news
வத்திக்கான் செய்திகள்
“மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையைத் தேடுங்கள்”

ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) நாடாளுமன்ற உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை லியோ, சித்தாந்தங்களைக் கடந்து பொதுநலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரின் சாம்பலிலிருந்து உருவான ஐரோப்பிய ஒன்றியம், பல நூற்றாண்டுகாலப் பிரிவினைகளை முறியடித்து, ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். ‘ஒற்றுமை என்பது மோதல்களைவிட மேலானதுஎன்று குறிப்பிட்ட திருத்தந்தை, ‘அதிகாரத்தைப் பிடிக்கும் மோதல்கள் இறுதியில் அழிவுக்கே வழிவகுக்கும்என்று எச்சரித்தார். ‘அரசியல் என்பது தர்மத்தின் உயரிய வடிவம்என்று குறிப்பிட்ட அவர், ‘எதார்த்தத்தைச் சிதைக்கும் சித்தாந்தங்களுக்குப் பின்னால் செல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றும் இலட்சியக் கனவுகளைக் கொண்டிருக்கவேண்டும்என்றார். மேலும், ‘மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே குறைந்து வரும் நல்லிணக்கத்தைச் சுட்டிக்காட்டிய அவர், டிஜிட்டல் யுகத்திலும் மக்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதே மக்கள் அரசியலுக்குச் சிறந்த மருந்தாகும்என்றார். கண்ணியமான வேலைவாய்ப்பு, குடும்பம் தொடங்குவதில் உள்ள அச்சத்தைப் போக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சவால்கள் குறித்துத் திறந்த மனத்துடன் செயல்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
கல்தேய மறைமுதுவருக்குத் திருத்தந்தை முழுமையான திரு அவை உறவை வழங்கினார்!

ஏப்ரல் 12, 2026 அன்று, உரோமையில் கூடிய கல்தேய ஆயர் மன்றத்தினால் மேதகு போலிஸ் III நோனா முறைப்படி புதிய பாக்தாத் மறைமுதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, திருத்தூதரகப் பீடத்துடனான முழுமையான பிணைப்பின் அடையாளமாகதிரு அவை உறவு (Ecclesiastical Communion) எனும்  அங்கீகாரத்தைத் திருத்தந்தை வழங்கியுள்ளார். இது குறித்து திருத்தந்தை எழுதிய கடிதத்தில், ‘கிறிஸ்துவின் இதயத்திற்கு ஏற்ப இறைமக்களை வழிநடத்தவும், நம்பிக்கை மற்றும் அன்பில் அவர்களை உறுதிப்படுத்தவும் உமது மேய்ப்புப்பணி அமையட்டும்என வாழ்த்தியுள்ளார். பண்டைய நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் மறைச்சாட்சிகளின் தியாகத்தால் நிரம்பியுள்ள கல்தேயத் திரு அவை, நற்செய்திப் பணியில் தொடர்ந்து கனிகொடுக்கவேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். புனித தோமா உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த நாளில் இந்தத் தேர்வு நடைபெற்றது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எனத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அமைதி மற்றும் நீதியின் தூதுவர்களாகத் திகழுங்கள்”- திருத்தந்தை

வத்திக்கான் தூதரகக் கல்விக் கழகத்தின் 325-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு வருகை புரிந்த திருத்தந்தை லியோ, திரு அவைத் தூதரக அதிகாரிகளின் சிறப்பான பணிகளைப் பாராட்டினார். அவர்களிடம், “தூதரகப் பணியில் ஈடுபடும் குருக்கள், வெறும் கத்தோலிக்கச் சமூகத்திற்காக மட்டும் உழைக்காமல், ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தின் அமைதி, உண்மை மற்றும் நீதிக்காகக் குரல் கொடுக்கவேண்டும்என்று வலியுறுத்தினார். “வரலாற்றின் சுவடுகளுக்குள் இறைவனின் அருளைக் கொண்டு செல்லும் பாலங்களாகவும், கால்வாய்களாகவும் நீங்கள் இருக்கவேண்டும்என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “உலகளாவிய  உறவுகளில் மொழியறிவு மற்றும் அரசியல் ஞானத்தை விடமனமாற்றம்மற்றும் எளிமை மிக முக்கியம்என்றார்.

news
வத்திக்கான் செய்திகள்
“மதத்தை அரசியலாக்குபவர்களுக்கு ஐயோ கேடு!”

