண்டவரோடு எழுவோம்! சோதனைகளை வெல்வோம்!
கடவுள் மனிதரைப் படைத்தபோது, அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆனால், அந்தச் சுதந்திரம் என்பது நாம் விரும்புவதை எல்லாம் செய்வதல்ல; மாறாக, எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பது. இதயம் என்பது வெறும் உணர்ச்சிகளின் இருப்பிடம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தீர்மானங்கள் பிறக்கும் இடம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் முதலில் நம் இதயத்தில் ஓர் எண்ணமாகவோ அல்லது ஒரு தீர்மானமாகவோதான் பிறக்கிறது. நம் இதயத்தைத் தூய்மைப்படுத்தும்போது, நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு முடிவும் கடவுளுக்கு உகந்த ‘தெய்வீகத் தேர்வாக’ மாறும்.
இன்று
நாம் ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு உகந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டுமென அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில், ‘உனக்கு முன் வாழ்வும் சாவும்’
- அதாவது, ‘நன்மையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளன’ என்கிறார்
சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஒவ்வொருவருக்கும் நல்லது - கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை - அதாவது விருப்புரிமை அருளப்பட்டுள்ளது. இதனால் ஆசிருக்கும் அழிவிற்கும் அவரவர்தான் பொறுப்பு என்று சீராக் நூல் விளக்குகிறது.
கடவுளின்
கட்டளையைக் கடைப்பிடிப்பது அல்லது விட்டுவிடுவது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது அல்லது அவரவரின் தெரிவைப் பொறுத்தது. கடவுள் அடிமையான நேர்மையாளர்களை அல்ல; சுதந்திரமான நேர்மையாளர்களையே விரும்புகிறார். “மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுளளன; உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்” (சீஞா
15:15,16) என்னும் இந்த வரி இணைச் சட்ட நூலில் மோசே வாழ்வையும் சாவையும் தெரிவுகளாக முன்வைப்பதை நினைவூட்டுகிறது (இச 30:19-20).
சீராக்
குறிப்பிடும் நீரும் நெருப்பும் மிக முக்கியமான உருவகங்கள். ஒன்று, இதமான தன்மையையும்; மற்றொன்று, வெம்மையான தன்மையையும் காட்டுகின்றன. சீராக் இதனை இரண்டு எதிர்கருத்துப் பதங்களாக ஒப்பிடுகிறார். நீர் பாதுகாப்பான உருவகமாகவும் அல்லது ஆசிருக்கான உருவகமாகவும், நெருப்பு பாதுகாப்பற்ற உருவகமாகவும் அல்லது தண்டனைக்கான உருவகமாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. நீரா? நெருப்பா? எதைக் கைநீட்டி எடுப்பது? வாழ்வா? சாவா? எதை விரும்புவது? என்ற கேள்விகளை முன்வைக்கிறார் சீராக். எவரும் சாவை விரும்புவதில்லை. வாழ்வையே அனைவரும் விரும்புகின்றோம். இங்கு சீராக் கூறும் வாழ்வு எப்படிப்பட்டது? வெறுமனே மூச்சுவிடுவதும், இதயம் துடிப்பதும் அல்லது உடல் சார்ந்த செயல்கள் வாழ்வு என்றாகி விடுமா? இவை வெறும் உடல் இயக்கம் மட்டுமே. வாழ்வு என்பது தெரிவுகள் சார்ந்தது. இறைவன்
மீது பற்றுக்கொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக்
12:15) என்பது இயேசுவின் படிப்பினை. இங்கே இறைவாக்கினர் சீராக், வாழ்வையும் சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா? என்ற கேள்வியை நம்மில் எழுப்புகிறார். வாழ்விற்கும் சாவிற்கும் பொறுப்பாளிகள் மனிதர்களே என்பது இங்கே புலப்படுகிறது. வாழ்வையும் சாவையும் மனிதரின் விருப்பம் இல்லாமல் கடவுளே தீர்மானிக்கிறார் என்ற கூற்று தவறானது.
யூத
மக்கள் இறைவனின் வழி வாழ்வது என்பதை இறைச் சட்டங்களின்படி, அதாவது மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் மட்டுமே நினைத்துப் பார்த்தனர். இஸ்ரயேல் மதத்தலைவர்கள் சட்டத்தை ஒரு ‘கணக்குப் புத்தகமாக’
மாற்றியிருந்தார்கள்.
‘இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் புண்ணியம்’
என்ற சுயநலக் கணக்குகளே அவர்களிடம் மேலோங்கியிருந்தன. சட்டத்தின் நோக்கம் ‘மனிதனைப் புனிதப்படுத்துவது’ என்பதை
மறந்து, சட்டத்தை வைத்து ‘மனிதனை ஒடுக்குவது’ என்பதில்
அவர்கள் குறியாக இருந்தனர். சட்டத்தைப் பின்பற்றுவது என்பது ஏதோ ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு, ‘நான் நேர்மையானவன்’ என்று
தம்பட்டம் அடிப்பதல்ல; அது இதயத்திலிருந்து வரும் அர்ப்பணிப்பு. “சட்டம் என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். அன்பு இல்லாத சட்டம் வெறும் அடிமைத்தனம்” என்றார்
புனித இரண்டாம் ஜான்பால். இதைத்தான் இயேசு தம் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தம் வாழ்நாள் முழுவதும் தெளிவுபடுத்தினார்.
இன்றைய
நற்செய்தியில் இயேசு, “உங்கள் முற்காலத்தவருக்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” (மத்
5:21,27,33) என்று சட்டத்தைத் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு நம்மை அழைக்கிறார். “கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய்யாணை இடாதே” போன்ற வெளிப்படையான சட்டங்களைக் கடந்து, இதயம் எனும் ஆழமான பகுதிக்குச் செல்கிறார். அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயக் குணங்களைக் கொண்டிருந்தால்தான் சட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற புதிய வழியில் சிந்திக்க இயேசு அழைக்கிறார். சட்டங்களை வெறும் சடங்காக நிறைவேற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள முதன்மையைக் கண்டுபிடித்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
பழைய
சட்டத்தின்படி ‘கொலை’ என்பது ஒரு குற்றவியல் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இயேசுவின் பார்வையில், ஒருவனை மனதால் வெறுப்பதும், சினம் கொள்வதும், ‘அறிவிலியே’
எனத் திட்டுவதும் கூட ஒருவகை கொலைதான். காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற வரலாற்றின் முதல் கொலைக்குக் காரணம் சினம், வெறுப்பு, பகையே. மனித உறவுகளை முறித்துப் பகைமையை உருவாக்கும் வன்சொற்களும்கூட குற்றங்களே. ஆகவே, உறவுகளில் விரிசல் விழும்போது இருண்ட இதயத்தோடு இறைவனை வழிபட முடியாது. முதலில், வாழ்க்கையில் நல்ல மனித உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பிறகுதான் கடவுளுடன் நாம் சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் இயேசு.
