news
வத்திக்கான் செய்திகள்
மாண்புமிகு மனிதநேயம்’ (Magnifica humanitas) - செயற்கை நுண்ணறிவு குறித்த திருத்தந்தையின் முதல் சுற்றுமடல்

செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை 14-ஆம் லியோ எழுதியுள்ளMagnifica humanitas (மாண்புமிகு மனிதநேயம்) என்ற அவரது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சுற்றுமடல் மே 25 அன்று வெளியிடப்படவுள்ளது.

தொழில்புரட்சியின்போது தொழிலாளர் நலனுக்காகத் திருத்தந்தை 13-ஆம் லியோ வெளியிட்ட Rerum Novarumசுற்றுமடலின் 135-ஆம் ஆண்டு நினைவாக இப்புதிய ஆவணத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ மே 15-ஆம் தேதியிட்டு கையெழுத்திட்டுள்ளார். மே 25 காலை 11:30 மணிக்கு வத்திக்கான் சினட் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் திருத்தந்தை நேரடியாகப் பங்கேற்பார்.

இந்நிகழ்வில் கர்தினால்கள் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் மற்றும் மைக்கேல் செர்னி ஆகியோருடன்ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவுனர் கிறிஸ்டோபர் ஓலா மற்றும் புகழ்பெற்ற பேராசிரியர்களும் உரையாற்றவுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி மனித அடையாளங்களைச் சிதைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இச்சுற்றுமடல் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்தினால் பியெட்ரோ பரோலின் நிறைவுரைக்குப்பின், திருத்தந்தை லியோ தனது சிறப்புரை மற்றும் ஆசிரை வழங்கவுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அமைதிக்கான அக்கறை என்பது வாழ்விற்கான அக்கறை” - திருத்தந்தை

புகழ் அனைத்தும் உமதே(Laudato Si) வாரத்தை முன்னிட்டு திருத்தந்தை லியோ ஆற்றிய உரையில், அமைதியும் படைப்பினைப் பாதுகாப்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று வலியுறுத்தியுள்ளார். மே 17 முதல் 24 வரை நடைபெறும் இந்த வாராந்திர நிகழ்வு, நமது பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கான திருத்தந்தை பிரான்சிஸின் சுற்றுமடலை நினைவுபடுத்துகிறது.

அசிசி புனித பிரான்சிஸின் 800-வது நினைவு ஆண்டைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கடவுளோடும் சகமனிதர்களோடும் அனைத்துப் படைப்புகளோடும் அமைதியைப் பேணவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். அண்மைக் காலங்களில் நடைபெறும் போர்கள், இயற்கையைப் பாதுகாப்பதற்கான பணிகளைப் பெருமளவு பின்தங்கச் செய்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். ‘அமைதிக்கான அக்கறை என்பது வாழ்விற்கான அக்கறைஎன்று குறிப்பிட்ட திருத்தந்தை லியோ, ஒருங்கிணைந்த சூழலியலுக்காக உழைப்பவர்கள் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


news
வத்திக்கான் செய்திகள்
“மனிதநேயத்தைப் புதுப்பிக்கக் கிறித்தவரும் இசுலாமியரும் இணைந்து செயல்படவேண்டும்”

நவீன காலத்தில் மனிதநேயம் குறைந்து வரும் நிலையில், அதனை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அலட்சியத்தைப் போக்கி ஒருமைப்பாட்டை வளர்க்கவும் கிறித்தவரும் இசுலாமியரும் கைகோர்க்கவேண்டும் என்று திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இஸ்லாமிய மரபில்ரஃபா (ra’fa) எனப்படும் இரக்கம் என்பது கடவுளால் இறைப்பற்றாளர்களின் இதயங்களில் வழங்கப்படும் ஒரு பரிசு. இறைவனின் 99 திருப்பெயர்களில் ஒன்றானஅல்-ரவூப் (al-Ra’uf) என்பது, இரக்கத்தின் ஊற்றுக்கண் கடவுளே என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கிறித்தவ மரபில் இந்தத் தெய்வீக இரக்கம் இயேசுவின் வழியாக உருவம் பெற்று, மனிதத் துன்பங்களை அவரே அனுபவிப்பதன் மூலம் வெளிப்படுகிறது. ஏழை எளியோர் மீதான அன்பு என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; மாறாக, அது நமது கடமை என்று வலியுறுத்திய திருத்தந்தை, அகதிகளை வரவேற்கும் ஜோர்டான் நாட்டின் தாராளமான முயற்சிகளையும் பாராட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அறிவியல் ஆய்வுகள் வழியாக இறைவனைக் காண்போம்” - திருத்தந்தை