கேமரூன் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆங்கிலம் பேசும் நகரமான பாமெண்டாவிற்குத் திருத்தந்தை லியோ  வருகை புரிந்தபோது, அங்கு நடைபெற்ற அமைதி சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசியல் மற்றும் இராணுவ ஆதாயங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார் திருத்தந்தை லியோ. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்களின் துயரங்களைக் கேட்டறிந்த திருத்தந்தை, “அழிப்பதற்கு ஒரு நிமிடம் போதும்; ஆனால், கட்டியெழுப்ப ஒரு வாழ்நாளே போதாது என்பதையுத்தப் பிரபுக்கள்உணர மறுக்கின்றனர்என்று சாடினார். ஆயுதங்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் நாடுகள், மக்களின் காயங்களைக் குணப்படுத்தவும், கல்விக்கும் நிதி ஒதுக்க மறுப்பதைக் கண்டு தனது வேதனையைத் தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
“பொதுநலனுக்காக உழைக்கும் தலைவர்களை உருவாக்குங்கள்” - திருத்தந்தை

மத்திய ஆப்பிரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் (UCAC) சமூகத்தைச் சந்தித்த திருத்தந்தை லியோ, எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்கு குறித்து உரையாற்றினார். அறிவுத் தேடலோடு நின்றுவிடாமல், சமூக நீதி மற்றும் ஒற்றுமைக்காக உழைக்கும் அர்ப்பணிப்புமிக்க நிபுணர்களைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இன்றைய உலகில் ஆன்மிக மற்றும் தார்மிக விழுமியங்கள் சிதைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பல்கலைக்கழகங்கள் வெறும் அறிவுக்கூடங்களாக மட்டுமில்லாமல், கூட்டுறவு மற்றும் நேர்மையான மனசாட்சியை வளர்க்கும் இடங்களாக மாறவேண்டும் என்று தெரிவித்துள்ளார். “ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் இயற்கை வளங்களை வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அது உண்மையை அடிப்படையாகக் கொண்ட நேர்மையான குடிமக்களைப் பொறுத்தே அமைகிறதுஎன்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பெருகிவரும் இக்காலத்தில், மனிதநேயத்தை மறக்கக்கூடாது என்று எச்சரித்த திருத்தந்தை, ஆப்பிரிக்க இளையோர் தங்கள் அறிவைத் தங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தாராளமாகப் பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“புனிதம் ஒருசிலருக்கான சலுகையல்ல; அது அனைவருக்கும் பொதுவானது” - திருத்தந்தை

புனிதத்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட தனிச்சலுகை அல்ல; மாறாக, அது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் வழங்கப்பட்ட அழைப்புஎன்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற பொதுமறை உரையின்போது, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்உலகின் ஒளி (Lumen Gentium) ஆவணம் குறித்து அவர் உரையாற்றினார். “கடவுளிடமும், நம் அண்டை வீட்டாரிடமும் நாம் காட்டும் முழுமையான அன்பே புனிதத்தின் அடையாளம். தொடக்ககாலத் திரு அவையைப் போலவே இன்றும் கிறிஸ்துவுக்காக உயிர் துறக்கும் மறைச்சாட்சியமே புனிதத்தின் உயர்ந்த நிலைஎன்றார். மேலும், “அனைத்து அருளடையாளங்களும், குறிப்பாக நற்கருணையும் புனித வாழ்விற்கான ஊட்டம் அளிக்கின்றனஎன்றும், “புனிதம் என்பது நமது அன்றாட வாழ்வில் இறைவனின் அழைப்பிற்கு நாம் காட்டும் அர்ப்பணிப்பில் வெளிப்படுகிறதுஎன்றும் அவர் விளக்கினார்.