news
வத்திக்கான் செய்திகள்
இளையோரின் ஜூபிலி - 2025

ஜூலை 28 முதல் ஆகஸ்டு 3 வரை உரோமையில் கத்தோலிக்க இளையோர் ஒன்றிப்பு ஜூபிலி - 2025 நடைபெற்றது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆன்மிக விழாவில், 146 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இளையோர் பங்கேற்றனர். ‘Pilgrims of hope’- ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை, “இளைஞர்கள் துணிச்சலுடன் நம்பிக்கையை வாழ்வாக்க வேண்டும்; சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமான வழிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்; நட்பும் நீதியும் உங்கள் வாழ்க்கையின் அடிப்படையாக வேண்டும்என வலியுறுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“நாம் கடவுளின் மிக அழகியப் படைப்பு!”- திருத்தந்தை லியோ

ஏழைகள், ஆதரவற்றோர், வீடற்றவர்கள் என அல்பானோ மறைமாவட்டத்தில் காரிதாஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் ஏழைகளோடு அமர்ந்து விருந்து உண்ட திருத்தந்தை லியோ, “எல்லாப் படைப்புகளிலும் மிக அழகானது, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே! நாம் அனைவரும் கடவுளின் அன்பு உருவத்தைப் பிரதிபலிக்கின்றோம்; இந்த விருந்தோம்பல் நிகழ்வு ஒற்றுமை, சகோதரத்துவம், கடவுளுடன் ஒன்றாக இணைந்திருப்பது போன்ற அனுபவங்களின் வெளிப்பாடுஎன்றும், “நற்செய்தி விருந்தோம்பல் ஏழைகளிடமிருந்து தொடங்குகிறதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
அருளாளர்கள் பிரசாத்தி, அகுதீஸ் உருவ தபால் தலை வெளியீடு

திரு அவையின் புதிய புனிதர்களாக அறிவிக்கப்பட இருக்கும் அருளாளர்கள் ஜார்ஜோ பிரசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் ஆகியோரின் உருவப் படங்களைத் தபால் தலைகளாக வத்திக்கான் தபால் தொடர்புத்துறை  வெளியிட உள்ளது. ஓவியர் ஆல்பர்டோ ஃபால்செட்டி (1878-1951) என்பவரால் வரையப்பட்ட அருளாளர் பியர் ஜோர்ஜோ பிராசாத்தியின் (1901-1925) உருவப்படம், அருளாளர்  கார்லோ அகுதீஸ் (1991-2006) அசிசி, சுபாசியோ மலையில், அவரது இறப்பிற்கு முந்தைய கடைசிப் பயணங்களின்போது எடுத்தப் புகைப்படமான சிவப்பு நிற அரைச்சட்டை அணிந்து, தோளில் ஒரு பையைச் சுமந்து நிற்கும் புகைப்படம் ஆகியன செப்டம்பர் 7 அன்று தபால் தலைகளாக வெளியிடப்படுகின்றன.

news
வத்திக்கான் செய்திகள்
திருப்பயணிகளோடு சிறைக் கைதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை!

வெனிஸ் நகரின் தூய மேரி மேஜர் சிறைச்சாலையில் உள்ள மூன்று கைதிகளை, அந்நகரின் திருப்பயணக் குழுவோடு திருத்தந்தை லியோ சந்தித்தார். “திருப்பயணமும், திருத்தந்தையுடன் நடந்த சந்திப்பும் கைதிகளின் ஆன்மா, வாழ்க்கை மற்றும் வரலாற்றில் சிறைக் கைதிகளைச் சமூக வாழ்வில் மீண்டும் இணைக்கும்; அனைவரின் மனத்திலும் அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும்என்று வெனிஸ் முதுபெரும் தந்தை பேராயர் மொராலியா தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் விண்வெளி ஆய்வகத்திற்குப் புதிய இயக்குநர்!

திருப்பீடத்தின் விண்வெளி ஆய்வக இயக்குநராகத் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் காய் கன்சோல்மேக்னோ அவர்களின் பணிக் காலம் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவுபெறும் நிலையில், அதன் புதிய இயக்குநராக இந்தியாவின் கோவாவைச் சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி அறிஞரான அருள்பணி. ரிச்சர்டு அந்தோணி டி சூசா சே.. அவர்கள், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். ‘Max Planckநிறுவனம் மற்றும் மெச்சிகன் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பால்வெளி அண்டத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ

உரோமையில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்லிம்போமா, அதாவது நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 15 வயது இக்னாசியோ என்னும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த சிறுவனையும், அவனது குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களுக்காகச் செபித்து, தனது ஆசிரையும் அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இந்தச் சந்திப்பு நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட தாய் குளோரியா, “கடவுள் எங்களைக் கைவிடவில்லை என்பதற்கான அடையாளமாகத் திருத்தந்தையின் சந்திப்பைக் கருதுகிறோம்என்று தெரிவித்தார்.