திருப்பலி முன்னுரை
அனைத்தையும்
துறப்பதில்தான் சீடத்துவ வாழ்வின் மகத்துவம் இருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு உறவில், உயிரில், உடைமையில் பற்றற்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதே சீடத்துவம். உலகச் செல்வங்களான பொன், பொருள், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றில் ஆசை கொள்ளாமல், ஆன்மிகச் செல்வங்களாகிய அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம் போன்ற நிலையான செல்வத்தின்மீது பற்று வைத்துப் பயணிப்பதே சீடத்துவம். இயேசு “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் ஆகியோரை மேலாகக் கருதக்கூடாது” என்கிறார்.
தாயை, உறவுகளை வெறுப்பதல்ல துறவு; மாறாக, ‘எல்லாரும் என் தாய், எல்லாரும் என் சகோதர-சகோதரிகள்’
என்ற உறவின் விரிவே துறவு. அன்பு வற்றிய நிலை அல்ல துறவு; அன்பின் அதிர்வுகளை அகலப்படுத்துவதே துறவு. எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாமல் இருப்பதே துறவு. எல்லைக்குட்பட்ட அன்பை எல்லை கடந்ததாக்கும் முயற்சியே சீடத்துவம். இயேசுவை வாழ்க்கையால் போதிக்கும் உண்மைச் சீடர்களாய் வாழவும், நமது குடும்பங்களில் இறையழைத்தல் பெருகவும் தேவையான வரம்
வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
நமது
எண்ணங்கள் கடவுளின் எண்ணங்கள் அல்ல; கடவுளின் திட்டத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையில் வருகின்ற இன்ப-துன்பங்களில் இறைவனின் உடனிருப்பை உணரவேண்டும். இறைவனின் துணையின்றி இந்த உலகில் எதையும் அறிந்துகொள்ள இயலாது. நிலையானது என்று நினைத்து நாம் திட்டமிடும் அனைத்துமே நிலையற்றவை என்று கூறி, இறையோடு நிறைவாக வாழ அழைக்கும்
முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
கொலோசை
நகரின் மிகப்பெரும் செல்வந்தர் பிலமோன்; அவருடைய அடிமைதான் ஒனேசிமு. ஓர் அடிமை தப்பி ஓடினால் கொலை செய்யப்பட வேண்டும்; ஆனால், தப்பியோடிய ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகிறார் பவுல். “என் இதயத்தையே அனுப்புகிறேன்” என்று
அவரை ஓர் அடிமையாக அல்லாமல், கிறித்தவ நம்பிக்கையில் சகோதரராக ஏற்றுக்கொள்ளும்படி பிலமோனுக்கு எழுதுகிறார். பவுலைப் போன்று வேற்றுமைகள் பாராது, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று ஏற்று வாழும் உண்மைச் சீடர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! ‘நானே உன்னைத் தேர்ந்துகொண்டேன்’ என்று
கூறி உமது பணிக்காக நீரே தேர்ந்துகொண்ட எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் மகத்துவமான இந்த அழைத்தல் வாழ்வில் சிறப்பாகப் பணிசெய்யவும், ‘அழைத்தவர் என்னோடு இருக்கிறார், அவர் என்னைத் தனியாக விட்டுவிடமாட்டார்’ என்ற
நம்பிக்கையில் தொடர்ந்து பணி செய்வதற்குத் தேவையான திட மனத்தைத் தந்து வழிநடத்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. பாசமுள்ள
ஆண்டவரே! நாட்டை ஆளும் தலைவர்கள் தன்னலம் மறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், அடித்தட்டு மக்களும் தங்களின் வாழ்வாதாரங்களைப் பெறக்கூடிய சட்டங்களைக் கொண்டு வரவும், வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மக்களையும் இணைக்கும் பாலமாக வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நீங்கள் என்
சாட்சிகள்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும், எம் பங்கிலும் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். நாங்கள் அனைவரும் அனைத்து மக்களுடனும் நல்லுறவுடன் வாழவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளின் தேவை அறிந்து உதவி செய்து வாழவும், அற்புதமான இந்த வாழ்க்கையில் அனைவரையும் மன்னித்து மகிழ்ச்சியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ‘நீயே ஆசிர்வாதமாய்
விளங்குவாய்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எமது குடும்பங்களுக்கு நீர் கொடுத்த எம் குழந்தைகளுக்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் அனைவரும் படிப்பிலும் இறைநம்பிக்கையிலும் நாளும் வளரவும், அருள்பணியாளராக, அருள்சகோதரியாகப் பணி செய்வதில் ஆர்வம் காட்டவும், இறையழைத்தலின் முக்கியத்துவத்தை எம் குழந்தைகளின் மனத்தில் நாங்கள் விதைக்கவும் தேவையான நல்மனதைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.