இரண்டாவதாக,
இயேசு, விபச்சாரம் செய்வது மட்டும் குற்றமன்று; இத்தகைய பாவச்செயலுக்குத் தூண்டும் இச்சைகளை அகற்றுவதிலும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்கிறார். விபச்சாரம் என்பது உடலில் நடக்கும் ஒரு செயல் மட்டுமல்ல; அது பார்வையில் தொடங்கும் ஒரு கறை. பார்வை தெளிவாக இருந்தால் ஒழிய, உள்ளம் தூய்மை அடையாது. பெண்களை மதிப்பதும் மனைவியைச் சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல் நடத்துவதும் ஒவ்வோர் ஆண்மகனும் கற்றுக்கொள்ளவேண்டும்.
மூன்றாவதாக,
‘பொய்யாணை இடாதே’ என்ற சட்டத்தைத் திருத்தி, ‘ஆணையிடவே வேண்டாம்’
என்று இயேசு அறிவுறுத்துகிறார். ஏனெனில், கடவுளின் பெயரையோ, விண்ணையோ, மண்ணையோ சாட்சியாக இழுப்பது ஒருவிதமான ‘ஆன்மிக மிரட்டல்.’ அது நாம் கடவுளுக்கு ஏற்படுத்தும் இழுக்கு. அது மட்டுமன்று, மனித உறவுகளுக்கும் ஏற்படுத்தும் இழுக்குதான். ஏன் மக்கள் ஆணையிடுகின்றனர்? தங்கள் பேச்சின் மீது நம்பிக்கை இல்லாததால் தான். எவரொருவர் உண்மையாக வாழ்கிறாரோ அவருக்குச் சத்தியம் என்ற கூடுதல் பாதுகாப்புத் தேவைப்படாது. அவரது வார்த்தையே ஒரு புனிதமான சட்டமாக மாறும்.
எனவே,
இயேசு இன்று நம்மிடம் எதிர்பார்ப்பது, மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் விட மேலான ஒரு நெறியைத்தான். நம் கோபம், நம் பார்வையில் உள்ள அசுத்தம், நம் பேச்சில் உள்ள வன்முறை என அனைத்தையும் சீர்தூக்கிப்
பார்க்கச் சொல்கிறார். “பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வரும்போது, உன் சகோதரர் மீது உனக்கு மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், அங்கேயே காணிக்கையை வைத்துவிட்டு முதலில் போய் அவரோடு ஒப்புரவாகு” என்று
இயேசு கட்டளையிடுகிறார். இயேசு தரும் இடுக்கண் வழி அவர் போதிக்கும் இறைஞானமே. இது அன்பிற்கும் மன்னிப்பிற்கும் ஒன்றிப்பிற்கும் ஆதரவானது. ஆகவே, மனிதர் தெரிவு செய்ய வேண்டியது உலக ஞானத்தை அல்ல; மாறாக, இறைஞானத்தையே. இந்த இறைஞானம் வேறொன்றுமில்லை, அது சிலுவையின் ஞானமே என்கிறார் பவுல். எனவே, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இறைவனின் ஞானத்தினால் வழிநடத்தப்படட்டும்.
நிறைவாக,
இறைவனின் சட்டங்கள் நம்மை ஒடுக்குவதற்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இன்று நாம் உணர்வோம். அன்பினால் தூண்டப்பட்டு நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துவோம். நம் உறவுகள், பார்வைகள் மற்றும் பேச்சுகள் அனைத்திலும் சட்டத்தின் ஆன்மாவான அன்பைப் பொதித்து வைப்போம். நம் வாழ்வின் ஒவ்வொரு தேர்வையும் அன்பின் அடிப்படையில் எடுப்போம். அவ்வாறு தெளிந்த இதயத்தோடு நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்மை மண்ணுலக மனிதர்களிலிருந்து விண்ணுலகின் தெய்வீகப் பிள்ளைகளாக மாற்றும் பேரொளியாக அமையட்டும்.
சுவை இல்லாத உணவு குப்பையிலே... ஒளி இல்லாத வீடு இருளிலே...! ஒரு சிறு துளி உப்பு ஒரு பானை உணவின் சுவையையே மாற்றுகிறது. ஒரு சின்னஞ்சிறு மெழுகுவர்த்தி ஒரு பெரிய அறையின் இருளையே விரட்டுகிறது. இவை இரண்டிற்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. இவை இரண்டும் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளவேண்டும். உப்பு உணவோடு கரைந்து தன்னை இழக்கவேண்டும்; மெழுகுவர்த்தி நெருப்போடு உருகித் தன்னைத் தேய்த்துக்கொள்ளவேண்டும். தன் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் உப்பு குப்பையில் எறியப்படும்; எரியாத மெழுகுவர்த்தி இருளில் புதைக்கப்படும்.
ஆண்டின்
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” (மத்
5:13-14) என்ற உருவகங்கள் வழியே ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை அவர் நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
இயேசு
மலைப்பொழிவின் வழியாக நமக்கு வழங்கும் இந்த அழைப்பு, வெறும் அறிவுரை அல்ல; அது ஒரு சீடத்துவத்தின் அடையாளம். இயேசுவின் வார்த்தைகளைக் கூர்மைப்படுத்தி நோக்கும்போது, அவர் உப்பாக, ஒளியாக இருக்க முயலுங்கள் என்றோ அல்லது உப்பைப்போல, ஒளியைப்போல இருக்கிறீர்கள் என்றோ கூறவில்லை. அவர், உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள் என்கிறார். அதாவது, ஒரு கிறித்தவர் இயல்பிலேயே இந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார் என்கிறார் இயேசு.
உப்பின்
தன்மையை திருவிவிலியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உப்பு மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்பட்டது. இது வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, உணவுகளைப் பதப்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த உப்பு பயன்படுத்தப்பட்டது. எலிசா இறைவாக்கினர் உப்பைக்கொண்டே உதவாத நீரை நல்ல நீராக்கினார் (2அர 2:19-22). உப்பு ஒரு மாறாத உடன்படிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது (எண் 18:19). “நீ செலுத்தும் மாவுப்பலி
ஒவ்வொன்றிலும் உப்பு சேர்க்கவேண்டும்” (லேவி 2:13). அதாவது, உப்புக் கலந்து உண்ணுவது பிரிக்க முடியாத நட்பையும் முடிவுறா உறவையும் குறித்தது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’
(வாழ்நாள் முழுவதும்) என்னும் வழக்காட்டுப் பழமொழி நம் வாழ்விற்குச் சுவை சேர்த்த இறைவனையும், நமக்கு உதவிய மனிதர்களையும் நன்றியோடு நினைக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் உப்பை அழகான உருவகமாகவே காட்டும் இயேசு, தம் சீடர்களை ‘உலகின் உப்பாக இருக்கிறீர்கள்’ (மாற்கு
9,50: லூக்கா 14,34) என்கிறார். தூய பவுல் கிறித்தவர்களின் பேச்சு எப்போதும் கனிவாகவும் உப்புச் சேர்த்தது போலச் சுவையாகவும் இருக்கக் கேட்கிறார் (கொலோ 4:6).
