news
வத்திக்கான் செய்திகள்
“இறைவனிடம் இன்னும் நெருங்கி வாருங்கள்”- திருத்தந்தை லியோ

உரோமையில் செயல்பட்டு வரும் பாப்பிறை போர்த்துக்கீசியக் கல்லூரியின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட திருத்தந்தை லியோ, அங்குப் பயிலும் போர்த்துக்கீசிய குருமாணவர்களுக்கும், மேற்படிப்புப் பயிலும் குருக்களுக்கும் உரையாற்றினார். அப்போது, “யூபிலி ஆண்டு என்பது கிறிஸ்துவின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும்  கருணை எனும் கொடை பற்றிய விழிப்புணர்வில் வளர வேண்டிய நேரம். ஆகவே, ஒவ்வொருவரும் தங்களது வாழ்வைக் கிறிஸ்துவின் இதயத்திடம் தொடர்ந்து ஒப்படைக்கவேண்டும். கிறிஸ்துவிடம் நெருங்கி வாருங்கள்; அப்போது அவரின் இரக்கத்தை உங்களாலும் உணர முடியும். இன்றைய சூழலில் நமது திரு அவை நற்செய்தி அறிவிப்பை மேம்படுத்துவதில், அருள்பணியாளர்கள், நம்பிக்கையாளர்கள் பயணத்தில் ஒன்றுபட்டிருப்பதையும், ஒரே இலக்கில் உறுதிபூண்டிருப்பதையும்  காணமுடிகிறது. உங்கள் ஆயர்களுக்காகவும், மறைமாவட்ட அமைப்புகளுக்காகவும், வருங்காலத்தில் நீங்கள் பணிபுரிய உள்ள இடத்தில் வாழும் நம்பிக்கையாளர்களுக்காகவும் இயேசுவிடம் செபியுங்கள்எனவும் கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் திருப்பீடச் செயலகத்தில் பணியாற்ற அழைப்பு!

வத்திக்கான்  திருப்பீடத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விரும்பும் பொதுநிலையினர் work with us’ என்ற வலைதளப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அதன் பொருளாதாரச் செயலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் ஆர்வம் உள்ள தகுதியானவர்களுக்கு இந்த வலைதளப்பக்கம் பயனுள்ளதாக அமையும். திருப்பீடமும் சரியான ஆள்களைத் தேர்வு செய்ய இந்த முயற்சி உதவும்.

இது குறித்துப் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் மாக்சிமினோ கபல்லெரோ லெடோ பேசும்போது, “பொருளாதாரச் சீர்திருத்தத்தைப் பொருத்தவரை அதில் முக்கியமானது பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது மற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுபோல இதை அவ்வளவு எளிதாகச் செயல்படுத்த முடியாது. மிகவும் சிக்கலான சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று. திருப்பீடத்தின் பணிக்காக ஒருவரைத் தேர்வு செய்யும்போது, அவர் திறமைமிக்கவராகவும், தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றுபவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அறநெறி மதிப்பீடு கொண்டவராகவும் இருக்க வேண்டும்என்றார்.

news
வத்திக்கான் செய்திகள்
“மரியா நம்மைத் தம் மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்வார்”- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் மரியன்னை ஆன்மிக விழா சிறப்புத் திருப்பலி அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது மறையுரையில் திருத்தந்தை லியோ, தன் மகன் இயேசு கிறிஸ்துவை நோக்கி, எவ்வாறு நாம் பின்தொடர்வது என்பதற்கான ஓர் அழகான எடுத்துக்காட்டு அன்னை மரியா என்று குறிப்பிட்டதுடன், நமது நம்பிக்கையை வளர்க்கும் மரியன்னை ஆன்மிகம் இயேசுவை மையமாகக் கொண்டுள்ளதுஎன்று நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டினார். மரியன்னை ஆன்மிகம் நற்செயல் புரிவதற்கும், அதை முழுமையாக வாழ்வதற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்ட அவர், “நாசரேத்து மரியாவிடம் நாம் கொண்டுள்ள பாசம் இயேசுவின் சீடர்களாக, அவருடன் சேர நம்மை வழிநடத்துகிறதுஎன்றும் தெரிவித்தார். மேலும், “கடவுளின் திட்டத்தை மரியாஆம்என்று ஏற்றுக்கொண்டது ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்படும் செயல் அல்ல; மாறாக, ஓர் அன்றாட உறுதிமொழிஎன்றும், “அது ஒருமுறை கொடுக்கப்பட்டது அல்ல;  மாறாக, அது ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டதுஎன்றும் கூறினார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை லியோவின் முதல் திருத்தூதுப் பயணம்!

