மே
16, வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச்செயலாளர்
அந்தோணியோ குத்தேரசு அவர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்புகளின் அறிக்கையில் போர், மோதல்கள், அதிர்ச்சி தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தீவிர வானிலை மாற்றங்கள், கட்டாய இடப்பெயர்வுகள் ஆகியவை உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தொடர்ந்து தூண்டி வருகின்றன என்று எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், 2024-ஆம் ஆண்டில் 53 நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில்
29,50,00,000-க்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர்; இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 13,70,00,000
மக்கள் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவு நெருக்கடி குறித்த அறிக்கையானது, உலகு ஆபத்தான பாதையை நோக்கிச் செல்கின்றது; எனவே, மக்களின் உணவுத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் அந்தோணியோ குத்தேரசு.