ஒளி
என்பது திருவிவிலியத்தில் இறைவனின் முன்னிலையையும் உண்மையையும் குறிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. திருவிவிலியம் ஒளியை உயிரின் அடையாளமாகக் காட்டுகிறது (யோபு 3:16; திபா 49:19). ஒளியில் நடத்தல் மற்றும் ஒளியில் வாழ்தல் போன்றவை நேர்மையான வாழ்வையும், கடவுளுடனான வாழ்வையும் குறிக்கின்றன. ஒளி வளமையையும், அத்தோடு மகிழ்ச்சியான வாழ்வையும் குறித்தது (எஸ் 8:16). திருப்பாடல் ஆசிரியர் ஒளியைப் பல இறையியல் விழுமியங்களுக்கு
ஒப்பிடுகிறார். ‘இறைவார்த்தையே விளக்கு’
(திபா 119:105); ‘ஆண்டவரே ஒளி’
(திபா 27:1). முதல் ஏற்பாட்டில் ஒளி கடவுளின் இறைமகிமையையும் மாட்சியையும் காட்டவும் அடையாளப்படுத்தப்பட்டது. முதல் ஏற்பாட்டைப் போலவே இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி பல அடையாளங்களைத் தாங்கி
நிற்கிறது. இயேசு தம்முடைய சீடர்களை ஒளியின் மக்களாக இருக்கிறீர்கள் என்கிறார். “நானே உலகிற்கு ஒளி; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்” (யோவா
8:12) எனக் கூறி சாட்சிய வாழ்வுக்கு அழைக்கிறார். பவுலும், “ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள்” (எபே
5:8) எனக் கூறுகிறார்.
சமூகத்தில்
உப்பாகவும் ஒளியாகவும் இருப்பவர்களின் சாட்சிய வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகம் நமக்கு நயம்பட எடுத்துரைக்கிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா நான்கு மிக முக்கியமான மனிதநேயச் செயல்களைப் பட்டியலிடுகிறார். அவை: 1. பசித்தோருக்கு உணவைப் பகிர்தல், 2. தங்க இடமில்லாத வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல், 3. உடையற்றோருக்கு உடையளித்தல், 4. இனத்தாருக்கு உதவிசெய்தல் (எசா 58:7). கடவுளுடைய பார்வையில் இவை ஏன் முக்கியத் வம் பெறுகின்றன?
முதலில்,
உண்ணாநோன்பு என்பது ஓர் ஆன்மிகப் புதுப்பித்தலுக்கான ஒரு நிகழ்வு. இச்செயல் சாதாரண இறைவேண்டலுக்கு வலுசேர்க்கும் ஒன்றாகவே இஸ்ரயேல் மக்கள் பார்த்தனர் (2சாமு 12:22; எஸ் 8:23; யோவே 2:12; லூக் 2:37). ஆனால், கடவுளின் பார்வையில் உண்ணாநோன்பு என்பது தவிர்க்கப்படும் உணவைப் பசிப்போருக்குக் கொடுப்பதில் நிறைவுபெறுகிறது. இரண்டாவது, தங்க இடமில்லாத வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல் என்பது சகோதரத்துவத்தைப் பேணுகின்ற ஒரு முக்கியச் செயல். யூதா நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாபிலோனிய இடப்பெயர்விற்குப் பிறகு (யூதாவின் 70 ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு) வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆகினர். பணக்காரர்கள் தங்கள் நிலங்களைப் பெரிதாக்கிய அதேவேளை, ஏழைகள் வீடு நிலமற்றவர்களாயினர். இப்பின்னணியில், வீடற்றவர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்தல் ஒரு புண்ணியமாகப் பார்க்கப்பட்டது. அதுமட்டுமன்றி, இச்செயலைச் செய்வதன் வழியாக அவர்கள் வீடற்றவர்களுக்கும் தந்தையாக இருக்கும் கடவுளின் உண்மையான மக்களாகின்றனர்.
மூன்றாவது,
உடை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது ஆளையும் குறித்துக் காட்டுகிறது. ஆகவேதான் நம் முன்னவர்கள் ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்றனர். உடையற்று இருப்பவர் அனைத்தையும் இழந்தவராகிறார். அவர் அடிமை என்றே கருதப்படுவார். உடையைக்கொண்டே ஒருவரின் நிலைமை கணிக்கப்படுகின்றது. இங்ஙனம், உடையற்றவருக்கு உடையளிப்பது, அவருக்கு மனிதத்தைக் கொடுப்பது போன்றதாகிறது. நான்காவது, இனத்தாருக்கு உதவிசெய்ய மறுப்பது என்பது தன் அடையாளத்தையே மறைத்தலும் சகோதர வெறுப்பைக் காட்டலும் ஆகும். எனவேதான் ‘உன் இனம்’ என்பது எபிரேயப் பாடத்தில் ‘உன் சதை’ என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, உதவி செய்யாதிருப்பது ஒரு பாவம் என்றாகிறது. மேற்குறிப்பிட்ட மனித நேயச் செயல்களைச் செய்பவர்கள் என்னென்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்?
கடவுளின்
பிரசன்னத்தைக் காட்டும் மிக முக்கியமான அடையாளமான ஒளிபோல அவர்கள் இந்தச் சமூகத்தில் துலங்குவர்; அவர்களுக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். நேர்மை ஒரு வானதூதர் போல், நல்லவர்களின் முன்னால் சென்று காக்கும். அதாவது, ஒருவருக்கு முன் நேர்மை செல்லும்போது அவர் தீமை மற்றும் ஆபத்துகளைத் தவிர்ப்பார். ஆண்டவருடைய வல்லமை அவர்களுக்குப் பின்னால் காவல்தூதர் போல் செல்லும் என்கிறார் இறைவாக்கினர் எசாயா. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலும், சமூகத்தில் உப்பாக, ஒளியாக இருப்பது என்பது, மனித அறிவினாலோ, வல்லமையினாலோ அல்ல; மாறாக, ‘சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியால்’ என்கிறார்.
எவரொருவர் தன்னுடைய கற்றல் மற்றும் உலக மெய்யறிவுகள் அனைத்தையும் ‘குப்பையாக’
கருதுகிறாரோ, அவரிடத்தில்தான் ஞானத்தின் உறைவிடமாகிய தூய ஆவியார் குடிகொள்கிறார் என்கிறார்.
நிறைவாக,
இன்று நாம் வாழும் உலகம் இரண்டு பெரும் சவால்களைச் சந்திக்கிறது: 1. சுவையற்ற வாழ்வு, 2. இருள் சூழ்ந்த உலகு. இன்று மனித நேயம் மறைந்து, சுயநலமே மேலோங்கி நிற்கிறது. அநீதி, சாதி-மத வன்முறை, வெறுப்பு
இச்சமூகத்தை இருளாக்குகின்றன. இத்தகைய சூழலில் நாம் எப்படி உப்பாகவும் ஒளியாகவும் மாறுவது? அ) கிறித்தவர்கள் கோவிலுக்குள்
மட்டும் இருப்பவர்கள் அல்லர்; எசாயா கூறுவதுபோல, வீடற்றவரைத் தேடிச்சென்று அணைப்பதிலும், பசித்திருப்பவனுக்கு உணவிடுவதிலும்தான் நம் நம்பிக்கை சுவை பெறுகிறது. ஆ) பவுல் சிலுவையில்
அறையப்பட்ட கிறிஸ்துவையே தன் ஒளியாகக் கொண்டதுபோல, நம்முடைய துன்பங்களையும் தியாகங்களையும் மற்றவர்களுக்காகப் பலியாக்கும்போது நாமும் ஒளியாகிறோம். இ) “மலையின் மேல் இருக்கும் நகரை மறைக்க முடியாது.” நம்முடைய கத்தோலிக்க வாழ்வு ஒரு சாட்சிய வாழ்வாக இருக்கவேண்டும். நாம் செய்யும் நற் செயல்கள் நம்மைப் பெருமைப்படுத்த அல்ல; மாறாக, கடவுளைப் புகழவேண்டும்.