கத்தோலிக்கத் திரு அவை அறிவியலுக்கு எதிரானது அல்ல; மாறாக, உண்மையான அறிவியலைத் தழுவி, அதன் வழியாக இறைவனின் படைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறதுஎன்று திருத்தந்தை  லியோ தெரிவித்துள்ளார். அண்மையில் வத்திக்கான் வானாய்வு மைய அறக்கட்டளை உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை, 1891-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ இந்த மையத்தை மறுசீரமைத்ததை நினைவுகூர்ந்தார். “திரு அவை உண்மையான அறிவியலை எதிர்க்கவில்லை; மாறாக, அதனை முழு பக்தியுடன் ஊக்குவிக்கிறது என்பதை உலகிற்குக் காட்டவே இது நிறுவப்பட்டதுஎன்றார். மேலும், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளிகள், கடவுள் படைத்த வான்சுடர்களைக் காண்பதிலிருந்து நம்மைத் தடுப்பதாக வருந்திய திருத்தந்தை, “படைப்பைப் புரிந்துகொள்ளும் தாகமே இறைவனைத் தேடும் மனித ஆன்மாவின் ஏக்கம்என்றும் சுட்டிக்காட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் புதிய நூல்!

திருத்தந்தை லியோ, புனித அகுஸ்தின் சபையின் தலைவராகப் (2001-2013) பணியாற்றிய காலத்தில் எழுதிய தொகுப்புகளின் முதல் இத்தாலியப் பதிப்பு அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ‘Free Under Graceஎன்று பெயரிடப்பட்டுள்ள இந்நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மே 4 முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்நூலின் முதல் பிரதியை புனித அகுஸ்தின் சபையின் தற்போதைய தலைவர் தந்தை ஜோசப் ஃபாரல் திருத்தந்தையிடம் வழங்கினார். வத்திக்கான் ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளர் தந்தை ரோக்கோ ரொன்சானி மற்றும் வத்திக்கான் பதிப்பக இயக்குநர் லோரென்சோ ஃபாசினி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நூல் திருத்தந்தை லியோவின் ஆன்மிகச் சிந்தனைகள், உரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பாகும். அக்டோபர் 2025-இல் பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டப்படி, இது தற்போது உலகின் 30 நாடுகளில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. மே 6 அன்று உரோமையில் நடைபெற்ற விழாவில், வத்திக்கான் வெளியுறவுத்துறைச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

news
வத்திக்கான் செய்திகள்
“ஏழைகளைப் பராமரிப்பது கிறித்தவ வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதி” - திருத்தந்தை லியோ

அமெரிக்காவின் கத்தோலிக்க அறக்கட்டளை (Catholic Charities USA) உறுப்பினர்களைச் சந்தித்தபோது, “ஏழைகள் மற்றும் தேவையிலுள்ளோர் மீது காட்டும் அக்கறை, உண்மையான கிறித்தவ வாழ்வின் ஒரு முக்கியப் பகுதிஎன்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.  சவால்கள் நிறைந்த சூழலிலும் மனம் சோர்ந்து போகாமல் நற்செய்திப் பணியைத் தொடரவேண்டும் என்று திருத்தந்தை அவர்களை ஊக்குவித்தார். போதிய நிதி ஆதாரங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிலருக்கு நாம் விரும்பியபடி உதவ முடியாமல் போகும் தருணங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “நானே எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்என்ற இயேசுவின் வாக்குறுதியை நினைவுகூரவேண்டும் என்றார். மியாமி உயர் மறைமாவட்டத்தின்பெட்ரோ பான்திட்டத்திற்கான நிதியை அமெரிக்க அரசு நிறுத்திய சூழலில் திருத்தந்தையின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. துன்பப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதிலும், மனிதாபிமானமற்ற சூழல்களுக்குத் தீர்வு காண்பதிலும் கத்தோலிக்க நிறுவனங்களின் பணி பாராட்டுக்குரியது என அவர் புகழ்ந்தார்.