அமெரிக்காவின்
இண்டியானாபோலிஸில் தேசியக் கத்தோலிக்க இளைஞர் மாநாடு (NCYC) நடைபெற்றது.
இந்நிகழ்வில் காணொளி வாயிலாகப் பங்கேற்ற திருத்தந்தை லியோ, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் நட்பில் வளரவும், தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்த தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்தவும், அரசியல் உத்திகளைத் திரு அவையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் வேண்டும். நாம் கடவுளின் இரக்கத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர் நம்மை மன்னிக்கிறார்; அவர் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையவில்லை; நாம்தான் அதை அவரிடம் கேட்பதில் சோர்வடைகிறோம்” என்று
திருத்தந்தை பிரான்சிஸின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.
மேலும்,
“கடவுளின் இதயம், நம்முடைய இதயத்தைவிட மாறுபட்டது. ஏனெனில், அவர் தொலைந்துபோன ஆடுகளைத் தேடுவதில் ஒருபோதும் சோர்வடையவில்லை. அனைவரும் இயேசுவுடன் ஆழமான உறவுக்குத் தங்களை அர்ப்பணிக்கவேண்டும்.
வாழ்க்கை குழப்பமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும்போது இயேசுவைத்
தேடவேண்டும்” என
அவர் அறிவுறுத்தினார்.
அதேபோல்,
தொழில்நுட்பத்தால் ஏற்படும் நம்பிக்கையின் விளைவுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள மக்களை இணைக்க நவீனக் கருவிகள் பயன்படுகின்றன. தொழில்நுட்பம் பல காரியங்களை வெற்றிகரமாகச்
செய்ய நமக்கு உதவுகின்றன” எனவும்
கூறினார். மேலும்
“நமது கிறித்தவ நம்பிக்கையை வாழவும் குறிப்பாக, இது செபம், திருவிவிலியம் படிப்பது மற்றும் நாம் நம்பிக்கைகொள்வதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும் அற்புதமான கருவிகளையும்
நமக்கு வழங்குகிறது. ஆயினும், உண்மையான நேரடி உறவுகள் மற்றும் நற்கருணையில் பங்கேற்பதை ஒருபோதும் தொழில்நுட்பம் மாற்ற முடியாது”
என்றும் அவர் குறிப்பிட்டார்.