காயப்பட்டிருக்கும்
உலகை நலம்பெறச் செய்யும் உப்பாய் மாறுவோம்... வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு ஒளியாய் மிளிர்வோம்... கிறிஸ்துவின் சாட்சிகளாய் உலகை மாற்றுவோம்.
பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வின் இடைவிடாத தேடல் - மகிழ்ச்சி! கல்வி, வேலை, பணம், செல்வம், உறவு, மதிப்பு, அதிகாரம் என இவையனைத்தும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே. அதனால்தான், “மகிழ்ச்சி மனிதனின் ஏக்கத்துடனான முக்கியமான எதிர்பார்ப்பு” என்கிறார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். ஆனால், இன்று நாம் செய்யும் செயல்கள் எப்போதும் உண்மையான, நீடித்த மகிழ்ச்சியைக் கொணர்வதில்லை. வசதி வாய்ப்புகள், செல்வச் செழிப்புகள், தொழில் வளர்ச்சிகள் என எல்லாம் இருந்தும் ‘மகிழ்ச்சி இல்லையே’, ‘மனநிம்மதி இல்லையே’ என்று புலம்புபவர்கள் நம் மத்தியில் ஏராளம். ஏன்? ஏனெனில், உலகம் இன்று நமக்கு வழங்கும் ‘மகிழ்ச்சி’ என்பது ஒரு மாயை. அது வசதியிலும் புகழிலும் வெற்றியிலும் இருப்பதாகப் போதிக்கிறது; மகிழ்ச்சியைத் தவறான இடத்தில் தேடச் சொல்லுகிறது.
பொதுக்காலத்தின்
நான்காம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தை நம்மை மகிழ்ச்சியின் உண்மையான வேர்களுக்கு அழைத்துச் செல்கிறது. இன்று இறைவன் ஒரு ‘புரட்சிகரமான மகிழ்ச்சியை’ நமக்கு
அறிமுகப்படுத்துகிறார்.
நற்செய்தியாளர்
மத்தேயு இயேசுவின் போதனையை ஐந்து உரைகளாகத் தொகுத்துள்ளார். இதில் புகழ்வாய்ந்தது மலைப்பொழிவு என்று குறிப்பிடப்படும் முதல் உரையாகும். இது அதிகாரங்கள் 5 முதல் 7 வரை அமைந்துள்ள ஒரு மிக நீண்ட உரை. இந்த மலைப்பொழிவைக் கிறித்தவ வாழ்வின் ‘விண்ணக அரசமைப்புச் சட்டம்’ என்று அழைக்கலாம். மலைப்பொழிவு 1) பேறுகளும் அதைத் தொடர்ந்து சில அறிவுரைகளும் (5:3-20); 2) பழைய ஏற்பாட்டுச் சட்டத்திற்கு மாற்றாக இயேசு அளிக்கும் மனிதநேயப் போதனைகள் (5:21-48); 3) யூத அறச் செயல்களுக்குத் தேவையான உள்ளார்ந்த தன்மை (6:1-18); 4) புதிய சமுதாயம் உருவாக இயேசு தரும் சில விதிமுறைகள் என நான்கு பகுதிகளைக்
கொண்டுள்ளது.
இன்றைய
நற்செய்தியில், இயேசு ஒரு மலையின்மீது அமர்ந்து சீடர்களுக்கும் திரளான மக்களுக்கும் போதித்த மலைப்பொழிவின் முதல் பகுதியை வாசிக்கிறோம். மகிழ்ச்சிக்கான உலகளாவிய இலக்கணத்தை அவர் இந்த மலைப்பொழிவிலே தருகிறார். ‘பேறுபெற்றோர்’ (Blessed) என்பது உண்மையான
மற்றும் முழுமையான மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். ‘பேறுபெற்ற நிலை’
(Beatitude) என்பதற்கான
கிரேக்க மூலச்சொல்லான ‘மக்காரியோஸ்’ (Makarios) என்பதற்கு ‘மகிழ்ச்சி’ என்பது
பொருள். இயேசு வழங்கிய எட்டுப் பேறுகளையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
‘ஏழையரின் உள்ளத்தோர்’ என்போர்
‘இறைவனே எங்கள் கதி, எங்களுக்கு அவரே எல்லாம்’ என்று கடவுளை மட்டுமே சார்ந்து வாழ்பவர்கள். இவர்கள் விண்ணக அமைதியை, மகிழ்ச்சியை மண்ணகத்திலே முன் சுவைப்பர். ‘துயருறுவோர்’ என்போர்
துன்புறுவோர் மற்றும் துன்புறுத்தப்படுவோர். அதாவது, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் எதிராகச் செய்த பாவங்களை எண்ணித் துயருறுவோர்; அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் சுயநலம் கொண்டவர்களால் துன்புறுத்தப்படுவோர். இவர்கள் ஆறுதல் பெறுவர். ஏனெனில், துன்புறுகிறவர்களுக்குக் கடவுள்தாம் ஆறுதல். ‘ஆறுதல்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘கடவுள் உன் பக்கத்தில் இருப்பார்’
என்பதும் பொருள். ‘கனிவுடையோர்’ என்போர்
வன்முறையற்ற, மென்மையான இதயம் கொண்டவர்கள். கனிவு என்பது இயேசுவைக் குறிக்கும் சொல்லாடல். “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்”
(மத் 11:29). ‘கனிவு’ என்ற சொல்லுக்கு இயேசுவின் வாழ்க்கையே இலக்கணம். கனிவை கிரேக்கத் திருவிவிலியம் தாழ்ச்சியுடையவர்கள் அல்லது இனிமையானவர்கள் என்று காட்டுகிறது. இவர்கள்தான் உலகை வெல்வார்கள். ‘நீதியின்மேல் பசி தாகம் கொண்டோர்’
இறைவனின் திருவுளம் நிறைவேற ஏங்குபவர்கள். நீதியை நிலைநாட்டுவதுதான் கடவுளுடைய பணி; அதில் பங்கெடுப்பவர்கள் பேறு பெற்றவர்கள் ஆகின்றனர்.
‘இரக்கமுடையோர்’ என்போர்
பிறரை மன்னித்து அன்பு காட்டுபவர்கள். அவர்களுக்கே இறைவனின் மன்னிப்பு கிட்டும். ‘தூய்மையான உள்ளத்தோர்’ என்ற
வரியில், மகிழ்ச்சி என்பது நாம் அணிந்திருக்கும் உடைகளிலோ அல்லது பதவிகளிலோ இல்லை; மாறாக, கள்ளமில்லாத நேர்மையான நமது உள்ளத்தில்தான் இருக்கிறது. அங்கே இறைவன் குடிகொண்டிருக்கிறார். வாழ்க்கையில் சண்டைகளைத் தவிர்த்து, அமைதியை விதைப்பவர்களே இறைவனின் பிள்ளைகள் என்ற ஓர் ஆழமான இறையியலை இயேசு காட்டுகிறார். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் என்போர் உண்மைக்காகவும் இறைவனுக்காகவும் சோதனைகளை ஏற்பவர்கள். அவர்கள் விண்ணகத்தையே உரிமையாக்குகின்றனர். இந்த எட்டுப் பேறுகளும் உலகப் போக்கிற்கு மாறானவை என்றாலும், ஒரு மனிதனைத் தூயவனாகவும் மகிழ்ச்சியானவனாகவும் மாற்றும் வல்லமை கொண்டவை என்பதை இயேசு கற்றுத்தருகிறார்.