திருத்தந்தை லியோ தனது முதல் திருத்தூதுப் பயணமாக துருக்கி மற்றும் லெபனான் செல்ல இருப்பதாகத் திருப்பீட ஊடக இயக்குநர் மேட்டியோ புருனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் நவம்பர் மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தை, டிசம்பர் முதல் வாரம் வரை பயணத்திற்கான திட்டமிடல்களை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, திருத்தந்தை லியோ துருக்கியில் உள்ள இஸ்னிக் நகருக்குச் சென்று, நைசியா முதற்சங்கத்தின் ஆயிரத்து 700-வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தொடர்ந்து லெபனான் செல்ல இருக்கும் திருத்தந்தை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் சந்திக்கவுள்ளதாகவும், இது அவர்களுக்குநம்பிக்கையின் பெரிய அடையாளமாக இருக்கும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இளையோர் இந்த உலகில் அமைதியைக் கட்டி எழுப்பவேண்டும்”- திருத்தந்தை லியோ வலியுறுத்தல்!

2027-ஆம் ஆண்டு சியோலில் நடைபெறவுள்ள உலகளாவிய இளையோர் மாநாட்டிற்கான தயாரிப்பாக, உலக இளைஞர் ஆண்டு தினம், நவம்பர் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கான கருப்பொருளை வெளியிட்ட திருத்தந்தை, “தூய ஆவியாரின் வல்லமையால் நம்பிக்கையின் திருப்பயணிகளாகவும், கிறிஸ்துவின் துணிவுள்ள சாட்சிகளாகவும் நாம் மாற நம்மையே தயார்படுத்திக் கொள்வோம்எனக் கேட்டுக்கொண்டார்.  அதற்கு, “கடவுளிடமிருந்து கொடையாக நாம் பெற்ற இயேசுவுடனான நமது நட்பு மற்றும் சமூகத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்புஎனும் இருவகையான சாட்சியங்களை விளக்கியுள்ள திருத்தந்தை, நாம் ஓர் அரசியல் கட்சியின் பணியாளர்களாகவோ அல்லது செயல்பாட்டாளர்களாகவோ இருக்க அவர் விரும்பவில்லை; மாறாக, அவருடைய நண்பர்களாக இருக்க அழைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘நான் உன்னை அன்பு செய்தேன்’ (Dilexi te) - திருத்தந்தை லியோவின் முதல் திருத்தூது ஊக்கவுரை

புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளன்று திருத்தந்தை லியோ, அதாவது, ‘நான் உன்னை அன்பு செய்தேன் (Dilexi te) எனப் பொருள்படும் தனது முதல் திருத்தூது ஊக்கவுரையில் கையெழுத்திட்டுள்ளார். அக்டோபர் 4-ஆம் தேதி உரோமை நேரப்படி காலை 8.30 மணிக்குத் திருத்தந்தை மாளிகையின்  தனி நூலகத்தில், திருப்பீடச் செயலகத்தின் பொது அலுவல் துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் எட்ஜர் பெணாபாரா முன்னிலையில், இத்திருத்தூது ஊக்கவுரையில் திருத்தந்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆவணம்  அக்டோபர் 9-ஆம் தேதி, திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.