news
வத்திக்கான் செய்திகள்
திருப்பலியில் பொதுநிலையினர் மறையுரை ஆற்ற முடியாது!

கத்தோலிக்கத் திருப்பலியில் பொதுநிலையினர் மறையுரை ஆற்றுவதற்கு அனுமதி கோரி ஜெர்மனி ஆயர் பேரவை அனுப்பிய விண்ணப்பத்தை வத்திக்கான் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வத்திக்கானின் வழிபாட்டு முறை மற்றும் அருளடையாளங்களுக்கான ஒழுங்குமுறை பேராயம், ஜெர்மனி ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் ஹைனர் வில்மருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் கூட, திருப்பலியின்போது தகுதியான பொதுநிலையினர் மறையுரை ஆற்ற அனுமதிக்கும்படி ஜெர்மனி ஆயர்கள் கோரியிருந்தனர்.

ஆயர்களின் அக்கறையைப் பாராட்டிய வத்திக்கான், திருப்பலியில் மறையுரை ஆற்றுவது என்பது வெறும் ஒழுங்குமுறை விதி அல்ல; அது வழிபாட்டு முறையின் இயல்போடு இணைந்தது என்று விளக்கியுள்ளது. குருத்துவ அருளடையாளம்  வழியே ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்களுக்கு மட்டுமே இந்தப் போதிக்கும் பணி (Munus Docendi) ஒப்படைக்கப்பட்டுள் ளது. எனினும், திரு அவை சட்டங்களின்படி திருப்பலிக்கு வெளியேயும், பிற வழிபாட்டு நிகழ்வுகளிலும் பொதுநிலையினர் நற்செய்தி அறிவிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏற்கெனவே பல வழிமுறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் சுட்டிக்காட்டியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
இராஞ்சி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர் நியமனம்!

இராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளரும், தூய மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையுமான அருள்பணி. ஆனந்த் டேவிட் சல்சோ அவர்களை இராஞ்சி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார்.

1975-இல் மாந்தூரில் பிறந்த இவர், இராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் பள்ளி, கல்லூரி மற்றும் குருத்துவக் கல்வியை முடித்தார். 2006, மே 15 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மறைந்த கர்தினால் டோப்போவின் தனிச் செயலாளர். மங்களூரில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பு, சி.பி.சி.. பொதுச்செயலாளரின் செயலர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மக்கள்தொடர்பு அலுவலராகவும், இராஞ்சி பேராயர் இல்லத்தின் நிர்வாகியாகவும், சமூக மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும், குருமாணவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். புதிய ஆயரின் வழிகாட்டுதலில் இராஞ்சி உயர்மறைமாவட்டம் ஆன்மிக வளர்ச்சியை எட்டும் என வாழ்த்துவோம்.

news
வத்திக்கான் செய்திகள்
“தொழில்நுட்பம் மனித நட்புறவுக்கு உதவவேண்டுமே தவிர, அதை ஆக்கிரமிக்கக்கூடாது” - திருத்தந்தை

வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் கோடைக்கால முகாமிற்குத் திருத்தந்தை லியோ நேரில் சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்போது தொழில்நுட்பச் சாதனங்களைப் பொறுப்புடன் கையாள அறிவுறுத்தினார். வகுப்பறைகளிலும் இல்லங்களிலும் திரைகளுக்கு அடிமையாவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, “தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதுதான்; ஆனால், அது உண்மையான மனிதத் தொடர்புகளுக்கு மாற்றாகக்கூடாது. நாம் ஒன்றாக இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் கையில் திறன்பேசிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. குடும்பமாக அமர்ந்திருக்கும்போது, அவரவர் அலைப்பேசிகளைப் பார்த்துக் கொண்டிருக்காமல், ஒருவரோடு ஒருவர் பேசி மகிழப் பழக வேண்டும்என்றார். எண்மத் தொழில்நுட்பச் (டிஜிட்டல்) செயலிகள் நம்மைச் சார்ந்திருக்க வைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதை எச்சரித்த திருத்தந்தை, சுயசிந்தனையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்: “எனது பயணங்களின்போது பலமுறை ஜிபிஎஸ் (GPS) தவறான வழியில் கூட்டிச் சென்றுள்ளது. எனவே, தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், நமது வாழ்வின் இலக்கை நோக்கிச் செல்ல சொந்தமாகச் சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். மூளை செயல்படும்போது நமக்குத் தொலைப்பேசி தேவையில்லைஎன்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“முதியோரே, இறைவனின் கண்கள் எப்போதும் உங்கள் மீதே உள்ளன”

ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோருக்கான ஆறாவது உலக நாளுக்காகநான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன் (எசா 49:15)”  என்ற கருப்பொருளைத் திருத்தந்தை லியோ வத்திக்கானில் இன்று வெளியிட்டுள்ளார். இச்செய்தியில், முதியோர் தங்களைத் தனிமையிலோ அல்லது நோயாளியாகவோ உணர்ந்து, இறைவனால் கைவிடப்பட்டதாக வேதனைப்படும் தருணங்களில், இறைவனின் அன்பான கண்கள் எப்போதும் அவர்கள்மீது இருக்கின்றன என்பதைத் திருத்தந்தை உறுதியாக நினைவூட்டியுள்ளார். எந்த வயதிலும் நாம் இறைவனின் அன்பான பிள்ளைகளே என்றும், அவரிடம் திரும்புவதற்கு எப்போதும் கால தாமதம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதியோர் மற்றும் தாத்தா-பாட்டியரை நேரில் சென்று சந்திக்கும் உன்னத வழக்கத்தை இளையோர் மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்று திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்துள்ளார். அவர்களின் பலவீனத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும், இந்த முதுமைப் பருவத்திலும் அவர்கள் ஆன்மிக ரீதியாகப் புதிய பிறப்பு எய்தி, போர் மற்றும் சமூகக் கொந்தளிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகிற்கு அமைதி கிடைக்கத் தன்னோடு இணைந்து செபிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“சிறுவர்களைப் பாதுகாப்பது திரு அவையின் தலையாய கடமை”

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான இலத்தீன் அமெரிக்க ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் (CEPROME) பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை லியோ, “சிறுவர் மற்றும் பலவீனமானவர்களைப் பாதுகாப்பது திரு அவையில் உள்ள ஒவ்வொருவருக்குமான கட்டாயக் கடமையாகும்என்று வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்துவைச் சந்திப்பது ஒரு மனிதனை அன்பை நோக்கி வழிநடத்துகிறது; ஆனால், பாலியல் தொந்தரவுகள் ஒருவரது ஆன்மிக மற்றும் மனித வளர்ச்சியைச் சிதைக்கும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன என்று திருத்தந்தை கவலை தெரிவித்தார். எனவே, திரு அவைச் சமூகம் அனைத்தும் அச்சமும் சந்தேகமுமற்ற, இயேசுவைச் சந்திக்கும் பாதுகாப்பான இடங்களாக மாறுவது அவசியம் என்றார். கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அந்நாட்டு ஆயர்களிடம் விவரித்ததைக் குறிப்பிட்ட அவர், பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனைக்குத் திரு அவைச் சமூகம் எப்போதும்செவிமடுத்தல், உண்மை, நீதி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்மூலம் பதிலளிக்கவேண்டும் என்றார். இறுதியில், தலத்திரு அவைகளும் குடிமை அமைப்புகளும் இணைந்து முதியோர், சிறுவர் போன்ற பலவீனமானவர்களைப் பாதுகாக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களைக் கிறிஸ்துவின்பால் வழிநடத்தவேண்டும்” - திருத்தந்தை

அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் அதிபர்கள் அடங்கிய குழுவினரிடம் வத்திக்கானில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, ‘கத்தோலிக்கக் கல்வி என்பது வெறும் அறிவை வளர்ப்பதோடு நின்றுவிடாமல், உண்மை (TRUTH) எனும் கிறிஸ்துவின் மீது ஆழமான பற்றை உருவாக்கவேண்டும்என்று அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மனிதனைப் பாதுகாப்பது குறித்த தனதுமகத்தான மானுடம் (Magnifica humanitas) எனும் திருத்தூது மடலை அடிப்படையாகக் கொண்டு அவர் இதனை விளக்கினார். இன்றைய கல்வி உலகில் அறிவு சிதறடிக்கப்பட்டுக் காணப்படுகிறது என்றும், குறிப்பிட்ட துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள்கூட வாழ்க்கையின் சரியான திசையைக் கண்டறியவும், உலகளாவிய பார்வையைப் பெறவும் தடுமாறுகிறார்கள் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.