ஆண்டவர்
இயேசு மகிழ்ச்சிக்கான எட்டு பேறுகளை வரிசைப்படுத்திக் கூறும் வேளையில், இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் செப்பனியா ஆண்டவரைத் தேடுவதும் நேர்மையை நாடுவதும் மனத்தாழ்மையோடு தேடுவதும் மகிழ்ச்சியை அடைவதற்கான வாய்க்கால் என அறிவுறுத்துகிறார். இதில் செப்பனியா
‘எளியோர்’ (2:3) மற்றும்
‘எஞ்சியோர்’ (3:13) தாழ்மையுள்ள
இதயத்தோடு ஆண்டவர் பெயரில் நம்பிக்கை வைப்போரைக் குறிக்கிறார். இறுதி நாளில் ஆண்டவரிடம் இவர்களுக்குப் புகலிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வழங்குகிறார். நாம் நம்மையே நம்பியிருப்பதை விடுத்து, இறைவனை நம்பத் தொடங்கும்போது உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் பிறக்கிறது என நம்பலாம் அன்றோ!
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில், கிறித்தவர்கள் கடவுளின் ஞானமாகிய இயேசுவைத் தங்கள் மேல்வரிச் சட்டமாகக் கொள்ள வேண்டும் எனவும் சிலுவையின் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவர், உலகம் யாரை ‘முட்டாள்கள்’ என்று
கருதுகிறதோ, அவர்களைத் தேடி இறைவன் வருகிறார். உலகம் யாரை ‘பலவீனமானவர்கள்’ என்று
ஒதுக்குகிறதோ, அவர்களைக் கொண்டு வலிமையானவற்றை வெட்கப்பட வைக்கிறார். இங்கே மகிழ்ச்சி என்பது நமது தகுதியினால் வருவதல்ல; மாறாக, இறைவனால் நாம் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உணர்வினால் வருகிறது. “பெருமை பாராட்டுபவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” என்கிறார்
பவுல்.
காரணம்
என்னவெனில், யூதர்கள், கிரேக்கர்கள் தங்கள் படிப்பறிவால் அறிவுப்பூர்வமாகக் கடவுளை அறிந்துவிடலாம் என நம்பினார்கள். ஆனால்,
சிலுவையின் வல்லமையும் ஞானமும் மனிதரைக் கவரும் வகையில் சொல்லழகிலோ அல்லது வல்ல செயல்களிலோ அமையாது, மனிதரை உள்ளிருந்து உருமாற்றும் அருளில் அடங்கியிருக்கிறது என்று கூறி, நாம் யாராக இருந்தாலும், நம்மிடம் என்ன இருந்தாலும் நம்மைக் குறித்துப் பெருமை பாராட்டாமல், கடவுளைக் குறித்துப் பெருமை பாராட்டி வாழும்போது, நாம் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறோம் என்று பவுல் கற்றுத் தருகிறார்.
நாம்
நல்ல கிறித்தவர்களாக, விண்ணக மகிழ்ச்சியை மண்ணகத்தில் சுவைக்க என்ன செய்ய வேண்டும்? முதலாவது, மனத்தாழ்மையோடும் நேர்மையோடும் இறைவனைத் தேடுவோம். இன்றைய உலகம் நம்மிடம் கூறுகிறது: “பணம் இருந்தால் பாதுகாப்பு”, “அதிகாரம்
இருந்தால் மதிப்பு”,
“பெயர் இருந்தால் மகிழ்ச்சி.” ஆனால், கடவுள் நம்மோடும் நாம் அவரோடும் இருந்தால்தான் மகிழ்ச்சி என்பதை யார் மறுக்க இயலும்!
இரண்டாவது,
இகழ்ச்சியை இறைவனுக்காக ஏற்றுக்கொள்ளும் இதயம் வேண்டுவோம். கிறித்தவ வாழ்க்கை என்பது துன்பமே இல்லாத வாழ்க்கை அல்ல; அழுகையே இல்லாத பாதையும் அல்ல! இயேசுவைப் பின்பற்றும் வாழ்க்கையில் இகழ்ச்சி, தவறான குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல்கள் வரலாம். அப்போது நாம் தனியாக அழுவதில்லை. துன்புறுவதில்லை. நமக்காகத் திரு அவையும் துன்புறுகிறது. நமக்கு முன்னே வாழ்ந்த இறைவாக்கினர்கள், உண்மைக்காக நின்றவர்கள், நீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் அனைவரும் இதே பாதையில்தான் நடந்தனர்.
மூன்றாவது,
நீதியும் அன்பும் கொண்ட வாழ்க்கையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கவேண்டும். நீதியையும் அன்பையும் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய போராட்டங்களில் அல்ல; மாறாக, நமது பண்பான பேச்சில், பணிவான பணிகளில், நேர்மையான நடத்தையில், உண்மையான உள்ளத்தில் என ஒவ்வொரு நொடியும்
நாம் எடுக்கும் எளிய தீர்மானங்களில்தான் அடங்கியுள்ளது.
எனவே,
இயேசு நமக்குத் தரும் மலைப்பொழிவின் பேறுபெற்றோர் வாழ்வியல் முறை நாளைக்கான பாடமல்ல; அது இன்றே தொடங்கும் வாழ்க்கை முறை. நாம் இறைவனை முதன்மைப்படுத்தினால், உண்மைக்காக அமைதியோடு நிற்கக் கற்றுக்கொண்டால், அன்பையும் நீதியையும் வாழ்க்கை முறையாக மாற்றினால், மண்ணகத்தில் வாழ்ந்தபடியே விண்ணக மகிழ்ச்சியைச் சுவைக்கும் உண்மையான கிறித்தவர்களாக மாறமுடியும்.
இறையாட்சி என்பது விண்ணகம் அல்ல; அது ஓர் இடமல்ல; ஓர் அரசியல் ஆட்சி முறையுமல்ல; அது கடவுள் மையமாக இருக்கும் வாழ்க்கைமுறை; அன்பு செய்யும் ஆட்சி நிலை; நீதி நிலவும் இறைச்சமூகம்; மன்னிப்பு மலரும் உறவுமுறை; அமைதி விதைக்கப்படும் இடம். இறைவன் மனித வாழ்வுக்குள் நுழைவதும் மனித இதயங்களில் அவரது ஆட்சி மலர்வதுமே இறையாட்சி. இறையாட்சி என்பது இறைவனின் விருப்பம் நிறைவேறும் இடம். இறைவனின் ஆட்சி நிலையானது; உலகளாவியது; ஆன்மிகமானது.
