தமிழ்நாடு ஆயர்
பேரவைத்
தலைவர்,
சென்னை
- மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்
மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் வாழ்த்துரை
அன்புக்குரியவர்களே!
தமிழ்நாடு ஆயர் பேரவையின் சமூக ஊடகப் பணிக்குழுவின் ஒரு கிளையாகச் செயல்படும் அச்சு ஊடகப் பணிக்குழு, ‘நம் வாழ்வு’ என்னும் வார இதழை, மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்து அனைவருடைய பாராட்டையும் பெற்று வருவதை நாம் அறிவோம்! சமூக-ஆன்மிக-அரசியல்-வாழ்வியல் வழிகாட்டியாக, தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழாக வெளிவரும் இவ்விதழ், இன்றைய சமூக அரசியல் சூழலில், நமது கத்தோலிக்க இறைச்சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய-தமிழ்நாடு சூழலில் சிறுபான்மையினராகிய நமது உரிமைக்கான குரலாகப் பொதுத்தளத்தில் சிறப்பாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்து வரும் இவ்விதழ், தனது பொன்விழா ஆண்டில் காலத்தின் அறிகுறிகளை அறிந்து, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் வண்ணம் மின்னஞ்சல் நாளிதழை (E - Newspaper) வெளிக்கொணர்வது
மிகவும் பாராட்டத்தக்கது.
இம்முயற்சியை
முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களையும் சிறப்பாக, தமிழ்நாடு ஆயர் பெருமக்களையும், இப்பணிக் குழுவின் தலைவர் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களையும், இப்பணியை அன்றாடம் முன்னெடுக்கவிருக்கும் ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியர், அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குநர் அருள்முனைவர் இராஜசேகரன்
அவர்களையும், அவர்களோடு உடன் பணியாற்றும் ஏனைய உதவி ஆசிரியர்களையும், அலுவலகப் பணியாளர்களையும் மனதார வாழ்த்துகிறேன்! அவர்களின் பணி சிறக்க ஆசி கூறுகிறேன்!
இம்முயற்சியை
மேற்கொள்வதன் நோக்கம், இளையோரை வாசிப்புத்தளத்தில் உற்சாகப்படுத்தவும் திரு அவை, சமூக - அரசியல் செயல்பாடுகளில் அவர்கள் தெளிவு பெறவுமே! உலகம்,
ஆசியா, இந்தியா, தமிழ்நாடு நமது மறைமாவட்டங்கள் எனப் பல தலங்களில் செய்திகளை
உடனுக்குடன் தாங்கி வரவிருக்கும்
இந்த மின்னஞ்சல் நாளிதழிலிருந்து இளையோர் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து, நேர்மையான வழிமுறைகளை முன்னெடுத்து, சமூக மாற்றத்திற்கு முனைப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன். இந்த மின்னஞ்சல் நாளிதழ் அதற்குத் துணைபுரியும் என நம்புகிறேன். கத்தோலிக்க
இறைச்சமூகம் இதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு ஆயர்கள் அனைவரும் இம்முயற்சியைப் பாராட்டி, பேராதரவு தந்திட அன்போடு வேண்டுகிறேன்!