இயேசு
தம் பணியைத் தொடங்கியபோது அறிவித்த முதல் செய்தி: “மனம் மாறுங்கள், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது” (மத்
4:17). இறையாட்சி பேசுவதால் அல்ல; அறிவிப்பதால் அல்ல; மாறாக, அது மனமாற்றத்தின் வழியாக, இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் அன்பு, சேவை, நீதி ஆகிய செயல்களால் கட்டமைக்கப்படுகிறது. இன்று இயேசு உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய இறையாட்சி எனும் இயக்கத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் பணியாளராய் ஒளிர்ந்திட அழைக்கப்படுகின்றோம்.
இயேசு
தொடங்கிய பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகம் அமைகின்றது. “செபுலோன் நாடே! நப்தலி நாடே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது” (எசா
9:1,2; மத் 4:15-16) என்ற அழகிய வரிகளை இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். இவை இரண்டிற்குமான முக்கியத் தொடர்பு என்ன எனக் காண முயல்வோம்.
யோசுவா
தனது தலைமையில் இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அந்நாட்டின் பகுதிகளை 12 குலத்தாருக்கும் வழங்கினார். செபுலோன், நப்தலி நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் அங்கு ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த வேற்றின மக்களை விரட்டிவிட்டே அவற்றை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், செபுலோன், நப்தலி நாட்டிலிருந்த வேற்றின மக்களை அவரால் விரட்ட முடியவில்லை. எனவே, யோசுவா இந்த இரண்டு நாடுகளையும் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கியபோது, அங்குள்ள வேற்றின மக்களோடு இணைந்து வாழவேண்டிய சூழலே ஏற்பட்டது. இது இஸ்ரேல் மக்களுக்கு ஒரு பெரும் அவமதிப்பாக இருந்ததாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த இரு நாடுகளும் கலிலேயப் பகுதியில் யோர்தானுக்கு அப்பால் வருகின்ற ‘பெருங்கடல் வழிப்பகுதியே’ என்றும்
கூறப்பட்டுள்ளது. ‘பெருங்கடல் வழிப்பகுதி’ என்பது
இஸ்ரயேல் நாட்டையும் எகிப்து போன்ற பிற நாடுகளையும் இணைக்கும் பெரியதொரு வியாபாரச் சாலையாகவும் அமைந்திருக் கின்றது.
இஸ்ரயேலின்
வடபகுதியில் அமைந்துள்ள இந்தப் பகுதிகள்தாம் அசீரியர்களால் முதலில் கைப்பற்றப்பட்டன. கி.மு. 7-ஆம்
நூற்றாண்டில் அசீரியர்கள், வட அரசான இஸ்ரயேலைத்
தாக்கி, சமாரியாவைச் சூறையாடி, இஸ்ரயேல் நிலப்பரப்பையே மாற்றி அமைத்தார்கள். வளமையும் செழுமையும் அழகும் சேர்ந்த கலிலேயப் பகுதி இவர்களால் கைப்பற்றப்பட்டு, பேரழிவுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டது. தென்னரசான யூதேயாவை விட, வட அரசான இஸ்ரயேல்
பல வழிகளில் வல்லமையுடையதாக இருந்தபோதும் அழிந்துபோனது. இந்தப் பகுதிகளின் அழிவு ஆண்டவருடைய தெரிவிலே நிகழ்ந்தது (9:1) என்று எசாயா கூறினாலும், செபுலோனையும் நப்தலியையும், பிற்காலத்தில் அதிகளவாகப் பிற இனத்தவர் வாழ்ந்த பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதிகள் மற்றும் பிற இனத்தவர் வாழும் கலிலேயா போன்றவை ஆண்டவரால் மேன்மைப்படுத்தப்படும் என்கிறார். எசாயா இணைத்துக் கூறிய ஆசிமொழிகள் பிற்காலத்தில் இந்தப் பகுதியில் (கலிலேயாவில்) இயேசு பணி செய்ததை நினைவூட்டுகிறது.
காரிருளின்
துயரத்திலிருந்த, அவமதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து இயேசு தமது பணியைத் தொடங்குவது, “செபுலோன் நாடே! நப்தலி நாடே!... காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” (எசா
9:1) என்று இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறுகின்றதாக மத்தேயு காட்டுகின்றார் (மத் 4:15). இயேசு யூத மக்களுக்கு மட்டுமே நன்மைதரும் விதத்தில் எருசலேம் ஆலயத்தில் தமது நற்செய்திப் பணியைத் தொடங்காமல், எல்லா நாடுகள் மற்றும் இன மக்களைச் சென்றடையும்
வகையில், “மனம் மாறுங்கள்; ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்
4:17) என்று முழக்கமிட்டுத் தமது பொதுவாழ்வுப் பணியை எல்லா இனத்தவரும் வாழும் செபுலோன், நப்தலி நாடுகளின் பகுதியில் தொடங்குகின்றார்.
இயேசுவின்
பணிவாழ்வைக் குறித்து ஏற்கெனவே சிமியோன் இவ்வாறு சான்று பகர்கின்றார்: “இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை”
(லூக் 2:32). நற்செய்தியாளர் யோவானும் இயேசுவை ஒளியாகக் காண்கிறார் (யோவா 1:9). மேலும், ‘இயேசுவே உலகின் ஒளி’ என்கிறார் (8:12). இருளைப் போக்கும் ஒளியாக இயேசுவைக் கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பியதுபோல, நாமும் அனைவருக்கும் பணியாற்றிட கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளார். நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் இயேசுவில்தாம் முழுமைபெறுகிறது. ஆகவே, இயேசுவின் பணியை நாம் தொடரவேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு நமக்குத் தரும் அழைப்பு.
இறையாட்சிப்
பணியில் நம்மையே நாம் இணைத்துக்கொள்ளும்போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வு நமக்குத் தேவை. இயேசு தம் சமூக மக்களின் வாழ்வுநிலையையும், மக்களை அடிமைப்படுத்திய உயர்குடியினரின் அரசியல் மற்றும் சமய ஆதிக்கத்தையும் நன்கு அறிந்திருந்தார். அடக்குமுறையால் வசூலிக்கப்பட்ட ஆலய வரியும் மக்கள் வறுமையில் வாட சிலர் மட்டும் வளமையில் வாழ்வதன் பின்னணியைத் தெரிந்திருந்தார். தம் சமூகத்தில் அரசியலும் ஆன்மிகமும் எவ்வாறு மக்களை ஏய்ப்பதிலும் ஏமாற்றுவதிலும் கைகோர்த்துச் சென்றன என்பதை அவர் அறியாமல் இல்லை. தம் சமூகத்தைப் பற்றிய ஆய்வும், சமூகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விழிப்புணர்வுமே இயேசுவின் இறையாட்சிப் பணிக்குக் கூர்மை தந்தன எனலாம். இயேசு தாம் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்ததோடு நின்றுவிடாமல் அல்லது போதனையோடு விட்டுவிடாமல் தம் மக்கள்மீது கொண்ட மட்டற்ற அன்பினாலும் கரிசனையினாலும் ஆர்வத்தோடு பணிசெய்ய முன்வருகிறார்.
ஆன்மிகம்
என்ற போர்வையில் தங்கள் போலித் தன்மையை மறைத்து, மக்களைத் தவறான வழியில் நடத்திய சமயத் தலைவர்களை எதிர்ப்பதன் விளைவுகளையும் அவர் தெரிந்திருந்தார். இருப்பினும், இறையாட்சிப் பணி என்பது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பதால், வேறுபாடு பாராமல் அனைவரும் வாழ்வு பெற உழைக்க முன்வருகிறார். வறுமையும் ஏழ்மையும் அகன்று, நீதியும் உண்மையும் உயர்ந்து, எங்கும் சமத்துவம் ஓங்கச் செய்வதே இயேசுவின் இறையாட்சிக் கனவு. தாம் சுமக்கும் கனவைத் தனித்து ஆற்றிட விரும்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள் நடுவிலிருந்து கரம்கோர்க்க சிலரை இப்பணிக்கென அழைக்கிறார். அவருடைய அழைப்பில் ஆடம்பரம் இல்லை; ஆர்ப்பாட்டம் இல்லை. சமூகத்தின் கடைநிலையிலிருந்து அழைக்கப்பட்டவர்கள் அவர்களைப்போலக் கடைநிலையில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்ந்து, அவர்கள் உயர்வுக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. இயேசுவின் இறையாட்சிப் பணிக்காக அழைக்கப்பட்டவர்களும் தியாகத்தோடு உழைத்தனர்.
இன்று
நாம் எவ்வாறு இறையாட்சிப் பணியைத் தொடர முடியும்? கிறித்தவ வாழ்வின் இரு முக்கியக் கூறுகள்: 1. மனமாற்றம், 2. இயேசுவைப் பின்தொடர்தல். இயேசுவின் மீது கொண்ட அளவற்ற அன்பால் நாம் அவரைப் பின்செல்ல ஆரம்பித்தால் நம் வாழ்வில் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். இயேசுவின் இறையாட்சிக் கனவின் இலட்சியமே பிளவுகள் நீக்கி, பிரிவினை களைந்து, ஒன்றிணைந்து வாழ்வதுதான். ஆனால், இன்று சாதி, மதம், இனம், மொழி, வசதி, படிப்பு எனப் பல்வேறு காரணிகளால் பிளவுபட்டு வாழ்கிறோம். திரு அவைக்குள் இருக்கும் சாதியப் பிளவுகளையும் மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே இன்றைய இரண்டாம் வாசகத்தில், இயேசுவின் பெயரால் ஒன்றாய் வாழக் கேட்டுக்கொள்கிறார் பவுல். கிறிஸ்துவின் மனநிலையை (பிலி 2:5) எல்லாரும் கொண்டிருந்து, அவரில் ஒன்றாய் வாழ்வதால் (2கொரி 5:17) ஒற்றுமை நிலைக்கும் என்கிறார். கிறித்தவ ஒன்றிப்பும் மதநல்லிணக்கமும் காலத்தின் கட்டாயம்.
பிளவை
ஏற்படுத்துபவன் அலகை; நம்மை இணைத்து வைப்பவர் கடவுள். பிளவுபட்டால் நாம் பலவீனர்கள்; ஒன்றுபட்டால் நாம் அசைக்க முடியாதவர்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஒத்தக் கருத்துடையவர்களாய் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாக இயேசுவைப் பின்தொடர முயல்வோம். இறைவார்த்தை ஞாயிறைக் கொண்டாடும் இன்று, இறைவார்த்தை என்பது வாசிக்கப்படுவதற்காக அல்ல; வாழப்படுவதற்காக என்பதை உணர்ந்து இறையாட்சியின் நிறைசாட்சியாக நித்தமும் வாழ்ந்து இயேசுவின் பணியாளர்களாய் மாறுவோம்.
இந்தச் சமூகத்தில் ஒருவர், பொதுவாக அவரின் அடையாளங்கள், பண்பு, குடும்பப் பின்னணி இவற்றின் மூலமாக அறிமுகமாகிறார். சில வேளைகளில் ஒரு மனிதரை நாம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய அதிகாரம், பதவி, வலிமை, சாதனை இவற்றைக் கூறி அறிமுகப்படுத்துகிறோம். ஆனால், கடவுள் தம்மை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திய விதம் முற்றிலும் மாறுபட்டது. இயேசுவைத் திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்தும்போது, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்று அறிமுகப்படுத்துகிறார். இங்கே இயேசு ஓர் அரசராக அல்ல; ஒரு போர்வீரராக அல்ல; மாறாக, பலியிடப்படும் செம்மறியாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். இதுவே, கிறித்தவ நம்பிக்கையின் மைய உண்மை.
கடந்த
இரு வாரங்களாக, ஆண்டவருடைய திருக்காட்சி மற்றும் ஆண்டவருடைய திருமுழுக்கு ஆகிய இரு நிகழ்வுகள் வழியே நமக்கு அறிமுகமான இயேசு, இன்று ‘உலகத்தின் பாவத்தைப் போக்கும் செம்மறியாக’ அறிமுகமாகிறார்.
இந்த அறிமுகம் யோவான் நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது.
இயேசு
தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” எனச்
சுட்டிக்காட்டுகிறார். ‘ஆட்டுக்குட்டி’ என்ற
சொல்லில் பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. இவை மூன்றும் இயேசுவுக்கு மிகவும் பொருந்திப்போவதை அறியமுடிகிறது. திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டிய “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்ற
கூற்று மாசுமரு வற்றதாய் மீட்புக்காக இரத்தம் சிந்திய (விப 12:5) ஆட்டினை நினைவூட்டுகிறது. ஆட்டுக்குட்டி,
செம்மறியாட்டுக்குட்டி
என்பது யோவான் நற் செய்தியில் ஒரு முக்கியமான அடையாளம். ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்பதைப்
பலவிதமாகப் புரிந்துகொள்ளலாம். இச்சொற்றொடருக்கு இருவேறு பொருள்கள் உள்ளன: 1. ஆட்டுக்குட்டி, 2. இறைவனின் ஊழியன்.
“இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்பதை
இஸ்ரயேல் மக்களின் மீட்புக்குக் காரணமாய் இருந்த மாசுமருவற்றதாக, மீட்புக்காக இரத்தம் சிந்திய பாஸ்கா ஆடாக (விப 12:5,46; யோவா 19:36; 1பேது 1:8,18,19; திவெ 5:9), மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்து நகருக்குப் புறம்பே துரத்தப்பட்டுக் கொல்லப்படும் (லேவி 16:20) பாவப் பரிகார ஆடாக (தொநூ 9:6; எபி 9:6), மக்கபேயர் காலத்திலிருந்தே கொம்புடன் தோன்றும் ஆடு வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது போன்று, இயேசுவும் ‘இதோ இறைவனின் வெற்றி’ எனும் பொருளில் திருவெளிப்பாட்டு ஆடாக (திவெ 7:17; 17:14) அல்லது ஒவ்வொரு நாளும் திருப்பீடத்தில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகப் புரிந்துகொள்ளலாம்.
‘இதோ! இறைவனின் ஆட்டுக்குட்டி’ என்பதை
‘இதோ! இறைவனின் ஊழியன்’ என்றும் சில திருவிவிலிய அறிஞர்கள் மொழிபெயர்க்கின்றனர். இறை ஊழியர் கொடுமையாக நடத்தப்பட்டார்; இழுத்துச் செல்லப்பட்டார்; கைது செய்யப்பட்டார்; செம்மறிபோல் வாய் திறக்கவில்லை (எசா 53:7). இறை ஊழியர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார், தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் (எசா 53:4,5) எனும் கூற்றுகள் இயேசுவுக்கு முற்றிலும் பொருந்திப் போகிறது. எனவேதான், திருமுழுக்கு யோவான் இயேசுவை ‘உலகத்தின் பாவங்களைப் போக்கும் செம்மறி’ என அறிமுகப்படுத்துகிறார்.
இன்றைய
முதல் வாசகம் உலகிற்கு மீட்பைக் கொண்டுவந்த கடவுளின் ஊழியர் (கடவுளின் ஆட்டுக்குட்டி) இயேசுவே என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பாடலாக அமைகிறது. இவ்வாசகப் பகுதி இரண்டாவது ‘ஆண்டவரின் ஊழியர் பாடல்’ என அறியப்படுகிறது. இப்பாடல் ‘இஸ்ரயேலை’ ஆண்டவரின்
ஊழியராகக் காட்டுகிறது (49:3). இந்த இஸ்ரயேல் என்போர் ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இஸ்ரயேலரைக் குறிக்கலாம். இருப்பினும், இப்பாடலின் கருத்துகள் இயேசுவோடு ஒன்றிப் போவதைப் பார்க்கமுடிகிறது. ‘இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி’
(லூக் 2:32); அவர் தம்மையே வெறுமையாக்கி, கடவுளால் மாட்சிப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலுள்ள ஊழியர் (பிலி 2:8). இவ்வாறு இயேசு ஓர் உண்மையான இறை ஊழியராக வெளிப்படுகிறார். சிதறிக் கிடக்கும் (எசா 49:5) இஸ்ரயேல் மக்கள்மீது இரக்கம் கொண்டு ஆண்டவர் அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பார்; அவர்கள்மீது கொண்டுள்ள அன்பை அவர் சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும், எதிரிகளை வென்று அவர்களுக்கு விடுதலை வழங்குவதிலும், அவர்களுக்குப் புதுவாழ்வு அளிப்பதிலும் வெளிப்படுத்துவார். அவரே முன்னின்று அதைச் செய்வார் என்ற உண்மையை இது கூறுகிறது.
இன்றைய
முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் ‘இயேசுவே இறை ஊழியர்-கடவுளின் ஆட்டுக்குட்டி’ என
அறிவிக்கும் வேளையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவை ‘அனைவருக்கும் ஆண்டவர்’ என உறுதிப்பட அறிக்கையிடுகின்றார்.
மேலும், இயேசுவின் திருத்தூதனாகத் தன்னை அடையாளப்படுத்தும் பவுல், அவருடைய பதிலாளாக இருந்து அவரை அறிக்கையிடுவதும் சான்று பகர்வதும் ஒவ்வோர் ஊழியருடைய கடமையாக இருக்கிறது எனப் பணிக்கிறார்.
உரோமை
மதங்களும் மற்றும் பல உரோமைய கடவுள்களின்
வழிபாடுகளும் கொரிந்தில் காணப்பட்ட வேளையில், கொரிந்து நகரம் ‘கடவுளின் திரு அவை’
(1கொரி 1:1) என்கிறார் பவுல். கொரிந்து திரு அவை கிறிஸ்துவில் புனிதமாக்கப்பட்டுள்ளது என்று வரைவிலக்கணம் கொடுக்கிறார். எனவே, திரு அவையைப் புனிதமாக்குவது எவருடைய மனித ஆற்றலாலுமல்ல; மாறாக, இயேசுவின் ஆற்றலால் என்பது இங்கே புலப்படுகிறது.
இறுதியாக,
ஆட்டுக்குட்டியாக அறிமுகமாகும் கடவுள் தாழ்ச்சியின், தியாகத்தின், அன்பின் ஆட்டுக்குட்டியாகச் சான்றுபகர்ந்து வாழ நம்மை அழைக்கிறார். தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று கூறுவதற்கு வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி மட்டும் போதாது; தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றிய தெளிவும் தேவை. இத்தகைய தெளிவும் நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் போலியான தாழ்ச்சி தெரியும். தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை இயேசுவின் பக்கம் திருப்பி, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்றார் திருமுழுக்கு யோவான்.
ஆட்டுக்குட்டி
பலவீனத்தின் அடையாளம் போலத் தோன்றலாம்; ஆனால், அதில் மறைந்திருப்பது அன்பின் மிகப்பெரிய வலிமை. இயேசு எதிர்த்துப் போராடவில்லை, பழிவாங்கவில்லை, குரல் எழுப்பி தம்மை நிரூபிக்கவில்லை. மாறாக, அமைதியாகச் சிலுவையை ஏற்றுக்கொண்டார். நம் வாழ்க்கையில் நாம் எத்தனை முறை எதிர்ப்பதையே வலிமை என்று எண்ணுகிறோம்? பழிவாங்குவதையே நீதியாகக் கருதுகிறோம்? ஆட்டுக்குட்டியாக வந்த கடவுள் நமக்கு உணர்த்தும் முதல் பாடம் ‘பணிவே உண்மையான வலிமை’ என்பதுதான்.
இரண்டாவதாக,
இயேசுவைச் சுட்டிக்காட்டும் திருமுழுக்கு யோவான் “இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” (யோவா
1:29-30) எனக் குறிப்பிடுகிறார். அதாவது, பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரையே கொடுக்கும் செம்மறி இயேசுவே (1பேது 1:18,19). ஆட்டுக்குட்டியாம் இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்பதாலே அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் ஆகிறார். அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் (எசா 53:7). ஆகவே, நாம் எந்த அளவிற்குப் பிறருக்காகத் தியாகம் செய்கிறோம்? நம் நேரம், நம் வசதி, நம் ஆறுதல் பிறரின் வாழ்க்கைக்காக உடைக்கப்படுகிறதா? ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள் நமக்கு உணர்த்தும் மற்றொரு பாடம் தியாகம் என்பது தனக்காக மட்டும் வாழ்வதில் அல்ல; பிறருக்காக வாழ்வதிலும் அடங்கியுள்ளது என்பதுதான்.
மூன்றாவதாக,
ஆட்டுக்குட்டியாம் இயேசு நமக்கு அன்பின் முகமாக அறிமுகமாகிறார். பிரச்சினைகளால், பல்வேறு சிக்கல்களால் கசப்புற்று வாழ்பவர்களுக்கு, “உங்களை நான் மறக்கவில்லை, உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன், உங்களை நான் அன்பு செய்கின்றேன்” (எசா
49:15-16) என்று கூறி, அன்பின் அடையாளமாக அவர் இருக்கிறார்.
அன்பிலேதான்
தாழ்ச்சியும் தியாகமும் இணைந்திருக்கிறது. ஆகவே, நாம் சுமந்து கொண்டிருக்கும் கோபம், வெறுப்பு, பழைய காயங்கள் ஆகியவற்றைக் களைந்து ஆட்டுக்குட்டியாக நம் இதயத்தில் வந்துள்ள இயேசுவுக்கு அன்பின் சாட்சிகளாக, தியாகத்தின் உருவாக, பிறர் வாழ்வில் ஓர் உந்துசக்தியாக மாறுவோம்.